kkavithai24
kkavithai24
கவிதை 24
குழந்தையைப் பார்த்ததும் அன்னபூரணி அனைத்தையும் மறந்து போனார். கோப தாபம், விருப்பு வெறுப்பு என அனைத்தையும் கடந்த நிலை. ரிஷியின் குழந்தை! யார் பெற்றெடுத்திருந்தால் என்ன? தன் தங்கையின் குல விளக்கு. இப்படித்தான் தோன்றியது அன்னபூரணிக்கு.
“நான் டீ போட்டு எடுத்துக்கிட்டு வர்றேன் அன்னம்மா.” ரிஷி குழந்தையைக் காணவும் சட்டென்று அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.
“ஹரி… வாங்க வாங்க, யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாருங்க.” பவித்ரா அழைக்கவும் குழந்தை புன்னகைத்த படி அவளிடம் வந்தது. ஆனாலும் புதியவர்கள் யாரோ வந்திருக்கிறார்கள் என்ற தயக்கம் அதன் நடையில் தெரிந்தது.
“பாட்டிடா செல்லம்.” குழந்தையுடன் சோஃபாவில் அமர்ந்தாள் பவித்ரா. பாண்டியனும் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நிலைமையை எப்படிக் கையாள்வது என்று அவருக்கும் புரியவில்லை.
“ஏன்டீ? எதுக்குடீ இப்பிடியெல்லாம் பண்ணுறே? உனக்கென்ன தலையெழுத்தா?” அன்னபூரணி கண்ணீர் குரலில் ஆரம்பித்தார். பவித்ரா குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தாள்.
“ஜாம் ஜாமுன்னு சந்தோஷமா ஒரு வாழ்க்கையை வாழுறது விட்டுட்டு, உனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு சுமையைத் தோள்ல தூக்கிப் போட்டிருக்கியே?!” பவித்ராவோடு இருந்த மனஸ்தாபம் காற்றில் பறக்க தன்னை மறந்து பேச ஆரம்பித்தார் பெரியவர்.
“மனசாட்சி ன்னு ஒன்னு இருக்கில்லை த்தை?” பவித்ராவும் இப்போது பதில் சொன்னாள்.
“பெத்தவனுக்கே அது இல்லையே?! இந்தக் குழந்தையைப் பார்த்ததும் எப்பிடி எந்திரிச்சுப் போயிட்டான் பார்த்தியா?”
“அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம் அத்தை, எனக்குத் தெரிஞ்ச நியாயம் இதுதான்.”
“………” அன்னபூரணி எதுவும் பேசவில்லை. தன் கணவரைத் திரும்பிப் பார்த்தார். அவரும் மௌனமாக பவித்ரா பேசுவதையேக் கேட்டபடி உட்கார்ந்திருந்தார்.
“எத்தனைத் தடவை எங்கிட்டக் கேட்டிருப்பீங்க, பவித்ரா ஏதாவது விசேஷம் உண்டா? விசேஷம் உண்டான்னு? எதுக்காக அத்தை? உங்க ரிஷியோட குழந்தையைப் பார்க்கணும்னுதானே? அந்த ஆசையிலதானே? அப்போ இது யாரு அத்தை?” பவித்ரா கேட்க அன்னபூரணி விக்கித்துப் போனார்.
“யாரு பெத்திருந்தா என்னத்தை? என்னைப் பொறுத்தவரைக்கும் இது அத்தானோட குழந்தை, அது எப்பிடி வளரணுமோ அப்பிடித்தான் வளரும்.” உறுதியாகச் சொன்ன பெண்ணை அன்னபூரணி எழுந்து வந்து அணைத்துக் கொண்டார்.
“உம் மனசு யாருக்கும் வராதுடியம்மா, எனக்கெல்லாம் இவ்வளவு பெருந்தன்மை சுட்டுப் போட்டாலும் வராதுடி.” பவித்ராவை கட்டிக்கொண்டு அன்னபூரணி ஓவென்று அழ குழந்தைப் பயந்து போனது.
“பூரணி! குழத்தைப் பயப்பிடுறான் பாரு.” பாண்டியன் அதட்டவும் அன்னபூரணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். பவித்ராவின் அருகில் தானும் அமர்ந்து கொண்டார்.
“ராஜா… கண்ணு…” அன்னபூரணி குழந்தையை வருடிக் கொடுத்தார். புதிதாக வந்திருந்த அந்தப் பாட்டியிடம் சட்டென்று குழந்தை ஒட்டவில்லை. லேசாக விலகியது.
“ஹரி… இது பாட்டி, பாட்டி சொல்லுங்க.” குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தாள் பவித்ரா.
“அன்னம்மா, டீ ரெடி.” ட்ரேயோடு வந்த ரிஷி எல்லோருக்கும் டீயை கொடுத்தான்.
“எப்பிடி இருக்குன்னு குடிச்சுப் பார்த்துட்டுச் சொல்லுங்க.”
“ஏன்டா? உன்னோட வீட்டை எனக்குச் சுத்திக் காட்டமாட்டியா?”
“ஆமா ஆமா, எப்போ வாங்கின வீட்டுக்கு எப்போ வந்துட்டு பேச்சைப் பாரு, வாங்க வாங்க.” டீயும் கையுமாக இருந்த அன்னபூரணியை அழைத்துக் கொண்டு போய் வீட்டைக் காட்டினான் ரிஷி.
“இந்த இடத்துல சின்னதா ஒரு தோட்டம் போடலாம் ன்னு பவி சொல்றா அன்னம்மா.” வீட்டின் பின்பகுதியைக் காட்டிய ரிஷியின் கையைப் பிடித்தார் அன்னபூரணி.
“என்ன அன்னம்மா?” பரிவோடு கேட்டான் இளையவன்.
“ரிஷி… அந்தக் குழந்தை…” அன்னபூரணிக்கு தொண்டை அடைத்தது. பேச வேண்டும், ஆனால் என்ன பேசுவது என்றும் புரியவில்லை. ரிஷியும் அமைதியாக நின்றிருந்தான்.
“நீ இப்பிடி விலகி விலகிப் போறது எனக்கு அவ்வளவு நல்லதாப் படலை கண்ணா.”
“………..”
“அந்தக் குழந்தைக்கு நியாயம் கிடைக்கணும்னு அவ நினைக்கிறா, நீ ஒதுங்கி ஒதுங்கிப் போறே, என்னடா ரிஷி இது?”
“அன்னம்மா… ஒதுங்கணும்னு நினைக்கலை…”
“குழந்தையா இருந்தப்போ உன்னைப் பார்த்த மாதிரியே இருக்குடா, உங்கம்மா மட்டும் இருந்திருந்தா…” அன்னபூரணி வெடித்து அழுதார். பெரிய தாயின் கையிலிருந்த கப்பை வாங்கி அங்கிருந்த பெஞ்ச்சில் வைத்தான் ரிஷி. இயல்பாக அவன் கைகள் அவரை அணைத்துக் கொண்டன.
“அவ இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பாளோ அதைத்தானேடா இவளும் பண்ணுறா? யாருடா கண்ணா இப்பிடியெல்லாம் பண்ணுவாங்க? உம் பொண்டாட்டியை என்னால புரிஞ்சுக்கவே முடியலை ரிஷி.”
“அவ ரொம்ப நல்லவ அன்னம்மா, அவளுக்காக அந்த பாஸ்கர் மாதிரி எத்தனை ஆளுங்க அடிச்சாலும் தாங்கிக்கலாம்.”
“அதை மட்டும் எனக்கு ஞாபகப் படுத்தாதே ரிஷி, பத்திக்கிட்டு எரியுது!” கோபத்தில் சிவந்தார் பெரியவர்.
“இல்லை அன்னம்மா, தூரத்துல தள்ளி வெக்கிற உறவில்லை அது, பவித்ராவோட அப்பா, என்னைக்கு இருந்தாலும் அவர் இந்த வீட்டுக்கு வரத்தானே வேணும்?”
“………”
“அவளுக்காக அதையும் நான் தாங்கிப்பேன்.”
“ரிஷி…”
“எனக்கு எல்லாரோட மனசும் புரியுது அன்னம்மா, நான் இப்போ நிதானமா எல்லாரோட நிலைமைல இருந்தும் சிந்திச்சுப் பார்க்கிறேன், அந்த பாஸ்கர் கூட தப்பானவர் கிடையாது.”
“அதுக்காக இப்பிடி நடந்துக்கலாமா ரிஷி?” அன்னபூரணியின் குரல் இப்போது லேசாகத் தணிந்திருந்தது.
“இந்தக் கல்யாணத்தை ஆரம்பத்துல பவித்ராவோட அம்மா வேணாம்னு சொன்னப்போ சம்மதம் குடுத்தவரு பாஸ்கர், அது எம்மேல அவர் வெச்ச நம்பிக்கை, அது இல்லைன்னு போனப்போ அவரால தாங்கிக்க முடியலை.”
“நாலு பொண்ணைப் பெத்தப்ப கூட கவலையேப் படாம அவளுங்களை வளர்த்தவரு அந்த மனுஷன்.” இப்போது அன்னபூரணியும் பாஸ்கரின் பெருமைப் பேசினார்.
“ம்… பொண்ணுங்கதான் அவருக்கு எல்லாமே.”
“அதுலயும் இவ மூத்த பொண்ணு வேற!”
“ஆமா, அந்தப் பாசம் அன்னம்மா அவருக்கு, அதால அவரோட கோபத்தை என்னால இலகுவாப் புரிஞ்சுக்க முடிஞ்சுது அன்னம்மா.”
“சரிதான்.”
“அவளுக்கு நான் முக்கியம், அதுக்காக பெத்தவங்களையும் ஒதுக்கி வெக்க முடியலை, இந்த ஊர்லயேக் கொஞ்ச நாள் இருக்கலாம்னு சொன்னா, சரின்னேன்.”
“எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்கு ரிஷி! நீ எம் பக்கத்துலேயே வீடு, வாசல், புள்ளை, குட்டின்னு இருக்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?”
“தெரியும் அன்னம்மா, அதாலதான் எதைப் பத்தியும் யோசிக்காம வீட்டை வாங்கிட்டேன், பவி வாடகைக்கு எடுக்கலாம்னுதான் சொன்னா, நான்தான் வேணாம்னு சொல்லிட்டு வாங்கிட்டேன்.”
“ம்… அவங்க பொண்ணு அவங்க கண்ணு முன்னாடி சந்தோஷமா இருக்கணும் ரிஷி, அப்போதானே பெத்தவங்க மனசு குளிரும்.”
“கண்டிப்பா, இது வெறும் கடமைக்காகப் பண்ணுறது இல்லை அன்னம்மா.”
“எனக்குப் புரியுது கண்ணா.”
“எனக்கு பவியை அவ்வளவு புடிக்கும் அன்னம்மா, எப்போ காயத்ரி கல்யாணத்துல அவளை முதல்முறையாப் பார்த்தேனோ, அன்னைக்கு எனக்குள்ள புயல் மாதிரி வந்து புகுந்தவதான்.”
“டேய்! ரொம்ப வழியாதடா!” அன்னபூரணி இப்போது சிரித்தார்.
“இந்தக் காதல், கல்யாணத்தையெல்லாம் நான் அன்னைக்கு வரை நினைச்சது கூட இல்லை அன்னம்மா.”
“என்னோட வாயைப் புடுங்காத ரிஷி, நான் ஏதாவது தப்பாச் சொல்லிடப் போறேன்!”
“நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியாதா அன்னம்மா? அந்த எண்ணமே வராததாலதான் அப்பிடியெல்லாம் திரிஞ்சேன்.”
“வாயை மூடுடா! என்ன பேச்சுடா இது? ராஸ்கல்!” பெரியவர் இப்போது கோபப்பட்டார்.
“இந்த ஒரு தடவைக் கேட்டிடுங்க அன்னம்மா, வாழ்நாள் பூரா நான் பண்ணின தப்பைப் பேசிக்கிட்டு இருக்க நான் என்ன முட்டாளா?”
“உங்கம்மா இருந்திருந்தா இப்பிடியெல்லாமா நீ நடந்திருப்பே?”
“இல்லை… சத்தியமா இல்லை… பிஸினஸ் பிஸினஸ் ன்னு ஒரு வெறி, ஓடிக்கிட்டே இருந்தேன், சந்தோஷம், கஷ்டம் எதுவா இருந்தாலும் நான் தனியாத்தான் அனுபவிக்கணும், அது உங்களுக்குச் சொன்னாப் புரியாது அன்னம்மா.”
“உன்னைத் தனியா விட்டது தப்பாப் போச்சு, அப்பவே இழுத்து ரெண்டு அறையைப் போட்டு இந்த பவித்ராவை கட்டி வெச்சிருக்கணும்.”
“அதை ஏன் நீங்க பண்ணாம விட்டீங்க அன்னம்மா? அப்பவே அதைப் பண்ணி இருந்திருந்தா… பவியோட எந்தச் சிக்கலும் இல்லாம நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன் இல்லை?” ரிஷி கேட்ட போது அன்னபூரணி மீண்டும் வெடித்து அழுதார்.
“அழாதீங்க அன்னம்மா, இதுதான் விதி, இப்பிடியெல்லாம் நடக்கணும்னு எழுதி இருக்கு, யாரால தடுக்க முடியும் சொல்லுங்க?”
“ஆமா ரிஷி, நடந்தது நடந்து போச்சு, இனி அதைப் பேசுறதுல அர்த்தம் இல்லை, விட்டுடு… அந்தப் பொண்ணைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கோ.”
“அவ இல்லைன்னா எனக்கு இனி வேற எதுவுமே இல்லை அன்னம்மா.”
“ஆனா அந்தக் குழந்தைக்கிட்ட நீ காட்டுற பாராமுகம் எனக்கு அவ்வளவு நல்லதாப் படலை ரிஷி.”
“அப்பிடியில்லை அன்னம்மா… பாராமுகமெல்லாம் இல்லை… என்னவோ ஒரு தயக்கம்… சட்டுன்னு ஒட்ட முடியலை.”
“அது உன்னோட குழந்தை ரிஷி!”
“புரியுது… நல்லாவேப் புரியுது… பவிக்கும் எனக்குமா ஒரு குழந்தையை நான் எவ்வளவு ஆசையா எதிர்பார்த்தேன்னு உங்களுக்குத் தெரியாது அன்னம்மா.”
“சீக்கிரமாப் பெத்துக்கோடா, உன்னை யாரு தடுத்தா?”
“கண்டிப்பா, அதுக்குள்ள இந்த உண்மை முகத்துல வந்து மோதிடுச்சு, அதை ஏத்துக்க எனக்குக் கொஞ்சம் காலம் தேவைப்படும் அன்னம்மா.”
“சரிதான்… எல்லாம் நல்லபடியா நடக்கும், நீ எதையும் நினைச்சு இனி உன்னையே வருத்திக்காத, அதான் அன்னம்மாக்கு பக்கத்துல வந்துட்டே இல்லை, இனி நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்… ஆனா அந்த பாஸ்கர் கண்ணுல பட்டா மாத்திரம் நான் பத்ரகாளி ஆகிடுவேன் சொல்லிட்டேன்!”
“ஹா… ஹா…” வாய் விட்டுச் சிரித்தபடி தன் அன்னம்மாவை இறுக்கி அணைத்துக் கொண்டான் ரிஷி.
***
அன்றைக்கு இரவு வீடே அமைதியாக இருந்தது. அன்னபூரணியும் பாண்டினும் போன பிற்பாடு ரிஷி ஒரு முக்கியமான வேலையாக லேப்டாப்பில் அமர்ந்து விட்டான். அம்மாவும் மகனும் அதன்பிறகு வீடு முழுவதும் ஆர்ப்பாட்டம் பண்ணிய படி இருந்தார்கள். ஒரு கட்டத்தில்,
“பவீ…” அழைத்தான் ரிஷி.
“என்ன த்தான்?”
“முக்கியமான ஒரு கால் பண்ணணும், நீங்க ரெண்டு பேரும் இப்பிடிச் சத்தம் போட்டா எப்பிடிம்மா?” உரிமையான கண்டிப்பு. அதுவும் மகனையும் இணைத்து.
“ஐயையோ! சாரி த்தான், நாங்க வெளில போய் விளையாடுறோம்.”
“ம்… பேசி முடிச்சதும் சொல்றேன்.”
“ஓகே த்தான்.”
வீட்டுக்கு முன்னால் இருந்த பரந்த இடத்தில் அம்மாவும் மகனும் நன்றாக ஆட்டம் போட்டார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை களைத்துப் போகவும் இருவரும் உள்ளே வந்தார்கள். அதன்பிறகு ஹரியோடு போராடவே பவித்ராவிற்கு நேரம் சரியாக இருந்தது. குழந்தைக்கு உடம்பு கழுவி, உணவூட்டி என்று வேலைகள் வரிசைக் கட்டி நின்றன.
ரிஷிதான் அவர்களுக்கான உணவைச் சூடு பண்ணி அனைத்தையும் ஆயத்தம் செய்தான். உண்டு முடித்த பிறகும் ஹரியை உறங்க வைக்கிறேன் என்று அவனோடு நேரம் செலழித்தாள் பெண். வீடு முழுவதும் நிசப்தம் குடி கொண்டிருந்தது. விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு பவித்ராவின் அறையை எட்டிப் பார்த்தான் ரிஷி. விடி விளக்கின் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் குழந்தைக்கு அருகே ஒருக்களித்துப் படுத்திருந்தாள். கை இயல்பாக ஹரியை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. உள்ளே வந்த ரிஷி குழந்தையை எட்டிப் பார்த்தான். நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் ரிஷியை கவனித்தாள் பவித்ரா.
“அத்தான்…” என்றாள் கிசுகிசுப்பாக.
“உஷ்…” மனைவியை சத்தம் செய்ய வேண்டாம் என்று சைகையால் சொல்லிவிட்டு அவளை அப்படியே அலாக்காகத் தூக்கினான்.
“ஐயோ அத்தான்! என்னப் பண்ணுறீங்க?!”
“சத்தம் போடாதே பவி.” அள்ளிய புதையலோடு அடுத்த அறைக்கு வந்து சேர்ந்தான் ரிஷி.
“ஹரி அங்க தனியாத் தூங்குறான்.”
“நானும் கொஞ்ச நாளாத் தனியாத்தான் தூங்குறேன் பவி…” ரிஷியின் கை பெண்ணின் இடையை மென்மையாக வருடியது.
“அத்தான்…” கணவனின் எண்ணம் புரிந்து போகத் தவித்தாள் பெண்.
“ம்ஹூம்… இன்னைக்கு எல்லாம் உண்டு பவி, நீ எந்தக் காரணம் சொல்லியும் தப்பிக்க முடியாது.”
“…..” இதற்கு மேல் பவித்ராவால் என்ன சொல்ல முடியும்?! அமைதியாக நின்றிருந்தாள்.
“ஹரி மட்டும் போதுமா பவி? இந்த ரிஷி வேணாமா உனக்கு?” குரலில் காதல் வழிய அவள் முகத்தைக் கைகளில் ஏந்திய படி ரிஷி கேட்க மனைவி மயங்கித்தான் போனாள்.
“சொல்லு… ரிஷி வேணாமா? ம்…”
“அத்தான்…”
“எனக்கு பதில் வேணும்! சொல்லு… ரிஷி வேணுமா, வேணாமா?” அவன் பிடிவாதம் பிடித்தான்.
“வே…ணும்…”
“ம்… இந்த ரிஷிக்கு எப்பவும் பவி வேணும், புரிஞ்சுதா?” சரசம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தது. தவித்தபடி நின்றிருந்த பெண்ணின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான் ரிஷி.
“பவி…”
“ம்…”
“எத்தனை நாளாச்சு!” தவறவிட்ட நாட்களையும் ஈடு செய்பவன் போல அன்றைக்குக் களத்தில் இறங்கி இருந்தான் ரிஷி.
“அத்தான்…” அவனை அவள் தடுத்து நிறுத்திய நிமிடங்களைக் கண்டு கொள்ளாமல் இரவை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டினான் ரிஷி. அவன் ஆடித் தீர்த்து முடித்த போது பெண் முழுதாக ஓய்ந்து போயிருந்தது. தலையணையில் கலைந்திருந்த அவள் கூந்தல் காட்டில் ரிஷி முகத்தைப் புரட்டினான்.
“அத்தான்…”
“ம்…”
“ஹரி தனியாத் தூங்குறானே…” அப்போதும் அவள் தாய் மனது பரிதவித்தது.
“குழந்தைங்க தனியாத்தான் தூங்கிப் பழகணும் பவித்ரா, ரொம்பச் செல்லம் குடுக்காதே, வாழ்க்கையில வர்ற பிரச்சினைகளை ஃபேஸ் பண்ணச் சக்தியில்லாமப் போயிடும்.”
“அது சரிதான்…” மனமே இல்லாமல் ஒப்புக்கொண்ட மனைவியைப் பார்த்தபடி இப்போது ஒருக்களித்துப் படுத்தான் ரிஷி. அவள் நெற்றியில் கலைந்திருந்த குங்குமத்தைச் சரிசெய்து விட்டான் கணவன்.
“வேலைக்கு யாராவது ஏற்பாடு பண்ணலாம் பவி, உனக்கு ஹெல்ப்பா இருக்கும்.”
“ஏன் த்தான்? தேவையில்லை… நான் பார்த்துக்கிறேன்.”
“ம்ஹூம்… அது சரியா வராது, வீட்டு வேலையையும் பார்த்துக்கிட்டு, ஹரியையும் கவனிச்சு முடிச்சுட்டு இப்பிடி டயர்ட்டா எங்கிட்ட வந்தா நான் என்னப் பண்ணுறதாம்?” அவன் கேலியில் அவள் வெட்கப்பட்டாள்.
“பவி…”
“ம்…”
“அன்னம்மா அவங்க கோபத்தை மறந்து நம்ம வீட்டுக்கு வந்துட்டாங்க.”
“ஆமா த்தான், எனக்குக் கூட இன்னைக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு! எல்லாத்தையும் சட்டுன்னு மறந்துட்டு அத்தை எங்கூடப் பேசினது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!”
“ம்… எம்மேல அவங்களுக்கு ரொம்பவேப் பாசம்டா, எங்கூடப் பேசாம அவங்களால இருக்க முடியாது, இன்னைக்கு பெரியப்பா கூப்பிட்டதும் கிளம்பி ஓடி வந்துட்டாங்க.”
“ஆமா… எங்கூட இனிமேப் பேசமாட்டாங்களோன்னு நான் ரொம்பவேப் பயந்தேன், ஆனா சட்டுன்னுப் பேசிட்டாங்க!”
“சட்டுன்னுப் பேசலை, சட்டுன்னு ஏசினாங்க.”
“அதுலென்ன த்தான் இருக்கு?! பெரியவங்கதானே! ஏதோவொரு கோபம், பேசட்டும் இல்லைன்னா ஏசட்டும், எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து பண்ணட்டும்.”
“ம்… உங்கம்மா, அப்பா எப்போ நம்ம வீட்டுக்கு வர்றது பவி?” சட்டென்று கணவன் கேட்டதும் மௌனமானாள் பெண்.
“என்ன பவி சைலண்ட் ஆகிட்டே?”
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் த்தான்.”
“இல்லைம்மா, அது தப்பு… ரொம்ப நாளைக்கு உறவுகள் தள்ளி இருந்தாத் தேவையில்லாத விரிசல்தான் விழும்.”
“அம்மா பிரச்சினை இல்லை த்தான்… அப்பாதான்…”
“அவருக்கு எம்மேல இன்னும் கோபம் போகலைன்னா இன்னொரு கன்னத்தையும் காட்டுறேன், அதுலயும் ரெண்டு அடி அடிக்கச் சொல்லு பவி.”
“அத்தான்! என்னப் பேசுறீங்க நீங்க?!”
“பாவம் பவி அவரு, எம்மேல அவரு வெச்ச நம்பிக்கை இல்லைன்னு ஆனப்போ அவருக்குக் கோபம் வந்திடுச்சு, அது தப்பில்லைம்மா, நாளைக்கு எனக்கொரு பொண்ணிருந்து இப்பிடி நடந்தா நானும் உங்கப்பா மாதிரித்தானே நடப்பேன்? அவரை என்னால புரிஞ்சுக்க முடியுது பவி.”
“…….”
“அவரோட மனசுல என்னைப் பத்தின தப்பான ஒரு அபிப்பிராயம் வந்திடுச்சேன்னுதான் நான் இப்போ வருத்தப்படுறேன்.”
“அப்பா உங்களைப் புரிஞ்சுப்பாங்க த்தான்.”
“ம்… புரிஞ்சுக்கணும், ஆண்டவனுக்கிட்ட நான் வேண்டிக்கிறதும் அதைத்தான்.” மனைவியை அணைத்தபடி கண்ணயர்ந்தான் ரிஷி. பவித்ரா தன் கணவனையே பார்த்தபடி சிறிது நேரம் படுத்திருந்தாள். எப்போது கண்ணயர்ந்தாள் என்று தெரியாதபடி அவளும் உறங்கிப் போனாள்.