KKE–EPI 5

KKE–EPI 5

அத்தியாயம் 5

 

தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இந்த முக்கியமான வணிகப்பகுதி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. 

 

அதன் பிறகு மொட்டை வெயிலில் மெரினா பீச்சுக்கு சென்று வேனை நிறுத்தினான் ஜம்பு.

“சென்னைக்கு வந்துட்டு, உலக தமிழர்களையே ஜல்லிக்கட்டுக்காக திரும்பி பார்க்க வச்ச மெரினா பீச்ச பார்க்கலைனா எப்படி! வெயிலா இருந்தாலும் சென்னையின் உயிர் நாடி மெரினா பீச்சை ஒரு ரவுண்டு பார்த்திரலாம். இங்கிருக்கற எம்.ஜி.ஆர் , அண்ணா, அம்மா, கலைஞர் சமாதி எல்லாம் பார்த்துட்டு, பீச்சுல கால் நனைச்சுட்டு ரெண்டு மணி நேரத்துல வந்துருங்க. லன்ச் முடிச்சுட்டு ஷோப்பிங் வச்சுக்கலாம்” என மெய் லிங்கை பார்க்காமலே சொல்லி முடித்தான்.

அவளோ உண்ணிப்பாக இவன் உதட்டையேப் பார்த்திருந்தாள். அவள் அப்படி பார்ப்பது எவனுக்கு என்னவோ செய்தது. பக்கத்தில் நின்றிருந்த மங்கியை ஒரு இடி இடித்தான் ஜம்பு.

“போய் சொல்லுடா அவ கிட்ட” என சொல்லியவன், மங்கியை அவர்களுடன் போக சொல்லிவிட்டு வேனுக்குள் அமர்ந்துக் கொண்டான்.

அமைதியாக அரை மணி நேரம் கண் மூடி அமர்ந்திருப்பான் ஜம்பு. அவன் புறம் உள்ள கண்ணாடி பட் பட்டென தட்டப்பட்டது. கண்களைத் திறந்துப் பார்த்தவன், தொப்பலாக நனைந்திருந்த மெய் லிங்கை பார்த்து அதிர்ச்சியானான்.

‘கடல்ல கால் நனைக்க சொன்னா, முழுசா நனைஞ்சி வந்துருக்காளே இந்த சீனா துட்டு!’ பல்லைக் கடித்தான்.

“வாட்?” என்ன ஆனது என கதவைத் திறந்து வெளியே வந்தவன் கேட்டான்.

அவள் ஆங்கிலத்தில் நிறுத்தி நிதானித்து, கையாட்டி சொன்னதில் அவன் புரிந்துக் கொண்டது இதுதான். கடல் நீரில் கால் நனைத்து நின்றவளை, யாரோ சில காலி பயல்கள் தண்ணீரில் முழுதாகத் தள்ளி விட்டிருக்கிறார்கள். மங்கி அவர்களை விரட்டி விட்டு, வேன் அருகே கொண்டு வந்து விட்டு விட்டு மீண்டும் மற்ற பெண்களைப் பார்க்கப் போயிருந்தான்.

“ஐ டோண்ட் ஹேவ் எனி அதர் க்ளோத்ஸ் நவ் ஜம்ப்” இப்பொழுது மாற்ற வேறு மாற்றுடை இல்லை என நடுங்கிக் கொண்டே சொன்னாள் மெய் லிங்.

அவளின் உடை உடம்புடன் ஒட்டி இருக்க, துப்பட்டாவை போர்த்தியபடி நின்றிருந்தாள். முடியில் இருந்து தண்ணீர் சொட்டியது. முகத்தில் அங்கங்கே நீர் வெயில் பட்டு பளபளத்தது. வேகமாக தனது பேக்கை வெளியே எடுத்தவன், அவனின் துண்டை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

“தலைய துடைச்சிக்க”

துண்டு துவைத்து சுத்தமாக இருந்தாலும், அவன் பாவித்திருந்த துண்டு என பார்க்கும் போதே தெரிந்தது. அதை வாங்கவே தயங்கினாள் மெய் லிங்.

அவனும் துண்டை நீட்டியபடியே, வேறு ஒன்றும் சொல்லாமல் அவளையேப் பார்த்தபடி நின்றான். சில நிமிடங்கள் மனதினுள்ளே போராடிப் பார்த்தவள், கை நீட்டி அதைப் பெற்றுக் கொண்டாள். அவனுக்கு முதுகு காட்டி நின்றவள், துண்டை முகர்ந்துப் பார்த்தாள். சோப் வாசம் தான் வந்தது.

“தேங்க்ஸ் ஜம்ப்” தலையை துவட்டிக் கொண்டாள்.

‘நடுங்கறாளேன்னு நான் பாவிக்கற துண்ட குடுத்தா மோந்துப் பார்க்கறா இந்த சைனா பிட்டு. கொழுப்புடி உனக்கு!’ எரிச்சலுடன் வேறு புறம் திரும்பிக் கொண்டான் ஜம்பு.

துவட்டினாலும் உடை ஈரத்தால் இன்னும் நடுங்கியபடிதான் இருந்தாள் அவள். மெல்லிய மேனி, திடீர் என கடலில் விழுந்தது என எல்லாம் சேர்ந்து அவள் நடுக்கத்தைக் கூட்டியதே தவிர குறைக்கவில்லை. பற்கள் வேறு டைப்படிக்க ஆரம்பித்தன.

ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. தன்னுடைய பேக்கில் இருந்த டீ சர்டை கொடுத்தால், அதற்கும் தயங்குவாள் என புரிந்துக் கொண்டவன் அவள் வாங்கிக் கொடுத்த ஜிப்பாவை மீண்டும் அவளிடம் நீட்டினான்.

“போட்டுக்க” என சொன்னவன் டாய்லட் பக்கமாக அழைத்துச் சென்றான். சல்வார் மேல் சட்டையை மட்டும் கழற்றி விட்டு, உடம்பை துடைத்து புது ஜிப்பாவை அணிந்துக் கொண்டு வந்தாள் மெய் லிங். அவன் சைசுக்கு வாங்கி இருந்த அந்தப் பெரிய ஜிப்பா தொள தொள என தொங்கியது. அதன் வளர்த்தியோ அவளின் பாதம் வரை வந்தது. ஜம்புவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான். சப்பையாக இருந்த தன் மூக்கை சுருக்கியவள்,

“திஸ் இஸ் நாட் ஃபன்னி” என முறைத்தாள்.

“நீ பன்னி இல்லடி, வெள்ளை முயல் குட்டி” முணுமுணுத்தவன்,

“வா, கோ பீச்! காத்துல ஆல் ட்ரை” என மீண்டும் பீச்சுக்கு அழைத்துப் போனான்.

அவளை வம்பிழுத்த அந்த இளைஞர் பட்டாளம் இன்னும் அங்குதான் சுற்றிக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் மீண்டும் அவர்களுக்கு குஷியானது. அவளை முன்னே விட்டு கொஞ்சம் பின்னால் வந்த ஜம்பு என்னதான் செய்யப் போகிறார்கள் என அமைதியாக கவனித்தான்.

மெய் லிங்கை சுற்றிக் கொண்டவர்கள், ஆங்கிலத்தில் அவளைக் கிண்டலும் கேலியுமாக வம்பிழுத்தனர். வாய் பேச்சாக இருக்கும் வரை அமைதிக் காத்த ஜம்பு, அதில் ஒருத்தன் இவள் கைப்பற்றவும் கொதித்துப் போனான். அவர்கள் நடுவே வந்து நின்றவன், மெய் லிங் கையைப் பிடித்தவனை இழுத்து சப்பென ஒர் அறை வைத்தான். திடீரென அவர்கள் அருகே வந்திருந்த கருத்த ஆஜானுபாகுவான ஜம்புவைப் பார்த்து பயந்துப் போனார்கள் அந்த விடலை பையன்கள்.

“அண்ணா, சும்மாத்தான் பேசிட்டு இருந்தோம்னா. வேற ஒன்னும் இல்லைண்ணா” என திணறினார்கள்.

“பேசிட்டு மட்டும் இருந்தா நான் ஏன்டா அடிக்கப் போறேன்? நம்ம நாட்ட நம்பி ஒரு பொண்ணு வந்துருக்காளே, அவளுக்கு உதவியா இல்லைனாலும் போவுது இப்படி காலித்தனம் பண்ணுறீங்களே! அப்புறம் எப்படிடா மத்த நாட்டுக்காரவங்க நம்ம நாட்ட மதிப்பாங்க? இந்தியாவுல இயற்கை அழகும், பாரம்பரிய இடமும் கொட்டிக் கிடக்கு, ஆனாலும் மத்த நாட்டுக்காரவங்க வரவே பயப்படறாங்க. எல்லாம் உங்கள மாதிரி காலி பையனுங்களால எங்கே மானத்துக்கு பங்கம் வந்துருமோ, உசுருக்கு ஆபத்து வந்துருமோன்னு பயம். இனிமே இப்படி கை நீட்டுவீங்களா?” கேட்டுக் கொண்டே சுளீர் சுளீரென விலாசி விட்டான் ஜம்பு.

“அண்ணா வலிக்குதுண்ணா. விட்டுருண்ணா! எங்க கேள்பிரண்ட் தவிர இனி ஆல் லேடிஸ் எங்களுக்கு சிஸ்டருண்ணா! வேணாண்ணா!” என கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தனர் அவர்கள். பின்னால் ஓடப் போன ஜம்புவின் கையைப் பற்றிக் கொண்டாள் மெய் லிங்.

“வுடு ஜம்ப். லெட் தெம் கோ” என சிரித்தாள்.

“வை லாபிங்?” என்ன சிரிப்பு என கேட்டவனை, யானை எலிய அடிப்பது போல இருக்கிறது உங்களது சண்டை என சைகையில் காட்டினாள்.

‘என்னைப் பார்த்து யானைன்னு சொல்லிட்டாளே சீனா பொட்டு! அம்புட்டு பெருசாவா இருக்கேன்?’ தங்கள் இருவரையும் ஒப்பு நோக்கினான். அவன் கருப்பாக, விறைப்பாக, நெடு நெடுவென வளர்த்தியில், வளர்த்திக்கு ஏற்ற சைசில் இருந்தான். அவளோ, வெள்ளையாக, மென்மையாக, அவன் நெஞ்சளவைக் கூட எட்டாத உயரத்தில் இருந்தாள்.

‘சரிதான்! ஏழாம் பொருத்தம் தான் எங்களுக்குள்ள! ஆமா, உனக்கு ஏன் இம்புட்டு பீலிங்? சும்மா சைட்டடிக்க பத்து பொருத்தமும் பொருந்தி வரனுமா என்ன? கண்ணால சைட்டடிக்கறதோட நிறுத்திக்கனும், மனசுக்குள்ள விட்டுறக்கூடாது. அதெல்லாம் சரிப்பட்டு வராது’ மீண்டும் மனதுக்கு கட்டளையிட்டு அடக்கினான்.

அங்கிருந்து நேராக சாப்பிட கிளம்பினார்கள். லன்ச் முடித்துக் கொண்டு தி.நகருக்கு அழைத்து சென்றான் ஜம்பு. இறங்கும் முன்னே அங்கே எவ்வளவு நேரம் இருக்கலாம், ஷோப்பிங் முடித்தவுடன் எங்கே வர வேண்டும், பிக்பாக்கேட் பற்றிய அறிவுருத்தல் என மீண்டும் எடுத்து சொன்னான். அவர்கள் எல்லோருக்கும் அவனின் தொலைபேசி எண்ணைத் தந்திருந்தான். அவர்கள் வீட்டினர், இவனுக்கு தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசவே இந்த ஏற்பாடு. பலருக்கு ரோமிங் சேவை இருந்தாலும், சில சமயம் சரியாக லைன் கிடைக்காததால் இந்த ஏற்பாடே வசதியாக இருந்தது.

மெய் லிங் வேனிலேயே இருந்துக் கொண்டாள்.

“யூ நோட் கமிங்?” என கேட்டார் ராணி.

தான் ஏற்கனவே வேண்டியதை வாங்கி விட்டதாகவும், அலை மோதும் கூட்டத்தைப் பார்க்க பயமாக இருப்பதாகவும் சொல்லிவிட்டாள் மெய் லிங்.

மற்றவர்கள் இறங்கியதும் சீட்டில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டாள் அவள். வேனைப் பூட்டி விட்டு காபி அருந்தப் போகலாம் என நினைத்த ஜம்புவும், மங்கியும் அவள் சுருண்டுப் படுக்கவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.

“அண்ணா, உங்க சமூ ப்ளாட் ஆகிட்டாங்க. எப்படி நாம வெளியே போகிறது?” என குசுகுசுவென கேட்டான் மங்கி.

“நாடு விட்டு நாடு வந்துருக்கால்ல, அந்தக் களைப்பா இருக்கும்டா. அவ தூங்கட்டும், நாம இப்படியே உட்கார்ந்திருப்போம்”

“என்னால முடியாதுண்ணா. நான் போய் கொஞ்சம் கண்ணு கழுவிட்டு வரேன். கலர் கலரா பட்டாம்பூச்சிங்க என்னை கை நீட்டி அழைக்குதுங்க. மீ கோயிங்” என கிளம்பிவிட்டான்.

“போடா போ, பட்டாம் பூச்சி செருப்ப தூக்காம பாத்துக்கோ”

அடித்துப் போட்டது போல புரண்டு புரண்டுப் படுத்தாள் மெய் லிங். அவள் புரளும் வேகத்துக்கு எங்கே சீட்டில் இருந்து விழுந்து விடுவாளோ என பயந்துப் போனான் ஜம்பு. அவன் தூக்கம் வராமல் தவிக்கும் போது கேட்கும் பாடலான ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது எனும் பாடலை மெல்லிசையாக ரீப்பீட் மோடில் ஓடவிட்டான். திரும்ப திரும்ப அதே பாடல் ஓட, அவளின் புரளல் மெல்ல நின்று ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனாள் மெய் லிங்.

ஒரு மணி நேரம் அசந்து அவள் தூங்க, இவன் அவளைப் பார்ப்பதும், அது தப்பு என தன்னையே திட்டிக் கொண்டு போனை நோண்டுவதும், மீண்டும் அவளைப் பார்ப்பதுமாக நேரத்தைக் கடத்தினான்.

‘தூங்கறப்போ அப்படியே குழந்தை மாதிரி இருக்கா இவ! முடி புரண்டு கன்னத்துல வந்து அழகா விழுது. வெள்ளை இடியப்பத்துல கருப்பு சீனிய தூவுன மாதிரி பார்க்கவே அம்சமா இருக்கு. இடுயப்பத்த முழுங்கற மாதிரி அந்த கன்னத்தையும் அப்படியே கடிச்சு முழுங்கிறனும்’

தன் மனம் போன போக்கில் மிரண்டவன், தப்பு தப்பு என கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

இங்கொருவன் கடிக்கவா சுவைக்கவா என தன்னைப் பற்றி பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது தெரியாமல் தூக்கம் கலைந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள் மெய் லிங். கண்கள் இரண்டும் சிவந்துப் போயிருந்தது. அங்கே ஜம்பு மட்டும் இருக்கக் கண்டு,

“சாரி ஜம்ப். டேம்ன் டயர்ட்.” என்றவள் தான் தனியாக இருப்பதாகவும், எங்காவது போக வேண்டும் என்றால் போய் வருமாறும் கூறினாள்.

தமிழ் மீடியத்தில் இருந்ததால் ஆங்கிலம் ஓரளவு விளங்கும் அளவுக்குப் பேச வருவதில்லை ஜம்புவுக்கு. மெய் லிங் நிறுத்தி நிதானமாகப் பேசும் போது புரிந்தது. புரியாத வார்த்தைகள் கூட அவள் காட்டும் பாவனையில் அவனால் விளங்கிக் கொள்ள முடிந்தது. திருப்பி பேசுவதில் தான் இவனுக்கு சிரமம். தப்பாக பேசி விடுவோமோ என வெட்கம் வேறு. இவளிடம் மட்டும், வேறு வழி இல்லாமல் கலந்துக் கட்டி அடித்தான்.

அவனுக்கு காபி வேண்டும் போல் இருந்தது. தனியாக அவளை விட்டுப் போகவும் பயம். தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தவன், முகம் கழுவி விட்டு காபி குடிக்க அவனோடு வருமாறு அழைத்தான். அவனுக்கு சிரமம் வேண்டாம் என இவள் மறுத்தாள்.

“ஓகே, ஐ நோ கோ” அவனும் அப்படியே அமர்ந்துவிட்டான்.

சலித்துக் கொண்டவள்,

“வெரி ஸ்டபர்ன்” என அவனைத் திட்டியபடியே இறங்கி வந்தாள். பெரிய ஜிப்பா வேறு கழுத்தில் இருந்து நழுவி தோள் வழியாக வழிந்தது. ஈர போக காய்ந்திருந்த துப்பட்டாவை எடுத்தவள், ஜிப்பா ஒரு இடத்தில் நிற்பதற்காக அதை இடுப்பில் பெல்ட் போல கட்டிக் கொண்டாள்.

“டூ ஐ லுக் ஓகே?” என ஜம்புவைக் கேட்டாள் மெய் லிங்.

அந்த ஸ்டைல் கூட பார்க்க அழகாகத்தான் அவன் கண்ணுக்குத் தெரிந்தது.

“டபுள் ஓகே!”

இருவரும் மெல்ல நடந்து ஜனத்திரளில் கலந்தார்கள். கூட்டத்தில் இவள் தடுமாற, ஜம்பு அவள் கையைப் பற்றிக் கொண்டான். சூடாக இருந்த அவன் கரத்தை இவள் இன்னும் இறுக்கிக் கொண்டாள். வேன் ஏசி குளிரில் இருந்தது, இவன் கை சூடு படவும் இதமாக இருந்தது அவளுக்கு. ஆண் நண்பர்களுடன் பேசுவது, சகஜமாக கல்மிஷமில்லாமல் கைப்பிடித்துக் கொள்வது எல்லாம் இவர்கள் நாட்டில் சாதாரணமான ஒன்று. ஜம்புவை நண்பனாக ஏற்றுக் கொண்டதால், அவனை தொடுவது அவளுக்குத் தப்பாகத் தோன்றவில்லை.

அவள் தொலைந்து விடாமலிருக்க கைப்பற்றிய ஜம்புவோ, சிலிர்த்துப் போனான். முன்னே பின்னே எந்தப் பெண்ணையும் இவ்வளவு அருகில், கைப்பிடித்து நடந்ததில்லை அவன்.

‘டேய், டேய்! கண்ணு தெரியாதவங்கள கைப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போற மாதிரி இது ஒரு சேவைடா. மனச அலைபாய விடாதே. கவுந்துறாம கெத்தா இருடா. சைட்டு மட்டும் போதும், தும், தும்…’ மனதை அடக்கினான். பிடித்த கையை விடாமல், அவளை ஒரு சிறிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். உட்கார இடமில்லாததால் நின்றபடியே ஒரு ப்ளேட் பானிபூரியும், அவளுக்கு டீயும் தனக்கு காபியும் சொன்னான்.

“டேக்”

பானிபூரியை அவளிடம் நீட்டினான். தூங்கி எழுந்தது பசியைக் கிளப்பி விட்டருந்தது. என்ன ஏது என ஆராயாமலே பூரியை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டாள் மெய் லிங். காரம் தொண்டையில் இறங்க, இருமல் விடாமல் வந்தது. கண்கள் கலங்க, நாக்கை வெளியே நீட்டி கையை வைத்து விசிறினாள்.

“ஸ்பைசி ஜம்ப்!” கத்தினாள்.

கடையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். பாம்பு போல நாக்கை உள்ளேயும் வெளியேயும் நீட்டி கையை உதறிக் கொண்டாள். இவள் செய்யும் வித்தையைப் பார்த்து இவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், பாவமாகவும் இருந்தது. குவளையில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

“குடி”

அவசரமாக வாங்கி ஒரே மடக்கில் பருகினாள். டீயையும் அவளிடம் நீட்டினான். சூடான டீ நாக்கில் பட, உறைப்புக்கும் சூட்டுக்கும் இன்னும் முகம் தக்காளி போல சிவந்துப் போனது. இருமல் மட்டும் நிற்கவே இல்லை. பதட்டமாக அவள் முதுகை நீவி விட்டான். அவன் கையைத் தட்டி விட்டவள்,

“ஐ கென் மேனேஜ்” என்றாள்.

‘கஷ்டப்படறாளேன்னு நீவி விட்டேன், அதுக்கு இப்படி தட்டி விடறா இந்த சீனா மொட்டு! கொழுப்பு, உடம்பு முழுக்க கொழுப்பு’ கடுப்பானான் ஜம்பு.

பொதுவாகவே சிங்கப்பூர், மலேசிய வாழ் சீனர்களுக்கு நமது உணவின் மேல் தனிப்பிரியம். ஆசையாக காரத்தை சாப்பிட்டு, முகமெல்லாம் சிவந்துப் போய் நிற்பார்கள். இங்கே மெய் லிங்கும் இப்படி தான் நின்றிருந்தாள்.

கையைத் தட்டி விட்டதால் கோபம் வந்தாலும் ஒரு பக்கம் செவ செவவென இருந்த அவள் முகத்தைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.

டீ மாஸ்டரிடம் சீனி கேட்டு, அவள் வாயைத் திறக்க சொல்லி அள்ளி அள்ளிப் போட்டான் ஜம்பு.

‘ஷப்பா, ஒரு பானி பூரிக்கு இவ்வளவு அலம்பலா? எங்கம்மா வைக்கிற மீன் குழம்பு மட்டும் நாக்குல பட்டுச்சுனா எரிஞ்சு போயிருவா போலிருக்கே’

மூன்று கிளாஸ் தண்ணீர், ஐந்து கரண்டி சீனிக்கு அப்பால், கொஞ்சம் முகம் பழையபடி மாறி இருந்தது மெய் லிங்குக்கு. வேறு ஏதாவது வேணுமா என அவன் கேட்க வேண்டவே வேண்டாம் என தலையாட்டினாள் அவள்.

பணத்தை அவன் கொடுக்க போக அவன் கைப்பிடித்து தடுத்தாள். அவன் கையை அவள் தட்டிவிட்டது போல இப்பொழுது இவன் அவள் கையைத் தட்டிவிட்டான்.

அவனை முறைத்தப்படியே பேக்கிலிருந்து பணத்தை எடுத்தாள். அதற்குள் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தான் ஜம்பு. வேகமாக அவன் அருகே ஓடி வந்தாள் மெய் லிங்.

“வெய்ட் ஜம்ப்”

ஓடி வந்து கையைப் பிடித்தாள். அவள் கையை முறைத்தவன்,

“நவ் யூ வை டச்சிங் டச்சிங்?” என கோபமாக கேட்டான்.

முதுகில் இருந்து கையைத் தட்டிவிட்டதில் கோபித்துக் கொண்டான் என புரிந்துக் கொண்டவள்,

“சாரி ஜம்ப்!” என்றாள்.

“வேணாம் போ!”

“ஐம் ரியலி சாரி!” கைப்பிடிப்பது வேறு, ஆனால் முதுகை தடவுவது தனக்கு கூச்சமாக இருப்பதாக தெரிவித்தவள், மீண்டும் மன்னிப்பைக் கேட்டாள்.

அப்பொழுதும் அவன் பேசவில்லை. அவளும் அவன் கையைப் பிடித்த பிடியைத் தளர்த்தவில்லை. அப்படியே வேனுக்கு வந்தவர்கள், அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். மற்றவர்களும் வந்துவிட, சென்னையின் நைட் லைப் எப்படி இருக்கிறது என காட்ட, வேனிலேயே ஒரு ரவுண்ட் கூட்டிப் போனான் ஜம்பு.

வழியில் ஐஸ் க்ரீம் பார்லரைப் பார்த்ததும், தனக்கு ஐஸ்க்ரீம் வேண்டும் என மங்கியிடம் கேட்டாள் மெய் லிங்.

“அண்ணா ஐஸ் க்ரீம் வேணுமாம் உங்க சமூவுக்கு”

“அவ மட்டும் என்ன ஸ்பெஷல்? மத்தவங்க எல்லாரும் சரின்னா நிறுத்தலாம்” என்றான் ஜம்பு.

அதை அப்படியே மெய் லிங்கிடம் மொழி பெயர்த்து வத்தி வைத்தான் மங்கி. அதை கேட்டதும் ரியர் வியூ மிரர் வழி ஜம்புவை முறைத்தாள் மெய் லிங். பதிலுக்கு அவனும் திருப்பி முறைத்தான்.

வேனில் இருந்த மற்றவர்களிடமும் கேட்க, அவர்களும் சரி என விட வேன் ஐஸ்க்ரீல் பார்லரில் நின்றது. எல்லோரும் இறங்கி உள்ளே போக, ஜம்பு மட்டும் எப்பொழுதும் போல வேனில் அமர்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அவன் பக்க ஜன்னல் தட்டப்பட்டது.

‘அவளாத்தான் இருக்கும். அவ மட்டும்தான் இப்படி என் ஜன்னல் பக்கம் வந்து தட்டி தட்டி கூப்புடுவா’ என அவன் நினைத்தது சரியாக இருந்தது. கண்ணாடியை கீழே இறக்க, அவன் முகத்தின் முன்னே ஒரு ஐஸ் க்ரீம் நீட்டப்பட்டது.

“மீ ஐஸ்க்ரீம் நோ லைக்”

“காபி லாட்டே ப்ளேவர்” என நீட்டியபடியே நின்றாள் மெய் லிங். அவன் தான் காபி பிரியனாயிற்றே. அதை கவனித்து காபி ப்ளேவர் வாங்கி வந்திருந்தாள். இது ஒரு சமாதான உடன்படிக்கை அவள் புறமிருந்து. உதட்டில் மெல்லிய முறுவல் மலர்ந்தாலும், இதற்கெல்லாம் இறங்கி விட்டால் ஜம்புவின் கெத்து என்னாவது.

“ஐஸ் க்ரீம் ஐ டேக். நோ வேஸ்ட். ஆனா நோ மோர் டால்கீங் உன் கூட” என்றபடியே ஐஸ் க்ரீமை வாங்கிக் கொண்டான்.

சீன மொழியில் என்னத்தையோ முனுமுனுவென முனகி விட்டு உள்ளே போய்விட்டாள்.

எல்லோரும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டு வந்தவுடன் அவர்களை தங்குமிடத்தில் இறக்கிவிட்டான் ஜம்பு. இரவுணவு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

எல்லோரும் இறங்கிப் போக, தயங்கி தயங்கி இவன் அருகில் வந்தாள் மெய் லிங்.

“ஜம்ப்!”

இவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. எதற்கு பேச வேண்டும், பழக வேண்டும், பின் எங்காவது தொட்டு விட்டால் பொல்லாப்பு வர வேண்டும் என அமைதியாக இருந்தான்.

அவன் சட்டை நுணியைப் பிடித்து இழுத்தாள் மெய் லிங். என்ன என்பது போல திரும்பிப் பார்த்தான்.

படபடவென ஆங்கிலத்தில் பொரிந்தாள். தலையை சொரிந்துக் கொண்டான் ஜம்பு. நமுட்டு சிரிப்புடன் அவன் அருகில் வந்து நின்றான் மங்கி.

“இங்க நீங்க மட்டும்தான் அவங்களுக்கு ப்ரேண்டாம். நல்லதுலாம் சொல்லித்தரீங்களாம், இட்லி வாங்கி தரீங்களாம், டீ வாங்கித்தரீங்களாம். நீங்க கோச்சிகிட்டுப் பேசலனா அவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்காம். கையைத் தட்டி விட்டதுக்கு சாரியாம். அதுக்குத்தான் ஐஸ் க்ரீம் வாங்கி குடுத்தாங்களாம் சமாதானப்படுத்த. அதுவும் பத்தலைனா வேணும்னா முதுகுல இன்னொரு தடவை தடவுறதுன்னா தடவிக்க சொல்லுறாங்க.” என்றான் மங்கி.

“என்னது? தடவிக்க சொல்லுறாளா?” அதிர்ந்தான் ஜம்பு.

ஜம்புவின் அதிர்ச்சியில் வாய்விட்டு சிரித்தான் மங்கி.

“ஐயோண்ணா! என்னால மிடில. மன்னிப்பு மட்டும்தான் கேட்டாங்க. அடுத்தது நானே போட்ட பிட்டு.”

“அட கிரகம் புடிச்சவனே! எதுல விளையாடறதுன்னு இல்ல.” பளீரென மங்கியின் முதுகில் ஒரு அடியை வைத்தான் ஜம்பு. பின் மெய் லிங்கிடம் திரும்பியவன்,

“ஓகே! சாரி ஓகே!” என்றான்.

கையை நீட்டியவள்,

“ப்ரேண்ட்?” என கேட்டாள். தன் முன் நீண்டிருந்த வெள்ளைக் கையை சில நிமிடங்கள் பார்த்திருந்தவன் பின் கைக்குலுக்கி

“ப்ரேண்ட்” என்றான்.

கருப்புக் காபியில் வெள்ளைப் பால் கலந்தது போல தன் கருப்பு நிற கரத்தினுள் அவளின் மெல்லிய வெள்ளைக் கரம் இணைந்ததை காண ஒரு வகை சிலிர்ப்பு ஓடியது ஜம்புவுக்கு.

‘அடங்கு, அடங்கு! சீனா நட்டு அதோட சிங்கப்பூர் சிட்டு. உனக்கு ஏணி போட்டாலும் எட்டாது. கைய உருவிட்டு வேற வேலையைப் பாருடா ஜம்பு’

கையை இழுத்துக் கொண்டவன்,

“மை சட்டை, ஐ வாண்ட்” என அவள் போட்டிருந்த அல்லது போர்த்தி இருந்த ஜிப்பாவைக் காட்டினான்.

“ஐ பை யூ அனதர்” தான் போட்டு விட்டதால் வேறு வாங்கி தருவதாக சொன்னாள்.

“நோ! திஸ் ஐ வாண்ட்” என பிடிவாதமாக சொன்னான் ஜம்பு. மீண்டும் சண்டை வேண்டாம் என நினைத்தவள் சரி என தலையாட்டி விட்டு ஹோட்டலுக்குள் சென்று விட்டாள்.

“அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாண்ணா?” கிண்டல் குரலில் கேட்டான் மங்கி.

“போய் நமக்கு நைட் திங்கறதுக்கு ஏதாவது பார்சல் வாங்கிட்டு வாடா. நொய் நொய்னு காதை ஓட்டைப் போடாத”

“நாங்க பேசற தமிழ்லெல்லாம் நொய் நொய்னு தான் இருக்கும். இப்போலாம் கியா மியான்னு பேசனா தானே உங்களுக்கு காதுல தேன் வந்து பாயுது”

“மண்டைய பொளக்கறதுக்குள்ள கிளம்பிரு”

“போறேன், போறேன்.”

error: Content is protected !!