KM-10
KM-10
10
“என்ன பப்பி ஒன்னும் சொல்லாம இருக்க?” வெய்யலில் அரிசியைக் காய வைத்துக் கொண்டிருந்த பப்பி பாட்டியிடம் ஊற வைத்த அரிசியை வாயில் சிறிது போட்டுக் கொண்டே கேட்டாள் வைஷு.
“நானும் செத்த கவனிச்சேன். அவ கொஞ்சம் பகட்டு காடிண்டு தான் இருக்கா. வேணும்நு பண்ற மாதிரி தான் தெரியறது. அன்னிக்கு அந்த ரவிக்கை துணிய கொண்டு வந்து கொடுத்துட்டு, இது இங்க வாங்கினோம் அது அங்க வாங்கினோம், இத்தன வெலைன்னு பீத்திக்கறா டி. நாம என்ன வாங்கிருக்கோம்னு பாத்துட்டு,
அவளுக்கு என்ன வாங்கினோம்னு வேற கேட்டு வாங்கி பாத்துட்டு, இந்த கலர் என்னண்ட இருக்குன்னு ஒரு நொட்டு சொல்றா.
ஒரு சபை நாகரீகம் தெரிய வேண்டாமோ. அடுத்தவா வாங்கித்தரா! அதை குறை சொல்லாம ஏத்துற மனசு வேணும். அது தான் பொம்மனாட்டிக்கு அழகு. அத விட்டுட்டு இப்படி பண்றாளே! நேக்கு சுத்தமா அவ போக்கு பிடிக்கல”
அரிசியை விளாவிவிட்டுக் கொண்டே பேச, மீண்டும் சிறிது அரிசியை எடுத்து வைஷு வாயில் போட்டு அறைக்கலானாள்.
“நானும் இதே தான் சொன்னேன். அவா சரியில்லன்னு , யாரு கேக்கறா. சின்ன பொண்ணு ஓரமா போ -ங்கறா”
“அடி…சும்மா ஊற வெச்ச அரிசிய திங்காத, கல்யானத்தன்னிக்கு மழை பெய்யும்” அதட்டினாள் பாட்டி.
“ஆமா நீ வந்து கொட பிடி. நான் என்ன பேசிண்டு இருக்கேன், அதுக்கு பதில் சொல்லு”
“இதெல்லாம் சின்ன விஷயம் டி. போறபோக்குல தட்டி வெயக்கலாம். டோன்டு ஒர்ரி”
“என்னவோ போ.. இதுல இங்கிலீஷ் வேற.” தானும் சேர்ந்து அரிசியை உலர்த்தலானாள்.
அன்று அவளை சற்று நிலைகுலைய வைக்கவே அவளை லேசாகக் கட்டிப் பிடித்தான் அர்விந்த். ஆனால் அது நடந்தது என்னவோ அவனுக்குத் தான் . அவளின் வாசமோ மென்மையோ அவனை புரட்டிப் போட்டது உண்மையே.
அதனாலேயே அவளை அதற்குப் பிறகு பார்ப்பதைத் தவிர்த்து மற்றவர்களுடன் சகஜமாக இருக்க முயன்றான்.
அவன் மற்ற பெண்களைப் போல முதலில் அவளை வம்பிழுக்கவே நினைத்தான். இன்று ஏனோ அந்த எண்ணம் சற்று மாறுவது போல தோன்றியது.
நான் கட்டிப் பிடித்தாலும் அவள் அவனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இருந்தது அவளின் திடத்தை உணர்த்த, அதுவே அவனுக்கு மிகவும் பிடித்தது.
ஏற்கனவே தன்னோடு சரிக்கு சமமாக நிற்பவளை சீண்டிப் பார்க்கத் தோன்ற, இது இன்னும் அவனை அவளிடத்தில் ஆழமாக எதையோ தேடச் சொன்னது.
“டேய் அரவிந்தா..உன்ன மாத்தற ஒருத்தியா..அதுக்கு நீ விடலாமா. எப்பவும் ஜாலியா இருந்துட்டு போய்டுடா அனா கினா”
அவன் புலம்பி முடிக்கும் சமயம் ரகு வந்துவிட,
“அது என்ன டா ஆனா கினா?”
“அதுவா..அர்விந்த் கிருஷ்ணா தான் ஷார்ர்டா அனா கினா “
“கஷ்ட காலம். ஏகே ன்னு தான உன்ன உன் ப்ரெண்ட்ஸ் கூப்டுவாங்க. இது எப்போலேந்து?”
“இது எனக்கு நானே சொல்லிக்கறது. சூனா பானா ஸ்டைலு”
தலயில் அடித்துக் கொண்டான் ரகு.
“ஹே ரவுடி பேபி ..உன்ன விடமாட்டேன் டி”
“இது யாரு டா”
“ம்ம்… அது ஒரு வேண்டாத ப்ரெண்டு” அதற்கு மேல் அங்கு நிற்காமல் பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க பால்கனிக்கு சென்று விட்டான்.
‘இவன் போக்கே சரியில்லையே’ ரகு நினைத்தான்.
பால்கனியில் இவன் வருவதைப் பார்த்து அந்தப் பெண்ணும் வர, இவனுக்கு முன்னே அவளே “ஹாய்” என்கவும்
அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப் போனது. ‘இதுவே வைஷுவா இருந்தா முறைச்சுட்டு போயிருப்பா’ என்று தான் தோன்றியது.
அங்கேயும் அவள் நினைவு வர, யோசித்தவாறே அவளுக்கு பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டான்.
மாப்பிள்ளை வீட்டில் அன்று பந்தக்கால் நட்டனர். அத்தை , மாமா என அனைவரும் வந்திருக்க,
மூங்கில் கம்பில் மஞ்சள் குங்குமம் வைத்து, அதன் தலையில் மாவிலைத் தோரணம் வைத்து அலங்கரித்து, அதற்கு பூவும் சூட்டி, வீட்டு வாசலில் அனைவரும் சேர்ந்து அதை நட, பின் அதற்கு பால் தண்ணீர் ஊற்றி வணங்கி விட்டு, திருமணம் நல படியாக நடக்க வேண்டுமென பிரார்த்தனை செய்துவிட்டு வந்தனர்.
ரகுவிற்கு அன்று ஏனோ அனுவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அவன் சொன்னதைக் கேட்டு அவளும் வாரத்திற்கு ஒரு முறை தான் பேசுகிறாள். ஆறு நாட்களின் கதையை ஏழாம் நாள் பேசும்போது அனைத்தையும் சொல்லிவிட வேண்டும், அவளின் குரலைக் கேட்க வேண்டும் என அவனுக்கும் ஆர்வம் இருக்கும்.
இன்று ஐந்தாம் நாள் தான். ஆனாலும் பேச வேண்டும் போல் இருக்க, குடும்ப நபர்களிடமிருந்து பிரிந்து தனியே தன் அறைக்கு வந்து அவளுக்கு போன் செய்தான். அது பல முறை அடித்து ஓய்ந்தது. அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருக்க, விடாமல் அடுத்து வைஷ்ணவியின் எண்ணிற்கு அழைக்க, அவளும் எடுக்கவில்லை.
அலுத்துப் போய் மெத்தையில் வந்து விழுந்தான்.
“என்ன ரகு சோர்ந்து போய்ட்ட?” அர்விந்த் வந்து அருகில் அமர,
“இல்ல டா! அனுகிட்ட பேசலாம்னு பாத்தேன். அவ போன் எடுக்கல. வைஷுக்கு பண்ணேன் அவளும் எடுக்கல.” குறைபட்டுக் கொள்ள,
“குடு எனக்கு ராசி இருக்கு நான் ட்ரை பண்றேன்” என்றவன் ரகுவின் போனை எடுத்து கால் லிஸ்ட் பார்க்க, வைஷுவின் எண் கண்ணில் பட்டது. அதற்கு டயல் செய்தான்.
‘அவ மட்டும் இப்போ மூணு ரிங்ல போன் எடுத்தானா எனக்கும் அவளுக்கும் ஏதோ இருக்குன்னு அர்த்தம். இல்லனா எதுவும் இல்ல.’ அவனையும் மீறி அவன் மனது நினைத்தது.
ரிங் போனது, முதல் ரிங் ..இரண்டாவது ரிங்..
இரண்டாவது ரிங் முதழுதாக முடிவதற்குள்,
“ஹல்லோ.. அத்திம்பேர்..?” அழகான குரலில் வைஷ்ணவி பேச,
அர்விந்துக்கு புதிதாக இருந்தது அவளின் இந்த குரல். எப்போதும் தன்னிடம் எரிந்து விழுந்து தான் பேசுவாள். இப்படி ஒரு இனிமை அவனுக்கு ஏதோ செய்ய, உடனே எதுவும் பேசாமல் ரகுவிடம் போனைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டான்.
அவன் பேசாமலே கொடுத்தது ரகுவை யோசிக்க வைத்தாலும், உடனே வைஷுவிடம் சொல்லி அனுவிடம் பேச விழைந்தான்.
அர்விந்த் அன்று முழுதும் பலவிதமாக யோசித்து கொண்டிருந்தான்.
பிறகும் இரு மனமாகவே இருந்தான்.
அனு வீட்டில் அன்று சுமங்கலிப் பிரார்த்தனை.
ஐந்து சுமங்கலிகளை அழைத்து, அவர்களுக்கு புது புடவை வாங்கி நனைத்து மடியாகக் கொடுத்து வீட்டில் இறந்து போன சுமங்கலிகளை நினைத்து கொண்டு, இவர்களுக்கு பாத பூஜை செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவருக்கும் உணவிட்டு, அவர்களிடம் அனு ஆசி பெற்றாள். அவர்களும் மனதார அவளது வாழ்வு சிறக்க வாழ்த்திவிட்டு சென்றனர்.
இரு வீட்டிலும் கல்யாணத்திற்கு முன் செய்ய வேண்டிய அனைத்தும் நல்லபடியாக முடிந்தது.
திருமணத் தேதி நெருங்கி கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் , உறவுகள் என அனைவருக்கும் பத்திரிகை கொடுத்தாயிற்று.
அனுவுக்கு மனம் ஒரு புறம் திக் திக் என்று தான் இருந்தது.
வைஷு திருமணத்திற்காக இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்து இருந்தாள். இன்னும் இரண்டே நாளில் திருமணம் என்று நிலை வந்தது.
மாமா மாமி என அனைவரும் வந்தாயிற்று. சமயல் கோபுவையும் முன் கூட்டியே வர சொல்லி இருந்தனர். அவனை கூட வைத்துக் கொண்டே அனைத்து பக்ஷணங்களையும் செய்தனர்.
வச்சு , பப்பி பாட்டி மேற்பார்வையில், அதிரசம், கை முறுக்கு, ஜாங்கிரி, லட்டு, மைசூர்பாகு, ரவா லட்டு, தேங்காய் பர்பி, பாதுஷா, நுக்கல் , அப்பம் , தேன்குழல், மான்கொம்பு, தெரட்டிப்பால், மனோகரம், பணியாரக்காய் முதலிய சீர் பக்ஷணங்கள் அனைத்தும் தயாராக இருந்தன. அனைத்திலும் நூற்றியெட்டு.
அத்துடன் கல்யாணத்தில் பந்தியில் பரிமாற, மோர் மிளகாய், ஜவ்வரிசி வடாம் என இதர சிலவற்றையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொண்டான் கோபு. அவனின் ஆட்கள் நாளை காலை தான் வருகிறார்கள்.
வச்சு, வீட்டில் தான் பக்ஷணங்கள் செய்ய வேண்டும் என்று கூறியதால், இவைகள் மட்டும் சுத்தமாக இங்கே தயாரானது.
அம்பு அத்தை ஒரு கூடை நிறைய மருதாணி இலை பறித்துக் கொண்டு வந்திருந்தாள். அனு தனக்கு மெஹந்தி வேண்டாம் என்று கூறி விட்டதால் அனைவருக்கும் சேர்த்தே பறித்துக் கொண்டு வந்தாள்.
பப்பி பாட்டி அதை பதமாக பாக்கு சேர்த்து அரைத்துக் கொடுத்தாள். பாக்கு சேர்த்து அரைத்தால் இன்னும் சிவக்கும்.
“பப்பி , நீ கவலையே படாத, அனு கை ரொம்ப நல்லா சிவக்கும். அத்திம்பேர் இவை மேல கொள்ள பிரியம் வெச்சிருக்கார்.” வைஷு சொல்ல, அங்கே சிரிப்பலை ஓயவில்லை.“அனுவுக்கு சிவக்கும். உனக்கும் எனக்கும் இப்படி செஞ்சாதான் சிவக்கும்” ருக்கு பெரியம்மா ஜாடையாக சொல்ல,
“அவளுக்கு என்ன டீ. அவளை தாங்கு தாங்குன்னு தாங்கறவன் தான் அவளை கட்டிக்கப் போறான்” பப்பி பேத்தியை யாரிடமும் வீட்டுக் கொடுக்க மாட்டாள்.
‘இந்த கெழம் பக்கத்துல இருக்கறது தெரியாம சொல்லிப்ட்டேன். உடனே இது நம்மள எப்படி வாரலான்னு அடுத்து யோசிக்கும்’ மனதிற்குள் பயந்த ருக்கு,
“நேக்கு கொஞ்சம் ஆத்துல வேலை இருக்கு டி வச்சு. ஒரு கிண்ணத்துல நான் மருதாணி எடுத்துண்டு போறேன். நாளைக்கு வரேன்” உடனே கிளம்பி விட்டாள்.
ஜானகி, வச்சு அம்பு வைஷு என அனைவரும் ஒருவருக்கொருவர் மருதாணி வைத்துக் கொண்டு, கீழே பாயை மட்டும் விரித்திக் கொண்டு படுத்தனர்.
அனைவரும் மறுநாள் செய்ய வேண்டிய வற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, வைஷு மட்டும் தன் மருதாணி சிவக்குமா இல்லையா என யோசித்தாள்.
‘வர போறவன் எப்படி இருப்பானோ’ என யோசித்துக் கொண்டிருக்கும் போது அர்விந்த் முகம் நிழலாட,
‘ச்சே நல்லது யோசிக்கறப்ப இந்த கொரங்கு ஏன் ஞாபகம் வருது’ கோபம் வர, வலுக்கட்டாயமாக கண்ணை மூடி படுத்துக்க கொண்டாள்.
பப்பி பாட்டி அன்று மதியம் தான் அவளுக்கு கல்யாணத்தில் என்னென்ன பாட வேண்டும் என்று சொல்லி இருந்தார். அந்த பாட்டை ஒரு முறை மணத்திற்குள் பாடிப் பார்த்தாள்.
உறங்கியும் போனாள்.
காலையில் அனைவரும் எழுந்து தங்கள் மருதாணியை கலைத்துவிட்டு, யாருடையது சிவப்பு என்று பார்த்துக் கொண்டிருக்க, வைஷு வழக்கம் போல தூங்கி கொண்டிருந்தாள்.
அனுவிற்கு நன்றாகவே சிவந்திருக்க, ஜானகிக்கு ஓரளவே சிவந்திருந்தது.
“இரு இரு வைஷுவும் வரட்டும் அப்பறம் பாப்போம்” என முனகினாள் ஜானகி.சோம்பல் முறித்தபடி எழுந்த வைஷுவை, ஜானகி அவசர படுத்தி கூட்டிச் சென்று முதலில் அவளது கையை துடைக்கச் சொல்ல,
அவளது பளிங்கு கைகளில் செக்கப் சிவந்து துளியும் கலையாமல் அழகாக வேறு இருந்தது. அனுவை விட வைஷுவுக்கே நன்றாகச் சிவந்தது.
ஜானகி அழும் நிலைக்கு சென்றாள். அவளை சமாதானப் படுத்தி அழைத்து வந்தாள்.
குளித்து அழகாக உடுத்தி அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர்.
நாராயணனும் வீட்டு பூஜை அறையில் கற்பூரம் காட்டி வழிபாடு செய்துவிட்டு, வாசலில் சூரத் தேங்காயை உடைத்து விட்டு,
ஏற்பாடு செய்திருந்த வேனில் அனைவரையும் ஏற்றினார்.
வண்டியின் நான்கு பக்க வீலிலும் எலுமிச்சை வைத்து விட்டு வர, சாரங்கனும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வண்டியில் ஏறினார்.
கலகலப்பாக வண்டி கிளம்பியது மண்டபத்தை நோக்கி.
வைஷு நிறைய வளையலிட்ட தன் கையை பார்க்க மருதாணியை ஒரு முறை ரசித்தாள்.
அதே நேரம் அவளின் போனிற்கு வாட்சப்பில் புது எண்ணிலிருந்து தகவல் வந்தது.
“காண்ட் வெய்ட் டு ஃபைட் வித் யு ரவுடி பேபி. யு வில் ஃபால் ஃபார் மீ “
அந்த எண்ணிற்குரிய புகைப்படத்தை பார்க்க, ஏ கே என்ற எழுதிட்டு அவனது கார் அருகே நின்று கொண்டிருந்தான் அர்விந்த் கிருஷ்ணா.
‘நான் ரவுடியா ‘ ஆத்திரப்பட்டு, முதலில் அதை தவிர்த்து விட எண்ணினாலும், அவள் பார்த்து விட்டதால் நீல டிக் வந்துவிடும் என்பதால், அவளும் பதில் அனுப்ப முடிவு செய்தாள்.
“ரவுடி கிட்ட ஆதி வாங்க ரெடியா இரு ஏ கே( A K – Australia korangu ).
அனுப்பிவிட்டு கொஞ்சம் திருப்தி அடைந்தாள்.
அதைப் படித்த அர்விந்த் விழுந்து விழுந்து சிரித்தான். ‘ஏ கே க்கு இப்படி ஒரு மீனிங் சொல்லிட்டாளே’ என்று.