காதல் சன்யாசி 27
காலை கதிரவனின் ஒளி கீற்றுகள் சன்னல் வழியே நுழைந்து அவன் இமைகளை உரச, ராகுல் முயன்று கண்களை திறந்தான்.
உறக்கம் கலையாதவனாக அருகில் கை வைத்து தேட, இரவு முழுதும் அவன் அருகிருந்த பூங்கொடியை இப்போது காணவில்லை. வெறிச்சோடி இருந்தது.
கண்களை துடைத்தப்படி கடிகாரத்தை பார்த்தவன், படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தான். நேரம் எட்டு மணி தாண்டி இருந்தது.
அவசரமாக துண்டை எடுத்து கொண்டு குளியலறைக்கு விரைந்தவன், அப்போது தான் குளித்து முடித்து எதிரே வந்த தமிழைப் பார்த்து தேங்கினான்.
அவன் குறும்பு பார்வை அவள் உச்சி முதல் பாதம் வரை படர, அவள் தயங்கி பார்வை தாழ நின்றாள்.
வெளிரி கிடந்த அவள் முகமும், வெண்மை படர்ந்த அவள் மஞ்சள் மேனியும் அவனை இப்போதும் கிறங்க வைப்பதாய்.
‘நான் உனை வென்று விட்டேன்’ என்ற மமதை அவனிதழில் விரிந்த கள்ள சிரிப்பில் ஆர்பரித்தது.
அவன் பார்வையின் பொருள் புரிந்தும் எந்தவித உணர்ச்சியும் காட்டாத முகத்துடன் அவள் விலகி நடந்தாள்.
“டிஃபனாவது சாப்பிட்டு போ தமிழு” பார்வதி பரிவாக சொல்ல, “எனக்கு பசி இல்ல ம்மா, நான் கிளம்பறேன்” என்று அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் கைப்பையை எடுத்து கொண்டு வேகமாய் வெளியே வந்தாள்.
அவர்கள் பேசுவதை கேட்டு அவள் பின்னோடு வந்த ராகுல், “இரு தமிழ், நானே உன்ன ட்ராப் பண்றேன்” என்று சொன்னதைக் கூட காதில் வாங்காமல் சாலையில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி சென்று விட்டாள்.
தமிழ் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது ராகுல் மனதை உறுத்த தான் செய்தது.
தன் வேலையின் நடுவே, மனம் தாங்காமல் மறுபடி மறுபடி அவள் கைப்பேசிக்கு முயற்சித்து தோற்று கொண்டிருந்தான் அவன்.
‘ப்ச் ஏன் தமிழ், என்னை இன்னும் இப்படி தவிக்க வைக்கிற, நான் பாவம் இல்ல டீ’ மானசீகமாய் அவளிடம் கெஞ்சியவன், வேறுவழியின்றி நிவேதாவிற்கு ஃபோன் செய்தான்.
“ஹலோ, எஸ் ராகுல்”
“சாரி நிவி, தப்பா நினைக்காத, தமிழை கொஞ்சம் என்கிட்ட பேச சொல்லேன். ப்ளீஸ்”
“தமிழ்ச்செல்வி இன்னைக்கு வேலைக்கு வரல. என்ன ப்ராப்ளம்னு நானே கேட்கணும்னு நினைச்சேன்”
நிவேதா பதிலைக் கேட்டு ராகுல் பதற்றமானான்.
“அவ எங்க போறேன்னு சொல்லிட்டு போகல. அவசரமா கிளம்பினா, நான் வேலைக்கு தான் போறாள்னு நினைச்சேன்” அவன் தவிப்போடு சொல்ல,
“ரிலாக்ஸ் ராகுல். தமிழ்ச்செல்வி எங்கேயும் போயிருக்க மாட்டாங்க. வந்துடுவாங்க” நிவேதா அவன் குரலின் பதற்றம் உணர்ந்து தைரியம் சொல்ல,
“தேங்க்ஸ் நிவி”
அதற்கு மேல் ராகுலுக்கு இருப்பு கொள்ளவில்லை. தமிழ்ச்செல்வியை தேட ஆரம்பித்தான்.
தமிழுக்கு பழக்கமானவர்கள் என்று அங்கு யாரும் கிடையாது. அவள் யாருடனும் அத்தனை பழக்கம் வைத்து கொள்வதும் இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அவள் அடிக்கடி செல்லும் கோயில், மார்க்கெட் என்று முதலில் தேடலானான்.
அவளை காணாது இனம்புரியாத பயம் அவனுள் துளிர் விட்டது.
அருகிருந்த மற்ற கோயில்கள், பொதுவிடங்கள் என தன் பார்வை சென்ற இடமெல்லாம் அவள் முக தரிசனம் தேடி அலைந்து கொண்டிருந்தான் அவன்.
நேரமாக நேரமாக அவன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான்.
‘ஏய் ராட்சசி திரும்பி வா டீ. நீயில்லாம நான் என்னாவேன்னு கூட யோசிக்க மாட்டியா, பாவி நேர்ல பார்த்தா உன்ன கொன்னுடுவேன் டீ! ப்ளீஸ் தமிழ், வந்திடு தமிழ்!” அவன் உள்ளம் பேதலித்து முன்னுக்கு பின் முரணாய் பிதற்றலானது.
அவளின் பிரிவில் அவன் சிறிது சிறிதாய் உடைந்து சிதறிக் கொண்டிருந்தான்.
அவளை வேறு எங்கே சென்று தேடுவது என்று அவனுக்கு புரியவில்லை. அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து இறுதியில் நிவேதாவிடமே யோசனை கேட்டு வந்திருந்தான்.
கலங்கிய முகமாய் சோர்ந்து களைத்து போய் தன்முன் அமர்ந்திருந்தவனை கவனித்த நிவேதா, அவனுக்கு பருக தண்ணீர் தந்தாள்.
“என்னாச்சு? வீட்ல ஏதாவது பிரச்சனையா?”
அவன் ஆமென்று தலையசைத்தான்.
“நேத்து தமிழ்செல்வி மேல கோபபட்டியா?”
“கோபத்தில அவளை அடிச்சிட்டேன் தான். ஆனா, அதுக்காக அவ என்னைவிட்டு போகல, அவ என்கூட இருந்தா எனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு முட்டாள் தனமா பயப்படுறா. நான் அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணேன். ஆனா?”
“ஆமா ராகுல், தமிழ்ச்செல்வி ராசி, நம்பிக்கைனு அவங்கள தாழ்த்தி நினச்சுக்குவாங்க. இதுக்காக நான் அவங்கள பலமுறை கண்டிச்சிருக்கேன்”
“அதுக்கெல்லாம் காரணம் தமிழ் இல்ல நிவி, முன்ன அவளை சுத்தி இருந்தவங்க, வார்த்தைக்கு வார்த்தை அவளை தாழ்த்தி சொல்லி சொல்லியே, அவளோட மனச புழுவா ஒடுங்க வச்சிருக்காங்க, இப்போ…”
“இப்ப என் தமிழ் எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியல, நான் ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கிறா” என்று அவன் கண்கள் கலங்க, நிவேதா அவனை திகைத்து பார்த்திருந்தாள்.
அவன் இதுவரை எதற்காகவும் இத்தனை கலங்கி அவள் பார்த்ததில்லை.
தன் கைபேசியில் தமிழ்ச்செல்வி எண்ணுக்கு முயற்சி செய்ய, அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.
உடனே தங்கள் கம்பெனிக்கான துப்பறியும் நபரை தொடர்பு கொண்டு பேசியவள், தமிழ்ச்செல்வி அலைபேசி எண்ணை தந்தாள்.
சில நிமிடங்களில் அந்த எண் காட்டும் தற்போதைய இடத்தின் முகவரி அவளுக்கு குறுஞ்செய்தியாக வர, அதை பார்த்த நிவேதா குழப்பமாய் ராகுலிடம் நீட்டினாள்.
அவன் கண்கள் ஒருமுறை இடுங்கின. “இந்த இடத்துக்கு எப்படி போகணும் நிவி?” அவன் கேள்வி வேகமாக வந்தது.
# # #
ஊருக்கு வெளியே எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக இருந்தது அந்த இடம்.
பெயர் பலகையில், ‘அன்னை ஆதரவற்றோர் இல்லம்’ என்று பெரிதாக பொறிக்கப்பட்டிருந்தது.
ராகுல் கிருஷ்ணா வண்டியை வெளியே நிறுத்தி விட்டு, விவரத்தை சொல்லி கேட்டை கடந்து உள்ளே சென்றான்.
நடுவில் ஒரு கட்டிடம் இருக்க, அதை சுற்றிலும் பச்சை பசேலென பலவகை மரங்கள் உயர வளர்ந்து அந்த இடத்தை மறைத்து இருந்தன.
ஏதோவொரு புத்தம் புதிய உலகமாக காட்சி அளித்தது அந்த இல்லம்.
அங்கிருந்த செவிலியிடம் அவன் தமிழ்ச்செல்வி பற்றி விசாரிக்க, அவர் உள்ளே கைகாட்டிய திசையை நோக்கி நடந்தான்.
அது விளையாட்டு மைதானம்.
வெவ்வேறு வயது மதிக்கத்தக்க கணிசமான குழந்தைகள் ஒரே மாதிரியான சீருடையில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
ராகுல் அங்கிருந்த இளம் தளிர்களை கவனிக்க, ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் சொல்ல தெரியாத ஓர் ஏக்கம் தொற்றி இருப்பதை போல அவனுக்கு தோன்றியது.
அவன் கண்கள் அங்கு தமிழை தேடி அலைபாய்ந்திட, விளையாடிக் கொண்டிருந்த மழலை செல்வங்களை வேடிக்கை பார்த்தபடி ஒரு மரத்தடி கல் மேடையில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
அவளை நோக்கி வந்தவன், “தமிழ்…” என்றழைக்க, அவள் விதிர்த்தெழுந்து திரும்பினாள். ராகுல் சோர்ந்நவனாக அவள் முன் நின்றிருந்தான்.
இங்கு ராகுலை பார்த்து, திகைப்பில் அவள் கோல விழிகள் விரிந்தன.
“யாரை பார்க்கணும் நீங்க?” மென்மையான கேள்வி ஒலிக்க, இருவரும் திரும்பினர்.
அந்த இல்லத்தின் நிர்வாகி, நீல அங்கி அணிந்து, சற்று முதுமையை தொட்டிருந்த அம்மையார் ராகுலை பார்த்து விசாரிக்க,
“மதர், இவர்… என்னோட கணவர் ராகுல் கிருஷ்ணன்” தமிழ்ச்செல்வி தயக்கமாய் அறிமுகம் செய்தாள்.
அந்த அம்மையார் இதமான புன்னகை விரிய, ராகுலை நோக்கினார்.
ராகுலுக்கும் நிறைவாக தோன்றியது. திருமணமான இந்த ஆறு மாதங்களில் தமிழ் தன்னை கணவனென்று உரிமையோடு சொல்வது இதுவே முதல்முறை!
அவனுக்கு ஒருமுறை எகிரி குதிக்க வேண்டும் போலிருக்க, அம்மையாரின் வாஞ்சையான பார்வையில் அமைதியாக நின்றான்.
“உங்களை நினைச்சு பெருமை படறேன் ராகுல் கிருஷ்ணன். தமிழ்ச்செல்வியை உங்க துணையா அடைய நீங்க தவம் செய்திருக்கீங்க” என்ற அவரின் வார்த்தைகள் அதிர்வின்றி பொறுமையாய் ஒலித்தன.
“வாரம் தவறாம வந்து எங்க குழந்தைகளுக்கு உங்களால முடிந்த சேவைகளை செய்திட்டு இருந்தீங்க. சில மாதங்களா நீங்க வரல, நானும் விசாரிக்கணும்னு நினைச்சிருந்தேன். இன்னைக்கு நீங்க வந்ததில, எங்க குழந்தைங்க கூட இருந்ததுல சந்தோசம் தமிழ்ச்செல்வி” அம்மையார் பேசியபடி மெல்ல நடக்க, அவர்களும் உடன் நடந்தனர்.
“மதர், உங்க எல்லாரையும் பார்க்கணும் போல இருந்தது. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். இன்னைக்கு பூரா இங்க இருந்தது மனசுக்கு நிறைவா இருக்கு” என்று தமிழ்ச்செல்வி அவரிடம் விடைபெற,
“நல்லது, உங்களோட வாழ்வில் இனி எல்லா இன்பமும் குறைவில்லாம நிறைந்திருக்கட்டும். காட் பிளஸ் யூ மை சில்ரன்” அம்மையார் அவர்களை ஆசீர்வதித்தார்.
அங்கிருந்து கிளம்பும் முன்னர் ராகுல் தன்னால் இயன்ற கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி, வரும் மாதங்களில் தங்களால் இயன்றதை செய்வதாக கூறி விடைப்பெற்றனர்.
இருவரும் அமைதியாகவே இல்லத்தை விட்டு வெளியே நடந்து வந்தனர்.
அவள் இப்போதும் தன்னிடம் எதுவும் பேசாமல் மௌனம் காப்பது அவன் மனதை அறுத்தது.
தன் வண்டியின் அருகில் வந்ததும் அவளிடம் திரும்பியவன், “ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம் இல்ல? உன்ன எங்கெல்லாம் தேடி அலைஞ்சேன் தெரியுமா? உன்ன காணாம துடிச்சு போயிட்டேன் டீ”
ராகுல் அவள் பிரிவை தாங்க இயலாமல் தவிப்போடு சொல்ல, தமிழ் கலையாத மௌனத்துடனே நின்றிருந்தாள்.
“என்மேல என்ன கோபம் தமிழ்? நீ என்னை தப்பா நினைக்கிறியா?”
“…”
“புரிஞ்சிக்க டீ, உன்ன விட்டு என்னால பிரிஞ்சு வாழ முடியாது” ராகுல் முடிவாக சொல்ல,
“உ… உன்ன விட்டு பிரிய கூடாதுன்னு எனக்கும் தான் டா தோணுது. அது என்னோட… பேராசையான்னு தெரியில…” தமிழின் மென்குரல் தேய்ந்து ஒலித்தது.
அவன் கவலை தொய்ந்திருந்த கண்களில் மென்னொளி பரவ, புருவம் உயர்த்தினான்.
“எனக்கு தெரியும் டா. எனக்காக தான் நீ எல்லாமே செஞ்ச, என்னையும் ஆசை, பாசம் இருக்கிற சாதாரண பொண்ணா பார்த்த, என்னை உன் மனைவியா ஏத்துகிட்ட, எனக்காக உன் காதலை கூட…”
“இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்க?”
“அழகுல, அறிவுல, படிப்புல, அந்தஸ்துல எதலையுமே நான் நிவேதா மேடமுக்கு சமமாக மாட்டேன். போயும் போயும் எனக்காக நீ அவங்கள…”
“தமிழ்…” அவள் மனங்கலங்கி சொல்லி கொண்டு போக, ராகுல் அவளை தேற்ற முயற்சித்தான்.
“நிவேதா மேம், உன்ன எவ்வளவு நேசிச்சாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா, நான் உன்கிட்ட வெறுப்பு மட்டும் தான காட்டினே, இதுவரைக்கும் உனக்காக நான் எதுவுமே செய்யலயே டா”
தமிழ் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக, ராகுல் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தன் கையால் அவள் வாயை பொத்தினான்.
அவளின் கலங்கிய விழிகள் அவன் முகத்தை வெறித்தன.
“ஏய், நீ என்னை மேலுக்கு வெறுத்தாலும், எப்பவும் நீ என்னை விட்டு கொடுத்தது இல்ல தமிழ்!” அவள் வாய் மூடி இருந்த கையை விலக்கிக் கொண்டவன்,
“மண்டபத்தில அத்தனை அவமானத்துக்கு நடுவுல நீ என்னை விட்டு கொடுக்கல! உன் சித்தி என்னை தப்பா பேசும்போது… அப்ப நீ என்னை விட்டு கொடுக்கல! என்கூட வக்கனையா சண்ட போட்டா கூட, எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து செஞ்சிருக்க! எனக்காக நிவி கிட்ட போய் பேசி இருக்க…”
“நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிச்சீங்க அதான் நான்…” தமிழ் காரணம் சொல்ல,
“ம்ம் அப்ப உங்களுக்கு என்மேல காதல் வரலையா மேடம்?” ராகுலின் குறுக்கு கேள்வி புரியாமல் தமிழ் திகைத்து விழித்தாள்.
ராகுல் தன் நெற்றியை தட்டிக் கொண்டான், “உன்ன மாதிரி ஒரு வடிகட்டின முட்டாள், இந்த உலகத்தில வேற யாரும் இருக்க மாட்டாங்க. உன் மனசுக்கு என்னை பிடிச்சிருக்கா, இல்லையான்னு கூட தெரிஞ்சிக்க முடியாதா உன்னால?” என்று கிண்டல் செய்ய,
அவள் இல்லையென்று தலையசைத்து கேள்வியாகவே நின்றிருந்தாள்.
“ரொம்ப யோசிக்காத, உனக்கு எல்லாம் புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம் போல” என்று அலுத்து கொண்டவன்,
“அதோட, என்னை எந்த பொண்ணுக்காவது பிடிக்காம போகுமா என்ன?” என்று பெருமையாய் காலரை தூக்கி விட்டு, குறும்பாய் கண்ணடித்தான்.
ராகுல் சொன்ன விதத்தில் தமிழ் சட்டென சிரித்து விட்டாள்.
“உனக்கென்ன மனசுல பெரிய ஹீரோன்னு நினப்பா?” தமிழ் கேலியாக கேட்க,
“ஆமா, அதுல என்ன டீ சந்தேகம் உனக்கு?” அவன் தோரணையாய் தலைக் கோதி கெத்தாக சொன்னான்.
தமிழ் அவனை புதுமையாக பார்த்து நின்றாள். தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறி விட்டன. இத்தனைக்கு பிறகும் ராகுல் தன் குறும்பு தனம் மாறாமல் இருப்பது அவளுக்கு வியப்பை தருவதாய்.
ராகுல் ஒற்றை புருவம் தூக்கி என்னவென்று வினவ,
“எனக்கு இந்த காதல் எல்லாம் புரியாது டா. ஆனா ஒண்ணு, நீ என்மேல காட்டின அன்பும் அக்கறையும் உன் அளவுக்கு வேற யாரும் எனக்கு தந்ததில்ல”
தமிழ் நெகிழ்வாய் சொல்ல, ராகுல் அவள் மென்கரம் பற்றி மென்மையாய் அழுத்தினான்.
“ராகுல், எப்பவும் இதே அன்போட என்கூட இருப்ப இல்ல? மாறிட மாட்டியே…” அவளின் கேள்வி ஏக்கமாகவும் தவிப்பாகவும் வந்தது.
அவன் எதிரே இருந்த கட்டிடத்தை சுட்டி காட்டி, “ஆமா, இந்த இடம் உனக்கு எப்படி தெரியும்?” என்று பேச்சை மாற்றினான்.
“அது வந்து, முன்ன என் வீக் என்ட்ல இங்க வந்திடுவேன். இந்த குழந்தைகங்க முகத்தை பார்க்கும் போது மத்ததெல்லாம் எனக்கு மறந்து போயிடும். என்னோட மீதி காலத்தை இங்க கழிக்கணும்னு நினச்சிருந்தேன். உன்ன பிரிஞ்சு இங்க தான் வந்திருப்பேன்…” தமிழ் தயக்கமாக சொல்ல,
“ஓஹோ பெரிய அன்னை தெரேசா ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி இருக்க போல” என்று கேலி பேசி கடுப்பானவன்,
“இனிமே எக்குத்தப்பா ஏதாவது யோசிப்ப, என்னைவிட்டு போகணும்னு? ம்ம்?” ராகுல் அமர்த்தலாய் வினவ, தமிழ் இல்லை என்று பெரிதாய் தலையசைத்தாள்.
“ம்ம், இது என் பொண்டாட்டிக்கு அழகு” என்று அவன் வண்டியை உயிர்ப்பிக்க, இப்போது தான் நினைவு வந்தவளாய்,
“டேய், நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்ல”
“உன் கேள்விக்கான பதிலை வார்த்தையில சொல்ல முடியாது. வாழ்ந்து தான் காட்டணும். வா வாழ்ந்து பார்த்துடலாம்.”
அவள் பக்கம் திரும்பாமல் வண்டியை இயக்கியபடி அவன் அழுத்தமாய் சொல்ல, தமிழ் நெகிழ்ந்தவளாய் அவன் தோள் பற்றி பின்னோடு அமர்ந்து கொண்டாள்.
அவர்களை சுமந்தபடி அந்த இரும்பு குதிரை சாலையில் வேகமெடுத்து பறந்தது.
# # #
காதல்காரன் வருவான்…