KS 15
KS 15
காதல் சன்யாசி 15
ஒரேயொரு அலைப்பேசி அழைப்பில் காவல்துறை உயர் அதிகாரி தாமோதரன் தலையைப் பிய்த்து கொள்ளும் நிலைக்கு வந்து விட்டிருந்தார்.
“எவன் டா அந்த ராகுல் கிருஷ்ணன் ச்சே” அவர் வாய்விட்டே சலித்துக் கொண்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், தொழிலதிபர் இராமச்சந்திரனின் மனைவி சாருமதி, இதே ராகுல் கிருஷ்ணனின் மீது ஏதேனும் வழக்கை பதிப்பித்து அவனை தண்டிக்கும் படி கேட்டிருந்தார். அவர்கள் குடும்பத்திற்கு அன்று ஏற்பட்ட அவமானத்திற்கு அவனை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆத்திரம் அவரிடம் வெளிப்பட்டது.
தாமோதரனும் செல்வாக்கான இடத்தில் இருந்து வந்த கட்டளையை மீற முடியாமல் ஏற்றிருந்தார். அவனை எதில் சிக்க வைக்கலாம் என்று இவர் பார்த்திருக்க,
இப்போதோ அதைவிட செல்வாக்கான இடத்தில் இருந்து ராகுல் கிருஷ்ணன் மீது புகார் எடுக்கக் கூடாது என்று உத்தரவு வருகிறது.
இந்த பெரிய மனிதர்களின் ஆட்டத்தில் காவல்துறை பந்தாடபடுவதை எண்ணி அவருக்கு ஆத்திரம் பெருக, எதுவும் செய்ய இயலாத தன் இயலாமை எண்ணி மனம் நொந்தவராய், காவல் ஆய்வாளருக்கு அழைப்பு விடுத்து, அந்த ராகுல் கிருஷ்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கி விட்டு, வேறு பணிகளில் கவனத்தை செலுத்தினார்.
அதே நேரத்தில், அவனை மையப்படுத்தி பின்னப்படும் மாயவலை பற்றி ஏதும் அறியாமல் வேறுவிதமான கடுகடுப்பில் இருந்தான் ராகுல் கிருஷ்ணன்.
அவனுக்கு ஒன்றும் புரிவதாக இல்லை. “வரவர அம்மாக்கு என்ன ஆச்சுன்னே தெரியல? இப்ப பட்டு வேட்டி கட்டணும்னு என்ன அவசியம் வந்துச்சு?” என்று நொந்து கொண்டே வேட்டியை சரி செய்தபடி, தன் அறைக்குள் நுழைந்தவன் உடனே தடுமாறித்தான் போனான்.
அறை முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, மலர் மஞ்சம் மணம் பரப்பியது.
விவரம் புரிய, ‘தேவையா இது?’ என்பது போல் தலையில் அடித்து கொண்டான்.
இப்போது தானும், தமிழும் தவிக்கும் குழப்பமான மனநிலை அவன் நினைவிற்கு வந்தது.
‘இந்த சூழ்நிலையில இந்த ஏற்பாடு மட்டும் தமிழுக்கு தெரிஞ்சா, அவ பத்ரகாளியாவே மாறிடுவாளே!’ என்று யோசித்தவனுக்கு தன் நண்பர்கள் அன்று சொல்லி சென்றது நினைவில் மோதியது.
“ராகுல், நீ தமிழ கல்யாணம் செஞ்சுகிட்டதுல எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய விசயம் இருக்கு. உனக்கு புரியுது இல்ல, நான் சொல்ல வர்றது” வினய் பேச்சை தொடங்க,
“ஆமா டா, எப்பவும் போல இனிமேயும் தமிழ்கிட்ட நீ ஃபிரண்டா மட்டும் பழகினனா, உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாயிடும்” தேவா ஆமோதித்தான்.
“உன் மனநிலை எங்களுக்கு புரியுது டா. இருந்தாலும் நீயும் தமிழும் எப்ப நிறைவான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கறீங்களோ, அப்ப தான் உங்க கல்யாணத்துக்கு அர்த்தம் இருக்கும்” மகேஷ் வலியுறுத்த,
“தமிழ நோக்கி முதல் அடி நீதான் எடுத்து வைக்கணும். அவ உன்ன மனசார ஏத்துக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு தான்” ப்ரியா எடுத்துரைத்தாள்.
“தமிழ் உன்னோட மனைவி. நீ அவளோட புருசன். தமிழ் கிட்ட எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. உன்னோட மன போராட்டத்தில, மத்ததை மறந்துடாத” வெற்றி கூட பெரிய மனிதனாக எச்சரித்து சென்றான்.
இப்போது, ராகுலுக்கு வேறொன்றும் தோன்றியது. ‘தமிழுக்கு தெரியாம இத்தனை ஏற்பாடு நடந்திருக்க வாய்ப்பில்லையே. ஒருவேளை, அவளுக்கும் சம்மதம் தானா?’ கதவு திறக்கப்பட, இவன் சிந்தனை தடைப்பட்டு திரும்பினான்.
தமிழ்ச்செல்வி தான், தயங்கி தயங்கி உள்ளே வந்தாள். அவளை பார்த்த அவன் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.
மெல்லிய பூ வேலைப்பாடு நிறைந்த இளநீல வண்ண சேலை அவள் பூவுடலை வாகாய் மறைந்திருந்தது.
சற்றே தழைய விரித்து விட்ட கூந்தலில் நான்கு சரம் மல்லிகை மொட்டுகள் அழகாய் சூட்டப்பட்டு இருக்க, அதிலொரு பூச்சரம் அவள் முன் கழுத்தில் நிறைந்த ஆரங்களோடு அவள் தோளை உரசியிருக்க, அந்த ரசிகனின் ரசனையை தூண்டுவதாய்.
இவளுக்கு எப்போதும் இத்தனை அலங்காரம் செய்து கொள்ளும் பழக்கம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இதெல்லாம் தன் அம்மாவின் கைங்கரியம் தான் என்று எண்ணி சிரித்து கொண்டான்.
தன்னவளின் முக அழகையும் காண அவன் உள்ளம் ஆவல் கொண்டது. ஏனோ அவள் தலை நிமிராமலே நின்றிருந்தாள். ‘வெட்கமாக இருக்குமோ?’ என்று நினைத்து கொண்டான்.
நிமிடங்கள் நகர்ந்து கொண்டே இருக்க,
அவள் பொன் கழுத்தில் மின்னிய மாங்கல்யம், ‘இவள் உனக்குரியவள்’ என்று அவன் சங்கடத்தை உடைத்தெறிய,
தனக்கே தனக்கென கண்முன்னே நிற்கும் பூம்பாவை அவன் இளநெஞ்சில் வேட்கையை உண்டாக்க, தன்னவளை நெருங்கினான்.
அவள் மெல்லிய கைகளில் நிறைந்த வளையல்களை, அவன் நீள விரல்கள் மெல்ல வருடி, அவற்றின் மௌன விரதத்தை கலைக்க முயல,
தன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்த, அவளின் அனல் கக்கும் பார்வையில் தானாக விலகி நின்றான்.
“உன்னால எப்படி டா? என்னை… இப்படி நினைக்க முடிஞ்சது?” அவள் நடுங்கிய குரல் தேய்ந்து கேட்க, அவன் வேட்கை கயிறு சட்டென அறுந்து போனது.
“இல்ல தமிழ்! இதெல்லாம் உன் விருப்பத்தோட நடக்குதுன்னு… நினைச்சு தான்” ராகுல் தயங்கி மொழிய,
“என் விருப்பத்தோடவா? நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம, உன் அம்மா தான் இதெல்லாம் செஞ்சாங்க” ஆதங்கமாக சொன்னவள்,
“ஆனாலும், உன்மேல இருந்த நம்பிக்கையில தான் இங்க வந்தேன் ஆனா நீ!” அவள் வெறுப்பாய் கேட்டாள்.
‘நான் ஒண்ணுமே பண்ணலயே டீ!’ அவன் தன் மனதுக்குள் புலம்ப,
“என்னை உன் ஃபிரண்ட்னு சொன்னியே டா, நம்பி வந்தேனே நெஞ்சு பதறுது டா, என் ராகுல் என்னை தப்பா… நினச்சுட்டான்னு!” தமிழ் மனமுடைந்து பேச,
ராகுலுக்கு சுவற்றில் தலையை மோதி கொள்ள வேண்டும் போல இருந்தது.
“ஏய், போதும் டி, நீ என் மனைவின்ற உரிமையில தான் பக்கத்தில வந்தேன். வேற எதுவும் இல்ல” அவன் படபடவென மறுத்து சொன்னான்.
“நான் எப்படி டா, உனக்கு மனைவியாக முடியும்? இந்த மஞ்ச கயிறு உன் மனச மாத்திடுச்சா? நீ ஒன்ன மறந்துட்ட…”
“நா… நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ டா!” அவள் மென் குரல் உடைந்து சொல்ல,
“அப்படியே ஓரறை விட்டேனா பாரு, பல்லெல்லாம் கொட்டி போகும். படிச்சவ தான டி நீ. பட்டிகாடு மாதிரி பேசிட்டு இருக்க” ராகுல் பற்களைக் கடித்தபடி எச்சரித்தான்.
தமிழ் திகைத்து நிற்க, அவள் கலங்கிய கண்களை, அவன் கண்கள் எந்த சலனமும் இன்றி சந்தித்தன.
“இப்ப என்ன? நானும் அவசரப்பட்டிருக்க கூடாது தான். இனிமே இப்படி நடக்காது. ஐ’ம் சாரி. போதுமா!” என்று அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.
‘அய்யோ, எனக்கு இப்படியொரு நிலைம வரும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலையே!’ அவளின் பேதை மனம் எதையும் சகித்துக் கொள்ள முடியாமல் பதைபதைத்து கதறி துடித்தது.
.
ராகுல் வெண்பனி பெய்யும் மாடியில், மனம் கொதிக்க நின்றிருந்தான்.
நடந்த திருமணத்தையே ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தமிழின் மனநிலை புரிந்தும், தான் அவசரப்பட்டு இருக்க கூடாது என்று மீண்டும் எண்ணிக் கொண்டான்.
‘அவன் உயிர் காதல் அவனை சொர்க்கம் சேர்க்கவில்லை!
அவன் புனித தோழமையை அவன் நரகம் சேர விடுவதாக இல்லை!
இந்த வாழ்க்கை புதிது தான்!
அவன் எதிர்பாராதது தான்!
தங்களை ஒரே நூலில்
கோர்த்து விட்ட விதி, தங்கள் வாழ்வையும் அர்த்தமுள்ளதாக மாற்றும்!’
என்று நம்பினான் அவன்.
ஏதேதோ சிந்தனையில் உழன்று, வெகு நேரம் கழித்தே தன் அறைக்கு திரும்பினான்.
கட்டில் வெறிச்சோடி கிடக்க, தமிழ் தரை விரிப்பில் சுருண்டு படுத்திருந்தாள்.
கன போர்வை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன், இறுக மூடியிருந்த அவள் இமைகளில் ஈரம் காயாமல் இருப்பதை கவனித்து, தன்னவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல், விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்து கொண்டான்.
போர்வைக்குள் முகம் புதைத்து கொண்ட தமிழ்ச்செல்வி, ‘கடவுளே! எனக்கு ஏன் இந்த சோதனை? மரணத்தை விடவும் கொடுமையாய் இருக்கிறதே இந்த வாழ்க்கை!’ என்று தன்னுள் சிதைந்து கொண்டிருந்தாள்.
# # #
பனிக்காலை பொழுதில்,
தன் காரில் இருந்து இறங்கியவள் பழக்கமான வேக நடையோடு கம்பெனிக்குள் நுழைந்தாள்.
அனைவரின் வணக்கத்தையும் சின்ன தலையசைப்பில் ஏற்றுக்கொண்டு, தன் கேபின் இருக்கையில் வந்தமர்ந்தாள் நிவேதா.
தான் பார்க்க வேண்டிய முக்கிய கோப்புகளை புரட்டியவளின் நெற்றி சுருங்க, வழக்கம் போல ரிசீவரை எடுத்து, “தமிழ்செல்வி உடனே என் கேபின் வாங்க…!” என்று உத்தரவிட்டு ரீசிவரை வைத்த போதுதான் உண்மைநிலை அவள் நெஞ்சை அழுத்தியது.
கிட்டத்தட்ட முழுதாக இரண்டு வருடங்கள்!
இவள் கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த நிமிடத்தில் இருந்து, எல்லாவிதத்திலும் இவளுக்கு பக்க துணையாக இருந்தவள்!
இவள் எண்ணும் முன்னே வேலையை முடித்து வந்து எதிரில் நின்றவள்!
தான் முன்பு பொறுப்பேற்ற பின்னர் கம்பெனியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தாள் நிவேதா.
அவள் மாற்றத்திற்கு உட்படுத்தாத சில விசயங்களில் தமிழ்ச்செல்வியும் ஒன்று. சொன்னதை மட்டுமே திறமையாக செய்து முடிக்கும் அவளின் அமைதியான குணம் இவள் வளர்ச்சிக்கு ஒருவிதத்தில் துணையாக இருந்தது என்று சொல்லலாம்.
அதனாலேயே தமிழிடம் ஒரு தனித்துவமான நட்புணர்வும் கரிசனமும் இவளுக்குள் ஏற்பட்டு இருந்தது. தனக்கு கீழ் வேலை செய்பவள் என்பதையும் தாண்டி,
‘ஒருவேளை அவள் வாழ்வை இழந்தவள் என்ற பரிதாபமாக கூட இருக்கலாம்!’
என்ன சொல்லிக் கொண்டாலும் ஒரு திறமையான துணையை இவள் இழந்து விட்டது மட்டும் உண்மை. தன் உயிர் காதலோடு சேர்த்து!
அன்று நடந்ததெல்லாம் போட்டி போட்டு அவள் நினைவில் மோத, கண்களை இறுக மூடி நெற்றியை கெட்டியாக பிடித்து கொண்டாள்.
அவளின் இருண்ட விழிகளுக்குள் குறுஞ்சிரிப்பு மாறாத ராகுல் கிருஷ்ணாவின் வசீகர முகம் அழகாய் காட்சியானது.
சட்டென இமைகளை திறந்தவள் நிலை கொள்ளாமல் அப்படியும் இப்படியுமாக நடக்க ஆரம்பித்தாள்.
“அவன் உன் காதலுக்கு துரோகம் செஞ்சவன்! அவன நீ மறந்து தான் ஆகணும்!”
“ஆமா, அவன் பச்ச துரோகி அவனை நினைக்காத! மறந்திடு! மறந்திடு!” என்று திரும்பத் திரும்பத் தனக்கு தானே சொல்லிக் கொண்டிருந்தாள் நிவேதா பித்து பிடித்தவள் போல.
தன் மனநிலை எண்ணி அவளுக்கே வெறுப்பாக இருந்தது.
அவன் தவறானவன் என்று தெரிந்த பிறகும், அவன் தனக்கும் தன் காதலுக்கும் பச்சை துரோகம் செய்தவன் என்பதை கண்முன் பார்த்த பிறகும் கூட அவன் நினைவுகளை கசக்கி குப்பையில் வீசி எறிய முடியவில்லை இவளால்.
அவன் நினைவுகளோடே போராடி தன் சுயத்தை சிறிது சிறிதாய் இழந்து கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. எனினும் அந்த நினைவுகளில் இருந்து விடுபடும் வழிதான் தெரியவில்லை.
# # #
காதல்காரன் வருவான்…