KKE–EPI 10

KKE–EPI 10

அத்தியாயம் 10

 

பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரெஞ்சுப் பகுதியானது வெள்ளை நகரம் அல்லது வில்லே பிளான்சே என்றும், இந்தியப் பகுதி கருப்பு நகரம் அல்லது வில்லே நோய்ரே என்றும் அழைக்கப்படுகின்றன.

 

அவர்கள் பாண்டிச்சேரியை அடைந்த போது மாலை மணி நான்கு ஆகியிருந்தது. ஹோட்டலில் எப்பொழுதும் போல லக்கேஜைப் போட்டுவிட்டு குளித்து ப்ரெஸ்சாகி வந்தார்கள். அழகான மஞ்சள் நிற ப்ளேன் சுடிதார் அணிந்து வந்தாள் மெய் லிங். அவள் நிறத்துக்கும் சுடிதாரின் நிறத்துக்கும் எந்த வித வித்தியாசமும் தெரியவில்லை.

ஏக்கமாகப் பார்த்த ஜம்புவை இவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. பின்னால் போய் அமர்ந்துக் கொண்டு போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள்.

‘நிமிர்ந்துப் பார்க்கறாளான்னு பாரு! முகத்தைப் புடிச்சுப் பார்த்தது ஒரு குத்தமா? அந்த அழகான கன்னத்துல முத்தம் குடுக்கனும்னு நாடி நரம்பெல்லாம் துடிச்சதே, அதை மட்டும் செஞ்சிருந்தா திரும்பி சிங்கப்பூருக்கே போயிருப்பாளோ! இனி திரும்பி போகிற வரைக்கும் பேச மாட்டாளோ? காதல் காய்ச்சல்ல நட்ப இழந்துட்டனோ?’ மனம் வலிக்க வேனை செலுத்தினான் ஜம்பு.

ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோயிலில் நின்றது வேன். எல்லோரும் உள்ளே செல்ல, இவன் வேனை பார்க் செய்துவிட்டு வந்தான். வாசலிலே நின்றிருந்த யானையைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள் மெய் லிங். மற்றவர்கள் யானையிடம் ஆசி வாங்கி உள்ளே போய்விட, ஆசையிருந்தும் பயந்துக் கொண்டே நின்றாள் இவள். இவளுக்காக தயங்கி நின்ற மற்றவர்களை உள்ளே போக சொன்னவன்,

“ஸ்கேர் டோண்ட் மெய் லிங். எலிப்பேண்ட் ஹார்ம் நோ” என மெல்லிய குரலில் சொன்னான்.

அவனைத் திரும்பி பார்க்காமல் அமைதியாகவே நின்றாள் அவள்.

“மெய் லிங்! ஐம் சாரிடி! ப்ளிஸ் பேசு. டால்க் மீ”

திரும்பி அவன் கண்களை உற்றுப் பார்த்தாள் அவள். பின் கையை நீட்டியவள்,

“ஒன்லி ப்ரேண்ட்?” என கேட்டாள்.

அவசரமாக கைப்பற்றி குலுக்கியவன்,

“ஒன்லி ப்ரேண்ட்” என வாயாலும்,

‘அதுக்கும் மேலடி என சமூக்குட்டி’ என மனதாலும் சொன்னான்.

பிடித்த கையை விடாமலே அவளை யானையின் அருகில் அழைத்து சென்றான். மெல்ல நடுங்கியவளின் கையை இறுக்கிக் கொண்டான்.

“பயப்படாதே மெய் லிங்” குழந்தையை சமாதானப் படுத்துவது போல மென்மையாக பேசினான்.

யானை தும்பிக்கையைத் தூக்கவும் இன்னும் நடுங்கினாள் அவள். இதுதான் சாக்கு என தோளில் கைப்போட்டு அவளின் நடுக்கத்தைக் குறைக்க முயன்றான். யானை இவர்கள் இருவரையும் சேர்த்து ஆசிர்வதித்தது.

ஆசீர்வாதம் வாங்கியதும் அவன் கையை எடுத்து விட்டவள்,

“லெட்ஸ் கோ இன்” என அழைத்தாள்.

உள்ளே பூஜையை முடித்துக் கொண்டு கோயிலை விட்டுக் கிளம்பினார்கள். இரவு நெருங்க, வேனில் இருந்தபடியே பாண்டிச்சேரி வீதியை சுற்றிக் காட்டினான் ஜம்பு. இரவில் தான் வீதிகளில் மக்கள் கூட்டம். பல நாட்டு மக்களும், சந்தோசமாக வீதி உலா போய் கொண்டிருந்தனர். மறுநாள் பகல் வெளிச்சத்தில் மீண்டும் வரலாம் என சொல்லி எல்லோரையும் ஹோட்டலில் இறக்கிவிட்டான் ஜம்பு.

“அண்ணா” என தலையை சொரிந்தபடியே வந்து நின்றான் மங்கி.

“என்னடா?”

“லீவ் கேட்டேனே?”

“போய் தொலை! குடிச்சுட்டு எங்காவது கவுந்து கிடக்காம, எனக்கு போன் பண்ணு. வந்து ஏத்திக்கறேன்.”

“தேங்ஸ்ண்ணா! நீங்களும் வாங்கண்ணா, ஜாலியா இருக்கும்.”

“வேணாண்டா. நான் காலைலேயே ட்ரைவ் பண்ண ஆரம்பிக்கனும். மப்புல இருந்தா சரிப்பட்டு வராது. அதோட என்னைப் பத்தி தெரியாதாடா? எங்கப்பன வம்பிழுக்க மட்டும்தான் தண்ணி அடிப்பான் இந்த ஜம்பு. ஜாலிக்காக குடிச்சதெல்லாம் விட்டுட்டேன். நீ பத்திரமா போடா”

“சரிண்ணா நான் கிளம்பறேன்.” என ஜம்பு கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வாயெல்லாம் பல்லாக கிளம்பினான் மங்கி.

எப்பொழுதும் போல இவர்களைப் போல ட்ரைவர்கள் பயன்படுத்த ஹோட்டல்கள் கொடுக்கும் பாத்ரூமுக்குப் போய் குளித்து விட்டு வந்தான் ஜம்பு. வேனை நெருங்கியவன் முகம் மலர்ந்து விகசித்தது. மலர்ச்சியை மறைத்தவன், அங்கே நின்றிருந்த மெய் லிங்கைப் பார்த்து,

“வாட் மெய் லிங்? ரெஸ்ட் நோ?” என கேட்டான்.

ஜீன்ஸ் அணிந்து லவண்டர் வண்ணத்தில் டாப்ஸ் அணிந்திருந்தாள். காதுக்கு வளையம் போட்டிருந்தாள். அவள் பேசும் போது அவள் தலையாட்டலுக்கு ஏற்ப அந்த வளையமும் ஆடியது.

“ஜம்ப்” பொறுமை இல்லாமல் அழுத்திக் கூப்பிட்டாள் மெய் லிங். அப்பொழுதுதான் அவள் பேசுவதைக் கேட்காமல் வளையத்தின் வட்டத்தில் மனசு மேரி கோ ரவுண்ட் போயிருப்பதை உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டான்.

“வாட்?” என கஸ்டப்பட்டு குரலை செறுமி பேசினான்.

“ஜம்ப், கென் யூ ப்ரிங் மீ டூ சர்ச்?” பாண்டிச்சேரியில் நிறைய சர்ச்சுகள் இருப்பதாக கூகள் செய்ததாகவும், அவளுக்கு ஏதாவது ஒன்றுக்குப் போக வேணும் என ஆவலாக இருப்பதாகவும் கேட்டாள். வந்தவர்கள் எல்லாம் இந்துக்கள் ஆகையால், அவர்கள் இல்லாத போது இந்த உதவியைக் கேட்பதாக சொன்னவள்,

“ஐ வில் பே யூ ஃபர் தெ ட்ரபள்!” எனவும் சேர்த்து சொன்னாள்.

“எப்பவும் காசு, காசு, காசுதான். என்னைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியா இருக்கு? வர கோவத்துக்கு அறைஞ்சி வச்சிருவேன். பாலுல குங்குமப்பூவ கலக்கற மாதிரி கன்னம் லேசா சிவந்துருமேன்னு சும்மா இருக்கேன்” கோபமாக பேசினான்.

எருமை மாட்டில் மழை பெய்தது போல,

“வாட்?” என கேட்டாள் அவள்.

“நத்திங். வா லெட்ஸ் கோ”

“பென் தான் (இடியட்)” என சத்தமாக முணுமுணுத்தாள் மெய் லிங்.

“என்னது?”

“நத்திங்!” என அவனைப் பழிக்குப் பழி வாங்கினாள் அவள். சிரிப்பு வந்தது அவனுக்கு.

“இதுதான் சீனா குசும்போ?”

“வாட் எவர், போடா”

“போடாவா?”

“யெஸ், போடா, போடா!”

“வூ டீச்?”

“மங்கி”

“தட் நோ ரெஸ்பேக்ட். ஆனா நீ கூப்பிட்டா கிக்கா தான் இருக்கு” சிரித்தான் அவன்.

பக்கத்தில் நின்றவன் காலை ஒரு எத்து எத்தினாள் மெய் லிங்.

“ஏன்டி?”

“யூ ஆஸ்க் மீ டூ கிக். சோ ஐ டிட்!”

“கிக்கு குடுத்த கிக்கும் கிக்கோ கிக்காத்தான் இருக்கு”

மீண்டும் எத்துவதற்கு அவள் வர, ஓடிப்போய் ட்ரைவர் சீட்டில் அமர்ந்துக் கொண்டான் ஜம்பு. அவன் அருகில் வந்து அமந்தவள்,

“இப் யூ டால்க் டமிழ் டூ மீ, ஐ வில் டால்க் மண்டரின்(சைனிஸ்) டூ யூ. அண்டர்ஸ்டேண்ட்?”

“அண்டர்ஸ்டேண்ட்” அதன் பிறகு அவர்களின் வாய்மெய் மொழியிலே பேசி சிரித்தப்படி பயணித்தார்கள்.

அவர் லேடி ஆப் இம்மாக்குலேட் கன்ஷப்சன் தேவாலயத்திற்கு அழைத்து சென்றான் ஜம்பு.

“மதர் தெரெசா ஹியர் கம்” இங்கு மதர் தெரெசா கூட வந்து போயிருக்கிறார்கள் என விளக்கியவன் உள்ளே போக சொன்னான்.

தயங்கி நின்றவள்,

“யூ?” என கேட்டாள்.

“வரவா?”

“யெஸ் ப்ளிஸ்!”

தேவாலயத்திற்குள் இது வரை அவன் அடி எடுத்து வைத்ததில்லை. கால்கள் முதலில் தயங்கினாலும், அவள் முகத்தைப் பார்த்தவன் மறு நொடி உறுதியுடன் உள்ளே நுழைந்தான்.

வெள்ளையில் தங்க நிறம் கலந்தது போல இருந்த உள்கட்ட அமைப்பை ரசித்தப்படி வந்தான் ஜம்பு. அங்கிருந்த நீள நாற்காலியில் அமர்ந்தவள் கண் மூடி கடவுளை ஜபிக்க ஆரம்பித்தாள். அவள் அருகில் அமர்ந்துக் கொண்ட ஜம்பு அவள் வேண்டுவதையே பார்த்திருந்தான். அந்த குட்டி வாய் மொனமொனவென எதையோ யாசித்தது.

இவனும் கண் மூடி,

‘சாமி, அவ எதை கேட்டாலும் நிறைவேத்தி குடு. அப்படியே அவ மனசுல என் மேல சிறு சலனத்தையாச்சும் வர வை. காதல் வரதுலாம் பேராசைன்னு எனக்கே தெரியுது. நானும் அவள பாதிச்சிருக்கேன்னு சின்னதா தெரிஞ்சா கூட போதும், அப்படியே என் காலத்தை ஓட்டிருவேன். அதையாச்சும் நிறைவேத்திக் குடு சாமி’ என எப்படி வேண்டுவது என தெரியாமல் வேண்டிக் கொண்டான்.

அவள் வேண்டி முடித்ததும் இருவரும் வெளியே வந்தார்கள்.

“டின்னர்?” என கேட்டான் ஜம்பு.

“ஓகே! வேர் ஜம்ப்?”

“சர்ப்ரைஸ்டி”

“போலாம் போடா!” என சொன்னவளை சிரிப்புடன் பார்த்தான் ஜம்பு.

சர்ச் அருகிலேயே இருந்த அந்த சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போனான் ஜம்பு. அதைப் பார்த்ததும், அவள் துள்ளிக் குதிக்காத குறைதான். தானாகவே அவனின் கையை சுற்றி வளைத்துக் கொண்டாள் மெய் லிங்.

“தேங்க் யூ ஜம்ப். தேங் யூ சோ மச்!”

அவர்கள் உணவு சாப்பிட நாக்கு ஏங்கிப் போய் கிடந்ததாக சொன்னவள், குஷியாக அவன் கைப்பற்றியபடி உள்ளே சென்றாள். கோயில்களை சுற்றி வருவதால் இது வரை சைவ உணவகங்களுக்குத்தான் அழைத்து சென்றிருக்கிறான் ஜம்பு. இங்கே சைவ, அசைவ உணவு இரண்டும் கிடைத்தது.

ஆசையாக மெனுவைப் பார்ப்பவளை, சைவமாய் சாப்பிடு என சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு.

‘பாவம், சாப்பிடட்டும்! ரூமுக்கு போய் தலை முழுகுனா முடிஞ்சது’ என மனம் அவளுக்காக பேசியது.

ஆனால் அவளாகவே ஹோங் காங் நூடுல்ஸ் சைவமாக ஆர்டர் செய்தாள். அவனுக்கு என்ன வேண்டும் என கேட்டாள். அவன் பேய் முழி முழிக்கவும், அவளாகவே அவனுக்கு உறைப்பாக சேசுவான் நூடுல்ஸ் ஆர்டர் செய்து கொடுத்தாள்.

ச்சாப் ஸ்டிக்கில் நூடுல்சை சுற்றி அழகாக வாயில் தள்ளினாள் அவள். அந்த இரண்டு குச்சியையும் வைத்து அவள் சாப்பிடுவதை என்னவோ சர்கஸ்சைப் பார்ப்பது போல அதிசயமாக பார்த்திருந்தான் ஜம்பு.

இவனோ முள்ளு கரண்டியில் நூடுல்சை அள்ள வாயினுள் செல்வதற்குள் பாதி மீண்டும் தட்டில் விழுந்திருந்தது. அவன் போராட்டத்தை ஓரக்கண்ணால் பார்த்திருந்தவள், அவன் அருகே எழுந்து வந்தாள். அவன் தோளில் ஒரு கையை வைத்துக் குனிந்து மறு கையால் கரண்டியால் நூடுல்சை எப்படி சுற்றுவது என சொல்லிக் கொடுத்தாள் மெய் லிங். அவளது நெருக்கமும், தோளில் பதிந்திருந்த கையின் அழுத்தமும் ஜம்புவுக்கு இதமாக இருந்தது. வேண்டும் என்றே மீண்டும் கரண்டியால் சுற்றி நூடுல்சை தட்டிலேயே தள்ளினான்.

மறுபடியும் குனிந்து சொல்லிக் கொடுத்தாள் மெய் லிங். இந்த முறை கொஞ்சம் தைரியம் வர, சொல்லிக் கொடுத்த அவள் கையைப் பற்றி இழுத்து உணவை தன் வாயில் வைத்துக் கொண்டான் ஜம்பு. அவன் கையில் இருந்த தன் கையைப் பிடுங்கிக் கொண்டவள், பட்டென அவன் தலையில் கொட்டினாள்.

“ஈட் யுவர்செல்ப்!” என கடிந்தவாறே தன் இடத்துக்குப் போய் அமர்ந்துக் கொண்டு தன் உணவை உண்ண ஆரம்பித்தாள். அதற்கு மேல் அவளை வம்பிழுக்காமல், இவனும் சாப்பிட்டு முடித்தான்.

கடைசியாக பொரித்த ஐஸ்க்ரீமை டிசர்ட்டாக ஆர்டர் செய்து உண்டார்கள். வாயைத் துடைத்துக் கொண்டவள்,

“மை ட்ரீட் ஜம்ப்” என்றாள்.

“அதானே பார்த்தேன்!” முனகினாலும் விட்டுக் கொடுத்தான்.

“போலாம் போடா” என அழைத்தாள் மெய் லிங்.

“யூ க்நோ போடா இஸ் வாட்?”

“மங்கி சே போடா மீன்ஸ் ப்ரேண்ட்”

‘அவன் இருக்கானே, கேடிப்பய. என்னை டேமேஜ் பண்ணறதுல அப்படி என்னதான் சந்தோஷமோ!’

வேனில் ஏறியவள், சலசலவென பேசியபடியே வந்தாள். அவள் பேசுவது கீச் கீச்சென குருவியின் சத்தத்தைப் போல் அவன் காதை அழகாக நனைத்தது.

அவனுக்குப் பிடித்த பாடலை போட்டவன்,

“தீஸ் சாங் உனக்கு மெய் லிங்” என்றான்.

ஏ. ஆர். ரஹ்மான் உயிரை உருக்கியபடி

“கீச்சு கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது” என பாடினார். பாடல் முடிந்ததும்,

“அகைய்ன்!” என்றாள் மெய் லிங். அவன் மறுபடி போட அந்த கீச்சு கீச்சை மட்டும் பிடித்துக் கொண்டாள். அந்த வார்த்தை வரும் போது அவளும் கூட சேர்ந்து

“கீச்சு கீச் என்டது

கிட்ட வா என்டது” என கத்திப் பாடினாள். அவளோடு இவனும் சேர்ந்து பாடினான். ஹோட்டலை அடையும் வரை அந்தப் பாடலே மறுபடி மறுபடி ஓட, இருவரும் சந்தோஷமாக பாடியபடியே வந்தனர்.

இறங்கிக் கொண்டவள்,

“தேங்க்ஸ் ஃபார் திஸ் வொண்டர்புல் நைட் ஜம்ப். வில் நெவர் பர்கேட் இட் இன் மை வொல் லைப்” என கரகரத்த குரலில் சொல்லியவள் விடுவிடுவென நடந்துவிட்டாள்.

அமைதியாக அவள் போவதைப் பார்த்திருந்தவன் காதுகளில், பாடலின் வரி அழுத்தமாக விழுந்தது.

“சொட்டும் மழை சிந்தும்

அந்த சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப்போனவனை(ளை) எண்ணி எண்ணி

அழுதது காண் அழுதது காண்”

நெஞ்சு அடைக்க சீட்டில் அப்படியே சரிந்துக் கொண்டான் ஜம்பு. கண்கள் லேசாக கலங்குவது போல இருந்தது. எவ்வளவு அடக்கியும் ஒரு சொட்டு நீர் கண்ணைத் தாண்டி கன்னத்தில் இறங்கியது.

error: Content is protected !!