அத்தியாயம் 6
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
மறுநாள் அதிகாலையிலேயே பசியாறல் முடிந்து வேன் திருப்பதிக்குப் பயணப்பட்டது. வேனில் அனைவரும் தூங்கியபடியே வர ஜம்பு மிக கவனமாக ஓட்டினான். பார்வை அவ்வப்போது தூங்கி வழியும் மெய் லிங்கிடம் சென்றாலும் பாதையில் கவனமாக இருந்தான். மூன்றரை மணி நேரப் பயணத்தில் திருப்பதியை அடைந்தார்கள். மற்ற பெண்கள் சேலையில் இருக்க, மெய் லிங் இவன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பாவாடை தாவணியில் இருந்தாள்.
இவர்கள் வேன் ஏறும் போது அரை வெளிச்சமாக இருந்ததால் சரியாக கவனிக்காதவன், பொழுது புலர்ந்த வேளையில் மெய் லிங்கை ஓரக்கண்ணால் பார்த்தான்.
“வெள்ளை மகாலட்சுமி” முணுமுணுத்துக் கொண்டான்.
விகல்பமில்லாமல் அவன் முன் வந்து நின்றவள்,
“ஹவ் டூ ஐ லுக் ஜம்ப்?” என கேட்டாள்.
“லைக் மை சாமி” என்றான் ஜம்பு.
ராணி அவளுக்கு தாவணியை அழகாக கட்டி விட்டிருந்தார். பார்க்கவே பாந்தமாக இருந்தது.
“சாமி? யூ மீன் காட்?” என கேட்டாள் அவள்.
“ஆமா”
“யூ சில்லி!” அவன் கையைக் கிள்ளி சிரித்துவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து நடந்தாள்.
போகும் போக்கில் ராணி அவளிடம், ட்ரைவரிடம் தள்ளி நின்று பழகு என சொல்ல,
“ஹீ இஸ் மை ப்ரேண்ட்” என சொல்லியபடியே அவள் செல்வது கேட்டது ஜம்புவுக்கு. மனம் நொந்துப் போனான்.
‘ப்ரேண்ட்னு அழகா சொல்லுறா சீனா நட்டு. நான் தான் மானங்கெட்டுப் போய் அப்போ அப்போ அவள சைட் அடிக்கறேன். டெம்பிள் ட்ரீப் வந்துட்டு இப்படி அல்பமா நடந்துக்கறேனே! ஏடு கொண்டலவாடா, கோவிந்தா, எனக்கு நல்ல புத்திய குடுப்பா’ கோவில் இருந்த திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டான் ஜம்பு.
இவர்கள் குழுவுக்கு பணம் கொடுத்து விஐபி தரிசணம் வாங்கி இருந்ததால், அதற்குண்டான வரிசையில் அவர்களை நிறுத்தி வைத்தான் ஜம்பு. தரிசணம் முடித்து விட்டு எந்த வழியாக வர வேண்டும் என விளக்கியவன், மங்கியை அவர்களிடம் நிறுத்தி விட்டு வந்தான்.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைப்புற்றவாறே இருந்தது ஜம்புவுக்கு. இவர்கள் மாதிரி வெளிநாட்டவர்களை அழைத்துக் கொண்டு எத்தனையோ ட்ரிப் அடித்திருக்கிறான். அதில் வெள்ளைக்காரிகள் கூட அடக்கம். ஆனால் இந்த அலைப்புறுதல் இருந்ததில்லை. யாரையும் தப்பாகவும் இதுவரை அவன் பார்த்ததில்லை. மெய் லிங் எப்படியோ அவனை ஈர்த்திருந்தாள். கையை தூக்கிக் கொண்டு சின்ன பிள்ளை போல் ஏர்போர்ட்டில் அவன் முன் வந்து நின்றாளே அப்பொழுதா? இல்லை இட்லி கடையில் அவன் அருகில் இயல்பாக அமர்ந்தாளே அப்பொழுதா? ஆங்கிலத்தில் இவன் தடுமாறினாலும், சிரிக்காமல் இவனுக்கும் புரியும் படி கை ஆட்டி, உடல் நெளித்து வார்த்தையை நிறுத்தி உச்சரித்து பேச முயன்றாளே அப்பொழுதா? இல்லை இவனுக்காக ஜிப்பா வாங்கிக் கொடுத்தாளே அப்பொழுதா? ஏதோ ஒரு தரமான சம்பவத்தில் சின்ன கல்லாக விழுந்து அவன் மனக்கடலை பெரிதாக கொந்தளிக்க வைக்க ஆரம்பித்திருந்தாள்.
சைட்டு மட்டும்தான் என எண்ணிக் கொண்டாலும், அவள் பால் கண்கள் அடிக்கொரு முறை போவதையோ, அவள் நெருங்கி பேசும் போது மனம் மத்தளம் தட்டுவதையோ, கைப்பிடிக்கும் போது உள்ளுக்குள் உதறுவதையோ அவனால் தடுக்க முடியவில்லை. இது ஈர்ப்பா, ஆசையா, காதலா, காமமா அவனுக்கே விளங்கவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் அதற்கு எதிர்காலம் இல்லை என்று மட்டும் நன்றாக புரிந்தது. அவளோடு இருக்கும் இந்த சில நாட்களை அப்படியே அதன் போக்கிலேயே விட்டுவிட்டு இயல்பாக இருப்பது என கஷ்டப்பட்டு முடிவெடுத்தான் ஜம்பு.
“ஏன்டா ஜம்பு, நம்ம ஊருல இல்லாத பொண்ணுங்களா? தரமான தமிழச்சிங்க, மலர்ச்சியான மலையாள பொண்ணுங்க, தெளிவான தெலுங்கு பொண்ணுங்க, கலர்புல் கன்னட பொண்ணுங்க, வசுந்தரமான வடநாட்டு பொண்ணுங்கன்னு நம்ம நாட்டுலயே இத்தனை வகை இருக்கு. ஆனா உன் மனசு இப்படி சிங்கப்பூர் சீனா குட்டி மடியில விழப்பார்க்குதே! நியாயமாடா இது?” மெல்ல தனக்குள்ளே பேசிக்கொண்டான்.
அந்த நேரம்தான் அலைப்பேசி அடித்து அழைத்தது.
“என்னடா மங்கி?”
“அண்ணே இங்க வாங்க. அவசரம்” சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் அவன்.
“என்னாச்சுன்னு தெரியலையே! இந்த சீனா துட்டு வேலையாத்தான் இருக்கும்” முனகியவாறே அவசரமாக அவர்களை கஷ்ட்டப்பட்டு தேடிப் பிடித்தான். மங்கி மட்டும் மெய் லிங்குடன் தனியாக கியூவில் இல்லாமல் நின்றிருந்தான்.
“என்னாச்சுடா மங்கி?” கேள்வி அவனிடம் இருந்தாலும் பார்வை இவளிடம் இருந்தது.
“அண்ணா, இவங்க மொட்டைப் போடனுமாம்!”
“என்னடா சொல்லுற?” அதிர்ந்தான் ஜம்பு.
“பிடிவாதம் பிடிக்கிறாங்கண்ணா. மொட்டை அடிச்சுட்டு தானே தரிசணம் போகனும். அதான் மத்தவங்கள வேற இடத்துல நிப்பாட்டிட்டு உங்களுக்குப் போன் போட்டேன். மொட்டை போட்டு நீங்களே தரிசணத்துக்கு அழைச்சுப் போங்க. நான் மத்தவங்கள எல்லாம் போய் பார்க்கிறேன்” என விடுவிடுவென நகர்ந்துவிட்டான் மங்கி.
மெய் லிங்கையும் அவளின் அடர்ந்தியான நேர் கூந்தலையும் அதிர்ச்சியாகப் பார்த்தான் ஜம்பு.
“மொட்டைப் போடனும்னு உனக்கு யார் சொல்லிக் குடுத்தா? இப்போ அதுக்கு என்ன அவசியம்? இம்புட்டு அழகா, பட்டு மாதிரி இருக்கற முடியை ஏண்டி மொட்டை அடிக்கனும்? உனக்கு என்னதான் பிரச்சனை கூந்தலை குடுக்கற அளவுக்கு?” மடமடவென தமிழில் பொரிந்தான் ஜம்பு.
அவன் சொல்வது புரியாவிட்டாலும் கோபமாக இருக்கிறான் என்பது மட்டும் இவளுக்குப் புரிந்தது. தேவையில்லாமல் தொல்லைக் கொடுப்பதாக நினைக்கிறானோ என வருந்தினாள் மெய் லிங்.
அவனிடம் மன்னிப்பைக் கேட்டவள், எங்கே மொட்டைப் போடுவது என மட்டும் காட்ட சொன்னாள். மற்றதெல்லாம் தான் பார்த்துக் கொள்வதாக சொன்னவள், முகத்தைப் பாவமாக வைத்திருந்தாள்.
“கிழிச்ச! மூஞ்சிய பாரு, பால் குடிக்கற பூனை மாதிரி” திட்டியவன் கண்கள் அவள் மீண்டும் சாரி என தலை ஆட்டி சொல்லும் போது ஆடி அசைந்த அவளின் கூந்தலின் மேல் போனது. பெருமூச்சு ஒன்றை விட்டவன்,
“நியூ சட்டை கோட்?” மாற்றுடை இருக்கிறதா என கேட்டான்.
நேற்று கடற்கரை சம்பவத்துப் பிறகு சின்ன பேக் ஒன்று மாற்றுடைகளுடன் கொண்டு வந்திருந்தாள் அவள். வேனுக்குப் போய் அந்த பேக்கை எடுத்துக் கொண்டு, மொட்டை போடும் இடத்திற்கு அவளை அழைத்து சென்றான் ஜம்பு.
உடன் நடக்கும் போது,
“வை மொட்டை?” என தலையத் தடவிக் காட்டினான்.
“இங்க வந்து மொட்டைப் போட்டா நல்லதாமே! எங்கம்மா இங்க வந்தா மொட்டைப் போடறதா வேண்டி இருந்தாங்களாம். அவங்களால வர முடியாததனால நான் போட்டுக்கறேன்.” என ஆங்கிலத்தில் சொன்னாள்.
“அவங்கள வந்து போட சொல்லு. வை யூ புட்டிங்?”
புன்னகைத்தாளே தவிர பதில் சொல்லவில்லை.
“சிரிச்சே ஆள ஏமாத்து” அதற்கும் சத்தமில்லாமல் திட்டினான்.
முடி இறக்கும் இடத்தில் அவளை கொண்டு நிறுத்தினான். முடி இறக்குபவரிடம் பார்த்து பதமாக செய்ய சொன்னான் ஜம்பு. பயத்துடன் அவள் அமர்ந்திருக்க,
“யூ சுவர்?” மொட்டை போட்டுத்தான் ஆக வேண்டுமா என மறுபடியும் கேட்டான் ஜம்பு. கண் மூடி ஒரு நிமிடம் என்னவோ யோசித்தவள், ஆமேன தலையை பிடிவாதமாக ஆட்டினாள். பெருமூச்சுடன், வேலையை ஆரம்பிக்க சொன்னான் ஜம்பு. அவர் மெய் லிங்கின் தலையை மழிக்க, ஒரு வித இயலாமையுடன் வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஜம்பு. கண் மூடி அமர்ந்திருந்த அவள் உடல் மெல்ல நடுங்கவும், கையை பற்றி தட்டிக் கொடுத்தான்.
“பயம் நோ! ஐ எம் ஹியர்” என மென்மையாக சொன்னான்.
அவளின் முடிக்கற்றைகள் தரையில் விழுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் ஜம்பு. அவள் கண் மூடி இருக்கவும், மெல்ல குனிந்து கொஞ்சமாக அவள் முடியை அள்ளி தன் பேண்ட் பாக்கேட்டில் நுழைத்துக் கொண்டான். முடி எடுப்பவர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. மொட்டைப் போட்டு முடித்ததும், மெய் லிங் இன்னும் அழகாக அவன் கண்களுக்குத் தெரிந்தாள். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்று இவனை அறிந்துதான் கண்ணதாசன் பாடி வைத்தாரோ!
அவளோ அவனை நிமிர்ந்துப் பார்க்காமல்,
“வாட்ஸ் நெக்ஸ்ட்?” என கேட்டாள்.
“லுக் அட் மீ” என அவளை நிமிர சொன்னான் ஜம்பு.
கண்களில் கண்ணீருடனும், முடி போய் விட்ட துக்கத்திலும் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் மெய் லிங்.
தனக்குப் பிடித்த பொம்மை காணாமல் போனதை நினைத்து அழும் குழந்தை போல இருந்தாள் அவள்.
“நோ க்ரை மெய் லிங். முடி சாமிக்கிட்ட கோ! வீ மஸ்ட் கீவ் ஹெப்பிலி. இல்லைனா சாமி கண்ணை குத்திங்” என கோபுரத்தைக் காட்டி சைகையுடன் விளக்கினான்.
“ஓகே ஜம்ப்” என்றவள் பளிச்சென புன்னகைத்தாள்.
குளிக்கும் இடத்திற்கு அவளை அழைத்துப் போனவன்,
“கோ குளி” என அனுப்பி வைத்தான். குளித்து அவள் உடை மாற்றி வர, கையில் சந்தனத்துடன் நின்றிருந்தான் ஜம்பு.
தலையில் பூசிக் கொள்ள சொன்னவனை, புரியாமல் பார்த்தாள் மெய் லிங்.
“மண்டை ஹோட். சந்தனம் மஸ்ட் புட்” என விளக்கியவன், நீரில் குழைத்திருந்த சந்தனத்தை காட்ட, அவள் கொஞ்சமாக அள்ளி தலையில் அப்பிக் கொண்டாள். விடுபட்ட இடங்களில் இவனே பூசிவிட்டான். பூசி விடுபவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் மெய் லிங்.
பின் அவளை அழைத்துப் போய் கியூவில் நின்று தரிசனத்தை முடித்தான். இவர்கள் லட்டு வாங்கிக் கொண்டு திரும்பி வந்தப் போது, மற்றவர்கள் இவர்களுக்காக காத்திருந்தனர். மதிய உணவை முடித்து, இன்னும் கொஞ்சம் அங்கேயே சுற்றிக் கழித்து மாலையில் திருப்பதியில் இருந்து மீண்டும் சென்னைக்குப் பயணப்பட்டனர். ஹோட்டலை அடைந்த போது எல்லோரும் மிகவும் களைத்திருந்தனர். மெய் லிங்கை நிறுத்தி அவள் கையில் சந்தன பாக்கேட்டைத் திணித்தான் ஜம்பு. மங்கியை விளக்கி சொல்லுமாறு சொல்லிவிட்டு விலகி நடந்தான் அவன்.