KS 4

KS 4

காதல் சன்யாசி 4

நிவேதா சொல்லிக் கொண்டே போக, தமிழ்ச்செல்வி கவனமாய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

“வருசம் வருசம் இந்த ஆர்டர் நமக்கு தானே மேம்” தமிழ் கேட்க,

“ஆனா, இந்தமுறை போட்டி அதிகமா இருக்கும்னு டாட் சொல்றாரு, சோ, நாம கேர்புல்லா ரெடி பண்ணனும். வழக்கம் போல சீக்ரேட்டாகவும் இருக்கணும்” என்று நிவேதா திருத்தங்கள் சொல்ல சொல்ல தமிழ்ச்செல்வி அதனை குறித்து கொண்டே வந்தாள்.

” ஓகே, உடனே இதை முடிச்சு எடுத்துட்டு வாங்க” நிவேதா ஆணையிட, “எஸ் மேம்” என்று அங்கிருந்து நகர,

“ஒரு நிமிசம் தமிழ்செல்வி” அழைப்பில், தாமதித்து திரும்பினாள்.

நிவேதா சின்ன தயக்கத்துடன், “ராகுல் கிருஷ்ணன் பத்தி… அது, அவரோட கேரக்டர் எப்படி?” என்று கேட்க,

தமிழ்ச்செல்வி புரியாதவளாய், “என்ன மேம் திடீர்னு ராகுல் பத்தி விசாரிக்கறிங்க?” என்று வினவினாள்.

“ஒண்ணும் இல்ல, சும்மா தான்! அவரை பத்தி தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு!”

ராகுலை பற்றி என்ன சொல்ல என்று
நினைக்கும் போதே, தமிழ்ச்செல்வியின் இதழில் புன்னகை விரிந்தது.

“அவன் ஒரு அறுந்த வாலு மேம். எப்ப பார்த்தாலும் துருதுருன்னு அங்க இங்க ஓடிட்டே இருப்பான். லொடலொடன்னு பேசி காதுல ரத்தம் வர வச்சுடுவான்.”

ராகுலை பற்றி அவள் சொல்ல, ஒவ்வொன்றையும் சுவாரஸ்யமாக கேட்டு தன்னுள் பதித்து கொண்டே வந்தது இவள் மனம்.

எதை பற்றியும் யோசிக்காமல் தமிழ் தன் போக்கில் அளந்து கொண்டு போனாள்.

“காலேஜ்ல நாங்க மொத்தம் ஏழு பேர் ப்ரண்ட்ஸ் மேம். ராகுல் தான் எங்க டீம் லீடர். நிறைய தடவ க்ளாஸ் கட் அடிச்சுட்டு சினிமா பார்க்க போயிருக்கோம். போரிங் க்ளாஸ்னா முன்னாடியே கேன்டீன்ல போய் அரட்டை அடிக்க ஆரம்பிச்சிடுவோம்”

“ராகுல் ரொம்ப கோபக்காரன் மேம்! அடி, உதை, சண்டைன்னா நிச்சயமா அங்க அவன் இருப்பான்.”

“ஓ கோபம் கூட வருமா? பார்த்தா அப்படி தெரியலயே?”

“அவனுக்கு வாயும் கையும் ஒண்ணா பேசும் மேம். அவனோட பைக்ல எப்பவும் ஒரு இரும்பு ராட் மாதிரி வச்சுட்டு சுத்தர அடிதடி கேஸ் அவன்” சலித்தப்படியே தமிழ் சொல்ல, நிவேதா புருவங்கள் உயர்த்தினாள்.

“காலேஜ் டேஸ்ல அவன் ப்ளே பாய் தான். ஆனா, படிப்பிலையும் விளையாட்டிலயும் அவன் தான் நம்பர் ஒன். அவனோடது சாதாரண குடும்பம் தான் மேம், அப்பா இல்ல, அம்மா மட்டும் தான். மனசுல எது பட்டாலும் எதைபத்தியும் யோசிக்காம, முகத்துக்கு நேரா சொல்லிடுவான். கொஞ்சம் விளையாட்டு பிள்ளை தான். ஆனா, ரொம்ப ரொம்ப நல்லவன் மேம்” என்று தமிழ் சொல்லி முடிக்க,

நிவேதாவின் உள்ளம் அப்படியே எம்பி குதித்துவிடுவது போல, அவளுக்குள் அத்தனை பரவசம் பரவியது.

‘தன்னுள் ஏன் இத்தனை மாற்றம்?’ கேள்விக்கு பதில் அவளுக்கே தெரியவில்லை!

தன் ஓர விழி பார்வைக்காக தவங்கிடந்த எத்தனையோ ஆண்களை அலட்சியமாய் கடந்து வந்த நிவேதாவினால், ஏனோ ராகுல் கிருஷ்ணனின் கத்தி பார்வையை கடக்க முடியவில்லை.

‘அந்த மாய கள்வனை நேரில் பார்த்த அந்த நொடியில் தனக்குள் நேர்ந்தது என்ன?’

அந்த உணர்வு இப்போதும் அவள் பூ உடலை சிலிர்க்க செய்தது.

தன் ஆழ் மனதின் இத்தனை கால தேடலுக்கான விடையாய், தன் முன்னால் அவன் வசீகர தோற்றம்,
அவளை நிறைத்து விட்டு இருந்தது.

“ராகுலை பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க?” என்று வினவினாள் நிவேதா மேலோட்டமாய்.

“கிட்டத்தட்ட அஞ்சு வருசம் நாங்கெல்லாம் ஒண்ணா படிச்சிருக்கோம் பழகியிருக்கோம்
மேம், என் ஃபிரண்ட்ஸ பத்தி இதுகூட தெரியலன்னா எப்படி மேம்.”

“ராகுல்… என்னை பத்தி ஏதாவது கேட்டாரா?” நிவேதா ஒருவித அலைப்புறுதலோடு வினவ,

“இல்லயே மேம்” என்றவள், ஞாபகம் வர, “ஆமா மேம். போன வாரம் மார்கெட்ல பார்த்தப்போ, உங்கள பத்தி கேட்டான்!” என்றாள் தமிழ்ச்செல்வி.

“நீங்க என்ன சொன்னிங்க?” சற்று கலவரமாய் கேள்வி வந்தது.

தமிழ் மெல்லிய புன்னகையுடன், “உங்கள பத்தி தப்பா சொல்ல எதுவும் இல்லயே மேம்” என்று பதில் தர, நிவேதாவின் முகம் பனி மலராய் பூத்தது.

அவளுக்குள் சொல்ல தெரியாத ஒரு புதுவித பரவசம் பரவ, பனிகாற்றில் மிதக்கும் வெண் சிறகாய் மிதந்தது அவள் மனம்.

யோசனையோடு வெளியே வந்த தமிழ்ச்செல்விக்கு ஏதோ நெருடலானது.

‘ஒருவேளை அன்று, மேடமை பற்றி விசாரிக்கவே காய் வாங்கும் சாக்கிட்டு தன்னிடம் வந்திருப்பானோ அவன்?’
என்று தோன்றிய சந்தேகத்தை அப்படியே கிடப்பில் போட்டு, தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்.

# # #

திருமண வரவேற்பு வெகு பிரம்மாண்டமாய் பேரழகாய் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

புதுமண பூரிப்போடு மணமக்கள் மேடையில் இருக்க, அனைவரும் வாழ்த்து கூறி பரிசளித்தனர்.

நிவேதாவும் மணமகளுக்கு பரிசு தந்து புதுமண வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்க,

“நம்ம டீம்ல எல்லாருக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. இப்ப எனக்கும். அடுத்தது உனக்கு தான் நிவி” என்று சொல்லி ரேணுகா பூரிப்போடு சொல்ல,
புன்னகை மட்டும் பதிலாக தந்துவிட்டு கீழே வந்த நிவேதாவின் மனதில் ராகுலின் முகம் தோன்றி புன்னகைத்தது.

“ஹாய் நிவேதா” குரல் கேட்டு திரும்பினாள்.

“ஹலோ ஷ்யாம் ஆங்கிள், எப்படி இருக்கீங்க?”

“ரொம்பவே நல்லா இருக்கேன் ஏன்ஜல், உன் அப்பா எப்படி இருக்கான்?”

“முன்னைக்கு இப்ப பரவாயில்ல அங்கிள்”

“நான் அவனை பார்க்க வரேன்னு சொல்லு டியர்”

“ஷுர் அங்கிள்”

“அப்பறம், ஓட்டல் ஆக்ஸிடென்ட வெளியவராம மூடிட்ட?”

“என்ன ஆக்ஸிடென்ட் அங்கிள்?” அவள் ஆர்வத்தை குரலில் காட்ட,

“ம்ம் நான் பாத்து வளர்ந்த பொண்ணு, இத்தனை திறமையா செயல்படுறதுல எனக்கு பெருமை தான்” என்று அவர் பாராட்ட, இவள் இதமான மென்னகையை தந்து நின்றாள்.

“உன்னோட சாஃப்ட் கேரக்டருக்கு, இந்த பிஸ்னஸ் எல்லாம் சரிபட்டு வருமான்னு முன்ன யோசிச்சேன். இப்ப உன்ன பார்த்து அசந்து நிக்கிறேன், நீ கலக்குற ஏன்ஜல்” இதற்கும் அவள் புன்னகையே பதிலாக அமைய,

“இந்த சுவீட் ஸ்மைல யார் சொந்தம் கொண்டாட போறானோ? சீக்கிரம் அவனை கண்டுபிடி” என்று அவர் நகர, இவளுக்குள் வெட்கம் வந்து சுகமாய் தொற்றிக் கொண்டது.

‘என் புன்னகைக்கும் சேர்த்து சொந்தம் கொண்டாடுபவனா நீ?’ அவளுக்குள் கேள்வி எழும்ப, நிஜமாகவே அங்கே ராகுல் அவள் பார்வையில் பட்டான்.

அவன்மேல் விழுந்த பார்வையை விலக்கி கொள்ள இயலாமல் நிவேதா அவனையே பார்த்து நிற்க,

அவளை எதட்சையாய் பார்த்து விட்ட ராகுலும், காந்தவயப்பட்டவனைப் போல தன்னிச்சையாய் அவளருகில் வந்து நின்றான்.

“நீங்க இங்க…!” முதல் முதலாய் ஓர் ஆடவன் முன் பேச, வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தாள் அவள்.

ராகுல் இதழ் மடித்த சிரிப்போடு, “கல்யாண மாப்பிள்ளை எனக்கு கொஞ்சம் பழக்கம். ம்ம் கல்யாண பொண்ணு உங்க ஃப்ரண்ட் தான?”

அவன் பட்டாசு பேச்சில் சரியாக சொல்ல, நிவேதா ஆமோதித்து தலையசைத்தாள்.

“என்ன பத்தி தமிழ்கிட்ட விசாரிச்சிங்களா, ஏன்?” அவன் சாதாரணமாக கேட்டுவிட, அவள் துணுக்குற்று தயங்கினாள்.

“சு…சும்மா தான். நீங்க ஏன் என்னை பத்தி விசாரிச்சிங்க?” அவளும் நேரடியாக பதில் கேள்வி எழுப்பினாள்.

ராகுல், “வெண்ணிலாவ வெட்டி செஞ்ச சிலை மாதிரி இருக்கீங்க. உங்கள பத்தி நான் விசாரிக்காம விட்டிருந்தா தான் தப்பாகியிருக்கும்” என்று அவன் வெளிப்படையாகவே வழிந்து சொல்ல,

தன்னிடமே தன்னை வர்ணித்து சொல்லும் அவனுடைய கண்மூடித்தனமாக தைரியத்தை வியந்து நிவேதாவின் புருவங்கள் சுருங்கின.

ராகுல் பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் அவள் முன் நின்றிருக்க, “தமிழ்செல்வி, உன்ன பத்தி சொன்னது நூத்துக்கு நூறு சரிதான் போல” என்று நிவேதா இதழ் மடித்து சொல்ல, இப்போது அவன் துணுக்குற்றான்.

“தமிழ், அப்படி என்ன சொன்னா? என்னை பத்தி” என கேட்க,

முந்தி வந்த சிரிப்பை முயன்று அடக்கி கொண்டவள், “நீ ஒரு அறுந்த வாலுன்னு சொன்னாங்க” என்று சொல்லி சிரித்தும் விட்டாள்.

ராகுலின் முகம் தொங்கி போனது.

“எ…என்ன?”

“உனக்கு ரொம்ப கோபம் வருமாமே, அடிதடி, சண்டைன்னா ரொம்ப பிடிக்கும்னு கூட…”

“போதும் நிவேதா, உன்னோட பிஏ என்னை பத்தி ஒரு விசயம் கூட நல்லதா சொல்லலையா?” ஆதங்கமாகவே கேட்டு விட்டான்.

“ம்ம் கடைசியாய் நீ ரொம்ப ரொம்ப நல்லவ…ன்னு சொன்னாங்க”
என்று நிவேதா சொல்லிவிட்டு சிரிப்போடு அவனை பார்க்க,

தன் கையை தலைமேல் வைத்தபடி ராகுல் பாவமாய் நின்றிருந்தான்.

“உன் மனசுல எது பட்டாலும் எதைபத்தியும் கவலை படாம முகத்துக்கு நேரா கேட்டுடுவியாமே, நிஜமா?” நிவேதா அவனை மேலும் சீண்ட,

ராகுல் நிமிர்ந்து அவள் முகத்தை சலனமின்றி பார்த்தான்.

“இதை உன்கிட்ட மட்டும் தான் கேட்க முடியும், அதான் கேக்கறேன்” அவன் பீடிகை போட,

நிவேதாவின் நெஞ்சுக்குழி காலியானதை போன்ற உணர்வு எழ, அவள் தவித்து நின்றாள்.

“உன்னோட ஃபோன் நம்பர் கிடைக்குமா?” அவன் அத்தனை தைரியமாய், உரிமையாய் கேட்க,

நிவேதா விழிகள் விரிய அவனை அதிசயமாய் பார்த்து நின்றாள்.

அவனை சந்தித்த முதல் தருணத்தில் இருந்து எனக்குள் புதுமையான எண்ணங்களை எழ செய்கிறான்!

இனிமையான தடுமாற்றத்தில் என்னை சுகமாய் விழ செய்கிறான்!

அதிசய பிறவியாய் வந்து என்னை வியக்க வைக்கிறான்!

அவனை காணாது கழிந்து போன இவள் நாட்களை எல்லாம் அர்த்தமற்றதாக தோன்ற செய்கிறான்!

அவன் கேட்டதும் மறுக்க தோன்றாமல் தன் தனி அலைபேசி எண்ணை தந்துவிட்டு வந்த தன் பைத்தியகார தனத்தை எண்ணி தனிமையில் நொந்து கொண்டிருந்தாள் நிவேதா.

இதுவரையில் தன் தந்தையை தவிர, வேறு எந்த ஆண் மகனிடமும் அவள் இத்தனை இயல்பாக கேலி பேசியதில்லை.

அவள் சாதாரணமாக திரும்பி பார்த்தாலே, விலையுயர்ந்த பரிசோடு வந்து திருமண சம்மதம் கேட்டுவிடும் ஆண்களுக்கு மத்தியில் அவளால் யாரிடம் இயல்பாக பழக முடியும்!

ஆனால், முன் ஜென்ம தேடலாய் அவனை கண்ட நொடியே அவள் தன் சுயத்தை அவனிடம் தொலைத்து விட்டதை‌ உணர்ந்து, அந்த நினைவின் இதமான இன்ப சுகத்தில் அமிழ்ந்து போனாள் அவள்.

ராகுல் கிருஷ்ணனை பற்றி கேட்கவே வேண்டாம், நிவியின் பேரழகில், அவளின் இயல்பான பேச்சில், அவள் கண்களில் பளிச்சிட்ட காதலில் இவன் மூச்சு முட்டி போனான்.

அந்த சுகத்தினிடையே பானகத்துரும்பாய் ஒன்று அவனை அலைகழிக்க, உடனே கைப்பேசியில் எண்களை தட்டினான் வேகமாக.

உறக்கத்தில் இருந்து விழித்தவள், அலறிய அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ?”

“உனக்கு என்ன டீ பாவம் செஞ்சேன்! இப்படி என் மானத்தை வாங்கிட்டியே!” மறுமுனையில் ராகுல் ஆதங்கமாக கிட்டத்தட்ட கத்தினான்.

தமிழ்ச்செல்வி கண்களை துடைத்துக் கொண்டு கடிகாரத்தை பார்க்க, மணி இரவு பதினொன்றை தாண்டி காட்டியது.

“என்ன டா ஆச்சு உனக்கு? ராத்திரி பதினோரு மணிக்கு ஃபோன் பண்ணி என்னென்னமோ உளர்ற” என்று கேட்டாள் உறக்கம் முழுவதும் கலையாதவளாய்.

“ஒரு அழகான பொண்ணு என்னை பத்தி விசாரிச்சா ஏதோ நாலு வார்த்தை நல்லதா சொல்றதை விட்டுட்டு, நிவேதா கிட்ட என்னை… அறுந்த வாலுன்னா சொல்லி வைப்ப?” அவன் ஆற்றாமல் குரலை உயர்த்தினான்.

தமிழ்ச்செல்விக்கு இப்போது தான் அவன் காட்டு கத்தலின் காரணம் புரிய, “உண்மைய தான டா சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளோ கோபப்படுற?” என்று கேட்டாள் சலிப்பாக.

“என்ன்னது! உண்மைய சொன்னியா, உன்னால நான் நிவேதா முன்னாடி தலை குனிஞ்சு நின்னேன், தெரியுமா?”

“உன்ன பத்தி எனக்கு என்ன தெரியுமோ, அதை தான் நான் மேடம் கிட்ட சொன்னேன். அது சரியா? தப்பான்னு நீ பொறுமையா உக்கார்ந்து யோசிச்சிக்க, எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன், பை”

தமிழ்ச்செல்வி கைபேசியை அணைத்துவிட்டு படுத்து கொண்டாள்.

மறுநாள் மாலையில் வழக்கத்திற்கு மாறாக, தமிழ்ச்செல்வி செல்லும் வழியில் ராகுல் காத்திருக்க, தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறுகிய முகத்துடன் அவன்முன் இறங்கி நின்றாள்.

“சாரி தமிழ், ப்ச் யோசிக்காம கூட லேட் நைட்ல கால் பண்ணி உன்ன தொந்தரவு செஞ்சிட்டேன்” ராகுல் சங்கடமாக மன்னிப்பு கேட்க,

“இந்த அறிவு இப்ப தான் வந்ததா உனக்கு?” தமிழ் சிடுசிடுத்தாள்.

“ஏதோ ஆத்திரத்தில கொஞ்சம் கோபமா பேசிட்டேன். அதுக்கு ஏன் இப்படி உர்ருன்னு நிக்கிற? உன் மேலயும் தப்பு இருக்கு இல்ல” ராகுல் சமாதானமாக பேசினான்.

“என்ன பெரிய தப்பை கண்டுட்ட நீ?”

“அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல”

“நீயும் மேடமும் மாத்தி மாத்தி என்னடா கண்ணாம் பூச்சி விளையாடுறிங்க? எனக்கு ஏதோ சந்தேகமா படுது” அவள் நேராக கேட்டு விட்டாள்.

“எனக்கு… நிவேதாவ ரொம்ப பிடிச்சிருக்கு தமிழ்” ராகுல் சின்ன குழைவான வெட்கத்துடன் சொல்ல, தமிழ்ச்செல்வி அவனை ஏகத்திற்கும் முறைத்து பார்த்தாள்.

“நிவேதாவ முதல் முதலா பார்த்தபோதே என் மனசுல ஏதோவொரு தடுமாற்றம். அப்புறம் யோசுச்சு பார்த்தப்ப இதெல்லாம் எனக்கு செட் ஆகாதுன்னு நினச்சுகிட்டேன். ஆனா, நேத்து நிவியோட கண்ணுல, எனக்கான காதலை பார்த்தேன். அப்ப எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா!” ராகுல் மேலும் சொல்லிக் கொண்டே போனான்.

“உனக்கு மட்டும் எப்படி டா, ஒரு பொண்ண பார்த்தவுடனே காதல் வந்திடுது?” தமிழ்ச்செல்வி கடுப்பாகவே கேட்க,

அவளுக்கு விரிந்த புன்னகையை தந்தவன், “நான் விளக்கி சொன்னாலும் உன்னால அதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாது தமிழ். ஒண்ணு மட்டும் சொல்றேன், நிவி இல்லாம என் வாழ்க்கை முழுமையாகாது!” கனவில் பேசுபவனை போல பேசி சென்றான் அவன் உருக்கமாய்.

“நீ நினைக்கிற மாதிரி எங்க நிவேதா மேம் இல்ல. உனக்கென்ன மனசுல பெரிய கலியுக கண்ணன்னு நினப்பா” தமிழ்ச்செல்வி அவனை வெளிப்படையாகவே கடிந்து கொண்டாள்.

“என்ன இப்படி சொல்லிட்டே, நான் அக்மார்க் கன்னி பையன் ம்மா” ராகுல் காலரை தூக்கி விட்டு தோரணையாக சொல்ல,

“ஏய், உன்ன பத்தி எனக்கு தெரியாதா? காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்லயே ஸ்ரீராம ஜெயம் மாதிரி நந்தினி ஜெயம் பாடிட்டு இருந்தவன் தான நீ! எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு” என்றாள் குரலை உயர்த்தி அழுத்தமாய்.

ராகுல் திருதிருவென விழித்தான்.

“ஏன், பழைய கதை எல்லாம் கிளற தமிழ்? நான் நந்தினி கூட சுத்தினது உண்மைதான். ஆனா, அவளுக்கு காதல் தேவையில்ல. காசு செலவு பண்ண, ஆள் தான் வேணும் போல, நெத்தி பொட்டுல இருந்து காலுக்கு போடற ஹீல்ஸ் வரைக்கும் நான் தண்டம் வைக்கணும். என்னை என்ன ஏடிஎம் மிஷின்னு நினச்சாளா? அதான் போடின்னு சொல்லிட்டு வந்திட்டேனில்ல” என்று பரபரவென பதில் தந்தான்.

“அப்ப, தேர்ட் இயர்ல, மித்ராவே கதின்னு உருகிட்டு இருந்தியே அது?” தமிழ்ச்செல்வி இன்று அவனை விடுவதாய் இல்லை.

“ஐய்யோ அந்த மித்ரா தான் நான் இல்லன்னா வாழவே முடியாதுன்னு அழுது புலம்பனா, நானும் பொண்ணு சாத்தமானவளா இருக்கான்னு நம்பி ஓகே சொன்னேன். அவ பெரிய சந்தேக பிறவின்னு எனக்கு அப்புறம் தான தெரிஞ்சது, ‘இவளை பார்க்காத, அவகிட்ட பேசாத, என்னை தவிர வேற பொண்ண பத்தியும் பேச கூடாது’ன்னு, சினிமால கூட ஹீரோவ மட்டும் தான் பாக்கணுமா, ஹீரோயினை கவனிக்க கூடாதாம்! போடி நீயும் உன் காதலும்னு சொல்லி, கழட்டி விட்டுட்டேன்” என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தான் அவன்.

“சரி, அப்ப திலோதமா?!” என்று தமிழ் அவனை சலிப்பாக பார்க்க,
ராகுல் தலையை தொங்க போட்டு கொண்டான்.

“அவள கூடவா ஞாபகம் வச்சிருக்க! நானே மறந்துட்டேன்” ராகுல் தோய்வாய் கேட்க, தமிழ் அவனை காட்டமாக முறைத்தபடி நின்றிருந்தாள்.

“கொஞ்சம் அழகாவே இருந்தாளா, என்னை ரொம்ப பிடிக்கும்னு வேற சொன்னா, அதான் நானும் அவகூட பழக ஆரம்பிச்சேன். ஆனா, அவ பொண்ணே இல்ல, ராட்சசி, ‘உன் காதல் உண்மைன்னா கைய வெட்டிக்கோ, என் பேரை பச்ச குத்திக்கோ, பில்டிங் மேல இருந்து குதின்னு’ மிரட்ட ஆரம்பிச்சிட்டா, ஆள விடு தாயேன்னு ஓடியே வந்துட்டேனில்ல”

ராகுல் சொல்லிவிட்டு சிரித்துவிட, தமிழ்ச்செல்விக்கு சிரிப்பு வரவில்லை.

“இவங்கெல்லாம் போதாதுன்னு இப்ப நிவேதா மேம் வேறயா?” என்று ஆத்திரமாகவே கேட்டாள் அவள்.

தப்பு செய்துவிட்டு ஆசிரியை முன் நிற்கும் மாணவன் போல, அவள் முன் நின்றிருந்தான் அவன்.

“இல்ல தமிழ், நான் நிவேதாவ மனசார நேசிக்கிறேன். காலேஜ்ல படிக்கும் போது, எந்த கவலையும் இல்ல. அப்ப, வாழ்க்கையை விளையாட்டா நினைச்சுட்டு இருந்தேன். அதனால தான் பெண்கள் மேல ஏற்படற சாதாரண அபெக்ஸ்னை கூட, காதல்னு தவறா நினச்சிக்கிட்டேன்.”

“…!?”

“ஆனா, இந்த ரெண்டு வருசத்துல, அதுவும் அப்பாவ இழந்ததுக்கு அப்புறம், வாழ்க்கைன்னா என்னன்னு ஓரளவு கத்துக்கிட்டேன்.”

“…!”

“நிவி மேல எனக்கு வெறும் அபக்ஸ்சன் மட்டுமில்ல, இந்த கொஞ்ச நாள்ல நான் அவள உயிரா நேசிக்க ஆரம்பிச்சிட்டேன், என்னை நம்பு தமிழ்”
ராகுல் நிதானமாக எடுத்து சொல்ல, அவன் வார்த்தைகளில் இருந்த உண்மை தன்மையை தமிழ்ச்செல்வியால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் நண்பனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் தவறே செய்யாத உத்தமன் ஒன்றும் இல்லை தான். ஆனால், எதையும் மறைத்து பேசுபவன் இல்லை.

“சரிடா, ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் எப்படி ஒத்து வரும், நீ எதையும் பொறுமையா சகிச்சிட்டு போறவன் கிடையாது. அவங்க பெரிய பணக்காரங்க. அவங்களுக்கு எல்லாம் பொறுமையா பேச கூட தெரியாது. இதுக்கு நடுவுல உங்க காதல்?” தமிழ்ச்செல்வி எதார்த்தத்தை சொல்லிவிட்டு தயக்கமாய் நிறுத்தினாள்.

ராகுலின் இதழில் குறுநகை அரும்பியது. “நீ சொல்ல வர்றது, எனக்கு புரியுது தமிழ். நிவேதா, என்னை நானா ஏத்துக்க தயாரா இருந்தா, எங்க காதலும் ஜெயிக்கும்” என்று நம்பிக்கையோடு உறுதியாக சொன்னான்.

“டேய், நான் மறுபடியும் சொல்றேன், நிவேதா மேடம் தங்கமானவங்க, அவங்கள கஷ்டபடுத்தற மாதிரி நீ ஏதாவது செஞ்ச, நான்…”

“போ தமிழ், உனக்கு தான் என்னை மிரட்ட வரல இல்ல விட்டுடு. அதோட, என் நிவி குட்டிய நான் எப்படி பாத்துக்கணும்னு, தத்தி பொண்ணு நீயெல்லாம் டியூசன் எடுக்க தேவையில்ல. புரியுதா” என்று கிண்டல் செய்து சிரித்தான்.

தமிழ்ச்செல்விக்கு சிரிப்போ, கோபமோ வரவில்லை. ஏதோ இனம்புரியாத பதற்றம் தான் அவளை தொற்றிக் கொண்டது.

நிவேதா, பொதுவாக ஆண்களை அலட்சியம் செய்து விட்டு போகும் குணம் கொண்டவள் என்பது தமிழுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் அவள் ராகுலை பற்றி விசாரிக்கும் போது கொஞ்சம் குழம்பி போனாள்.

‘ராகுல் சொல்வது உண்மையானால் நிவேதா மேடமும் இவனை நேசிக்க ஆரம்பித்து இருக்க வேண்டுமே’ என்று எண்ணியவள்,

கொஞ்சம் பதற்றம் இருந்தாலும், தன் நலம் விரும்பிகள் இருவரும் வாழ்வில் இணைந்தால் நன்றாக தான் இருக்கும் என்று தோன்றியது அவளுக்கும்.

ராகுலிடம் தன் மனமார்ந்த வாழ்த்தினை சொல்லிவிட்டு சென்றாள்.

நிவேதாவின் உயிர் காதலில் திளைத்திருந்த ராகுலின் விழிகள், அவளுக்காக ஆயிரமாயிரம் கனவுகளை சேமிக்க தொடங்கி இருந்தது.

காதல்காரன் வருவான்…

# # #

error: Content is protected !!