KN9

KN9

காதல் நீலாம்பரி 9
_________________________________

சக்தி விளையாட்டா பேசிட்டு வந்துட்டு அத மறந்துட்டான்.. ரெண்டு.நாளா தோட்டத்துல மஞ்சள் வெட்டு நடந்ததால அங்க பிஸியாயிட பைனான்ஸ் பக்கமும் அவனால வர முடியல.. மூணாம் நாள் வந்து பைனான்ஸ திறந்து வச்சுட்டு டீ குடிக்கப் போன போது நாயரும்,சேச்சியும் எதையோ தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தவங்க இவனப் பாத்ததும் பேச்ச நிறுத்தினாங்க.. 
இவன் தயக்கமா நிக்க நாயர் சொன்னார்…

“வாங்க சாமி.. பெரிய ரகசியம் ஒண்ணுமில்ல..மனு ரெண்டு நாளா பச்சத் தண்ணி கூட குடிக்காம சுருண்டு படுத்துட்டு ஒரே அடமா கோயிலுக்கு மாலை போட்டே ஆகணும்னு கெடக்கறா.. சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா.. இப்பவா,அப்பவான்னு பெரியவளாகற கட்டத்துல இருக்கறவள எப்படி மாலை போட்டு ஐயப்பனோட சன்னதிக்குக் கூட்டிட்டுப் போக முடியும்?”

குருசாமி கவலையாச் சொல்ல இவனுக்கு அதிர்ச்சி!எவ்வளவு பெரிய மடத்தனம் பண்ணிட்டோம்னு அலனுக்கு இப்பத் தான் புரிஞ்சுது.. ஒரு சின்னப் புள்ள கிட்ட செரிக்குச் செரியா நின்னு கச்சை கட்டி வெளையாடினது எவ்வளவு பெரிய வீபரீதத்துல கொண்டு போயி விட்டிருக்கு.. அதும் தன்னால்! பெண் குழந்தைகள்.. அதிலும் ரெண்டுங் கெட்டான் பருவத்திலிருப்பவர்கள் எந்த அளவு தீவிரமானவர்கள் என்பது இப்போது அவனுக்குப் புரிஞ்சுது..

அவனுக்குப் புரியாதது ஒண்ணே ஒண்ணு தான்!,தன்ன விட பத்து வயசு கொறைஞ்சவளோட தான் சரிக்குச் சரியா வம்பிழுக்கறதும்.. தன்ன விட பத்து வயசு மூத்தவனான தன் கிட்ட அவளும் சமமா மல்லுக்கு நிக்கறதையும் என்னன்னே அவனால விளங்கிக்க முடியல.. அந்த வயசுள்ள மத்த பொண்ணுங்கள அலட்சியமா கடந்து போற தன்னால மனுவ ஏன் அப்படிக் கடக்க முடியல?மனுச பயல் மனசு எங்க ஸ்டடியா நிக்கும்,எப்ப அபத்தமாகும்னு அவனவனாலயே கணிக்க முடியாதோ?

இதுக்கு ஆரம்பம் தானா இருக்கறப்ப முடிவும் தன்னால தான் உண்டாகணும்னு அவனுக்குத் தெளிவாப் புரிஞ்சுது..ஆனா எப்படி? இது வரைக்கும் நடந்தத யோசனை பண்ணிப் பாத்தவனுக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சுது.. பொண் குழந்தைங்களுக்கு இயல்பாவே குடிக்கறவங்களக் கண்டா புடிக்காது.. அதிலயும் மனு அவ அப்பா குடியால பாதிக்கப் பட்டவ… அதனால தன்னையும் வெறுத்ததுலயோ, அத வெளிப் படையா விமர்சனமா கொட்டினதுலயோ ஆச்சரியமில்ல..

ஆனா,அதப் புரிஞ்சுக்காம அவ மனச நோகடிக்க தான் செஞ்ச முட்டாள் தனங்கள்.. கொட்டிய அமில வார்த்தைகள்.. எல்லாத்துக்கும் காரணம் ஈகோவோட கலந்த போதையும் கூட..! தன் போதையால யார் மனசும் காயப் பட்டுடக் கூடாதுன்னு கவனமா இருக்கறவன் மனு கிட்ட தடுக்கி விழுந்தது எப்படி?சயனம் சொல்ற பல்லியும் எருமத் தாழில விழும்ங்கறது இது தானோ?

மனு கிட்ட இப்ப தன்னத் தவிர யார் பேசினாலும் பிரயோசனமில்லைன்னு தெரிய குருசாமி நாயர் நீட்டின டீய வாங்கிக் குடிச்சுக்கிட்டே யோசிக்க ஆரம்பிச்சான்.. இனி மனு கிட்ட என்ன மாதிரி போய்ப் பேசறது? டக்னு தோணுச்சு அவனுக்கு.. முன்ன மாதிரியே தான்.. அவள தனக்கு சரி சமமா பாவிச்சு!ஆனா,அதுல ஒரு சின்ன வித்தியாசத்தக் கொண்டு வரணும்..!!

முன்ன அவ கிடப் பேசின போதெல்லாம் புத்தி சாலிங்கற ஈகோவுல அவள மட்டம் தட்டணும்னு எதிரியா பாவிச்சு சரிக்குச் சரியா போர் செஞ்சோம்.. இப்ப எல்லாத்தையும் துடைச்சு எறிஞ்சுட்டு.. இப்பவும் சரிக்குச் சரியா.. ஆனா தோழியா,நட்பா பாவிச்சுப் பேசணும்.. அவளையும் புத்தி சாலியா பாவிக்கணும்.. பாவிக்கறதென்ன? புத்தி சாலியே தான்!வேறொரு பொண்ணா இருந்தா தன் முதல் நாள் அடிக்கே அலறியடிச்சு ஓடியிருக்குமே? இவ சளைக்காம போராடினாளே!! தன் வயசும்,அனுபவமும் அவளுக்கும் இருந்திருந்தா அந்த மொத நாள்லயே தன்ன மண்ணக் கவ்வச் செய்திருப்பா..

என்ன பண்ணணும்.. எப்படிப் பேசணும்னு முடிவானதும் டீயக் குடிச்சு கிளாஸ வச்சுட்டுக் கேட்டான்..

“எப்ப இருந்து இப்படி..?”

“அதையேன் கேக்கறீங்க?ரெண்டு நாளைக்கு முன்ன நீங்க வந்து பணம் வாங்கிட்டுப் போனீங்களே?அப்ப இருந்து தான்.. பச்சத் தண்ணி பல்லுல படலை.. பெத்த கொழந்த வீம்பா பட்டினி கெடக்கைல நாங்க மட்டும் திங்க முடியுமா?அப்படித் தான் வயிறு பசிச்சிடுமா?பன்னெண்டு வருசத்துக்கு முன்ன அது குடியிருந்த வயிறு தான?….”

இதுக்கு மேல சேச்சியால பேச முடியலை.. தொண்டை திக்கி குரல் தழு தழுக்க பீறிட்டு வருது கண்ணீர்.. சக்தி அப்படியே கூனிக் குறுகிப் போனான்.. ரெண்டு நாள்ங்கறது தப்பு.. சரியா கணக்குப் போட்டா இது மூணாவது நாள்.. பச்த் தண்ணி கூட குடிக்கலேன்னா இது ஆபத்தான கட்டம்..அந்தத் தாயோட கண்ணீருக்கும் மூணு நாள் மன உளைச்சலுக்கும் தானே காரணம்னு தெரிஞ்சு.. உடனே திடமா நிமிர்ந்து கேட்டான்..

“குரு.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நான் போயிப் பேசிப் பாக்கட்டுமா?”

“ப்ச்… வந்தவங்க போனவங்கன்னு எல்லாரும் பேசியாச்சு சாமி.. காதுல வாங்குனாத் தான?”

குரு சொல்லி முடித்ததும் சேச்சி அவசரமாச் சொன்னாங்க..

“இந்தச் சாமியால நடக்குமோ என்னவோ? வெளி ரூம்ல தான் படுத்திருக்கா.. போய் பேசிப் பாருங்க”

ஒரு எட்டு வைத்தவன் நின்று குருவைப் பார்த்து அழுத்தமாய்ச் சொன்னான்..

“இதுக்கு நிரந்தரத் தீர்வ.. காலமோ, ஐயப்பனோ தான் முடிவு பண்ணனும்.. நான் ஒரு தற்காலிகத் தீர்வக் கொண்டுக்கிட்டுத் தான் மனு கிட்டப் போறேன்.. அதுக்கு அது ஒப்புக்கிட்டா நீங்களும் மறுக்காம அத ஏத்துக்கணும்..”

“ஏதோ ஒண்ணு நல்லது நடந்தா சரி சாமி”

தன் பைனான்ஸ்க்குப் பக்கத்துவ இருந்த மளிகைக் கடைல குளுக்கோஸ் பாக்கெட் ஒண்ண வாங்கிட்டு சக்தி யோசனையோடு அவள் வீட்டிற்குள் நுழைந்தான்.. மூணு நாளா பச்சத் தண்ணி கூட குடிக்காம கெடக்கறவளுக்கு எடுத்த உடனே திட உணவு குடுத்தா தப்பாயிடலாம்.. அது சரி.. எந்த நம்பிக்கைல மனு தான் சொன்னா கேட்டு உண்ணா நோன்பக் கை விடுவான்னு குளுக்கோஸ் வாங்கிட்டுப் போறோம்னு நெனைக்கைல சக்திக்கு ஆச்சரியமா இருந்தது.. 

நம்பிக்கை ! எல்லாத்துலயும் நம்பிக்கையோட அடியெடுத்து வைக்கறது அவன் பாலிஷி .. பத்துக்கு எட்டு பெயிலாயி ரெண்டு ஜெயிச்சாலும் சந்தோசம் தான்.. எட்டு தோத்துருச்சேன்னு அவனக் கேக்க முடியாது.. “எட்டு தோல்விலயும் மகத்தான அனுபவம் மிச்சமிருக்கே?அத வச்சு அடுத்த ஸ்டெப்ல அந்த எட்டையும் எனதாக்குவேன்”னு முன்ன விட நம்பிக்கையாச் சொல்லுவான்.. ஆனால், அவனுக்குத் தெரியவில்லை.. காலமும் கடவுளும் முடிவு செய்துள்ள தீர்வு முற்றிலும் வேறு என்பது..!

அவன் ‘மனு’ன்னு கூப்பிட்டுக்கிட்டே உள்ள போன போது படுத்திருந்தவ கைய ஊணி எந்திரிச்சா.. மனுவா அது? எப்பவும் உற்சாகமா, வெளிச்சமா மின்னற அந்ந முகம் எங்கே? இருளண்டி, கருத்து, சோர்வா தெரியற அந்த முகத்த சக்தியால பாக்கவே முடியல.. இத்தனையும் தன்னாலன்னு நெனைக்கறப்ப வெறுப்பா இருந்தது அவனுக்கு.. சுத்தி வளைக்காம நேரடியா விசயத்தத் தொட்டான்..

“என்ன மனு.. மூணு நாளா சாப்பிடலையாமே? காந்தி இந்த உண்ணா விரதத்தை எவ்வளவு அற்புதமான விசயத்துக்கு கைல எடுத்தாருன்னு தெரியும் தானே? நீ ஒரு சாதாரண விசயத்துக்கு இத யூஸ் பண்ணி உண்ணா விரதத்தோட காந்தியையும் மட்டந் தட்டறே பேபி”

மனுவால் உக்கார முடியாமல் ஒருக்களித்துச் சாய்ந்த படி வெறுப்பாய்ச் சொன்னாள்..

“காந்தி மகாத்மா.. மகத்தான காரியங்களுக்காகப் பிறந்தவர்.. நான் மனுஷி.. அதும் சாதாரண மனுஷி.. என்னால இப்படித் தான் பண்ண முடியும்”

சக்தி சில நொடிகள் அசந்துட்டான்னே சொல்லலாம்.. இந்தப் பொண்ணுக்கு தெளிவான புத்தி இருக்கு.. சரியா கைடு பண்ணி பட்டை தீட்டினா பிற்க் காலத்துல அற்புதமான பொண்ணா வருவா.. ஆனா,அத யாரு செய்யறது? இதும் காலமே முடிவு செய்யட்டும்.. இப்ப இவள சாப்பிட வெக்கறதே முக்கியம்.. அதும் எப்பாடு பட்டாவது..
அதனால பேச்ச அவ போற போக்குலயே கொண்டு போனான்..

“கரெக்ட் தங்கம்… எல்லாரும் மகாத்மாவானா அந்த மகாத்மாவுக்கே அர்த்தமில்லாம, வேலையில்லாம போயிடும்.. அதே சமயம் மனு.. சரியோ,தப்போ.. நாம செய்யற காரியத்துக்கும் ஒரு காரணம்,அர்த்தம் இருக்கணுமில்லையா? உன்னோட இந்த சிவ பட்டினிக்கான அர்த்தத்தை நான் தெரிஞ்சுக்கலாமா?”

“எல்லாத்துக்கும் காரணம், அர்த்தம் இருந்தே ஆகணுமா சாமி?”

“நிச்சயமா.. காரணமில்லாம காரியமோ, காரியமற்ற காரணமோ இங்க இல்ல பேபி.. யோசிச்சுப் பாத்தா உனக்கே புரியும்”

“அர்த்தமில்லாக் காரியங்களும் இருக்கலாமில்லையா?”

“நிச்சயமா இல்ல.. நியூட்டன் லா படி ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டுங்கறது உண்மைன்னா பின் விளைவுகள உண்டாக்கற எந்தக் காரியத்துக்கும் அரத்தங்கள் உண்டு.. இன்னுஞ் சொல்லப் போனா அர்த்தமில்லாத காரியத்துக்கு அர்த்தமில்லாததே காரணமா இருக்கலாம்”

“காதடைச்சுக் கெடக்கறவள பிலாஸபிலயே கொல்றீங்களே சாமி?”

சக்தி வாய் விட்டுச் சிரிக்க மனு முகத்துலயும் புன்னகை பூத்தது.. இப்பத் தான் இளக ஆரம்பிச்சிருக்கா.. இதே பாணில பேச்சக் கொண்டு போனா கரைஞ்சுடுவான்னு நம்பிக்கை வர சக்தி உற்சாகமா பேச்சைத் தொடர்ந்தான்..

“பிலாஸபிய ஆரம்பிச்சு வச்சது நீ தான் பேபி”

மனு கன்னத்துல கைய வச்சு அதிசயமா பாவிச்சுக் கேட்டா…

“அது எப்படியாம் பேபி?”

மீண்டும் உரக்கச் சிரித்தான் சக்தி.. மனு அவன் முகத்தையே உற்றுக் கவனிக்க அதைக் கவனித்தவன் சிரிப்பை நிறுத்திக் கேட்டான்..

“என்ன மனும்மா.. அப்படிப் பாக்கறே?”

எதையோ சொல்ல வாயெடுத்தவள் தலையசைத்து மறுத்த படி சொன்னாள்..

“ஒண்ணுமில்ல”

“சும்மா சொல்லும்மா”

“எதுக்கு வம்பு? நான் ஒண்ணச் சொல்லி இந்த வேதாளம் மறு படியும் முருங்கை மரத்துலயே ஏறிட்டா..?”

சொல்லி முடித்து அவள் சிரித்த படியே தெம்பாய் எழுந்து அவிழ்ந்து கிடந்த கூந்தலைக் கொண்டை போட சக்தி ஆச்சரியமாய் பார்த்தான்.. மனுவுக்கு நீண்ட கூந்தல்.. இடுப்பையும் தாண்டி நீள்வது.. வெகு நாளாய் கத்தரி காணாதது.. அவள் தலைக்கு ஒரு பின் மகுடம் போல் அது அலங்கரிக்க ‘இவள் எல்லாத்துலயும் பெண்மையின் பூரணம் வாய்ந்தவள்’என்ற எண்ணத்திற்கு சக்தி வெட்கப் பட்டான்.. ச்சீ!மாலையப் போட்டுக்கிட்டு சின்னப் பொண்ண ரசிக்கறதாவது? பார்வைய வேற பக்கம் திருப்பிக்கிட்டுச் சொன்னான்..

“கவனி மனு.. இப்ப சரிக்குச் சரியா நிக்கற கால்ல கத்தி கட்டின சண்டக் கோழியா நான் இப்ப வரல.. வெள்ளைக் கொடிய பறக்க விட்டு சமாதான தூதுவனா,உன் பிரண்டா வந்திருக்கேன்”

அவள் விழிகளை ஆச்சரியத்தில் அகல விரித்து நம்பாமையுடன் சொன்னாள்..

“நீங்களா.. சமாதானத் தூதா ?? நம்ப முடிய வில்லை.. வில்லை.. வில்லை”

சக்தி லேசாய் இறுகி பின் தளர்ந்த படியே சொன்னான்..

“நம்பணும் மனு.. வந்து பத்து நிமிசமாயும் இன்னும் உங்கிட்ட சிரிச்சுப் பேசிட்டிருக்கறத வச்சே அதத் தெரிஞ்சுக்கலாம்”

“உண்மை தான்.. ஆனா,புலி சைவமாகுமா என்ன?”

இப்போது ரெண்டு பேர் கிட்ட இருந்தும் வெடிச்சுக் கெளம்பின சிரிப்பு அந்த ரூமையே அதிர வச்சுது..

“புலியும் சைவமாகறது உண்டு மனு.. நல்லா பசியெடுத்து வேட்டையாடி வயிறாரத் தின்னுட்டுப் படுத்த பின்னால அதும் பக்கத்துல புள்ளி மானே போனாலும் அது கண்டுக்காது.. ஸோ ஓஓஓ… திங்காத நேரமெல்லாம் புலியும் சைவ, அஹிம்சைப் புலி தான்”

மனு சளைக்காமல் அவனைப் போலவே பேசிக் காட்டினாள்…

“ஸோ ஓஓஓ.. புலிக்குப் பசி வந்தா இம்சை தான்.. இல்லையா?”

“அத அப்பப் பாத்துக்கலாமே பேபி.. அதுக்குள்ள புலியவே இன்னொரு பெரிய விலங்கு அடிச்சுக் கொன்னுடலாம்..”

மேற்க் கொண்டு பேச முடியாமல் மனு இடை மறித்தாள் வேகமாய்..

“ச்சீ.. என்ன இப்படிப் பேசறீங்க.. அப சகுனமா…?எனக்குப் பிடிக்கல”

சக்தி உடனே பேச்சை மாற்றினான்..

“சரி.. உனக்குப் பிடிக்கலேன்னா அந்த டாபிக் வேண்டாம்.. இப்பச் சொல்லு மனு.. எதுக்காக கொஞ்சம் முன்ன என்ன ஆராய்ச்சிக் கண்களோட பாத்தே?”

”அதுவா? ஒரு கைல சிகரெட்டும், இன்னொரு கைல பிராந்தி டம்ளருமா மூஞ்சி வேத்து செவந்த கண்ணா பாத்துப் பழகின எனக்கு.. நெத்தி நிறைய சந்தனம், முகம் பூரா சாந்தியும் சிரிப்புமா பாக்கறப்ப… இது எவ்வளவு நல்லா இருக்கு.. இப்படியே காலம் பூரா இருந்தா எப்படி இருக்கும்னு அப்ப யோசிச்சுப் பாத்தேன்”

“ஓ… இது பசியாறி ரெஸ்ட் எடுக்கற சைவப் புலி மனு.. பசியெடுத்தா ரெஸ்ட்டுக்கு ரெஸ்ட் குடுத்துட்டு வேட்டைல எறங்கும்”

“புலிக்கு ஓ.கே.. அதுக்கு வேட்டையாடினாத் தான் உயிர் பிழைக்கற வாய்ப்பு.. மனுசங்களுக்கு அது தேவையா என்ன?”

சக்தி சில நொடிகள் பேச்சற்று அமர்ந்திருந்தான்.. அவனுக்கு யாருமே அட்வைஸ் பண்ணினதில்ல..அதோட, விடாப் பிடியா இவ்வளவு நேரம் நீண்ட வாதங்களும் செஞ்சதில்ல.. நாலஞ்சு வார்த்தைகள்லயே எதிராளிய திகைக்க வைக்கறவன் மனு கிட்ட இப்ப பேசற சக்தி இல்லாம உக்காந்திருந்தான்.. சக்தி இல்லைங்கறத விட இப்ப அவகிட்ட பேச விரும்பலைன்னே சொல்லலாம்.. அதனால, மென்மையாச் சொன்னான்..

“நமக்கு இதப் பத்திப் பேச பின்னால ஏகப் பட்ட நேரமிருக்கு மனு.. கோயிலுக்குப் போயிட்டு வந்து வச்சுக்கலாம்”

“நெஜமா பேபி? கோயிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் வராம எஸ்கேப் ஆயிட்டா..?”

சக்தி உறுதியாய்ச் சொன்னான்..

“சக்தி வாக்குக் குடுத்துட்டா மீறுனதா சரித்திரமே கிடையாது..”

“நம்பறேன்..”

“நம்பித் தான் ஆகணும் மனு.. ஏன்னா,காலைல ஒம்பது மணிக்கு பைனான்ஸ்க்கு வந்து தானே ஆகணும்..உங் கண்ணுக்குத் தப்பிச்சு எங்கயும் ஓடிட முடியாது”

இதச் சொல்லிக்கிட்டே சக்தி ஏந்திரிச்சு சமையல் கட்டுக்குப் போயி ஒரு டம்ளர்ல தண்ணியும், கூடவே காலி டம்ளரையும் எடுத்துட்டு வந்தான்.. குளுக்கோஸ் பாக்கெட்ட ஒடைச்சு காலி டம்ளர்ல பாதியக் கொட்டி அதுல தண்ணிய ஊத்தி குளுக்கோஸ் கரைய ஆத்தினான்.. அவன் காரியங்களையே குறும்பா பாத்துக்கிட்டிருந்த மனு கேட்டா..

“ஒரு வேளை மாலை கழட்டின பின்னால நீங்க வரலீன்னா உங்களத் தேடி பைனான்ஸ்க்கு நான் வரலாமா?”

“தாராளமா… ஒரு வேளை வருவானேன்? எப்பெல்லாம் ப்ரீயா இருக்கையோ அப்பெல்லாம் வரலாம்.. சும்மா வர்றத விட வர்ற சம்மர் லீவுல கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போயி கம்ப்யூட்டர் கத்துக்கிட்டு வா.. ஏன்னா,இனி எல்லாத்துலயும் கம்ப்யூட்டர் தான் ஆட்சி செய்யும்.. பைனான்ஸ்க்கு ஒண்ணு வாங்கி அதுல வரவு,செலவு கணக்க ஏத்திக் குடுக்கறதோட எனக்கும் கம்ப்யூட்டர் சொல்லிக் குடேன்”

இவன் சொல்லச் சொல்ல உற்சாகமாய் விரிந்த விழிகளும் முகமும் எதையோ நினைத்து உடனே சோர்ந்து சுருங்கிய படி சொன்னாள்..

“அப்பா விட மாட்டார்.. போன வருசமே கேட்டுட்டேன்”

“அத நான் பாத்துக்கறேன் தங்கம்.. இந்த சம்மர்ல நீ கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போறே..”

“பணம் இல்லேம்பார்.. உங்க குரு சாமிய பத்தி உங்களுக்குத் தெரியாது”

“நான் பாத்துக்கறேன்னு சொன்னது பண விசயமும் சேர்த்தும்மா..”

உடனே வேகமாய் தலையாட்டி மறுத்துச் சொன்னாள்..

“ம்கூம்.. அது நல்லா இருக்ககாது”

சக்தி இயல்பாய்ச் சொன்னான்..

“லூசு.. வட்டிக்குப் பணம் குடுக்கறவன் எதையும் சும்மா செய்வானா? உனக்குப் பண்ற செலவுக்கு ஈடா நாலு மடங்கு உங்கிட்ட வட்டியும் மொதலுமா வசூல் பண்ணிடுவேனாக்கும்.. என் கணக்கையெல்லாம் நீ தான் கம்ப்யூட்டர்ல ஏத்தறதோட எனக்கும் சொல்லித் தரணும்.. நீ ரெண்டு மாசத்துல கத்துக்கறத எம் மர மண்டைல ஏத்த ஆறு மாசமாகும்.. தெரியுமா? இங்க சும்மாங்கறது ஒண்ணுமே இல்ல மனு”

சொல்லிக்கிட்டே ஆத்தி சுத்தமா கரைஞ்ச அந்த குளுக்கோஸ் டம்ளர அவ கிட்ட நீட்டிச் சொன்னான்..

“இதக் குடி மனு”

மனு அதப் புரியாத மாதிரி பாத்துக்கிட்டு கேட்டா..

“மை டியர் சமாதானப் புறாவே.. இப்ப என்ன சமாதானம் ஆயிட்டுதுன்னு என்ன இதக் குடிக்கச் சொல்றீங்க?”

சக்தி துளியும் தயங்காமல் சொன்னான்..

“இன்னிக்கு உடனே மாலை போடச் சொல்லிக் கேக்காத மனு.. உன் அப்பா ஒரு குரு சாமி! பல பேர கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகக் கடமைப் பட்டவர்.. கெளம்பற வரைக்கும் எதும் நடக்கலைன்னா கடைசி நேரத்துல மாலை போட்டு நீ இரு முடி நிறைக்கலாம்.. இதுக்கு நாங் கேரண்டி.. இதத் தவிர வேற வழியில்ல.. நீ ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும் பேபி”

இப்பவும் டம்ளர வாங்காம கேட்டா..

“கடைசி நேரத்துல அப்பா ரிவர்ஸ் அடிச்சா?”

சக்தி துளியும் யோசிக்காமல் உறுதியாய்ச் சொன்னான்..

“அவர் எனக்குப் போட்ட மாலைய கழட்டி அவர் காலடில வச்சுட்டு நானும் உங்கூடவே இருந்துக்குவேன்.. கோயிலுக்குப் போக மாட்டேன்”

“இப்ப உங்களுக்கு நான் யாரு.. சண்டக் கோழியா?”

அன்பும் ஆதரவுமாய் அவள் உச்சந் தலையில் கை வைத்துச் சொன்னான்..

“இல்லடா.. என் பிரண்ட்.. உனக்கொண்ணு தெரியுமா? இன்னிய வரைக்கும் எனக்குப் பிரண்டுன்னு சொல்லிக்க யாரும் கெடையாது.. இனிமே நீ தான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கற ஒரே குளோஸ் பிரண்ட்.. சொல்லிப் பாரு மனு.. சண்டக் கோழி.. சமாதானப் புறா.. சக தோழன்,தோழி… நல்லா இருக்கு இல்ல?”

சிரிக்கும் அவன் முகம் பார்த்த படி நீட்டிய டம்ளரை வாங்கிய படியே புன்னகையுடன் சொன்னாள்..

“சண்டக் கோழி.. சமாதானப் புறா.. சக தோழன்,தோழி.. ம்.. சூப்பரா இருக்கு.. ஆனா,அந்தப் புலி உதாரணம் தான் அப்பப்ப வயித்தக் கலக்குது பேபி”

ஆனந்தமாய் வாய் விட்டுச் சிரிக்கும் இருவரையும் பார்த்து குரூரமாய் புன்னகைத்தது விதி..!

(தொடரும்….

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!