kkavithai26

kkavithai26

கவிதை 26

இரண்டு நாட்கள் கடந்து போயிருந்தன. பவித்ரா வீட்டுக்கு வந்து போனதைக் கணவரிடம் சொன்ன ரேணுகாவிற்கு மகள் கொண்டு வந்த வரன் பற்றிப் பேசத் தைரியம் இருக்கவில்லை. மிகவும் நல்ல வரன். ஊருக்குள் கொஞ்சம் வசதியான மனிதர்கள் என்பதால் செல்வத்தை எல்லோருக்கும் நன்றாகவேத் தெரியும். 

பணம் என்பது ரேணுகாவை பொறுத்த வரை இரண்டாம் பட்சம்தான். நல்ல குடும்பம், அதை விட்டுக்கொடுக்க அவருக்கு மனது வரவில்லை.தானாக விஷயத்தைச் சொல்லப் போக அதைக் கணவர் மறுத்து ஏதாவது பேசிவிடக் கூடாது என்பதால் மௌனமாகவே நடமாடினார் பெரியவர். அன்றைக்குப் பாடசாலையிலிருந்து வந்த நேரம் முதல் பாஸ்கர் ஏதோ சிந்தனையிலேயே இருந்தார். பள்ளிக்கூடப் பிரச்சனையாக இருக்கும் என்று முதலில் ரேணுகா அதைக் கண்டு கொள்ளவில்லை. இரவு படுக்கைக்கு வந்த பிறகும் கணவரின் முகம் யோசனையைக் காட்டப் பெண் வாயைத் திறந்தது.

“என்னாச்சுங்க? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

“ரேணு, வேலையெல்லாம் முடிச்சுட்டியா?”

“ஆமா.” சொல்லிய படி ரூம் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார் ரேணுகா.

“இன்னைக்கு ஸ்கூல்ல என் ஸ்டாஃப் ஒருத்தர் ஒரு விஷயம் சொன்னாரு ம்மா.”

“என்னங்க?”

“நம்ம செல்வம் இருக்காரில்லை?” கணவர் பேச்சை ஆரம்பிக்கவும் ரேணுகாவிற்கு திக்கென்றது.

“அவருக்கு என்னவாம்?” என்றார் ஒன்றும் தெரியாதவர் போல.

“அவரோட பையனுக்கு நம்ம அகல்யாவை கேட்பாங்க போல இருக்கு.”

“ஓ… அவருக்கு யாரு சொன்னாங்களாம்?”

“செல்வத்தோட வைஃபுக்கு இந்தப் பையன் சொந்தக்காரன் போல இருக்கு, அவனோட காதுக்கு விஷயம் போனா எங்கிட்டப் பேசுவான்னு தெரிஞ்சு செல்வம் அவன் காதுல விஷயத்தைப் போட்டிருக்காரு.”

“ம்… நீங்க ஏதாவது சொன்னீங்களா?”

“நான் எதுவும் சொல்லலை ரேணு, பையன் சொன்னதைக் கேட்டுக்கிட்டேன், அவ்வளவுதான்.”

“நல்ல இடந்தான்…” ரேணுகா லேசாக நூல் விட்டுப் பார்த்தார்.

“பையனும் ரொம்ப நல்ல மாதிரி, நம்ம ஸ்கூல்ல படிச்ச பையன்தான்.”

“ஓ…” 

“என்ஜினியர், நம்ம அகல்யாக்கு பொருத்தமா இருப்பான், குடும்பமும் நல்ல மாதிரி, அதுதான் யோசிக்கிறேன்.”

“கொஞ்சம் வசதியான இடமாச்சேங்க, என்ஜினியர் ன்னு வேற சொல்றீங்க, ரொம்ப எதிர்பார்த்தா என்னப் பண்ணுறது?”

“நம்ம நிலைமை என்னன்னு அவங்களுக்கு நல்லாவேத் தெரியும், தெரிஞ்சும் பொண்ணுக் கேட்கிறாங்கன்னா… ரொம்ப அதிகமாக் கேட்கப் போறதில்லை, அதுக்காக நாம நம்ம பொண்ணை வெறுங் கையோட அனுப்ப முடியுமா?”

“உங்க மனசுல என்ன இருக்குதுங்க?”

“இந்தக் காலத்துல நல்ல பசங்களைப் பார்க்கிறதே அபூர்வமாப் போச்சு! அதுதான் மூத்தவளுக்கு ஒன்னை எடுத்தோமே!” கணவரின் குரலில் வழிந்த கசப்பு மனைவியைக் கவலை கொள்ளச் செய்தது. 

“பவித்ரா சந்தோஷமாத்தான் இருக்கா.”

“என்னத்தைச் சந்தோஷமா இருந்திரப் போறா! மனசுல இருக்கிற வலியை மறைச்சுக்கிட்டு வாழப் பழகி இருக்கா.” பாஸ்கர் ஒரு வலியோடு சொன்ன போது ரேணுகாவால் மறுத்து எதுவும் சொல்ல இயலவில்லை. ஆனால் ரிஷி மேல் ஆரம்பத்தில் இருந்த வருத்தம் அவருக்கு இப்போது சற்றேக் குறைந்திருந்தது.

“அவங்க நாடு, அவங்க கலாச்சாரம் ன்னு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் நடந்தது எதையும் தப்பில்லைன்னு நானும் சொல்ல வரலேங்க…” பேச்சை ஆரம்பித்துவிட்டு கணவரின் முகத்தைப் பார்த்தார் ரேணுகா. வலியைத் தவிர அங்கே வேறெதுவும் இருக்கவில்லை. எப்போதும் இந்தப் பேச்சை எடுத்தாலே எரிந்து விழும் மனிதர் இன்றைக்கு அமைதியாகவும் இருக்கவும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று பேச்சைத் தொடர்ந்தார்.

“ஆனா… இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அவர் நம்ம பவி மேல ரொம்ப அன்பாத்தான் நடந்துக்கிறாரு.” மனைவி பேசி முடித்த போது பாஸ்கர் வெறுமையாகப் புன்னகைத்தார்.

“அந்தச் சின்னப் பையனைக் கூட பவி சொல்லிட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் ஏத்துக்கிட்டிருக்காரு.”

“…..”

“இப்பவும் திரும்ப ஊருக்குப் போக வேணாம், இங்கேயே இருக்கலாம் ன்னு இவதான் சொல்லி இருக்கா, அதுக்காகவே அந்த மனுஷன் வீடு, கார் ன்னு அத்தனையும் வாங்கிப் போட்டிருக்காரு.”

“இதெல்லாம் வாங்கிப் போட்டா ஆச்சா ரேணு?”

“நான் அப்பிடிச் சொல்லலேங்க, இப்பத்தையப் பசங்க என்னடாக் காரணம் கிடைக்கும், இன்னொரு கல்யாணத்தைப் பண்ணலாம்னு அலையுறாங்க, அப்பிடி இருக்கும் போது…” மேலே பேசாமல் அத்தோடு நிறுத்திக் கொண்டார் ரேணுகா. மனைவி என்ன சொல்ல வருகின்றாள் என்று பாஸ்கருக்கும் புரிந்தது. அந்த வகையில் பார்த்தால் ரிஷியை மெச்சத்தான் வேண்டும். 

இத்தனைக்கும் பாஸ்கர் தன் மருமகனை கை நீட்டி அடித்திருக்கிறார்! வேறு யாருமாக இருந்திருந்தால் அந்த ஒற்றைக் காரணத்துக்காகவே பவித்ராவை தூக்கித் தூரப் போட்டிருப்பார்கள். தான் செய்த தவறை மறந்துவிட்டு மற்றவர்களைக் குறை கூறும் உலகம்தானே இது. அப்படி இருக்கும் போது தன் தவறை மறைக்காது அதற்குப் பிராயச்சித்தம் செய்யவும் நினைக்கும் ரிஷியை பாராட்டத்தான் வேண்டும்.

“இப்போ என்னப் பண்ணலாம்னு நினைக்கிறீங்க?” ரேணுகா மீண்டும் கேட்டார்.

“இப்பிடியொரு நல்ல வரனை விட வேணாம்னு தோணுதும்மா.” 

“பணத்துக்கு என்னங்க பண்ணுறது?”

“வயலை வித்துடலாம் ரேணு.”

“என்னங்க சொல்றீங்க?!” பாஸ்கரின் பதிலில் ரேணுகா திகைத்து விட்டார். இரண்டு ஏக்கர் வயல் பூமி பாஸ்கரின் தாய்வழிச் சொத்தாக அவருக்கு வந்தது. குத்தகைக்குக் கொடுத்திருந்தாலும் ஒவ்வொரு அறுவடையின் போதும் நெல் மூட்டைகள் இவர்களுக்குத் தவறாமல் வந்துவிடும். இவர்கள் வீட்டில் சாப்பாட்டிற்கென்று என்றைக்கும் அரிசி வாங்கியது கிடையாது.

குத்தகையால் வரும் பணத்தை என்றைக்கும் பாஸ்கர் தொட்டதில்லை. அது பாட்டில் பேங்கில் சேர்ந்து கொண்டிருக்கிறது. கணிசமான ஒரு தொகை சேரும் போது அதற்கு நகைகள் செய்வது ரேணுகாவின் வழக்கம். இன்றைக்கு வரை தங்கள் பெண்களுக்கு நகைக்கென்று பாஸ்கர் தனியாகச் சேமித்தது கிடையாது. இத்தனை செல்வங்களைக் கொடுக்கும் பூமியை விற்று விடுவது என்றால் எப்படி? ரேணுகாவால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“அகல்யாக்கு ஒரு நல்ல இடம் வர்றது சந்தோஷந்தான், அதுக்காக மத்த ரெண்டு பொண்ணுங்களையும் நடு ரோட்டுல விட முடியுமாங்க? அதுங்களுக்கும் நாலு நகை, நட்டுப் பண்ணணுமில்லைங்க?”

“வேற வழியே இல்லை ரேணு.”

“என்னைக் கேட்டா இந்த சம்பந்தம் நமக்கு வேணாம்னுதான் சொல்லுவேன், நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு மாப்பிள்ளை அகல்யாக்கு வராமலேயா போயிடுவான், நீங்க எதை நினைச்சும் வருத்தப்படாதீங்க, அது அது நடக்க வேண்டிய நேரத்துல தானா நடக்கும்.” அதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்பது போல ரேணுகா தூங்கி விட்டார். பாஸ்கருக்கு அத்தனைச் சீக்கிரத்தில் தூக்கம் வரவில்லை. என்றைக்குமே அவர் தன் பெண்களை நினைத்துக் கவலைப் பட்டதில்லை. 

“நாலு பொண்ணுங்களைப் பெத்திருக்கியா பாஸ்கரா?!” என்று ஊரில் இருக்கும் யாராவது பெரியவர்கள் வாயைப் பிளந்தால் கூட சிரித்து விடுவார். அவரைப் பொறுத்தவரை அவர் பெண்கள் அவருக்குச் சுமையில்லை. சந்தோஷமாகத்தான் அவர்களைப் பெற்றார், வளர்த்தார். எல்லாம் பவித்ராவின் கல்யாணம் முடியும் வரைதான். அதன் பிறகுதான் அவர் தலையில் பெரிய கல்லே விழுந்தது. பெண் பிள்ளைகளைப் பெற்று, வளர்ப்பது பெரிதல்ல. அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதுதான் பெரிய விஷயம் என்று புரிந்து கொண்டார்.

ரிஷியின் மேல் அவர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். மனைவி லேசாகத் தயங்கிய போது கூட அது எதையும் பொருட்படுத்தாமல் இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்தினார். ஆனால் எல்லாம் தவிடு பொடி ஆகிவிட்டது. தன் மகளுக்கு இந்த வாழ்க்கை இனித் தேவையில்லை என்றுதான் பாஸ்கர் நினைத்திருந்தார். ஆனால் பவித்ரா அவர் பேச்சைக் கேட்கவில்லை.

ஆசையாசையாகத் தன் மூத்த மகளுக்குத் தான் செய்து வைத்த கல்யாணம் இப்படி ஆகிப் போனதில் அந்தத் தந்தை நொறுங்கிப் போனார். ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அவர் காதிலும் விழத்தான் செய்தன. யூகே க்கு ரிஷி போய்விடுவான் என்று பாஸ்கர் எதிர்பார்த்திருக்க அவன் இங்கேயே வீடு, கார் என்று இருந்துவிட்டான்.

“என்ன பாஸ்கர், மூத்த மாப்பிள்ளை இங்கேயே செட்டில் ஆகிட்டார் போல இருக்கு?” ஊரிலுள்ளவர்கள் கேட்டபோது மனிதர் ஒரு சிரிப்போடு அதைக் கடந்துவிட்டார். எதற்காக ரிஷி இப்படியெல்லாம் செய்கிறான் என்று பாஸ்கருக்கு புரியவில்லை. இது அத்தனையும் தன் மகளின் ஏற்பாடுதான் என்றும் அவருக்குத் தெரியவில்லை. வீட்டிலுள்ள இளையவர்கள் தங்கள் அக்காவின் வீட்டோடு சகவாசம் வைத்திருப்பதையும் அவர் அறிவார். ஆனால் கண்டும் காணாதது போல இருந்துவிட்டார்.

தன் மனைவிக்கும் மகள் வீட்டோடு உறவாட ஆசைதான். அதுவும் அவருக்குத் தெரியும். தனக்காகப் பார்க்கிறாள். இப்போது கூட மருமகனுக்காக வக்காளத்து வாங்கினாளே! மகள், மருமகன் என்று எத்தனை இன்பமாக இருந்திருக்க வேண்டிய உறவு அது! எல்லாம் கசப்பான கனவாகிப் போனது. ஒரு பெருமூச்சோடு கண்ணயர்ந்தார் பாஸ்கர்.

***

அடுத்த நாள் மாலை விச்ராந்தியாக வீட்டில் அமர்ந்திருந்தார் பாஸ்கர். நேற்று இரவு மனைவியோடு செல்வம் வீட்டு சம்பந்தத்தைப் பற்றிப் பேசியதுதான். அதன்பிறகு இருவரும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளவில்லை. வீடு தேடி வரும் அருமையான வரன்தான். அதற்காக சோறு போடும் வளமான பூமியை விற்க ரேணுகா தயாரில்லை. மனைவி சொல்வது நியாயமான காரணமாக இருந்ததால் பாஸ்கரும் மேற்கொண்டு விவாதிக்கவில்லை, விட்டு விட்டார்.

அன்றையப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார் பாஸ்கர். மனம் முழுவதும் தன் மூத்த மகள் பவித்ராவை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்? அவளாகத் தேடிய வாழ்க்கை இல்லையே இது! தான் பார்த்து நடத்தி வைத்த திருமணம். அப்பா தனக்கு நல்லதையே செய்வார் என்று நம்பித்தானே அந்தக் குழந்தை இதற்குச் சம்மதம் சொன்னது. வாசலில் ஒரு வாகனம் வந்து நிற்க தன் கவலை மறந்து அண்ணார்ந்து பார்த்தார் பாஸ்கர். ஊர் பெரியவர்கள் நான்கைந்து பேர் இறங்கினார்கள், கூடவே செல்வம். 

“வாங்க வாங்க.” சட்டென்று எழுந்த பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். 

“பாஸ்கர், எப்பிடி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” கேட்டபடியே அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார் செல்வம்.

“நல்லா இருக்கேன் செல்வம், உட்காருங்க, எல்லாரும் உட்காருங்க.” வாய் வரவேற்றாலும் உள்ளுக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது. அவரை அதிக நேரம் செல்வம் சோதிக்கவில்லை.

“நான் இப்போ எதுக்கு உங்க வீடு தேடி வந்திருக்கேன்னு உங்களுக்கு நல்லாவேத் தெரியும் பாஸ்கர், நான் நேரடியாவே விஷயத்துக்கு வந்திடுறேன்.” செல்வம் சொல்லி முடிக்க பாஸ்கர் லேசாகப் புன்னகைத்தார். 

“எம் பையனுக்குக் கல்யாணம் பண்ணலாம் ன்னு முடிவு பண்ணி இருக்கேன் பாஸ்கர், படிப்பை முடிச்சுட்டு நல்ல படியா வேலை பார்க்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான்.”

“கேள்விப்பட்டேன், ஒரு அப்பாவா உங்க பையனைப் பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு செல்வம்.”

“அதோட நம்ம கடமை முடியலையே பாஸ்கர், பையனுக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் கட்டிக் குடுக்கணும் இல்லை?”

“அதுவும் சரிதான்.”

“பாஸ்கர் வீட்டுப் பொண்ணுங்களைப் பத்தி யாரும் எந்தக் குறையும் சொல்லிட முடியாது, உங்க ரெண்டாவது பொண்ணை எம் பையனுக்குக் கேட்கலாம்னு எங்க வீட்டுல ஆசைப்படுறாங்க பாஸ்கர்.” பட்டென்று விஷயத்தை உடைத்தார் செல்வம்.

“எம் பொண்ணுங்களைப் பத்தி நீங்க இப்பிடிச் சொல்லுறது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, ஆனா… உங்க வசதிக்கு…”

“என்ன பாஸ்கர் வசதி! உங்கக்கிட்ட இல்லாத வசதியா?” மாப்பிள்ளையின் அப்பா இப்படிச் சொல்லவும் பாஸ்கர் திகைத்துப் போனார். ஒரு சாதாரண ஸ்கூல் பிரின்ஸிபாலிடம் அப்படி என்ன வசதி இருக்க முடியும்?!

“அநியாயம் சொல்லக் கூடாது, நேத்து அந்தப் பையன் என்னை வந்து பார்த்துச்சு, பாஸ்கர் வீட்டு மாப்பிள்ளை ன்னா சும்மாவான்னுதான் எனக்கும் தோணுச்சு.”

“….” இவர் என்ன சொல்கிறார்? யாரைப் பற்றிப் பேசுகிறார்?! பாஸ்கருக்கு ஒன்றும் புரியவில்லை.

“உங்க மூத்த மாப்பிள்ளையை பத்தித்தான் பேசுறேன் பாஸ்கர், உங்களுக்குள்ள ஏதேதோ சின்னச் சின்னச் சங்கடங்கள் ன்னு நானும் கேள்விப்பட்டேன், ஆனா உங்கப் பொண்ணு அந்தப் பையன் கூட சந்தோஷமாத்தான் குடும்பம் நடத்துது.” செல்வம் சொன்ன போது பாஸ்கரின் முகத்தில் ஒரு அசௌகரியம் தெரிந்தது.

“குடும்பம் ன்னா ஆயிரம் இருக்கும் பாஸ்கர், நாம பார்க்காததா என்ன? புள்ளைங்க சந்தோஷமா இருந்தா பெரியவங்க நாம கொஞ்சம் விட்டுக் குடுக்க வேண்டியதுதான்.” கூட வந்திருந்த இன்னொரு பெரியவரும் நல்ல வார்த்தைச் சொன்னார். ஆனால் பாஸ்கர் வாய் திறக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை.

“அவ்வளவு வசதியுள்ள புள்ளை, ஆனா அந்தப் பந்தா எதுவும் இல்லாம எங்கிட்ட ரொம்ப மரியாதையா வந்து பேசிச்சு, எனக்கே ரொம்ப ஆச்சரியமாப் போச்சு, நாலு காசு சம்பாரிச்சுட்டாலே இப்பத்தைய இளசுங்க என்ன ஆட்டம் போடுதுங்க, ஆனா இந்தப் பையன் ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுறானே!” மீண்டும் ரிஷியை சிலாகித்தார் செல்வம்.

“ஆமா பாஸ்கர், செல்வம் சொல்றது உண்மைதான், உங்க மாப்பிளை வாங்கி இருக்கிற வீட்டை வித்தது என்னோட சொந்தக்காரங்கதான், அப்பவே அந்தப் பையனைப் பத்தி நல்ல விதமாத்தான் எங்கிட்டச் சொன்னாங்க, விரும்பத்தகாத ஒருசில விஷயங்கள் நடந்து போச்சு, அதுக்காக ஒரு நல்ல பையனை நீங்க ஒதுக்கி வைக்க வேணாம்னுதான் எனக்கும் தோணுது.” கூட வந்த இன்னொருவர் இப்படிச் சொன்னார்.

“எங்களை விட உங்க வீட்டு மாப்பிள்ளையைப் பத்தி உங்களுக்கு நல்லாவேத் தெரிஞ்சிருக்கும் பாஸ்கர், புருஷன் கெட்டவனா இருந்திருந்தா இந்நேரம் உங்கப் பொண்ணுத் தூக்கிப் போட்டுட்டு வீட்டுக்கில்லை வந்திருக்கும், இதுல இருந்தே நாம புரிஞ்சுக்க வேணாமா?” ஆளாளுக்கு ஒவ்வொன்றாகப் பேச பாஸ்கர் அமைதியாக அமர்ந்திருந்தார். வீட்டின் ஹாலில் இத்தனைப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பெண்கள் அனைவரும் கிச்சனில் இருந்தபடி இவர்களைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று ஏதோ தோன்ற ரேணுகா இளைய மகளின் கையில் டீயை கொடுத்தார்.

“ஐயோ அம்மா! நானா?!” அகல்யா அலறினாள்.

“ஆமா, நீதான் கொண்டு போய் குடு.” ரேணுகா உறுதியாகச் சொல்லவும் இளையவளால் மறுக்க இயலவில்லை. ஹாலுக்கு ட்ரேயோடு வந்தாள். பெண் கையில் ட்ரேயோடு வந்த போதே ஹாலில் இருந்த அனைவருக்கும் அந்த வீட்டுப் பெண்களின் மனநிலை என்ன என்பது புரிந்து போனது. இந்தத் திருமணத்தில் தங்களுக்குச் சம்மதம் என்பதை நாசூக்காகப் பெண்கள் சொல்லி விட்டார்கள். இது அங்கிருந்த மனிதர்களுக்கான சேதி மட்டுமல்ல. தனக்கும் சொல்லபட்ட சேதி என்பதை பாஸ்கர் புரிந்து கொண்டார். அவர் முகத்தில் இப்போது ஒரு வலி தெரிந்தது.

“அப்புறம் என்ன பாஸ்கர், ஒரு வசதியான நாளாப் பார்த்து நிச்சயதார்த்தத்தை நடத்திடுவோம்.” சந்தோஷமாகச் சொல்லிவிட்டு தான் அழைத்து வந்திருந்தவர்களோடு கிளம்பிவிட்டார் செல்வம். பாஸ்கர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

***

அன்றைக்கு இரவு குழந்தையின் அறையில் அவனோடு கால் நீட்டிப் படுத்திருந்தாள் பவித்ரா. அவள் சொல்லும் கதையைக் கேட்டபடி அரைத் தூக்கத்தில் இருந்தான் ஹரி. அறையை எட்டிப்பார்த்த ரிஷி மெதுவாக வந்து மனைவியின் அருகில் தானும் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான்.

“அவன் தூங்கி ரொம்ப நேரமாச்சு.”

“ஷ்… அத்தான், சத்தம் போடாதீங்க.”

“சரி போடலை, நீ எந்திருச்சு வா அப்போ.”

“எதுக்கு…” பவித்ரா ஒரு தினுசாகக் கேட்டாள்.

“என்ன பவி கேள்வி இது?” அவன் கோபப்படவும்,

“சரி சரி, வர்றேன்… நீங்க போங்க த்தான்.” என்றாள் சமாதானக் குரலில். ரிஷி மனைவியை முறைத்தபடி எழுந்து போகவும் சின்னவனுக்கு அணைவாகத் தலையணையை வைத்து விட்டு அடுத்த அறைக்குப் போனது பெண். அந்த அறையில் இருந்த ஃப்ரெஞ்ச் வின்டோவை திறந்து வைத்திருந்தான் ரிஷி. சில்லென்ற காற்றில் கர்டன் கூட அசைந்தாடியது. 

“அத்தான் குளிருது.” சொன்ன பெண்ணைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான் ரிஷி.

“அத்தான் எதுக்கு இருக்கேன், ம்…” சரசமாகக் கேட்டபடி மனைவியின் கழுத்து வளைவில் சிறிது நேரம் விளையாடியவன் இப்போது பேச ஆரம்பித்தான்.

“பவி…”

“ம்…” 

“இன்னைக்கு நான் அந்த செல்வத்தை மீட் பண்ணினேன்.”

“செல்வமா? அது யாரு த்தான்?” பெண்ணுக்கு தங்கையின் கல்யாண விஷயம் சுத்தமாக மறந்து போயிருந்தது.

“அகல்யாக்கு வந்திருக்கிற மாப்பிள்ளைப் பையனோட அப்பா.” ரிஷி சொல்லவும் பவித்ரா திடுக்கிட்டுப் போனாள்.

“எதுக்கு?!”

“என்னம்மா இப்பிடிக் கேட்கிறே? அகல்யாக்கு கல்யாணம் பண்ண வேணாமா?”

“பண்ணணும்தான்…”

“அப்புறம் என்ன?”

“இல்லை… நீங்க…” எதையோப் பேச வந்துவிட்டு சட்டென்று நிறுத்திக் கொண்டாள் பவித்ரா. ஆனால் ரிஷி அது எதையும் கவனிக்கவில்லை. 

“நல்ல மனுஷன் மாதிரித்தான் தெரியுறாரு, நல்லாப் பேசினாரு.”

“ஓ…”

“ஆமா, அவர் பையனுக்கு நல்ல குடும்பத்துல இருந்து ஒரு நல்ல பொண்ணு வேணும், அதுக்கு உங்கக் குடும்பமும் அகல்யாவும் பொருத்தமா இருப்பீங்கன்னு நினைக்கிறாரு.”

“ம்…”

“ஊருக்குள்ள அவருக்கிருக்கிற கௌரவம் குறைஞ்சிடாம நீங்க ஏதாவது பண்ணணும்னு அவர் எதிர்பார்க்கிறாரு.”

“ஏதாவதுன்னா? என்ன எதிர்பார்க்கிறாங்க?”

“அம்பது சவரன் நகை, இருபது லட்சம் கேஷ்.”

“என்னது?!” பவித்ரா விறைத்துப் போனாள்.

“இது கூட ஒன்னுமே இல்லையாம்… உங்க வீட்டு சம்பத்தத்தை விட மனசில்லாமத்தான் மனுஷன் இந்தளவுக்கு இறங்கி வந்திருக்காராம்.”

“நல்லா இறங்கி வந்தாரு, நீங்க என்னத்தான் சொன்னீங்க?” பவித்ராவின் குரலில் இப்போது கோபம் இருந்தது.

“மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாருங்கன்னு சொன்னேன்.”

“என்ன?!” கணவன் இலகுவாகச் சொல்லத் திடுக்கிட்டுப் போய் அவனிலிருந்து விலகினாள் பெண்.

“என்னாச்சு பவி?”

“என்ன த்தான் இவ்வளவு சிம்பிளா சொல்றீங்க?”

“ஏம்மா? நீதானே இது நல்ல இடம் ன்னு சொன்னே?”

“அதுக்காக? இவ்வளவு பண்ண அப்பாவால முடியுமா?”

“அப்பாவால முடிஞ்சதை அவர் பண்ணட்டும், மத்ததை நாம பார்த்துக்கலாம்.” 

“அத்தான்… நீங்க…” பவித்ரா திணறினாள்.

“இதுக்கு பதில் நான் ஏற்கனவேச் சொல்லிட்டதா எனக்கு ஞாபகம், இப்போ நமக்கு முக்கியம் அகல்யாவோட லைஃப், அதைப் பத்தி மட்டுந்தான் யோசிக்கணும், அதுக்கு முன்னாடி இந்த அத்தானை பத்தியும் பவி கொஞ்சம் யோசிக்கணும்.” 

இவ்வளவு நேரமும் பொறுப்பாகப் பேசிக்கொண்டிருந்த கணவன் இப்போது குழந்தை போல சில்மிஷம் செய்ய ஆரம்பித்திருந்தான். அவன் குறும்புகளை அவள் ரசித்தாலும் பவித்ராவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றின.

“பவி!” மனைவியின் மனது இப்போது இங்கே இல்லை என்பதை உணர்ந்து கணவன் ஒரு அதட்டல் போட அவனுக்குள் கரைய ஆரம்பித்தது பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!