Kumizhi-1

குமிழி-1

கார்மேகங்கள் ஒன்று கூடி நிலவுபெண்ணை மறைத்து வைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, அந்த மேகப் போர்வைக்குள் சிக்காமல், அடம் பிடித்து முழுதாய், முழுமதியாய் தன் அழகினை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் நேரம்.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிலவின் அழகு எப்படி மறைவதில்லையோ, அது போல உலகின் எந்த மூலையில் இருந்து எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை வரவேற்று, சற்றும் வாடவிடாமல், மனமும் வயிறும் நிரம்ப வைத்து, அவர்களை புத்துணர்ச்சி படுத்திக் கொண்டிருக்கும் இடமாம் மதுரை எம்.ஜி. ஆர் பேருந்து நிலையம்.

தூங்காநகரமான மதுரையின் பரபரப்பை தன்னகத்தே கொண்டு இருபத்தி நான்கு மணிநேரமும் விறுவிறுப்பாக செயல்படும் நகரின் ஒரு பகுதியாய் விளங்கும் “எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்” “மாட்டுத்தாவணி” என மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது

மதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பேருந்து நிலையம் எட்டு நடைமேடைகளுடன், நடைமேடைக்கு பன்னிரண்டு தடங்களை கொண்டு, அதிக அளவு பேருந்துகளைக் கையாளக்கூடியதாக உள்ளது.

எட்டாவது நடை மேடையான நாகர்கோவில், கன்னியாகுமாரி தடங்கள் அமைந்துள்ள பேருந்து வணிக வளாகத்தின் வலது புறம் 300 சதுர அடி பரப்பளவில் தூங்கா நகரத்தின் அடையாளமாக எந்நேரமும் விழித்துக்கொண்டு செயல்படும் உணவு விடுதிகளில் ஒன்றான  “ஹோட்டல் பாண்டியா(சைவம்)” தன் பெயரை ஜெகஜோதியாக, பளிச்சென்ற மின் விளக்குகளுடன், மின்னிக்கொண்டிருந்த நேரம் முன்தினத்தின் நடுநிசி நேரமாகவும், அடுத்த நாளின் விடியலாகவும் அறியப்பட்ட 12:30 மணியாகும்.

உணவகத்தின் வெளி வாசலில் இடப்புறத்தில் தேநீர் தயாரிக்கும் உபகரணங்களுடன் மேடை அமைக்கப்பட்டிருக்க, வலப்புறத்தில் உணவகத்தின் பெயர் பொதித்த சிறிய பலகையும், என்னென்ன வகைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளும், கூடுதலாக “குழந்தை தொழிலாளர்கள் இங்கே வேலைக்கு அமர்த்தப்படவில்லை” என்ற உறுதிமொழி வாசகமும் சுவற்றில் தாங்கி நிற்க, அதனை தாண்டி உள்ளே நுழைந்தால் பணம் செலுத்தும் இடமாய் சற்றே பெரிய அளவில் ஒரு மேசையும், உட்கார்ந்து வேலை செய்யும் வசதிற்கேற்ப சுழல் நாற்காலியும் வீற்றிருக்க, அங்கே உணவகத்தின் முதலாளியாய், ஏகபோக உரிமையுடன் கம்பீரமாய், அன்றைய வரவு செலவுகளை கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான் “வருண பாண்டியன்”.

அவனை தாண்டி, இருபது பேர் அமர்ந்து உண்ணும் வசதிற்க்கேற்ப ஐந்து உணவு மேசைகளும், மேஜை ஒன்றிக்கு நான்கு நாற்காலிகளும் போடப்பட்டு, அதனை ஒட்டிய உள்ளறையில் உணவு வகைகள் பரிமாற ஏதுவாக இருக்கும் பொருட்களும், அதற்கு அடுத்தபடியாக புரோட்டா, தோசை தாயரிக்கும் பெரிய அடுப்பு ஒன்றும் அங்கே வைக்கப்பட்டிருந்தது.

“ஹோட்டல் பாண்டியா” நடுத்தர மக்கள் திருப்தி அடையும் வண்ணம், உணவு வகைகளை தயாரித்து, அதற்கு ஏற்புடைய வகையில் விலைப் பட்டியலையும் அமைத்து, அனைவருக்கும் விருப்ப உணவகமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் உணவகம்.

காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் எப்பொழுதும் சூடான உணவு வகைகள் அணிவகுக்கும் இந்த உணவு விடுதியில். எந்த வகை உணவானாலும் தனித்தும், சேர்க்கை முறையிலும்(combo pack) தேர்ந்தெடுத்து சாப்பிடும் வகையில் சகாய விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க, அதுவே இவ்விடுதியின் சிறப்பாய் அமைந்தது.

இரண்டு இட்லி, ஒரு தோசை, ஒரு வடை, ஒரு கரண்டி கேசரி, ஒரு காபி இவை அனைத்தும் சேர்த்து எழுபது ரூபாய்க்கு கொடுக்க மிக விரைவில் காலியாகும் காலை உணவு. சற்றே விலை உயர்த்தி பூரி அல்லது பொங்கல் என்று மாற்றி கொடுத்து வந்தவர்களை திருப்தியுடன் வயிறு நிரப்பும் வகையில் ஜோராக காலை உணவுவேளை களை கட்டும்.

மதியம் ஆரம்பிக்கும் சில்லி புரோட்டா, கலவை சாதங்கள், காளான் மற்றும் பன்னீர் பிரயாணி வகைகளும் இரவு எட்டு மணிவரை தொடரும். அளவுச் சாப்பாடு, முழுச்சாப்பாடு என்று அது தனியாக ஒரு வரிசையில் நிற்க, இரவு உணவுக்கென இட்லி, தோசை, சப்பாத்தி என   சேர்க்கை உணவுகள் மீண்டும் ஒரு முறை வலம் வர, கிட்டத்தட்ட நடுநிசி இரண்டு மணிவரை அந்த உணவு விடுதி தன் வேலையை செவ்வென செய்து கொண்டே இருக்கும்.

ஒரு இடத்திலும் சிறு சுணக்கமும் ஏற்படா வண்ணம், அனைத்தையும் தன் ஒற்றை பார்வையில் நிறுத்தி அமைதியாக இங்கே வருணபாண்டியன் நடத்தி செல்ல, உணவுகளை தயாரித்து கொடுக்கும் பொறுப்பான வேலைகளை தன் தாய் கோதை நாயகியின் மேற்பார்வையில் விட்டுட்டு இவன் உணவு விடுதியில் இருந்து கொள்பவன்.

வருண பாண்டியன் இருபத்தியேழு வயதுக்கேற்ற துடிப்புடன், உழைத்து உரமேறிய தோள்கள், ஆறடி உயரம், மாநிறத்தை எட்டி பார்க்கும் நிறம், கண்களின் கூர்மை, வேலையில் தன் அர்பணிப்பை காட்டிகொண்டிருக்க, எந்நேரமும் முன்னெச்சரிக்கையோடு தன் வேலையை திறம்பட செய்வதில் வல்லவன். சற்றே முறுக்கிய மீசையுடன், இரண்டு நாள் தாடியுடன் சுயதொழில் புரிபவனின் முத்திரைக் குத்தப்பட்ட தோற்றம்.

கோபம், ஆத்திரம், அவசரம் இவற்றிக்கெல்லாம் ஏகபோக அதிபதி. பாசத்தை கூட முறைத்தே காண்பிக்கும் நல்லவன். மற்றவர்களின் மேல் போட்டி பொறாமை கொள்ளாமல் தன் உழைப்பை மட்டுமே மூலதனமாய் கொண்டு தொழில் முனைவதில் காரிய சித்தன்.

தன் உணகவத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் ரசனையை மட்டுமே பொறுமையாய் கேட்டு, தலையாட்டி வைக்கும் சாந்த சொரூபன். மொத்தத்தில் இக்கால இளைஞர்களுக்கு சவால் விடும் தொழில் முனைவன்.

இப்பொழுதும் இரவின் இலகுவான உடையான ப்ளாக் டீ-சர்ட், டார்க் ப்ளு டிராக் பேண்ட்டும், காலில் எளிமையான பழுப்பு நிற காலணியுடன்(sandals) அன்றைய நாளின் வரவு செலவு கணக்கை சரிபார்த்து கணக்கு புத்தகத்தில் எழுதி முடிக்கவும், அங்கே வேலை செய்பவர்கள் அப்போதைய நிலவரங்களை விளக்கவும் சரியாக இருந்தது.

தேநீர் தயாரிக்கும் இடத்தில் இருந்த ரமேஷ் – பாண்டியனின் நண்பன்.

“இன்னும் 10 டீ தான் வரும் பாண்டியா!! அதுக்கு மேல டோக்கன் குடுக்காதே… நாளைக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் புதுசு கொண்டு வந்து வைச்சிரு, இன்னையோட முடிஞ்சுது, அப்படியே டீ தூள், காபி பொடியும் சேர்த்துக்கோ, இந்த வாரத்துக்கு மட்டுமே வரும்” என்று பட்டியல் சொல்ல

“இந்த தடவை சீக்கிரமே பூஸ்ட் தீர்ந்த மாதிரி இருக்கே என்ன காரணம் ரமேஷ்?”

“எல்லாம் காபி டீ விலை ஏறிப்போனது தான் பாண்டி!! அதுவும் இந்த காலத்து பசங்க டீ, காபி குடிக்கிறத ஏதோ கசப்பு மருந்து மாதிரி நினைச்சு டிசைன் டிசைன்னா, புது புது அயிட்டமா கேட்டு எங்களை கடுப்பேத்துது”

“நீ ஏன் அப்படி நினைக்குற ரமேசு? நம்மகிட்ட இல்லாதத குறிச்சு வச்சுக்கோ, என்ன வெரைட்டி நிறைய கேக்குராங்களோ அத லிஸ்ட்ல கொண்டு வந்துருவோம் வர்றதை ஏன் விடுவானேன்?” தேர்ந்த வியாபாரியாய் பேச

“அது சரி நீ ஈசியா சொல்லிருவே? இங்கே தனித் தனியா பிரிச்சு போட்டு குடுக்குறதுக்குள்ள மூளை குழம்பி போறது எனக்கு தானே தெரியும்” முணுமுணுத்த வண்ணம் தன் வேலையை தொடர,

“அயிட்டம் நிறைய சேரும் போது அதுக்கேத்த மாதிரி வேலைக்கும் ஒரு ஆள் கூட நிப்பாட்டணும்னு எனக்கும் தெரியும் ரமேசு!! நான் சொன்னதை மட்டும் நீ செஞ்சா போதும், முணுமுணுப்புக்கு இங்கே இடமில்ல” தொழில் செய்யும் இடத்தில் நண்பனாய் இல்லாமல், முதலாளியாய் அவன் வாயை அடைத்து, பின்கட்டிற்கு சென்று, அங்கே உள்ள உணவு வகைகளின் அந்நேர இருப்பை மேற்பார்வை செய்தான்

“எல்லாமே நெருங்கி முடிஞ்சுருச்சு பாண்டி!. இன்னும் 15 தோசை வரும், 20 புரோட்டா இருக்கு, குருமா காலி, சாம்பார் மட்டும் தான் மிச்சம் இருக்கு, புரோட்டாக்கு தேங்கா சட்னியும், சாம்பாரும் குடுத்து தான் சரி பண்ணனும், நைட் 12 மணிக்கு மேல சாப்பிட வர்றவங்க எல்லாம் பாவம் பாண்டியா” என மாஸ்டர் சேகர் சொல்ல

“சேகர் அண்ணே!! இந்த நேரத்துல இது கிடைக்கிறதே பெரிய விஷயம் அதனாலே இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க, பசிக்கு ருசியா, சூடா எது குடுத்தாலும் சாப்பிடுவாங்க. நம்ம ஸ்டைல்ல குடுத்து சாப்பிட வச்சுருவோம்” என்று பேசிவிட்டு முன்னே வரவும்,

உணவு விடுதியை சுத்தம் செய்யவென வந்து நின்றான் கதிர். இரண்டாம் வருடம் B.Com படித்துக்கொண்டே பாண்டியனிடம் பகுதி நேர வேலை செய்து வருபவன். தந்தை இல்லை, தாயும் உடன் பிறந்த தங்கையும் மட்டுமே, கஷ்டஜீவனம் கொண்ட குடும்பம் இவனுடையது

“என்னடா இன்னும் இங்கே என்ன பண்ணறே? நாளைக்கு பரிட்சை இருக்குனுனு சொல்லிட்டு இன்னைக்கு ஏன் வேலைக்கு வந்தே?” பாண்டியன் அவனை விசாரிக்க

“நாளைக்கு மதியம் தான் பரீட்சை பாண்டின்னே! காலையில ஒரு பத்துமணி வாக்குல எந்திருச்சு படிச்சுருவேன்”

“டேய் இந்த சால்ஜாப்பு எல்லாம் என்கிட்டே வேணாம், பரிட்சை முடியுற வரைக்கும் நீ வேலைக்கு வரகூடாதுன்னு சொல்லிட்டேன். லீவ் விட்ட பிறகு ரெண்டு ஷிப்ட் வேலை சேர்த்து பாருடா, இப்போ விட்ட சம்பளத்தை அப்போ பிடிச்சுரலாம்”

“இல்லண்ணே!! கொஞ்சம் அவசர செலவு வந்துருச்சு. அதான் இன்னைக்கு வேலைக்கு வந்தேன். அம்மா கூட சொல்லிச்சு, நீ திட்டுவேன்னு நான் தான் சொல் பேச்சு கேக்காம வந்துட்டேன்”

“அப்படி என்னடா அவசர செலவு? உங்கம்மா என்கிட்டே சொல்லாம இருக்காதே?”

“அது வந்துண்ணே… காலேஜ்ல லீவ் விட்ட பிறகு ரெண்டு நாள் பசங்க எல்லாரும் சேர்ந்து குற்றாலம் போறோம், அதுக்கு முன் பணம் குடுக்க தான்” என்று கதிர் தலையை சொரிய

“டேய் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா!! உங்க வீட்டுக்கு தெரிஞ்சு தானே போற?”

“ஆமாண்னே அம்மாட்ட கூட கேட்டு பாரு”

“சரி நாளைக்கு கேட்டு வைக்குறேன், நீ நாளைக்கு சாயந்தரம் வந்து பணம் வாங்கிட்டு போ!! இப்போ வேலைய முடிச்சுட்டு சீக்கிரம் நடைய கட்டு” என விரட்டினான்.

இக்கால இளவட்டங்களை பாண்டியன் அவ்வளவு எளிதில் நம்பி விடுவதில்லை. எப்போதும் ஒரு ஆராய்ச்சி பார்வையால் அவர்களை தொடந்து கொண்டே இருப்பான்.

இந்த நம்பகத்தன்மைக்கு இவனை சொல்லி குற்றமில்லை. இக்கால அத்துமீறி பழகும் சமுதாயத்தில் இளைஞர்களும், பருவப் பெண்களும் கெட்டு சீர் அழிவதை கண் கூடாக பல முறை பார்த்ததின் விளைவினால், தன் மனதில் தானாய் வந்தமர்ந்த எண்ணங்கள் தான் இவை.

சதா சர்வ காலமும் பேருந்து வளாகத்தில் நடப்பதை பார்ப்பதும், கேட்பதுவுமாய் இருப்பவனுக்கு, பல சமயங்களில் அந்த சம்பவ இடத்தில் சம்மந்தப்பட்ட நபரை தட்டி கொடுத்தோ அல்லது நாலு அடியை சேர்த்து கொடுத்தோ, பொறுப்பாய் அவர்களை வீட்டில் ஒப்படைக்கும் வேலையை செய்து வருபவன் பாண்டியன், கேள்வி கேட்பதற்கு முன், அவன் கை பேசிவிடும் அவர்களிடத்தில்.

ஒழுக்கமற்ற செயல்கள் நடப்பது போல் தெரிந்தால் அந்த நிமிடமே சற்றும் யோசிக்காமல் தன் அதிரடியை காட்டி அந்த செயலை தடுத்து நிறுத்துபவன். இது வரை இவன் அதிரடியில் நன்மைகள் தான் விளைந்ததே ஒழிய பாதிப்பு இது நாள் வரை யாருக்கும் இல்லை.

கண் முன்னே நடக்கும் அநியாயத்தை இவன் தட்டிகேட்க, அது பலருக்கு பல வகையில் எரிச்சலை கிளப்பிக் கொண்டிருந்தது.

அங்கே பொறுப்பில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும், இவனின் நடவடிக்கை சற்று ஆறுதலைத் தர, அவனுக்கு தங்கள் ஆதரவை கொடுத்து, அவனிடம் தங்கள் தோழமையை பலப்படுத்தி கொண்டனர்.

சுற்றிலும் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படக் கருவி(cctv கேமரா) மூலம் தகராறு நடக்கும் இடத்தில் பாண்டியன் இருப்பதை பார்ப்பவர்களுக்கு, அவன் சுமூகமாக அனைத்தையும் தீர்த்து வைப்பான் என்ற நம்பிக்கை அவர்களிடம் வேரூன்றி இருந்தது.

அவனது அதிரடிகளே பெரிய பிரச்சனைகள் நடப்பதை தடுத்திட, காவல் துறையின் வேலை கொஞ்சம் சுலபமாய் அமைந்தது. புகாரை பதிவு செய்து காவல் நிலையம் வரை நீட்டிக்க விரும்பாமல், இருந்த இடத்திலேயே இருந்து பிரச்சனையை சமாளித்து வைக்கும் பாண்டியனின் மேல் நல்ல அபிப்பிராயம் அவர்களுக்கு. ஆக மொத்தம் அங்கே அவன் தனிகாட்டு ராஜாவாக வலம் வந்தான் என்பதில் மிகையில்லை.

கதிரிடம் பேசிவிட்டு, பாத்திரம் அடுக்கி வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் ரவியிடம் வந்தான். இவனும் பாண்டியனின் நண்பன், சற்றே நெருக்கம் இவனிடத்தில்.

“இன்னைக்கு மார்க்கெட் போகணும் ரவி, அதுக்கேத்த மாதிரி குட்டி சாக்கும், பையும் எடுத்து வச்சுரு”

“சரி பாண்டியா!! நாளைக்கு பலசரக்கு வாங்கனும், லிஸ்ட் எழுதி வச்சுருக்கேன், இந்தா பிடி” என தன் பொறுப்பை தீர்த்து விட்டு காலி பாத்திரங்களை தூக்கிக்கொண்டு “சரக்கு ஆட்டோ” என்று அழைக்கப்படும் குட்டியானையில் கொண்டு போய் வைத்தான். டீசலோடு, வங்கி கடனும் இந்த வாகனத்தில் ஓடுகிறது.

ஹோட்டலுக்கு மட்டுமின்றி விசேஷங்கள், கூட்டங்கள் என்று பல வைபவங்களுக்கும் துரித முறையில் உணவினை தாயரித்து, அனைத்தையும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்தும், கொண்டு வந்தும், எல்லா வேலைகளுக்கும் கைகொடுக்கும் கையாக விளங்குகிறது இந்த வாகனம்.

அந்த நேரத்தில் பத்து பேர் அடங்கிய கூட்டம் உணவிற்க்கென வர தோசையும், புரோட்டாவும் கொடுத்து அவர்களின் வயிற்றினை நிரப்பி, சந்தோசமாக அனுப்பி வைத்தான்.

“குருமா, சால்னா எதுவும் இல்லையாப்பா தம்பி?” வந்தவர்களில் ஒருவர் கேட்க

“முடிஞ்சுருச்சுண்ணே! உங்களுக்கு வேணும்னா தக்காளி, வெங்காயம் வதக்கி, கொத்து புரோட்டா போட்டு குடுக்க சொல்றேன்”

“அட என்னப்பா இல்லாத குருமாக்கும் காசு அதிகமா வாங்க நீ நல்லாவே பிளான் போட்ற” என விடாமல் சொல்ல

“அண்ணே!! உனக்கு வேணும்ன்னா சொல்லு, கொத்து புரோட்டா போட்டு குடுக்க சொல்றேன். இந்நேரத்துக்கு தர்க்கம் பண்ணிட்டு இருக்காதே!! கடைய சாத்தனும். உனக்காக சாதா புரோட்டாக்கு போட்ற பில் போட்றேன், ஆனா 20 புரோட்டாவா வாங்கிக்கணும் சரியா?” பாண்டியனும் ஒப்பந்தம் பேச

“இத பாருடா!! இந்த நேரத்துலயும், என்ன அழகா இவன் வியாபாரம் பேசுறான்!!” என்று சிலாகித்தவர்கள் அனைத்து புரோட்டாவையும் கொத்தி விட்டு, மிச்சம் மீதிக்கு தோசையையும் உள்ளே தள்ளி

“நல்லா இருந்துச்சுப்பா… உன்கிட்ட நல்லா வியாவார(வியாபாரம்) சூட்சுமம் இருக்கு தம்பி” என்று வாழ்த்தி விட்டு சென்றனர்.

எல்லா வேலைகளும் முடிந்து உணவு விடுதியை அடைக்கும் நேரம் மணி இரண்டைக் கடக்க, எல்லோரையும் அனுப்பி விட்டு குட்டியானையில் ரவியுடன் மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு சென்று இரண்டு நாளிற்கான காய்கறிகளை வாங்கியவன், நேராக சென்ற இடம் மதுரை ஒத்தக்கடை.

——————————–

சீறாநாகம் – நாகமலை

கறவா பசு – பசுமலை

பிளிறா யானை – யானைமலை

முட்டா காளை – திருப்பாலை

ஓடா மான் – சிலைமான்

வாடா மலை – அழகர்மலை

காயா பாறை – வாடிப்பட்டி

பாடா குயில் – குயில்குடி

இந்த எட்டு இடங்களும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள் ஆகும்

*****************************