KKRI – 5

KKRI – 5

அத்தியாயம் – 5

மேற்கு திசை நோக்கி நகரும் சூரியனை மறைத்துக் கொண்டது கார்கால மேகங்கள். வெள்ளை நிறம் கொண்ட மேகமும் நிறமாறியது. வானில் இருள் போல சூழ்ந்து நின்ற மேகங்கள் மழை வரும் என்று அறிவிப்பது போலவே இருந்தது அந்த மாலைப் பொழுது..

தென்றல் இதமாக வீசி மேகத்தைத் தீண்டிய மறுநொடியே சரசரவென்று மழை பொழிய தொடங்கியது.

தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்க ஜன்னலில் வழியாக நுழைந்த சாரல் அவனை தீண்டியது. திடீரென்று நாசியில் நுழைந்த மண் வாசனையை விழிமூடி ஆழ மூச்செடுத்து நுரையீரலுக்குள் நிரப்பினான் கிருஷ்ணா.

அவனின் உதட்டில் புன்னகை யின் சாயல் படிந்தது. வீட்டிற்கு செல்ல நேரமானதை உணர்ந்து, ‘டைமை கவனிக்காமல் உட்கார்ந்திருக்கேன்..’ என்று புலம்பியபடியே கம்பெனியைவிட்டு வெளியே வந்த கிருஷ்ணாவின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது.

தன்னுடைய மன உணர்வுகளைப் புரிந்ததுக்கொள்ள முடியாமல் கம்பெனியின் பார்க்கிங்கில் நின்றுவிட்டான்.

‘என்ன இன்னைக்கு மனசே ஒரு மாதிரி இருக்கு..’ என்ற சிந்தனையில் அவனிருக்க, வானமோ சிறிதுநேரம் தூறல் போடுவதும் பிறகு நிற்பதுமாகவே இருந்தது..

தங்களின் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மழை பொழிவதை பார்த்தும் கொஞ்சம் தயங்கி நின்றுவிட்டு, “இந்த மழை மனுசனை பயமுறுத்தி ஒரு வழி பண்ண வந்திருக்கு..” என்று தங்களுக்குள் பேசியபடி குடையைப் பிடித்துகொண்டு அவரவர்கள் வீடு நோக்கி கிளம்பினர்.

அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்வது அவனின் கண்களில் விழுந்தாலும் அவனின் கருத்தில் பதியவில்லை.

அவன் மட்டும் நின்றிருப்பதை கவனித்த வாட்ச்மேன், “என்னப்பா வீட்டிற்கு கிளம்பாமல் இங்க நிற்கிற..” என்று விசாரணையில் இறங்கினார்.

தன்னுடைய கவனம் களைந்து நிமிர்ந்த கிருஷ்ணா, “ம்ம் மழை வரும் போல இருக்கு..” என்றான் சிந்தனையுடன்.

“அது வராததுப்பா..” என்ற வாட்ச்மேன் மழை வருகிறதா என்று பார்க்க வானம் தூறல் போட்டது..

“மழை வர ரொம்ப லேட் ஆகும்.. நீ முதலில் வீட்டிற்கு போப்பா..” என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு அவரின் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

அவரின் பேச்சிற்கு பதில் கொடுத்தாலும் அவனின் உள்ளம் என்னவோ வேறு எதையோ தேடி அலைப்பாய்ந்தது. சில்லென்ற காற்று வந்து அவனின் முகத்தில் மோதிட தன்னுடைய சிந்தனையுடன் பைக்கை ஸ்டார்ட் செய்ய மின்னல் வேகத்தில் கிளம்பினான்.

மணி ஆறாக நான்கு நிமிடங்கள் இருக்கும் பொழுது பாதி நனைந்தும் பாதி நனையாமல் வீடு வந்து சேர்ந்தான் கிருஷ்ணா.

அவனின் வீடு திறந்திருப்பதைக் கண்டு, “பிரீத்தி சீக்கிரம் வந்து விட்டாளோ..” அவனின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது.

அவன்  வீட்டிற்குள் நுழைந்ததும் ஹாலில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தும், ‘மது..’ அவனின் கால்கள் நின்ற இடத்தில் வேரூன்றி போய்விட பார்வையை அவள் மீது பதித்தபடியே அசையாமல் நின்றான் கிருஷ்ணா.

தன்னுடைய தோற்றத்தில் சிறிதும் மாற்றாமல் இல்லாமல் சோபாவில் தொகை போல அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தும், ‘என் மது வந்துட்டா..’ என்ற அவனின் உள்ளம் சந்தோசத்தில் துள்ளியது.

அடுத்த நிமிடமே அவள் சொன்ன பொய் அவனின் கண்முன்னே விஸ்பரூபம் எடுத்தது. அவளைப் பார்த்தும் உருகிவிட்ட தன்னுடைய மனத்தைக் கடிந்துகொண்டு, ‘இவ எதுக்கு இப்போ இங்க வந்தா?’ என்று எரிச்சலோடு நிமிர்ந்தான்.

அவனின் மனம் முழுவதும் மிளகாய் அரைத்து பூசியது போல தகதகவென்று எரிந்தது. அவள் மீது வந்த கோபத்தில் அவனின் விழியிரண்டும் சிவந்துவிட்டது.

வீட்டின் வாசலில் நிழலாட கண்ட மது திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, கனலைக் கக்கும் சிவந்த விழியுடன் நின்றிருந்தான் கிருஷ்ணா.

‘என்ன சொல்ல போறானோ..’ என்றவள் உள்ளம் படபடக்க அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

அவளின் பார்வையின் பொருளுணர்ந்து அழுத்தமான காலடி ஓசையுடன் வீட்டிற்குள் நுழைந்தவனின் பார்வை கூண்டிற்குள் அமைதியாக இருந்த ஜானுவின் மீது படிந்தது.

“ஜானு..” என்ற அழைப்புடன் கூண்டை நோக்கிச் சென்றவன்,

“என்ன  மேடம் வீட்டிற்கு யாரோ வந்திருக்காங்க உனக்கு அவங்க முன்ன பின்ன தெரியுமா?” என்று குரலில் நக்கலுடன் கேட்டவன் கூண்டிற்கு கைவிட்டான்.

அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த ஜானு பின்னாடி நகர்ந்திட, “என்ன பண்ணிட்டு இருக்கிற.. ஏன் என்னை பார்த்து பயப்படுற..” என்று அவளிடம் பேசிக் கொடுத்தான் கிருஷ்ணா.

அவனின் வருடலுக்கு மயங்கிய கிளி அமைதியாக இருந்தது. அவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது. அவனைத்தேடி கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த மனைவியைக் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து வைத்தான்.

அவனின் அலட்சியம் அவளை கண்கலங்க வைக்கும் முன்னே சுதாரித்த மது, ‘நான் எதுக்கு அழுகணும்..’ என்று தன்னுடைய எண்ணைத்தை மாற்றிக் கொண்டாள்.

அவளின் பார்வை அனைத்து அவனின் கையிலிருந்த கிளியின் மீதே இருக்க, “ஏய் நீ எதுக்கு இங்க வந்த..” என்று  கோபத்துடன் கேட்டவனின் பார்வையில் அலச்சியம் அதிகமாகவே இருப்பதைக் கண்டாள்.

‘என்ன கேள்வி இது..’ என்றவள் இதழைசைக்கவே அதை புரிந்து கொண்டவன்,

“உன்னோட சொந்தபந்தம் எல்லாமே ஊரில இருக்கிறப்போ என்னோட வீட்டில் உனக்கு என்ன வேலை..” நக்கலாக கேட்டான் கிருஷ்ணா.

‘நீங்கதானே என்னை தேடி வந்தீங்க..’ என்றவள் மறந்து சைகையில் சொல்ல அவளின் கைகளையே பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட்டது.

“உன்ன தேடி வந்தது உண்மை. ஆன நான் உன்ன வீட்டுக்கு வரவே சொல்லலயே..” என்றவன் அழுத்தமாகவே கேட்டவனின் கேள்வியில் இருக்கும் உண்மை உணர்ந்து தலைகுனிந்தாள் மது.

அவன் அவளையே பார்க்க, ‘ஏன் இப்படி பேசறீங்க..’ என்றவள் குற்ற உணர்வுடன் சைகையில் கேட்டாள்.

“வேற எப்படி பேசன்னு சொல்லு. அந்த மாதிரியே பேசறேன்..” என்றவனின் வார்த்தைகள் நிதானமாகவே வந்தாலும் அவள் பதில் பேசவில்லை. அதை தவறாக புரிந்து கொண்டான் கிருஷ்ணா..

“ஐயோ பாவமுன்னு என்னோட வாழ வந்தியா? ஆமா இதுக்கு பேரு என்ன மது? என்மேல் இருக்கும் காதலா? இல்ல அனுதாபமா?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

‘என்னைப் பார்த்த உனக்கு எப்படி தெரியுது..’ என்றவள் சைகையால் கேட்கவே அதுவரை அவன் இழுத்து பிடித்த பொறுமை காற்றில் பறந்தது.

“உங்கிட்ட பல முறை சொல்லிருக்கேன். என்கிட்ட பேசும் பொழுது சைகை பண்ணாத எனக்கு கெட்ட கோபம் வரும்ன்னு..” என்றவன் அவளின் ஆள்காட்டி விரலை மட்டும் இறுக்கி பிடித்தான்.

ஜானுவிற்கு இவர்களின் சண்டைப் புரியாத காரணத்தால் சோபாவின் விளிம்பில் நின்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தது

‘கிருஷ்ணா கையை விடு..’ என்று வலியால் துடித்த மதுவின் கண்கள் கலங்கியது.

அவன் விரலை விடாமல் இன்னும் அழுத்தம் கொடுக்க அவளின் கையிலிருந்து மீண்டும் ரத்தம் சொட்டியது.

அவள் கலங்கிய விழியுடன் நிமிர்ந்தவள், ‘ப்ளீஸ் ரொம்ப வலிக்குது..’ என்று இதழசைக்க

‘ரொம்ப அழுத்தி பிடிச்சிட்டேனோ..’ என்று நினைத்தவன் அப்பொழுதுதான் அவளின் கையிலிருந்த புண்ணைக் கவனித்துவிட்டு, “இந்த விரலில் மட்டும் எப்படி அடிப்பட்டுச்சு..” என்று கேட்டவன் அவளின் விரல்களை ஆராய்ந்துவிட்டு ஜானுவை நோக்கினான்.

இருவரையும் ஒரு பார்வைப் பார்த்த மது, ‘அது என்னை கடிச்சுட்டு அவனிடம் என்னை மாட்டிவிட போகுது..’என்று உள்ளுக்குள் கறுவிக்கொண்டாள்.

“ஜானு இவளை கடிச்சு வெச்சிட்டியா?” என்று ஆர்வமாகக் கேட்டதுதான் தாமதம்..

“கடிச்சு வெச்சிட்டேன்.. கடிச்சு வெச்சிட்டேன்..” என்று படபடவென்று சிறகடிக்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“ஜானு சொல்வது உண்மையா?” அவன் மதுவை கேள்வியாக நோக்கிட, அவள் நின்ற இடத்தில் அசைவில்லாமல் நிற்பது கண்டு உள்ளுக்குள் இதமாக இருந்தாலும் அவனின் முகம் கடுமையைப் பூசிக் கொண்டது.

“இவளை போயா கடிச்சு வெச்ச.. அப்போ உனக்குத்தான் முதலில் ஊசி போடணும்..” என்றவன் சத்தமாக சொல்ல அவள் நிமிர்ந்து அவனை வெட்டும் பார்வைப் பார்த்தாள்.

“உடம்பு முழுக்க வெசமும், வேஷமும் தான் இருக்கு..” என்றவனின் வார்த்தை அவளின் மனதை குத்தி ரணமாக்கியது.

அவனின் வார்த்தைகள் சாட்டையாக வந்து விழும் என்று அவளுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பொறுமையை இழுத்து பிடித்தாள்.

“ஜானு நீ இரு.. நான் இதோ வரேன்..” அடுத்தநொடி அவளின் விரலை விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தவன் வெளியே வரும் பொழுது அவளின் கைக்கு கட்டுபோட காட்டன் துணியுடன் வந்தான்.

‘என்னை மாட்டி விடுற..’ என்று மது அழுகையுடன் ஜானுவை அடிக்க, “ராதா அடிக்கிற..” என்று சிறகுகளைப் படபடவென்று அடித்துவிட்டு கத்தியது. அதற்குள் ஹாலிற்கு வந்த கிருஷ்ணா அவளின் செயலைக் கண்டதும் கோபம் வந்தது.

“ஏய் அது வாயில்லாத ஜீவன். அதை ஏன் அடிக்கிற..” என்றவன் அவளின் அருகில் அமர்ந்து துணியால் ரத்தத்தை சுத்தம் செய்தான்.

“ஜானு மஞ்சத்தூள் போடட்டுமா?” என்று அவன் அக்கறையும் கேட்க அவனின் குரலை அமைதியாக உள்வாங்கிய ஜானு, “மஞ்சத்தூள் போடு.. மஞ்சத்தூள் போடு..” என்றது.

‘என்னை கடிச்சு வெச்சிட்டு மஞ்சத்தூள் போடவா சொல்ற..’ என்று மது கோபத்துடன் கிளியை எட்டுப்பிடிக்க முயற்சி செய்ய அது பின்னால் நகர்வதைக் கண்டு, “என்ன ஜானு பேக்கில் போற..” என்று குறும்புடன் புன்னகைத்தவன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

வீட்டுக்குள் நுழையும் பொழுது அவனிடமிருந்த கோபம் இப்பொழுது அவனிடமில்லை என்று உணர்ந்தவளின் பார்வை அவனின் மீது உரிமையுடன் பதிந்தது.

அலையலையாக கேசம் அவளை கோதிவிட தூண்டிட தன்னுடைய கரத்திற்கு கட்டளையிட்டவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது. விழி இரண்டும் வேலையில் கவனம் செலுத்தியது. அவனின் மீது இருந்திருந்து வந்த வாசனை அவளின் நாசியைத் துளைத்தது.

பலநாட்களுக்கு பிறகு அவனின் அருகாமை அவளை நிலைகுலைய செய்தது. சிகரெட் கறை அறியாத உதடுகளைக் கண்டு ‘ரொம்ப வாய் பேசறான்..’ அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது..

அவளை நேரில் காணாமல் அவன் கொஞ்சம் இழைத்து இருந்தாலும் கூட அவனின் கம்பீரம் கோசமும் குறையவில்லை. அவனின் விரிந்த மார்புகள் அவளை தலைசாய்க்க சொல்லி அழைத்தது. பெண்ணென்ற எண்ணம்  இல்லாமல் அணு அணுவாக அவனை ரசித்தாள் மது.

புளூ கலர் சர்ட் அவனின் நிறத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்க, ‘ஐயோ கருப்பா இருந்தாலும் என்னோட மாமா ரொம்ப அழகாக இருக்கானே..’ என்றவள் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளின் கைக்கு கட்டுபோட்டுவிட்டு நிமிர்ந்தவன் அவளின் பார்வையை உணராமல், “இனிமேல் ஜானு மேல கை வைக்கிற வேலை வெச்சுக்காதே..” என்று கண்டிப்புடன் கூறினான்.

அதுவரை அவளைச் சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழுக  அவனை கொலைவெறியுடன் பார்த்த மது, ‘யாரு வாயில்லா ஜீவன் இதுவா? நான்தான் வாயில்லா ஜீவன்..’ என்றவள் கோபத்தில் வார்த்தையைவிட அதுவே அவளுக்கு வினையாகிப் போனது.

“ஐயோ திரும்ப திரும்ப ஊமை என்று சொல்லாத..” என்று வீடே அதிரும் படி கர்ஜித்தான் கிருஷ்ணா.

அவன் குரல்கேட்டு ஜானுவே ஒரு நொடி நடுங்கிவிட மது சொல்லவா வேண்டும் அவளுக்கு பயத்தில் குளிர்காய்ச்சலே வந்திருக்கும்.

“இங்க பாரு மது.. என் முன்னாடி இன்னொரு முறை இப்படி சொன்ன உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்..” அவளை எச்சரித்துவிட்டு எழுந்து அவனின் அறைக்குள் சென்று மறைந்தான்.

அவன் சென்ற வழியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மது, ‘என்னோட குறை எனக்கே பெருசா தெரியல. இவன் ஏன் இப்படி பேசிட்டு போறான்..’ என்று பாவமாக யோசித்தாள்.

இவர்களின் சண்டை ஜானுவிற்கு புரியாது என்றாலும் இருவரையும் பாவமாகவே பார்த்தது.

அவளை கோபத்தில் திட்டிவிட்டு அறைக்குள் வந்த கிருஷ்ணா படுக்கையில் அமர்ந்திவிட்டான். அது என்னவோ மது ஊமை என்று சொன்னால் அவனுக்கு அவ்வளவு கோபம் வரும்.

மதுவின் குறை மற்றவரின் பார்வைக்கும் குறையாக தெரிந்தாலும் கிருஷ்ணாவிற்கு அவளின் மௌனம் தான் பிடிக்கும்.

அவளிடம் அதிகம் சண்டை போட்டாலும் அவளை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்க மாட்டான். இப்பொழுது வீட்டிற்கு வந்ததும் அவளிடம் சண்டை போட்டானே தவிர அவளின் வரவில் அவனின் மனம் மகிழ்ந்தது என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.

அவளின் வார்த்தைகள் அவளைவிட அதிகமாக அவனைக் காயப்படுத்துவிட வெகுநேரம் அறைக்குள் அடைந்திருந்த கிருஷ்ணா மணியைப் பார்த்துவிட்டு எழுந்து வெளியே வந்தான்.

அவன் வெளியே வரும் நேரத்தில் சமையலறையில் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டிருக்க, “ஏய் நீ என்ன பண்ற..” என்றவன் அவளின் கையிலிருந்த குக்கரை வாங்கி வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு அவளின் பக்கம் திரும்பினான்.

அவள் அவனை புரியாத பார்வை பார்க்க, “நீ சமைத்து நான் சாப்பிடனும் என்ற அவசியம் இல்ல. நீ போய் உன்னோட வேலையைப் பாரு. என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும்..” என்றவன் வேலையைக் கவனித்தான்.

அவனை சிலநொடி நின்று பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறிய மதுவின் கண்கள் தானாகவே கலங்கியது. அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.

‘நான் சமைத்து இவரு சாப்பிட்டதே இல்ல பாரு.. ரொம்பத்தான் பண்றான்..’ என்றவள் உள்ளுக்குள் பெருமினாள்.

‘இன்னைக்கு புலம்பி என்ன பண்ண.. அன்னைக்கே வேலையை ரிசைன் பண்ணிட்டு இவனோட இங்கேயே இருந்திருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்குமா?’ என்றது அவளின் மனம்!

‘அன்னைக்கு ஒரு நிமிஷம் யோசிக்காம விட்டுட்டு இன்னைக்கு வந்து அழுதுட்டு இருக்கேன்..’ என்றவள் சோபாவில் அமர்ந்தபடி சமையல் செய்யும் கணவனைப் பார்த்தாள்.

அவளைப் பற்றிய நினைவே இல்லாமல் சமையலை முடித்துவிட்டு வெளியே வந்த கிருஷ்ணா, “ஜானு வா சாப்பிட..” என்று அழைக்க கிளி பறந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தது.

“என்னோட செல்லபட்டு..” என்று அதைக் கொஞ்சிக்கொண்டே ஜானுவுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு தன்னறைக்குச் சென்றுவிட்டான். அவள் ஒருத்தி அங்கே இல்லாதது போல நடந்துக் கொண்டான் கிருஷ்ணா.

அவனின் செயலில் தனக்கான அக்கறை துளியும் இல்லை என்று உணர்ந்த மதுவின் மனம் சில்லு சில்லாக உடைந்து சிதறியது.

‘கிருஷ்ணாவின் மனம் மாறுமா?’ என்ற சிந்தனையுடன் சோபாவில் அமர்ந்திருந்தவள் தன்னை மறந்து உறங்கிப் போனாள் மதுமதி..

error: Content is protected !!