நேசம்- 17
எத்தனயோ முறை வற்புறுத்தியும் செங்கமலத்திடம் இருந்து எந்த ஒரு நகையோ, பொருளோ வரகூடாது என பாண்டியன் கண்டித்திருக்க, விடாப்பிடியாக கோதையை கூட்டு சேர்த்துக் கொண்டு சிவனியாவிற்கு யமஹா பாசினோவை தன் ஆசைக்கு வாங்கிக் கொடுத்து, அவன் முறைப்பிற்கு மகளை மாட்டி விட்டார் கமலம்.
“அவங்களுக்கு இருக்குறது நான் மட்டுந்தான், இதையெல்லாம் நான் தடுக்க முடியாது” மல்லுகட்டியே உபயோகப் படுத்த ஆரம்பித்திருந்தாள். வாழ்க்கை தன் போக்கில் பயணிக்க தொடங்கி இருந்தது.
காலை பத்துமணி, சிவனியா தன் மடிக்கணினியில் பார்வையை பதித்திருந்தாள். யூடியூப்(youtube) வலைதளத்தின் ‘ஐந்து பொடி வகைகள் செய்வது எப்படி?’ என்ற காணொளி காட்சிப் பதிவில்(வீடியோ ரெகார்டிங்) செய்முறை காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அதற்கு பின்னணியாய் கனிமொழியின் குரல் வலம் வந்து கொண்டிருந்தது.
அழகிய கிராமத்து நடையில், எளிமையான விளக்கங்களுடன் கூடிய அவளது இனிய குரல் விளக்கம், அத்தனை அம்சமாய் பொருந்தி இருக்க, அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் சிவனியா.
பதிவின் முடிவில் எப்பொழுதும் போல் “தோழிகளே! மிஸ் பண்ணாம வீடியோவ பாருங்க! இந்த செய்முறை பிடிச்சிருந்தா பெல் பட்டன், லைக் பட்டனை அழுத்தி, எங்க சானலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க! மீண்டும் இது போன்ற அழகான ஒரு ரெசிபியுடன் நம்ம “வருணீஸ் கார்னர்” யூடியூப் சானலில் சந்திக்கலாம் நன்றி! வணக்கம்!” என அந்த காணொளி பதிவு முடிந்தது,
அந்த இணைப்பு பக்கத்தின்(லிங்க் பேஜ்) முகவரியை(url) அவர்களின் வலைப்பக்கமான “வருணா கேட்டரிங்ஸ்” என்ற தளத்தில் பதிவேற்றம்(upload) செய்து விட்டு வேலைகளை முடித்து வைத்தாள்.
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? என் பாஸ் பட்டுப்புடவை கட்டி அம்சமா இருக்காங்க!” சொல்லியபடியே அவள் மடியில் தலை சாய்த்து கொண்ட பாண்டியன், அவளது மென்வயிற்றுப் பகுதியில் தன் முத்தத்தை பதிக்க
“கோவிலுக்கு போகணும் மாமா! எந்திரிங்க…”
“என்ன விசேஷம் சிவும்மா?”
“உங்க மாமியார் ஸ்ட்ரிக்ட் ஆர்டர், அது தான் விசேஷம்” வேண்டா வெறுப்பாய் சொல்லி முடிக்க
“அப்படி என்ன ஆர்டர் போட்டாங்க?”
“வாரத்துல ரெண்டு நாள் சேலை கட்டியே ஆகணும், கோவிலுக்கு போய் விளக்கு போடணும்னு சொல்லிட்டாங்க!”
“அதுக்கு ஏன் பச்சமிளகா கடிச்சவ மாதிரி சிடுசிடுன்னு இருக்க?”
“எல்லாம் உங்களால தான், ரெண்டு அம்மாக்களும் ரெண்டு பக்கம் இடிக்கிறாங்க”
“உங்கம்மா வில்லி வேலை பார்த்தாலும் நான்தான் காரணமா?”
“நைட் உங்கள சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்றாங்க, அவங்க பேச்சுக்கு அடங்காதவன, என் பேச்ச கேக்கப் பழக்கப் படுத்துனு என்னை சொல்றாங்க”
“நான் உன் பேச்ச கேட்டதில்லையா?”
“கேட்டுட்டுத் தான் வேற வேலையே பாக்கப் போறீங்க மாமா! கடுப்பக் கிளப்பாதீங்க!” என்றவளின் குரல் ஏகத்திற்கும் சலிப்பை சொல்ல, சிவனியாவின் முகம் முழுக்க அசிரத்தைகளும், ஏக்கங்களும் மட்டுமே மிஞ்சியிருந்தன.
வருணபாண்டியனும், சிவனியாவும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்து முழுதாய் எட்டு மாதங்கள் முடிந்திருந்தது. கனவுகளை நனவாக்க என ஆரம்பித்த ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, சற்றும் ஒய்வில்லாமல் முன்னை விட அதிகமாய் பாண்டியன் வேலையை துரத்திக் கொண்டும், அவன் பின்னே தன் மனைவியையும் ஓட வைத்திருந்தான்.
நாள் முழுவதும் ஓடி விட்டு, முன்காலை பொழுதில் வீட்டிற்கு உறங்க வருவதை இவன் வழக்கமாக்கிக் கொண்டிருக்க, இரவு முழுவதும் தனியாய் இருக்கும் நேரங்களில் எல்லாம் தூக்கத்தை தொலைத்து, இவன் வந்த பிறகே தூங்கும் பழக்கத்தை கொண்டு வந்திருந்தாள் சிவனியா.
தேனிலவில் தன்னிடம் காட்டிய இணக்கம் எல்லாம் இனிப்பான பொய்யோ என எண்ண வைத்திருந்தான் பாண்டியன்.
வேலை அசதியில் பாண்டியனின் ஆசையெல்லாம் தூரம் போய் விட, கிடைக்கும் நேரத்தில் இவளும் அந்த ஆசைகளுக்கு தடை போட்டு, தன் வேலைகளை கவனிக்க சென்று விட, இப்பொழுது இவர்களின் காதல் வாழ்க்கை கசப்பான உண்மையாகி விட்டது.
இப்பொழுது ஒரு மனைவியாய் இவளது ஆதங்கம் எல்லாம் எந்நேரமும் வேலைகளை கவனத்தில் கொண்டு செய்பவன், தன் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளவில்லை என்பது தான்.
முன்பை விட அவனது உடல் மெலிவும், கண்களின் களைப்பும் இவனது அலைச்சலை படம் போட்டு காட்டிட, கோதைநாயகியும், செங்கமலமும் இவளை பிடித்துக் கொண்டார்கள்.
“அவனை கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சு வேலைய குறைச்சுக்க சொல்லு சிவாம்மா! எங்களுக்கு அடங்காதவன் உன் பேச்சையாவது கேட்டு நடக்க பழக்கப் படுத்து” கோதை நாயகி இவளிடம் முறையிட
“தம்பி பின்னாடி நீயும் போயிட்டு இருந்தா குடும்பத்த பாக்க வேணாமா? ஒரு பிள்ளைய பெத்து குடுத்துட்டு உங்க வேலைய பாருங்கன்னு தானே சொல்றோம்” செங்கமலமும் தன் பக்க அறிவுரைகளை சொல்லிட, இவளுக்கு தான் மத்தளத்துக்கு அடியாய், இரு பக்கமும் இடி போல் இறங்கியது.
“என்னை தனியா மாட்டிவிட்டு வேடிக்கை பாக்குறத வரமா வாங்கிட்டு வந்துருக்கீங்க போல? ஒரு நாளும் நேரத்துக்கு நைட் டைம்ல வீட்டுக்கு வர்றதில்ல, எப்போவும் மூணு மணிக்கு வந்து கடுப்ப கிளப்பிட்டு இருக்கீங்க!” அவனின் சரிபாதியாய் சலித்துக் கொள்ள,
“இன்னும் கொஞ்ச நாள் தானே!”
“அப்புறம் அதுவே பழக்கமாயிடும்னு தானே சொல்ல வர்றீங்க?” சொன்னவளின் பார்வை கடுப்படிக்க
“அப்டியில்ல சிவு!”
“பேசாதீங்க மாமா! உங்கள நீங்களே பார்த்துக்கோங்க” என பவானிதீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து, “இப்போ எப்டி இருக்கீங்கன்னு பாருங்க” அப்பொழுதே ஒரு செல்பியை அவனுடன் சேர்ந்து எடுத்துக் காண்பிக்க
“எல்லாத்திலயும் நீ செம்மையா இருக்கடி! நான் ரொம்ப சுமாராத் தான் தெரியுறேன் பாப்பா!”
“உடம்ப பார்த்துகோங்க மாமா! வேலைய கொஞ்சம் பிரிச்சுக் கொடுங்க! எல்லாத்துக்கும் நேர்ல போகணும்னு இல்ல?”
“நாம பொறுப்பா பாக்குற மாதிரி இருக்காது சிவும்மா!”
“எனக்கு தெரியாது! நீங்க நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா உங்கள கட்டி போட்டு உதைக்க சொல்லி, கோதை இல்லத்துல சட்டம் போட்டாச்சு, அதுபடிதான் இனிமே நடக்கப் போறேன்”
“அடிப்பாவி! மதுரை மங்கம்மா ரேஞ்சுக்கு என்னை பயமுறுத்துற நீ! பாண்டியன் கிட்ட பேசுறோங்கிற பயம் இல்லாம போய்டுச்சு உனக்கு!”
“உங்ககிட்ட எனக்கென்ன பயம்? என்னை பார்த்து தான் உங்களுக்கு பயம்”
“என்னது எனக்கா?”
“நான் சொன்னதுக்காகவே ரெண்டு வருஷம் என்னை பாக்க வராம இருந்தீங்களே! அதுக்கு பேரு என்ன?” சிரித்துக்கொண்டே புருவத்தை ஏற்றி, இறக்கி அவள் கேட்ட தினுசில், இவன் உள்ளம் சொக்கித் தான் போனது.
ஆனால் அவள் சொன்ன பார்வையில் ‘நீ என்னை பார்க்க வரவில்லை’ என்ற குற்றச்சாட்டும் தொக்கி நிற்க,
“முடிஞ்சு போனத எதுக்கு இழுக்குற?”
“இந்த மழுப்பல் எல்லாம் வேணாம், என்னை ஏன் பாக்க வரல?”
“உன்கிட்ட கொஞ்சம் நல்ல பிள்ளையா இருக்கணும்னு நினைச்சேன், இல்லன்னா ரெண்டு வருஷம், நாலு வருஷம் ஆகிட்டா என்ன பண்ணறது? அதான் வரல. ஆனா என் நினைப்பு எல்லாம் உன்மேல தான்னு தெரியாதா உனக்கு?”
“அதை மறக்கத் தான் பிசினெஸ் டெவலப் பண்ணறேன்னு பொழுதுக்கும் சுத்திட்டே இருந்தீங்களா?”
“ஆமாடி என் சக்கரக்கட்டி” கிடைக்கும் சொற்ப நேரங்களில், மனைவியை விட்டு சற்றும் அகலாமல் கொஞ்சிப் பேசுவதே இவன் வழக்கம்.
“இப்போ அத விட ரொம்ப அலையுறீங்க! எனக்குமே பிடிக்கல மாமா! உங்க செகண்ட் ப்ராஜெக்ட் உங்களால தள்ளி போகுது, ஆனா அம்மா என்னை குத்தம் சொல்றாங்க”
“ஆத்திர அவசரத்துக்கு உன்கிட்ட வர, நீ என்ன எமர்ஜென்சி எக்ஸிட்டா? கடமைக்கு இல்லாம ரெண்டு பேர் ஆசைக்கும் நடந்தா தான் நினச்ச காரியம் கை கூடும்” தன் காதல் கொள்கையை அவளுக்கு எடுத்துக் கூற
“இத அப்படியே அங்கே வந்து சொல்லுங்க, நான் நிம்மதியா இருப்பேன்”
“நீ எப்போதான்டி வளரப்போற? எங்கே என்ன பேசனும்னு தெரியல”
“இப்படியே கிண்டல் பண்ணுங்க! ஒரு நாள் உங்கள கட்டி போட்டு நான் பெரிய ஆளு தான்னு நிரூபிக்கிறேன்”
“ஹஹா… இந்த சின்ன பிள்ள பேச்சுதான் பாப்பா, என்னை உன்கிட்ட மயங்க வைக்குது”
“பேச்ச மாத்த வேணாம், நைட் சீக்கிரம் வரப் பாருங்க மாமா”
“யோசிக்கிறேன் பாப்பா”
“யோசிக்க வேணாம் செய்ங்க இல்ல…” அடிக்கும் தோரணையில் விரல் நீட்டி மிரட்ட, சிரித்து வைத்தான்.
மனைவியிடம் சொன்னதை செய்யாமல் போக, காலம் அதை நடத்தி வைக்க எண்ணம் கொண்டதோ இல்லை இவனது கெட்ட நேரமோ வண்டியில் வரும் பொழுது, கீழே விழுந்து தலையிலும், கை, கால்களில் சிராய்ப்பு மற்றும் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அடிபட்டவனிடம் அனுதாபத்தை விட கோபமே மிஞ்சி நிற்க, தனிமை கிடைத்த போது வார்த்தைகளால் குதறி வைத்து, தன் ஆதங்கத்தை எல்லாம் தீர்த்துக் கொண்டாள்.
“கொஞ்சம் கவனம் சிதறி இருந்தாலும் அடி பலமா பட்டிருக்கும், அந்த அளவுக்கு நடுரோட்டுல போய் விழுந்து வைச்சுருக்கீங்க!”
“ஒரு வயசான அம்மா தப்பா க்ராஸ் பண்ணி, பிரேக் அடிக்க போய் நான் விழுந்துட்டேன் சிவு!”
“அடிக்கிற வெயில்ல தலை சுத்தி விழுந்து வச்சுட்டு, காரணம் சொல்ல அந்த வயசான அம்மா கிடைச்சாங்களா மாமா?”
“பிரேக் அடிச்சதும், பின்னாடி வந்தவன் வேகமா வந்து மோதிட்டான், என் தப்பு இல்ல”
“கொஞ்சம் பாலன்ஸ் பண்ணி நிக்க முடியல பேச வந்தாச்சு!”
“பின்னாடி வந்தவன் செஞ்ச தப்புடி, நான் கரெக்டா தான் ஓட்டினேன்”
“பேசாதீங்க மாமா, டாக்டர் சொல்றதயாவது கேட்டு வீட்டுல இருக்க பாருங்க”
“ஒரு வாரம் இருக்கேன்”
“ஒரு மாசம் ரெஸ்ட்ல இருங்க, கை கால் கட்டு பிரிக்கிற வரை எங்கேயும் அசையக் கூடாது”
“என்ன விளையாடுறியா?”
“இல்ல, நிஜமாவே சொல்றேன், மீறி போனா பேச மாட்டேன்” அவனது பலவீனத்தில் அடித்து தாக்க, அவன் மறுப்பு சொல்லாமல், வேண்டா வெறுப்பாய் உடன்படத் தான் வேண்டி இருந்தது.
அவன் பொறுப்புக்களை கைகளில் எடுத்தவள், ரவியையும், கதிரையும் துணைக்கு வைத்துக் கொண்டு, வெளி வேலைகள் எல்லாவற்றையும் இருந்த இடத்திலேயே முடிக்குமாறு மாற்றி அமைத்தாள்.
நேரடி கொள்முதலாக அரிசி மற்றும் பருப்புகளை கொண்டு வந்து போடச் சொன்னவள், காய்கறி, பழங்களுக்கு ஒரு நம்பிக்கையான ஆள் மூலம் கொண்டு வந்து சேர்க்கவும், தினந்தோறும் பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்லாமல், வாரம் ஒரு முறை சென்று வாங்கி வர கதிரை நியமித்து விட்டாள். முடிந்த அளவு எல்லாவற்றையும் இவர்களை தேடி வரும் படி ஏற்பாடுகளை செய்து வைக்க, பாண்டியன் வந்தாலும் அலைச்சல் என்பது குறைந்து, பதட்டம் இல்லாமல் வேலை செய்ய இயலும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது.
இங்கே இவள் சிறிது சிறிதாய் மாற்றி அமைக்க, கோதை இல்லத்தில் இவள் மாற்றி வைத்த முறைகளை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான் பாண்டியன்
“யூட்யூப் சானல், வெப்சைட்ன்னு கலக்கியிருக்கீங்க, பரவாயில்லையே தங்கச்சி, எல்லா ரெசிபிக்கும் வீடியோ எடுத்தாச்சா?” கனியிடம் தன் பாராட்டை தெரிவிக்க
“இன்னும் கொஞ்சம் இருக்கு, மெதுவா தான் செய்றோம், இந்த பொடி எல்லாம் சொல்லும் போது, இந்த கைப்பக்குவம் வரலை எங்களுக்கு செஞ்சு குடுங்கன்னு ஆர்டரும் வருது, அதையும் கமலம் அத்தைய வச்சு செஞ்சு அனுப்பி வைக்கிறோம்”
“பணம் எப்படி டிரான்ஸ்பர் பண்றாங்க? ஏமாத்திட மாட்டாங்களே?”
“முக்கால்வாசி பணத்த அக்கௌன்ட்ல போட சொல்லிட்டு, மிச்சத்த பார்சல் வந்து சேர்ந்ததும் அனுப்பி வைக்க சொல்லும் சிவா, அடுத்து பணம் வரலைன்னா கூட நமக்கு நட்டம் இல்லண்ணே!”
“அப்போ ஓகே! இந்த லிங்க் எல்லாம் நம்ம வெப்பேஜ்ல இருக்கு தானே? ஆன்லைன்ல பார்த்து ஆர்டர் வருதா?” ஆர்டர் வரும் விபரங்களை, இது வரை பெரியவர் ராமலிங்கமும், ரவியும் பார்த்துக் கொண்டிருக்க, அதை இவள் எடுத்துக் கொண்டு பழகி இருந்தாள்.
“A to Z எல்லா விசேஷத்துக்கும் எடுத்து செய்ற மாதிரி விவரம் எல்லாத்தையும் அந்த பக்கத்துல போட்டாச்சுண்ணே! சமையலுக்கு ஆர்டர் குடுக்கும் போது, இந்த டெக்கரேசனுக்கும் பொறுப்பா எடுத்து செய்ய ஆளுங்க கூட பேசியாச்சு! அவளும் கதிரும் சேர்ந்து அதோட வீடியோவும் போட்டு வச்சுருக்காங்கன்னே”
“பரவாயில்லயே! ரெண்டு அராத்தும் சேர்ந்து நல்ல காரியம் எல்லாம் செஞ்சுருக்கு” என வியக்க
“அசைவம் செஞ்சு குடுக்க ஆரம்பிச்சுட்டோம் வருணா!” கோதை
“எப்போ இருந்து? என்கிட்ட சொல்லவே இல்ல?” திகைப்பில் கேட்க
“ஹோட்டலுக்கு குடுக்கப் போறதில்ல…. உன்கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டேன்னு தான் நானும் சிவாவும் சேர்ந்து ஆரம்பிச்சோம்”
“கோவில் ஆர்டர் டெய்லி இருக்கும்மா! எப்டி செய்றீங்க?”
“அதுக்கு தனியா அடுப்புல இருந்து எல்லாமே செட் பண்ணிட்டோம். ஆர்டர் குடுக்க வர்றவங்க ரொம்ப பிடிவாதமா அசைவமும் செஞ்சு குடுக்க சொல்றாங்க, இல்லன்னா அதையும் பொறுப்பா வேற இடத்துல ஏற்பாடு பண்ணி அனுப்பி வைக்க சொல்றாங்க, வெளியே செய்ய சொல்லி கேக்குறத விட, நாமலே செய்வோம்னு என் மருமக ஆரம்பிச்சுட்டா”
“என்கிட்டே சொல்லாம இன்னும் என்னென்ன செஞ்சு வச்சுருக்கா?”
“உன் கோபத்துக்கு பயந்தே அவ சொல்லாம விட்டுட்டா போல! நல்ல காரியத்துக்கு தானேடா செஞ்சா! தப்பில்ல, இதுக்கெல்லாம் முறைக்காதே அவகிட்ட”
“எப்போ முறைச்சு வச்சேனாம்?”
“அத அவகிட்ட தான் கேக்கணும், சின்ன பொண்ணு தலையில பாறாங்கல்ல தூக்கி வச்சுருக்க! அந்த ஹோட்டல ஆரம்பிச்ச பிறகு பொறுப்ப அவ கிட்ட குடுத்துருக்கலாம், பாவம் நிக்க நேரம் இல்ல, இப்போ உன்னோட வேலையும் சேர்த்து கஷ்டம் அவளுக்கு தானே?”
“நான் போறேன்னு தானே சொல்றேன், அவ தான் வீம்பா கட்டி போட்டு வச்சுருக்கா! உதைக்காதது தான் பாக்கி” முறுக்கிக் கொள்ள
“சொல் பேச்சு கேக்கலன்னா, அதையும் குடுக்க சொல்லியிருக்கேன்டா!”
“எல்லாம் சொல்லிட்டா! அதுல அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம், நல்ல சான்ஸ் கிடைச்சிருக்குன்னு அலட்டல் வேற”
“விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டவன் சந்தோசமா குடும்பம் நடத்தாம, பொண்டாட்டிய அலைய வச்சு வேடிக்கை பாக்குற?” கோதையம்மாள் நொடித்துக் கொள்ள,
“போதும் அண்ணி! தம்பிய ஒண்ணும் சொல்லாதீங்க! நீங்க அவளுக்கு ரொம்பவும் இடங் குடுத்து ஏத்தி வைக்கிறீங்க! சும்மாவே ஆடுவா, இப்போ கேக்கவே வேணாம்” செங்கமலத்தின் ஆதரவு எப்பொழுதும் பாண்டியனுக்கு மட்டுமே!
அந்த சமயத்தில் சிவானியும் வீட்டிற்க்கு வர
“என்னம்மா! என்னை பத்தி டாபிக் போகுது போல?”
“வேறேன்ன சொல்வேன், குழந்தைய பெத்து குடுத்துட்டு வேலை பாக்க சொல்றேன். தள்ளி போட வேணாம், தம்பிக்கு வயசு ஏறிட்டு போகுது”
“ஆரம்பிச்சிட்டியா?” என சொன்னவள் பாண்டியனை முறைக்க
“இவனா வளக்கப் போறான்? எப்போவும் போல ஹோட்டல கட்டிட்டு அழவே, இவனுக்கு நேரம் சரியா இருக்கும், எதுவா இருந்தாலும் சிவா தானே பாக்கணும்! அவளுக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வரட்டும், ஒண்ணும் அவசரம் இல்ல,” கோதை சொல்லி வைக்க
“தாங்க்ஸ் அத்தம்மா! நீங்க போதும் எனக்கு” சிவனியும் சந்தோசத்தில் அவருக்கு முத்தம் கொடுத்து வைக்க, அவளை முறைத்த பாண்டியன் வீட்டிற்க்கு சென்றதும்,
“என்கிட்ட ஒரு விவரமும் சொல்லாம, உன் இஷ்டத்துக்கு வேலை பார்த்து வச்சுருக்க!”
“நீங்க சொன்னத நம்பி தான் ஆரம்பிச்சுருக்கேன், உன்னோட ஐடியா எல்லாத்தையும் செஞ்சு பாக்கலாம்னு நீங்க தானே மாமா சொன்னீங்க! மறந்து போச்சா?”
“அதுக்காக ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டியா?”
“சொன்னா கேக்குற மாதிரியா நீங்க இருக்கீங்க? எப்ப பாரு கால்ல சக்கரத்தை சுத்திட்டு நிக்கிறீங்க! இல்ல அலைஞ்சுட்டு வந்து படுக்கிறீங்க! இப்டி இருந்தா எப்படி சொல்ல?” சொல்லியபடியே அவன் தோளில் சலுகையை சாய்ந்து கொள்ள, அடிபடாத கையில் அவளை அணைத்துக் கொண்டவன்
“அப்டியில்லடா யாரவது என்கிட்டே வந்து கேக்கும் போது நானும் சொல்லணும் தானே? யாரோ ஒருத்தர் சொல்லி தெரியறது எப்படியோ இருக்கு எனக்கு”
“ஜஸ்ட் ப்ரோக்ராம் மட்டுமே பண்ணி இருக்கோம் மாமா! இன்னும் ப்ராசெஸ் பண்ணல, கண்டிப்பா உங்ககிட்ட சொல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன், ப்ளெக்ஸ் டிசைன் பண்ண குடுத்திருக்கோம், வந்ததும் நம்ம ஹோட்டல்ல தான் வைக்க போறோம்”
“எவ்ளோ ப்ளானிங்? இந்த கதிரும் ஒண்ணுமே சொல்லாம மறைச்சுட்டான் இருக்கு அவனுக்கு”
“அச்சோ மாமா! எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்லலாம்னு நாந்தான் தள்ளிப் போட்டேன்!”
ஒரு வழியாய் அவனை தாஜா செய்து, ஹோட்டலிலும் அவள் செய்த மாற்றங்களை எல்லாம் அவனிடம் சொல்லி முடிக்கும் பொழுது, வானுக்கும் பூமிக்கும் பலமுறை தாவி சென்று வந்து விட்டாள். அந்த அளவிற்கு இவன் கேள்விகளை தொடுத்து அவளை இம்சை படுத்தி வைக்க, அனைத்திற்க்கும் பதில் சொல்வதற்குள் ஒரு வழியாகிப் போனாள்.
“இனிமே நைட் பன்னெண்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்துரனும் மாமா! இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்” முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள
“ஒரு வழியா சாதிச்சுட்டடி, அஞ்சு வருஷ பழக்கத்தை மாத்தி வச்சு என்ன பண்ண? உனக்கு உன் அத்தம்மா போதுமே?” ஓரப்பார்வையில் இவன் முறைத்து வைக்க,
“பாசத்துல முத்தம் கொடுத்தது தப்பா?”
“உனக்கு என்மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு இப்போ எனக்கு தெரிஞ்சாகனும்”
“பாசம் எல்லாத்தையும் பாய்சனா மாத்தியாச்சு! ஒண்ணும் ஸ்டாக் இல்ல”
“அடியேய் புருசங்கிற நெனைப்பாவது இருக்கா இல்லையா?”
“அப்படி நெனைக்க போய் தான் பாசம் விஷமா மாறிப்போச்சு”
“என்னா வாய்! முடிவா என்னதான் சொல்ல வர்றே?”
“என் வருமாமாவ ஒழுங்கா, நல்ல பிள்ளையா இருக்க சொல்றேன்”
“உன் பக்கத்துல அது ரொம்ப கஷ்டம் பாப்பா!”
காதல் பார்வைகள், பேச்சுக்கள் மெது மெதுவாய் எட்டி பார்க்க, இல்லறம் மகிழ்ச்சியுடன் பயணித்தது.
வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாய், அன்பாய் இருவரின் அரவணைப்பில் செல்ல ஆரம்பிக்க, ஒரு வருடம் கடந்த நிலையில் சிவனிக்கு தான் தடுமாற்றங்கள் தோன்றி மனதை அலைபாய வைத்தது.
மாதந்தோறும் சந்திக்கும் ஏமாற்றங்கள், பெரியவர்களின் பிள்ளை எதிர்பார்ப்பை ஏற்றி வைக்க, இவள் தான் தவித்துப் போனாள்.
செங்கமலம் ஒரு படிமேல போய் மருத்துவ பரிசோதனைக்கென இவளை அழைத்துச் செல்ல நச்சரிக்க, இவளுக்கும் சரியென்று பட்டு பாண்டியனிடம் சம்மதம் கேட்க, அவனுக்கோ சற்றும் இஷ்டம் இல்லை.
“எதுக்கு இந்த அவசரம் சிவு!”
“ஒரு செக் அப் தானே மாமா!”
“எனக்கு இஷ்டம் இல்ல… இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம்டா“
“இல்ல… அம்மா தான் சொல்லிட்டு இருக்காங்க!”
“பெரியவங்க அப்டி தான் சொல்வாங்க! நீ நல்ல ஸ்டூடண்ட் தான், நான் தான் அவரேஜ் டீச்சர் ஆயிட்டேன், அதான் உன்னால ஸ்கோர் பண்ண முடியல, இனிமே நல்ல்ல்ல்லாவே டீச் பண்றேன்” இழுத்து தலையை ஆட்டி, அவள் இடையோடு அணைத்து சொல்லிய போது, அவளுக்கும் சிரிப்பு வந்து நிலைமை சகஜமானது.
இரண்டு மாதங்களில் ஹோட்டல் பணி முடிவடைய, அதன் பத்திரிக்கை எடுத்துக்கொண்டு, அதோடு கொசுறாய் இவனுக்கே ஆப்பு வைத்துக் கொள்ளும் விதமாய், சிவனியிடம் கொண்டு வந்து காண்பித்தது விக்ரம்-அபர்ணா திருமணப் பத்திரிக்கையைத் தான்.