KKE–EPI 4
KKE–EPI 4
அத்தியாயம் 4
வங்காள விரிகுடாவில், சென்னையில் உள்ள மெரினா பீச் தான் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும்.
கபாலீஸ்வரர் கோயிலுக்கு கொஞ்சம் தள்ளி வேனை நிறுத்தினான் ஜம்பு.
“மங்கி கூட்டமா இருக்கு. நீ எல்லாரையும் அழைச்சிட்டுப் போ. நான் பார்க் பண்ணிட்டு வரேன்” என்றவன் மற்றவர்களிடம்,
“இங்க ஒரு ஒன்னரை மணி நேரம் நீங்க எடுத்துக்கலாம்மா. சாமி கும்பிட்டுட்டு சுற்றி பாருங்க. கரெக்டான டைம்ல எல்லாரும் வாசலுக்கு வந்துருங்க. முடிஞ்ச அளவுக்கு நம்ம ஆளுங்க எல்லாம் ஒன்னாகவே மூவ் பண்ணுங்க. அப்போத்தான் காணா போகாம இருப்பீங்க” என சொன்னான்.
மங்கி மெய் லிங்கிடம் சொல்ல, தலையாட்டியவள் மற்றவர்களுடன் கீழே இறங்கினாள். அதில் அவள் அருகில் அமர்ந்து வரும் பெண்மணியை மட்டும் தனியாகப் பிடித்தான் ஜம்பு.
“ராணி மேடம், அந்த சீன பொண்ணு மேல ஒரு கண்ண வச்சிக்குறீங்களா? ஒன்னும் புரியாம முழிக்கறா, என்ன ஏதுன்னு சொல்லிக் குடுக்கறீங்களா?” என கேட்டுக் கொண்டான்.
“சரிப்பா ஜம்பு. எங்க நாட்டுப் பொண்ணு, விட்டுருவோமா! பாஷையும் புரியாம, பாரம்பரியமும் தெரியாம எதுக்கு வந்தான்னே தெரியலையே! திருவிழால காணா போன மாதிரி முழிக்கறா. நான் பாத்துக்கறேன்” என்றவர் ஆங்கிலத்தில் பேசியபடியே அவளை உள்ளே அழைத்துப் போனார். பேச்சு துணைக்கு ஆள் கிடைத்ததில் அவளுக்கு சந்தோஷமாகிவிட்டது.
வேனை பார்க் செய்து விட்டு ஒரு கப் காபி வாங்கி அருந்தினான் ஜம்பு. பின் அவசரமாக கோயிலுக்குள் நுழைந்தான். நார்மலாக செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு வேனிலேயே இருப்பான், அல்லது கடை வீதியை அலசுவான். இன்றைக்கு மனசு கேட்காமல் கோயிலின் உள்ளே புகுந்து விட்டான். உள்ளே நுழைந்தவனுக்கு, மெய் லிங்கை கண்டுப்பிடிக்க சிரமமே ஏற்படவில்லை.
ஜனத்திரளில் அவள் மட்டும் தனியாகத் தெரிந்தாள். அவள் நிறத்தை எடுத்துக் காட்டும் மஞ்சள் நிற சுடிதாருடன் அம்சமாக இருந்தாள். ஒவ்வொரு சந்நிதானத்திலும் கைக் குவித்து கண் மூடி வேண்டியபடியே இருந்தாள். பலரின் பார்வை அவளைச் சுற்றி வட்ட மடித்தது. அதில் பல கண்கள் ஆண்களின் கொள்ளிக் கண்கள்.
“கோயிலுக்கு வந்தமா சாமிய கும்புட்டமான்னு இல்லாம, எவ வெள்ளையும் சொள்ளையுமா வருவான்னு அலையறது. பரதேசி பயலுக” முணுமுணுத்தான் ஜம்பு.
ட்ரீப் வந்த மற்ற பெண்கள் எல்லாம் துப்பட்டா போட்டு சுடிதாரும், சிலர் சேலையும் அணிந்திருந்தார்கள். இவளோ துப்பட்டாவை இடுப்பில் கட்டி இருந்தாள். தலையில் அடித்துக் கொண்டான் ஜம்பு. அவளைப் பார்த்துக் கொள்ள மற்றவர்களிடம் சொல்லி இருந்தாலும், அது அவர்கள் வேலை இல்லையே. சுற்றிப் பார்க்க வந்தவர்கள் தானே அவர்களும். என்ன கொடுமைக்கு நான் அவளுக்கு காவல் இருக்க வேண்டும் என கேட்டுவிட்டால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வது?
‘காவல் வேலையை நாமே பார்ப்போம்! நம்ம பொறுப்புதானே அவ’ என முடிவெடுத்தவன் அவள் அருகே போனான். அவள் முணுமுணுவென அவள் பாசையில் ஏதோ வேண்டிக் கொண்டிருந்தாள்.
‘தமிழ் சாமிகிட்ட வந்து சைனிஸ்ல வேண்டிக்கிறாளே, இவள என்ன பண்ண? எல்லாம் வல்ல இறைவனுக்குத் தெரியாத மொழியா? கண்டிப்பா தெரியும். இருந்தாலும் சேப்டிக்கு இவளுக்காக நாம தமிழுல வேண்டிக்குவோம். சாமி! இவ என்ன கேட்டாலும் நிறைவேத்திக் குடுப்பா’ என வேண்டிக் கொண்டான்.
‘டேய், அவ என்ன கேக்கறான்னே எனக்கு தெரியல. அவ கேட்டத நிறைவேத்துன்னா, என்னன்னுடா நான் நிறைவேத்துவேன்? அற்ப பதரே’ இது கடவுளுடைய மைண்ட் வொய்ஸ்.
அவள் வேண்டி முடித்ததும்,
“கம்” என அவளை அழைத்தான் ஜம்பு.
“வேர்?”
“வாடினா வரமாட்டியா? தெப்ப போண்ட் (தெப்பக்குளம்)”
“போண்ட்? ஓகே லெட்ஸ் கோ” என அவனுடன் வந்தாள்.
அதற்குள் மற்றவர்களைப் பார்த்துக் கொள்ளும்படி மங்கியிடம் சைகைக் காட்டியவன் அவளை அழைத்துப் போய் படியில் அமர்த்தினான்.
“துப்பட்டா அவுட்” துப்பட்டாவை சைகையில் இடுப்பில் இருந்து அவிழ்க்க சொன்னான் ஜம்பு.
அவனை மேலும் கீழும் பார்த்தவள் சொன்னதை செய்யாமல்,
“வொய்?” என கேட்டாள்.
“ஹ்ம்ம் நான் போட்டுக்க! இவ ஒருத்தி வொய்க்குப் பிறந்தவ!” முணுமுணுத்தான்.
சத்தமாகப் பேச சொல்லி ஆங்கிலத்தில் சொன்னாள் மெய் லிங்.
“துப்பட்டா நெஞ்சு புட். நோபடி சீ யுவர் நெஞ்சு” நெஞ்சை மறைத்து துப்பட்டா போட வேண்டும் என கற்றுக் கொடுத்தான். அங்கே வந்திருந்த சில பெண்களை சுட்டிக் காட்டினான். பெரும்பாலும் கோயிலுக்கு வந்தவர்கள் அப்படித்தான் போட்டிருந்தார்கள்.
“ஓ! இந்தியன் கல்ச்சர். ஓகே ஐ அண்டேர்ஸ்டேண்ட் ஜம்ப். தேங்க் யூ” என சொன்னவள் இடுப்பில் இருந்து கழற்றி நெஞ்சை மறைத்துப் போட்டுக் கொண்டாள். அவர்கள் நாட்டிலும் மற்றவர்கள் சுடிதார் அணிந்துப் பார்த்திருக்கிறாள். ஆனால் துப்பட்டாவை ஸ்டைலாக இடுப்பிலோ, தோளில் ஒரு பக்கத்திலோ, இன்னும் பல பல விதமாகப் பார்த்திருக்கிறாள். ஆனால் துப்பட்டாவின் முக்கிய பங்கு முன்னே மறைப்பதற்காகத்தான் என இப்பொழுது புரிந்தது அவளுக்கு.
அவனிடம் காட்டியவள்,
“ஓக்கே?” என கேட்டாள்.
‘அழகுடி நீ, சீனா புட்டு’ மனதில் பாராட்டியவன், வெளியே ஓகே என மட்டும் சொன்னான்.
முகம் மலர புன்னகைத்தவள், மீண்டும் நன்றி சொன்னாள். அதற்குள் அவளைத் தேடி ராணி வந்திருந்தார்.
“என்னப்பா?” குரலில் ஒரு சந்தேகத்துடன் அவனைப் பார்த்தார். சீனத்தியாக இருந்தாலும் அவரின் நாட்டுக்காரப் பெண், வயது பெண் வேறு. வேன் ஓட்டும் கைடுடன் தெப்பக்குளத்தில் அருகருகே பார்க்க அவருக்கு என்ன தோன்றியதோ!
“ஒன்னும் இல்ல மேடம். துப்பட்டா சரியா போடல, பசங்களாம் ஒரு மாதிரியாப் பார்க்கறாங்க. அதான் கோயிலுல எப்படி நடந்துக்கனும்னு சொல்லிக் குடுத்தேன்.”
“அப்ப சரி. கம் மெய் லிங். லெட்ஸ் கெட் ப்ரசாட்” பிரசாதம் வாங்க போகலாம் என அவளை அழைத்துக் கொண்டார் அவர்.
“ஜம்ப், கம்” என இவனையும் அழைத்தாள் மெய் லிங்.
“நீ கோ! நான் கம்” என அனுப்பி வைத்தவன் அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துக் கொண்டான்.
‘மத்தவங்களுக்கு சந்தேகம் வர மாதிரி என் நடத்தை இருக்கு. இது நல்லதுக்கு இல்ல. இனிமே இந்த சீனா தட்டு பக்கமே திரும்பக் கூடாது.’ மனதில் சபதம் எடுத்துக் கொண்டு வேனுக்குப் போனான் ஜம்பு.