KNKfinal2

1438
அடுத்த வாரம் மீண்டும் பொழிலரசியை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் அவனுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆகி இருந்த மருத்துவர் ஒருவரின் வாயிலாக ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற மூளை நரம்பியல் டாக்டர் பிரான்சிஸ் இந்தியா வரும் தகவலை அறிந்து கொண்டவன் அரசிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக இலட்சக்கணக்கில் பணத்தை தண்ணீராக செலவழித்து அவரை வரவழைத்து இருந்தான்.ஏற்கனவே மெயிலில் அரசியின் மருத்துவக் அறிக்கைகளை அவருக்கு அனுப்பி வைத்து விட்டதால் அவற்றை முதலில் ஆராய்ந்து பார்த்தார்.அதன்பிறகு உள்ளூரில் அரசிக்கு மருத்துவம் பார்த்த டாக்டரிடமும் அவர் பேசி தன்னுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தான் விக்ரமாதித்யன்.
அதற்கடுத்து எல்லா ஏற்பாடுகளும் மளமளவென நடக்க அடுத்த முறை விக்ரமாதித்யன் அரசியை சந்திக்கும் பொழுது அவன் வந்து சேரும் முன்னரே அவளுக்கு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு இருந்தது.அரை மயக்க நிலையிலும் ஆதித்யன் வந்ததை உணர்ந்து கொண்ட அரசி “விக்கிரமா” என்று குரல் கொடுத்து அவனை நோக்கி கையை நீட்டினாள்.
“என்னை என்ன செய்யப் போறாங்க விக்கிரமா? டாக்டர் தாத்தா ஊசி எல்லாம் போட்டாரு.எனக்கு ஒரே மயக்கமா வருது”
“ஒண்ணும் இல்லை பொழில்…உனக்கு தூக்கம் வர்றதுக்காக மருந்து கொடுத்து இருக்காங்க…வேற ஒண்ணும் இல்லை.நீ தூங்குடா”
“சொல்ற பேச்சு கேட்கலைனா டாக்டர் தாத்தா ஊசி போடுவாங்கன்னு நீதானே சொன்ன…நான் இனி சொல்ற பேச்சு எல்லாம் கேட்டு சமத்தா இருக்கேன்.என்னை கூட்டிட்டு போய்டு விக்கிரமா…எனக்கு பயமா இருக்கு.ப்ளீஸ்!”அரைகுறை மயக்கத்தில் தன்னுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் தன்னவளின் நிலைமை கவலை அளித்தாலும் வேறு வழியின்றி அவளைத் தேற்றி அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தான்.
கொஞ்சம் சிக்கலான ஆபரேஷன் என்பதால் ஆபரேஷன் முடிய எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகி விடும் என்று ஏற்கனவே சொல்லி இருந்ததால் ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்திருக்கத் தொடங்கினான்.அப்பொழுது தான் கவனித்தான் அருகில் மகேந்திரன் இல்லாததை.சற்று நேரம் கழித்து சோர்ந்து போய் களையிழந்த முகத்துடன் வந்தவரை பார்த்தவன் அதிர்ந்து தான் போனான்.கண்களில் இரண்டிலும் கருவளையத்துடன் அளவுக்கு அதிகமான வருத்தத்தையும் தேக்கி இருந்தது அவர் முகம்.
“என்ன சார்…இப்படி இருக்கீங்க?கொஞ்சம் ரிஸ்க்கான ஆபரேஷன் தான்.ஆனா பொழிலரசிக்கு நினைவு திரும்ப எழுபது சதவீதம் வாய்ப்பு இருக்குனு டாக்டர் உறுதியா சொல்லி இருக்கார்.நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க”என்றான்.ஒருவேளை மகளின் ஆபரேஷனையே நினைத்து சரியாக தூங்காமல் இப்படி இருக்கிறாரோ என்று ஆறுதல் கூறி அவரை தேற்ற முனைந்தான்.
அவரோ ஆதித்யனின் பேச்சுக்களை காதில் வாங்கிக் கொண்டாலும் ஒரு வார்த்தை பேசவில்லை.கண்கள் கலங்கி எந்நேரம் வேண்டுமானாலும் கண்ணீர் விழத் தயாராக இருந்தது.அவரின் முகத்தோடு சேர்ந்து அகமும் கலங்கி இருப்பது ஆதித்யனுக்கு புரிந்தாலும் ஆபரேஷன் குறித்து பயந்து போய் இருக்கிறார் என்றே நினைத்தான்.அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கைகளைத் தட்டிக்கொடுத்து ஆறுதலாக புன்னகைத்தான்.அடுத்த சில மணி நேரங்கள் மௌனத்திலேயே கழிய ஆபரேஷன் முடிந்து வெளிவந்த டாக்டர் பிரான்சிஸ் முகம் எங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க ஆதித்யனிடம் கைக் குலுக்கினார்.
“ஆபரேஷன் சக்சஸ் ஆதித்யா…இனி கொஞ்ச நாளைக்கு அவங்க மூளைக்கு கண்டிப்பாக ஓய்வு அவசியம்.அனாவசிய அலட்டல் எதுவும் இல்லாம அவங்களை நல்லா ரெஸ்ட் எடுக்க விடுங்க…தலையில் லேசர் ட்ரீட்மெண்ட் தான் பண்ணி இருக்கோம்.ஸோ காயம் எதுவும் இருக்காது.இருந்தாலும் கொஞ்ச நாள் அவங்க முழு ஓய்வில் இருக்கட்டும்.அப்புறம் முக்கியமான விஷயம் அவங்களுக்கு செஞ்சு இருக்கிற ஆபரேஷன் கொஞ்சம் சிக்கலானது.அவங்க மூளை இப்ப ரொம்ப குழப்பத்தில் இருக்கும்.இப்போ அவங்க தெளிவில்லாத மனநிலையில் தான் இருப்பாங்க.அதனால அவங்க நார்மல் ஆகிற வரை அவங்களை தனியா விடாதீங்க.முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு துணைக்கு யாராவது இருங்க.இந்த மாதிரி நேரத்தில் சில பேர் கொஞ்சம் ஆக்ரோஷமா நடந்துப்பாங்க.சில மாதங்கள் பொறுத்து மெல்ல மெல்ல பழைய விஷயங்களை அவங்களுக்கு பேசி புரிய வைக்க ஆரம்பிச்சா,நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.அவங்களுக்கு நினைவு திரும்பறது ரொம்ப இயற்கையா நடக்கணும்.அதை விட்டு அவங்க மூளையை போட்டு கசக்கி,எதையும் நியாபகத்திற்கு கொண்டு வர முயற்சிக்கக் கூடாது.அதுவரை எந்தக் காரணம் கொண்டு அவங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்”என்று ஆங்கிலத்தில் சொன்னவர் இருவரிடமும் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மகேந்திரனின் கைகளைப் பிடித்து குலுக்கிய ஆதித்யன் எதிர்கொண்டது அவரின் வெறுமை நிறைந்த பார்வையே…ஆதித்யனின் மனதில் மூலையில் எதுவோ சரியில்லை என்று குரல் சொன்னது.ஆனால் இப்பொழுது அதைப் பற்றி கேட்டாலும் அவர் நிச்சயம் வாயைத் திறந்து எதுவும் சொல்ல மாட்டார் என்று தோன்றவே மௌனமாகவே இருந்து விட்டான்.
அரசி கண் விழிக்க மேலும் நான்கு மணி நேரம் ஆகும் என்று டாக்டர்கள் சொல்லவே அதுவரை தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று பார்க்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு திரும்பி விடலாம் என்ற எண்ணத்துடன் மகேந்திரனிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.வழியெங்கும் ஆதித்யனுக்கு இதே யோசனையாகத் தான் இருந்தது.ஆபரேஷன் தான் வெற்றி அடைந்து விட்டதே அப்புறமும் கூட அவர் ஏன் அப்படி இருந்தார்.எதுவோ சரியில்லை.இரவு மீண்டும் அவரை சந்திக்கும் பொழுது  இது குறித்து அவரிடம் பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதற்குப்பிறகு தன்னுடைய வேலைகளில் மூழ்கி விட்டான்.
வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பியவன் குளித்து விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்புவதாக முடிவு செய்து விட்டு குளியல் அறைக்கு நுழைய முயன்றவனை அவன் மொபைல் ஒலி தடுத்து நிறுத்தியது.அழைப்பு மருத்துவமனையில் இருந்து வந்து இருக்கவே அவசரமாக எடுத்துப் பேசினான்.
“சார்…அரசிக்கு நினைவு திரும்பியதில் இருந்து ரொம்ப வயலண்டா நடந்துக்கறாங்க..யார் பேச்சையும் கேட்க மாட்டேங்குறாங்க.கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வாங்க”
“அவளுக்கு பழைய நினைவு எதுவும் திரும்பிடுச்சா?” ஆவலுடன் கேட்டான் ஆதித்யன்.
“இல்லை சார்…அவங்க ஏதோ வெறி பிடிச்சா மாதிரி நடந்துக்கிறாங்க.கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.அவங்க அப்பா நம்பர் எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.ஆனா லைன் கிடைக்க மாட்டேங்குது.எங்கே இருக்கார்னு தெரியலை”
“இதோ வர்றேன்” என்று சொன்னவன் சாப்பிடக் கூட இல்லாமல் மீண்டும் வேகமாக மருத்துவமனைக்கு ஓடினான்.போகும் வழியெல்லாம் அவன் மனம் முழுக்க ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது.’அரசியை தனித்து விட வேண்டாம் என்று டாக்டர் அத்தனை முறை தெளிவாக சொல்லியும் அரசியின் அப்பா எங்கே போனார்? காலையில் ஆபரேஷன் நடக்கும் போது கூட லேட்டா தான் வந்தார்…என்ன ஆச்சு அவருக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்ற யோசனையுடன் மருத்துவமனைக்கு விரைந்தவன் காரைப் பார்க் செய்து விட்டு கீழே இறங்கும் முன் கண்ட காட்சியில் அவனுக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
மருத்துவமனையின் மொட்டை மாடியில் இருந்து பொழிலரசி நின்று கத்தி கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தாள்.அவளை சமாதானம் செய்தபடியே நெருங்க முயற்சித்தவர்களை கையில் கிடைத்த பொருட்களை  கொண்டு தாக்கினாள்.அவளிடம் நெருங்கவே முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் திணறிக் கொண்டு இருக்க லிப்ட் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வேகமாக இரண்டு இரண்டு படிகளாக ஏறி மொட்டை மாடியை அடைந்தான்.அவன் மேலே ஏறி வருவதற்குள் அரசி அங்கிருந்த வாட்டர் டேங்கின் மீது ஏறி கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தாள்.ஆதித்யன் அவளை நெருங்கிப் பேசத் தொடங்கும் முன் கால் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த அரசி நீச்சல் தெரியாமல் உயிர் காற்றுக்கு போராடியபடியே தண்ணீரில் தத்தளித்தாள்.
நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனை ஊழியர்களை விட வேகமாக வாட்டர் டேன்க் மேல் ஏறி அடுத்த நிமிடம் தண்ணீருக்குள் குதித்து விட்டான் ஆதித்யன். தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியவளின் அருகில் வேகமாக நீந்திச் சென்று அவளின் தலைமுடியை பற்றி இழுத்துக் கொண்டு மேலேறி வந்தவன் அவளை  அப்படியே தோளில் போட்டுக் கொண்டு வாட்டர் டேங்கின் வெளியே இருந்த மேடை போன்ற இடத்தில் கிடத்தினான்.அவள் நிறைய தண்ணீரை குடித்ததை உணர்ந்து முதலில் அவளது வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியே எடுக்க முயன்றான்.தண்ணீரை வெளியே எடுத்த பிறகும் கூட அரசிக்கு மயக்கம் முழுதாக தெளியவில்லை.ஒரு நொடி நிதானித்தவன் அவளின் வாய் வழியாக தன்னுடைய மூச்சை கொடுத்து அவளுக்கு உயிர் கொடுக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.
அதன்பிறகு மருத்துவமனை ஊழியர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள ஈர உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்து விட்டான் ஆதித்யன்.அன்று நாள் முழுக்க ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வேலையின் காரணமாக அப்படியே மருத்துவமனை வளாகத்தில் இருந்த சேரிலேயே தூங்கி விட நடு இரவில் அவனுக்கு அடுத்த கட்ட அதிர்ச்சியை கொடுத்தது விதி.உன்னுடைய போராட்டங்கள் இன்னும் முடியவில்லை இனி தான் ஆரம்பம் என்று சொல்லாமல் சொல்வது போல ஒலித்தது அவனது மொபைல்.கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச,விடாது ஒலித்த போனை மனமே இன்றி எடுத்தான் விக்ரமாதித்யன்.
ஆனால் வந்த போன் அழைப்பு அவனது மொத்த தூக்கத்தையும் பறித்துக் கொண்டு விட்டது.மகேந்திரன் தற்கொலை முயற்சி செய்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் உயிருக்குப்  போராடிக் கொண்டு இருப்பதாக தகவல் வரவும் நேரத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரை சேர்த்து இருக்கும் மருத்துவ மனைக்கு புயல் போல காரை ஓட்டிச் சென்றான்.
காரை ஒழுங்காக பார்க் கூட செய்யாமல் விழுந்தடித்துக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினான் விக்ரமாதித்யன்.ஐசியூ அறையின் முன்னே ஒரு சில காவலர்கள் அவனுக்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தனர். ‘போலீஸ்க்கு இங்கே என்ன வேலை?ஒருவேளை தற்கொலை முயற்சி என்பதால் வந்து இருப்பார்களோ’ என்று ஒரு விநாடி தயங்கியவன் அடுத்த விநாடி தன்னுடைய சிந்தனை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு அந்த அறையினுள் புகுந்து விட்டான்.அவனை அங்கே யாருமே தடுக்கவில்லை.அவன் வருவான் என்று அவர்களும் எதிர்பார்த்தார்களோ என்னவோ?
அறையின் உள்ளே உடலில் ஆங்காங்கே சில வயர்கள் இணைக்கப்பட்டு இருக்க,செயற்கை முறையில் சுவாசம் வந்து கொண்டு இருந்தது.நர்ஸ் ஆதித்யன் வந்து இருப்பதை அவர் காதருகில் குனிந்து சொல்லவும் மிக சிரமப்பட்டு தன்னுடைய கண்களைப் பிரித்து ஆதித்யனைப் பார்த்தார். இமைகளை மிகவும் சிரமப்பட்டு பிரித்தவர் ஆதித்யனை அடையாளம் கண்டு கொண்டதன் அறிகுறியாக அவரது விழியில் சட்டென கொஞ்சம் பிரகாசம் கூடியது.ஆதித்யனுக்கு ஏனோ அணையப் போகும் விளக்கு சுடர்விட்டு எரிவதை போல தோன்ற இன்னும் அவரை நெருங்கி அமர்ந்து கொண்டான்.
அந்தப் பார்வையில் இருந்தது என்ன? அவனுக்கு புரியவில்லை.எதையோ யாசிப்பது போல இருந்த அவரின் பார்வையின் பொருளை உணர முடியாமல் மெல்ல தயங்கியபடியே பேச்சை ஆரம்பித்தான்.
“ஏன் இப்படி செஞ்சீங்க?”அவனையும் அறியாமல் துக்கம் அவன் தொண்டையை கவ்வியது.இவரிடம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது பொழிலரசியை திருமணம் செய்து கொள்வது குறித்து பேச வேண்டும் என்று நினைத்து இருந்தோமே என்ற எண்ணம் வேறு அவனை வாட்டி வதைத்தது. ‘இருக்கும் ஒற்றை மகளைக் கூட தனித்து விட்டு செல்லும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்?அதுவும் மனநிலை சரியில்லாமல் குழந்தை போல இருக்கும் என்னுடைய பொழிலை பற்றி இவர் கொஞ்சமும் கவலையே படவில்லையே…’உள்ளத்து பொருமலை எல்லாம் கண்களில் தேக்கியபடி நின்று கொண்டு இருந்தான் விக்ரமாதித்யன்.
“ஏன் சார் ஏன் இப்படி செஞ்சீங்க?அப்படி என்ன கஷ்டம்?அதுதான் உங்க பொண்ணோட ஆபரேஷன் கூட முடிஞ்சு போச்சே…இன்னும் கொஞ்ச நாளில் எல்லாமே சரியாகிடும்.அதுக்கு அப்புறம் என்னென்னவோ கற்பனை எல்லாம் செஞ்சு வச்சு இருந்தேனே…என்னை விடுங்க சார்…பொழிலை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா சார்”என்ன முயன்றும் அவனுடைய கோபம் குறையாமல் இருக்க தன்னுடைய ஆதங்கத்தை அவரிடம் கொட்டி விட்டான் ஆதித்யன்.
“எ…எல்லாம் அ…அரசிக்காகத் தான் த…தம்பி…..அ…அவளோட நல்வாழ்க்கைக்காக தான்”ஆக்சிஜன் மாஸ்கை எடுத்து விட்டு திணறித் திணறி பேசினார்.
“என்ன உளறல் இது…சரி சரி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.இப்போ உங்களுக்கு ஓய்வு தேவை…”என்று பேசிக் கொண்டே போனவனை ஒற்றை கை அசைவின் மூலம் தடுத்து நிறுத்தினார்.
“அது வரைக்கும் எனக்கு நேரம் இல்ல தம்பி…” என்றவர் கையில் வைத்து இருந்த இரண்டு கடிதத்தில் ஒன்றை அவனிடம் கொடுத்து “இது உங்களுக்கு…மற்றொன்று அரசிக்கு…போலீஸ்க்கு தனியா எழுதி அவங்ககிட்டயே கொடுத்திட்டேன்” என்று சொல்லிவிட்டு பிரித்து படிக்குமாறு சைகையில் சொல்லிவிட்டு அதற்கு மேலும் பேச முடியாமல் சோர்ந்து போனார்.அவசர அவசரமாக தனக்கு எழுதி இருந்த கடிதத்தை பிரித்து படிக்கத் தொடங்கினான் விக்ரமாதித்யன்.
அன்புள்ள,பிரியமுள்ள,பாசமுள்ள
இந்த கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை தம்பி.ஆண்டவன் என்னை அழைத்துக் கொள்ளத் துடிக்கிறான்.அதனால் நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெளிவாக சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாததால் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதி இருக்கிறேன்.இன்னொரு கடிதத்தை என்னுடைய மகள் தெளிவடைந்த பிறகு அவளிடம் சேர்த்து விடுங்கள்.
உங்க மாமா சொல்லிய ஜோசியரிடம் அரசியின் ஜாதகத்தை எடுத்துச் சென்று காண்பித்தேன் தம்பி.அவர் சொன்ன விஷயம் தான் என்னால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.” என்று எழுதி இருந்த கடிதத்தின் அடுத்த வார்த்தைகள் மேல் அவருடைய கண்ணீர் துளி பட்டு வார்த்தைகள் ஆங்காங்கு தெளிவில்லாமல் இருந்தது.அங்கு நடந்ததாக சொல்லப் பட்டு இருந்த விஷயங்கள் ஆதித்யனின் கண் முன்னே தோன்றலாயிற்று.
“உங்க பொண்ணு அரசியின் வாழ்க்கை இப்படி இருப்பதற்கு முழுக் காரணமும் நீங்க தான்.அதாவது உங்க ஜாதக அமைப்பு தான்”.
“அதற்கு ஏற்ற பரிகாரம் எதுவும் இருக்கிறதா?எதுவா இருந்தாலும் சொல்லுங்க சாமி அப்படியே செஞ்சிடலாம்”பெற்ற மகளின் வாழ்வு சிறக்காமல் இருப்பதற்கு அவர்தான் காரணம் என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.எப்படியாவது அதை சரி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உந்த அவரின் பாசம் நிறைந்த உள்ளம் அவரை அப்படி பேச வைத்தது.
“காளி தேவிக்கு சின்னதா ஒரு பலி கொடுத்தா போதும்.சகல தோஷமும் நிவர்த்தி ஆகிடும்.”
“உஃப்ப்ப் அவ்வளவு தானே சாமி..செஞ்சிடலாம்.நல்ல வெடக்கோழியா பார்த்து ஏற்பாடு பண்ணிடறேன்”
“ஹா ஹா ஹா…என்னது கோழியா? அதெல்லாம் ஊர் எல்லையில் இருக்கும் சின்ன சின்ன காவல் தெய்வத்துக்கு தான்.உலகத்தையே காத்து அருளும் லோக மாதாவுக்கு அது எப்படி போதும்”
“வே…வேற என்ன சாமி செய்யணும்.நீங்களே சொல்லுங்க”அவருக்கு தெரிந்து எப்பவும் கோவில்களில் ஆடு,கோழி தான் பலி கொடுப்பார்கள்.அப்படி எண்ணித் தான் அவரும் கேட்டது.ஆனால் ஜோசியர் அதை மறுக்கவும் வேறு என்ன வழி என்று அவரிடமே திருப்பிக் கேட்டார் மகேந்திரன்.
“உங்க ஜாதகத்துல இருக்கிற தோஷத்துக்கு பிறந்த குழந்தை இல்லைன்னா இன்னும் கன்னி கழியாத வயசுப் பெண் இவர்களில் யாரையாவது பலி கொடுத்தா மட்டும் தான் லோக மாதா ஏத்துப்பா”கொஞ்சமும் அலட்டல் இன்றி சொன்னவரை பார்த்து மகேந்திரனுக்கு மயக்கம் வராத குறை தான்.
“எ…என்ன சாமி சொல்றீங்க…குழந்தையும் தெய்வமும் ஒண்ணு சாமி…அதைப் போய் கொல்ல சொல்றீங்களே?”பதைபதைத்தது அவர் குரல்.
“அப்படின்னா கல்யாணம் ஆகாத சின்னப் பொண்ணா பார்த்து பலி கொடுத்துடலாம்…”சர்வ சாதாரணமாக சொன்னவரை வெறித்து நோக்கியவர் எதையும் பேசாமல் எழுந்து வெளியேறப் போனவரை தடுத்து நிறுத்தியது ஜோசியரின் குரல்.
“இதில் எனக்கு எந்த லாபமும் இல்லை.இதை முறைப்படி செஞ்சா உன்னோட பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும்.இல்லைனா நஷ்டம் உனக்குத் தான்”என்று விட்டேற்றியாக சொல்ல ஒன்றும் பேசாமல் எழுந்து வந்து விட அதற்குப்பிறகு அந்த ஜோசியரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
ஆனால் மகேந்திரனுக்குத் தான் உள்ளுர உறுத்தத் தொடங்கியது.தன்னுடைய மகளின் நல்வாழ்வுக்கு எதிரியாக இருப்பது தான் தானோ என்ற எண்ணம் அவரை வாட்டி வதைக்க என்ன முயன்றும் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை.மேலும் சில நாட்கள் அதே நிலையில் நீடிக்க அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த ஜோசியர் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு பூஜைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
அன்றைய இரவே ஜோசியர் அவருக்கு அழைத்து பொழிலரசியின் ஜாதக அமைப்பிற்கு தோதாக ஒரு குழந்தையின் ஜாதகம் வெகுவாக பொருந்தி இருப்பதாக கூறியவர் நாளை மறுநாள் பூஜையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட மனமின்றி ஒப்புக் கொண்டார்.அவர் பேசிவிட்டு வைத்த பிறகு தான் உணர்ந்தார் அன்று தான் ஆதித்யன் அரசிக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்து இருப்பதை.மறுபடியும் ஜோசியருக்கு அழைத்து  “வேறு ஒரு நாளில் பூஜையை வைத்துக் கொள்ள முடியுமா” என்று கேட்க அவர் மறுத்து விட்டார்.
“அப்படி எல்லாம் தேதியை மாத்த முடியாது.பலி கொடுக்கிறதுனா என்ன சாதாரணமான விஷயம்னு நினைச்சுட்டீங்களா?அதுல எத்தனை விஷயம் இருக்கு தெரியுமா? உங்க பொண்ணோட ஜாதக அமைப்புக்கு ஏத்த மாதிரி தான் எல்லாத்தையும் முடிவு செய்யணும்.குறிப்பிட்ட நேரத்தில் பலி கண்டிப்பா கொடுத்தே ஆகணும்.இல்லேன்னா காளி இன்னும் உக்கிரமாகிடுவா…உங்க பொண்ணோட ராசிக்கு ஏத்த நட்சத்திரத்திலயும்,லக்னத்திலயும் பிறந்த குழந்தையையும் தான் பலி கொடுக்க முடியும்.அப்படிப்பட்ட குழந்தையை தேடிக் கண்டுபிடிக்கிறதே எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தேடி கண்டு பிடிச்சாலும் பெத்தவங்களுக்கு தெரியாம அந்தக் குழந்தையை திருடிக் கொண்டு வந்து அப்புறம் பலி கொடுக்கிற வரை அந்தக் குழந்தையை பாதுகாத்து வச்சு இருந்து சரியான நேரத்துக்கு பலி கொடுக்கணும்.நீங்க என்னவோ அசால்ட்டா பேசறீங்க”பொரிந்து தள்ளினார் ஜோசியர்.
பச்சிளம் குழந்தையை கொல்லப் போகிறோமே என்ற வேதனை அவரை மனதை அரிக்கத் தொடங்க என்ன தான் மகளின் நல்வாழ்வுக்காக என்று மனதை தேற்றிக் கொண்டாலும் அவரால் முழு மனதோடு அந்த காரியத்தில் ஈடுபட முடியவில்லை.இரவுகளில் தூக்கத்தை தொலைத்துவிட்டு தவித்தார்.இந்த பூஜைக்காக ஜோசியர் கேட்டப் பெருந்தொகையை கூட நிலத்தை விற்றுக் கொடுத்து விட்டார்.ஆனால் அவரால் முழுமனதோடு அந்த பூஜையை ஏற்க முடியவில்லை.பூஜைக்கு போகாமலே இருந்து விடலாம் என்று நினைத்தால் அதையும் மறுத்து விட்டார் ஜோசியர்.
“கண்டிப்பாக நீங்க அங்கே இருந்தாக வேண்டும்” என்று உத்தரவாக சொல்லி விட என்ன செய்வது என்று தவித்துப் போனார் மகேந்திரன்.வேறு வழியின்றி பொழிலரசியை ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் சேர்த்து விட்டு ஆதித்யன் அங்கே வரும்முன் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.ஆதித்யன் வந்த பிறகு தன்னை கிளம்ப விடாமல் தடுத்து விட்டால் என்ற அச்சத்தின் காரணமாகவே அப்படி செய்தார்.
முதல் நாள் பார்த்த பொழுது வெள்ளை ஆடையும்,கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அணிந்து நெற்றியில் விபூதியை பட்டையாக அடித்து  இருந்த ஜோசியர் இன்று கருப்பு நிற ஆடையை அணிந்து நெற்றியில் குங்குமத்தால் திலகம் இட்டு இருந்தார்.அவர் கண்களில் இருந்த பளபளப்பு வெறியோ என்று சொல்லும் அளவுக்கு ஒரு வித அமானுஷ்ய பயத்தை மகேந்திரனுக்கு தோற்றுவித்தது.
முதல்நாள் பார்த்த இடம் போல தெய்வீகமாக இல்லாமல் அந்த இடமே ஏதோ சூனியமாக இருப்பது போல அவருக்கு தோன்றியது.அமைதி…எங்கும் அமைதி…மயான அமைதி என்று சொல்வார்களே அது போன்ற ஒரு அமைதி… ஜோசியர் கண் அசைக்கவும் அங்கிருந்த ஒருவன் எழுந்து சென்று எதிரில் இருந்த அறைக்குள் சென்று எதையோ எடுத்து வர சென்றான்.கதவை திறந்து அவன் மீண்டும் உள்ளே வந்ததும் அந்த இடத்தின்  அமைதியைக் கிழித்துக் கொண்டது கேட்டது ஒரு குழந்தையின் அழுகுரல்.
இனம் புரியாத உணர்வுகளால் தாக்கப்பட்ட மகேந்திரன் எழுந்து சென்று அந்த குழந்தையை பார்த்தார்.அழகான பெண் குழந்தை அவரைப் பார்த்ததும் ஏனோ அழுவதை நிறுத்திவிட்டு அழகாக பொக்கை வாயைத் திறந்து சிரித்து வைத்தது.வாயில் இருந்து எச்சில் ஒழுக ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சப்பியபடி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்த குழந்தை கெக்கே பிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தது.அவருக்கு அந்தக் குழந்தை சிறுவயது அரசியை நினைவூட்ட சில நிமிடங்கள் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தவர் கண்களில் கண்ணீர் வழிய வேதனையோடு அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு தூரப் போக சொன்னார்.
அவரை விட்டு நகர்ந்து சென்றதுமே குழந்தை மீண்டும் வீலென அழத் தொடங்க சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவருக்கு மனம் தாளவில்லை.மீண்டும் ஒருமுறை ஜோசியரிடம் பேசிப் பார்த்தார்.
“சாமி…இது வேண்டாமே…பச்ச புள்ளை சாமி…எனக்கு மனசு தாளலை…இதை பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்.இதுக்கு பதிலா எத்தனை ஆடு,கோழி வேணும்னாலும் பலி கொடுத்துடலாம்”
“யோவ்! இதென்ன விளையாட்டு சமாச்சாரம்ன்னு நினைச்சியா?நினைச்சு நினைச்சு மாத்துறதுக்கு.நேத்து நடுராத்திரியில் இருந்து அந்த குழந்தைக்கு இங்கே பூஜை நடந்துக்கிட்டு இருக்கு.காளிக்கு இதுதான் உன்னோட பலின்னு சொல்லியாச்சு.இனி இதைத்தவிர வேறு எந்தப் பொருளை கொடுத்தாலும் அதை அவ ஏத்துக்க மாட்டா.பலியை மாத்தி கொடுத்து அப்புறம் காளிக்கு கோபம் வந்துச்சுன்னா அப்புறம் உன் பொண்ணு வாழ்க்கையை ஜென்மத்துக்கும் காப்பாத்த முடியாது சொல்லிட்டேன்.”என்று கொஞ்சம் எரிச்சலோடு சொன்னவர் மீண்டும் ஹோம குண்டத்தின் முன் அமர்ந்து ஏதேதோ மந்திரங்களை சொல்லத் தொடங்கினார்.
மகேந்திரன் அவரின் கடைசி வார்த்தையில் நிச்சயம் ஆடித் தான் போனார்.மனதை கல்லாக்கிக் கொண்டார். ‘தன்னுடைய செல்ல மகள் பொழிலரசி…அவளுக்காக இதை செய்து தான் ஆக வேண்டும்.பிறந்த உடன் தாயை இழந்து விட்டாள்.தன்னுடைய பாட்டி இறந்த பிறகு கிட்டத்தட்ட இந்த மூன்று வருடங்களாக குழந்தை போலவே மாறி விட்டாள்.இதை செய்வதன் மூலம் அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என்றால் அதை செய்வதில் எந்தத் தவறும் இல்லை’என்று எண்ணியவர் கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
“சரி சரி சும்மா மசமசன்னு நிற்காதே…எல்லா மந்திரமும் முறைப்படி ஓதியாயிற்று.இப்பொழுது இங்கே வந்து எனக்கு எதிர்த்திசையில் வந்து நில்லு”ஜோசியரின் உத்தரவைக் கேட்டு முடுக்கி விட்ட பொம்மை போல அங்கிருந்து நகர்ந்து சென்று அவரின் முன்னால் போய் நின்றார்.அவரின் முன்னால் இருந்த மேடையில் குழந்தை கிடத்தப்பட்டு இருந்தது.
“இந்தா…குழந்தையின் கழுத்தை குறி பார்த்து வெட்டு…ஒரே வெட்டில் தலை தனியாப் போகணும்.புரிஞ்சுதா?”
“எ…என்னது…நா…நானா? நான் மாட்டேன்…நிச்சயம் மாட்டேன்”அதிர்ச்சியுடன் பின்னோக்கி சில அடிகளை எடுத்து வைத்தார் மகேந்திரன்.
“அட யார்றா இவன் சரியான லூசா இருக்கான்.யோவ் பலியை உன் கையால நீ தான் கொடுத்து ஆகணும்.அப்பத் தான் உன்னோட ஜாதக தோஷம் உன் பெண்ணை தாக்காமல் இருக்க காளி வழி செஞ்சுக் கொடுப்பா….ம்…யோசிக்காதே வெட்டு”இரக்கமின்றி துரிதப்படுத்தினார் ஜோசியர்.
கைகள் நடுங்க கையில் இருந்த பெரிய சைஸ் கத்தியை உயர்த்தியவரின் மனதுக்குள்  மிகப்பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது.ஒரு பக்கம் பெற்ற மகளின் முகம்,மறுபக்கம் பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தையின் முகம்.உடலெங்கும் வேர்த்து வடியத் தொடங்கியது அவருக்கு.கள்ளமில்லாமல் அவரைப் பார்த்து சிரித்த அந்த பச்சிளம் குழந்தையை கொல்ல அவருக்கு மனம் வரவில்லை.சற்று நேரம் கண்களை இறுக மூடியவர் கையில் வைத்து இருந்த அந்த கத்தியை கீழே போட்டார்.
“முடியாது…என்னால் நிச்சயம் முடியாது. வேண்டாம் சாமி இதை நிறுத்திடலாம்”
“யோவ் என்ன விளையாடுறியா?ஒழுங்கா வெட்டு”
“முடியாது சாமி”
“இதப்பாரு…காளிக்கு பலிப் பொருளை வச்சு பூஜை பண்ணியாச்சு.இனி பலி கொடுத்தே ஆகணும்.இல்லேன்னா என் உயிருக்கும் சேர்த்து தான் ஆபத்து.சொன்னா புரிஞ்சுக்க”
“எனக்கு மனசு வரலை சாமி…என் பொண்ணோட வாழ்க்கைக்காக இந்த இளம்குருத்தை கொல்ல எனக்கு மனசு வரலை.விதிப்படி அவளுக்கு என்ன நடக்கணுமோ நடக்கட்டும்.என்னை மன்னிச்சுடுங்க”
“அடப்பாவி…உன் பொண்ணோட வாழ்க்கையும் சேர்த்து தான் இப்ப நீ கேள்விக்குறி ஆக்குற…ஒழுங்கா அந்தக் குழந்தையை பலி கொடு.இல்லைனா காளி இன்னும் உக்கிரமாகிடுவா அப்புறம் உன் பொண்ணு வாழ்க்கை அவ்வளவு தான்”உச்சஸ்தாயில் அலறியவரை அலட்சியப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி வெளியே செல்ல முயன்றார் மகேந்திரன்.
“டேய்! அந்தாளைப் பிடிங்கடா…இப்போ இவன் கையால இந்த குழந்தையை பலி கொடுத்தே ஆகணும்.இல்லேன்னா என் உயிர் போய்டும்.அந்தாள் கையில் கத்தியை கொடுத்து எப்படியாவது இந்தக் குழந்தையை வெட்ட வையுங்கடா”என்று அவர் அலறியவுடன் உள்ளிருந்து சில ஆட்கள் அறைக்குள் பிரவேசித்தனர்.வந்தவர்கள் மகேந்திரனை கையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து குழந்தையின் கழுத்தை வெட்ட வைக்க எவ்வளவோ முயற்சி செய்தனர்.
வயதாகி இருந்தாலும் மகேந்திரனின் கண்களுக்கு அந்த குழந்தை அரசியின் மறுபிம்பமாகவே தோன்ற அந்த குழந்தையின் மீது சிறு கீறல் கூட பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த மன உறுதியுடன் போராடிக் கொண்டு இருந்தார்.ஆனால் அவரின் வயதுக்கு நான்கு பேர் கொண்ட கும்பலை அவரால் சமாளிக்க முடியவில்லை.ஒரு கட்டத்திற்கு மேல் இதற்கு மேல் குழந்தையை நெருங்கினால் நிச்சயம் கொன்று விடுவோம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட சட்டென முயன்று எல்லாரையும் தள்ளியவர் கத்தியை வீசி எறிந்து விட்டு குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி வந்தார்.
வாசலை அடையும் முன் பயத்துடன் யாரும் தன்னை பின் தொடர்ந்து வருகிறார்களா என்று அவர் பார்க்க அங்கே கண்ட காட்சியில் அவரது ரத்தம் உறைந்து விட்டது.அவர் தூக்கி எறிந்த கத்தி ஜோசியரின் இதயத்தை குறி பார்த்து தாக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தார் அவர்.அவரை பயம் பிடித்துக் கொண்டது.எங்கே இந்த ராட்சசர்கள் குழந்தையை வேறு யாருக்காகவேணும் பலி கொடுத்து விடுவார்களோ என்ற எண்ணம் தலை தூக்க அதற்கு பிறகு கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஓடியவர் குழந்தையை தன்னுடைய பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு அதன்பிறகே அரசியை சேர்த்து இருந்த மருத்துவமனைக்கு அவளைப் பார்க்க விரைந்தார்.