Kumizhi-19

நேசம் – 19

தனது நிலை, தனக்கே புரியாத ஒரு வித மனப்பதைப்போடு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் சிவனியா. ஏன் என்றே தெரியாமல், அவள் மீது அவளுக்கே வெறுப்பு வந்திருந்தது. ஏதோ ஒரு வேகத்தில், கோபமாய் முன்தினம் தான் பேசிய பேச்சும், இப்பொழுது பாண்டியனை காணாமல் தான் தவிக்கும் தவிப்பும் ஒன்றாய் சேர்ந்து, அவன் இல்லாமல் தன்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்ற தெளிவான தன் நிலையை எடுத்து காட்டிடவும், நடுநிசியில் எங்கே சென்று அலைந்து கொண்டிருக்கிறானோ என்ற பதட்டம் தானாய் வந்தமர்ந்து கொண்டது.

இதே போன்ற கோபத்தை அன்று வெளிப்படுத்தித் தான், இன்றளவும் பாண்டியன் மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கிறானோ என்ற எண்ணமும் தானாய் வந்து சேர, அவன் மீது கழிவிரக்கம் தோன்றவே செய்தது. இனிமேல் எக்காரணம் கொண்டும் நடந்து முடிந்ததை எண்ணிப் பார்க்காமல் இருப்பதே, வாழ்க்கைக்கு நல்லது என மனதோடு முடிவெடுத்துக் கொண்டாள்.

இரவின் நிசப்தத்தில் உறங்காமல் விழித்திருந்தவளுக்கு, பாண்டியனின் வண்டிச் சத்தம் துல்லியமாய் கேட்டிட, விரைவாய் சென்று கதவைத் திறந்தவளின் முகம் ஏகத்திற்கும் கடுப்பைத் தாங்கி நின்றது.

இத்தனை நேரம் கணவனைக் காணாமல் தவித்தவளின் மனம், இப்பொழுது அவனை கண்டதும், மீண்டும் கோபம் துளிர்விட, முறைப்போடு அவனைப் பார்த்து வைத்தாள்.

“முறைக்காதே பாப்பா! ஏதோ ஒரு வேகத்துல சொல்லாம போயிட்டேன், சொல்ல நினைச்சப்போ போஃன்ல சார்ஜ் இல்லடா!”

“——–“

“ராஜபாளையம் வரைக்கும் வண்டியில போனேம்மா! வரும் போது ரெண்டு டயர்லயும் மாறி, மாறி பஞ்சர் ஆகிப் போச்சு, அதான் லேட்”

“——–“

பதில் பேசாமல் இவள் உள்ளே சென்றிட, இவனும் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்று விட்டான். இரவு உணவை இவள் சூடாக்கி வைக்க, வந்தவன்

“பசியில்ல சிவும்மா! வரும் போது சாப்பிட்டேன்”

“வந்த காத்துல கரைஞ்சு போயிருக்கும், வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க!” முறைத்தே சொல்ல, இதற்கு மேலும் மறுத்தால், பேசும் ஓரிரெண்டு வார்த்தையும், பேச மாட்டாளோ என்ற நினைப்பில் சாப்பிட அமர்ந்து விட்டான்.

பசியில் வேகமாய் இவன் உணவை உள்ளே தள்ள,

“எதுக்கு பொய் சொன்னீங்க, சாப்பிடலன்னு?”

“மணி ரெண்டாச்சுடா பாப்பா! சாப்பிட்டு படுக்க லேட் ஆகும். உனக்கும் முழிக்க கஷ்டம் தானே?”

“இவ்ளோ நேரம் அது தான் செஞ்சிருக்கேன், சேர்ந்து ஒரு அரைமணிநேரம் முழிச்சா, ஒண்ணும் தலை சுத்தி விழுந்துட மாட்டேன்”

‘ஏகத்துக்கும் மலை ஏறி நிக்கிறா! ஹார்ட் வொர்க் நிறையவே பண்ணனும்டா பாண்டியா!’  மனப்புலம்பலில் இரண்டு சப்பாத்தியை குறைவாக சாப்பிட்டு முடிக்க,

“அசால்டா எட்டு தள்றவர், எதுக்கு ஆறோட நிறுத்திட்டீங்க?”

“போதும்… இன்னைக்கு புஃல்லா ‘டீ(tea)’ குடிச்சது ஒரு மாதிரி இருக்குடா”

நீ சொல்லி நான் கேட்பதா? என்ற ரீதியில் இவள் மேற்கொண்டு சாப்பிடவென தட்டில் உணவை எடுத்து வைக்க

“முடியாது பாப்பா! இம்சை பண்ணாதே!”

“இது உங்களுக்கு இல்ல, எனக்கு!” சொல்லியபடியே அவன் மடியில் அமர்ந்தவள், தன் கைகளை அவன் கழுத்தில் கோர்த்துக் கொண்டாள்

“நீயுமா சாப்பிடல? நான் ஒரு முட்டாள்! உன்னை கேக்கவும் செய்யாம சாப்பிட்டேன்”

“இப்போவாவது தெரிஞ்சதே நீங்க யாருன்னு! உங்க முகம் பார்த்தே நீங்க சாப்பிடலன்னு தெரிஞ்சிகிட்டேன், அப்டி என்கிட்ட, உங்களால கண்டுபிடிக்க முடியலல்ல? இதுல பாசத்துல உருகுறேன்னு பேச்சு வேற” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள

“ம்ப்ச்… ரொம்ப டயர்டுல உன் முகத்தை உத்து பாக்க முடியல! இப்போ தான் என் செல்லக்குட்டிய பக்கத்துல பாக்குறேன், ஏண்டா சாப்பிடல?” சொல்லியவன் தனது மற்றொரு கையால் அவளை அணைத்துக் கொண்டான்

“ம்க்கும்… இந்த உருகலுக்கு மட்டும் குறையில்ல… உங்க கையால சாப்பிட தான் வெய்டிங்”

“எதுக்கு சிவு? கைல ஏதும் அடி பட்டிருக்கா?” பதறி கேட்டு வைக்க

“என் வீட்டுக்காரருக்கு தெம்பா நாலு அடி குடுக்கணும், என் கை ரொம்ப பிஸி, இப்போ ஊட்டி விடப் போறீங்களா? இல்லையா?” என்றவளின் கை, அவன் டி-ஷார்ட் காலரை இழுத்துப் பிடித்திருந்தது.

“நான் அடி வாங்க, நானே உன்ன தெம்பாக்கனுமா? கொஞ்சம் கன்சிடர் பண்ணு சியாபாப்பா! உன் வருமாமா ரொம்ப பாவம்!” பேச்சோடு, ஊட்டவும் செய்தான்.

“என்கிட்ட கோவிச்சிட்டு போகும் போது இந்த நினைப்பு வரலையா? ஒரு போஃன் பண்ணிச் சொல்லக் கூடத் தோணாத உங்கள என்ன செய்யலாம்?” அவன் மார்பில் தன் கையை வைத்து, அதன் மேல் தனது மற்றொரு கை கொண்டு அடித்து வைக்க

“அச்சோ! கை வலிக்கப் போகுது சிவு! நேரடியா அடி! அவ்வளவா வலிக்காது எனக்கு” அழையா விருந்தாளியாய் அடியை வாங்க முனைய “நல்லா வாங்குடா” என அடிக்க ஆரம்பித்து விட்டாள்.

“போவியா? இப்டி சொல்லாம போவியா? தனியா ரூம்ல போய் அடைஞ்சுப்பியா? கோபப்பட்டு சண்டை போட்டா, வந்து சமாதனப் படுத்த மாட்டியா?” அடிகளோடு சேர்ந்து வார்த்தைகளும் ஒன்றாய் தாக்கத் தொடங்க

“கொஞ்சம் மெதுவா அடிடீ! ராட்சசி! நான் சமாதானம் பண்ண வந்தா, இதையும் வீம்புக்கு என் மேல திணிச்சு வைக்கிறேன்னு சொல்லிட்டா என்ன பண்ண? அதான் நிம்மதியா ரூம்ல போயி அடைஞ்சுட்டேன்!”

“ஒஹ்ஹ்… இவ்ளோக்கு என்கிட்ட தள்ளி நிக்க ஆரம்பிச்சாச்சா?”

“நீதானேடி கடமைக்கு இருக்கேன்! கழுதைய சுமக்குறேன்னு கத்தி வைச்ச? அதான் தனியா யோசிக்கட்டும்னு விட்டுட்டேன்”

“அடப்பாவி மாமா! உருகுறது எல்லாம் பேச்சுக்குத் தான்… நான் எப்போவும் கஷ்டப்படணும்னே எல்லாம் செஞ்சு வைக்கீறீங்க!”

“அப்டி இல்ல சிவும்மா! உனக்கே உன்னை பத்தி தெரியாதப்போ, எப்டிடீ நான் சொல்லி புரிய வைக்க முடியும்?”

“அதுக்கு… நான் கோபத்துல என்ன சொன்னாலும் கேட்டு வைப்பீங்களா ஹோட்டல்கார்? சமாதானமா சொல்லி கேக்கலன்னா, கொஞ்சம் அதட்டி பேசி, எனக்கு புரிய வைக்க மாட்டீங்களா?” உலுக்கி எடுத்து விட்டாள்.

“போன ஜென்மத்துல நான் என்ன புண்ணியம் செஞ்சேனோ? என் மேல இருக்குற பிரியத்தையும் புரிஞ்சுக்காம, சண்டை பிடிக்கிறவ பொண்டாட்டியா கிடைக்க!”

“பேச்ச மத்தாதீங்க?”

“சரி… நீ என்ன பாவம் செஞ்சியோ? என்ன செஞ்சாலும் உன் மாமன் எப்போவும், உன்னை கண்ணே! கண்மணியே! கல்கண்டேனு கொஞ்ச மாட்டான்… உருகி, உருகி அவனோட பாசத்தை உன்கிட்ட கொட்ட மாட்டான்”

“ஆனா அடிக்கவும், கோபப்படவும் மொத ஆளா வரத் தெரியும். அப்படித்தானே?” ஏக கடுப்பில் முறைத்துக் கேட்க

“எனக்கு அது தானேடி வருது!” பாண்டியன் சிரித்து வைக்க

“வெறுப்பேத்துறீங்க! எவ்ளோ தவிச்சுப் போனேன்னு தெரியுமா? கொஞ்சம் கூட யோசனை இல்லாம, ஊர் சுத்திட்டு வந்து, உங்க அருமை பெருமைய பேசிட்டு இருக்கீங்க!”

“சொல்ல வந்தா திரும்பவும் நீ சண்டைய இழுத்து வைப்பேன்னு நல்லாத் தெரியும்… தனியா ரூம்ல இருந்ததுல உனக்கு கடுப்பு ஏறிப் போயிருக்கும், அதான் திரும்பி வந்து மொத்தமா உன்கிட்ட சரண்டர் ஆகலாம்னு போயிட்டேன்”

“சொல்லிட்டுப் போகாததுக்கு நியாயம் வேற சொல்வீங்களா?”

“என் பாப்பாக்கு நேத்து வந்த கோபம் போயிருச்சா…” ஆழ்ந்த குரலில் பாண்டியன் கேட்க

“உங்ககிட்ட இருந்து தள்ளி நிக்கனும்னு நினைக்கிறப்பவே, என் மனசு, உங்களையே சப்போர்ட் பண்ணி, இன்னும் பக்கமா ஒட்டிட்டு நிக்குது… இதுல கோபம் மட்டும் இன்னும் இருக்குமா?”

“நமக்குள்ள நிறையவே மாறிடுச்சு பாப்பா… அத நான், உனக்கு புரிய வைச்சிருந்தா, இந்தக் கோபம் உன்கிட்ட எட்டிப் பார்த்திருக்காது, செய்யாதது என் தப்பு!”

“கோபம் எல்லாம் அப்பப்ப வரும், போகும். அத பத்தி இனிமே பேசவோ, நினைக்கவோ வேணாம் மாமா!”

“தங்கம்டி நீ! எப்டி அவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சீக்கிரமா தூக்கி போட்டுட்ட?” சொல்லியே கொஞ்சிக் கொண்டான்.

“ம்ப்ச்… இது என்ன சினிமாவா? பழிக்குப் பழிவாங்க? இல்ல அதையே நினைச்சு அழுதுட்டு இருக்க முடியுமா? அப்போவே அத தூர தூக்கிப் போட்டுட்டு வேலைய பார்த்தவ நானு”

“ஆஹான்… நினைச்சு நினச்சுக் கஷ்டப்பட்டேன்னு சொன்னது யாரு?”

“உங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் கஷ்டத்த நினைச்சா தூக்கம் வராது. நீங்க தான் விடாம தொல்லை குடுக்கன்னு, என் முன்னாடி வந்து நின்னு இம்சை பண்ணீங்களே! அதையெல்லாம் மறக்கவா முடியும்” இதை சொல்லவும் இவன் முறைத்து வைக்க

“நிமிசத்துல முறைச்சுப் பாக்குறத விட்டுத் தொலைங்க! இப்டி பார்த்தே எல்லாரையும் பயமுறுத்துறீங்க மாமா!”

“முறைக்கவும் கூடாது, சிரிக்கவும் கூடாதுன்னா வேற என்ன செய்ய? உன்னோட இந்த முடிவ நான் எதிர் பாக்கவே இல்ல”

“தப்புன்னுப் பார்த்தா எல்லார் மேலயும் தப்பு இருக்கு மாமா! நான் ஆரம்பிச்சு வச்சது… அது எங்கெங்கேயோ போய், இப்படி நடக்கனும்னு இருந்தா என்ன செய்ய?” வாய் வார்த்தையாக கூட அன்றைய நிகழ்வுகளை சொல்லாமல் தவிர்த்தவளை கண்டு கொண்டவன், அதற்கு மேல் அதை பற்றி பேசி, அவளை இம்சிக்க முற்படவில்லை.

“என் மேல என்ன கோபம் இருந்தாலும், அத மறந்து என்னை தேடியிருக்க பார்த்தியா? இது தான்டா நீ! எனக்காவே, உன்னை நிறையவே மாத்திட்டு இருக்கே பாப்பா! இதெல்லாம் தான் என்னை உன்கிட்ட கட்டிப் போட்டிருக்கு” சொன்னவனின் உடலும் சிலிர்க்கத்தான் செய்தது.

“அது என்னமோ! இந்த முரட்டு மாமாவ திட்டாம, பாக்காம நானும் தவிச்சு போயிட்டேன்”

“என்ன இருந்தாலும் நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தானே சிவும்மா?”

“மொத இந்த நெனைப்புல இருந்து வெளியே வாங்க மாமா!”

“எப்படி அவ்ளோ ஈஸியா முடியும்? நீ கொஞ்சம் முகத்தை சுருக்கினாலும், எனக்கு அந்த பிரச்சனையே ஞாபத்துக்கு வந்து கொன்னு போடுதுடி”

“ம்ப்ச்… அதுக்கு தான் சொல்றேன் எல்லாத்தையும் மறந்துருங்க! எப்போவும் போல பழைய படி, என்னை அதட்டி கண்டிக்கிற மாமாவ இருக்கப் பாருங்க”

“நிச்சயமா பாப்பா! என் ஆச பொண்டாட்டி ஒண்ணு சொல்லி, கேக்காம இருந்தா, இந்த வருமாமாக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா?” சகஜநிலைக்கு திரும்பிட,

“இப்படி சொல்றவர் இன்னைக்கு முழுசும் என்னை தவிக்க விட்டுட்டார் மாமா!” இவளும் நொடித்துக் கொள்ள

“ஒரு மாந்தோப்பு குத்தகைக்கு எடுக்குறது பத்தி ஏற்கனவே பேசி வச்சிருந்தேன், இன்னைக்கு வந்தா ரேட்(விலை) பிஃக்ஸ் பண்ணி, பேச்சு வார்த்தை முடிக்கலாம்ன்னு நைட்டே போன் வந்ததால யோசனை பண்ணாம கிளம்பிட்டேன்”

“ஒரு வேலை ஆரம்பிச்சு முடியறதுக்குள்ள, அடுத்த வேலைய பார்த்தே ஆகணுமா மாமா?” சலிப்பாய் கேட்டு வைக்க

“குத்தகை எடுத்து, மேற்பார்வைக்கு இரண்டு பேர வேலைக்கு வைக்கணும்! முதலீடு மட்டுமே போடணும், விளைச்சல் நேரத்துல போய், அறுவடை எப்படி நடக்குதுன்னு பார்த்துகிட்டா போதும்டா!”

“ஷப்ப்ப்பா… முடியல! இப்டி ஒண்ணு மாத்தி ஒண்ணு ஆரம்பிச்சு, நமக்குனு நேரம் ஒதுக்காமயே இருக்கீங்க மாமா! இது சுத்தமா பிடிக்கல எனக்கு”

“ஆரம்பிச்சிட்டியா? இதெல்லாம் நமக்காக தானே சிவும்மா! வாய்ப்பு கிடைக்கும் போது செஞ்சு முடிச்சுரணும்டி”

“கொஞ்சம் ப்ரீயா இருக்க பாருங்க! அதான் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது மாமா”

“இனிமே அப்டித்தான் இருக்க போறேன்! ஹோட்டல் ஆரம்பிச்ச பிறகு, எல்லா வேலைக்கும் ஆள் வச்சு பாக்கப் போறேன், அப்போ தானே ரிலாக்ஸா, என் மகாராணி பின்னாடி சுத்த முடியும்” கண்ணடித்தபடியே சொல்லி வைக்க

“சமாளிக்க உங்களுக்கா சொல்லிக் குடுக்கணும்? இனிமே இப்படிப் போனா, இந்த அளவுக்கு பேசிட்டு இருக்க மாட்டேன்!”

“அப்போ இவ்ளோ நேரம் நீ அமைதியாவா இருந்த?”

“பின்னே இல்லையா? நீங்க எங்கேன்னு கேக்கிறவங்க கிட்ட, நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்னு கொஞ்சம் யோசனை பண்ணியிருந்தா என்னோட கஷ்டம் புரியும்”

“தோப்பு பக்கத்துல போன் இல்ல, அங்கே உக்காந்திருக்கும் போதே கண்ணு சொக்கி, தூங்கிட்டேன்… சாரி! ஹிஹி…” இளித்து வைத்தவனை, கழுத்தைப் பிடித்து இறுக்கி வைத்தாள்

“வாய்… வாய்… எல்லாத்துக்கும் காரணம் சொல்ற இந்த வாய தைச்சு போடணும்! எங்கேயாவது ஒரு இடத்துலயாவது அடங்குறியா மாங்கா மடையா?”

“இது ஒண்ணு தான் பாக்கி வச்சிருந்த! இதையும் சொல்லிட்டியா?”

“இன்னும் கூட சொல்லுவேன்! அடங்காத முரடன் கூட டூயட் பாடக் கூட, சண்டை தான் போடணும் போல? இதுல உங்ககிட்ட இருக்குற பிரியத்தை காமிச்சு வேற தொலைக்க, நான் என்ன பைத்தியமா? நான் தூங்கப் போறேன்…”

“அடாவடி பொண்ண கட்டிக்கிட்டவன் என்ன சொல்றதாம்? நான் பாவமில்லையா?” அறைக்கு சென்றவளின் பின்னே இவனும் வர

“நேத்து எங்கே போனீங்களோ, அங்கேயே போங்க! உங்களுக்கு இங்க இடமில்ல!”

“சரி வா போவோம்!” திமிரத், திமிர அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

“கீழே இறக்கி விடுய்யா… இல்ல கடிச்சு வச்சிருவேன்!”

“எதுனாலும் செய்! எனக்கு கவல இல்ல! உன் மாமாக்கு இந்த பாப்பாவ கட்டிப்பிடிக்காம தூக்கம் வரல… வா சேர்ந்தே தூங்குவோம்”

“நேத்து ரூம்ல உட்காந்து தவமா பண்ணினீங்க?”

“தூங்கவே இல்லடி! ரொம்ப நாள் ஆச்சு… இப்டி நான் கொட்ட கொட்ட முழிச்சு…”

“அப்படியே இன்னைக்கும் முழிச்சுக் கொண்டாடுங்க! என்னை இறக்கி விடுங்க”

“மாட்டேன்! இன்னைக்கு ஒரு வழியாக்காம உன்னை விடறதா இல்ல”

“போச்சு! ஒரிஜினல் வில்லன் வெளியே வந்தாச்சு!”

“கரெக்டா சொல்லிட்ட! இது வரைக்கும் எல்லாத்துக்கும் உன் சம்மதம் கேட்ட காலம், நேத்தோட மலை ஏறிப் போச்சு! இனிமே என்னோட முரட்டுத்தனம் தான் உன்கிட்ட பேசப் போகுது… கடமைக்கு இருக்கேன்னா பேசி வைக்கிற… உன்ன…” கன்னங்களில் அடுத்தடுத்து முத்தத்தை பதிக்க.

“மொத இந்த ஸ்பீடு பிரேக்கர எடுத்து விடுங்க வருமாமா! அநியாயத்துக்கு எனக்கு கஷ்டம் குடுக்குது” அவன் தாடியை சுட்டிக் காட்டிட,

“ஸ்பீடு பிரேக்கர்ல குதிச்சு போனாத்தான் குடுத்ததும், வாங்குனதும் மறக்காம இருக்கும் சியாபாப்பா!” சொல்லியபடியே பக்கத்து அறைக்கு வந்திருந்தான்.

“இங்கே சிங்கிள் காட்… வெயிட் தாங்காது மாமா!”

“பரவால்ல… மிங்கிள் ஆகிட்டு சிங்கிளா இதுலயே படுக்கலாம்”

“மாட்டேன்! என்னால முடியாது”

“அந்த பேச்சுக்கே இடமில்ல! இன்னைக்கு கொண்டாட்டம் எல்லாம் இங்கே தான்” சொன்னவன், மனைவிக்கு பிடித்தமான கணவனாக மட்டுமே நடந்து, அன்றைய நாளினை கொண்டாடினான்.