KS 20

KS 20

காதல் சன்யாசி 20

மாலையில், வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்த ராகுல், தமிழிடம் ஏதும் முகம் கொடுத்து பேசுவதாக இல்லை. தளராத இறுக்கத்துடன் நடமாடினான்.

அவளும் வலிய சென்று அவனிடம் பேச முற்படவில்லை.

தன் வாழ்வில் நடந்தேறிய விசித்திரங்களை நினைத்து உள்ளுக்குள் வெதும்பி கொண்டிருந்தாள் அவள்.

தாயற்ற அவளின் குழந்தை பருவம் அவளுக்கு அத்தனை உவப்பாக இருக்கவில்லை. சித்தியின் குத்தும் பேச்சுக்களிலும் தந்தையின் உதாசீனத்திலுமே நகர்ந்தன.
கல்லூரிகால நிகழ்வுகள் அவளுக்கு வரமாய் அமைந்தன. தன் நண்பர்களுடனான ஒவ்வொரு தருணமும் இப்போதும் அவள் நினைவில் இனிப்பவை.

படிப்பு முடிந்ததுமே அவசரமாய் கடமைக்காக தள்ளி விடப்பட்ட திருமண வாழ்க்கை, அத்தனை கொடுமையாக அமையும் என்று அவள் எண்ணிபார்க்கவும் இல்லை. கணவன் என்ற பெயரில் போதையின் பிடியில் இருந்த வெறிபிடித்த மிருகத்திற்கு இரையான அவளின் சித்ரவதையான இரவு பொழுதுகள், அவளால் இப்போதும் நினைத்து பார்க்க கூட சகிக்க முடியாதவை.

எண்ணி நூறு நாட்கள் கூட முழுதாக முடியாத அந்த கருப்பு நாட்கள், அந்த பெண்ணின் எல்லா சந்தோஷங்களையும் முழுதாய் அழித்துவிட்டிருந்தது.

வெறுமையான அவள் உள்ளம் பெண்ணுக்குரிய இயல்பான ஆசைகள் விருப்பங்களை கூட தன்னுள் புதைத்து கொண்டது.

அவளை மேலும் வெறுமையாக்கும் வகையில் கணவனின் கொடூர மரணம்!
தாராளமாய் உறவுகள் அவளுக்கு பெயர் சூட்டின ராசியற்றவள் என்று!

முதலில் ரணமாய் உணர்ந்த வலிகள் அனைத்தையும் காலம் வடுக்களாய்‌ மாற்றியிருந்தன.

கொடைக்கானலில் வேலைக்கான வாய்ப்பு வந்ததும் அவள் ஒப்பு கொண்டதற்கு முதல் காரணம் சுமதியின் கல்யாண செலவு. இத்தனை தூரம் வேலைக்கு வர முதலில் தயங்கினாலும் இந்த வேலையில் சேர்ந்த பிறகு, அவளின் பிறந்த, புகுந்த வீட்டு தேவைகளை அவளால் ஓரளவு சமாளிக்க முடிந்ததில் திருப்தி‌ அடைந்தாள்.

இதே போல வாழ்ந்து முடிந்தால் போதுமென்று மனதால் தவ வாழ்வை கொண்டிருந்தவளுக்கு அத்தனை பெரிய அவமானமும் அதிர்ச்சி தரும் திருமணமும்!

தன் வாழ்க்கை தடம் மாறியதில் திசை மறந்த பறவை போல அவளும் அல்லாடி கொண்டிருக்கிறாள் இப்போது!

ராகுலை ஏற்று கொள்ள முடியுமா? முடியாதா? என்ற பட்டிமன்ற கேள்விகள் அவளுக்குள் எழவே இல்லை. அவன் இப்போதும் அவளின் நண்பன் மட்டுமே அதை தாண்டி யோசிக்க இயலவில்லை அவளால்.

ஆனால் அவன் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயல்வது தான், அவளுக்குள் பேரிரைச்சலை உண்டாக்கி இருக்கிறது.

காலையில் இருந்து தன்னிடம் ஏதும் பேசாமல் இந்த நள்ளிரவில் கட்டிலில் உறங்கும் கணவனை சற்றே தலைத்தூக்கி பார்த்தவள், ஓர் ஆழ பெருமூச்சை இழுத்து விட்டு திரும்பி படுத்து உறங்கி போனாள்.

விடியற்காலையில், பார்வதி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, தமிழ் குளித்து தயாராகி அவர் முன் மென்னகையோடு வந்து நின்றாள்.

பார்வதியின் முகமும் மலர்ந்து இருந்தது. “உன் கால்ல மெட்டி இல்லன்ற விசயம் இத்தனை நாள் எனக்கே தோணலை. சுமதி சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த ஞாபகம் வருது. இதுக்கு தான் சடங்கு சம்பிரதாயம் மதிச்சு கல்யாணம் நடத்தணும்னு சொல்றது. ம்ம் நல்லவேளையா, கிருஷ்ணா ஞாபகமா உனக்காக மெட்டி வாங்கி வந்திருக்கான்” என்று மகிழ்ந்து சொல்ல, தமிழ் துணுக்குற்றாள்.

அங்கே பூக்களின் மீது வைக்கப்பட்டு இருந்த இரு ஜோடி வெள்ளி முத்து மெட்டியை கவனித்தவளுக்கு, நேற்றிலிருந்து அவன் தன்னிடம் வெறுப்பாக நடந்து கொள்வது நினைவுக்கு வந்தது.

ராகுல் கிருஷ்ணாவும் தயாராகி அவர்கள் அருகில் வந்து நிற்க,
அவனை மருட்சியாய் பார்த்தாள். இப்போதும் அவன் முகம் இறுகி தான் இருந்தது.

பார்வதி பயபக்தியுடன் பூஜையை முடித்து மகனிடம் மெட்டி அணிவிக்கும்படி பணித்தார்.

இங்கே வந்ததிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக இது போன்ற சங்கடங்களை பார்த்திருந்தாலும் தமிழால் இதில் எதையும் முழு மனதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவையெல்லாம், பட்டுப்போன மரத்திற்கு மலர் அலங்காரம் செய்வதைப் போல தான் தோன்றியது அவளுக்கு.

ராகுல் அவள் முன்னால் கீழே ஒரு காலூன்றி முட்டியிட்டு அமர்ந்து, அவளின் பாதத்தை எடுத்து தன் உள்ளங்கையில் வைக்க, அவளை இனம்புரியாத அச்சம் வாட்டியது.

அவளின் பொன் விரல்களில் அவன் முத்தாடும் மெட்டியை பூட்ட, அவளின் இதய சுவர்களில் விரிசல்களை உண்டாக்குவதாய்.

அவள் எட்டு வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவள் கால் மெட்டி முத்துக்கள் செல்லமாய் சிணுங்கின.

அந்த மெட்டி ஒலி இப்போது தனக்கு அருகில் கேட்க, அவன் நிமிர்ந்தான்.

தமிழ் அவன் முன் கைகளை பிசைந்தபடி வந்து நின்றிருக்க, ராகுலின் பார்வை வாசற் பக்கம் பார்த்தது. வழக்கம் போல பார்வதி அண்டை வீட்டாருடன் வாயடிக்க சென்று விட்டிருந்தார்.

சத்தமிட்டு கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்து விட்டு அவளை ஏறிட்டான்.

“நீ என்மேல கோபமா இருந்த இல்ல?” அவள் வினவ,

“ஆமா, நீ என்கிட்ட எதையும் சொல்லாம மறைச்சதுக்காக” அவன் பதில் நேராய் வந்தது.

“அப்ப, மெட்டி?”

“அது புருசனா நான் உனக்கு செய்ய வேண்டிய கடமை” என்று அவன் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, அவளும் அவன் பின்னோடு நடந்தாள்.

“விளையாடாத ராகுல். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்ற அவளின் வாட்டமான முகத்தை கவனித்தவன்,

“நீ என்னை விட்டு போனா மட்டும், உன் கஷ்டம் எல்லா தீர்ந்து போயிடுமா?” என்றான்.

“ம்ம் உன் பிரச்சனை எல்லாங்கூட தீர்ந்து போயிடும் டா” அவள் ஆர்வமாய் தலையாட்டினாள்.

‘அவளை தான் என் பிரச்சனையாக கூறுகிறாள்!’ என்பது அவனுக்கு புரியவே செய்தது.

வெற்று புன்னகையை இதழில் படற விட்டவன், “நான் என்ன சொன்னாலும் நீ ஏத்துக்க போறது இல்ல. அதனால உன் விருப்பப்படி செய்” என்று ராகுல் சொல்லிவிட, தமிழ் நம்பாமல் விழிகளை விரித்தாள்.

எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு அவளுக்குள் நிம்மதியாய் உணர்ந்தாள்.

அவளின் முகத்தையே வெறித்து கொண்டிருந்தவன், “ஆனா, உன்ன நிர்கதியா அனுப்பி வைக்க என்னால முடியாது. உனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சதுக்கு அப்புறம், நீ இங்கிருந்து தாராளமா போகலாம்.”

“மறுபடியும் உன் பேச்சை நம்ப, நான் தயாரா இல்ல” உடனே அவள் மறுத்து சொன்னாள்.

“இல்ல தமிழ், உன் வேலைக்காக நானும் சில இடங்கள்ல சொல்லி இருக்கேன். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க மாட்டியா?”

“என்ன? வெறும் ஏழே நாள்ல உன்னால வேலை வாங்கி தர முடியுமா?” தமிழ் பரிகாசமாக கேட்க,

“ம்ம் என்னால ஏற்பாடு செய்ய முடியும்” ராகுல் உறுதி கூற,

“அப்படி முடியலன்னா கூட, நான் இங்கிருந்து போறதை நீ தடுக்க கூடாது சரியா?” அவள் மீண்டும் மீண்டும் ஒரே கருத்தை வலியுறுத்தினாள்.

ராகுலுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற, “ம்ம் சரியா இந்த ஒருவாரத்தில நான் உனக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்தா, நீ இங்கேயே இருக்கணும் சவாலா?”

அவன் லாவகமாய் பேச்சை திருப்பி போட, தமிழ் திகைத்தாள்.

எனினும் இந்த வாய்ப்பை இழக்க அவள் விரும்பவில்லை. என்ன முயன்றாலும் ஏழே நாட்களில் நல்ல வேலை கிடைப்பது நடக்காத காரியம் அந்த தைரியத்தில், “சரி, சவால்” என்றாள்.

ராகுலை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். எதற்காகவும் அவன் மற்றவரிடம் அடங்கிபோவது கிடையாது.

தனக்காக அவன் இத்தனை இறங்கி யோசிப்பது அவளுக்குள்ளும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

‘தான் எத்தனை தூரம் அவனைவிட்டு
விலகி போகிறேனோ, அத்தனை தூரம் தன் நண்பனின் வாழ்க்கைக்கு நல்லது” என்று எண்ணியது அவளின் பேதை மனது.

‘விதி வசத்தால், தான் அவன் வாழ்க்கைக்குள் இழுக்கப்பட்டதால் ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளும் தான் அவனைவிட்டு விலகி செல்வதால் தீர்ந்து விடும்’ என்று என்று உளமார நம்பினாள்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளாய் குறைய, தமிழ்ச்செல்வி சந்தோசமாகவே உணர்ந்தாள்.

ஆனால், மனித வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது தீராத ஒன்று!
ஒன்று போனால் மற்றொன்று வரிசையாய் காத்து நிற்கும்!

தமிழின் அடுத்த பிரச்சனை அவள் வாசல் தேடியே வந்து நின்றது!

இளமாலை பொழுதில் வீட்டு வேலையின் நடுவே அழைப்பு மணியோசை கேட்க, சலிப்போடு வந்து கதவை திறந்த தமிழ், அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் அப்படியே உறைந்து நின்று விட்டாள்.

தமிழ் நிச்சயமாக அங்கு நிவேதாவை எதிர்பார்க்கவில்லை!

நிவேதாவும் தமிழை பார்த்து வியந்து தான் நின்றாள்.

வண்ண சேலையும், பின்னிய கூந்தலில் நிறைந்த பூவும், நெற்றி நிறைத்த பொட்டும், அணி மணிகளும், அவளின் பூ முகத்தின் புது பொலிவும், நிவேதாவின் யோசனையை பின்னோக்கி தள்ளுவதாய்.

இரண்டு மாதம் முன்பு, வனப்பை காட்டாத சேலையும் இழுத்து முடியிட்ட கொண்டையும் என அச்சடித்த சித்திரமாய் இருந்த அந்த தமிழ்ச்செல்வி
எங்கே? இப்போது இவளின் தோற்றம் எங்கே?

சாதாரண சேலைக்குள் இத்தனை இளமையையும் அழகையும் மறைத்து வைக்க முடியுமா என்ன?
அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை!

அங்கே நிவேதாவை பார்த்து பார்வதியும் பதைபதைத்து நின்று விட்டார்.

“தமிழ்… என் பைக் கீ கிடைக்கல எனக்கு கொஞ்சம் சீக்கிரம் தேடி தாயேன்” என்று குரல் கொடுத்தபடியே ராகுல் வெளியே வர, தமிழும் பார்வதியும் என்ன நடக்குமோ என்று கலவரமாயினர்.

வாசலில் நின்ற நிவேதாவை பார்த்துவிட்ட ராகுலின் புருவங்கள் வியப்பில் உயர, “ஹே நிவேதா, வாட் எ சர்பிரைஸ்! ஏன் அங்கேயே நிக்கற? உள்ள வா” என்று உற்சாகமாய் வரவேற்றான் அவன்.

மாமியாரும் மருமகளும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து விழித்து நின்றனர்.

நிவேதா சங்கடமாக தமிழை பார்க்க, “தமிழ், வீடு தேடி வந்தவங்கள உள்ள கூப்பிடணும்னு தோணலையா உனக்கு?” என்று ராகுல் அவளை சுயநிலைக்கு கொண்டு வர,

“வ…வாங்க மேடம்!” என்று விலகாத குழப்பத்துடன் நிவேதாவை உள்ளே அழைத்து அமர சொன்னாள்.

அவள் எதிரில் வாகாய் அமர்ந்து கொண்டவன், “முதல் முறையா மேடம் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறிங்க?” இயல்பான புன்னகையோடு கேட்க,

நிவேதா சங்கடமாய், “இல்ல கிருஷ்…ணா, அது… நான் தமிழ்ச்செல்வி கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன்” என்றவள் குற்றவுணர்வோடு தமிழை ஏறிட்டாள்.

தமிழ் ஒன்றும் புரியாமல் திகைத்து விழிக்க, நிவேதா அன்றைய நாளில் சாருமதியின் பங்கை பற்றி தயக்கத்துடன் சொல்லலானாள்.

தன் வாழ்வையே புரட்டி போட்ட அந்த கீழ்தரமான சதியை பற்றி தெரிய, இவள் நிலைகுலைந்து தான் போனாள்.

தமிழ் அதிர்ந்து கலங்கி நிற்பதை ராகுல், அமைதியாகவே கவனித்து கொண்டிருந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு எடுத்து சொல்லியும்… நான் உங்க ரெண்டு பேரையும் நம்பாம ரொம்ப தப்பா பேசிட்டேன். இப்ப, உண்மை எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம்… நான் எவ்வளவு முட்டாள் தனமா நடந்துகிட்டேன்னு எனக்கு புரிஞ்சது. என்னால தாங்கிக்கவே முடியல… நேத்து ராகுல சந்திச்சு மன்னிப்பு கேட்டேன்.”

“…!”

“அப்புறம் கூட என் மனசு சமாதானம் ஆகல. உங்ககிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சு. அதான் இங்க வந்தேன்.”

“அன்னைக்கு எதையுமே புரிஞ்சிக்காம உங்கள ரொம்ப தப்பா பேசிட்டேன் தமிழ்ச்செல்வி, ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” என்று நிவேதா கைகூப்பி மன்னிப்பை வேண்டினாள்.

தமிழ் கலங்கிய விழிகளோடு, “வேணாம் மேம், நீங்க போய் என்கிட்ட… அவங்க செஞ்ச தப்புக்கு, நீங்க என்ன பண்ணுவீங்க” என்று குரல் தழுதழுக்க மேலே சமாதானமாய் பேசி விட்டாலும், அவளின் மனம் உலைகளமாய் கொதித்து கொண்டிருந்தது. அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து.

ராகுல் கலங்கி நின்ற தன் மனைவியின் முகத்தை கவனித்திருக்க, ராகுலையும் தமிழ்ச்செல்வியையும் மாறி மாறி பார்த்த நிவேதாவின் மனதில் நேற்றைய ராகுலை சந்தித்தது ஓடிக் கொண்டிருந்தது.

#
#
#

ராகுல் காலையில் வரும் போதே நிவேதா வங்கியின் வாசலில் அவனுக்காக தன் காரில் காத்து இருந்தாள்.

அவளைப் பார்த்து சில நொடிகள் தாமதித்தவன் யோசனையுடன் வங்கிக்குள் சென்று விட்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் நிவேதா அனுமதிகேட்டு அவன் தடுப்பு அறைக்குள் நுழைய,

ராகுல் தன் எதிரே இருக்கையை கைகாட்டி விட்டு, அவள் கம்பெனி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை தன் கணினி திரையில் கொண்டு வந்தான்.

“நா… நான் அக்கௌன்ட் விசயமா வரல” என்ற அவளின் தழுதழுத்த குரலில் நிமிர்ந்தவன், அவளின் கலங்கிய கண்களையும் துவண்டு இருந்த முகத்தையும் கவனித்தவாறு நேராக அமர்ந்தான்.

முன்னைக்கு இப்போது அவள் முகம் பொலிவிழந்து பசலை பூத்திருந்தது.

அவனின் நீடித்த மௌனம் நிவேதாவிற்கு வலிக்க, “ம… மன்னிப்பு கேட்க வந்திருக்கேன் கிருஷ்” என்ற அவளின் தடுமாறிய குரலில் அவன் நெற்றி கேள்வியாக சுருங்கியது.

நிவேதா தன்னை சமாளித்து கொண்டு, அன்று சாருமதி நடந்து கொண்டதை பற்றி கசப்பாக சொல்லி முடிக்க,
அவன் முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை.

“திரும்ப திரும்ப நீ எடுத்து சொல்லிக் கூட, என்னால அன்னிக்கு உண்மைய புரிஞ்சுக்க முடியல… ‘என் கிருஷ் என் காதலுக்கு துரோகம் பண்ணிட்டான்’னு அந்த முதல் அடியிலேயே என் மூளை உறைஞ்சு போயிருந்தது.”

“…”

“என்னால முடியல கிருஷ்… நீ துரோகின்னு விலகி போன என்னால, நீ எந்த தப்பும் செய்யலன்னு தெரிஞ்ச பிறகு, ஏதோ எனக்கு நெருப்பு மேல நிக்கற மாதிரி அவஸ்தையா இருக்கு.”

“…”

‘கேவலம் ஒரு வீடியோ கிளீப்ஸ் வச்சு நீ எப்படி ராகுலை சந்தேகப்பட்டு இருக்குலாம்னு’ என் மனசாட்சி ஒவ்வொரு செகண்டும் என்னை பழிச்சிட்டு இருக்கு.”

“அப்ப உன்ன நம்பாம போனது. என்னோட அடி முட்டாள்தனம் தான். அதை நினைக்க நினைக்க, எனக்கே என்மேல ஆத்திரமும் கோபமுமா வருது. இப்ப என்ன செய்றதுன்னு கூட எனக்கு புரியல கிருஷ்!”

அவன் முன் அவள் முழுவதுமாக உடைந்து தலைக் கவிழ்ந்தாள்.

அவன் இதழில் சிறிய விரக்தி சிரிப்பு வந்து மறைய, “என்னையும் என் காதலையும் நீ நம்பறதுக்கு எனக்கு சாட்சி தேவைப்படும்னு நான் அப்ப நினைக்கல நிவேதா!” என்று ஏளனமாகவே சொல்ல, அவள் வலி நிறைந்த பார்வையோடு அவனை ஏறிட்டாள்.

“சரி விடு, இப்பவாவது நான் நீ சந்தேகப்பட்ட அளவுக்கு கீழ் தரமானவன் இல்லன்னு புரிஞ்சிகிட்டயே, அதுவே போதும்” ராகுல் ஆறுதலாய் பேச,

“மிஸஸ் சாருமதி உன்கிட்ட நம்ம காதலை விலை பேசினாங்கன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்ச?” நிவேதாவின் கேள்வி ஆற்றாமல் வந்தது.

தங்களை பிரிக்க இப்படியொரு சதி வேலை நடப்பது முன்பே தெரிந்திருந்தால், அந்த வீடியோவை அப்போதே நம்பாமல் இருந்திருக்கலாம் என்று அவள் பேதை மனம் ஒருபுறம் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தது.

“என் வருங்கால மாமியார், ஏதோ ஸ்டேட்ஸ் வெறியில அப்படி பேசிட்டாங்க. நம்ம கல்யாணம் முடிஞ்சா எல்லா சரியா போயிடும்னு நினைச்சேன். காதல்னா எதிர்ப்பு வர்றது சகஜந்தான, இதையெல்லாம் சொல்லி அம்மா, பொண்ணு உறவை கலைக்க வேணாம்னு அப்ப எனக்கு தோணுச்சு!” என்று விளக்கம் சொல்லி தோளை குலுக்கிக் கொண்டான் அவன்.

மறுத்து பேச நிவேதாவிடம் ஏதும் இல்லை. இப்போது மறுத்து பேசி ஆக போவது எதுவும் இல்லை. அவள் அமைதியாய் அவனிடம் விடைபெறுவது போல எழுந்து நிற்க,

ராகுல், “கடைசியா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் நிவேதா, அன்னைக்கு ஒருவேளை அந்த வீடியோவுல, உன்னபத்தி தப்பா ஏதாவது வந்திருந்தா, முதல்ல அப்படி போட்டவனோட முகத்தை உடச்சிருப்பேனே தவிர, உலகமே சொல்லி இருந்தாலும் என் நிவி மேல நான் சந்தேகப்பட்டிருக்க மாட்டேன்!” அழுத்தந்திருத்தமாக அவன் சொல்ல, நிவேதா அடிவாங்கிய உணர்வோடு அங்கிருந்து வெளியேறினாள்.

#
#
#

ஏலக்காய் தேநீர் மனம் நிவேதாவை சுயநினைவுக்கு இழுத்து வந்தது. மென் முறுவலோடு தயக்கமாக பெற்றுக் கொண்டாள்.

“என்ன தான் இருந்தாலும் பொண்ணோட கல்யாணத்தை பெத்தவளே கெடுக்க நினைப்பாளா? அக்கிரமமா இருக்கே” பார்வதி ஆதங்கமாக பேச, நிவேதாவின் முகம் வாடி போனது.

“அவங்க ‘அம்மா’ன்ற சொல்லுக்கே அருகதை இல்லாதவங்க!” அவள் வார்த்தைகளும் பாரமாய் வெளிவந்தன.

“விடு நிவேதா. இப்பவாவது நீ உண்மைய புரிஞ்சிகிட்டயே. எங்களுக்கு அதுவே போதும்” என்று ராகுல் அவளை ஆறுதல்படுத்த முயற்சிக்க,

“ஆமா மேம், நாங்க ரெண்டு பேரும் உங்கள எந்தவிதத்திலையும் ஏமாத்த முயற்சி செய்யலன்னு புரிஞ்சிட்டிங்களே அதுவே போதும் மேம் எனக்கு” நிவேதாவின் கலக்கம் கண்டு தமிழும் ஆறுதலாக பேசினாள்.

நிவேதா திரும்பவும் தன் மன்னிப்பை கூறிவிட்டு பாரமிறங்காத மனதோடு விடைபெற்று வந்தாள்.

ஏனோ ராகுல், தமிழ் அவளிடம் இயல்பாக பேசுவது கூட, அவளுக்கு பதில் அடியாகவே விழுந்தன.
இவர்களையா அன்று அத்தனை மோசமாக நான் பேசிவிட்டேன் என்று.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!