அத்தியாயம் – 11
ஜானு லேசாக தண்ணீரில் காலை வைக்கும் முன்னரே ஜானுவைத் தடுக்க வந்த மது கொதிக்கும் நீரிலிருந்து கண்ணிமைக்கும் நொடியில் கிளியைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டாள்.
சுடுதண்ணீரின் சூட்டைத் தாங்க முடியாமல் ‘ஸ்ஸ்..’ அலறியவளின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது. அவளின் வலியைவிட கிளியின் சத்தம் அதிகமானது.
ஜானு காலில் லேசாகப்பட்ட சூட்டில் கொஞ்சம் பயந்து போயிருந்த கிளி “கீ..கீ..” என்று விடாமல் கத்தியது.
தன்னுடைய கை எரிவதைப் பொருட்படுத்தாமல் ஜானு வலியில் துடிக்க இரண்டு கரத்தால் கிளியைத் தூக்கிச்சென்று ஒரு வெள்ளை துண்டில் வைத்துவிட்டு திரும்பி ‘ஜானு கொதிக்கின்ற தண்ணீரில் காலை வைத்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்கு வா கிருஷ்ணா..’ என்று மெசேஜ் அனுப்பினாள்.
அதற்குள் “கீ.. கீ.. கீ..” என்று சத்தம் அந்த வீடெங்கும் எதிரொலிக்க ஓடிச்சென்று மஞ்சள் தூளும், தேங்காய் எண்ணெய்யும் எடுத்து வந்து கிளியின் காலில் கட்டுப்போட்டாள் மது.
‘ஸாரிடா அழுகாதே..’ என்ற அவளின் மொழி கிளிக்கு ஒன்றும் புரியவில்லை. ஜானுவை ஒரு வெள்ளை துணியில் வைத்துகொண்டு கண்ணீரோடு அமர்ந்திருந்த மதுவிற்கு அவளின் கைவலி மறந்து போனதோ என்னவோ?
அவளின் சைகை பாசைக்கு கிளிக்கு புரியாவிட்டாலும் அவளின் கண்ணீர் பாசை கிளிக்கு புரிந்தது. அது வலியில் துடிக்க துடிக்க அத்தோடு சேர்ந்து மதுவும் வாய்விட்டு அழுதவளின் கண்ணீர் கிளிக்கு ஒரு புது பாஷையைக் கற்றுக் கொடுத்ததோ?
அவள் அழுவதைக் கண்ட கிளி என்ன புரிந்து கொண்டதோ சீக்கிரமே அவளின் கையில் உறங்கி போனது. அவள் குழந்தையைக் கையில் வைத்திருப்பது போலவே ஜானுவை வைத்துகொண்டு சோபாவில் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாலோ அவளுக்கே தெரியாது.
அவளின் மெசேஜ் பார்த்த மறுநொடியே வீட்டிற்கு வந்து சேர்ந்த கிருஷ்ணா கிளியிருந்த நிலையைக் கண்டதும், “மது ஜானுவுக்கு என்னாச்சு..” தன்னுடைய வழக்கமான கம்பீரத்துடன் நுழைந்தவனைப் பார்த்தவளின் விழிகள் மடைதிறந்தது.
“எதுக்கு இப்போ அழுகிற..” மதுவை அதட்டியபடியே அவளின் அருகில் அமர்ந்தவன் ஜானுவை கையில் தூக்கினான்.
“கீ.. கீ.. கீ..” என்று கத்திட, “ஜானு என்னடாம்மா.. ரொம்ப வலிக்குதா..” என்ற அவனின் கேள்விக்கு கிளி தன்னுடைய காலைத் தூக்கிக் காட்டிவிட்டு, “ம்ம்.. ம்ம்..” என்றது ஜானு.
மதுவின் கையிருந்தவரை கத்தாத கிளி அவனின் கைக்கு வந்ததும் மீண்டும், “கீ.. கீ.. கீ..” என்று கத்தியது.
கிளி வலியால் துடிப்பதைக் கவனித்த மது, ‘நீ ஜானுவைக் கொடு..’ என்று அவனின் கையிலிருந்து கிளியை வெடுகென்று வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
அவளின் செய்கையை கண்டு கிருஷ்ணாவிற்கு சிரிப்பு வந்தாலும் ஜானு அவளிடம் சமத்தாக இருப்பதைப் பார்த்து, “மது நான் போனபிறகு என்ன நடந்துச்சு..” என்று கேட்க அவளும் இதழசைவில் நடந்த அனைத்தையும் கூறினாள்.
அவள் சொன்னதை வைத்து யூகித்த கிருஷ்ணா அவளின் கைகளை ஆராய்ந்தான். கொதித்த நீர் பட்ட இடமெல்லாம் சிவந்து போயிருக்க கொப்பளம் போடும் நிலையில் இருந்தது.
“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் கவனமா இருக்கவே மாட்டாயா..” வழக்கம்போல அவன் பஜனையைத் தொடங்கிவிடவே அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சிறிதுநேரம் பேந்த பேந்த விழித்தாள் மது.
‘வேற வழியே இல்ல இப்போ இவனோட வாயை அடச்சே ஆகணும். இல்ல முதலில் இருந்து வருவான்..’ என்று நிமிர்ந்த மது அவன் எதிர்பாராத நேரத்தில் அவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு குறும்புடன் கண்ணடித்தாள்
இந்த செய்கையில் அதிர்ந்து நிமிர்ந்த கிருஷ்ணா, “இப்போ இது உனக்கு ரொம்ப முக்கியம்..” என்று முகம் சிவக்க கோபத்துடன் கேட்டவனைக் கொஞ்சுதலாக பார்த்தாள்.
‘ஸாரிப்பா கை ரொம்ப வலிக்குது. கொஞ்சம் மருந்து போட்டுவிடு. இப்படி உன்னோட லொடலொட வாயைத் திறந்து ஜானுவை எழுப்பி விட்டுவிடாத..’ பாவமாகக் கூறியவளை முறைத்தபடியே எழுந்து சென்றான்.
அவன் மறந்து போட்டுவிட கையைத் தோதாகக் கொடுத்திவிட்டு, ‘இவனுக்கு மட்டும் எங்கிருந்துதான் வருமோ இத்தனை கோபம்..’ அவனை மனதிற்குள் திட்டுவதாக நினைத்து அவள் இதழசைத்துவிட்டாள்.
“நீ பண்ணி வைக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் வர கோபத்துக்கு இழுத்து வைத்து கன்னத்தில் பளார் பளார்ன்னு நாலு போடணும்.. அப்போதான் நீயெல்லாம் திருந்துவ..” அவனிடமிருந்து பதில் வரவே ‘நான் மனசிற்குள் நினைத்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்..’ என்று புரியாமல் குழம்பினாள்.
அவளின் கைகளுக்கு மருந்து போட்டாலும் அவனின் கவனம் முழுவதும் மதுவின் மீதே இருக்க, “மேடமிற்கு பேச்சு வராதுங்கிற தைரியத்தில் இதழைசைத்த மற்றவங்களுக்கு புரியாது என்று நீ நினைக்காதே. எனக்கு உன்னோட இதழசைவும் புரியும்..” அவனின் குரலில் கேலி இருந்தாலும் அவனின் முகம் இறுகிய பாறை போல இருந்தது.
அவளின் கைகளுக்கு மருந்து போட்டுவிட்டு நிமிர்ந்த கிருஷ்ணா, “இனிமேல் கையை கிளிக்கு காவு கொடுத்தேன்.. காலில் சுடுதண்ணீர் ஊத்திட்டேன் என்று வந்து நில்லு உனக்கு இருக்கு..” அவளை மிரட்டிவிட்டு எழுந்து சென்றவனின் முதுகை வெறித்தாள் மது.
‘இவன் செம கோபத்தில் இருக்கான் மது கொஞ்சம் மிஸ் ஆனாலும் நீ க்ளோஸ்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் மறந்தும் இதழசைக்கவில்லை.
அன்றைய சாப்பாடு வேலையை கிருஷ்ணா கவனித்துக் கொள்ள கிளிக்கு அடிப்பட்டது தெரிந்து ராகவ் அவர்களைத் தேடி வந்தவனை வீட்டிற்குள் நுழையும் பொழுதே கவனித்தவன், “வா ராகவ். இன்னைக்கு சீக்கிரமே வேலை முடிஞ்சிதா?” என்று இயல்பாக கேட்டான்.
அவனின் குரல்வந்த திசையைத் திரும்பிப் பார்த்தவனோ, “என்ன கிருஷ்ணா நீ சமையல் பண்ணிட்டு இருக்கிற மது எங்கே?” என்றவன் அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தவன், “அந்த பிட்ரூட்டை கொடு நான் கட் பண்ணி தரேன்..” என்று அவனிடமிருந்து கத்தியையும் காயையும் வாங்கி நறுக்கினான்..
அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்துவிட்டு கிருஷ்ணா வேறு வேலைகளைக் கவனிக்க, “என்னடா பதில் சொல்லாமல் இருக்கிற..” என்று அவனை வம்பிற்கு இழுத்தான் வேண்டுமென்றே
“அவதானே சோபாவை பாரு உனக்கே புரியும்..” என்றதும் திரும்பிப் பார்த்த ராகவ் கொஞ்சம் அதிர்ந்தவண்ணம், “என்னடா என்னோட கண்ணுக்கோளாறு ஆகிருச்சா?” என்று கண்ணைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தான்.
ஜானுவைக் கையில் வைத்தபடியே சோபாவில் சாய்ந்தபடியே தூங்கிய மதுவைப் பார்த்தவன், “என்ன கிருஷ்ணா இவங்க இருவரும் ராசியாகிட்டாங்க போல..” என்று நக்கலாகக் கேட்டவனை முறைத்தான் கிருஷ்ணா.
அதற்குள் ராகவின் குரல்கேட்டு கண்விழித்த மது டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும், ‘வா ராகவ்..’ என்றாள் இதழசைவில்.
“இன்னைக்கு கையை சுடுதண்ணீரில் வைத்து இந்த சிடுமூஞ்சி சித்தப்பன் கிட்ட நல்ல வாங்கிக் கட்டிக்கிட்டியா?” என்று அவன் சிரிக்காமல் கேட்க கிருஷ்ணாவைப் பார்த்தவள் வேகமாக மேலும் கீழும் தலையசைத்தாள்..
“நீ அவனிடம் திட்டு வாங்காத நாளே இருக்காதா..” அவள் மறுப்பாக தலையசைக்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
கிருஷ்ணாவைப் பற்றிய முழு விவரமும் ராகவிற்கு அத்துபடி என்று சொல்லலாம். அவன் எந்த நேரம் எப்படி நடந்து கொள்வான் எப்பொழுது கோபபடுவான் என்ற அனைத்தும் அவனுக்கு அத்துபடி.
அவள் தலையசைப்பதைப் பார்த்து “நீ செய்வது எல்லாத்தையும் செஞ்சிட்டு தலையை வேற ஆட்டிவைக்கிறீயா?” என்று கையிருந்த உருளைக்கிழங்கை அவளை நோக்கி வீசிய கிருஷ்ணாவின் குறிதப்பாமல் மதுவின் தலையில் நத்தேன்று விழுந்தது.
‘ஆஆ’ என்று தலையை அழுந்த தேய்த்துக்கொண்டே, ‘ஏண்டா என்மேல் உருளைக்கிழங்கைத் தூக்கி வீசற..’ அவள் கோபமாகக் கேட்க அவன் பதில் சொல்லவில்லை.
“சரி விடு கிருஷ்ணா..” என்று ராகவ் அவனை சமாதானம் செய்ய நினைத்து இருவருக்கும் இடையே புகுந்தான்
“உனக்கு தெரியாது ராகவ் அவளுக்கு முதல் எதிரி நான்தான்னு இவளோட அண்ணா இணைச்சிட்டு இருக்கான். இங்க அவனோட அருமை தங்கச்சிக்கு ஆக்கிகொட்டுவது இந்த கிருஷ்ணாதான்னு அவனுக்கு எப்படி தெரியும்..” என்று அவன் விஷ்ணுவை வம்பிற்கு இழுக்க மதுவின் முகம் மாறியது.
‘ராகவ் என்னோட அண்ணாவை வம்பிற்கு இழுக்க வேண்டான்னு சொல்லி வை..’ அவள் கிளியை சோபாவில் படுக்கவைத்துவிட்டு கிருஷ்ணாவை நோக்கிவரவே, ‘இதற்கு மேல நான் இங்கிருந்த பெரிய புயலே வரும்..’ என்று நினைத்த ராகவ் அங்கிருந்து செல்ல எழுந்தான்.
“நீங்க இருவரும் உங்களோட வேலையைப் பாருங்க.. நான் போயிட்டு வர்றேன்” என்று சொல்ல கிருஷ்ணாவின் செல்போன் சிணுங்கியது. அதன் திரையைப் பார்த்தவுடன் ‘உஸ்ஸ்ஸ்..’ என்று இருவரையும் சைகையினால் அடக்கிய கிருஷ்ணா போனை எடுத்தான்.
அவனின் அருகில் நின்றிருந்த மது, ‘யாரு போனில்..’ ராகவிடம் அவள் கேட்க, ‘எனக்கு தெரியல..’ என்றான் மெல்லிய குரலில்.
“ஹலோ தாரு என்ன மேடம் இந்நேரத்திற்கு போன் பண்ணியிருக்கீங்க..?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டதும் மறுப்பக்கம் பேசுவது யாரென்று புரிந்ததும், ‘கிருஷ்ணாவோட தங்கச்சி..’ என்று ராகவிற்கு சைகை செய்தாள் மது.
“அண்ணா அம்மா உன்மேல் செம கோபத்தில் இருக்கு..” என்றாள் தாரிகா மெல்லிய குரலில்.
அவளின் குரலை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று யூகித்த கிருஷ்ணா, “அம்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டதா?” என்று கேட்டான்..
“இல்ல அண்ணா. நீ அண்ணி கூட சண்டைபோட்டு அவங்களை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டதா நினைச்சிட்டு இருக்காங்க. அடுத்தவாரம் நம்ம ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா அதுக்கு உங்களையும் அண்ணியையும் சேர்ந்து வர சொல்லியிருக்காங்க..” நடந்த விஷயத்தை அண்ணனிடம் ஒப்பித்தாள் அவனின் அன்பு தங்கை.
அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மது திடீரென்று ராகவின் கையிலிருந்த கத்தியைப் பறித்து கிருஷ்ணாவின் கழுத்தில் வைத்தாள். அவளிடமிருந்து அப்படியொரு செயலை மற்ற இருவரும் எதிர்பாக்கவில்லை என்பதை அவர்களின் முகமே கட்டிக்கொடுத்தது.
“ஏய் மது என்ன பண்ற.. கழுத்தில் இருந்து கத்தியை எடு..” கோபத்துடன் கூறியவனின் குரல் மறுப்பக்கம் இருந்த தாரிகாவிற்கும் தெளிவாகக் கேட்டது.
‘அண்ணி ஊரிலிருந்து எப்போ வந்தாங்க..’ என்ற சிந்தனையுடன் அவள் மௌனமாகிவிடவே மறுப்பக்கத்தில் பலத்த அமைதி நிலவியது.
“மது இது என்ன விளையாட்டு. கிருஷ்ணாவின் கழுத்திலிருந்து கத்தியை எடு..” ராகவ் மதுவை மிரட்டிட அவள் காதில் காதில் வாங்காமல் கிருஷ்ணாவை நேருக்கு நேர் பார்த்தவளின் விழிகளில் ஒரு விதமான அழுத்தம் குடிகொண்டிருந்தது.
“உனக்கு இப்போ என்ன பிரச்சனை?” அவளின் பார்வையை தாங்கி நின்றபடியே கேட்டான்.
‘உன்னோட தங்கச்சிதானே பேசறா?’ என்று இதழசைவில் கேட்க அவன் மேலும் கீழும் தலையசைத்து ஒப்புகொள்ள, ‘அப்போ நான் சொல்ற மாதிரி சொல்லு..’ என்றாள் மீண்டும் இதழசைவில்.
“மது இதென்ன கெட்டபழக்கம். முதலில் அவனின் கழுத்திலிருந்து கத்தியை எடு. நீ லண்டன் போய் என்ன கத்துகிட்டு வந்தீயே எனக்கு ஒன்னும் புரியல..” அவளிடம் பேச்சு கொடுத்தபடியே அவளின் கையிலிருந்த கத்தியை வாங்க முயற்சி செய்தான் ராகவ்.
அவள் கழுத்தில் கத்தி வைத்திருப்பது அறிந்தும் துளியும் பயமின்றி நின்றிருந்த கிருஷ்ணாவின் பார்வையே சொன்னது அவளின் துணிச்சலைப் பற்றி. அவன் நினைத்தால் அடுத்த நிமிடமே அவளின் கையிலிருந்து கத்தியை வாங்கிவிட அவனால் முடியும்.
ஆனால் அவன் அமைதியாக இருப்பது ராகவிற்கு வியப்பாக இருந்தது. அது மட்டுமின்றி அவனைக் கண்டாலே பயப்படும் மது தன்னுடைய கையிலிருக்கும் கத்தியை சிறிதும் நடுக்கம் இல்லாமல் பிடித்திருப்பது அவனுக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது.
இருவரின் இடையே ஒரு அங்குலம் இடைவெளி மட்டுமே இருக்கு. கிருஷ்ணாவின் கழுத்தில் இருக்கும் கத்தி ஒரு செகண்ட் கவனம் சிதறினாலும் அவனின் கழுத்தை பதம் பார்க்குமேன்று அவளும் உணர்ந்திருந்தாள்
“அண்ணா.. அண்ணா..” என்று தாரிகாவின் குரல் மூவரையும் நடப்பிற்கு அழைத்துவந்தது.
“ஒரு நிமிஷம் தாரிகா..” என்ற கிருஷ்ணா மதுவை நேருக்கு நேர் பார்க்க, ‘நாங்க ஊருக்கு வரோம் என்று சொல்லு..’ என்றாள் அவள் இதழசைவில்.
“நீ அம்மாகிட்ட நாங்க இருவரும் ஊருக்கு வரோம் என்று சொல்லுடா..” என்று தங்கையிடம் கூறியவன் மதுவை முறைக்கவும் தவறவில்லை.
“ம்ம் சரிண்ணா. நீ அண்ணிகூட சண்டை போடாமல் இரு.. சீக்கிரம் ஊருக்கு வா அண்ணா..” என்ற தாரிகா சந்தோசமாக போனை வைக்க அவளுடைய காரியம் முடிந்ததும் அவனின் கழுத்திலிருந்து கத்தியை எடுத்தாள்.
‘நான் ஊருக்கு வா என்று சொன்னா நீ வரமாட்டேன்னு சொல்வ. அதன் இப்படி கத்தி வெச்சு மிரட்ட வேண்டியிருக்கு. எனக்கு குரல் மட்டும் இருந்தா நானே உன்னிடமிருந்து போனை வாங்கி பேசிருப்பேன். ஸாரி கிருஷ்ணா..’ என்று கத்தியின் முனையை ஊதிவிட்டு கெத்தாக பதில் கொடுத்தவளை பார்த்து திகைத்து நின்றான் ராகவ்
அனகேமாக கிருஷ்ணாவிற்கு கோபம் வருமே என்று அவனைத் திரும்பிப் பார்த்த ராகவ் முற்றிலும் ஏமாந்து போனான். அங்கே தன்னை மறந்து சிரித்தவன், “நீயெல்லாம் பொண்ணே இல்ல.. கொல்லிவாய் பிசாசு..” அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
“ஆகமொத்தம் உங்களுக்கு இடையே பஞ்சாயத்து பண்ண வந்த நான்தான் படிச்ச முட்டாளா?” என்று புலம்பியவண்ணம் அங்கிருந்து சென்றான் ராகவ்.
அடுத்து வந்த இரண்டு நாளுமே தூங்காமல் ஜானுவைக் கவனித்துக் கொண்ட மது இரவுகளில் கொஞ்சம் தூக்கத்தில் அசைந்தால் ஜானுவின் தூக்கம் முற்றிலும் கலைந்துவிட்டது. அவளை தவிர மற்ற யாரிடமும் வர மறுத்தது கிளி.
மூன்று நாள் சென்று மறைவதற்குள் மதுவின் நிலையை கண்டு கிருஷ்ணாதான் அதிகம் தவித்தான். ஆனால் மூன்றே நாளில் கிளியை பழைய நிலைக்கு கொண்டுவந்தவள் கிளியுடன் சேர்ந்து போடும் ஆட்டத்தில் வீடே அதிர்ந்தது என்று சொல்லலாம்.
இப்போ ஜானு கிருஷ்ணாவின் செல்லம் இல்ல. அவள் மதுவின் செல்லம் என்று சொல்லும் அளவிற்கு இருவரும் கூட்டணி அமைத்து கிருஷ்ணாவை வாரினார்கள்.
மறுவாரம் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் மதுவை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் கிளம்பினான் கிருஷ்ணா. இருவரும் சென்று சேர்ந்த இடத்தைப் பார்த்தும் மதுவின் நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது.