KS 3

KS 3

அத்தியாயம் ஐந்து

நெருப்பு மிக வேகமாக பரவி கொண்டு இருந்தது! ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் நின்ற அர்ஜுனும் கௌதமும் அடுத்த நிமிடம் பறந்து இருந்தனர்!

“அர்ஜுன் நீ போய் எல்லோரையும் எழுப்பு… நான் எமெர்ஜென்சி செயின் இழுத்துட்டு வந்துடறேன்!” என்று கத்தி கொண்டே கெளதம் ஓட

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அர்ஜுன் ஒவ்வொரு பகுதிக்கும் ஓடி அனைவரையும் எழுப்பினான்! அலறி அடித்து கொண்டு எழுந்தவர்கள் மிக வேகமாக தங்கள் உடைமைகளை எடுக்கவும் மறந்து கதவு பக்கம் ஓடினர்! சில நிமிடங்களில் அங்கே பரபரப்பு தொற்றி கொண்டது!

பெட்டியில் இருந்து எட்டி பார்த்த கெளதம் தீ ஜ்வாலைகள் சமீபத்து விட்டதை உணர்ந்தான்! அப்போது ரயில் கொஞ்சம் வேகம் குறைவாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்தவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை!

பெட்டிக்குள் எல்லோரையும் அவசரமாக எழுப்பி விட்ட அர்ஜுன், தன் பேக்பாக்கை எடுத்து கொண்டு அவசரமாக மேகாவையும் அஞ்சலியையும் எழுப்பினான்! மேகா சட்டென எழுந்தவள் பேந்த பேந்த விழித்தாள்!

“ஏய் அஞ்சலி… அஞ்சலி… சீக்கிரம் எழுந்திரு…”

நிதானமாக எழுந்தவள்

“என்ன அர்ஜுன்? தூக்கம் வருது… சீக்கிரம் சொல்லுங்க… தூங்கணும்… !”

“ஏய் லூசு… எழுந்திரு… இல்லைன்னா நிரந்தரமா தூங்க வேண்டியது தான்… ட்ரெயின்ல தீ பிடிச்சுருச்சு…”

“என்ன டீ குடிக்கணுமா? போங்க… நீங்க போய் குடிங்க…” என்று கூறி விட்டு மறுபடியும் படுக்க போனவள் அர்ஜுனிடம் இருந்து பலமாக ஒரு அரை வாங்கி கொண்டு எழுத்து உடகார்ந்தாள்!

தீ பிடித்து விட்டது என்பதை கேட்டவுடன் விறைத்த மேகா அவசரமாக சசிதரனை துழாவினாள்!

“சசி… சசி…” என்று பெருங்குரலில் கத்த

அவள் கத்துவதை கேட்ட அஞ்சலி…

அதிர்ச்சியுடன் அர்ஜுனை பார்த்தவளுக்கு அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது!

“அர்ஜுன்ன்ன்…” என்றாள் அஞ்சலி அதிர்ச்சியுடன் அவனை பார்த்து! மேகாவோ சசியை தேடுவதில் முனைப்பாக இருந்தாள்!

“இப்போ பேசிட்டு இருக்க நேரமில்ல மேகா… ப்ளீஸ்… புரிஞ்சுகோங்க… முக்கியமான எதாச்சும் இருந்தா எடுத்துட்டு வாங்க மேகா!” அர்ஜுன் அவசரபடுத்த

“நோ… நான் மாட்டேன்… சசிய காணோம்… அவர் இங்க தான் இருப்பார்… நான் அந்த சைட்ல பார்க்குறேன்… நீங்க அஞ்சலிய கூட்டிட்டு போங்க…” கண்களில் ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது!

“மேகா அவர் எப்படியும் வந்துடுவார்… நீங்க சொன்னா கேளுங்க… முதல்ல நீங்க வாங்க…” என்று அஞ்சலி கையை இழுக்க

“இல்லை… முடியாது… சசி இல்லாம நான் வர மாட்டேன்… சசி! என்று கதற ஆரம்பித்தாள்!

அவள் கண்களில் தெரிந்த பயமும் தேடுதல் வேட்டையும் அர்ஜுனை நகர விடாமல் செய்ய அவசரமாக வந்த கெளதம்…

“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அர்ஜுன்… நம்ம கம்பார்ட்மென்ட் வரைக்கும் பரவிடுச்சு… இந்த பக்கம் போக முடியாது… அந்த பக்கம் ஒடுங்க…”

என்று பரபரக்க, வெப்பம் அவர்கள் இருந்த இடம் வரை உணரப்பட்டது!

அர்ஜுன்”கெளதம்… அந்த பக்கம் சசி போனாரா… சசி இல்லாம மேகா வர மாட்டேங்கறாங்க?”

“இல்லையே… நான் பார்க்கல… இதெல்லாம் பேசற நேரமா இது? இருந்தவங்களை எல்லாம் ட்ரெயின்ல இருந்து குதிக்க சொல்லிட்டு வரேன்… ட்ரெயின் ஸ்லோ ஆய்டுச்சு… அர்ஜுன் நீ அஞ்சுவையும் மேகாவையும் கூட்டிட்டு போய்டு… நான் கடைசியா ஒரு தடவை சசியை தேடிட்டு வரேன்…”

“அண்ணா… ரிஸ்க் வேணாம்னா… நீயும் வா…” என்று அஞ்சலி பயத்தில் உலர்ந்த தன் நாவை கொண்டு தந்தியடிக்க…

“இல்லடா கண்ணா… பாவம்ல மேகா… நீங்க மூணு பேரும் போங்க… நான் வந்துடறேன்… சீக்கிரம்… ஐயோ தீ பக்கத்துல வருது…” காற்று இன்னும் வேகமாக தீயை பரவ வைத்தது!

“இல்ல… நானும் உங்க கூடவே வரேன்… சசியை கூட்டிட்டு போலாம்…” என்று அழுது கொண்டே மேகா சொல்ல…

அவளை ஒரு நொடி கூர்ந்து நோக்கியவன் அந்த நேரத்திலும்

“இப்படிப்பட்ட பெண் கிடைக்க அந்த சசி என்ன புண்ணியம் செய்தானோ”என்று எண்ணினான்!

“ஏம்மா, சசி என்ன சின்ன குழந்தையா? கண்டிப்பா இறங்கி இருப்பார்ம்மா!”

என்று கொஞ்சம் கடுப்படித்தவாறே பெட்டியை துழாவினான்! நேரம் காலம் தெரியாமல் இந்த பெண் நடந்து கொள்கிறாளே என்றும் இருந்தது! ஆனாலும் அவளை தனியாக விட்டு விட்டு போக மனமும் இல்லை கௌதமுக்கு! அவனுக்கு பதில் கூறாமல் அழுது கொண்டே

“சசி… சசி… என்று நாலா பக்கமும் பார்த்து வாயை கையால் மூடி கொண்டு அரற்றி கொண்டிருந்தாள் மேகா! அவள் கண்களில் அதீத பயம் தெரிய கௌதமுக்கோ அவளை அணைத்து அழதே கண்மணி என்று கூறி தேற்ற தோன்றியது!

******மிக மெதுவாக ஓடி கொண்டு இருந்த ரயிலில் இருந்து அனைவரும் ஒவ்வொருவராக குதித்து கொண்டு இருக்க, அஞ்சலியை இழுத்து கொண்டு போன அர்ஜுன் முதலில் தான் அந்த படிக்கட்டில் இறங்கி கொண்டு அஞ்சலியை இறுக்கமாக பிடித்து கொண்டான்! காற்று மிக வேகமாக முகத்தில் அறைந்தது! பரவி வந்த தீ தங்கள் பெட்டியின் ஆரம்ப இடங்களை விழுங்கி கொண்டிருப்பது தெரிந்தது! வெப்பம் மிக வேகமாக தாக்கியது!

“அஞ்சலி… நல்லா இறுக்கமா கட்டிக்கோ… இப்போ குதிக்க போறேன்…”

அஞ்சலி அவனை இன்னும் இறுக்கிகொண்டு அவன் முதுகோடு வளைத்து பிடித்து கொண்டாள்! அர்ஜுன் குதிக்கவும் அவனோடு சேர்ந்து கீழே விழுந்தாள்! உலகம் தட்டாமாலை சுற்றியது அஞ்சலிக்கு!

விழுந்தவன் கையை தட்டி கொண்டு எழுந்து… பக்கத்தில் கிடந்த அஞ்சலியை எழுப்ப முயல… அவளோ முடியாமல் முனகினாள்! அப்போதுதான் கவனித்தான் அவள் தலை கல்லில் பட்டு ரத்தம் வருவதை! அந்த பெட்டியில் இருந்த அனைவரும் குதித்தும் இன்னும் கௌதம் குதிக்காமல் இருந்ததை பார்த்தவன் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்! இங்கே அஞ்சலி விழுந்ததில் அடிபட்டு முனக…

“அஞ்சலி… ஏய் அஞ்சலி… எழுந்திரு… உனக்கு என்ன பண்ணுது அஞ்சலி?”

“ஒன்னும் பண்ணல… தலை தான் கொஞ்சம் சுத்துது!”

அவர்கள் இருந்த பெட்டி கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டு செல்ல… தூரத்தில் தெரிந்தது ரயில்! பக்கத்தில் குதித்த இருந்தவருக்கும் காயம் பட்டிருக்க… முனகி கொண்டே

“ஹய்யோ… அம்மா…” என்று ஹீனமாக புலம்பினார்கள்!

எழுந்து நின்றவன் அஞ்சுவை எழுப்ப கை குடுத்தான்!

ஆனால் அஞ்சலியால் எழ முடியாமல் தலை சுற்றி உட்கார்ந்தாள்!

“ஹேய் அஞ்சு! என்னாச்சு? தலையை ரொம்பவும் சுத்துதா?

தலையை பிடித்து கொண்டு

“ம்ம்ம்…”

அவள் மிக மெதுவாக தலையை ஆட்டியபடி கூறவும் கை குடுத்து எழுப்பியவன்

“நிக்க முடியுதா அஞ்சு?” என்று கேட்டான்

“மேனேஜ் பண்ணிக்கறேன்…” என்று சொல்லி கொண்டே கீழே விழ போனாள்!

விழ போனவளை இடையோடு சேர்ந்து அணைத்து கொண்டு அவள் கையை தன் கழுத்தோடு சேர்த்து கொண்டான்! சங்கோஜமாக விலக போனவளை இழுத்து அணைத்து கொண்டு

“ஏய் லூசு! ஒழுங்கா என்னை பிடிச்சுக்கோ!” என்று கூறி நடத்தி கொண்டு போய் மேடான பகுதியில் உட்கார வைத்தான்! எங்கும் இருள் பரவி இருந்தது! கொஞ்சம் தூரம் தள்ளி குதித்து இருந்தவர்கள் கொஞ்சமாக எழுந்து நடக்க தொடங்கி இருந்தார்கள்! அந்த கம்பார்ட்மென்டில் இருந்து குதித்தவர்கள் ஒரு இருபது பேர் கொஞ்சம் தூரம் தள்ளி தள்ளி முயன்று நடந்து வந்து கொண்டிருந்தார்கள்!

தனது செல்பேசியை எடுத்து ஆராய்ந்தவன்,

“குண்டக்கல் ஜங்ஷனுக்கு இன்னும் ரெண்டு கிலோமீட்டர் இருக்கு… இப்போ இந்த இடத்து பேரு கூட்டி ரோடு அஞ்சலி! திம்மனசேர்லா தாண்டி இருக்கோம்! இன்னும் கொஞ்சம் போய் லெப்ட்ல போனா மார்கண்டேயர் கோயில் ஒன்னு இருக்கு அங்க போனா ஆட்டோ கிடைக்கும்னு நினைக்கிறேன்! கொஞ்சம் நடந்து வர முடியுமாம்மா?”

வியந்து போய் அர்ஜுனை பார்த்தவள்

“எப்படி அர்ஜுன் இப்படி? முதல்லயே குண்டக்கல் வந்து இருக்கீங்களா? இவ்ளோ விஷயம் சொல்றீங்க? ’

“ம்ம்ம்… ஜிபிஆர்எஸ் எதுக்கு இருக்கு? என் போன்ல கூகிள் எர்த் இருக்கு! அத வெச்சு பார்க்க வேண்டியதுதான்! நீ இங்க தனியா உக்கார்ந்துட்டு இருக்கனுமேன்னு பார்க்கறேன் இல்லைன்னா நானே போய் ஆட்டோ கூட்டிட்டு வந்துடுவேன்… உன்னால நடக்க முடியுதான்னு பாரு அஞ்சு?”

விந்தி விந்தி ஒருவாறு நடந்தவளுக்கு அவ்வப்போது கை குடுத்து அழைத்து சென்றவன் கெளதமை அழைக்க செல்பேசியை எடுத்தான்!

*******

“மேகா சொன்னா கேளுங்க… சசி எப்படியும் இங்க இல்ல… தயவு செஞ்சு வாங்க…” நிற்க துவங்கி இருந்த ரயிலில், நெருப்பு அந்த பெட்டியை கபளீகரம் செய்து கொண்டிருக்க, மேகா கெளதம் சொல்வதை கேட்காமல் கதறி கொண்டிருந்தாள்!

“சசி இல்லாம வர மாட்டேங்க! நீங்க இறங்குங்க!” பிடிவாதமாக கூறினாள் மேகா!

“என்ன மேகா உலறுறீங்க? இவ்ளோ நேரம் பார்த்துட்டோம்! அவர் இங்க இல்லைன்னா கண்டிப்பா முதல்லயே இறங்கி இருக்கணும்! இல்லைன்னா வேற இடத்தில பத்தரமா இருப்பார் மேகா! அவர் போனுக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம் இறங்குங்க…”

அழுது கொண்டே ரயிலில் இருந்து இறங்கினாள். அவசரமாக மேகாவை இறக்கி விட்டவன் தானும் இறங்கினான். பக்கத்து பெட்டிகளில் இருந்து இறங்கி சூழ்ந்து கொண்டனர் மக்கள். எவ்வளவு பெரிய விபத்து பாதியில் தடுக்கப்பட்டு உள்ளது! அதை நினைக்கும் போது கெளதம் நெஞ்சில் குளிர் பரவியது! இவை அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து இருந்தன!

அவசர உதவி குழுவும் ரயில்வே போலீசும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட மேகாவோ அந்த கூட்டத்தில் சசியின் முகத்தை தேடி அலைந்தாள். அவளது ஆற்றாமையும் கண்ணீரும் கெளதமை மிகவும் பாதிக்க அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு பெட்டியாக தேடினான்!

“சசி நம்பர் குடுங்க மேகா… போன் பண்ணி பாக்கலாம்…”

மேகா அவனது நம்பரை கூற அதை செல்பேசியில் ஒற்றியவன்… தன் காதுக்கு குடுத்தான்! ஒரு முறை முழுவதுமாக ரிங் போய் கால் முடிய பதட்டமாக இன்னொரு முறை அழுத்தினான்! மூன்று ரிங் போகவும் போனை எடுத்த சசி மிகவும் சாவதானமாக

“ஹலோ… யாருங்க?” என்று கேட்டான்! கூடவே ஒரு பெண் குரல்

“யார் சசி! இந்த நேரத்துல?” என்று ஒரு மாதிரியான குரலில் ஹஸ்கியாக கேட்பது கௌதமுக்கு கேட்டது! அந்த குரலை கேட்கும் போதே கெளதம் முகம் மாறியது! பதில் பேசாமல்

“பேசுங்க மேகா…” என்று மேகாவிடம் போனை குடுத்தான்! பதட்டமாக செல்பேசியை வாங்கியவள்

“எங்க சசி இருக்கீங்க?” என்று பதட்டமாக மேகா கேட்டாள்!

“ஹேய் மேகா… நீயா? என்னடா தூக்கம் வரலியா? என்னப்பா? ’ என்று கேட்க

“மண்ணாங்கட்டி… எங்க போயிட்டீங்க? எப்போ இறங்குனீங்க? அத சொல்லுங்க சசி!” என்று மிகவும் கோபமாக கேட்டாள்!

“தூக்கம் வரல… என் பிரெண்ட் பர்ஸ்ட் கிளாஸ் கூபேல வர்றது தெரிஞ்சுது… அதான் திம்மனசெர்லா கிராசிங்ல இறங்கிட்டேன் மேகா! இப்போ கூபேல தான் இருக்கேன்! ஏன் கேக்குற?”

“சொல்லிட்டு போக மாட்டீங்களா சசி? இவ்ளோ கூலா சொல்றீங்க? இங்க நடந்தது ஒண்ணுமே தெரியலியா?” என்று அவனிடம் படபடத்தாள்!

“என்னடா ஆச்சு? மாமன காணோம்னு போலிஸ் கம்ப்ளைன்ட் குடுத்துட்டியா?” என்று கேலியாக கேட்க

“போதும் சசி… உங்க விளையாட்டும் நீங்களும்… ட்ரெயின்ல தீ பிடிச்சுருச்சு! அது தெரியாம பிரெண்ட் கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? நான் உங்களை காணோம்ன்னு தவிச்சு போயிட்டேன் சசி!” என்று அழுதவள் பின்னால் இருந்த முதல் வகுப்பு கூபே நோக்கி ஓடினாள்!

“வாட்… தீ பிடிச்சுருச்சா? நீ போனை வை… நான் வரேன்… !” என்று கூறி விட்டு அவசரமாக எழுந்து வெளியே வந்தான்!

அவனை பார்க்க ஓடி வந்த மேகா அனைத்தையும் மறந்தாள்… அக்கம் பக்கம் மறந்தாள்… உடன் வந்த கெளதமையும் மறந்தாள்… ஓடி வந்தவள் சசியின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்! உடல் நடுங்கியது… வார்த்தைகள் தந்தியடித்தன!

“ஏன் சசி… என்கிட்டே சொல்லாம வந்தீங்க? நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? நம்ம கம்பார்ட்மென்டுக்கு பக்கத்துல தான் தீ பிடிச்சுருச்சு! தெரியுமா? உங்களையும் வேற காணோம்னு நான் பதறி போயிட்டேன்! உயிரே போய்டுச்சு சசி!” என்று மூச்சு விடாமல் கதறி தீர்த்தவளை பார்த்து சசி வியந்தானோ இல்லையோ கெளதம்,

“இந்த பொண்ணுக்கு இவ்வளவு பேச தெரியுமா?” என்று நினைத்தான்!

“ஹேய் ஈஸி பேபி… ஈஸி… சாரிடா நீ அசந்து தூங்கிகிட்டு இருந்த… அதான் நான் உன்கிட்ட சொல்லல… சரி பேசிட்டு வந்துரலாம்னு நினச்சேன்! ஆனா இப்படி ஆகும்னு நினைக்கில… சாரிமா!” என்று முதுகை தடவி கொடுத்தவாறே கண்களால் சைகை செய்தான்! அவன் கண்போன பக்கம் இருந்தது,

மிக அழகான இளம்பெண்! அவனது கண்ணசைவை புரிந்து கொண்டவள் தலையை ஆட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து அகன்றாள்!

சட்டென்று இதை பார்த்து விட்ட கெளதம் ஒரு நொடியில் அனைத்தையும் புரிந்து கொண்டான்! இது மாதிரி ஆட்களுடன் தினம் பழகுபவன் ஆயிற்றே ஆனால் அவனுடையது வெறும் பழக்கம் மட்டும் தான் ஆனால் இது அப்படி தெரியவில்லையே!

செல்பேசி அழைத்தது! அர்ஜுன்! எடுத்தவன்,

“சேப் டா இங்க… நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க அர்ஜுன்?” என்று கேட்டான்!

ராமாயணத்தில் சீதையை பார்க்க போன ஹனுமான் ராமனுக்கு செய்தி கொண்டு வந்து வந்தாராம்! வந்தவர் ராமன் மனம் அலைப்புற கூடாதென்று”கண்டேன் சீதையை!” என்று கூறினாராம்! சீதையை கண்டேன் என்று கூறினால் கண்டேன் என்று கூறும் வரை தன் தலைவனின் மனம் அலைப்புறும் அல்லவா! அதனால் அந்த தெய்வதிருமகன் முதலில் கண்டேன் என்று கூறியதாக கம்பர் அழகாக வர்ணித்து இருப்பார்! அவர் இன்று இருந்திருந்தால் இவ்விருவருக்கும் அங்ஙனமே ஒரு வாழ்த்துப்பா பாடி இருப்பாரோ!

“நான் ஒழுங்கா குதிச்சிடேன் கெளதம் ஆனா உன் தங்கச்சி தான் அவளோட வானர தனத்த இங்கயும் காட்டி கொஞ்சம் அடிய வாங்கிகிட்டா… !” என்று சிரித்து கொண்டே சொல்ல

“அச்சச்சோ செல்லத்துக்கு அடி பலமாடா? ஏன்டா உன்னை நம்பி அனுப்புனா இப்படி தான் இருப்பியா?” என்று அர்ஜுனை கடிக்க

“சொல்லுவடா சொல்லுவ! ஒரு அரிசி மூட்டைய முதுகுல கட்டிட்டு நான் குதிச்சு இருந்தா கூட எனக்கு அவ்ளோ வலிச்சு இருக்காது! உன் தங்கச்சிய மெனக்கெட்டு முதுகுல சுமந்துகிட்டு குதிச்ச தியாகிடா நான்! ஆனா அந்த லூசு எப்படி போய் தனியா விழுந்துச்சுன்னே தெரியல! எனக்கு இருக்கற முதுகு வலிக்கு நான் ஒத்தமாந்துறை தான் போகணும் போல! என்னை போய் இப்படி நீ சொல்றியா?” என்று சிரித்து கொண்டே கூற

“வேணாம் அர்ஜுன்… இங்க சித்தூர் பக்கத்துல தான் இருக்கு…” என்று அஞ்சலி கூறுவது கேட்டு கெளதம் சிரித்தான்!

“அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னை பார்த்தா எப்பிடி இருக்குன்னே தெரியல ஆண்டவா”என்று அர்ஜுன் புலம்ப

“சரி சரி எங்க இருக்கீங்க இப்போ! ’ என்று கெளதம் கேட்க

“இப்போ கூட்டி ரோடுல ஆட்டோல போயிட்டு இருக்கோம் மச்சான்! உன் தங்கச்சிக்கு ஹாஸ்பிட்டல்ல பார்க்க… நீ எங்க இருக்க கெளதம்?”

“ஜங்ஷனுக்கு முன்னாடியே ட்ரெயின நிறுத்திட்டாங்கப்பா… சரி ஹாஸ்பிடலுக்கு போனவுடனே சொல்லுடா… நான் எப்படியாவது ஆட்டோ பிடிக்க பார்க்குறேன்!”

“சரி சொல்றேன்… அந்த சசி இருக்கானாடா?”

“ம்ம்ம்… வந்து சொல்றேன் அர்ஜுன்! ’

என்று கூறி விட்டு செல்பேசியை வைத்து விட்டு இருவரையும் பார்த்தான்! இருவரும் உலகத்தை மறந்து பேசி கொண்டு இருந்தனர்! இது வரைக்கும் வெறுப்போ விருப்போ இல்லாமல் சசியை பார்த்து கொண்டிருந்தவன் இப்போது சந்தேக கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தான்! யார் அந்த பெண்? இவனுக்கும் அவளுக்கும் என்ன உறவு? இந்த நேரத்தில் மேகாவை விட்டுவிட்டு வருமளவு என்ன காரணம்? காதல் கண் கொண்டு பார்க்கும் மேகாவுக்கு வேண்டுமானால் இவையெல்லாம் ஒன்றுமில்லாதவையாக இருக்கும் ஆனால் தனக்கு?

நன்றியோடு கெளதமை பார்த்தாள் மேகா!

“ரொம்ப தேங்க்ஸ் கெளதம் சார்… நீங்க இல்லைன்னா ரொம்ப தவிச்சு போயிருப்பேன்…”

“அதெல்லாம் பரவால்லை மேகா… நீங்க எப்பிடி போவீங்க… ட்ரெயின் கிளம்ப ரொம்ப நேரம் ஆகும் போல தெரியுது…” பொதுவாக இருவரையும் பார்த்து கேட்டான்!

“பரவால்லை சார்… இதிலேயே வெயிட் பண்ணி தான் போகணும்… எப்படியும் அரேஞ் பண்ணுவாங்க இல்லையா…” சசி தான் பதில் கூறியது!

“ஐயோ கெளதம் சார்… இந்த குழப்பத்துல அஞ்சலிய பத்தியே மறந்துட்டேன்… அவங்க ரெண்டு பேரும் சேப் பா?”

“தே ஆர் சேப் மேகா… கொஞ்சம் அடி பட்டு இருக்காம்… அதான் ஹாஸ்பிடல் போயிருக்காங்க…”

“அச்சோ… பெரிய அடியா சார்… கடவுளே…” மேகா அதிர்ந்து கேட்க அதை கூர்மையாக கவனித்து கொண்டே இருந்தான் சசி!

“இல்ல மேகா… ஏதோ சின்ன அடிதான் போல இருக்கு… அதான் அவசரமா போறேன்… இல்லைன்னா கூட உங்களை ட்ரெயின் ஏற்றி விட்டுட்டு தான் போவேன்…” என்று உணர்ந்து கூற அதை மறித்த சசி,

“ரொம்ப நன்றி கெளதம்… அப்போ நீங்க கிளம்புங்க… வெள்ளிகிழமை ரெஜிஸ்டர் மேரேஜ் வெச்சுக்கலாம்ன்னு நினைக்கிறோம்… நீங்க கண்டிப்பா வரணும்…” என்று கூறி கை கொடுக்க… கெளதம் இதயத்தில் ஓர் யுத்தமே நடந்தது!

மாற்றான் காதலி!

எவ்வளவு முயன்றாலும் இதை மறக்க முடியவில்லையே… கடவுளே என்ன செய்வேன்? சக்தி கொடு!

“ஓகே சசி, மேகா, ஏதுவா இருந்தாலும் எங்களுக்கு ஒரு போன் பண்ணுங்க… நாங்க இருக்கோம்… ஓகே வா!” என்று கூறி விட்டு விடை பெற்றான்… மனதிலே ஆற்ற முடியாத வலி!

அப்போதுதான் கவனித்தான் மேகாவை… அவள் கண்களை… அதிலும் உள்ள வலியை!

அத்தியாயம் ஆறு

சில்லென்ற காற்று வீசியது! ஆட்டோ ஒரே சீராக போய் கொண்டிருந்தது. மழை வருவதற்கான சாத்தியகூற்றை மண் வாசனையோடு கிளம்பிய அந்த குளிர் காற்று உணர்த்தியது! உடலை துளைத்த அந்த குளிர், அந்த நேரத்தில் அஞ்சலிக்கு சுகமாக இருந்தது! எப்போதும் இந்த மழைக்கு முன் வரும் இந்த வாசத்தை மிகவும் ரசிப்பவள்! இப்போதும் ரசிக்க தோன்றிய மனதை தூண்டி விட்டது அர்ஜுனின் அருகாமை! மனதிற்கு பிடித்தவனுடன் இருந்தால் வலியும் கூட சுகம்தானோ? அவளுக்கு தலையில் பட்ட காயம் ஏனோ வலிக்கவே இல்லை!

“எங்கிருந்து வந்தாயடா எனை பாடுபடுத்த நீ எனை பாடுபடுத்த”என்று பாடல் பாட தோன்ற ஓரக்கண்ணில் அவனை பார்த்து கொண்டே வந்தவள் சட்டென்று அவன் திரும்பி அவளை பார்க்கவும் முகத்தை திரும்பி கொண்டாள்! என்னவென்று புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்டவனது செய்கையை பார்த்ததும் உள்ளுக்குள் எதுவோ ஜிவ்வென்று எழும்ப… தடம் புரண்டது மனம்!

காதல் அறிவித்துவிட்டு வருவதில்லை… அழையா விருந்தாளியாக திடீரென்று தான் அதன் வருகை இருக்கும்… வருவதும் தெரியாமல் போவதும் புரியாமல் வந்து போகும் இவ்வாழ்க்கை பயணத்தின் சுவாரசியமான துன்பம் காதல்… கடவுளும் காதலும் ஒன்றுதானோ? ஏனென்றால் இந்த இரண்டு விஷயமுமே யாருக்கும் புரியாத புதிராக மட்டுமே இருந்து வந்திருக்கிறது… கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்! அந்த சுகமான சுமையை தன் மனதில் சிறை பிடித்து கொண்டு குழம்பி போய் இருந்தாள் அஞ்சலி! நேற்று வரை நீ காதலிக்க போகிறாய் என்று சொன்னால் வயிற்றை பிடித்து கொண்டு சிரிப்பவள் இப்போது அர்ஜுன் பக்கம் சென்று கொண்டிருந்த மனதை அடக்க வழி தெரியாது விழித்து கொண்டிருந்தாள்!

சிறு வயதில் பழக்கம் என்று இவர்கள் இருவரும் சொல்லித்தான் தெரிந்தது! ஆனால் எத்தனையோ ஜென்மங்களாய் தொடரும் பந்தம் போன்ற உணர்வு வருவது எதனால்? நான் உனக்காக மட்டுமே இந்த பிறவியில் காத்திருந்தேன்… இப்போதாவது உனக்கு எனை சந்திக்க தோன்றியதே என்ற உணர்வே வெகுவாக ஆக்ரமித்து இருந்தது… ஏன்? புரியவில்லை… அவனது புத்திசாலிதனமா? தைர்யமா? அறிவா? எது தன்னை இந்த அளவு கவர்ந்து விட்டதென்று இந்த பாழும் மனது கிடந்து துடிக்கிறது? அதுவும் பார்த்து இருபத்துநான்கு மணி நேரம் கழியாத நட்பில்! இத்தனை நாட்கள் நீ இல்லாமல் எப்படி கழிந்தது அர்ஜுன்?

இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா இப்பயணம் என்று ஏக்கமாக அஞ்சலி நினைத்து கொண்டிருக்கும் போதே அவளது எண்ண ஓட்டத்தை தடை செய்யவே ஹாஸ்பிடல் வந்து தொலைத்து விட்டது! அண்ணன் வேறு வந்து விடுவானே… அப்புறம் அர்ஜுனுடன் தனியாக எப்படி? இந்த அழகான தனிமையை விட மனமில்லாமல் இருந்தாள் அஞ்சலி! அந்த தனிமையின் இனிமையான இதமான காற்றை உள்ளிழுத்து சுவைத்தாள்! இனித்தது!

“ஏய் எலிக்குட்டி… ஹாஸ்பிடல் வந்துடுச்சு இறங்கு!” மிகவும் சாதரனமாக அவளை அழைக்க அவனை பார்த்து முறைத்து கொண்டே ஹாஸ்பிடலை பார்த்தாள்!

“அரசு மகப்பேறு மருத்துவமனை”ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் இருந்தது.

“ஆஹா ஐடியா…” துள்ளியது மனம்!

“ஐயோ அர்ஜுன்… ஜிஹச்சா இது?”

“ஆமாம் அதுக்கென்ன அஞ்சு… சீக்கிரம் இறங்கு”

“ஐயோ… நான் கவர்மென்ட் ஹாஸ்பிடல் எல்லாம் வர மாட்டேன்…”

“இதென்ன அஞ்சலி லூசுத்தனமா பேசுற… இங்க பர்ஸ்ட் ஐட்க்கு தானே வந்து இருக்கோம்… இதுல என்ன இருக்கு? ஒழுங்கா இறங்கு…”

“நோ அர்ஜுன்… ப்ளீஸ் எனக்கு கவர்மென்ட் ஹாஸ்பிடல்னாலே பிடிக்காது… ஏதாவது நல்ல ப்ரைவேட் ஹாஸ்பிடல் போலாம் அர்ஜுன்… பணம் கூட நீங்க குடுக்க வேண்டாம்… நானே குடுத்துக்கறேன்… ஆனா இங்க வேண்டாம்”

“அஞ்சு விளையாடாதம்மா… தலைல வேற அடிபட்டு இருக்கு… மொதல்ல பர்ஸ்ட் ஐட் செஞ்சுகிட்டு அப்புறம் மத்தத பேசலாம்… இறங்கும்மா!” பொறுமையை இழுத்து வைத்து கொண்டு பேசினான்!

“ஹய்யோ… இங்கெல்லாம் நான் வந்ததே கிடையாது… வர்றவங்க கூட சுத்தமா இருக்க மாட்டாங்க! உங்களுக்கு பணம் தானே பிரச்சனை! எங்க அண்ணாவ கூப்பிடுங்க… ஆனா நான் ஜிஹச் வர மாட்டேன்”

“அடிச்சு பல்ல கழட்டிடுவேன் ராஸ்கல்… இப்போ இறங்க போறியா இல்லையா? பணம் பணம் பணம்… எப்போ பாரு பணம் தான்… இந்த பொம்பளைங்களுக்கு வேற நினைப்பே கிடையாது!” என்று பொறுமை பறந்து போய் அடிக்குரலில் சீற

ஆட்டோவை விட்டு இறங்கியவள் பொறுமையாக

“எதுக்கு பொம்பளைங்கன்னு பொதுவா சொல்றீங்க அர்ஜுன்… சொல்றத தெளிவா சொல்லுங்க…”

“தெளிவாவே சொல்றேன்! இப்படி பண பைத்தியமா இருக்காத அஞ்சலி! மனுஷனுக்கு பணத்த தாண்டி பார்க்க எத்தனையோ விஷயம் இருக்கு… ஒரு நாள் எல்லா விஷயமும் அலுத்து போய்டும் அப்போ நம்ம கிட்ட இருக்கற பணமே நம்ம சந்தோஷத்துக்கு வில்லனா மாறிடும்… பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல…”

அவனை கூர்ந்து பார்த்தவள் ஒன்றும் பேசாமல் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்!

அர்ஜுன் தனது செல்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து கொண்டிருந்தான்!

என்ன வார்த்தை கூறி விட்டான்? அந்த அளவு பணபேயாகவா நான் இவன் கண்களுக்கு தெரிகிறேன்? இவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கவல்லவா ஆசைப்பட்டேன்… இவனுக்கு அது புரியவில்லையா?

தலையில் பட்ட காயம் வலிக்கவில்லை – எனது

நெஞ்சில் பட்ட காயம் வலிக்குதடா கண்ணாளா

கனத்த மௌன திரை இருவருக்கும் இடையில் விழுந்தது!

******

டியூட்டியில் இருந்த பெண் மருத்துவரை கொண்டு அவசரமாக முதல் உதவிக்கு அவளை அழைத்து சென்றவன் மருத்துவர் கூறிய எக்ஸ் ரே மற்றும் தேவையான டெஸ்ட் களை அதே வேகத்தில் செய்து முடித்தான்! டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்து ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை என்று சான்றுரைக்கவும் தான் அர்ஜுனால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது! ரத்தம் கட்டி கொள்ளாமல் இருக்கவும் வலி தெரியாமல் இருக்கவும் ஒரு ஊசி போட்டு அவளை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு சென்றார் மருத்துவர்! அந்த ஊசியின் விளைவால் சிறிது நேரம் உறங்கினாள்!

எழும் போதே பேச்சு குரல்கள் கேட்டன.

“பிளைட் எத்தனை மணிக்கு அர்ஜுன்?” இது கெளதம் அண்ணா குரலாயிற்றே! வந்து விட்டானா?

“ஆறு பத்துக்கு பெங்களூர்ல இருந்து கெளதம்! ஹாஸ்பிடல் வரதுக்கு முன்னாடியே அனந்தபூர்ல இருந்து நம்ம பிராஞ்ச் கார எடுத்துட்டு வர சொல்லிட்டேன்! இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும் மச்சான்… இங்க இருந்து பெங்களூர் நாலு மணி நேரம்… இப்போ மணி ஒன்னு… பெங்களூர் போய் சேர்ந்து பிளைட் பிடிக்க கரெக்டா இருக்கும்!”

கௌதம் கையை தட்டினான்!

“வாவ் வாவ்… சூப்பர்டா மச்சான்! என்னம்மா பிளான் பண்ற… !”

இவர்கள் இருவரும் என்ன பேசி கொள்கிறார்கள்? அர்ஜுன் மட்டும் ஊருக்கு செல்கிறானா? அஞ்சலி மனதில் ஏமாற்றம் சூழ்ந்தது! ஆனாலும் அர்ஜுன் ஓசோனில் பெரிய அதிகாரிதான் போல… இல்லையென்றால் அலுவலக காரை எடுத்துக்கொள்ள முடியுமா?

“அவன பத்தி தெரிஞ்சும் அந்த பொண்ண அவன் கிட்டயே விட்டுட்டு வந்திருக்கியே… இது எனக்கு சரியா படல கெளதம்! நீ அந்த பொண்ண கூட்டிட்டு வந்திருக்கனும்!”

“அவனோட ஒரு நடவடிக்கைய தான் நான் பார்த்தேன்! ஆனா ரெண்டு பேரோட காதல் எவ்வளவு ஆழமானதுன்னு எனக்கு தெரியாதே அர்ஜுன்! ரெண்டு பேர பத்தி கூட பேச வேண்டாம்! அந்த பொண்ணு மேகாவோடது சின்சியர் லவ்…” என்று வேதனையோடு கூறினான்.

“ஆனா அதுக்கான தகுதி அந்த சசி கிட்ட இல்லையேடா மச்சான்!

யாரை பற்றி பேசிகொள்கிறார்கள்? குழப்பமாக முகத்தை சுருக்க…

“ஹேய் எலி முழிச்சுடுச்சு…” என்று கெளதம் சந்தோஷமாக கூறி கொண்டே அவளருகில் வந்தான்!

“டேய் எலிக்குட்டி… எப்படிடா இருக்கு…” என்று கெளதம் ஆதரவாக கேட்க

“நல்லா இருக்கு கெளதம் அண்ணா… மேகா எங்க?” என்று கேட்க

“இதென்ன கேள்வி… அவங்க, அவங்க லவ்வர் கூட தானே இருப்பாங்க…” அர்ஜுன் இப்படி கூறவும் அஞ்சலிக்கு கடுப்பு ஏறியது!

“நான் உங்க கிட்ட கேக்கவே இல்லையே…”

“நானும் ஒன்னும் உன்கிட்ட சொல்றதுக்கு துடிக்கலயே…”

அவன் பொடி வைத்து பேசுவது புரிய

“அண்ணா… நான் யார்கிட்டயும் பேச விரும்பல… என்னை கொண்டு போய் மும்பைல விடு…”

“அதுக்கு தான் குட்டி…” என்று கெளதம் கூற முயல… அவனை கையமர்த்தி

“ஏன் நீ தான் தைர்யசாலி ஆச்சே… உன்கிட்ட நிறைய பணம் வேற இருக்கு… நீயே போய்க்க வேண்டியதுதானே…” என்று அர்ஜுன்(நீ அவ கிட்ட அடி வாங்காம போக மாட்ட அர்ஜுன்… மேடம் செம கோவத்துல இருக்கறது தெரிஞ்சும் இப்படியா… )

“அண்ணாஆஆஆஆ… இப்போ நீ என்னை இங்க இருந்து கூட்டிட்டு போக போறியா இல்லையா?” என்று கெளதமை பார்த்து கத்த…

“போலாம்டா எலி… அர்ஜு…” சொல்லவந்தவனை நடுவிலேயே மறித்து…

“ஆமா… கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்தா இவ ஸ்டேட்ஸ் குறைஞ்சு போய்டுமாம்… கூட்டிட்டு போ கெளதம்… ஏதாவது ஒட்டிக்க போகுது…”

“இந்த அவ இவங்கற பேச்செல்லாம் என்கிட்டே வேணாம்ன்னு சொல்லுண்ணா!”

“ஆமா… இவ என்னோட ஆசை காதலி பாரு… அவ இவன்னு ஆசையா கூப்பிடறதுக்கு…” என்று கூறி அவளது ஈகோவை கிளப்பி விட

“காதலியா… உலகத்துல யார லவ் பண்ணாலும் பண்ணுவேன் ஆனா தப்பி தவறி கூட உன்னை பண்ணிட மாட்டேன்…” சூளுரைத்தாள்!

“காளியாத்தா… நானும் அதையே தான் சொல்றேன்… ஒரு பணபேய லவ் பண்ண நான் என்ன அடி முட்டாளா…”

“ஆமா… நான் பணபேய் தான்… நான் தான் சொல்லிட்டேன்ல… பணக்காரனா பாத்து தான் லவ் பண்ண போறேன்னு… தெளிவா? அப்புறமும் என்ன பேசிட்டு இருக்க…”

“உன் புத்தி தான் தெரிஞ்சதாச்சே… புதுசா வேற சொல்றியா…”

இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட… இருவருக்கும் என்ன ஆனது என்று புரியாமல் நடுவில் மாட்டி கொண்ட கெளதம் மண்டையை பியைத்து கொண்டான்!

“டேய் அர்ஜுன் என்னடா இது…” என்று பரிதாபமாக கேட்க அதை பற்றி சிறிதும் கவலை படாத இருவரும் சண்டை போடுவதிலேயே குறியாய் இருக்க

“தெரிஞ்சு போச்சுல்ல என் புத்தி… அதுக்கு இப்போ என்னன்னு சொல்ற? விட்டா பேசிட்டே இருக்க… ஒரு லிமிட் தான் அர்ஜுன்…”

“டேய் எலிக்குட்டி… ஸ்டாப் தி சண்டைடா…” பரிதாபமாக கெளதம் கூற அதை கேட்க இருவரும் தயாராக இருந்தால் தானே

“ஏய் விட்டா மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேப்ப போல இருக்கு… என்ன நினைச்சுட்டு இருக்க…” என்றான் அர்ஜுன் கடுப்பாகி

“போதும் போதும் என்னை நீ மரியாதையா கூப்பிட்டு ரொம்ப மதிப்பு குடுத்துட்ட… உனக்கு மட்டும் நான் மரியாதை குடுக்கனுமா? டேய் அண்ணா… இப்போ என்னை கூட்டிட்டு போக போறியா இல்லையா? இவன் முகத்துலயே முழிக்க விரும்பல…”

“அவன் இவன்னா பல்ல தட்டிடுவேன் ராஸ்கல்… நான் மட்டும் உன் முகத்துல முழிக்க தான் காத்துட்டு இருக்கேனா… இவ பெரிய ரதி தேவின்னு நினைப்பு…”

“உனக்கு பெரிய மன்மதன்னு நினைப்பு… போடா”

“போடி…”

இருவருக்கும் நடுவில் தலையில் கையை வைத்து கொண்டு பரிதாபமாக உட்கார்ந்து இருந்தான் கெளதம்!

“டேய்… நீ ஏன்டா இப்படி உக்கார்ந்து இருக்க?” என்று அர்ஜுன் அதே கடுப்போடு கேட்க

“சொல்லுவடா சொல்லுவ… மாத்தி மாத்தி ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு என்னை கேக்குறியா?”

“சரிடா மச்சான்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… ! சரி அந்த பிசாச கிளம்ப சொல்லு… டைம் ஆகுது…” என்று சொல்வதற்கும் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது! எடுத்து கொண்டு வெளியே சென்றான்

“இல்லப்பா… ஐம் பைன்… சேப் தான்ப்பா… ம்ம்ம் என்னப்பா… நாளைக்கு எட்டு மணிக்கு நான் மும்பைல இருப்பேன்ப்பா… பரவால்ல நான் பார்த்துக்கறேன்…” என்று கூறி கொண்டே வெளியே சென்றான்!

அர்ஜுன் செல்வதை பார்த்து கொண்டிருந்தவன் அஞ்சலியிடம் திரும்பி

“சீக்கிரம் கிளம்புடா… காலைல ஆறு பத்துக்கு பிளைட் பெங்களூர்ல இருந்து… கார் வந்துடுச்சு…”

“லோக்கல் கேப்பா அண்ணா? இந்த டைம்ல எப்பிடி?”

“எல்லாம் அர்ஜுன் ஏற்பாடுதான் குட்டி… நான் மேகாவ சசி கிட்ட விட்டுட்டு வரதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டான்… செம ஷார்ப் கண்ணா நம்ம அர்ஜுன்!”

“அவன நீயே மெச்சிக்கோ…” என்று முனகி விட்டு கிளம்ப ஆரம்பித்தாள்! பேசிக்கொண்டே அர்ஜுனும் உள்ளே வந்தான்!

“கன்பார்ம் பண்ணிடு கௌஷிக்… அபிதகுஜலாம்பாள் சிவதானுமங்களம் அண்ட் கெளதம் நாராயணன் வித் மீ… ம்ம்ம்… பிசினெஸ் கிளாஸ் தான்…”

அந்த பெயரை கேட்டவுடன் பேயறைந்தார் போல பார்த்தாள் அஞ்சலி…

“அண்ணா… ஏன்னா இப்படி என் மானத்த வாங்குறான் இவன்?” என்று கௌதமிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே

“ஏய் அபிதகுஜலாம்பா… இன்னும் கிளம்பாம என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க?” என்று அர்ஜுன் சீண்டவும்…

“அண்ணாஆஆஆஆஆஆ… இவன் கிட்ட சொல்லி வை… நான் மனுஷியா இருக்க மாட்டேன்…”

“நீங்க ரெண்டு பேரும் அடுத்த இன்னிங்க்ஸ் சண்டைக்கு ரெடி ஆய்ட்டு என்னை ஊறுகாயாக்க பாக்குறீங்களா? ஆசை தோசை… சண்டை போட்டு முடிச்சுட்டே வாங்க… நான் முதல்ல எஸ்கேப் ஆய்டறேன் என் தங்கமே… ஆளை விடு…” என்று சொல்லி விட்டு கெளதம் எஸ்கேப் ஆக அவனையும் முறைத்து அர்ஜுனையும் எரிக்கும் பார்வை பார்த்தாள்! பின்னே ரகசியத்தை எல்லாம் அம்பலமாக்கினால் என்ன தான் செய்வாள் பாவம்! அபிதகுஜலாம்பாள் என்று அழகான அவளது பாட்டியின் பெயரை அஞ்சலிக்கு வைத்தது யார் குற்றம்? விதியின் குற்றமா? இல்லை விதியின் பெயரால் மங்களம் செய்த குற்றமா? இப்போது மட்டும் மங்களம் கையில் கிடைத்தால் பஸ்பமாகி இருப்பார்… தன் மகளின் நெற்றி கண் திறப்பு விழாவின் போது…

“இப்போ மட்டும் மனுஷின்னு யாரு ஒத்துகிட்டது அபிதகுஜலாம்பா? குரங்குக்கு பேர் அபிதகுஜலாம்பான்னு வெச்சுகிட்டா மனுஷியா? இதுல ஸ்டைலா அஞ்சலியாம்… தாங்க முடிலப்பா…”

“மங்களம்ம்ம்ம்ம்ம்ம்ம்… என் மானத்த வாங்கிட்டீயே மங்களம்ம்ம்ம்… இங்க பாரு அர்ஜுன் அது எங்க பாட்டி பேர்… அதுவும் இல்லாம அது சாமி பேரு… இப்படி கிண்டல் பண்ணா சாமி கோவுச்சுக்கும்…”

“அது பாட்டுக்கு கோவிச்சுட்டு போகுது அபிதகுஜலாம்பா… உன் அதிகபடியான வாய்க்கு இதான் தண்டனை… எல்லார் முன்னாடியும் அபிதகுஜலாம்பான்னு தான் கூப்பிட போறேன்… ஹஹா எப்படி என் ஐடியா…” என்று வில்ல சிரிப்பு சிரிக்கவும் அவன் மேல் தலையணையை எறிந்துவிட்டு வெளியே சென்றவள்… திரும்பி வந்து அர்ஜுனிடம்

“இங்க பாரு… பிசினெஸ் கிளாஸ்ன்னு சொன்னியே… என்கிட்டயெல்லாம் எங்கப்பா அவ்ளோ பணம் குடுத்து விடல… நான் எகானமி கிளாஸ்லையே வரேன்…”

“அத விடு அபிதகுஜலாம்பா… அந்த கவலை உனக்கு தேவை இல்ல… பாவம் அந்த பிளைட்தான்… ஆனா அங்க மும்பை வந்து எல்லார் முன்னாடியும் இப்படி மரியாதை இல்லாம பேசுனா உன் வாய தைச்சு வெச்சுருவேன்… ஜாக்கிரதை…”

“ஆமா இவன் பெரிய லார்ட் லபக்கு தாஸு… இவன ரொம்ப மரியாதையா கூப்பிடனுமாம்…” என்று முனகி விட்டு…

“நீ என்னை அபிதகுஜலாம்பான்னு கூப்பிட்டா நான் உன்னை வாடா போடான்னு தான் கூப்பிடுவேன்… போடா போடா போடா லூசு… எங்க வாய தைச்சுடு பாக்கலாம்…” என்று பழிப்பு காட்டி விட்டு வெளியே செல்ல முயல

அந்த நேரத்தில் சிறுபிள்ளை போன்ற அவள் செய்கையில் முழுதாய் மனதை தொலைத்தான்! மனதில் சாரல் அடித்தது… அவளை பணபேய் என்று தானே திட்டியது எல்லாம் மறந்து போனது அர்ஜுனுக்கு… அறைக்கு வெளியே சுற்றிலும் பார்த்தவன் யாருமில்லாதை உறுதி படுத்தி கொண்டு அஞ்சலியை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே மெலிதான புன்னகையோடு இடது கையால் கதவை மூடினான்!

“ஏய்… எதுக்கு நீ இப்போ கதவை மூடற?” என்றாள் கோபமாக

“சும்மா… உனக்கு ஒரு பனிஷ்மென்ட் குடுக்க வேணாமா?” என்றான் புன்னகைத்து கொண்டே

“இங்க பாரு அர்ஜுன்… ஒழுங்கா கதவை திற… நான் போகணும்…” சொல்லி கொண்டே பின்னடைந்தாள் கண்களில் பயத்தோடு!

“போலாம்… ஆனா வாய தைக்க சொன்னியே… இப்போ அத செஞ்சு தானே அனுப்பனும்… எப்படி வசதி…” கேட்டுக்கொண்டே அர்ஜுன் நெருங்கி வர அஞ்சலியின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது… அந்த குளிரிலும் வியர்த்தது!

“அர்ஜுன்… சொன்னா கேளு… நீ பேசுறதே சரி இல்ல… இவ்ளோ நேரம் ஒழுங்கா தானே இருந்த… இப்போ என்ன… திடீர்ன்னு கிறுக்கு பிடிச்சுருச்சா…” வார்த்தைகள் தந்தி அடிக்க…

“ஆமா… கிறுக்கு தான் பிடிச்சுருக்கு… நீ தானே ஏத்தி விட்ட… அதோட அவுட்புட் இதுதான்…” சொல்லி கொண்டே மிக நெருங்கினான்!

“வேணாம் அர்ஜுன்… அண்ணாவ கூப்பிடுவேன்… ஒழுங்கா போ…” குரல் உள்ளே செல்ல அவள் பேசியது அவளுக்கே கேட்கவில்லை… அவனது மூச்சு காற்று அவள் மேல் பட, அவனது வாசனை ஒரு வித கிறக்கத்தை குடுத்தது!

“கூப்பிடு… உன் அண்ணன…” என்று கிசுகிசுப்பாக சொல்லி விட்டு… அவளது இரு புறமும் கை ஊன்றி அவளை முழுதாக விழுங்குவது போல் பார்க்க… அவனது பார்வை அஞ்சலியை என்னன்னவோ செய்ய…

“வேணாம் அர்ஜுன் விட்ருங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…” ஹீனமாக அவள் சொல்ல முயல… காற்று தான் வந்தது! உடல் நடுங்கியது

அவளது கன்னத்தை வருடி …பின் உதட்டை வருடி கொண்டே கண்களை பார்க்க… அந்த பார்வையின் வீச்சு தாங்காமல் தானாக சொருகியது அஞ்சலிக்கு… உதடுகள் அவனை அழைத்தன… மிக பக்கத்தில் போனவன்…

“இதையே மெயின்டைன் பண்ணு… அத விட்டுட்டு வாடா போடான்னு சொன்ன… அப்புறம் அங்கேயே இந்த மாதிரி தான் வாய தைப்பேன்… என்ன ஓகே வா…” என்று சொல்லி சிரித்து கொண்டே விலக

முகம் சிவந்து போய் திரும்பியவளுக்கு அப்போதுதான் சுய உணர்வு வந்தது… இதிலுமா இவனுக்கு விளையாட்டு… இது புரியாமல் தானும் மயங்கி போய்… ச்சே… அவமானத்தில் முகம் கன்றி போய் கண்கள் கலங்கி ஒன்றும் பேசாமல் கதவை திறந்து கொண்டு விறுவிறுவென்று வெளியே சென்றாள்! இனி அவன் முகத்தை பார்க்கவே கூடாது என்ற முடிவோடு!

******

காலை நேர பரபரப்பில் இருந்தது பிருந்தாவனம்!

சென்னை திநகரில் மிக மிக பெரிய கடைகளில் ஒன்றான கணபதி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கணபதியின் வீடு… ஏழு மணி அளவிலேயே காலை உணவை முடித்து கொண்டு கடைகளுக்கு சென்று விடுவார்… ஒவ்வொரு கடையிலும் பொறுப்பாளரிடம் கல்லா பெட்டி சாவியை தந்துவிட்டு ஸ்டாக் எவ்வளவு தேவையென்பதை கேட்டு கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தானே சென்று பார்வையிட்டு வருவது அவரது தினசரி வேளைகளில் ஒன்று… தந்தையின் துணையோ மற்ற உறவினர்களின் துணையோ இல்லாமல் தானே வளர்ந்த சுயம்பு! எந்த நேரத்திலும் தன்னை விழுங்க காத்திருக்கும் வியாபார திமிங்கலங்களை எதிர்த்து போராடியாக வேண்டிய கட்டாயம்… செய்தார்… திறம்படவே… !

பதினாலு வயதில் திருசெந்தூரில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்தவருக்கு ஆரம்பத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது ஹோட்டல்களில் டேபிள் துடைப்பது போன்ற வேலைகளே கிடைத்தன… அதன் பின்னர் சிறிது காலம் துணி கடையில் வேலை பார்த்தார்… அந்த வேலையும் நிலைக்காமல் போய் விடவே இனி இன்னொருவரிடம் வேலை பார்க்க கூடாது என்று முடிவு செய்து பதினேழு வயதில் தெரு தெருவாக தள்ளு வண்டியில் வைத்து பாத்திரமும் சேலைகளும் விற்க ஆரம்பித்த கணபதிக்கு அதிர்ஷ்டம் கை குடுத்தது… அப்போது தான் எவர்சில்வர் பாத்திரம் புழக்கத்திற்கு வந்த புதிது… துணிந்து மும்பை சென்று மொத்தமாக கொள்முதல் செய்து விற்க ஆரம்பித்தார் கணபதி… மக்களின் எவர்சில்வர் பாத்திர மோகம் அவரை வியாபார காந்தம் ஆக்கியது!

துணிகள் மொத்த விற்பனை கடை நடத்தி வந்த சின்னசாமி, கணபதியின் வியாபார திறமையை பார்த்து தனது ஒரே பெண்ணான பிருந்தாவை அவருக்கே திருமணம் செய்து வைத்து தன் வியாபாரம் மற்றும் திநகர் கடை எல்லாவற்றையும் கணபதிக்கே கொடுத்தார்… ஒன்றுமில்லாமல் வெறும் கையிலே முழம் போடும் திறமை கொண்ட கணபதி, இந்த மிக பெரிய வாய்ப்பு வந்தால் விட்டு விடுவாரா என்ன? அதன் பின்னர் அவர் பார்த்ததெல்லாம் முன்னேற்றம் தான்! திநகரில் ஒரு காலத்தில் பிளாட்பார்மில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கணபதி இன்று அதே தி நகரில் இருபதுக்கும் மேற்பட்ட கட்டிடங்களின் சொந்தகாரர்… பாத்திரங்கள் துணிமணிகள் வீட்டு உபயோக பொருட்களோடு பல்வேறு தொழில்களுக்கு கடனுதவியும் செய்து வந்தார்… அவர் பேசும் கட்டபஞ்சாயத்துகளும் எதிரிகளை பூண்டோடு அழிக்கும் முறைகளும் பிரசித்தி பெற்றவை! ஆனால் தனது வியாபாரத்தை பெருக்க தெரிந்த அவருக்கு தன் குடும்பத்தை பேணி காக்க தெரியவில்லை!

சிறு வயது முதலே வசதியில் ஊறி வளர்ந்த பிருந்தா, மேகா பிறக்கும் வரை தான் சிறிதளவு வீடடங்கி இருந்ததே! குழந்தை பிறந்த பின் மேகாவை வேலையாட்களிடம் விட்டு விட்டு ஊர் சுற்றுவதே வேலையாகி போனது… சேவை என்று ஏழை பிள்ளைகளை குளிக்க வைத்து படம் எடுத்து கொள்ளும் பிருந்தா ஒரு நாள் கூட தன் கையால் மேகாவை குளிக்க வைத்தது இல்லை! அந்த குழந்தை சாப்பிட்டதா இல்லையா என்று கூட பார்க்க தோன்றாத ஓட்டம்! சமுதாயத்தில் தான் முக்கிய பிறவி என்பதை காட்ட! தன் மனைவியை தட்டி கேட்க கூட நேரமில்லாமல் உழைத்து கொண்டிருந்தார் கணபதி! சிறு வயதில் தன்னிடம் போக்கு காட்டி அதன் பின்னால் அலைய வைத்த பணத்தை இன்று தன் பின்னால் அலைய விடும் வெறி!

வியாபாரம் என்று காலையில் தான் விழிக்கும் முன்னர் ஓடி உறங்கிய பின் வரும் தந்தை… வீட்டில் இருந்தால் கூட இன்டர்காமில் மட்டுமே உத்தரவிடும் தாய்… பாசமே அறியாமல் வளர்ந்தாள் மேகா! பாசத்தை காட்ட சசிதரன் கிடைத்த போது பற்றுகோடாய் பற்றிக்கொண்டாள்… அவனுடன் மும்பை செல்ல துணிந்தும் விட்டாள்! ஹாலின் நடுமையத்தில் உள்ள வீட்டு தொலைபேசி அழைத்தது! கணபதிதான் எடுத்தார்!

“ஹலோ… யாருங்க…”

“யார்ன்னு சொன்னா உங்க பொண்ணு உங்க கிட்ட வந்துடுவாங்களா மிஸ்டர் கணபதி?”

“ஹலோ… யார் சார் பேசுறீங்க… விளையாடாதீங்க…” யாரோ வேலையில்லாமல் லூசு தனமாய் மிரட்டுவதாய் நினைத்து கொண்டு பேச…

“மிஸ்டர் கணபதி… மொதல்ல உங்க பொண்ணு உங்க வீட்ல இருக்காங்ளான்னு பாருங்க…” அந்த குரலின் நிதானம் கணபதிக்கு பயத்தை அளிக்க…

“பிருந்தா… பிருந்தா… பொண்ணு எங்க?” என்று பதற்றத்தோடு தன் மனைவியை பார்த்து கேட்க…

“ஐயோ தெரியலையே… லதா… ஏய் லதா… மேகா எங்க?” என்று வேலையாளை பார்த்து பதறியபடியே கேட்க…

“தெரியலைங்களே… நேத்து காலைல வெளிய போகும் போது பார்த்தது தான்ம்மா… இன்னும் சின்னம்மாவ நான் பார்க்கலைங்களே…” என்று கூற

“பொண்ணு வீட்ல இல்லாதது கூட தெரியல… ம்ம்ம்… நல்ல அப்பா சார் நீங்க…”

“ஏய், … யார் நீ… இந்த மிரட்டி பார்க்குற வேலையெல்லாம் வேணாம்… வைடா போனை…” என்று கூறி விட்டு டக்கென்று போனை வைத்தார்!

உடனே மகளை எல்லோரையும் விட்டு தேட சொன்னவர் எல்லோரும் வந்து காணோமென்று சொல்ல இடிந்து போய் உட்கார்ந்தார்! அனைவர் முகத்திலும் பயம் தெரிந்தது… திடீரென்று தோன்ற மேகாவின் செல்பேசிக்கு அழைத்தார்!

“ஹலோ…” அழைத்த கணபதியின் குரலில் பதட்டம் தெரிந்தது!

“என்ன சார்… வீட்ல பொண்ண தேடி சலிச்சுட்டீங்க போலிருக்கு…” அவனே தான் பேசினான்!

“ஏய் யார் நீ?”

“ம்ம்ம்… அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவேனா? நீங்க பண்ண பாவம் எல்லாம் கொஞ்சமா நஞ்சமா மிஸ்டர் கணபதி…”

“சரி… எங்க என் பொண்ணு சொல்லு…”

“ம்ம்ம் அதையும் அவ்வளவு சீக்கிரம் சொல்லிடுவேனா? உங்களை அலைய விட்டு திரிய விட்டு பதற வெச்சு உங்க பாவ கணக்க டேலி பண்ண வேணாம்? ம்ம்ம்ம் உங்க ஸ்டைல் தான் மிஸ்டர் கணபதி…”

“சரிப்பா… உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு…” இறங்கி வந்து கேட்டார் கணபதி!

“இப்போ உங்க சொத்த கேட்டா எழுதி குடுப்பீங்களா மிஸ்டர் கணபதி… மாட்டீங்கள்ள… அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?”

“ஏய் இங்க பாருப்பா எனக்கு என் பொண்ணு வேணும்…” கெஞ்ச ஆரம்பிக்க

“உங்களுக்கு இது ஒன்னு தான் பொண்ணா… இல்ல உங்க வீட்ல இருக்கவங்க மட்டும் தான் மனைவியா? இந்த பொண்ண மறந்துடுங்க மிஸ்டர் கணபதி…”

தான் எங்கேயோ சொன்னது போல தோன்றியது இந்த வார்த்தைகள்! அப்படி என்றால்…

“தயவு செஞ்சு என் பொண்ண அனுப்பிடுப்பா… கெஞ்சி கேக்குறேன்… என் பொண்ண அனுப்பிடு…” கணபதி கதற ஆரம்பித்தார்!

“ம்ம்ம்… இவ்வளவு நீங்க கெஞ்சறதுனால உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன்… ஆப்ஷன் நம்பர் ஒன்னு முழுசா அனுப்பட்டா இல்ல ஆப்ஷன் நம்பர் ரெண்டு பாக் பண்ணி அனுப்பட்டா?”

“ஐயோ…” என்று கணபதி அலற

“இப்படி ஒரு ஆப்ஷனே நான் குடுக்கல மிஸ்டர் கணபதி… ஆனா முழுசா அனுப்பறதுன்னா ஒரு வேலை முடிச்சுட்டு தான் அனுப்ப முடியும்… என் பிரெண்ட் ஒருத்தன் உங்க பொண்ண பார்த்து ரொம்ப ஆசைபடுறான்… ஆனா என்ன அவனுக்கு எய்ட்ஸ் இருக்கு… இப்போ ஒரு ஆப்ஷன சூஸ் பண்ணுங்க மிஸ்டர் கணபதி!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!