Konjam vanjam kondenadi – 25

மகளை அறைக்கு அனுப்பிவிட்டு வேதா படபடப்போடு அமர்ந்திருக்க மரகதம் அவரை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.

“விடுங்க க்கா… இனி எல்லாம் குருவோட பாடு”  என்க,

“முடியல மரகதம்… என் முதல் ராத்திரிக்கு கூட நான் இவ்வளவு பயப்படல… ஆனா இவ என்ன பண்ணுவாளோன்னு நினைச்சாலே பயமாயிருக்கு… அதுவும் கடைசியா என்னைய பார்த்து ஒரு கேள்வி கேட்டா பாரு” என்று வேதா பதட்டம் நீங்காமலே சொல்ல மரகதம் குழப்பமானாள்.

“அப்படி என்னத்த கேட்டா?”

“புடவை கழன்டுக்காதுல… டைட்டா பின் பண்ணியான்னு கேட்டுட்டு போறா மரகதம்” என்றவர் தவிப்பின் உச்சத்தில் சொல்ல மரகதம் நிறுத்தாமல் குலுங்கி குலுங்கி சிரித்தாள். அவள் கண்ணில் நீர் வருமளவுக்கு சிரித்து முடிக்க,

“சும்மா இரு மரகதம்… நீ வேற… என் கஷ்டம் புரியாம” அலுத்து கொண்டார் வேதா.

“அது சரி… சிவானி ஏன் இம்புட்டு வெகுளியா இருக்காவ?”

“எல்லா அவங்க அப்பாவை சொல்லனும்… அவளை குழந்தை மாறி ட்ரீட் பண்ணி ட்ரீட் பண்ணி அவளுக்கு தான் வளர்ந்துட்டோம்ங்கிற நினைப்பே இல்ல… சின்ன புள்ள மாறிதான் பேசிக்கிட்டு சுத்திட்டு இருப்பா… ஆனா இப்ப அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நினைக்கும் போது…” பேசிக் கொண்டிருக்கும் போதே வேதா குரல் அமுங்கி தொண்டை அடைத்தது.

மகளின் வளர்ச்சியில் தாய் எந்தளவுக்கு பூரிப்படைகிறாளோ அதே நேரம் அவள்  தன் கைப்பிடியை விட்டு நழுவுகிறாளே என்று வலியும் கூடவே செய்கிறது.

இனி ஷிவானிக்கும் தனக்குமான உறவில் ஓர் இடைவெளி வந்துவிடுமோ என மனம் தவிப்புற மகளை எண்ணி அவர் கண்ணீர்  வடித்து கொண்டிருந்தார்.

மரகதம் அவர் தோளை தொட்டு,

“அழாதீங்க க்கா” என்று அவரை தேற்றி கொண்டிருந்தார். 

அப்போது குருவின் குரல் சத்தமாய், “ம்ம்ம்ம்மா” என்று அழைக்க,

வேதாவிற்கு அந்த நொடியே அழுகை நின்று அதிர்ச்சி உண்டானது.

மரகதத்தை படபடப்போடு பார்த்தவர்,

“ஏன் குரு இப்படி கத்திறான்… என்னாச்சு தெரியிலயே?” என்று கேட்டபடி எழுந்து அறை நோக்கி விரைந்தார்.

ஷிவானி படுக்கையில் மூர்ச்சையாகி கிடக்க குரு தவிப்போடு தன் அக்காவை பார்த்து,

“என்னன்னு தெரியல க்கா… மயங்கி விழுந்திட்டாவ” என்று அவன் சொல்லும் போதே அறைக்குள் எல்லோரும் நுழைந்தனர்.

தங்கம் கோபமாய் மகனை பார்த்து, “என்னம்ல ஆச்சு?” என்று கேட்டவர் அடுத்த நொடி,

“புள்ளைய மிரட்டினிங்களா?” என்று குருவை கேள்வி எழுப்ப,

“அய்யோ ம்மா… நான் எதுவும் சொல்லல… அவளேதான் மயங்கி விழுந்திட்டாக” என்று பதட்டத்தோடு தெரிவிக்க

அப்போது முருகவேலும் அவனிடம்,

“அதெப்படில புள்ள தானே மயங்கி விழும்” என்று முறைப்போடு வினவ இந்த கேள்விக்கான பதில்தான் அவனுக்கே தெரியவில்லை.

வேதா அப்போது ஷிவானியின் முகத்தில் தண்ணிர் தெளித்து முகத்தை துடைக்க அவளோ மயக்கத்திலேயே கிடந்தாள்.

இந்த விஷயத்தை தாமதமாய் தெரிந்து கொண்ட சபரி பதறி துடித்து மகளை பார்க்க வந்தவர்,

“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா?” என்று வேதாவை எல்லோர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார்.

பின்னர் மகளின் நிலையை பார்த்து,

“நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்” என்றவர் அவசரமாய் வெளியே ஓட,

வேதா கணவனை தடுக்க யத்தனித்தார்.

அவர் அதை காதில் கூட வாங்காமல் சென்றுவிட அவர் பின்னோடு வந்து குரு,

“மாமா நில்லுங்க” என்றழைக்கவும் திரும்பியவர் சுட்டெரிப்பது போல் ஓர் உஷ்ண பார்வையை அவன் மீது வீசினார்.

என்னவோ அவள் மயங்கி விழுந்ததிற்கு அவன்தான்  காரணம் என்பது போல.

“நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்… நீங்க உள்ளர போங்க” என்று குரு சொல்ல அவனை மேலும் வெறுப்பாய் பார்த்துவிட்டு அவர் உள்ளே சென்றுவிட அவன் விரைவாய் மருத்தவரை அழைத்து வந்தான்.

அவர் ஷிவானியை சோதித்துவிட்டு, “நத்திங்… ஜஸ்ட் ஆங்ஸைட்டீல வந்த மயக்கம்” என்க,

எல்லோரும் நிம்மதி பெருமூச்சொன்றை வெளிவிட குருவிற்குதான் கோபம் கோபமாய் வந்தது.

மருத்துவரை அவன் இறக்கிவிட செல்ல அவரும் தன் பங்குக்கு ஏகபோகமாய் அவனுக்கு அறிவுரை வழங்க,

வீட்டிற்கு சென்றால் அங்கே தங்கமோ தலையணையை அவன் கையில் கொடுத்து,

“புள்ள ரொம்ப பயந்திருக்காவ… நீ இன்னைக்கு தயா மாமா கூட மாடில படுத்துக்க குரு” என்று தயக்கமாய் உரைக்க,

அவனுக்கு மேலும் கடுப்பேறியது.

உச்சபட்ச எரிச்சலில் இருந்தான் அவன். அவள் தன் எதிர்பார்ப்பையும் ஆசையையும் உடைத்தது கூட  பரவாயில்லை. ஆனால் அவள் எல்லோரின் முன்னிலையுய் தன்னை ஒரு குற்றவாளி அளவுக்கு நிறுத்திவிட்டாலே என்றுதான் அவனுக்கு வருத்தம். 

தாங்க முடியாத எரிச்சலோடு மாடியில் விட்டத்தை பார்த்து அவன் படுத்திருக்க,

“சட்டி சுட்டதடா கை விட்டதடா”

என்று தயாவின் கைப்பேசியில் ஓலித்த பாடல் அவனை மேலும் கடுப்பேத்த,

“ஏன்? ஏன் உங்களுக்கு இந்த கொலைவேறி? பாட்டை ஆஃப் பண்ணுங்க” என்றான்.

“மனசு கஷ்டமா இருக்குல… கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சுதே”

“உங்களை நான் பழமொழி கேட்டேன்… ஏன் மாமா என்னைய போட்டு படுத்திறீக? கம்முன்னு படுத்துகிடுங்க… நான் செம காண்டல இருக்கேன்” என்று இறுகிய பார்வையோடு அவன் சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொள்ள,

“குரு எனக்கு ஒரு சந்தேகம்ல” என்றான் தயா.

“என்ன சந்தேகம்?”

“என்னல பண்ண அந்த புள்ளையா?  அதுவும் மயங்கி விழறளவுக்கு”

இந்த கேள்வியை கேட்ட நொடி சடாரென எழுந்து அமர்ந்தவன் தலையில் அடித்து கொள்ள,

“என்ன மச்சான்? என்கிட்ட சொல்ல கூடாதாம்ல” என்றவன் திரும்பவும் இறங்கிய தொனியில் கேட்க,

“அய்யோ மாமா… நான் அவளை எதுவும் பண்ணல” என்று எரிச்சலோடு தெரிவிக்க,

“நிஜமாவா சொல்லுத” சந்தேகம் தீராமல் கேட்டான் தயா.

” உம்ம மேல சத்தியமா சொல்லுதேன்… ” என்க,

“ஏய் ? நான் உன் அக்கா வூட்டுக்கார்ன்ல” என்று தயா பதறினான்.

“நீங்களும் எல்லோரையும் போல என்னைய கடுப்பேத்தாதீக… நான் அவளை எதுவும் பண்ணல… அவ உள்ளே வந்தா… என்னைய பார்த்தா… பேந்த பேந்த முழிச்சவ பிறவு அப்படியே மயங்கி சரிஞ்சிப்புட்டா… இதுல நான்தான்  ஏதோ பண்ண மாறி எங்க அம்மை என்னை திட்டுது… ஐயன் முறைக்காக… சபரி மாமோய் என்னடான்னா

அவக பொண்ணை நான்தான் என்னவோ பண்ணிப்புட்டேன்னு வில்லன் ரேஞ்சுக்கு என்னைய பார்க்காக” புலம்பி தீர்த்தான் குரு.

தயா யோசனைகுறியோடு, “அப்போ உன்னைய பார்த்ததும் மயங்கி விழுந்திட்டாகளோ?!” என்றவன் கேட்க,

“ஆமா மாமா” சலிப்போடு உரைத்தான் குரு.

“இந்த அழகில மயங்கி விழறதுன்னு சொல்வாகளே… அப்படி ஏதாச்சும் இருக்குமோ?!” கேலியான புன்னகையோடு கேட்க,

“வேணா மாமா” குரு கடுப்படித்தான்.

“இல்ல மச்சான்… அப்படி இருக்குமோன்னு” தயா இழுக்க குரு தாங்க முடியாமல்,

“யோவ் மாமோய்… கம்மனு படுத்திரு சொல்லிப்புட்டேன்” என்று சொல்லி தலையணையில் அப்படியே சரிந்து காதை மூடி கொண்டான்.

“ஏம்ல உனக்கு எப்படில இம்புட்டு களேபரத்திலயும் தூக்கம் வருது”

“நான் தூங்க போறேன்னு உம்மகிட்ட சொன்னேனா” அவன் அழமாட்டாத குறையாக உரைக்க,

“அதானே… எனக்கு கல்யாணமாகி ஆறு வருசமாச்சுது… இப்பவும் உங்க அக்கா இல்லாம எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது… உனக்கு எப்படிம்ல” என்று சொல்ல குரு அவரை அதிர்ச்சியாய் பார்த்து,

“இப்படி நீங்க என்னைய பேசியே சாகடிக்கிறதுக்கு பதிலா… என் தலையில பெரிய கல்லா தூக்கி போட்டுடுங்க மாமா… நான் நிம்மதியா போய் சேர்ந்துடுதேன்” என்று கடுப்பின் உச்சத்தில் உரைக்க,

தயா பதறினான்.

“ஏம்ல… கல்யாணம் ஆனா முதல் நாளே இப்படி அபசகுனமா பேசுத”

“பின்ன… என்னைய போட்டு எல்லோரும் இப்படி கடுப்பேத்தினா”

“அதுக்காக… சிவானி புள்ள பாவம்ல… நீயும் அவளும் ரொம்ப வருஷமா சேர்ந்து சந்தோஷமா வாழனும்ல” அழுத்தமாக தயா உரைக்க,

“ஆமா ஆமா… சந்தோஷமா வாழ்ந்திட்டாலும்… முதல் நாளே என்னைய எல்லார் வாயிலயும் விழ வைச்சிட்டாக… அவளா மாமா பாவம்.. அவளை கட்டினம்ல… நான்தான் பாவம்” என்று குரு சுயபச்சாதாபம் கொண்டு பேசியவனுக்கு உண்மையிலேயே ஷிவானி மீது அத்தனை கடுப்பிருந்தது.

அது அவன் பேச்சில் நன்றாய் தெரிய,

“விடுல… சின்ன புள்ள… பயந்திட்டிருக்காவ” என்று ஷிவானிக்காக பேசினான் தயா. ஆனால் குருவின் மனம் மாறவில்லை.

அவள் பயப்படுமளவுக்கு தான் அப்படியென்ன அவளை செய்துவிடுவேன் என்று எண்ணி கொண்டாள் என நினைக்க நினைக்க மனதின் அடிஆழத்தில் வலித்தது.

உறக்கம் வராமல் ஷிவானியின் நினைப்பில் குரு உழன்று கொண்டிருக்க, அந்த நேரம் ஷிவானி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள். 

விடிந்ததிலிருந்து ஷிவானியிடம் பேச குரு யத்தனிக்க,

யார் அவனை தனியே அவளுடன் பேசவிட்டார்கள்.

பூனைப்படை போல அவளுடன் இரண்டு பேர் இருக்க, என்ன செய்வதென்றே அவனுக்கு புரியவில்லை.

காலையிலிலிருந்து அவளுடன் பேச தவியாய் தவித்து கொண்டிருந்தவன் நம்பிக்கை இழந்து கொள்ளை புறத்தில் சலிப்போடு அமர்ந்திருக்க,

ஷிவானி குளிப்பதற்காக தன் துணிமணிகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் போய் கொண்டிருந்தாள்.

அவன் எதிர்பார்த்த அந்த  வாய்ப்பு அப்போது அவனுக்கு கிட்டியது. அதனை சரியாய் பிடித்து கொண்டான்.
குரு அவள் கதவை தாளிடும் முன்னே உள்ளே நுழைந்து கதவை தாளிட்டான்.

“என்ன பன்றீங்க மாம்ஸ்?” என்றவள் அதிர்ச்சியே ரூபமாய் நிற்க,

குரு கதவருகில் கைகட்டி நின்று  கீழிருந்து மேலாக தன் பார்வையை அவள் தேகத்தில் தவழவிட, அவளுக்கு அச்சம் தொற்றி கொண்டது.

“மாம்ஸ்… திஸ் இஸ் நாட் பேஃர்… வெளியே போங்க” என்க,

குரு அவளிடம் சீற்றத்தோடு,

“எதுக்குல இராத்திரி மயக்கம் போட்டு விழுந்த?” இறுகிய முகத்தோடு அவன் கேட்க நினைத்த கேள்வியை கேட்க,

அவள் சிரமப்பட்டு வார்த்தைகளை வெளிகொணர்ந்தாள்.

“மயக்கம் வந்திருச்சு… அதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” பரிதாபத்தோடு சொன்னவளை அலட்சியமாய் பார்த்தவன்,

“அதெப்படில மயக்கம் வரும்… நான் உன்னை என்னவே பண்னேன்”

“அது… பயத்தில” என்றவள் சொன்னதுதான் தாமதம்.

அவளை கோபமாய் நெருங்கியவன், “ஏம்ல உனக்கு பயம்… அப்படி என்னமல  உன்னை நான் செஞ்சிடுவேன்” என்று தன் ஏமாற்றத்தின் வெளிப்பாடாய் அவன் சத்தமிட,

அவள் மிரட்சியோடு, “சாரி மாம்ஸ்… தப்புதான்… இனிமே இப்படி நடக்காது… ப்ளீஸ் இப்போ வெளியே போங்களேன்” என்று கெஞ்சிய தொனியில் அவனை பார்த்தாள்.

அவன் மனம்  ஒருவாறு இளகியது. சட்டென்று அவன் கரம் அவள் கன்னத்தை தொட யத்தனிக்க பின்னோக்கி நகர்ந்தவள்,

“மாம்ஸ் ப்ளீஸ் போங்க” என்க,

“கண்டிப்பா போகனுமா?” இப்போது அவன் கோபப்பார்வை ஏக்கப்பார்வையாய் மாறியிருந்தது.

“நான் குளிக்கனும்” என்று அழுகை தொனியில் சொல்ல

“குளி” என்றவன் கல்மிஷ்மாய் புன்னகையிக்க,

“நீங்க இங்க இருந்தா எப்படி நான் குளிக்க முடியும்?” என்றவள் கேட்க

“எப்பவும் எப்படி குளிப்பீகளோ அப்படிதான்” என்று எகத்தாளமாய் பதிலுரைத்து சிரித்தான்.

“இதெல்லாம் ரொம்ப டூ மச்”

“பர்ஸ்ட் நைட் அன்னைக்கு நீங்க மயக்கம் போட்டு விழுந்தீகளே… அது டூ மச் இல்லையாவே”

“அதுக்குதான் சாரி கேட்டுட்டேனே”

“எனக்கு சாரியெல்லாம் வேண்டாம்… மாமனுக்கு வேறெதாச்சும் கொடுங்க… வாங்கிட்டு போயிடிறேன்”

“வேறெதாச்சும்னா”

அவனின் பார்வை அப்போதுதான் அவளை இன்னும் ஆழ்ந்து ரசிக்கலானது.

இரவு கட்டியிருந்த அதே புடவையில் லேசாய் அலங்காரங்கள் கலைந்து, முடியெல்லாம் முன்புறம் அவள் நெற்றிக்கு இடம்பெய்ர்ந்திருக்க,  ஆபரணங்கள் பெரிதாக இல்லையெனினும் இளமஞ்சளில் அவன் கட்டிய தாலி அவள் கழுத்துபுரத்தில் பளிச்சென்று தெரிய அவன் மனம் சலனப்பட்டது.

அவனின் அந்த பார்வையில் அவளின் சப்த நாடிகளும் ஓடுங்க, “மாம்ஸ்” என்றழைத்தவளுக்கு காற்று மட்டும்தான் வந்தது. வார்த்தையே வரவில்லை.

பயத்தில் அவள் எச்சிலை விழுங்கி கொண்டு பேச முயல, நா உலர்ந்து அவள் உதடுகள் ஓட்டி கொண்டது.

“என்னைய கட்டிபிடிச்சி ஒரு முத்தம் கொடுங்க… நான் போயிடிறேன்” என்றவன் சொன்ன நொடி அவள் விழிகள் அகல விரிய அதிர்ச்சியாய் நின்றாள்.

அவள் முகபாவனை பார்த்து, “இப்ப எதுக்குல அதிர்ச்சியாகிற… நான் என்ன பக்கத்து வீட்டுக்காரனா? உன் சொந்த வீட்டுக்காரனாக்கும்” என்றதும் அவள் அவனை ஏறிட்டு பார்த்து பேந்த பேந்த விழிக்க,

“நான் சொன்னது புரியலயாவே… இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தருமோன்னு கேட்டேன்” என்றவன் சொல்ல

“உம்ஹும் மாட்டேன்” என்று தலையசைத்தாள்.

“நீ சரியா வர மாட்ட” என்றவன் அவளை நெருங்க,

“கிட்ட வராதீங்க மாம்ஸ்… அப்புறம் நான் சத்தம் போடுவேன்” என்றாள்.

“போடுவே… ஆனா நீ சத்தம் போட்டு… அது வீட்டுக்குள்ளர கேட்டு… அவக வந்து… அதுக்கு எல்லாம் ரொம்ப நேரமாகும்ல… அதுவரைக்கும் நான் சும்மா இருப்பேன்னு நினைக்கிறியா” அவன் கேட்ட தோரணையிலும் பார்த்த பார்வையிலும் கிலி பற்றி கொண்டது அவளுக்கு.

அத்துடன் அல்லாது அவன் அவளை நெருங்கி முற்பட மிரட்சியாய் பின்னோடு நகர்ந்தவள்,

சட்டென்று அவள் கரத்திலிருந்த துணியை அவன் முகத்தில் வீச அவன்  சுதாரிப்பதற்குள் கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்.

“ஏ ஷிவானி” என்றவன் சீற்றமாய் கத்தி கொண்டு வர,

அவள் வீட்டின் பின்புறவாசலை அடைந்து அவனை திரும்பி நோக்க,

“நீ இதுக்கெல்லாம் ரொம்ப அனுபவிப்பல” என்று சொல்ல அவள் மிரட்சியோடு வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

“என்னம்ல நடக்குது இங்க?” தயா பல்லை துலக்கி கொண்டே இந்த கேள்வியை கேட்க குருவுக்கு தூக்கி வாரி போட்டது.

இவன் கேள்வி கேட்டே கொல்வானே!

குரு எங்கோ பார்த்தபடி, “என்ன நடந்துச்சு? எதுவும் நடக்கலயே?” என்று சமாளித்துவிட்டு குரு செல்ல பார்க்க,

“யாரை ஏமாத்த பார்க்குதே… ஷிவானி பயந்து வெளியே ஓடினதையும் பார்த்தேன்… நீ உள்ளர இருந்து அடிச்சி பிடிச்சி ஓடியாந்ததையும் பார்த்தேன்” என்று தயா சொல்ல குரு பதில் பேசாமல் மௌனமாய் நின்றான்.

தயா பல் துலக்கி முகத்தை அலம்பியவன், குருவை ஒரு மாதிரியான பார்வையோடு

“ஏன் மச்சான்?… நேத்து நடக்காததை இங்கன” என்று சொல்லி நகைக்க,

“போயா விவஸ்த்தைகெட்ட மாமா… நான் அவக கூட பேசிட்டிருந்தேன்…  அம்புட்டுதான்” என்றான்.

“நீ பேசிட்டிருந்த… அதைய நான் நம்பனும்”

“சத்தியமா பேசிட்டுதான் மாமா இருந்தேன்”

“ஏம்ல இப்படி புளுகுத… நீ பேசிட்டிருந்ததுக்காகவா அந்த பிள்ளை இப்படி தெறிச்சி ஓடுதா”

“போ மாமா… நான் எதுவுமே பண்ணல… அதுக்குள்ள ஓடிட்டா” என்றவன் வருத்தமுற

இவ்விதம் பேசி கொண்டே இருவரும் வீட்டிற்குள் நுழைந்திருக்க,

எதிரே சபரி வந்து கொண்டிருந்தார்.

அதுவும் அவர்கள் இருவரையும் கூர்மையாய் பார்த்தபடி,

“என்ன மச்சான்? .. அண்ணன் ரொம்ப விறைப்பா உன்னைய பார்த்துக்கிட்டே வராக… ஷிவானி புள்ள நீ செஞ்ச வேலையெல்லாம் சொல்லிப்புட்டாகளோ?!” என்று தயா கேட்க,

“நான்தான் எதுவும் செய்யலயே மாமா?” என்றான் குரு.

“அப்புறம் ஏன் உன்னைய முறைச்சுக்கிட்டே வராக”

“தெரியலயே… பேசாம கண்டும் காணாம போயிருவோம்” என்று குரு தயாவிடம் சொல்லிக் கொண்டே நடக்க சபரி அவர்களை பார்த்தபடி நின்று,

“ஒரு நிமிஷம்” என்றார்.

குருவும் தயாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“நான் கொஞ்சம் உன்கிட்ட பேசனும்” என்று சபரி மேலே சொல்ல குரு உடனே,

“மாமா உன்கிட்டதான் பேசனுமா” என்று தயாவிடம் சொல்லிவிட்டு அவன் கடந்து செல்ல பார்க்க,

“குரு” என்றழைத்தார் சபரி.

“என்ன மாமா கூப்பிட்டீகளா?” என்று திரும்பி அவன் தயாவை நோக்கி கேட்க, சபரிக்கு எரிச்சலானது.

அப்போது தயா அவனிடம், “நான் இல்லவே… அண்ணன்தான் கூப்பிட்டாக” என்க,

குரு படுபவ்வியமாக,

“என்னையவா மாமா கூப்பிட்டீங்க… அதுவும் இம்புட்டு மரியாதையா” என்றதும் சபரி இவனிடம் ஏன் வாயை கொடுத்தோம் என்றானது.

“அண்ணனுக்கு நீ மருமவனாயிட்டல… இனிமே அவக உன்னைய மரியாதையதானே பேசியாகனும்” என்று தயா இடைபுகுந்து சொல்ல,

சபரியின் கோபம் தன் கரையை  உடைக்க காத்திருக்க அவர் சிரமப்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

குரு அவரை நோக்கி, “இத பாருங்க மாமா… நீங்க மரியாதையா எல்லாம் என்னைய கூப்பிட வேணாம்… எப்பவும் போல டே குருன்னே கூப்பிடலாம் … எனக்கு நீங்க முதல்ல அக்கா வுட்டுக்கார்… அப்புறம்தான் மாமனார் மருமகன் உறவெல்லாம்” என்க,

“சரி குரு… நான் உன்கிட்ட ஒரு விஷயமா” என்றவர் ஆரம்பிக்க, இடைமறித்தான் குரு.

“தப்பா எடுத்துக்காதீக மாமா… கொஞ்சம் வேலை இருக்கு… முடிச்சிட்டு வந்த பிறவு பேசுதேன்.” என்றதும் சபரி முகம் சிறுத்து போனது.

“ஹ்ம்ம்” என்று சொல்லிவிட்டு கடுப்போடு அவர் நகர்ந்துவிட,

“அப்படி என்ன மச்சான் வேலை?” என்று தயா கேட்க குரு சூசகமாய் சிரித்தான். 

“என்ன மச்சான்? உன் மாமனோட முதல் பாலையே தூக்கி அடிச்சிப்புட்ட… மனுஷன் செம காண்டாயிருப்பாரு”

“ஆகட்டும் விடு மாமா” என்று குரு சொல்லிக் கொண்டே நடக்க,

“பார்த்துல… மனுஷன் கோச்சிக்கிட்டு சிவானியை கூட்டிட்டு மலேசியா பறந்துபுட்டாகன்னா…

அப்புறம் அவள் பறந்து போனாளேன்னு சோககீதம் பாட வேண்டிய நிலைமையாயிடும்ல… சுதானம் இருந்துக்கோ… சொல்லிப்புட்டேன்”

“உன் வாயில நல்லா வார்த்தை வராதா மாமா”

“அதில்ல மச்சான்… முத ராத்திரி வேற நடக்கல” என்று தயா இழுக்க,

“நேத்து நடக்கலன்னா என்ன? இன்னைக்கு நடந்திரும்ல”

“நினைப்புதான்… நம்ம கோவில் பூசாரியை வர சொல்லியிருக்காக… சாந்தி முகூர்த்ததிற்கு நேரம் குறிக்க… அவக பாட்டுக்கு விரல விட்டு எண்ணிப்புட்டு நாளை தள்ளி வைச்சுட்டாகன்னா???” தயா இவ்விதம் சொல்ல குருவின் மனம் கலவரப்பட்டது.

error: Content is protected !!