Konjam vanjam kondenadi – 22

திருமண வைபவம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மேலகடையநல்லூரில் உள்ள கருங்குளத்தூர் அய்யனார் கோவில் அது.

அய்யனார் என்பவர் வழிவழியாய் நம்முடைய பண்டையகால தமிழர்கள் வணங்கும் கிராமத்து தெய்வம். காவலுக்கும் வீரத்திற்கும் பெயர் போனவர்.

அவரின் உயரமான கட்டுடல் தேகமும் கையில் இருக்கும் அதிகம்பிரமான அருவாவும் அவரின் வீரத்தை பறைசாற்ற, கூடவே அவரின் முறுக்கிய மீசை பார்ப்பவர்களை மிரளடித்தது.

ஷிவானியும் கூட அந்த சிலையை பார்த்து சற்று மிரட்சியடைந்திருந்தாள். அவள் முகத்தில் ஒருவித அச்சமும் படபடப்பும் படர்ந்திருந்தது. அவள் பயம் அய்யனார் சிலையை பார்த்து மட்டுமல்ல. அவள் எதிர்காலத்தை குறித்தும்தான்.

அப்போது மரகதவள்ளி… வேதாவின் கடைசி தங்கை

அவள் அருகில் நின்று, “நல்லா வேண்டிக்கோ புள்ள… நீ என்ன நினைக்கிறியோ அதை அப்படியே நடத்தி கொடுப்பாக” என்று சொல்ல,

அவளோ திகிலோடு நின்றிருந்தாள்.

நினைத்ததை மட்டுமா அவர் நடத்தி கொடுக்கிறார். அவள் நினைக்காததையும் சேர்த்தல்லவா நடத்தி கொடுக்கிறார்.

தான் தெரியாமல் சொன்ன ஒற்றை வார்த்தைக்காகவா தனக்கு இத்தனை பெரிய தண்டனை.

குருவிடம் அவள் சொல்லியிருந்தாள்.

‘எங்க டேட் யாரை கை காட்டி கட்டிக்க சொல்றாரோ அவங்களதான் நான் கட்டிப்பேன்… அதை மாத்த அந்த கருங்குளத்தூர் ஐயனாரனாலயும் முடியாது’

ஷிவானியின் வார்த்தை கருங்குளத்தூர் ஐயனார் காதிற்கு எட்டியிருக்குமோ?!

அவளை இப்படி அவர் சன்னதிக்கு அழைத்துவந்து அவள் விதியையே மாற்றிவிடுவானேன்.

ஆம். அவள் விதி இப்படி தலைக்குப்புற மாறும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

நம் வாழ்கை கூட தாயவிளையாட்டு போலதான். எப்போது தடைகளை உடைத்து அதிர்ஷ்டவசமாய் பழத்தை எட்டுவோம். எப்போது சரசரவென சரிந்து வெட்டுப்பட்டு உள்ளே போவோம் என்று நம்மால் கணிக்கவே முடியாது.

இங்கே ஷிவானிக்கு புரியாத விஷயம் என்னவெனில் தான் வெட்டு பட்டிருக்கிறோமா அல்லது பழத்தை பிடித்திருக்கிறோமா என்று.

இத்தனை குழப்பத்தோடு ஐயனாரிடம் அவள் என்ன வேண்ட? பேந்த பேந்த அவள் முழித்திருக்க மரகதம் அவள் கழுத்தில் மாலைகளை அணிவித்தார். ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாய்.

“எதுக்கு சித்தி இத்தனை மாலை?” ஷிவானி பாரம் தாங்காமல் கேட்க

மரகதம் அவள் தோளை தட்டி, “என்ன கேள்வி இதெல்லாம்… கல்யாணம்னா இத்தனை மாலை போடனும்” என்க, முன்னே பின்னே இதை போல் பாரம்பரியான திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தால் அவளுக்கு தெரிந்திருக்கும்.

ஏன்? ரஞ்சனின் திருமண வைபவத்திற்கு கூட அவள் கலந்து கொள்ளவில்யே.

ஷிவானிக்கு அந்த திருமண அலங்காரம் முற்றிலும் புதிதாய் இருந்தது. அவள் அணிந்திருந்த கூரை புடவை வேறு அவள் உயரத்திற்கு ஒரு சாண் தூக்கியிருந்தது. இடுப்பில் ஓட்டியானம், ஆரம், நெற்றி சுட்டி, வங்கி என்று எல்லாவகையான ஆபரணங்களும் அவள் மேனியை அலங்கரித்திருக்க,

அவள் சிறுங்கூந்தலில் நீட்டமாய் ஜடையெல்லாம் பிணைத்து பூவெல்லாம் சூடப்பட்டிருந்தது. அது வேறு அவளை பின்னோடு இழுத்து கொண்டிருக்க கழுத்திலிருந்த மாலைகள் அவளை நிமிர விடாமல் முன்னோடு தள்ளி கொண்டிருந்தது.

கனவிலும் கூட இவ்வாறெல்லாம் அவள் கற்பனை செய்திருக்கவில்லையே!

இப்படி அவள் திருமணம் திடுதிப்பென்று ஏற்பாடாகி நடக்குமென அவளாலேயே நம்பவே முடியவில்லை.

தான் காண்பது ஒருவேளை கனவோ? என்ற ஒரு கேள்வி.

மனதில் ஓர் அல்ப ஆசை. தீடீரென்று தான் விழித்து கொள்ள மாட்டோமா? இதெல்லாம் கனவென்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா?.

ஆனால் அதற்கு சாத்தியமில்லை. அது நிஜம். அப்பட்டமான நிஜம்.

அது அவள் மனதிற்கும் ஆழமாய் அழுத்தமாய் தெரிந்த நிஜம்.

அதுவும் அவள் முழு சம்மதத்தோடுதான் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பின் ஏன் அவள் ஆழ்மனம் இப்படியெல்லாம் ஆசைப்பட்டு தொலைக்கிறது.

சட்டென்று அவள் வாழ்க்கையில் நடைப்பெற போகும் அந்த அபரிமிதமான மாற்றத்தை ஏற்க முடியாமல் தவிக்கும் ஓர் இளமனதின் அவா அது.

முருகவேலும் தங்கமும் தன் பேத்தியின் நெற்றியில் திருநீற்றை பூசி ஆசிர்வதிக்க, ஷிவானியை மணமேடைக்கு அழைத்து சென்றார் மரகதம்.

வேதாவிற்கு விழியோரம் நீர் கசிந்து கொண்டிருந்தது. அதே நேரம் ஆரதீர அழுவதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை. வேலை தலைக்கு மேல் இருந்தது.

சுற்றி சுற்றி அவர் ஓடி கொண்டிருக்க அவளின் மூன்றாவது தங்கை அமிர்தம்தான் அவருக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார். அந்த திருமண வைபவத்தில் நெருங்கிய சொந்த பந்தத்தை தவிர்த்து பெரிதாய் யாரும் அழைக்கப்படவில்லை.

அதே நேரம் குருவின் இரண்டாவது தமக்கை கனகமும் ராகினியும் அங்கே இல்லையென்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். அது ஏனென்ற கேள்விக்கான பதிலை இப்போது யோசிக்க நமக்கு நேரமில்லை.

பரபரப்பாய் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்க, மங்கள ஓலியாய் நாதஸ்வரத்தோடு இயைந்து மேளதாளச்சத்தம் அந்த இடத்தையே தன் வசப்படுத்தி கொண்டிருந்தது.

குருவோ மாப்பிள்ளை கோலத்தில் மணமேடையில் வீற்றிருக்க, எப்போதும் அவனுக்கு இருக்கும் கம்பீரமும் மிடுக்கும் இன்று பன்மடங்கு பெருகியிருந்தது.

அதே நேரம் அவன் முகத்தில் சொல்லிலடங்கா பெருமிதமும் நிமிர்வாய் இருந்த விழிகளில் அத்தனை கர்வம். அவன் நினைத்தது நடக்க போகிறதே.

அப்போது சுப்பு அவன் காதோடு ஏதேதோ கிசுகிசுக்க,

“சத்த நேரம் சும்மா இருக்க மாட்டியால” என்று திரும்பி அவன் மீது எரிந்துவிழுந்தான்.

“மச்சானுக்கு இப்போ நம்ம பேசினால்லாம் பிடிக்காது சுப்பு” என்று சிரித்து கொண்டே குருவை கேலி செய்தவன் வேறுயாருமில்லை.

குருவின் கடைசி அக்கா மரகதவள்ளியின் கணவன் தயாளன். மற்ற மாமன்களை விட அவன் குருவிற்கு ரொம்பவும் நெருக்கம். தயாவிற்கும் குரு என்றால் ரொம்ப பிடித்தம்.

தயாளனுக்கு ஐந்து வயதில் ஓர் மகளும் இரண்டு வயதில் ஓர் மகனும் இருந்தனர். தன் மகனை கரத்தில் தாங்கிபிடித்தபடிதான் தயா குருவை எள்ளல் செய்ய,

“நீங்க வேற மாமா” என்று அவரை திரும்பி கெஞ்சலாய் பார்த்தான்.

குரு கூட உண்மையில் இந்த அவசர திருமணத்தை எதிர்பார்க்கவில்லை. அவனுக்குள்ளும் பதட்டம் இருக்கவே செய்தது.

இருந்தாலும் பெண்கள் போல ஆண்கள் அவற்றை எல்லாம் வெளிப்படையாக காட்டிவிட முடியாதே. முடிந்தளவு தன் மனதின் படபடப்பை தன்னக்குள்ளேயே மறைத்து கொண்டான்.

இந்த படபடப்போடு ஷிவானியை திருமண கோலத்தில் பார்க்க வேண்டுமென்ற பரிதவிப்பும் காத்திருப்பும் கூட இருந்தது.

அப்போது தயா குருவிடம், “சும்மா சொல்ல கூடாது மச்சான்… நீ மச்சக்காரன்… மலேசியாவில இருந்து வந்த புள்ளயே வளைச்சிப்போட்டுட்ட… பெரிய ஆள்தான்யா நீ” என்றவன் சொல்ல

குரு பதறி கொண்டு, “சும்மா இருங்க மாமா… அங்கன உட்கார்ந்திருக்கிற என் பெரிய மாமனுக்கும் மட்டும் நீங்க சொன்னது காதில விழுந்தது… வேற வினையே வேண்டாம்… கல்யாணத்தை நிறுத்திப்புட்டுதான் மறுவேலை பார்ப்பாக” என்றான்.

“அப்படின்னா நான் சகலபாடிக்கிட்ட போய் இரண்டொரு வார்த்தை பேசிப்புட்டு வர்றேன்”

“ஏன் மாமா… உங்களுக்கு என் மேல இம்புட்டு காண்டு?”

“மச்சானுக்கு மாமன் இந்த உதவி கூட செய்யலன்னா எப்புடி?”

“எங்க அக்கா இங்கனதான் எங்கேயோ இருந்தா” என்றவன் பார்வையாலேயே சுற்றுமுற்றும் தேட,

“ஏம்ல… நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலயா… அப்புறம் எதையாவது வேலையை என் தலையில கட்டிப்புடுவா” என்று தயா பயந்தவன் போல உரைக்க,

“அம்புட்டு பயமிருந்தா சரி” என்று சொல்ல இருவரும் கலகலவென சிரித்து கொண்டனர்.

அப்போது அவன் பார்வை தமக்கை வேதாவை பார்க்க அவர் பதட்டமாய் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.

குரு உடனடியாய் தன் நண்பனை அழைத்து அவன் காதோரம், “பெரிய அக்கா ஏதோ பதட்டமா இருக்காக… போய் என்னன்னு கேளுவ” என்று சுப்புவை அனுப்பி வைத்தான்.

அவனும் தன் நண்பன் சொன்னதற்கு ஏற்ப வேதாவை காண செல்ல, அவரோ உண்மையிலேயே பதட்டமாகதான் இருந்தார்.

அவர் ரஞ்சனை அணுகி, “நான் மெட்டி வாங்கவே மறந்துட்டேன் ரஞ்சன்… நீ போய் வாங்கிட்டு வர்றியா? மத்த சடங்கெல்லாம் முடிய ஒருமணி நேரமாவுது ஆகும்” என்று சொல்ல,

“சரிங்க மாமி” என்றவன் தன் தம்பி மோகனை பார்க்க,

“நாங்க போயிட்டு வந்திடுறோம் மாமி” என்றான் மோகனும்.

மோகன் மனதில் லேசாய் ஏமாற்றம் இருந்தாலும் ஷிவானியின் சொந்த மாமன் மகள் எனும் போது அவள் மீது பெருமளவில் வஞ்சமெல்லாம் அவனுக்கில்லை.

“தேங்க்ஸ் மோகன்” என்றவர் நெகிழ்ச்சியோடு சொல்ல,

நளினி அப்போது இடைபுகுந்து, “எதுக்கு என் பிள்ளைங்க போனும்… உன் சொந்தபந்தம் யாரையாச்சும் அனுப்பிவிடு… என்னை… என் தம்பியை… என் பிள்ளைங்கலதான் வேண்டாம்னு நீயும் உன் பொண்ணும் ஒதுக்கிட்டீங்கல” என்றார்.

“என்ன அண்ணி? இப்படி பேசிறீங்க… அவர்தான் முகத்தை தூக்கி வைச்சிட்டு உட்கார்ந்திருக்காருன்னா”

“பின்ன… அவன் பொண்ணு கல்யாணத்துக்கு அவன் சம்மதத்தையேதான் நீங்க கேட்கலேயே” என்று நளினி தன் இஷ்டத்துக்கு பேசி கொண்டிருக்க அப்போது ரஞ்சன் இடைபுகுந்து,

“சும்மா இருங்க ம்மா… எந்த நேரத்தில என்ன பேசனும்னு தெரியாம… நீங்க காசு கொடுங்க மாமி நான் போயிட்டு வர்றேன்” என்று சொல்லி தன் அம்மாவை அடக்கினான். இந்த காட்சியைதான் குரு பார்த்து சுப்புவை அனுப்பிவைத்தான்.

“என்ன க்கா பிரச்சனை? என்கிட்ட சொல்லுங்க” என்று வேதா பின்னோடு வந்து சுப்பு கேட்க,

அப்போது நளினி ரஞ்சனை முறைத்து
கடிந்து கொண்டிருந்தார்.

வேதா அவனிடம், “இல்ல மெட்டி வாங்க மறந்திட்டேன்” என்றவர் தயக்கமாய் சொல்ல,

“அவ்வளவுதானே நான் பார்த்துக்கிறேன்” என்றபடி விறுவிறுவென மணமேடைக்கு அவன் நகர்ந்தான்.

“தம்பி காசு” என்று வேதா அழைப்பை அவன் காதில் வாங்கி கொள்ளாமல், குருவிடம் அவன் விஷயத்தை சொல்லி முடித்தான்.

கீழே நின்றிருந்த தன் தமக்கை குரு சமிஞ்சையால்  அழைக்க,

அவர் தயக்கத்தோடு அவனை நெருங்க, “ஏன் க்கா?… எதுக்கு இம்புட்டு பதட்டம்?
ஒண்ணுக்கு நாலு கல்யாணம் பண்ணிருக்காங்க… அம்மைக்கு  தெரியாதா… என்ன வாங்கனும் என்ன செய்யனும்னு… எல்லாம் வாங்கியாச்சு” என்க,

“இல்ல குரு… இதெல்லாம் பொண்ணு வீட்லதான்” என்றவர் சொல்லி முடிக்கும் முன்னரே முந்தி கொண்டு அவரை முறைத்தவன்,

“என்ன பொண்ணு வீடு மாப்பிள்ளை வீடுன்னெல்லாம் பிரிச்சி பேசிறீக… என் அக்கா மவளுக்கு நான்தான் செய்யனும்… நான்தான் செய்வேன்… இத்தனை நாள்தான் என் உரிமை எதையும் செய்ய விடாம பண்ணிட்டீக… இனி அப்படியெல்லாம் முடியாது” என்றவன் கோபமாய் உரைக்க வேதா அவனை ஆச்சர்யமாய் பார்த்திருந்தார்.

குரு சற்று நிதானித்து,

“சரி சரி நீங்க முகத்தை துடைச்சுபுட்டு… அங்கிட்டு இங்கிட்டு அசையாம இங்கனேயே நில்லுங்க” என்றதும்

வேதா, “ஹ்ம்ம்” என்று பெருமித புன்னகையோடு தன் தம்பியை பார்த்து தலையசைத்தார். அவர் மனமோ ஷிவானி உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் என்று எண்ணி கொண்டது. அதில் ஒண்ணும் மாற்றுக்கருத்தே இல்லை.

அதே நேரம் ஷிவானியை மணமேடைக்கு மரகதம் அழைத்துவர அழகு பதுமையென நடந்து வந்தவளை குருவின் பார்வை மானசீகமாய் தொட்டு தழுவ தொடங்கியிருந்தது.

அவளையே பார்த்து கொண்டிருந்த அவன் விழிகளுக்கு வேறெதவும் தென்படவில்லை. எப்போது அவள் தன்னருகில் வந்து அமர்வாள் என எதிர்பார்ப்போடு அவன் காத்திருக்க, ஷிவானி அமரும் தருவாயில் மரகதத்தின் மகள் ஸ்வேதா அவர்கள் இடையில் வந்தமர்ந்து,

“நான்தான் என் மாமன் பக்கத்தில உட்காருவேன்” என்றாள்.

மரகதம் கோபத்தோடு தன் மகளை இழுக்க அவள் வரமாட்டான் என்று அடம்பிடித்தாள்.

“விடுக்கா” என்றவன் சொல்லி ஸ்வேதாவை தன்னருகில் இழுத்து அமர்த்தி கொள்ள, ஷிவானி பிராயத்தனப்பட்டு மனையில் அமர்ந்தாள்.

“இவ்வளவு நேரம் எங்கடி போன வாயாடி?” என்று குரு கேட்க,

“நான் உன் மேல கோபமா இருக்கேன்… போ” என்று முகத்தை கோபமாய் திருப்பி கொண்டாள்.

“ஏன்டி?”

“நீ இந்த அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறியாம்… அப்பா சொல்லுதாக… அப்போ என்னைய கட்டிக்கிட மாட்டியா?” என்றவள் தன் மழலை மொழியில் கேட்க அங்கிருந்த எல்லோரும் கலகலவென சிரித்தனர். பதட்டமும் கவலையாய் இருந்த ஷிவானியின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“உன்னைய கட்டிக்கிறன்டி… நீ நல்லா பெரியவளா வளர்ந்த பிறவு” என்றவன் சொல்லி அவளிடம் சமாதானம் பேச ,

அப்போது மரகதம் ஸ்வேதாவின் காதை திருகி, “விட்டா என் தம்பியை உன் கழுத்தில தாலி கட்ட சொல்லுவ போல இருக்கு… எழுந்து வாடி” என்க,

“இருக்கட்டும் க்கா” என்றான் குரு.

“இப்படி உட்கார்ந்தா நீ சிவானி கழுத்தில எப்படிறா தாலி கட்டுவ” என்று மரகதம் கேட்க,

“இப்படி உட்கார்ந்து கட்டுவோம்ல” என்று சொல்லி ஸ்வேதாவை மடியில் தூக்கி அமர்த்தி கொண்டான்.

ஷிவானிக்கு சிரிப்பு பொங்கி கொண்டு வர அவன் ஷிவானியை சமிஞ்சையால் அருகில் அமர சொல்ல அவளும் மெல்ல  நகர்ந்து அவனருகில் அமர,

அந்த நொடி குருவின் பார்வை இன்னும் நெருக்கமாய் அவளோடு உறவாடி கொண்டிருக்க மரகதம் அவன் கரத்தை கிள்ளிவிட்டாள்.

“ஆ அக்கா” என்றவன் தன் கரத்தை தேய்த்து கொண்டு நிமிர்ந்து தன் தமக்கை மரகதத்தை முறைக்க

அவள் கேலியான புன்னகையோடு தம்பியிடம் இறங்கி,

“நீ சிவானி மேல ரொம்ப கிறக்கமா இருக்கன்னு அம்மை சொன்ன போது நான் கூட நம்பலடா… ஆனா இப்போ நம்பிறேன்டா” என்று சொல்ல

குரு கடுப்பாய் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டான்.

இப்படியான கேலி கிண்டலுக்கு இடையில் ஷிவானியின் பார்வை அந்த இடத்தை அலசி ஆராய்ந்து தன் தந்தையை தேடி கொண்டிருந்தது.

அவள் முகம்பாவனையை கவனித்த வேதா, “என்ன வாணிம்மா?” என்று கேள்வி எழுப்ப,

“டேட் எங்க மீ?” என்று கேட்டாள்.

வேதாவும் சுற்றும்முற்றும் தேடலாய் பார்த்து, “எங்க போனாரு இந்த மனுஷன்?” என்று புலம்ப, ஷிவானியின் மனம் தன் தந்தையின் முகத்தை பார்க்க ஏங்கி கொண்டிருந்தது.

அவர் மனதை தான் ரொம்பவும் கஷ்டப்படுத்திவிட்டோமோ என அவள் தன்னைத்தானே நிந்தித்து கொள்ள ஆரம்பிக்க, அவள் விழியில் நீர் கோர்த்தது.

ஆனால் அத்தகைய இக்கட்டான நிலையில் இந்த முடிவை எடுப்பதை தவிர்த்து அவளுக்கு வேறுவழியும் இல்லை.

இப்படி ஒரு சூழ்நிலை அமையும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லையே.

எல்லாம் விதியின் வசம் நிகழ்ந்தா? இல்லை அந்த விதியும் குருவின் வசம் சாய்ந்துவிட்டதா?

யாம் அறியோம்.

error: Content is protected !!