KS3

KS3

அத்தியாயம் – 5
 ராஜாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான் ப்ரத்யுஷ், அவனிடம் இருந்து சங்கீதாவின் முழு விவரம் அறிந்தான். அவனுக்கு அவளை பற்றி அறிந்தவுடன், அவனுக்கு பெருமையாக இருந்தது.
“எங்க ஊர் ல என்ற அக்காதேன் முதன் முதல M.B.A. படிச்சு பட்டம் வாங்கியது. என்னதேன் படிச்சு இருந்தாலும் என்ற அக்காவுக்கு விவசாயம் தான் உயிர்”
“எங்க வயகாட்டு ல வேலை செய்றவங்களை, தட்டி கொடுத்து வேலை வாங்க வைக்கிறதுல அவளுக்குதேன் அந்த சுத்து வட்டாரத்துல நல்ல பெயரு ”.
“அவ தான் கேடியாச்சே, எங்க யாரை எப்படி தட்டி வேலை வாங்கனும்ன்னு தெரியமையா இருப்பா ” என்று மனதிற்குள் எண்ணினான் ப்ரத்யுஷ்.
“எங்க அப்பாரு மாதிரி அவ, நீதி நேர்மை நியாயம்ன்னு பேசிக்கிட்டு இருப்பா. என்ற அக்கா நிறைய தற்காப்பு கலை படிச்சு இருக்கா, வர்ம கலை, குஸ்தி சண்டை, களரி படிச்சி இருக்கா ”.
“அதான் அடி பலம் போல, நல்ல வேலை இதோட விட்டா ” என்று ப்ரத்யுஷ் மனதிற்குள் எண்ணி பெருமூச்சு விட்டான்.
“ஊர் ல என்ற அக்காவுக்கு, அம்புட்டு பையலும் பயப்புடுவானுங்க. ரெண்டு பேரை என்ற அக்கா கிட்ட வம்பு பண்ணி இருக்கானுங்க, அவனுங்களை என்ற அக்கா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிருச்சு ”.
“ஹ்ம்ம்… அவளை கல்யாணம் பண்ணிக்க போற நான் கூட, ஹாஸ்பிடல் ல இருந்து தான் டா வந்தேன் ” என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“அதுல இருந்து யாரும் என்ற அக்கா கிட்ட போக மாட்டானுங்க, நீங்க இது தெரியாம அவளை வம்பு இழுத்தீங்க போல மாமா ” என்று ராஜா கேலி செய்யவும் ப்ரத்யுஷ் சிரித்தான்.
“ம்ம்… ரொம்ப வித்யாசமானவ தான் உன் அக்கா, நீ அவளை பத்தி சொல்ல சொல்ல, எனக்கு இன்னும் அவளை வம்பு இழுக்க தான் தோணுது ” என்று கூறி கண்ணடித்தான்.
“அது சரி இனி நீங்களாச்சு, அவளாச்சு. நான் இதுக்கு நடுல வரவே மாட்டேன், அப்புறம் மாமா நீங்க எனக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கணும். எப்படியும் இன்னும் ரெண்டு நாள் நீங்க இங்கதேன் இருக்க போறீங்க, செத்த நேரம் எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தா புண்ணியமா போகும் ”.
“ஏன்னா போன உடனே எனக்கு பரீட்சை மாமா, எப்போவும் என் கூட்டாளி கூட படிப்பேன். இப்போ இங்க வந்துட்டேன்னா, அதேன் எனக்கு தெரியாததை உங்க கிட்ட கேட்டு படிக்கலாம்னு இருக்குதேன் ” என்று ராஜா கூறவும், ப்ரத்யுஷும் உதவுவதாக கூறினான்.
 அவளின் ஒரு பக்கம் மட்டுமே அறிந்த ராஜா, அவளின் மறுபக்கம் அறிந்து இருக்கவில்லை. அவனின் மறுபக்கத்தை இனி ப்ரத்யுஷ் அறிந்த பின், பெருமிதம் கொள்வானா, பயம் கொள்வானா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
 ராஜா கூட இருக்கும் பொழுது அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும், அதன் பின்னர் அவன் கிடைக்கும் சிறிது நேரத்தில் வாட்ஸ் அப்பில், சங்கீதாவுடன் அரட்டை அடிப்பதும் என்று இரண்டு நாட்கள் அவன் பொழுது வேகமாக சென்றது.
 அதன் பின் அவன் ஓரளவு உடம்பு தேறியவுடன், கௌதமிடம் தன் அலுவல் வேலைகளை கேட்டு அறிந்து கொண்டான். சிலவற்றை வீட்டில் வைத்து பேச, கௌதமை அழைப்பான்.
 அப்பொழுது அவர்கள் முதலில், தொழிலை பற்றி பேசிவிட்டு அதன் பின் தங்களுக்குள் சுவாரசியமாக பேச தொடங்கி விடுவர். அப்பொழுது நேரம் செல்வதே தெரியாது இருவருக்கும், செல்லில் ஏதேனும் அழைப்பு வரும் பொழுது தான் தாங்கள் இவ்வளவு நேரம் உரையாடி இருக்கிறோம், என்பதே உணருவர்.
“என்ன மாமா நீங்க ரெண்டு பேரும், இவ்வளவு நேரம் போனது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. நானும் இப்போ வருவீங்க, அப்புறம் வருவீங்கன்னு காத்துகிட்டு இருந்தேனுங்க மாமா ” என்று ராஜாவே அங்கு நேரில் ஆஜாரானான்.
“நாங்க ஸ்கூல் ல இருந்தே நல்ல நண்பர்கள், காலேஜ் ல கூட நாங்க சேர்ந்தே இருப்போம் ராஜா. எல்லா சேட்டையும் சேர்ந்தே தான் செய்வோம், எங்க நட்பு இப்போவும் தொடருது அதுக்கு நாங்க கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் ” என்று ப்ரத்யுஷ் கூறவும், கெளதம் அவனை ஆமோதித்தான்.
“அது சரி கூட்டாளிங்க சேர்ந்தா, என்ன நடக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும் மாமா. எனக்கு இந்த பாடத்துல ஒரு சந்தேகம், இதை மட்டும் சொல்லிக் கொடுத்திடுங்க. அப்புறம் நீங்க பேசுங்க, நான் குறுக்கால வர மாட்டேன் ” என்று ராஜா கூறவும் இருவரும் சிரித்தனர்.
“ராஜா நான் கிளம்பனும், இனி ப்ரத்யுஷ் ப்ரீ தான். நீ அவனுக்கு பாடம் எடு மாப்பிள்ளை, நான் அப்புறம் உனக்கு மெயில் பண்ணுறேன் எல்லாம் “ என்று இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான் கெளதம்.
 அதன் பின் ராஜா தன் மாமனிடம், பாடத்தில் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொண்டு பாடம் படிக்க மேலே சென்றான். அதன் பின் ப்ரத்யுஷ், வாட்ஸ் அப்பில் வந்த சங்கீதாவின் குறுஞ்செய்தியை பார்த்து பதிலுக்கு அனுப்ப தொடங்கினான்.
 இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு செல்ல போவதாக அவள் கூறவும், அவன் சோகமான ஒரு ஸ்மைலியை அனுப்பினான்.
 அந்த பக்கம் சங்கீதா, மனதிற்குள் சிரித்துக் கொண்டே பதில் அனுப்ப தொடங்கினாள்.
“ஹா ஹா அப்படியே சோக கீதம் நீங்க வாசிச்சுபுட்டாலும், இனிமே போன் ல குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாது. ஊருக்கு போயாச்சுன்னா, அடுத்து சடங்கு, நலங்குன்னு அடுத்து அடுத்து விசேஷத்துக்கு ஏற்பாடு நடக்கும் ”.
“அப்புறம் என்ற போனை வாங்கி வச்சிருவாங்க. இனி நீங்க என்னை கல்யாண நேரத்துல தான் பார்த்து பேச முடியும் மாமோய் ” என்று சங்கீதா அனுப்பிய தகவலை பார்த்து நொந்து கொண்டான்.
“கீத்ஸ் பேபி மாமா பாவம் ல டா, இப்படி சொன்னா எப்படி. அதுவும் இன்னும் மேரேஜ்க்கு டூ வீக்ஸ் இருக்கே டி தங்கம், கொஞ்சம் கருணை காட்டு மா ” என்று அவன் கெஞ்சவும் அவள் சிரித்தாள்.
“ஹா ஹா நீங்க என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு நிறுத்த ல யோசிச்சீங்க. எப்படி மாமா இப்படி மாறுனீங்க ” என்று சங்கீதா கேள்வி கேட்கவும், அவன் சிரித்தான் மனதிற்குள்.
“நீங்க எப்படி மேடம், நீங்களும் தான் என்னை பிடிக்கல சொன்னீங்க. அப்புறம் இப்போ எப்படி இப்படி பேசுறீங்க என் கிட்ட ” என்று பதில் வம்பு இழுத்தான்.
“சரி சரி என்ற அப்பாரு கூப்பிடுறாங்க என்னை, செத்த நேரம் நான் போய் என்னனு கேட்டுட்டு ஓடியாறேன் ” என்று பதிலுக்கு அனுப்பி விட்டு தன் தந்தையிடம் விரைந்தாள்.
“ஹா ஹா இப்போ நீ தப்பிச்சு இருக்கலாம், கல்யாணத்திற்கு அப்புறம் இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் மேடம் ” என்று மனதிற்குள் அவளை கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
 அடுத்த நாள் சங்கீதாவின் குடும்பத்தினர், ஊருக்கு கிளம்புவதற்கு முன் இவர்கள் வீட்டிற்கு வந்தனர். சங்கீதாவை தேடி ப்ரத்யுஷின் கண்கள் அலைப்பாய்ந்ததை, அவனின் தந்தை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
“சம்மந்தி நாளைக்கு ராத்திரி எங்களுக்கு ரயிலு, இங்கின நம்ம கடையிலேயே எல்லோருக்கும் புடவை எடுத்தது ரொம்ப திருப்தியா இருந்ததுங்க. நாங்க தங்க, எங்க எல்லோருக்கும் ஊரை சுத்தி காட்டனு எல்லா ஏற்பாடையும் பண்ணி கொடுத்ததுக்கு எங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோசமுங்க ”.
“அதுக்கு வாய் வார்த்தையா வெறும் நன்றி மட்டும் சொன்னா மட்டும் பத்தாதுங்க, அதேன் எங்களால முடிஞ்சது இந்த கல்யாணத்தை என்ற ஊர் ல சிறப்பா செய்து கொடுக்கிறதுதேன் ”.
“கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்திருங்க சம்மந்தி, நம்ம சொந்தகார பையலுக எல்லாம் அப்பாவே வந்து இறங்கிடுவாங்க ”என்று கிராமத்துக்கே உரிய மிடுக்குடன், சங்கீதாவின் தந்தை உரிமையோடு அழைத்தார்.
“அதுக்கென சம்பந்தி, நாங்க எப்படியும் முன்னமே வந்திடுவோம் அங்க. அப்புறம் இன்னைக்கு ராத்திரி, அங்க நீங்க தங்கி இருக்கிற இடத்திலே நைட் சாப்பாடு ஏற்பாடு பண்ணி பண்ணி இருக்கேன். நாங்க எல்லோரும் அங்க வரோம், இன்னைக்கு என் பையன் உடம்பு நல்லா தேறிட்டான், அதான் வெளியே போனா நல்லா இருக்கும்னு தான் இந்த ஏற்பாடு ” என்று மூர்த்தி ப்ரத்யுஷின் தந்தை கூறவும், தர்மதுரை சரியென்றார்.
“ரொம்ப சந்தோசம் சம்பந்தி, மாப்பிள்ளை இப்போ தேவலையா உங்க உடம்புக்கு ” என்று அவர் ப்ரத்யுஷை பார்த்து கேட்கவும், அவன் நலமாக இருப்பதாக தலையாட்டினான்.
“ஒரு பக்கம் பொண்ணு நல்லா மிதிச்சிட்டா, மறுபக்கம் மாமனார் இப்போ பரவாயில்லையான்னு கேட்குறார். மை டைம் சூப்பரா இருக்கு, ஆமா இவ ஏன் வரல இப்போ ” என்று மனதிற்குள் பேசிக் கொண்டும், யோசித்துக் கொண்டும் இருந்தான்.
 அப்பொழுது எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, சங்கீதாவின் குடும்பத்தினர் கிளம்ப தொடங்கினர். ப்ரத்யுஷின் அருகே வந்த தர்மதுரை, அவனை கூர்ந்து பார்த்தார்.
“தம்பி மன்னிச்சிருங்க, என்ற பொண்ணு கொஞ்சம் அவசரகுடுக்கை. நீங்கன்னு தெரிஞ்சா இப்படி செய்து இருக்க மாட்டா, என்ற சொந்தகாரவுகளுக்கு யாருக்கும் இது தெரியாது ”.
“ஏற்கனவே உங்களை அடிச்சிட்டோமேன்னு வருத்தப்பட்டா, அதான் அன்னைக்கு கூட்டிட்டு வந்தேன் யாருக்கும் சொல்லாம. இன்னைக்கும் நீங்க அங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க தம்பி, ரொம்ப அவ கிட்ட போக வேண்டாம் ”.
“ஏன்னா கல்யாணத்துக்கு முன்ன மாப்பிள்ளையும், பொண்ணும் சேர்ந்து புடவை எடுக்க தான் விடுவோம். அதுக்கு அப்புறம் பேச கூட விட மாட்டோம், அதான் அவ இங்க வராததை பத்தி சொல்லிட்டு, அப்படியே என்ற ஊரு பழக்கத்தையும் சொல்லிபுடுவோம்ன்னு வந்தேன் தம்பி ” என்று தர்மதுரை, அவனுக்கு எடுத்து கூறவும், அவனும் புரிந்து கொண்டான்.
 அதன் பின்னர் அவர்கள் சென்றவுடன், அவனும் இன்று இரவு அவளை சந்திக்கும் பொழுது, எப்படி அவளை வம்பு செய்யலாம் என்ற யோசனையோடு அவனின் அறைக்கு சென்றான்.
 இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அவனின் தாய் லலித்தாவிற்கு மனம் ஆரவில்லை.
“இன்னைக்கு நைட் அங்க தான டின்னர், இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். எப்படியாவது இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்திட்டா, அப்புறம் எப்படியாவது மஹிமாவை இந்த வீட்டு மருமகளா கொண்டு வரணும் என்று அவர் ஒரு பக்கம் சதி செய்ய திட்டம் தீட்டினார்.
 அன்று இரவு அந்த விருந்தினர் மாளிகை தோட்டம், வர்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டு இருந்தது. அங்கே ஒரு பக்கம் எல்லோரும் உற்சாகமாக பேசிக் கொண்டு இருந்தனர், மறுபக்கம் ப்ரத்யுஷும், சங்கீதாவும் பார்வையாலே கதை பேசிக் கொண்டு இருந்தனர்.
 இதை பார்த்த அவனின் தாய் லலிதா, தான் எடுத்த முடிவை செயலாற்ற எண்ணி நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். ப்ரத்யுஷிற்கு செல்பேசியில் அழைப்பு வரவும், அவன் சங்கீதாவின் பார்வையில் இருந்து சிறிது அகன்று தொலைவில் சென்று பேச தொடங்கினான்.
 சரியான சந்தர்பத்திற்காக காத்து இருந்த, லலிதா அம்மா சங்கீதாவை நெருங்கி பேச தொடங்கினார்.
“என்ன மா சங்கீதா, என் பையனை உனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு போல. ஆனா என் பையனுக்கு அப்படி இல்லை போல, அவனுக்கு உன்னை எப்படியாவது பழி வாங்கணும்ன்னு நினைச்சிட்டான் போல. அவனோட ஸ்டேட்டஸ், அவனோட அழகு கம்பீரத்தை பார்த்து நீயும் மயங்கிட்ட ”.
“நான் சொல்லுறதை சொல்லிட்டேன், இதுக்கு மேல உன்னிஷ்டம் ” என்று லலிதா கூறவும், முதலில் சங்கீதாவிற்கு வருத்தமாக இருந்தது.
 ஆனால் அதன் பின் யோசிக்கும் பொழுது, அவளுக்கு புரிந்தது தன் மாமியாருக்கு தன்னை பிடிக்கவில்லை என்று. அதனால் தான் முதலில் அவன் நினைத்ததை கூறி, இந்த திருமனத்தை நிறுத்த முயற்சி செய்கிறார் என்று புரிந்தது.
“அயித்தை கவலையே படாதீங்க, உங்க பையனுக்கு முதலதேன் அந்த பையித்தியம் பிடிச்சது. இப்போ அவருக்கு என்றன் மேலதேன் ரெம்ப பயித்தியமா இருக்காவுக, நீங்க என்னை நினைச்சு கவலைப்படாதீங்க அயித்தை ”.
“நீங்க கவலையே படாதீங்க, கல்யாணம் முடிஞ்ச உடனே நான் அவிகளை நல்லா மாத்திடுறேன். கல்யாணத்தை நிறுத்த முயற்சி எடுக்காதீங்க அயித்தை, அப்புறம் உங்க பிள்ளை என்ன செய்வாருன்னு சொல்லுறதுக்கு இல்லை ” என்று மறைமுகமாக மிரட்டவும், அவர் பின் வாங்கினார்.
 இருந்தாலும் அவருக்கு மனதில் வன்மம் ஏற்பட்டது. வீட்டிற்கு திருமணம் முடிந்து வரட்டும், அப்பொழுது கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.
 யார் யாரை கவனித்துக் கொள்ள போகிறார்கள், என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
அத்தியாயம் – 6
 ரயிலின் தாலாட்டில் அதன் வேகத்தில், சங்கீதாவிற்கு சுகமாக தூக்கம் வரும் போல் இருந்தாலும், நேற்று இரவு அந்த விழாவில் அவள் ப்ரத்யுஷின் அன்னையிடம் பேசியது காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
“என்ன என் பையனை வளைச்சு போட்டோம்னு, ரொம்ப சந்தோஷப்படாத. நான் நினைச்சா இப்போ கூட இந்த திருமணத்தை நிறுத்த முடியும், ஆனா நான் அப்படி செய்ய போறது இல்லை. வீட்டுக்கு நீ வந்த உடனே நான் யாருன்னு உனக்கு காட்டுறேன், அப்போ தெரியும் உனக்கு இந்த லலிதா யாருன்னு ” என்று லலிதா சிறிது பதிலடி கொடுத்து, தன் எண்ணத்தை கொட்டி தீர்த்துவிட்டு சென்றார், சங்கீதாவின் மிரட்டலையும் மீறி.
 அவர் இப்படி சொல்லிவிட்டு சென்றவுடன், சங்கீதாவின் மனதிற்குள் வருத்தமும், கோவமும் ஒருங்கே வந்து அவளின் மனது உடனே அங்கு இருந்து செல்ல தூண்டியது. ஆனால் உடனே அங்கு இருந்து செல்ல முடியாமல், அவளுக்கான கடமை அவளை தடுத்து நிறுத்தியது.
 இதை எல்லாம் யோசித்து பார்த்து படுத்து இருந்த சங்கீதா, ஒரு முடிவிற்கு வந்தவளாக, கையில் தன் செல்லை எடுத்து உடனே ப்ரத்யுஷிர்க்கு அழைத்தாள்.
 தன் வீட்டு தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து, வானத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன், தன் செல்பேசி சிணுங்கவும் எடுத்து பார்த்தவன், சிரித்துக் கொண்டே எடுத்து தன்னவளுடன் பேச தொடங்கினான்.
“என்ன என்னோட ராணிக்கு தூக்கம் வரல போல, எல்லாம் இந்த ராஜா நினைப்பு போல ” என்று எடுத்தவுடன் கிண்டல் அடித்தான் ப்ரத்யுஷ்.
“என்ன மாமோய், உங்களை பத்தி நினைக்காம நான் யாரை பத்தி நினைக்க போறேன். ஆனா நான் இப்போ என்ற அயித்தையையும் சேர்த்து நினைச்சேன், நேத்திக்கு அந்த விழா முடிஞ்சதுல இருந்து ” என்று அவள் கூறியதை கேட்டு, அவன் புருவம் சுருங்கியது யோசனையில்.
“நீ எங்க அம்மாவையா சொல்லுற கீத்ஸ் ” என்று தெளிவு படுத்திக் கொள்ள கேட்டான்.
 அவள் ஆம் என்று கூறி, நேற்று இருவருக்கும் நடந்த சம்பாஷணையை அவனிடம் கூறினாள். கூறியதோடு மட்டும் இல்லாமல், அவள் என்ன நினைக்கிறாள், என்ன இனி செய்ய போகிறாள் என்பதையும் சொல்லி விட்டாள் சங்கீதா.
“ஹா ஹா நீ ஒரு முடிவோட தான் இருக்க போல, சரி இந்த விளையாட்டுக்கு நான் குறுக்க வர மாட்டேன். எதுனாலும் நீயாச்சு, அவங்களாச்சு அவ்வளவு தான் நான் சொல்லுவேன் ” என்று அவன் அவளுக்கு ஆதரவாக பேசவும், அவள் மகிழ்ந்தாள்.
“உங்களுக்கு கோவமே வரலையா மாமா, நான் சொன்னதை கேட்டு ” என்று சிறிது வருத்தத்துடன் கேட்கவும், அவன் இல்லை என்றான்.
“எனக்கு ஆனா வருத்தமா இருக்கு, என்ற அயித்தைக்கு என்னை பிடிக்கலையேன்னு. இப்போ கூட அவங்க மேல கோவம் எல்லாம் இல்லை, வருத்தம்தேன் அதிகமா இருக்கு ” என்று அவள் வருந்தவும், அது பொறுக்காமல் அவளை சமாதானம் செய்ய தொடங்கினான்.
“ஹே கீத்ஸ் நீ இதுக்கெல்லாம் வருத்தப்பட கூடாது, நீ பார்க்காத மாமியார், மருமகள் சண்டையா. இதுவும் இல்லைனா லைப் போர் அடிக்கும் பேபி உனக்கு, பின்னாடி திரும்பி பார்க்கும் பொழுது நீயே விழுந்து விழுந்து சிரிப்ப பாரு ”.
“ச, நாம இதுக்கா சண்டை போட்டோம்ன்னு, டேக் இட் ஈசி டார்லிங். நீ இப்போ செண்டிமெண்ட்டா பேச தான் மாமனை கூப்பிட்டியா, இரவு நேரம் மாமன் romance மூட் ல இருக்கேன் டா, கொஞ்சம் என்னை கவனிக்கிறது ” என்று பேச்சின் திசை திருப்பினான்.
“ஆனா நான் அந்த மூட் ல இல்லைங்க மாமா, போன உடனே நான் எங்க ஊர் கிழவியை எப்படி சமாளிக்க போறேனே இருக்கு. சரியா மூக்குல வேர்த்தா மாதிரி ஊர் ல பஞ்சாயத்தை கூட்டிரும், எப்படி என்னை வெளியூருக்கு கூட்டிட்டு போச்சுன்னு ”.
“எங்க ஊர் ல கல்யாணம் முடிவான பிள்ளைகளை, இப்படி வெளியூருக்கு கூட்டிட்டு எல்லாம் போக மாட்டாங்க. அது ஒரு சம்ப்ரதாயம், அதுவும் அந்த கிழவிக்கு என்னை கண்டாலே ஆகாது. அதேன் அதை எப்படி சமாளிக்கன்னு இப்போ அடுத்த யோசனை ஓடுது மண்டைக்குள்ள ” என்று சங்கீதா கூறியதை கேட்டு சிரிக்க தொடங்கினான்.
“ஷப்பா, உனக்கு எல்லா இடத்திலையும் உனக்கு எதிரா போர்க்கொடி தூக்க ஆளு இருக்கு போல. இதை கேட்கவே எனக்கு எவ்வளவு ஆனந்தமா இருக்கு, நீ எப்படி சமாளிச்சன்னு நாளைக்கு எனக்கு சொல்லு. இப்போ எனக்கு நான் கேட்டதை கொடு, நான் தான் romance மூட் ல இருக்கேன்னு சொன்னேன் ல ” என்று அவன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.
“என்ன மாமா நான் எப்படி கொடுக்க முடியும், ரயில் ல எனக்கு எதுத்தாப்ல என்ற அப்பாரு இருக்கார். இதுவே நான் ஒரு பக்கமா படுத்துகிட்டு, தெரியாம பேசிகிட்டு இருக்கேனுங்க ” என்று சிறிது சிணுங்கிக் கொண்டே கூறினாள் சங்கீதா.
“சரி, நீ கொடுக்க வேண்டாம், ஆனா நான் கொடுக்கிறதை வாங்கிக்கோ ” என்று கூறிவிட்டு அவளுக்கு தன் முத்தத்தை அனுப்பினான் ப்ரத்யுஷ்.
 செல்பேசி வழியாக கொடுத்த முத்தம் தான் என்றாலும், தன் கன்னத்தில் அவன் இதழ் பதித்ததாகவே உணர்ந்து, அழகாக கன்னம் சிவந்தாள் சங்கீதா.
“என்ன கீத்ஸ் பேபி நான் கொடுத்தது வந்திடுச்சா, இல்லைனா நான் இன்னொன்னு கொடுக்கட்டுமா ” என்று அவளை சீண்டினான் ப்ரத்யுஷ்.
“ஹையோ அது எல்லாம் வந்திடுச்சு மாமா, எனக்கு தூக்கம் வருது, நான் தூங்குறேன் ” என்று சிரித்துக் கொண்டே செல்லை அணைத்து நிம்மதியாக உறங்க தொடங்கினாள்.
 அங்கே ப்ரத்யுஷ் சிரித்துக் கொண்டே செல்லை பார்த்துக் கொண்டே திரும்பியவன், அதிர்ந்தான். அங்கே அவனின் தாய் லலிதா, அவனை கூர்மையாக அளவிட்டுக் கொண்டு இருந்தார்.
“என்ன ப்ரத்யுஷ் உன்னை பார்த்தா, இந்த காதல் ல விழுந்த வாலிபன் மாதிரியே தெரியுது. அந்த பட்டிக்காடு பொண்ணு உன்னை அப்படி மயக்கி வச்சு இருக்கா போல, நீ என் கிட்ட சொன்ன மாதிரி அவளை பழி வாங்குற வேலை ரொம்ப ஜோரா நடக்குற மாதிரி இருக்கே ” என்று சிறிது நக்கல் தொனியில் அவனிடம் அவர் பேசவும், ப்ரத்யுஷ் அவரை தீர்க்கமாக பார்த்தான்.
 அதுவரை தான் பேசியது அனைத்தும் கேட்டுவிட்டார் என்று சிறிது அதிர்ந்து போய் இருந்தவன், அவரின் பேச்சு அவனை பழைய ப்ரத்யுஷாக மாற்றி அவரை தீர்க்கமாக பார்க்க வைத்தது.
 அவனின் பார்வை லலிதா அம்மாவிற்கு, சிறிது பயத்தை கொடுத்தது. ஏனெனில் அவன் ஒன்றை நினைத்தான் என்றால், அதை முடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பான். அந்த தீர்க்கமான அவனின் பார்வையை, நிறைய முறை அவர் பார்த்து இருக்கிறார்.
 இப்பொழுது தான் பேசிய பேச்சு, எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்துமோ என்று சிறிது அஞ்ச தொடங்கி இருந்தாலும், வெளியே தைரியமாக காட்டிக் கொண்டு நின்றார்.
“என்ன அம்மா போட்டு வாங்கலாம்ன்னு பார்க்குறீங்க போல, நான் என்ன நினைக்குறேன், என்ன செய்ய போறேன்னு எல்லாம் நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் இப்படி கல்யாணத்தை நிறுத்த போறேன்னு, கிறுக்குத்தனமா எந்த வேலையும் பார்க்க கூடாது ”.
“அப்புறம் அவ என்னை மாதிரி எல்லாம் கிடையாது, பொறுமையா இருக்குற மாதிரி இருப்பா. ஆனா அதுக்கு உண்டான பதிலை திருப்பி கொடுத்திட்டு தான் அடுத்த வேலை பார்ப்பா. நீங்க பார்த்து நடந்துக்கோங்க, நான் என்ன செய்யணும்ன்னு நான் தான் முடிவு செய்வேன், புரிஞ்சு இருக்கும் நினைக்கிறன் ” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
 அவன் கூறியதை கேட்டு, அவர் தான் அதிர்ந்து விட்டார். அவருக்கு இன்னும் அவன் என்ன நினைக்கிறான் என்று புரியவில்லை, ஆனால் தான் இனி தலையிட்டால் அவனின் கோபத்திற்கு ஆளாகுவோம் என்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது.
 ஆகையால் அவர் இனி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் என்கிற நிலையில், என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் அதற்க்கு நடுவில் என்று பொறுமையாக காத்துக் கொண்டு இருந்தார்.
“ஏல உனக்கு ஏதும் கிறுக்கு பிடிச்சிருச்சா ல, என்ற மவன் எல்லாம் சரியா செய்வான்னு நினைச்சேன், இப்படி தலைல இடி இறக்குற மாதிரி இப்படி செய்து இருக்க. செத்த நான் அங்க காசி போயிட்டு வரதுக்குள்ள, இங்க உன்ற பொண்ணுக்கு நிச்சயம் முடிஞ்சு, கல்யாணம் வரை கொண்டு வந்து இருக்க ”.
“இதுல அவளையையும் கூட்டிட்டு வெளியூர் போயிட்டு வந்து இருக்க, நம்மதேன் இங்கின தான் எடுப்போம் நீங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டு இருக்கலாம் ல ” என்று தர்மதுரையின் தாயும், சங்கீதாவின் பாட்டியுமான குமுதவள்ளி பொரிந்து கொண்டு இருந்தார்.
“இப்போதேன் ஊர் ல இருந்து வந்து இருக்கோம், இன்னும் உள்ள கொண்டு வந்த சாமானை எல்லாம் எடுத்து வைக்கல, அதுக்குள்ள இந்த கிழவிக்கு எல்லாத்தையும் போட்டு தெரிஞ்சிக்கணும். செத்த நேரம் ஒய்வு எடுக்கட்டும், அப்புறம் பொறுமையா கேட்போம்ன்னு இருக்கா கிழவிக்கு ”.
“இரு கிழவி, உனக்கு முதல மந்திரிச்சு விடுறேன். பாவம் எங்க அப்பாரு, எப்படி தான் இந்த கிழவியை இத்தனை வருஷமா சமாளிச்சாரோ ” என்று எண்ணிக் கொண்டே அவளின் பாட்டியை முறைத்துவிட்டு, வெளியே வண்டியில் இருந்த பொருட்களை எல்லாம் இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்துக் கொண்டு இருந்தாள், தன் தோழி பாண்டியம்மாளின் உதவியுடன்.
“அம்மோய், செத்த சும்மா இரு மா. அவிகளே பெரிய ஜவுளி கடை தான் வச்சு இருக்காக, நம்ம சம்ப்ரதாயப்படி தான் எல்லாம் நடக்குது. வெளியூர் ல கடை இருக்கிறதால, பிள்ளையையும் கூட்டிட்டு போக வேண்டியதா போச்சு ”.
“சும்மா அதையே எத்தனை தடவை தான் மா சொல்லுவ, ஏய் பிள்ளை தங்கம் போய் ஆகாரம் தயார் பண்ணு பிள்ளை. இன்னும் செத்த நேரத்துல எல்லாம் ஒருத்தரா வர ஆரம்பிச்சிடுவாங்க, சங்கீதா கண்ணு நீ தைக்க கொடுக்கிறது எல்லாம் பாண்டி கிட்டயே கொடுத்து விடு சீக்கிரம், இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு தாயி ” என்று தர்மதுரை கூறிவிட்டு வெளியே சென்றார்.
“ச எங்க அப்பாரையே, இப்படி எதிர்த்து பேச வச்சுருச்சே இந்த கிழவி. இனி ஊர் முழுசும், என்ற மவன் என்னைய எதிர்த்து பேசிட்டான்னு ஒப்பாரி வைக்குமே. அதுக்கு நாம விடவே கூடாது, இப்போவே அதுக்கு வாய்பூட்டு போட்டுற வேண்டியதேன் ” என்று எண்ணிக் கொண்டே சங்கீதா அவரை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
“சோழியன் குடுமி சும்மா ஆடுமா, என்ன ஆத்தா வேனும் உனக்கு. உனக்கு காரியம் ஆகணும்னா மட்டும்தேன், இப்படி சிரிச்சிகிட்டே வருவ என் கிட்ட ” என்று அவளுக்கு பாட்டி நான் என்பதை நிருபித்தார் குமுதவள்ளி பாட்டி.
“ஹா ஹா கிழவி உனக்கு கற்பூர புத்திதேன் ஒத்துக்கிறேன், இல்லைனா எனக்கு பாட்டியாக முடியுமா நீர் ” என்று அவரை இடித்தாள் பேத்தி.
“சரி சரி விஷயத்தை சொல்லிபுட்டு, இடத்தை காலி பண்ணு. எனக்கு வெளியே நிறைய ஜோலி இருக்கு பார்க்க, அதனால சீக்கிரம் சொல்லிட்டு போ ” என்று துரிதப்படுத்தினார் பாட்டி.
“என்ன ஊருக்குள்ள போய், என்ற மவன் இப்படி பேசிட்டான்னு ஒப்பாரி வைக்கவா. ஒழுங்கா வீட்டுல இரு கிழவி, இல்லை உன் வெத்தலை பெட்டிகுள்ள என்ன எல்லாம் இருக்கும்ன்னு உனக்கே தெரியும் ” என்று சங்கீதா மிரட்டவும், அவர் சிரித்தார்.
“அட போடி, இப்போ எல்லாம் நான் விவரமா அப்போ அப்போ புதுசா வாங்கிதேன் வெத்தலை போடுறேன். உன்னால இப்போ ஒன்னும் செய்ய முடியாது, நான் உனக்கு பாட்டியாக்கும் ” என்று கழுத்தை நொடித்துக் கொண்டார்.
“ம்ம்… அப்படியா கிழவி, ஆனா உன் பெட்டிக்குள்ள ரகசியமா ஒளிச்சு வச்சு இருக்கியே, அது இப்போ என் கையில் ” என்று அடுத்த குண்டை வீசினாள் சங்கீதா.
“அப்படி எல்லாம் என் கிட்ட எந்த ரகசியமும் இல்லை, சும்மா என்னை மிரட்ட புதுசா எதுவும் சொல்லாத, ஒழுங்கா போய் உன்ற அப்பன் சொன்ன வேலையை பாரு ” என்று சொல்லிவிட்டு எழுந்து சிறிது தூரம் சென்றவரை, சங்கீதா அடுத்து சொன்ன செய்தியில் சட்டென்று அவளருகில் வந்து அமர்ந்தார்.
“ஏண்டி கூறுகெட்டவளே, இதை எப்போ டி எடுத்த. ஒழுங்கா அதை என் கிட்ட கொடுத்திடு, அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ” என்று மிரட்டினார்.
“இதை வச்சு நான் என்ன செய்ய போறேன் கிழவி, நான் சொல்லுறதை மட்டும்தேன் நீ இனி இங்கே கேட்கணும் பார்த்துக்கோ. சும்மா நீ பாட்டுக்கு ஏதாவது கிறுக்கு வேலை எல்லாம் பார்த்த, அப்புறம் நான் பொல்லாதவளா மாறிடுவேன் ” என்று சங்கீதா மிரட்டவும், அவர் தான் அடங்கி போக வேண்டியதாக இருந்தது.
 அதன் பிறகு அவர் வெளியே எங்கும் செல்லாமல், வீட்டில் நடக்கும் திருமண வேலையை எல்லாம் மேற்பார்வையிட்டுக் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்.
“அடியே அப்படி என்ன சொல்லி, உங்க வீட்டு கிழவியை இப்படி உட்கார வச்சு இருக்க. அந்த கிழவி உனக்கும், உங்க அப்பாருக்கு மட்டும்தேன் அடங்கி இருக்கு. ஊர்ல எல்லாம் உங்க வீட்டு கிழவியை பார்த்துதேன் பயப்புடுறாங்க, இங்க நீ அதை இப்படி அடக்கி வைக்குற எப்படி டி ” என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள, பாண்டியம்மாள் அவளை விசாரித்தாள்.
“நீ வேற டி நல்ல பாட்டி எங்க பாட்டி தெரியுமா, ஆனா அதுக்கு நடந்த அநியாயம் வேற யாருக்கும் நடக்க கூடாது. இத்தனை வருஷமா அடக்கி வச்சு இருந்த கோபத்தை எல்லாம், இப்படி எல்லாம் பேசி அதோட மன பாரத்தை குரைக்குது ”.
“இன்னொரு நாள் அது பத்தி சொல்லுதேன், முதல என் கூட வா பிள்ளை, என்ற சட்டை அளவு துணி எடுத்து தாரேன். நம்ம சாந்தி அக்கா கிட்டையே கொடு பிள்ளை, அவிகளுக்குதேன் பட்டணத்துல தைக்கிற மாதிரி நல்லா தைக்க தெரியும் ”.
“அப்புறம் நம்ம வயக்காட்டு வேலை எல்லாம், எப்படி போகுதுன்னு ஒரு பார்வை பார்த்துக்கோ. மாரி அக்காளை நான் வர சொன்னேன்னு சொல்லு, ஊர் ல வேற என்ன எல்லாம் நடந்து இருக்கு நம்ம இல்லாதப்போ எல்லாம் தெரிஞ்சிகிட்டு வா ” என்று அவள் அடுத்த அடுத்த வேலையை, அவளின் தோழியிடம் ஒப்படைத்து விட்டு கட்டிலில் படுத்தாள்.
 இங்கே வந்து சேர்ந்ததை பற்றி, ப்ரத்யுஷிடம் இன்னும் தெரிவிக்கவில்லையே என்று அப்பொழுது தான் அவளுக்கு உரைத்தது. உடனே தன் செல்பேசியை எடுத்து, அவனுக்கு கால் செய்தாள்.
 அங்கே அவனோ செல்லை சைலென்ட் மோடில் போட்டுவிட்டு, அவனின் கொடோனில் ஒருவனை அடி பின்னிக் கொண்டு இருந்தான், தன் கோபம் தீருமட்டும்.
“ஏண்டா நாயே, என் கிட்ட வேலை பார்த்துட்டு, நீ அவனுக்கு விசுவாசமா இருக்கியா. என் முதுகுல குத்த உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும், இரு நீ வெறும் அம்பு மட்டும் தான் இனி அவனை நான் பார்த்துகிறேன் ”.
“ஆனா திரும்ப உன்னை எங்கேயாவது பார்த்தேன், தொலைச்சிடுவேன். உன் பிள்ளைங்க உன்னை நம்பி தான் இருக்காங்க, அவங்களுக்காவது நீ உண்மையா இரு ”.
“கெளதம் இவனுக்கு என்ன கொடுக்கணுமோ, கொடுத்து செட்டில் பன்னிரு. அந்த தாமோதரனை நான் பார்க்க உடனே ஏற்பாடு பண்ணு அதுவும் இப்போவே, இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் ” என்று கண்ணில் ஒரு தீவிரத்துடன் கூறிய நண்பனை பார்த்து, உடனே அவன் சொன்ன வேலையை செய்தான்.
 அந்த தாமோதரனை நினைத்து ப்ரத்யுஷிர்க்கு கொலைவெறியே வந்தது, அவனை வெட்டி போடவே மனம் துடித்தது. இருந்தாலும், தன் தந்தைக்காக அவன் அடக்கியே வாசித்தான்.
“என்ன தம்பி சூடா இருக்கீங்க போல, ஒழுங்கா முதலில் நான் சொல்லும் பொழுதே நீங்க நான் கேட்டதை கொடுத்து இருந்தா இப்படி நடந்து இருக்குமா ” என்று அந்த தாமோதரன் சிரித்துக் கொண்டே, அவன் எதிரில் அமர்ந்தான்.
“நீ ரொம்ப விளையாடிட்ட இந்த தடவை, ஒழுங்கா என் விஷயத்துல தலையிடாம இரு. அப்புறம் நீ தான் வருத்தப்படுவ, ஏன் தான் இவனை பகைச்சிகிட்டோம்ன்னு ” என்று ப்ரத்யுஷ் பொறுமையை கையில் பிடித்துக் கொண்டு, அழுத்தமாக தான் கூற வேண்டியதை கூறினான்.
“என்ன தம்பி நீங்க இன்னும் காமெடி பண்ணிக்கிட்டு, அப்போ நான் கேட்டதை நீங்க கொடுக்க மாட்டீங்க அப்படித்தான. சரி தம்பி உங்களுக்கு கல்யாணம்ன்னு கேள்வி பட்டேன், நீங்க எப்படி இருந்தீங்கன்னு கொஞ்சம் அவங்களுக்கு சில போட்டோ எடுத்து அனுப்பினா போதும் நினைக்கிறன் ” என்று விகாரமாக சிரிக்கவும், ப்ரத்யுஷ் அவனை பார்த்து சிரித்தான்.
“இப்போ நீ தான் காமெடி பண்ணுற, என்னை பத்தி முழுசா சொல்லி தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சு இருக்காங்க. உன்னால அங்க எல்லாம் போக முடியாது, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. ஆனால் நீ என் விஷயத்துல இனி தலையிட்டா, இப்படி கூப்பிட்டு பேசிகிட்டு இருக்க மாட்டேன், புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன் ” என்று கூறவும் தாமோதரன் கோவத்தில் அவனை அடிக்க சென்று விட்டான்.
 அதற்குள் ப்ரத்யுஷ் அவனை எட்டி உதைத்தான், அவனின் அந்த அடியில் தடுமாறினான். பின்னர் சங்கீதாவை தூக்க மனதில் திட்டம் தீட்டிக் கொண்டு, அவனை முறைத்து விட்டு சென்றான்.
“டேய் பிரத்யுஷ் சிஸ்டர் கிட்ட சொல்லி கொஞ்சம் கவனமா இருக்க சொல்லு டா, எனக்கு என்னமோ அவன் பார்வையே சரியில்லைன்னு தோணுது ” என்று கெளதம் நண்பனிடத்தில் கூறினான்.
“நான் சொல்லி வைக்குறேன், ஆனா அவளை தூக்க யோசிச்சான் பாரு, என்னால சிரிப்பை அடக்க முடியல டா. அவ அடிச்சவங்க எல்லாம் ஹாஸ்பிடல் ல தான் அட்மிட் ஆகுரானுங்க, அப்படியே இவனையும் பார்சல் பண்ணிற வேண்டியதுதான் ” என்று கூறிவிட்டு சிரிக்கவும், கௌதமும் சிரித்து விட்டான்.
 என்ன தான் சிரித்தாலும், மனதிற்குள் ஒரு பயம் இருக்க தான் செய்தது அவனுக்கு. தன்னவளை எச்சரிக்க அவன் அவளை அழைக்க தன் செல்பேசியை எடுத்து பார்த்தவன், அதில் இருந்த சங்கீதாவின் பதினைந்து மிஸ்ட் கால் பார்த்து உடனே அவளுக்கு அழைத்தான்.
 ஆனால் அவளின் செல்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது என்று தகவல் வரவும், அவன் மனம் பதறியது. உடனே தன் மாமனாருக்கு அழைத்தான், அவர் கூறிய தகவலில் சற்று நிம்மதி அடைந்தான், இருந்தாலும் மனதின் ஓரத்தில் சிறிது பயம் எட்டி பார்த்தது.
 உடனே கௌதமிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தன் காரை எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்திற்கு விரைந்தான். ஆனால் அவன் அங்கு போகும் முன், சின்ன விபரீதம் நடந்து விட்டு இருந்தது, அதில் அவன் துடித்து போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!