அத்தியாயம் – 6
மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது.. வழக்கம் போலவே நேரத்திலேயே கண்விழித்த மதுவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நேற்று நடந்த அனைத்தும் நினைவு வந்தது.
‘இன்னைக்கு ஆபீஸ் கிளம்பி வரேன்னு சொல்லியிருக்கேன்..’ எழுந்து சென்று அவனின் அறைக்கதவைத் திறந்து பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கிருஷ்ணா.
‘கும்பகர்ணன் நிம்மதியா தூங்கறான்..’ மனதில் தைரியத்தை வரவழைத்து அறைக்குள் நுழைந்தாள். பலநாட்களுக்கு பிறகு தன்னை மறந்து உறங்கும் கணவனின் கன்னத்தை வருடினாள்.
பெண் என்று பூமியில் பிறந்துவிட்டால் அவளுக்கு வீடு என்ற ஒன்று நிரந்தரமில்லை. குறிப்பிட்ட வயது வரை பிறந்த வீட்டில் இருப்பவள் மற்றொருவனை மணம்முடித்து சென்றுவிட்டாள் அவளுக்கு புகுந்த வீடுதான் நிரந்தரம்.
அங்கே வரும் ஆயிரம் இன்ப துன்பத்தை சரிபாதியாக பகிர்ந்து கணவனோடு இருப்பவளுக்கு உறவுகளும் நிரந்தரம் அல்ல. பிறந்த வீட்டில் தாய் தந்தை அரவணைப்பில் இருப்பவள், அடுத்து புகுந்த வீட்டில் அந்த ஆதரவை கணவனிடமே தேடுகிறாள்.
அவனிடம் சண்டையிட்டு கண்காணாத தூரம் சென்றாலும் அவளின் மனம் அவனை மட்டுமே தேடும். அவன் தன்னை தேடி வரவே மாட்டானா என்று ஏங்கி ஏங்கி வாழ்க்கையின் இறுதி வரை பிறந்த வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடும் பெண்களும் இன்றும் இருக்கவே செய்கின்றனர்..
அந்த மாதிரி சூழ்நிலையில் தன்னை தேடி வந்தவன் தன்னிடம் கோபத்தைக் காட்டிவிட்டு வந்தாலும் அவனின் உள்ளன்பை அவளின் மனம் உணர்ந்தது உண்மைதான்..
ஆயிரம் தான் அவன் கோபத்தைக் காட்டினாலும் அவனின் பின்னோடு சுற்றும் மனதை நினைத்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.
‘கோபம் வருதோ..’ என்று அவனின் மூக்கை பிடித்து திருகினாள்.
அவனிடம் அசைவை உணர்ந்து, ‘ஐயோ எழுந்த சாமியாடிவிடுவானே..’ தனக்குள் சிரித்துகொண்டே குளியலறைக்குள் புகுந்தாள்.
அவள் குளித்துவிட்டு வெளியே வரும்பொழுது அவன் அறையில் இல்லை.
வைல்ட் கலர் காட்டன் சேலையைக் கட்டிக்கொண்டு அவள் வெளியே வரும் பொழுது அவன் சமையலை முடித்துவிட்டு குளிப்பதற்கு சென்றான். இருவரும் மௌனமாக நடமாடுவதை கூண்டுக்குள் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தாள் ஜானு.
அவன் குளித்துவிட்டு வருவதற்குள் தலைவாரி பின்னலிட்டு முடித்தவள் ஆபீஸ் கிளம்பிவதற்கு தயாராக இருந்தாள்.
தன்னுடைய செல்லை எடுத்து, ‘அம்மா நான் நேற்றே வந்துட்டேன். இன்னைக்கு ஆபீஸ் போறேன். நைட் வந்து பேசறேன்..’ என்றொரு குறுந்தகவலை தாய்க்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்தவளை விழுங்குவது போல பார்த்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.
அவனின் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்து, ‘வீம்பு பிடிச்சவன் பார்க்கிறான் பாரு..’ அவள் மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள்.
மதுமதியின் மனம் தன்னை வருதேடுப்பதை உணராமல், “வா மது சாப்பிடலாம்..” என்று அழைக்க அவளுக்கு வந்ததே கோபம்..
‘இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்..’ என்று முந்தானையை உதறிவிட்டு எழுந்து அறைக்குள் சென்று மறந்தாள். நேற்று முழுக்க சாப்பிடாமல் இருந்தவளை ஒரு வார்த்தை சாப்பிடு என்று சொல்லவில்லையே என்ற கோபம் அவளின் செயலில் வெளிப்பட்டது..
அவள் சென்ற திசையைப் பார்த்த கிருஷ்ணா, “கொழுப்பு ஏறிக்கிடக்குது..” என்றவன் சாப்பிட அமர்ந்தான்..
“ஜானு வாடா நம்ம சாப்பிடலாம்..” என்ற மறுநொடி சிறகுவிரித்து பறந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தவளின் முன்னே ஒரு ஆப்பிளை கொடுத்து சாப்பிட சொன்னான்.
அவளோடு விளையாடியபடியே சாப்பிடும் அவனை முறைத்தபடியே சமையறைக்குள் சென்றாள் மது. அவள் வெளியே வரும் பொழுது டிப்பன் பாக்ஸ் ஒன்றை எடுத்துவந்து சாப்பாடு போட்டாள்.
அவளின் செயலைக் கவனித்தவனுக்கு அடிவயிற்றில் இருந்து குபீரென்று சிரிப்பு வர அவளோ அவனைக் கொலைவெறியுடன் பார்த்தாள்..
‘ஏன் இப்போ சிரிக்கிற..’ இதழசைவில் கேட்டாள்..
“நான் செய்த சாப்பாட்டை என்னோட கண் முன்னாடி சாப்பிட்ட என்ன குறைஞ்சா போயிருவ..” என்று கேட்டுவிட்டு மீண்டும் சிரித்தான்.
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் டிப்பனில் சாப்பாடு போட்டு எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்
அவளின் குறும்புத்தனம் அறியாத கிருஷ்ணா, “ஜானு நீ சமத்தா வீட்டில் இருப்பியாம்..” என்று கிளியின் தலையை வருடிவிட்டு வேலைக்கு கிளம்பினான்.
அவன் வீட்டைப் பூட்டிவிட்டு பார்க்கிங் வரும் பொழுது அங்கே பிரீத்தியிடம் சைகையில் பேசிக் கொண்டிருந்தாள் மது.
“டேய் நல்லவனே.. அவ வந்த மறுநாளே ஊர் சுத்த கிளம்பிட்டீயா?” அவனிடம் வம்பு வளர்ந்தாள் பிரீத்தி.
அவன் பதில் சொல்லாமல் தன்னுடைய பைக்கை எடுக்க, ‘எங்களுக்கு டைம் ஆச்சு.. பாய்..’ என்ற மது அவனின் பின்னாடி ஏறியமர்ந்தாள்.
“ஏய் எதுக்குடி இப்போ பைக்கில் ஏறின..” அவன் எரிந்து விழுந்தான்.
அவனின் தோளைப் பிடித்துகொண்டு முன்னாடி இருந்த கண்ணாடியை சரி செய்தவள், ‘என்னை ஆபீஸில் இறக்கிவிடு..’ என்று இதழசைத்தாள்.
“முடியாது..” இருவரும் சண்டையைத் தொடங்கிவிட சத்தம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் பிரீத்தி.
‘நானும் இறங்க முடியாது. நீ என்னோட புருஷன் தானே? அப்போ கொண்டு போய் ஆபீஸ் முன்னாடி இறக்கிவிடு..’ என்றவளின் மீது அவனுக்கு கோபம் வந்தாலும் அலுவலத்திற்கு நேரமாவதை உணர்ந்து,
“சரியான ராங்கு பிடிச்சவ.. என்னோட உயிரை வாங்குவதே மெயின் வேலையா வெச்சிருக்கா..” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அவனின் தோளில் அவள் கைவைத்து பிடித்துக்கொள்ள, “முதலில் கையேடு..” என்று எரிந்து விழுகவே, ‘சரியான மாக்கான்..’ என்று திட்டிவிட்டு அவள் கை எடுத்து விட்டாள்.
காலை நேரத்தில் கணவன் – மனைவி இருவரும் அந்த பைக் பயணத்தை வெகுவாக ரசித்தாலும் அதை அவர்கள் வெளிக்காட்டாமல் மறைத்தனர். கண்ணாடி வழியாக அவளின் கூந்தல் அலைபாய்வதை ரசித்த கிருஷ்ணா அவளின் ஆபீஸ் முன்னாடி பைக்கை நிறுத்தினான்.
அவனின் பைக் விட்டு இறங்கிய மது, ‘தேங்க் யூ..’ என்று அவனை பார்த்து குறும்புடன் கண்ணடித்துவிட்டு சென்றவளின் திருட்டு வேலை தெரியாத கிருஷ்ணா புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான்.
ஆறுமாதம் வெளிநாட்டில் வேலையை முடித்துவிட்டு மீண்டும் அதே ஆபீற்கு வேலைக்கு வந்தவளை அவர்கள் அனைவரும் புன்னகையுடன் வரவேற்க புன்னகையுடன் அவர்களுக்கு சைகையில் பதில் சொல்லிவிட்டு அவளின் இடத்திற்கு சென்று வேலையைத் தொடங்கினாள்.
மதியம் சாப்பிட அமர்ந்த கிருஷ்ணா தன்னுடைய டிப்பன் கேரியரைத் திறந்து பார்த்தான் கேரியர் காலியாக இருந்தது. அவன் போட்டு வைத்த சாப்பாடு மாயமாக மறைந்தது எப்படி என்று அவன் சிந்தனையுடன் இருந்தான்.
“கீன்..” அவனின் செல்லிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அவன் அதையெடுத்து பார்க்க, ‘நேற்று முழுக்க சாப்பிடாமல் இருந்தேனே. ஒரு வார்த்தை சாப்பிட்டியா என்று கேட்டியாடா நீ. அதுக்குதான் ஸ்மால் பணிஸ்மெண்டு. நல்லா அனுபவி..’ என்றாள் மது..
“ஸாரிடா..” ரிப்ளே பண்ணினான்..
‘உன்னோட ஸாரியை நீயே வெச்சுக்கோ..’ அவளிடமிருந்து பதில் வந்தது.
“நான் செய்த சாப்பாடு எப்படி இருக்கு..”
‘நீ செய்த கேரட் சாப்பாடு சூப்பர்.. 1௦௦௦ கிஸ் பார்சல்..’ என்ற குறுந்தகவல் பார்த்தும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது..
அவளின் குறும்புத்தனம் அவனின் உதட்டில் புன்னகையை வரவழைக்க, “நல்ல பொண்டாட்டி..” என்று அனுப்பினான்..
“பொண்டாட்டி தான் சாப்பாடு போடல.. நல்ல டீ கடையா பார்த்து போண்டா டீ சாப்பிடு.. இவினிங் வந்து நம்ம சண்டையை தெம்பா ரீஸ்டார்ட் பண்ணலாம்.. பாய்..” என்றவளின் ரிப்ளே பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டான்.
அதன்பிறகு அவன் வேலையைத் தொடரவே மாலை எப்பொழுது போலவே வீட்டிற்கு கிளம்பினாள் மதுமதி. மாலை மயங்கும் நேரத்தில் மேற்கு வானத்தில் சிவப்பு மங்கை ஒருத்தி மையலுடன் மறைவதை ரசித்துகொண்டே பஸின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள் மதுமதி. அந்த பஸ் ஒரு கல்லூரி வாசலில் நின்றது.
அன்று எப்பொழுதும் போலவே வேலையை முடித்துவிட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். கல்லூரி வாசலில் மாணவிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை கவனித்தவள் வண்டியின் வேகத்தைக் குறைத்தாள் மது.
அந்தநேரம் வேகமாக வீசிய காற்றில் ஒரு பெண்ணின் சால்வை பறந்து வந்து அவளின் முகத்தில் விழுந்தது.
அவள் உடனே சடர்ன் பிரேக் போட்டு நிறுத்த எதிரே வந்த ஒருவன், “ஏய் சால்வையை முகத்தில் போட்டு மூடிட்டு ரோட்டில் எதுக்கு வண்டி ஓடுற..” என்று எறிந்து விழுந்தார்.நடுத்தர வயதை உடைய ஒரு பெரியவர்.
அப்பொழுது ஓடிவந்த ஒருபெண், “அக்கா ஸாரி அக்கா..” என்று அவளின் முகத்திலிருந்த தன்னுடைய துப்பாட்டாவை எடுத்தாள்.
மறுகணமே எதிரே நின்றிருந்தவனின் மீது பார்வையை பதித்த மது அந்த பெண்ணின் கன்னத்தில், ‘பளார்’ என்று ஒரு அறைவிட்டாள். அந்த பெண் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு திகைப்புடன் நிற்க வண்டியிலிருந்து இறங்கினாள் மது..
அங்கே கூட்டம் கூடிவிட, “யாரும்மா நீ..” என்றபடி கல்லூரி பேராசிரியர் ஒருவர் முன்னே வந்தார்.
அவள் ஏதோ சைகையில் சொல்ல, ‘உனக்கு பேச்சு வராதாம்மா..’ என்று சைகையில் கேட்டார் பேராசிரியர்.
‘எனக்கு பேச்சு மட்டும்தான் வாராது. காது நல்லாக் கேட்கும்.. நீங்க வாய்விட்டு பேசுங்க..’ என்று சைகையில் கூறியதை அவன் புரிந்து கொண்டார்.
“சரிம்மா இப்போ இங்கே என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.
“மேடம் என்னோட துப்பட்டா காற்றில் பறந்து இவங்க முகத்தில் விழுந்துவிட்டது. அதுக்கு இந்த அக்கா என்னை அடிச்சிட்டாங்க” என்ற கல்லூரி மாணவியை முறைத்தார் அந்த பேராசிரியர்.
‘சுடிதார் போட்ட அதற்கு துப்பட்டாவைப் போட்டு பின் பண்ணனும் என்ற பேஸிக் சென்ஸ் கூட இல்ல. நீயெல்லாம் காலேஜ் எதுக்கு வர? உங்க வீட்டில் இதுதான் சொல்லி கொடுத்தாங்களா..’ என்றவள் சைகையில் கேட்டாள்.
அவளின் சைகையை அவர் மொழி பெயர்த்தார். மதுவைத் தவறாக பேசியவர் தலைகுனிந்து நிற்பதைக் கவனித்த அந்த கல்லூரி மாணவியும் தலைகுனிந்து நின்றாள். வீட்டில் கண்டிக்காமல் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஊருக்குள் வசவு வாங்கும் என்று உணர்ந்த அந்த பெரியவரால் மதுவிடம் பதில் பேச முடியவில்லை.
கல்லூரி பேராசிரியர் கூட அமைதியாக இருக்க, ‘குழந்தையைக் கூட கற்ப்பழிக்கும் கொடூரமான உலகத்தில் வாழ்ந்துட்டு இருக்கோம். அதை நினைவில் வெச்சு இனிமேலாவது சால்வைக்கு பின் பண்ணி பழகு. யாருக்கு என்ன நடந்த எனக்கென்னா என்று இருக்காதே. அது நமக்கு நடக்க ரொம்ப நேரமாகாது..’ சைகையில் சொன்னாள்
அவளின் அறிவுரையைக் கேட்ட பேராசிரியர் கூட, “வாய் பேச வரல என்றாலும் பொண்ணுக்கு துணிச்சல் அதிகம்..” என்றவர் அந்த மாணவியிடம், “நாங்க சொன்னா மண்டையில் ஏறாது..” என்றவரும் நகர்ந்துவிட்டார்.
தன்னுடைய மகளின் தவறை உணர்ந்தவர் மதுவிடம், “என்னை மன்னிச்சிரும்மா..” என்றார்.
தன்னை இரு விழிகள் உன்னிப்பாக ன்கவனிப்பதை அறியாத மது, ‘அடிச்சதுக்கு ஸாரி..’ என்று சொல்லிவிட்டு அவள் ஸ்கூட்டியை எடுக்க அவனின் விழிகள் அவளைப் பின் தொடர்ந்தது.
இளமாலை நேரத்தில் சூரியன் மேற்கே இருக்கும் மலை முகட்டில் மெல்ல மறைய தொடங்கியது. தென்றலோ இதமாக வீசிக்கொண்டிருந்தது. சென்னை சாலையின் நெரிசலைக்கடந்து அக்டிவா ஸ்கூட்டியில் புயல்வேகத்தில் சென்று கொண்டிருந்தாள் மதுமதி.
அவள் அப்பார்மெண்ட் உள்ளே நுழைந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு மாடியேறிச் சென்றாள். அவள் ஏறினால் என்று சொல்வதற்கு பதிலாக விட ஓடினாள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
வீட்டின் முன்னே மூச்சிரைக்க நின்றவள், காலிங்பெல்லை கதற வைக்க, “மது இரும்மா வருகிறேன்..” என்று வந்து கதவை திறந்தார் நிர்மலா.
அவர் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தும், “வீட்டிற்கு இவ்வளவு வேகமாக வருகின்ற ஒரே பொண்ணு நீயாகத்தான் இருப்ப..” சலித்துக்கொண்டே அவளுக்கு பலகாரம் எடுத்துவர சமையலறைக்குள் நுழைந்தார் நிர்மலா.
அவரின் பேச்சைக் கவனிக்காமல் சோபாவில் அமர்ந்து பெருமூச்சை வெளியிட்டவள் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மாலை ஆறுமணிக்கு இன்னும் பத்துநிமிடம் இருந்தது.
‘ஸ்ஸ்ஸ் நேரத்திற்கு வந்துவிட்டேன்..’ மூச்சை இழுத்துவிட்டு சோபாவில் சாய்ந்து விழிமூடினாள். கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும் எழுந்து அறைக்குள் நுழைந்து உடையை மாறிவிட்டு வெளியே வந்தவளின் கையில் காபியைக் கொடுக்க, ‘தேங்க்ஸ்மா..’ என்று புன்னகைத்தாள்.
‘அப்பா என்ன பண்றாரு..’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள்.
“அந்தஅறையில் உட்கார்ந்து கதை படிக்கிறார்..” என்றார் நிர்மலா
‘சரிம்மா நான் மாடிக்கு போறேன்..’ அம்மா கொடுத்த காபியை உறிஞ்சியபடியே மொட்டை மாடியை சென்று அங்கிருந்த சிமின்ட் பெஞ்சில் அமர்ந்தாள்
மாலை மயங்கும் வேலையில் அங்கே மௌனம் நிலவிட, “உங்களின் இதயத்தை இசை மயமாக்கும் இனிமையான கானங்கள். தென்றலோடு போட்டி போடும் இதமான இசையுடன் உங்களுடன் இணைந்திருப்பது உங்களின் ஆர். ஜே. பாலா” இனிமையான குரலைக் கேட்டதும் அவளின் முகம் தானாக மலர்ந்தது.
“காலையில் நான் ஸ்டுடியோ வரும் பொழுது பார்த்த ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்லணும் என்று நினைச்சேன்..” என்றவனின் குரலில் அவளின் கவனம் திரும்பியது.
“காலேஜ் வாசலில் ஒரு பொண்ணோட துப்பட்டா காற்றில் பறந்து போய் ஒரு ஸ்கூட்டியில் வந்த பொண்ணோட முகத்தை மறைத்துவிட்டது. அந்த பொண்ணு ஒரு அரை பளார்ன்னு விட்டது எனக்கே நடுக்கம் எடுத்திருச்சு. அதுக்கு பிறகு அந்த பொண்ணு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மைங்க..” என்றான்.
‘அட பாருடா நம்மல மாதிரியே நிறைய பேரு ஊருக்குள் இருப்பாங்க போல..’ என்றவள் அவனின் பேச்சைக் கவனித்தாள்.
“துப்பட்டா போடுவதோட நல்லது, கெட்டது பற்றி அந்த பொண்ணு தெளிவாக பேசிச்சு. ஒரு பொய் மற்றவருக்கு நன்மை பயக்குமெனில் அதை சொல்வதில் தவறில்லை என்று வள்ளுவரே சொல்லிருக்காரு..” என்ற பாலாவின் குரலில் இவளிடம் உதட்டில் புன்னகை அரும்பியது..
“ஒரு பொண்ணு துப்பாட்டா போட்டு பின் பண்ணுவதில் அவளுக்கும், அவளைச்சுற்றி இருக்கும் மற்றவருக்கும், அவளை பெற்றவர்களுக்கும் நல்லது நடக்குன்னா அதை செய்ய தயக்கம் எதுக்கு என்ற ஒரு நல்ல கருத்துடன் நம்ம நிகழ்ச்சிக்குள் போலாமா..” அடுக்கு மொழி பேசி அவளின் மனதை மயக்கினான்
“உங்களின் மனதை உற்சாகம் அடைய வைக்கும் துள்ளலான இசையுடன், இளம் நெஞ்சே வா பாடல்..” என்றவனின் குரலின் இனிமைக்கு கட்டுபட்டு சிலையாகி இருந்தாள் மதுமதி.
அந்த பாடலைவிட அவனின் காந்தக்குரல் அவளின் மனதில் இசை மீட்டியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரனை ஒரு முறையேனும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே அவளின் நீண்டநாள் ஆசை!
அவள் அவ்வளவு வேகமாக வீடு வருவதற்கு இவனின் குரல் மட்டுமே காரணம். மாலை ஆறுமணிக்கு அவனின் பிரோகிராம் கேட்காமல் இருக்க அவளால் முடியாது. எத்தனை வேலைகளுக்கு நடுவிலும் கூட அவனின் குரலை அந்த ஆறுமணிக்கு கேட்டுவிட்டுதான் மறுவேலை!
அந்த குரலின் அவளின் மனம் மயங்கி இருப்பதை அவளும் உணர்ந்தே இருந்தாள். ரசிகையாக அவனின் குரலைகேட்டு ரசிப்பதில் அவளின் கவலைகள் மறக்கும். அந்தநேரம் அவளின் தோளை யாரோ தட்ட அவளின் மனம் நிகழ்காலத்திற்கு திரும்பியது.