KKRI – 3

அத்தியாயம் – 3

விஷ்ணு சொன்ன விஷயத்தை யோசிக்க தொடங்கிய மதுவின் முகம் மெல்ல மெல்ல தெளிய தொடங்கியது. அவளின் மனம் முழுவதும் தெளிவடைந்தவுடன் அந்த இடத்தைவிட்டு எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

அதன்பிறகு அடுத்தடுத்த வேலைகளில் அவள் தீவிரமாக ஈடுபடுவதைக் கவனித்த நிர்மலாவின் மனமும் நிம்மதியடைந்தது. இந்தியா செல்வது என்று முடிவெடுத்த பின்னர் அவள் ஒரு நொடிகூட தாமதிக்கவில்லை. அவளின் செயலில் அவ்வளவு வேகம் தென்படுவதை விஷ்ணுவும் கவனித்தான்.

அன்று இரவு அமெரிக்கா எப். எம்.மை இசைக்கவிட்டு சாப்பிட வந்தமர்ந்தவளின் முகம் தெளிந்திருப்பதைக் கண்டு, “மது என்ன முடிவு பண்ணிருக்கிற..” என்று பேச்சைத் தொடங்கினான்

விஷ்ணுவின் முகத்தை நிமிர்ந்து பார்த்த மது, ‘ஒன்றே செய். அதையும் நன்றே செய். அதையும் இன்றே செய் என்று பாரதியார் சொல்லியிருக்கார் அண்ணா..’ என்றவள் குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தாள்.

“அப்பா, அம்மா..” என்றவனின் கேள்விக்குத் தாயின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவள்,

‘என்னோட முடிவில் மாற்றம் இல்லப்பா.. நான் இந்தியா போறேன்.. நீ அம்மா அப்பாவைப் பார்த்துக்கோ.. எங்களுக்குள் எல்லாம் சரியானதும் நானே அவரோட இங்கே வரேன்..’ என்று சொல்ல வந்த விஷயத்தை நொடியில் போட்டு உடைத்தாள்.

சிறுவயதில் இருந்தே மகளிடம் முடிவெடுக்கும் உரிமையைக் கொடுத்த அந்தத் தாயுள்ளம் அவள் எடுக்கும் முடிவுகளில் இன்று வரை தலையிடுவதில்லை. அதேபோல அவள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களைப் பாதிக்கும்பொழுது அதைத் தட்டிகேட்கவும் அவர் மறப்பதில்லை.

அவளின் இந்த முடிவில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தது அந்தத் தாயுள்ளம். அவள் சென்னை செல்கிறேன் என்றதும் சொன்னதும் சந்தோஷத்தில் நிர்மலா தன மகளுக்கு  இரண்டு தோசையை சேர்த்து வைத்தான்.

தாயின் முகத்தைப் புன்னகையுடன் பார்த்தவள், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கள் சமையலறையில் இருந்தாங்க. இருபதாம் நூற்றாண்டில் வரதட்சனை கொடுமை, பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை என்று சொன்னாங்க..’ என்றவள் தொடர்ந்து,

‘இப்போ இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாமே மாறிபோச்சு! அவனோடு சேர்ந்து வாழ்றேன்னு சொன்னாதான் ஒரு தோசை அதிகமா வைக்கிறாங்க. கணவனோடு சேர்ந்து வீட்டிற்கு வறேன்னு சொன்னா தான் நீ என்னோட மகள் என்று பூரிச்சு போறாங்க. இப்படியே பொண்ணுங்க காலம் போகுது..’ என்று புலம்பியபடியே தோசையை சாப்பிட்டாள் மது.

அவள் பேசுவதை இதழசைவில் புரிந்துகொண்டு விஷ்ணு, “மது ஸ்பீச் சூப்பர் சும்மா பிச்சு உதறிட்ட..” வாய்விட்டுச் சிரித்தான்.

“நீ சென்னை போ.. உன்னை அவன் நல்லா கவனிப்பான்..” என்று மகளின் தலையில் செல்லமாகக் கொட்டிய நிர்மலா மகனுக்குப் பரிமாற அவனின் அருகே சென்றார்.

தன்னுடைய கணவனை மரியாதை இல்லாமல் பேசுவதைக் கவனித்தவளின் முகம் மாறுவதை பார்த்த நிர்மலா, “அம்மா தாயே உடனே மலையேறிவிடாதே.. பழக்கதோஷம் மருமகன் என்ற மரியாதை மறந்து பேசிட்டேன் மா.. என்னை மன்னிச்சிரு..” என்று அவர் அவளைக் கையெடுத்து கும்பிட்டார்.

அதில் அவளின் முகம் நார்மலாக மாறிவிட, “உன்னோட தங்கச்சிக்கு வாய்பேச வரலன்னாலும் கொழுப்பு ஜாஸ்தி. அவ பேசாம இருந்தே அடுத்தவங்க உயிரை வாங்கிருவா..” மகளின் அருமை பெருமைகளை எடுத்துவிட்டார் நிர்மலா.

அதைக் காதில் வாங்கினாலும் சாப்பாட்டில் கவனமாக இருந்த விஷ்ணுயின் கையில் மது கரண்டியால் அடிக்க, “உனக்கு இப்போ என்ன?” என்று கேட்டான்.

‘அம்மா எப்படி பேசறாங்க பாருண்ணா..’ என்று சிணுங்கினாள்.

“ஏன்மா அவளை அடிச்சீங்க..” என்று கேட்டு வைக்க, மதுவின் அக்னி பார்வைக்கு ஆளானான் விஷ்ணு..

அவனின் கனல்பார்வை கண்டு, “நான் ஏதாவது தப்பா கேட்டுடேனா..” என்று தாயிடம் ரகசியமாகக் கேட்டவனுக்கு சட்டினி ஊத்திவிட்டு, “சாப்பிடு அவ கிடக்கிற..” என்றார்.

அதற்கும் சேர்த்து மது அவனை முறைக்க, “என்னடா..” என்று பரிதமாகக் கேட்ட மகனைப் பார்க்கவே பாவமாக இருந்தது நிர்மலாவிற்கு..

‘அம்மா என்ன திட்றாங்க..’ என்றாள்

“நீங்க ஏன் அம்மா அவளைத் திட்டுறீங்க..” என்றவன் வழக்கம்போல தனக்கு சப்போர்ட் பண்ணிட,

“அவளுக்கு நீ சப்போர்ட் பண்ற..” என்று மகனின் தலையில் நறுக்கென்றுக் கொட்டிய நிர்மலா, “ஒழுங்கா சாப்பிடு..” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

‘ஹா ஹா ஹா..’ அண்ணனைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் தங்கை.

அவளை முறைத்துவிட்டு தன்னுடைய சாப்பாட்டில் கவனம் செலுத்திய விஷ்ணுவிற்கும் அவளின் முடிவில் விருப்பமே. எந்தவொரு அண்ணனும் தன்னோட தங்கை வாழாமல் இருப்பதைப் பார்த்துச் சந்தோசப்பட முடியாது.

அதற்கு விஷ்ணு ஒன்று விதிவிலக்கு இல்லையே. அதனால் அவனும் தங்கையின் முடிவை மனதார ஏற்றுகொண்டான். அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தனர்.

அவன் கைகழுவும் பொழுதில் அவனின் அருகே சென்றவள், ‘அண்ணா நான் காலையில் ஊருக்குக் கிளம்பறேன்..’ என்று தமையனின் பதிலை எதிர்பார்த்து நின்றாள்.

“உன்னோட எண்ணம் போலவே உன்னோட வாழ்க்கையும் அமையும் மது..” என்று தங்கையின் கூந்தலை வருடியவன், “காலையில் சீக்கிரம் கிளம்பு..” என்று சொல்லிவிட்டு அவனின் அறைக்குச் சென்றான்.

தன்னுடைய அறைக்கு வந்த மது மீண்டும் அமெரிக்கா தமிழ் வானொலியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு, படுக்கையில் படுத்து விழி மூடினாள்.

இரவு நேரத்தில் தேன்மழை கானங்கள் வரிசையில் பாடிகொண்டிருந்த பாடல் அவளின் மனதை தென்றல் போல வருடிச்சென்றது.

என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே..

புதுமை மலரும் இனிமை..

அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை..

சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையைப் பூங்கோதையை..

அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி..

சின்னக் கண்ணன் அழைக்கிறான்..” என்ற பாடலைக் கேட்டபடியே விழிமூடி உறங்கிவிட்டாள் மதுமதி.

இருள் கலைந்து வானில் வெளிச்சம் பரவியது. அதுவரை உலா வந்த முழுநிலவும் தன்னுடைய பணியை முடித்துக்கொண்டு வானத்தைவிட்டு பிரியமனமின்றி விலகிச் செல்லவே, கூட்டிற்குள் அடைப்பட்டிருந்த குருவிகள் இன்னிசை கீதத்தை வாசித்தது. மெல்ல மலையின் முகட்டில் தலைகாட்டினான் சூரியன்.

அந்த அறைக்குள் நுழைந்த இளங்காலைத்தென்றல் அவளின் துயிலை கலைக்க நினைத்து அவளைத் தழுவிச்சென்றது.

“காலைத் தென்றலில் வருடலில்..” என்றவனின் குரல் அலைவரிசையின் காற்றோடு கலந்து வந்தது.

‘அவனோட குரல்..’ என்று பட்டென்று கண்விழித்து படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் மதுமதி.

“விடியலுக்கான கதவுகள் திறக்கும் வேளையில் உங்களோடு இணைந்திருப்பது உங்களின் ஆர். ஜே. பாலா.” என்றவனின் குரலில் அவளுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்தது..

‘காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை கோவிந்தராஜ் தானே ஒலிபரப்பாளர்..’ என்ற சிந்தனையுடன் படுக்கையில் அமர்ந்திருந்தாள்.

திறந்திருந்த ஜன்னலின் வழியாக வந்த சில்லென்ற தென்றல்காற்று அவளின் உடலைத் தழுவிச்சென்றது. அன்று ஏனோ அவன் கண்ணனின் கதைகளில் ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க அவளின் கவனம் அதில் சென்றது.

கண்ணனின் லீலைகளை அறியாத மனமுண்டா? அவனின் குழலோசைக்கு மயங்கதாகக் கோபியரும் உண்டா? காலையில் ஆடுமாடுகளை மேய்த்துவிட்டு வருவதற்காகக் கோபியர்கள் பிருந்தாவனம் நோக்கிக் கிளம்பினர்.

மாலைவரை ஆடுமாடுகளை ஆற்றின் கங்கைகரையின் ஓரமாக மேய்த்துவிட்டு மாலை வீடு செல்லும் நேரம் நெருங்கியது. அப்பொழுது ராதை கண்ணனிடம் புல்லாங்குழலை வாசிக்கச் சொல்ல, அவளின் சொல்லிற்கு கட்டுபட்ட கண்ணனும் குழலை இசைக்க, அந்தப் பிருந்தாவனமே அசைவற்று போனது.

தாங்கள் வீடு செல்ல வேண்டும் என்பதை மறந்த கோபியர்கள் அவனின் இசைக்கு மயங்கி அங்கேயே இருந்துவிட்டனர். இந்த உண்மையை அவர்கள் வீட்டில் சொல்ல அடியும், உதையும் வாங்கியதுதான் மிச்சம்.

அதற்கெல்லாம் காரணம் அந்தக் கண்ணன்தான் என்று கோபியரில் ஒருத்தி சொல்ல, ‘இல்ல அவன் வாசித்த புல்லாங்குழல் தான்..’ என்றாள் மற்றொருத்தி. அவர்களின் கோபம் முழுவதும் புல்லாங்குழல் மீது திரும்பிட  அதைத் திருடி வரச்சொல்லி ராதையை அனுப்பி வைத்தனர்.

அவளோ காலில் இருந்த சலங்கையைக் கண்ணன் விழித்து விடுவான் என்று அதைக் கழற்றி தோழியிடம் கொடுத்துவிட்டு பதுங்கிய பதுங்கி அவனின் அருகில் சென்றவள் அவனின் இடையிலிருந்த குழலை எடுத்துக்கொண்டு மான்போல வேகமேடுத்தாள்.

அவனோ மாயக்கண்ணன். அவனுக்கு ராதையின் மனம் புரியாதா? அவளின் சலங்கை ஒலி கேளாவிட்டாலென்ன அவளின் கைவளையோசை அவளைக் காட்டிகொடுத்துவிட்டது. ராதை வந்து புல்லாங்குழலை திருடுவதை கூட உணராமல் இருப்பானா?

அவளின் பின்னோடு துரத்திச் சென்று அவளின் வலக்கரம் பிடித்து அவளை வளைத்தவன், “எனக்குக் குழல் வேண்டும் என்று கேட்டிருந்தால் நானே தந்திருப்பேனே..” என்றவளின் கேள்விக்கு அவள் மௌனம் சாதித்தாள்.

“இந்தக் குழல் உனக்கு எதற்கு?” என்றவனின் கேள்விக்கு, ‘நானும் குழல் வாசிக்கிறேன்..’ என்றான்.

அவளுக்கு கற்றுத்தருவதாகச் சொல்லிக் குழலை அவளிடமிருந்து வாங்கிய கண்ணன் உதட்டில் வைத்து வாசித்தான். அவனின் குழலோசைக்கு எப்பொழுதும் மயங்குவது போல இன்றும் மனம் மயங்கிட அவனின் தோள் சாய்ந்தாள் ராதை.

‘காதலி சொல்வது பொய் என்று அறிந்தும் அவளை உண்மையாக நேசித்தான் கண்ணன். அதனாலோ என்னவோ அவளுக்கு இசையை கற்றுதருவதாகச் சொல்லி அவளையும் தன்னுடைய குழலோசைக்கு மயங்க வைத்தான்’ என்ற பாலாவின் குரலுக்குத் தன்னை மறந்து மயங்கியது அவளின் மனம்!

“மது ஏர்போர்ட் போக நேரமாகுது பாரு.. சீக்கிரம் எழுந்து கிளம்பு..” என்ற நிர்மலாவின் குரல்கேட்டு கடந்தகாலத்தின் தாக்கத்திலிருந்து கண்விழித்து எழுந்தாள் மது. அவளோடு சேர்ந்து அவளின் மனமும் நடப்பிற்கு திரும்பியது.

ஒரு குரலுக்கு அடிமையான காலத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் பொழுது கூட அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.  ‘பாலா’ என்ற அவனின் குரலில் இவளின் மனம் மயங்கியது நிஜம். அவனை அவள் ஒரு தலையாக விரும்பியது நிஜம். அவனை ஒரு நாளில் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்ததும் நிஜம்.

ஆனால் அது இப்பொழுது கடந்த காலமாகிவிட நிகழ்காலத்தை சரிசெய்து எதிர்கால கனவுகளை நெஞ்சோடு சுமந்தவண்ணம் படுக்கையைவிட்டு எழுந்தாள். அடுத்த சில மணி நேரத்தில் ஏர்போட்டிற்கு சென்றவளை வழியனுப்ப வந்திருந்தனர் விஷ்ணுவும், நிர்மலாவும்!

அதே நேரத்தில் இந்தியா வந்து சேர்ந்த கண்ணன் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனைக் கண்ட மறுநிமிடமே, “கிருஷ்ணா வந்துட்டான்..” என்று சிறகைவிரித்து வீட்டிற்குள் மூன்று ரவுண்டு அடித்த  ஜானு இறுதியாக அவனின் தோளில் அமர்ந்து இளைப்பாறினாள்.

அவளை ஒரு கையில் வருடிவிட்ட கிருஷ்ணா, “ஜானு.. இரண்டு நாளும் நான் இல்லாமல் எப்படிடா இருந்த..” என்றவன் வருத்ததுடன் கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்தவன் ஜானுவின் முன்னாடி கை நீட்டினான்.

அது உடனே அவனின் கைகளில் தாவி அமர்ந்துகொண்டு அவனையே உற்றுபார்த்தது. “ராதா.. ராதா..” என்ற கிளியின் சிறகை மெல்ல வருடிய கிருஷ்ணாவின் மனம் அலைபாய்ந்திட, “மது வரமாட்ட ஜானு..” மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறினான்

“ஏன்.. ஏன்..” என்று அது விடாமல் அவனிடம் கேள்வி கேட்க மெளனமாக இருந்தான். ஜானுவின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

அவள் ஏன் தன்னைவிட்டு பிரிந்து சென்றால் தன்னால் முடிந்தவரை யோசித்தான். அவனின் கோபம் அது அவளுக்குப் பிடிக்காது என்று உணர்ந்து தன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.

ஆனால் அவளின் பெற்றோர் சொன்ன பதில் அந்த ஆறடி மனிதனையே அசைத்துப் பார்த்தது. அவள் தன்னிடமிருந்து விலகியதற்கான காரணமே புரியாமல் குழம்பிய கிருஷ்ணாவின் இந்த அமைதி அவனுக்கு மட்டும் புதிதல்ல. அவனின் ஜானுவிற்கும் புதிதுதான்.

அவன் ஜானுவைக் கீழே இறக்கிவிட்டு தலையை இரண்டு கைகளால் தாங்கி, “என்னோட கோபம்தான் என்னோட முதல் எதிரி என்று அடிக்கடி ராகவ் சொல்வான். ஆன அது இன்று உண்மையாகுன்னு நான் நினைக்கல ஜானு..” என்றவனின் குரலில் வருத்தமே மிஞ்சியது..

“நான் அவளை வீட்டைவிட்டு போகச் சொன்னேன்னு சொல்லியிருக்கா ஜானு. எனக்கு வந்த கோபத்தில் அவளை அடிச்சிட்டேன்..” என்றவன் தலைகுனிந்தவண்ணம் ஜானுவின் முன்னாடி கைநீட்டினான்.

அவனின் கையைக் கடித்து வைக்காமல் விலகி நின்ற ஜானு, “நீ அடிக்கவா போன.. நீ அடிக்கவா போன..” என்று அவனிடம் கேட்டது. ஜானுவிற்கு கிருஷ்ணாவின் மீதிருந்த பாசத்தைவிட மதுவின் மீதிருந்த பாசம் அதிகம்!

மதுவிற்கு ஜானுவைக் கண்டாலே பிடிக்காது. இருவரும் இரு வேறு துருவங்கள். இருவருக்கும் இடையே ஆயிரம் பிரச்சனை வந்தாலும் கடைசியில் இந்த ஜானு அவளின் பக்கம் தான் பேசுவாள்.

இறைவனின் மனிதனைவிட அழகாக அற்புதமான படைப்புகளின் வரிசையில் பறவைகளும், விலங்குகளும் இருக்கிறது. அதுக்கு பழிவாங்கத் தெரியாது. தன்னிடம் வெறுப்பை காட்டுபவர்களுக்கு கூட, சிலநேரங்களில் நன்மை செய்ய நினைக்கும். நன்றி மறவாத நல்ல உள்ளங்கள்!

அவன் இல்லையெனத் தலையசைக்க, “அவ பாவம்..” என்றது அவனின் ஜானு.

கடைசியில் அவனின் ஜானு கூட அவளுக்கு ஆதரவாகப் பேச, “ஏன் ஜானு நான் பாவமில்ல. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்காலமே..” என்று அவன் மீண்டும் வருத்ததுடன் கேட்டான்.

ஜானு அமைதியாகிவிட அவளுக்கும் சேர்த்து இவனே யோசித்தான். மதுமதி அவனைவிட்டு பிரிந்து சென்று ஆறுமாதம் கடந்தபின்னரும் கூட அவளின் நினைவுகள் துளியும் நிறம் மாறாமல், அவனின் இதயக்கூட்டில் பொக்கிஷமாக இருந்தது.

கிருஷ்ணாவின் கோபம் தான் அவனின் முதல் எதிரி. அதனால் தான் தன்னுடைய சொந்த குடும்பத்தையே பிரிந்து வந்து இங்கே தனியாக இருக்கிறான்.

அதன்பிறகு ஜானுவிற்கு ஒரு தக்காளியைக் கொடுத்துவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து சமைக்க தொடங்கினான். அந்த வீடே மயான அமைதி நிலவியது.

அவனின் கைகள் அவனின் போக்கில் வேலை செய்தாலும் அவனின் மனம் அவளின் மீதே இருந்தது. அவளை நினைத்தும் அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவனோடு எப்பொழுதும் ஏட்டிக்குப்போட்டியாகச் சண்டைபோடும் மதுவின் முகமே அவனின் மனதில் வந்து சென்றது. அவளின் நினைவுகளோடு உறவாடியபடியே அவன் சமையலை முடித்தான்.

“ஜானு சீக்கிரம் சாப்பிட்டுட்டு தூங்கு..” என்றவன் மீன்தொட்டியிடம் சென்றவன், “ரகு, சிந்து குட் நைட்..” என்றான். ஜானு அவளோடு இடத்திற்கு சென்றுவிட அவனும் தன்னறைக்குள் சென்று மறைந்தான்.