episode 17

“அக்கா… இப்போ நாங்க மாமா கிட்ட பேசியே ஆகணும்…” அஞ்சலியின் உயிர் நண்பர்கள் ப்ரனித்தாவும் மிக்கியும் அவளின் உயிரை வாங்கி கொண்டு இருக்க அவளுக்கோ நாமே எப்படி அழைப்பது என்று உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது. இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தாலும் திருமணம் முடிவு செய்ததில் இருந்தே பேசாதவனிடம் எப்படி நாமே பேசுவது என்று அவளது ஈகோ தடுத்தது! அர்ஜுன் ஏன் பேசவே இல்லை என்று குழம்பினாள்! இன்னும் அவனது எண்ண போக்கை மாற்றி கொள்ளவில்லையோ என்ற சந்தேகமும் எழ பேச வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று கொண்டிருந்த தன் நண்பர்களிடம் மறுத்து பேசி கொண்டிருந்தாள்!

“ஐயோ ப்ரணி… அவர் ரொம்ப பிசிடி… உங்களை மாதிரி சின்ன பசங்க கிட்ட பேசவேல்லாம் அவருக்கு நேரமே கிடையாது…”

“ஏன்க்கா பொய் சொல்ற? நேத்திக்கு ராகுல் கிட்டயும் ஸ்ரீராம் கிட்டயும் கிரிகெட் விளையாடிட்டு போனார் மாமா… ச்சே… நாங்க தான் மிஸ் பண்ணிட்டோம்… அந்த ரெண்டு கொரில்லாவும் பெருமை பீத்திக்குதுங்க… எங்க கூடவும் வந்து கிரிகெட் ஆடியே தீரனும்…” என்று கூறவும் அஞ்சலிக்கு தூக்கி வாரி போட்டது… நேற்று வந்திருந்தானா?

“அம்மா… அம்மா…” தன்னால் முடிந்த அளவு கத்தினாள்! அலறி அடித்து கொண்டு வந்த அஞ்சலியின் தாய்

“ஏன்டி இப்படி கத்தற… எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல இருக்கு…”

“நேத்து அவர் வந்தாரா?”

“யாரு?” குழப்பமாக

“அதான்… அர்ஜுன்… உன் மாப்பிள்ளை…” என்று பழிக்க

“வாயிலேயே ஒன்னு போடுவேன்… பேர சொன்னா! என்ன பழக்கம் இது அஞ்சும்மா…”

“எனக்கு நீ பதில சொல்லு… வந்தாரா?”

“ஆமா… நகை, பட்டு புடவையெல்லாம் குடுத்துட்டு, பத்திரிக்கையும் குடுத்துட்டு போனாரே… உன்கிட்ட புடவைய காட்டினேனே அஞ்சு…”

“ஏன் என்னை கூப்பிடுல…”

“ஏதோ அவசரமா கிளம்பனும்னு கிளம்பிட்டார் கண்ணா…”

அவசரமாக செல்பவன் தான் கிரிகெட் விளையாடிவிட்டு சென்றானா? ஏன்? என்ன ஆயிற்று… என்று நினைத்து கொண்டிருக்கும் போதே ப்ரனிதாவும் மிக்கியும் சுவாரசியமாக செல்பேசியில் பேசி கொண்டிருக்க

“மாமா… நீங்க ஹான்ட்சம்மா இருக்கீங்க… இன்னைக்கு உங்கள சன் நியூஸ்ல பார்த்தேனே…” என்று ப்ரனிதா சிரிக்க

“…”

“பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்…”

“…”

“போங்க மாமா… அக்கா போர் அடிக்கிறா… எங்க கூட விளையாடவே வர மாட்டேங்கறா… எப்போ பாரு வீட்லயே உக்காந்துட்டு கண்ண திறந்து வெச்சுகிட்டு தூங்கறா… பாருங்க இப்போ கூட அப்படித்தான்…” என்று வாண்டு போட்டு குடுக்க அப்போதுதான் உரைத்தது அஞ்சலிக்கு

“ஏய் பிசாசு… யார் கூட பேசிட்டு இருக்க?”

“ம்ம்ம்… எங்க அர்ஜுன் மாமா கிட்ட தான்…”

“ஏய் எருமை… யார கேட்டுடி என் போன்ல இருந்து பண்ண…”

“போக்கா… நீ தான் எங்கள பேசவே விட மாட்டேங்கற… மாமா சோ ஸ்வீட் க்கா… உன் கூட டூ…”

“விட்டுக்கோ… ஒழுங்கா போன குடு…”

“முடியாது… நான் இன்னும் மாமாகிட்ட பேசல… இவ தான் பேசி இருக்கா…” என்று மிக்கி போர்க்கொடி தூக்க

“ஒழுங்கா குடுங்க குட்டி பிசாசுங்களா…” என்று திட்டி விட்டு செல்பேசியை கபளீகரம் செய்தாள்!

“ஹலோ…” அதீத கோபத்தோடு சொல்ல

“ஓகே பை எலி… அப்புறம் பேசறேன்… கொஞ்சம் வேலை இருக்கு…”

“எலிலிலிலி… நான்… யு… யு…” என்று சொல்வதற்க்குள்ளாக வைக்கப்பட கோபம் இருமடங்கானது! இந்நேரம் வரை இந்த குழந்தைகளிடம் பேசி கொண்டிருந்தவனுக்கு இப்போது என்னிடம் பேச முடியவில்லையா? பற்களை கடித்து கொண்டு செல்பேசியை பார்த்து உருத்து விழித்து விட்டு தன் தாய் அழைக்கவும் உள்ளே சென்றாள்!

********

மிக சுறுசுறுப்பாக வேலைகளை கவனித்து கொண்டிருந்தாள் மேகா, அவளது அலுவலகத்தில்! தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீட்டு தொகை வந்திருந்தாலும் அதை சீர்படுத்த வேண்டிய மிக பெரிய பொறுப்பு இருந்தது! அவளும் கொஞ்சம் கூட சுணங்காமல் செய்ய ஆரம்பித்து இருந்தாள்! கௌதமின் ஆலோசனைகள் மிக முக்கியமாக செயலாற்றி கொண்டிருந்தது! ஒவ்வொரு பிரிவாக பார்வையிட்டவள், திருப்தியாக… வந்த போன் கால்களை அட்டென்ட் செய்து பேசிகொண்டிருந்தாள்! இன்னும் ஒரு வாரமே அஞ்சலியின் திருமணம் நடக்கவிருப்பதால் அந்த பரபரப்பும் மனதில் இருந்தது! மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு சிறு குறுகுறுப்பும் எழுந்தது! ஹார்பரில் இருந்து செயலர் அழைக்க

“சொல்லுங்க சதாசிவம்… கண்டைனர டெலிவரி எடுத்தாச்சா?”

“மேடம்… அதுல தான் கொஞ்சம் சிக்கல்… இங்க ஹார்பர் டெலிவரி ஆளுங்க கொஞ்சம் தகராறு பண்றாங்க…”

“என்னவாம்…”

“சரக்க இறக்க கொஞ்சம் அதிகமா கேக்கறாங்க…”

“சரி குடுத்துடுங்க…”

“இல்ல மேடம்… அவங்க அதுக்காக கேக்கற மாதிரி தெரியல… பிரச்சனைய உருவாக்க வேணும்னே அநியாய ரேட் கேக்கறாங்க…”

“சரி… நான் வரேன்…”

“மேடம்… நீங்க…” என்பதற்குள் செல்பேசி வைக்கப்பட சதாசிவத்தின் முகத்தில் முத்து முத்தாக வியர்வைகள்!

அவசரமாக பெருமாளிடம் கூறி விட்டு விரைந்தாள் மேகா! ஹார்பர் போய் சேர்ந்த போது வாக்குவாதம் முற்றி இருந்தது! நுழையும் போதே கௌதமிடம் இருந்து அழைப்பு வந்தது!

“எங்க மேகா இருக்க?”

“கொஞ்சம் வெளிய இருக்கேன்ப்பா… என்ன விஷயம்?”

“இல்ல… அஞ்சுக்கும் அர்ஜுக்கும் எதாச்சும் கிப்ட் குடுக்கனும்ல… அதான் நீ ப்ரீயா இருந்தா போலாம்னு பார்த்தேன்…”

“ம்ம்ம்… இப்போ கொஞ்சம் வேலை இருக்குப்பா… ஈவினிங் போலாமா?”

“ஓகே டா… யு கேரி ஆன்… பை…”

பிரச்சனையை சொல்லி கௌதமிடம் உதவி கேட்கலாமா என்று நினைத்தவள், அவனுக்கு தொந்தரவு தர வேண்டாம் என நினைத்தாள்! பேசிவிட்டு சதாசிவம் அருகே சென்றவள், அந்த வாக்குவாதத்தை பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் என்னவென்றுவிசாரிக்க அவர்கள் கேட்கும் தொகை உண்மையிலேயே அநியாயமாக இருந்தது! எடுத்து சொல்லி விளக்க, அந்த விளக்கங்களை எல்லாம் அவர்கள் காதிலேயே போட்டு கொள்ளாமல் புதிதாக இவள் பொறுப்பேற்று இருப்பதால் கொள்ளை அடிக்கவே முயன்றனர்! அவர்களுடன் வாதம் செய்து களைத்தே போனாள்!

“இங்க பாரும்மா… நீ சின்ன பொண்ணு ஹார்பர் வழக்கம் எல்லாம் உனக்கு தெரியாது… ஒழுங்கா இத ஒத்துக்கிட்டு போறதுன்னா நாங்க சரக்க இறக்குவோம் இல்லாட்டி எப்படியோ போகட்டும்ன்னு விட்டுடுவோம்… என்ன சொல்ற?”

“என்னங்க… நான் சின்ன பொண்ணா இருந்தா என்ன பெரிய பொண்ணா இருந்தா உங்களுக்கு என்ன? நியாயமா வாங்கற கூலிய வாங்கிட்டு சரக்க இறக்க வேண்டியதுதானே… தேவை இல்லாம ஏன் வம்பு பண்றீங்க…”

“அப்படித்தா செய்வோம்… போ… உன்னால என்ன முடியுதோ செஞ்சுக்கோ…”

“அப்படியா… நல்லா செஞ்சுக்கலாமே… இனிமே நீ இறக்க வேண்டாம்… எங்க ஆளுங்கல வெச்சு நாங்களே செஞ்சுக்கறோம்… போயிட்டு வா…” கடினமாக வந்தது ஒரு குரல்! குரல் வந்த திசையை பார்த்தனர்!

கெளதம் இன்னும் நான்கு பேருடன் நின்றிருந்தான்!

“எங்கள மீறி நீ இங்க சரக்க இறக்குவியா…” என்று ஒருவன் எகிற… கெளதம் பக்கத்தில் இருந்தவனை பார்க்க… அவன் அதற்காகவே காத்து கொண்டிருந்தவன் போல் முன் சென்று

“ஏல… யாருன்னு தெரியாம மோதாத… தூத்துக்குடி பெர்னாண்டஸ்ஸு… முடிஞ்சா பார்த்துக்கோ…”

அந்த ஒரு வார்த்தையே எகிறியவனை அடக்க போதுமானதாக இருந்தது!

“அலெக்ஸ் அய்யாதான் இனிமே இங்க சரக்க பாக்க போறாங்க… முடிஞ்சா கை வெச்சு பாருலே…” என்று கூறி விட்டு கௌதமுடன் வந்திருந்தவர்கள் முன்னேற முதலில் பிரச்சனை செய்த அனைவரும் வேறு வழியில்லாமல் இறங்கி வர வேண்டியதாகி போனது!

தான் ஒன்றுமே கூறாமல்… அவனும் ஒன்றுமே பேசாமல்… அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து… சண்டை போட்டவர்களையே சமாதானம் பேச வைத்த கௌதமின் திறமையை பார்த்து அசந்து தான் போனாள் மேகா! சிறு பெண்ணாம், ஏமாற்றி மிரட்டி பணிய வைத்து விடலாம் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டவர்களுக்கு இப்போது கெளதம் வந்தது கழுத்துக்கு கத்தியானது! தூத்துக்குடி அலெக்ஸ் பெர்னாண்டஸ் என்றால் யாரென்று தெரியாதவர்கள் இல்லை அவர்கள் அனைவரும்! தப்பி தவறி சென்னை ஹார்பரில் அவர்களை நுழைய விட்டால் தங்கள் பிழைப்பு அவ்வளவு தான் என்று உணர்ந்தவர்கள் மேகாவிடம் அதிரடியாக சரணடைந்தனர்!

“அம்மா… பார்த்து கொஞ்சம் சொல்லுங்கம்மா… எங்க பொழப்பே போய்டும்… நாங்க இனிமே எந்த பிரச்சனையும் பண்ணாம சரக்க இறக்கறோம்… ஐயா கிட்ட சொல்லுங்க…” என்று ஆளாளுக்கு கெஞ்சவும் கௌதமை பார்க்க…

“நான் பார்த்துக்கறேன்… நீ விடு…” என்று கண்களால் சைகை செய்தான்!

அவன் வெகு நேர்த்தியாக பிரச்சனையை கையாண்ட விதத்தை பார்த்தே அசந்து போனவள் அவனது ஒவ்வொரு செயலையும் பார்த்து அவளுக்கே தெரியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்! கெளதம் திரும்பி மேகாவை பார்க்க அப்போதுதான் அவளையும் அறியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தது அவளுக்கு புரிந்தது… அதை கௌதமும் பார்த்து என்னவென்பது போல புருவத்தை உயர்த்த… அந்த பார்வையில் தனக்குள்ளேயே குழம்பி போனாள்! அவர்களிடம் பேசி முடித்து விட்டு அனைவரையும் சுமூகமாக அனுப்பி விட்டு மேகாவை நோக்கி வந்தான் கெளதம்!

“நீ பெரிய தைர்யசாலிதான் அதுக்காக ஹார்பர்க்கு எல்லாம் வந்து தான் உன் தைர்யத்த நிரூபிக்கனும்ன்னு அவசியம் இல்ல மேகா…” சொன்னவன் முகம் கல்லாக இருந்தது!

“சாரி கெளதம்… இதெல்லாம் எனக்கு தெரியல… பிரச்சனை பெருசா போகும்னு நான் நினைக்கில…”

“நான் போன் பண்ணும போது கூட உனக்கு சொல்லணும்ன்னு தோணவே இல்ல…” குற்றம் சாட்ட

“இல்லப்பா… நானே சமாளிக்க கத்துக்கனும்ன்னு நினச்சேன்…” கண்கள் நிலம் பார்த்தது!

“அதுல விவேகமும் வேணும் மேகா… என்னை தள்ளி வெச்சுட்டு நீ போய் பிரச்சனைல மாட்டி இருந்தா… இந்நேரம்…” என்றவுடன் பதறியவாறே நிமிர்ந்த மேகாவை பார்த்து நிறுத்தி அவள் முகம் நோக்கினான் கெளதம்!

“இனிமே இப்படி பண்ண மாட்டேன் கெளதம்…” உளமார சொன்னவளை பார்த்து புன்னகைத்த கெளதம் அவளது கன்னத்தில் தட்டி

“குட்… சரி போலாம் கிளம்பு…” என்று காரில் ஏற… அவன் தொட்ட இடம் குறுகுறுத்தது மேகாவுக்கு!

“இப்போ எங்க போறோம்?”

“கிப்ட் வாங்க?”

“என்ன வாங்கலாம்ப்பா?” என்று குழந்தையின் குதூகலத்தோடு கேட்டவளை திரும்பி ஆழமாக பார்த்து புன்னகைத்து

“உன்னோட சாய்ஸ் தான்டா… ஓகே வா?”

“ஓகே ஓகே…” என்று சந்தோஷமாக சொன்னவளை பார்த்து மனதுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது!

மனதளவில் தன்னிடம் நெருங்கி தான் இருக்கிறாள்! ஆனால் ஒரு சில விஷயங்கள் அவளை தடுத்து வைத்திருப்பது என்னவோ உண்மை! அதிலிருந்து கட்டாயம் மேகா வெளியே வருவாள் என்ற நம்பிக்கை வந்து விட்டது கௌதமுக்கு! என்ன பரிசு வாங்க போறீங்க என்று கேட்காமல் என்ன வாங்கலாம் என்று கேட்டதே கெளதம் மனதில் பன்னீர் பூவை தூவி விட்டது! மனதில் இந்த சந்தோஷங்கள் படையெடுக்க காரை மெதுவாக சீழ்க்கை அடித்த படியே செலுத்தினான்!

“என்ன… சார் இன்னைக்கு ரொம்ப குஷி மூட் ல இருக்கார்…” சிரித்தபடியே மேகா கேட்க

“ம்ம்ம்… பின்ன இருக்காதா? மாமா பசங்க அத்தை பசங்க பெரியப்பா சித்தப்பா பசங்கன்னு அத்தனை பேரும் எல்லாம் இன்னிக்கு வர்றாங்கள்ள மேகா… எல்லாரும் இப்படி ஒண்ணா சேர்ந்து டைம் ஸ்பென்ட் பண்ணி நாளாகுது… அதான்…” என்று சொல்லி விட்டு சிரிக்க

“ஓ ஓ ஓ… மாமா பசங்க அத்தை பசங்கன்னா பொண்ணுங்களும் சேர்த்திதானே… அதான் குஷி…” என்று வாய் சொன்னாலும் கண்களில் ஒரு பொறாமை தென்படவே செய்தது! அது ஏனென்று மேகாவுககு தெரியவும் இல்லை! உணரவும் இல்லை!

“பின்ன… அதுங்க இல்லாமையா? எங்க குடும்பம் ரொம்ப பெருசுப்பா… எங்க பாட்டிக்கு மொத்தம் எட்டு பிள்ளைங்க பசங்க…”

“எம்மாடியோவ்…” வியந்தாள்! அதே நேரத்தில் செல்பேசி அழைக்க

“ஒரு நிமிஷம் டா…” என்று கூறி விட்டு செல்பேசியை காதுக்கு குடுத்தான்! அர்ஜுன் தான் அழைத்து இருந்தது!

“சொல்லுடா மச்சான்…”

“எங்கடா இருக்க நீ…”

“கொஞ்சம் மேகாவ கூட்டிட்டு வெளிய வந்திருக்கேன்… என்ன விஷயம் சொல்லு…”

“வாவ்… சூப்பர்… நல்லா ரெண்டு பேரும் நகர்வலம் போங்க…” என்று சொல்லிவிட்டு சிரிக்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… உன் கல்யாணத்துக்கு கிப்ட் வாங்க தான் போறோம்… ஓவரா கற்பனைல மிதக்காத மாப்ள…”

“ஓகே மாமா… நானும் வந்துடறேன்… எங்க போற?” என்று கேட்க, கெளதம் அந்த நகை கடையின் பெயரை கூறினான்!

“சரி போயிட்டு இரு… வந்துடறேன்…” என்று கூறி விட்டு செல்பேசியை வைத்தான்! கெளதம் செல்பேசியை வைத்தவன் விட்ட கதையை தொடர

“ஆங்… எதுல விட்டேன்… எட்டு பிள்ளைங்க இல்லையா? அதுல ஆறாவது தான் எங்க அப்பா ஏழாவது அஞ்சு அப்பா…”

“பரவால்ல உங்க அம்மா அப்பாவாவது ஒரு குழந்தையோட நிப்பாட்டுனாங்களே… அதுவே கிரேட் கெளதம்…” என்று சொல்லி சிரிக்க

“கவலையே படாத… அதுக்கு நான் ஈடு கட்டிடுவேன்…” என்று கூறியது மேகா காதில் சரியாக விழாமல்

“ம்ம்ம்… என்ன சொன்னீங்க?”

“இல்ல… ஒன்னும் இல்ல… சும்மா…” இதழோர புன்னகையோடு! அந்த புன்னகை மேகாவை மனதுக்குள் எங்கோ சென்று தாக்க, பார்வை சங்கமிக்க… சட்டென்று மீட்டு கொண்டாள்!

மேகாவை நினைத்து அவளுக்கே வெறுப்பு தோன்றியது! என்ன ஆயிற்று எனக்கு? ஏன் என் மனம் தடுமாறுகிறது? வேண்டாம்… இந்த மாதிரி தடுமாற்றங்கள் வேண்டாம்… மனமே அடங்கு! மேகா மனதுக்குள் தடுமாறி கொண்டு இருக்க… கார் நின்ற இடம் நகை கடை. பிரத்யோகமாக வைரங்களுக்காகவே பெயர் பெற்ற தனி கடை!

அவனுடன் சேர்ந்து போகும் போது தான் தோன்றியது, அவன் எவ்வாறு ஹார்பர் வந்தான் என்று? நகைகளை பார்த்து கொண்டிருந்தவனிடம்

“கெளதம்… எப்படி அங்க கரெக்டா வந்தீங்க… நான் கூட சொல்லலியே…” குழப்பமாக மேகா கேட்க

மேகாவை பார்த்து புன்னகைத்த கெளதம்,

“மேகா… உன்னோட ஒவ்வொரு செயல்பாடும், கடைல நடக்கற ஒவ்வொரு விஷயமும் என்னை தாண்டித்தான் போகுது… அப்படித்தான் இதுவும்… சதாசிவம் எனக்கு முன்னமே இன்பார்ம் பண்ணிட்டார்டா…” என்று சாதாரணமாக கூறவும் மேகா இன்னும் குழப்பமடைந்தாள்!

“ஆனா ஏன் கெளதம்?”

“நீ கடைய பார்ன்னு சொன்னது உனக்கு தன்னம்பிக்கை வரனும்ன்னு தான் மேகா… உன்னை தனியே தத்தளிக்க விட கிடையாதும்மா…”

“அப்படீன்னா… நீங்களே போய் இருக்கலாம்ல… எதுக்கு நான்?” குழப்பம் அதிகரித்தது!

“அப்புறம் எப்படி நீ இந்த விஷயத்த கத்துகறது? அப்படியாச்சும் என்னை நீ உதவிக்கு கூப்பிடுவன்னு பார்த்தேன்டா…” முகம் சுண்டி போய் கூற

“சாரி கெளதம்… பயமா இருந்தது… உங்களை கூப்பிட நினைச்சேன்… ஆனா உங்களுக்கு வேலை இருக்கும்… எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு விட்டுட்டேன்ப்பா…” என்று வருத்தமாக கூறினாள்!

“ம்ஹூம்… அது இல்ல காரணம்… எதுக்கு இவனையெல்லாம் கூப்பிட்டுகிட்டுன்னு விட்டுட்ட… அதான்…” என்று வேண்டுமென்றே சீண்ட

“நான் அந்த மாதிரி உங்களை நினைக்கவே மாட்டேன் கெளதம்… நீங்க… நீங்க…” நொடியில் கண்களில் நீர் தேங்கி மடை தாண்டி வெளியே வர எத்தனிக்க

“ஹேய்… சும்மா லூலூலாய்க்கு சொன்னேன்… ஹய்யயோ இதுக்கு போய் யாராச்சும் கண்கலங்குவாங்களா? லூசு… லூசு… ஹேய் இது வெளி இடம் டா… வேணும்னா காருக்கு போலாமா?”

“எதுக்கு?” ஙஞனநமண போட்டு கொண்டு கேட்க

“எப்போவும் நீ ஆசை தீர அழுவியே… அதுக்கு தான்… தயவு செய்து இங்க டாம ஓபன் பண்ணிடாத ராஜாத்தி… அதுக்கப்புறம் நீச்சல் தெரியாதவங்க தத்தளிக்க போறாங்க…” கெளதம் சிவாஜி ஸ்டைலில் வசனத்தை உச்சரிக்க

முதலில் புரியாமல் பார்த்தவள் அவன் தன்னை கிண்டல் செய்வதை சட்டென்று உணர்ந்து கெளதமை பார்த்து சிரித்து கொண்டே முறைத்தாள்!

“யு யு… கௌஸ்…”

“அடிப்பாவி… என் தங்கச்சி காத்து உன் மேலையும் அடிச்சுடுச்சா?”

“ம்ம்ம்… இப்படி ஓவரா கிண்டல் பண்ணா அப்படித்தான்…”

“ஓகே… நீ கௌஸ்னே கூப்பிடு… நீ கூப்டா செம கிக்கா இருக்கு”என்று கண்ணை சிமிட்ட, அந்த பார்வை கூறிய அர்த்தத்தை அவளால் உள்வாங்க முடியாமல் தத்தளித்தாள்!

“ஹலோ என்ன பேச்சு ஓவரா போகுது…”

“ஓகே… ஓகே… ஈஸி மேகி… ஈஸி…” என்று சொல்லி சாமாதானபடுத்தியவனிடம்

“பட்… இப்படி எதுக்கு கெளதம்? ”

“என்னதுடா?”

“இல்ல… ஏன் இந்த அளவு கேர் எடுத்து எனக்காக யோசிக்கிறீங்கன்னு கேக்கறேன் கெளதம்… சீரியஸா பதில் சொல்லுங்க…”

“ஏன்னா… நீ என் குழந்தை… என் குழந்தைக்கு நடை சொல்லி தரேன்… அது முதல்ல கீழே விழுந்து அடி பட்டுடுச்சாம்… அதனால நடக்கவே மாட்டேன்னு சொன்ன குழந்தைய என்ன பண்றது… இப்படித்தானே நடை பழக்கனும்…”

“கெளதம்…”

“நீ மாறனும் டா…” கண்களை நேராக பார்த்து கூற நெகிழ்ந்து போனாள் மேகா!

“கெளதம்…” வார்த்தைகள் வெளியே வராமல் தந்தியடித்தன! கண்களில் நீர் கோர்க்க அவனை பார்த்தவள் பக்கத்தில் திரும்பி கண்களை துடைத்து கொண்டாள்!

“கெளதம்… ஐ அம் ப்லஸ்ட்… ரியல்லி… ஐ அம் ப்லஸ்ட்… உங்களை மாதிரி ஒரு நல்ல பிரெண்ட் கிடைக்க குடுத்து தான் வெச்சு இருக்கணும்… தேங்க்ஸ்ப்பா… ரொம்ப தேங்க்ஸ்…”

“தேங்க்ஸ் மேடம்! ஐம் ஆல்வேஸ் அட் யூர் சர்விஸ்”என்று இடை வரை குனித்து பணிவை காட்ட மேகா தன்னை மறந்து சிரித்தாள்! அந்த சிரிப்பை பார்த்து ரசித்தவன் அதில் தொலைந்து போனான்! திடீரென்று பின்னால் இருந்து ஒரு அடி விழ

“டேய் கொஞ்சம் கீழ இறங்கி வாடா… ட்ரீம்லையே இருக்காத… ஹாய் மேகா”வேறு யார் மகானுபாவர் அர்ஜுன் தான்… மேகாவையும் பார்த்து புன்னகைத்து கொண்டே!

“மாப்ள சார்… என்ன்ன்ன்ன மாப்ள சார்… உங்கள விடவா…” கெளதம் வெட்கத்தோடு அவனை வார

“வழியாத… துடைச்சுக்கோ…”

“ஆமா நீ என்ன அஞ்சுகிட்ட பேசறதே இல்லையாம்… உன்னை பத்தி பேசினாலே கடுப்படிக்கறாளாம்… ம்ம்ம்… என்ன விஷயம்… ஏன்டா சண்டையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… சும்மா விளையாட்டுக்குதான்… இப்போவே எல்லாத்தையும் பேசிட்டா… அப்புறம் கல்யாணத்துக்கு பின்னாடி என்னடா பேசறது? த்ரில் போய்டும்டா… எல்லாரும் பேசினா நாங்களும் செல்லும் கையுமா இருக்கணுமா? மாமா… மாத்தி யோசி!” என்று நீளமான லெக்சர் குடுத்த அர்ஜுனை பார்த்து கெளதம் வணங்கி,

“ஓகே வாத்தியாரே… ஓகே…” என்று சொல்லி சிரித்துவிட்டு

“சரி… சரி… சும்மா அரட்டை அடிக்காத வேலைய பாரு!”

“எல்லாம் நேரம்டா…”

அரட்டையை தொடர்ந்து கொண்டே கெளதம் அஞ்சலிக்கும் அர்ஜுனுக்கும் நகை செட் வாங்க… அர்ஜுன் அஞ்சலிக்கு தனியாக வைர மோதிரம் வாங்கினான்! மூவர் மனதும் நிறைந்து சந்தோஷம் வழிந்ததென்னவோ உண்மை!

*********

“ஹேய்… மாலை ரெடியா?”

“மெஹந்தி பங்ஷன் ஆராம்பிச்சாச்சு… இன்னும் ரெடி ஆகலியா? ”

“மேக்கப் ரொம்ப ஆய்லியா இருக்குப்பா… கொஞ்சம் குறைச்சு விடு…”

நிற்க நேரமில்லாமல் தோழிக்காக சுழன்று சுழன்று சுற்றிய மேகாவை பார்த்தவர்கள் மலைத்தனர்!

“எவ்ளோ அழகு இந்த பொண்ணு… என்ன சுறுசுறுப்பு…” தங்களுக்குள் பேசி கொண்டனர்.

அதே போலவே கௌதமும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓட, மஞ்சும்மா இருவரையும் இழுத்து பிடித்து சாப்பிட வைத்தார் இரவு உணவின் போது! ஒரு பக்கம் தன் தங்கை இன்னொரு புறம் தன் நண்பன்! வானளவு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான் கெளதம்! ஒவ்வொரு வேலைகளுக்கும் தனி தனி மேற்பார்வையாளர்களை கௌதமும், அர்ஜுனும் நியமித்து இருந்ததால், தடங்கல் எதுவும் இல்லாமல் அனைத்தும் சுபமாக நடந்தது! முதல் நாள் இரவு மணப்பெண் சீர், மாப்பிள்ளை சீர்… அதன் பின் உருமால் கட்டு சீர் என்று பாரம்பரிய முறைப்படியும் அதனோடு மெஹந்தி விழாவும் நடைபெற மாற்றி மாற்றி அஞ்சலியையும் அர்ஜுனையும் கிண்டல் செய்து கொண்டே இருந்தனர் இருபக்கமும் இருந்த இளவட்டங்கள்!

இருவரையும் சேர்த்து உட்கார வைத்து சடங்குகள் செய்ய… அஞ்சலி அசந்த நேரத்தில் அவளது இடுப்பில் அர்ஜுன் கிள்ள, வலி தாங்காமல் வாயை திறந்து கத்த போனவள், நிதானித்து தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்து விட்டு அர்ஜுனை பார்த்து முறைத்தாள்! அவனோ ஒன்றுமே அறியாதவன் போல திரும்பி கொண்டு அவனது அத்தையுடன் பேசி கொண்டிருந்தவன், அவளை திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டினான்! அவளது அழகை அவ்வப்போது ரசித்து பார்த்து கொண்டிருந்தவன் சிறிது நிதானமாக ஆராய்ந்து… பின்னர் அடிக்குரலில்

“இப்படி முறைக்காத குண்டூஸ்… பார்க்கவே பயமா இருக்கு… பாரு அந்த கேமராமேன் முழிக்கறத…”

“என்னது குண்டூஸா…” முறைத்து கொண்டு கேட்டு”அப்புறம் எதுக்கு இந்த குண்டூஸ லவ் பண்ண”அடிக்குரலில் அவள் முறைத்து கொண்டே கேட்க

“என்ன பண்றது… தெரியாம பண்ணிட்டேன்…” வேண்டுமென்றே பாவமாக முகத்தை வைத்து கொண்டு கலாய்க்க

கடுப்பில்… எதேச்சையாக படுவது போல் காலை”நங்”என மிதித்து விட்டு குறும்பாக பார்த்து விட்டு திரும்ப… இப்போது அவனாலும் வாய் திறந்து கத்த முடியவில்லை!

“இருடி… இதுக்கெல்லாம் சேர்த்து நாளைக்கு நைட் என்கிட்டே தான் மாட்ட போற…”

அந்த நினைவே அவளது இதயத்துடிப்பை எகிற வைத்தது! சட்டென்று உடல் சில்லிட்டு போக முகம் ரத்த சிவப்பை கொண்டது!

“ம்ம்ம்… ஆச தோச… போடா…” என்றாள் கிசுகிசுப்பாக! அவளது சிவந்த முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அர்ஜுனுக்கு! பக்கத்தில் நின்று கொண்டிருந்த மேகா,

“நாளைக்கு மொத்தமா சேர்த்து வைச்சு பேசுங்க… இப்போதைக்கு சீர் செய்யறவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா…” என்று கிண்டலாக கூற

“ச்சீ… போ மேகா…”

“என்னப்பா… இப்போவே போக சொல்ற? கண்டிப்பா நாளைக்கு டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்ப்பா… ஓகே வா”சிரித்து கொண்டே

“ஹேய்… மேகா…” சிணுங்கினாள் அஞ்சலி! கெளதம் தனது பரிசை மேகாவை பக்கத்தில் இருத்தி கொண்டு இருவருக்கும் அளிக்க… கிண்டலும் கேலியுமாக திருமண சடங்குகள் முடிய மறுநாள் சுபயோக சுபதினத்தில் தேவர்கள் பூமாரி பொழிய சுற்றமும் பந்தமும் நட்பும் வாழ்த்த வைதீக முறைப்படி அஞ்சலியை தன்னவளாக்கி கொண்டான் அர்ஜுன்! எனது கடைசி மூச்சு இருக்கும் வரை உன்னை என்னுள் பாதியாக நினைப்பேன் என்றும், அனைத்து சடங்குகளிலும் உனக்கு சமஉரிமை குடுப்பேன் என்று உணர்ந்து சப்தவடிகளை வைத்து ஊர் அறிய உறவறிய இவள் எனது மனைவி என்று உரைத்தான் அர்ஜுன்!

கௌதமின் விழிகள் மேகாவையே ஏக்கமாக தொடர்ந்து கொண்டிருந்தது! அஞ்சலி மணப்பெண்ணாக தேவதையாக கொலுவீற்றிருக்க மேகாவோ எளிமையான பட்டில் சிறு நகைகளோடு தெய்வீக அழகோடு பவனி வந்தாள் பார்ப்பவர்கள் கண்படுமாறு!

அர்ஜுனின் தொழில் முறை நட்புகள் அனைத்தும் வந்திருந்து வாழ்த்த, அனைவரையும் அறிமுகபடுத்தினான் அஞ்சலிக்கு! அஞ்சலியின் நண்பர் கூட்டம் என்று அதிகபட்சம் வந்திருந்தது நண்டு சிண்டுகள் தான் என்பதில் ஐயம் உள்ளதோ? வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஆஷ்ரமத்தில் இருந்து குழந்தைகள் வந்து இருந்தனர்!

“நூறாண்டு காலம் நல்லா இருக்கணும் அஞ்சலி… உன்னோட நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டான்…” ஆஸ்ரம தலைவி வாழ்த்த

“ரொம்ப நன்றிம்மா… சந்தோஷமா இருக்கு!”

“அர்ஜுன்… எங்க அஞ்சலிக்கு ரொம்ப மென்மையான மனசு… ஆஸ்ரமத்துல இருக்கற குழந்தைங்க கஷ்டபட்டாலே அவளால தாங்க முடியாது… அஞ்சலி தன்னோட சம்பாத்தியத்துல அதிகபட்சம் செலவு பண்றது எங்க ஆஸ்ரமம் தான்பா… தயவு செஞ்சு அவளை மனம் கோணாம பார்த்துக்கணும்…” புதிய தகவல் அவனுக்கு இது! விளையாட்டு பிள்ளையாக இருக்கும் அஞ்சலிக்கு இப்படி ஒரு மனமா? வியந்தான்!

********

யாருமற்ற தனிமை!

திருமணம் முடிந்த முதல் இரவு!

ஒவ்வொருவருவரும் இனிமையாக எதிர்நோக்கும் அந்த நாளை ஏதோ பயத்துடனே எதிர்நோக்கி கொண்டிருந்தாள் அஞ்சலி! அவளால் நம்பவே முடியவில்லை ஆறு மாதத்திற்கு முன்னால் ஒருவனிடம் இப்படி பைத்தியமாக மாறுவோம் என்று சொல்லி இருந்தால் வயிறு வலிக்க சிரித்து இருப்பாள்! ஆனால் இப்போதோ எல்லாம் தலை கீழ் ஆயிற்றே! அர்ஜுன் தன்னை மிகவும் விரும்புகிறான் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை ஆனாலும் அவனிடம் தெளிவு படுத்தி கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறதே!

எளிமையான புடவைக்கு மாறியிருந்த அஞ்சலி உள்ளுக்குள்ளே படபடப்பாக அர்ஜுனின் அறையில் ஜன்னல் வழியே வெண்ணிலவின் குளுமையை ரசித்து கொண்டிருந்தாள்!

“கடைசியா என் கிட்ட மாட்டிக்கிட்டியா?” சிரித்தவாறே அர்ஜுன் கேட்க சப்தம் கேட்டு திரும்பினாள் அஞ்சலி! என்னென்னெவோ பேச வேண்டும் என்று எண்ணியவளுக்கு இப்போது அனைத்தும் மறந்து போனது! அவனை பார்க்கும் போதே உள்ளுக்குள் ஏதேதோ செய்தது! ரத்த ஓட்டம் தலைகீழானதோ? புரியவில்லை அவளுக்கு! முகம் சிவக்க நாணத்தோடு அவள் தன்னை நோக்கி நின்ற அந்த காட்சி அர்ஜுன் மனதில் ஓவியமாக பதிந்தது! அழுத்தமான அடிகளோடு அவளை நோக்கி வந்தவன் ஓவிய பாவையாக நின்றிருந்த அவளின் முகத்தை பற்றி அந்த கண்களில் ஏதோ ஒன்றை தேடினான்!

“வாட் இஸ் ஈடிங் யு ஜுஜு?”

“ஜுஜுவா? அப்படீன்னா? அன்னைக்கும் அப்படித்தான் கூப்ட்டீங்க…” அவளுக்கே கேட்டிருக்குமோ என்னவோ!

அதை கேட்டு சிரித்த அர்ஜுன் அவளின் தலையை தட்டி

“உனக்கு வோடபோன் ஜுஜு தெரியாதா? ஐ லவ் இட் எலிக்குட்டி… ஏதோ உன்னை பார்க்கும் போது எனக்கு அந்த கேரக்டர் தான் தோணும்! அதான் உனக்கு செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பேர் ஜுஜுகுட்டி… ஓகே வாடி ஜுஜுகுட்டி…” அவளது மூக்கை திருகியபடி கூற

“ஹாஆஆஆ… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்று அவள் முகத்தை திருப்ப

“வேற எதுலடி குறைச்சல்? சொல்லு டேலி பண்ணிடலாம்”என்று கண்ணை சிமிட்ட அஞ்சலிக்கோ குபீரென்று முகத்தில் ரத்தம் பாய்ந்த உணர்வு! தள்ளாடிய தன் கால்களை நிலத்தில் ஊன்றியபடி சமன் செய்ய முனைய, கண்ணை சிமிட்டியவன், கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் புறம் கொண்டு வந்தான்!

“ஒழுங்கா விடுங்க… உங்க மேல எனக்கு செம கோபம்…”

அவளது கோபத்தின் காரணம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் அவன் கைகளும் உதடுகளும் தன் வேலையை பார்த்து கொண்டிருக்க வலுகட்டாயமாக கைகளை தள்ளி விட்டு அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்டாள்!

“டேய் பிசாசு… ஏன்டா இத்தனை நாளா என்கிட்டே பேசவே இல்ல… ஏன் பேசவே இல்ல…”

“டூ யு மிஸ்ட் மீ?” அவளை ஆர்வமாக பார்த்து கொண்டே

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே… நான் எதுக்கு உன்னை மிஸ் பண்றேன்… என் பிரெண்ட்ஸ் கூட நல்லா விளையாடிட்டு இருந்தேன்…” ஈகோவை விட்டு கொடுப்பேனா என்று நன்றாகவே சமாளித்தாள்!

“லையர்…”

“நோ…”

“உண்மைய சொல்லு… ஒழுங்கா…”

“நான் உண்மையைத்தான் சொல்றேன்…”

“ஒஹ்… அப்படின்னா நீ இங்கேயே இரு… உனக்கும் எனக்கும் நோ பேச்சுவார்த்தை…” தன்னுடன் இறுக்கி இருந்தவன் சட்டென அவளை விட… தள்ளாடினாள்! அதுவரையில் மிதந்து கொண்டிருந்தவள் சட்டென தரையில் விழுந்த மீனானாள்! சோபாவில் அமர்ந்தவனை சிறிது நேரம் பார்த்தவள்… ஒரு வாராக தைர்யத்தை திரட்டி கொண்டு அவன் முன்னர் சென்று எங்கோ பார்த்தவாறே

“ஆமா…” என்றாள்!

“என்னை பார்த்து சொல்லு…”

“ஆமாஆஆஆ…” கடுப்பாக அவனை நன்றாக பார்த்து!

“ஆமான்னா… என்ன ஆமா… எதுக்கு ஆமா… மொட்டையா சொன்னா…” மனதுக்குள் சிரித்தவாறே

“ஆமா உன்னை மிஸ் பண்ணேன்… போதுமா…”

“அப்படி வா வழிக்கு… ஆனா இது போதாது… !” ஒரு மார்கமாக பார்த்து மெலிதாக புன்னகைத்து கொண்டே

“வாட் போதாதா?”

“ஆமா… நான் சொன்னத இது வரைக்கும் நீ என் கிட்ட திருப்பி சொல்லவே இல்ல… அதை சொல்லு…” கண்களை சிமிட்டி கொண்டே

“ம்ம்ம்… என்னது அது…”

“ஹேய் நீ மெகா திருடின்னு எனக்கு தெரியும்… ஒழுங்கா சொல்லுடி…”

“ம்ம்ம்…” என்று யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டு”ஐ லவ் யு”என்று ஒப்புக்கு சொல்லவும்…

“என்னமோ இன்னைக்கு லீவ்ன்னு சொல்ற மாதிரி கேசுவலா சொல்ற… பீலிங்க்ஸ் மா பீலிங்க்ஸ் வேணும்…”

“அதெல்லாம் சொல்ல முடியாது…”

“சொல்லலைன்னா விடு… நான் போய் வெளிய உங்க அம்மாகிட்ட சொல்லிடறேன்…”

“என்னன்னு…” என்றாள் அதிர்ச்சியாக

“உங்க பொண்ணுக்கு என்னை பார்த்தா பீலிங்க்ஸ் வரவே மாட்டேங்குதாம்ன்னு…” என்று வெளியே போக எத்தனிக்க

“ஹேய் வேணாம்…”

“அப்போ சொல்லு…”

“நோ முடியாது…”

“அப்போ போக வேண்டியதுதான்… !” என்று வெளியே போக கதவை திறக்க முயல

“டேய் லூசு… ஐ லவ் யூ டா…” என்று அவசரமாக சொல்லிவிட்டு அவனை பின்னால் இருந்து கட்டி கொள்ள, ஒரு கணம் தாமதித்த அர்ஜுன் மறுகணம் அவளை இறுக்கி அணைத்து இருந்தான்! முகம் எங்கும் முத்தமழை பொழிய துவண்டு தன் கைகளில் சரிந்தவளை மென்மையாக கையில் ஏந்தி கொண்டான்! அவனது கழுத்தில் கைகளை மாலையாக்கிய அவனது காதல் மனைவி… அவனை தன் மேல் இழுத்து… மூக்கோடு உரசி

“இப்போ சொல்லுடா… ஏன் பேசவே இல்ல… ஐ மிஸ்ட் யூ பிசாசு!”

“உன் கிட்ட பேசினா என்னால கண்ட்ரோலா இருக்க முடியாது எலிகுட்டி… அப்புறம் எக்குதப்பா ஆகிட்டதுன்னா… ப்ச்… அதான்…” என்று சிரித்து கொண்டே சொல்லவும்…

“ச்சீ போ… பைத்தியம் மாதிரி உளறாத… உனக்கு வெட்கமே இல்ல”வெட்கத்தோடு முகத்தை மூடி கொள்ள

“ஆமாம்… நான் பைத்தியம் தான்… ஆனா எலிபைத்தியம்…”

அவளது கைகளை விலக்கிய அர்ஜுன் கைகளை பற்றி மோதிரத்தை அணிவித்து விட்டு அந்த கைகளை முத்தமிட்டு

“ஐ லவ் யூ அபிதகுஜலாம்பா…” என்று கண்ணடிக்க

“ஹேய்… வேணாம்ம்ம்ம்ம்…”

“அதான் வேணாம்ன்னு தான் நானும் சொல்றேன்… ’ என்று சிரித்து கொண்டே கூறிவிட்டு காதில் ரகசியமாக முணுமுணுக்க

“ஹய்யோ… ச்சீ போடா…” என்று தள்ளியவளை கொஞ்சம் கொஞ்சமாக தன்னவளாக்கி கொண்டான் அர்ஜுன்!

அவனது மார்பில் சாய்ந்து இருந்தவள்,

“என்னை என்னென்னமோ சொல்லி… பணம் காசுன்னு… அப்புறம் எப்படி நீங்க…” என்று தயங்கவும்

“அச்சோ செல்லத்துக்கு எப்போ வந்து இந்த டவுட் வருது பாரு… எல்லாருமே கடவுள் இல்லடா… ஏதாவது ஒரு குறை இருந்தே தான் தீரும்… உண்மையான லவ்ன்னா அந்த குறையோட ஏத்துக்கிறது தான் அஞ்சலி… சின்ன வயசுல கண்டிப்பா உன் மேல லவ் கிடையாதுடா… அப்போ நீ ரொம்பவுமே சின்ன பொண்ணு… ஆனா ட்ரெயின்ல உன்னை பார்த்த முதல் பார்வைலையே நான் முழுசா நாக் அவுட் பேபி…”

“நிஜமாவா…” ஆச்சரியமாக கேட்டாள்!

“அப்போ உன்னை மட்டும் தான் பார்த்தேன்… உன் அப்பாகிட்ட பேசிட்டு இருந்த… என்னமோ காலம் காலமா உன்னோட வாழ்ந்த மாதிரி ஒரு நினைவு கண்ணம்மா… அந்த பீலிங்க்ஸ என்னால சொல்லவே முடியல… அப்புறம் தான் நீ கெளதம் தங்கச்சின்னு தெரிஞ்சுது…”

“அதனால வேணாம்னு முடிவு பண்ணீட்டீங்களா?”

“ம்ஹூம்… உன் அண்ணா தான் என்னை மிரட்டுனான்…” என்று சொல்லி விட்டு சிரித்தான்!

“மிரட்டினானா?” ஒவ்வொன்றும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது!

“எங்க குடும்பம் அப்படி இப்படின்னு தான்… ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்னை புரிஞ்சுகிட்டான்… ஏன்னா மேகாவ அவன் லவ் பண்ணதுனால…”

“அப்போவே லவ் பண்ணினானா?” அதிர்ச்சியோடு கேட்டாள்!

“ம்ம்ம்… ஆமா எலிக்குட்டி… ஆனா கண்ட்ரோல் பண்ணிகிட்டான்… ஆனா உன் விஷயத்துல எனக்கு ஓகே சொல்லிட்டான்… மும்பை போனவுடனே… நான் உன்னை ஆக்சிடென்ட்ல காப்பாத்தினத பார்த்து இம்ப்ரெஸ் ஆகிட்டானாம்…” என்று சொல்லி சிரிக்க

“ஏன் அதுக்கு என்ன சிரிப்பு?”

“என்னோட முதுகு வலி எனக்கு தானே தெரியும்…” சொல்லிவிட்டு கண்ணடிக்க

“ச்சீ போ… நான் ஒன்னும் அவ்ளோ வெயிட் இல்ல…”

“இல்லடி குண்டூஸ்… இல்லவே இல்லைதான்…”

“நான் குண்டூஸா…” கடுப்பாகி…

“ஹஹா… உண்மைய சொன்னா உனக்கு கோபம் வரும்…” பலமாக சிரித்தான்!

“வேணாம் அர்ஜுன்… என்கிட்டே அடி வாங்காத…” அஞ்சலி குரல் தேய,

“ஹேய்… செல்லகுட்டி… உன்கிட்ட எல்லாமே எனக்கு பிடிச்சதுதான்…” என்று கண்ணடிக்க முகம் சிவக்க அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்!

“சீரியஸா… இன்னைக்கு செம க்யூட்டா இருந்தடா… சும்மா விளையாட்டுக்கு தான் ஓட்டினேன்!” என்று சொல்லி சிரிக்க

“கொழுப்பு கொஞ்சம் ஓவர் டோஸ்ல தான் இருக்கு…” அவனை கிள்ள

“ஆஆஆஆ… ராட்சசி…” கத்த அவன் வாயை கை கொண்டு மூடினாள்! கைகளில் மென்மையாக முத்தமிட்டவன்,

“இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த ஆஸ்ரம பிள்ளைங்க உன்னை பற்றி சொன்னப்போ எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா? நாம எல்லார மாதிரியும் பணம் மட்டுமே குறிக்கோளா வெச்சு பிசினெஸ் பண்றது கிடையாதும்மா… அதையும் தான்டி வால்யுஸ் தான் முக்கியம்… அந்த வகைல நான் ரொம்ப குடுத்து வெச்சு இருக்கேன் எலிக்குட்டி…” அணைத்து கொண்டான்!

“இதே மாதிரி மேகாவும் அண்ணனும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்ல அர்ஜுன்…”

“ம்ம்ம்… கண்டிப்பா நடக்கும்டா… எப்படி பார்த்தாலும் அவளோட ஹெல்த் கண்டிஷன் பார்க்கணும் அஞ்சலி… ஏன்னா இனிமே டென்ஷன் ஆனா ஸ்ட்ரோக் வர்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு அஞ்சு… அதான் கெளதம் பொறுமையா இருக்கான்… இப்போ புதுசா ஒரு அஸ்திரம் ரெடி பண்ணிட்டு இருக்கோம்…”

“என்னது?”

“அது சஸ்பென்ஸ்… வெயிட் அன்ட் வாட்ச்…” என்று சிரித்து விட்டு அணைத்து கொண்டான்! இனியும் அங்கே நமக்கு அங்கே என்ன வேலை? காதல் பறவைகள் எல்லை கடந்து தான் பறக்கட்டுமே! ! !

*********

“எங்க போறோம் கெளதம்?”

“பேசாம வா”

“எங்கன்னு சொல்லுங்க”

“சொன்னாதான் வருவியா மேகா”

“சொன்னா நல்லா இருக்கும்… அவ்ளோ தான் கெளதம்!”

காலையிலேயே வலுகட்டாயமாக அவளை இழுத்து கொண்டு வந்திருந்தான்! என்ன கேட்டும் அவனது வாயிலிருந்து வார்த்தை வருவேனா என்றது! அவளை குழப்பி பின் அழைத்து சென்ற இடம் மருத்துவமனை! இங்கே எதற்காக அழைத்து வருகிறான்? ஒன்றும் புரியாமல் கௌதமுடன் சென்றாள் மேகா!

“வந்துட்டீங்களா!” செல்பேசியில் யாரையோ கேட்க

“…”

“ஓகே… நாங்களும் வந்துட்டோம்…”

“…”

செல்பேசியை வைத்தவன் கைகளை அப்போதுதான் கவனித்தாள்! ஏதோ பைல் மாதிரி ஒன்றை எடுத்து வந்திருந்தான்! எதற்க்காக?

“யார பார்க்க போறோம்ப்பா… சொல்லுங்களேன்…”

“பார்க்க தானே போற… கொஞ்ச நேரம் பேசாம வா…”

மருந்து நெடி நாசியை தாக்கியது! பரபரப்பாக இருந்தது மருத்துவமனை! நகரின் மையத்தில் இருக்கும் அந்த பெரிய மருத்துமனையில் எந்நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்! மனவியலுக்கு பெயர் வாங்கியவர்கள்! வேகமாக நடந்த கெளதமை தொடர்வது மேகாவுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது! சாதாரண நடையாகவே தோன்றினாலும் அவனது உயரத்திற்கு அவன் பின்னால் வேகமாக நடக்க வேண்டி இருந்தது! ஒரு அறையின் வாசலில் நின்ற கெளதம், … மேகாவை கையை பற்றி உள்ளே அழைத்து சென்றான்! அவர்கள் போன அறையில் இருந்தது ஒரு பெண்ணும் இரு ஆண்களும்!

“ஹாய் விஷால்…”

தூக்கி வாரி போட்டது மேகாவுக்கு! விஷால் என்றால்… அந்த… அந்த…

“மேகா… இது விஷால்… இது சுரேஷ்… இது…” ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி கொண்டு வந்தவன் தடுமாறி நிற்க

“நான் ஸ்ரீதேவி…” என்று அந்த பெண் அழகாக சிரித்தாள்!

“சசியோட அக்கா… மேகா…” கொஞ்சம் கீழான குரலில் கூற மேகாவுக்கோ அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை!

“நீங்க… நீங்க… உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்களே…” தடுமாறி அவளிடம் கேட்டாள் மேகா! அவளை தேடி கண்டுபிடித்து பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தவள் மேகா… அதற்காகவே தேடுவதற்கு கூட சொல்லி வைத்து இருந்தாள்! ஆனால் இப்படி தன்னம்பிக்கையின் உருவமாக தன் முன்னே…

“ம்ம்ம் ஆமா… கொஞ்சம் சரி இல்லாம இருந்தது! இப்போ நல்லா ஆயிட்டேன்… இப்போ வாழ்க்கைய நூறு சதவிதம் தன்னபிக்கையோட எதிர்கொள்வேன் மேகா…”

“நான் யாருன்னு…” தடுமாறினாள்!

“விஷால் சொல்லி இருக்கார் மேகா… இன்பாக்ட் அவர் தான் முழுக்க முழுக்க நான் குணமானதுக்கு காரணம் மேகா… நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்ம்மா… இப்போ யார் மேலையும் எனக்கு வருத்தமில்ல… எல்லாமே விதிப்படி நடக்குது… வேற ஒன்னும் நான் நினைக்கல மேகா…” தெளிவாக அவள் பேசுவதை பார்த்து மேகாவுக்கு புது ரத்தம் பாய்வது போல் இருந்தாலும் உள்ளுக்குள் அழுந்தியது! இவளது இந்த நிலைக்கு காரணம்… தடுமாறி கொண்டு இருக்கும் போதே

“மேகா… இதை உன் கையால அவங்க கிட்ட குடு…” அவன் எடுத்து வந்த பைலை அவளிடம் குடுக்க

“என்ன இது அண்ணா…” ஸ்ரீதேவி கேட்டாள்!

“இல்லம்மா… உங்களோட சொத்தை உங்க கிட்டவே சேர்க்க தான் வந்தோம்… வாங்கிக்கங்க…”

“அண்ணா…” குரல் கமறியது!

“கூடவே கொஞ்சம் பணம் வெச்சு இருக்கேன்ம்மா… சசிக்கு எதுவுமே ஈடாகாது… ஆனா உங்களுக்கு நிறைய செய்யணும்ன்னு மேகா நினைக்கிறா… ஐம்பது லட்சம் ரூபாய்க்கு செக் லீப்ஸ் வெச்சு இருக்கோம்ம்மா… வேற என்ன உதவி வேணும்னாலும் கேக்கலாம் நீங்க…”

வியந்து போய் கெளதமை பார்த்தாள்! தான் கூறாமலேயே தன்னுடைய மனதை படித்த தன் நண்பனை நினைத்தால் அவளுக்கு பெருமையாக இருந்தது!

“அவங்க சொத்து மட்டும் போதும் கெளதம்… பணம் வேண்டாம்… நான் இருக்கேன் பார்த்துக்குவேன்ப்பா…” விஷால் கூற

“பரவால்ல விஷால்… இருக்கட்டும்… மேகாவோட மனசு திருப்திக்கு… கல்யாணத்துக்கு கூப்பிடுங்க… நாங்க தான் முன்னாடி நின்னு செஞ்சு வைப்போம்…”

“கண்டிப்பா… உங்க நல்ல மனசுக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் கெளதம் அண்ணா…” ஸ்ரீதேவி கண்ணீர் மல்க கூறினாள்!

“ராகினிக்கு நான் குடுத்த இழப்பீட்டு தொகையை குடுத்துட்டீங்களா விஷால்…”

“ம்ம்ம்… ஆச்சு கெளதம்…” சுரேஷும் சேர்ந்து ஒரே குரலில்!

அந்த மூவருக்குமே அவர்களது சொத்தையும் இழப்பீட்டு தொகையும் கொடுத்து அவர்களது மனதை மாற்றி இருந்தான் கெளதம்! தொழிலில் மேகா வந்தபின் பிரச்சனை இருக்ககூடாதல்லவா!

அவர்களை சந்தித்து விட்டு வந்து காரில் அமர்ந்தவள் நெஞ்சில் சுனாமி!

“எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நான் என்றான்!

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்”

அதீதமாக உணர்சிவசபட்டிருந்த மேகாவுக்கு எதுவுமே புரியவில்லை! இத்தனை நாளாக மனதுக்குள் அழுத்திய பாரம் அனைத்தும் ஒரு சேர விட்டு போனது போல ஒரு உணர்வு! எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு! தண்ணீரில் மூழ்கிய வேளையில் மூச்சுக்கு தத்தளிக்கும் போது காப்பாற்றப்பட்ட உணர்வு!

“கெளதம்… !”

“என்னம்மா?”

“தேங்க்ஸ்… கெளதம்… தேங்க்ஸ்…” நா தழுதழுக்க கைகளை கூப்பி அழ ஆரம்பித்தவள் பின்பு கதற ஆரம்பித்தாள்!

“என்னோட குற்ற உணர்ச்சி இத்தனை நாளா பெரிய பாரமா அழுத்திட்டு இருந்ததுப்பா… எனக்கு அதை எப்படி சொல்றதுன்னே தெரியாம இருந்தேன்… எனக்கு இப்போ பெரிய ரிலீப் ஆ இருக்கு… எப்படி உங்களுக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல… தேங்க்ஸ் பா…”

சிறிது நேரம் பொறுமையாக பார்த்து கொண்டு அழுது முடிக்கட்டும் என்றிருந்தவன் பின்,

“முடிஞ்சுதா?”

“என்ன…” குழப்பமாக பார்த்தாள் மேகா!

“இந்த அழற படலம், நன்றி நவிலும் படலம் எல்லாம் தான் மேகி… முடியலைன்னா சீக்கிரம் முடி…” சிரியாமல் சொன்னவனை

“ம்ம்ம்…” பார்த்து முறைத்தாள் மேகா!

“பின்ன என்ன… நானும் எவ்வளவு நாள் தான் பொறுமையா நீ அழறத பார்த்துகிட்டே இருக்கறதுடா… ஒரு வழியா இன்னைக்கோட அந்த அழற வேலைய முடி…”

“உங்களுக்கு கிண்டலா இருக்கா கெளதம்?”

“இல்லம்மா தாயே… இல்லவே இல்ல… எப்போ பாரு இப்படியே அழுதுட்டே இரு… பாக்க சந்தோஷமா இருக்கு…” கெளதம் கடிக்க அதை பார்த்த மேகா…

“ஓகே இனிமே அழவே மாட்டேன்… போதுமா?”

“அதை நீ செயல்படுத்தும் போது நம்பறேன்… சரியா? அழுது எதை சாதிக்க முடியும் மேகா… என்னோட அப்பா இறக்கும் போது எனக்கு வயசு எட்டு! அந்த நேரத்துல அம்மா துவண்டு போய் அழுதுட்டு உட்கார்ந்து இருந்தா என்னால இந்த நிலைமைல இருந்து இருக்க முடியாதுடா… அவங்க அந்த இழப்ப தனக்குள்ள போட்டு புதைச்சிட்டு தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்காங்க! எங்க சொந்தகாரங்களும் பெருசா ஹெல்ப் பண்ணல… சித்தப்பாவ தவிர… அப்போ சித்தப்பா கொடுத்த தைர்யமும் அம்மாவோட தன்னம்பிக்கையும் அர்ஜுனோட தன்னலமில்லாத ஊக்கமும்தான் இப்போ உன் முன்னாடி இருக்கற கெளதம்! அந்த மாதிரி ஒரு நிலை இல்ல மேகா உனக்கு… உனக்கு எல்லா வசதியையும் உங்க அப்பா செய்து வைச்சுட்டு தான் போயிருக்கார்! எல்லா கட்டுக்களையும் உடைச்சுட்டு வெளிய வா… இந்த உலகமே அழகா தெரியும்! எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற முடியும்…”

“கண்டிப்பா கெளதம்… நீங்க சொல்றது புரியுது… என் மேல அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு எனக்கு நானே சொல்லிட்டே இருந்துட்டேன்… அதுதான் என்னோட எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்… இனிமே கண்டிப்பா தைர்யமா இருப்பேன்ப்பா…”

“எப்படி நம்பறது?”

“அதான் நீங்க என்னோட நண்பரா இருக்கீங்களே கெளதம்… இதை விட எனக்கு வேற என்ன வேணும்? கண்டிப்பா சாதிப்பேன் கெளதம்…”

நண்பனா தானா? வேற ஒன்னுமில்லையா? கெளதம் மனதுக்குள் கேள்வி! ஆனாலும் எதுவாக இருந்தாலும் அவளது வாயிலிருந்தே வரட்டும்! நான் கூறி அதை அவள் ஏற்பது என்பது எப்போதாக இருந்தாலும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்! காத்திருப்போம்!

“நான் இருக்கேன் மேகா… உனக்கு எதுக்குடா கவலை? ஓகே… சரி இப்போ சிரி பார்க்கலாம்…” என்று புன்னகைத்து கொண்டே சொல்லவும்

“ம்ம்ம்”என்று முறைத்தவாறே பார்த்து விட்டு கையால் வாயை இழுத்து”ஈஈஈஈஈஈ போதுமா குருஜி?”

“ஐயோ… வேணாம்… இதுக்கு நீ சிரிக்காமலே இருக்கலாம்… ஐயோ எங்கம்மா எனக்கு வேப்பிலை தான் அடிக்கணும்… அது சரி… அதென்ன குருஜி?”

“ஆமா குருஜி… நீங்க தான் பயங்கர பயங்கரமா அட்வைஸ் மழை பொழியறீங்களே… அப்போ நீங்க குருஜி தானே… !” என்று கூறி அவனை பார்த்து மனம் விட்டு சிரித்தாள் மேகா!

********

இரண்டு வருடங்களுக்கு பிறகு…

“’கங்காருலேஷன்ஸ் மேகா…” என்று சிரியாமல் சொன்ன கெளதமை பார்த்து குழப்பமாக

“எதுக்குகுகுகுகு… குருஜி…” எதுவும் ஓட்டுவதற்காக அவன் இப்படித்தான் ஆரம்பிப்பான் என்பது தான் அவளுக்கு தெரியுமே!

இதற்கிடையில் அவளது வளர்ச்சியை சொல்லியே தீர வேண்டும்! இரண்டு வருடங்கள் முன்பு தீ விபத்தால் (அப்படித்தான் பதிவு செய்யப்பட்டது… சசி, விஷால், சுரேஷ் பெயர் வெளியே வராமல் இருக்க கௌதமின் யோசனை ) பாதிக்கப்பட்ட கடையை சீரமைத்ததொடு தமிழகத்தில் நான்கு கிளைகள் நிறுவியதோடு இல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத்… என்று விரிந்து… அதன் பின் போன வாரத்தில் சிங்கப்பூரிலும் கால் பதித்து விட்டாள்! எங்கும் கணபதி ஸ்டோர்ஸ் என்பதே அவளது தாரக மந்திரமாக இருந்தது! இது முழுக்க முழுக்க கௌதமுடைய கைங்கரியம் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம் தானே! ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைக்க தயாராக இருந்தாள் மேகா… அவளை மிக சரியாக உபயோகபடுத்தினான் கெளதம்! ஆனால் எண்பது சதவித வேலைகளை அவன் பார்த்து விட மீதமுள்ள இருபது சதவித வேலைகளே அவளுக்கு வரும்! ஆனாலும் மேகாவை முன்னிறுத்துவதில் அவனுக்கு நிகர் அவன் தான்!

அவளது கைகளை பற்றியவன்

“best women entrepreneur of the year அவார்டீய பார்த்து என்ன சொல்ல முடியும் மேகா…” என்று சந்தோஷத்தை அடக்கிய குரலில் சொல்ல மேகாவுடைய முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தெறித்தது!

“கெளதம்…” கண்கள் விரிய சந்தோஷத்தை வெளிப்படுத்த

“எஸ் மேன்… நீ தான் இந்த வருஷ வின்னர்… யாஹூ…” என்று குதித்து அவளையும் தூக்கி தட்டாமாலை சுற்றினான்!

சிஐஐ கூட்டமைப்பின் கான்பிரன்ஸ் ஹால்

மும்பையில் இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களின் கூட்டமைப்பு! இந்த கூட்டமைப்பின் விருது என்பது பல இளம் தொழிலதிபர்களின் கனவு!

ஹாலில் முதல் வரிசையில் கெளதம், மேகாவுடன் அஞ்சலி தனது ஒரு வயது வாண்டு ஸ்ரீஹரியுடன் உட்கார்ந்து இருக்க அர்ஜுன் மேடையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான்… சிஐஐ செயலாளர் என்பதால்! இந்த இரண்டு வருடங்களில் கெளதம் விளம்பர உலகின் முதன்மையான இடத்தில் இருந்தான்! இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் இவனது விளம்பர படங்கள் பேசப்பட்டது!

“பசி நோக்கார் கண் துஞ்சார்”என்று உழைத்த அவனது இந்த உழைப்பு இன்று கொண்டாடப்பட்டது! கெளதம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அதிதி ஸ்ரீவத்சவா… சிஐஐ தலைவர் நாராயன் ஸ்ரீவத்சவாவின் ஒரே செல்ல புத்திரி! உடை அணிந்திருந்த பாங்கே கவர்ச்சியை வெகுவாக அள்ளி தெளிக்க வெகு சாதாரணமாக கெளதம் கையை பற்றி கொண்டு பேச ஆரம்பித்தாள்! இருவரின் உரையாடல்கள் மேகாவின் கவனித்திலிருந்து தப்பவில்லை! தீ மூண்டது மேகாவினுள்! விட்டால் அதிதியை கண்களாலேயே எரித்து விடுபவள் போல உறுத்து முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்!

“ஹேய் மேகி… பக்கத்துல பார்த்தியா… அந்த அதிதிய… செம பிகர் இல்ல…” மேகாவின் காதை கடித்தான் கெளதம் அவனுக்கு அவனே ஆப்பு வைத்து கொள்வதை அறியாமல்!

“ஆமா ஆமா…”

“கண்ணுல என்னமா கவர்ச்சி பொங்குது பாரேன்…”

“ஆமா ஆமா…” அவளது கடுப்பை உணராமல்! ஏதாவது அழகான பெண்களை பார்த்தால் மேகாவிடம் கண்டிப்பாக கூறுவான்! இருவருக்கும் இயல்பான ஒன்று இது! அப்போதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ செய்தாலும் அவளது நண்பனுக்காக சேர்ந்து ரசித்து விட்டு… அவளும் ஏதாவது நகைச்சுவையாக கூறுவாள்! அப்போதெல்லாம் இந்த அளவு பொறாமை தீ பரவியதில்லை!

சட்டென உணர்ந்தாள் மேகா… ஏன் இவ்வளவு எரிச்சல் தனக்குள் அந்த பெண் கௌதமின் கைகளை பற்றியதற்க்கு? அவனது தொழிலில் இல்லாத பெண்கள் நட்பா? ஆனால் அவனது கட்டுப்பாடுகளை முழுமையாக உணர்ந்தவள் மேகா! அதிசயித்தும் இருக்கிறாள்! அழகை ஆராதிப்பான் ஆனால் ஒரு புள்ளி கூட அதிகமாக போக மாட்டான் என்பது அவளுக்கு முழுமையாக தெரிந்த ஒன்று! இன்று மட்டும் ஏன் தனக்குள் இப்படி ஒரு தீ பரவுகிறது?

“காதல்”

உணர்ந்த மறுவினாடி உடல் முழுவதும் குப்பென வியர்த்தது மேகாவுக்கு! தானா? காதலா? ஆமாம்! அப்படி இல்லையென்றால் தனக்கு இந்த பொறாமை வருவதற்கு வாய்ப்பு இல்லையே! கெளதமை பார்த்தாள் மேகா! கம்பீரமாக புல் சூட்டில் ஆண்மையின் முழு வடிவமாக அமர்ந்து இருந்தான்! அதிதி அவனது காதில் ஏதோ கூற அதற்கு புன்னகைத்த கெளதமை பார்க்க பார்க்க உள்ளுக்குள் கோபம் கனன்றது! விட்டால் சட்டையை பற்றி சண்டைக்கு போய் விடுபவள் போல முறைத்து கொண்டு இருந்தாள்! ஆனாலும் அவள் உணர்ந்த காதல் சுகமாய் இருந்தது!

மைக்கில் அறிவிப்பு வந்தது!

“மே ஐ ரெக்வஸ்ட் மிஸ்டர் அர்ஜுன் வானமாமலை, அவர் செக்ரடரி டு பெலிசிடேட் தி அவார்ட்… டு மிஸ் மேகா கணபதி… லெட் அஸ் சியர் அப்…”

பலத்த கைதட்டலுக்கு இடையில் மேகா மேடைக்கு செல்ல… கெளதம் மற்றும் அஞ்சலியின் நிலையோ உணர்ச்சி மயமாக இருந்தது! அந்த அறிவிப்பாளரிடம் ஏதோ கூற

“மே ஐ ரெக்வஸ்ட் மிஸ்டர் கெளதம் நாராயணன் டு தி ஸ்டேஜ் ப்ளீஸ்… டு ஷேர் தி அவார்ட் வித் மிஸ் மேகா கணபதி!”

ஒரு கணம் திகைத்த கெளதம் புன்னகையோடு அஞ்சலியை பார்த்து விட்டு எழுந்து செல்ல… அரங்கு கைதட்டல்களால் நிரம்பியது! கை தட்டல்களுக்கு இடையில் மேகாவுடன் சேர்ந்து விருதை பெற்று கொண்டான்! மைக்கை வாங்கிய மேகா…

“அனைவருக்கும் வணக்கம்… இந்த இடத்தில் நான் இப்போ இருக்கிறேன் என்றால் அதற்க்கு ஒரே காரணம் எனது நண்பர்கள்! வாழ்க்கையே வெறுத்து போய் இந்த உயிரே வேண்டாம் என்று நான் நினைத்த போது எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய நண்பர்கள் மட்டுமே! முதலில் அஞ்சலி சிவதாணுமங்களம் அடுத்தது அர்ஜுன் வானமாமலை! நன்றி அஞ்சலி… நன்றி அர்ஜுன் நீங்கள் இருவரும் இல்லை என்றால் நான் என்னவாகி இருப்பேனோ தெரியாது! கடைசியாக ஆனால் முதன்மையான ஒரு நண்பர் என்னுடைய கெளதம்! கெளதம் நாராயணன்! நான் அழுத போது எனக்கு தோள் குடுத்து என்னுடைய சோதனையான காலத்தில் எனக்கு பக்கபலமா இருந்து… எனக்கு வாழ்க்கையை வாழ கற்று கொடுத்தது என்னோட உயிர் நண்பர்! கெளதம்… நீங்க இல்லைன்னா நான் இல்லை! இப்போது நான் இங்கே நிற்கிறேன் என்றால் அது நீங்க எனக்கு தந்தது… எல்லா புகழும் என்னுடைய கௌதமையே சாரும்… ஐ லவ் யூ கெளதம்…”

அழகான ஆங்கிலத்தில்… உணர்ச்சிவசப்பட்டு மேகா கூறி விட்டு கெளதமை பார்க்க… அவனது நிலையோ வரையறுக்க முடியாத நிலையில் இருந்தது! அவனது பொறுமைக்கு தகுந்த விடையாக அவள்!

பார்ட்டி ஹாலில் பார்ட்டியை முடித்து விட்டு நால்வருமாக குட்டி வாண்டோடு கிளம்பியவர்களுக்குள் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற கேள்வி! ஒன்றும் பேசாதே என்று அர்ஜுன் சைகை செய்ததால் அஞ்சலி வாய் திறவாமல் வந்தாள்! எதுவாக இருந்தாலும் முதலில் அவர்களிருவரும் பேசி கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்!

அர்ஜுனின் மும்பை வீட்டில் இருவரையும் இறக்கி விட்டு… கெளதம் மேகாவை அழைத்து சென்ற இடம் அவனது மும்பை அலுவலகம்! அவனுக்கு அந்த தனிமை தேவைப்பட்டது சில விஷயங்களை மேகா மூலமாக தெளிவாக்க! அலுவலகத்தை அடைந்தவன் உள்ளே அழைத்து சென்றான்! மேல் கோட்டையும் டையையும் கழற்றி போட்டு விட்டு ஓய்வாக சோபாவில் அமரும் வரை கூட இருவருக்கும் ஒரு சிறு பேச்சுவார்த்தையும் இல்லை!

சோபாவின் நுனியில் மேகா அமர்ந்து இருந்ததை வைத்தே சொல்லி விடலாம் அவளது பதட்டத்தை! தண்ணீர் எடுத்து அவளுக்கு கொடுக்க அதை வாங்கியவள் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்! அவளுக்கு தேவைப்பட்டது! நிமிர்ந்து அவனை பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவன் தன்னை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டிருப்பதை!

“என்ன அப்படி பார்க்கறீங்க?” பாதி விழுங்கியும் விழுங்காமலும் கேட்க… புன்னகைத்தான் கெளதம்!

“ம்ம்ம்… என்ன பண்றதுன்னு தான்…”

“என்ன?”

நிமிர்ந்தவளுக்கு கண்கள் உயர்த்தி அவனை பார்ப்பதே பெரும் வேலையாக இருந்தது! தனிமையில் கௌதமுடன் இருந்ததே இல்லை என்று சொல்லவே முடியாது! இரவு ஒரு மணியை தாண்டும் போது கூட தொழில் நிமித்தமான விவாதங்கள் அவர்களிடையே வெகு சாதரணமான ஒன்று! அவற்றோடு எவ்வளவோ விஷயங்கள் அவர்களிடையே பகிர்ந்து கொள்வதும்… அதாவது வானத்தின் கீழ் உள்ள அனைத்து விஷயங்களையும் அந்த இரவு வேளைகளில் பேசியும் இருக்கின்றனர்! ஆனால் இந்த தனிமையை போல இருந்ததில்லை! மனம் படபடக்க அமர்ந்து இருந்தாள்!

“எந்த அர்த்தத்துல மேகா அப்படி சொன்ன?”

“எந்த அர்த்தத்துல சொல்லணும் கெளதம்?”

“நான் எடுத்துக்கற அர்த்தம் உனக்கு புரியாதது இல்லையே… என்னோட காதலுக்கு வயசு ரெண்டரை மேகா…”

முகம் சிவக்க அவன் பக்கம் நெருங்கி உட்கார்ந்தவள்,

“இதுக்கு மேலையும் என்னால எப்படிடா விளக்கமா சொல்றது?” கிசுகிசுப்பாக கூறியவள் அடுத்த நிமிடம் கௌதமின் இறுக்கமான அணைப்பில் இருந்தாள்! முகம் எங்கும் முத்தார்ச்சனை நடத்திய கெளதமின் அன்பு தாக்குதலை தாள முடியாமல் அவன் மேல் துவண்ட கொடியானாள் மேகா!

“வேணாம் ப்ளீஸ்… கெளதம்ம்ம்ம்ம்…”

“எனக்கு வேணுமே… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…”

“ச்சீ… என்னப்பா… விடுங்க…”

“ம்ம்ம்… அப்படியா… அப்படீன்னா என் கைக்குள்ள தான் இருக்கணும்… ஓகே வா…” என்று கூறிய கௌதமின் கையை பற்றி தன் கன்னத்தில் வைத்து கொண்ட மேகாவுக்கு இந்த உலகமே அழகானது!

“கெளதம்… ஏன் கெளதம்? இந்த அளவு நீங்க லவ் பண்றதுக்கு நான் தகுதியான ஆளா? அதுவும் நான் முதல்லயே சசிய லவ் பண்ணதெல்லாம் தெரிஞ்சவங்க நீங்க… !”

“ப்ளீஸ் மேகா… அந்த பழைய கதையெல்லாம் பேசாதடா…”

“இல்ல கெளதம்… இந்த ஒரு முறை தான்… சொல்லுங்க ப்ளீஸ்!”

“முதல் முதல்ல உன்னை பார்த்தப்போவே நீ என் மனசுக்குள்ள வந்துட்டன்னு சொன்னா நம்புவியாடா…” என்று அவளது முகம் பார்த்து கூறியவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்!

“கெளதம்…”

“அப்போ நீ யாருன்னு எனக்கு தெரியல… ஆனா தெரிஞ்சப்போ எனக்கு ஏற்பட்ட மனசு கஷ்டத்த சொல்லவே முடியாது மேகா…”

“கெளதம்…”

“ஆமாம்… ஆனா மனச கட்டுபடுத்திகிட்டேன்… அதுவும் அந்த ஆக்சிடென்ட் அப்போ என்னோட நிலைய சொல்லவே முடியல… ப்ச்… ஆனா என்னவோ தப்புன்னு மட்டும் மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லிகிட்டே இருந்தது…” மேகா மெளனமாக கேட்டு கொண்டிருந்தாள்!

“அதையெல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு மேகா… ஆனா ஒரு விஷயம் எனக்கு இப்போவும் ஆச்சரியம் தர்றது சசி என்கிட்டே கடைசியா பேசினது தான்…”

“ஆமா முன்னாடியே சொல்லி இருக்கீங்க… என்ன சொன்னாப்ல?” மெல்லிய குரலில் கேட்டாள்!

“நீ ஒரு பரிசுத்தமான தேவதைன்னு சொல்லி உன்னை பார்த்துக்க சொன்னாப்ல… அதையும் என்கிட்டே சொன்னதுதான் என்னோட ஆச்சரியம்… அதுதான் அவனோட கடைசி பேச்சு மேகா… இதுனாலேயே அவன் மேல எனக்கு இருந்த கோபம் எல்லாம் போச்சு…”

“ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்சுகிட்டு எப்படி கெளதம்?”

“மேகா… ஒரு பாரதியார் பாட்டு தெரியுமா? காக்கை சிறகினிலே நந்தலாலா… நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா… அதாவது காக்கையோட நிறத்துல கூட கண்ணன பார்க்குற நிலை மேகா… அதாவது உண்மை காதலை பாரதியார் சொல்லி இருப்பார்… அதே நிலை தாண்டா என்னுடையதும்… அப்போவும் உன் கிட்ட நான் பார்த்தது தன்னலமில்லாத அன்பும் அப்பாவித்தனமும் தான்… நான் லவ் பண்ணதும் அதை தான்…”

“நான் ரொம்பவே குடுத்து வெச்சு இருக்கேன் கெளதம்… தேங்க்ஸ் ப்பா… தேங்க்ஸ் எ லாட்…”

“ஹேய்… நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்…”

“எதுக்கு?”

“நீ இப்படி வாகா என் மேலேயே இருந்தா எனக்கு அப்படியே மிதக்கற மாதிரி இருக்கு… செம கிக்கா… அதான் சொன்னேன்…” சிரிக்காமல் சொன்னவனை ஒரு கணம் புரியாமல் பார்த்தவள் பின்னர் அர்த்தம் புரிந்து அவனை தள்ளி விட்டு

“ம்ம்ம்… அதுக்கு நீங்க பார்ட்டில ஈஷிக்கிட்டு இருந்தீங்களே… அவ கிட்டயே போங்க…”

“எவ கிட்ட…” கொஞ்சலாக அவன் கேட்க

“அதான் அந்த அதிதி… அப்போ எனக்கு அப்படியே கோபம் வந்தது பாரு… மவனே அவ தான் ஈ ன்னு இளிச்சா நீயும் அப்படி ஈஷனுமா?” கோபம் கொப்பளிக்க மேகா கேட்க

“ஹேய் என்னடி மரியாதை குறையுது…”

“ஆமா… பின்ன… எவ கிட்டயாச்சும் வழிஞ்ச… உனக்கு மரியாதை கிடையாதுதான்…”

“எவ கிட்ட வழிஞ்சேன்… எனக்கு தெரிஞ்ச பிகர் எல்லாம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நீ மட்டும் தான்டி… ஆனா இப்போ முடிவு பண்ணிட்டேன்…”

“என்ன?”

“நீ இந்த லெவலுக்கு வர்றதுக்கே இவ்ளோ நாள்… இனிமே கல்யாணத்துக்கு எவ்வளவு நாளோ? அதான் கிடைச்ச பிகர எல்லாம் கரெக்ட் பண்ண முடிவு பண்ணிட்டேன்…”

“பண்ணுவ… பண்ணுவ… அதுக்கு உன்னை விட்டாதானே…”

கையில் கிடைத்த நோட்பேடை எடுத்து கொண்டு துரத்த… கெளதம் ஓட…

மேகத்தில் இருந்து வெளியே வந்த வெண்ணிலா ஒளி வெள்ளத்தை பாய்ச்சியது! சிலுசிலுவென வீசிய காற்றில் மயங்கின இரண்டு ஜோடிபுறாக்கள்! இனி அவர்களின் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீசும்!

***********


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!