Konjam vanjam kondenadi – 23(2)
Konjam vanjam kondenadi – 23(2)
ஷிவானி மட்டும் தன்னிடத்தில் இருந்து அசையவில்லை. அவளுக்கோ தன் தந்தை குருவை அப்படி முறைத்து கொண்டு நிற்பதை பார்க்க பதட்டமாய் இருந்தது.
என்ன நிகழ போகிறதோ என்று தவிப்பில் அவள் கிடக்க,
வெளியே எல்லோரும் குழுமி நின்றனர்.
சபரி தன் குரலையுயர்த்தி, “என் பொண்ணை கூட்டிட்டு நான் கிளம்பனும்… உங்க யார்கிட்டயும் பேச எனக்கு எதுவுமில்லை” என்று அலட்சியமாய் முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டு உரைத்தார்.
முருகவேல் நிதானித்து, “இப்படி ஓட்டுதல் இல்லாம பேசனா எப்படி? ஆத்தா படுத்த படுக்கையா ஒரு விஷயத்தை கேட்குதாக… அதை செய்ய முடியாதான்னு எப்படி சொல்ல… நீங்க மனசு வைச்சிங்கன்னு நம்ம ஷிவானியை” என்றவர் இழுத்தபடி சொல்ல,
“எது… என் பொண்ணை உங்க மகனுக்கு நான் கட்டி கொடுக்கனுமா? நான் ஒத்துக்க மாட்டேன்… செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசமில்ல” என்றவர் சொல்ல முருகவேலுக்கு கோபமேற,
“குருவை அப்படி குறைச்சி எடைப்போட்டுடாதீக… இந்த மூணு வருசத்துல இந்த நெல்லை சீமையே மெச்சிற அளவுக்கு மெஸ்ஸை தூக்கி நிறுத்திருக்கான்… திருநெல்வேலில நடக்கிற கல்யாணத்துக்கு குரு சமையல் ஆர்டரை கேட்டு காத்துகிடக்காக… நீங்க வேணா வெளியே போய் விசாரிச்சி பாருக… நான் சொன்னது உண்மையான்னு…
ஒரு விஷயம் சொல்லுதேன்… தப்பா எடுத்துக்காதீங்க… நீங்க எம்ம மவளை கட்டிக்கிடும் போது உங்களுக்கு சம்பாத்யமே இல்ல… அப்போ நீங்க உங்க மாமன் தயவிலதானே இருந்தீங்க” என்றவர் சொன்ன மறுகணம் சபரி வெலவெலத்து போனார்.
கனலேறிய விழிகளோடு தன் மாமனாரை நோக்கியவர்,
“ஆமா அப்போ நான் சம்பாத்யம் இல்லாத வெட்டி பையன்தான்.. ஆனா இன்னைக்கு உங்க மவளையும் பேத்தியையும் எப்படி வைச்சிருக்கேன்னு கேட்டு பாருங்க” என்று கர்வத்தோடு சொல்லி தன் மனைவியை சுட்டிக்காட்டினார்.
“நான் உங்களை குறைச்சி எல்லாம் சொல்லல தம்பி… எனக்கு தெரியும் என் மவளை நீங்க நல்லா பார்த்துக்கிடுதீங்க… அதே போல என் மவனும் சிவானியை நல்லா பார்த்துகிடுவான் தம்பி” என்று முருகவேல் சபரியிடம் இறங்கி பேச அவரும் சற்று அமைதியானார்.
“இத பாருங்க மாமா… நீங்க உங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுத்தீங்கன்னா… அவளுக்கு என் மேல விருப்பம் இருந்துச்சு… ஆனா என் பொண்ணுக்கு அப்படி எல்லாம் எதுவுமில்ல… அவ வளர்ந்த விதம் படிச்சி விதம் வாழ்ந்த விதம் வேற… அவளால எல்லாம் உங்க பிள்ளையை கட்டிக்கிட்டு இங்க வாழ முடியாது. ஏதோ அவங்க அம்மாட்சிக்கு உடம்பு முடியலன்னு அவசரப்பட்டு சத்தியம் பண்ணி கொடுத்திட்டா… ஆனா மனசார அவளுக்கு இதுல எல்லாம் சுத்தமா விருப்பம் இருக்காது”
சபரி தெளிவாய் சொல்ல முருகவேலுக்கு இதற்கு என்ன பதிலுரைப்பதென்றே தெரியவில்லை.
அப்போது குரு தன் மௌனத்தை கலைத்து, “ஏன் மாமோய்? உம்மை மவ என்னை கட்டிக்கிட மனசார விருப்பம்னு சொல்லிட்டா… நீங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறீகளா?!” என்றவன் அழுத்தமாய் கேட்க,
சபரி தடுமாற்றத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார்.
“என்ன மாமோய்? பதில் பேச மாட்டிறீக… உங்க பொண்ணு விருப்பப்பட்டா நீங்க இந்த கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தி வைக்கிறீகளான்னு கேட்டேன்” மீண்டும் அழுத்தமாய் அவன் வினவ
“அவ எப்படி சம்மதிப்பா… அதெல்லாம் அவ சம்மதிக்க மாட்டா” என்றார் சபரி.
“அதை நீங்களே சொன்னா எப்படி? ஷிவானியை கூப்பிட்டு கேளுங்க”
சில நொடி மௌனத்திற்கு பின் சபரி தன் மகள் மீதுள்ள நம்பிக்கையில் சரியென்று சம்மதிக்க,
வேதா ஷிவானியை வெளியே அழைத்துவந்தார்.
எல்லோரின் பார்வையும் அவளையே சூழ்ந்து நிற்க, சபரி மட்டுமே பேசினார்.
“ஏன் வாணிம்மா? உனக்கு இந்த கல்யாணத்தில மனசார விருப்பமா? குருவை பிடிச்சிதான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா… இல்ல உங்க அம்மாட்சி கேட்டாங்கன்னு சம்மதிச்சியா… உண்மையை சொல்லனும்” என்றவர் கேட்க ஷிவானி பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தாள்.
அவள் குழப்பமான மனநிலையில் மௌனமாக நிற்க, “உன் மனசில பட்டதை அப்படியே பேசு வாணிம்மா… யாரை பத்தியும் யோசிக்காத” என்று வேதா சொல்ல,
ஷிவானியின் முகம் இருளடர்ந்து போனது. அவள் தயக்கமுற சுற்றி சுற்றி பார்த்தவள்
தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க துணிச்சலின்றி,
“எனக்கு குரு மாம்ஸ்ஸை கட்டிக்கிறதுல விருப்பம்தான்… வெறும் அம்மாட்சிக்காக அந்த சத்தியத்தை பண்ணல… எனக்குமே மாமவை பிடிச்சிருக்கு” என்று பளிச்சென்று தன் மனோஎண்ணத்தை வெளிப்படுத்திவிட்டாள். குருவின் முகத்தில் அந்த நொடி ஓர் கர்வப்புன்னகை!
சபரியோ மகளின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிட்டார்.
எல்லோர் முன்னிலையிலும் அவசரப்பட்டு ஒர் வாக்குறுதியை கொடுத்துவிட்டோமோ என்று அவர் மனம் அவரையே சாடியது.
யாரை குறை கூறுவது? தன் மகளின் விருப்பத்திற்கு எதிராய் இதுவரை அவர் ஒரு வார்த்தை பேசியதில்லை. அவள் எதையாவது கேட்டுவிட்டால் அதற்கு மறுபரிசீலனையே கிடையாது. அப்படி இருக்க எப்படி மகளை எதிர்த்து நிற்பது.
டன் டனாய் உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் அதை மகளிடம் காண்பிக்கும் தைரியம்தான் அவரிடம் இல்லை. வார்த்தைகளால் அவர் அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனினும் நடந்தேறிய ஏற்பாடுகள் எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் ஒதுங்கி நின்றார்.
வள்ளியம்மையின் உடல்நிலையை சோதித்த மருத்துவர் கூட நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை. அதன் காரணத்தினால் அந்த வாரத்திலேயே வந்த முகூர்த்த நாளில் எல்லா ஏற்பாடுகளையும் அடித்து பிடித்து செய்துமுடித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டனர்.
கனகாவும் ராகினியும் வீட்டிலிருந்து வள்ளியம்மையை பார்த்து கொண்ட காரணத்தால் அவர்களால் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்கு கலந்து கொள்ளும் விருப்பமும் இல்லை என்பதுதான் உண்மை.
சபரிக்கு இந்த நொடி வரை அந்த திருமணத்தில் உடன்பாடில்லை. முகத்தை தூக்கி வைத்து கொண்டே பாத பூஜை சடங்கில் கலந்து கொண்டார். பாத பூஜை செய்யும் மகளை அவர் ஒரு முறை கூட குனிந்து பார்க்கவில்லை.
அப்படி ஒரேயொருமுறை குனிந்து பார்த்திருந்தால் அவருக்கு தெரிந்திருக்கும். ஷிவானி அவர் பாதத்தை கழுவியது தண்ணீரில் அல்ல. அவளின் கண்ணீரில் என்று.
எந்நிலையிலும் அவள் தந்தை மீது கொண்ட பாசத்தை அவள் விட்டு கொடுக்க எண்ணியதில்லை. சூழ்நிலை அவளை அப்படி பேச வைத்துவிட்டது.
திருமண சடங்குகள் எல்லாம் முடிவுற ஒருவழியாய் தாலிகட்டும் சம்பிரதாயமும் முடிவடைந்தது. குரு தாலி கட்டிய நொடி ஷிவானியின் மனம் தன் எதிர்காலத்தை எண்ணி அச்சம் கண்டது என்னவோ உண்மை!
இதுவரை அவள் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இனி அவள் வாழ போகும் வாழ்க்கை வேறு. ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் தவிர்க்க முடியாமல் கடந்து வரும் சூழ்நிலைதான் எனினும் ஷிவானிக்கு அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்க போகிறது.
அதுவும் அவசரம் அவசரமென திருமணத்திற்கான எந்தவித முன்அறிவிப்பே இல்லாமல் நிகழ்ந்ததினால் உள்ளூர அவள் மனம் ஒருவித திகிலுணர்வை பற்றி கொண்டிருந்தது.
இதெல்லாம் ஒரு புறமிருக்க,
‘ரோம் நகரமே தீபிடித்து எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்’ அந்த கதையாய் இருந்தது சுப்புவின் செய்கை.
அவன் மட்டும் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.
ஐஸ்ஸின் நீண்ட நெடிய கூந்தலை பார்த்ததில் இருந்து அவனுக்கு உருத்தி கொண்டே இருக்க யாருமில்லாத நேரமாய் பார்த்து அவள் சடையை இழுத்துவிட்டான்.
சோகமே உருவமாய் தன் மாமனின் திருமணத்தை பார்த்து கண்கலங்கி நின்றவள், “ஆ” என்று அலறி துடித்து திரும்பி
சுப்புவை பார்த்து எரிச்சலானாள்
“முண்டம்… அறவில்ல… எதுக்கு ஏன் முடியை பிடிச்சி இழுத்த?!” என்று அவனை சரசரமாரியாய் திட்டினாள் ஐஸ்.
“அப்படிதான் இழுப்பேன்… நீ மட்டும் என்னைய உட்கார வைச்சி அந்த கேவளமான சாப்பாடை அள்ளி அள்ளி போட்டு என்னைய கொலையா கொல்லல” என்று அவன் கேட்ட நொடி அவள் தடுமாறினாள்.
“அது தெரியாம” பதிலுரைக்க முடியாமல் திணறியவள் அங்கிருந்து சென்றுவிட முனைய அவள் கரத்தை பிடித்து நிறுத்தியவன்,
“எங்கல ஓட பார்க்கிற… உன்னைய அம்புட்டு சீக்கிரம் விட்டுடுவேனா” என்றான்.
“அய்யோ தெரியாம பண்ணிபுட்டேன்…விட்டுடு” என்றவள் கெஞ்ச,
” என்னைய கட்டிக்கிறேன் சொல்லு… விட்டுடுறேன்…”
“உன்னைய… நான்… அதெல்லாம் இந்த ஸென்மத்தில நடக்காதுவே”
“அதான் உன் மாமன் அந்த மலேசியா புள்ளய கட்டிக்கிடுச்சுல… அப்புறம் என்னல… நீ இந்த மாமனை கட்டிக்கிடு” என்க,
அவனை ஏற இறங்க பார்த்தவள்,
“சரி கட்டிக்கிடுதேன்… என் கையை விடு” என்றதும் அவள் கரத்தை விட்டவன் ஆசையாய் அவளை பார்த்து,
“நிஜமா சொல்லிறியா புள்ள?” என்று கேட்டான்.
“சத்தியமா கட்டிக்கிடுதேன்… என் மாமன் மாறி ஒசரமா வளர்ந்து அவகள மாறி மீசையெல்லாம் வைச்சுக்கிட்டு வாரூம்… கட்டிக்கிடுதேன்” என்று சொல்லி எள்ளிநகைத்தவள் ஓரே ஓட்டமாய் ஓடி அவனிடமிருந்து தப்பி கொள்ள சுப்புவோ ஏமாற்றத்தோடு,
‘சரியான கோட்டிக்காரியா இருப்பா போல… ஓசரமா வளருன்னு சொல்லிட்டு போறா… இத்தனை வயசுக்கப்புறம் எங்கிட்டு வளர… இதுல மீசையை வேற வளர்த்துக்கிடனுமா… இவளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பேசாம நான் தாடியை வளர்த்துக்கிட்டு… சந்நியாசம் போயிடலாம்’ என்று விபரீதமான சங்கல்பத்தை மனதில் எடுத்து கொண்டான்.
திருமணம் முடிந்து எல்லோரும் கோவிலிலிருந்த புறப்பட தயார் நிலையில் இருக்க, ஒரு பெரிய வேனும் அதோடு பெரிய காரும் புறப்பட்டது.
குரு கனகத்திடம் தன் பாட்டியின் நலன் குறித்து விசாரிக்க, ஷிவானி கவலை தோய்ந்த முகத்தோடு, “அம்மாட்சி நல்லா இருக்காங்கல” என்று கேட்டாள்.
“ஏன் நல்லலாம… அவக நாட்டு கட்டை… இன்னும் நூறு வயசு வரைக்கும் நல்லா ஆயிருப்பாக… அதுவும் நமக்கு பிறக்க போற பிள்ளைகள கொஞ்சாம அம்புட்டு சீக்கிரம் போயிடுவாகளா இல்ல போகத்தான் நான் விட்டிருவானே” என்று வீரதீரமாய் சொன்னவனை ஏறஇறங்க ஆச்சர்யமாய் பார்த்தாள்.
நேற்றுவரை பாட்டியின் உடல்நலம் குறித்து அவன் வருத்தப்பட்டு கொண்டிருந்தவன் இன்று இத்தனை நம்பிக்கையாய் பேசுகிறானா?
சந்தேகமாய் அவள் பார்வை அவன் மீது பாய,
“என்னல பார்க்குத?”
“இல்ல… இப்ப சொன்ன மாறி நீங்க முன்னாடி சொல்லயே… அதான் ஏன்னு”
“இப்ப என்ன உனக்கு? என் அப்பத்தா நல்லா இருக்க கூடாதுங்கிறியா?!” இறுகிய பார்வையோடு அவன் கேட்க,
“சே! நான் அப்படியெல்லாம் சொல்லல” என்றாள்.
“அப்புறம் வேறெப்படி சொல்லுதீக?” என்று சொல்லி கல்மிஷமாய் சிரித்தபடி அவன் கேட்க, அந்த பார்வை அவளை நாணப்படுத்தியது.
“நான் எப்படியும் சொல்லல… ப்ளீஸ் என்னை விட்டுவிடுங்க” என்க,
“விட்டுடுவா… அதெல்லாம் விட முடியாது… இந்த குரு பிடிச்ச பிடி உடும்பு பிடியாக்கும்” என்று சொல்லி அவள் தோளை சட்டென இறுக்க அவள் அச்சப்பட்டு முகத்தை சுளித்தாள்.
“நீ நடத்துல… நல்லா நடத்து… என்ன நடந்தாலும் இவன் மட்டும் காரியத்தில கண்ணாய் இருக்காயான்” என்று தயா சொல்லிக் கொண்டே வேனில் ஏறி போக குரு அவள் மீதிருந்த. தன் கரத்தை பட்டென விடுவித்துவிட்டான்.
ஷிவானி அவன் அருகில் நிற்க முடியாமல் விறுவிறுவென காரில் ஏற போக அவள் கரத்தை பிடித்து நிறுத்தியவன்,
“நம்ம வேன்ல போகலாம்” என்றான்.
ஷிவானியும் அவன் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்காமல் வேனில் ஏறப் போக,
அப்போது சபரி வேதாவிடம்,
“அவங்கள வந்து காரில ஏற சொல்லு” என்றார்.
வேதாவும் அவர்களை அணுகி,”நீங்க வாங்க… கார்ல போயிடலாம்” என்று நிறுத்தி அழைக்க,
“இல்ல நாங்க வேனில வரோம்” என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் அவன் பதிலுரை வழங்க,
“நம்ம கார்ல” என்று ஷிவானி சொல்லும் போதே குருவின் கரம் அவள் கரத்தை அழுத்தியது.
அவள் சட்டென்று மௌனமாகிட, “நாங்க வேனில வந்திரோம் க்கா.. நீங்க போங்க” என்க, அவன் வீம்புக்கென்றாலும் செய்கிறான் என்பது புரிந்தது வேதாவிற்கு.
“இல்ல கல்யாண பொண்ணும் மாப்பிள்ளையும்… நீங்க கார்ல வந்தாதான்” என்று வேதா மீண்டும் சொல்ல,
“எதில போனா என்ன ? வீடு போய் சேரனும் அம்புட்டுதானே” என்றவன் ஷிவானியை கண்ணசைத்து வேனில் ஏற சொன்னான். அவள் வேண்டா வெறுப்பாய் ஏற அவனும் பின்னோடு ஏறினான்.
சபரி தாங்க முடியாத கோபத்தோடு, “என்னவா அவனுக்கு?” என்று கேட்க வேதா மௌனமாய் நின்றார். அங்கே நடந்தவற்றையும் அவன் பேசியவற்றையும் அவர் காதிலும்தானே விழுந்தது.
“உன் தம்பிக்கு இவ்வளவு வீம்பும் திமிரும் ஆகாது” என்றவர் புலம்பி கொண்டே காரில் வர,
‘இவருக்கு மட்டும் கொஞ்சமா இருக்காக்கும்’ என்று வாய்க்குள் முனகி கொண்டார் வேதா.
அதே நேரம் ஷிவானியை எல்லோரும் பின் இருக்கையில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொள்ள சொல்லி பணிக்க,
அதன் சூட்சமம் என்னவென்று பாவம் அவளுக்கு புரியாதே.
குரு வேண்டுமென்றே அவளை நெருக்கி அமர, “தள்ளி உட்காருங்க” என்று முகத்தை வெறுப்பாய் காட்டினாள்.
அவன் மீண்டும் அவளை இன்னும் இடித்து அமர அவள் கடுப்பாகி, “அய்யோ அந்த பக்கம்” என்றாள்.
“அப்படி மாமனுக்கு புரியிற மாறி சொல்றது” என்று சற்று விலகியவன் அவள் முகத்தை கிறக்கமாய் பார்த்திருக்க அவள் வெளியே ஜன்னலின் வழியே பார்த்து கொண்டிருந்தாள்.
“இங்கன என் பக்கம் கொஞ்சம் திரும்பிறது” என்றவன் ஏக்கமாய் கேட்க,
“ஏன் கார்ல போக வேணாம்னு சொன்னிங்க?” அவன் முகம் பாராமலே வினவினாள்.
“கார்ல போனா… இம்புட்டு நெருக்கமா உம்மை பக்கத்துல உட்கார்ந்துட்டு வர முடியுமா… அக்காவும் உன் சிடுமூஞ்சி அப்பாரும் என்னை பத்தி என்ன நினைப்பாக?” என்றவன் சொன்ன மறுகணம் அவள் பட்டென முகத்தை கோபமாய் திருப்பி,
“ஹெலோ யாரு சிடுமூஞ்சி?!” என்று முறைத்தாள்.
“உன் அப்பாருதான் வேற யாரு?” என்றவன் எகத்தாளமாய் சொல்ல,
“மைன்ட் யுவர் வார்ட்ஸ… எனக்கு டேட் பத்தி பேசினா ரொம்ப கோபம் வரும்” என்று மூச்சிறைக்க முறைத்தாள்.
“நீ கோபப்பட்டாதான் புள்ள ரொம்ப அழகா இருக்க… கருப்பு திராட்சை மாதிரி உருட்டிற உன் கண்ணு.. மிளகாய் கணக்கா சிவக்கிற உன் மூக்கு… உன் ஆரெஞ்சி பழ உதடு” என்றவன் ஹஸ்கி குரலில் சொல்ல அவள் பட்டென காதை மூடி கொண்டாள்.
“ப்ளீஸ் மாம்ஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க” என்க,
அவன் சிரித்து கொண்டே மௌனமானான். ஆனால் அவள் மீதான பார்வையை மட்டும் ஒரு நொடி கூட அவன் அகற்றும் எண்ணமேயில்லை.
அந்த பார்வை அவளுக்கு உள்ளூர குளிர் பரப்ப, வயிற்றின் அடி ஆழத்தில் ஏதோ உருண்டது.
காதலென்ற உணர்வுக்கே அவள் வெகு புதிது. ஆனால் அவனோ அடுத்த அடுதத படிநிலைக்கு அதிவேகமாய் முன்னேற அவளுக்குள் பதட்டமும் தவிப்பும் பரவ தொடங்கியிருந்தது.