KKE—EPI 11

KKE—EPI 11

அத்தியாயம் 11

ஆரோவில் சர்வதேச நகரத்தில் 43 நாடுகளைச் சேர்ந்த 2,200 பேர் வாழ்கின்றனர். இங்குள்ள ஆரோ பீச், இந்தியாவின் முக்கிய கடற்கரைகளில் ஒன்று.

 

காலை மணி எட்டுக்கெல்லாம் அவ்ரோபிண்டோ ஆசிரமத்தில் இருந்தார்கள் இவர்கள். காலணிகளை உரிய இடத்தில் வைத்துவிட்டு, சத்தமில்லாமல் போய் உள்ளே பார்த்துவருமாறு அனுப்பினான் ஜம்பு. இன்று கடைசி இருக்கைக்குப் போகாமல், அவன் பின்னாலேயே உட்கார்த்து வந்தாள் மெய் லிங். உள்ளே போகும் முன் கூட அவனையும் மங்கியையும் பார்த்து புன்னகைத்து விட்டுத்தான் போனாள்.

ப்ளாஸ்கில் இருந்து காபி எடுத்து அருந்திய ஜம்பு ஒரு மாதிரியாகவே இருந்தான்.

“என்னாச்சுண்ணா?”

“ஒன்னும் இல்லைடா”

“சொலலுண்ணா!”

“இன்னும் ஒரு வாரத்துல சமூ கிளம்பிருவா! அதை நினைச்சா நெஞ்சுக்குள்ள என்னமோ பிசையற மாதிரி இருக்குடா மங்கி. நேத்து நைட் அவ கூட செலவழிச்ச நிமிடங்கள் அப்படியே கல்வெட்டு மாதிரி மனசுல பதிஞ்சு நிக்குதுடா. நேரம் அப்படியே உறைஞ்சுற கூடாதான்னு ஏங்கிப் போய்ட்டேன். பாய்ன்னு சொல்லிட்டு அவ ஹோட்டல் உள்ளே போனதே என்னால தாங்க முடியல. பாய்ன்னு சொல்லிட்டு என்னை விட்டு அவங்க நாட்டுக்குப் போய்ட்டா எப்படி தாங்கிக்குவேனோ தெரியலடா”

“இதுக்குத்தான் நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன், கேட்டாதானே! இப்ப வந்து குத்துது, குடையுதுனா என்ன பண்ண?” அக்கறையில் பொரிந்தான் மங்கி.

“எல்லாம் சரியா போயிடும்டா, விடு” வாயால் சொன்னாலும், மனம் இல்லை இல்லை என போர் முரசு கொட்டியது.

உள்ளே போன மெய் லிங்கிற்கு அங்கிருந்த அமைதி புது அனுபவமாக இருந்தது. குட் வைப்ரேஷன் இருந்தது அங்கே. உடல் சிலிர்த்துக் கொள்ள மெல்ல அமர்ந்தாள். பலர் அங்கே அமைதியாக அமர்ந்து கண் மூடி தியானம் செய்தபடி இருந்தனர். சிங்கப்பூரில் உடற்பயிற்சியாக யோகா பயின்றிருந்ததால், தியானமும் தெரியும் அவளுக்கு.

கண் மூடி அமர்ந்தவள், மூச்சை இழுத்து விட்டு முதலில் மூச்சு பயிற்சி செய்தாள். பின் தனது கவனத்தை நெற்றி பொட்டில் குவித்து மெல்ல ஆழ்ந்த தியான நிலைக்குப் போனாள். மூடிய கண் முன் திடீரென தோன்றிய உருவத்தைப் பார்த்து பட்டென கண்ணைத் திறந்தாள் மெய் லிங். நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. உள்ளங்கை வியர்வையால் பிசுபிசுத்தது. எச்சில் கூட்டி விழுங்கியவள், கைகளை தொடையில் அழுந்த தேய்த்து துடைத்துக் கொண்டாள். மீண்டும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய ஆரம்பித்தாள். மறுபடியும் அந்த உருவம் சிரித்தப்படி வந்தது. இயலாமையுடன் மீண்டும் கண்ணைத் திறந்தாள் மெய் லிங். அதற்கு மேல் போராட அவளுக்கு வலு இல்லை.

பக்கத்தில் அமர்ந்திருந்த ராணியிடம்,

“ஐ குல்டண்ட் டூ இட். ஐம் கோயிங் பேக் டூ தெ வேன்” என அறிவித்து விட்டு எழுத்துக் கொண்டாள். அவள் மட்டும் தனியாக வரவும், பதட்டமாக அவள் அருகில் போனான் ஜம்பு.

“வாட்? வை யூ ஒன்லி?”

பதில் பேசாமல் அவன் கண்களை உற்றுப் பார்த்தாள் மெய் லிங். அவளின் குத்தும் பார்வையைத் தாங்கி நிற்க முடியாமல், பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான் ஜம்பு.

“என்னாச்சு மெய் லிங்?”

“நத்திங் ஜம்ப்” குரலில் சுரத்தே இல்லை.

சட்டென கை நீட்டி அவளின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் ஜம்பு.

“பீவர் நோ” என சொன்னவன் கையை விலக்க முற்பட, இவள் தன் நெற்றியில் அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“ஏ மெய் லிங்! வாட் டி?” பயந்தான் ஜம்பு.

“நத்திங்!” என அழுத்தமாக சொன்னவள், வேனில் ஏறி சீட்டில் சாய்ந்துக் கொண்டாள். இவர்கள் இருவரையும் ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான் மங்கி. மற்றவர்களும் வர, வண்டி அரோவில்(Auroville) புறப்பட்டது. பயணத்தில் இவன் கண்ணாடி வழி அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவள் பட்டென பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.

‘இந்த சீனா பொட்டு என்னை லுக் விடறாளா? நான் பார்க்கறப்போ பட்டுன்னு திரும்பிக்கிறாளே! என்னங்கடா நடக்குது இங்க? அந்த ஆஸ்ரமத்துல போதி மரம் ஏதாச்சும் இருந்துச்சா?’ மண்டையைப் பிய்த்துக் கொண்டான் ஜம்பு. தற்செயலாகப் பார்த்திருப்பாள் என ஒரு முடிவுக்கு வந்தான்.

அரோவில் உலக மக்கள் ஜாதி, மத பாகுபாடின்றி இணைந்து வாழ வேண்டும் என கோட்பாட்டை வைத்திருந்த இடமாகும். பல வகை கலவையான மக்களை அங்கு காண முடிந்தது. ஆங்கிலேயனும் ஒரு தமிழ் பெண்ணும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்துப் போனதை பார்த்துவிட்டு இவன் திரும்ப, அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் மெய் லிங்.

“வாட்?”

“நத்திங் போடா” என சொல்லியவள் அங்கிருந்த ஒரு கடைக்குள் புகுந்து கொண்டாள். ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு போனவளை அதிசயமாகப் பார்த்தான் மங்கி.

“ண்ணா, சமூ கீச் கீச்னு என்னமோ கத்திட்டுப் போகுது! மழை குருவி பாட்டா அது?” என ஆச்சரியமாகக் கேட்டான். அவனுக்கு ஒரு புன் சிரிப்பை மட்டும் உதிர்த்தான் ஜம்பு.

“என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” என கையை விரித்தான் மங்கி.

“ஆடு நடக்குது, மாடு நடக்குது, அதுங்க கூட சேர்ந்து நீயும் நடக்கற”

“இது ரொம்ப பழைய ஜோக்ண்ணா. பழைய ஜோக் தங்கதுரை கூட இதோட பெட்டரா சொல்லுவாரு” என ஜம்புவை கலாய்த்தான் மங்கி.

எல்லோரும் அவ்விடத்தை விட்டுக் கிளம்பும் போது, மங்கியின் அருகில் வந்த மெய் லிங் ஒரு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தாள்.

“கிவ் ஜம்ப்” என சொல்லிவிட்டு வேனில் ஏறிக்கொண்டாள்.

“பார்டா!” மூக்கின் மேல் விரலை வைத்தான் மங்கி.

அதன் பிறகு கடற்கரைக்கு சென்றார்கள். காந்தி சிலையின் முன்னே நின்று வித விதமாக செல்பி எடுத்துக் கொண்டார்கள் எல்லோரும். அங்கிருந்த பெரிய பாறை போன்ற கற்களில் அமர்ந்து படம் பிடித்தார்கள். மற்றவர்கள் அங்கே சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த பொட்டலத்தை ஜம்புவிடம் சேர்ப்பித்தான் மங்கி.

“உங்காளு உங்க கிட்ட குடுக்க சொன்னாங்க”

ஆசையாக பிரித்துப் பார்த்தான் ஜம்பு. ஸ்பிருலினா(spirulina) என எழுதி இருந்தது அந்த பாட்டிலில். திறந்துப் பார்த்தவன்,

“என்னடா மங்கி பச்சை பச்சையா என்னமோ மாத்திரை மாதிரி இருக்கு” என கேட்டான்.

“ஆமாண்ணா? எதுக்கு இத உங்களுக்குக் குடுத்தாங்க?”

“எனக்கு என்னடா தெரியும்? போனுல இந்த மருந்து எதுக்குன்னு பாத்து சொல்லுடா டேய்!”

“ஒரு சமயம் உங்கள வீரியமா மாத்தறதுக்கு உள்ள மாத்திரையா இருக்குமோ?”

“கொலை பண்ணிருவேண்டா உன்னை. பரதேசி!” முறைத்தான் ஜம்பு.

“சரி, சரி! கோபத்தைக் குறைங்க. நான் பாத்து சொல்லுறேன்” என்றவன் போனை ஆராய்ந்தான். பின்பு வாய் விட்டு சிரித்தான்.

“ஏன்டா சிரிக்கற? பலான மருந்தாடா, சொல்லுடா?” டென்ஷன் ஏற மங்கியைப் பிடித்து உலுக்கினான் ஜம்பு.

“ண்ணா, இந்த டேப்லட் உடம்புக்கு நல்லதுன்னு போட்டுருக்குன்னா நெட்ல. உண்மையான்னு எனக்குத் தெரில ஆனா எது எதுக்கு நல்லதுன்னு இங்க குடுத்துருக்கானுங்க.”

“சொல்லித்தொலை”

“உடம்பு இளைக்கறதுக்கு உதவுமாம்!” ஜம்புவை மேலும் கீழும் பார்த்தவன்,

“உங்க சமூ நீங்க தொப்பையோட இருக்கீங்கன்னு ஃபீல் பண்ணுது போலண்ணா” என சொல்லி சிரித்தான்.

“யாரை பார்த்துடா தொப்பைன்னு சொன்ன? கொன்னுருவேன் ராஸ்கல். ஜிம் பாடிடா இது.” டீ சர்டை தூக்கி வயிற்றைக் காட்டினான் ஜம்பு. சிக்ஸ் பேக் கமிங் சூன் என்பது போல பல கோடுகள் இப்பொழுதுதான் உருவாக தொடங்கி இருந்தன.

“சரி, சரி. சட்டையை இறக்குங்க. போற வர பொண்ணுலாம் ஜொள்ளு விடுதுங்க. இறக்குங்கண்ணா”

“அந்த பயம் இருக்கட்டும். அப்புறம்?”

“சர்க்கரை நோய கட்டுல வைக்க உதவுமாம்”

“கண்டிப்பா எனக்கு தேவைத்தான். என் சமூத்தான் பார்க்கவே தேனா இனிக்கறாளே! அவள பார்க்க பார்க்க என் உடம்புல சக்கரை ஏறித்தான் போயிரும்”

“பாத்துண்ணா எறும்பு மேஞ்சிற போது. ரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல் எல்லாத்தையும் ஓரளவு கட்டுல வைக்க உதவுமாம். உங்க சீனா புட்டு இதெல்லாம் உங்களுக்கு இருக்குன்னு சந்தேகப் படுது போலண்ணா!”

“லவ் பண்ணுவாளா மாட்டாளான்னு யோசிச்சு யோசிச்சே எனக்கு சத்தியமா ரத்த அழுத்தம் வந்துரும்டா!”

“அண்ணா, இத கேளுங்க! மெண்டல் ஹெல்த்துக்கு நல்லதாம். சமூ மருந்து வாங்கிக் குடுத்து உங்களை மெண்டல்னு சொல்லிருச்சுண்ணா” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“விஷம், விஷம்!” என அவன் தலையிலேயே கொட்டினான் ஜம்பு.

“ஒருத்தி அக்கறைப்பட்டு ஒன்னு செஞ்சா அதை மதிக்காம, எப்ப பாரு சந்தேகமாவே பார்க்கறது. நல்லா வருவடா நீ!” என சொல்லியவன் அந்த பாட்டிலில் இருந்து ஒரு டேப்லட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்தான்.

“ஹ்ம்ம் நடத்துங்கண்ணா. உங்காளு விஷம் குடுத்தா கூட ரசம் மாதிரி கைல குமிச்சி வச்சிக் குடிப்பீங்க போல” கிண்டல் அடித்தான் மங்கி.

“என் சமூ கல்லை குடுத்தாக் கூட கமர்கட்டா நினைச்சு சாப்பிடுவேண்டா”

“ஐயோ என்னைக் காப்பாத்துங்க! காதல் பிசாசு ஒன்னு அண்ணான்ற பேருல என் பக்கத்துலயே நிக்கிது. கடிச்சு கிடிச்சு வைக்கிறதுக்குள்ள, ப்ளிஸ் ஹெல்ப் மீ” என சத்தம் போட்டான் மங்கி.

“டேய் சவுண்ட குறைடா” என இவன் அடிக்க வர அவன் ஓடிப்போய் மற்ற பெண்களுடன் இணைந்துக் கொண்டான்.

அங்கே கால் வலிக்க சுற்றி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்குக் கிளம்பினார்கள். மெய் லிங்கும் இவனும், அவன் பார்க்காத போது இவளும் இவள் பார்க்காத போது அவனும் ஒருவரை ஒருவர் திருட்டுத்தனமாகப் பார்த்தபடியே வந்தார்கள். கண்ணாடியில் கண்கள் சந்திக்கும் போது மின்னல் வெட்ட, இவள் குனிந்து கொள்வாள், அவன் பார்வையைத் திருப்பிக் கொள்வான்.

ஹோட்டலை அடையும் முன்னே ஜம்புவுக்கு போன் வந்தது. எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ஹலோ”

“வேர் இஸ் மை டாட்டர் யூ இடியட்?” குரல் எரிமலையென வெடித்தது.

“டாட்டர் வூ?”

“லீ மெய் லிங். ஐ வாண்ட் டூ டால்க் டூ ஹெர் நவ். ஃபாஸ்ட்!” அந்த ஆண் குரல் கர்ஜித்தது. காதைத் தேய்த்துக் கொண்டான் ஜம்பு.

“வேய்ட்” என சொன்னவன் போனை மங்கியிடம் கொடுத்து பின்னால் கொடுக்க சொன்னான். கை நடுங்க போனைப் பெற்றுக் கொண்டாள் அவள்.

“ஹெலோ”

“யெஸ் பாப்பா(papa)”

“ஓகே பாப்பா”

“சாரி பாப்பா”

“ஹ்ம்ம் யெஸ் பாப்பா”

“திஸ் வோண்ட் ஹேப்பேன் அகேய்ன் பாப்பா”

“ப்ளிஸ் லெட் மீ ஃபினிஸ் திஸ் ட்ரீப் பாப்பா”

“சுவர் பாப்பா”

ஒவ்வொரு பாப்பாவுக்கும் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இறங்கியது. பேச்சு தகப்பனிடம் இருந்தாலும், கண்கள் கண்ணாடியில் தெரிந்த ஜம்புவையே நோக்கியது. எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருக்கும் அவள் கண்ணில் கண்ணீரை கண்டதும் கை நடுங்கியது ஜம்புவுக்கு. கொஞ்சம் தடுமாறி முன்னே இருந்த காரை இடிப்பதற்குள் அழுத்தமாக ப்ரேக் அடித்தான்.

பெண்கள் எல்லோரும் கோரசாக சத்தம் போடவும், சாரி கேட்டு கவனத்தை சாலை மேல் வைத்தான் ஜம்பு. அவனின் நிலைக் கண்டு அவசரமாக கண்ணீரைத் துடைத்தாள் மெய் லிங். தந்தையிடம் பாய் சொல்லி பேச்சை முடித்தாள். அவள் முடிப்பதற்காகவே காத்திருந்த மற்றவர்கள் ஏன், என்ன, எதற்கு அழுதாய் என கேட்டு குடைந்து விட்டார்கள். அவர்களின் செல்ல பெண்ணாக வலம் வருபவள் அல்லவா!

“ஐ மிஸ் மை பாப்பா. தட்ஸ் ஆல்” என உதட்டில் சிரிப்பைப் படர விட்டாள் மெய் லிங். வேனில் இருந்த மெல்லிய இருட்டில் கூட சிவந்து கிடந்த அவள் கண்களையும், மூக்கு நுனியையும் ஜம்புவால் நன்றாக பார்க்க முடிந்தது. கை முஷ்டிகள் இறுக வேனை செலுத்தினான்.

ஹோட்டலை அடைந்து வேனை நிறுத்தியவுடன், முதல் ஆளாக கீழே இறங்கினான் ஜம்பு. யாரைப் பற்றியும் அவனுக்கு கவலை இல்லை. மெய் லிங்கிடம் பேசியே ஆக வேண்டும் என அவசரத்தில் இவன் இருக்க, அவளோ ராணியின் கைப்பிடித்து அவசரமாக உள்ளே ஓடிவிட்டாள்.

“மெய் லிங்” என இவன் கூப்பிட்டது காற்றோடு கலந்தது. உச்சக்கட்ட கோபத்தில் கீழே கிடந்த கல்லை எத்தினான் ஜம்பு.

“ஜஸ்ட் மிஸ்! என் மண்டைல அடிச்சிருக்கும் இந்நேரம்” என்றபடியே ஜம்புவின் அருகில் வந்தான் மங்கி.

“பேசாம, பேயப் பார்த்த மாதிரி ஓடிட்டாடா. அடிக்கடி இப்படித்தான் செய்யறா. இங்க வலிக்குதுடா” நெஞ்சைத் தொட்டுக் காட்டினான் ஜம்பு.

“வாங்கண்ணா, வந்து படுங்க. நாளைக்கு எல்லாம் சரியாகிரும்” சமாதானப்படுத்தி அழைத்துப் போனான் மங்கி.

error: Content is protected !!