kodimalar.bcom-full

kodimalar.bcom-full

1

தமிழகமெங்கும் கிளைப் பரப்பிக் கொண்டிருந்த, கையடக்கத் தொலைபேசி சேவை மையம், தனது அடுத்தக் கிளையை, அந்தக் கிராமத்தில் நிறுவியிருந்தது. நிறுவனம், இந்தக் கிளையைக்  கிராமத்தில் இருக்கின்ற பாலிடெக்னிக் கல்லூரியைக் குறிவைத்தே, தொடங்கியிருந்நது. அந்தக் கிளையின் வெளிப்புறச் சுவரில், சலுகை என்ற பெயரில், நிரம்ப வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன.

 

வாசகங்களையெல்லாம் மெதுவாக வாசித்துக் கொண்டிருந்தான், திருமண வயதை நெருங்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன். அவனைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்.

 

முதலில், கிராமம் என்றால், எந்தக் கிராமம்? அதன் பெயர் என்ன? தமிழ் மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, பழவிளைதான் அந்தக் கிராமம். நாஞ்சில் நாட்டின், வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்றும் ஊர்களில் ஒன்று. குடியிருப்புகள் மிகக் குறைந்த அளவிலே இருக்கின்றன.. பட்டணத்தின் பழக்க வழக்கங்களுடன், முழுதாய் ஒட்டிப் போக மறுக்கும் கிராமத்து மக்கள். ஆதலால், நாஞ்சில் நாட்டின் பேச்சுவழக்கு, கிராமவாசிகளிடம் இன்னும் ஒட்டியிருந்தது. ஆனால் படித்தவர்களிடம், அந்தப் பேச்சுவழக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டிருந்தது.

 

முன்னனி கைபேசி நிறுவனம், அந்தக்  கிளைக்கு வைத்த பெயர் வேறு.. அதற்கு விளம்பரம் செய்ய, செலவழித்த தொகை நூறு. ஆனால் கிராமவாசிகளுக்கு, அது வெறும் ‘ரீசார்ஸ் கடை’. அந்த அளவிலேயே முடித்துக் கொண்டார்கள்.

 

இனி அந்த இளைஞனைப் பின் தொடலாம். இன்னமும், அவன் வாசித்துக் கொண்டிருந்தான். மெதுவாகவே வாசிக்கட்டும். அதற்குள் அவனைக் கொஞ்சம் வர்ணித்து விடலாம்.

 

நவீன சிகையலங்காரம் என்று சொல்லி, கிராமத்தில் வெட்டி விடுவார்களே, ஒரு ‘ஹேர் கட்டு’!! அந்த வெட்டுக்குள் சிக்கியிருந்தது, அவன் கேசம். கண்களில், ₹_0,000 விலை மதிப்பில் கண்ணாடி. ஆனால் கால்களிலோ, இரப்பர் செருப்பு. இடது கையில், உலகத்தின் முன்னணி நிறுவனத்தின் மணிக்கடிகாரம். ஆனால் இடையிலோ, உள்ளூர் நிறுவனத்தின், கட்டம் போட்ட லுங்கி. மேல்சட்டையும் அதற்கு இணையாக இருந்தது. சட்டைக்குத் துணையாக, கழுத்தில் ஒரு துண்டு போடப்பட்டிருந்தது. கையில் சுற்றிக் கொண்டிருக்கும் கார் சாவியில் பொறிக்கப் பட்டிருந்த நிறுவன முத்திரை, காரின் விலையைக் கொட்டமடித்தது. ஆம், காரின் விலை, அரைக் கோடியை எட்டிவத் தொட்டுவிட நினைக்கும் லகரங்களின்  மதிப்பில் இருந்தது!!

 

இந்தக்கணம், அந்த இளைஞன், சுவரின் வாசகங்களை வாசித்து முடித்திருந்து, அந்த ‘ரீசார்ஸ் கடை’ கண்ணாடிக் கதவுகள் முன் நின்று, யோசித்துக் கொண்டிருந்தான். என்ன யோசிக்கிறான்? எல்லாருக்கும் வரும் சந்தேகம்தான்!! கதவைத், தள்ளவா? இழுக்கவா? என்றுதான்!!

 

சரி, தள்ளவே செய்வோம் என்று முடிவெடுத்து, தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன். “என்னா? ஒரே அவயமா இருக்கு.” என்று முணுமுணுத்துக் கொண்டே, அறையினைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டான். புதிய கடையல்லவா அந்த ஆர்வத்தில்!!

 

மிகக் குறைந்த நீள, அகலங்களை கொண்ட அறை. கிராமத்தினரை  ஈர்க்கும் வண்ணமாக, ஆரஞ்சு மற்றும் சிகப்பு வண்ணங்களில் சுவரின் பூச்சுகள் இருந்தது. இன்னும், வண்ணப் பூச்சுகளின் வாசனை குறையாமல் இருந்தது. ஆங்காங்கே, சுவர்களை அலங்கரிக்க நூலில், ஊதுபைகள்(balloon) கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

 

கணநேரத்தில் இதையெல்லாம் பார்த்து முடித்தவன், பார்வையை கீழிறக்கிக் கொண்டு வந்து, இளைஞி ஒருத்தி, நிற்கும் இடத்தில் நிறுத்தினான். பின்னரே அவளின் எதிரே நிற்கும் பெரியவரை நோக்கி பார்வையை நகர்த்தினான்.

 

பெரியவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே, பெரிய வாக்குவாதம் நடந்திருக்கும் போல. அவர்களது உடல்மொழி, அதை நன்றாகவே வெளிப்படுத்தியது. அதனால் வந்ததுதான், அந்தச்  சத்தம் போல!! அவனைப் பார்த்ததும் வாக்குவாதத்தை நிறுத்தி இருந்தனர்.

 

அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியாததால், தெரிந்தவரான பெரியவரிடம் “என்னா பிரச்சனை தாத்தா?” என்று உரத்தக் குரலில் ஆரம்பித்தான்.

 

“என்கிட்டே சொன்ன மாதிரி, அவுககிட்டயும் அவயம் போட்டு சொல்லுங்க” என்றாள், அவனுக்கு இணையான குரலில்.

 

குரல் வந்த திசையில், தலை திருப்பி பார்த்தவன், ‘அவயம் மொத்தமும் இந்தப் புள்ளகிட்ட இருந்துதான் வந்திருக்கும் போல’ என்றே நினைத்தான்.

 

“பிரச்சனை  ஒன்னும் இல்லப்பா. என் பயல்(மகன்) இந்தப் போஃன் பொட்டிய வாங்கித் தந்திட்டு ஊருக்குப் போயிட்டான். ரெண்டு நாளா பணம் போட்டு, அந்தப் பயல்கூட பேசிறலாம்னு பாக்குறேன். இந்தப் பெண்ணு பேச வுடமாட்டீக்கு. என்னான்னு கேளு?” என்று, தன் ஊர்க்காரனான அவனிடத்து முறையிட்டார்.

 

அவன், அவளைப் பார்த்தான். குளீருட்டப்பட்ட அறையின் உள்ளே நின்றுகொண்டு, கொதித்துக் கொண்டிருந்தாள்.  அந்தக் கொதிநிலை தரும் வெப்பத்தில், எண்ணெய் பாத்திரத்தை வைத்து, முறுக்கே பிழிந்து விடலாம் போலிருந்தது!!

 

அப்பெண்ணிடம் பதில் எதிர்பார்ப்பது, தப்பு என்று நினைத்தானோ? திரும்பவும், அந்தப் பெரியவரிடம் திரும்பி, “நீங்களே சொல்லுங்க ” என்றான்.

 

“நான் போஃன் விளிச்சப்ப, இந்தப் பெண்ணு வந்து, பணமில்லேனு சொல்லிட்டுப் போகுது தம்பி” என்றார்.

 

இப்போது அவன் திரும்பி, ‘என்னா’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

 

‘என்கிட்டே எதுவும் கேட்காதீக. ஏற்கனவே நான் ரெம்ப பேசிட்டேன்’ என்பது போல் இருந்தது, அவளது சிடுசிடுத்த முகம். ஆனால் எண்ணெயின் சூடு குறைந்திருந்தது. அதிரசம் மட்டுமே போட்டு எடுக்க முடியும்!!

 

திரும்பவும், அந்த வயதான பெரியவரை பார்த்து, “எம்புட்டு (எவ்வளவு) பணம்  போட்டீகனு சொல்றீகளா?” என்று கேட்டான்.

 

“ஒரு ரெண்டாயிரம் வரைக்கும்” என்றார் உத்தேசமாக.

 

“எங்கன போய் போட்டீக, இங்கனயா டவுன்லயா? ”

 

“இங்கன எங்கலே பேங்கு இருக்கு, டவுன் பேங்குல போய் பணம் போட்டேன்லே.  அந்தாலயும் (அப்புறம்) கணக்கில பணம்மில்லேனு  இந்தப் பெண்குட்டி, வந்து பேசுது. இப்பம் நான் என்னா செய்ய?” என்றார் கொஞ்சம் கோபமாக.

 

நவீன தொழில்நுட்ப மழையில் நனையாமல், பழமையின் பெருமைக் குடையைப் பிடித்து நின்று கொண்டு!!

 

பழையது என்றாலும் பெருமை உண்மையல்லவா! ஆதலால் அவன் அமைதியாக நின்றான்.

 

ஆனால் அவள் பல்லைக் கடித்துக் கொண்டு, “அது நானே இல்லே” என்றாள்.

 

அவர்கள் இருவருக்கும் நடந்திருக்கும்  வாக்குவாதத்தை நினைத்தவனுக்கு மென்முறுவல் வந்தது. அவன் முறுவலைக் கண்டவள், தன் முறுக்கலைக் குறைத்துக் கொண்டு, அவனைப் பார்த்தாள். எண்ணெயின் சூடு, மிகவும் குறைந்து விட்டது. பாத்திரத்தை இறக்கி விடுவதே உசிதம்!!

 

அதற்குள் அந்தப் பெரியவர், ” இப்பம், நான் என்னா செய்ய? ” என்றார்.

 

“வாங்க” என்று, அவர் கைப்பிடித்து அழைத்து, வாசலை நோக்கி நடந்தவன். “நீங்க போங்க தாத்தா, நான் அந்தப் பெண்கிட்ட பேசி, செரி செஞ்சி.. ஒங்களுக்கு, செத்த நேரத்தில, விளிக்கிற மாதிரி ஏற்பாடு பண்றேன்”என்று வாக்குறுதி அளித்தான்.

 

அந்தப் பெரியவரும், அவன் கூறிய வாக்கில், நம்பிக்கை கொண்டு வெளியே சென்றார்.

 

அவன், இதைச் செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தில், அவள் பார்வை, அவனை அளந்து முடிந்துவிட்டிருந்தது.  அவளின் அளவீட்டின் முடிவில், ‘அலுக்கு பிலுக்கு (பந்தா) காட்ற பயலோ’ என்றே நினைத்தாள்.

 

இன்னொன்று அவளுள் தோன்றியது.. அது, பாரீஸின்  பட்டணத் தன்மையையும், பழவிளையின்  பட்டிக்காட்டுத் தெனாவட்டையும் ஒருங்கே பிரதிபலிக்கிறது, அவனது தோற்றம்.

 

ஒரே வரியில் அவனது தோற்றத்தைப் பற்றிச் சொன்னதற்கு, அவளுக்கொரு நன்றி நவின்று விடலாம்.

 

அந்தப் பெரியவருடன் பேசியதில், அவளுக்குத் தொண்டை வரண்டிருப்பது போல் தெரிந்தது. தான் கொண்டு வந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தாள்.

 

வாசலில் இருந்து திரும்பியவன், அவள் தண்ணீர் குடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தான். இப்பொழுது அவளைப் பற்றிய, அவனுடைய அளவீடு ஆரம்பமானது.

 

சிறிய அளவிலான, அதேசமயம் அடர்த்தியான கூந்தல், அதையும் பின்னல் போட்டு, நெளி வளையத்தில்(rubber band) கட்டிப் போட்டிருந்தாள். மினிட்டாம் பூச்சிபோல் கண்கள்.  தலைகீழாகப் போடப்பட்ட கேள்விக்குறி போல், ‘பொட்டும்’ ‘மூக்கும்’. கேள்விக்குள் ஓட்டை இருப்பது போல், மூக்கின் மூக்குத்தி. பருவ வயதைத் தாண்டியதைச் சொல்லும் கன்னத்துப் பருக்களின் தழும்புகள். சப்போட்டா பழநிறத்தில் தேகம்.

 

மடிப்புகள் வைத்து, தாவணி அணிந்திருந்தாள். இம்மியளவும் இடைவளைவு தெரியாமல் இருக்க, தாவணி முந்தானையால், இடையில் அளப்பரிய மெனக்கெடல் தெரிந்தது. அந்த வளைவில், அவன் பார்வை தேங்கி நின்றது.

 

நொடிக்குள் சுதாரித்தவன். ‘என்னா நினைப்பாளோ’ என்று நினைத்து, அறையின் வேறுபுறம் பார்வையைத் நகர்த்திக் கொண்டு வந்தான்.

 

அவனுக்கு, நன்றியெல்லாம் நவில வேண்டாம். ஏனென்றால், அவன் அவனுக்காகத்தான் மெனக்கெடல் செய்திருக்கிறான் போலத் தெரிகிறது!! அளவீட்டின் முடிவில் அவன் நினைத்தது. ‘இத்தறை (இத்தனை) வித்தாரமா(அழகு) இருக்காளே, அம்மைக்கு ஏன் இதுமாறி பெண் கண்ணில் படமாட்டிக்கு’ என்றே!!

 

ஆம், அவன் தாயார், அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிக்கிறாள்.

 

தண்ணீர் குடித்து முடித்தவள், அவன் நிற்பதைக் கண்டு “ஏங்க, அங்கன போய் ஒட்காருங்க” என்று ஒரு இருக்கையைக் காட்டினாள்.

 

அவள் சொன்னவுடன், அவன் சென்று அமர்ந்து கொண்டான். அவளும், அவனின் எதிரில், அவளுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.இருவருக்குமிடையே ஒரு அடி அகலத்தில் கண்ணாடி மேசை இருந்தது.

 

“ஊருக்கு புதுசா?” என்றான்.

 

“ம்ம்ம். ஒங்களுக்கு எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்ணனும் ” என்று, அடுத்த வாடிக்கையாளர் என்ற ரீதியிலே அவனைப் பார்த்தாள்.

 

அவளின் கேள்விக்கு, ஒற்றைத் தாளை எடுத்து நீட்டினான்.  அதில் தமிழில் பெயர்களும், அதற்கு நேரே இலக்கங்களும் எழுதியிருந்தது.

 

“இதில இருக்கிற நம்பருக்கெல்லாம்” என்றான், அந்த தாளினைச் சுட்டிக் காட்டி.

 

‘இத்தனை பேருக்கா’ என்று நினைத்தவள் “ஒங்க வீட்ல, ரெம்ப ஆட்களோ ” என்றாள், அவனை வாடிக்கையாளர் இடத்திலிருந்து சற்றே நகற்றி வைத்து!!

 

“எடக்கா பேசாதீக. வர்ற வழியில, ஊர்காரகக் கேட்டாக. ஒரே ஊரில இருக்கிறோம்னு, நானும் செரின்னு சொல்லிட்டேன். அத்தறை பேருக்கும் ரீசார்ஸ் செஞ்சிடுங்க. அப்படியே அந்த தாத்தாவுக்கும் ” என்றான், வெள்ளை மனதுக்குச் சொந்தக் காரனாய்!

 

“அது ரீசார்ஸ் இல்லே. ரீசார்ஜ்” என்று அவனைத் திருத்தினாள்.

 

வாடிக்கையாளரை ஏன் திருத்த நினைக்க வேண்டும்?, என்ற கேள்வி, கண்டிப்பாக இங்கு வருகிறது.

 

“நீங்க பாடம் எடுப்பீகளோ?”

 

“இல்லே ”

 

“பாடம் எடுக்கிறப்ப, படிச்சிக்கிறேன். இப்பம் ரீசார்ஸ்தான் ” என்றான், பாடம் படிப்பது, பச்சையாகப் பாகற்காயைப் பல்லுக்கடியில் வைத்துக் கடிப்பதற்குச் சமம் போல அவனுக்கு!!

 

‘எக்காளம்(எடக்கு) பிடிச்ச பயலா இருப்பான் போல’ என்று எண்ணிய படியே தன் கடமையைச் செய்ய ஆரம்பித்தவள். “சரிங்க, எல்லா நம்பருக்கும் எவ்வளவுக்குப் பணம் போட்டு விடனும்?” என்றாள்.

 

“ஒரு நூறு ரூபாய், இல்லே இல்லே இருநூறுக்கு போட்டு விட்ரீகளா..”

 

அவள் வேலைக்குச் சேர்ந்த, இந்த இரண்டு நாட்களில், உச்சபட்ச மறுஊட்ட(recharge) விலை இதுவே! ஆதலால் அவளது அடுத்த கேள்வி இப்படி இருந்தது.

 

“என்னா சோலி பார்க்கிறீக?”

 

“பால்மாடு வளர்க்கிறது.” என்று ஆரம்பித்து, அவனினது மற்றைய தொழிலைச் சொல்ல வருமுன்னே.

 

“மாடு மேய்ச்சா, அவ்வளோ பணம் வருமா?” என்றாள், ஆகாயம் வரை எட்டும் ஆச்சரியத்துடன்!

 

“ஏங்க, நீங்க என்னா இப்படிக் கேட்கறீங்க, பால்மாடு பண்ணை வச்சிருக்கவனப் பார்த்து”

 

“ஒரு நாளைக்கு, எவ்வளவு பணம் வரும்..” என்று, அப்பட்டமாக தனது ஆவலை அம்பலப்படுத்தினாள்.

 

“ஏகதேசமா(உத்தேசமாக)” என ஆரம்பித்தவன் “ஏங்க, நீங்களும்  வளர்க்கப் போறீகளா? ” என்றான்.

 

“ம்க்கும். நான் பிகாம் ஸ்டுடென்ட்” என்று பெருமையாகச் சொன்னவள். ‘இவன் என்னா படிச்சிருப்பான்’ என்று எண்ணம் தோன்றி “ஒங்க படிப்பு என்னா? பிஈயா” என்றாள்.

 

“எடக்கு பண்ணாதீக. நான் ஒங்கள மாதிரி படிக்கலே..”

 

” ஸ்கூலோட நிறுத்திட்டீகளா ?”

 

“ஆமாம்ங்க. நம்ம படிப்பப் பார்த்திட்டு, ஸ்கூல்லயே நிறுத்தச் சொல்லிட்டாக”

 

லேசாக சத்தம் வரும்படி நகைத்தாள். அவளின், அந்த நகைப்புச் சத்தம், அவனது தென்னந்தோப்பில், மாலை நேரத்து தென்றல் காற்றினால் ஏற்படும், தென்னை ஓலைகளின் சலசலப்பு போல் இருந்தது!!

 

“பணம் சம்பாதிச்ச அளவுக்கு, எனக்கு படிப்பு சம்பாதிக்க தெரியலங்க. ஏங்க, பி.காம் படிச்சிட்டு, எதுக்கு இந்த சோலிக்கு வந்திருக்கீக? ”

 

“வீட்ல நிலவரம் அப்படிங்க. ஆனா இன்னும் படிப்பு முடிக்கலேங்க முடிச்சிட்டு வேற வேலைக்குப் போயிருவேன் ” என்றவளின் பேச்சில், படிக்கின்ற படிப்பிற்கும் பார்க்கின்ற வேலைக்கும் சம்மந்தமில்லையே, என்ற வாட்டம் தெரிந்தது.

 

அவளின், அந்த முகவாட்டம், அவனது தோட்டத்தில், காலையில் பறிக்காமல் விடப்பட்ட செவ்வந்தி, பிச்சிப் பூக்களின் மாலை நேரத்து வாடுதலுக்கு, ஒத்ததாக இருந்தது.

 

“மூனாவது வருஷமா?” என்றான்.

 

” இல்லேங்க.. அஞ்சாவது வருஷம்”

 

“ஏங்க, நான் படிக்கலதான்.. அதுக்காக பிகாம் மூனு வருஷம்ங்கிறது தெரியாத அளவுக்கு இல்லே” ” என்று, தனக்கும் கல்வியறிவு, ஓரளவு இருக்கிறது என்று நிருபித்தான்.

 

“மூனு வருஷம்னா, மூனு வருஷத்திலே முடிக்கனுமா?? ஏன், அஞ்சு வருஷத்துல முடிச்சா, பிகாம்னு  ஒத்துக்க மாட்டீகளா? ” என்று சுள்ளென்று வார்த்தைகள் வந்து விழுந்து, அவனைக் குத்தியது..

 

அந்தக் குத்தல், அவனது பனைமரத் தோட்டத்தில், நடந்து செல்லும் போது, காலைக் குத்தும் முட்களைப் போல் இருந்தது..

 

ஆனால் இந்தப் பதிலுக்குள், அவளைப் பற்றிய ஏதோ ஒரு உண்மை, வெட்கப்பட்டு மறைந்து கிடப்பது போல் உணர்ந்தான்… அது என்னவென்று கண்டறிய, மிகுந்த பிரத்யேனம் செய்தான்… இஷ்டதெய்வத்திடம் கூட வேண்டினான்..

 

அவளும், ‘இவன் கண்டறியக் கூடாது’ என்று, தனது இஷ்டதெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

 

ஆனால் அவன் வேண்டுதலே பலித்தது.. வெடுக்கென்று “ஏங்க, பெயிலாகி பெயிலாகிப் படிக்கிற புள்ளையா நீங்க?” என்று, இளக்காரமாகக் கேட்டான்.

 

அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “ஏன் அப்படிச் சொல்றீக, கொடிமலர் பிகாம் வித் போர் அரியர்ஸ். இப்படிச் சொன்னா, நல்லா இருக்குல” என்றாள், காதில் அணிந்திருக்கும் தொங்கட்டான் ஆடும் வகையில்.

 

வேண்டுகோள்கள் ஏதுமின்றி, விரும்பப் போகிறவளின் பெயரைத் தெரிந்தவர்களின் பட்டியலில், அவனும் இணைந்து கொண்டான்.

 

“கொடிமலர்” என்ற வரைக்கும் தனக்குள் சொல்லிப் பார்த்தவன். அதற்குமேல், அந்தப் பட்டத்தை சொல்லிப் பார்க்கவில்லை.

 

ஏனெனில், அவனின் திருமண விடயத்தில், அவனது அம்மாவிற்கு, பெண்ணிடத்து இருக்கும் எதிர்பார்ப்பை, அந்தப் பட்டப்படிப்பு நிச்சயமாகப் பூர்த்தி செய்யாது.

 

இருந்தும், பேச்சைத் தொடர நினைத்தவன். ” நல்லா இருக்கு” என்றான்.

 

“அதே, இப்பம் நீங்க, ஒங்க பெயர் சொல்லுங்க” என்றாள்.

 

அவனின் வயதிற்குரிய குறும்புடன் “செரிங்க கொடிமலர்.   ஊரில ஒங்க ஒட்டு(ஒரே வயது) புள்ளைக எல்லாம் ‘அண்ணேனு’  விளிப்பாங்க. எங்கய்யன், என்னைய ராசுனு விளிச்சாரு. எனக்கு எங்கய்யன மாதிரி விளிச்சா பிடிக்கும். இப்பம் யாரும் அப்படி விளிக்கிறதில்ல” என்று வாய்ப்பை வழங்கிப் பார்த்தான்.

 

இரண்டில் எந்தவொரு அழைப்பிற்கு, தற்சமயம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியாததால். “முததடவ சொல்றப்ப பெயர முழுசா சொல்லனும். ” என்று திரும்பவும் பாடம் எடுத்தாள்.

 

அவளின் பதிலால், தனது வாழ்க்கைத்துணைப் பற்றி, அம்மாவின் எதிர்பார்ப்பு சரியே என்று முடிவுக்கு வந்தான்.

 

இருப்பினும், அவள் எடுத்த பாடத்தைக் கற்றுக் கொண்டு “தளபதி தங்கராசு”என்றான்.

 

” இது என்னா ‘தளபதி’ பட்டம்.. “என்று புருவத்தை உயர்த்தினாள்.

 

“தளபதியோட தீவிர ரசிகன்ங்க. அதுனாலே இப்படி” என்றவனின் குரல் மற்றும் உடல்மொழி, அவன் வெறும் ரசிகனல்ல. ‘தளபதி வெறியன் ‘ என்று சொன்னது!!

 

“அரசியல்லையா?? சினிமாலையா? ” என்று குதர்க்கமாகக் கேள்வி வந்தது.

 

“நமக்கு அரசியலுக்கு வர்ற ஆசை இல்லேங்க” என்று அரதப் பழசான வசனத்தைச் சொன்னான்.

 

“அப்பம், சினிமாவில நடிக்கப் போறீகளா??” என்று, கிராமத்துக் குசும்புடன் கேட்டாள்.

 

“எடக்காவே பேசுறீக ” என்றான்.

 

“பொறவு என்னங்க காரணம் கேட்டா. ஏறுமாற(முரண்பாடு) பேசிக்கிட்டு”

 

“ஏங்க, நானா ஏறுமாறா பேசறேன். இந்தப் பக்கத்து, இளைய தளபதி ரசிகர் மன்றத்து தலைவருங்க. போதுமா? ”

 

போதும் என்று நினைத்தாள் போல, வேறு எதுவும் பேசவில்லை.

 

” நீங்க எப்படிங்க?? “என்றான்.

 

“எங்களுக்கு ரசிகர் மன்றமெல்லாம் கிடையாதுங்க” என்றாள், அவளின் மானசீக நடிகரைப் போல், பூடகப் பேச்சாக!

 

“புரிஞ்சிடுச்சு” என்று சிரித்தவன். “செரி, எப்பம் பணம் ஏத்தி விடுவீக” என்று கேட்டபடியே பணத்தைக் கொடுத்தான்.

 

அதை வாங்கிக் கொண்டவள்.. “இன்னும் அரைமணி நேரத்தில” என்று கூறிக்கொண்டே, மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

 

“ஆட்டுங்க. அம்பிடுதான, வரேன் ” என்று சொல்லி, எழுந்து கிளம்பிச் சென்று விட்டான்.

 

அவன் சென்ற பிறகு…

 

முதலில் பேசியது போல் இல்லாமல், கடைசிப் பேச்சுகளில், அவனின் ஒட்டுதல் தன்மை குறைந்திருந்தது என்பதை யோசித்துக் கொண்டிருந்தவள், அவனது கைபேசியை, அந்தச் சிறிய கண்ணாடி மேசையின் மீது கண்டாள். ஏவாளின், முதற்கடிக்குப் பின்னான ஆப்பிள் பழத்தின் வடிவத்தில், அதன் மேல் சின்னம் இருந்தது.

 

உடனடியாக, கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். எங்கிருக்கிறான் என்று தேடியவள், அவன் தெரு முனையில் நின்று, யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

ஆனால் ‘எப்படி விளிக்க’  என்று யோசித்துக் கொண்டிருந்தாள். “தங்கராசு. தங்கராசு. “என்று கூப்பிட்டுப் பார்த்தாள்.

 

அவனுக்கு கேட்கவில்லை போல, சிறிதளவும் திரும்பவில்லை..

 

அந்தப் பொழுது, அங்கே வந்த பெண் ஒருத்தி, “அண்ணேனு விளி. நம்ம ஒட்டு புள்ளைக, அவுகள அப்படித்தான் விளிப்பாக” என்றாள்.

 

“நீங்க விளிக்கிறீகளா? ” என்று, அவளிடம் கோரிக்கை வைத்துக் கெஞ்சினாள்.

 

“அம்மாடி! அவுக, என் அம்மாச்சன்(மாமா) பையன். அதனாலே நான், அப்படி விளிக்க மாட்டேன்.” என்று வெட்கப்பட்டாள்.

 

“செரிங்க, அப்பம் அந்த முறையைச் சொல்லி விளிங்க” என்று யோசனைக் கூறினாள், கொடிமலர்.

 

அந்தப் பெண், “அய்யோ, எனக்கு அறப்பா(வெட்கம்) இருக்கு ” என்று, இரு கைகளால் முகத்தினை மூடிக் கொண்டாள்.

 

கிராமத்துப் பெண்ணின் வெட்கம்!

 

“ஏங்க, ராசுனு பெயர் சொல்லியாவது விளிங்களேன்” என்றாள், அந்த வெட்கத்தை அவளும் ரசிக்காமல், நம்மையும் ரசிக்க விடாமல்!

 

“அச்சோ!! நாம அப்படி விளிச்சது, அவுக அம்மைக்கு மட்டும் தெரிஞ்சா, அம்புட்டுதான். நம்மள ஒருவழி பண்ணிடுவாக” என்றாள் பயத்துடன்.

 

கொடிமலருக்கு முரண்பாடாக இருந்தது. சற்று முன்னர்தான், அந்தப் பெயரில், தன்னை அழைப்பது பிடிக்கும் என்றான். ஆனால் இந்தப் பெண் சொல்வதற்கு என்ன அர்த்தம்?

 

இன்னும் நின்று கொண்டிருந்த, அந்தப் பெண். “நான்தான முறைப்பெண்ணு, அண்ணேனு விளிக்க மாட்டேன். நீ விளிக்க வேண்டியதுதானே ” என்று சரியான புள்ளியைக், கேள்வியில் பிடித்தாள்.

 

என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், ஒருகணம் ஸ்தம்பித்ததுப் போனாள், கொடிமலர்.. எனினும் “நீங்க விளிக்க மாட்டீகள. அப்பம் போங்க” என்று, தான் ஸ்தம்பித்ததை மறைத்துக் கொண்டு, அந்தப் பெண்ணைத் துரத்தி விட்டாள்.

 

அப்பெண் சற்று தூரம் சென்றவுடன், ‘இப்பம் என்னா செய்ய ‘ என்று நினைத்தவள். மனதிற்குள்ளே ஒரு பெரிய உறுத்தலுடன் ‘அண்ணே அண்ணே’ என்று உருப்போட்டாள்.

 

நன்றாகப் பழகியாயிற்று, இனி உரக்கச் சொல்லி, அழைக்கலாம் என்று நிமிர்ந்து பார்க்கும் போது, அவன் தெருமுனையைத் தாண்டிக் கொண்டிருந்தான்.

 

அவன் அம்மாவிற்கு பிடிக்காது என்றதால், விதண்டாவாதமாகவோ? இல்லை அவனுக்குப் பிடிக்கும் என்றதால் விரும்பியோ? சட்டென்று சத்தமாக “ராசு. ராசு. ” என்று அழைத்துக் கொண்டே, அந்தக்  குண்டும் குழியுமான கிராமத்துச் சாலையில், ஓட்டத்தை ஆரம்பித்தாள்.

 

பிறக்கப் போகும் பிள்ளைக்கு,   பள்ளிக்கூடச் சீட்டு வாங்கி வைக்கும் பெற்றோர் போல, உருவாகப் போகும் உறவுக்கு, உத்திரவாதம் தரும்படி இருந்தது, அந்த தாவணிப் பெண்ணின் அழைப்பு!!

 

2

 

“ராசு. ராசு.” என்று அந்தத் தெருவில், ஓடி வந்தவள், அவன் அருகில் சென்று விடுவோம் என்று தெரிந்ததும் “தங்கராசு” என்று  தன் அழைப்பை மாற்றிக் கொண்டாள்!!

 

தன் பெயர் அழைக்கப்படும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பினான். அவன், தன்னைப் பார்த்து விட்டான் என்று தெரிந்ததும், கொடிமலர் ஓட்டத்தை விட்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

 

அவன் அருகில் வந்தவள்.. “ஒங்க போஃனை அங்கனயே விட்டுட்டு வந்துட்டீக. அதான்  கொடுக்கலாம்னு, இந்தாங்க ” என்று நீட்டினாள்.

 

“அந்தால வந்து எடுத்திருப்பேன்ல”

 

“பரவாயில்லே” என்றவள், அவன் அருகிலிருந்த காரினைப் பார்த்தவள். “என்னா தங்கராசு, கார சகதியும் சாணங்கியுமா (சாணம்) வச்சிருக்கீக” என்று, அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ” தங்கராசு” என்ற குரல் கேட்டது.

 

அந்தக் கணீரென்ற குரல் வந்த திசையைப் பார்க்காமலே, அவனுக்குத் தெரியும் அது யாரென்று! இருந்தும் திரும்பிப் பார்த்தான். மலரும் திரும்பினாள்.

 

நவீன மாதிரி இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்மணி இருந்தார். அழகாக மடிப்பு வைத்துக் கட்டப்பட்டக் காட்டன் புடவை. உச்சி வகிடெடுத்து பின்னப்பட்ட கூந்தலின் பின்னல், இடை தொட்டிருந்தது. கையில் தங்க நிறத்தில் ஒரு கடிகாரம். கண்களில் ஒரு கூலிங்கிளாஸ். காதிலும் கழுத்திலும் சிறுசிறு நகைகள். அவரை அத்தனை எளிமையானவராக, அதேசமயம் கம்பீரமானவராகக் காட்டியது.

 

தங்கராசுவின் அம்மா என்று அவரைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு  அவருடைய ஒப்பனைச் சீராக இருந்தது. பின்னே, பழவிளை ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியை அஞ்சுதம் என்றால் சும்மாவா!

 

அந்த ஊரிலுள்ள பிள்ளைகளின் படிப்பிற்காக, பெண்களின் சிறு தொழிலுக்காகத் தங்கராசுவின் வருமானத்தில் பாதியைச் செலவழிப்பவர். ஆதலால் அவர் மீது, ஊர்மக்களுக்கு அளப்பரிய  மரியாதை இருந்தது.

 

“இங்கன நின்னு என்னா செய்ற? எத்தறை மட்டம்(தடவ) சொல்றது, இப்படி வேனாவெயில (உச்சி வெயில்) நிக்காத, கெறக்கமா வரும்னு. போ.” என்றார் கண்டிப்புடன்.

 

“செரி அம்ம”

 

“டவுனுக்குப் போயி, நோட்டுபுக்கு கடைல, ஸ்கூல் புள்ளைகளுக்கு, நான் சொன்னதை வாங்கிட்டு வந்திரு”

 

“செரி அம்ம”

 

“அப்புறமா, லுங்கில போவாத, வீட்டுக்குப் போய் வேற துணி உடுத்திட்டுப் போ”

 

“செரி அம்ம” என்று கிளம்ப ஆரம்பித்தான்.

 

கொடிமலருக்கு, அதிர்ச்சியாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன், ஒரே ஒரு பக்கத் தாளைக் கொடுத்துவிட்டு, ஒரு புத்தகம் போடும் அளவிற்கு பேசினான். ஆனால், இப்பொழுது அவனது பேச்சு, அந்தப் புத்தகத்தின் தலைப்பு அளவே உள்ளது என்று!!

 

அஞ்சுதத்தின் பார்வை, இப்போது கொடிமலர் மீது விழுந்தது. ‘யே யாரு புள்ள நீ, வேல இல்லையா?  இங்கன நின்னு பேசிக்கிட்டு இருக்க? ”

 

“ஏன்? இவ்வளவு நேரம், நீங்களும் இங்கன நின்னுதான பேசிக்கிட்டு இருந்தீக. அப்பம் ஒங்களுக்கு வேல இல்லையா? “என்று திருப்பி அடித்தாள்.

 

தன்னை இந்த ஊர்ப் பிள்ளைகள், இப்படிப் பேசாதே என்று சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார் அஞ்சுதம்.

 

“ஏங்க மலரு, எங்கம்ம எதுத்தால (எதிரில்)  யாரும் இப்படிப் பேசினதில்ல. சும்ம இருங்க. ” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிக் கிளம்பினான் தங்கராசு.

 

அஞ்சுதமும் கொடிமலரும் ஒருவரை ஒருவர் முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டே கடந்து சென்றனர்.

 

*****

மலர் வீடு

 

ஒரு சமையலயறை, ஒரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை என்றிருந்த தன் வீட்டிற்குள் நுழைந்தாள் மலர். முன்னறையில் தன் அக்கா படுத்திருப்பதைக் கண்டாள்.

 

இப்பெல்லாம் இவள் இப்படித்தான் இருக்கிறாள் என்று நினைத்தாள். இப்பெல்லாம் என்றால்? இந்த இரு வார காலமாக, அதாவது இவர்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து. இவர்கள் என்றால்? இவள், இவளது அக்கா இசக்கியம்மாள் மற்றும் இவர்களின் தகப்பனார் செல்லதுரை.

 

பள்ளிப்படிப்போடு  படிப்பை முடித்துக் கொண்டவள் இசக்கியம்மாள். படிக்க பிடிக்கவில்லை என்றாலும், வசதியின்மை ஒரு முக்கிய காரணமாகும்.

 

“ஏன் இசக்கி. இப்படி ஒருக்களிச்சி (ஒருபுறம் சாய்ந்து) படுத்திருக்க” என்றாள் மலர்.

 

“உறக்கச்சடவா(தூக்கம்) இருக்கிட்டி செரி, இன்னிக்கி சோலி எப்படி இருந்திச்சி ”

 

“இன்னிக்குத்தான் இசக்கி, அதிய பணத்துக்கு ரீசார்ஜ் நடந்திச்சி” என்று சொன்னவளுக்கு தங்கராசுவின் முகம் வந்து போனது. “செரி, ராவைக்கு(இரவு) என்னா  சமையல்” என்றாள் மலர்.

 

“அப்பமும், கிழங்கும். மலரு ஒசக்க(மேல) துணி காயப் போட்டு இருக்கேன், போய் எடுத்துட்டு வந்திரு. நான் சமைக்கப் போறேன் ” என்று எழுந்தாள்.

 

சரி என்று எழுந்து மொட்டை மாடிக்குச் சென்று, துணிகளை எடுத்து கீழே இறங்கும் போதே, அவர்களின் தந்தை  வேலையை முடித்துக் கொண்டு வந்திருந்தார்.

 

அவரின் வேலை என்ன?? மனிதர்களை எடை  போடுவதுதான்  தப்பு, ஆனால் மனிதர்கள் வாங்கும் பொருள்களை எடை போடலாம். அவர் அந்த வேலையைச் செய்கிறார், அதுவும் அரசாங்கத்தின் உதவியோடு. ஆம், அவர் ரேஷன் கடையில் வேலை பார்க்கிறார்.

 

துணிகளை எடுத்து வரும் மலரைப் பார்த்தவர். “மலரு, சோலி முடிஞ்சு வந்தா, அக்கடான்னு(relax) உட்காரா வேண்டியதான”  என்றார் இதமாக.

 

“இசக்கிக்கு உறக்கச்சடவா இருக்குதாம். அதே”

 

“சும்மயே இருந்தா அப்படித்தானே இருக்கும்”  என்றார்.

 

‘அப்பா, ஏன் இப்படி பேசுறாக?’ என்று கொடிமலர் குழம்பினாள். இந்த இரு வாரமாக, இருவரும் இப்படித்தான் இருக்கிறார்கள். முகத்தைப் பார்த்துப் பேசிக் கொள்வதேயில்லை.

 

அதற்கப்புறம் இரவுச் சாப்பாட்டிற்காக, மூவரும் சேர்ந்து வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

 

“மலரு, நாளே  ஒங்க  அக்காவா பெண் பார்க்க வர்றாக புள்ள.” என்றார் செல்லதுரை.

 

மலர், இசக்கியைப் பார்த்தாள். இசக்கியோ தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

“என்னா அப்பா, வந்து பத்து நாளுதான ஆகுது. அதுக்குள்ள எதுக்கு?” என்றாள் மலர்.

 

“ஒங்க அம்ம இருந்தா ” என்றவர், அதைத் தொடராமல்… “இப்பமே முடிச்சாதான் செரியா வரும்.  இந்த இடமும் ஒங்க அம்ம சொந்தக்காரக சொன்னதுதான்” என்றார்.

 

தாயை இழந்த பிள்ளைகளை, தன்னால் இயன்ற அளவு பார்த்துப் பார்த்து வளர்த்தார். எனினும் கல்யாணம், பிள்ளைபேறு என்று வருகையில், தனியாகத் தான் என்ன செய்ய முடியும் என்ற பயம் நிரம்பவே இருந்தது. ஆதலால் அவர் சொந்த பந்தங்களை அண்டி வாழ்பவர். அவர்கள் சொல்லுக்குச் சில நேரம் கட்டுப்படுபவர்!

 

“யாருப்பா பையன். இந்தூரா? வெளியூரா ? ” என்று கேட்டாள் மலர்.

 

“இங்கனதான். ரெம்ப நல்ல குடும்பம். ஊரில  அவியகளுக்கு நல்ல பேரு இருக்கு. வசதி அதியம். ஆனா அவிய விருப்பட்டு வர்றப்போ, நாம ஏன் வேண்டாம்னு சொல்லனும்னு ” என்று சொல்லிக் கை கழுவச் சென்றவர். “இசக்கி, நாளே நல்ல துணி உடுத்திக்கோ புள்ள” என்றார், தாயாக மாறி.

 

ஆனால் அதற்கும், இசக்கியம்மாள் பதில் கூறாமல் இருந்தது, மலரைக் கொஞ்ச நஞ்சமல்ல, நிரம்பவே குழப்பியது.

 

தங்கராசுவின் வீடு

 

சாலையோரத்தில் இருந்து, சற்று உள்ளே தள்ளியே தங்கராசு வீடு கட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் முற்றம், சாலை வரை நீண்டிருந்தது. அதில், அவன் செய்கின்ற தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் எல்லாம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. வீடு பழமையின் பெருமைப் பேசியது, வீட்டில் உள்ள பொருட்கள் பணத்தின் செழிமை பேசியது. வீட்டின் புறவாசலில் இருந்து, செவ்வந்தி பூச்செடித் தோட்டம் ஆரம்பித்தது. அது முடிகின்ற இடத்தில் தென்னந்தோப்பு. தென்னந்தோப்பில் இருந்து வருகின்ற  இரவு நேரக் காற்று, அப்படியே செவ்வந்திப் பூக்களை வருடிக் கொண்டு வந்து, வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த மூவரின் நாசிகளையும் தொட்டிருந்தது.

 

மூவரில், ஒருவன் தங்கராசு. மற்றையவர்கள், இரு கிழவிகள். ஒருவர் ராசுவின் அம்மாவைப் பெற்றவர் பேச்சியம்மாள், ‘ஆச்சி’ என்று செல்லமாக ராசுவால் அழைக்கப்படுவார். மற்றொருவர் ராசுவின் அப்பாவைப் பெற்றவர் முத்துலட்சுமி, ‘முத்தாச்சி’ என்று ராசுவால் மரியாதையாக அழைக்கப்படுவார்.

 

பின் கொசுவம் வைத்துச் சேலைக் கட்டு. காதில் தடையம், கைகளில் பச்சைக்குத்தல், விசிறி மூக்குத்தி  என அவர்கள் அக்மார்க் கிராமத்து ஆச்சிகள்!!

 

மூவரும் சாப்பாட்டு நேரத்தில் இருந்தனர். அவர்கள் முன்பு சுவரின் பாதியை மறைத்துக் கொண்டிருந்த  டிவி ஓடிக்கொண்டிருந்தது. டிவியில் அவர்கள் பார்ப்பது இரண்டே இரண்டு நிகழ்ச்சிதான். வேலை பார்க்கும் போது,  வீடே அதிரும் அளவு சத்தத்துடன், தமிழில் நேஷனல் ஜியாக்கிரபிக்.  இப்படி, உட்கார்ந்திருக்கும் போது மியூட் மோடில் பிபிசி நியூஸ். இப்போது மியூட் மோட். ஏறக்குறைய படம் பார்த்துக் கதை சொல்லுக போலத்தான்!!

 

“ஆச்சி” என்றான், ராசு.

 

“லே, எரிசேரி(ஒருவகை கூட்டு) யானத்த(பாத்திரம்) கொண்டாந்து வச்சாச்சுலே. இப்பம் என்னா?”

 

“காலெம்பற ரீசார்ஸ் கடைக்குப் போயிருந்தேன் ”

 

“தெரியும்லே பணம் ஏறிருச்சி”

 

“அங்கன ஒரு புள்ளய பாத்தேன்” என்று ஆரம்பித்தவன், அங்கே அவர்களுக்கிடையே நடந்த பேச்சுக்களின் சாராம்சத்தைக் கூறினான்.

 

அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, இவன் இப்படி எந்த ஒரு பெண்ணையும் பற்றி தங்களிடம் பேசியதில்லையே என்று!

 

ஆனாலும் “லே, நீ எண்ணிக்கையை எங்கன கூட்டனும்னு நினைக்க. ரசிகர் மன்றத்திலயா? இல்லே வீட்லயா?? ” என்றார் பேச்சியம்மாள்.

 

” ஏன் ஆச்சி ”

 

“நீ பேசுனது மொத்தமும் அப்படித்தான் இருக்கு. அந்தப் புள்ள வீடு எங்கன இருக்கு தெரியுமா?”

 

“ம்கும்.”

 

” நெம்பர் வாங்கனியா”

 

“ம்கும் ஆச்சி, பெயர் மட்டும்தான் தெரியும். அதுகூட அதுவா சொல்லிச்சி. பிகாம்  படிச்சிருக்கு. ஒத்துக்குமானு பயமா இருக்கு. ”

 

“அந்தப் புள்ளயே ஒத்துக்கிட்டாலும் ஒங்க அம்ம ஒத்துக்க மாட்டா” என்றார் முத்துலட்சுமி.

 

” ஏன் முத்தாச்சி, இப்படிப் பேசுறீக  ”

 

“அவதான ஒனக்கு படிக்காதப் புள்ளையா வேனும்னு பார்க்கிறா ” என்றவர், தங்கராசுவின் முகத்தைப் பார்த்ததும், “ஏலே. ஒங்க அம்ம இன்னும் செத்த தேரத்ல(நேரம்) வருவா. அவகிட்ட சொல்லு “என்று முத்துலட்சுமி சொல்லி முடிக்கும் போதே வெளியில் வண்டிச் சத்தம் கேட்டது.

 

அஞ்சுதம் வண்டியிலிருந்து இறங்கி வீட்டிற்குள்ளே வந்தார். அவரின் முகத்தில் களைப்புத் தெரிந்தது.  தனது அறைக்குள் நுழைந்து முகம் கை கால்களைக் கழுவி விட்டு வெளியே வந்தவர், “தங்கராசு நாளே ஒனக்கு பெண்ணு பார்க்கப் போறோம் ” என்றார்.

 

தங்கராசுவை ‘சொல்லு’ என்பது போல் இடுப்பில் குத்திக் கொண்டே இருந்தார் பேச்சியம்மாள். இருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் ” செரி அம்ம” என்றான்.

 

“இப்பம் பார்த்திருக்கிறப் புள்ளைக்கு, அவுக வீட்ல வெரசா(சீக்கிரமா) கல்யாணம் கட்டி வைக்கனும்னு நினைக்கிறாக. அதனால இந்த இடம் முடிஞ்சிரும். பெண்ணு வீட்டில ரெம்ப வசதி கிடையாது ஆனா இவனவிட அதியமா படிச்சிருக்கு” என்றார் அஞ்சுதம்.

 

அந்த ‘படிச்சிருக்கு’ என்ற வார்த்தையில் தங்கராசுவின் கண்முன்னே கொடிமலர் முகம்தான் வந்து போனது.

 

“ஒங்கிட்ட,வசதியைப் பத்தியெல்லாம்  நாங்க கேட்டோமாட்டி. இந்தப் பயலுக்குப் பிடிக்குதான்னு மட்டும் பாரு “என்றார் பேச்சியம்மாள்.

 

அவர்களுக்குள் ஒட்டுதல் இல்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு அமைதி நிலவியது.

 

“தங்கராசு, நாளே லுங்கி உடுத்தாத. இதுல புதுத்துணி இருக்கு போட்டுக்கோ. காலெம்பற வெரசா கிளம்பனும். செரியாப்பா “என்று ஒரு பையைக் கொடுத்தார்.

 

“செரி அம்ம” என்று வாங்கிக் கொண்டான்.

 

ஏன் படிப்பைச் சுற்றி இவ்வளவு பேச்சுகள் இருக்கின்றது. காரணம் அஞ்சுதத்தின் கல்யாணம்!!

 

அஞ்சுததுக்கு, அவரது தாய்மாமாவின் மனைவியான முத்துலட்சுமியின் மகன் செந்திலைத் திருமணம் செய்து வைத்திருந்தனர். செந்தில் படிப்பறிவில்லாதவர். விருப்பமேயில்லாமல், அந்த வெறுப்பை வெளியில்  சொல்லாமல், அஞ்சுதம், அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்.

 

ஆனால், திருமண வாழ்க்கையைக், கணவரின் படிப்பறிவில்லாத தன்மையைக் குத்திக்  கட்டிக்கொண்டே வாழ்ந்தார், அஞ்சுதம். ஒரு கட்டத்தில், இந்த விடயம் வீட்டுப் பெரியவர்களுக்குத் தெரியவந்தது. அச்சமயம் தங்கராசு பிறந்திருந்ததால், அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அஞ்சுதத்திற்கு ஆசிரியர் வேலை, மேற்படிப்பு என்ற காரணங்களால், தங்கராசுவைக் கவனிக்கும் பொருப்பு கிழவிகளிடம் வந்தது. இப்படியே நாட்கள் கடந்தன.

 

தனது நாற்பதாம் அகவையில் அஞ்சுதத்தின் கணவர் மாரடைப்பு வந்து, இயற்கை எய்தினார்.

 

இளம் வயதிலேயே கணவரை இழந்தவர்களான பேச்சியம்மாள் முத்துலட்சுமிக்கு, இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தச் சோகத்தினால், ‘அஞ்சுதத்தின் குத்தல் பேச்சுதான் செந்திலின் மாரடைப்புக்குக் காரணம்’ என்று நினைத்தார்கள்.  அதீத  கவலையால்,  கண்ணை விட்டு போனவனை நினைத்து, கண் முன்னே இருப்பவளைக் கண்டுகொள்ளாமல், தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், அதையே திரும்பத் திரும்பச் சொல்லியும் காட்டினார்கள். அது, அஞ்சுதத்தின் மனதில், ஆழமாகப் பதிந்துவிட்டது.

 

கணவர்தான் படிக்கவில்லை, தன் மகனையாவது படிக்க வைக்கவேண்டும் என்று நினைத்த அஞ்சுதத்திற்கு, அவனிடத்தும் அவரது ஆசை நிறைவேறவில்லை. தங்கராசுவுக்குப் படிப்பு சுத்தமாக ஏறவில்லை. அஞ்சுதம் அடித்தும், திட்டியும் பார்த்தார். இருந்தும் பலனில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் முத்துலட்சுமியும் பேச்சுயம்மாளும், அஞ்சுதத்தின் கண்டிப்பை அனுமதிக்கவில்லை.

 

தன்னால்தான், இவர்களுக்கு இந்த நிலையோ என்று நினைத்தவர், அத்தோடு விட்டுவிட்டார்.  இதிலிருந்து மனமாற்றம் வேண்டும் என்பதற்காகவே, ஊர் பிள்ளைகளின் படிப்பு, பெண்களின் சிறு தொழில் என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  இதனால், பள்ளி வேலைகள் மாலையிலே முடிந்தாலும், இரவில் தாமதமாகவே வீட்டிற்கு வருவார்.

 

அவர்கள் பெரிய சண்டையெல்லாம் போட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லை. சமாதானமாகப் போய் விடலாம் என்றே ஒதுங்கிக் கொண்டனர்.

 

இதனால்தான்,  படிக்காத தன் மகனுக்குப் படித்த பெண்ணைப் கட்டி வைத்தால் அவனின் நிலைமையும், தன் கணவரின் நிலைதானோ? என்று அவரைக் கவலையடையச் செய்தது. எனவே படிக்காதப் பெண்ணைப் கட்டினால், தன் மகன் நிம்மதியாக இருப்பான் என்று நினைத்திடும் ஒரு தாயின் பாசப் பரிதவிப்பு!!

 

அவர்கள் மறந்தாலும், அவரால் மறக்க முடியவில்லை.

 

இன்றும், அவரின் அறைக்குள் சென்ற அஞ்சுதம், கணவரின் புகைப்படத்திற்கு முன்நின்று. ” என் பையனக்கூட எங்கூட சேர விட மாட்டீகாக.. ரெண்டு வார்த்தைக்கு மேல அவனும் பேச மாட்டேக்கான். இத்தனை பேரு இருந்தும் ஒத்தேல (தனியாக) இருக்கிற மாதிரி இருக்கு” என்று புலம்பியது வெளியில் இருந்தவர்களுக்குத்   தெரிய வாய்ப்பில்லை.

 

ஆதுபோல தங்கராசுவிற்கு…

 

சிறுவயதிலிருந்து ஆச்சிகளுடன் வளர்ந்தவனுக்கு, அம்மாவிற்கு தன் மேல் பாசம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமலேயே இன்று வரை இருக்கிறான்.

 

அம்மாவின் படிப்பு, நேர்த்தியான ஆடைகள், தெளிவான பேச்சுகள் மீது தங்கராசுவிற்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. மறைமுகமாக, அதை ரசிக்கவும் செய்வான். ஆதலாலே அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது. அவன் விருப்பத்தைச் சொன்னதுமில்லை!! அம்மாவின் விருப்பத்தை மீறியதும்  இல்லை!! படிப்பைத்தவிர.

 

*****

மலர் வீடு

 

எளிமையாகக் கிளம்பி, நால்வரும் பெண் வீட்டார் அருகே வந்தடைந்தனர். அச்சமயம் கைபேசி கூப்பிட்டதால், மற்ற மூவரையும் முதலில் உள்ளே செல்லச் சொன்னார், அஞ்சுதம்.

 

வீட்டின் கதவு திறந்தருந்தாலும், உள்ளே நுழையச் சங்கோஜப்பட்டு, கதவைத் தட்டினான், கிழவிகள் சகிதமாகச் சென்ற தங்கராசு!

 

சமையலறையில் நின்று கொண்டிருந்தார்கள் மலரும், அவரது தந்தையும்.

 

கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும்., “மலரு… மாப்பிள்ளை வீட்டுக்காரகள இருப்பாங்க. அவிய(அவர்கள்) வீட்டுல பெரியவுக எல்லாம் பெண்ணுகதான். அதான் நீ போய் பாரு புள்ள” என்றார் செல்லதுரை.

 

“செரிப்பா” என்ற மலர், வெளியில் வந்து பார்த்தாள். அங்கே தங்கராசு நின்று கொண்டிருந்தான்.

 

அவனைப் பார்த்தவுடன், அவளுக்குப் புரிந்துவிட்டது, அக்காவைப் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை இவன்தான் என்று..

 

இருந்தும், சிறு கோடாய் தங்க சரிகையுள்ள வெள்ளை வேட்டி, கட்டம் போட்ட அரைக்கை சட்டை, கீற்று போல் சந்தனம், எண்ணெய் இல்லாத கேசம் என்று நின்றவன், மலரின் கண்களுக்கு, ‘ கிளியோபாட்ராவின் ஆண்பால்’!!

 

அக்காவின் பெண் பார்க்கும் படலத்தில், தங்கைகள் என்ன அலங்காரம் செய்வார்களோ,  அதுமாதிரி மிதமான அலங்காரம் செய்திருந்தாள்.

 

அதைப் பார்த்தவனும்..  ” ஏங்க நீங்கதானா? எனக்குத் தெரியாதுங்க. எங்க அம்ம படிச்சுப் புள்ளையப்  பார்த்திருக்கேன் சொல்லிச்சு. ஆனால் இம்புட்டு படிச்சவுகனு நினைக்கலங்க. ரீசார்ஸ் கடைல பார்த்தப்பவே,  ஒங்க மேல ஒரு அபிப்பிராயம் இருந்திச்சிங்க. நீங்க, ஒங்க படிப்பச் சொன்னதும், நான் பேக் அடிச்சிட்டேன். அந்தால எங்க அம்ம என்னா சொல்வாகனு பயம் வேற.. நேத்து ராவைல கூட எங்க கிழவிங்ககிட்ட, ஒங்களப் பத்திப் பேச்சு வந்திச்ச. கேட்டுப்பாருக ” என்றான்.

 

முறியப் போகும் கிளை என்று தெரியாமல், கூட்டினுள் முட்டையிட்டு வைத்திருக்கும் பறவை போல.

 

3

 

“இப்படி, வெள்ளனையே வீட்டு வாசல்ல, வித்தாரமா(அழகா) வேட்டி கட்டி வந்து நின்னுகிட்டு விஸ்தாரமா (தேவையின்றி) பேசிறீக. செரியான விவரம் இல்லாதவுகளா?” என்று முணுமுணுத்தாள் மலர்.

 

கிழவிகள் இருவரும் கைகொண்டு வாய்மூடி நின்றனர்.

 

“ஏங்க மலரு” என்று மறுபடியும் தங்கராசு ஆரம்பித்தான்.

 

அச்சமயம், சமையலறையிலிருந்து வெளியே வந்தார் செல்லத்துரை. அவர்கள் அனைவரும் வாசலில் நிற்பதைக் கண்டவுடன், “மலரு, அவிகள உள்ளாற வர வழிய விடு புள்ள” என்றார்.

 

பின்னர் அவர்கள் அருகில் வந்து வரவேற்று வரவழைத்து, முன்னறையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமரச் சொன்னார்.

 

“டீச்சர் வரலையா” என்று செல்லத்துரை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, கைபேசியில் பேசி முடித்து, அஞ்சுதம் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவரின் பார்வை முழுவதும், வாசலிலே நின்று கொண்டிருந்த மலரைத் தாண்டிச் செல்லவில்லை.

 

ஏன், உள்ளே சென்றுவிட்ட தங்கராசுவின் பார்வையும் தான்!!

 

தயக்கத்துடன் மலரைக் கைகாட்டி “இந்தப் பெண்ணு”  என்று, வாக்கியத்தை இழுத்தார்.

 

“இது என் ரெண்டாவது புள்ள,பெயர் கொடிமலர். பிகாம் படிக்கிது” என்றார்.

 

அப்படியே கொடிமலரைப் பார்த்துக் கொண்டே வந்து, மூவரும் அமர்ந்திருந்த பாயில், சேர்ந்து அமர்ந்து கொண்டார் அஞ்சுதம்.

 

அஞ்சுதத்தின் பார்வையின் பொருளைத் தவராகப் புரிந்து கொண்ட செல்லதுரையோ, “நீங்க பார்க்க வந்தது மூத்தவ டீச்சர். இவ இல்லே. ” என்று விளக்கினார்.

 

இதைக் கேட்ட, அஞ்சுதம் முகத்தில் நிம்மதி தெரிந்தது. மற்ற மூவரும் தலை குனிந்து கொண்டனர்.

 

“அந்தப் புள்ள செரியாத்தான்லே சொல்லிருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.

 

“என்னா ஆச்சி, சொல்றீக”

 

“நீ விவரம் இல்லாதவன்தான் ”

 

“சும்ம இருங்க ஆச்சி”

 

“அதேன் செய்யனும். வேற என்னா செய்ய முடியும், ஒன் அம்மைய மீறி” என்றார் முத்தாச்சி.

 

“மலரு, போயி அக்காவ  வரச் சொல்லு ” என்றார் செல்லதுரை.

 

“செத்த தேரம் பேசிக்கலாம். பொறவு புள்ளைய வரச் சொல்லுங்க” என்றார் அஞ்சுதம்.

 

“செரிங்க டீச்சர்” என்றவர் மலரைப் பார்த்து, “மலரு, நீ உள்ளாற போ புள்ள” என்றார்.

 

‘என்னா பேசப் போறாக ‘ என்று மலரின் மனம் நினைத்தது. அந்த நினைப்பு, அவளுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது. அந்தப் பதட்டம் தேர்வு எழுதும் நாளிலும், தேர்வு முடிவு வரும் நாளிலும் அவளுக்குள் உருவாகும் பதட்டத்திற்கு ஒத்ததாக இருந்தது.

 

இருந்தும், தந்தை பேச்சைக் கேட்டு உள்ளே சென்றாள். ஆனால் அங்கே இசக்கியம்மாளின் நிலை கண்டு கதிகலங்கினாள்.

 

ஓடி அவள் அருகில் சென்று “இசக்கி, ஏன்ட்டி, ஏன் அழுதுகிட்டு இருக்க” என்று உலுக்கிக் கேட்டாள்.

 

“என்னா பிரச்சனை சொல்லுட்டி? ” என்று மேலும் உலுக்கினாள்.

 

“இருட்டி, அப்பாகிட்ட சொல்றேன்” என்று மிரட்டி எழப் போனாள், மலர்.

 

“வேண்டாம் மலரு. நானே சொல்றேன்” என்று இசக்கி, மலரைத் தடுத்து நிறுத்தினாள்.

 

“சொல்லு”

 

“எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லே” என்று

 

“இஷ்டம் இல்லையா”என்ற மலர் கேட்ட தோரணை, எஞ்சிய நான்கு தேர்ச்சி அடையாத தேர்வையும், ஒரே முயற்சியில் தேர்ச்சி அடைந்தால், வருமே ஒரு குதூகலம். அப்படி இருந்தது.

 

“ஏன்ட்டி, நான் என்னா சொன்னேன். நீ இம்புட்டு சந்தோஷப் படுற ”

 

“அது, அது… அடுத்து பத்து பதினைஞ்சி நாள்ல பரிட்சை வருதில்ல. ஒன் நிச்சிதார்த்தம், கல்யாணம் இருந்தா, என்னால படிக்க முடியாது பாரு.  அதே ” என்றாள் வரவழைக்கப்பட்ட வருத்தத்துடன்.

 

ஆனால் இசக்கியம்மாளின் பார்வையில், மலரைத் துளிகூட நம்பவில்லை என்று தெரிந்தது.

 

“இப்பம் இது பிரச்சனை இல்லே இசக்கி. கல்யாண பிடிக்கலைன்னு, எப்படிச் அப்பாகிட்டே சொல்லப்போற”

 

” அப்பாவுக்கு தெரியும் மலரு ”

 

“தெரியுமா?? இதுக்கு மின்னாடியே சொல்லிருக்கியா ”

 

“நானா சொல்லல. அவுகளா கண்டுபிடிச்சிக் கேட்டாக, நாங்க ஒத்துக்கிட்டோம்”

 

“நாங்களா?நாங்கன்னா ?”

 

“நானும், அவுகளும் ”

 

” அவுகளா? யாருக்கா அந்த அவுக? ”

 

“இதுக்கு மின்ன ஒரு ஊரில இருந்தோம்ல ”

 

” ம்ம்ம்”

 

“அங்கன ஒரு வாத்தியார, எனக்கு பிடிக்கும் மலரு. அவுகளதான் கட்டிப்பேன்.  மத்தவகள திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் ” என்று தன் அபிப்பிராயத்தை சொன்னாள் இசக்கி.

 

” எந்த வாத்தியார சொல்ற ?”

 

“நீ அரியர்  எழுத, ரெண்டு வருஷமா டியூசன் போனேல, ஒரு வாத்தியார்கிட்ட. அவுகதான்”

 

“நான்தான இசக்கி போனேன். நீ எப்படி?” என்றாள், மலர்.

 

“ஒன்ன கொண்டு வந்து விடுவேன்ல, அப்பத்லருந்து, அவுகளுக்கும் எனக்கும் பழக்கம் ” என்றாள் இசக்கி, வெட்கப்பட்டு.

 

” கண்ணன் சாரா? ”

 

” ம்.. அப்பாக்கும் தெரியும்ட்டி. ஆனா என் இஷ்டப்படி கல்யாணம் கட்டிக்கிட்டா, சொந்தக்காரக ஏதாவது சொல்லிருவாகளோன்னு பயப்படுறாரு ”

 

” என்னா சொல்லுவாகனு பயம்”

 

“அம்மா இல்லாத புள்ளைகள, இவரு செரியா வளர்க்கலன்னு. அதேன் அதுவா மாப்பிள்ளை பார்த்திருச்சினு ”

 

” இதெல்லாம் ஒரு பயமா ”

 

“மலரு, அந்தால வெவரமா சொல்றேன். முதல்ல இந்தப் பயல புடிக்கலைன்னு சொல்லனும், காரணம் கேப்பாகள”

 

” இந்தப் பயலா? செத்த மருவாதையா பேசுட்டி”

 

” ஏன்ட்டி ”

 

“ஏன்னா, ஏன்னா, நேத்தே அப்பா சொன்னாகள, இவுக  ரெம்ப நல்லவுகன்னு ”

 

“மலரு, வேண்டாம்னு சொல்ல காரணம் கேட்டா, வேணும்னு சொல்ல காரணம்  சொல்ற”

 

” இருட்டி யோசிக்கறேன்”

 

“அவுக படிக்கல இசக்கி. அதச் சொல்லு” என்றாள் மலர்.

 

“ஒனக்கு எப்படித் தெரியும்” என்றாள் இசக்கி, ஒரு அக்காவாக மாறி.

 

“அவுக, நேத்து ரீசார்ஜ் கடைக்கு வந்தாக. அப்பமே இதப் பத்தி சொன்னாக. ”

 

“ரீசார்ஸ் பண்ண வந்தவரு என்னாத்துக்கு, படிப்பு பத்தி பேசனும் ” என்று துளைத்தாள், அக்காவிலிருந்து அம்மா ஸ்தானத்திற்கு நகர்ந்து.

 

“ஒனக்கு நாளைக்கு தேவப்படும்னு, நேத்திக்கே தெரிஞ்சததால கேட்டு வச்சேன். செரியா, இன்னிக்கி தேவப்பட்டிருக்கு பாரு ” என்று இசக்கியைக் குழப்பினாள்.

 

“ஏதோ கள்ளம்(பொய்) பேசுற மலரு ” என்று மலரைக் கண்டித்தாள்.

 

அதற்குள் செல்லத்துரையின்” மலரு, இசக்கிய வரச் சொல்லு ” என்ற குரல் கேட்டது.

 

“இசக்கி, மத்தத அப்புறமா பார்த்துக்கலாம்.. இப்பம் இத தைரியமா சொல்லிரு புள்ள ”

 

“செரி” என்று சொல்லிய இசக்கியை, மலர் வெளியே அழைத்து வந்தாள்.

 

அஞ்சுதம், இசக்கியம்மாளைக் கண் குளிரப் பார்த்தார். மற்ற மூவரும் மலரின் கண் பார்வையைத் தவிர்க்க, அப்போது குனிந்தவர்கள், இன்னும் நிமிரவே இல்லை.

 

பின் அஞ்சுதம்தான், ” தங்கராசு, ஒனக்குப் பிடிச்சிருக்கா? எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குப்பா. செரின்னு சொல்லலட்டுமா? ” என்று சம்மதம் கேட்டார்.

 

“செரி அம்ம” என்றான், சற்றும் யோசிக்காமல்.

 

‘செத்த நேரத்துக்கு மின்ன எப்படி பேசுன. இப்பம், இப்படி அறப்பே(வெட்கம்) இல்லாம பேசுற’ என்று நினைத்த மலர். ” இசக்கி, சொல்லு புள்ள பிடிக்கலன்னு” என்று, இசக்கியம்மாளைத் தூண்டினாள்.

 

“இருட்டி, எப்படித் தொடங்கன்னு தெரியல” என்றாள் இசக்கி.

 

இப்படியே நேரங்கள், விரையம் ஆகின.

 

ஒரு கட்டத்தில் அஞ்சுதம், “இப்பம் வெத்தல பாக்கு மாத்திக்கலாம். அந்தால முறையா நிச்சிதார்த்தம் நடத்தலாம்” என்ற கல்யாணம் பற்றியப் பேச்சுக்கு வந்தார் அஞ்சுதம்.

 

அந்த வார்த்தையில் சுதாரித்த கொடிமலர், ” ஒரு நிமிஷம் நிறுத்திறீகளா? அக்கா ஏதோ பேசணும்னு சொல்லுது” என்றாள்.

 

“இப்பம் வந்து, இதுக்கு என்னா பேசனும் மலரு” என்று செல்லத்துரை கடிந்து கொண்டார்.

 

“இல்லப்பா, ஒரு நிமிஷம்தான். சொல்லுட்டி இசக்கி” என்றாள், மலர்.

 

அஞ்சுதத்தின் பார்வை முழுவதும் மலர் மீதே இருந்தது.

 

“எனக்கு இவுகள பிடிக்கல. இவுக ரெம்ப படிக்கல. அதே காரணம்” என்று சொல்லிவிட்டு, உள்ளே ஓடிச் சென்று விட்டாள்.

 

அடுத்த நொடியே, அதற்கு மேல் இருப்புக் கொள்ளாமல் அஞ்சுதம், எழுந்துவிட்டார்.

 

பின் “ஏங்க நேத்தே எல்லாம் சொல்லத்தானே செஞ்சேன்.  இன்னிக்கி வந்து இப்படிச் சொல்லிக் காட்டுறீக ” என்று கத்தினார் அஞ்சுதம்.

 

“இல்லே டீச்சர், நான்  அதுகிட்ட பேசிப் புரிய வைக்கிறேன். செத்த தேரம் காத்திருக்கீகளா” என்றார், ஒரு மகளைப் பெற்ற தந்தையின் மாறாத செயலாய்.

 

“என்ன பேச வேண்டியது இருக்கு. இப்பமே, இப்படிப் பேசுது. நாளே, என் புள்ளய கட்டிக்கிட்டு என்னா பேச்சு பேசுமோ?”

 

பின் கிழவிகளைப் பார்த்து, “நான் செரியாத்தான் பெண்ணு பார்த்தேன். நீங்க சொல்ல “என்று பாதியிலேயே விட்டுவிட்டார்.

 

“மிச்சத்த வீட்ல வந்து பேசுறேன் ” என்று கோவமாகச் சொல்லிவிட்டு, மலரைப் பார்த்தார்.

 

“நீதான ஆரம்பிச்ச” என்று, மொத்த கோபத்தையும் அவளிடம் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, வெளியேறினார்.

 

தன்மகள் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்குக் காரணமாகிவிட்டாள் என்று, செல்லத்துரை கோபம் கொண்டார். அஞ்சுதம், அவரிடத்துக் கொட்டிய கோபத்தை, அப்படியே அள்ளிக் கொண்டு, அதை இசக்கியிடம் காட்டுவதற்காகச் சென்றார் செல்லத்துரை.

 

இக்கணம் வரவேற்பரையில், தங்கராசு, கிழவிகள் மற்றும் மலர்.

 

தங்கராசுவும், அவனுடன் சேர்ந்து கிழவிகளும்  எழுந்துகொண்டனர். அப்பொழுது குனிந்த தலையை, இப்போதுதான் உயர்த்தினார்கள். நன்றாக நிமிர்ந்து மூவரும், கொடிமலரைப் பார்த்தனர். அவர்களைப் பொருத்து வரையில், பெண் பார்க்கும் படலம் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது.

 

தங்கராசு கிழவிகளின் காதில் ஏதோ கூறினான்.

 

“தெரியும்லே. பேசாம இரு” என்ற பேச்சியம்மாள், அஞ்சுதம் விட்டுச் சென்ற, தட்டில் கிடந்த பூவை எடுத்துக் கொண்டு கொடிமலரை நோக்கிச் சென்றார்.

 

“அய்யோ, இந்தப் பய என்னா சொன்னானோ, இந்தக் கிழவி, என்னாத்துக்கு பூவத் தூக்கிட்டு வருதோ” என்ற பதட்டம்  மலருக்கு. அவர் அருகில் வரவர கொஞ்சம் கொஞ்சமாக பதட்டம் அதிகமாகியது.

 

“இதப் பாருக, இதெல்லாம்” என்று, அவள், ஒற்றை விரல் நீட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பேச்சியம்மாள் மலரைக்  கடந்து சென்று, வரவேற்பு அறையில் இருந்த சாமி படத்திற்குப் பூவைச் சாத்திவிட்டு வந்தார்.

 

அதுமட்டுமின்றி, திரும்பி வருகையில் மலரைப் பார்த்து, “புள்ள, சாமி போட்டோ இப்படி வெறுமனே இருக்கக் கூடாது. செரியா” என்றார்.

 

தங்கராசுவும் முத்துலட்சுமியும்  சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.

 

திரும்பிச் செல்லப் போன பேச்சிக் கிழவி, மறுபடியும் மலரின் பக்கம் திரும்பி, ” ஏன் புள்ள ஒங்க வீட்ல எலுமிச்சம்பழம் இருக்கா? “என்று கேட்டார்.

 

தங்கராசுவும் முத்துலட்சுமியும், எதற்காக இப்போது எலும்பிச்சை பழம் என்று யோசித்தார்.

 

” இருக்கு, ஏன் கேட்கிறீக? ” என்று கேட்ட மலருக்கும் அதே யோசனை.

 

“இருந்தா, போஞ்ச் (எலுமிச்சை சாறு) போட்டுக்  குடி, கெறக்கமா (மயக்கம்) தெரியிற” என்றார்.

 

இப்போது தங்கராசு, முத்துலட்சுமி தோளில் கை போட்டுக் கொண்டு நன்றாகவே சிரித்தான்.

 

“வரேன் புள்ள” என்று சொல்லி, பேச்சிகிழவி, மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு, கிளம்பத் தயாராயினார்.

 

“ஒரு நிமிஷம், அங்கனயே நிக்கிறீகளா? ” என்றவள், அஞ்சுதம் விட்டுச் சென்ற பழத்தில், நான்கைந்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் அருகில் சென்றாள்.

 

“பிடிங்க” என்று பேச்சிக் கிழவியின் கைகளில் இரண்டையும், மிச்சத்தை முத்துக்கிழவியின் கைகளில் திணித்தாள்.

 

“என்னாத்துக்கு ” என்றார் முத்தாச்சி.

 

“போங்க போயி, ஒங்க பேரப் பையனுக்கு ஜூஸ் போட்டுக் கொடுங்க. அதான் ஒருத்தருக்கு ரெண்டு பேர் இருக்கீகள. அவுகதான் நேத்தேலருந்தே கெறக்கமா இருக்காக. செத்த நேரம் மின்னாடி, அவுகதான சொன்னாக. அயத்து (மறந்து) போயிருப்பாகனு நினைக்கிறேன்” என்றாள்.

 

“அப்புறம் வீட்ல கழுத்து வலிக்கு களிம்பு இருக்கா? இருந்தா மூனு பேரும், தேய்ச்சுக்கோங்க. ஏன்னா ரெம்ப நேரம் குனிஞ்சிக்கிட்டே இருந்தீக. அதே ” என்று, மூன்று பேரையும் நன்றாக நய்யாண்டி செய்தாள்.

 

“ஏன்ட்டி, எம்புட்டு எடக்கா பேசற. ஒன்ன ” என்று பேச்சிக்கிழவி சொல்லும் போதே, செல்லத்துரை வெளியே வந்துவிட்டார்.

 

“மலரு, என்ன புள்ள பேசிகிட்டு இருக்க ” என்று கேட்டுக் கொண்டே, அவர்கள் அருகில் வந்தார்.

 

“சும்ம, அக்கா எசகு பிசகா (தெரியாமல்) பேசினதுக்கு, எதம்பதமா (மென்மையாக) மன்னிப்பு கேட்டேன். மன்னிப்பு கேட்டது போதுமா ஆச்சி, இல்லே இன்னும் கேட்கவா ” என்று மேலும், நக்கல் பேச்சு பேசினாள்.

 

“இது படிக்கிற புள்ள ஆச்சி. மனுஷங்ககிட்ட பதனமா(கவனமாக) பேசத் தெரியும் ” என்று, மலரின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டார்.

 

‘என்னா பம்மாத்து(நடித்தல்) பண்றா, இந்தப் புள்ள’ என்று இரு கிழவிகளும் நினைத்தனர்.

 

“மன்னிச்சிக்கோங்க ஆச்சி. டீச்சர்கிட்டயும் சொல்லுங்க” என்று  செல்லத்துரை, அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கேட்டு, அனுப்பி வைத்தார்.

 

வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், தங்கராசுவின் தயகத்தைக் கண்டு.

 

“வாலே, ஒங்க அம்ம அங்கன தெய்தெய்னு (கோபப்பட்டு சத்தமாக பேசுதல்) குதிக்க காத்துக்கிட்டு இருப்பா. இந்தப் புள்ளகிட்ட வாங்கியாச்சு. இனி, அங்கன ஒங்க அம்மகிட்ட போயி வாங்குவோம் ” என்று, அவனை இழுத்துச் சென்றனர்.

 

அவர்கள் வழியனுப்பி விட்டு, உள்ளே வந்தவர்,” பாருபுள்ள, இந்த இசக்கி இப்படிப்  பண்ணிக்கிட்டு இருக்கு. சோலி அங்கன இருந்தாலும், இதுக்காகதான் இந்த ஊருக்கு வந்தேன். இங்கன வந்தும், இந்தப் புள்ள இம்புட்டு இடைஞ்சல் செய்யுது” என்றார்.

 

“இசக்கி ஆசைப்பட்ட ஆள, அதுக்கு கட்டி வைக்கலாம்ல அப்பா”

 

“இல்லே மலரு. அது செரி வராது. அந்தால ஒங்க அம்ம வீட்டு ஆளுங்க ஒதுங்கிறுவாக. நான் ஒத்தேல (தனியா) ஒங்களுக்கு என்னா செய்ய முடியும் சொல்லு”

 

” ஏன் பா ”

 

“இல்லே மலரு, பொறவு (பின்னர்) அதுவா மாப்பிள்ளை பார்த்திருச்சினு பேச்சு வந்திரனும். நீ, இத யோசிக்காத மலரு. பரிட்சை வருதில்ல. அதுக்கு படிக்கிற வழியப் பாரு. அதுகிட்ட செத்த தேரம் பேசிட்டுச் சோலியப் பார்க்கப் போ. செரியா “என்று சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டை நோக்கிக் கிளம்பினார்.

 

தந்தை சொல்லியபடி, இசக்கியிடம் பேசச் சென்றாள், மலர்.

 

தங்கராசு வீடு

 

வீட்டில் அஞ்சுதம் மிகுந்த கோபத்துடன் இருந்தார். தங்கராசுக்கு நிம்மதி பாதியென்றால், நிராசை மீதி. இங்கே நிம்மதி, அபிப்பிராயத்தை சொன்னதால் வந்ததல்ல, அதை – மலர் யாரிடமும் அம்பலப்படுத்ததால் வந்தது. அப்புறம் நிராசை, அபிப்பிராயம் அந்தரத்தில் தொங்குவதால் வந்தது.

 

கிழவிகளின் மனநிலையோ ‘இவ எப்பம் ஏசி (திட்டி) முடிச்சி. நம்ம எப்பம் பிபிசி பார்க்க’ என்பதுதான்.

 

“எத்தறை மட்டம்(தடவ) சொன்னேன். இந்த மாதிரி படிச்ச புள்ள வேண்டாம்னு.  கேட்டீர்களா? நீங்க அழுத்திச் சொல்லப் போயி, நானும் புத்தி கெட்டுப் போனேன். இப்பம் என்னாச்சி பார்த்தீகளா” என்று காட்டுக் கத்தல் கத்தினார் அஞ்சுதம்.

 

“ஏன்ட்டி, படிச்ச புள்ளய  பார்த்தா, அந்தப்பய தொழில கணக்கு வழக்குப் பார்க்கும்னு நெனைச்சோம்”

 

“அததுக்கு ஆள போட்டுக்கலாம். இது தேவையா? இப்படிப் படிச்ச பிள்ளையைக் கட்டி வச்சிட்டு, இதுமாதிரி பேச்செல்லாம் இவன் கேட்கனுமா” என்றதில், தன் மகனை ஒருத்தி, இப்படிப் பேசிவிட்டாளே என்ற வேதனைதான் இருந்தது.

 

” அடி போடி” என்றார் பேச்சிக்கிழவி.

 

“இனிமே, இந்த மாதிரி பெண்ண பார்க்கவே மாட்டேன் ” என்று முடிவெடுத்தார் அஞ்சுதம்.

 

“இனிமே, நீ பெண்ணே பார்க்க வேண்டாம்” என்று முடித்துவிட்டார், அஞ்சுதத்தின் அம்மா.

 

” ஏன்” என்றார் சந்தேகமாக.

 

“நாங்க பார்த்திட்டோம் ” என்றார் முத்தாச்சி.

 

“நாங்கனா? ”

 

“ஒன்னய தவிர மத்தவுக” என்றார் பேச்சிக்கிழவி.

 

“ஆச்சி, சும்ம இருக்கிகளா” என்றான் தங்கராசு.

 

“ஏன்? நீ ஒருத்தன் சும்ம நிக்கிறது பத்தாதா. வாய மூடுலே” என்றார் திரும்பவும் பேச்சிக்கிழவி.

 

”  எந்தப் பெண்ணு”

 

“இப்பம், செத்த தேரத்துக்கு மின்ன ஒரு வீட்டுக்குப் போனோம். அங்கன பார்த்தோம்”

 

“அங்கனயா? அங்கன யாரு வீட்ல ”

 

“அதே வீட்லதான்” என்றார் பேச்சிக்கிழவி.

 

“அந்த ரெண்டாவது புள்ள”என்றார் முத்தாச்சி.

 

“அந்தப் புள்ள பிகாம் படிச்சிருக்கு. பண்ணன்டு படிச்ச புள்ளயே வேண்டாம்னு சொல்லுது. இதுல பிகாம், அதோட அந்தப் புள்ள பேச்சே செரி கிடையாது ” என்று திரும்பவும் கத்த ஆரம்பித்தார் அஞ்சுதம்.

 

“இந்தப் பயலுக்கு, அந்தப் புள்ள மேல ஒரு அபிப்பிராயம் இருக்கிட்டி ” என்றார் பேச்சியம்மாள்.

 

“அந்தப் புள்ளகைக்கும் இருக்கிற மாதிரிதான் தெரியுது நீ ரெம்ப நொர்நாட்டியம்(குறை கூறும் தன்மை) பண்ற ” என்றார் முத்தாச்சி.

 

“நம்பவே முடியல” என்றார் அஞ்சுதம் அமைதியாக.

 

” நம்பு, நெசமா சொல்றோம்ட்டி ”

 

“செரி நம்பறேன். தங்கராசுனு, இவன் பெயரச் சொல்லிக்கிட்டு, என்னிக்கி அந்தப் புள்ள, இந்த வீட்டு மின்னாடி வந்து நிக்கிதோ, அன்னிக்கி நம்பறேன்” என்று கிட்டத்தட்ட சூளுரைத்தார்.

 

அஞ்சுதத்தின், இந்த சூளுரையைக் கேட்ட, மற்ற மூவரின் மனமும் சுணக்கம் கொண்டது.

 

“ஏன்ட்டி, நீ இப்பமே “என்று பேச்சிக்கிழவி ஆரம்பிக்கும் போதே,

 

“தங்கராசு… தங்கராசு” என்ற அழைப்புச் சத்தம் வெளியே கேட்டது.

 

அனைவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். அங்கு கொடிமலர் நின்று கொண்டிருந்தாள்.

 

4

 

வெளியே வந்த அனைவருக்குமே, ஆச்சரியத்தை தந்தது, அவள் நிற்கும் தோரணை.

 

சற்று நேரத்திற்கு முன், கிழவிகள் சொன்ன மாதிரி இவளுக்கும், தங்கராசுவின் மீது அபிப்பிராயம் இருக்கிறதோ? என்று அஞ்சுதத்திற்கு சந்தேகம் வந்தது. தங்கராசுவின் விருப்பங்கள் பற்றி, அவருக்கு என்றுமே தெரிந்ததில்லை. இதுதான் முதல்முறையாக, அவனுக்கென்று ஒன்றை கிழவிகள் அவரிடத்துக் கேட்டது. அவருக்கும் ஆசையாக இருந்தது, மகனின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதற்கு. ஆனால், மலரின் படிப்பு, அதற்கு முட்டுக்கட்டையாக வந்து நின்றது.

 

சுதாரித்துக் கொண்டு, அஞ்சுதம்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். “எதுக்காக இங்கன வந்து, இப்படி நிக்கிற” என்று  கேட்டார்.

 

“தங்கராசுகிட்ட  பேசணும்” என்றாள் சுருக்கமாக.

 

“ஏன்? ”  என்றார், அதனினும் சுருக்கமாக.

 

“ஏன்ட்டி, அது அவன்கிட்டதான பேசனும்னு சொல்லிச்சி நீ ஏன் இடைஞ்சலா” என்று சூசகமாக சொல்லிப் பார்த்தார் பேச்சிக்கிழவி.

 

“பேசாம இருக்கீகளா. நீ சொல்லு” என்றார், அஞ்சுதம் அதிகாரமாக.

 

“நான் அவுககிட்ட சொல்லிக்கிறேன்” என்றாள் மலர் மரியாதையாக.

 

“இப்பம்தான் ஒன்னயப்பத்தி இவிய சொன்னாக. தங்கராசுக்கு, ஒன் மேல ஒரு அபிப்பிராயம் இருக்கிதுன்னும் சொன்னாக” என்று கிழவிகளை நோக்கி கைகாட்டினார்.

 

அதற்குள், நம்மை பற்றிய பேச்சுகள், இந்த வீட்டில் பேசப்படுகிறதே என்று மலருக்கு எரிச்சலாக இருந்தது. தான் எந்தவொரு ஒப்புதலும் தராமல், தன்னைப் பற்றி, ஏன் பேசினார்கள்  என்று கிழவிகள் மீது கோபம் வந்தது. அவளுக்கு, அப்படி ஒரு நம்பிக்கை, தங்கராசு இதைப் பற்றி பேசியிருக்கமாட்டான் என்று.

 

கிழவிகளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள், கொடிமலர்.

 

“அதேன், பெண்ணு பார்க்க வந்தப்ப, ஒங்க அக்காவா வேண்டாம்னு சொல்ல வச்சியா ” என்று, அவராக ஏதேதோ யுகித்தார்.

 

“ஏங்க , அது வேற”  என்று சொல்ல முனைந்தவளை,

 

” நான் ஒன்னயத்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒங்க அக்காவ இடிச்சிக்கிட்டே நின்ன. அன்னிக்கி கூட முக்குல(தெருமுனை) வைச்சிக் ” என்று, முதல் நாள் பார்த்ததுக்கும், இன்றைக்கும் முடிச்சுப் போடப் பார்த்தார்.

 

அதற்குள் “போதும் நிறுத்திறீகளா. ஒங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீக. எனக்கு ஒங்க பையன் மேல எந்த அபிப்பிராயமும் கிடையாது. போதுமா ”  என்று, முடிக்கப் பார்த்தாள்.

 

“அப்பம், எதுக்கு இங்கன வந்து நிக்கிற. ஒங்க அக்கா பேசினதுக்கு மன்னிப்பு கேட்கவா” என்று, இசக்கி மீது இருக்கும் கோபத்தை இவளிடம் இறக்கினார்.

 

“அதுக்கு, எப்பமோ மன்னிப்பு கேட்டாச்சி. ஏன் ஆச்சி, நீங்க சொல்லலையா? ” என்று, கிழவிகளைப் பார்த்து இன்முகமாக.

 

கிழவிகளோ, மாமியார் மருமகள் சண்டையில் அமைதி காப்பதே சிறந்தது என்று நினைத்தனர்.

 

அஞ்சிதம்  “மன்னிப்பு கேட்டாச்சில. அப்பம் போ ” என்று விரட்டி விடப்பார்த்தார்.

 

“நான் ஒங்ககூட பேச வரல.. தங்கராசுகூடத்தான்   பேசணும் ” என்று, விதண்டாவாதம் செய்தாள்.

 

“அதேன் எதுவும் இல்லேல, அந்தால என்னாத்துக்கு ”

 

“மாறி மாறி (திரும்பத் திரும்ப) அதையே சொல்றீக. ஏங்க, அவுககிட்ட” என்று, அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே…

 

“நல்லதனமா(நயமா) சொன்னா புரியாதா? ஒங்க அப்பாகிட்ட சொல்லவா? ” என்று மிரட்டிப் பார்த்தார்.

 

அதைக் கேட்ட தங்கராசு”ஏங்க மலரு, சாயங்காலமா ரீசார்ஸ் கடைக்கு வாரேன். அங்கன வச்சி பேசிக்கலாம். செரியா” என்று, அவர்கள் இருவருக்கும் இடையே வந்தான்.

 

” நீங்க இங்கனதான் இருக்கீகளா? ” என்று, தலை சரித்துக் கேட்டு, அவனைச் சாய்த்தாள்.

 

சிரித்துக் கொண்டே, “போங்க மலரு. நான் வரேன்” என்று, சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்தான்.

 

கிளம்பியவனிடம், அஞ்சுதம் ” தங்கராசு, சேக்காளி (நன்பன்) பயலுக கூடச் சேர்ந்து மன்றத்துக்குப் போவாத. பண்ணைக்கு போ ” என்றார், கண்டிப்புடன்.

 

“செரி அம்ம” என்றவன் குரல் காற்றில் பறந்து வந்தது.

 

தங்கராசுவின் செயல், அஞ்சுதத்திற்கு வியப்பாக இருந்தது.  அவனைத் தட்டிக்கேட்கவும், தடுக்கவும், அவர் மனம் மறுத்தது. மலர், மறுப்பு சொன்ன பின்னும், சிரிக்கிறவனிடம், என்னத்தைப் போய் கேட்க முடியும்.  எதுவுமே இல்லை என்று சொல்கிறவளைப் பற்றி, அவள் அப்பாவிடம், சென்று என்ன சொல்வது.

 

அவன் சென்ற பின்பும், கொடிமலர் அங்கேயே நின்றாள்.

 

“ஏன்ட்டி முத்து, இவ நமக்கு ஏதோ இக்கட்டு(துன்பம்) கொடுக்கத்தான் நிக்கிறா” என்று பேச்சிக்கிழவி, முத்தாச்சியிடம் முனுமுனுப்பு செய்தது.

 

“என்னா ஆச்சி, ஜூஸ் போட்டீகளா ”

என்று தீக்குச்சி உரசினாள்.

 

“ஏன்ட்டி, ஒனக்கும் வேனுமா” என்று, தீப்பெட்டியில் தண்ணீர் ஊற்றினார்.

 

” என்னா ஜுஸ் ” என்று, அஞ்சுதம் புது தீப்பெட்டியை மலருக்கு தந்தார்.

 

“அது ஒன்னுமில்லை டீச்சர், நீங்க எங்க வீட்லருந்து கிளம்பிறப்ப, மிச்சத்தை வீட்ல வந்து பேசுறேன்னு, சொன்னீகள ” என்று, அதில் தீக்குச்சி உரசிவிட்டாள்.

 

” ஆமா ”

 

“நீங்க அவயம் போட்டு, ஒங்க தொண்டத்தண்ணி(throat) வத்துமா அதேன், ஜுஸ் போட பழம் எடுத்திட்டு வந்தாக. போட்டுக் கொடுத்தீகளா ஆச்சி ” என்று அவர்களைப் போட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

 

அஞ்சுதம்  பிழிந்தெடுக்கும் கோபத்துடன், கிழவிகளைப் திரும்பிப் பார்த்தார். அதற்கப்புறம் ‘பிபிசி’ பார்க்க, கிழவிகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

 

*****

 

சாயம்போன லுங்கி, ஆஸ்தான நாயகன் முகம் போட்ட சட்டை என்று, சாயங்கால சாதாரண தோற்றத்துடன், ‘ரீசார்ஜ்’ கடையின்  கண்ணாடி கதவுகளை திறந்து  உள்ளே நுழைந்தான், தங்கராசு!

 

“கோபமா” என்று, மலர் முன்னே வந்து நின்றான்.

 

ஒற்றை விரலை, வாய் மேல் வைத்து ‘பேசாதீக’ என்பது போல் சைகை செய்தாள். மேலும், பின்னே திரும்பிப் பார்க்கக் கண்களால் ஜாடை காட்டினாள்.

 

அவளின் கண்கள் காட்டிய திசையில், இசக்கியம்மாள் அமர்ந்திருந்தாள்.

 

“என்னாத்துக்கு பேசனும்னு சொன்னீக” என்று கேட்டான்.

 

“இருங்க. இசக்கி, இங்கன வாட்டி ” என்று, தனது அக்காவை அழைத்தாள்.

 

அருகில் வந்த இசக்கியிடம்… “இவுககிட்ட சொல்லுட்டி” என்றாள் மலர்.

 

“இவுகதான் பேசனுமா” என்ற தங்கராசுவின் குரலில் அத்தனை ஏமாற்றம் தெரிந்தது.

 

“ஒங்ககிட்ட ஒரு ஒத்தாசை(உதவி) கேட்கனும்” என்றாள் இசக்கி.

 

“எங்கிட்டயா. என்னா வேனும் சொல்லுங்க” என்றான் தாரளமாக.

 

ஆனாலும் இசக்கி தயங்கி, “மலரு, நீயே சொல்லுட்டி” என்று பொறுப்பை மலரிடம் தந்தாள்.

 

“காலெம்பற வீட்டுல,  ஒங்கள பிடிக்கலன்னு சொல்றதுக்கு, வேற காரணமே இல்லே. அதே, படிப்பச் சொல்லிப் பிடிக்கலன்னு சொல்லிருச்சி. நீங்க கவலப்படாதீக ”

 

” ஏங்க, அது அயத்தே போயிருச்சு. இதுக்கா வரச் சொன்னீக ”

 

“மலரு, ஒத்தாசை என்னானு சொல்லுட்டி” என்று, இடித்தாள் இசக்கி.

 

மலர், முதன் முறையாக அமைதியாக நின்றாள்.

 

“யாராவது சொல்லுங்க”என்றான்.

 

“சார், நான்” என்று, ஆரம்பித்த இசக்கியை.

 

“சாரெல்லாம் வேண்டாங்க, தங்கராசு போதும் ” என்றான்.

 

“இல்லே சார், இவதான்  சொன்னா. அவுக ரெம்ப நல்லவுக, அவுகளுக்கு மருவாதை கொடுன்னு ” என்று மலரை மாட்டி விட்டாள்.

 

“இல்லே தங்கராசு” என்ற மலருக்கோ, ஒரே நாளில் எத்தனை பேரைத்தான் சமாளிக்க என்ற உணர்வு.

 

“பரவால்ல. சொல்லுங்க மலரு. என்னா? ”

 

“எங்க அக்கா, ஒருத்தர விரும்புறா. அவுகளதான் கல்யாணம் கட்டிப்பேன்னு சொல்றாக. அதே, அவுக ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்க, நீங்க ஒத்தாசை செய்யணும்” என்று விடயத்தை விருட்டென்று சொன்னாள்.

 

“அதேன் வேணான்னு சொன்னீகளா. ஆனா ஒங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதானே. அவுக  பார்த்து கல்யாணம் கட்டி வைக்கட்டுமே” என்றான்.

 

“அப்பாவுக்கு தெரியும் தங்கராசு ”

 

“பொறவு என்னா பிரச்சனை”

 

“அப்பா ஒத்துக்கல. அதே ஒங்ககிட்ட ஒத்தாசை கேட்டோம்”

 

“எப்படிங்க அப்பாவுக்கு தெரியாம புள்ளைக்கு கல்யாணம் கட்டி வைக்க முடியும். அது தப்புங்க. ”

 

இவர்கள் பேசியதைக் கேட்ட இசக்கி, ” நீதான மலரு சொன்ன, அவுக ஒத்தாசை செய்வாகனு. இப்பம் பாரு ” என்று அழ ஆரம்பித்து விட்டாள்.

 

“இசக்கி, அழாதட்டி. அவுக யோசிச்சு, செரின்னு சொல்லுவாக பாரேன்” என்று மலர் சொன்னது, தங்கராசுவை ‘செரினு சொல்லு ‘ என்றிருந்தது.

 

“ஏங்க மலரு, இது சாதாரண விஷயம் இல்லேங்க. எங்க அம்மைக்கு தெரிஞ்சா அம்புட்டுதான். ”

 

“ஏன், ஒங்க அம்மாகிட்ட சொல்றீக. சொல்லாம செய்ங்க. ”

 

“நான், எங்க அம்மைக்கு தெரிஞ்சானுதான் கேட்டேன். சொல்லுவேனு சொன்னேனா”

 

“அப்பம் தெரியாம பார்த்துப்போமே”

 

“ஏங்க, கல்யாணம் முடிச்சி, அவிய ரெண்டு பேரும் ஊருக்குள்ள வருவாகள, அப்பம் தெரியாதா? ”

 

“இல்லே. அப்பம் ஒங்கள காட்டிக் கொடுக்க மாட்டோம்” என்றாள் இசக்கி.

 

தங்கராசு யோசித்தான்.

 

“செரிங்க. முதல்ல அவுக பெயர், என்னா சோலி? எங்கன பாக்கிறாக? அதச் சொல்லுங்க ”

 

“அவுக பெயர் கண்ணன். வாத்தியார காலேச்ல சோலி. அவுக இருக்கிறது மார்த்தாண்டம். ” என்றாள் இசக்கி.

 

” அவுக வீட்ல எப்படி ”

 

“அவுக வீட்ல, எல்லாருக்கும் என்னய ரெம்ப பிடிக்கும். அவிய எல்லாரும் இதுக்கு ஒத்துக்கிட்டாக. அது தெரிஞ்சுதான் அப்பா, இங்கன கூட்டிட்டு வந்துட்டாக”

 

“அப்பம், அவியகள வந்து, ஒங்க அப்பாகிட்ட பேசச் சொல்ல வேண்டியதுதானே”

 

“பேசுனாக, ஆனா அப்பா ஒத்துக்கல ”

 

” ஏன்? என்னா காரணம்? ”

 

“சொந்தக்காரக ஏதாவது சொல்லுவாகனு பயப்படுறாக ”

 

திரும்பவும் யோசித்தான்.

 

“செரிங்க. அவுகளுக்கு போஃன் போட்டு பேசுங்க. நாளே அவுகள பார்த்துப் பேசலாம் ” என்றான்.

 

“செரிங்க” என்று முகமலர்ந்து சொன்ன இசக்கி, ” மலரு, ஒன் போஃன கொடுட்டி” என்று, கைபேசியை வாங்கினாள்.

 

சற்றுத் தள்ளிச் சென்று, பத்து நாட்களாக பூட்டி வைத்த பாசத்தையெல்லாம் பொழிய ஆரம்பித்தாள் இசக்கி.

 

அதுவரை தங்கராசுவையே பார்த்துக் கொண்டிருந்த மலர், “ரெம்ப தேங்க்ஸ்ங்க ” என்றாள்.

 

” ஆட்டும்ங்க”

 

“செரி, அவ பேசட்டும். நீங்க செத்த நேரம் வெளிய வாரீகளா ”

 

“ம்..செரிங்க ” என்று சொல்லியபடி, இருவரும் வெளியே வந்தனர்.

 

” சொல்லுங்க ” என்றான்.

 

“பாருங்க தங்கராசு, நீங்க என் மேல அபிப்பிராயம் இருக்குன்னு வெடுக்குனு சொல்லிட்டீக”

 

“வீட்ல வச்சே இல்லேன்னு சொல்லிட்டீகள. அந்தால இப்பம் என்னா மலரு? ”

 

“நான் சொல்றத கேளுங்க”

 

“செரி கேட்கிறேன்.  சொல்லுங்க. ”

 

“நல்லா கேட்டுக்கோங்க. எனக்கு ஒங்க மேல எந்த அபிப்பிராயமும் கிடையாது. எனக்குப் படிக்கனும்.  பத்து பதினைஞ்சு நாள்ல பரிட்சை வருது. அதுமட்டும் தான் மனசுல ஓடுது. புரியுதா? ”

 

“ம்…புரியுது”

 

“நீங்க இப்படி ஒத்தேல அபிப்பிராயம்னு சுத்திக்கிட்டிருந்தா,   ராவைல உறக்கம் வராது ”

 

“ஆட்டும்ங்க” என்றான், அவள் கூறுவதும் சரியென்பது போல்.

 

“உறக்கம் வரலைன்னா, கனவு வரும் ” என்று தொடர்ந்தாள்.

 

” ம்ம்ம்” என்று ஆமோதித்தான்.

 

“கனவு வந்துச்சுனா, அதில டூயட் வரும் ”

 

” ம்ம்” என்றான், ‘இவுக என்னா சொல்ல வராக’ என்பது போல்.

 

“டூயட் வந்திச்சினா, அங்கன நான் வந்து நிக்கனும் ”

 

” ம் ”

 

“நான் அங்கன வந்திட்டா, யார் படிக்கிறது சொல்லுங்க” என்று இமைகள் படபடத்துக் கேட்டாள்.

 

“செரிங்க மலரு ”

 

“இல்லே தங்கராசு ”

 

“போதுங்க. நாளே காலெம்பற, ஒங்க தெருவுக்கு பொறவால ஒரு தெரு போகுதுல, அங்கோடி வந்து, ஊருக்கு வெளியே நில்லுங்க.  மார்த்தாண்டம் கூட்டிட்டுப் போறேன் ” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

*****

 

அவன் சற்று தூரம் நடந்து வந்ததும், அங்கிருந்த டீக்கடையின் பின்புறம் ஒளிந்திருந்த, இரு கிழவிகளும் வெளியே வந்தனர்.

 

” வாலே”

 

“அங்கன நிக்க சொன்னா, இங்கன வந்து நிக்கிறீக ” என்றான்.

 

“சும்மயே அங்கன எத்தறை தேரம் நிக்கிறது. அதேன், இங்கன வந்து சூஸ்பொரி சாப்பிட்டோம்” என்றார் முத்தாச்சி.

 

கடைக்காரரைப் பார்த்துக் கையசைத்து, “என்னா அண்ணே, மன்றம் கிட்டக்க ஒங்கல பாக்கவே முடியல” என்றான் தங்கராசு.

 

அவன் தலையில் தட்டி, “என்னா சோலிக்காக வந்திட்டு, என்னா செய்ற. அந்தப் புள்ள என்னா சொல்லிச்சு. அதச் சொல்லுலே” என்றார் பேச்சிக்கிழவி.

 

சலித்துக் கொண்டான்.

 

“என்னலே சலிச்சிக்கிற. எதுக்லே அந்தப் புள்ள கூப்பிட்டிச்சி”

 

“அதுக்கு என்மேல அபிப்பிராயம் எதுவும் கிடையாதாம்”

 

“வீட்டு வாசல்ல வச்சி சொல்லிட்டாள. அதச் சொல்றதுக்கு இங்கன, ஏன் வரச் சொன்னாளாம்”

 

மலர், அவனைக் கூப்பிட்ட காரணத்தைச்  சொன்னான்.

 

“லே,அவ ஒன் வீட்டுக்கு வராளோ? இல்லேயோ? தெரியாது. ஆனா ஒன்னய, ஒன் வீட்லருந்தே வெளியே அனுப்பிருவா” என்றார் பேச்சிக்கிழவி.

 

” வேற என்னா சொன்னா ” என்றார் முத்தாச்சி.

 

“இப்படி சொல்லிக்கிட்டு திரிஞ்சா உறக்கம் வராதாம். அந்தால கனவு வருமாம். கனவுல டூயட் வருமாம். டூயட் வந்தா அவுக வரனுமா. ஆனா அவுகளுக்கு அதுக்கெல்லாம் தேரம் இல்லையாம் ” என்றான்.

 

” இது என்னா புதுசா இருக்குலே ” என்றார் பேச்சிக்கிழவி.

 

” ஏன்? என்னா ஆச்சி? ”

 

” அந்தப் புள்ள ஒளறுதுலே”

 

“போங்க முத்தாச்சி. அது தெளிவா இருக்கு. படிக்கனும்னு சொல்லுது ”

 

“நாங்க வேண்டாம்னு சொன்னோம். ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டு ஒங்க அம்ம படிக்கல. ஆனா அந்தப் புள்ள தெளிவா ஒன்னய குழப்பிருக்கு. ” என்றார் பேச்சிக்கிழவி.

 

” என்னா சொல்றீக ”

 

“ஏம்லே, உறக்கமே வரலைனா, கனவு எப்படிலே வரும்”

 

“ஆமா ஆச்சி” என்று, அப்போதுதான் உணர்ந்தான்.

 

” கனவு வருமா, டூயட் வருமா… அதில இவ வருவாளாம். ஏன், இவளுக்கு வேற சோலியே இல்லேயா. ஆமா நீ கனவு கண்டா, அவ எப்படிலே படிக்க முடியாது ”

 

” கனவுதான ஆச்சி. வுடுங்க ”

 

“ஏம்லே, கனவுனாலும் ஒரு லாசிக் வேண்டாமாலே” என்றார் பேச்சிக்கிழவி.

 

“செரி,  இப்பம் என்னா செய்ய ஆச்சி. இப்பமே போய் கேட்டுப் பாக்கவா ”

 

“இருலே, இப்பம் போய் கேட்டா சாலம் (பொய்யாக நடித்தல்) போடுவா ”

 

“நாளே, அந்தப் புள்ள கனவுல நீ வந்தேனு, அதுவே வந்து சொல்லும் பாரு”

 

“அதான் அபிப்பிராயம் இல்லேன்னு சொல்லுது. அந்தால எப்படி ”

 

” அதெல்லாம் வரும் ”

 

“வந்தாலும், அந்தப் புள்ள நெசம் சொல்லாட்டி”

 

“அது சொல்லாதுலே. நீதான் கண்டுபிடிக்கனும் ”

 

” எப்படி முத்தாச்சி”

 

“நாளே ஒன்னய பார்க்கிறப்ப, ஒன்கிட்ட சள்ளுசள்ளுனு (கோபத்தைக் காட்டுவது) விழுந்தா, அந்தப் புள்ள கனவுல, நீ வந்திருக்கனு அர்த்தம் ”

 

“இல்லன்னா ”

 

“ஒங்க அம்மைய, பெண்ணு பார்க்க சொல்லிட்டு, எங்கள வுட்ரு” என்று கிழவிகள் இருவரும் கிளம்பினர்.

 

“இருங்க ஆச்சி, நானும் வரேன் ” என்று கிழவிகள் பின்னே ஓடினான்.

 

மலர் வீடு

 

இசக்கி முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

 

” இசக்கி,ரெம்ப சந்தோஷமா ”

 

“ஆமா மலரு. நாளே அவுகள பார்க்கப் போறத நினைச்சா, எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா”

 

“சந்தோஷத்ல, கனவுல டூயட் பாடு இசக்கி ”

 

“… ” என்று வெட்கப்பட்டாள்.

 

“அக்கா, அதுவும் நம்ம ஊரு ஸ்டைல்ல..”

 

“பேசாம படு மலரு”

 

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த இரவில், கொடிமலர் கனவில்.

 

அத்தமக குட்டி…

கட்டழகு சுட்டி…

காதலுக்கு கெட்டி…

 

மாமா நீயும் புதுசா…

தூக்காதய்யா கூசா…

காதலென்ன லேசா…

 

அந்தி சாயும் நேரம்…

ஆத்தங்கர ஓரம்…

காத்திருக்கேன்டி தாரம்…

 

ஆத்தங்கர குளிரு…

தாங்காதிந்த தளிரு…

வேணாம் மாமா போயிரு…

 

மத்தியான வெயிலு…

மாந்தோப்பு நிழலு…

காத்திருக்கேன்டி மயிலு…

 

மாந்தோப்பு எறும்பு…

வெறுக்குமிந்த கரும்பு…

வேணாம் மாமா குறும்பு…

 

வாசமுள்ள மல்லி…

மாமன் பேரச்சொல்லி…

வாங்கித்தரேன் அல்லி…

 

வச்சுக்கிட்டா நானும்…

வாக்கப்பட தோனும்…

வேணாம் மாமா நீனும்…

 

ஏன்டி இந்த வீம்பு…

எதுக்கு எனக்கு வம்பு…

வேணாம் உன் அன்பு…

 

அய்யோ மாமா நில்லு…

நீயும் இல்லாமல்லு…

நானும் வெறும் கல்லு…

 

கனவு முடிந்து எழுந்தவள், அருகில் படுத்திருந்த அக்காவைப் பார்த்தாள். இசக்கி, நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

‘அம்புட்டுக்கும் காரணம் அவுகதான். நாளே, அவுகள நல்லா ஏசனும்’ என்று சொல்லிவிட்டு, திரும்பவும் தூங்கச் சென்றாள்.

 

அபிப்பிராயத்தை அரங்கேற்றியவர்கள் எல்லாம்  அரவம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அபிப்பிராயம் அல்ல என்றவள்தான் அரற்றிக் கொண்டிக்கிறாள்.

 

5

 

தங்கராசு வீடு

 

கிழவிகள் இருவரும் வெளியே அமர்ந்திருந்தனர். தங்கராசு வயர் கட்டிலில், வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.

 

“லே, சூதானமா நடந்துக்கோ. அம்மைக்கு தெரியாம வச்சிக்கோ. அந்தப் புள்ளைகளையும் பார்த்துக்கோ. செரியா” என்றார் பேச்சிக்கிழவி.

 

“ம்ம்ம் செரி ஆச்சி”

 

“ஏம்ட்டி முத்து, நீ என்னாத்த  பேப்பர்ல பார்த்துகிட்டு இருக்க”

 

“இல்லே பேச்சி. இந்த அமெரிக்க நாட்டாம, யார்கூடயோ நிக்கிற மாதிரி போட்டோ போட்ருக்காக. அதேன் யாருன்னு பார்த்தேன்” என்றார் முத்தாச்சி.

 

“ஒன்னு, கொரியாக்காரன இருப்பாக. இல்லே ஜப்பான் ஆளுகள இருப்பாக முத்தாச்சி” என்றான் தங்கராசு.

 

“இல்லலே, நேத்தே பிபிசில படம் பார்த்தோம்ல. ஏதோ பிளைன்ன சுட்டுட்டானு. அதுவாலே ” என்றார் பேச்சிக்கிழவி.

 

” அது ஈர்ரான் காரேன் ஆச்சி”

 

காலை நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு, அஞ்சுதம் வந்து கொண்டிருந்தார். அவர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டவர், ‘காலெம்பறயே வெட்டிப் பேச்சு’ என்று நினைத்துக் கொண்டே, அருகில் வந்து நின்றார். அவரைப் பார்த்தும் தங்கராசு எழுந்து கொண்டான்.

 

ஆனால் அவர்கள் பேசிய விஷயத்தை பத்தி பற்றி அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

 

அவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு இருப்பது புத்தகஅறிவு என்றால், அவர்களுக்கு இருப்பது உலகறிவு. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.

 

“தங்கராசு, கார எடுத்து வெளிய நிப்பாட்டிருக்க. எங்கனயும்  போறனா, கார சுத்தபத்தமா தொடச்சுட்டு எடுத்திட்டு போ. செரியா”

 

“செரி அம்ம”

 

அதைச் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடம் செல்லத் தயாராகத் தொடங்கினார், அஞ்சுதம். சிறிது நேரத்தில் கிழவிகளிடம் சொல்லிவிட்டு தங்கராசும் கிளம்பிவிட்டான்.

 

****

ஊருக்கு வெளியே இசக்கியும், மலரும் நின்றுகொண்டிருந்தனர்.

 

தங்கராசு வந்தவுடன் “ஏன் இவ்வளவு தாமசமா(late) வர்றீக. எவ்வளவு நேரம் காத்திக்கிட்டு கிடக்க. யாராவது பாத்துட்டா என்னா செய்ய சொல்லுங்க” என்று பொறிந்தாள்.

 

“ஏன்ட்டி, அவுக செரியான  தேரத்லதான வந்திருக்காக”

 

“ஒனக்கு தெரியாது இசக்கி. நீ பேசாம இருட்டி”

 

“ஏங்க, ரெம்ப ஏசிக்கிட்டு இருந்தீகனா, எங்க ஆச்சிகிட்ட  சொல்லிருவேன் ” என்று சவால் விட்டான், தங்கராசு.

 

“ஆச்சிகிட்ட சொல்வீகளா?? சொல்லுங்க. ஒங்க ஆச்சிகளுக்குப் பயப்படுற ஆளு நான் இல்லே ” என்று சதிராடினாள்.

 

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கிழவிகளைக் கைபேசியில் அழைத்தான்.

 

“ஆச்சி, இந்த மலரு புள்ள ஏசிக்கிட்டே இருக்கு. என்னான்னு கேளுங்க ” என்று கைபேசியை, மலரிடம் கொடுத்தான்.

 

தயங்கிக் கொண்டே வாங்கியவள், ” ஹலோ, நான் மலர் பேசறேன் ” என்றாள்.

 

“ஹலோஓஓஓ நாங்க, மலரு மாமியா வீட்டிலருந்து பேசுறோம்” என்று, கோரஸாக பதில் வந்தது.

 

“ஏங்க, நான் நேத்தே தெளிவா சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு இப்படியே பேசிட்டு இருக்கீக”

 

“சொன்ன. ஆனா ஒன் செய்கை வேற மாதிரில  இருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.

 

“என்னா வேற மாதிரி”

 

“நேத்து, ராவைல தங்கராசு நல்லா உறங்கிட்டான். நீ எப்படி?? ”

 

மார்கழி மாதம், உள்ளங்கையில் இட்டுக் கொள்ளும் மருதாணி போல், கொடிமலர் முகம் மலர்ந்து, சிவந்து, சிரித்தது.

 

“ஏன்ட்டி மலரு, எதுத்தால தங்கராசு சிரிக்கிறானானு பாரு? ”

 

கொடிமலர், மெதுவாக தலையை நிமிர்த்தினாள். புழுதி பரந்திடும் கிராமத்துச் சாலையில், நின்று கொண்டு இரவில் இம்சித்தவனின் முகம் இன்முறுவல் காட்டியது. அதை இமைக்க மறந்து, இஷ்டத்துடன் பார்த்தாள்.

 

அதற்குள் கைபேசியின் மறுமுனை கூச்சலிட்டது.

 

“மலரு… மலரு… போஃன் பேசுங்க. கூப்பிடறாக பாருங்க ” என்று, இரவின் கனவிற்கு காரணமானவனே, இக்கணத்தின் கனவைக் களைத்தான்.

 

“ஹலோ”

 

“என்னா சிரிச்சானா?”

 

“ம்ம்ம்”

 

“ஏன்னு தெரியுமா”

 

“ம்கும்”

 

“அப்படினா, நீ ராவைல உறங்காதத, அவன் கண்டுக்கிட்டானு அர்த்தம் ”

 

” – – – – ”

 

” இப்பம், ஒங்க அக்காவா பாரு”

 

மலர், திரும்பி இசக்கியைப் பார்த்தாள்.

 

“கோவமா இருக்காளா ”

 

” ஆமா”

 

“பொறவு, அவளுக்கு ஒத்தாசை பண்றேன்னு வந்திட்டு, நீ ஒன் சோலிய பார்த்தா, கோவம் வரும்ல ” என்று உச்ச தாளத்தில் சிரித்தனர்.

 

” – – – – “என்றிருந்தாள் மலர், அந்த தாளத்திற்கு, பாடல் வரிகள் எழுத முடியாமல்.

 

“ஆனா, நீ நேத்து கள்ளம் பேசறனு நினைச்சேன். நெசம் பேசிருக்கட்டி”

 

” புரியல”

 

“உறங்கலனா கனவு வரும்னு சொன்னேல. அது நெசம்ட்டி. ஏன்னா, இப்பம் செத்த தேரத்துக்கு மின்னாடி, நீ அப்படிதான நின்றுப்ப ” என்று, அத்தனை தூரத்திலிருந்தே, மலரின் தகிடுதத்தைக் கண்டறிந்தார்.

 

உடனே தங்கராசுவிடம் கைபேசியைக் கொடுத்துவிட்டு, “நாம பேசறத ஒங்க ஆச்சிங்ககிட்ட சொல்லுவீகளா” என்றாள் கோபமாக.

 

” இல்லே மலரு, அது ”

 

“இனிமே சொன்னீங்க, அப்புறம் பேசவே மாட்டேன் ” என்று விருவிருவென்று சென்றாள்.

 

“வாங்க வந்து கார எடுங்க” என்று அதிகாரம் வேறு.

 

இசக்கியோ, என்ன நடக்கிறது என்று பாதி புரிந்தும், புரியாமலும் இருந்தாள்.

 

பின் தங்கராசுவும், இசக்கியும் ஏறியவுடன், கார் மார்த்தாண்டத்தை நோக்கி விரைந்தது.

 

****

 

மார்த்தாண்டம் ஊரின் வெளியே, கண்ணன் வாத்தியார் காத்துக் கொண்டிருந்தார்.

 

காரிலிருந்து இறங்கிய இசக்கி, ஓடோடிச் சென்று,  கண்ணனை ஆரத் தழுவிக் கொண்டாள்.

 

“எப்படி என்னய விட்டுப் போக முடிஞ்சது? ஒரு வார்த்தை சொல்லல. நான் எப்படி பயந்திட்டேன் தெரியுமா” என்றார் கண்ணன்.

 

“இல்லே, அப்பாதான். எதுவும் சொல்லாம இங்கன கூட்டிட்டு வந்துட்டாக. போஃன வேற வாங்கி வச்சுட்டாக. ஒன்னுமே பண்ண முடியல” என்று, அவரிடமிருந்து விலகினாள்.

 

“இப்பம் எப்படி முடிஞ்சது ”

 

“இவுகதான் ஒத்தாசை செஞ்சாங்க, ஒங்களப் பார்க்கிறதுக்கு”

 

“இவுக யாரு”

 

“இவுக எங்க ஊருகாரக. பெயர் தங்கராசு. மலருக்கு தெரிஞ்சவங்க. என்னய பெண்ணு பார்க்க வந்தாக ”

 

“பெண்ணு பார்க்கவா. அந்த, அளவுக்கு ஒங்க அப்பா போயிட்டாகளா. ரெம்ப மோசம் அப்புறம் என்னாச்சு ” என்றார் கண்ணன் கோபமாக.

 

“கோவப்படாதீக, இவுக என்னய விடக் கம்மியா படிச்சிருக்காகனு சொல்லி, பிடிக்கலன்னு சொல்லிட்டேன் ” என்றாள் தேவையில்லாமல் இசக்கி.

 

“இப்பம் என்னா செய்யனும், அதமட்டும் பேசுங்க” என்று, அதைத் திருத்தினாள் மலர்.

 

“அடுத்த வாரமே கல்யாணம் கட்டிக்கலாம். நான் ஏற்பாடு பண்றேன். நீ வந்தா போதும் ” என்றார் கண்ணன்.

 

“ஏங்க, அவுக அப்பாகிட்ட, மறுக்கா வந்து பேசிப் பார்க்கிறீகளா” என்றான் தங்கராசு.

 

“இல்லே. நான் ரெம்ப பேசிட்டேன். திரும்பவும் பேசினா, இப்பம் சம்மதம் சொன்ன எங்க அப்பா அம்மா கஷ்டப்படுவாக”

 

“மலரு, நீங்களாவது சொல்லுங்க ஒங்க அப்பாகிட்ட பேசச் சொல்லி ”

 

“அவிய முடிவு செரிதான் தங்கராசு. கல்யாணம்னா, என்னா செய்யனும் சொல்லுங்க சார்.”

 

“இசக்கியோட சர்டிபிகேட் வேனும் மலரு. ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பதியறதுக்கு”

 

“என்னிக்கி தரனும் சார்”

 

“நாளே மறுநாளுக்குள்ள”

 

“செரி சார், சர்டிபிகேட்ட இவுககிட்ட கொடுத்து விடறோம் ” என்று தங்கராசுவைக் கைகாட்டினாள்.

 

“நாமளே வந்து கொடுப்போம், மலரு. இவுகள ஒரு வாரம் பார்க்காம இருக்க முடியாது ” என்றாள் ஏக்கத்துடன் இசக்கி.

 

“ஏங்க, நடக்கிற காரியமா. ஊரில யாருக்கும் தெரிஞ்சா, இன்னிக்கி வந்ததே பெருசு ” என்று பதறினான் தங்கராசு.

 

“இன்னும் ஒரு வாரம் ஒங்களப் பாக்காம  இருக்கவே முடியாது. ஏதாவது செய்ங்க ” என்று கண்ணனிடம் மன்றாடினாள் இசக்கி.

 

“ஏதாவது வழி பண்ணுங்க தங்கராசு. அவதான் இவ்ளோ கேட்கிறாள” என்றாள் மலர்.

 

கண்ணனும் இசக்கியும் கெஞ்சும் பார்வையுடன், அவனைப் பார்த்தனர்.

 

சிறிது நேரம் யோசித்தவன், “செரிங்க, அப்படின்னா நாளே மறுநாள், ஊரில இருக்கிற எல்லா அக்கச்சிகளையும் (sisters) கூட்டிக்கிட்டுப் படத்துக்குப் போவோம். அதுல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கோங்க. மார்த்தாண்டம் தியேட்டர்க்குத்தான் வருவோம் கண்ணன் சார். நீங்க அங்கன வச்சி, சந்திச்சுக்கோங்க ” என்றான்.

 

“சினிமாவுக்கா? எதுக்கு? அதுவும் அத்தனை பேரக் கூட்டிட்டு ” என்றாள் மலர்.

 

“மலரு, துளைச்சிக் கேள்வி கேட்காத. செரின்னு சொல்லுட்டி ” என்றாள் இசக்கி.

 

“ம்ம்ம்.. செரி ” என்றாள் யோசனையுடன்.

 

“செரி இசக்கி, நீ சர்டிபிகேட் எடுத்திட்டு வா. மிச்சத்த நான் பார்த்துக்கிறேன் ” என்றார் கண்ணன்.

 

“செரிங்க, செத்த தேரம் அங்கிட்டு போய் பேசிட்டு வாங்க “என்று, அவர்களை அனுப்பினான் தங்கராசு.

 

அவர்கள் இருவரும் பேச சென்றுவிட..

 

மலர், தங்கராசுவைப் பார்த்து, “இது அவுக பேசவா? நாம பேசவா?” என்றாள்.

 

“நீங்க வேணா, இங்கன  ஒத்தேல நில்லுங்க. நான் காலாற நடந்திட்டு வரேன்” என்று நடக்க ஆரம்பித்தான்.

 

சிறிது வினாடிகள், அவன் எட்டிச் செல்லும் தூரத்தைக் கண்டவள், “ஏங்க, நில்லுங்க நானும் வாரேன்” என்று, அவன் பின்னேயே ஓடினாள்.

 

சாலையின், ஒருபுறம் நிலவுத் தோழனைக் காணாமல், அன்னாந்து பார்த்து, வானத்தில் தேடும் சூரியகாந்தி பூந்தோட்டம். மற்றொரு புறத்தில் நறுமணம் கமழும் பிச்சிப் பூந்தோட்டம். நடுவில் ஓடிடும் சாலையில், நடந்திடும் நாயகன் நாயகி.

 

சற்று தூரம் நடந்தவன், சாலையின், ஒருபுறம் இருந்த மைல்கல்லில் மீது அமர்ந்து கொண்டான்.

 

“நீங்க வேனா காருக்குள்ள ஒட்காருங்க மலரு”

 

“பரவால்ல” என்றவள்,”ஆமா, நேத்து ஒங்க அம்மா, எதுக்கு அவ்வளவு கோபப்பட்டாக” என்று கேட்டாள்.

 

“எங்க அம்ம படிக்காதப் புள்ளையா எனக்குப் பார்க்கிறாக. நீங்க படிச்சிருக்கீகள, அதேன்”

 

“எதுக்கு, படிக்காத புள்ளையா ”

 

“எங்க அய்யன் படிக்கலங்க, அது எங்க அம்மைக்கு சுத்தமா பிடிக்கல. அவியகளுக்குள்ள ஒரே சண்ட, சச்சரவு. எங்க அம்ம, அய்யன ஏசிக்கிட்டே இருப்பாகளாம். அதேன், படிச்ச புள்ளைனா, எங்கூட சண்ட போடும்ல”

 

“அவிய சண்ட போட்டா, மத்தவுகளும் சண்ட போடனுமா” என்றாள், கிழவிகள் இல்லாத தைரியத்தில்.

 

“மலரு, என்னா சொன்னீக”

 

“மத்தவுக, நாமனு சொல்லல. புரியுதா ” என்றாள் அழுத்தமாக.

 

” ம்ம், செரிதான்”

 

“அப்புறம் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டாக ”

 

“கட்டி வச்சிட்டாக, அதெதுக்கு இப்பம் ” என்றான். அவனுக்கு அம்மாவைப் பற்றி, யார் எது பேசினாலும் பிடிக்காது என்பது போல்.

 

“செரி வுடுங்க. அவுக டீச்சரா இருந்துகிட்டே, ஒங்கள ஏன் படிக்க வைக்கல ”

 

“எனக்கு வரலங்க, அம்புட்டுதான். ஆனா, படிப்பு விஷயத்தில ஒங்களுக்குத் தைரியம் அதியந்தான் ”

 

“ஏன் இப்படிச் சொல்றீக ”

 

“பொறவு, எத்தறை மட்டம் பெயிலானாலும், மாறி படிக்கிறீகள. அதேன். ஆனா கஷ்டமா இல்லையா, தோத்துக்கிட்டே இருக்கிறது”

 

“நீங்கதான், நான் தோத்திட்டதா சொல்றீக. ஆனா, நான் ஒத்துக்க மாட்டேன். என்னிக்கி என்னோட முயற்சிய நிறுத்திறேனோ, அன்னிக்கிதான் நான் தோத்திட்டேனு அர்த்தம். அதுவரைக்கும் ஜெயிக்கப் போராடிக்கிட்டு இருக்கேனுதான் சொல்வேன்”

 

“புரியலங்க. ஆனா அந்தால என்னா படிக்கப் போறீக”

 

“தெரியல தங்கராசு. முதல கொடிமலர் பிகாம், அப்படின்னு எங்க அப்பாகிட்ட பெருமையா சொல்லனும்

இப்பம் அவ்வளவுதான்”

 

“அதென்ன அப்பாகிட்ட”

 

“இத்தனை மட்டம் பெயிலான, எல்லார் வீட்லயும் எப்படி ஏசுவாக. ஆனா எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டாக. ஏன், அன்னிக்கி இசக்கி நிச்சிதார்த்தம் நிறுத்தினப்பக் கூட, என்னய, எதையும் யோசிக்காம படின்னுதான் சொன்னாரு ”

 

” ஆனா, அதே அப்பாவுக்கு தெரியாம, இந்தக் காரியம் செய்றீக”

 

” அது அப்பாக்கு செய்ற நியாயம்னா, இது இசக்கிக்கு செய்றது ”

 

“புரியலங்க ”

 

“எங்க அம்மா, நாங்க ரெம்ப சின்னதா இருகிறப்பவே தவறிட்டாங்க. அப்பத்லிருந்து இசக்கிதான் வீட்டப் பார்த்துப்பா. காலெம்பற சமைச்சிட்டு, ஸ்கூலுக்கு போய்ட்டு, திரும்பி வந்து ராவைக்கு சமைச்சி. எவ்வளவு கஷ்டம். எதுவுமே வெளில சொல்லமாட்டா. இத்தனை நாள்ல அவ ஆசைப்பட்டு எதுவுமே கேட்டதில்ல. இதுதான் முததடவ. அதே”

 

“அப்பம், அப்பாகிட்ட பேசலாம்ல ”

 

“இல்லே தங்கராசு, அப்பா சம்மதிக்க மாட்டாக. கல்யாணம் கட்டி வச்சிட்டு, அப்புறமா சொல்லிச் சமாளிச்சிருவேன் ” என்று சொல்லிவிட்டு, மண் தரையில் அமர்ந்து கொண்டாள்.

 

“ஏங்க, இதுல ஒட்காருங்க ” என்று, அவன் எழுந்து கொண்டு, மைல்கல்லைக் காட்டினான்.

 

“இருக்கட்டும் ”

 

“செரிங்க, ரோட்டு மேல ஒட்காரதீக. செத்த உள்ள தள்ளி ஒட்காருங்க ” என்றான் அக்கறையாக.

 

அவன் கூறியபடி, அவள் அமர்ந்ததும். அவனும், அவள் எதிரில் அமர்ந்து, மைல்கல்லில் சாய்ந்து கொண்டான்.

 

காலைக் கதிரவன் கீற்றுகள் நன்றாகப் பரவியிருந்தன. வெகு அரிதாகவே சாலையைக் கடந்தன வாகனங்கள்.

 

அவள் பகிர்ந்து கொண்ட, அவளது ஆழ்மனதின் ஆதங்கங்கள்,  அவனது அபிப்பிராயங்களை ஆழமாக்கின.

 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாவிடினும், இருவரது எண்ணங்களும் எதிரில் இருப்பவரைப் பற்றியே இருந்தன.

 

சாலையின் ஓரத்தில், இதுவரை நேர்ந்திராத நெருக்கத்தில், இருவரும். சூழ்நிலை மறந்து, ஆழ்நிலை தியானமாய், இருவரது அபிப்பிராயங்கள்.

 

சற்று நேரத்திற்கு பின்…

 

” தங்கராசு ”

 

” ம்ம்ம், சொல்லுங்க மலரு ”

 

“பூ பறிச்சித் தாறீகளா?”

 

“ஏங்க, இந்தப் பூவ தலையில வைக்க மாட்டாக”

 

“தெரியும் தங்கராசு, பறிச்சுத் தாங்களேன்”

 

“யாரு தோட்டம்னே தெரியலங்க. முதல்லே சொல்லிருந்தா வீட்லருந்தே எடுத்திட்டு வந்திருப்பேன்” என்று சொல்லிக் கொண்டே பறிக்கச் சென்றான்.

 

“எப்பம் பரிட்சை” என்று கேட்டுக் கொண்டே, ஒவ்வொரு பூவாகப் பறித்தான்.

 

“இன்னும் பத்து பதினைஞ்சு நாள்ல, சொன்னேன்ல” என்று அவளும் எழுந்து கொண்டாள்.

 

பறித்து வந்த சூரியகாந்தியை, ஒரு பூங்கொத்தாக மாற்றி, மலரிடம் நீட்டினான். அவள் வாங்கும் போது, தர மறுத்துவிட்டு.

 

“இப்பம் ஒரு மூனு வார்த்தை இங்கிலீஷ்ல  சொல்லுவாங்களே” என்றான்.

 

“மூனு வார்த்தையா” என்று, கேட்டவளுக்குள் தடக் தடக் என இரயில் ஓடும் சப்தம்.

 

“ஆமாங்க, படத்தில கூட பார்த்திருக்கேன்” என்றவனால், அவளின் தடக் தடக் எக்குத்தப்பாக எகிறியது.

 

அந்தத் தடக் சத்தம் அவனுக்கு கேட்டதோ? இல்லையோ, “ஆல் தி பெஸ்ட்ங்க ” என்று சொல்லி, இரயிலைத் தடம்புரளச் செய்தான்.

 

“தேங்க்ஸ்ங்க” என்று, அதையும் ரசித்தாள்.

 

“வெல்கம்ங்க”

 

“இட்ஸ் ஓகேங்க”

 

தமிழ் அபிப்பிராயங்களே தடுமாறித்  தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, ஆங்கில அபிப்பிராயங்கள் தடம் புரண்டு ஓடின. ஆனாலும் அரங்கேற்றப்படாத  அபிப்ராயங்கள், பார்ப்பதற்கே அழகாய்த்தான்  இருந்தது.

 

6

நாளை மறுநாள் பார்க்கலாம் என்று கூறி, கண்ணனிடம் விடை பெற்றுக் கொண்டனர், இசக்கி மற்றும் மலர். விடைபெற்றவர்களை, அழைத்து வந்து ஊரின் வெளியே விட்டுவிட்டுச் சென்றான் தங்கராசு.

 

கொடிமலர் வீடு

 

செல்லத்துரை கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.

 

“அப்பா, இன்னிக்கி சினிமாவுக்கு போனும்” என்று சொல்லிக் கொண்டு வந்து, மலர் நின்றாள்

 

“இது என்னா புதுசா மலரு. படிக்கிற புள்ளைக்கு எதுக்கு? அந்தால ஒன் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன். இப்பம் எப்படி ஒத்தேல அனுப்ப முடியும்”

 

“இல்லேப்பா. ஒத்தேல இல்லே. ஊரில எல்லாரும் போறாக. அதேன்”

 

“எல்லாருமா, எதுக்காக?”

 

“சும்மதான். அவியகூட போயிட்டு, அவிய கூடவே வந்திரலாம்” என்றாள்.

 

“இல்லே மலரு, பேசாம இரு. நான் சொல்றது ஒனக்குப் புரியாது.. ஒங்க அக்காவுக்கு புரிஞ்சிருக்கும்”

 

இருவரும் தலை குனிந்து கொண்டனர். இசக்கி, அப்பாவிடம் கொண்ட கோபத்தில். மலர், அப்பாவிடம் பொய் சொல்கிறோம் என்ற குற்றவுணர்வில்.

 

அதற்குள் வெளியிலிருந்து, “மலரு, இசக்கி” என்ற சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தார் செல்லத்துரை.

 

அங்கு பக்கத்து வீட்டுக்காரப் பெண் சோனியா, நின்று கொண்டிருந்தார்.

 

“அண்ணே, சினிமாக்கு போறோம். மலரு, இசக்கிய வரச் சொல்றீகளா?”

 

“இல்லே சோனியா, அவிய  வரமாட்டாக”

 

“ஏண்ணே, ஊரில எல்லா புள்ளைகளும் சேர்ந்து போறாக. அவியகளும் ஆசப்படுவாகள.வெரசா வரச் சொல்றீகளா ”

 

“புள்ளைக மட்டுமா?எப்படி?”

 

“பெரியவுகளும் வருவாக அண்ணே. நானே பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு. கூட்டிட்டு வந்திடுவேன். விடுங்க அண்ணே ”

 

அவர் தயங்கினார்.

 

“விடுங்க அண்ணே ”

 

பின்னால் திரும்பி இசக்கி மற்றும் மலரைப் பார்த்தார். இசக்கிக்காக, மலரின் சந்தோஷத்திற்கு எதற்கு தடை போட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சரியென்று அனுப்பிவிட்டார்.

 

தங்கராசு வீடு

 

தயார் நிலையில் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அனவருடன் சேர்ந்து சோனியா, இசக்கியும் பேருந்தில் ஏறிக் கொண்டனர்.

 

மலர் மட்டும் ஏறாமல், தேடல் பார்வை கொண்டு நின்றிருந்தாள்.

 

“யாரட்டி தேடுற” என்ற பின்னால் இருந்து குரல் வந்தது. திரும்பினாள். வேறு யாரும் இல்லை கிழவிகள்தான்.

 

மலர், விரியாத பூ மொட்டுக்கள் போல் மூடிக்கொண்டு, மெளனம் காத்தாள்.

 

“ஏன்ட்டி, அவனும் கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேக்கான். நீயும் இப்படி நிக்கிற”

 

தான் சொல்வதை கேட்கிறான் என்ற களிப்பில், “தங்கராசு எங்கன இருக்காக” என்றாள்.

 

“அவன எதுக்கு தேடற” என்று, திரும்பவும் பின்னாலிருந்து குரல் வந்தது. இந்தமுறை அஞ்சுதம்.

 

“பேச்சி, இவளுக மறுக்கா ஆரம்பிக்கிறாளுக” -முத்தாச்சி.

 

“ஆரம்பிச்சா, பரவால்ல. ஆனா முடிக்கிறப்ப நம்மகிட்டல முடிப்பாக ” – பேச்சிக்கிழவி.

 

மலர் அருகில் வந்து நின்று. “கேட்டேன்ல, அவன என்னாத்துக்கு தேடற” என்றார்.

 

“அவுக கடைல வந்து ரீசார்ஜ் பண்ணாக. பணம் ஏறிடுச்சானு கேட்க வந்தேன் ” என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தாள்.

 

“ரீசார்ஜ் பண்றவுக எல்லார்கிட்டேயும் இப்படித்தான் கேட்டுக்கிட்டு இருப்பியா” என்று கேள்வி வந்தது.

 

பதிலேதும் இல்லை மலரிடம்.

 

“ஏம்ட்டி, அதுவும் படம் பார்க்கனும்னு நினைக்கும்ல. அதேன் வந்திருக்கும். நீ போ மலரு ” என்று பேச்சிக்கிழவி, அவளை அனுப்பினார்.

 

அஞ்சுதத்தை மெதுவாகக் கடந்து, அதற்குப் பின், வேகமாகச் சென்று பேருந்தில் ஏற முற்பட்டாள். அதேநொடியில் தங்கராசு, இறங்க முற்பட்டான். அவர்களது மெல்லிய உரசலால், சில்லிட்டன உடல்கள்.

 

சில்லிட்ட தருணங்களுடன், பயணம் இனிதே துவங்கியது.

 

மார்த்தாண்டம்

 

மார்த்தாண்டம் திரையரங்கில் பிரத்தியேக காட்சி, பழவிளைக் கிராமத்தின் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரையும் உள்ளே அழைத்து, இருக்கைகளில் அமர வைத்தான். காட்சி ஆரம்பித்த, சிறிது நேரத்தில், இசக்கி, மலரைத் வெளியே வரச் சொன்னான்.

 

வந்தவரிடம், “இசக்கி, இங்கோடி போயி, வடக்கால திரும்புங்க. அங்கன கண்ணன் சார் நின்னுகிட்டு இருப்பாக. வெரசா கொடுத்துட்டு வந்திருங்க” என்று ஒரு பாதையை இசக்கியிடம் காட்டினான்.

 

“செரி தங்கராசு” என்று, இசக்கி கிளம்பினாள்.

 

“என்னா இவ்வளவு பயப்படுறீக. ஒங்க அம்மாவ நினைச்சா” – மலர்.

 

“அதுவும்தான்”

 

“அதுவும்தானா?? வேறென்ன”

 

“இந்த மாதிரி ஒரு காரியம் பண்றேன்னு ஊருக்குள்ள தெரிஞ்சா”

 

“தெரிஞ்சா”

 

“இத்தறை பேரையும், அவிய வீட்ல என்னைய நம்பி விட்டிருக்காக. இனிமே விடுவாகள? அதேன் ”

 

“நானே கேட்கனும்னு நினைச்சேன். இத்தனை பேரைக் கூட்டிட்டு சினிமாவுக்கு வர்றது. எதுக்கு?” என்று கேட்ட விதமே சொல்லியது,  அவளுக்கு அதில் உடன்பாடு இல்லையென்று.

 

“இல்லைங்க மலரு. இது எங்க அம்ம ஏற்பாடு பண்ணியிருக்காக ”

 

“அம்மாவா”  என்று, அதற்கும் முகம் சுளித்தாள்.

 

“ம்ம்ம். இவியெல்லாம், காலெம்பற எந்திரிச்சு, வீட்ல சமைச்சிட்டு, தோட்டத்து வேலைக்குப் போவாக, பொறவு சாந்திரம் வந்து மாறி சமைப்பாக. இதே தினம் செஞ்சா, அலுத்து சலிச்சிப் போகாதா. அதேன் இதுகணக்கா அவியகளுக்கு ஒரு… ஒரு மாற்றம். எங்க அம்ம நல்லா சொல்லுவாக. எனக்கு செரியா சொல்ல வரல ”

 

” எப்படி ஒத்துக்கிட்டாக ”

 

“முத இவிய வீட்டாளுகெல்லாம் ஒத்துக்கல. அந்தால, எங்க அம்ம ரெம்ப பேசிப் புரிய வச்சாக. இப்பம் பழகிருச்சு.  இன்னிக்கி மட்டும் வீட்ட, புள்ளைகள அவிய வீட்டாளுக பார்த்துப்பாக”

 

“எப்பமும் இங்கனதான் வருவீகளா”

 

“இல்லே மலரு. இந்த மட்டம்தான் இங்கன. போன மட்டம்,  திருப்பரப்பு போனோம் ”

 

” இதில, ஒங்களுக்கு பயம் எதுக்கு”

 

“ஏங்க, நான் இப்படி ஒரு விஷயத்தை செஞ்சா, அந்தால, அவிய வீட்ல, என்னய நம்பி எப்படி அனுப்புவாக? எங்க அம்ம இம்புட்டு நாளு கஷ்டப்பட்டது மொத்தமும் பாழாயிடும் ”

 

“ஒங்க அம்மா, இவ்வளவு செய்வாகளா”

 

“இன்னும் நிறைய செய்வாக. புள்ளைக படிக்கறதுக்கு, பள்ளிக்கூடத்துக்கு, ஊருக்காறாக வேலைக்கு. இப்படி ரெம்ப ” என்றான் பெருமையாக.

 

அவள் மனக் கண்ணாடியில் விழுந்த, அஞ்சுகத்தின் பிம்பம், தவறோ என்று தோன்றியது. அவரின் கண்டிப்பு குரலிற்கு காரணம், அவர் ஏற்று நடத்தும் பொறுப்போ, என்று நினைத்தாள்.

 

அவர் தெரிந்து செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும், அவரைப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருக்கின்றவன் மீது, அந்த நொடியில் அபிப்பிராயங்கள் ஆழமாயின.  அதற்குமேல் அபிப்ராயத்தை ஆறப்போட, அவள் விரும்பவில்லை.

 

” ராசு ” என்று மலர் ஆசையாக அழைத்தாள்.

 

அவளின் அந்த அழைப்பு, எப்படி இருந்தது என்றால், இசைஞானி, அவனுக்கென்றே ப்ரத்யேக டூயட்டை, நேரலையில் வாசிப்பது போல் இருந்தது.

 

“ம்ம்ம். சொல்லு மலரு ” என்றான், முன்னறிவிப்பின்றி வந்த, அவள் அழைப்பில் மூழ்கிக் கொண்டு.

 

” ராசு, ஒங்க அம்மா ஒத்துப்பாகளா” என்றாள், சாமர்த்தியமாக தன் சம்மதத்தை.

 

இப்போது, இசைஞானியுடன் இசைப்புயலும் கைகோர்த்துக் கொண்டார், நேரலையில்.

 

“அம்புட்டு லேசுல ஒத்துக்க மாட்டாக ”

வருத்தம் மேலோங்கிய நிலையில் இருந்தாள்.

 

“மலரு, நீங்க நல்லா பேசுவீகள. எங்க அம்மகிட்ட வந்து பேசுறீகளா”

 

“ராசு, முதல இசக்கி விஷயம். அடுத்து என்னோட படிப்பு. ரெண்டும் முடியட்டும். அப்பாகிட்ட, கொடிமலர் பிகாம்னு சொன்ன அடுத்த நிமிஷம், ஒங்க அம்மாகிட்ட வந்து பேசறேன். செரியா”

 

“நெசமாவா மலரு” என்றான், நம்பகத்தன்மை இல்லாத குரலில்.

 

“நெசமா, ஆனா, ஒங்க அம்மா எதுத்தால நின்னுதான் பேச வேண்டிருக்கும். நீங்க ஒத்துப்பீகளா?  இல்லனா விரட்டி விட்ருவீகளா? ” என்றாள் விளையாட்டாக.

 

அந்த விளையாட்டு பேச்சிற்கு எதிர்வினையாய், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

 

“ராசு. ராசு… ” என்று அழைத்துப் பார்த்தாள்.

 

அவன் திரும்பவில்லை. அவன் நாடியைப் பிடித்துத் திருப்பி, அவன் முகம் பார்த்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

 

” ஏன் ராசு, இப்பம் கண்ணீர் வடிக்கப் பார்க்கிறீக”

 

“பொறவு நீங்க அப்படி கேட்டா. நான் ஒங்கள விரட்டி விடுவேனா ”

 

“அது சும்ம எடக்கா பேசினேன். அதுக்குப் போய்”என்று மீண்டும் சிரித்தாள்.

 

“நெசமா எங்க வீட்டுக்கு வந்து, பேசுவீகளா மலரு?”

 

“எத்தனை மட்டம் இதையே கேட்பீக, ராசு”

 

” செரி. செரி. கேட்கல ”

 

“எனக்கு ஒன்னே ஒன்னுதான். இசக்கி விஷயத்தை, எங்கப்பாகிட்ட நானே பக்கத்தில ஒட்கார்ந்து பதனமா சொல்லனும். நீங்க வெள்ளனையே, இசக்கிய கூட்டிட்டுப் போய்,  மார்த்தாண்டத்ல விட்டுருங்க. அந்தால கண்ணன் சார் பார்த்துப்பாக. அப்பாவ, நான் சமாளிச்சிக்கிறேன். செரியா. ”

 

” ம்ம்ம் ”

 

அபிப்ராயங்கள் எல்லாம் அபிமானங்களாக மாறியதால் அமைதி நிலவியது. பின்.

 

“மலரு, இந்தாங்க” என்று நீலவர்ண தாள் சுற்றிய, செவ்வக வடிவ சாக்லேட்டை நீட்டினான்.

 

அன்புடன் வாங்கிக் கொண்டே, “இதுகூடச் சேர்த்துப் பூவு, கார்டு தருவாகள. அதெல்லாம் எப்பம் ” என்றாள்.

 

” பூதான் நேத்தே கொடுத்தேன்ல”

 

“ம்மு. நான் சொல்றது ரோசு” என்று அக்கப்போர் செய்தாள்.

 

“அதுவும் பூதான”

 

” ம்ம்ம் செரி.  அப்பம் கார்டு”

 

“அதெல்லாம் எனக்கு வாசிச்சி வாங்கத் தெரியாது. ம்ம்ம் மலரு, நான் வேணா கடைக்குக் கூட்டிட்டுப் போறேன். நீங்க வாங்கிக்கிறீகளா? ”

 

“ம்ம்ம். செரி. ”

 

“இப்பமே வர்றீங்களா? ”

 

எதிர்ப்பைப் பதிவு செய்தாள்.

 

” படிப்பு முடிஞ்ச பொறவா ”

 

ஆதரவைக் காட்டினாள்.

 

” செரி, சாக்லேட் சாப்பிடுங்க ”

 

இதயங்கள் பரிமாறிக் கொண்ட இளஞ்சிட்டுக்கள் இனிப்பையும் பகிர்ந்து கொண்டன.

 

வண்ணம் மறைந்து, அழுக்குப் படிந்த திரையரங்கின் சுவர்கள். அதில் சாய்ந்து நின்ற ராசாத்தியாய் தாவணிப் பெண். அந்த ராசாத்தியின் ராசுவாக, அவன்.

 

சூழ்நிலைக்கேற்றப் பாடலாய்  திரை அரங்கிலிருந்து, அவனின் ஆஸ்தான நாயகனின், ‘நீதானே நீதானே.. என் நெஞ்சை..’ கசிந்து வந்து காதில் நுழைந்தது.

 

மலரின் நேசம், ராசுவின் பார்வை பரப்புக்குள் பூத்தது.

 

மற்றொரு புறத்தில், தான் எடுத்து வந்த சர்டிபிகேட்டை கண்ணனிடம் கொடுத்தாள், இசக்கி. கல்யாணம் நடக்கப் போகும் தேதி, இடம் பற்றி கண்ணன் கூறினார்.

 

அனைத்தும் சுபமாக முடிந்த பின், பேருந்து மார்த்தாண்டத்திலிருந்து திரும்பியது.

 

அடுத்து வந்த நாட்களில், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வைத் தந்தது. இசக்கியும் கண்ணனும் திருமண நாளை எதிர்நோக்கி இருந்தனர்.

 

மலரும், ராசுவும் அபிப்பிராயம் அரங்கேறிய சந்தோஷத்தில் இருந்தனர்.

 

அந்த ஒருவாரம், ராசுவிற்கும், தன் தோட்டத்தில் பூக்கும் பூவெல்லாம், மலருக்காகப் பூப்பது போல் இருந்தது. சில நேரங்களில் ‘மலர்’, பூத்துச் சிரிப்பது போல இருந்தது.

 

மலருக்கும், தான் வாசிக்கும் விருப்பப் புத்தகங்கள் அனைத்தின் அட்டைப்படமாக ராசுவே இருந்தான்.

 

கொடிமலர் வீடு

 

நாட்கள் விரைந்தோடின. அடுத்த நாள் விடியற்காலை, இசக்கி வீட்டை விட்டு வெளியேறி, திருமண செய்து கொள்ளும் நாள்.

 

“இசக்கி”

 

“என்னா மலரு? ஏன்ட்டி ஒரு மாதிரி இருக்க”

 

“கண்ணன் சார் வீட்ல, ஒன்ன நல்லா பாத்துப்பாகளா?”

 

“ஏன்ட்டி இப்பம் இந்த கேள்வி. இனிமே அவுக ஒனக்கு சாரில்ல. புரியுதா” என்று கல்யாண வெட்கம் காட்டினாள்.

 

“இல்லே இசக்கி, அப்பா இவ்வளவு வேண்டாம்னு நிக்கிறாகளே. அதே.”

 

“பயப்படிரியா மலரு? அவுக வீட்ல நல்லா பார்த்துப்பாக ”

 

“ம்ம்ம். அப்பாவ நெனைச்சாதான் ரெம்ப கஷ்டமா இருக்கு”

 

“அவர்கிட்டே ஆறு மாசம் போராடினப் பொறவுதான், நாங்க இந்த முடிவுக்கு வந்தோம் ”

 

“கல்யாணம் கட்டிக்கிட்டப் பொறவு, நேரா இங்கன வந்திரனும். அப்பாவ, பார்த்து மன்னிப்பு கேட்கனும். செரியா இசக்கி”

 

” செரி மலரு”

 

“நானும் தங்கராசும் ஒத்தாசை பண்ணோம்னு, யார்கிட்டயும் சொல்லாதட்டி. நான் பதனமா அப்பாகிட்ட சொல்லிக்கிருவேன்”

 

“நீ எதுவும் யோசிக்காத மலரு. ஒன்னய யாருகிட்டயும் காட்டிக் கொடுக்க மாட்டோம். காலெம்பற நாலு மணிக்கே கிளம்பிருவேன். தங்கராசு, ஊருக்கு வெளியே காத்திருப்பாரு. நான் திரும்பி வர வரைக்கும் அப்பாவ சமாளிச்சிக்கோ. ” என்று இசக்கி, தூங்கச் சென்றாள்.

 

” ம்ம்ம் ”

 

மலருக்கு, உறக்கம் வரவில்லை. தங்கராசுவிடம் பேசலாம் என்று நினைத்துக் கைபேசியில் அழைத்தாள்.

 

” ஹலோ ” என்றாள்.

 

“ஹலோ” என்று, பெண் குரல் கேட்டது.

 

உடனே, மலர் அழைப்பைத் துண்டித்துக் கொண்டாள். யாராக இருக்கும் என்று யோசித்தவள், அப்படியே உறங்கிப் போனாள்.

 

அடுத்த நாள்,

 

காலையிலிருந்து, இசக்கி குறித்த செல்லத்துரையின் கேள்விகளை, மழுப்பல் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள், மலர்.

 

சிறிது நேரத்தில், “மலரு. மலரு…” என்ற குரல் கேட்டது.

 

வெளியே வந்தாள் மலர்.

 

அங்கே, கண்ணன் இசக்கி மணமாலையுடன் வந்து, நின்று கொண்டிருந்தனர்.

 

7

 

“மலர் ” என்ற அழைப்பு கேட்டு வெளியே வந்தவளுக்கு, ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம், அப்பாவைச் சமாளிக்க வேண்டும் என்ற கவலை. இருந்தும், திரும்ப உள்ளே சென்று செல்லத்துரையை அழைத்து வந்தாள்.

 

“என்னா மலரு? என்னா விஷயம்” என்று கேட்டுக் கொண்டே, வெளியே வந்தார், செல்லத்துரை.

 

அதற்குள் அந்தத் தெருவில் ஆட்களும், பக்கத்துத் தெருவில் உள்ளவர்களும் கூடிவிட்டனர். ‘தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பது போல் கூட்டத்தில்  தங்கராசுவும் கிழவிகளும் சேர்ந்து கொண்டனர்.

 

மணமாலையுடன் இசக்கியையும் கண்ணனையும் பார்த்தவருக்கு, முதலில் பேச்சே வரவில்லை.

 

சற்று தன்னை சமன் படுத்திக் கொண்டு, “என்னா மலரு, இவ இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிறா. இவளுக்கு எம்புட்டு தைரியம்” என்று கோபமும், கவலையும் கலந்த குரலில் கேட்டார்.

 

மலர் எதிர்பார்த்தது போலவே, செல்லதுரை  கோபப்பட்டார். மலர் இசக்கியைப் பார்த்து ‘மன்னிப்பு கேளு’ என்று கண்ணசைத்துக் கூப்பிட்டாள்.

 

இசக்கியும் அதைப் புரிந்து கொண்டு “அப்பா, மன்னிச்சிருங்கப்பா” என்று சொல்லிக் கொண்டே, ஓடிவந்து அவர் அருகில் நின்றாள்.

 

“மலரு, முதல இவள அங்கிட்டு போச் சொல்லு. இங்கன நிக்கச் சொல்லாத. போச் சொல்லு மலரு ” என்று இசக்கியை விலக்கினார்.

 

“அப்பா, எனக்கு வேற வழி இல்லாமதான் இப்படி பண்ணேன்” என்று கண்ணீர் சொரிய ஆரம்பித்தாள், இசக்கி.

 

“என் பேச்ச கேட்காதவ, எங்கிட்ட பேச வேண்டாம். மலரு சொல்லு புள்ள, இவளால, நமக்கு எம்புட்டு தலகுனிவா போச்சு ” என்று சொல்லிக், கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தார்.

 

“மலரு நீயாவது சொல்லுட்டி ” என்று மலரிடம் இறைஞ்சினாள் இசக்கி.

 

மலருக்கு இது இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆதலால், அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.

 

செல்லத்துரை தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பெருமூச்சுவிட்டு நிமிர்ந்து பார்த்தார். அவரின் கண்களுக்குள் கூட்டத்தில் ஒருவனாக நின்ற தங்கராசு விழுந்தான்.

 

அவனைப் பார்த்துக் கொண்டே, “இப்படி ஒரு பையன விட்டுட்டு, இந்தாள கட்டிக்க ஒனக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ” என்றார்.

 

இப்போது, மலரால் அலட்டாமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு, உள்ளுக்குள் உறியடிக்கத் தொடங்கிவிட்டது. பிரச்சனையின் போக்கு மாறுவது போல் இருந்தது.

 

செல்லத்துரை பேச்சு, கண்ணனின் பெற்றோருக்கு கோபம் வரவழைத்தது. “கண்டமேனிக்கு (without think) பேசாதீக ” என்றார் கண்ணனின் தந்தை.

 

“யாரு கண்டமேனி பேசறா. நான் சொல்றது நெசம்” – இந்தக் குரல், செல்லத்துரை.

 

“எங்க பையனைக் கண்டவன் கூட ஒத்துப் பார்க்காதீக” என்று கோபமானார், கண்ணனின் தாயார்.

 

“யார கண்டவனு சொல்றீக” என்று கூட்டத்தில் இருந்து குரல் வந்தது.

 

“ஒங்க பிரச்சனையை மட்டும் பேசுங்க. அவுகளப் பத்திப் பேசாதீக” என்றது மற்றொரு குரல்.

 

“பாத்தீகளா, அவுகள பத்தி தப்பா பேசினா, எத்தறை பேரு சண்டைக்கு வராகனு. பெத்தவக ஓட்டு பிள்ளைக்கு செல்லாது. நீங்களே ஒங்க புள்ளப் பத்திச் சொல்லாதீக. ” என்றார் செல்லதுரை.

 

மலருக்கு சுத்தமாகப் புரியவில்லை, இப்பொழுது எதற்கு இந்த ஒப்பீடு என்று.?

 

“இது அவன் ஊரு. அதேன் ” – கண்ணன் தாயார்.

 

“அம்மா சும்ம இருங்க. அவுக மட்டும் இல்லாட்டி, இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. தெரியுமா? ” என்று விசுவாசத்துடன் பேசி, விவகாரத்தைப் பெரிதாக்கினார் கண்ணன்.

 

எல்லோரின் பார்வையும் கண்ணன் மேல் விழுந்தது.

 

“இசக்கி, சார சும்ம இருக்க சொல்லுட்டி” என்று முணுமுணுத்தாள் மலர்.

 

கண்ணன் வார்த்தையைக் கேட்டதற்குப் பின்,  செல்லத்துரை உட்பட அத்தனை பேரின்  கவனமும், தங்கராசுவின் மேல் வந்து நின்றது.

 

“என்னா தங்கராசு? இவுக என்னா சொல்றாக. நீங்கதான் இந்தக் கல்யாணத்த நடத்தினீகளா?” என்று, கேட்டுக் கொண்டே, தங்கராசு அருகில் சென்றார்.

 

மலர் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ, அதெல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது.

 

“செல்லத்துர” என்றார் பேச்சிக்கிழவி.

 

“ஆச்சி, நீங்க இடையில வராதீக”

 

“சொல்லுங்க தங்கராசு. நீங்கதான் இதுக்கெல்லாம் காரணமா “என்று அமைதியாகக் கேட்டார்.

 

“….”

 

“பதில் சொல்லாம அமைதியா நிக்கிறீக. அப்பம் அது நெசம்தான். இல்லேயா ”

 

“—-”

 

“நீங்க யாரு எம்புள்ளைக்கு கல்யாணம் கட்டி வைக்க. நான் அங்கன இருந்து, இங்கன வந்ததே இதுகணக்கா(like this) எதுவும் நடக்கக்கூடாதுனுதான் ”

 

” – – – ”

 

“அன்னிக்கி, இசக்கி ஒன்ன வேண்டாம்னு சொன்னப்ப, ஒன் அம்மா என்னா காட்டமா பேசுனாக. இப்பம் நான் என்னா செய்ய. அதுகணக்கா நானும் ஒன் அம்மாகிட்ட  ” என்று, அவர் முடிக்கும் முன்னே.

 

“அம்மைக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லே. அவுகள இதுல இழுக்காதீக”  என்று ஒற்றை விரல் நீட்டி, கோபமாகப் பேசினான்.

 

அந்தக் கோபம்,  அங்கு நின்ற ஒவ்வொருத்தருக்கும் புதிது. அவன் இதுபோல் பேசியதே கிடையாது. முதலில், இப்படிப் பேசுவதற்கு தேவையே இருந்ததில்லை. ஏனென்றால் அஞ்சுதம் பற்றி, யாரும் பேசமாட்டார்கள்.

 

“என்னாலே கை நீட்டி பேசற ” என்று தங்கராசுவின் சட்டையைப் பிடிக்கப் போனார்.

 

அந்த நேரத்தில்…

 

“அப்பா” என்று மலர் செல்லத்துரையைத் தடுத்தாள்.

 

“செல்லத்துரை” என்று அஞ்சுதம், தங்கராசு முன்னே வந்து நின்றனர்.

 

ஆம், விஷயம் அறிந்து, அங்கே அஞ்சுதம் வந்திருந்தார்.

 

தன் மகனின் மீது கை வைத்தார் என்று செல்லத்துரை மீதும், அதற்குக் காரணமான மலர்  மீதும்,  அஞ்சுதத்திற்கு கோபம் வந்தது.

 

மலர், அவள் அப்பாவின் பக்கத்தில் மறைந்து நின்று கொண்டாள்.

 

அஞ்சுதம், மலரைப் பார்த்து முறைத்துக்கொண்டே, “என் பையன் மேல கை வைக்கிற பழக்கம் வேண்டாம், செல்லத்துரை ” என்று கத்தினார்.

 

எல்லோரும் பழைய பிரச்சனையை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, புதிய பிரச்சனையை ஆரம்பித்தனர்.  பழைய பிரச்சனை, அதாவது கண்ணனும் இசக்கியும், இதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

“என் புள்ளைக்கு எனக்கே தெரியாம கல்யாணம் கட்டி வச்சிருக்கான். அவன நான் சும்ம விடனுமா.”என்று, தன் பங்குக்கு  கத்தினார் செல்லத்துரை.

 

“இவன் மட்டும்தான் காரணம்னு ஒங்களுக்கு தெரியுமா? ” என்று, அஞ்சுதம் பிரச்சனையின் போக்கை மாற்றினார்.

 

மலர் இப்போது பயந்து முழித்தாள். அவளுக்கு உறியடிப்பது போலெல்லாம் இல்லை. உறிப்பாணையே, தான்தான் என்பது போல் இருந்தது…

 

“வேற யாரு காரணம்” – செல்லத்துரை.

 

” ஒங்க  பெண்ணுதான்”

 

செல்லத்துரை இசக்கியை பார்த்தார்.

 

“நான் சொல்றது இசக்கி இல்லே. இவள ” என்று மலரை நோக்கி கைகாட்டினார், அஞ்சுதம்.

 

“மலரு, இவுக என்னா சொல்றாக ” என்றவுடன், அனைவரின் பார்வையும் தங்கராசுவிடம் இருந்து விலகி, மலரின் மேல் விழுந்தது.

 

மலர் அமைதி காத்தாள்.

 

“அன்னிக்கி என் வீட்டு வாசல்ல வந்து சட்டமா(lot) பேசுன. இன்னிக்கி என்னாச்சு?இப்படி நிக்கிற. ஒங்க அப்பா கேட்கிறாகள, சொல்லு. ”

 

“மலரு, நீ அவுக வீட்டுக்குப் போனியா? அங்கன ஒனக்கு என்னா சோலி ”

 

“அப்பா, நீங்க வீட்டுக்குள்ளாற வாங்க, நான் பதனமா எடுத்துச் சொல்றேன்” – இது மலர் குரல்.

 

“எதுக்கு மழுப்புற. வசமா மாட்டிக்கிட்டு. இங்கனயே சொல்லு ” என்றார் அஞ்சுதம்.

 

“மலரு, சொல்லு புள்ள ”

 

“நான் சொல்றேன் செல்லத்துரை. இவ கேட்டதுனாலதான் என் புள்ள ஒத்தாசை செஞ்சிருப்பான். அம்மா சொல்றது, செரிதான தங்கராசு ”

 

எல்லாருக்கும், முக்கியமாக மலருக்கு, அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று தெரியும். இருந்தாலும் மலருக்கு ஒரு நப்பாசை, அவன் ஏதாவது சொல்லி சமாளிப்பான் என்று.

 

ஆனால் ” செரிதான் அம்ம ” என்று சொல்லி, மலரைச் சங்கடப்படுத்தி விட்டான்.

 

“அன்னிக்கி சினிமாக்கு போறப்ப தங்கராசு எங்கன்னு கேட்டியே. அதுகூட ஒத்தாசை கேட்கத்தான ” – அஞ்சுதம்.

 

“அதேன், ரீசார்ஸ் பத்தி” என்று பேச்சிக்கிழவி முடிக்கும் முன்னே…

 

“பேசாம இருங்க. நேத்து ராவைல என்னாத்துக்கு போஃன் போட்டா. அதுக்கு என்னா காரணம்னு சொல்லச் சொல்லுங்க, செல்லத்துரை ” என்று கேட்டார்.

 

“என்னா மலரு, அந்தப் பயலுக்கு என்னாத்துக்கு போஃன் போட்ட ”

 

“பய கியனு பேசாதீக, செல்லத்துரை”

அதற்கு மேல் மலரால் அமைதி காக்க முடியவில்லை.

 

“ஆமா, நான்தான் இவுககிட்ட இசக்கி கல்யாணத்துக்காக ஒத்தாசை வேணும்னு கேட்டேன். இப்பம் அதுக்கு என்னா?  இதுக்கெல்லாம் காரணம் நான்தான் ” – இது மலரின் வாக்குமூலம்.

 

“இது போதும் மலரு” – அஞ்சுதம்.

 

“ஒத்துக்கிட்டேன்ல , அப்புறம் என்னா ”

 

“எனக்கு ஒன்னும் இல்லே. ஒங்க அப்பாகிட்ட சொல்லு ”

 

அப்பாவின் நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டோம் என்ற பார்வையுடன் செல்லத்துரையைப் பார்த்தாள்.

 

“மலரு, அப்பம் இசக்கி கல்யாணம் கட்டப் போறது, ஒனக்கு மின்னாடியே தெரியுமா புள்ள” என்றார் கண்கலங்க.

 

“அய்யோ அப்பா”

 

“தெரிஞ்சும் அப்பாகிட்ட ஒண்ணுமே சொல்லலேயே. இசக்கிய விட, ஒன்ன நம்புனனே. இப்படி என்னய கூனிக்குறுகி நிக்க வச்சிட்டியே” என்றவருக்கு, அதற்கு மேல் பேச இயலவில்லை.

 

“வீட்டுக்குள்ள வாங்கப்பா. நான் ஒங்ககிட்ட பேசனும்”

 

” இன்னும் என்னா பேசனும் மலரு ” என்றவருக்கு, அதற்குமேல் அங்கே நிற்கவும் பிடிக்கவில்லை.

 

வீட்டிற்குள் செல்வதற்கு முன் இசக்கியைப் பார்த்து, “ஒன் இஷ்டப்படி கல்யாணம் கட்டிக்கிட்டேல, இனிமே ஒன் சங்காத்தமே(relation) வேண்டாம். என் எதுத்தால வந்திராத. ஒன்னய யாரு கவனிப்பாகனு பார்ப்போம்” என்றார்.

 

“கல்யாணம் கட்டி வெச்சவகளுக்கு, அவிகள எப்படிப் பார்த்துக்கனும்னு தெரியும்” என்று கூறிய கண்ணனின் தாயார், “நீ வா இசக்கி, நாம கிளம்பலாம் ” என்று இசக்கியை அழைத்தார்.

 

“ஒரு நிமிஷம் அத்தே “என்று சொல்லிவிட்டு, இசக்கி மலரை நோக்கி நடந்தாள்.

 

” மலரு ” என்று தயங்கியவாறு அழைத்தாள்.

 

“வா இசக்கி. மன்னிப்பு கேட்கச் சொன்னா. மாட்டி விட்டுட்டுப் போற”

 

” இல்லட்டி”

 

“பேசாம போயிரு. அம்புட்டு கோவமா இருக்கேன்”

 

கண்ணீரும், கம்பலையுமாக இசக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தாள். ஒரே உடன்பிறப்பு, திருமணமாகி இப்படி செல்வதை, மலர் விரும்பவில்லை.

 

ஆதலால், “இசக்கி, அப்பைக்கப்ப(now & then) போஃன் போடுட்டி. நாளாவட்டத்தில அப்பா செரியாயிருவாக ” என்றாள்

 

கண்ணீரைத் துடைத்துவிட்டு, “செரி மலரு” என்று கல்யாணக் களிப்புடன் நடந்தாள்.

 

அங்கிருந்து கண்ணன் குடும்பத்தார் கிளம்பினர்.

 

இதற்கிடையே கூட்டத்தைப் பார்த்து, “அவியகளுக்குத்தான் தங்கராசப் பத்தித் தெரியாது. ஒங்களுக்கு தெரியும்ல, அவன் மவுசு. சட்டையைப் பிடிக்கிற வரைக்கும் சும்மயே இருக்கீக” என்று அஞ்சுதம் அதிகாரமாகக் கேட்டார்.

 

“இல்லே டீச்சர். நாங்க சொன்னோம் ” என்று கும்பலாகக் கத்தினர்.

 

“போதும். விரும்பினவுக கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாக. அது அவிய குடும்ப விஷயம். நீங்க ஏன் கூட்டம் போடறீக. போங்க, போய் அவுகவுக சோலியப் பாருங்க” என்று விரட்டினார்.

 

கூட்டம் சலசலத்துக் கொண்டே கலைந்துவிட்டது.

 

கிழவிகள், தங்கராசு, அஞ்சுதம் வீடு நோக்கி, நடக்க முற்படுகையில்.

 

“டீச்சர், மே ஐ கம் இன் ” என்று பவ்யமாகக் குரல் வந்தது.

 

அனைவரும் திரும்பினர். குரலுக்கு சொந்தக்காரி கொடிமலர்தான். மலருக்குச் சரியான கோபம் அஞ்சுதத்தின் மேல். ஒன்று,  பிரச்சனையை இவ்வளவு பெரிதாக ஆக்கிவிட்டார் என்று. மற்றொன்று தன் அப்பாவை, மரியாதை இல்லாமல், பெயர் சொல்லி அழைத்தார் என்று.

 

அருகில் வந்து நின்று கொண்டு. “என்னா இங்கிலீஷ் புரியலையா? இல்லே  பதில் சொல்ல புடிக்கலயா” என்றாள்.

 

“ஏய், என்னா வேனும் உனக்கு”

 

“நீங்கமட்டும் பேசினீங்க டீச்சர். நான் பேச வேண்டாமா? ”

 

” நீ என்னா பேசப் போற”

 

“நீங்க எதைப் பேசலையோ, அதப் பேசப்போறேன் டீச்சர்”

 

“புரியல. புரியற மாதிரி சொல்லு ”

 

“நீங்க அயத்துப் போயிட்டீக. ம்ம்”என்று யோசித்தவள், “இதச் சொன்னா புரியுதானு பாருங்க. அபிப்பிராயம். இப்பம் புரியுதா ” என்றாள்.

 

உறிப்பாணையை உடைத்தது, அஞ்சுதம்தான். ஆனால் உதிர்ந்தது மலரல்ல, முட்கள். அவரைக் குத்த ஆரம்பித்தன.

 

“அம்புட்டு சொன்னவுக, அதை மட்டும் விட்டுட்டீக. ஏன் டீச்சர்?? ”

 

“பாவமே, ஒரு பொம்பளைப் புள்ள வாழ்க்கைனு நெனச்சேன். ஆனா நீ இம்புட்டு கரைச்சல் (disturb) கொடுக்க ” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.

 

“நீங்க, எனக்காக… யோசிக்கிறீக…” என்று இடைவெளி விட்டுச் சொன்னவள், ” இத என்னய நம்பச் சொல்றீகளா” என்று  சிரித்தாள்.

 

“ஆனா, நீதான் அன்னிக்கே அபிப்… எதுவும் இல்லேன்னு சொன்னீயே ”

 

“அன்னிக்கி இல்லன்னு சொன்னே. ஆனா இன்னிக்கு இருக்கு”

 

“ஏய், என்னா  பேசுற? ஒங்க அப்பாகிட்ட சொல்லவா ”

 

“அய்யோ, பயமா இருக்கு டீச்சர். அப்பாகிட்ட சொல்லாதீக. அப்படி பயப்பட நான் என்னா ஒங்க ஸ்கூல் ஸ்டூடன்ட்டா ”

 

“ஏய், நீ ரெம்ப பேசற. ஒங்க அப்பாவ கூப்பிடவா? ”

 

“கூப்பிடுங்க. அப்படியே கலைஞ்ச கூட்டத்தையும்”

 

” எதுக்கு”

 

“ஒங்களுக்கு இந்த ஊரில நல்ல மவுசு இருக்கில்ல. அதனாலதான இந்த விஷயத்த மறைச்சீக. எல்லார்கிட்டயும் நான் சொல்றேன் ”

 

” ஏய், போதும் நிறுத்து. இப்பம் என்னா சொல்ல வர்ற”

 

“கல்யாணம் கட்டிகிட்டா இவுகளதான் கட்டிக்குவேன். அம்புட்டுத்தான்” என்று தங்கராசுவைக் கைகாட்டினாள்.

 

“ஒன்னமாதிரி ஒரு படிச்ச புள்ளை, ச்சே… அப்படிச் சொல்ல முடியாதுல. படிச்சுக்கிட்டே இருக்கிற புள்ள, என் வீட்டுக்கு மருமகளாக வர முடியாது ”

 

“பார்க்கலாம். பாஸானவுடனே, ஒங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கிறேனா இல்லையான்னு பாருங்க”

 

“அதேதான் நானும் சொல்றேன். நீ, என் வீட்டு வாசல்லதான் நிக்க முடியும். என் வீட்டுக்குள்ள எப்பவுமே வர முடியாது ”

 

“வெயிட் அன்ட் வாட்ச்” என்று தோளைக் குலுக்கினாள் குறும்பாக.

 

” சேம் ஹியர் அன்ட கெட் லாஸ்ட் ” என்று சொல்லி, அஞ்சுதம் சென்று விட்டார்.

 

தங்கராசுவை, மலர் கோபமாகப் பார்த்தாள்.

 

” மலரு ” என்றான் தங்கராசு.

 

“அப்படிக் கூப்பிடாதீக. எங்கிட்ட பேசவும் செய்யாதீக ”

 

“இல்லே மலரு ”

 

“ஒங்க அம்மகிட்ட சொன்னது, எம்புட்டு நெசமோ, அதேகணக்காதான் ஒங்ககிட்ட சொன்னதும் ” என்று கோவமாகச் சொல்லிவிட்டு, விருவிருவென்று வீட்டுக்குள் சென்றாள்.

 

வீட்டிற்குள் சென்ற மலரிடம், செல்லத்துரை ஒரு கோரிக்கை வைத்தார். எந்த ஒரு மறுப்பின்றி, அதை அப்படியே ஏற்றுக் கொண்டாள் மலர்.

 

தங்கராசு வீடு

 

இதுநாள் வரை மியூட் மோடில் வைத்துப் பார்க்கப்பட்ட டிவியின் சத்தம், இன்று காதைப் பிளந்தது.  அந்தச் சத்தத்தின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாமல், கிழவிகள் அதன் முன்பு அமர்ந்திருந்தனர்.

 

அஞ்சுதம் அனைத்து வேலையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

 

வீட்டின் வெளியேவரை வரும் டிவியின் அலறல் கேட்டுக் கொண்டே வந்தவர், “என்னா புதுசா டிவிய இம்புட்டு சத்தமா வச்சிருக்கீக. வெளிய வரைக்கும் கேட்குது”  என்றார்.

 

“அது வீட்டுக்கு புதுசா படிச்சவக  வருகை இருக்கும் போல. அதேன் பாஷை பழகிக்கிட்டிருக்கோம்”

 

“என்னா சொல்றீக”

 

“நீங்க, மாமியாரும் மருமகளும் தஸ்புஸ்னு பேசுவீக. எம்புட்டு நாளுதான் ஒங்க வாயப் பார்த்துக்கிட்டே இருக்க. நாங்களும் பேசனும். அதேன் ”

 

“நான் அங்கன வச்சி, அம்புட்டு கத்தினேன், அயத்துப் போச்சா”

 

“வயசாகுதுல, அதேன் அயத்திருச்சு”

 

“இத நம்பச் சொல்றீகளா ”

 

” செரி… அயத்துப் போகல ”

 

” சந்தோஷம் ”

 

“ஏன்ட்டி, நீ பேசினது நியாபகம் இருக்கின்னா? அந்தப் புள்ள பேசினதும் இருக்கும் ”

 

“அவ இந்த வீட்டுக்கு வருவான்னு, கனவு காணாதீக”

 

“நாங்க எங்கன கனவு கண்டோம். ஒன் பையன்தான்” என்று பின்வாசலைக் காட்டினார்.

 

“ஒங்கள திருத்தவே முடியாது” என்று சொல்லி அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

“என்னாட்டி இப்படிச் சொல்லிட்டு போறா” என்றார் முத்தாச்சி.

 

“வுடு முத்து, நாம பேசுற வசனத்தை அவ பேசிட்டு போறா. இவளுக்கு அந்தப் புள்ள மேல கரிப்பு(jealous) ” என்றார் பேச்சிக்கிழவி.

 

“செரி வா. அந்தப் பயலப் போய் பார்ப்போம்”  என்று இரு கிழவிகளும், வீட்டின் பின்புறம் வந்தனர்.

 

கருமையான இரவில், கயிற்றுக் கட்டிலில், குப்புறப்படுத்து, குமுறிக் கொண்டிருந்தான் தங்கராசு.

 

” லே, எந்திரிலே. எதுக்கு இம்புட்டு சடவா இருக்க. பொறவாசல்ல படுத்துப், பொலம்பிக்கிட்டு வேற. எந்திரி தங்கராசு” – பேச்சிக்கிழவி.

 

“இப்பம் என்ன நடந்துச்சுன்னு சொல்றியா” – முத்துக்கிழவி.

 

“மலரு பேசமாட்டிக்கு முத்தாச்சி ”

 

“மலருக்கு போஃன் போடுலே. அந்தப் புள்ளகிட்ட என்னான்னு கேட்கிறேன் ”

 

“போஃன் போட்டுப் பார்த்தேன் ஆச்சி, அது எடுக்கவே மாட்டேங்குது”

 

“முதல எங்ககிட்ட என்னா நடந்துச்சுன்னு சொல்லு ”

 

சூரியகாந்தியிலிருந்து சாக்லேட் கொடுத்தவரை, தனது அபிமானங்களை, ஆச்சிகளிடம் பகிர்ந்து கொண்டான்.

 

“சாக்கிலேட் கொடுத்தப்ப  சொல்லாதலே. சண்டை போட்டா மட்டும் சொல்லு” – பேச்சிக்கிழவி.

 

“என்னாட்டி இம்புட்டு நடந்திருக்கு, இந்தப் பய, ஒரு வார்த்தை நம்மகிட்ட சொல்லலையே” – முத்துக்கிழவி.

 

“என்னா இம்புட்டு நடந்திருக்கு” என்று கையை விரித்துக் காட்டினார் பேச்சிக்கிழவி.

 

“ஏம்ட்டி”

 

“இந்தப் பய ஊரக் கூட்டிட்டுப் போய், அந்தப் புள்ளகிட்ட சாக்கிலேட் கொடுத்திருக்கான். இவன் அம்ம ஊரே கூடி நின்ன இடத்துல, அந்தப் புள்ளகிட்ட சண்டை பிடிச்சிட்டு வந்திருக்கா. அம்புட்டுத்தான் ”

 

” ஆச்சி, இப்பம் என்னா  செய்ய ”

 

“தங்கராசு, ஒங்க  அம்மையப் பத்தி, மலர்கிட்ட எம்புட்டு பேசிருக்க.. அதேகணக்கா மலரைப் பத்தி ஒங்க அம்மகிட்ட வாதுறந்து பேசுலே”

 

அவன் அமைதியே சொன்னது, பெற்றவளுடன் பேச மாட்டேன் என்று. அவனைப் பெற்றவளை பெற்றவள் என்பதால், பேச்சுக்கிழவிக்குச் சுருக்கென்று வலித்தது.

 

“பேச்சி, அந்தப் பயலுக்கு ஏதாவது ஒத்தாசை செய்யப் பாருட்டி”

 

“செரி, செரி” என்று யோசிக்க ஆரம்பித்தார்.

 

யோசிப்பின் முடிவில், ” நாளே வெள்ளனையே கிளம்பி ”

 

அவர் முடிக்கும் முன்னே, “மலரைப் பார்க்க போலாமா” என்று உற்சாகத்துடன் எழுந்தான், தங்கராசு.

 

“இல்லே, டவுனுக்குப் போறோம்”

 

“டவுனுக்கா, அங்கன எதுக்கு ஆச்சி”

 

“ரோசு, காரடு வாங்க வேண்டாமாலே”

 

“ஆமா ஆச்சி, அன்னிக்கே கேட்டுச்சி. வாங்கிக் கொடுக்கனும்” என்று ஆசையாகச் சொன்னவன், “ஆனா, அந்தப் புள்ள பேசவே மாட்டிக்கே ” என்று அலுப்புடன் முடித்தான்.

 

“தங்கராசு, ஒன் முடிவுல வலுவா நிக்கிறேல” – பேச்சிக்கிழவி.

 

“ஏன் பேச்சி, இப்பம் வந்து இப்படி கேட்கற ”

 

“கொறச்சலே(shame) இல்லாம வீடு, சந்தினு எல்லா இடத்திலயும் முறைச்சிக்கிட்டு இருக்காளுக. இவளுக இடையில, இவன் எப்படி” என்று இழுத்தார்.

 

அபிமானங்கள் அதிகமாகிப் போன அர்த்தங்களுடன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் தங்கராசு…

 

பதில் கிடைத்தது போல், “ம்ம்ம் அப்பம் செரி, நாளே ரோசும் காரடும் வாங்கறோம், அந்தால மலரப் போய் பார்க்கிறோம்” என்று முடித்தார், இல்லை முடிவெடுத்தார்.

 

8

 

சூரிய குடும்பத்தில் பூமி ஒரு கோளா?, இல்லை பூமியில், சூரியன் ஒரு நபரா?? என்பது போல் இருந்த உச்ச வெயில் நேரம்.

 

ரீசார்ஜ் கடையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு, அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்க ஆரம்பித்தனர், கிழவிகளும் தங்கராசுவும்.

 

மூவரும் ரீசார்ஜ் கடைக்குள் வருவதைப் பார்த்த மலர், அவர்கள் அருகில் வரும் வரை அமைதியாகவே இருந்தாள்.

 

வந்ததும், “என்னாத்துக்கு இப்பம் இங்கன வந்திருக்கீக. அப்பமவே சொல்லிட்டேன்ல. மறுக்கா மறுக்கா சொல்ல முடியாது. இதுகணக்கா கரைச்சல் கொடுக்குற வேல வச்சுக்காதீக. இப்படி பொறவால வந்தீகனா. அம்புட்டுத்தான். நீங்க என்னாத்துக்கு வந்தீகளோ, அது நடக்கவே நடக்காது” என்று படபடவென்று பொறிந்து தள்ளிவிட்டாள்.

 

“அப்பம், இங்கன ரீசார்ஸ் பண்ண மாட்டீகளா” என்று பாவமாக கேட்டார் பேச்சிக்கிழவி

 

” ரீசார்ஜா ”

 

இவர்கள் வந்து வேலை இதுவா, நான்தான் வாயை விட்டுவிட்டேனா – இது மலரின் மனக்குரல்.

 

“ம்ம். ரீசார்ஸ்தான். நீங்க என்னா நினைச்சீங்க”

 

தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டு, “ஒன்னுமில்லை. நம்பர் சொல்லுங்க ” என்றாள்.

 

“இவுக நெம்பருக்குத்தான் ” என்று தங்கராசை காட்டினார்.

 

மாலையில் கோர்க்கப்படாத மலரைப் போல் இருந்தது, அவன் முகத்தில் வாட்டம்.

 

இருந்தும், “யாருனாலும், நம்பர் சொல்லுங்க, ரீசார்ஜ் செய்றேன் ” என்றாள்.

 

அதற்கு மேல் பொறுமைகாக்க பேச்சிக்கிழவிக்கு முடியவில்லை. பொங்கல் பானை, பொங்கி வருவது போல் பொங்கியெழுந்து விட்டார்.

 

“ஏன்ட்டி, இவன் நெம்பர் ஒனக்குத் தெரியாதா”

 

“இவுகளே தெரியாது. அப்புறம் இவுக நம்பர் எப்படித் தெரியும்” என்றாள், பொங்கல் வைத்த திருப்தியுடன்.

 

பேச்சிக்கிழவிக்கு, ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. யோசித்தார்.

 

‘நீ படிச்சிக்கிட்டிருக்க மேதைனா, நான் படிக்காதமேதை’ – பேச்சிக்கிழவி மனக்குரல்.

 

” போஃன் கொடுலே தங்கராசு”

 

“ஆச்சி என் நெம்பர்தான் ஒங்களுக்கு தெரியும்ல”

 

” கொடுலே”

 

தங்கராசுவிடமிருந்து கைப்பேசியை வாங்கிய பேச்சிகிழவி, ஏதோ ஒன்று பண்ணி, சில பொத்தான்களை அழுத்தினார். மலரின் கைபேசி ஒலித்தது.

 

மலரோ  மாட்டிக்கொண்டது போல் ஆச்சியைப் பார்த்தாள்.

 

“ஒன் போஃன்ல, ஒரு நெம்பர் வருதுல. அந்த நெம்பருக்கு ரீசார்ஸ் பண்ணுட்டி ”

 

‘தேட்’ பொங்கல் வைத்தாலும் சரி, உறியடித்தாலும் சரி. பானை நீதான் என்கின்ற ‘மொமென்ட்’.

 

இதற்குமேல் இவர்களை சமாளிப்பது கடினம் என்று நினைத்தாள்.

 

“ஆச்சி, இப்பம் ஒங்களுக்கு என்னா வேனும்” என்றாள்.

 

“இதுகணக்கா, முதலய கேட்டிருக்கலாம்ல”

 

“ஏலே ராசு, அத எடுத்து மேச மேல வைலே”

 

தங்கராசு, ஒரு ரோசாப்பூவையும், வாழ்த்து அட்டையையும் எடுத்து மேஜையின் மீது வைத்தான்.

 

அவளுக்குப் புரிந்து போயிற்று. தங்கராசுவிற்கு, சமாதான தூதுவராக இரு கிழவிகளும் வந்திருக்கின்றனர் என்று…

 

” என்னா இது ” – தெரியாதது போல் மலர்.

 

“ஏய், நீதான்  கேட்டியாம்ல”

 

“அப்பம் கேட்டேன். இப்பம் வேண்டாம்” என்று, மல்லிகை மொட்டு போல், முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

 

“ஏன்ட்டி, இந்த அட்டூழியம் பண்ற”

 

“நேத்து, இவுக செஞ்சது மட்டும் செரியா? எனக்கு எம்புட்டு அழுகாச்சியா வந்தது தெரியுமா? ” என்று மலர் வாடியது.

 

“மலரு, மலரு… மன்னிச்சிடுங்க மலரு… மலரு ”

 

மலரின் கவலைச் சூட்டில் கரைகின்ற, கருப்பட்டியாய், தங்கராசு.

 

“லே நிறுத்திலே. ஏன்ட்டி நீ செஞ்சததான சொன்னான். ஆனா, அவன் அம்மைக்கு எதுத்தால பேசறப்ப ஏதாவது சொன்னானா? ”

 

சரிதானே! அவள் அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்கே, கைநீட்டிக் கொண்டு வந்தவன், அவள் பேசிய அத்தனை பேச்சுக்களையும், கைகட்டி நின்று வேடிக்கைத்தானே பார்த்தான்.

 

மல்லிகை மொட்டு, மலர்ந்தது போல் இருந்தது மலரின் முகம்.

 

“யாராவது ரோசுகூட, சாரி கார்டு கொடுப்பாகளா”

 

“அப்பம் இந்தக் காரடு வேண்டாமா” -பேச்சிக்கிழவி.

 

“ம்கும்” – மலர் தலையாட்டியது.

 

“நான், சொன்னேன்ல மலரு நல்லபுள்ள. மன்னிப்பெல்லாம் கேட்கனும்னு நினைக்காது ”

 

மலரின் இதழ்கள், மேற்கும் கிழக்கும் சென்று கொண்டே, பேச்சுக்கிழவியை மறைத்தது.

 

“தங்கராசு, அந்த மன்னிப்பு காரட எடுத்திருலே”

 

அவனும், சொன்ன சொல் தட்டாமல், மன்னிப்பு அட்டையை எடுத்தான்.

 

“இப்பம், அந்தக் காரட எடுத்து வையிலே”

 

தன் சட்டைப்பையில் வைத்திருந்த, ஒரு அபிமான வாழ்த்து அட்டையை எடுத்தான். கரைந்த கருப்பட்டியின் தித்திப்பாய், சிரித்துக் கொண்டே, அதை அவள் முன்னே வைத்தான்.

 

“இது என்னா? ஒங்களுக்கு என்னா வேனும்”

 

“அந்தப் பய கூட பேசு மலரு” – முத்துக்கிழவியின் கெஞ்சல்.

 

“இங்க பாருங்க ஆச்சி, நான் சொன்னது கணக்கா. பாஸாயிட்டு ஒங்க வீட்டு வாசல்ல வந்து நிப்பேன் ”

 

“அப்பம், ஒனக்கு தங்கராசு மேல கோவம் இல்லே ” – முத்துக்கிழவி.

 

” அது வேற… இது வேற… ”

 

“வாலே போலாம். அவ பாஸாகட்டும்” என்று கிளம்பினார்கள்.

 

“ஆனா அதுல ஒரு சிக்க இருக்கு ” என்று சொல்லி, அவர்களை நிறுத்தினாள்.

 

” என்னா சிக்க ” – பேச்சிக்கிழவி.

 

“என்னய படிக்க வேண்டாம்னு, எங்க அப்பா சொல்லிட்டாக ”

 

மலரின் படிப்பு மீது கொண்ட அதீத நம்பிக்கையால் பேச்சிக்கிழவி, “வாவ்” என்று ஆரம்பித்தவர், மலரின் முகம் போன போக்கைப் பார்த்து, ” வொய் ” என்று முடித்தார்.

 

“இது என்னா வார்த்தை, வாவொய் ” – புரியாமல் மலர்.

 

” இது இன்ங்கிலீஷு ”

 

” இங்க பாருக. எனக்கும் இங்கிலீஷ் தெரியும். இது, அதுகணக்கா இல்லே ”

 

“ஒனக்கு புரியாதுட்டி”

 

“நானும் இங்கிலீஷ் படிச்சிருக்கேன்.

ஏமாத்தாதீக ”

 

“நீ பிபிசி பார்த்திருக்கியா ”

 

“இல்லே”

 

“இது பிபிசி இன்ங்கிலீஷு. வாவொய். ஒன் புத்தகத்தில இருக்காது. ஒனக்கு புரியவும் செய்யாது”

 

“ஏன்ட்டி பேச்சி.  சும்ம இருட்டி. நீ சொல்லு மலரு” – முத்துக்கிழவி.

 

“எங்கப்பாக்கு என் மேல நம்பிக்கை இல்லையாம் முத்தாச்சி. அதே, பரிட்சை எழுத வேண்டாம்னு சொல்லிட்டாக” – உதட்டை சுழித்து, கண்ணை விரித்துக் கவலையுடன் மலர்.

 

“இப்பத்தான் ஒங்கப்பாவுக்கு அது புரிஞ்சதா ” – பேச்சிக்கிழவி.

 

“பாருங்க முத்தாச்சி. எப்படி எடக்கா பேசறாகனு. பாஸாகாட்டி,  ஒங்க வீட்டுக்கு வர மாட்டேன்”

 

“செரிட்டி. ஒங்க அப்பாவுக்கு தெரியாம போய் பரீட்சை எழுதிட்டு வந்துரு ” – முத்துக்கிழவி யோசனை.

 

“ஏற்கனவே எங்க அப்பாவுக்கு தெரியாம ஒரு காரியம் பண்ணிட்டேன். மறுக்கா அதுகணக்கா செய்ய மாட்டேன். எங்கப்பா சொன்னாதான் பரிட்சை எழுதுவேன்”

 

”  ஒன் பிரச்சனை என்னா மலரு ” – பேச்சிக்கிழவி.

 

“ஒங்க வீட்லருந்து ஒரு ஆள் வந்து பேசினதாலதான, என்னால பரீட்சை எழுத முடியாம போச்சு ”

 

” ஏய், என்னா ஆளு கீளுன்ன பேசுற. நீ, அவன் அம்மயப்பத்தி என்னா பேசினாலும் சும்ம நிக்கிறானுதான, இதுகணக்கா பேசிகிட்டு இருக்க”

 

“பிரச்சனை என்னான்னு, வெரசா சொல்லு மலரு” – முத்துக்கிழவி.

 

“எங்கப்பாகிட்ட போய் பேசுங்க. பாஸாயிட்டு, ஒங்க வீடு மின்னாடி வந்து நிக்கிறேன்”

 

“அம்புட்டுதான, வாலே கிளம்பலாம் ” என்று எழுந்து நடக்கத் தொடங்கினர்.

 

அபிமானத்தைப் பரிமாறிக் கொண்டது போல், அபிமான அட்டையையும் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைத்தனர் அபிமானிகள். ஆனால் அதில் சிறிது ஏமாற்றம்தான்!

 

“ஆச்சி, காரட கொடுத்திட்டு வந்திரட்டுமா” – தன் தேவைக்காக வாய் திறந்தான் தங்கராசு.

 

“இருலே, அவளே வந்து வாங்குவா. அந்த வாய் எம்புட்டு பேசிருக்கு. காரட கேட்டு வாங்கத் தெரியாதா? ”

 

“ஒரு நிமிஷம் அங்கனயே நிக்கிறீகளா” என்று மலர் எழுந்து, அவர்கள் அருகில் சென்றாள்.

 

“என்னா வேனும்” – பேச்சிக்கிழவி.

 

“கார்டு கொடுக்காம போறீகளே”

 

தங்கராசு காதுக்குள், பேச்சிகிழவி ஏதோ ஓதியது. இரண்டு வாழ்த்து அட்டையையும் எடுத்தவன், இரு கைகளிலும் ஒவ்வொன்றாய் பிடித்தான்.

 

“ரெண்டு வேனாம், ஏதாவது ஒன்னு போதும் ஆச்சி”

 

“ஒனக்கு எது வேனுமோ, அத நீயே அந்தப் பயகிட்டருந்து எடுத்துக்கோ. எங்களுக்கு வாசிக்க தெரியாது ”

 

“வாங்கறப்போ, எப்படி வாங்கனீக”

 

“கடைக்காரன் ஒத்தாசை செஞ்சான்”

 

மலரின் இதழ்கள், காற்றில் அசையும், விரிமலர் போல், அங்கும் இங்கும் போய்க் கொண்டு வந்தது.

 

” என்னா முணுமுணுக்க ”

 

“ஏசிக்கிட்டு இருக்கேன்”

 

” யாரட்டி ”

 

” ம்ம்ம்.. ஒத்தாசை செஞ்சவுகள”

 

“ஒத்தாசை பண்றவன ஏசுறதுதான ஒங்க வீட்டு வழக்கம்”

 

அபிமான வாழ்த்து அட்டையை, அவனிடமிருந்து வாங்கவில்லை, பிடுங்கிக் கொண்டாள்!

 

“நான் சொன்னேன்ல தங்கராசு, மலரு அந்தக் காரட எடுக்கும்னு ”

 

“வாசிச்சு பார்க்காமலே, இப்பம் எப்படி தெரிஞ்சுச்சு ”

 

“அதுல ஆர்ட்டு போட்டுருக்கிட்டி ”

 

“அது, ஆர்ட்டு இல்லே, ஹார்ட்டு” என்று சொன்னவள், தங்கராசுவின் சட்டைப் பையில் பேனாவைப் போல் சொருகி வைத்திருந்த ரோசாப்பூவை பார்த்தாள்.

 

“ராசு, ரோசு கொடுக்கிறியா ” – மலரின் ரவுசு.

 

“என்னாட்டி மருவாதைய கம்மி பண்ற… ஒழுங்கா பேசுட்டி ”

 

“செரி ஆச்சி. ராசு மாமா, ரோசு கொடுக்கிறீகளா”

 

தினமும் தோட்டத்தில் விதவிதமான பூக்களுடன் பொழுதைக் கழிக்கின்றவன்தான். ஆதலால் பூக்களின் மென்மை குணம் பற்றித் தெரியும். ஆனால், இந்த மலர் மட்டும் எப்படி? இப்படி அடாவடித்தனம் செய்கிறது!!

 

“ஆல் தி பெஸ்ட்” என்றான், ரோசாப்பூவை எடுத்து, மலரிடம் நீட்டி.

 

“மறுக்காவுமா ”

 

“ஏம்லே, ரோச கொடுத்திட்டு, இப்படியா சொல்லுவாக. படத்ல இதுகணக்கா சொல்ல மாட்டாங்களே” என்று இழுத்து யோசித்தார்.

 

” நல்லா கேளுங்க ஆச்சி. அந்த மூனு வார்த்தை சொல்லுங்க ராசு மாமா” என்று வெட்கி, நாணி, கோனி முயற்சித்தாள்.

 

” என்னா மூனு வார்த்தை ” – இது முத்துக்கிழவி.

 

“நீ சும்ம இருட்டி முத்து. லே சொல்லுலே ”

 

“இப்பம் வேண்டாம் ” – இது தங்கராசு வெட்கம்.

 

“ஏம்லே,  நீயெல்லாம் தளபதி ரசிகர் மன்றத் தலைவரு. பேசாம  பதவிலருந்து விலகிருலே”

 

“ஆச்சி சும்ம இருங்க. அந்தப் புள்ள படிச்சி, பாஸாகட்டும். அப்பதான், நம்ம வீட்டுக்கு வருவாக ”

 

“ராசு மாமா, நீங்க கவலைப்படாதீக, நான் நெசமா ஒங்க வீட்டு மின்னாடி வந்து நிப்பேன், ராசு மாமா ” என்று, அவனை உரசி நின்று கொண்டு, குழைந்து கொஞ்சினாள்.

 

“அவனுக்கு கவல, நீ வீட்டு மின்னாடி வந்து நிப்பியானு இல்லே. பாஸாவீயான” என்று, அந்தக் கொஞ்சலில் கும்மியடித்தார் பேச்சிக்கிழவி.

 

“அப்படியா, ராசு மாமா ” என்று விலகி நின்று கேட்டாள்.

 

” இல்லே மலரு ” – ராசுவாகிப் போனவனின் நம்பிக்கை!!

 

“ராசு மாமா, நீங்க சொன்னாதான் படிப்பேன். சொல்லாட்டி  படிக்க மாட்டேன் ”

 

“ஏன்ட்டி, பாஸாகாட்டி வீட்டுக்கு வரமாட்ட. ஒங்கப்பாகிட்ட பேசாட்டி பரிட்சை எழுது மாட்ட. இப்பம் இதுவுமா. ஒனக்கு நெசமா பரிட்சை எழுத ஆசை இருக்கா? இல்லையா? ”

 

“இருக்கு ஆச்சி ” என்று சிரித்தாள்.

 

“மலரு, அப்பம் படிங்க. அந்தால மிச்சத்தை பார்க்கலாம். செரியா ” என்றவனுக்கு, மூன்று வார்த்தை, மிச்சமாகிப் போனது.

 

“அய்யோ, ராசு மாமா, நான் ஏற்கனவே இத ரெம்ப தடவ படிச்சிட்டேன் ”

 

“கொறச்சலே இல்லையாட்டி ” என்று பேச்சிக்கிழவி தலையில் அடித்துக் கொண்டார்.

 

“செத்த தேரம் பேசுங்க. நாங்க வெளில நிக்கிறோம் “என்று முத்தாச்சிதான், பேச்சிகிழவியை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

 

அவர்கள் போனவுடன்…

 

ராசு, மலரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“கோவமா மலரு”

 

” இல்லேயே ” என்றாள், குனிந்து அவன் வாங்கி வந்திருந்த வாழ்த்து அட்டையின் வார்த்தைகளை விரும்பி வாசித்தபடி.

 

அவள் நாடியைப் பிடித்து, மெல்ல தலையை நிமிர்த்தினாள். மலரின் கண்களில், லேசான ஈரங்கள்.

 

“என்னாச்சு மலரு” என்ற கேட்ட அடுத்த நொடி, அவனைக் கட்டிக் கொண்டாள்.

 

“அப்பா பேசமாட்டிக்காக ராசு. எப்பவுமே இப்படி இருக்க மாட்டாரு. என்னால யாருகிட்டயும் பேசாம இருக்க முடியாது. இசக்கியும் இல்லே. ஒண்டியா(alone) இருக்கிற மாதிரி இருக்கு” என்று புலம்பித் தள்ளினாள்.

 

“செரியாயிரும். நான் போஃன் போட்டா எடுத்துப் பேசுங்க” என்று, அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.

 

‘ஏன்’ – மலரின் பார்வை.

 

பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளைக் காட்டினான்.

 

“அது இப்பம்தான் தெரியுதா, ராசு மாமா”

 

அசட்டுச் சிரிப்புகள்!!

 

*****

லுங்கியைத் தூக்கி கட்டிக் கொண்டே,

ரீசார்ஜ் கடையின் படிகளில் இறங்கி வந்தான், தங்கராசு.

 

” என்னாலே, ரெண்டு பேரும் ஒத்துப் போயாச்சா”

 

“ம்ம்ம்”

 

“இவளப் படிக்கவைக்கிறது நாமலே படிச்சிறலாம் போல. நீ என்னாலே சொல்ற? ”

 

“அடுத்து என்னா ஆச்சு செய்ய ”

 

“வார்த்தைக் கூட படிக்கிறேன் சொல்ல மாட்டியாலே ”

 

“அடுத்து என்னா செய்யனு, சொல்லு பேச்சி”

 

“அடுத்து, ம்ம்ம்ம்… ரேஷன் கடைக்காரருக்கு காரடு அடிக்க வேண்டியதுதான்”

 

 

9

 

மாமனாரைப் பார்த்து மன்றாட, மாப்பிள்ளை தங்கராசு, கிளம்பிக்கொண்டிருந்தான். அவனது கைப்பேசியிலிருந்து நறுமணம் கமழும் வாசனை வந்து, நாசியைத் துழைத்தது. ஏனென்றால் திரையில் பூத்திருந்தது, மலரின் இலக்கங்கள்.

 

“ஹலோ” என்றான்.

 

“ஐ, நீங்கதான. ஒங்க அம்மாவா இருக்குமோனு பயந்திட்டேன். கிளம்பிட்டீகளா? ”

 

“கிளம்பிக்கிட்டே  இருக்கேன் மலரு. நீங்க என்னா செய்றீக? ”

 

“சமைச்சிட்டு  இருக்கேன் ராசு”

 

“படிக்கலையா? ”

 

வாசனை வரவில்லை.

 

“மலரு… மலரு…”

 

“அப்பா, படிக்க வேண்டாம்னு சொல்லி, சமைக்கச் சொல்லிட்டாக”

 

” அதுக்காக படிக்காம வுட்றாதீக ”

 

“இல்லே ராசு மாமா. சமைச்சிட்டு, சாப்டுக்கிட்டே படிப்பேன் ”

 

“செரி. செரி. நாங்க போய் பேசி, எல்லாத்தையும் செரி செஞ்சிருவோம் ”

” நெசமாவா? ”

 

” ம்ம்ம். நெசந்தான்”

 

“செரி ராசு. என்னா கலரு  சொக்கா போட்டிருக்கீக? ”

 

“பச்சை கலர். ஏன் கேக்கறீக? ”

 

“எங்க அப்பாக்கு அந்தக் கலரு சொக்கா பிடிக்காது. நீங்க வேற கலர் சொக்கா போடுங்க. ஒங்ககிட்ட நீல கலர் இருக்கா? ”

 

“இருக்கு மலரு”

 

“அப்பம் அந்தச் சொக்கா  போடுங்க. லுங்கி கெட்டி இருக்கீகளா?”

 

” ம்ம்ம்”

 

“வேண்டாம் ராசு. வேஷ்டி கட்டிக்கோங்க”

 

” ம்ம்ம். செரி மலரு”

 

“கோகுல் சாண்டல் பவுடர் இருக்கா? போட்டுக்கோங்க”

 

“மலரு, போதுமே. கிளம்பறேன்”

 

“டவுனுக்குப் போறீகள, அதேன் ராசு மாமா. செரி, வச்சிரேன்” என்று மலர் வாசம் தருவதை நிறுத்திவிட்டது.

 

மூன்று பேரும் கிளம்பி வெளியே வரும் வேளையில், அஞ்சுதம் எதிரில் வந்து நின்றார். சந்தேகப் பார்வையுடன், அவர்கள் மூவரையும் பார்த்தார். அதிலும் முக்கியமாக தங்கராசுவின் அலங்காரங்கள்.

 

” மூனு பேரும்…” என்று அஞ்சுதம் பேச்சை ஆரம்பித்தார்.

 

“போம்போது எங்கன போறீகனு கேட்கக் கூடாது” – முந்திக் கொண்டார், பேச்சிகிழவி.

 

“அப்படியா! அதெல்லாம் கேட்கல.  ஆனா நான் சொல்ற எடத்துக்குத் தான் போனும்”

 

“இது என்னாட்டி? ”

 

“தங்கராசு, டவுனுக்குப் போயி பிள்ளைகளுக்கு நோட்டுப் புக்கு வாங்கணும். செரியா”

 

“செரி அம்ம”

 

“சட்டுபுட்டுனு கிளம்பு”

 

“செரி அம்ம”

 

அவர் சொல்லிவிட்டு, உள்ளே சென்று விட்டார்.

 

“ஏன்ட்டி நாமளே டவுனுக்குத்தான போறோம் ” – முத்துக்கிழவி.

 

“வாத்தியார் பிள்ளைதான் மக்கா இருக்கும்னு சொல்வாக… இங்கன வாத்தியாரே… “-பேச்சிக்கிழவி.

 

” ஆச்சி”

 

“இவன் வேற. நீ ஏன் சொக்காவ மாத்துன”

 

“மலரு சொல்லிச்சி. அவுக அப்பாவுக்கு, இந்த கலருதான் புடிக்குமாம் ”

 

“இது வேறயா. அது என்னா செய்யுது?”

 

“சமைக்கிதாம்”

 

“புடிக்கலயா?”

 

“சமைச்சு, சாப்பிட்டுக்கிட்டே படிப்பாகளாம்”

 

“ஏம்லே, கதைப் புத்தகம்தான சாப்டுக்கிட்டே படிப்பாக… பாடப் புத்தகமுமா?”

 

இப்படி பேசியபடியே, மூன்று பேரும் ‘டவுனுக்கு’ கிளம்பிச் சென்றனர். ரேஷன் கடை இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர்  செல்லத்துரையின் வருகைக்காகக்  காத்திருந்தனர். சிறிது நேரத்தில், செல்லத்துரை வெளியே வந்தார்.

 

“வணக்கம் செல்லத்துரை” என்றனர், கிழவிகள் இருவரும்.

 

“வணக்கம் ஆச்சி. என்னா இம்புட்டு தொலவு வந்திருக்கீக? ”

 

“ஒன்னுமில்லை. ஒங்ககிட்ட, தங்கராசுக்காக ஒரு ஒத்தாசை கேட்டு வந்திருக்கோம்”

 

யோசித்தவர், “ஆச்சி, ரேஷன் கடையில புண்ணாக்கு போடறதில்லேயே” என்றார்.

 

“புண்ணாக்கா??” – மூவரின் ஆச்சரியங்கள்.

 

“இவுகதான், பால்  மாட்டுப் பண்ணை வச்சிருக்காகல. அதுக்காகத்தான கேட்டு வந்திருக்கீக ”

 

“இல்லே செல்லத்துரை… இல்லே… அதுக்காக நாங்க வரலப்பா. செத்த தேரம் ஒங்கூட பேசனும்”

 

“செரிங்க ஆச்சி. அங்கன இருக்கிற டீக்கடையில் உட்காந்திருக்கீகளா? நான் அஞ்சு நிமிஷத்துல வந்துறேன்”

 

சரியென்று மூவரும் சேர்ந்து டீக்கடைக்குச் சென்று அமர்ந்தனர். சற்று நேரத்தில் செல்லதுரையும், அங்கு வந்தார். நால்வரும் தேனீர் அருந்திக்கொண்டே பேசுவதற்குத் தயாராகினர்.

 

“ஆச்சி நான் ஏன் இந்தக் கடையில ஒங்கள உட்காரச் சொன்னேன் தெரியுமா?”- சம்பந்தம் இல்லாமல் பேசியது செல்லத்துரையின் குரல்.

 

” தெரியலே”

 

“இங்கன, டீ சூப்பர்ரா இருக்கும்”

 

இவரை சம்பந்தி ஆக்கலாமா? என்ற சந்தேகத்தில் இரு கிழவிகளும்.

 

“ஏன்னு சொல்லுங்க?” – சம்பந்தி.

 

“தெரியலேயே” – மூவரும்.

 

“தங்கராசு பண்ணையிலருந்துதான், இங்கன பால் சப்ளே ஆகுது” – குலுங்கிச் சிரித்தது குரல்.

 

“?! ?! ?!” – மூன்று பேரின் முகம்.

 

“முதல எனக்குத் தெரியாது.  நம்ம ஊருக்கு வந்தப் பொறவுதான், தெரிஞ்சது. ரெம்ப டேஸ்ட் தம்பி. எப்படிப்பா இப்படி? ”

 

“அது மாடுகள பிசுக்கில்லாம(no dirt) வச்சிக்கிட்டாலே போதும். அந்தால பழஞ்சியெல்லாம் (left over rice) கழனித் தண்ணீல கலக்கக் கூடாது. ”

 

‘மாடு வளர்ப்பு மாநாட்டிற்கு’ வந்தது போல் உணர்வு,  இரு கிழவிகளுக்கும்.

 

“ஏன்ட்டி முத்து, பேச்சு வேற திசப் பக்கம் போகுதோ?” என்றார் பேச்சிக்கிழவி, முத்தாச்சியின் தன்டட்டி அருகில்.

 

“அது போனா என்னா? நீ அதுலருந்தே ஆரம்பி” – முத்தாச்சி.

 

“செரியா சொன்னட்டி. இப்பம் பாரு. ” – பேச்சிக்கிழவி.

 

“செல்லத்துர, ஒரு டீக்காக  தெனமும் கடைக்கு வருவீகளா? இந்தப் பாலு வீட்டிலேயே கிடைச்சா எப்படி இருக்கும். ” – பேச்சிக்கிழவி முயற்சி.

 

செல்லத்துரை யோசிக்க ஆரம்பித்தார். கிழவிகளுக்கு சந்தோஷம்.

 

“இப்பம் புரியுது ஆச்சி. தம்பி, ஊருக்குள்ள பால் சப்ளே  பண்ணப் போகுதா? ” — யோசிப்பின் முடிவில் செல்லத்துரை.

 

தலையில் கைவைத்தவாரே, “ஏன்ட்டி முத்து, நான் பேசுறது செரியாதான இருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.

 

“நீ பேசறது செரிதான். அவருக்குத்தான் புரியல”

 

இதற்கிடையே…

 

“தங்கராசு, ஒங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அன்னிக்கி மலரு செஞ்ச தப்புக்கு, நான் ஒங்க சொக்காயப் புடிக்க வந்திட்டேன்.”

 

“ஏன்ட்டி பேச்சி, அவரே விஷயத்துக்கு வர்றாருட்டி” என்றார் முத்தாச்சி, பேச்சிகிழவியின் காதில்.

 

“பரவால்ல, நானும் கை உயர்த்திருக்கக் கூடாதுல. மன்னிச்சுக்கோங்க ”

 

“அந்தால தங்கராசு, ஒங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” – மிகுந்த தயக்கத்துடன் செல்லத்துரை.

 

“முத்து, நீ சொன்னது, ரெம்பச் செரி” என்றார் பேச்சிகிழவி, முத்தாச்சியின் காதில்.

 

“ஆனா, எப்படி கேக்கனுதான் ரெம்பத் தயக்கமா இருக்கு” – கூச்சத்துடன் செல்லத்துரை.

 

“சட்டுபுட்டுன்னு கேட்கிறீகளா?” – மாப்பிள்ளை அவசரம்.

 

“இல்லே தங்கராசு, நீங்க தளபதி ரசிகர் மன்றத் தலைவராக இருக்கீகள ” –  செல்லத்துரை.

 

“ம்ம்ம்” – மாப்பிள்ளை கலவரம்.

 

“இந்த மொத நாளு, மொத தடவையே படத்தைப் பார்க்கிறதுக்கு டிக்கெட் கேட்டா தருவீகளா?” – இதற்கா இத்தனை கூச்சம், தயக்கம்!!

 

“அது நீங்க மன்றத்தில உறுப்பினரா சேர்ந்துட்டீகனா, நான் அதுக்கு ஏற்பாடு செய்றேன் ” – மாப்பிள்ளை, தன்னை மறந்து மன்றத்து தலைவரான நொடி.

 

“ஏம்லே, இது ரெம்ப அவசியமா? எதுக்காக வந்தோம்னு அவருக்கு வேனா தெரியாம இருக்கும். ஒனக்கு தெரியுமில்ல. வாயை மூடுலே” என்று பேச்சிக்கிழவி அதட்டினார்.

 

“செல்லத்துர, நீங்க மலரு படிப்ப ஏன் பாதியிலே நிறுத்திருக்கீக? ”  என்றார் முத்துக்கிழவி.

 

“படிப்ப நிறுத்தல ஆச்சி. அதுக்கு கல்யாணம் கட்டி வச்சிட்டு, அந்தால படிக்கட்டும்னு  நினைச்சிருக்கேன். ”

 

‘மாப்பிள்ளையே மாறப்போகுது. நீ மன்றத்துச் சோலியப் பார்க்கிற’ என்பது போல், கிழவிகள்  தங்கராசுவைப் பார்த்தனர்.

 

“கல்யாணம் கட்டிக்கிட்டுப் படிக்கப் போவுது. அந்த மாப்பிள்ளை பையன், காலேசில வாத்தியாராம். அவரே படிக்க வச்சிருவாராம். ”

 

‘இதுக்காகவாது நீ படிச்சிருக்கனும்’ என்பது போல், பேச்சிக்கிழவி தங்கராசுவைப் பார்த்தார்.

 

“செல்லத்துர, அது படிச்சு முடிஞ்ச பொறவு, கல்யாணம் கட்டிக்கலாமே. அதோட இல்லாம, தங்கராசுகிட்ட கூட ரோட்ல வச்சி, மலரு படிக்கிறதப் பத்தி, ஒரு விஷயம் சொல்லிருக்கு” என்றார் முத்துக்கிழவி தனது முயற்சியாய்.

 

“அப்படியா தம்பி”

 

” ம்ம்ம் ”

 

“நடுரோட்டில நின்னு பேசாதீக தம்பி  ரோட்டில பஸ்ஸு வேனு  விருட்டுனு வந்துச்சுனா, என்னா பண்ணுவீக? ”

 

“இல்லே. ஓரமா ஒக்காந்துதான்  பேசினோம்” – தங்கராசு.

 

கிழவிகளின் பார்வை, ‘ஏம்லே நீயும் அவர் கணக்கா பேசுற’ என்றிருந்தது.

 

“வேறென்ன ஆச்சி சொல்ல” – கிசுகிசுப்பாய், தங்கராசுவின்  இயலாமை.

 

“முடியல பேச்சி, என்னா நடக்குதுன்னே புரியல” என்று தலையைத் தேய்த்துப் புலம்பினார், முத்துக்கிழவி.

 

“செல்லத்துர, அந்தப் புள்ள ஒரு வசனம் சொல்லிருக்கு பாருங்க, அப்படி ஒரு வசனம். நீ சொல்லுலே” என்றார், பேச்சிக்கிழவி தனது முயற்சியாய்.

 

“நானா எப்பம் நிறுத்திறனோ, அப்பம்தான் தோத்திட்டேன்…அ.. தோ.. ” – முடிக்க முடியாமல் தங்கராசுவின் மறதி.

 

“அதுவரைக்கும் ஜெயிக்கப் போராடிக்கிட்டு இருக்கேனுதான் சொல்வேன். செரியா தம்பி. ”

 

“ம்ம்ம்”

 

“ஒங்களுக்கு தெரியுமா?”

 

“ஒங்ககிட்ட ஒரு தடவைதான் சொல்லிருக்கு. அது படிக்க ஆரம்பிச்சதலருந்து, இதத்தான் சொல்லுது. அதேன் எனக்கு அயத்துப் போகல.”

 

“ஆனா விடாம சொல்லுதுல, செல்லத்துர. அதப் பாருங்க. அதுக்காகவாது, அது பரிட்சை எழுதட்டுமே” என்றார் முத்தாச்சி.

 

“ஆட்டுங்க ஆச்சி. எனக்கும், அந்தப் புள்ள பிகாம் முடிச்சிட்டு, எம்காம் படிக்கனும்னு ஆசை. படிக்கட்டும். அந்தால கட்டிக் கொடுக்கலாம். ”

 

” ஐய்யய்யோ! ” – தங்கராசு.

 

” என்னாச்சு தம்பி? ”

 

“அது வேற ஒன்னும் இல்லே. ஒங்க பெண்ணப் பத்தி, ஒங்களவிட நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான். அம்புட்டுத்தான். ” – பேச்சிக்கிழவி.

 

“அது எனக்கு தெரியும்ல ஆச்சி,   அதான் தங்கராச தேடிப் போய் ஒத்தாசை கேட்டிருக்கு. ”

 

“அது ஏன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீகளா? ” – முத்தாச்சி.

 

“யோசிக்க என்னா இருக்கு. இந்த ஊரில எல்லாருக்கும் ஒத்தாசை செய்யறது டீச்சர்தான். அதே ”

 

“ம்ம்ம். செரிதான். ஆனா டீச்சரகிட்ட கேட்காம, ஏன் தங்கராசுகிட்ட கேட்டுச்சி?அது தெரியுதா? ”

 

” நல்லா தெரியும் ஆச்சி”

 

‘செல்லத்துரைக்குப் புரிந்துவிட்டது’ என்று மூவருக்கும் நிம்மதி.

 

“டீச்சருக்கும் மலருக்கும் ஒத்து வராதுல. அதே”

 

“தங்கராசு  செத்த தேரத்துக்கு பொறவு வருவோமா? நெஞ்சு அடைக்கிறது கணக்கா இருக்குலே” – பேச்சிக்கிழவியே, பேச்சுவார்த்தையை கைவிட்ட நொடி.

 

மூவரும் செல்லத்துரையிடம் விடைபெற்று, எழுந்து செல்லும் பொழுது…

 

“தங்கராசு, ஒங்களுக்கு நீல கலரு சொக்காய் ரெம்ப எடுப்பா இருக்கு” என்றார், செல்லத்துரை.

 

மூவரும் ஆவென வாய்பிளந்து நின்றனர்.

 

அதிர்ச்சியில் இருந்து மீண்டு, “அப்பம் ஒங்களுக்கு அம்புட்டும் தெரியும்” – பேச்சிக்கிழவி.

 

“மலரு, நேத்து சாயங்காலமே, எங்கிட்ட சொல்லிருச்சி, ஆச்சி”

 

“மலரு நீங்க பேசாம இருக்கீகனு சொல்லிச்சே” – தங்கராசுவின் ஏமாற்றம்.

 

“இருந்தேன். ஆனா அதோட அழுகையப் பார்த்துட்டு, என்னால பேசாம இருக்க முடியல.  அது, எது செஞ்சாலும் செரியாத்தான் இருக்கும். அந்தப் புள்ளைக்கு, ஒங்க மேல ஒரு அபிப்பிராயம் இருக்குனு சொல்லுச்சி”

 

“அந்தால, எதுக்கு இம்புட்டு எடக்கா பேசினீக? ” – முத்தாச்சி.

 

“நேத்து, மலர ரீசார்ஸ் கடையில வச்சி, மீன வறுக்கறது கணக்கா வறுத்து எடுத்துட்டீகளாமே! அதான் என்னைய இப்படி ஏறுமாற பேசச் சொன்னிச்சி. கடல்ல பிடிச்ச மீன, கயத்துக் கட்டில்ல போட்டு, காய வச்சி கருவாடா ஆக்கிற மாதிரி, ஒங்களயும்… ” என்று நிறுத்தினார்.

 

‘தேட்’ எடை போடுபவரின் மகளை சாதாரணமாக எடை போட்ட ‘மொமண்ட்’.

 

“அதான் ஆக்கிட்டீகளே! அந்தால என்னா ‘மாதிரி’  ”

 

“ஆனா, டீச்சரை நினைச்சாதான்  பயமா இருக்கு ”

 

“பயப்படாதீக செல்லத்துர, நாங்க பார்த்துக்குவோம் ”

 

“மன்னிச்சிருங்க தம்பி. இல்லே நீங்க தம்பி இல்லே. மாப்பிள்ளை! ” – மாமனாரின் மதிப்பான வெட்கம்.

 

“இருக்கட்டும் மாமா” – மருமகனின் மரியாதை வெட்கம்.

 

“ஆச்சி,  இருந்தாலும் அந்தப் புள்ள அங்கன வந்து நிக்கிறதெல்லாம் ஒத்துவராது” என்றார் செல்லத்துரை பொறுப்புடன்.

 

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீக. மலர  வந்து நிக்கமட்டும் சொல்லுங்க.  மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன் ”

 

மூவரும் செல்லத்துரையிடம் விடைபெற்றுத் திரும்பிச் செல்லும்போது, பேச்சிகிழவி மட்டும் திரும்பி வந்தார்…

 

“செல்லத்துர”

 

“நடந்த விஷயத்ல, மனசு எடக்கல்லு மாதிரி கனமா இருந்தாலும், சடைக்காம பேசினீக. சந்தோஷம்”

 

” ஆட்டும்ங்க ஆச்சி ”

 

“ஆனா, ஒரு கண்ணில வெண்ணையும், ஒன்னொரு கண்ணில சுண்ணாம்பும் வச்சிப் பார்க்கிறீக ”

 

“…?” – கேள்வியாய் செல்லத்துரை.

 

“மலரு சொன்னதை, ஒடனே ஒத்துக்கிட்டீகளே! இசக்கிக்கும் அதத்தான செஞ்சிருக்கணும்”

 

“மலரு மேல நீங்க வச்சிருக்க பாசத்தை, இசக்கி மேலயும் வச்சிருந்தா, இசக்கி இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்காது. அந்தப் புள்ள கூட ஒத்துப் போற வழியப் பாருங்க” என்று ஒரு குட்டு வைத்துவிட்டுச் சென்றார்.

 

*****

ராட்சச சிறகுகள் முளைத்த பறவை போல், கடிகார மணித்துளிகள் பறந்தன.

 

மலர் படிப்பையே சுவாசமாக ஆக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்! என்னவொன்று அவ்வப்போது  சுவாசக்கோளாறு வந்தது.

 

மலரிடம், வாய் ஓயாமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட தங்கராசுக்கு, அந்த மூன்று வார்த்தை மட்டும், வாய்க்குள் நுழையவில்லை.

 

மலர், நல்லமுறையில் பரீட்சையை எழுதி முடித்தாள். தங்கராசுவின் பால்பண்ணைதான் இவர்களுக்கான ‘மீட்டிங் ஸ்பாட்’. அன்றும் மலர், ஆச்சிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

“அடுத்து என்னா ஆச்சி செய்யப் போறீக? ”

 

“முதல நீ பாஸ் காரட போடு. அந்தால பார்க்கலாம்”

 

பண்ணையில் வேலை முடிந்து தங்கராசு, அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

 

மலர் எழுந்து கொண்டு, “என்னா ராசு, இப்படி பிசுக்கா இருக்கீக” என்றாள்.

 

“…..”

 

“உச்ச வெயில் நேரம், எப்படி விசர்வை வருது பாருங்க”

 

“….”

 

அவள் பேசப்பேச, அவனுக்கு ஏதோ புலப்படுவது போல் இருந்தது. அது, இதேதானே தன் தாயும் சொல்கிறார் என்பது. இவள், அபிமானங்களுடன் அன்பைக் காட்டுகிறாள். அவர் கண்டிப்புடன், அன்பைச் சொல்கிறார்.

 

விகிதங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாமே தவிர, விருப்பங்கள் ஒன்றுதானே!!

 

‘தன் அபிமானத்தால், அன்னையின் அன்பை உணர வைத்தவள்’ என்ற ஆச்சரியத்துடன் மலரைப் பார்த்தான் தங்கராசு… அந்த அளப்பரிய ஆச்சரியம் தந்த ஆசையில்…

 

“மலர்”

 

“என்னா, ராசு மாமா”

 

“ம்ம்ம்… அது … அது வந்து, லவ் யூ மலர்” என்று சொல்லியேவிட்டான்.

 

“நானும்தான், ராசு மாமா”  என்று அவனைக் கட்டிக் கொண்டாள் மலர், கல்யாண மாலையில் வைத்துக் கட்டப்பட்ட பூக்களுக்கு உரிய வெட்கத்துடன்…

 

“வெடுக்கு வெடுக்குனு கட்டிக்கிட்டு நிக்காதட்டி”

 

“போங்க ஆச்சி?”

 

இப்படியே நிறைய ‘ஐ லவ் யூ – கள்’, நிறைய ‘நானும்தான்’, நிறைய ‘போங்க ஆச்சிகள்’ என்று நாட்கள் சந்தோஷமாகக் கடந்தன.

 

*****

அடுத்த வாரத்தில் பரீட்சையின் முடிவுகள் வந்தன. ‘எல்லோருடைய கூட்டுப் பிரார்த்தனைக்கு’ கிடைத்த பலனாக, மலர் நான்கு பாடங்களிலும், நாற்பதற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள்.

 

தந்தையிடம் சொல்லிய அடுத்த நிமிடமே, தங்கராசுவின் வீட்டிற்கு முன் வந்து நின்றாள்.

 

மலர் வந்ததை அறிந்த கிழவிகள், தங்கராசு சகிதமா வெளியே வந்தனர். மூவரும் கேள்வியாக, அவளைப் பார்த்தனர். கட்டை விரல் உயர்த்திக் காட்டி, அவர்களின் கவலைகளை களைந்தாள்.

 

இரு கிழவிகளும், டீச்சருக்கே ‘ரேங்க் கார்டு’ தயாரிக்க, தயாரானார்.

 

10

 

கிழவிகளும் தங்கராசுவும் ஆரம்பி ஆரம்பி என்று மலருக்கு உற்சாகம் தந்தனர்.

 

அவளும் “டீச்சர், டீச்சர்” என்று அழைத்தாள். குரல் கேட்டு, அஞ்சுதம் வெளியே வந்தார்.

 

“அன்னிக்கி, சொன்ன மாதிரி பாஸாயிட்டேன். தங்கராச எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கு கல்யாணம் கட்டி வைங்க டீச்சர்” என்றாள், முடிந்த அளவு நயமாக.

 

“சந்தோஷம். அன்னிக்கு நானும் சொன்ன மாதிரி,  வீட்டுக்குள்ளாற வர முடியாது. வாசல்லயே நில்லு. முடியலன்னா, அப்படியே வெளிய போயிரு.” என்றார், நாகரீகம் இல்லாமல்.

 

மலருக்கு, அந்தச் சொல்லைப் பொறுக்க முடியவில்லை. சிலையாக நின்ற மூன்று பேரையும் பார்த்தாள். அவர்கள் யாரும் அஞ்சுதத்திற்கு எதிராகப் பேசமாட்டார்கள், என்று தெரிந்தது. அதனால், மலர் கவலை கொண்டு திரும்பி நடக்கலானாள்.

 

சற்றும் தாமதிக்காமல், தங்கராசு ஓடிச் சென்று, மலரின் கை பிடித்து நிறுத்தினான்.

 

“மலரு போகாதீக”

 

“வாசல்லயே நிக்க சொல்றீகளா”

 

“இல்லே மலரு, செத்த தேரம் பொறுங்கன்னு சொல்றேன்”

 

“ஒங்கள பிடிக்கும் ராசு, அதுக்காக இதெல்லாம் கேட்க முடியாது”

 

அதற்குள் கிழவிகளுக்கு கோபம் வந்துவிட்டது. இருவரும் படியிலிருந்து இறங்கி வந்து, அஞ்சுதத்தின் முன்னால் நின்று கொண்டனர்.

 

“ஏன்ட்டி மலரு, செத்த தேரம் பொறுட்டி” என்று மலரிடம் சொல்லி, அவளை நிறுத்தி வைத்தனர்.

 

“ஏன்ட்டி, அந்தப் புள்ள படிச்சிருக்கிங்கிற, ஒரே காரணத்துக்காக, அத வேண்டாம்னு சொல்லாதட்டி”

 

“அவ படிச்சவளா? பிகாம் பாஸாக இத்தனை வருஷம் எடுத்திருக்கா! இவளெல்லாம் படிச்சவனு சொல்லாதீக”

 

“டிஸ்டிங்ஷன்ல படிச்சி,  டிப்டாப்பா டிரஸ் பண்ணி, டக்கரா சம்பளம் வாங்கனாதான் படிச்சவங்கனு, அர்த்தமா? இல்லட்டி. டிலேயா படிச்சாலும், டீசன்ட்டா பேசிகிட்டு, டிசிப்பிளின்னா வாழ்றவுகளும் படிச்சவுகதான்” – பேச்சிக்கிழவியின் வாய்மொழி.

 

ஒருகணம் அனைவரும், பாகுபலி வில்லனின் வசனங்களை, பழவிளை வில்லேஜில் பேசுவது போல் உணர்ந்தனர்.

 

“பேச்சி, நம்ம இன்ங்கிலீஷ், இவுகளுக்குப்  புரியாதுட்டி.  நீ தமிழ்ல புரியிற மாதிரி பேசு”

 

“செரிட்டி. ”

 

“ஏன்ட்டி படிச்சேன் படிச்சேனு சொல்றீயே? எதுக்கு படிச்ச?”

 

“ஏன்? நான் வேல பார்க்கிறது, ஒங்களுக்குத் தெரியாதா?”

 

“அடிப் போடி! படிக்கிறது எதுக்கிட்டி, ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கிறதுக்கு! எது புடிக்கும், எது புடிக்காததுனு தெளிவா சொல்றதுக்கு! தைரியமா நின்னு பேசுறதுக்கு! ”

 

“….? ”

 

“நீ, ஒனக்கு பிடிக்காததப் பத்தி, பெத்த  தாய்கிட்டயே சொல்லல. ஆனா அந்தப் புள்ள, எனக்கு இந்தப் பையனைத்தான் புடிச்சிருக்குன்னு தெளிவா சொல்லுது.” – பேச்சிக்கிழவி.

 

“செரியா சொன்ன பேச்சி. இவளுக்குப் பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா போதும், என் பையன இவளுக்குக் கட்டி வச்சிருக்கவே மாட்டேன்.” – முத்தாச்சி.

 

“…? ”

 

“கண்டிப்பா நீ திட்டுவேன்னு தெரியும். இருந்தும் தைரியமாக, இங்கன வந்து நிக்குதுல, அது தைரியமான புள்ள. அவள சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, வீட்டுக்குள்ளாற சேர்க்க மாட்டிக்கப் பார்த்தியா, நீ தைரியம் இல்லாதவ! ” – பேச்சிக்கிழவி.

 

“அப்படிச் சொல்லுட்டி பேச்சி. இவ தைரியம் இல்லாதவனு, இசக்கி பிரச்சனை அன்னிக்கே தெரிஞ்சதுல” – முத்தாச்சி.

 

“…?”

 

“ஒன் பையன் மனசுல என்னா இருக்குதுனே, நீ புரிஞ்சிக்கலட்டி!  ஆனா அந்தப் புள்ள, அவன் மனசப் புரிஞ்சுக்கிட்டு, நீ பேசறதெல்லாம் கேட்டுக்கிட்டு நிக்குது.” – பேச்சிக்கிழவி.

 

“இவ யாரத்தான் புரிஞ்சிக்கிட்டா ? ” – முத்தாச்சி.

 

“…? ”

 

“படிக்கலனு ஒரு காரணத்தச் சொல்லி, ஒருத்தரப் பிடிக்கலைன்னு சொல்றதே தப்பு! அந்தத் தப்பை நீ செஞ்சது மட்டுமில்லாம, இன்னொருத்தரும் செய்வாகனு நினைக்கிற பார்த்தியா, அது பெரிய தப்புட்டி”

 

“…? ”

 

அஞ்சுதம் முகம் முழுவதும் கேள்விக் குறிகள்.

 

“கடைசியா ஒன்னு சொல்றேன்ட்டி, கேட்டுக்கோங்க! ஏன்ட்டி மலரு நீயும்தான். நம்ம எல்லார விட ஒசந்தவன் தங்கராசுதான்! ”

 

“ஏன்னு சொல்லுட்டி, அப்பம்தான் இவளுகளுக்குப் புரியும்”

 

“அன்பா பேசாம, அதட்டிப் பேசற அம்மா! நிதானமா பேசாம, நிறுத்தாம பேசற பொண்டாட்டி! ஒழுங்கா பேசாம, ஓயாம பேசற ஆச்சிங்க! என்ன பேசுறோம்னே  தெரியாம பேசற மாமனார்! ரெம்ப பிடிச்சதால, இவிய அம்புட்டு பேரையும் புரிஞ்சி நடக்கிறான்ல, அதனால! ”

 

நிசப்தங்கள்.

 

தங்கள் கடமை முடிந்தது போல, மேல் மூச்சு வாங்க, பேச்சுக்கிழவியும் முத்தாச்சியும் திரும்பி நடக்க ஆரம்பித்தனர்.

 

“எப்படி முத்து, இந்தப் பேச்சியோட பேச்சு”

 

“சூப்பர்ட்டி, சோடா மட்டும்தான் இல்லே”

 

” ஒத்துப்பாளா?”

 

“இதுக்கு அன்னிக்கி ஏதோ சொன்னாள்களே. ”

 

” என்னாட்டி?”

 

“ஆங், வெயிட் ஆண்டு வாட்ச்”

 

அவர்கள், சற்றுத் தள்ளி போடப்பட்டிருந்த வயர் கட்டிலில் சென்று அமர்ந்துகொண்டனர்.

 

“லே, தங்கராசு ஒங்க ஆச்சிகளுக்கு கழஞ்சி வாங்கிக் கொடு. ரெம்ப பேசிருக்காக” – அஞ்சுதத்தின்

 

மலருக்கு கோபம் வந்துவிட்டது. திரும்பவும் வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். கைப் பிடித்து, தடுத்து நிறுத்தினான் தங்கராசு.

 

“போதும், விடுங்க தங்கராசு”

 

அவளின் அந்த அழைப்பு எப்படி இருந்தது என்றால், தகரத்தை தரையில் வைத்து ‘தரதர’ வென்று தேய்ப்பது போல் இருந்தது.

 

தங்கராசு, மலர் கையைப் பிடித்துக் கொண்டு, விருவிருவென்று அஞ்சுதத்தை நோக்கிச் சென்றான்.

 

“அம்மா” என்று அழைத்தான்.

 

இதுவரை, அம்மாவைப் பற்றி, இசையமைக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும், ஒருங்கே அஞ்சுதத்தின் பின் திரையில் ஒலிபரப்பானது.

 

“அம்மா எனக்கு மலரத்தான் ரெம்ப பிடிச்சிருக்கு”

 

“செரி தங்கராசு”

 

“மலரத்தான் கல்யாணம் கட்டனும்னு  ஆசைப் படறேன்”

 

“செரி தங்கராசு”

 

“வேற யாரையும் நீங்க கட்டி வச்சா, நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்.”

 

“செரி தங்கராசு”

 

“நாளே, அவுக அப்பாகிட்ட போயி பெண்ணு கேட்கலாம்”

 

“செரி தங்கராசு”

 

“எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் செய்ங்க ”

 

” செரி  தங்கராசு ”

 

இருவரும் காலில் விழுந்தவுடன், அஞ்சுதம் ஆசீர்வாதம் செய்தார்.

 

தன் மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ” இன்னிக்குத்தான் அம்ம கூட பேசனும்னு தோனிச்சா. எம்புட்டு நாளு, அம்ம ஒன் பேச்சக் கேட்க, காத்திருந்தேன் தெரியுமா? ” என்றார், தழதழுக்கும் குரலில்.

 

“என்னா அம்மா, சின்னப்புள்ள கணக்கா. ஆச்சி நீங்களாவது சொல்லுங்க.”

 

“போதும்லே. இனி என்னா வேனும்னாலும் நீயே கேளு. அவிய யாரு, நம்ம ரெண்டு பேருக்கும் இடையில”

 

” செரி அம்ம ”

 

“டீச்சர், மே ஐ கம் இன் ” – மகனுக்கும் அம்மாவிற்கும் இடையே வரப்போகும் மருமகளின் குரல்.

 

“யூ ஆல்வேஸ் வெல்கம், மை  மருமகளே” – மாமியார்.

 

இரு கிழவிகளும்…

 

“என்னாட்டி நடக்குது இங்கன.”

 

“வேற ஒன்னுமில்ல முத்து, மூக்க நேராவும் தொடலாம். சுத்தியும் தொடலாம். நாம சுத்தித் தொடப்பாத்தோம்! அம்புட்டுத்தான்.”

 

பின் கிழவிகளும் அஞ்சுதத்துடன் சேர்ந்து, ஜோடிகளை ஆசீர்வாதம் செய்தனர்.

 

“ராசு மாமா, எங்கூட வாங்க.” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

இரு கிழவிகளும், அந்தச் சோடிக் கிளிகளைப் பின் தொடர்ந்தனர்.

 

“இப்பம் என்னாத்துக்கு எங்க  பொறவாலயே வந்து, கொறச்சல் தர்றீக”

 

“ஏன்ட்டி, ஒனக்குத்  தேவைப்படுறப்ப கொறச்சலா தெரியல. இப்பம் தெரியுதோ?”

 

“பாருங்க டீச்சர்,  இந்த ஸ்டுடென்ட்ஸ் எங்க பொறவாலயே வர்றாக.” என்றாள்.

 

“உள்ளாற வாங்க ரெண்டு பேரும்” – அஞ்சுதம்.

 

“ஏன்ட்டி, இவளுக அடிச்சிக்காட்டாலும் புடிச்சிக்கிட்டாலும், நம்மளத்தான்  ”

 

“அத்த, அம்மா உள்ளாற வர்றீகளா. அவிய ரெண்டு பேரும் பேசட்டும்.”

 

இத்தனை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சுதத்தின் இந்த அழைப்பைக் கேட்கிறார்கள். மறுவார்த்தை பேசாமல், வீட்டின் உள்ளே சென்றனர்.

 

தனிமையில் ராசுவும் ராசாத்தியும்,

 

“சொல்லுங்க மலரு, இப்பம் சந்தோஷமா? ”

 

“…. ”

 

“என்னா மலரு, பேச மாட்டிக்கீக”

 

“அதே, ஒங்க ஆச்சி சொன்னாகள. நான் ரெம்ப பேசறேனு. இனிமேட்டு பாருங்க நான் பேசவே மாட்டேன். நீங்களா வந்து பேசினாலும் பேச மாட்டேன்.”

 

இன்னும் இன்னும்! மலர் நிறுத்தவே இல்லை, தங்கராசு சிரிக்கும் வரை.

 

“என்னா சிரிக்கிறீக”

 

“பேச மாட்டேன்னு சொல்றதுக்கே, எம்புட்டு பேசறீக ”

 

தன் அசட்டுத் தனத்தின் அடையாளமாக, அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“ராசு மாமா, எனக்குப் பரிசு தாரீகளா”

 

“இப்பம் எதுக்கு மலரு?”

 

“அதான் ஒங்க அம்மா ஒத்துக்கிட்டாகளே, அதுக்கு”

 

“ம்ம்ம், நான் டவுனுக்குப் போறப்ப, வாங்கித் தாரேன். ”

 

“டவுனுக்குப் போறப்பவா? டக்குனு வேனும்,ராசு மாமா”

 

“மலரு, நீங்க ஏதோ பரிசு வாங்கி வச்சிருக்கீக. அதேன் இப்படி பேசுறீங்க. செரியா? ”

 

“செரிதான் ராசு மாமா, கண்ண மூடுறீகளா, தரேன். ”

 

ராசு மாமா கண்களை மூடியதும், ராசாத்தி ‘ப்ச்சக் ப்ச்சக்’ என்று பஞ்சுமிட்டாய் முத்தங்களை, அவன் கன்னங்களில் பதித்து விட்டாள்.

 

“நீங்களும் இதுகணக்கா தாரீகளா ”

 

“இல்லே மலரு, கட்டிக்கிட்டு பொறவு தாரேன்”

 

“ராசு மாமா ”

 

“… ”

 

“தங்கராசு ”

 

“…. ”

 

” லே”

 

“….”

 

“எம்காம் அப்ளிக்கேஷன் வாங்கித் தாரீகளா? இல்லே பரிசு தாரீகளா?”

 

இத்தனை நாள் அவர்களைப் பின் தொடர்வதால், நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்! ராசு என்ன முடிவு எடுத்திருப்பான் என்று!

 

******

அஞ்சிதம் முறைப்படி செல்லத்துரை வீட்டிற்குச் சென்று, மலரைப் பெண் கேட்டார். இனிதே நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதியும் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட தேதியில் திருமணமும் நடந்தது.

 

திருமணத்திற்கு இசக்கி, கண்ணன் தம்பதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களைப் பார்த்த, செல்லத்துரைக்குச் சந்தோஷமாக இருந்தது. எனினும்  சிறு  நிம்மதி இல்லை.

 

இரு பெண்களும், அவர்களாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்லவா! அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையே, அவருக்கு அந்த நிம்மதியைத் தரும். காலப்போக்கில் அந்த நிம்மதி, கண்டிப்பாக கிட்டும்!

 

திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமண இரவும் வந்தது.

 

திருமணம் நிச்சயமானதைக் கொண்டாடவே, கன்னங்களால் மிட்டாய் உண்டவர்கள். கல்யாண இரவைக்  கதியின்றி விடுவார்களா?   இருந்தும் ‘நாளை, என்ற ஒன்று உண்டு’ என்ற வாசகத்தின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையில், நடுச்சாமத்திற்கு மேல்  நித்திரைக் கொண்டார்கள்.

 

*****

உச்சசாமத்தில், பொறவாசலில், கயிற்றுக்கட்டிலில் – இருகிழவிகளும்.

 

“என்னாட்டி பேச்சி, எல்லாருக்கும் கார்டு போட்டு முடிச்சாச்சா?”

 

“இல்லே முத்து, ஒன்னொரு காரடு மிச்சம் இருக்கு.”

 

“என்னாட்டி அது?”

 

“எண்டு காரடுதான்”

 

“போட்டுருவோமா”

 

******* the end card *******

 

 

 

error: Content is protected !!