KS 1

KS 1

காதல் சன்யாசி 1
கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும் வைரக்கல் என்று தான் தோன்றியது! கண்ணாடி சாளரங்கள் சூழ்ந்த அறையின் கட்டிலில் உறங்கி கிடந்த நிவேதாவை பார்க்கும் போது!
உயர்ந்து விரிந்து பரந்து நீண்டு கிடந்த அந்த மாளிகையில், காலைப் பனி காற்று அவளை தீண்ட முயன்று கண்ணாடி சாளரங்களிடம் தோற்று கொண்டிருந்தது.
கொடைக்கானலின் சுகமான இளங்காலை குளிரில் அந்த பங்களா தோட்ட மலர்களும் கண்விழிக்க சோம்பி கூம்பியிருந்தன.
அவற்றை பனிக்காற்று ஆற்றாமல் மோதி மோதி திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
காலை அலாரம் ஒலிக்க, உறக்கத்தையும் சோம்பலையும் ஒன்றாய் விரட்டி எழுந்தவள், தன் இரு மலர் கைகளால் முகமலர் துடைத்து கொண்டாள்.
அகன்ற அந்த அறையின் ஒருபுறம் இருந்த குளியலறைக்குள் சென்றவள்,
அடுத்த இருபது நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தாள்.
பஞ்சின் மென்மையும் பளிங்கின் வழவழப்பும் சேர்த்து குழைத்து செய்த மேனி!
இவள் நவீன கால சிற்ப கலைஞனால் வடிவமைக்கப்பட்ட அபூர்வ சிற்பம், நாகரீக சிற்பமும் கூட.
அடுத்த அரை மணியில் மாடியில் இருந்து கீழறங்கி வந்தாள்.
கருமை நிற ஸ்லீவ்லெஸ் டாப், வெண்ணிற ஜீன்ஸ் அணிந்து, கற்றை கூந்தல் அசைந்தாட, ஒரு கை அலைபேசி பற்றியிருக்க, நாற்புறமும் தெளிவாக ஆராயும் அழகிய விழிகளோடு, நிமிர்ந்த நடையாய் வந்து உணவு மேசையில் அமர்ந்தாள்.
நேர்த்தியான முழு சீருடையில் அவள் முன் வந்த இளைஞன், அவளுக்கு பவ்வியமாக காலை உணவு எடுத்து வைத்தான்.
சிறு புன்னகையுடன், “தேங்க்ஸ் விமல் ண்ணா” என்று அவள் சொல்ல, அவன் மரியாதையாய் தலையசைத்தான்.
நிவேதா, “அப்பா சாப்பிட வரல?” என்று வினவ,
“சர், அப்புறம் சாப்பிறதா சொன்னார், மேம்!” பதில் அடக்கமாய் வந்தது.
“அம்மா, இன்னும் எழலையா?”
“இல்ல, மேம்!”
சாப்பிட்டு முடித்தவள், “அப்பாவ கவனமா பார்த்துக்கணும்! எந்த சின்ன விசயமா இருந்தாலும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணனும்!” என்று வழக்கம் போல் ஆணையிட,
“ஷூர் மேம்!” என்றான் அவன் ஆமோதித்து.
வேறொரு சீருடை வேலையாள் வந்து அவளது பையை காரில் வைக்க, அவள் ஏறி அமர்ந்தவுடன் கார் வேகமாய் பறந்தது பனி மூட்டத்தை கிழித்து கொண்டு.
# # #
கதிரவனும் விழிக்காத பனிக் காலைப் பொழுதில், கோவிலுக்குள் நுழைந்தான் அந்த நெடியவன்.
புது வருட பிறப்பு இன்று!
எனவே கோயிலில் கணிசமான கூட்டம் இருக்கத்தான் செய்தது. எனினும், அதில் அவன் மட்டும் தனியாக தெரிந்தான்.
சாதாரண உயரத்தை விட சற்று கூடுதலான உயரம், கண்களை உறுத்தாத உடற்கட்டோடு, வெள்ளை நிற டீ சர்ட், கருமை நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, கைகளில் ஏந்திய அர்ச்சனை கூடையோடு கர்பகிரகத்தின் முன் வந்து நின்றான்.
அவன் இதழ் கடையில் ஒட்டி பிறந்ததைப் போல தொற்றி மிளிர்ந்த வசீகர புன்னகை தவழ்ந்திருக்க, அவனை கடந்து சென்ற கண்கள் ஒரு நொடி தாமதித்து, அவன் உருவத்தை பதித்து கொண்ட பிறகே மீண்டு நகர்ந்தன.
“என்ன தம்பி ஊருக்கு புதுசுங்களா?” அவனை பார்த்தவுடன் அர்ச்சகரின் முதல் கேள்வி இதுதான்.
“ஆமா சாமி, இங்க வேலை கிடைச்சு வந்திருக்கேன். எப்பவும் நியூ இயர்ல கோயிலுக்கு போறது என் வழக்கம். அதான், கடவுளுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்”
அவன் பதில் உற்சாக ஊற்றாய் வந்தது.
அவனை வியப்பாக பார்த்தபடி அர்ச்சனை கூடையை வாங்கி கொண்டவர், “சரி தம்பி, அர்ச்சனை உங்க பேருக்கா?” என்றார்.
“ஆமா சாமி, பேரு ராகுல் கிருஷ்ணன். இந்த ராசி, நட்சத்திரம், குலம், கோத்திரம் எல்லாம் என் அறிவுக்கு எட்டாத விசயம். மன்னிச்சிக்கோங்க” என்றான் புன்னகை விரிய,
அவனை கடந்து சென்ற நங்கையர்களின் பார்வையை கவனித்தவர், “நிச்சயம் உன் ராசி, கன்னி ராசியா தான் இருக்கணும்!” என்று சொல்லிவிட்டு நகர, ராகுல் புரியாமல் சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.
கோயிலில் அங்குமிங்குமாக தெரிந்த ஸ்வெட்டர் அணிந்த தேவதைகள் அவனை பார்த்து கிசுகிசுத்து சிரிப்பது அவன் பார்வையில் பட,
‘எப்ப்பா… கொடைக்கானல்ல பொண்ணுங்க சூப்பரா இருப்பாங்க போல இருக்கே டா’ என்று மனதில் தோன்றிய எண்ணத்தை கோயில் மணியோசை கலைக்க, சட்டென்று திரும்பி கடவுளை கைகூப்பி வணங்கி நின்றான்.
‘இந்த புத்தாண்டு எல்லாருக்கும் எல்லா சந்தோஷத்தையும் தரட்டும் பாஸ்’ என்று மனதில் வேண்டிக் கொண்டே.
# # #
குறும்புகளின் குவியலாய், கவலைகளை கழற்றி தூர எறிந்து விட்டு, தனக்கான சந்தோச வாழ்வை மட்டும் ரசனையோடு கடந்து செல்லும் இந்த காதல்காரனின் வாழ்வின் உயிர்ப்பான கட்டத்தில் நாமும் உடன் சேர்ந்து சுவாரஸ்யமாக பயணிக்கலாம்!
 காதல்காரன் வருவான்…
error: Content is protected !!