Kse-5

Kse-5

              அத்தியாயம் – 5

புரியாமல் பார்த்திருந்த மிதுவை நோக்கி திரும்பிய அரவிந்த் கேள்வியாக அவளை நோக்கினான்.

“அவ என்ன சொல்லிட்டு போறா?”

“நீ யார்? என்னுடைய மனைவியான்னு கேட்டுட்டு போறா?”

“அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?” என்றாள் உணர்ச்சிகளை துடைத்த குரலில்.

அவளை ஒரு நொடி உற்றுப் பார்த்தவன் “என்னுடைய மனைவின்னு சொன்னேன்”

அவனை ஒரு நொடி பார்த்தவள், பேசாமல் வண்டியில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

தோளை குலுக்கிக் கொண்டு அவனும் வண்டியை கிளப்பிக் கொண்டு வீடு நோக்கி பயணித்தான்.

வீட்டில் ஜீப் நிற்கவும், இறங்க அவளின் பின்னே அவனும் இறங்கிக் கொண்டான். அவள் முகத்தைப் பார்க்க உம்மென்று இருந்தாள் அவள்.

“சிறு சிறு விசயங்களுக்கு, நீ ரொம்ப அப்செட் ஆகிறாய்”

“எது சிறிய விஷயம் இதுவா? மனைவின்னு எப்படி நீங்க சொல்லலாம்… மனைவின்னா என்ன முறை உங்களுக்கு தெரியுமா?”

அவன் பேசாமல் இருக்கவும் “உங்களை தான் கேட்கிறேன்”

“நீங்க மனைவின்னு சொல்லுறது எனக்கு பிடிக்கலை”

“ஏன் உண்மையை தானே சொல்லுறேன்? நீ என் மனைவி தானே?”

உடனே வெகுண்டெழுந்து விட்டாள் மிது. “லூசா உனக்கு? நான் தான் உன் மனைவியே இல்லையே?” கத்தி விட்டிருந்தாள் மிது.

“அது உனக்கும், எனக்கும் தானே தெரியும், ஆனா உன் கழுத்தில் கிடக்கும் கருகுமணி அப்படிச் சொல்லாதே?” கையில் அந்த கருகுமணியை பிடித்தபடி நின்றிருந்தான்.

அவனையே அதிர்ச்சியாக பார்த்திருந்தாள். ‘எவ்வளவு ஈசியாக சொல்லிவிட்டான்’

“காலையில் கிளம்பி ரெடியா இரு… பாட்டியை பார்க்க போகணும்” அறிவிப்பாக உரைத்தவன் வேகமாக வீட்டின் உள்ளே சென்றான்.

‘விட கூடாது இவனை’ எண்ணியவள் அவனின் பின்னே சென்றாள்.

அவன் பங்களாவின் இன்னொரு பெரிய அறைக்கு சென்று அங்கிருந்த பிளேயரில் பாடலை ஒலிக்க விட்டபடி உட்கார்ந்தான்.

ஸ்பீக்கரில் ஏதோ ஒரு பாடல் அலறிக் கொண்டிருந்தது. அவனுக்கு பிடித்த பாடல் போல, தலையை அங்கும், இங்கும் ஆட்டிக் கொண்டிருந்தான்.

அவன் அறைக்கு சென்றவள், பிளேயரை ஆஃப் செய்ய, மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தான் அவன்.

அவன் முன் அவள் கோபத்துடன் நின்றிருந்தாள்.

“கையில் பாலுடன் வந்திருந்தால் முழு மனைவியாக மாறியிருப்பாய்” அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி ரசனையாக கூறினான்.

கண்களை சுற்றும், முற்றும் சுழலவிட்டவள், கட்டிலில் இருந்த தலைகாணியை எடுத்து ஆத்திரம் தீருமட்டும் அவனை அடித்து விட்டு, வெளியில் சென்றாள்.

முகத்தில் தோன்றிய சிரிப்புடன், அவளின் அடிகளை சுகமாக பெற்றுக் கொண்டான் அரவிந்த்.

ஆனாலும் அவளை கொஞ்சம் சீண்ட எண்ணியவன் பின்னோடு அவளின் அறைக்கு சென்றான்.

கட்டிலில் அமர்ந்திருந்து, தலையில் கை வைத்திருந்த அவளின் தோற்றம் அவனை வருந்த வைக்க, ‘இவளுக்கு இது செட் ஆகாதே’ எண்ணியவன் அவளை கடுப்பாக்க கிளம்பினான்.

“சரி இப்போ நான் என்ன தான் செய்யணும்” அவளின் முன் போய் நின்றான் அரவிந்த்.

இப்பொழுது, வேகமாக தலையை உயர்த்தி அவனை பார்த்திருந்தாள் மிது. கண்கள் மிகவும் கலங்கி இருந்தது.

அவளின் இந்த நிலை அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அவனின் ஜான்சி ராணி மிதுவை தான் அவனுக்கு பிடிக்கும். கடந்த நான்கு வருடங்களாக அவன் மனதை ஆக்கிரமித்திருக்கும் மிது.

அவளிடம் நேராக போய் நின்று உன்னை காதலிக்கிறேன் என்று கூறினால், கண்டிப்பாக அவள் அவனை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டாள்.

அதனால் தான் அவளுக்கு உதவும் நோக்கில், அவளை இங்கு வரவைத்தான். பாட்டி முன் இவளை அழைத்து சென்று விட்டால் போதும், தன் ஆசையை அவர் நிறைவேற்றி வைத்து விடுவார்.

“பிளீஸ் என்னை விட்டுடேன்?” மிகவும் கலங்கிப் போய் கேட்டாள் மிது.

“சரி விட்டுடுறேன். ஆனா ஒன்னு” நிறுத்தியவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவள், அவனைப் பார்க்க “நீ சென்னை போகும் போது என் மனைவியா தான் போகணும். இதுக்கு சம்மதம்னா? சொல்லு உங்க அம்மா செலவை நான் திரும்ப கேட்கவே மாட்டேன். உங்க அம்மாவும் நல்லா சரியாகிருவாங்க”

‘என்ன சொல்கிறான் இவன்… இவனை நான் திருமணம் செய்ய வேண்டுமா? இதில், அம்மாவை நினைவு படுத்துகிறானே? மீண்டும் முதலில் இருந்து வருகிறானே’

“நான் ஆறு மாதம் கழித்தே சென்னை செல்கிறேன்”

“அப்போ எனக்கு மனைவியாக வாழ ரெடியா?” கேலியாக கேட்டான்.

“ச்சே… வாயை மூடுடா”

அவள் மரியாதை இல்லாமல் கூறியதை கூட அவன் கவனிக்கவில்லை. ஆனால், அவளின் கோபத்தை எப்பொழுதும் போல் ரசித்தான்.

ஆனால், அதை அவளுக்கு காட்டாமல், “காலையில் சீக்கிரமே கிளம்பி இரு” கூறியவன் நிற்காமல் சென்று விட்டான்.

அதற்கு மேல் அவனுடன், அவளால் பேச முடியவில்லை. கதவடைத்து அப்படியே கட்டிலில் விழுந்து விட்டாள்.

இனி அவளால் எதுவும் செய்யமுடியாது. இங்கிருந்து சென்றால், தன் தாயின் மருத்துவ செலவு நின்று விடும். எல்லா இடத்தையும் அடைத்து வைத்து விட்டான் இறைவன்.

‘பேசாமல் இரு உன்னை மீறி எதுவும் நடந்து விடாது. அவனின் பாட்டியிடம் பேசி பார்’ மனம் எடுத்துரைக்க, அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்ததும் அவளை தான் பார்த்தான் அரவிந்த். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள். அவளையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தான்.

‘உனக்கு இத்தனை திமிர் ஆகாதுடி’ செல்லமாக கொஞ்சிக் கொண்டான்.

அவள் கொஞ்சமாய் அசைவது போல் தெரிய உடனே எழுந்து அவன் அறைக்கு சென்றான். ‘இவன் அங்கு இருந்தது தெரிந்தால், அதற்கும் ஒரு ஆட்டம் ஆடுவாள்’ பயந்தவன் ஓடியே விட்டான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் கிளம்பி, வர அவளும் கிளம்பி தன் உடமைகளுடன் அவனை நோக்கி வந்தாள்.

அவளை அழைத்துக் கொண்டு பாட்டி வீட்டை நோக்கி சென்றான் அரவிந்த்… மிது இங்கு வந்த விஷயம் எப்படியும் பாட்டி காதுக்கு சென்றிருக்கும்.

யோசனையாக ஜீப் ஒட்டி வந்தான் அவன். அவன் முகத்தை இருமுறை பார்த்த மிதுவும் அமைதியாக வந்தாள். மனமோ பாட்டியிடம் என்ன பேசவேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தது.

மிதுனாவை பற்றி ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தான் அரவிந்த். அவரும் இவளின் வரவுக்காக தான் ஆவலுடன் காத்திருக்கிறார்.

காலையில் இருந்தே இருமுறை அழைத்து விட்டார். இவன் தான் நேரில் சென்று பார்க்கலாம் என அவரின் அழைப்பை தவிர்த்தான்.

வாசலில் ஜீப் நிற்கவும், வீட்டில் உள் இருந்து ஒரு வயதானவர் ஓடி வந்தார்.

வெள்ளை நிற புடவை உடுத்தி, முந்தானையை தலையோடு போர்த்தி இருந்தார். பார்க்கும் பொழுதே அத்தனை அழகாக இருந்தார்.

பார்த்ததும் கண்டுக் கொண்டாள். அவனின் பாட்டி என்று, காரணம் அவனை போலவே அவரும் இருந்தார்.

“பாட்டி” என அழைத்துக் கொண்டே அவரை அணைத்துக் கொண்டான் அரவிந்த்.

“ஏ லடிக்கி இங்க வா” அவர் அழைக்க,

‘யார் அந்த லடிக்கி… இங்க பேர் எல்லாம் வித்தியாசமா தான் இருக்குமோ? லடிக்கி, செடிக்கின்னு’ யோசனையாக கண்களை எங்கும் சுழல விட்டாள் மிது. அவர் தன்னை தான் அழைக்கிறார் என கிஞ்சித்தும் அவள் எண்ணவில்லை.

அவளின் சுழல் பார்வையை கண்ட அரவிந்த் “மிது உன்னை தான் பாட்டி கூப்டுறாங்க” மெதுவாக உரைத்தான்.

“என் பெயர் லடிக்கி இல்ல… நான் மிதுனா இது கூட உன் பாட்டிக்கு நீ சொல்லலியா? இல்ல இது உன் பாட்டியே இல்லையா?” மெதுவாக சீறினாள்.

தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டான் அரவிந்த் ‘அறிவாளின்னு நினைச்சா, இப்படி மடச்சாம்பிராணியா இருக்கிறாளே? இதனால் தான் என் கண்ணில் வழியும் காதலை சரியா புரிஞ்சுக்க மாட்டேங்குறாளோ?’ எண்ணியவன் அவளின் கையை வலுகட்டாயமாக பிடித்திழுத்து பாட்டி காலில் விழுந்தான்.

அவர்களை ஆசிர்வதித்தவர், தன் அறைக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் அவளை அழைத்து வரக் கூறினார்.

மிது, அரவிந்த் முகத்தைப் பார்க்க, “என் பாட்டி என்னை மாதிரி மோசம் இல்லை… ரொம்ப நல்லவங்க” அவளிடம் கூற, அவனை முறைத்து விட்டு அவளுடன் சென்றாள்.

அவளையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தார் அவர். ‘பேரன் நல்ல பொண்ணை தான் அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்திருக்கான்’ மனதில் எண்ணிக் கொண்டார்.

“தமிழ் படிக்க தெரியுமா?” முகத்தை கெத்தாக வைத்துக் கேட்டார் அவர்.

“தெரியும்” மெதுவாக தலையாட்டினாள் மிது.

“இலக்கியம் தெரியுமா?’

‘அட ஆண்டவா? இதென்ன சோதனை… மனிதனுக்கு இப்படியா சோதனை வரணும்’ கடுப்பானவள் “நான் ஐஞ்சாம் கிளாஸ் பாட்டி… இலக்கியமெல்லாம் எனக்கு தெரியாது”

“ம்ம்… அந்த கீதையை எடு”

எடுத்து கொண்டு அவர் முன் நின்றாள் மிது.

“எனக்கு, அதில் இருப்பதை வாசித்து காட்டு”

அங்கிருந்த சிறு நாற்காலியில் அமர்ந்த மிது, கீதையை கொஞ்சமாய் வாசிக்க ஆரம்பித்தாள். அவளையே முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்திருந்தார் பாட்டி.

இரவு உணவு முடிந்ததும், பங்களாவின் பின்புற தோட்டத்தில் வந்து நின்றாள் மிது.

வண்ண வண்ண பூக்களை தாங்கிய பலவித செடிகள்… சீராய் வெட்டப்பட்ட புல்வெளிகள்… வானத்தில் அழகாய் வட்ட நிலா.

அந்த நிலவின் ஒளியில் எல்லாவற்றியும் ரசித்து பார்த்திருந்தாள் மிது.

களங்கமற்ற நிலவு தூய்மையாய் வெண்மை பரப்பியபடி ஆனந்தமாய் அந்த வானில் வீற்றிருந்தது.

அப்படியே ரசித்து பார்திருந்தவளின் பார்வை அப்படியே சிகப்பு மலர்களை தாங்கி நின்ற அந்த பெரிய குல்மோஹர் மரத்தில் நிலைத்தது.

அவளையே கைகளை கட்டியபடி ரசித்து பார்த்திருந்தான் அரவிந்த். அவளையும் அறியாமல் அவள் கண்கள் அவன் கண்களுடன் இணைந்துக் கொண்டது.

மனமோ ‘இவன் ஏன் எனக்கு நல்லவனாக அறிமுகமாகவில்லை’

அவளின் மனவோட்டம் அறிந்தவனைப் போல், அவளை நெருங்கி வந்தான். அவளின் பார்வை இப்பொழுது நெருங்கி வந்தவனின் பாதத்தில் இருந்து பயணித்து கண்களில் நிலைத்தது.

அவள் அருகில் மிக நெருங்கி வந்தவன், அவளின் தோளில் உரிமையாக கைபோட வர, தன்னிலை உணர்ந்த மிது, அவனை எரிக்கும் பார்வைப் பார்க்க,

அவளை நோக்கி கொண்டு போன, கையை அப்படியே தன் தலையை கோதுவதுப் போல் கொண்டு சென்றான்.

அவள் பார்வை மீண்டும் வானத்தை நோக்கியது. ‘இப்படி வெட்கமே இல்லாமல் அவனை பார்த்துட்டு இருக்க, அவனுக்கு இது ரொம்ப வசதியா போயிருக்கும்’ மனம் சாடியது.

‘இல்ல… அவன் நல்லவன் தான் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி எல்லாம் பண்ணுறான்’ இன்னொரு மனம் வாதாடியது.

ஆஃபிஸ் அடிக்கடி வந்திருக்கிறான். வந்தால் வந்த வேலையை மட்டுமே பார்ப்பான். இது வரை அவனைப் பற்றி தவறாக எதுவும் அவள் காதில் விழவே இல்லை. மனம் அவனையே சுற்றி வந்தது.

எதையும் நேரடியாகவே பேசி பழக்கம் இருக்கும் மிது, அவனிடமே கேட்க எண்ணினாள்.

“உங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?” மெதுவாக அந்த வானைப் பார்த்துக் கொண்டே தான் வினவினாள்.

அவள் அப்படி கேட்டதும் முதல் முறையாக அவன் முகம் பிரகாசமாக ஜொலித்தது. ஆனாலும் அதை அவளுக்கு காட்டாமல் “என்னை பற்றியா?” என்றான் ஆச்சரியமாய்.

“ஆமாம்… உங்களை பற்றி அறிய மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன்?”

அரவிந்திற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ‘ஒருவேளை நம் காதல் கதையை பாட்டி கூறிவிட்டாரோ?’ எண்ணியவன் “ஆர்வம்? அதுவும் என்னை பற்றி அறிந்துக் கொள்ளவா? ஆச்சரியமாய் இருகிறதே?” அவளையே உற்றுப் பார்த்தபடி வினவினான்.

‘நான் நிஜமாக தான் கூறுகிறேன்’ என்பது போல் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள் மிது.

அவள் கண்களில் என்னக் கண்டானோ, “என் வாழ்கையே ஒரு வினோதமானது… என் அம்மா சிறு வயதிலேயே என்னை விட்டு சென்று விட்டார். வளர்த்தது எல்லாமே என் பாட்டி தான். அம்மா, அப்பா இருவரும் பெரும் பணக்காரர்கள்.

அம்மா, அப்பா இருவரும் காதலர்கள். ஆனால், தாலி கட்டாமலே வாழ்ந்திருக்காங்க. நான் பிறந்த கொஞ்ச நாளில் அம்மா, வேறு ஒருவருடன் சென்று விட்டார். அப்பாவுடன் இருந்ததும் காதல் தானாம், அதே போல் இப்பொழுது இன்னொருவருடன் சென்றதும் அதே காதல் தானாம்.

ஆனால், என் அப்பா எப்பொழுதும் சொல்லுவாங்க, உன் அம்மாவுக்கு தான் அவளுக்கான உரிமையை கொடுக்கல அது தான் என்னை விட்டு போயிட்டான்னு.

இப்போ வளர்ந்த பிறகு தான் தெரியும், என் அம்மாவுக்கான உரிமை எதுன்னு. தாலி கட்டி மனைவி என்ற உரிமையை என் அப்பா அவங்களுக்கு குடுக்கலை. அந்த தாலி மகிமையை என் அம்மாவுக்கு, அவங்க குடுத்திருந்தா, என் அம்மாவுக்கு இன்னொருவருடன் செல்ல முடிந்திருக்காது தானே?

ஒரு நாள் அம்மாவை பார்த்தாங்களாம். அப்போ அவங்க கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமமும் வச்சுட்டு அவங்க காதலன் கூட ஜோடியா போறதை அப்பா பாத்திருக்கார். அப்போ தான் அவருக்கு மிக பெரிய தப்பு பண்ணினதா தோணியிருக்கு. என்னை தப்பான உறவில்  பொறந்த குழந்தைன்னு நினைச்சு விட்டு போயிட்டார்.

அதுக்கு பிறகு அப்பா என்னை பார்ப்பதே இல்லை. சென்னை விட்டு வரவே மாட்டார். நான் மாதம் ஒரு முறை அங்கு வருவேன். அவருக்கு மேலும் மேலும் பணத்தை சேர்ப்பது தான் வழக்கமே. நேரம் ஒதுக்கி என்னுடன் எப்பொழுதும் இருக்கமாட்டார்”

“ஏன் உங்கப்பாவுக்கு உங்களை பிடிக்காதா?”

“அப்படி இல்லை… அவர் தனியாவே இருக்க ஆசைபட்டுட்டார் போல, தொழிலே கதி என்று விட்டார். பணம் சேர்ப்பது தான் அவரது தொழிலாக மாறிவிட்டது ….

நானும் என் இஷ்டம் போல வளர ஆரம்பித்தேன். சிகரெட். மதுன்னு என் பழக்கம் போனது. மாது பக்கம் போகும் முன் பாட்டி என்னை தடுத்திட்டார்.

அப்போ தான் என் வாழ்கையில் பெரிய விபத்தொன்னு நடந்திச்சி… மது, மாதுவை விட பெரிய விபத்து.

என்னையே மாற்றிய விபத்து.” சொல்லிவிட்டு நிறுத்தினான் அரவிந்த்.

“விபத்தா?”

“ஆமா… விபத்து… அந்த விபத்தின் பெயர் காதல்… அது ஒரு ராட்சசியிடம் உண்டான காதல் விபத்து”

“என்ன காதலா?” வியப்பாய் கேட்டாள் மிது.

“என்ன காதலான்னு இப்படி கேட்குற… இந்த மூஞ்சியை எந்த பொண்ணாவது காதலிக்குமான்னு நினைக்குறியா? ஒன்றில்லை… இரண்டில்லை… மூன்று பெண்கள் என்னை காதலித்தார்கள்”

“என்ன மூன்றா?”

“ஆம்… மூன்று காதல்” என்றான் அரவிந்த்.

இப்பொழுது வாயை பிளந்து அவனை பார்த்திருந்தாள் மிது.

error: Content is protected !!