அத்தியாயம் 8
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, குன்றின் சரிவில் நான்கடி பரப்பளவில் 1,200 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. 1908-இல், எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய உருண்டையான கல்லை, பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யானைகளின் உதவியால் குன்றுலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தனர். ஆனால் கொஞ்சம் கூட அக்கல்லை அசைக்க முடியவில்லை.
வேன் மகாபலிபுரத்தில் இருந்த அந்த பிரமாண்டமான பீச் ரிசார்டில் நின்றது. காஞ்சிபுரத்தை சுற்றி விட்டு மதிய உணவுக்குப் பிறகு நேராக மகாபலிபுரத்துக்கு வந்திருந்தார்கள். செக் இன் செய்து விட்டு எல்லோரும் லக்கெஜ்களை எடுத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குப் போனார்கள்.
மங்கியைப் பார்த்து ஜம்பு ஜாடை செய்ய, அவன் மெய் லிங் அருகில் போனான். வெயில் காலமாக இருப்பதால் தலைக்கு சந்தனம் பூச சொல்லிப் பணித்தவன், அப்படியே ஜம்புவின் ஜிப்பாவையும் கேட்டான்.
“ஆஸ்க் ஹிம் டு டால்க் டு மீ!” என ஜம்புவைப் பார்த்தபடியே மங்கியிடம் பேசினாள் மெய் லிங்.
“ஒன்னும் வேணா போடி” என முகத்தைத் திருப்பிக் கோண்டான் ஜம்பு.
“சன் ச்சிங் பிங்!” என சத்தமாக முனகினாள் மெய் லிங்.
“டேய் மங்கி! என்னடா சங்கு பிங்குன்னு என்னமோ திட்டறா!”
“எனக்கு மட்டும் சீனாக்காரன் பாஷை தெரியுமா? ஜாக்கி சான் படத்தையே தமிழ்ல பார்க்கற ஆளு நானு. இருங்க கூகள் பண்ணி பார்ப்போம்” என்றவன்,
“அண்ணா சமூ உங்களா முட்டா பைத்தியம்னு திட்டிட்டுப் போறாண்ணா” என சிரித்தான்.
“முட்டா பைத்தியமா?”
“ஹிஹிஹி பைத்தியம்னு மட்டும்தான் சொல்லிருக்கா. அதுக்கு முன்ன வந்த அடைமொழிய நானா சேர்த்துக்கிட்டேன்”
“தொலைச்சிருவேன்டா ராஸ்கல். ஓடிரு”
“விடுண்ணா, நம்பளுக்குள்ள என்ன கோபம். ஏண்ணா, இவங்களாம் மட்டும் சொகுசா ரூமுல தங்குறாங்க. என்னை மட்டும் வேன்லயே படுக்க வைக்கறீங்களே, இது நியாயமா?”
“போற இடத்துல எல்லாம் நமக்கும் ரூம் போட்டா செலவு எகிறிரும்டா. எங்கப்பாட்ட யாரு பேச்சு கேக்குறது? அந்தாளு நல்லா பேசுனாலே என்னால கேட்க முடியாது. இதுல வண்ண வண்ணமா பேசுனா காதுல ரத்தம் வரும். பரவாயில்லயா?”
“உங்க சொத்துதானேணா? உங்க வசதிக்கு கொஞ்சமா செலவு பண்ணிகிட்டா என்ன?”
“நீ ராங்கா பேசறடா! இது எங்கப்பா கஸ்டப்பட்டு சேர்த்த சொத்து. என் புள்ள குட்டிங்க வேணும்னா உரிமை கொண்டாடலாம். நான் போய் சொத்துக்கு நிக்க மாட்டேன். செய்யற வேலைக்கு கை நிறைய சம்பளம் தராரு. இப்போதைக்கு அது போதும். ஒரு நாள் நானும் சொந்தமா ட்ராவல்ஸ் தொறப்பேன்டா. வெளிநாட்டு டூர்லாம் பண்ணுவேன், கோடி கோடியா சம்பாரிப்பேன். என் பேரப் புள்ளைங்களுக்கு சொத்த எழுதி வைப்பேன்”
“இங்க காதலிக்கே வழிய காணோமாம். இதுல பேரனுக்கு சொத்து எழுதி வைக்கிறத பத்தி பேச்சு! விளங்கிரும்!” சொல்லி விட்டு கடற்கரையை நோக்கி நடையைக் கட்டினான் மங்கி.
“ஹ்ம்ம் அது என்னமோ நிஜம்தான்! வில்லன் மாதிரி கருப்பா, காண்டாமிருகம் மாதிரி பெத்ததும் இல்லாமா, அந்தக் காலத்து அடியாள் பேர வேற வச்சிவுட்டுருக்காங்க. லோக்கல் பொண்ணுங்களே பேரை கேட்டா சும்மா அதிருதுல்லன்னு ஓடி போயிருதுங்க. இதுல ஐயாவுக்கு பளபள ஃபாரின் சரக்கு மேல நாட்டம். விளங்கிரும்டா ஜம்பு.” தன்னைத் தானே திட்டியபடி மங்கியைத் தொடர்ந்து கடலுக்குப் போனான்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அனைவரும் வேனில் இருக்க, பயணம் தொடர்ந்தது. ஏற்கனவே ப்ளான் செய்த இடங்களை முடிந்த வரை சுற்றிக் காட்டுவார்கள் டூர் ஏற்பாட்டாளர்கள். பயணிகள் சில சமயங்களில் தாமதம் செய்வதால், சில இடங்கள் பார்க்க முடியாமல் போய்விடும். ஏன் சொன்னபடி சொன்ன இடங்களை காட்டவில்லை என பயணிகள் பல சமயங்களில் பிரச்சனை செய்வது உண்டு. கொடுத்தப் பணத்தைத் திருப்பி கேட்பதும் உண்டு. ஜம்பு ட்ரிப் அடிக்கும் போது, முடிந்த அளவு எல்லோரையும் இன்முகமாக சமாளித்துவிடுவான். குறித்த நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என நினைவுறுத்திக் கொண்டே இருப்பான்.
கடற்கரை கோயிலில் அவர்களை இறக்கிய போதும் அதையேத்தான் தேய்ந்து போன ரெக்கார்ட் மாதிரி மீண்டும் சொன்னான். தலையை ஆட்டிக் கொண்டு எல்லோரும் இறங்கிப் போனார்கள். மங்கியும் ஜம்புவும் அவர்கள் பின்னாலேயே போனார்கள். மங்கி அடிக்கடி வருவதால், மகாபலிபுரத்தின் சரித்திரத்தையே கையில் வைத்திருந்தான். கைடாக அவனே இவர்களுக்கு விளக்கம் அளித்தப்படி வந்தான்.
உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் முகம் களைப்பாக இருந்தாலும், கண்கள் ஒளிர மங்கி சொல்வதையும், கோயில் சிற்பங்களையும் சுற்றிப் பார்த்தாள் மெய் லிங். ஜம்புவைக் கண்டுக் கொள்ளவேயில்லை. பிறகு குகைக்கோயில், அர்ஜுனன் சிற்பம், புலிக்குகை என மற்ற இடங்களையும் பார்த்தார்கள்.
மெய் லிங் எல்லாவற்றையும் தனது போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டாள். எல்லோரையும் போலவே அவளும் பட்டர் பாலைப் பார்த்து பிரமித்து நின்றாள். சிறு பிள்ளை போல், அதைக் கையில் தூக்குவது போல போஸ் கொடுத்து மங்கியை படம் பிடிக்க சொல்லி மகிழ்ந்தாள்.
நன்றாக சுற்றிவிட்டு, அங்கிருந்த கடைகளை நோட்டமிட்டார்கள். ஐஸ்க்ரீம், தின்பண்டங்கள் என மற்றவர்கள் வாங்க இவள் எதையும் சாப்பிடவில்லை. புதிதாக தர்பூசணி பழம் ஒன்றை வெட்ட சொல்லி வாங்கி மங்கியிடம் கொடுத்தனுப்பினான் ஜம்பு. இவன் தான் அனுப்பினான், என தெரியவும் அவள் வாங்கிக் கொள்ளவில்லை.
“அண்ணே, இனிமே என்னை தூது போக சொல்லாதீங்க. ரெண்டு பேரும் அடிச்சு விளையாட நான் என்ன பூப்பந்தா?” என கலண்டுக் கொண்டான் மங்கி.
ஒரு கடையில் நின்று அவள் குட்டி சிற்பங்களை ஆராய, அருகில் வந்து நின்றான் ஜம்பு. திரும்பி பார்க்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள் அவள். தொண்டையை செறுமினான் ஜம்பு. அதற்கும் எந்த ரியாக்ஷனும் இல்லை.
“மெய் லிங்!”
சிரிப்புடன் திரும்பி பார்த்தாள் அவள்.
இப்போதுதான் பேச்சு வந்ததா என கேட்டவள், அவன் கையில் வைத்திருந்த பழத்தை தானாகவே எடுத்து உண்டாள்.
“திஸ் மெலன் இஸ் எஸ் சுவீட் எஸ் யூ ஜம்ப்!” என ஐஸ் வைத்தவள் மீண்டும்,
“ப்ரேண்ட்ஸ்?” என கை நீட்டினாள்.
“ஐ கீவ் ஓன், யூ டேக், வீ ப்ரேண்ட்ஸ்!” என அவள் முகத்தைப் பார்த்தான் ஜம்பு.
குழப்பமாக அவன் முகத்தைப் பார்த்தவள், சரியென தலை ஆட்டினாள். பேண்ட் பாக்கேட்டில் கை விட்டவன், சின்ன ப்ளாஸ்டிக் பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
வாங்கிப் பார்த்தவள்,
“வெரி க்யூட்” என சொல்லி சிரித்தாள். அதை எடுத்து அப்பொழுதே தன் மொட்டை மண்டையில் அணிந்துக் கொண்டாள்.
பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று நிற நூல்களால் பின்னப் பட்டிருந்த அழகிய தொப்பிதான் அது.
“தேங்க் யூ ஜம்ப்”
“தலை ஹோட். இதப்போட்டுக்க ஆல்வேய்ஸ்” என சொல்லியவன், இப்பொழுது கையை நீட்டி,
“ப்ரேண்ட்ஸ்?” என கேட்டான்.
அவளும் சந்தோஷமாக கைக்குலுக்கினாள்.
சில நிமிடங்களுக்கும் மேலாகவே அவள் கையைத் தன் கையில் பிடித்திருந்தான் ஜம்பு. அவள் இருவரின் கையையும் ஜாடையாகப் பார்த்து தொண்டையைக் கணைக்கவும் தான் விட்டான்.
“மெய் லிங்!”
“யா”
“ஜிப்பா வேர்?”
“லேட்டர்” என சொல்லிவிட்டு மற்றவர்களுடன் போய் இணைந்துக் கொண்டாள்.
அங்கிருந்து கிளம்பியவர்கள் மீண்டும் பீச் ரிசார்ட்டை அடைந்தனர். இந்த ட்ரீப்பிலேயே இந்த தங்குமிடம் மட்டும்தான் கொஞ்சம் கிராண்டானதாக தேர்வு செய்யப்படிருந்தது. இதற்கு மேல் அவர்கள் பீச்சுக்குப் போவதோ, உள்ளிருந்த மற்ற வசதிகளான ஜிம், ஸ்பா போன்றவற்றை பயன்படுத்திக் கொள்வதோ அவர்களின் விருப்பம்.
இவர்களை இறக்கி விட்டு ஜம்புவும், மங்கியும் ஒரு ரவுண்ட் மீண்டும் மகாபலிபுரத்தை சுற்றி வந்தார்கள். இரவு உணவை முடித்துக் கொண்டு இருட்டிய பிறகே திரும்பி வந்தனர் இருவரும். மங்கி படுத்துக் கொள்ள, ஜம்பு தூக்கம் வராமல் விழித்திருந்தான்.
‘மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்து இருக்கறதுக்கு, பீச் காத்துலயாச்சும் நடந்துட்டு வருவோம். அப்பவாச்சும் இந்த மனப்புழுக்கம் அடங்குதான்னு பார்ப்போம்’ என கிளம்பினான். அந்த ரிசார்ட்டுக்கு என ப்ரைவேட் பீச் இருந்தது. வெளியாட்கள் யாரும் அங்கே வர முடியாது.
காற்று அடித்து வீசி, உடம்பை ஊசியாய் குத்தியது. சுகமாக அதை அனுபவித்துக் கொண்டே மணலில் அமர்ந்தான் ஜம்பு. முடியைக் கோதிக் கொண்டவன், மல்லாக்க மணலில் சரிந்தான். வானத்தில் முழு நிலவு அவனைப் பார்த்து சிரித்தது.
‘நிலா கூட என் சமூ முகம் மாதிரி வட்டமா மொட்டையா இருக்கே!’ புன்னகைத்துக் கொண்டவன் பேண்ட் பாக்கேட்டில் வைத்திருந்த கீ செயினை எடுத்து தடவிக் கொடுத்தான். மெய் லிங்கின் முடியை கொஞ்சமாக அள்ளினானே, அதை சின்ன சடையாக போட்டு லேமினேட் செய்து லிங் (ஜம்பு{லிங்}கம்) லவ் லிங் (மெய் {லிங்}) என அழியாத மார்க்கரில் எழுதி ஹார்ட் விட்டிருந்தான்.
விடலைப் பையன் மாதிரி தான் செய்து வைத்திருந்த காதல் சின்னத்தைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. யாரும் இல்லை என்கிற தைரியத்தில் வாய் விட்டு சிரித்தான்.
திடீரென கடல் நீரில் சலசலப்பு. எழுந்து உட்கார்ந்தவன், கடலில் இருந்து நீர் சொட்ட சொட்ட வெளி வந்த மெய் லிங்கைப் பார்த்து அதிர்ந்தான். குட்டியாக ஒரு டீசர்டும், அரை தொடையில் நின்றிருந்த கால் சட்டையுடனும் அவசரமாக நடந்து வந்தாள். அவன் அருகே வந்தவள், இவனைப் பார்த்ததும் தான் ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டாள்.
“யூ ஸ்கேர்ட் மீ ஜம்ப்”
கடலில் நீந்திக் கொண்டிருக்கும் போது, திடீரென கேட்ட சிரிப்பு சத்தத்தில் பயந்து விட்டதாக சொன்னவள், பொத்தென அவன் அருகில் அமர்ந்தாள். அவள் உடலில் இருந்த தண்ணீர் லேசாக அவன் முகத்தில் பட்டு ஜில்லிப்பை கொடுத்தது. துடைத்துக் கொள்ளாமல், அமைதியாக உட்கார்ந்திருந்தான் ஜம்பு. இல்லை அதிர்ச்சியாக என சொல்ல வேண்டுமோ!
“ஜம்ப்” அவன் அமைதியாக இருக்கவும் அழைத்தாள் மெய் லிங்.
“ஹ்ம்ம்”
“இன்னாச்சு?” உடைந்த தமிழ் வந்தது.
“நத்திங்”
இன்னும் கோபமா, ஏன் முகத்தைப் பார்க்காமல் பேசுகிறாய் என கேட்டவளுக்கு பதில் இல்லை.
அவன் தாடையைப் பற்றி தன் புறம் திருப்பினாள் மெய் லிங்.
அவளைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தான் ஜம்பு. இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சண்டை போட்டால் கூட கண்ணைப் பார்த்து பேசும் இவனுக்கு என்ன ஆனது என யோசித்தாள்.
“ஜம்ப்!” தாடையைப் பிடித்து ஆட்டினாள். அவளின் ஈர விரல்கள் தாடையை மட்டும் பிடித்திருந்தாலும், அவன் உடல் முழுக்க சிலிர்ப்பு ஓடி அடங்கியது.
“யூ ஆர் ஷிவரிங்!” எழுந்து நடந்தவள், பீச்சில் இருந்த நாற்காலியில் வைத்திருந்த குட்டி பேக்கை எடுத்து வந்தாள். அதில் இருந்த சால்வையை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டவள், தனது துண்டை எடுத்து உடம்பைத் துடைத்துக் கொண்டு அதை வைத்தே மூடிக் கொண்டாள்.
அப்பொழுதுதான் ஜம்புவுக்கு மூச்சே வந்தது.
‘ராட்சசி! அஞ்சு வயசு புள்ள போடுற சட்டையைப் போட்டுட்டு வந்து கொஞ்ச நேரத்துல எனக்கு ஹார்ட் அட்டாக் வர மாதிரி பண்ணிட்டாளே! முத்துமாரியா பார்த்தவன, மலை மலை மருதமலைன்னு ஆடுனா மும்தாஜ பார்க்கற மாதிரி பார்க்க வச்சிட்டாளே!’ மனதில் புலம்பித் தள்ளினான் ஜம்பு.
சால்வையை இன்னும் நன்றாக இழுத்திப் போர்த்தி உடல் நடுக்கத்தை நிறுத்தினான். அவனும் என்னதான் செய்வான், படத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறான். நேரில் லைவ்வாக நனைந்த தாஜ்மகாலைப் பார்ப்பது இது தான் முதல் முறை.
“ஜம்ப்” கன்னத்தில் கை வைத்து தூங்குவது போல காட்டியவள், தூங்கவில்லையா என கேட்டாள்.
இப்பொழுது நிமிர்ந்து அவள் கண் பார்த்து,
“ஸ்லீப் நோ கமிங்” என பதிலளித்தான்.
“மீ டூ”
தூக்கம் வராமல் மொட்டு மொட்டென்று ரூமில் இருக்கப் பிடிக்காமல், நீந்தினால் தூக்கம் அவரும் என கடலுக்கு வந்ததாக சொன்னாள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருக்கலாம் என்றவள், அவனைப் பற்றி விசாரித்தாள்.
அவள் கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் ஆதி முதல் அந்தம் வரை தன்னைப் பற்றி பகிர்ந்துக் கொண்டான் ஜம்பு.
“மை அம்மா அப்பா மேரேஜ், ரொம்ப நாள் கழிச்சி ஐ போர்ன். அவங்க ரொம்ப புவர். காசு இல்ல. ரொம்ப கஸ்டம். எனக்கு ஃபுட் ஹேவ் ஆனா டாய்ஸ்லாம் இல்ல. தமிழ் மீடியம் ஸ்கூல்தான். அம்மா வடாம், அப்பளம் புட்டிங். மீ கோ ஹவுஸ் ஹவுஸ் விக்கறதுக்கு. அப்பா எவரிடே ட்ரைவர். வீக்கேண்ட் ஒன்லி வீடு. சோ மீ சோ சேட்டு. புக் பை நோ மணி, ஸ்கூல் ட்ரிப் கோ நோ மணி, கடலை முட்டாய் பை அல்சோ நோ மணி. எவிரிதிங் நோ மணி. எனக்கு ரொம்ப ஆங்கிரி. சின்ன புள்ளைல ஓடா உழைச்சது மீக்கு ரொம்ப அசதி. படிப்பு நோ ஏறிங். அப்புறம் அப்பா பிஸ்னஸ் பிக் அப்பு. செம்ம பிக் அப்பு. மணி கொட்டிங் யூ க்நோ. கஸ்டம் எல்லாம் கோ கோ! அப்போ ஐ லிட்டில் பிட் பிக் ரெடி. காலேஜ் கோ ரெடி. நிறைய ப்ரேண்ட்ஸ். சடன் மணி கிடைக்கவும் ஒரே ஆட்டம். பட்ட கஸ்டத்துக்கு எல்லாம் எஞ்சாய் பண்ணனும்னு திங்கிங். நிறைய கெட்ட பழக்கம். சிகரேட், தண்ணி அதான் லிக்கர், அப்புறம்“ லேசாக முகம் சிவந்தான்.
“அப்புறம் வாட் ஜம்ப்? டெல் மீ!” ஊக்கினாள் மெய் லிங்.
“கொஞ்சமா சைட் கேர்ல்ஸ். சும்மாதான் டைம் பாசிங். நோ டச்சிங் டச்சிங். தென் ஓன் டே ஓன் கேர்ள் ப்ரோபோஸ் மீ. அப்படி ஒரு ஹெப்பி எனக்கு. தலை சுத்திப்போச்சு”
அடப்பாவி எனும் ரேஞ்சுக்கு அவனைப் பார்த்தாள் மெய் லிங்.
“நான் தான் கேர்ள் பிரண்ட்னு நெனைச்சென். அவளுக்கு நான் ஏடிஎம் மிஷினாத்தான் தெரிஞ்சிருக்கேன். ஐ மீன் மணி பிடுங்கிங். எவ்ரிடே சாப்பாடு ஷீ ஆஸ்க் ஐ பை! பிட்ஷா, பிரியாணி, மினி மீல், ஃபூல் மீல் ஆல் ஐ பை! வாட் ஷீ ஆஸ்க் ஐ கீவ். போன், ரீசார்ஜ், எவ்ரிதிங் ஐ டூ. தெரியல மெய் லிங் அப்போ. ஆல் திஸ் டேஸ் பொண்ணு ஒன்னு கூட நோ சீ மீ! மீ கருப்பு அதான். அண்ட் வெரி பீக். ஆல் டோண்ட் லைக் மீ” குரல் கரகரக்க சொன்னான் ஜம்பு.
அவன் கையைப் பற்றி தட்டிக் கொடுத்த மெய் லிங்,
“யூ ஹேவ் அ பிக் ஹார்ட் ஜம்ப். ஒன்லி எ குட் கேர்ள் கேன் சீ தட். சூன் ஷீ வில் கம்” என்றாள்.
அவளின் சில்லென்ற தீண்டல் அவனின் மனக் கவலையைக் குறைத்தது. மெல்ல புன்னகை அரும்பியது ஜம்புவுக்கு. முடியைக் கோதுவது போல கையை உருவிக் கொண்டாள் மெய் லிங்.
“அப்புறம் டெல்!”
“இவ ஐ லவ் யூ சொல்லவும் மீ சோ ஹெப்பி. ஐ பீல் லைக் பெரிய பருப்பு. ஐ மீன் பிக் பாஸ். ஓன் டைம் ஐ கல்லால கை வச்சிங். டேக் பிப்டி தவுசண்ட் கிவ் ஹேர் அம்மா ஆபரேஷன். மை அப்பா பைண்ட் அவுட். இவளோ நாளா ஹீ ஸ்கோல்ட் மீ எருமைகடா, உருப்படாத தெண்டம், சாவுகிராக்கி ஆல் பேட் பேட் வொர்ட். பட் அன்னிக்கு அடிய கெளப்பி விட்டுட்டாரு. யூ க்நோ, பீட்டிங். செம்ம பீட்டிங். பெல்ட் பிஞ்சிங். மை அம்மா கம் நடுவுல, ஷீ அல்சோ செம்ம அடி வாங்கிங். அது தான் எனக்கு கோபம் வந்துருச்சு. ஐ யூ கென் பீட், ஐ சன். மை அம்மா வை யூ பீட்? எங்கம்மா வலியில கத்தவும், பெல்ட்டை பிடிங்கி அடிக்க போயிட்டேன். ஹீ வெரி அதிர்ச்சி. அம்மா அல்சோ அதிர்ச்சி. மீ பேல்ட் தூக்கி வீசிங். தெண்ட சோறு சாப்பிடற டாக்குக்கு இவ்வளவு கொழுப்பா ஹீ ஸ்கோல்ட். ஐ மானம் ரோஷம் ஹேவ் மெய் லிங். ஆல் மணி இன் பேண்ட்ஸ், மை போன், மை பைக் கீ ஆல் வீசி அடிச்சேன். ப்ரம் நவ் ஐ கோ அவுட்சைட். இனிமே நீங்க எனக்கு அப்பா நோ சொல்லிட்டேன். மை அம்மா க்ரை. ஐ கட்டிப்பிடி ஹேர் அண்ட் அம்மா அழாதே ஐ டேல். உன் பையன் மானஸ்தன் ஐ டெல். தென் ஐ கோ அவுட்.”
சற்று நேரம் நிலவையே வெறித்திருந்தான் ஜம்பு. இவளும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“அப்புறம் ஐ கோ ஆல் மை ப்ரேண்ட் ஹவுஸ். ஆல் சே மை அப்பா ஸ்ட்ரீக்ட், யூ மை ஹவுஸ் நோ ஸ்டே. மை தங்கச்சி ஹேவ், மை ஹவுஸ் யூ டோண்ட் ஸ்டேன்னு. மனசு ஒடஞ்சி போச்சு மெய் லிங். என் கிட்ட நல்லா வாங்கி தின்னவனுங்க, வென் ஐ பேட் பொசிசன் அப்படியெ கலட்டி வுட்டுட்டானுங்க. என்னைப் பார்த்தா அவனுங்க தங்கச்சிய கையப் பிடிச்சு இழுக்கறவன் மாதிரியா இருக்கு? ப்ரேண்ட் சிஸ்டர் இஸ் மை சிஸ்டர். நொந்து போய்ட்டேன். ஐ கோ மை கேர்ள்ப்ரேண்ட் ஹவுஸ். மணி ஐ கீவ் யூ க்நோ வாட் ஷீ யூஸ்? ஹேர் மேரேஜ். என்னோட பணத்த வச்சி, ஷீ மேரேஜ் யூஸ். வீட்டுக்குள்ள நிச்சயம் ஹேப்பென். என்னைப் பார்த்ததும் மாப்பிள்ளை முன்னுக்கு வாட் ஷீ டெல், இது மை ப்ரேண்ட். அண்ணன் மாதிரின்னு. கேட்டதும் ஆங்கிரி நோ கம், சிரிப்பு தான் வந்துச்சு. அண்ணன் கிட்டதான், உங்க நினைப்பாவே இருக்கு இன்னிக்கு பிட்ஷா போலாமான்னு கேப்பியா? போடின்னு மீ அவுட்சைட் கம். ஏற்கனவே இது புட்டுக்கும்னு மீ மைண்ட்ல செட் போல மெய் லிங். சோ ஐ நோ சேட். பணத்த என்னோட மொய்யா வச்சிக்கிட்டு நல்லா இரு மீ டேல். தென் ஐ வால்க் ஆல் ரோடு நோ மணி. தர்ஸ்டி, ஹங்கிரி மணி நோ. தென் ஐ க்நோ, இன் தீஸ் வோர்ல்ட் பணம் தான் முதல்ல. அப்பயும் மீ ஸ்டபர்ன். வீட்டுக்குப் போவலயே. அப்படியே ஒரு டீ கடைல ஹங்கிரி காது அடைக்க மீ சிட். அப்போத்தான் இந்த மங்கி ஐ சீ. ரொம்ப ஏழை. சட்டை கிழிஞ்சிங். டீ பொறை ஹீ பை. என்னைப் பார்த்துட்டு கம் நியர் மீ கிவ் ஹால்ப் டீ, ஹால்ப் பொறை. எனக்கு கண்ணு கலங்கி போச்சு, ஐ க்ரை. அழாதண்ணா, எல்லாம் நல்லா போகும் ஹீ டெல். அவன் அட்ரஸ் வாங்கிட்டு, நான் மை ஹவுஸ் கோ. பெத்தவங்க கிட்ட என்ன வீராப்பு ஹேர்னு தோணிருச்சு. வீட்டுக்கு போனேன். ஒன்னுமே பேசல. அவங்களும் ஒன்னும் நெவர் ஆஸ்க். அப்படியே வேலைல செட்டில் ஆகிட்டேன். அம்மா தான் எல்லாம். அப்பாவ பார்த்தாலே இன்னும் காண்டாகும். அடிச்சிட்டாறே! தோளு மேல வளந்த புள்ளையே பீட்டிங். சின்ன வயசுல இவங்களுக்காக நானும் எவ்வளவு கஸ்டப் பட்டுருக்கேன். ஆனா அடிச்சிட்டாரு. என் நல்லதுக்குத்தான் அடிச்சாரு. ஆனாலும் மனசு தாங்கல. பணம் இல்லாதப்ப பாசம் இருந்துச்சு, பணம் வந்ததும் பாசம் காணா போச்சு. இன்னும் மனசு காயம் ஆறல மெய் லிங் “ கலந்துக் கட்டி அடித்தவன் கடைசியில் தாய் மொழியிலேயே பேசி முடித்தான்.
மணலை சிறிது நேரம் கைகளில் அள்ளி அளைந்தான்.
“வேலைல செட்டில் ஆனதும், ஐ ஸ்போன்சர் மங்கி. ஆஸ்க் ஹிம் ஸ்டடி. நவ் ஹீ கோலேஜ் கோயிங். ஃபீஸ் ஐ பே. லீவ் டைம் ஹீ கம் ஹெல்ப் மீ. மங்கி மை கூடப் பிறக்காத ப்ரதர்.”
“மங்கி இஸ் வெரி லக்கி”
“இல்ல, நான் தான் லக்கி”
சற்று நேரம் அமைதியாக போனது. கடலலைகளின் சத்தம் மட்டுமே கேட்டபடி இருந்தது.
“அம்மா மேரேஜ் டால்க் எவிரிடைம். ஐ டோண்ட் வாண்ட் மெய் லிங். அவ மேல லவ்வுன்னு இல்ல. ஆனா அட்டப் பிகர் அவளுக்கே என்னைப் பிடிக்கல, மத்த பொண்ணுங்களுக்குப் பிடிச்சிருமான்னு ஒரு காம்ப்லேக்ஸ். அம்மா போர்ஸ், நான் தண்ணி அடிச்சிட்டு வந்து ரகளை மேக். ஷீ கீப் குவாயட். அப்படியே போயிருச்சு வாழ்க்கை”
அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள்,
“யூ ஆர் ஹேன்ட்சம் ஜம்ப். ப்ளேக் இஸ் எ பியூட்டிபுல் கலர். அண்ட் யூ ஆர் சோ மேன்லி. ஆல் கேர்ள்ஸ் வில் ஃபைட் டு கெட் யூ. பட் யூ நீட் டூ கிவ் சாண்ஸ் ஃபார் லவ் அகெய்ன்” என சொன்னாள்.
பின் அவளும் தன்னைப் பற்றி மேலோட்டமாக சொன்னாள். அப்பா மட்டும்தான் இருக்கிறார் என்றும் அவர் மீது இவள் உயிரையே வைத்திருப்பதாகவும் தெரிவித்தாள். பின் தன் நண்பர்கள், தன் நாடு, என இருவரும் நேரம் போவது தெரியாமல் தாங்கள் சிருஷ்டித்த வாய்மெய் (சைகையாலும், வாயாலும் பேசுவது) பாஷையில் பேசிக் கொண்டிருந்தனர்.
பேக்கில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கேட்டைத் திறந்தவள்,
“ஐம் ஹங்கரி ஜம்ப்.” என்றவாறே சாப்பிட ஆரம்பித்தாள். அவனுக்கும் நீட்டினாள். கொஞ்ச நேரம் அலைகளின் ஓசையைக் கேட்டுக் கொண்டு இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
“டூமோரோ சீக்கிரம் வேக் அப். யூ கோ ஸ்லீப்” என்றவன் தானும் எழுந்துக் கொண்டான். சால்வையை மடித்து அவளிடம் கொடுத்தான். அவளும் போர்த்தியிருந்த துண்டை உதறி மடித்து எடுத்துக் கொண்டு அவனைத் திரும்பி பார்த்தாள். இவளைப் பார்க்காமல் முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்தான் ஜம்பு.
தன்னை இந்தக் கோலத்தில் பார்ப்பதற்கு தடுமாறுகிறான் என புரிந்துக் கொண்டாள் மெய் லிங். அவளுக்கு புன்னகை அரும்பியது. அவர்கள் நாட்டில் அவள் இன்னும் செக்சியாகவெல்லாம் உடை அணிந்து வெளியே சென்றிருக்கிறாள். அவள் தோழிகளும் அப்படித்தான் அணிவார்கள். அதனால் இப்படி இருந்தது அவளுக்கு வித்தியாசமாகப் படவில்லை. ஆனால் இங்குப் பார்த்தப் பெண்கள் கொஞ்சம் மாடர்னாக இருந்தாலும், இந்தளவு உடுத்தவில்லை என்பதைக் கண்டு கொண்டவளுக்கு அவனின் செய்கை மரியாதையை வரவழைத்தது. காணாமல் கிடைத்ததை திருட்டுத்தனமாகவாவது பார்ப்பது தானே மனித இயல்பு. இவனானால் இப்படி நெளிகிறானே என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
கொஞ்சம் அவனை வம்பிழுக்கும் ஆசை வந்தது அவளுக்கு. அவன் முன்னே மீண்டும் போய் நின்றவள்,
“ஜம்ப்” என அழைத்தாள்.
கடலை வெறித்துக் கொண்டே,
“வாட்?” என கேட்டான் ஜம்பு.
“லுக் அட் மீ”
“இல்லை, பரவாயில்லை. இப்படியே சொல்லு”
கைகளை உயர்த்தி அவன் தாடையைப் பற்றி தன்னை பார்க்குமாறு திருப்பினாள் மெய் லிங்.
“யூ ஆர் ப்ளஸ்ஸிங்!” அவனுக்கு வெட்கத்தில் முகம் சிவப்பதாக சொல்லி சிரித்தாள் மெய் லிங்.
சிரிப்பவளையேப் பார்த்தபடி நின்றிருந்தான் ஜம்பு. அவள் கை இன்னும் அவன் தாடையில் தான் இருந்தது.
“சிரிக்கறப்போ நீ எவ்வளவு அழகா இருக்கத் தெரியுமா?” குரல் கிணற்றுக்குள் இருந்து வந்தது அவனுக்கு.
“அழகு? யூ மீன் பியூட்டிபுல்? நோ லா” அவர்கள் பாசை லா பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தது.
“யெஸ் லா” என்றவனின் கை மெல்ல உயர்ந்து அவள் முகவடிவை அளந்தது. அவளின் தாவாங்கட்டையில் இருந்த மச்சத்தில் விரல்கள் ப்ரேக் அடித்து நின்றன. அந்த மச்சத்தை சுற்றி விரல்களால் வட்டம் போட்டபடியே மெய் மறந்து நின்றான் ஜம்பு.
உடல் நடுங்க சட்டென தன் கையை அவன் தாடையில் இருந்து விலக்கிக் கொண்டாள் மெய் லிங். விலகிய கையை மீண்டும் பிடித்து தன் தாடையில் வைத்து அழுத்திக் கொண்டான் ஜம்பு.
“லீவ் மை ஹேண்ட் ஜம்ப்” அவள் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது.
“கொஞ்ச நேரம்டி, ப்ளிஸ்” கெஞ்சியவன் தாடையில் இருந்த அவள் கை மீது தன் கையையும் வைத்து அவள் கை எடுக்க முடியாதபடி பிடித்துக் கொண்டான். தியானத்தில் இருப்பவன் போல, சில நிமிடங்கள் கண் மூடி நின்றிருந்தான். இங்கே இவள் நெளிந்தவாறே இருந்தாள்.
“ஜம்ப்”
அவள் குரலில் தெரிந்த பதட்டத்தில் கையை விட்டுவிட்டான். ஆனால் பார்வை மட்டும் அவள் பார்வையைக் கௌவி அவனின் காதலை அவளுக்குள் கடத்த விழைந்தது. அவனின் பார்வையை விலக்க முடியாமல் அப்படியே கட்டுண்டுக் கிடந்தாள் மெய் லிங். சட்டென தன் தலையை உலுக்கிக் கொண்டவள், அவனிடம் இருந்து விலகி மணலில் கால் புதைய வேகமாக நடந்தாள்.
“மெய் லிங்!” அவன் அழைப்பை அலட்சியம் செய்தவள் பேயை கண்டது போல ஓடினாள். அவள் பின்னாலேயே போனவன், அறைக்குள் நுழைந்து அவள் கதவை சாத்துவதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் வேனுக்கு திரும்பி சென்றான்.