KP9

KP9

காதலாம் பைங்கிளி 9

ஒரு நொடி ஆடித்தான் போனான் விசாகன். வாணியின் செயலை என்னதாய் எடுத்துக் கொள்ள, என்னவென உணர என எப்படியும் எண்ணக் கூட முடியாத திம்மென ஒரு மின்சாரத் தாக்குதல் அவனுக்குள்.

ஆனால் அதற்குள்ளாகவே “சே பொண்ணுங்களுக்கு யார் முடிய சொன்னாலும் தன் முடி நல்லா இருக்கான்னு யோசிக்க தோணும், அதுதான் இது” என காரணம் அவனுக்குள் கண்டு பிடிக்கப்பட, முதலில் சிறு புன்னகையுடன் முடிந்து போனது அந்த நிகழ்வு அவனுக்கு.

என்னதான் இருந்தாலும் அவன் அவளுக்கு பின்னிருந்து பார்த்துக் கொண்டிருப்பவன். அவள் முகபாவத்தைப் பார்க்கவெல்லாம் வாய்ப்பு கிடையாதே!.

‘ப்ச் வாணியப் போய் என்னனு நினச்சுட்டேன்!!’ என அடுத்ததாய் தன்னைத்தானே நொந்தும் கொண்டான் விசாகன்.

வாணி மீது அவனுக்கு இருக்கும் அடிப்படை நம்பிக்கை அப்படிப்பட்டது. அவள் எதையும் சிந்தித்து நிதானமாக செயல்படும் ரகம். வெறும் இரண்டு நாள் பழக்கத்தில் இப்படி அவள் மனம் சரியும் என்றெல்லாம் அவனால் சிந்திக்க கூட முடியவில்லை. அவனைப் பொறுத்த வரை வாணி த பெர்ஃபெக்க்ஷன்.

அந்த வகையில் வாணியை இப்படி நினைத்தது அவள் ஒழுக்கத்தை அவளுக்கும் இவனுக்குமான நட்பை சந்தேகித்தது போலல்லவா? இவனை அவள் தவறாக நினைத்துவிடக் கூடாதே என எத்தனை யோசித்தான்? அதில் அவளையே இவன் சந்தேகப்பட்டது போலல்லவா ஆகிப் போனது இது?

உறுத்தலாக ஒரு ஓரத்தில் இந்த நிகழ்வு படுத்துக் கொண்டது அவன் மனதில்.

இங்கு வாணிக்கோ எதை நோக்கி நடக்கிறோம், எங்கு செல்கிறோம் என்றே புரியவில்லை. அவளுக்கு பின்னிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் விசாகனின் பார்வையிலிருந்து வெளியே சென்றாக வேண்டும். ஏன் தன்னைவிட்டே தான் வெளியேற முடிந்தால் பிரவாயில்லையே என்று துடிக்கிறது உயிர். குறைந்த பட்சம் உலகத்தின் பார்வையிலிருந்தாவது மறைந்தாக வகை தேடியது அவள் உள்நிலை. தேவை ஒரு குறையற்ற தனிமை.

ஆடிட்டோரியம் செல்லும் நிலையிலெல்லாம் அவள் இல்லை. அங்குள்ள யாரை இவள் எதிர்கொள்வாளாம்? ஆக வளாகத்தின் கடை கோடியிலிருந்த வகுப்பறை வரிசைகள் நோக்கி சென்றவள், அதில் ஆளற்ற அறை ஒன்றில் நுழைந்து கொண்டாள்.

விழா நடக்கும் இடத்தைவிட்டு வெகுவாக விலகியே இருப்பதால் இங்கு யாரும் இந்த நேரம் வர மாட்டார்கள் என்ற முழு நம்பிக்கையும், அறையின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்ததால் உண்டாகி இருந்த இருட்டு தந்த தைரியமும், எதற்கும் எளிதில் அழாத வாணியை இன்று அணை திறந்த வெள்ளமென வெடிக்கச் செய்தது.

ஆம் அறைக்குள் நுழையவும் ஒரு மூலையில் போய் முட்டு கூட்டி அமர்ந்து அழுது தீர்த்துவிட்டாள் வாணி. ‘ஐயோ எனக்கில்லையே இல்லையே என்ற வகை ஏமாற்றம், தாங்கவே முடியாத ஏக்கத்தால் காந்தல் காந்தலாய் ஒரு நொறுங்கல். முடிவிலியாய் பீடிக்கும் கறுப்பு வண்ண வெறுமை, எல்லாவற்றையும் எப்படி சுமக்க எனத் தெரியாதவள் செய்த முதல் செயல் இதுதான்.

ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவளுக்குள் ஊறி வருகிறதே கேள்விகள்! அந்நேரம் வரைக்கும் அவள் அழுவது நல்லது என அனுமதித்திருந்த அறிவு இப்போது தொடுக்கிறதே வினாக்களை!

அவன்தான் தெளிவா சொன்னானே ஆண் பெண் என்பது தாண்டிய ஃப்ரெண்ட்ஷிப் வேணும்னு?! அப்ப நீ ஏன் இப்படி புரிஞ்சு வச்சுருக்க? ரெண்டே நாள் பழக்கத்தில் என்ன இது பைத்தியக்காரத்தனமான ஆசைகள்?

ஆனாலும் கடைசி வரை அவனோடு என்று எங்கோ இதயத்தில் பதிந்து போய் கிடக்கிறதே! அங்கு தாங்கவே முடியாத அளவு வலிக்கிறதே!

உனக்கு வலிக்குதுன்ற ஒரே காரணத்துக்காக நீ செய்றது காதல்னு எப்படி ஆகும்? இரண்டு பேரும் விரும்பினா மட்டும்தான் அது காதல். இது வெறும் சலனம்.

இப்ப என்னாகிட்டுன்னு அழுற?

உடம்புல அடிபட்டப்ப வர்ற வலி சில நாள்ல ஆறிடுறது போலதான் மனசோட வலியும். அதுக்கும் டைம் கொடுத்தன்னா ஆறிடும். மனசு வலிக்குதேன்னு எப்பவுமே பேனிக் ஆகக் கூடாதுன்னு அப்பா சொல்வாங்களே!

இதெல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.

ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு எழ முயன்றவள் பார்வையில் படுகிறாள் பபிதா. இவளது வகுப்புத் தோழி. நேர் எதிராய் நின்று இவளைத்தான் ஆறுதலாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

பபிதாவின் பார்வையிலேயே மொத்த விஷயமும் அவளுக்கும் தெரிந்துவிட்டதென வாணிக்கு புரிகின்றது. திக்கென இருந்தது சிறு நொடி.
ரவளியை அவளது தந்தை பைக்கில் வந்து விட்டுச் செல்லவும், அடுத்தபடியாக வளாக வாசலுக்குள் நுழைந்தவள் பபிதா. வாணி விசாகனையே பார்த்துக் கொண்டு வந்ததால் இவளை கவனித்திருக்கவில்லை.

இதில் பபிதா வாணியைக் காணவும் அவளிடம் செல்லும் ஆவலில் அவள் மீதே முழு கவனத்தை வைத்தபடி வந்ததால், இரு நொடி நேரம்தான் என்றாலும், விசாகன் வாணியின் குறுக்கே போய் நின்றதையும், மெல்லிய குரலில் சொல்லியதையும் இவளும் பார்க்கவும் கேட்கவும் நேரிட்டது.

அடுத்ததாக இங்கு வந்து இப்படி அழுது கொண்டிருக்கும் வாணியின் நிலையைப் பார்க்கவும், விஷயம் என்னவென்று பபிதாவுக்கும் புரியும்தானே!

எதுவும் சொல்லாமல் தன் வாட்டர் பாட்டலில் இருந்து தண்ணீரை எடுத்து வாணியிடம் நீட்டினாள் பபிதா.

“முதல்ல குடிச்சுட்டு, முகம் கழுவு, கேன்டீன்ல போய் ஒரு காஃபி குடிப்போம்.” எதுவும் நடவாதது போல் வெகு சாதரணமாக பபிதா ஆரம்பித்ததே வாணிக்கு சற்று இதமாய் இருக்கிறது என்றால்,

“காஃபி குடிச்சுகிட்டே நாம ஏ.ஆர் ரஹ்மான் சார எப்படி மீட் பண்ண போலாம்னு ப்ளான் பண்ணலாம் வா” என பபிதா அழைக்க,

இன்றைய ஏமாற்றத்தையும் தாண்டி இன்னுமே எதிர்காலம் பறந்து விரிந்தே கிடக்கின்றது. அதில் ஆயிரம் கோடி இன்பங்கள் சின்னதும் பெரிதுமாயும் சேர்ந்தே கிடக்கின்றது என்பதை சுட்டிக் காட்டவே பபிதா இப்படி சொல்கிறாள் என புரிகிறதுதானே வாணிக்கும்.

அப்போதைக்கு வாணியின் வலித்தெடுக்கும் மனதால், ஒரு புள்ளி அளவில்தான் அதை ஒத்துக் கொள்ள முடிந்தாலும், அறிவு அதை அப்படியே ஏற்றுக் கொள்ள,

வளமற்ற முறுவல்தான் என்றாலும், சின்னதாய் புன்னகைக்க கூட வருகிறது வாணிக்கு.

பபிதாவின் அருகாமையில் அடுத்து வந்த நேரங்கள் பரபரவென கழிந்தது. வாணிதானே இவங்க போடுற ட்ரமா டீமோட டைரக்டர்? ஆக டென்ஷனுக்கு ஒன்றும் பஞ்சமில்லை.

விரும்பியோ விரும்பாமலோ வாணி அதன் பின் ஓட வேண்டியதாகியது. அது அவள் வகையில் நல்லதாகவும் அமைந்தது.

முதல் பிரச்சனை, “இந்தா வந்துடுவேன்,” “எப்படியும் வந்துடுவேன்” என சொல்லிக் கொண்டிருந்த இவர்களது நாடகத்தின் கதாநாயகி கடைசியில் “ரொம்பவும் முடியலைப்பா செம்ம வயிறுவலி” என்று விடுப்பு எடுத்துவிட்டாள்.

அடுத்த ப்ரச்சனையாக, எல்லா டயலாக்கும் சீனும் நன்றாக தெரிந்த வாணிதான் இப்படி கடைசி நிமிடத்தில் அந்த ஹீரோயின் ரோலை செய்ய முடியும் என்பது எல்லோரது ஏகோபித்த கருத்தாக இருந்தது.

என்னதான் வாணியின் மனநிலை மிகவுமே இதிலெல்லாம் ஈடுபடும் நிலையில் இல்லை என்றாலும், இது இவள் இழுத்துப் பிடித்து மக்களைச் சேர்த்து நடத்த இருக்கும் நாடகம், இதில் கடைசி நிமிடத்தில் இவளே வரமாட்டேன் என்று எப்படி சொல்ல முடியும்?

ஆக வாணி கல்யாணப் பெண் அவதாரமெடுக்கும் நிலை. ட்ராமாவில் முதல் சீனே கல்யாணத்தில்தான் ஆரம்பிக்கும்.

அவசர அவசரமாய் விடுதிக்கு வாணி இழுத்துச் செல்லப்பட்டாள். உபயம் பபிதா&கோ. மக்கள் வாணியை தயார் செய்து முடித்த நேரம் விழா துவங்கிவிட்டது.

இதில் இவர்களது நிகழ்ச்சி இடையில்தான் வரும், அதற்கு முன் பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பதால் இவளும் பபிதாவும் சற்று மெல்லமே நடக்க, மற்றவர்களோ இதற்குள் ஓடாத குறையாக விழா இடத்துக்கு ஓடி இருக்க,

அப்பொழுதுதான் வாணிக்கு நியாபகம் வருகிறது, இந்த மணப் பெண் அவதாரத்துக்காக அவள் கழற்றிய காதணியை, அவசரத்தில் விடுதி டார்மெட்டரியிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள் என.

தங்க நகை அல்லவா?, அப்புறமாய் போய் எடுத்துக் கொள்ளலாம் என விட்டுவிட முடியாதே! “ஒரு நிமிஷம் பபிதா, இப்ப வந்துடுறேன்” என இவள் மீண்டுமாய் விடுதிக்கு விரைந்தவள், வைத்த இடத்திலிருந்து காதணிகளை எடுத்துக் கொண்டு முன்பைவிட வேக வேகமாக திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது மீண்டுமாய் அவள் கண்ணில் பட்டான் விசாகன். கல்லூரியின் நுழைவு வாயிலுக்கு முன்பாக இல்லாமல் சற்று தள்ளியே காரை நிறுத்திக் கொண்டிருந்தான் அவன்.

இந்த விழாவிற்கு புது மாணவ மாணவியரின் பெற்றோருக்கும் அழைப்பு உண்டு. முழு நாளும் அவர்கள் இங்கு தங்கி இருந்து கல்லூரி நடை முறைகளை கவனிக்கலாம். அவர்களுக்கான விருந்து ஒன்றும் ஏக தடபுடலாக நடைபெறும்.

அதிலெல்லாம் கல்லூரி நிர்வாகியான சௌந்தர் மாமாதான் முன்னின்று பெற்றோர்களை வரவேற்பார். ஆனால் நேற்று அவர் இங்கு வந்து செல்ல வேண்டியதாயிற்றே, மீண்டுமாய் இன்றே அவர் அலையும் அளவிற்கு இல்லை அவரது உடல்நிலை. ஆக லிசியும் இந்த விசாகனும்தான் முன்னின்று விழாவை நடப்பித்து, வருகை தரும் பெற்றோரை கவனித்தாக வேண்டும்.

இதெல்லாம் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வாணி அறிந்து கொண்டதும், அறிந்தவைகளை கொண்டு கூட்டி பொருள் எடுத்து புரிந்து கொண்டதும் ஆகும்.

அதற்காகத்தான் அவன் விழா ஏற்பாடு எப்படி இருக்கிறது என காலையிலே பார்க்க வந்திருக்கிறான், இப்போதும் சென்று கிளம்பி தயாராகி வருகிறான் என்றெல்லாம் ஓடிய மனம், ‘மாமாக்கு மகன் போல இவன்’ என்றதில் ஆணியடித்து அகப்பட,

இதுவரைக்கும் இருந்த ‘இயலும்’ என்ற உணர்வெல்லாம் வடிய மீண்டுமாய் முருங்கை மரம் தேடியது இவளுக்குள்ளிருந்த ஏக்க வேதாளம்.மாமா வீட்டிற்கு போக மாட்டேன் என ஒற்றைப் புள்ளியில் நிற்க முடிந்தது போல் சட்டென சமாதி ஆகாது போல் இந்த சுயம்வர நினைவுகள்!

ஆனால் ஒரே ஒரு நொடிதான், என்ன இருந்தாலும் அடுத்தவளுக்குரியவன் இவன், என்ற ஒரு சிந்தனை சூட்டு கோலாய் சூடிழுக்க, அவன் திசையே திரும்பாமல் விறுவிறுவென நடந்தாள் பெண்.

ஆனால் விசாகனால் அப்படிப் போக முடியாதுதானே! தன் கார் கதவை திறந்து கொண்டு இறங்கிய விசாகன் தன் புறமே திரும்பாமல் செல்லும் வாணியைப் காணவும், நேரடியாக அவளிடம் சென்றான்.

அவள் சடையை தூக்கிப் பார்த்த நேரத்திலிருந்து ஒரு உறுத்தல் போல் அவன் மனதில் ஒன்று படுத்துக் கிடக்கிறதே, அப்போதிருந்தே வாணியை ஒரு கணம் பார்த்து பேசிவிட்டு வந்துவிட்டால் நலமாக இருக்கும் போல் அவனுக்குள் ஒரு உணர்வு.

அவள் தன் வகுப்பு மாணவிகளுடன் இருப்பாளே என இதுவரை வாணியை தேடிச் செல்லாமல் தவிர்த்திருந்தவன், இப்போதோ அவளே எதிர்ப்பட, அதிலும் தன்னந்தனியாக அவள் வர,

“இவ்ளவுக்கு பிறகும் தனியாதான் சுத்ற என்ன?” என்றபடி அவளிடமாய் சென்று நின்றான். கொஞ்சமாய் இது அதட்டல்தான். அவள் வகுப்பு தோழி யாரையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு இவள் அலைந்தால் பிரவாயில்லையே என்றிருக்கிறது அவனுக்கு.

அதே நேரம் எடுத்த உடனே இப்படி பேசியது கூட அவளை வறுத்தியது போல் ஆகிவிடக் கூடாதே என ஒரு கரிசனமும் வருகிறது. உறுத்திக் கொண்டிருந்த அவன் மன நிலையும் காரணமாய் இருக்கலாம்.

“ஹேய் சேம் பின்ச்” என்றான் அடுத்தபடியாக.

தங்கள் இருவரது உடையின் நிற ஒற்றுமையை கவனித்தபடிதான் வந்திருந்தான் அவன். இப்போது அதைச் சொன்னது நான் கோபமாகவெல்லாம் இல்லை என்பதை காட்டிக் கொள்வதற்காக.

அதுவரைக்குமே விசாகன் தன்னை நோக்கி வருவதை அறிந்திராத வாணி இப்போது தூக்கி வாரிப் போட நிமிர்ந்தவள், அப்போதுதான் கவனிக்கிறாள் எப்போதுமே ஃபார்மல்ஸ் அல்லது செமி கேஷுவல்ஸில் இருப்பவன் இன்று பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தான். அதுவும் இவள் புடவை நிறத்திற்கு ஒத்துவரும் நீல நிற ஷேர்ட்.

இன்றைய விழாவின் தீம் கலாச்சாரம். அதற்கேற்றபடி அனைவரும் உடை அணிந்து வர வேண்டும். விழாவை நடத்துபவன் என்ற வகையில் இவனும் தீம் படி வேஷ்டி சட்டையில் வந்திருக்கிறான் எனப் புரிந்தாலும், நீல நிறை பாவாடை தாவணி அணிந்து வந்திருந்த ரவளிதான் முதலில் வாணிக்கு ஞாபகம் வந்தாள்.

ரவளிக்காக இவனும் நீல நிறை உடை அணிந்து வந்திருக்கிறான் எனதான் இவளுக்கு நம்ப வருகிறது. நிமிர்ந்து அவன் முடியைப் பார்த்தால் வெகு நேர்த்தியாய் வெட்டப்பட்டு படு கம்பீரமாய் தெரிந்தான் அவன். இது ரவளிக்காக என அவனே சொன்னான்தானே!

அதன் பின் என்ன பேசுவாளாம் இவள்.?!

முடிந்தவரை இயல்பாகக் காட்டிக் கொள்ள அவள் முனைந்தாலும் அக்கினியில் நின்று கொண்டு அமைதியை கடை பிடிக்க எடுக்கும் முயற்சி போல் இருந்தது அது.

“என்னாச்சு வாணி? உடம்பு எதுவும் முடியலையாபா? ஒரு வேளை நேத்து எதுவும் அடிபட்டுட்டோ?” கசங்கும் இவள் முகத்தைப் பார்த்தவனிடம் எகிறி ஏறிக் கொண்டு போகும் அவனின் அக்கறையை இவள் எப்படியாக கையாள வேண்டும்?!

“ஹலோ? யார் நீங்க?” சரியாய் அந்த நொடி வந்து விழுகின்றன அப்படி ஒரு அதிகாரமான வார்த்தைகள்.
வந்திருந்தது பபிதா. வாணிக்காக காத்திருந்து பார்த்தவள் திரும்பி வந்திருக்கிறாள்.

விசாகன் கேள்வி வந்த திசையில் திரும்பிய அந்த நொடி வருகிறது அடுத்த கேள்வி.

“தனியா போற பொண்ணுட்ட உங்களுக்கு என்ன பேச்சு?”

பபிதாவின் முதல் கேள்வியைக் கூட ஓரளவு சாதாரணமாக எடுத்துக் கொண்ட விசாகனுக்கு அடுத்த கேள்வியில் சுள்ளென ஏறியது.

ஆனாலும் அறிமுகமற்ற ஒரு பெண்ணிடம் எப்படி அவன் கோபத்தை வெளிப்படுத்தவாம்?

அதற்குள் வாணி “ப்ச் ப்ளீஸ் பபிதா” எனக் கெஞ்சலாக பபிதாவை அடக்கி வைக்க முயன்றாள். பபிதா எதற்காக இதையெல்லாம் செய்கிறாள் என இவளுக்கு புரியும்தானே!

ஆனால் இதற்கெல்லாம் நிறுத்துகிற ஆளா பபிதா?! “உங்க ரவளிய பத்தி மட்டும் யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்னு அவட்ட காலேஜல வச்சு நீங்க பேசுறதே இல்ல, அப்ப எங்க வாணிய மட்டும் யாரும் எதுவும் சொல்லலாமோ?” அடுத்த குண்டக்க மண்டக்க கேள்வியை குறி தவறாமல் எரிந்தாள்.

இந்த முறை உச்ச கோபத்தில் விசாகன் நிச்சயமாக பபிதாவுக்கு சவுக்கடியாய் எதையாவது திருப்பிக் கொடுப்பான் என பதறிப் போனாள் வாணி.

ஆனால் அவனோ சில்லளவு நக்கலும் பொட்டளவு கிண்டலுமாய் “ஓய் பைதா, அங்க இங்க உருண்டு ஓடாம உங்க வாணி மேடத்தோட இருந்து அவங்கள முதல்ல பத்ரமா பார்த்துக்க வழியப் பாருங்க” எனதான் பதில் கொடுத்தான்.

விசாகன் பொதுவாக பெண்களிடம் பேசிப் பழகும் சுபாவமற்றவன். ஆணும் பெண்ணும் நட்பாய் பேசலாம் எனச் சொல்ல முடியாத கலாச்சார கட்டமைப்புள்ள ஊர் அது என்பது காரணமாயிருக்கும்.

லிசி மட்டும் விதி விலக்கு. அவள் மூத்தவள், அக்கா எனதான் இவன் அழைப்பதுவும். அதோடு பால்ய காலம் முதல் பழக்கம் அல்லவா? அவளிடம் பேசுவதை யாரும் எதுவும் சொல்லக் கூடும் என அவனுக்கு இதுவரை தோன்றியது இல்லை.

ஆனால் வாணியிடம் முதலிலிருந்தே குழப்பம். முதலில் இவன் அவளிடம் பேசாமல்தான் இருந்தான். அடுத்து பேசத் துவங்கிவிட்டாலும், லிசியிடம் போல் பார்க்கும் இடத்திலெல்லாம் வாணியிடம் இவன் பேசுவது இந்த ஊருக்கு சரியாய் வராது என்பது இவன் அறிவு.

ஆக நேற்று அந்த தடியன்கள் விஷயத்தில் தவிர்க்க முடியாமல் வாணியுடன் இவன் எல்லோர் முன்பும் வந்து நின்றானே தவிர, பொது இடங்களில் வாணியிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் எனதான் எண்ணி இருந்தான்.

இப்போதும் அவளை தனியாகப் பார்க்கவும்தான் அவன் பேச வந்ததே. இருந்தும் இந்த பைதா என்னமா சண்டைக்கு வருது? ஆனாலும் அந்த பபிதா மேல் அவனுக்கு கோபம் என்றும் எதுவும் இல்லை.

வாணிக்காகத்தானே பார்க்கிறாள் என்றிருக்கிறது அவனுக்கு. ஆக இலகுவாகவே பேச்சை முடிக்க எண்ணி இப்படி பேசினான்.

அங்கு பபிதாவோ “என்னது பைதாவா?” என சண்டைக் கோழி ரேஞ்சில் சிலிர்த்துக் கொண்டு வர,

அதற்குள், “முதல்ல வாணிக்கு ஃபீவர் இருக்குதான்னு பாருங்க, அப்றமா என்னது பைதாவா? அல்லது வெறும் பைதாவான்னு மெதுவா ஆராய்ச்சி செய்துக்கோங்க” அவன் சொல்ல,

கேட்டிருந்த பபிதாவுக்கு ட்ரெயின் விடும் அளவு காதிலிருந்து புகை வந்தாலும், வாணியின் நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

“அதெல்லாம் அவ ரொம்ப நல்லாதான் இருக்கா…சொன்னனே எங்க ஃப்ரெண்ட நாங்க நல்லா பார்த்துப்போம், நீங்க இடத்த காலி செய்ங்க, காத்து வரட்டும்” கடுப்பான பபிதாவின் கரெக்டான ரிப்ளை.

இப்போதோ விசாகன் விடை பெற துவங்கினான்.

“ரவளி விஷயம் உங்களோடயே இப்போதைக்கு இருக்கட்டும், வெளிய சொல்லிடாதீங்க, ஏன்னா நானே இன்னும் ரவளிட்ட இதை சொல்லல, வாணிக்கு மட்டுமில்ல, ரவளிக்கும் அவளப் பத்தி யாரும் தப்பா பேசுனா கஷ்டமா இருக்கும்னு ஞாபகம் வச்சுகோங்க” சொன்னபடி திரும்பிச் செல்ல துவங்கி இருந்தான் அவன்.

கேட்டிருந்த வாணிக்கு இடமும் வலமுமாய் ஒரு நொடி ஆடி வந்தது மனது. இவளப் போலதான் அவனுமா? வெறும் ஒரு பக்க விருப்பத்தில்தான் விழுந்துகிடக்கிறானா? இதைத்தான் காதல்னு சொல்லிட்டு இருக்கானா?!!

ஆனால் அடுத்த நொடியே ‘எது எப்படியானா என்ன? அவன் இவளை விரும்பவில்லை, ஆக இவளோட சலனத்தை காதல் என்றும் சொல்வதற்கில்லை. அதை இவள் தொடர்வதும் நியாயமும் இல்லை நல்லதற்குமில்லை என முடித்துக் கொண்டாள்.

“நோ ப்ராப்ஸ் சார், நீங்க வாணிய மறந்துடுங்க, நாங்க ரவளிய மறந்துடுறோம்” பபிதா இப்படி விசாகனுக்கு விடை கொடுத்த வகையில்தான் வாணி நடப்புக்கு வந்தாள்.

சில எட்டுகள் இதற்குள் சென்றிருந்த விசாகன் சட்டென திரும்பி வந்தான்.

”நான் வாணிட்ட பப்ளிக்ல பேசலைனுதான் சொன்னனே தவிர, அவள மறந்துடுறேன்னு எல்லாம் ஒரு நாளும் சொல்லல” என இதுவரை இருந்த இலகுநிலை கேலி எல்லாம் வடிய கடைந்தெடுத்த அழுத்தத்துடன் பபிதாவிடம் சொன்னவன்,

பின் கிண்டலாக “என்ன வாணி இது, உனக்கு ஃப்ரெண்டாகிறவங்கல்லாம் கொஞ்சம் கழன்ட கேஸாவே இருக்காங்க?! முதல்ல நான், இப்ப இந்த பைதா” என சொல்லிக் கொண்டே சென்றுவிட்டான்.

“எல்லாரையும் உங்களப் போலவே நினைக்க கூடாது மிஸ்ட்டர். விசாகன்” என வாயளவில் பதில் சொல்லிக் கொண்டாலும், பபிதாவும் அடுத்து சற்று நேரம் பேசவில்லை.

இந்த மொத்த நிகழ்வின் காரணமாக எதோ வகையில் அவன் ஈகோ இல்லாதவன், வாணி மீது உண்மையான அக்கறை உள்ளவன் என விசாகன் மீது மரியாதை வருகிறதே அவளுக்கு.

பபிதாவுக்கு வாணிக்கும் விசாகனுக்கும் இடையில் உள்ள எல்லா நிகழ்வுகளும் தெரியாது எனினும், எப்போது அவன் இன்னொரு பெண்ணை விரும்புகிறானோ அப்போது அவனிடம் தடுமாறும் வாணி அவனைவிட்டு விலகி இருப்பதுதான் எல்லா வகையிலும் நல்லது என்பது புரிதல்.

அதைத்தான் அவள் சுற்றி வளைத்து ஸ்தாபித்துக் கொண்டிருப்பதும்.

பொது இடங்களில் மட்டுமல்ல, லிசியோடோ இன்னும் மற்ற வகையிலோ கூட விசாகனை சந்திக்கவே கூடாது என்பதுதான் வாணியின் எண்ணமும் ஆக அவளும் இதை தடுக்க முயலவில்லை.

இப்படி இவர்கள் பிரிவினையை பேசி முடித்துக் கொண்ட காட்சியே இவர்களை திருமணம் எனும் பந்தத்தில் சேர்த்து வைக்க திட்டமிட காரணமாகியது வேறு இரு கண்களுக்கு.
ஆசைப்பட்ட அந்த ஜோடி கண்கள் இப்போதும் இவர்களை தொடர்ந்து கொண்டிருந்தது. ஏனெனில் அந்தக் கண்களுக்கு சொந்தக்காரர் வாணியின் அம்மா.

ஆம் பெற்றோர் வர வேண்டிய விழாவான இதற்கு வாணியின் அப்பாவுக்கு விடுப்பு எடுக்கும் சூழல் இல்லை என்பதால் யாரும் வருவதாய் முதலில் திட்டமில்லை.

ஆனால் நேற்றைய நிகழ்வை இரவு வாணியின் சௌந்தர் மாமா மூலம் கேள்வியுற்றதும், வாணியின் அப்பாவுக்கு தன் மகளை தன் மனைவியாவது சென்று பார்த்து வர வேண்டும் என தோன்றிவிட்டது.

“நானும் ரவியுமா சமாளிச்சுப்போம், போய் வாணிக்குட்டிய பார்த்துட்டு வந்துடேன், மத்த பேரெண்ட்ஸ் எல்லாம் வந்துருப்பாங்க, இவளுக்கு இன்னும் என்னவோ போல இருக்கும்” என்று தன் மனைவியை காலையில் ஃப்ளைட் ஏத்திவிட்டுவிட்டார்.

கடைசி நிமிடம் வரை இந்த திட்டம் உறுதியாய் இல்லை என்பதால் ஃப்ளைட் ஏறும் வரை வாணியிடம் இதை சொல்லவில்லை. அடுத்து விஷயத்தை சொல்ல அழைத்தால் வாணிதான் ஏற்கனவே கிளம்பி வந்திருந்தாளே. ஆக லிசியிடம் தகவல் தெரிவிக்கப்பட, விமான நிலையத்துக்கு தனது அத்தைக்கென கார் அனுப்பி வைத்த லிசி, இது வாணிக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என சொல்லாமல் வைத்துக் கொண்டாள்.

ஆக நேரிலேயே வந்து நிற்கிறார் வாணியின் அம்மா. மகளுக்கு இன்னும் விஷயம் தெரியாது.

அப்படி அவர் காரில் வந்து இறங்கும் நேரம் கண்ணில் விழுகிறது அந்தக் காட்சி.

கல்யாணக் கோலத்தில் மகள். பக்கத்தில் மாப்பிள்ளை போல் உடையிலும் உருவிலும் ஒருவன்.

எப்படி இருக்கிறதாம் அவருக்கு??!

தவறாக எதுவுமே இருக்காது என்ற முழு மொத்த நம்பிக்கை இருந்தாலும் அடிவயிற்றில் அவசியமற்ற அலைப் பிரட்டல்கள். மகளுக்கும் திருமணம் வரும் என்ற நினைவே சற்று பிரளயபடுத்துகிறதே!

நேருக்கு நேராய் யாரையும் கண் பார்த்து பேசும் தன் மகள் அவளது பார்வையை பெரும்பாலும் தன் தோழியின் புறமாய் செலுத்தி இருக்க, அவ்வப்போது மட்டுமே அந்த ஆடவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ முகத்தில் சின்னதாய் சிரிப்பும் கேலியும் துலங்க எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறான்.

இப்படித்தான் இங்கிருந்து பார்க்கத் தெரிகிறது அந்த காட்சி.

பார்க்கப் பார்க்க பயம் தாண்டி ஒருவித பாந்த உணர்வு அவருக்குள். பொதுவாய் அன்னிய ஆண்களின் முன்னிலையில் வெட்ட வரும் கத்தி போல நிற்க்கும் தன் மகளிடம் பாய்ந்து கிடக்கும் இயல் வகை பெண்மையின் தன்மைகள், அவள் இந்த உறவில் இயல்பாகவே பாதுகாப்பாய் உணர்கிறாள் என்பதை சுட்டிக் காட்ட,

கேலி துலங்கினாலும் அதையும்விட அந்த ஆண் மகனிடம் காணக் கிடைக்கும் அக்கறைப் பார்வைகளும், பத்திரப் படுத்தும் வகை நடவடிக்கைகளும்,

விடை பெற்று தன் கார் புறமாக அவன் சென்று விட்டாலும் வாணியும் பபிதாவும் யாருமற்ற இந்த மைதானத்திலிருந்து மக்கள் கூட்டமாயிருக்கும் இடம் சென்று சேரும் வரை அவர்களை கவனித்திருந்துவிட்டே, அவன் தன் வேலையை கவனிக்க சென்ற பாங்கும்,

நம்ம அண்ணா வீட்டு விஷேஷம் எதிலயோ இந்தப் பையனப் பார்த்திருக்கமே? எல்லோர்ட்டயுமே நல்லா பழகினதா வேற நியாபகம். லிசி அம்மா வகைல சொந்தக்கார பையனா இருப்பானோ? வாணிக்கு இந்த பையன பார்க்க சொல்லி சௌந்தர் அண்ணாட்ட கேட்கலாமோ? இப்படியெல்லாம் சிந்தனையை தானாய் பிறப்பிக்கிறது அவரிடம்.

வாணியும் விசாகனும் விரும்புவதாகவெல்லாம் அவர் நினைக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு மணம் பேசி முடித்தால் நலமாயிருக்கும் என நம்பினார்.

அன்று மாலை ஒரு மூன்று மணியளவில் விழா முடிவு பெற, ஐந்து மணிவாக்கில் மொத்த வளாகமும் நிசப்தம் என்ற நிலைக்கு வந்திருந்தது. வீட்டிலிருந்து கல்லூரி வந்து போகும் மாணவ கூட்டம் மட்டுமல்ல விடுதி மாணாக்கரும் யாரும் இங்கு இல்லை என்பதால் வந்த நிசப்தம் இது.

டேஸ்காலர் அனைவருக்கு இன்று வீடு திரும்ப பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.

விடுதி மாணவர்களின் பெற்றோர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்ததால் அவர்களுக்கும் அருகிலிருக்கும் முக்கிய பேருந்து நிலையமான திருநெல்வேலி சென்று சேர கல்லூரியிலிருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் மாணவ மாணவியரும் உடன் சென்று தங்கள் பெற்றோரை வழி அனுப்பிவிட்டு மீண்டும் கல்லூரி திரும்ப வகை செய்யப் பட்டிருந்தது. ஆக ஏறத்தாழ கல்லூரி செக்யூரிட்டிகள் தவிர யாருமே வளாகத்தில் இல்லை என்ற நிலை.

வாணியின் அம்மாவும் கிளம்பிக் கொண்டிருந்தார். லிசியின் காரில் அவர் தூத்துகுடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானம் ஏற வேண்டும்.

அம்மா இவளிடம் விடை பெறும் போது ஏனோ மற்ற எல்லா காலத்தைவிடவும் இன்று வாணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இதில் கிளம்ப வேண்டிய கார் அருகில் வரவும், எப்போதும் அவள் இப்படி நடந்து கொள்பவளெல்லாம் இல்லை, ஆனால் இன்று அம்மாவைக் கட்டிக் கொள்ளத் தோன்றியது. கண்ணில் அதாய் நீரேறியது.

பொது இடத்தில் வைத்துதானே பேசமாட்டேன் என்றிருந்தான், ஆக விசாகனும் அங்குதான் நின்று கொண்டிருந்தான். அவனது பார்வை வாணியின் முகத்திலேயே இருக்க, அவனுக்கு வாணியின் நிலை புரியாமல் இல்லை.

“லிசிக்கா நீயும் வாணியும் கூட தூத்துகுடி வந்துட்டு வாங்க, இங்க ஹாஸ்ட்டல்ல யாருமே இருக்க மாதிரி தெரியல, நீங்க மட்டும் தனியா இருக்க வேண்டாம்” என திட்டத்தை மாற்றினான்.

“திரும்பி வர முன்ன பின்ன ஆகும், ட்ரைவர இழுத்தடிக்க வேண்டாம், நான் என் கார எடுத்துட்டு வரேன்” என கிளம்பினான்.

அம்மா கிளம்புவதைக் கண்டு முகம் வாடி நிற்கும் வாணி அவ்வளவு நேரமாவது அம்மாவுடன் இருக்கட்டுமே என்பது அவனுக்கு. அதோடு நேற்றைய நிகழ்வுக்குப் பின் கல்லூரியில் வாணியையும் லிசியையும் தனியாக விட்டு வைப்பது எவ்வளவு சரி என்றும் இருக்கிறது.

வாணியோ இனி இவனுடன் பழகும் தருணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என இன்று காலைதான் முடிவு செய்திருக்கிறாள், ஆனால் இப்போதே அதை செயல்படுத்த வகை தெரியாமல் நின்றாள்.

லிசியும் வெளியே செல்ல சம்மதிக்கும் போது இவள் மட்டுமாக மொத்த பில்டிங்கில் இருக்கலாம் என முடிவெடுக்க முடியாதே!

என்ன செய்யலாம் என்ற கேள்வி பின் மனதில் ஓடிக் கொண்டிருக்க, இவள் அம்மாவிடம் பேசியபடி விசாகனின் காருக்காக காந்திருந்த அந்த நேரம் ஓட்டமும் நடையுமாய் இவர்களிடம் வந்தாள் அவள்.

ரவளி!

ரவளியைப் பார்த்த முதல் காட்சியிலேயே விதமாகவும் மற்றும் வீரியமாகவும் தாக்கப்பட்டாள் வாணி.

ஏனெனில் இரு கை கூப்பி திருத்தமும் முறையுமாய் வணங்கியபடி, “வணக்கம் ஆன்டி! எப்படி இருக்கீங்க? என்னை நியாபகம் இருக்கா ஆன்டி? முன்ன லிசி அக்கா வீடு பாபநாசத்துல இருந்தப்ப பக்கத்துல இருந்தோம். அப்போ லிசிக்கா வீட்டுக்கு வர்றப்ப உங்கள வாணிக்காவெல்லாம் பார்த்துருக்கேன்” எனதான் தன்னை வாணியின் அம்மாவிடம் அறிமுகம் செய்து கொண்டாள் ரவளி.

அதில் அத்தனை மரியாதையும் பண்பும் எழுந்து நின்றது.

இதே இப்படித்தான் இன்று இவள் அம்மாவைப் பார்க்கவும் விசாகனும் கூட கை கூப்பி வணங்கி பேச்சை துவக்கினான்.

யாரையும் வாங்க, நல்லா இருக்கீங்களா என்றெல்லாம் வரவேற்பவள்தான் வாணி, ஆனால் இந்த கை குவிப்பு, இந்த வணக்கம் இதெல்லாம் இவள் பழகியதில்லையே!

இதையும் விட இவளைத் தாக்கி தண்டனை கொடுத்த விஷயம் அந்த ரவளியின் உருவம்.

ரவளிக்கு சற்று குண்டான உடல்வாகுதான் என்றாலும் மிக லட்சணமான முகத்தோடும், விசாகனிலிருந்து எடுத்து செய்து வைத்தது போல அவனின் அதே நிறத்தோடும் இருந்தாள் அவள்.

காதில் சிறியதாய் ஜிமிக்கிகள், கழுத்தில் குட்டையாய் ஒரு செயின். கீற்று போல ஒற்றை வளையல் ஒரு கையில். மறு கையில் சின்னதாய் வாட்ச். சின்னதே சின்னதாய் நெற்றி மத்தியில் ஒரு பொட்டு. கீழாய் ஒரு சிறு சந்தனத் தீட்டல்.

அதோடான அவளது அலட்டல் இல்லா புன்னகை.

அவளது பாவாடை தாவணிக்கு அத்தனை அத்தனை பாந்தமாய், அவ்வளவு குடும்பப் பாங்காய் இருந்தாள் ரவளி. நிச்சயமாய் வெகு அழகுதான் அவள்.

இதில் எப்படி அவள் அழகாய் இல்லை என இவள் நினைத்தாள்??? வெறும் பின்னாலிருந்து பார்த்து ஒருத்தியை அழகில்லை என முடிக்கும் அளவு இவள் எப்போது அறிவாளியானாள்??

காரணம் பொறாமைதானே??!!!

இந்த இறுதிச் சிந்தனையில் அடுத்து வாணியின் விசாகன் மீதான தடுமாற்றம் மொத்தமாகவே செத்துப் போனது.

‘என் குணாதிசயத்தை கீழே கொண்டு போகும் எதுவும் எனக்குள் வரவே கூடாது.!!!!’ முற்று வைத்தாள் வாணி.

ரவளி பாபநாசத்திலுள்ள அவள் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாளாம். அவளது அப்பாவுக்கு இனிமேல் விஷயம் சொல்லி அவர் இங்கு வந்து சேர தாமதமாகுமாம்.

இங்கு மொத்த கட்டிடத்திலும் யாருமே இல்லையாம். அதனால் “லிசிக்கா தப்பா எடுத்துக்காதீங்க, என்னையையும் உங்க கார்லயே ட்ராப் பண்ண சொல்லிடுங்களேன். ப்ளீஸ்” என வேண்டிக் கொண்டிருந்தாள் அவள்.

‘முன்ன இருந்தே பங்க்ஷன் மூனு மணிக்குள்ள முடிஞ்சிடும்னு சொல்லி இருக்காங்க, இருந்தும் காலைல அவ அப்பாட்ட எப்ப முடியும்னு தெரியாதுன்னு இந்த ரவளி சொன்னா, இப்பவும் விழா முடிஞ்சு ரெண்டரை மணி நேரம் கிட்ட ஆகப் போகுது, இப்ப வரைக்கும் சொல்லலையாம், ஏன்?’ கேட்டுக் கொண்டது எதையும் ஆராயும் வாணியின் மனம்,

‘ரவளிட்ட இனி தப்பு கண்டு பிடிச்ச உன்ன கழுத்த நெரிச்சு கொன்னுடுவேன்’ என்ற இவளின் பதிலில் கப்சிப் என்றும் ஆகியது.

ஆம் ரவளியிடம் குறை கண்டு பிடிப்பது என்பது தன்னை கீழ்த்தரப்படுத்திக் கொள்ளும் செயலாகப்பட்டது வாணிக்கு. அடுத்து தன் முழு கவனத்தையும் தன் அம்மா மீது மட்டுமாக நிறுத்திக் கொண்டாள் அவள்.

ஆனால் விஷயம் அங்கோடு முடிந்தால் தானே?!
“வாணிக்கா என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா? நீங்க நிலவே மலரே சாங் சூப்பரா பாடுவீங்க அப்போல்லாம், கோமு உங்கள பாடச் சொல்லி கேட்பா” என இவளிடமும் பேசினாள் ரவளி.

அவளின் இவளுக்கான கேள்வியை மட்டுமாய் கணக்கிலெடுத்து பதில் கொடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்த வாணி, இந்தக் கேள்வியில் இயல்பாகவே தன் பால்யத்துக்கு திரும்ப,

“வாவ் கோமுவ உங்களுக்கு தெரியுமா? எனக்கு அவள நல்லா ஞாபகம் இருக்கு. உங்களத்தான் ஒரு தடவதான் பார்த்துருப்பனோ? சாரி, கோமு எப்படி இருக்கா?” என மனதிலிருந்தே விசாரித்தாள்.

வெறுப்பெனும் சுவர் ஒன்றும் பிறப்பில் வருவதில்லையே! ஒரு வகையில் விசாகன் விஷயம் தாண்டி ரவளியிடம் இயல்பாக முடிந்தது வாணிக்கு.

அடுத்து அந்த கோமுவுக்கு பள்ளிப் படிப்பு முடியும் முன்னும் நடந்த கல்யாணம் பற்றி விவரித்தாள் ரவளி. நட்பு துளிர் விட்டிருந்தது இவர்களது வார்த்தைகளில்!

இதில் அந்நேரம் தன் காரில் அங்கு வந்த விசாகன் கண்களில் கமழ்ந்தெழுந்த ஆவல், ஆனந்தம் மற்றும் ஆச்சர்யத்தை அப்படியே காணாதது போல காற்றில் விட்டாள் வாணி.

அதோடு மட்டுமல்லாமல் காரில் ஏறியதும், “ஈவ்னிங் டைம் வெளிய பார்க்க சூப்பரா இருக்கும்” என்றபடி லிசி கொண்டு வந்திருந்த ஃபைனாகுலரை தன் கையில் எடுத்துக் கொண்டாள். பயண நேரத்தை அதை வைத்தே கழிக்க திட்டம்.

ரவளி முதலிலேயே ஏறி கடைசி இருக்கையில் தனியாக சென்று அமர்ந்து கொண்டாள். அடுத்து குனிந்த தலை நிமிரவில்லை வாய் திறக்கவில்லை அவள். மொபைலே முழு உலகம்.

இப்போது இவர்கள் இருந்த கார் ஒரு டர்ன் அடித்து கல்லூரி வெளிவாசலை நோக்கி திரும்ப, அதில் ஒரு சுற்றாக கல்லூரி மைதானமே இவள் ஃபைனாகுலருக்குள் வந்து போக, சற்று முன் ரவளி ஓடி வந்தாளே அந்த திசையில் இருந்து ஒருவன் இவர்கள் காரைப் பார்த்துக் கொண்டிருப்பது வாணியின் பார்வையில் கிடைக்கிறது.

‘யாருமே இல்லைனு இந்த ரவளி சொன்னாளே!’ என ஒரு கணம் வாணியின் உள்ளுணர்வு உறுத்தினாலும், இந்த நிகழ்வையும் அப்படியே அவள் மனதிலிருந்து உதறி எறிந்தாள். யாரைப் பத்தியும் இவள் நியாயம் தீர்க்க தேவையே இல்ல!

ஃபைனாகுலரே சரணம்!

லிசியும் வாணியின் அம்மாவும்தான் அடுத்து சளசளத்துக் கொண்டு வந்தனர். விசாகனும் இயல்பாய் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தான். அம்மாவுக்கு விசாகனை பிடித்திருப்பது வாணிக்கு புரியாமல் இல்லை.

இதில் ஒரு கட்டத்தில்,

“அம்மா கூட டைம் ஸ்பென்ட் செய்யலாம்ல, அவங்க கிளம்புறாங்கன்னு அவ்ளவு ஃபீல் செய்த?” என விசாகன் இவளை கேட்க, அப்போதுதான் ஃபைனாகுலரைவிட்டு தன் பார்வையை வெளியே எடுத்தாள் வாணி.

“அம்மா கூடதானே ஸ்பென்ட் செய்றேன்” என்றபடி தன் ஒரு கையால் இப்போதுவரை பற்றி இருந்த தன் அம்மாவின் கையை தூக்கி அவனிடம் காட்டியவள்,

அவன் அதற்கு என்ன வகையில் பதில் எக்க்ஷ்ப்ரெஷன் கொடுத்தான் என்பதைகூட ரியர்வ்யூ கண்ணாடியில் பார்க்காமல், மீண்டும் மீ அன்ட் மை பைனாகுலர் மோடிற்கு சென்றுவிட்டாள்.

அடுத்ததாக கார் சென்று நின்ற இடம் ரவளியின் வீடு.

இந்த வீட்டையும் வாணி எப்போதோ பார்த்திருக்கிறாள். பெரிய கோட்டை சுவர் போல சுற்றுச் சுவரும், உள்ளே இரண்டு ஓரங்களில் பழையகால அரண்மனையை நியாபகப் படுத்தும் இரண்டு ப்ரமாண்ட கட்டிடங்களுமாய் அது.

அதன் கேட்டுக்கு அருகில் வெளியே காரை நிறுத்தி இருந்தான் விசாகன்.

“வாங்க லிசிக்கா, உள்ள வாங்க ஆன்டி, வாங்க வாணி” இவர்களை மட்டுமாய் தன் வீட்டிற்கு அழைத்தாள் ரவளி.

“இல்லமா நேரமாகிட்டு இன்னொரு நாள் பார்ப்போமே” லிசி புன்னகை மாறாமல் மறுக்க,

“அச்சோ அக்கா, அதெல்லாம் இல்ல” என மறுப்பை ஏற்க மறுத்த ரவளியின் முகத்தில் உண்மையாகவே தவிப்பு.அதைப் பார்க்கவும்,

“நீங்க கார்ல வெயிட் செய்ங்க அத்த, நானும் வாணியும் போய் ரவளி அப்பாட்ட நாங்கதான் வந்து ட்ராப் செய்தோம்னு சொல்லிட்டு வந்துடுறேன்” என்றபடி லிசி இறங்கிவிட்டாள்.

வேறு வழியின்றி வாணியும் இறங்க வேண்டியதானது. கூப்பிடுவது லிசியல்லவா?!

அந்த வீட்டின் ப்ரமாண்ட கேட்டில் காணப்பட்ட ஒரு குட்டிக் கதவை திறந்து கொண்டு இவர்கள் மூவரும் உள்ளே செல்ல, அங்கு இட ஓர பங்களாவின் போர்ட்டிகோவை ஒட்டி சின்னதாய் ஒரு வீடு. அதன் வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்த லுங்கி பனியன் மனிதர் என்ன ஏதென பார்த்தபடி எழுந்திரித்தார்.

ஒரு கணம் திகைத்த அவரிடம், “அப்பா லிசிக்கா, இது அவங்க அத்தப் பொண்ணு வாணி, அவங்களும் எங்க காலேஜ்லதான்பா படிக்காங்க” என அறிமுகப் படுத்தினாள் ரவளி.

இப்போது இழுத்து வரவைத்த புன்னகையுடன் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்ன அவர், “நல்லா இருக்கீங்களா? அப்பா சுகமா லிசி?” என குசலம் விசாரித்தார்.

கூடவே சேர்த்து “ரவளிய கொண்டு வந்து விட்டதுக்கு தேங்க்ஸ். மழ வர்றாப்ல இருக்கு, உங்களுக்கும் வேலை இருக்கும்” என அப்படியே வழியும் அனுப்பினார்.

இதற்கு மேல் இவர்கள் அங்கு எப்படி நிற்கவாம்?

லிசியோடு இவளும் திரும்பி காருக்கு நடந்தனர். முதலில் காரில் ஏறிய லிசிதான் அதைப் பார்த்தாள்.

“இந்த ரவளி தன் மொபைலை விட்டுட்டுப் போயிருக்கு.” என்றபடி சீட் அருகில் கிடந்த அந்த ரெட் மீயை எடுத்தாள்.

ரவளி ஹேண்ட் பேக் என எதுவும் கொண்டு வரவில்லை. ஒரு ஃபோல்டர் போல எதோ மட்டும் கையில் வைத்திருந்தாள். அதோடு மொபைலை சேர்த்துப் பிடித்தபடி இறங்கும் போது மொபைல் நழுவி விழுந்தது தெரியாதிருந்திருக்கும்.

“குடுங்க நானே போய் குடுத்துட்டு வந்துடுறேன்” என வாங்கிக் கொண்டு வாணி மீண்டுமாக அந்த வீட்டுக்குப் போனாள். லிசிக்கு அந்த வீட்டுக்குள் வருவது உவப்பாய் இல்லை என இதற்குள் வாணிக்கு புரிந்திருந்ததே காரணம்.

இவளுக்கும்தான் உவப்பாய் இல்லை. இருந்தாலும் லிசிக்காக இவள் செல்வாள்தான். இவள் அங்கிருந்து எதையும் வாங்கவா போகிறாள்? கொடுக்கத்தானே செல்கிறாள்.

கேட்டிலிருந்த சிறு கதவு சரியாய் மூடப் படாமல் இருந்ததால், அதன் மீது கை வைத்து தள்ளும் போது சத்தமின்றி திறந்து கொள்கிறதென்றால், அதை தள்ளிய விதத்தில் தவறுதலாய் கையிலிருந்த மொபைலை நழுவவிட்டு மீண்டுமாய் கேட்ச் பிடித்தாள் வாணி.

இவள் கைபடவும் வெளிச்சமுற்ற அதன் ஸ்க்ரீனில் தெரிகிறது அது. யாரிடமோ ரவளி வாட்சப்பிக் கொண்டிருந்த செய்திகள்.

‘உன்னால அந்த பொறுக்கி கார்ல போக வேண்டியதாகிட்டு’

‘என்னால இல்ல, மழையால’

‘நீதான மழை வந்துடும்னு சொன்ன, ஆன வரலையே,’

‘நான் ஒன்னும் தமிழ்நாடு வெதர்மேன் இல்ல, சரியா சொல்றதுக்கு’

‘போடா லூசு, எவளையோ பிக்கப்பண்ண போறன்னு சொல்லு’

‘ஹி ஹி புரிஞ்சா சரி’

கல்லூரியில் இவர்கள் கார் வட்டமடித்து திரும்புகையில் வாணி ஃபைனாகுலரில் பிடிபட்ட அந்த முகம் ஃபோட்டாவாய் வல ஓரத்தில், ஸ்டீஃபன் அண்ணா என்ற அடையாளத்தோடு உட்கார்ந்திருந்தது.

ஒரு கணம் தீகங்கை தன் மென் வயிற்றில் கொட்டியது போல் இருந்ததுதான் வாணிக்கு. பின்ன விசாகன் பொறுக்கியாம். கடைசி நிமிடத்தில் சொல்லாம கொள்ளாம கழட்டிவிட்டுட்டு வேற பொண்ண பிக்கப் செய்யப் போறவன் அண்ணாவாம்.

ஆனாலும் ஆனாலும் ஆனாலும்…. ரவளியை குறை சொல்ல இவள் யார்???!!

விசாகன் முன்பு லிக்கர் சாப்பிடுவானாம், படிப்பிலும் சரி கிடையாது போல, நட்பு பட்டாளம் என ஒரு 21 பேரை கூடவே தங்க வைத்திருப்பதாக வேறு சொல்கிறான். சற்று முன்வரை கோபம் வந்தால் கை நீட்டும் சுபாவம் வேறு இருந்திருக்கிறது. இது ரவளிக்கு விசாகன் பற்றி என்ன எண்ணத்தைக் கொடுத்ததோ? அவன் அவளிடம் பேசிக் கொள்ளும் போது இதெல்லாம் தெளிந்து விடும்தானே!

அதோடு லிசியின் காரில் கிளம்புவதாக நினைத்துதானே ஓடி வந்தாள்?

சற்று நேரம் அசையாமல் நின்று தன்னை சமனப் படுத்திய வாணி,

ஏற்கனவே கேட்டிலிருந்த கதவை திறந்திருந்ததால், அதன் வழியாய் உள்ளே நுழைய,

“என்ன ரவளிமா அப்ப இருந்து கூப்டுறேன் நீ உன் ஃபோன எடுக்கவே இல்ல. நான் கூப்ட வந்திருப்பேன்ல” என ரவளியின் அப்பா கேட்பதையும்,

அதற்கு “ஜ்ஸ்ட் இப்பதான்பா ஃபங்க்ஷன் முடிஞ்சிது, செம்ம லேட், அதான் காலேஜே எல்லாரையும் கொண்டு போய் விடுறாங்க, லிசிக்கா இப்பதான உடம்பு சரியாகி வந்த, என்கூட கார்ல வான்னு ரொம்பவும் கேட்டுகிட்டதால அவங்க கூட வர வேண்டியதாகிட்டு. என்ன இருந்தாலும் அவங்க காலேஜ்லப்பா அது? ரொம்ப முறிச்சுக்கிறது நல்லது இல்லதானப்பா” என ரவளி கொடுத்த அருமையான பதிலையும் காதில் வாங்க நேரிட்டது.

வெரி குட்!!! வாணியின் மனம் நரக எரிச்சலோடு நக்கலாக சொல்லிக் கொள்ள, ரவளி மீது துளிர் விட்டிருந்த இவளது நட்பு செடி அங்கேயே நூலாம்படையில் தூக்கிட்டு செத்துப் போனது.

“ம்க்கும்” தன் வருகையை அறிவித்த வாணியை நோக்கி இப்போது ஓடாத குறையாக வந்தாள் ரவளி.

“உங்க மொபைல்” இவள் நீட்டிக் கொண்டு நிற்க, வந்து பிடுங்காத குறையாக எடுத்துக் கொண்டாள் ரவளி.

ஒரு “பை” யை உதிர்த்துவிட்டு வேகமாக வெளியே வந்துவிட்டாள் வாணி.
இவள் வந்து காரில் ஏறும் போது, இவள் முகத்தைப் பார்க்கிறான் விசாகன் என்பதை வாணியால் உணர முடிந்தது. ஆனால் அவன் புறம் தன் பார்வை கோட்டை துளி அளவு கூட திருப்பவில்லை இவள்.

‘போடா இவனே!!!’

விசாகன் மீது வெடித்துக் கொண்டு வரும் கரிசனையும், அதற்கு கொஞ்சமும் குறையாமல் வரும் கோபமும் சேர, எதுவும் சொல்லாமல் தன் அம்மாவின் அருகில் உட்கார்ந்த வாணி, அவர் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் தோளில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.

தான் விசாகனை விரும்புவதாக இதுவரை நினைக்காதிருந்திருந்தால் வாணி ரவளியின் இந்தக் காரியங்களைக் குறித்து விசாகனிடம் சொல்லி இருப்பாளாக இருக்கும். ஆனால் இப்போதைய இந்த நிலையில் ரவளியைப் பற்றி அவனிடம் குறை சொல்ல இவளுக்கு சுத்தமாய் மனம் இல்லை.

இவள் ஏதோ பொறாமையில் அவர்களைப் பிரித்துவிட்டதாக இவளுக்கே கூட பின்னாளில் தோன்றக் கூடும்.

தர்ம தேவதையின் கண்கள் கட்டப்பட்டுத்தான் இருக்க வேண்டுமாம். ரவளி விஷயத்தில் கண் மூடிக் கொண்டாள் பெண்.

இதிலெல்லாம் கண்ணைத் திறந்து வைத்து பார்க்க வேண்டியது விசாகன்தான்.

அடுத்து தூத்துகுடி விமானநிலையத்தில் வாணியின் அம்மாவை வழி அனுப்பிவிட்டு திரும்பத் துவங்கும் வரைக்குமே விசாகன் வாணியிடம் ஒரு வார்த்தைப் பேசவில்லை.

திரும்பி வரும் போதும், ஆரம்பத்தில் அவன் பேசவில்லை. வரும் வழியிலேயே ஒரு ஹோட்டலில் ஒரு நாற்பதைம்பது போல் எண்ணம் ப்ரியாணிப் பார்சல் வாங்கிக் கொண்டவன், இன்னொரு கடையிலிருந்து ஏற்கனவே சொல்லி வைத்திருந்த குழந்தைகள் உடை, பெட்ஷீட் நிரம்பிய பைகளையும் எடுத்துக் கொண்டு,

வழியில் தென்படும் தேவையுள்ள முதியவர், குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் காரை நிறுத்தி இறங்கிப் போய் ஆளுக்கொரு பார்சலாக கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எவ்வளவு நேரம்தான் இவளும் இறுகிப் போய் இருக்கவாம்?

ஒவ்வொரு முறை அவன் இறங்கிப் போகும் போதும், அவன் சென்று திரும்பும் வரை நடக்கும் காட்சியை பார்வை அகற்றாமல் பார்க்கத் தோன்றும்தானே இவளுக்கு?

இவள் முகத்தைப் பார்த்து லிசி என்ன புரிந்தாளோ? “சார் ரொம்ப சந்தோஷமாகிட்டாலும் இப்படித்தான் செய்வார், எக்கசக்கமா ஸ்ட்ரெஸ் ஆகிட்டாலும் இப்படித்தான் செய்வார்” என்றாள் சின்ன கேலியோடு. அதோடு இழையோடின பெருமிதம் வாணிக்குப் புரியாமல் இல்லை.

“அவனுக்கு எந்த மதம் எந்த கடவுள்னு குறிப்பிட்ட எது மேலயும் நம்பிக்கை கிடையாது. ஆனா கடவுள்னு ஒருத்தர் இருக்கார், அவர் பிள்ளைங்களுக்கு செய்தா அவருக்கே செய்த மாதிரி அப்டின்னு இப்படி ஒரு நம்பிக்கை” லிசி இன்னுமாய் தொடர,

அதை காருக்கு வெளியே ஒரு முதியவரிடம் எதையோ பொறுப்பாய் பேசியபடி நின்று கொண்டிருந்த விசாகனைப் பார்த்துக் கொண்டே காதில் வாங்கினாள் வாணி.

“நேத்தைய போலீஸ் கேஸ், இன்னைக்கு பங்ஷனுக்கு அப்பா வராம நாமளா நடத்தனும்னு ஆனது, அதோட நிறைய பேர் வெவ்வேற இடத்துல இருந்து நம்ம காலேஜ்க்கு வந்துட்டு திரும்பிப் போகணும்ன்ற சிச்சுவேஷன், இதெல்லாம் சேர்ந்து நேத்துல இருந்து சார் கொஞ்சம் டென்ஷன்.

இதில் பங்க்ஷனும் நல்லா நடந்து, ஒரு சின்ன ஆக்சிடென்ட் கூட ஆகிடாம எல்லாரும் பத்ரமா வந்துட்டு கிளம்பியாச்சுன்னு இவன் இப்படி சுத்திட்டு இருக்கான்” லிசியின் மீதி விளக்கத்தையும் தன் கண்கொட்டி விழிக்காமல் இவள் கேட்டதால் போலும்,

இவள் பார்வையை உணர்ந்தானோ? அனிச்சையாய் இவள் புறமாய் திரும்பிப் பார்த்தான் விசாகன். இவள் பார்ப்பதை கவனித்தும் விட்டான்.

அடுத்து சற்று நேரத்தில் திரும்பி வந்து காரை எடுத்தவன் இப்போது இவளிடம் பேசினான்.

“நாமளும் அப்படியே சாப்டுட்டு போய்டலாமா வாணி? நீ இதுவரைக்கும் பார்த்துருக்கவே மாட்ட, அப்படி ஒரு ஸ்பெஷல் ப்ளேஸுக்கு கூட்டிட்டுப் போறேன்” இதைத்தான் கேட்டான்.

வலிக்கும் மனதுக்கு ஆறுதல் சொல்ல முனையும் ஒரு தொனி அவன் வார்த்தைகளில் புதையுண்டு கிடப்பது வாணிக்கு புரியாமலில்லை.

காலைக்குப் பின் இது வரைக்கும் அவனை தான் ஏறெடுத்து பார்க்கவே இல்லை என்பதை இப்போதுதான் உணர்ந்தாள் பெண்.

இவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்???!!! ஆனாலும் எது எப்படியாயினும் இவனிடம் இவள் இனி எப்போதும் சொந்த விஷயங்களை துளி அளவும் பேசுவதாய் இல்லை.

முடிவு செய்தவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

இவள் மனதில் என்ன என லிசிக்கு எப்படி தெரியுமாம்?

“டேய் திரும்பவும் நான்வெஜ்ஜா…? நோஓஓஓ… மதியம் சாப்ட்டது இன்னுமே நெஞ்சுக்குள நிக்குது” இலகு மன நிலையில் இருந்த லிசி அதே வகையில் பேசிக் கொண்டிருந்தாள்.

“கவலையே படாத உனக்கு ரசம் ரைஸ் ஏற்கனவே வாங்கிட்டேன். நாம எந்த ஹோட்டலுக்கும் போகல, இந்த கொடுக்காப் புளிய பாரு, அப்ப இருந்து டல்லடிக்குது, அதுக்காக ஒரு குட்டி பிக்னிக்” லிசிக்கு பதில் சொல்லிக் கொண்டே காரை எதோ காட்டுப் புற சாலைக்குள் திருப்பினான் விசாகன்.

இதெல்லாமா விஷயம்?

“என்னதூஊஊ கொடுக்காப் புளியா???!!” வாணி கேட்பாள்தானே!.

என்னதான் இவள் மன நிலையாக இருக்கட்டுமே! இந்தப் பெயரையெல்லாம் மௌனமாக எப்படி இவள் ஆமோதிப்பதாம்?

“இப்படில்லாம் பேர் வச்சா எனக்கு பிடிக்காது”

“நான் என்ன கொடுக்கா புளி மாதிரியா இருக்கேன்?” இவள் இன்னுமாய் எகிற,

“ப்ச் அவ்ளவு அழகால்லாம் இல்லதான், அதுக்காக என்ன செய்ய?”

இப்படி அவன் பதில் சொல்வான் என அவள் எதிர் பார்த்தாளாமா என்ன?

“உர்ர்ர்ர்”

“கோபபடுறப்ப கூட ம்ஹூம் கொடுக்காப்புளி ரேஞ்சுக்கே வரலையே!!” அவன் இன்னுமே சீண்ட,

“உங்களுக்கு கண்ணு தெரியாதுன்னு நல்லா தெரியுது” இப்படி வந்தது வாணியின் பதில்.

அவன் அதற்கு எதுவும் சொல்லாமல் இப்போது காரை நிறுத்தியவன்,

துள்ளலாய் பின் புறம் நோக்கி திரும்பி அமர்ந்து “இப்ப வெளிய பாருங்க மேடம்ஜி, எனக்கு எவ்ளவு நல்லா கண் தெரியுதுன்னு தெரியும்” காரின் கதவுப் புறத்தை நோக்கி வாணியிடம் கை காட்டினான்.

அதுவரைக்கும் ட்ரைவ் செய்து கொண்டிருக்கும் அவன் பின் தலையை பார்த்தே பதில் சொல்லிக் கொண்டு வந்த வாணி அப்போதுதான் சற்றாய் அவன் மீதிருந்து கவனத்தை திருப்பினாள்.

காரின் முன் கண்ணாடி வழியாக காணக் கிடைக்கிறது அந்த காட்சி.

இமைக்க மறந்து நின்று போனாள் பெண்.
முழுமொத்த இரவுப் ப்ரதேசம் அது. அவள் இதுவரை பார்த்தே இராத அளவுக்கு பெரும் வட்டமாய் தரைக்கு வெகு அருகில் நின்றது வெள்ளி நிலா. அதை சற்றும் சட்டை செய்யாது கீழாய் ஓடிக் கொண்டிருக்கிறது தாமிரபரணி. அதன் ஒருகரையில் சற்று உயரமான இடத்தில் நின்றிருக்கிறது இவர்களது கார். மறுகரை முழுவதும் மரங்கள்.

“இதான் நான் சொன்ன ப்ளேஸ்” என்ற விசாகன்,

சற்று நேரம் அந்த காட்சியில் அசைவற்று லயித்துப் போய் கிடக்க இவளை அனுமதித்தவன்,

“உங்க டெக்னிக்தாங்க குருஜி, நல்ல விதமா அடுத்தவங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி கவனிச்சுட்டு, அடுத்து கேட்க வேண்டிய கன்னா பின்னா கேள்வியெல்லாம் கேட்கிறது” என தன் செயலை காரணப்படுத்தியபடி,

“இப்ப சொல்லு வாணி, என் மேல அப்படி என்ன கோபம்?” என நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

வாணி இதற்கு என்ன சொல்வாளாம்?

“காலைல அந்தப் பைதா இனி நாம பேசவே வேண்டாம்னு சொல்றா, நீ ஒரு வார்த்தை கூட மறுப்பா சொல்லல, அடுத்தும் அம்மா என்ட்ட பேசுறாங்க, நீ ஒரு வார்த்தை சேர்ந்து பேசல, கார்லயும் சைலண்ட் மோட், ரவளி வரவும் கேட்கவே வேண்டாம். ஹப்பா அதுவும் அவங்க வீட்டுக்கு போய்ட்டு வெளிய வந்தியே…”

அவன் இவளை குற்றப் பத்திரிக்கைதான் வாசித்துக் கொண்டிருக்கிறான். குரலில் கோபமும் கூட இருக்கிறதுதான். இருந்தாலும் அவன் எதையெல்லாம் கவனித்து என்னதாய் கேட்கிறான் என்பது இவளுக்குள் ஏன் இத்தனை பிசைவை உண்டு செய்கின்றதாம்?

இந்த கனிவின் பிசைவு காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை. ஆனால் தாயற்ற குழந்தையின் ஏக்கத்தைப் போல் ஏதோ ஒன்றை நினைவுறுத்துகிறதே! அதனால் வந்த நிலை.

ஆனால் இறுதியில் ரவளி என்றதும் சட்டென இறுகிப் போனாள் இவள்.

“எனக்கு தெரிஞ்சு ரவளிட்ட உனக்கு எதோ பிடிக்கல, அதை என்ட்ட சொல்றதுக்கும் உனக்கு மனசு இல்ல, அதனால மொத்தத்துக்கு என்ட்ட பேசாமலே இருந்துடலாம்னு நினச்சுட்ட என்ன?”

இப்படி புள்ளி தப்பாமல் அடிப்பான் என இவள் கனவாவது கண்டிருப்பாளா என்ன? வாணி அமனுஷ்யத்தைக் கண்டது போல் திகைக்க,

லிசிக்கு இதையெல்லாம் அவர்கள் இருவருமாக பேசிக் கொள்வது தான் சரியாக இருக்கும் எனத் தோன்ற, அவளோ இப்போது கதவை திறந்து கொண்டு இறங்க முயன்றாள்.

இருந்த கோபத்தையெல்லாம் இவளுக்காக மட்டும் வைத்திருந்தான் போலும், லிசியிடமோ

“அட அக்கா..! முண்டந்துறை டைகர் ரிசர்வ்குள்ள இருக்கோம்… கரடி புலிக்கெல்லாம் கபாப் ஆகணும்னா மட்டும் இறங்கு” என இலகுவாக சொல்லிக் கொண்டே குறுக்காக கை நீட்டினான் அவன்.

அவ்வளவுதான் நடந்து கொண்டிருக்கும் எல்லாமும் மறக்க

“டேய் என்னடா குண்ட தூக்கிப் போடுற?” என சற்றாய் கூவிவிட்டாள் லிசி.

அவள் கூவலில் விசாகனுமே புரியாமல் விழிக்க, ஆக

“இதுதான நீ சொன்ன பாலம்? கரடி புலி கூடவே லிக்கர்? உயிரோட திரும்பி வரணும்னு எண்ணமே இல்ல என்ன?” இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்தாள் லிசி.

அவ்வளவுதான்!!! இங்கு முழு மொத்தமாய் விரைத்தாள் வாணி. இன்னும் இவன் தண்ணி அடிக்கிறத விடலையா?!! முன்பு அவன் சொல்லிய வகையில் அவன் அதை விட்டுவிட்டான் என புரிந்து வைத்திருந்தாள் இவள்.

லிக்கர் சாப்பிடும் யாரையும் தன் வீட்டுக்குள் கூட அனுமதிக்க மாட்டாள் இவள். அத்தனை அதீத வெறுப்புண்டு அந்தப் பழக்கத்தின் மீது.

“அறிவு அக்கா, இது அது இல்ல, அது தென்காசில எங்க தோப்பு பக்கத்துல இருக்குன்னு சொல்லி இருக்கனே” இன்னும் அவன் இப்படியே பேசிக் கொண்டிருக்க,

“கார எடுங்க, நான் ஹாஸ்டல் போகணும், இப்ப நீங்க எடுக்கலைனா நானே இறங்கிப் போய்டுவேன்” முழு பாலைவன முகத்தில் கங்காய் கமழும் குரலில் சொல்லியபடி இப்போது கார் கதவை திறக்க முயன்றது வாணியின் முறையாயிற்று.

“ஹேய் ஏய்” என்றபடி அவசரமாக சென்ட்ரெல் லாக்கை போட்டு வைத்தான் விசாகன். அவனைத் தவிர இப்போது யாரும் கதவை திறக்க முடியாது.

“அண்ணி, இன்னொரு தடவ எனக்கு இப்படியெல்லாம் யாரையாவது அறிமுகம் செய்து வச்சீங்க…” என லிசியிடம் கொதித்த வாணி,

தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவள்,

“நான் அம்மாட்ட போறேன், பி ஜி படிக்கணும்னு நினச்சதே எல்லா வகையிலும் தப்பு போல,” வேதனையில் துடிக்க அவள் சொல்லிய பாங்கிலும், அவள் கண்ணில் துளிர்த்த நீரிலும்,

சட்டென தன் பக்க கதவை திறந்து கொண்டு இறங்கி இருந்தான் விசாகன்.

லிசி புலிக் காட்டுக்குள் அவன் இறங்கி இருக்கிறானே என “டேய் டேய்” என்றபடி வெளிறிப் போய் பதறிக் கொண்டிருந்த கணங்களில், வாணியோ சற்றும் அசையக் கூட இல்லை.

ஆம் அதுவும் வாணி!!! அவளைப் பொறுத்தவரை குற்றம் என்றால் குற்றம்தான். எந்த வகை எமோஷனல் ப்ளாக்மெயிலுக்கும் இம்மி கூட இறங்கி வர மாட்டாள்.

ஆனால் விசாகன் அவளை மிரட்ட எல்லாம் இறங்கவில்லை. முன் சீட்டிலிருந்தவன், அவள் கண்ணில் நீரைப் பார்க்கவும் தாங்காமல் இப்போது இவள் புற கதவை திறந்து கொண்டு, அவளுக்கு அருகில் வந்து அமர்ந்திருந்தான்.

“ப்ளீஸ் வாணி, அழாத, எதுனாலும் சிரிச்சுகிட்டே என்ன தப்புன்னு சொல்லி புரிய வைக்கிற நீ, இப்ப எதுக்கு இவ்ளவு டென்ஷனாகுற?” அவன் இவள் முகம் பார்த்து கண்ணோடு நோக்கி கேட்க,

இவளோ கண்களை இறுக மூடியபடி, பற்கள் கடிபட “எனக்கு ட்ரெங்கர்ட்ஸ்ட்ட பேசுற பழக்கம் கிடையாது” என அறிவித்தாள்.

“சரி பேசாத, அதுக்கென்ன?” என வெகு இலகுவாக திருப்பிக் கேட்டான் அவன்.

“ஹான்?” ‘நாமதான் விஷயத்தை தப்பா புரிஞ்சு ஓவரா ரியாக்ட் செய்துட்டமோ?’ இவள் கொஞ்சமாய் பேந்த விழிக்க,

“எப்ப தப்புன்னு பட்டுதோ அப்பவே லிக்கர் அடிக்க்ஷனெல்லாம் விட்டுட்டேன்பா… என் காலேஜ் டைம்லயே அந்த பழக்கம் கிடையாது” அவன் கொடுத்த அறிவிப்பில் எதோ உள்குத்து நிச்சயமாய் இருப்பதாக பட்டது வாணிக்கு.

லிசியும் தன் பேக்கால் அவன் பின் மண்டையில் ஒன்று வைத்தாள் இப்போது.

இவள் கண்களையே பார்த்திருந்த அவனோ “நிஜம்மா” என மீண்டும் உறுதி கூறியவன்,

“மாசம் ஒரு சனிக்கிழமை மட்டும்” எனத் தொடங்க,

“சனி நீராடுன்றத எருமை எப்படி புரிஞ்சு வச்சுருக்குனு பாரு” என பிண்ணனி சேர்த்தாள் லிசி.

கொலை வெறி கோபமிருக்கிறதுதான் வாணிக்கு. ஆனாலும் சிரித்துவிடக் கூடாதே என்ற நிலை அவளுக்கு. லிசியின் இந்த வார்த்தைகளின் வேலை அது.

“அறிவு கொழுந்து அக்கா… அவ அழுதுட்டு இருக்கா, நீ வேற ஏன்?” என லிசியை சமாளிக்க முயன்றவன்,

“ப்ளீஸ் ப்ளீஸ் முழுசா பேசவிடு என்னை, அப்றம் நீ என்ன சொல்றியோ சொல்லு” என வாணியிடம் கெஞ்சினான்.

அவன் எத்தனை வியாக்கியானம் செய்தாலும் வாணியைப் பொறுத்தவரை இவளது முடிவில் மாற்றம் வரப் போவதில்லைதான். எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்தப் பழக்கத்தை அவள் ஒத்துக் கொள்ளப் போவதில்லைதான், ஆனாலும் அவனை பேசவே விடமாட்டேன் என்பது சரியாகப் படவில்லை.

ஆக அமைதியாக அவனை முறைத்தபடி இருந்தாள்.

“சொல்லுடா” என அதை மொழி பெயர்த்தாள் லிசி.

“இங்க பாரு வாணிமா, நிஜம்மா சொல்றேன், நீயே வேணாலும் டாக்டர்ஸ் யார்ட்டயாவது கேட்டுப் பாரு, இப்படி எப்பவாவது ஒரு டைம் கொஞ்சமே கொஞ்சம் லிக்கர் சாப்டுறது, அதுவும் சில பர்டிகுலர் டைப்தான், சாப்டுறது நம்ம ப்ளட் சர்குலேஷன், ஹார்ட் எல்லாத்துக்கும் நல்லதுதான்னு சொல்றாங்க.. அதனால” என இன்னுமாய் சொல்ல வந்தவன், இதுவே போதுமான விளக்கமாய் பட்டுவிட முழு நம்பிக்கையுடனேயே இவளைப் பார்த்தான்.

“தப்புன்னு தெரிஞ்சா எதையும் விட்டுடுவேன் வாணி, ஆனா எனக்காக விடேன்னு யார் கேட்டாலும் யாருக்காகவும் நான் எதையும் செய்ய மாட்டேன். ப்ளீஸ்” தனது அடுத்த சட்டத்தையும் வெளியிட்டான்.

அதாவது அப்படி கேட்டுவிடாதே என்கிறான்.

வாணிக்கு அது எதுவும் விஷயமாகவே படவில்லை. அவளுமே அப்படித்தான் அவளுக்கு சரி என பட்டதை மட்டுமே செய்வாள். யாருக்காகவும் தனக்கு சரி எனப் படுவதை விட்டுக் கொடுக்க மாட்டாள்தான்.

ஆனால் அவன் லிக்கர் நல்லது என சொன்ன வியாக்கியனத்துக்கு நங்க் என அவன் நடு மண்டையில் கொட்டினால் என்ன என்ற அளவு எரிச்சல் எழுகிறதுதானே!

இருந்தாலும், இதே வகை கருத்துக்களை அவளும் படித்திருப்பதாலும், விசாகன் தப்பு எனத் தெரிந்தால் மாற்றிக் கொள்வேன் என சொல்வது வெறும் வாய்ப் பேச்சல்ல, அது அவன் சுபாவம் என இதற்குள் அவள் கண்டிருப்பதாலும்,

முழு நிதானமாகவே தன் மனதிலிருப்பதை சொல்ல எத்தனித்தாள் வாணி.

அவன் அடிக்க்ஷென், அதிகமாய் குடித்தல் என்ற பழக்கம் எல்லாம் இல்லை என்றுவிட்டதால், அவள் சொல்ல வேண்டிய முதல் விஷயமே குறைந்த அளவோ அதிக அளவோ எந்த அளவில் மது அருந்தினாலும் அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி மலட்டுத்தன்மையை உண்டு செய்யும் என்பதுதான். இப்பல்லாம் ஆஃபீஸ் போற மக்கள் நிறைய பேர் ஃபெர்டிலிட்டி சென்டர்ல போய் நிற்பதன் அடிப்படை காரணம் இதுதான்.

ஆனால் இதை எப்படி அவனிடம் இவள் சொல்வதாம்?

அவள் நாவை கைது செய்து வைத்தது பெண்மை. யார் மூலமாகவாவதுதான் இதை அவனிடம் சொல்ல வேண்டும். இவளால் நேரடியாக நிச்சயமாய் சொல்லிக் கொள்ள முடியாது.

ஆக அடுத்த விஷயத்திற்கு வந்தாள் “கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க விசாகன், நாம ஒவ்வொரு நிமிஷமும் எடுக்கிற முடிவுதான் நம்ம வாழ்க்கையை நிர்மாணிக்குது. சில முடிவுகள் நாம அடுத்த நிமிஷம் உயிரோட இருக்கணுமா வேண்டாமான்னு கூட முடிவு செய்யும். அப்படி ஒரு சிச்சுவேஷன்ல நீங்க முடிவு எடுக்ற அளவுக்கு தெளிவா இல்லைனா அது எவ்வளவு பெரிய லாஸ்?” சொல்லிய அவளுக்கே தெளிவாய் சொன்னது போல் உணர முடியவில்லை.

“ட்ரிங் அன்ட் ட்ரைவ சொல்றியா வாணி? அங்க தோப்புலயே நாங்க எல்லோரும் தங்கிட்டு காலைலதான் வருவமே, யாரையும் ட்ரிங் அன்ட் ட்ரைவ்க்கெல்லாம் அலவ் பண்ணவே மாட்டேன்பா” இன்னும் அவன் கொள்கையிலேயே நின்றான் விசாகன்.

“இதால உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அடிக்டே ஆக மாட்டாங்கன்னா சொல்றீங்க?” இவளது அடுத்த கேள்வியில், தன் இடது கை கட்டைவிரலை நாடியில் தட்டி அரை நிமிடம் போல் யோசித்தவன்,

“இனி ஃப்ரெண்ட்ஸ் யாரையும் கூட கூட்டிக்க மாட்டேன் அங்க போறப்ப, ஓகேவா?” என ஒரு முடிவுக்கு வந்தான்.

வாணிக்கு உண்மையில் அவன் விதண்டவாதம் செய்கின்றானோ என்று கூட தோன்றியது இப்போது.

“நான் ட்ரைவிங், உங்க ஃப்ரெண்ட்னு யாரைப் பத்தியும் பேசல விசாகன், வீட்ல யாருக்கோ திடீர்னு உடம்பு சரியில்ல எமெர்ஜென்ஸி, திடீர்னு நமக்கே எதோ ப்ரச்சனை, முடிவெடுக்க நாம தெளிவா இருந்துதானே ஆகணும்? ஆக நாம சுயமுடிவெடுக்கிறத திறன்ல ஒவ்வொரு நொடியும் இருக்கிறது ரொம்பவும் முக்கியம். இவ்ளவுதான் எனக்குத் தெரியும். மிச்சத நீங்களே யோசிச்சுகோங்க” அவள் முடித்துவிட்டாள்.

“ஷ்யூர், நீ சொல்ற ஆங்கிள்ள நான் யோசிச்சது இல்ல, ஆனா கண்டிப்பா யோசிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடு.” என அவனும் முடித்தான்.

அதோடு இவர்களுக்கென எடுத்து வைத்திருந்த சாப்பாட்டு பார்சல்களை எடுக்கத் துவங்கினான் அவன்.

இதுக்கு மேல இதைப் பத்தி பேசாதன்றான்!

“இன்னும் என்னடா இருக்கு யோசிக்கிறதுக்கு? அத்தன ஹாஸ்பிட்டல் ரன் பண்ற… உன் சனிக்கிழமைல இங்க எதாச்சும் ப்ரச்சனைனா யார்டா பார்ப்பா? அவ தெளிவா கேட்காளே?!” லிசி எரிச்சல் பட்டாள் இப்போது.

“அதான் யோசிக்கிறேன்னு சொல்லி இருக்கேன்ல, இப்படில்லாம் என்னை மட்டும் கேளு, என் மேல அவ கோபத்துல இருக்கான்னு சொல்லிட்டு இருந்தேனே, அதைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டியா நீ?” என விசாகன் பேச்சை இந்தப் புள்ளிக்கு கொண்டு வந்தவன்,

“இப்ப சொல்லு, என்ன விஷயம் வாணி? ரவளியப் பத்தி..” என இவளிடமாக துவங்கினான்.

“நீங்கதான் யோசிச்சு முடிவெடுக்கேன்னு சொல்லிட்டீங்களே சாரே, அப்றம்தானே நான் உங்கட்ட பேசுறதா வேண்டாமான்னே முடிவு செய்ய முடியும், யாருக்காகவும் நானும் என் பாலிசியெல்லாம் மாத்திக்க முடியாது. லிகர் சாப்டுறவங்கட்ட நான் பேசுறது இல்ல” என பதில் வந்தது இவளிடமிருந்து.

அடுத்து மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வரைக்குமே வாணி விசாகனிடம் பேசவில்லை. அவனும் இவளை தொண தொணக்கவில்லை.

கோபத்தில் இருக்கிறானா? அல்லது இவளது பதிலை அப்படியே ஏற்றானா என்று மட்டும்தான் இவளுக்கு புரியவே இல்லை.

ஏனெனில் லிசியிடம் அவன் வெகு இயல்பாகவே பேசிக் கொண்டு வந்தான். அதுவும் இவள் மொபைல் வாங்காமல் இருப்பதன் காரணத்தை பற்றிதான் அந்த இருவரின் மாநாடுமே.

எதையாவது அவன் தீவிரமாக சிந்திக்கத் துவங்கினால் இப்படித்தான் வெகுவாக நிதானம் காட்டுவான், முழு மனதாக ஒரு முடிவுக்கு வரும் வரைக்கும் இதை தொடருவான் என்பது அவளுக்குத் தெரியாதே!
அடுத்ததாய் இரண்டு மாதம் கடந்திருந்தது. இதில் வந்த 9 சனிக்கிழைமைகளிலும் விசாகன் வாணியின் விடுதிக்கு வந்தான்.

வாணியும் அவன் வருவான் என் அறிந்து, அதான் முன்னமே சாப்ட வர சொல்லி வச்சுருக்காளே, அவனுக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு, ‘ட்ரைவிங் க்ளாஸ் போறேன்’ என அவன் வருவதற்கு முன்பே தலை மறைவாகிவிடுவாள்.

இந்த இருவரையுமே நன்றாக அறிந்திருக்கும் லிசிக்குமே இந்த கண்ணா மூச்சி ஆட்டத்தின் கரு புரியவில்லை.

அப்பொழுதுதான் வந்தது அந்த இரவு.


இக் காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு டெக்னாலஜியை இந்திய தொலைதொடர்பு முழுமைக்கும் கொண்டு வரும் முன், பரிசோதனை முயற்சிக்கென BSNL அப்போது தென்காசி அலுவலகத்தை தேர்ந்தெடுத்திருந்தது. அதை தலைமை ஏற்று செய்யும் பொறுப்பை வாணியின் அப்பா ஏற்றிருந்தார்.

அதற்காக தென்காசியில் சில மாத காலம் தங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்த அவர், BSNL லின் ஆஃபீஸர்ஸ் சூட் (அலுவலகர்களுக்கான விருந்தினர் விடுதி)யில் தங்கி இருந்தார்.

தென்காசி அலுவலகம் இருப்பது அந்த சிறு நகரத்தின் மையப் பகுதியில்தான் என்றாலும், இந்த விடுதி அறை இருப்பது தென்காசிக்கு அடுத்திருக்கும் மேலகரம் எனும் சிற்றூரில்.

இரவில் அந்த மேலகர விடுதி அறையில் அமர்ந்து தொலைகாட்சியில் செய்தியை பார்த்துக் கொண்டிருந்த வாணியின் அப்பாவிற்கு வெளியே நிலவரம் ஏதோ சரியில்லை என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கண்ணாடி ஜன்னல்களில் கிழிபடும் சிலீரென்ற காற்றின் ஊளை சொல்லும் செய்தி எதுவும் நல்லதிற்கில்லை.

கதவை திறந்து எட்டிப் பார்த்தால் மழை என்று ஏதுமில்லை. வெளியே இவர் தலை தெரியவும் ஓடி வந்தார் இவரது பெர்சனல் செக்யூரிட்டி இசக்கி.

“சார்…எதாச்சும் வேணுமா சார்?”

“இல்ல இசக்கி, வெளிய பார்த்தா எதோ சரி இல்லன்னு தோணுதுல்ல” தன் மனதை வேலையாளிடமும் பகிர்ந்து கொள்வது கருணாகரனின் குணம்.

“மலையில கண்டிப்பா கொடும் மழை இருக்கும் சார், என் பாட்டி சொல்லிட்டு இருக்குது இன்னைக்கு தண்ணி அத்தன பாலத்தையும் அள்ளிட்டு போயிரும்னு, நூத்து கிழவி சார் அது, காத்த வச்சே கரெக்டா சொல்லிடும்.”

இசக்கி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பரம்பரையாய் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் என கருணாகரனுக்கு தெரியும்.

பொதுவாய் இயற்கையோடு இயைந்து வாழும் மக்கள் சாமானியர்களைவிட அதிகமாகவே இயற்கையை அறிந்து வைத்திருப்பர். அந்த வகையில் இசக்கியின் பாட்டியின் கூற்றை கொஞ்சம் கவனத்தில் கொள்வது தவறில்லை என்பது கருணாகரனின் எண்ணம்.

மலையில் சில இடங்களில் கனமழை இருக்கும் என்பதுதான் இன்றைய வானிலை அறிக்கையும். ஆனால் அதை பாலத்தோடு யாரும் இணைத்து எல்லாம் எதுவும் சொல்லி இருக்கவில்லை.

“சரி இசக்கி, எதுக்கும் நான் நைட் நம்ம ஆஃபீஸ்க்கே போய்டுறேன்” இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வித பூவாசத்தோடு பரும் பரும் தூறலாக விழுகின்றது மழை.

“சார் பூவாசம் பார்த்தீங்களா, மழைகாத்துல மலையில இருந்து இறங்குது சார், தண்ணியும் மலையில இருந்து இறங்கிச்சுன்னா, இன்னும் கொஞ்ச நேரத்துல ஆனப் பாலம் வந்துடும்ங்களே, வெளிய போகாதீங்க” இசக்கி தடுத்தார்.

“ஆஃபீஸ்ல நைட் டூட்டி ஆட்கள் இருக்காங்க இசக்கி, கூடவே பவர் ப்ளான்ட் வேற கீழ இருக்குது, ஆத்துக்கு பக்கதுலதான இருக்கு நம்ம ஆஃபீஸ்? தண்ணி உள்ள வந்துதோ, பவர்ப்ளான்ட் வெடிச்சாலும் வெடிச்சுடும். அது ரொம்பவும் ஆபத்து” இசக்கிக்கு புரியும் வகையில் சொல்லிக் கொண்டே அவசரமாய் அறைக்குள் ஓடிய கருணாகரன் திரும்பி வரும் போது இரவு உடையிலிருந்து ட்ராக் ஷூட்டுக்கு மாறி இருந்தார்.

அவரின் ஜீப் இருக்கும் திசையைப் பார்த்து ஓடத் துவங்கினார் இசக்கி.

“இல்ல இசக்கி, நீங்க வர வேண்டாம். ரெண்டு நாள்தான ஆச்சு உங்க வைஃபுக்கு டெலிவரி ஆகி, வீட்டுக்கு போங்க எதுவும் ஹெல்ப் தேவைப்படலாம்” இப்படி சொல்லிக் கொண்டே கருணாகரன் போய் அங்கிருந்த பைக்கை எடுத்தார்.

“சார் உங்களுக்கு உங்க வேலைய ஒழுங்கா செய்யணும்னா, எனக்கும் என் வேலைய ஒழுங்கா செய்யணும் சார், உங்க செக்யூரிட்டி நான்” இவரும் பைக்கில் ஏறி இருந்தார்.

இவர்கள் இருக்கும் மேலகரத்தையும் அலுவலகம் இருக்கும் தென்காசியையும் குறுக்காக பாய்ந்து பிரிக்கும் ஒரே விஷயம் சிற்றாறு. அதன் மேலிருக்கும் ஆனைப்பாலத்தை கடந்தால்தான் இவர்கள் தென்காசிக்குள் நுழைய முடியும்.

அந்த ஆனைப்பாலத்தின் அருகில் ஆற்றின் கரையில் கிடந்த வட்டப் பாறையில் அமர்ந்துதான் தன் ஸ்வீட்ஹார்ட் சமியுடன் மொபைலில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் விசாகன்.

இன்று சனிக் கிழமை.

இரண்டு மாதமாக விசாகன் தன் சனி நீராட்டை டேப் வாட்டரிலேயே முடித்திருந்தான். ஃப்ரெண்ட்ஸ் இல்லாம வந்து மட்டும் என்னவாம்? போர் என்ற ஃபீலிங் ஒரு காரணம் என்றால்,

இதுவரைக்கும் யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுத்தேன் என்ற நிலைக்கு செல்லாதவனுக்கு, வாணிக்காக இந்த பழக்கத்தை விட்டுவிடலாமா என்று கூட தோன்றுகிறதே அது முக்கிய காரணம்.

ஆனால் அதை அவனால் முழு மனதாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதோடு, இப்படி லிக்கரா நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பா என வாணி ஒரு வகையில் இவனை கானர் செய்திருப்பது இவனுக்கு கடும் வருத்தம்.

ஆனால் அவள் இடத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகவும் தெரியவில்லை.

ஆக இங்கு வரை வந்துவிட்டவன், பாலம் அருகில் ஆற்றடிக்கு இறங்கிய பின், அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய அவர்கள் தோப்பை நோக்கி செல்ல மனமற்று, அங்கேயே அமர்ந்து விட்டான்.

“ஒன்னும் தெளிவா முடிக்க முடில சமி” இவன் சொல்லிக் கொண்டிருக்க,

அந்த சமி என்ன பதில் கொடுத்ததோ.

“அதான நீ அவங்க கூட கூட்டு சேரலைனா எப்படி? இதத்தான் சொல்றது பொண்ணுங்கல்லாம் சேர்ந்துப்பீங்கன்னு”

“……”

“ஏன் சொல்ல மாட்ட? இங்க வர்றேன், சாப்டுறேன், படுத்து தூங்குறேன்…இந்த டைம்குள்ள என்ன அப்படி முடிவெடுக்கிற சிச்சுவேஷன் முளச்சு வந்துடும்?”

இவன் சொல்லிக் கொண்டிருக்க, அதே நொடி அவன் பின்னிருந்த அந்த பெயர் தெரியா நெடு மரம் க்ர்க்…சரக் என்ற ஒற்றை சத்தத்தில் வேரோடாய் சரிந்து விழுகிறது.

அத்தனை இருட்டிலும் அனிச்சையாய் திரும்பிப் பார்த்த இவனுக்கு நொடிக்கும் முன்னாக புரிகின்றது,

ஒடியாமல் விழும் அம்மரத்தின் ராட்சத தண்டுப் பகுதி நிஜ நிச்சயமாய் இவன் தலையில்தான் சரணடைந்தாகும் என. அடுத்த நொடியை இவன் காணப் போவதில்லை.

‘ஹூம்’ கடகடவென இவன் எதிர் திசையில் உருள முயல, அதே நேரம் சரிந்த மரம் இவன் தலைக்கு சற்று மேலாக அந்தரத்தில் அப்படியே நின்று போனது. உயரமான பாலத்தில் தட்டி சிக்கிக் கொண்ட அதன் சில கிளைகள் காரணம்.

இன்னும் எத்தனை நொடிகள் இந்த கிருபையை இவனுக்கு தந்து நிற்குமோ மரம்? கிளை உருவிக் கொண்டால், திரும்பவும் இவன் சட்னிதானே!!

துள்ளி எழுந்தவன் ஆற்றங்கரை சரிவில் சரசரவென ஏறி மேலிருக்கும் பாலத்தை நோக்கி ஓடினான். அங்குதான் இவனது காரை நிறுத்தி வைத்திருக்கிறான்.

பாலத்தில் ஏறி இவன் கார் அருகில் கால் வைத்த தருணம் அத்தனை இருட்டிலும் பள பளவென பாய்ந்து வரும் அந்த ராட்சதம் அவன் பார்வைக்கு படுகின்றது.

ஆம் அடைத்து வைத்த அணை வெடித்தது போல் ராட்சச ப்ராவகமாய் சுனாமி வகை அலை போல் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது நீர்.

இவன், இவன் நிற்கும் பாலம், அதிலிருக்கும் இவன் கார் அத்தனையையும் கபளீரிக்கும் கட்டாயமாய் அது.

“வாணி தீர்க்கதரிசி சமி” முனங்கியது இவன் உதடுகள்.

தொடரும்…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!