அத்தியாயம் – 18
மது ஊருக்குச் செல்ல சம்மதம் சொன்னதே அவரின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஒரு தாயாக மகளைத் தனியே அனுப்புவது அவரின் மனதில் தயக்கம் இருந்த போதும் அவளை மதுரை அனுப்புவதில் குறியாக இருந்தார் நிர்மலா.
அவர் மகளுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்ல காரணம் இல்லாமல் தாய் பேசுவதில்லை என்று நன்றாக உணர்ந்திருந்த மதுமதி அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டாள்.
அவர் மகளுக்கு அறிவுரை சொல்வதை அவள் இயல்பாக நிமிர்ந்து பார்க்க, “நீ போவது என்னோட தோழி மகன் கல்யாணத்திற்கு மது. அப்போ இந்த அறிவுரைகள் எல்லாம் முக்கியம்தான்..” என்றவர் மகளின் கூந்தலை வருடிவிட அவரின் தோள் சாய்ந்தாள்.
இத்தனை ஆண்டுகள் இல்லாத அறிவுரை இப்போது எதற்கு என்று அவளின் மனம் கேட்ட போதும் அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இருவரும் ஆட்டோவில் சென்னை பஸ் நிலையம் வந்து சேர்ந்தனர்.
அவர்கள் இருவரும் பஸ் ஸ்டாண்ட் உள்ளே நுழைய, “மது” என்ற அழைப்புடன் அவளின் அருகில் வந்தவனை கண்டவர், “வாப்பா ராகவ்” என்றார் புன்னகை முகமாகவே.
மது அவனைப் பார்த்தும் புன்னகைக்க, “என்ன மேடம் மதுரை போகிற மாதிரி தெரியுது” அவன் வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுக்க, ‘நீ என்னிடம் அடி வாங்காமல் வீடு போகமாட்ட போல’ என்றவளின் இதழசைவை புரிந்து கொண்டான்.
“உங்கிட்ட அடிவாங்கத்தான் வந்தேனா? ஆனாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்திதான் மகளே” என்றான் புன்னகையுடன்.
“அவள் பாவம்டா ராகவ் ” என்று மகளுக்கு பரிந்துகொண்டு வந்தவரைப் பார்த்து, “நீங்க அவளை மட்டும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் பேசி பேசியேதான் மேடம் மௌன குருவாகவே மாறிட்டா” என்று வாயைக் கொடுத்து அவளிடம் நான்கு அடிகளை பரிசாக வாங்கிகொண்டான்.
“ஆன்ட்டி பாருங்க என்னை அடிக்கிறா” அவன் அவளைப் போட்டுகொடுக்க, “உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண நான் வரல, கடைசியில் என் தலைதான் உருளும்” என்றவர் நேரம்பார்த்து நழுவிவிட இருவரும் ஒருவரையொருவர் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.
‘இப்போ சொன்னீங்களே அதையே கண்டினியூ பண்ணுங்க. இவனுக்கும், எனக்கும் இடையே நீங்க வராதீங்க’ என்றவள் இதழசைக்க, ‘அடிப்பாவி அதுக்குள் கட்சி மாறிட்ட’ என்று மகளின் தலையில் நங்கென்று கொட்டினார்.
அவன் அதைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்க, “நீ ஊருக்குப் போயிட்டு திரும்ப வருவதற்குள் நம்ம ராகவ், காதல் படத்தில் வரும் பரத் ரேஞ்சிற்கு மாறாமல் இருந்தால் சரிதான்” என்றதும் அந்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்து அவளும் சிரித்தாள்.
அவளின் தலையில் தட்டிய ராகவ், “அதற்குள் என்னை கற்பனை பண்ணி பார்த்து விட்டாயா?” என்றதும் அவள் குறும்புடன் கண்ணடிக்க, “நீ எனக்கு தோழியாக கிடைக்க நான் போன ஜென்மத்தில் நிறைய பாவம் பண்ணிருப்பேன் போல” அவன் சிரிக்காமல் சொல்ல அவளோ அவனை முறைத்தாள்.
இன்னும் கொஞ்சநேரம் சென்றால் இருவரும் சண்டைபோட தொடங்கிவிடுவார் என்று உணர்ந்து, “அவளுக்கு பஸ்க்கு நேரமாகுது ராகவ்” அவனுக்கு நினைவுபடுத்த அதுவரை இருந்த மனநிலை மாறிவிட அவன் அருகே நின்ற மதுவைப் பார்த்தான்.
“ஆன்ட்டி ஒரு நிமிஷம் நான் மதுவிடம் கொஞ்சம் பேசணும்” என்றவன் அவளின் கையைப்பிடித்து தனியாக இழுத்துச் சென்றவனை அவள் கேள்வியாக நோக்கினாள்.
“அவங்க ஃப்ரெண்ட் மகனோட கல்யாணம்ன்னு ஆன்ட்டி சொன்னாங்க” அவனை புரியாத பார்வை பார்த்தபடி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி நின்றாள்.
“அவங்களுக்காக நீ போகின்ற உன் முன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக்கொள் மது. அங்கே உன்னை யார் என்ன சொன்னாலும் பெருசாக எடுத்துக்காதே” என்றவனின் குரலில் அவளின் மீதான அக்கறைதான் வெளிப்பட்டது.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்ததும், ‘அவங்க மகன் திருமணம் நல்லப்படியாக நடக்கணும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் மனசில் இருக்கு ராகவ். ஆனால் என்னால அங்கிருக்கும் யாருக்கும் எந்த இடையூரும் வராது’ என்றவள் உறுதியுடன்.
‘இந்த பயத்திற்கு அவசியமே இல்லடா. நான் இந்த வாரம் கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததும் லண்டன் போக போறேன்’ என்றவள் புன்னகையுடன் பேசினாள்
“ஆன்ட்டி சொன்ன மாதிரி அவங்க எல்லோரும் நல்லவங்கதான்” என்றதும் அவளோ, ‘அவங்களைப் பற்றி எதற்கு நீ இப்போ பேசற..’ புரியாமல் கேட்டாள்.
அவளால் தான் அங்கே பிரச்சனை வரும் என்றும், அவளால்தான் அவனின் திருமணம் நிற்கும் என்றும் அவளுக்கு இந்த நொடி வரை தெரியாது. காதல் இவர்களின் நடுவே கண்ணாமூச்சி விளையாட நினைத்தது.
அவளின் உறுதி கண்ட ராகவ் புன்னகைக்க, “உன்னை பார்த்து யாராவது அனுதாபப்பட்டால்..” என்றவன் அவளைக் கேள்வியாக நோக்கிட,
‘யாரோட அனுதாபத்திற்கும் நான் அடிபணிய மாட்டேன் ராகவ். நான் நானாக இருக்க மட்டும் இருக்கிறேன். மற்றவர் பார்த்து அனுதாபப்படும் அளவிற்கு என்னிடம் குறை ஒன்றும் இல்ல. அவங்க அனுதாபத்தை தாங்கி நிற்க நான் ஒன்றும் கோழை இல்ல’ என்றவளின் முகம் செந்தணலாக மாறியிருந்தது..
அவளின் கோபம் எல்லை கடப்பதை உணர்ந்தவனோ, “ஓகே ஓகே எனக்கு உன்னை புரியுது அதற்காக இவ்வளவு கோபப்படாதே கொஞ்சம் குறைச்சுக்கோ” என்று தன்மையாக பேசி அவளை இயல்புநிலைக்கு கொண்டு வந்தான்.
அவளிடம் பேசியபடியே வர, “நீ எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டாயா?” என்று கேட்க அவனும், “ம்ம் சொல்லிட்டேன் ஆன்ட்டி” என்றான்.
அவள் இருவரையும் முறைத்துவிட்டு, ‘ஒரு விஷயத்தை இருவரும் எத்தனை முறைதான் மாற்றி மாற்றி சொல்வீங்க..’ என்று சலித்துக்கொண்டாள்.
“எங்களுக்கு திருப்தியாகும் வரை சொல்வோம்..” என்றான் ராகவ் குறுஞ்சிரிப்புடன்.
அவளின் இதழசைவை அவன் சரியாக புரிந்து பதிலளிக்க, ‘ஆனாலும் நீ இவ்வளவு அறிவாளியாக இருக்க கூடாது’ என்றவள் இதழசைத்தாள். வீட்டில் இருப்பவர்களிடம் அவள் சைகையில் பேசுவது கிடையாது. அவளின் இதழசைவை வைத்தே அவளுக்கு பதில் கொடுத்து விடுவார்கள்.
அதற்குள் அறிவிப்பு வர, ‘அம்மா நான் கிளம்பறேன். அப்பாவைப் பார்த்துகோங்க.’ என்றவள் ராகவ்வின் பக்கம் திரும்பி, ‘அம்மா, அப்பா இருவரையும் பார்த்துக்கோ..’ என்றதும்,
“சரி மது. நீ பார்த்து பத்திரமாக ஊருக்குப் போ. அங்கே போனதும் எனக்கு மறக்காமல் மெசேஜ் பண்ணு..” என்றதும் சரியென தலையசைத்த மது அவர்களிடமிருந்து விடைபெற்று மதுரை கிளம்பினாள்.
அன்று காலை பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது.
அந்த வீட்டில் இருப்பவர்கள் வழக்கம் போல தங்களின் வேலையைத் தொடர்ந்தனர். காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த மகனைப் பார்த்த ஆறுமுகம், “என்ன கிருஷ்ணா வெளியே கிளம்பிட்ட போல..” என்று சாதாரணமாகக் கேட்டார்.
“ம்ம் ஆமாம்ப்பா..” என்றவனும் பொறுமையை இழுத்து பிடித்து அவருக்கு பதில் கொடுத்தவனின் முன்னே பத்திரிக்கையை நீட்டினார்.
அவன் கேள்வியாக புருவம் உயர்த்த, “உனக்கு என்ன டிசைன் பிடிக்குமோ அதை செலக்ட் பண்ணு கிருஷ்ணா..” என்றார் அவர் புன்னகை முகம் மாறாமல்..
அவரை நேராக ஒரு பார்வைப் பார்த்தவன், “எனக்கு பொண்ணு பிடிச்சிருக்கான்னு கேட்காமல் உறுதி பண்ணிட்டிங்க. இப்போ இந்த டிசைன் மட்டும் நான் செலக்ட் பண்ணணுமா? அது எனக்கு தேவையில்ல..” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கிச் சென்றான்.
ஆறுமுகம் அவனின் பதிலில் அதிர்ந்துபோய் நின்றவரின் மனமோ, ‘இவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா?’ என்ற சிந்தனையுடன் சோபாவில் அமரவே, அதேநேரம் வாசலில் நின்று மகனிடம் சண்டைப் போட்டுகொண்டிருந்தார் தாமரை.
“டேய் கண்ணா என்னோட தோழி சொல்வேன் இல்ல அவளோட மகள் தனியாக மதுரை வந்திருக்கிறா, நீ வரும்போது அவளைக் கொஞ்சம் கூட்டிட்டு வந்துவிடு கண்ணா” என்று சொல்ல, “அம்மா உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” என்று எரிந்து விழுந்தான் கிருஷ்ணா.
‘எல்லாம் அவளால் வருவது? மனுஷனை கல்யாணம் என்ற பெயரில் உயிரை வாங்கறாங்க..’ என்ற சிந்தனையுடன் நின்றிருந்த கிருஷ்ணா தாய் சொன்னதை கவனிக்க மறந்தான்.
அவன் என்ன எரிந்து விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல், “நான் சொன்னது எல்லாம் காதில் வாங்கிட்ட இல்ல. நீ போய் அவளைக் கூட்டிட்டு வா” என்றவர் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டிற்குள் சென்று மறைய கோபத்துடன் காரை எடுத்தான் கிருஷ்ணா..
சாலையின் இருபுறமும் வளர்ந்து நின்ற தென்னைகீற்று ஏற்படுத்திய சலசலக்கும் சத்தம் காதிற்கு இனிமையான இசையாக அமைத்தது. அவன் சீரான வேகத்தில் காரில் செல்ல, அவளின் நினைவுகளோடு அவன் கலக்கும் நேரத்தில் அவனின் செல்போன் சிணுங்கியது.
அவளின் அழைப்பைக் கண்டவனின் புருவங்கள் கேள்வியாக சுருங்கிட, ‘என்ன விசயமாக இருக்கும்?’ என்ற சிந்தனையுடன் போனை எடுத்தான்.
“ஹலோ ருத்ரா..” என்றதும், “…………..” மறுபக்கம் மௌனம் நிலவியது.
அவன் போனைக் கட்பண்ண நினைக்க, “நான் திருமங்கலம் வருகிறேன்.. நீங்க வரீங்களா நம்ம நேரில் சந்திக்கலாம்..” என்றவள் ஆர்வத்துடன் அவளே முடிவெடுத்துவிட்டு சொல்ல அவனின் புருவங்கள் முடிச்சிட்டது.
இப்பொழுது இருக்கும் மனநிலையில் அவளை சந்திப்பதை தவிர்ப்பதே சரியென்று முடிவெடுத்த கிருஷ்ணா, “நான் சென்னை போயிட்டு இருக்கேன் ருத்ரா. ஸாரி இப்போ மீட் பண்ண முடியாது.. நான் ஊரிலிருந்து வந்ததும் மீட் பண்றேன்..” அவளின் பதிலிற்கு காத்திருக்காமல் போனை வைத்தான்.
‘என்ன இவரு இப்படி பட்டுன்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டாரு? என்னைவிட அவருக்கு என்ன முக்கியமான வேலையோ?’ எரிச்சலுடன் நினைத்தவண்ணம் அவள் கையில் போனை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கவே, “என்னடி சொன்னார் மாப்பிள்ளை..” என்று ருத்ராவின் தாயார் சம்பூரணம் கேட்க,
“ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்லிட்டாரு.. ஆனா இதில் யாரு கறி, யாரு சுரக்காய்ன்னுதான் தெரியல..” என்று சோர்வுடன் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
பிறகு, ‘சரி நாம் போய் நமக்கு வேண்டிய சில திங்க்ஸ் வாங்கிட்டு வரலாம்..’ என்ற சிந்தனையுடன் வெளியே கிளம்பினாள் ருத்ரா.
அவளுக்கு ஒருத்தரை பிடித்துவிட்டால் அவர்களின் மீது ரொம்பவே பொசசிவ்வாக இருப்பாள் ருத்ரா. அவரகளை தன்னோட கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்ள நினைப்பாள்.
அவன் அப்படியே அவளுக்கு எதிர் துருவம். யாரும் தன்னை கட்டுக்குள் வைக்க நினைக்க கூடாது என்ற கொள்கை உடையவன். அவனின் முடிவுகளை அவனே எடுப்பான் யாருடைய சொல்லிற்கும் கட்டுப்பட மாட்டான்.
மதுரை வந்ததும் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு அவன் மணியைக் கணக்கிட்டு பார்த்தான். அவள் வரும் நேரத்தைக் கணக்கிட்டு காரிலேயே மதுரை பஸ் நிலையத்தின் உள்ளே நுழைந்தான்.
“மதுரை..” என்ற சத்தம்கேட்டு கண்விழித்த மது, ‘அதுக்குள்ள வந்துவிட்டதா?’ என்ற சிந்தனையுடன் பஸில் இருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். பஸ் நிலையம் என்ற பெயர்தானே தவிர அங்கே பஸ் அதிகமாக இல்லை.
‘உன்னை அழைத்து செல்ல தாமரை வீட்டிலிருந்து யாராவது வருவாங்க என்று சொன்னாங்க. இங்கே யாரையும் காணோம்..’ என்றவளின் பார்வை யாரையோ தேடிட அவனின் பார்வை அவளை தழுவியது.
ப்ளூ கலர் ஜீன்ஸ், மெரூன் கலர் டாப் அணிந்து தன்னுடைய நீளமான கூந்தலை ஒரே ஒரு கிளிப்பில் அடக்கியிருந்தவளின் விழிகளில் இருந்த தேடலும், முகத்திலிருந்த மெல்லிய பதட்டமும் கண்டவனின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..
‘மது இவ எப்படி இங்க? ஆமா யாரைத் தேடிட்டு இருக்கிற..’ என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவனுக்கு அந்த விஷயம் தெளிவாக புரிந்திட, “ஒரு வேளை அம்மா சொன்ன பொண்ணு இவள்தானோ?’ தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
அவள் வலது கையில் கட்டியிருந்த வாட்சில் அடிக்கடி டைம் பார்த்தவளின் அருகில் சென்றவன், “என்ன மது போலாமா?” என்று இயல்பாகக் கேட்க அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
அவளை இடிக்கும் அளவிற்கு நெருங்கி நிற்க, ‘ஐயோ’ என்று திடுக்கிட்டு நிமிர்ந்தவளோ எதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும், ‘கிருஷ்ணா..’ என்றவளின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.
அவளின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்த கிருஷ்ணா விழிகள் அவளிடம் எதையோ யாசிக்க அவளோ மொழி தெரியாத மழலை போலவே நின்றிருந்தாள் மதுமதி..
அவளின் விழிகள் இரண்டும் படபடக்க அவளின் முகத்தை வெகு அருகில் பார்த்த அவனின் இதயமோ எகிறி குதிக்க, ‘இவனோட பார்வை என்னிடம் ஏதோ சொல்லுது அதோட அர்த்தம் என்ன?’ பயத்துடன் அவனின் மீது பார்வையைப் படரவிட்டாள் மது.
அவளை இமைக்காமல் பார்த்த கிருஷ்ணா, “இன்னும் என்ன நின்னுட்டு இருக்கிற வா போலாம்..” என்றழைக்க, ‘நீங்க தாமரை ஆன்ட்டியின் மகனா?’ என்று சந்தேகமாக இழுத்தாள்.
“ம்ம் அம்மாதான் உன்னைச் சீக்கிரமாக கூட்டிட்டு வர சொன்னாங்க..” அவள் அதிர்ச்சியில் சிலையானது சில நொடிகள்தான். அதற்குள் தன்னை மீட்டுக்கொண்டு நிமிர்ந்த மதுமதி அவனின் முகத்தை ஆழ்ந்து கவனிக்க அவனோ குறும்புடன் கண்ணடித்தான்.
அலையலையான கேசம், அழுத்தமான புருவம், குறும்பு மின்னும் விழிகள், நீளமாக மூக்கு, அதற்கு கீழே அமைந்திருந்த அழகான மீசை, திரண்ட தோள்களுடன் நின்றவனை பார்வையால் அளந்தாள் பெண்ணவள்.
ஆறடி உயரத்திற்கு கொஞ்சம் குறைவான உயரத்துடன் மாநிறத்தில் மெரூன் கலர் சர்ட், சாண்டில் கலர் பேண்டில் தன் முன்னே நின்றவனை நொடியில் அடையாளம் கண்டு கொண்டாள் மதுமதி..
‘கிருஷ்ணா நீங்கதான் கல்யாண மாப்பிள்ளைன்னு நான் நினைக்கல’ என்று ஆச்சரியத்தில் விழிகள் விரிய நின்றவளை பார்த்ததும், ‘செல்லம் அப்படி பார்க்காதடி என்னால என்னை கன்ரோல் பண்ண முடியல..’ என்றவனின் உள்ளம் அவளிடம் பறிபோனது.
“பரவால்ல இப்போ கண்டுபிடிச்சிட்ட இல்ல வா போலாம்..” என்றவன் மீண்டும் கண்சிமிட்டி சிரிக்க, ‘ம்ம்..’ என்றவள் இதழ்களில் புன்னகையுடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.
இரண்டு விழிகள் தங்களைப் பின் தொடர்வதை அறியாமல், “மது காரில் ஏறு..” என்றான் கிருஷ்ணா.
அவள் காரில் ஏறாமல் நிற்பது கண்டு அவன் கேள்வியாக புருவம் உயர்த்திட, ‘நான் பஸ்ஸில் ஊருக்கு வரேனே..’ என்றவள் தயங்கி நின்று இதழசைக்க, “அதெல்லாம் வேண்டாம் நீ வண்டியில் ஏறு..” என்று மிரட்டவும் வேறு வழியில்லாமல் காரில் ஏறினாள்
அவன் முன்பக்கம் ஏறி காரை எடுக்க, “ஆமா நீ ஏன் இப்போ பஸ்ஸில் போலாம் என்று சொன்ன..” என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்திட அவளோ செல்லில் இருக்கும் பாடலை ஒலிக்க விட்டாள்.
அவன் கோபத்தில் அவளிடமிருந்து செல்லை பிடுங்கிவிட, ‘நான் பேசினால் உங்களுக்கு புரியாது. அப்புறம் இங்கிருந்து திருமங்கலம் வரை அமைதியாகவே போகணும். அதே பஸில் நிறைய பேர் வருவாங்க. வேடிக்கை பார்ப்பதில் நேரம் போவதே தெரியாது..’ என்றவள் சைகை யுடன் கூறினாள்.
அவன் காரை எடுக்காமல் மெளனமாக இருக்க, ‘என்னாச்சு கிருஷ்ணா..’ என்றவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்த கிருஷ்ணா, “நீ ஊமை இல்ல. நீ பேசுவது எனக்கு நல்லா புரியும்..”என்றவன் தொடர்ந்து,
“உன்னோட இந்த சைகை பாஷை என்னிடம் வேண்டாம் மது..” அவன் கோபத்துடன் சொல்ல அவளோ காரின் கண்ணாடியைத் திறந்துவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க, கிருஷ்ணா காரை எடுத்தான்.
அப்பொழுது தான் அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அவள் வந்ததிலிருந்து இதழை மட்டும் அசைக்க அவன் அவளின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னது நினைவு வர திரும்பி அவனின் முகத்தைப் பார்த்தாள்.
‘இவ என்னை எப்பொழுது தான் புரிந்து கொள்ள போறாளோ?’ என்ற கோபத்துடன் சீரான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவளோ ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
சிறிதுநேரம் சென்ற பின்னர் அவன் திரும்பிப் பார்க்க அவளோ கண்ணாடியில் சாய்ந்தபடியே உறங்கியிருக்க, “நான்தான் தெளிவாக பதில் சொல்றேன் இல்ல. அப்புறம் எதற்கு இந்த சைகை பாஷை?” என்று நினைத்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.
பிறை போன்ற நெற்றி, வில்போன்ற இரு புருவங்கள், மற்றவரை பணிய வைக்க நினைக்கும் பார்வை கொண்ட மீன் விழிகள், நேரான நாசியும், அழகான சிவந்த இதழ்களும், காதோடு கதை பேசும் சின்ன கம்மல், காற்றில் கலைந்த கூந்தல் அவளின் நிலவு முகத்தை மறைக்கும் கார்மேகங்களாக அலைபாய்ந்தது.
சந்தன நிறத்தில் ஐந்தடி உயத்தில் இருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. அவனின் கரங்கள் சீரான வேகத்தில் செலுத்தினாலும் அவனின் கவனம் முழுவதும் அவள் மீதே இருந்தது.
அவன் மீண்டும் கவனத்தை சாலையின் பக்கம் திரும்பிவிட கார் பயணம் அமைதியாக கழிந்தது. அவனிடம் பேசாமல் விழிமூடி உறங்கிய மது, மாலை நேரம் மெல்ல கண்விழித்து பார்க்க கார் திருமங்கலத்தின் உள்ளே நுழைந்திருந்தது.