அத்தியாயம் ஏழு
சத்ரபதி சிவாஜி விமான நிலையம்
பெங்களூரில் இருந்து பயணிகளுடன் எட்டு மணிக்கு தரை இறங்கியது விமானம்! விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர் மூவரும்! பார்க்கும் முகம் அனைத்திலும் அவசரம்! ஒரு தேடல்! ஏதாவது ஒரு வேலை… எதை துரத்தி கொண்டு ஓடுகின்றனர்? பஸ் நிலையம்… ரயில் நிலையம்… என்று பார்க்கும் இடம் அனைத்திலும் மக்களுக்கு ஏதோ வேலை இருந்து கொண்டே இருக்கின்றது! எதற்காக இந்த ஓட்டம் என்றே புரியாமல்… யாரை துரத்துகிறோம் என்பதும் தெரியாமல் ஓடி கொண்டே இருக்கின்றனர்! டார்வின் தத்துவம் தெரியுமா?
“survival of the fittest”
தனித்தன்மையோடு இல்லாத, முழுவதுமாக தகுதி இல்லாத இனங்களை தூக்கி எறிய இந்த பூமி தயங்குவது இல்லை! பூகம்பம், சுனாமி, வெள்ளம், இன்னும் எல்நினோ, லானினா என்று எத்தனையோ சொல்லலாம்! இவை அனைத்தும் தகுதி இல்லாத இனங்களை அழிக்க இயற்கை கையாளும் முறைகள்!
அதே போல தான் வாழ்கையும்… தகுதி இல்லாத மனிதர்களை காவு குடுக்க அதுவும் தயங்குவதில்லை! அந்த தகுதிக்கு தங்களை தகுதி படுத்தி கொள்ள வேண்டுமல்லவா? அந்த திக்கை நோக்கி மனிதர்கள் ஓடும் ஓட்டம் தான் இது! ஆனால் இயற்கை சில விஷயங்களை ரகசியமாகவே வைத்து இருக்கிறது! அந்த ரகசியங்களை படிக்கும் மந்திர சாவி மட்டும் யாருக்கும் கிடைப்பதில்லை! சிலர் அதை ஆன்மீக ரீதியில் துரத்தி போய் தேடுகின்றனர்! சிலர் அறிவியலின் துணையோடு அந்த மந்திர சாவியை கைபற்ற துடிக்கின்றனர்! ஆனால் இயற்கை தெளிவாகத்தான் இருக்கின்றது! அந்த மந்திர சாவியை ரகசியமாகவே வைப்பதில்… அதனாலேயே இயற்கையை மனிதன் கட்டுபடுத்த முயலும் போதெல்லாம் மனிதன் பேரழிவை சந்திக்கின்றான்! வேறு வழி இல்லாத மனிதனும் தனது ஓட்டத்தை தொடர்கிறான்! இதில் உயர்வு இல்லை தாழ்வு இல்லை… பசி இல்லை தூக்கம் இல்லை… ஓய்வு இல்லை உறக்கம் இல்லை… தன்னை முந்துவதற்கு ஒருவன் இருக்கிறான் எனும்போது இன்னும் வேகமாக ஓடவேண்டிய கட்டாயம்! வெற்றிகளை நோக்கி!
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜுன், கௌதமையும், அஞ்சலியையும் உட்கார சொல்லிவிட்டு தான் வெளியே சென்று தனது ஓட்டுனர் கொண்டு வந்து குடுத்த காரை தனது கட்டுபாட்டில் எடுத்து கொண்டு ஏர்போர்ட் லாபி பக்கம் இருக்கும் அவுட்லெட்க்கு விரைந்தான்! இருவரையும் அழைக்க…
கௌதமின் செல்பேசி அழைத்தது! சிவதாணு மங்களம்! ரயில் விபத்தை பற்றி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தவர்கள் பதறி போய் தொடர்பு கொள்ள முயற்சிக்க அஞ்சலியின் செல்பேசி விபத்து நடந்த இடத்திலேயே தொலைந்து விட்டதால் கௌதமின் செல்பேசிக்கு அழைத்து இருந்தார்! வெறும் கைப்பையை மட்டுமே எடுக்க முடிந்தது அவளால்! இருவரும் பேசி தங்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அவரும் மனம் சமாதானமடைந்தார்! பெண்ணை இப்படி தனியாக ரயில் ஏற்றி அனுப்பி விட்டீர்களே என்று அதுவரை வீட்டில் அதிகப்படியான டோஸ் வாங்கியவர் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டார்! சாதாரண நேரங்களில் அஞ்சலியே போன் செய்து ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோரிடம் சொல்பவள் இன்று மனதின் குழப்பத்தில் அதை மறந்தது அவளுக்கே பெரும் உறுத்தலாக போய்விட்டது!
மனம் குழம்பி தவித்தது! இந்த ஒரு நாளைய பயணம் தன் வாழ்க்கையையே திசை மாற்ற போவதை அறியாமல் மனதில் அழுது கொண்டு இருந்தாள் அஞ்சலி! காரணம் அவன் தன்னை பேசிய வார்த்தைகள்! எப்படி நீ என்னை அப்படி நினைக்கலாம் என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க நினைத்த மனதை முயன்று அடக்கினாள்! யாரோ ஒருவர் பேசி இருந்தால் இந்நேரம் அதை பற்றி சிறிது கூட கவலை படாமல் வேலையை பார்க்க போய்விடுவாள்! ஆனால் அர்ஜுன் தன்னை இந்த அளவு கீழ்த்தரமாக நினைத்தது அவள் மனதை வெகுவாக காயப்படுத்தியது… அந்த அளவு தன்னை பணபேய் என்று நினைத்ததால் தானோ இரவு மருத்துவமனையில் அப்படி நடந்து கொண்டான்? விழியோரம் நீர் துளிர்த்தது!
துடைத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள்! மனதில் காயம் இருந்தாலும் அவனை காதலிக்க தொடங்கி விட்ட மனது எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அவன் பின்னால் மட்டுமே சென்றது, ஆட்டுகுட்டியாக! இப்போது ஹாஸ்டலுக்கு போய் விடுவோம்… அதன் பின்னர்… சாதாரணமாக காலையில் எழுந்து கிளம்பி அலுவலகம் சென்று வேலை பார்த்து பின்னர் ஹாஸ்டலுக்கு திரும்பவது வழக்கமாகி விடும்… எப்படி பார்ப்பது அர்ஜுனை? அவனும் ஓசோனில் தான் வேலை பார்க்கிறான் என்றாலும் எங்கே? என்னவாக இருக்கிறான் என்று கூட தெரியாதே!
முதலில் இந்த காதலின் எதிர்காலம் தான் என்ன? தன்னை நம்பி, தன் பெண் உலக அனுபவம் பெற்று வரட்டும் என்று அனுப்பிய தந்தையின் நம்பிக்கையை குலைக்கலாமா? தனது நண்பன் தானே என்று தன்னை கள்ளமில்லாமல் பழக விட்ட அண்ணனின் எண்ணத்தை பொய்யாக்கலாமா? ஒரே நாளில் அவனை பற்றி என்ன தெரிந்து கொண்டிருப்போம்? அவன் பெயரை தவிர? தனக்கு இந்த எதிர்காலம் தெரியாத காதல் தேவையா? மாற்றி மாற்றி தன் மனம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் அர்ஜுன் மேல் கொண்ட காதலை மாற்றி கொள்ளவும் தெரியாமல் குழம்பி மௌனமாகவே வந்தாள்!
கார் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேக்குள் நுழைந்து போய் கொண்டிருந்தது! அர்ஜுன் மனதிலும் அலை அலையாய் குழப்பங்கள்! கௌதமிடம் தன் காதலை சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டு இரவு மருத்துமனையில் தான் அஞ்சலியிடம் நடந்து கொண்ட முறையை எண்ணி! ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன்? பெண்களை இது வரை தவறாக பார்த்தது கூட கிடையாதே! அதுவும் தன்னை முதல் முதலாக வேரோடு பிடுங்கி அதில் காதல் ஊற்று சுரக்க செய்த ஒரு தேவதை பெண்ணிடம்! என்னதான் தனக்கு அவள் தேவதையாக தெரிந்தாலும் அவளும் மனித பிறவி தானே! குறை இல்லாத மனிதர்கள் எவர்? காதலென்றால் என்ன? இருக்கும் குறையோடு சேர்ந்து ஏற்று கொள்வதுதானே! அவளது இயல்பு தெரிந்தது தவறில்லையே! அந்த குறையை எப்படியாவது நிவர்த்தி செய்வேன் என்று நினைத்தாலும் அவளது சில வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததை ஒதுக்கவும் முடியவில்லை! பின்னர் வாழ்க்கையில் அதுவே நெருஞ்சி முள்ளாக உறுத்தாதா? எப்படியாகிலும்… அவள் தான் என் வாழ்க்கை…
ஒருவாராக தெளிவாகி கெளதமை பார்த்து கேட்டான்…
“நீ எங்க மச்சான் போகணும்?”
கௌதமின் மனமோ இங்கில்லாமல் தடுமாறி கொண்டு இருந்தது! ஏன் அவளை பார்த்தேன்? எத்தகைய பெண் அவள்! அன்பே உருவாக காதலின் மொத்தமும் தன்னகத்தே கொண்டு அந்த சசியை விரும்புகிறாள்! ஏன் மேகா முதலில் என்னை சந்திக்கவில்லை? தான் செய்யும் தொழிலில் அழகான பெண்களை பார்க்காதவன் இல்லையே… தினம் அது தானே வேலையே! இவளை பார்த்து தடுமாறியது போல் வேறு யாரை பார்த்தும் தடுமாறியது இல்லையே… மேகா சசியை தான் விரும்புகிறாள் என்பது தெரிந்தும் தான் இவ்வாறு நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்? முதலில் அந்த சசி நல்லவன் தானா? நடு இரவில் தன்னை நம்பி வந்த பெண்ணை விட்டுவிட்டு இன்னொருத்தியிடம் போனவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? அவனை போய் நம்பி கொண்டிருக்கிறாயே மேகா? அர்ஜுன் அழைப்பது கூட காதில் விழாதவனாக தன்னை மறந்து மேகாவை பற்றியே நினைத்து கொண்டிருந்தான்!
“கெளதம்…” என்று இன்னொரு முறை அழைக்கவுமே சுயஉணர்வு அடைந்து
“என்னடா மச்சான்…”
“கிழிஞ்சுது போ… ஏன்டா… கூப்டுட்டே இருக்கேன்… என்னடா கண்ண திறந்து வெச்சுட்டே தூங்கறையா? நீ எங்க போகறன்னு கேட்டேன்…”
“கல்பாதேவி அர்ஜுன்… அதுக்கு முன்னால இந்த அம்மணிய ஹாஸ்டல்ல இறக்கி விட்டுடலாம்… எந்த ஹாஸ்டல்டா குட்டி?”
“சாவித்ரி பாய் புலே ஹாஸ்டல் அண்ணா… சாண்டா க்ரூஸ்…”
இதை கேட்டதும் மிக பெரிய நகைச்சுவையை கேட்டது போல சிரித்தான் அர்ஜுன்…
“ஏன் சிரிக்கற… றீங்க…” என்று தடுமாறி கொண்டே கேட்கவும் அர்ஜுன் கண்களில் மின்னல்…
“உன் வொர்க் சைட் நரிமன் பாய்ன்ட் தானே…”
“அதெல்லாம் தெரியாது… மேடம் காமா ரோடுன்னு போட்டு இருந்தது…”
“அட கூமுட்டை… அந்த மேடம் காமா ரோடு நரிமன் பாய்ன்ட் தான்…”
“ஹலோ… இந்த கூமுட்டைன்னு சொல்லறது எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்…”
“அப்படியா… சரி அபிதகுஜலாம்பா… அந்த நரிமன் பாய்ன்ட்க்கு இருபது கிலோமீட்டர் தாண்டி சாண்டா க்ரூஸ்ல ஹாஸ்டல் பிடிச்சது நீயாத்தான் இருப்ப ஆத்தா… அதத்தான் சொன்னேன்…”
அவன் அபிதகுஜலாம்பா என்று கூறிய போது முறைத்த அஞ்சலி, அவன் ஹாஸ்டலை பற்றி கூறிய போது ஐயோ என்றிருந்தது!
“ஹய்யோ, … அப்பாதானே வந்து பார்த்து பணம் கட்டிட்டு போனாங்க…”
“ம்ம்ம்… ரொம்ப நல்ல அப்பா…” என்று கிண்டலடிக்கவும்
“ஹலோ… என் அப்பாவ சொல்றதெல்லாம் வேணாம்…”
“சரி அபிதகுஜலாம்பா…” என்று கிண்டலடிக்கவும்…
“அண்ணாஆஆஆ… இங்க பாரு…”
“டேய் ஏன்டா என் தங்கச்சிய கிண்டல் பண்ற… நீ விடுறா செல்லம்… சரி உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த சாண்டா க்ரூஸ் தாண்டியே வந்துட்டோம் கவலை படாத…” என்று அவன் பங்குக்கு வார
“என்னண்ணா சொல்ற… ஐயோ கார திருப்ப சொல்லு…”
“ஏய் லூசு… இது மும்பை எக்ஸ்பிரஸ்வே… அத ஞாபகம் வெச்சுக்கோ… இப்போ போயிட்டு இருக்கற இடத்துக்கு பேரு கேர்வாடி… ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்து கொஞ்ச தூரத்துல லெப்ட்ல டர்ன் பண்ணா தான் சாண்டா க்ரூஸ்… புரியுதா மரமண்டை…”
“இந்த மரமண்டைன்னு சொல்றதெல்லாம் வேணாம்ம்ம்ம்ம்ம்ம்…”
“மரமண்டைய மரமண்டைன்னு சொல்லாம வேற என்ன சொல்றது அபிதகுஜலாம்பா…” என்று மறுபடி வாரவும்
“உன்னை…” என்று ஆரம்பித்தவள், அவன் தன்னை கண்ணாடி வழியே பார்ப்பதை உணர்ந்தவள் அப்படியே நிறுத்தி கொள்ள, அவள் நிறுத்தியதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள்ளே ஜிவ்வென்று டேக் ஆப் ஆனான்!
“மருந்து கரக்டா வேலை செய்யுதுடா டோய்…” என்று அவன் மனதில் ஆனந்தம்…
“என்ன அபிதகுஜலாம்பா நிறுத்திட்ட?”
“டேய்… அர்ஜுன்… ரொம்ப ஓவரா சீண்டிகிட்டே இருக்காத… கண்டிப்பா ஒரு நாள் இல்ல ஒரு நாள் அஞ்சு குட்டி உன் தலைல கல்ல தூக்கி போட்டுடுவா!”
“இப்போ ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா… இப்போ நான் ஹாஸ்டல் போகணும்…”
“ஒன்னு பண்ணலாம் எலிக்குட்டி… நீ என்னோட கல்பாதேவிக்கு வா… என் பிரெண்ட் வீடு இருக்கு… அங்க இரு… சாயந்தரம் வரை வேலை இருக்கு… அப்புறமா நாம நரிமன் பாய்ன்ட்லையே எதாச்சும் ஹாஸ்டல் இருக்கான்னு பார்க்கலாம்… ஓகே வா?” என்று கெளதம் கேட்க
“வேணாம்டா… நம்ம வீட்டு பொண்ணு… இன்னொரு வீட்ல போய் இருக்க வேணாம்… நம்ம அப்பார்ட்மென்டும் சரி வராது… அப்பாவோட ஆயிரம் கேள்விய சமாளிக்கணும்… வெயிட்… வெயிட்…” என்று சொல்லி செல்பேசியை எடுத்தவனை ஒரு நொடி பெருமை பொங்க பார்த்தாள் அஞ்சலி!
“கௌஷிக்… YWCA, மேடம் காமா ரோட்ல தானே இருக்கு…”
“…”
“அங்க வேகன்சி இருக்குதான்னு பாரு… இருந்தா பேசி முடிச்சுடு… ம்ம்ம்… ஒருத்தர் தான்… பேர் அஞ்சலி”
அடுத்த ஐந்தாவது நிமிடம் ரூம் பேசி முடித்தாகி விட்டது என்ற போன் வர
“தேங்க்ஸ்டா மச்சான்… அதுக்கு தான் நீ வேணுங்கறது… பார்த்தியா எலிக்குட்டி… என் பிரெண்ட… ஒரே நிமிஷத்துல பேசியே முடிச்சுட்டான்…”
என்று பெருமை பீற்ற…
“போதும் போதும்… ரொம்ப பீத்தாத…” என்று முனகினாள். ஆனால் அவனது வேகத்தை பார்த்து பிரமித்து தான் போனாள்! இதற்காக அப்பா ஒரு நாள் முழுக்க அலைந்தது நினைவுக்கு வந்தது… ஸ்மார்ட் தான்…
கெளதம் அவனுடைய அட்வைஸ்களை ஆரம்பித்தான்!
“பாருடா எலிக்குட்டி… நானோ அர்ஜுனோ உன் கூட இருந்துட்டே இருக்க முடியாது… நீ உன் வால எல்லாம் சுருட்டிகிட்டு இங்க வேலை பார்க்க முடியும்னா பாரு இல்லைனா இப்போ நான் வேலைய முடிச்சுட்டு கிளம்பறப்போவே என்னோடவே வந்துடு தாயே… என்ன சொல்ற?”
“ம்ம்ம்… சரி…”
“எதுக்கு சரின்னு சொல்ற அபிதகுஜலாம்பா… கிளம்பறதுக்கா… அதானே… பார்த்தேன்… நீயாவது ஒரு இடத்துல அடங்கி வேலை செய்றதாவது!” அர்ஜுன் மறுபடியும் வம்பிழுக்க, அவனை பார்த்து முறைத்தவள்
“நான் எந்த வம்பையும் இழுக்க மாட்டேன்னு சொன்னேன்…” என்று கடுப்படித்துக்கொண்டே சொல்ல
கார் கல்பாதேவியை நெருங்கி கொண்டிருக்க அர்ஜுனிடம்
“சரி உன் சண்டைய அப்புறம் பார்க்கலாம்… கெளதம்… ஐயா சாமி… நீயாவது சொல்லு… கல்பாதேவில இறங்கறியா இல்ல… நரிமன் வரியா… அப்புறம் கார திருப்புன்னு கத்த கூடாது…”
இதை கேட்டு சிரித்த கெளதம்…
“டேய் எலிக்குட்டி… என்னடா ஆச்சு உனக்கு இன்னைக்கு… அர்ஜுன் உன்னை வாரிக்கிட்டே இருக்கான்… நீ சும்மாவே வர… இந்நேரம் கதாகாலட்ஷேபமே பண்ணி இருப்பியே… என்னாச்சு? ஏன் இப்படி வர? வாய தைச்சு வச்ச மாதிரி…” என்று கேட்கவும்… சிரித்த அர்ஜுன்…
“இன்னொரு முறை சொல்லுங்க…” ராகமாய் பாடினான்!
“எதடா…”
“இல்ல… வாய தைச்சு வச்சதா சொன்னியே… அத தான் மச்சி… ஏன் அபிதகுஜலாம்பா அப்படியா?” என்று கண்களில் சிரிப்போடு அவளை பார்த்து கேட்க,
அவனை பார்த்து முறைத்த முறைப்பில் அந்த கண்ணகி தோற்று விடுவாள், அவள் பார்வைக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்தால்… ஆனால் என்ன செய்வது? கடுப்பேற்றி கொண்டே இருக்கிறானே…
“கன்பார்ம்ட்… என்னடா ஆச்சு? தனியா இருக்க போறோம்னு பயமா இருக்கா என்ன? சொல்லுடா குட்டி…” கெளதம் மெய்யான வருத்தத்தில் கேட்க,
“இல்லண்ணா… அதெல்லாம் இல்ல… அதான் நீ எப்படியும் அடிக்கடி வருவியில்ல… சும்மா டையர்ட் தான்… ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்… நாளைக்கு வேற வேலைல ஜாயின் பண்ணனும்… எப்படி இடமோ? அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு…”
“அடடடா… எலி… இத பத்தி கூட கவலை படுவியா… அதான் அங்க ஒரு சூப்பர் பிகர் இருக்கே… அந்த சேர்மன்… பேசாம அவர கைக்குள்ள போட்டுக்கோ…” என்று அர்ஜுன் சொல்லி சிரிக்கவும்…
“அண்ணாஆஆஆஆ… என் பொறுமை பறந்துட்டு போகுது… உன் பிரெண்ட வாய மூட சொல்றியா…” கெளதமை பார்த்து பல்லை கடித்து கொண்டு சீறினாள்!
“ஓகே ஓகே பொறுமை…” என்று கெளதம் கூறவும் சமாதானமடைந்த அஞ்சலி அவனுக்கு மட்டுமே கேட்குமாறு
“அண்ணா… பிளைட் டிக்கெட் பணத்த எப்படி குடுக்கறது?”
“அதெல்லாம் நான் வேற வழில டேலி பண்ணிடுவேன் குட்டி… நீ கவலைபடாத… பணமா குடுத்தா வாங்க மாட்டான்டா… நான் பார்த்துக்கறேன்…” என்று கூறி விட்டு அவளை தட்டி குடுத்து விட்டு,
“சரிடா… நீங்க ரெண்டு பேரும் சண்டைய கண்டினியு பண்ணுங்க… நான் இங்க கல்பாதேவில இறங்கிக்கறேன்… குட்டி… உன் கிட்ட போன் இல்லையில்ல… அர்ஜுன் உன் கிட்ட ஏதாவது ஸ்பேர் சிம் இருக்கா… நான் என் போன்ல போட்டு குடுத்துடறேன்… அவசரத்துக்கு வேணும்ல?”
“ஸ்பேர் போனும் இருக்கு…” என்று தனது செல்பேசிகளில் ஒன்றை எடுக்க…
“ஏன் அண்ணா… உன் பிரெண்ட் என்ன செல் விக்கறாப்லையா? இத்தன செல்போன் வெச்சு இருக்காரு? அநியாயத்துக்கு ஒரு ஆளுக்கு நாலு போனா? ஏன் ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு ஒடறாரா?” என்று கேட்கவும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்…
“ம்ம்ம் அதை அவன் கிட்டேயே கேட்டுக்கோ…” சிரித்தவாறே சொல்லி விட்டு”சரிடா… அஞ்சுவ பத்தரமா ஹாஸ்டல்ல விட்ரு… இந்த பஸ் ஸ்டாப்ல இறங்கிக்கறேன்டா”என்று இறங்கி விட்டு
“அர்ஜுன் ஒரு நிமிஷம் இங்க வா…” என்று அழைக்கவும்
அர்ஜுன் இறங்கி பஸ் ஸ்டாப்பில் கொஞ்சம் தள்ளி சென்றான்.
“சொல்லுடா… என்ன சொல்லணும்…” என்று கேட்கவும்
“ஏன் அர்ஜுன்… அஞ்சுவும் உன்னை லவ் பண்றாளா? என்னடா பிரச்சனை?” என்று நேரடியாக கேட்கவும் பதில் கூற முடியாமல் தடுமாறினான் அர்ஜுன்!
“தெரியலடா… சின்ன சண்டை வந்தது… அதான் இப்படி உர்ர்ன்னு இருக்கா…”
“மச்சான் ஒன்ன மட்டும் புரிஞ்சுக்கோ… நீ நினைக்கிற மாதிரி ஈசியா என் தங்கச்சி லவ் பன்னற ஆள் கிடையாது… விளையாட்டு பிள்ளை மாதிரி இருந்தா கூட அவ கொஞ்சம் இதுல கறாரான ஆள் அர்ஜுன்… சப்போஸ் நீ சீரியஸா இல்லாட்டி இதோட விட்ரு மச்சி… அப்படி அவளுக்கும் பிடிச்சு இருந்தா வேணும்னா நான் சப்போர்ட் பண்ணுவேன்… ஆனா எங்க குடும்பத்தை பத்தி உனக்கு தெரியும்… அதுக்கு ஒரு தலைகுனிவ ஏற்படுத்தி விட்டுறாத அர்ஜுன்…” தெளிவாக கெளதம் சொல்லவும் சிறிது யோசித்த அர்ஜுன்…
“கெளதம்… நீயும் ஒன்ன புரிஞ்சுக்கணும்… என்னை பத்தி என்னை விட உனக்கு நல்லா தெரியும்… அந்த நம்பிக்கை இன்னும் இருக்குன்னு தான் நினைக்கிறேன்… இப்போவும் நான் மாறல… நான் பார்த்து ஆசைப்பட்ட முதல் பொண்ணு அஞ்சலி தான்… மனசுக்குள்ள நிறைய உறுத்தல் இருக்கு தான்… ஆனா அதையெல்லாம் நானே க்ளியர் பண்ணிடுவேன்… சின்ன பொண்ணு தான… ஆனா என்னைக்கும் யாருக்கும் தலைகுனிவ ஏற்படுத்த மாட்டேன்டா… நீ நம்பலாம்… உன் குடும்பம் வேற என் குடும்பம் வேற இல்ல கெளதம்… ஐ மீன் இட்…” என்று சொல்லவும் கெளதம் அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்!
“ஓகே… உன் கிட்ட தான் வேலைக்கு வர போறா… ரொம்ப போட்டு வறுத்துடாதடாதீங்க மாப்ள சார்… என் கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன், … அதுல ஆனந்த கண்ணீர் கூட வர கூடாது… ஓகே வா மாப்பிள சார்…” என்று அவனை வாரவும்
“டேய்… ச்சீ… போடா…” என்று அவனது வயிற்றில் குத்தி வெட்கமாக சிரித்தான்…
“ஹய்யோ… வெட்கபடுறியா… ஹையோ… ச்சே ஆம்பிளைங்க வெட்கபட்டா கூட அழகா தாண்டா இருக்கு… பட்டுகிட்டே இரு… நான் கிளம்பறேன்…” என்றவனுக்கு ஒரு அடி குடுத்து விட்டு காரை நோக்கி வந்தான்!
அஞ்சலி காரின் பின் பக்கத்திலேயே அமர்ந்து இருப்பதை பார்த்தவன்
“ஹலோ… நான் என்ன டிரைவரா… ஒழுங்கா முன்னால வந்து உட்கார தெரியாதோ?” என்று அஞ்சலியை கடிக்க
“ம்ம்ம்… இந்த அண்ணன் எதுக்கு தான் இந்த பிசாசு கிட்ட விட்டுட்டு போனானோ? ச்சே…” என்று முனகி கொண்டே முன்னர் வந்தாலும் அவள் மனதின் ஒரு புறம் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்ததென்னவோ உண்மை!
அர்ஜுனின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டே வந்தவளை பார்த்து கொண்டே வந்தவன்,
“இப்போ ஒரு நாலு செட் போதுமா அஞ்சலி?” என்று கேட்க
“என்னது?” என்று புரியாமல் கேட்டாள்…
“அதான் ட்ரெயின்லையே டிரஸ் எல்லாத்தையும் விட்டுட்டியே… அதான் கேட்டேன்…”
ச்சே… அதை பற்றி நினைக்கவே இல்லையே… நாளைக்கு வேலையில் சேர வேண்டுமே… என்று நினைத்தவள்
“ம்ம்ம்… போதும்…” என்று சொல்லி விட்டு தலையை குனிந்து கொண்டாள்!
ஓரமாக துணி கடையில் நிறுத்தியவன்… பார்த்து பார்த்து நான்கு செட் துணிகளும் அதற்கு தேவையான உள்ளாடைகளையும் வாங்க கூறி விட்டு செல்பேசியை எடுத்து அதில் நகாசு வேலை பார்த்து குடுத்தான்…
“ரொம்ப காஸ்ட்லி போன் மாதிரி தெரியுது அர்ஜுன் எனக்கு வேண்டாம்… என் கிட்ட கார்ட் இருக்கு… செல்போன் கடைல நிறுத்துங்க நான் வாங்கிக்கறேன்… ஸ்பேர் சிம் மட்டும் போதும்…”
அவளை பார்த்து முறைத்த அர்ஜுன்…
“வாய மூடிகிட்டு ஒழுங்கா செல்போன எடுத்துட்டு போ… தேவையில்லாம பேசி என்னை டென்ஷன் பண்ணிட்டு அப்புறம் அத பண்ணேன் இத பண்ணேன்னு முகத்த தூக்கி வெச்சுட்டு இருப்ப…”
என்று அவன் கூறவும் அவள் முகம் சட்டென சிவக்க தலை குனிந்து கொண்டாள்!
துணியை வாங்க தானே கார்ட் குடுக்கிறேன் என்று அவள் பிடிவாதம் பிடிக்க… ஆனால் அவனது பிடிவாதமே வெற்றி பெற்றது!
என்ன இருந்தாலும் அவனிடம் எல்லாவற்றையும் சும்மாவே பெற்று கொண்டிருப்பது அவளுக்கு பெரிய இழுக்காக இருந்தது! போகும் போது கொஞ்சம் பேசி பணத்தை வாங்கி கொள்ள சொல்ல வேண்டும்… இவையெல்லாம் உரிமையாக தான் வாங்கி கொள்ளும் காலம் வரும் போது தான் வாங்கி கொள்வதாக கூற வேண்டும்… அஞ்சலிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய…
“அர்ஜுன்… மொத்த செலவு எவ்வளவு… சொல்லுங்க…”
அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்
“ஏன் எதுக்கு கேக்கற?”
“ம்ம்ம்… கொடுக்கத்தான்… சும்மாவே எல்லாத்தையும் வாங்கி அடுக்கிக்குவாங்களா?”
“ஓ… ஆமாம்ல… உன் கிட்ட தான் நிறைய பணம் இருக்கே… அதானே… அதையெல்லாம் நீயே வெச்சுக்கோ எலி…”
“ஏன் தேவை இல்லாம பேசறீங்க… எவ்வளவுன்னு சொல்லுங்க?” என்று கறாராக கேட்கவும்…
“சொல்லலைன்னா என்ன பண்ணுவ? ஏன் நான் வாங்கி தர கூடாதா?”
அஞ்சலியின் அவசர புத்தி அப்போதும் வேலை செய்ய, என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் அவன் கேட்டதிற்கு பதில் குடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அவள் அப்போது வாயை விட்டாள்!
“உங்களுக்கு வாங்கி தர என்ன உரிமை இருக்கு அர்ஜுன்? ஏன் என் கிட்ட பணம் இல்லையா? கண்டவங்க கிட்ட எல்லாம் நான் எல்லாத்தையும் வாங்க முடியாது…”
அர்ஜுனின் கோபம் தலைக்கேறியது… கண்டவன் என்று ஒரு சொல்லில் அவனது பொறுமை எல்லாம் பறந்து போனது… காரை ஆள் அரவமில்லாத இடத்தில் நிறுத்தினான்… மிக மிக கோபத்தோடு இருந்தவன், அவளை பார்த்து
“என்ன சொன்ன… கண்டவனா? யாரு… நானா? எங்க… உன் மனசுல கைய்ய வெச்சு சொல்லு…”
அவள் அவனின் கோபத்தை பார்த்து உள்ளுக்குள் குளிரெடுக்க
“அர்ஜுன்… எனக்கு லேட் ஆச்சு… ஹாஸ்டல் போகணும்… நீங்க கொண்டு போய் விடரீங்களா… இல்ல நானே போய்க்கவா?” என்று திக்கி திணறி கேட்க
“இதுக்கு முதல்ல பதில சொல்லு அஞ்சலி… நான் கண்டவனா?”
“அர்ஜுன்… நடு ரோடுல நின்னுகிட்டு என்ன பேச்சுங்க இது… நான் இங்க வேலை செய்ய வந்து இருக்கேன்… எங்க அப்பா என்னை நம்பி அனுப்பி வெச்சு இருக்காங்க… அதை மட்டும் தான் பார்க்க போறேன்… நான் யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்ல…”
அஞ்சலி, தான் நினைத்ததற்கு மாறாக பேச்சு வந்து விழ… அர்ஜுனுக்கு கோபம் தலைக்கேறி அதை முழுக்க ஆக்சிலேட்டரில் காட்டினான்… கார் பறந்தது… ஹாஸ்டலில் கொண்டு போய் விட்டவன்… அவளை சேர்ப்பதற்காக லோக்கல் கார்டியனாக அவனே கையெழுத்திட்டு அவளை சேர்த்து விட்டு திரும்பி கூட பார்க்காமல் அவனது அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தான்!
******
“சசி… என் செல்போன் இங்க வெச்சு இருந்தேன்… பார்த்தீங்களா?” என்று மேகா கேட்க
“இல்லடா… தேடிப்பாரு…” என்றான் சசி
“காணோம்ப்பா…” என்று தேடி கொண்டிருக்கும் அவளை பார்த்து உள்ளுக்குள் பரிதாபம் தோன்றியது… ஆனாலும் அந்த கணபதியை நினைக்கும் போது அந்த பரிதாபம் எல்லாம் மாறி பழிவாங்குவது ஒன்றே குறியாக பட்டது!
மாற்று ட்ரெயின் வந்து அதில் மாறி ஏறி மும்பை வந்து சேர்வதற்கு மாலை ஆகி விட்டது! டாக்ஸி பிடித்து கொண்டு சிறிய சந்தில் ஒரு சிறு வீட்டை ஒரு மாடியில் காட்டியவனை பார்த்து மேகாவுக்கு பயபந்து உருண்டது…
கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ?
“இது உங்க வீடா சசி?” உள்ளுக்குள் கலக்கத்தோடு கேட்க
“இல்ல… இது என் பிரெண்ட் வீடு…”
“அம்மா அப்பா இருப்பாங்கன்னு சொன்னீங்களே சசி!” தடுமாறி கொண்டு கேட்க
“இல்ல… கொஞ்சம் ப்ராப்ளம்… நீ போய் ரெஸ்ட் எடு… சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வரேன்…” என்று போனவன் கையில் இரு டம்ளர்கள்… அதில் பால் இருந்தது…
“முதல் முதல்ல என் கூட மும்பை வந்து இருக்க… பால் சாப்பிடு மேகி…” என்று அவளுக்கு ஒன்றை குடுத்து விட்டு அவனும் ஒன்று குடித்தான்…
“பால் நல்லா இருக்கா? சாப்பிட என்னடா வேணும்?” என்று ஆதரவாய் கேட்டான்… ஆனால் அவன் குரலில் இருந்த ஆதரவு மேகாவை தட்டி குடுக்கவில்லை… அவளது பயம் தான் அதிகமானது…
“ஒரு நிமிஷம் சசி சாப்பிடறது அப்புறம் இருக்கட்டும்… உங்க அம்மா அப்பா கூப்பிடதுனாலதான் நானே தைர்யமா வந்தேன்ப்பா…” என்றாள் குரல் இடற
அவள் குடித்து முடிக்கும் வரை பார்த்து விட்டு பின்னர் அவளை பார்த்து முறைத்து கொண்டே
“இப்போதைக்கு சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடு மேகா… அப்புறமா பேசலாம்…”
அவன் கூறுவது எங்கேயோ இடிப்பது போல இருக்கவே…
“சசி… எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க சசி… எனக்கு என்னமோ பயமா இருக்கு…” குரல் கமற கூறினாள்
அவளிடம் ஒன்றும் பேசாமல் செல்பேசியை எடுத்தான்…
அது அவளது செல்பேசி…
“சசி… போன காணோம்னு சொன்னீங்க…” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே நம்பரை அழுத்தி பேச தொடங்கினான்
“ஹலோ… என்ன மிஸ்டர் கணபதி… முடிவு பண்ணீட்டீங்களா? உங்க பொண்ண முழுசா அனுப்பட்டா இல்ல… பாக் பண்ணி அனுப்பட்டா?”
“தயவு செஞ்சு என் பொண்ண விட்டுடுப்பா… உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்…” அந்த பக்கம் கணபதி நடுங்கும் குரலில் கதறினார்!
“உங்க பணம் என் அக்காவ திருப்பி தந்திடுமா கணபதி? இல்ல… செத்து போன எங்க அப்பா அம்மா தான் திரும்ப வந்திடுவாங்களா? அவங்களை திருப்பி தாங்க… உங்க பொண்ணை அலுங்காம திருப்பி தரேன்…”
இதை அவன் பேசி கொண்டிருக்கும் போதே மேகாவுக்கு இருட்டி கொண்டு வந்தது… கால்கள் தரையில் படாமல் தள்ளாடியது… பூமி அவளை விழுங்கி விட கூடாதா? என்று நினைத்து கொண்டே மயங்கி சரிந்தாள்!
விதியின் கைகளில் சிக்கிய பறவை!
என்ன நடக்கும்?
அத்தியாயம் எட்டு
பெற்றவர்கள் செய்தவினை பிள்ளைகளை சேருமடி!
முற்பகலின் பாவங்களோ பிற்பகலில் பேசுதடி!
சேர்த்தபெரு பாவமூட்டை காவு ஒன்று கேட்குதடி!
வந்துவிட்ட காலதேவன் வினைமுடிக்காமற் போவானோ?
நடந்த அநியாயத்திற்கு அவளா காரணம்? இல்லையே! அதில் சிறு பங்கு கூட அவளுக்கு இல்லையே! இதுதான் விதி என்பதா? அப்படியே என்றாலும் தன்னை இப்படி அழைத்து வந்தது எப்படி நியாயமாகும்? அதுவும் அன்புக்கு ஏங்கிய தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி… ஆம்… ஏமாற்றி… ஏன் ஏமாற்றினாய் சசி… உன்னை உண்மையாக காதலித்தேனே! என் உயிரே நீ தான் என நினைத்தேனே! கடவுளே ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை? நான் உன்னை பொன் கேட்டேனா? இல்லை பொருள் கேட்டேனா? என் மேலும் அன்பு செலுத்தும் ஒரு உறவை கொடு என்று தானே கேட்டேன்! அதற்கு கூட தகுதி இல்லாதவளா நான்? இறைவா! உனக்கு கண் என்பதே இல்லையா? எல்லோரும் சொல்வது போல நீ வெறும் கல்லா? கை விட்டு விட்டாயே!
தலை மிகவும் பாரமாக இருந்தது… மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது… திரும்ப படுத்தாள்! பகலா இரவா? புரியாத நிலை… ! முதலில் இது என்ன இடம் என்பதே புரியாமல் எழுந்தவளுக்கு சசி பேசியது நடந்து கொண்ட முறை எல்லாம் நினைவுக்கு வர கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது!
சுற்றிலும் பார்த்தாள்! சிறிய அறை மெலிதான வெளிச்சம் மட்டுமே கண்ணுக்கு பட்டது! தான் இருக்கும் நிலையின் விபரீதம் புரிந்தது! என்ன வேண்டுமானாலும் நடந்திருக்க கூடுமே? அவசரமாக தன்னை ஆராய்ந்தவள் தன்னிடம் ஒரு மாற்றமும் இல்லாததை என்னி பெருமூச்சு விட்டாலும் மனதின் ஓரம் பயம் கவ்வி பிடித்தது! சசியிடம் தான் தவற விட்ட சில கணங்கள் நினைவுக்கு வந்தது! மற்றவர்களுடன் இயல்பாக பழகி இருந்தால் தான் சசியிடம் ஏமாந்து இருக்கமாட்டமோ? காரணங்களை ஆராய தொடங்கியது மனது! சும்மா எவ்வளவு நேரம் இந்த இருட்டறையில் படுத்திருக்க முடியும்? சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள்… இன்னும் தலை சுற்றி கொண்டிருந்தது!
கதவு திறக்கும் ஓசை கேட்டது… வந்தது சசி!
“ஏன் இப்படி பண்ணீங்க சசி?”
உணர்ச்சியை துடைத்த முகம்… ஒன்றும் பதில் கூறாமல் உணவு பொட்டலத்தை குடுத்தான்!
“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே சசி…”
அதற்கும் ஒன்றும் கூறாமல் கதவை சாத்தி விட்டு வெளியே போக முனைய
“வேணாம் சசி… ஐ ப்ராமிஸ்… தப்பிச்சு போக மாட்டேன்… எனக்கு உங்களை விட்டா போகவும் இடம் கிடையாதுப்பா…” என்று சொல்லி விட்டு கண்கள் கலங்க குரல் கமற
“இன்னமும் உங்க மேல நம்பிக்கை இருக்கு சசி… என் சசி கண்டிப்பா தப்பு பண்ண மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்… கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டீங்க…”
அவன் கண்களில் மின்னல்…
ஒன்றுமே பேசாமல் அவளருகே வந்தவன்… மெல்ல கைகளை பிடித்து அவனது கன்னத்தில் வைத்து கொண்டு அவள் கண்களை பார்த்தான்! எத்தகைய மனது! இதற்கு எனக்கு குடுத்து வைக்கவில்லையே… கண்களில் நீர் கோர்க்க அவளை பார்த்தவன்… அடுத்த பிறவியிலாவது எனை கணபதியின் மகளாக இல்லாமல் சந்திப்பாயா என் தேவதை பெண்ணே? என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறாய்? வேண்டாம் பெண்ணே வேண்டாம்… உனது நம்பிக்கை எனக்கு வேண்டாம்… உனது பாசம் எனக்கு வேண்டாம்… என்னை பலவீனப்படுத்தாதே கண்மணியே… உனது இந்த பூமுகத்தை பார்க்கும் போது நான் பழிவாங்க வந்தவன் என்பது மறந்து விடுகிறதே… வேண்டாம்… வேண்டாம்… மனதை கல்லாக்கு கடவுளே… எனக்கு அந்த சக்தி கொடு!
பெருமூச்சு ஒன்றை விட்டவன் அவள் கையை விட்டுவிட்டு
“சாப்பிடு…” என்று ஒற்றை சொல்லாய் சொல்லி விட்டு வெளியே போக முனைந்தான்!
“சசி… நான் என்ன தப்பு செஞ்சேன்?”
அவளை கண்ணோடு கண்ணாக பார்த்து
“கணபதிக்கு மகளா பிறந்து இருக்கியே… அதான் நீ செஞ்ச ஒரே தப்பு…”
“அது நான் பண்ண தப்பில்லையே சசி…” கண்ணில் வலியோடு நீர் திரள…
“உங்களை ஆசை பட்டது தப்பா? உங்களை உயிரா நினைச்சது தப்பா? யாருமே வேணாம் இந்த உலகத்துல நீங்க மட்டுமே போதும்ன்னு நினைச்சது தப்பா சசி? சொல்லுங்க சசி சொல்லுங்க… வேற எந்த முறையையாச்சும் உபயோகிச்சு என் அப்பாவ பழி வாங்கி இருக்க கூடாதா? அதுக்கு பாவப்பட்ட என்னோட காதல் தானா கிடச்சுது சசி? சொல்லுங்க…” அவனது சட்டையை பிடித்து கொண்டு கதறினாள்!
அவனால் பதில் கூற முடியவில்லை… முனையவில்லை!
“இப்போவும் உங்களை என்னால வெறுக்க முடியலையே சசி… இதெல்லாம் பொய்ன்னு சொல்லிருங்கப்பா… ப்ளீஸ்… இல்ல இதெல்லாம் கனவுல தான் நடக்குதுன்னு சொல்லிருங்க… சசி… ப்ளீஸ்… சொல்லிருங்கப்பா…” அவளது கதறல் நின்றபாடில்லை…
“ஏன் சசி… நீங்க என்னை லவ் பண்ணவே இல்லையா? நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் பொய்யா? அத்தனையும் நடிப்பா? அதுல ஒரு சதவிதம் கூட உண்மை இல்லையா? ஏன் சசி? ஏன்? நீங்க இங்க கடத்திட்டு தான் வந்திருக்கீங்கங்கறத கூட என்னால புரிஞ்சுக்க முடியுது சசி… ஆனா என்னை லவ் பண்ணவே இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் சசி… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… என்னால தாங்க முடிலப்பா…” ஆற்றவும் முடியாமல் தேற்றவும் முடியாமல் கதறி கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க நெஞ்சம் வெடித்து விடும் போல இருந்தது!
அவளது கைகளை வலுக்காட்டாயமாக பிரித்து கதவை அறைந்து சாத்திவிட்டு வந்தான்… அறையின் மூலையில் முட்டிகாலிட்டு அமர்ந்தவன் முகத்தை மூடி கொண்டு கண்ணீரில் கரைந்தான்… எங்கே வாய் விட்டு அழுதால் அவளுக்கு கேட்டுவிடுமோ என்று மெளனமாக அவன் அவன் வடித்த கண்ணீர் அவனது நெஞ்சை நனைத்தது! ரயில் விபத்துக்குள்ளான போதே மேகாவின் தவிப்பை பார்த்து உறைந்து நின்றவன்… இப்போது அவளின் கதறலையும் அவள் தன் மேல் கொண்டிருந்த காதலையும் அது அவளுக்கு தந்த நம்பிக்கையும் பார்த்து உடைந்து போனான்! ஏன் இவ்வளவு காதலை என் மேல் வைத்தாய் பெண்ணே. ? நான் அதற்கு சிறிதும் அருகதையற்றவன்! உன்னை ஏமாற்றி அழைத்து வந்து பலிகுடுக்க வந்தவன்! இந்த காதலை பெரும் பாக்கியம் எனக்கு இருக்க கூடாதா? நான் காதலிக்கவே இல்லையென எப்படி சொல்வேன் மேகா? ஆரம்பத்தில் நடித்த என்னையும் உன் காதலால் வசமாக்கி விட்டாயே… கடவுளே… எனக்கு இந்த ஒரு வாயிப்பை தர கூடாதா? எனக்கு வேறு எதுவும் வேண்டாமே… ஆனால் எப்படி? அதுதான் முடியாத ஒன்றாயிற்றே… எதிர்காலமே இல்லாத காதல் வந்து தன்னை பலவீனப்படுத்த விட கூடாது… தன்னை நம்பி களம் இறங்கிய தோழர்களை காக்கவாவது தன் மனம் பலவீனமடைய கூடாது… மனம் சிறிது தெளிவாக… முகத்தை அழுந்த துடைத்து விட்டு எழுந்தான்!
அவனது செல்பேசி அழைத்தது!
“சொல்லு விஷால்…”
“இங்க நிலவரம் நமக்கு ரொம்ப திருப்தி சசி… எல்லோரும் ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க… இந்த நேரம் தான் ஆப்பரேஷனுக்கு கரெக்டான நேரம்ப்பா… என்ன சொல்ற நீ?”
“பில்டிங்ல நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி எமர்ஜென்சி எக்சிட ஓபன் பண்ணி வைக்க சொல்லிட்டியா விஷால்?”
“நம்மாள் தயாரா இருக்கான்…”
“மொத்தம்மா மூணு பில்டிங் இருக்கற காம்ப்ளெக்ஸ் இன்னிக்கு முடிஞ்சிடனும்… நாளைக்கு தலைப்பு செய்தி இதுதான்…”
“டன் சசி… ராகினியும் பத்தரமா வந்துட்டாளாடா?”
“ம்ம்ம்… ஷி இஸ் சேப்! நாளான்னிக்கு அவளோட பேட்டி வெளி வரணும் விஷால்… சிடியோட… சுரேஷ ரெடியா இருக்க சொல்லு…”
“ஓகே சசி… ஓகே டேக் கேர்டா… மத்தத அப்புறம் பேசலாம்…”
“ஓகே விஷால்… பார்த்துக்கோ…”
செல்பேசியை வைத்து விட்டு நிமிர்ந்தான்! மேகா அவன் முன்னர் நின்று கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்! எப்போது வந்தாள் இவள்?
“என்ன பண்றீங்க சசி?”
ஒன்றும் பேசாமல் அவனது வேலையை பார்க்க முயல, வலுக்கட்டாயமாக அவனை தன் புறம் திருப்பி
“சொல்லுங்க சசி…” என்று கத்தவும்
அவளது கைகளை மெதுவாக விடுவித்தவன்… நிதானமாக அவளை பார்த்து தன்னை கல்லாக்கி கொண்டு கூறினான்…
“கணபதியோட தொழில் சாம்ராஜயத்துல இருந்து ஒவ்வொரு செங்கல்லா உருவறோம்… எண்ணி ஒரு வாரத்துல அவன் நடு தெருவுக்கு வர போறான்! ஒவ்வொரு இடத்திலும் அடி வாங்க போறான்… சிகரம் வெச்ச மாதிரி தன் பொண்ணும் நாசமா போய்ட்டாங்கறத அவன் கண்ணால பார்க்கணும்… அந்த அதிர்ச்சி வைத்தியத்த தான் அவனுக்கு நான் குடுக்க போறேன்… போதுமா?”
விக்கித்து நின்றாள் மேகா!
******
“நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே”
உற்சாகமாய் பாடி கொண்டு அலுவலகம் செல்ல ரெடியாகி கொண்டிருந்தாள் அஞ்சலி. நிஜமாகவே அவளது மனம் பறந்து கொண்டு தான் இருந்தது… காரணம் வேறு யார்? திருவாளர் அர்ஜுன் தான்!
முதல் நாள் அவன் தன்னிடம் வெடித்து விட்டு சென்றது ஏனோ தனக்கு வருத்தத்தை தராமல் சந்தோஷத்தையே அளித்தது! ஏன் அவன் இவ்வளவு கோபப்பட வேண்டும்? தான் ஒட்டாமல் பேசியதால் தானே! மனதில் ஓரத்தில் சிறு பொறியாக ஆரம்பித்த சந்தேகம் செயின் ரியாக்ஷன் ஆகி மனம் முழுக்க வியாபித்து விண்ணில் பறந்த அக்னி ஏவுகணையை காட்டிலும் அதிக உயரத்தில் பறக்க செய்தது… இந்த மாதிரி ஓசியில் பறப்பதில் மல்லையா தோற்று விடுவார் போல இருக்கிறதே!
அவன் குடுத்த செல்பேசியை தொட்டு பார்த்தாள்… அவன் தீண்டியது அல்லவா… அதை தீண்டும் போதே உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடியது… அந்த செல்பேசியை தொட்டு தடவி கொண்டே இருந்தாள் அஞ்சலி! கையில் வைத்து அழகு பார்த்து பார்த்தே தேய்த்து விடுவாள் போல இருக்கிறதே… எப்படியடா இந்த அளவு எனக்கு பைத்தியம் பிடிக்க வைத்தாய்?
இன்று அவனும் அலுவலகம் வருவான் அல்லவா… நினைக்கவே தித்திப்பாக இருக்கிறதே! அவனுடன் இணைந்து வேலை செய்வோமா… தினம் அவனது முகம் பார்த்து கொண்டே இருக்க முடியுமா… மனம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது… ஆனால் அவன் என்ன போஸ்டிங் என்று இப்போது வரை கேட்காத தன்னை தானே கடிந்து கொண்டாள்!
“எப்போதடா பார்ப்பேன் உனது முகத்தை?” என்று துள்ளி திரிந்த மனதை கடிவாளமிட்டு அடக்கினாள்!
“ஹேய்… இங்க பாரு ரொம்ப அலையாத… ஒழுங்கா கொஞ்சமாவது அடக்கமா இருக்கற வழிய பாரு…” என்று ஒரு புறம் மூளை அடக்கினாலும்…
“அதெப்படி அடக்கமா இருக்கறது? எத பத்தியும் கவலை படமாட்டேன்… இன்னிக்கு அர்ஜுன் கிட்ட சாரி கேக்க போறேன்ல… அப்புறம்… அப்புறம்… அப்புறம்…” என்று குதியாட்டம் போட்டது மனது!
“நீ பேசறதெல்லாம் பேசுவ… லூஸ் மாதிரி… அப்புறம் சாரி கேப்பியா? இது உனக்கே ஓவரா இல்லையா அஞ்சலி… இதுக்கு பேசாம ஒழுங்கா முதல்லயே வாய அடக்குறதுக்கு என்ன?” என்று அறிவார்த்தமாக கேட்டது மூளை!
“என்ன செய்றது… அப்படியே பழகிடுச்சு… கண்டிப்பா ஆயிரம் தடவை சாரி கேப்பேன்… ஓகே வா?” என்று மூளையை கேட்டது மனது…
சாரி அர்ஜுன் சாரி அர்ஜுன் சாரி அர்ஜுன் சாரி அர்ஜுன்… என்று ஆயிரம் முறையாவது மனதிற்குள் ஜெபித்திருப்பாள் அஞ்சலி! எப்போதடா மணி ஒன்பதாகும் என்று காத்திருந்து அலுவலகத்திற்கு விரைந்தாள் அஞ்சலி!
கான்பரன்ஸ் ஹால்
ட்ரைனிங் வந்திருந்த அனைவருக்கும் கான்பரன்ஸ் ஹாலில் தான் அறிமுக படலம்! அலுவலகம் பார்த்தே பிரமித்து போயிருந்தாள் அஞ்சலி… நரிமன் பாயிண்டின் மையமான இடத்தில் மிக பெரியதாக இருபது மாடி கட்டிடமாக அழகுற அமைந்து இருந்த அந்த அலுவலகத்தை கண்டு… நான் இங்கே வேலை பார்க்க போகிறேனா? என்று தன்னை கிள்ளி பார்த்து கொண்டாள்! அலுவலகத்தின் பிரமாண்டமும் அழகும் அள்ளி கொண்டு போனது! மிக மிக பெருமையாக தன்னை உணர்ந்தாள்!
மொத்தம் ஐம்பது பேர் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்! பத்து வெளிநாட்டினர் உட்பட… அனைவருக்கும் இங்கே மும்பை தலைமை அலுவகத்தில் பயிற்சி குடுத்து ஒவ்வொரு கிளைக்கும் பணியமர்த்த திட்டம்… முன்னரே ஓசோன் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாள் அஞ்சலி… அகில இந்திய அளவில் டாப் ட்வென்டியில் இருக்கும் தொழிற்குழுமம் அல்லவா! அவர்களின் தொழில் முறை பற்றியும் வெவ்வேறு தொழில்களில் அவர்களது குடும்பம் ஈடுபட்டு இருப்பது பற்றியும் தெளிவாகவே இருந்தாள்… ஏதாவது கேள்வி எழுந்தால் சமாளிக்க வேண்டுமே… பாவம் அவள் தெரிந்து வைத்து கொள்ளாத ஒன்றும் இருக்கிறது என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே!
மீட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தங்களை பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டிருந்தனர்… அது பார்மலான அறிமுகம் போல் இல்லாமல் சாதாரண கலந்துரையாடலாக அமைந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த கம்பெனியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு அந்த இளரத்தத்துடன் கலந்துரையாடியது எல்லோருடைய தயக்கத்தையும் போக்கும் விதமாக அமைந்தது. அர்ஜுன் இருக்கிறானா என்று கண்கள் தேடி கொண்டே இருக்க…
பக்கத்தில் அமர்ந்து இருந்த இருந்தவர்களோடு நிமிடத்தில் பழகி விட்ட அஞ்சலிக்கு அந்த இயல்பான சூழ்நிலை மிக பிடித்து போனது! அதுவும் நான்கு பேர் தமிழர்களாக சேர்ந்து அமர்ந்து சுவாரசியமாக விவாதிக்க தொடங்கிய போது ஆர்வமாக பங்கெடுத்துகொண்டாள்! பக்கத்தில் அமர்ந்து இருந்த,
“ஹாய்… ஐம் ப்ரீதிகா… நீங்க?”
“ஹாய் ஐம் ரிஷி… நீங்க?”
“ஐம் அஞ்சலி… !”
“நைஸ் டு மீட் யு அஞ்சலி அண்ட் ப்ரீதிகா… வுட் யு மைன்ட் ஜாயினிங் மீ வித் லஞ்ச் யெங் லேடீஸ்? ”
“நோ ப்ராப்ளம் ரிஷி…” என்று இருவரும் சொல்ல
“ஓகே வீ ஆர் பிரெண்ட்ஸ்…” என்று கை குடுக்க
“எஸ்… வீ ஆர் பிரெண்ட்ஸ்…” என்று அஞ்சலியும் கை குடுக்க அதே நேரத்தில் அறிவிப்பு வந்தது! பலத்த கைதட்டலுக்கு இடையில்
“ஐ டேக் தி ப்ரிவிலேட்ஜ் ஆப் வெல்கமிங் அவர் பிலவ்ட் ஜேஎம்டி அண்ட் சிஎப்ஓ ஆப் விக்டரி க்ரூப்ஸ், சிஈஓ ஆப் ஓசோன்… மிஸ்டர் அர்ஜுன் வானமாமலை! வெல்கம் சார்… !”
வெகு நேர்த்தியாக அணிந்த உடையோடு ரிம்லஸ் கண்ணாடியில் கம்பீரமாக அனைவரின் முகமன்களை ஏற்று கொண்டு வந்தவன்… வேறு யார்? சாட்சாத் நம்ம அர்ஜுன் தான்!
“அர்ஜுன்ன்னன்…” அவளையறியாமல் உதடுகள் முணுமுணுத்தன!
அஞ்சலியின் காலின் கீழ் இருந்த பூமி நழுவியது!
******
“இந்த இடத்துல கலர் கான்ட்ராஸ்ட் டெப்த் அதிகம் பண்ணுங்க…” கூறி கொண்டிருந்தவன் கெளதம்! எடுத்த விளம்பர படத்தை ரஷ் போட்டு பார்த்து எடிட் செய்து கொண்டிருந்தான்! மிக திருப்தியாக வந்திருந்தது!
“சி ஜி தான் வர்கீஸ் கொஞ்சம் இடிக்குது… ஆனாலும் ரொம்ப அதிகம் இந்த AXL அனிமேஷன்ல… ஆனா என்ன இவங்க குவாலிட்டிக்காக பொறுத்துக்க வேண்டி இருக்கு…”
“ஆமா கெளதம்… இப்போ முன்னனில இருக்கற கம்பெனி… அவங்க சொல்றதுதான் ரேட்பா…”
மிக தீவிரமாக அவனது விளம்பரபடத்தை பற்றி விவாதித்து கொண்டிருந்தான் கெளதம்!
“ஹேய்… வர்கீஸ்… உனக்கு ஒன்னு தெரியுமா? நமக்கு ஒரு பெரிய ஆர்டர் ஒன்னு கிடைச்சு இருக்கு… யாரு தெரியுமா?”
“ஹேய் யாரு கெளதம்… சீக்கிரம் சொல்லு…”
“கணபதி ஸ்டோர்ஸ்… சென்னைல… மோஸ்ட் ஹப்பெனிங் ஆளுங்க வர்கீஸ்…”
“தெரியும்… தெரியும்… மிஸ்டர் கணபதி தானே… அவர் முதல்ல எந்த நடிகைய போடறதுன்னு டிசைட் பண்ணிட்டு தானே அக்ரிமென்டே போடுவார்… உன் கிட்டயும் கண்டிஷன் போட்டுட்டாரா?”
“ஹஹா… இன்னும் இல்ல… நாளைக்கு சென்னை போறேன் வர்கீஸ்… போனாத்தான் தெரியும்…” என்று சாதாரணமாக கூற
“அந்த ஆள் சரியான வுமனைசெர் கெளதம்… படியாத பொண்ணுங்களை கூட போர்ஸ் பண்ணி காரியத்த முடிக்கற ஆளப்பா… உன்னோட குணத்துக்கு ஒத்து வருமான்னு பார்த்துக்கோ…” வர்கீஸ் அறிவுரை கூறினான்!
“அவர் எப்படியோ போகட்டும்ப்பா… நமக்கு தேவை வியாபாரம்… அவ்ளோதானப்பா… இதெல்லாம் எதிர்பார்க்காம இந்த பீல்டுக்கு வரலியே… பார்க்கலாம்…”
மனம் கொஞ்சம் சுனங்கியது… ம்ம்ம்… என்ன செய்வது… முன்னேறவேண்டும் என்றால் சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் போக வேண்டியுள்ளதே!
“முதல்ல அந்த ஆள் கிட்ட வேலை செஞ்சவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க கெளதம்… நடிகைல ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள பிடிச்சுடாத… கொஞ்சம் தாராளமான ஆளையே செலக்ட் பண்ணு… அந்த ஆள் கிட்ட அந்த விஷயத்துல முறைச்சுகிட்டா கடைசில பணத்த குடுக்காம இழுத்தடிச்சுடுவான் கெளதம்… ஜாக்கிரதை… பேசாம இப்போ இருக்கற பொண்ணையே போட்டுடேன்… செட்டில்மென்ட் ஈசியா கிடைச்சுடும்… அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்பா!” என்று சொல்லிவிட்டு கண்ணடிக்க அவனுக்கு ஒரு அடி வைத்து விட்டு வெளியே வந்தவனின் செல்பேசி அழைத்தது!
அஞ்சலிதான் அழைத்து இருந்தாள்!
“ஏன்ணா… நீயும் மறைச்சுட்ட இல்ல…” எடுத்த எடுப்பிலேயே இப்படி கேட்டபோது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை!
“என்னடா எலி… ஒன்னும் புரியல…”
“அர்ஜுன் தான் இங்க ஜேஎம்டி ன்னு உனக்கு தெரியுமா?”
“ம்ம்ம்… தெரியுமே… ஏன்டா சின்ன வயசுல இருந்து பழகறோம்… இது தெரியாதா?”
“அப்புறம் ஏன் ட்ரெயின்ல சொல்லல?” குரலில் வலி மிகுந்து இருந்தது!
“சும்மா விளையான்டான்டா… நீ வேற கிண்டல் பண்ணுனியா அத வெச்சு என்னை சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்… ஏன் குட்டி… எதாச்சும் ரொம்ப கிண்டல் பண்றானா?”
“இல்லண்ணா… சரி வைச்சுடறேன்? ”
செல்பேசியை வைத்தபோது மனதில் வலி மிகுந்து இருந்தது… கிண்டல் செய்தால் கூட பரவால்லையே… அவள் புறம் திரும்பி கூட பாராமல் அமர்ந்து இருந்தானே… தான் நினைத்து வந்தது என்ன? இங்கே நடப்பது என்ன? அவன் இவ்வளவு பெரிய ஆள் என்பது தெரியாமல்… ச்சே… வேண்டாம்… எதையும் நினைக்க வேண்டாம்… என்னை பொறுத்தவரை அவன் என்னுடன் வந்த சக ரயில்பயணி… அதற்கும் மேல் ஒன்றுமில்லை… இனிமேல் மன்னிப்பு கேட்பதும் காதலை சொல்வதும்… ச்சே… அதற்கும் மேல் ஒரு அசிங்கம் இருக்க கூடுமா? எனது சுயமரியாதையை விட்டுவிட்டு… முடியாது என்னால் முடியவே முடியாது! என்னுள் தோன்றிய காதல் என்னுள்ளே முடியட்டும்… அவனிடம் காட்டி கொள்ளவே கூடாது… பலவாறாக தறிகெட்டு ஓடிய மனதை இழுத்து வந்து சமாதான படுத்தி ஒரு வழியாக தெளிவாய் மறுபடியும் கான்பரன்ஸ் ஹாலில் நுழைய போனவளை பார்த்து புன்னகைத்தவாறே வந்தாள் ப்ரீத்திக்கா…
“ஹாய்… என்னப்பா தண்ணி குடிக்க வந்தியா?” என்று தண்ணீரை பருகியவாறே கேட்க
“ஆமா ப்ரீத்தி… கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருக்கு வேற…”
“அதெல்லாம் கொஞ்சம் பேர் பண்ணிக்கோ… உள்ள சூப்பரா பேசிட்டு இருக்கார் ஜேஎம்டி… சீக்கிரம் வா அஞ்சலி…”
உள்ளே சென்ற போது அர்ஜுன் தான் பேசிக்கொண்டு இருந்தான்! அழகான ஆங்கிலத்தில் நேர்த்தியாக பேசிக்கொண்டு நடுநடுவே கேள்வியும் கேட்டு பதிலும் குடுத்து கொண்டிருந்தான்…
“Can anybody justify the brand identity “Ozone”?” என்று கேட்கவும்
ரிஷி கையை தூக்கி
“Shall I sir?” என்று கேட்டு விட்டு”Sir, ozone is a gas that covers and screens whole of the earth to protect against UV rays… I think that may be the reason for this brand name… to cover all over India…” என்று சொல்லி முடிக்கவும்
“haha… then these young ladies would act by green house effect Mr. Rishi… will make a hole in ozone…” என்று சொல்லி சிரிக்கவும் அதை பார்த்த அஞ்சலிக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது…” ஓட்டை ஓசோன்”என்று கிண்டலடித்தது நினைவுக்கு வந்தது… அஞ்சலி கையை உயர்த்தி,
“Shall I try something sir?” என்று கேட்கவும்
“yes… please!” அமர்த்தலாக கூறவே
“sir… this brand identity can be seen as ozone as well as “O”zone in mathematics this O is but zero, without this O nothing happens in maths and technology, it is the most important number and the most valuable number… interestingly it is the unique invention of Indians… “value and uniqueness”… that may be the one of the reasons… the second thing is, according to Indian mythology lord Shiva is said to reside in zero… that is he have no birth and death… he is eternal… this is depicted by zero which have no end points… the shape O is unique and I think this is “O”zone… am I right sir?”
அர்ஜுனின் கண்கள் வியப்பில் விரிந்தது! தன் மனதின் கருத்தை அப்படியே…
“வாவ்…” என்று நினைத்து கொண்டு
“ம்ம்ம்… perfect Ms. Anjali!”
“அட பாவி… ட்ரெயின்ல எப்படி கிண்டல் பண்ணிட்டு… ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி இங்க விளக்கம் குடுக்கறா… பரவால்ல நம்ம எலி தலைலையும் கொஞ்சம் சரக்கு இருக்குது டோய்… ஆனாலும் இவ பேசுன பேச்சுக்கு ஒரு ரெண்டு நாளாச்சும் இந்த பிசாசு கிட்ட பேசவே கூடாது…” (எங்கடா நீயும் தான் நினைக்கிற… ஆனா பிகர பாத்த உடனே பிரெண்ட கழட்டி விடற மாதிரி உன் வெட்கம் மானம் சூடு சுரனை எல்லாத்தையும் கழட்டி விட்டுடறியே… எனக்கு தான் அசிங்கமா இருக்கு அர்ஜுன் என்று மனசாட்சி போட்டு தாக்க… மனசாட்சி சார் மனசாட்சி சார்… அரசியல்ல இதெல்லாம் சகஜம் மனசாட்சி சார் கண்டுக்காதீங்க மனசாட்சி சார்… )
முகத்தை உர்ர்ர் என்று வைத்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கும் போது முறைத்து கொண்டு டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை இங்கேயும் தொடர அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கி கொண்டிருந்தனர் அர்ஜுனும் அஞ்சலியும்!
*****
கெளதம் பிருந்தாவனத்தில் நுழைந்த போது ஆட்கள் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்தனர்! அங்கிங்கெனாதபடி எல்லோர் முகத்திலும் பதட்டம்! உள்ளே சென்று போர்டிகோவில் நின்று கொண்டிருந்த மேனேஜரிடம் தான் கணபதியை சந்திக்க வந்திருப்பதாக கூறவே
“சார் இன்னிக்கு முடியாது… உங்க கார்ட் குடுத்துட்டு போங்க இன்னொரு நாள் கூப்பிடறோம்…”
“ஓகே சார்… ஆனா என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா எல்லாரும் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க… அதான்…”
“சார்… நீங்க டிவி பாக்கலையா? திநகர்ல நம்ம கடை மூணு முழுசா எரிஞ்சுடுச்சு… அதுவும் இல்லாம அந்த தீயில ரெண்டு பசங்க வேற மாட்டி இறந்து போய்ட்டாங்க சார்… அதான் போலீஸ் கேஸ் ஆக பாக்குது… இன்னைக்கு கண்டிப்பா அண்ணாச்சிய பாக்க முடியாது…” என்று விளக்கம் குடுத்தவர்,
“அட கடவுளே… ரெண்டு பேர் இறந்து போய்ட்டாங்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டவனது கண்களில் பட்டது வரவேற்பரையில் இருந்த ஆளுயர மேகாவின் புகைப்படம்!
“சார்… மேகா தானே இது… கணபதி சாருக்கு மேகா என்ன ஆகணும்?” என்று குழப்பமாக கேட்க
“சின்ன மேடம் சார்… அண்ணாச்சியோட பொண்ணு…” என்று கூறி கொண்டிருக்கும் போதே வெளிவந்த கணபதி
“தம்பி… உங்களுக்கு மேகாவ தெரியுமா? எப்படி?” என்று பதட்டத்துடன் கேட்க
அவனுக்கு தான் தெரியுமே… அவள் தன் காதலனோடு மும்பை சென்றது! தயக்கத்துடன்
“தெரியும் சார்… மும்பைக்கு எங்களோட தான் வந்தாங்க…”
கேட்ட கணபதிக்கு தலை சுற்றியது…
“மும்பையா… என் பொண்ணா… ஐயோ… மேகா மோசம் போயிட்டியே…” என்று கதறி கொண்டே சரிந்தார்…
சட்டென அவரை தாங்கி பிடித்தவன் மேலாளரை அழைத்து தண்ணீர் கொண்டு வர செய்தான்… அவனை பிடித்து கொண்டே வரவேற்பரைக்கு வந்தவர் முகத்தை துண்டால் மறைத்து வைத்து கதறி அழுதார்! சத்தம் கேட்டு வெளியே வந்த மேகாவின் தாயின் முகத்திலும் தாங்க முடியாத சோகம்… அவரும் முந்தானை தலைப்பால் வாயை மூடி கொண்டு அழ,
தனது பெண் காதலனுடன் சென்று விட்டாள் எனும் போது பெற்றவர் படும் வேதனை சொல்ல முடியாது என்று நினைத்து கொண்டே
“சார்… காதலிச்சதால் தானே போனாங்க… பேசாம நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சிருக்கலாம்ல…” என்று தனது மனதின் வலியை பொறுத்து கொண்டு கேட்க
“ஐயோ… அதெல்லாம் கிடையாது தம்பி… அந்த படுபாவி ராஸ்கல் என் பொண்ண திட்டம் போட்டு கடத்திட்டு போன் பண்ணி மிரட்டுறான்ப்பா… மிரட்டுறான்…” என்று மீண்டும் கதற
“அதுவும் இல்லாம… என்னென்னெவோ மிரட்டுறான்… என் பொண்ண… பொண்ண… ஐயோ… நான் எப்பிடி என் வாயால சொல்வேன்? என்று முகத்தை அறைந்து கொண்டு அழுதார்!
கௌதமுக்கு தரை இரண்டாக பிளந்து உள்ளே செல்வது போன்ற உணர்வு!
Leave a Reply