Konjam vanjam kondenadi – 31(prefinal)
Konjam vanjam kondenadi – 31(prefinal)
மனமாற்றம்
ஷிவானி விடாமல் அழுது தேம்பியபடியே இருந்தாள். அவளை தேற்ற முடியாமல் குரு படாத பாடுபட்டு கொண்டிருக்க, வேதாவோ அப்படியே தலையை பிடித்து கொண்டு உடைந்து போய் சிகிச்சை அறை வாசலில் அமர்ந்திருந்தார்.
இரவு சபரி அப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசும் போதே வேதாவிற்கு கிலி பற்றி கொண்டது. ஆனால் அது இந்தளவில் வந்து நிற்கும் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.
அவர் படுக்கையில் சரிந்த மறுகணமே வேதா அலற, குரு அந்த கணமே தாமதிக்காமல் அவரை அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்ப்பித்தான்.
வேதாவிற்கோ மருத்துவமனையை வந்தடைவதற்குள்ளாகவே கணவனில்லாத வரும் காலம் மனகண்முன் வந்து போய்விட, உயிரையே உடலை விட்டு பிரிந்தது போலிருந்தது அவருக்கு!
கற்பனையாய் கூட அத்தகைய ஓன்றை அவரால் ஏற்கமுடியவில்லை.
மகளை பிரிய அவர் மனதிற்கு இருந்த துணிவு,
கணவன் இல்லாத ஒரு வாழ்கையை எண்ணி கூட பார்க்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை!
எத்தனை மனவருத்தங்கள் அவர்களுக்குள் இருப்பினும் பிரிவினை என்ற ஒரு விஷயத்தை அவர் எண்ணி கூட பார்த்ததில்லை. ஆதலாலயே அந்த அதிர்ச்சியில் கண்ணீரும் கூட உறைந்து போன நிலையில் அமர்ந்திருந்தார்.
தங்கம் மகள் அருகில் அமர்ந்து அவருக்கு சமாதானம் உறைக்க, அதெல்லாம் அவர் செவிக்கு துளியும் எட்டவில்லை. அப்படியே உணர்ச்சிகளற்று வெறுமையான முகபாவனையோடு அமர்ந்திருக்க, முருகவேல் மகள், பேத்தி என இருவரின் வேதனையை பார்த்து மனகலங்கி நின்றிருந்தார்.
இவர்கள் அனைவரில் கொஞ்சம் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் நின்றிருந்தவன் குரு மட்டும்தான் !
அவன் தன் தோள் மேல் சாய்ந்து நின்று அழுது கொண்டிருந்த மனைவியிடம்,
“இப்படியே அழுதிட்டிருந்த அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ?!” என்றவன் அவளை தன் முன் நிறுத்தி சொல்ல அவளோ நிறுத்தாமல் விசும்பி கொண்டிருந்தாள்.
“மாமாவுக்கு எதுவும் ஆகாதுல” என்றவன் மீண்டும் அமர்த்தலாகவே சொல்ல,
“இல்ல மாம்ஸ்” என்று மீண்டும் அழ ஆரம்பித்தவளிடம்,
“எதுவும் ஆகாதுன்னு சொல்லுதோம்ல… நம்பு” என்று முறைத்தான்.
அவன் அவள் மீது அப்படியே சாய்ந்து கொண்டு, “எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்றவள் கண்ணீர் வடிக்க,
“அதெல்லாம் அவகளுக்கு ஒண்ணும் ஆகாது… முக்கியமா எங்க அக்காவுக்கு எதுவும் தப்பா நடக்காது… நான் நடக்கவும் விடமாட்டேனாக்கும்” என்றவன் உறுதியாய் சொல்லி அவள் தலையை வருடி கொடுக்க,
அந்த வார்த்தைகளால் அவள் மனமும் நம்பிக்கை பெற்றது. அவள் கொஞ்சம் அமைதி பெற்ற சமயம் அவசர சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர் வெளியே வந்தார்.
அவரை பார்த்த நொடியே வேதா உயிர் பெற்று எழுந்து, “அவர் எப்படி இருக்காரு?” என்றவர் பதட்டமாய் வினவ,
“ஒண்ணுமில்ல… ஜஸ்ட் மைல்ட் அட்டேக்தான்… இன்னும் கொஞ்ச நேரத்தில ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்க… அப்புறமா நீங்க போய் அவரை பார்க்கலாம்” என்று சொல்லியவர்,
மேலும் சில மருத்துவ அறிவுரைகளை வழங்க அப்போதே வேதாவிற்கு மூச்சே வெளியே வந்தது. கூடவே கண்ணீரும் அருவியாய் பெருகி ஊற்றியது.
சபரியை அறைக்கு மாற்ற வெகுநேர பிடித்தது. அதற்குள் அந்த மருத்துவமனைக்கு உறவினர்கள் ஒவ்வொருவராய் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
சபரியை மருத்துவமனைக்கு அழைத்துவரும் அவசரத்தில் அப்பத்தாவை பார்த்து கொள்ள ஐஸ்ஸின் அம்மா அமிர்தவள்ளியிடம் சொல்லிவிட்டு வர, அவர் விடிந்தும் விடியாததுமாய் தன் தமக்கை தங்கைகளுக்கெல்லாம் இந்த தகவலை சொல்லிவிட்டார்.
நளினிக்கு தாமதமாகவே விஷயம் தெரிய அவரும் தம்பிக்கு என்னவோ ஏதோ என்று பதறி கொண்டு ஓடி வந்து சேர்ந்தார்.
அங்கே கூடிய கூட்டத்தை பார்த்து நர்ஸுக்கு பதட்டமானது.
“இவ்வளவு பேர் இங்கே நிக்க கூடாது… டாக்டர் வந்து பார்த்தா காத்துவாங்க” என்று பொறுமையாகவே எடுத்துரைக்க,
தயாதான் ரொம்பவும் கோபமானான்.
“இங்க நிக்க கூடாதுன்னா… வேறெங்க நிக்க… நடுசாமுன்னு கூட பார்க்காம அண்ணனுக்கு என்னாச்சு ஏதாச்சோன்னு அடிச்சி பிடிச்சி ஓடியாந்தா இங்க நிக்காதே அங்கே நிக்கதன்னு ரொம்பத்தான் கெடுபிடி பண்ணுதீக” என்றவன் முறைக்க,
“அய்யோ விடு மாமா… நீ வா… அப்படி போய் நிப்போம்” என்று குரு அவனை ஓரமாய் அழைத்து கொண்டு சென்றான்.
“இல்ல மச்சான்… வந்ததில இருந்து நானும் பார்க்கேன்… ஏன் இத்தனை பேர் வந்தீங்கன்னு அது இதுன்னு இஷ்டத்துக்கு கேட்டுக்கிட்டு கிடக்கு… உடம்பு சரியில்லாம அந்த மனுஷன் படுத்துகிடக்காக… சொந்தபந்தம் எல்லாம கூட கூடாதுன்னா எப்படி?!” என்றவன் பொறுமி கொண்டிருக்க,
“இன்னைக்கு எல்லாம் அப்படிதான் மாமா… சொந்தபந்தமெல்லாம் கல்யாணம்னா கடமைக்குன்னு மொய் வைக்கிறது… கருமாதின்னா இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு கிளம்பி போயிடிறதுன்னு இருக்காக…
ஆனா இப்படி சொந்தத்துக்கு ஒண்ணுன்னா பதறிகிட்டு எல்லா ஓடியாறதெல்லாம் இப்ப எங்க நடக்கு”
“அது சரிதான்… அதான் அந்த நர்ஸ் பொண்ணு நம்மையெல்லாம் கோட்டிகார பயலுக மாறி பார்க்குது”
“பின்ன… பாசக்காரனா இருந்தாலே பைத்தியக்காரனா பார்க்கிற உலகமிது மாமோய்” என்று மாமனும் மச்சானும் புலம்பி தீர்த்து கொண்டிருக்க,
சபரியை அறைக்கு மாற்றிவிட்டதாக தகவல் வந்தது.
எல்லோரும் அடிச்சி பிடிச்சி பார்க்க யத்தனிக்க, ஒவ்வொருவராகவே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில் வேதாவும் ஷிவானியும் முதலில் பார்க்க செல்ல, குரு கண்டிப்போடு ஷிவானியிடம் சொல்லி இருந்தான். உள்ளே சென்று அழுதுவடிய கூடாதென்று! பின்னர் அவர் மீண்டும் மனஉளைச்சலக்கு ஆளாகிவிட கூடும் அல்லவா?!
கணவனின் சொல்படி ஷிவானியும் பிராயத்தனப்பட்டு அவள் அழுகையை அணைப்போட்டு தடுத்திருந்தாள். ஆனால் அப்பாவிற்கு மகளை தெரியாதா? அவள் முகத்தை பார்த்தே மனவேதனையை கணித்து கொண்டவர் மகளுக்கு தைரிய வார்த்தை சொல்லி தேற்றினார்.
ஆனால் தன் மனையாளின் மனநிலையை அவர் புரிந்து கொண்டாரா என்று கேட்டால் கொஞ்சம் சந்தேகம்தான்.
அதற்கு பின்னர் வேதாவின் தங்கைகள் அவர்கள் குடும்பமென அவரை பார்க்கவந்த கூட்டத்தை பார்த்து அவர் திக்குமுக்காடிதான் போனார். அவர்கள் யாரிடமும் அவர் அதிகமாய் பழகியதும் பேசியதும் கூட இல்லை. ஏன் அவர்களின் வீட்டில் எந்தவித நல்லது கெட்டதில் கூட அவர் கலந்து கொண்டதில்லையே!
சபரிக்கு அவர்கள் எல்லோரின் அக்கறையையும் பார்த்து சற்றே மெய்சிலிர்த்து போன அதே சமயம் குற்றவுணர்வும் மலையாய் வளர்ந்து நின்றது.
நாமே வேண்டாம் என உதறிவிட்டு போனாலும் நமக்கு ஒரு பிரச்சனை எனும் போது உடனடியாக ஓடிவந்து அருகில் நிற்கும் சொந்தங்கள் கிடைப்பதெல்லாம் அரிதிலும் அரிது. அத்தகைய அரிதான ஒன்று அவருக்கு வாய்க்க பெற்றிருக்கிறது. தன் மனைவியின் மூலமாக!
இத்தனை நாளாய் அவமானமாய் கருதிய மனைவியின் சொந்தங்களை கண்டு இன்று மனதார அவர் பெருமிதப்பட்டு கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
எல்லோருமே அவரை நலம் விசாரித்து இயல்பாய் பேச அவருக்கு மனதளவில் சற்றே ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது.
இரண்டு நாட்களில் நன்றாகவே உடல் நலம் தேயிருந்தார் சபரி!
ஆனால் மனதளவில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவருக்கு நெருடலாய் இருந்தது. இப்படி ஒரு நிலையிலும் குரு அவர் முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவருக்காக வேண்டி மருத்துவமனை வீடு என அவன் சுற்றி சுழன்று அலைச்சல்பட்டு கொண்டிருக்கிறான். அன்றும் மருத்துவமனைக்கு அவன்தான் அவரை சேர்ப்பித்தான். இவையெல்லாம் பார்க்க பார்க்க அவன் மீதான நன்மதிப்பு கூடியிருக்கிறது.
ஆனாலும் ஏன் முகம் கொடுத்து அவன் தன்னிடம் பேச தயங்குகிறான் என்று எண்ணி கொண்டவர்,
அவனிடம் தானாகவே பேசி அவர்களுக்கு இடையில் உள்ள இறுக்கத்தை தகர்க்க முடிவெடுத்தார்.
அதற்கேற்றாற் போல் அப்போது வேதாவும் ஷிவானியும் தயாவோடு வீட்டுக்கு போய்விட்டு வருவதாக புறப்பட, குரு மட்டும் மருத்துவமனையில் அவருடன் இருந்தான்.
அவன் அப்போதும் அறைக்குள் இல்லாமல் வெளியே நிற்க,
சபரி அங்கிருந்த நர்ஸிடம் அவனை உள்ளே அழைக்க சொன்னார்.
“பேஷன்ட் உங்களை கூப்பிடிறாரு” என்று நர்ஸ் குருவிடம் சொல்ல,
“என்னையவா?!” என்று ஒரு முறைக்கு இரு முறைக்கு சந்தேகமாய் கேட்க,
“ஆமா உங்களதான்” என்றாள் அந்த நர்ஸ்.
குரு சற்று தயக்கமாக உள்நுழைந்தவன், “ஏதாச்சும் தேவைப்படுதா?!” என்றவரை கேட்க,
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றதும் அவரை ஏற இறங்க பார்த்தவன்,
“என்கிட்ட என்னத்தை பேச போறீக ?!” ஓர் அலட்சிய புன்னகையோடு உரைத்தான்.
“நிறைய பேசனும்… கொஞ்சம் உட்காரு” நிதானமாகவே அவர் உரைக்க,
“எனக்கு உங்ககிட்ட பேசிறதுக்கு விருப்பமில்ல… வீணா என் வாயை போட்டு கிளறாதீக சொல்லிப்புட்டேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியேற பார்க்க,
“ஓ !! உனக்கு நான் வேண்டாம்… நான் பார்த்து பார்த்து வளர்த்த என் பொண்ணு மட்டும் வேணுமோ?!” என்று அவருமே கோபத்தில் வார்த்தையை விட்டுவிட அதனை கேட்டு புன்முறுவலோடு திரும்பி நின்றான் குரு!
“நீங்க மட்டும் என்ன செஞ்சீங்க?… எங்க குடும்பமே வேணாம்னு ஒதுக்கிப்புட்டு எங்க அக்காவை மட்டும் கூட்டிட்டு போகலயா” என்று குத்தலாய் கேட்க,
“அப்போ?! இதையெல்லாம் மனசில வைச்சிதான் என் பொண்ணை கட்டிக்கிட்டியா குரு?!” என்று முறைப்பாய் கேட்டார் சபரி!
“ஆமா! மனசில வஞ்சம் வைச்சிதான் உங்க ஆசை மவளை கட்டிக்கிட்டேன்… அப்பதானே எங்க வலி உங்களுக்கு புரியும்” என்க,
சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. கோபமேறி முகமெல்லாம் சிவக்க குரு அவரை ஆழ்ந்து பார்த்து,
“அய்யோ மாமோய்! திரும்பியும் நெஞ்சை பிடிச்சிட்டு சாஞ்சிர போறீக… அப்புறம் பழியெல்லாம் என் தலையில விழுந்து தொலைச்சிர போவுது” என்றான் எகத்தாளமாக!
அவருக்கு அவன் பேசுவதை கேட்க கேட்க எரிச்சல் மூள குரு மேலும்,
“ஏன் மாமோய் ?! உங்களுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலிதானா… இல்ல உங்க பொண்ணை கையோட மலேசியாவுக்கு கூட்டிட்டு போக இப்படியெல்லாம் டிராமா பண்ணிட்டிருக்கீகளா?!” என்று கேட்டதும் சபரி தாங்க முடியாமல்,
“டே நீ ரொம்ப ஓவரா பேசிற” என்று முறைத்தார்.
“அன்னைக்கு எங்க அப்பத்தா படுத்த படுக்கையா கிடந்த போது… நீங்க இப்படிதானே மாமோய் கேட்டீங்க… அதெப்படி அப்பத்தா போட்டது வேசம்… உங்களுக்கு வந்தா அது பாசமோ? இது எந்த ஊர் நியாயம்” என்றவன் கேலி புன்னகையோடு கேட்க,
அவன் கேட்ட கேள்விக்கான பதிலை அவரால் சொல்ல முடியவில்லை.
அவர் திகைத்து போய்விட,
குரு அவரை கூர்ந்து பார்த்தான்.
“நானும் பார்த்தாலும் பார்த்தேன்… உங்களை மாதிரி ஒரு சுயநலவாதியே பார்த்ததேயில்ல” என்றதும் அவனை சீற்றமாய் பார்த்தவர் ஏதோ பேச யத்தனிக்க, அவரை பேசவிடாமல் அவனே மேலும் தொடர்ந்தான்.
“ஏன் மாமோய்? ஷிவானியை பத்தி கவலைபட்டீகளே… எங்கக்காவை பத்தி ஓரே ஒரு நிமிஷம் யோசிச்சி பார்த்தீகளா?!
இத்தனை வருசமா பெத்த அப்பாரு ஆத்தாவை கூட உங்க கௌரவத்துக்காக ஓதுக்கி தள்ளிட்டு இருந்த எங்க அக்காவுக்கு இதுதான் நீங்க செய்ற உபகாரமோ? அவகள பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சிருந்தீங்கன்னா இப்படி வந்து கிடப்பீகளா நீங்க” அவன் சீற்றமாய் கேட்க அவர் பார்வை தரைதாழ்ந்து போனது.
“பாவம் அக்கா! அப்படியே உடைஞ்சி போயிட்டீக… உங்களுக்கு ஒண்ணுமில்லன்னு டாக்டர் சொன்ன பிறவுதான் அவகளுக்கு உசுரே வந்துச்சு…?!” என்று உணர்ச்சி பொங்க சொல்லியவனின் விழிகளெல்லாம் சிவப்பேறியிருக்க அப்போது மருத்துவர் உள்ளே நுழைய அவர்கள் பேச்சு தடைப்பட்டது.
குரு சொன்னவற்றை எல்லாம் சிந்தித்து பார்த்த சபரிக்கு அப்போதே அவர் செய்த தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாய் புலப்பட ஆரம்பித்தது.
அப்போதிலிருந்தே மனைவியின் மனநிலையை கவனிக்க தொடங்கியிருந்தார்.
வேதாவின் கவலை தோய்ந்த முகமும் உயிரற்றது போல துவண்டுகிடந்த விழிகளும்,
தன் மனைவியின் விவரிக்க முடியாத வேதனையும் வலியையும் அதை தாண்டி அவர் கொண்டிருந்த காதலையும் பரிவையும் உணர்த்தியிருந்தது அவருக்கு!
இத்தனை நாளாக அந்த ஆழமான அன்பை தான் ஊதாசீனப்படுத்தியிருக்கிறோம் என்று உள்ளூர அவரை குற்றவுணர்வு குத்திகிழிக்க, இனியாவது தன் மனைவியின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டார்.
அதன் முதல் படியாக நளினி அவரை சென்னைக்கு வந்து உடல்நிலையை பார்த்து கொள்ள சொல்லி அழைக்க,
“இல்ல க்கா… நான் என் மாமனார் வீட்டிலயே இருக்கேன்” என்று சொல்லி மறுத்துவிட நளினிக்கு பேரதிர்ச்சி!
அப்போது அரவிந்தனும் கூட ஏதேதோ காரணங்களை கூறி அவரை அழைக்க, அவர் அசைந்து கொடுக்கவில்லை. தான் எடுத்த முடிவில் தீர்க்கமாய் நின்றுவிட்டார்.
வேதாவிற்கு அவரின் முடிவு ஆச்சர்யப்படுத்தினாலும்,
அதற்கு காரணம் அவர் மகளுடன் இருக்க விழைகிறாரோ என்று எண்ணி கொண்டார்.
மருத்துவமனையில் இருந்து சபரி உடல்நிலையை மட்டும் குணமாகி வரல்லை. மனமாற்றமும் பெற்று வந்திருந்தார்.
வீட்டிற்கு வந்த சபரியை காணும் ஆர்வத்தில் முடிந்தும் முடியாமலும் நடந்துவிட்டார் வள்ளியம்மை அன்று!
குருவின் உதவியோடு தள்ளாடி கொண்டே நின்றவர், “அந்த கருங்குளத்தூர் ஐயா… நம்ம குலசாமிகிட்ட… இந்த கிழவி உசுரை கூட எடுத்துக்கிடு… என் பேத்தியோட பூவூம் பொட்டையும் காப்பாத்திடுன்னு வேண்டிக்கிட்டேன்… எங்க ஐய்யன் வேண்டினபடியே உன்னைய காப்பாத்திப்புட்டான்” என்றவர் நெகிழ்ச்சியோடு உரைக்க, சபரி அன்று எல்லோரும் அதிசயக்கும்படி ஓர் காரியம் செய்தார்.
அவர் காலை தொட்டு வணங்க வள்ளியம்மையே வியப்பும் அதிர்ச்சியும், “நல்லா இருய்யா” என்று பதட்டத்தோடே சொல்ல அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிலையாய் சமைந்துவிட்டனர்.
அவர்களில் வள்ளியம்மைதான் முதலில் உணர்வுபெற்று, “எய்யேய்யா முருகா! நம்ம கோவிலுக்கு பிள்ளைங்கல எல்லாம் கூட்டிட்டு போய் ஓரு பூசையை போட்டுட்டு வரனும்… அப்பதான் மனசுக்கு நிம்மதியாயிருக்கும்” என்றவர் சொல்ல முருகவேலும் அதையேதான் நினைத்தார். ஆனால் இதற்கு சபரி என்ன சொல்ல போகிறார் என்று அவரின் முகத்தை முருகவேல் பார்க்க அவருமே சந்தோஷமாய் சம்மதித்துவிட்டார்.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே!
மேலக்கடையனூர் கருங்குளத்தூர் ஐயனார் கோவில்.
திருமண முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழிந்த நிலையில் அந்த ஞாயிற்று கிழமை முருகவேல் ஒருவர் விடாமல் தன் மகள் பேத்தி என எல்லோரையும் கோவிலுக்கு அழைப்பு விடுத்திருக்க, அவர்களும் குடும்பமாய் வந்து சேர்ந்தனர்.
இவர்களோடு நளினியும் அவர்கள் குடும்பமும் கூட வந்திருந்தனர்.
போன முறை இல்லாமல் சபரி இம்முறை எல்லோரிடமும் கலந்து பேசி பழக, வேதாவிற்கு என்றுமில்லாமல் அன்று பேரானந்தமாய் இருந்தது.
ஆனால் அப்போதும் கூட குருவும் சபரியும் இயல்பாய் பேசி கொள்வதை பார்க்க முடியாது. இன்னமும் அவர்களுக்கு இடையில் ஓர் விலகாத பனிபோர் உள்ளுக்குள் குமைந்து கொண்டுதான் இருந்தது
அதற்கேற்றாற் போல் குருவும் சும்மா இருந்தால்தானே!
“உன் தம்பி செய்ற அலப்பறை தாங்க முடியலடி” என்று சபரி முறைப்பாய் சொல்ல,
இந்த வார்த்தைகளை கேட்டு திரும்பிய வேதாவிற்கு சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.
“எதுக்குடி என் பொண்ணை போட்டு இந்த டார்ச்சர் பண்ணிட்டிருக்கான்” என்றவர் கேட்க,
“இதான் உங்க ஊர்ல டார்ச்சரா?!” என்று கேட்டு சிரித்தார் வேதா.