Kumizhi-11

Kumizhi-11

நேசம்-11

அழகான இரவும் அழுத்தமாய் உறைய, ஏற்கனவே கடுப்பினில் உறைந்திருந்த சிவனியாவிற்க்கு தாயின் அழைப்பு மேலும் சலிப்பை உண்டாகியது.

மகளை அழைத்தவரின் மனமோ எப்பொழுதும் போல் அவள் வருங்காலத்தை பற்றிய பயமே பெரிதாய் தோன்ற, வசைமழையால் தாக்கி விட்டார்.

அவசரமாய் பேசவேண்டும் என்ற செங்கமலத்தின் அழைப்பினை ஏற்றுப் பேசத் தொடங்கிய சிவனிக்கு, நொடி நேரத்தில் எதிர் பக்கத்தில் இருந்து வந்த பேச்சுக்கள் மனதை முள்ளாய்த் துளைத்து எடுத்தன. தாயின் பேச்சில் புருவம் நெறிக்க, அவளின் தீவிர முக மாறுதலை கவனித்த பாண்டியனும், தன்னால் தான் அவளுக்கு கண்டனப் பேச்சுக்கள் வருகின்றதோ என்ற நினைப்பில், தன்னிலை விளக்கம் அளிக்கும் முயற்சியில் அதிரடியாய் செல்போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டு கேட்க ஆரம்பித்தான்.

“அங்கே பாண்டியன் வந்திருக்கானா?”

“———–“

“எப்போ இருந்து உன் கூட இருக்கான்?”

“————-“

“எதுக்காக வந்திருக்கேன்னு சொன்னானா?”

“————“

“அவன் உன்னை வந்து பார்த்ததும் ஏன் நீ என்கிட்டே சொல்லல?”

“————-“

“அவன்கிட்ட என்ன பேச்சு உனக்கு?”

“————-“

“யாரை கேட்டுட்டு அவன் கூட நீ ஆஸ்பத்திரிக்கு போன?” அடுக்கடுக்காய் கேள்விகள் வஞ்சனையின்றி மகளிடம் வகையாய் கேட்டு வைத்தார் செங்கமலம்.

“அம்மா… அம்மா… கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ! டென்சன் ஆகாதே! என்ன நடந்ததுன்னு கேளு, அடுத்து உன்னோட விசாரணைய ஆரம்பி, இப்படி யோசிக்காம எல்லாமே நாந்தான் செஞ்சேன்னு என்னை குத்தம் சொல்லாதே?”- சிவனி

“அவன் வந்ததும் என்கிட்ட சொல்லி இருந்தா, நான் எதுக்கு உன்மேல தப்பு சொல்ல போறேன். காலையிலேயே வந்து பார்த்தானாமே? உன் ஃப்ரண்ட் பூமி எல்லாத்தையும் சொல்லிட்டா. மணி ஒன்பதாகியும் உன்னோட ஃபோன் வரலன்னு கனிய விட்டு, அவகிட்ட கேட்டா எல்லா விவரமும் சொல்றா. நீ சொல்லல…” – கமலம்

“என்கிட்டே ஃபோன் இல்லம்மா… நான் இன்னும் அவர்கூட பேசல!” – சிவனி

“இவ்ளோ நேரம் கூட இருக்குறவ பேசமாத்தான் இருக்கியா? அவன் வந்து கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்ல முடியாதா உன்னால?” – கமலம்

“நானா வரலம்மா… என்னை வம்படியா இழுத்துட்டு வந்தது இவர் தான்…” – சிவனி

“இவன் வந்தத காலையிலேயே ஏன் சொல்லல சிவா?” –கமலம்

“வேலை டென்ஷன்ல மறந்துட்டேன், நீயும் வீட்டுல இருக்க மாட்டியே? யாருகிட்ட என்னான்னு நான் சொல்ல?” -சிவனி

“அப்போ அவன் கூட இருக்குறது தப்புன்னு இன்னும் உனக்கு தெரியல? என்கிட்டேயே எதிர் கேள்வி கேட்டுட்டு, அவன் கூட உக்காந்திருக்க… இன்னும் உனக்கு ஹாஸ்டல் போக தெரியலல்ல” முடிந்தவரை தாயும் மகளை நோகடிக்க ஆரம்பித்தார்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டெஸ்ட் எல்லாம் முடிஞ்சதும்மா, நான் போறேன்னு தான் சொன்னேன், இவர் தான் சாப்பிட்டு போகலாம்ன்னு என்னை விடாம இழுத்து உக்கார வச்சிருக்காரு” சிவனியா சொல்லியபடியே பாண்டியனை முறைத்துப் பார்த்து வைத்தாள்.

“அவன் இழுத்து உக்கார வச்சா மீறிப் போகத் தெரியாதா உனக்கு? இவ்ளோ நேரங்கழிச்சு ஒருத்தன் கூட இப்படி உக்காந்திருக்க… உனக்கே அசிங்கமா இல்லையா?” கமலத்தின் மனம் முழுவதும் மீண்டும் ஒரு அவப்பெயர் வந்து விடக் கூடாதே என்ற பயத்தில், தான் என்ன மாதிரியான அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதை மறந்தே போனார்.

“அம்மா போதும் நிப்பாட்டு! ரொம்ப பேசுற நீ? கொஞ்சங்கூட அர்த்தமில்லாத கேள்வியா கேட்டா எப்படிம்மா பதில் சொல்றது? நடந்தது என்னன்னு தெரியாம பேசி வைக்காதேம்மா” கொஞ்சம் அதட்டலில் சிவனியா விளக்க முற்பட

“என்ன நடந்தாலும் அவன் வேண்டாம்னு ஒதுங்கி வந்தவங்கடி நாம… அவன்கிட்ட இப்படி தான் அரை நாளா பேசிட்டு இருப்பியாடி?” – கமலம்

“அய்யோ… நான் பேசலம்மா… ஒண்ணு சொல்றேன் தயவுசெஞ்சு கேளு… என் மேல நம்பிக்கை வை! நீ தைரியமா இரு! இந்த ரெண்டும் இல்லாம சந்தேகமா என்னை பார்த்து வைக்காதே. வெளியாளுங்க கிட்ட மூஞ்சியில அடிச்சு பேசுற மாதிரி உன்ன பார்த்து என்னால பேச முடியாது. உன்னோட சந்தேகப் பார்வைய தாங்குற சக்தி எனக்கு இல்லம்மா…” காட்டமாய் பதில் அளித்தாள் சிவனியா.

“இவ்ளோ பேசுற நீ ஆஸ்பத்திரிக்கு போன உடனேயே, எனக்கு கூப்பிட்டு இவன் தான் இழுத்துட்டு வந்தான்னு சொல்லியிருந்தா நான் ஏன் இப்படி பேச போறேன்? இதுக்கு முன்னாடியும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசி என் வாய அடைச்சவ தானே நீ? அப்போ எனக்கு இந்த சந்தேகம் வரத்தானே செய்யும். போதும் நீ அங்கே வேலை பார்த்து கிழிச்சது. இங்கே கிளம்பி வா…” பயமும், படபடப்பும் ஒன்று சேர்ந்து உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தார் கமலம்

“நினைச்ச நேரத்துக்கு வரமுடியாதும்மா. ரெண்டு வருஷம் எழுதி குடுத்திருக்கேன். அப்படி வந்தே ஆகணும்னா, நான் பணம் கட்டணும் ரெண்டு இலட்சம் கையில இருக்கா? இங்கே செட்டில் பண்ணிட்டு அங்கே வரேன்” – சிவனி

“என்னடி உளறிகிட்டு இருக்கே? இப்படியெல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தா உன்னை வேலைக்கு போக விட்டிருக்க மாட்டேன்” – கமலம்

“தெரியும், நீயும் பயந்து, என்னையும் அதே பயத்தோட அங்கே ஏதாவது ஒரு கூலி வேலை பாக்க சொல்லியிருப்பே… இந்த பயத்த விட்டுத் தொலைம்மா… நான் எங்கே இருந்தாலும் பத்திரமா, உன் பொண்ணாத் தான் இருப்பேன். இதுக்கும் மேல விளக்கம் எல்லாம் குடுக்க முடியாது. பக்கத்தில தான் இருக்காரு, நடந்தது என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கோ”

இதற்கு மேல் பேசி தன்னிலை விளக்கம் கொடுக்க தயாராய் இல்லை அவள். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தாயிடம், மகள் தன்னைப் பற்றிய விளக்கம் அளிப்பது மனரீதியில் மிகக் கொடுமையான விடயம். அதுவும் சிவனியாவை விட்டு வைக்கவில்லை.

“ஏற்கனவே உனக்கு கிடைச்ச கெட்ட பேர் பத்தாதுன்னு, திரும்பவும் அங்கே குட்டைய குழப்ப வந்தவன் கிட்ட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு? ஒழுங்கா ரூமுக்கு போய் சேர்ந்ததும் எனக்கு பேசு, அது வரைக்கும் கனி வீட்டுல நான் இருக்கேன் மறந்துராதே?” படபடப்புடன் கோபத்தை எல்லாம் ஒரே நேரத்தில் மகளிடத்தில் காண்பித்து, அழைப்பை துண்டித்தார்.

மனம் முழுவதும் மகளைப் பற்றிய பய உணர்வு ஒன்றே வெறித்தனமாய் ஆக்கிரமிக்க, பேசாத பேச்சுக்களை எல்லாம் பேச வைத்திருந்தது அந்த தாய்க்கு.

கண்களின் கலக்கத்தை கட்டுபடுத்தியவாறே சிவனியா பாண்டியனை பார்த்திட, அவன் முகம் கல்லாய் இறுகிப் போய் இருந்தது. அவனது கண்ணும், முகமும் வெளிப்படுத்திய பாவனையே அவன் கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்று தெளிவாய் விளங்கியது அவளுக்கு.

“கிளம்பு நீ! ரூமுக்கு போய் மொத உங்கம்மாக்கு பேசு,” அவளை அழைத்துக் கொண்டு வாடகை காரில் ஏறி அமர்ந்தவன் இறுக்கமாய் வெளியே பார்க்க ஆரம்பித்தான்.

அவன் அமைதியாய் அமர்ந்திருக்க, அதுவே சிவனிக்கு பயத்தை வரவைத்தது. ‘எப்போ கோபத்துல வெடிச்சு என்னத்த செஞ்சு தொலைக்க போறானோ தெரியலையே?’ மனதிற்குள் தவித்தபடியே தான் அவனுடன் பயணித்தாள்.

“கோபத்தை தவிர எங்கிட்ட வேற ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா சிவனி” – பாண்டியன்

“இல்ல” – சிவனி

“பின்ன ஏன் இப்படி அத்தை என்னை பத்தி தப்பா நினைச்சுட்டு பேசுறாங்க? நீயும் ஒண்ணும் சொல்லாம கேட்டுட்டு இருக்க…”

“செஞ்ச வேலைக்கு நல்லவர்ன்னு சர்டிபிகேட் குடுப்பாங்களா?” வெடுக்கென்று கூறி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

“இத்தன வருஷம் என் வீட்டுல, என்னோட பாதுகாப்புல இருந்தவங்களுக்கு நான் எப்படிபட்டவன்னு இன்னும் தெரியலையா?” – பாண்டியன்

“தெரிஞ்சதால தான் நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்துட்டு இருக்கேன், உங்க இடத்துல யார் வந்து நின்றிருந்தாலும், என் கால்ல இருக்குறது தான் பேசி இருக்கும்” – சிவனி

“அப்போ உங்கம்மாக்கு தான் நான் நம்பிக்கை இல்லாதவனா, மோசக்காரனா இருக்குறேனா? இல்ல… எப்போவும் என்னை பத்தின கணிப்பு எப்போவும் இப்படிதானா?”

“இத தானே அன்னைக்கு அம்மா கேட்டாங்க “என் பொண்ணு மேல நம்பிக்கை இல்லையா”ன்னு, அதுக்கு நீங்க ஏதோதோ பதில் சொல்லப் போய், எங்கள அகதிங்க மாதிரி சொல்லிவச்சீங்க. அந்த கோபம் இருக்கத்தானே செய்யும்”- சிவனி.

செங்கமலம் தவறான கண்ணோட்டத்தில் பேசியது அவளுக்கும் உறுத்தத் தான் செய்தது. அதற்கு எதிரொலியாய் அவனிடம் கோபத்தை எதிர்பார்த்திருக்க, இவனோ அமைதியாய் கேள்விகளை கேட்டு வைக்க, முடிவில் இவள் தான் அவனுக்கு பாவம் பார்த்து சமாதானமாய் பேசி வைத்தாள்.

மனம் நிறைந்த நம்பிக்கையுடன் இத்தனை வருடங்கள் தன்னை சார்ந்திருந்த ஒரு தாயின் தவறான பார்வை தன்னிடத்தில் நிலைக்க, தனது சுபாவங்களே காரணமாகி விட்டதே என்ற குற்றவுணர்வு பாண்டியனை வாயடைக்க செய்திருந்தது. ஒருவரிடத்தில் நம்பிக்கை பொய்யாகிப் போகும் போது அவரை பற்றிய எந்த ஒரு விடயமும் மற்றவருக்கு தவறாகவே கருத்தில் பதிந்து விடுகிறது. இங்கேயும் அப்படித்தானோ?

“உங்க மேல இருக்குற பாசத்தில உரிமையா கேள்வி கேட்டது தப்பா போச்சா? அன்னைக்கு போன தூக்கம், இன்னும் வராம பூச்சாண்டி காமிக்குது. உனக்காக தெனமும் துடிச்சுட்டு இருந்தேன் பாப்பா… அத பார்த்து ரவியும் எனக்கு உம்மேல காதல், கண்றாவின்னு சொல்லி வச்சான்” பாண்டியனின் இந்த பேச்சிற்கு ஆச்சர்ய பார்வை பார்த்து வைத்தாள்.

“தப்பு பண்ணிட்டோமேன்னு உங்களுக்கு என் மேல பரிதாபம் வந்திருக்கு அவ்ளோ தான்” மறுத்து சிவனி விளக்கம் அளிக்க, அவனும்

“தெரியல எனக்கு, கொஞ்ச நாள் போனா நடந்த எல்லாமும் மறந்து போய்டும்னு நீ தானே சொன்னே? ஆனா இப்போ ஜென்ம விரோதி மாதிரி உங்கம்மா பேசும் போது தான் எனக்கு ரொம்ப அவமான இருக்கு,” பாவமாக பாண்டியன் கூற

“இப்பவும் அதே தான் சொல்றேன், கொஞ்ச நாள் போனா சரியாகிடும் இந்த பேச்ச விடுங்க” – சிவனி

“உனக்கும்தானே கோபம் இருக்கு, அதான் இப்போ வரைக்கும் “மாமா”ன்னு கூப்பிடமா இருக்க! வாங்கின மருந்தையும் குப்பைத் தொட்டியில போட்டுட்ட…” இதற்குள் ஹாஸ்டல் வந்திருக்க, அவள் அறைக்கு செல்லும் வரை பார்த்துவிட்டே சென்றான்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாய் இருக்க, மீண்டும் பாண்டியன் வந்திருப்பதாய் தகவல் வந்து சிவனி கீழே வர, அவனோ தோரணையுடன்

“சீக்கிரம் ரெடியாயிட்டு வா! வெளியே போகணும் சிவும்மா”

“நீங்க ஊருக்கு போகலையா?” என கேட்டவளின் மனமோ ‘இன்னைக்கு என்ன மாதிரி திட்டு அம்மாகிட்ட வாங்கிக் குடுக்க போறானோ?’ நினைக்கத் தோன்றியதே தவிர வரமுடியாது என மறுக்க முடியவில்லை.

“மதியம் ஊருக்கு கிளம்புறேன், சீக்கிரம் வா” என அவசரப்படுத்தினான்.

புதிய செல்போஃன் ஒன்றை, அவன் பெயரிலேயே வாங்கி, கடையில் உள்ளவர்களை கதற வைத்து, அனைத்து பாதுகாப்பு முறைகளையும் உள்ளிட்டு, அவள் கைகளில் செல்போஃன் வரும் போது இரண்டு மணி நேரமும் கடந்திருந்தது.

எத்தனையோ முறை வேண்டாம் என மறுத்தும் அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

“நான் யூஸ் பண்ண மாட்டேன் எனக்கு இத பார்த்தாலே அலர்ஜியா இருக்கு.” – சிவனி

“வர்ற கால்ஸ்(calls-அழைப்புகள்) அட்டென்ட் பண்ணு அது போதும், என் பேர்ல தான் எல்லா ஐடியும் கிரியேட்(create) பண்ணிருக்கேன், உனக்கு எதுவும் ப்ராபளமும் வராது. ஒரு தடவை தப்பா போனா எப்போவும் அப்படி ஆகும்னு நினைக்க கூடாது” – பாண்டியன்.

‘அது சரி லேசுல அடங்குறவானா நீ? உனக்கு என்ன தோணுதோ அதையே தான் இன்னமும் செஞ்சுட்டு இருக்க, உன்னை போய் நேத்து பாவமா பார்த்து வச்சேனே, ச்சே… சிவனி நீ இன்னும் வளரனும் போலடி’ மனதிற்குள் தன்னை திட்டிக் கொண்டே வேண்டா வெறுப்பாய் வாங்கி கொண்டாள்.

“பாப்பா ஒரு செல்பி எடுப்போமா?”

“என்ன நக்கலா? திட்டாமா இருக்கணும்னு பாக்குறேன், பேச வைக்காதீங்க”

“ஒரு போட்டோ பிடிக்கிறதுல என்ன வரப்போகுது பாப்பா?”

“வெளியே வந்தா இப்படி கூப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா?”

“சரிடி மறந்து போச்சு”

“அப்படியாடா? சரிடா!, இப்போ போவோமாடா?”

“பிடிக்கலன்னா சொல்லு சிவும்மா எத்தன “டா” போடறே? வயசுக்கு கூட மரியாதை குடுக்க மாட்டியா நீ? பர்ஸ்ட் கால்(call) அம்மாக்கு பேசு”

“ஐயோ! மாட்டேன்… நாந்தான் யூஸ் பண்ண போறதில்லன்னு சொல்லிட்டேனே, திரும்ப எதுக்கு பேசனும்?”

“அவங்க பேசுறதுக்கு நீ நம்பர் குடு, சிவு”

“வேணாம்… திரும்பவும் நேத்து வாங்கின மாதிரி ரெண்டு மடங்கு திட்டு எனக்கு வரும், நீங்க பேசும் போது மட்டும் இதுல பேசுறேன், மத்தபடி யாருக்கும் இந்த நம்பர் குடுக்க வேணாம்”

“தப்பு பண்றே நீ! அம்மாகிட்ட “மாமா” வாங்கி குடுத்தேன்னு சொல்லு, நேத்து மாதிரி அவரு, இவரு, சுவரு ன்னு சொல்லி வைக்காதே!, இன்னும் நீ என்னை மாமான்னு கூப்பிடல”

“கூப்பிட மாட்டேன்… எனக்கு இன்னும் கோபம் போகல”

“அத நீயே வச்சுக்கோ, இப்போ மாமான்னு கூப்பிடு”

“மாட்டேன்”

“அப்போ உன்னை கை பிடிச்சு இழுத்துட்டு தான் போவேன்” என கையை பிடிக்க வர

“இனி ஒரு அடி என் பக்கம் வந்தாலும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன், மெதுவா பேசிட்டு இருக்க மாட்டேன், வம்பு பண்ணிட்டு இருக்காருன்னு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்”

“உனக்கு போலீஸ் ஸ்டேஷன் போற ஆசை இன்னும் குறையலையா? கம்ப்ளைன்ட் பண்ணிக்கோ, உனக்கே அவ்ளோ தைரியம் இருக்கறப்போ, அத பொய்னு சொல்ற தைரியம் எனக்கும் இருக்கு”- பாண்டியன்

‘சுத்த அறிவுகெட்டவனா இவன்? நேத்துல இருந்து கழுத்துக்கு கத்தியா வந்து உசுர வாங்கிட்டு இருக்கான், இன்னும் எப்படி தான் கோபத்தை காமிக்கிறது’ என திட்டிக் கொண்டே “கிளம்பலாமா மாமா” முறைத்து கொண்டே சொன்னவளிடம்,

“உனக்கு மருந்து வாங்கிட்டு, லஞ்ச் முடிச்சிட்டு ரூமுக்கு போலாம்” – பாண்டியன்

“வேணாம் நேத்துல இருந்து ரொம்ப செலவு பண்ணிட்டே இருக்கீங்க! சம்பளம் வந்ததும் நான் வாங்கிக்கிறேன்” – சிவனி

“நீ வாங்கிக்கிறியான்னு நான் கேக்கும் போது, இந்த பதிலை சொல்லு, இப்போ நான் வாங்கி குடுக்குறத எடுத்துக்கோ, ஒழுங்கா மருந்த சாப்பிடு”

‘கடவுளே! அசராம பேச எப்படி தான் இவனுக்கு வருதோ? நமக்கு ஒண்ணுமே வந்து தொலைய மாட்டேங்குது’ மனதிற்குள் புலம்பத் தான் முடிந்தது.

உணவு உண்ணும் நேரத்தில் பாண்டியன் பேசியதற்கு “ஆம் இல்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவளிடம் தீடீரென்று

“நாம கல்யாணம் பண்ணிப்போமா சிவனி?” என கேட்டு அவளை திகைக்க வைத்து புரையேற வைத்தவன், தலையில் தட்டி, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினான்.

“என்ன பேச்சு பேசி விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லையா உங்களுக்கு?” – சிவனி

“விளையாட்டுக்கு கேக்கல… நெஜமாவே கேக்குறேன் கல்யாணம் பண்…ணிக்…கலா…மா?’ – பாண்டியன்

“தூக்கம் இல்லன்னு புலம்பியே பைத்தியம் ஆயாச்சா?” – சிவனி

“அந்த குவாலிஃபிகேஷன் இருந்தா தான் உன்கூட கல்யாணம் நடக்கும்ன்னா, நான் அந்த நிலைமைக்கு வந்தாச்சுன்னு நினைச்சுக்கோ” வாரிக்கொண்டே அவளுக்கு கடுப்பை ஏற்றியபடியே பதில் சொல்ல

“ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போய் சந்தோசமா இருக்க தான் கல்யாணம் பண்ணிக்கிறது, உங்ககிட்ட போட்ற குரங்கு சண்டைக்கு கல்யாணம் பண்ணிகிட்டா, எப்போவும் சந்தோஷமா இருக்க முடியாது. இந்த பேச்சு வேணாம், எனக்குப் பிடிக்கல” – சிவனி

“என்னை ஏன் பிடிக்கல சிவனி? நல்லாதானே பார்த்துக்குறேன் இந்த நிமிஷம் வரைக்கும்”

“அதுக்காக வாழ்க்கை முழுசுக்கும் உங்க கூடவே இருந்து நான் கஷ்ட்டப்படனுமா?”

“நீ ஏன் கஷ்டப்படணும்? உனக்கு எப்படி இருந்தா பிடிக்குமோ அப்படியே இருந்து என்னையும் அதுக்கு பழக்கப்படுத்து” – பாண்டியன்

‘இவன் பேச ஆரம்பிச்சுட்டான், இனி விட மாட்டான்.’ சிவனியின் மனம் அவனை சாட ஆரம்பித்து,

“இதுக்கு தான் கிளம்பி வந்தீங்களா?” அடக்கப்பட்ட கோபத்தில் சிவனியா கேட்க

“ச்சே.. ச்சே… உனக்கு மாப்பிள்ளை பார்த்து, அந்த போட்டோ காமிக்க தான் வந்தேன். உன்னை பார்க்கவும் வந்த விஷயம் மறந்து போய் உன் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டேன்”

‘அடப்பாவி நானா வெத்தலை பாக்கு வச்சு கூப்பிட்டேன்?’ -சிவனியின் மனசாட்சி

“உனக்கு எல்லாமே நாந்தான் பொறுப்பா எடுத்து செய்யணும்னு நினைச்சு தான், உங்ககிட்ட சொல்லாம ஆரம்பிச்சேன், ஆனா நேத்து நைட் உன்னை இங்கே விட்டுட்டு போறதுக்கு எனக்கு மனசு வரலே… இப்பவே இப்படி மனசு கிடந்து தவிச்சா, அப்புறம் செய்யபோற எல்லா வேலைக்கும் நான் உன் முன்னாடி வந்து நிக்கும் போது, எனக்கும் மட்டுமில்ல உனக்கும் தானே கெட்ட பேர் வரும்.” – பாண்டியன்

“ஒரு வழியா புரிஞ்சா சரி, அம்மாவும் இத தானே சொல்றாங்க” – சிவனி

“அதே தான்… உங்கம்மா கிட்ட என்னை பத்தின தப்பான அபிப்பிராயத்தை மாத்தனும், அத தூரமா இருந்து என்னால செய்ய முடியாது, ஒத்துக்கவும் மாட்டாங்க, உன் பக்கத்தில இருந்தா தான் என்னை பத்தின அவங்க நினைப்ப மாத்த முடியும்.” – பாண்டியன்.

“இதென்ன புதுசா இருக்கு” – சிவனி

எனக்கு காதல் பத்தின பீல் எல்லாம் கரெக்டா சொல்லத் தெரியாது. இவ்ளோ நாள் என் மனசு புலம்பின புலம்பல் நேத்து என்கிட்ட இல்ல. ஆனா அதுக்கும் மேல உன்னோட முகம் என் கண்ணுகுள்ளேயே நின்னு என்னை தூங்க விடமா இம்சை பண்ணுது, உன்னை தவிர வேற எந்த யோசைனையும் என்னை தோண மாட்டேங்குது. அதுக்கு பேர் தான் காதல், எக்ஸட்ரா… எக்ஸட்ரான்னா எனக்கு உன் மேல அது தான். அதான் உன்னையே கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டேன். நமக்குள்ள நடந்த கசப்பான சண்டை, சச்சரவு கூட நம்ம கல்யாணத்துல காணாம போயிரும் இல்லையா? என்ன சொல்ற நீ?” பாண்டியனின் பேச்சில் சிவனி விழி தெறித்து பார்த்து வைத்தாள்.

‘அடப் படுபாவி! ஒரு ஐ லவ் யூ கூட ஒழுங்கா சொல்லத் தெரியல, இப்போ இந்த மூஞ்சி லவ் பண்ணலன்னு யார் அழுதா? இப்படி மட சாம்பிராணியாட்டம் லவ் பண்றதுக்கு காரணத்த லிஸ்ட் போடுது, நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு சிம்பிளா சொல்லத் தெரியுதா இந்த முசுடுக்கு? அது சரி எப்போவாவது லவ் பண்றவங்கள சப்போர்ட் பண்ணி இருந்தா தானே இவனுக்கு அதெல்லாம் தெரிய? சரியான முரட்டு முட்டாள் தான் இவன்’ சிவனியின் மனசாட்சி ஏக போக உரிமையாய் பாண்டியனை திட்டிக் கொண்டிருக்க

“என்ன சொல்ற சிவனி? நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதா? உன் முடிவு என்ன?” இவளது சம்மதத்தை விடாமல் இவனும் கேட்க

‘ஐயோ! என்கிட்டே சம்மதம் வாங்குற வரைக்கும் அடங்க மாட்டானே இவன்? இவன் யோசிச்ச மாதிரி நானும் யோசிக்கணும்னு நினைச்சாவது பாக்குறானா? சரியான தற்குறி’ மனதிற்குள் இவனுக்குண்டான அரச்சனை சிவனியாவால் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

“எனக்கு உங்கள மாதிரி எல்லாம் எதுவும் இல்ல நான் கொஞ்சம் யோசிக்கணும்” – சிவனி

“என்னை உனக்குப் பிடிக்கும் தானே? ஹாஸ்டல் ரிஜிஸ்டர்ல கூட என் ஃபோன் நம்பரும், அட்ரசும் தானே சொல்லி இருக்கே? பின்னே என்ன?” பாண்டியன்

“அட்ரஸ் கேட்ட போது அது தான் ஞாபகம் வந்துச்சு, சொல்லிட்டேன். உடனே இது தான் லவ் னு சொல்லி முடிவு கட்டக் கூடாது” – சிவனி

“உனக்கு பிடிக்கலன்னா கூட என்கூட வர்ற தானே?  நேத்துல இருந்து அப்போ கூட உனக்கு தெரியலையா?”- பாண்டியன்

“நீங்க யோசிச்ச மாதிரி எனக்கும் யோசிக்க டைம் வேணும், எனக்கு எப்பவும் சந்தோசமா இருக்கணும், எந்நேரமும் பிரச்சனை பண்ணிட்டு அடிதடி பண்றவங்க கூட எல்லாம் எனக்கு செட் ஆகாது. இந்த பஞ்சாயத்துக்கு போறத நான் ஒத்துக்க மாட்டேன், எனக்குப் பிடிச்ச வேலைய தான் என்னால பாக்க முடியும். உங்கள மாதிரி எப்பவும் கிட்சனையும், ஹோட்டலையும் கட்டிட்டு அழ பிடிக்காது எனக்கு. உங்க பின்னாடி என்னால வர முடியாது, எனக்காக டைம் ஒதுக்கணும். அதெல்லாம் உங்களால முடியாது. உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது. இது சரிப்படாது” தெளிவாக அவள் மனநிலையை கூறிய திருப்தியுடன் அவனைப் பார்க்க,

“எல்லாம் ரொம்ப ஈசி தானே சிவனி! நானா எந்த பிரச்சனைக்கும் போறதில்ல, இனிமே வந்தா கூட முடியாதுன்னு சொல்லிட்டு போறேன்.”

“அவ்ளோ ஈஸியா இதெல்லாம் நடக்காது”

“நடக்கும்… நீ செய்ற எதையுமே நான் இது வரைக்கும் தடுத்ததில்ல… நேத்து உங்க அம்மா கூப்பிட்ட மாதிரி, வேலைய விட்டுட்டு வான்னு எல்லாம் சொல்ல மாட்டேன். உனக்கு எவ்ளோ நாள் வேலை பாக்கனும்னு தோணுதோ அது வரைக்கும் வேலை பாரு, நோ அப்ஜக்சன்…”

“இப்போ சொல்லிட்டு அப்புறம் தலைகீழ் ஆகும் எல்லாம்”

அப்படியெல்லாம் இல்லடா… உனக்கு எப்படி இருந்தா சந்தோசமா இருக்கலாம்னு நினைக்கிறியோ அப்படியே இருந்துக்கோ… எனக்கு வேண்டியதெல்லாம் என் பக்கத்தில நீ இருக்கணும் அவ்ளோதான். உன் பேருக்கு பின்னாடி என் பேர் மட்டுமில்ல நானும் வர ரெடியா இருக்கேன். மொத்ததுல உனக்கு கறுப்பு பூனையா இருக்கேன் அந்த போஸ்ட் எனக்கு குடுத்துறேன், ப்ளீஸ் பாப்பா” என பாவமாய் சொன்ன அவனது பேச்சில் வாய்விட்டு அழகாய் சிரித்து வைத்தாள்.

“இன்னும் என்னவெல்லாம் சொல்லி என்கிட்டே சம்மதம் கேப்பீங்க மாமா?”

“நீ என்னென்ன கேள்வி கேக்குறியோ அதுக்ககேத்த பதில் சொல்லி தான் சிவும்மா”

“இதெல்லாம் சரியா வரும்னு தோணல எனக்கு” – சிவனி

“நீ என்ன சொன்னாலும் சரின்னு சொல்றேனே… இன்னும் என்ன பாப்பா?” அசராமல் அவன் ஆசையை அவள் மனதில் பதிய வைக்க, அவளுக்கும் தப்பிக்கும் வழி தெரியவில்லை.

“உங்க மாமியார், என்னோட மாமியார் ரெண்டு பேர் கிட்டயும் சம்மதம் வாங்குங்க, அவங்க சம்மதிக்காம நான் எதுக்கும் ரெடியாக மாட்டேன்” தன்னையும் அறியாமல் பேச்சு வந்திருந்தது சிவனிக்கு.

“இது என் பாப்பா… அழகா சம்மதம் சொல்லிட்டே… உன்னோட மாமியாருக்கு அவங்க பையன் ஒரு கழுதை கழுத்துல தாலிய கட்டினா கூட மருமகளா ஏத்துப்பாங்க, அது கொஞ்சம் மாறி அழகான குரங்குன்னு சொன்னா வேண்டாம்னா சொல்வாங்க? கிரீன் சிக்னல் வரவேண்டியது என்னோட மாமியார்கிட்ட இருந்து தான். அவங்களுக்கு தான் நான் இப்போ காவடி எடுக்கணும், செய்றேன். பாலோ பன்னீரோ எதுவா இருந்தாலும் சுபமா முடிக்க, நீயும் அவங்க கேக்கும் போது சரின்னு சொல்லி வைக்கணும் சரியா பாப்பா” கேட்டவனை முறைத்து வைத்தாள்.

“நான் கொரங்கா உங்களுக்கு? எப்படி?? எப்படி??? கழுதைய கூட்டிட்டு வந்தா கூட அத்தம்மா சரின்னு சொல்லிருவாங்களா? அப்போ நான் கழுதைன்னு கூட சொல்வீங்களா? இதுக்கு நிறைய சேதாரம் ஆகும் மாமா? சும்மா விட மாட்டேன் உங்கள?” சண்டையை இப்பொழுதே ஆரம்பித்து வைத்தாள்.

“நான் எங்கேடி விடச் சொன்னேன், கட்டிக்க தானே சொன்னேன்.”

“இப்பவே இப்படி சண்டை போட்டா எப்டி சந்தோசமா இருக்க முடியும்?” அதிமுக்கிய கேள்வி அவள் கேட்டு வைக்க,

“கல்யாணத்துக்கு பிறகு புத்தி எல்லாம் மழுங்கிப் போயிரும், நீ இவ்ளோ தெளிவா எல்லாம் கேள்வி கேக்க மாட்ட… அதனால உன் சந்தோஷத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்ல” என சீண்டலுடன் அவள் சம்மதத்தை வாங்கியவன் சந்தோசத்துடன் மதுரைக்கு புறப்பட்டான்.

*********************************

 

 

எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே

என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே

எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே

என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே

யாரோடு யாரை கை சேர்ப்பதென்று

யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று

சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…

(பாடல் வரிகள்)

error: Content is protected !!