Kumizhi-5

Kumizhi-5

குமிழி-5

வேலுவின் கடைக்குச் சென்று “எந்த பஸ்லண்ணே பார்த்தீங்க?” என பாண்டியன் வேலுவிடம் கேட்கும் போது அங்கே புதிதாய் ஒரு இளைஞன் அவர்களுடன் நின்றிருந்தான்.

“அதோ முன்னாடி நிக்கிற பஸ்ல தான்ப்பா, இப்போ கூட ஒரு பையனும் இருக்கான், நான் பாக்கும் போது இல்ல, வயசுப் பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு, எல்லா தயாராத் தான் வந்திருக்கு போல. போய் புத்தி சொல்லி கூட்டி வா பாண்டி” வேலுவின் பேச்சே பாண்டியனுக்கு கோபத்தை விதைத்திட, அவர்கள் கண்ட காட்சி தவறான புரிதலுக்கு வழிவகுத்தது. அப்பொழுதும் அபர்ணா இருந்ததை இருவரும் கவனிக்கவில்லை.

சரியாக பாண்டியன் அங்கே பார்க்கும் பொழுது, தோழிகளிடம் அவர்களை வயதையொத்த இளைஞன் விக்ரம் பதட்டத்துடன் அபர்ணாவிடம் நின்று பேசி கொண்டிருக்க, அந்த நேரம் அபர்ணாவின் பயணப்பை(பேக்) சிவனியாவின் கைகளில் இருந்தது,

“என்ன நடக்கின்றது” என்பது தெரியாமல், இருவரின் பேச்சையும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தவள் விக்ரமிற்கு மிக அருகிலே தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட்டிருந்தாள் சிவனியா.

மூன்று பேரும் பேருந்தின் உள்ளே வட்ட வடிவில் நின்றிருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்க்கு சிவனியாவும், விக்ரமும் முதுகைக் காட்டுக் கொண்டு நிற்பது மட்டுமே தெரிந்தது. அபர்ணா நின்றிருக்க, அவளது முன்புறம் அவளை மறைத்தவாறே சிவனியாவும், விக்ரமும் நின்றிருந்தனர்.

அந்த இரவு நேரத்தில், பலபேர் கூடும் இடத்தில், பேருந்தில்  இருந்தவர்களின் பார்வை சிவனியாவை உற்று நோக்கிக் கொண்டிருப்பதையும், அவள் ஒரு இளைஞனின் அருகில், கையில் பயணப் பையுடன் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தவனுக்கு, பொல்லாத கோபம் வந்து அவன் மதியை மழுங்கச் செய்ய, ஆவேசமாய் பேருந்தில் ஏறியவன், விக்ரமை இழுத்து கீழே தள்ளி விட்டு, சிவனியாவை கீழே இழுத்துக்கொண்டு இறங்கினான். அவனுடைய கண்களுக்கும் அபர்ணா அங்கே நிற்பது தெரியவில்லை என்று சொல்வதை விட, அருகினில் யார் இருக்கிறார்கள் என்பதை இவன் பார்க்கவில்லை.

பேருந்து நிலையத்தில் தவறு நடந்தால் தட்டிக் கேட்டு நாட்டாமை செய்பவனுக்கு, பலர் பார்க்கும் படி தங்கள் வீட்டுப் பெண் ஒரு இளைஞனுடன் நின்றிருந்தைப் பார்த்து பதட்டமும், கோபமும் ஒன்றாய் வந்தது. வேலு சொன்ன கருத்தும் அவன் மனதில் அலைபாய, அவசரக்கோலத்தில் தானே ஒரு முடிவினை எடுத்து, யாரிடமும், எதற்கும், எந்த விளக்கமும் கேட்காமல், அவர்களை இழுத்து கீழே வந்திருந்தான்.

சட்டென்று இவன் செய்த செய்கையில் எல்லோருடைய கவனமும் இவர்கள் மேலேயே நிலைத்து நின்றது.

“எதுக்கு சார் என்னை பிடிச்சு கீழே தள்ளி விட்டீங்க?” தடுமாறி கீழே விழுந்த விக்ரம் கோபத்துடன் கேட்க,

“நீ செய்ய நினைக்கிற வேலைக்கு மாலை போட்டு மரியாதை பண்ணுவாங்களா? எத்தன நாள் பழக்கம்டா உங்க ரெண்டு பேருக்கும், என்ன யோசனையில இங்கே வந்திருக்க?” யோசிக்காமல், நிதானம் தவறிய ஆத்திரத்துடன் கூடிய அவசர பேச்சினை பாண்டியன் பேசிட, வலுக்கட்டாயமாய் கீழே இழுத்து, இறக்கப்பட்ட இருவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயினர்.

என்னவென்று தீர விசாரிக்காமல், கோபத்தில் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும், மற்றவர்களை கொல்லாமல் கொன்று புதைத்து விடும் அபாயம் கொண்டது. ஒருவரை இறக்காமல் இறக்கச் செய்யும் வலிமை கொண்டது. இப்பொழுது அந்த அபாயம் அங்கே பாண்டியனின் வார்த்தைகள் மூலமாக சிவனியாவிற்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.

பின்னோடு இறங்கிய அபர்ணாவிற்கும், அந்த சூழ்நிலையின் வீரியம் தெளிவாய் புரியத் தொடங்கி இருந்தாலும், இப்பொழுது இங்கே இருந்து எப்படித் தப்பிப்பது என்றே சிந்திக்கத் தொடங்கி இருந்தாள்.

தத்தம் பெற்றோரை ஏமாற்றி, தங்கள் காதலில் வெற்றியடைய நினைத்த அபர்ணாவும், விக்ரமும், தனித்தனியாக, வெவ்வேறு பொழுதுகளில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, அதன்படி முதலில் அபர்ணா சிவனியாவின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

எப்படியும் தன் பெற்றோரிடம், சிவனியாவின் தாயார் அங்கே அவள் வருகையைப் பற்றி பேச நினைப்பார் என்று ஊகித்தவள், முன்தினம் தான் வருவதை தோழியிடம் சொன்ன மறு நிமிடமே தன் கைபேசியை அணைத்து, மதுரைக்கு வந்த பிறகே இயக்கி இருந்தாள். “செல்போன் சர்வீஸ் சென்றது” என செங்கமலத்திடம் பொய் புரட்டு வேறு புனையப்பட்டது.

அபர்ணா மதுரைக்கு வந்தடைந்த நாளின் இரவுப் பொழுதில் விக்ரமும் அங்கே வந்து சேர, அங்கிருந்து வேறு ஒரு ஊருக்குச் சென்று புது வாழ்வை தொடங்க முடிவெடுத்திருந்தனர் அந்த காதலர்கள். இதன்படி விக்ரம் வந்தவுடன் இவளுக்கு கைபேசியில் அழைக்க, அவனுடன் பேசத் தான் அபர்ணா கீழே தங்கியது. தன் காதலை வாழ வைக்க பொய் புரட்டுகளை வஞ்சனை இல்லாமல் சொல்லி கொண்டே இருந்தாள்.

எக்காரணம் கொண்டும் தன் காதலை மறந்தும் கூட சிவனியாவிடம் வெளியிடவில்லை அபர்ணா. தனியாக பேருந்து நிலையத்திற்க்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில், பொய்யாய் அவள் வெளிப்படுத்திய அதிகபட்ச பதட்டம் காலை வாரி விட, வேறு வழி இல்லாமல் விக்ரம் தன்னை வந்து சந்திக்கும் வரை, அவள் தன் ஊரான திருச்சி பேருந்தில் ஏறி அமர்ந்தது. அவன் வந்தவுடன் சிவனியாவிடம் தன்னை அழைத்துப் போக வந்தவன் என்று சொல்லி அவளிடம் இருந்து விடைபெற்றிட வேண்டும் என்பதே அபர்ணாவின் எண்ணமாக இருந்தது.

இவர்களது காதல் அரங்கேற்றங்கள் எதுவும் தெரியாத அப்பாவியாய், பகடைக்காயாய் சிவனியா மாறி இருந்தாள். நட்பு என்னும் போர்வையில், சிவனியாவின் கழுத்தை இறுக வைத்த பாம்பாய் மாறி இருந்தாள் அபர்ணா. தன் காதலை உண்மையாக்கி வெற்றியடைய, தன் நட்பினை பொய்யாக்கிக் கொண்டிருந்தாள்.

தற்போது விக்ரம் அகப்பட்டுக் கொண்ட சூழ்நிலையில், தானும் அகப்பட்டுக் கொண்டு, மீண்டும் தன் பெற்றோரின் முன்னே சென்று நின்றால், ஏற்கனவே தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இப்பொழுது தன் உயிருக்கும் உலை வைத்து விடுவர், தனக்கு வீட்டுச் சிறை உறுதி என்று தன் நிலைமையை அனுமானித்த அபர்ணாவிற்கு, தன்னை காதலித்த அப்பாவியை காப்பாற்றும் எண்ணம் இருந்தாலும், முதலில் தன்னை இந்த இக்கட்டில் இருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இந்த நேரத்தில் தப்பித்தால், வெளியே இருந்து தன் காதலனை எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து விடுவித்து அழைத்து வந்து விடலாம் என்ற எண்ணமும் சேர்ந்தே அவளுக்குத் தோன்ற, விக்ரமை கீழே தள்ளி விட்டு, அவனோடு சேர்த்து சிவனியாவையும் இழுத்துக்கொண்டு சென்ற பாண்டியனின் பின்னே சென்றவள், நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருத்தியாய் தூரமாய் நின்று கொண்டாள்.

விக்ரமிற்க்கோ பாண்டியன் யாரென்று தெரியாது. அவன் தன்னையும், சிவனியாவையும் மனதில் வைத்துத் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும் அறியாமல், அவனை கீழே தள்ளி விட்ட கோபத்துடன் பாண்டியனுடன் பேச ஆரம்பித்திருந்தான்.

“நாங்க எங்கே போனா உங்களுக்கென்ன சார்? எதுக்கு என்னை தள்ளி விட்டீங்க? யார் சார் நீங்க?” இவன் அபர்ணாவை மனதில் வைத்துப் பேச, பாண்டியனோ சிவனியாவை உருவகப்படுத்தினான்.

“எவ்ளோ தைரியம் இருந்தா என்னையவே யார்னு கேப்ப?” என்று கர்ஜித்த பாண்டியன், விக்ரமின் சட்டையை கொத்தாகப் பிடிக்க, விக்ரமோ தன் பலத்தை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, பெரும் முயற்சி கொண்டு பாண்டியனின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில், அவன் நெஞ்சில் கையை வைத்து தள்ளிவிட, அதில் நிலைதடுமாறிய பாண்டியன், விக்ரமை அந்த இடத்திலேயே போட்டு அடித்து உதைக்க ஆரம்பித்து விட்டான்.

இந்த அதிரடி செயலில் பாண்டியனது சட்டைப் பையில் இருந்த கதிரின் கைபேசி கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.

அடிப்பவனை தடுத்திடும் முயற்சியில் சிவனியா, பாண்டியனை தன் பக்கம் இழுத்து “மாமா கொஞ்சம் அமைதியா இருங்க, ஆத்திரப்படாம நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க, இவர் யாருன்னே எனக்கு தெரியா…” அவள் வாக்கியத்தை முடிக்கும் முன்னே, தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவளை அறைந்து விட்டான்.

தன்னை விட சிறியவன் ஒருவன் தன்னை நிலைகுலையச் செய்து விட்டானே என்ற ஆத்திரமும், தன் கேள்விக்கு பதில் சொல்லாது, தன்னையே எதிர்த்து ஒருவன் கேள்வி கேட்டு விட்டானே என்ற அடங்காத கோபமும் சேர்ந்து எரிமலையாய் இருந்தவனுக்கு, சிறுபெண்ணின் சமாதானப் பேச்சு மேலும் ஆக்ரோசத்தைத் தர, அது கன்னத்து அடியாய் சிவனியாவை சென்றடைய, அந்த அடியின் வீரியம் தாளாமல், அவள் சற்று தூரம் தள்ளிச் சென்று கீழே விழுந்து வைத்தாள்.

லாங் டாப்பும், லாங் ஸ்கர்ட்டும், துப்பட்டாவுடன் அணிந்திருந்தவள், கீழே குப்புற விழுந்து வைக்க, அவளது பாவாடை சற்று மேலேறி கணுக்காலை வெளியே காட்டியது என்றால், அவளது நீளமான சட்டையின் இடுப்புப் பகுதியில் நடைமேடையின் முனை பெரும் பலத்துடன் உராய்ந்து, சட்டைப் பெரிய கிழிசலை ஏற்படுத்தி விட, அந்த இடம் வெளியே தெரிய ஆரம்பித்தது மட்டுமில்லாமல், அவளது இடுப்பு பகுதியில் சிராய்ப்பையும் ஏற்படுத்தி விட்டது.

சற்றும் யோசிக்காமால் பாண்டியன் செய்த இச்செயல் ஆறாத ரணத்தை மனதில் அக்கணமே ஏற்படுத்தி விட, இதயத்தை கத்தி கொண்டு கிழித்த வலியைப் போல் மனதளவில் பெரிய காயம் கொண்டாள் சிவனியா.

தன்னை சுதாரித்து கொள்ளும் நேரத்தில் ஒரு பெண்மணி வந்து கைகொடுத்து நிற்க வைத்து, அவள் துப்பட்டாவையே அவளது இடுப்பிற்கு கட்டி விட்டவர்,

“எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசுங்கப்பா, பொம்பளப் பிள்ளைய இப்படியா ரோட்ல போட்டு அடிக்கிறது?” என கேட்டு வைக்க,

வேலுவும் அவசரமாய் அவன் அருகில் வந்து “என்ன பாண்டி இப்படி பண்ணிட்டே? எதுவா இருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டிப் போய் பேசு, உங்க வீட்டு பொண்ணை இப்படியா எல்லார் முன்னாடியும் அடிச்சு வைப்ப?” என அவனை வலுக்கட்டாயமாய் நடைமேடைக்கு தள்ளிக் கொண்டு வர, பாண்டியன் அந்த நிலையிலும் கோபம் குறையாமல் விக்ரம் மற்றும் சிவனியாவையும் சீற்றமான பார்வையுடன், தன் இரு கைகளிலும் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்த நடைமேடை ஓரத்திற்கு சென்றான்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி தான் என்றாலும், சற்று முன் நடந்த சம்பவத்தை கண்டவர்கள் மேற்கொண்டு என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் பின்தொடர, அதை எல்லாம் உணரும் நிலையில் பாண்டியன் இல்லை. மீண்டும் அவன் பழைய கேள்வியையே கேட்டு வைத்தான்.

“சொல்லுடா! எங்கே போக பிளான் பண்ணிருக்கீங்க?, எத்தன நாளா உங்க ரெண்டு பேருக்கும் பழக்கம்?” சிவனியாவையும், அவனையும் கை காட்டி கேட்க

“ஐயோ சார்!! நீங்க என்ன மென்டலா? எனக்கு இந்த பொண்ணு யாருன்னே தெரியாது? நான் எதுக்கு இந்த பொண்ணு கூட போகணும்? கொஞ்சங்கூட என்ன ஏது கேக்காம இப்படி பிரச்சனை பண்ணறீங்களே?” என கோபத்துடன் அலுத்து போய் அவனை எதிர் கேள்வி கேட்க

“உன்னோட வண்டவாளம் வெளியே தெரியாம இருக்க என்னையே மெண்டல்னு சொல்லி வைக்கிறியா? வகுந்துருவேன் உன்ன! யார்கிட்ட பேசுற? கையும் களவுமா பிடிபட்டுட்டு இப்போ எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொன்ன உன்னை சும்மா விட்ருவேன்னு நினைக்கிறியா? உங்க வீட்டுக்கு போன் அடிச்சு உங்க அப்பாவை இப்போ கூப்பிட்றியா, இல்ல என்கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றியா?” பாண்டியனும் விக்ரம் பேச்சை நம்பாமல் சீற்றமாய் பேச்சை வளர்க்க,

“இதென்ன சார் வம்பு? அந்த பொண்ணுகிட்ட கூட கேட்டு பாருங்க, நான் வந்தது என்னோட கேர்ள் ஃப்ரண்ட கூட்டிட்டு போகத் தான், அவ கூடத் தான் இந்த பொண்ணும் இருந்துச்சு, இதுக்கு மேல எனக்கும் இந்த பொண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, வேணும்னா என் கேர்ள் ஃப்ரண்ட கூப்பிடுறேன் கேட்டுப் பாருங்க” அந்த சமயத்தில் தான், தன் காதலி அபர்ணாவை அவன் தேட, அவளோ அங்கே இருந்து மாயமாகி இருந்தாள்.

“என்னடா மேலமேலே பொய் சொன்னா அது உண்மையாயிருமா?” பாண்டியன் விக்ரமின் கழுத்தைப் பிடிக்க,

“நான் சொல்றது உண்மை சார்… இந்த பொண்ணுகிட்டயும் கேட்டுப் பாருங்க சார்!” அவனும் சொன்னதையே சொல்ல

பாண்டியனின் உடனிருந்த வேலுவும் அதையே ஆமோதித்தார்.

“கொஞ்சம் அமைதியா கேளு பாண்டியா! இந்த அளவுக்கு கடுமையா நடந்து ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, அப்பறம் நாம தான் பதில் சொல்லணும், நீ உன்வீட்டு பொண்ணுகிட்டயும் விசாரி, அவனும் அவனோட கேர்ள் ஃப்ரண்ட கூட்டிட்டு வரட்டும், விசாரிப்போம்” என அவனை ஆசுவாசப்படுத்த, அந்த நேரம் தான் சிவனியாவை கவனித்தான் பாண்டியன்.

எப்பொழுதும் புன்னகையுடன் மலர்ந்திருக்கும் அழகிய முகம் இறுகிப் போய் இருந்தது. அவன் கைவிரல்கள் கன்னத்தில் பதிந்து அவனது பலமான அடியை வெளியே சொல்ல, கீழே குப்புற விழுந்த வேகத்தில் அவளது உதட்டிலும் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம் மெதுவாய் வழிந்து கீழே இறங்கி இருந்தது. அவளது இடுப்பை மறைக்கவென அவள் கட்டியிருந்த துப்பட்டாவையும் பார்த்தவன், அங்கே உள்ள கிழிசலை அறியவில்லை. அதற்கும் மனதில் அவளை திட்டித் தீர்த்தான்.

“எங்கே போட்டுக்குறத எங்கே சுத்திக்கிட்டு நிக்குது பாரு, இதெல்லாம் உருப்பட்ட மாதிரி தான்” மனதில் திட்டிக்கொண்டே,

“சொல்லு சிவனி, இவன் சொல்றது உண்மையா, உனக்கும் இவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா? உண்மை என்னனு ஒழுங்கா சொல்லு என்னோட பொறுமைய சோதிக்காதே!” – பாண்டி

தன் மேல் சிறிதும் நம்பிக்கை இல்லாமல், அவன் பேசிய பேச்சும், செய்த செயல்களும் அவளது இதயத்தை ரணமாய் காயப்படுத்தி இருக்க, அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தாள்.

“என்னம்மா இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? கேக்குறதுக்கு பதில் சொல்லு. கொஞ்சம் நிமிந்து பாரும்மா, எத்தன பேர் இங்கேயே வேடிக்கை பாக்குறாங்கன்னு!” வேலு சுற்றுப்புறத்தை மெதுவாய் சுட்டிக் காட்டிட நிமிர்ந்து பார்த்தவள், தனக்கு எப்பேர்பட்ட தலைகுனிவு தன் மாமனால் ஏற்பட்டு விட்டது என்ற நினைப்பே மேலும் அவள் இதயத்தை கிழித்தது.

“சொல்லும்மா இந்த தம்பி சொல்றது உண்மையா?” அமைதியாய் வேலு கேட்க

“ஆமாண்ணே! இவர் சொல்றது எல்லாம் உண்மை தான், என்னோட ஃப்ரண்ட் கூடத் தான் வந்தேன்”

“அப்போ அந்த பொண்ணு எங்கே?” இருவரையும் பார்த்து பாண்டியன் கேட்க

“அவளைத்தான் சார் நான் தேடிட்டு இருக்கேன் காணோம் அவள” பதட்டத்துடன் விக்ரம் இயலாமையுடன் பதில் சொல்ல

“நீ சொல்றது பொய்ன்னு ஊருக்கே புரிஞ்சு போச்சு, இல்லாத பொண்ணை தேடினா எப்படி கிடைப்பா? உண்மையச் சொல்லுங்க ரெண்டு பேரும், நான் பிரச்சனை பெரிசாகாம பார்த்துக்குறேன்” பாண்டியனும் எகத்தாளத்துடன் இருவரையும் நம்பாமல் பேசி வைக்க

“என்னை நம்புங்க சார், பஸ்ல தான் இருந்தா, நான் போய் கூட்டிட்டு வர்றேன்.” – விக்ரம்

“ஏண்டா உன்னோட கேர்ள் ஃப்ரண்டுக்கு நீ கீழே விழுந்த விஷயம் தெரிஞ்சுருந்தா இந்நேரம் வந்திருப்பாளேடா, எப்படி வேடிக்கை பார்த்துட்டு இருப்பா? உங்க வீட்டுல நான் பேசுறேன், போன் போடு உங்க வீட்டுக்கு…” – பாண்டியன்

“சார் பேசிப்பேசியே நீங்க தான் பிரச்சனை பண்றீங்க. எனக்கும், இந்த பொண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நான் தேடிட்டு வந்த என்னோட கேர்ள்பிரண்டும் இப்போ காணோம், அவளைத் தேடனும் ஆளை விடுங்க சார்” என பாண்டியனிடம் கெஞ்சியவன், சிவனியாவைப் பார்த்து

“சிஸ்டர் இவர் யாரு உங்களுக்கு? என்ன நடந்ததுன்னு தெரியாமயே பேசிட்டு இருக்காரு, கொஞ்சம் எடுத்து சொல்லுங்க, அப்படியே நீங்களும் வீட்டுக்கு போய் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிக்கோங்க” என அவளது காயப்பட்ட முகத்தைப் பார்த்து சொல்ல,

“எங்க அம்மா மேல சத்தியமா எனக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்ல எங்களை நம்புங்க” அவளின் “மாமா” என்னும் அழைப்பு அந்த நொடியில் இருந்து காணாமல் போனது. கண்களும் முகமும் அப்பொழுதே வலியாலும், கோபத்தாலும் சிவந்திருந்தது.

“உங்கள மாதிரி பசங்க இதே வேலையா சுத்திட்டு, பிடிபட்டா இப்படி எல்லாம் பொய் சொல்லி வைக்கிறதே பொழப்பா போச்சு, நான் உங்க அம்மாகிட்ட சொல்லல, நீ நடந்த உண்மைய சொல்லு சிவனி” பாண்டியன் சற்று இறங்கி வந்து கேட்க

“அதத்தான் இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன், நீங்க நம்பலன்னா நான் என்ன செய்ய?” சிவனியா இயலாமையுடன் இயம்ப

“நீ சொல்லறது உண்மைன்னா உன்னோட ஃப்ரண்ட் இங்கே வந்திருக்கணுமே? எங்கே போனா சொல்லு? இந்த நேரத்துல உனக்கு இங்கே என்ன வேலை?” விடாமல் பாண்டியன் கேட்க

“எப்படி கேட்டாலும் இது தான் நிஜம்” – சிவனியா

“பொய் சொல்றடி நீ? ஒழுங்கா சொல்லு எதுக்கு வந்தே?”- பாண்டியன்

இவனை எந்த ரகத்தில் சேர்ப்பது? உண்மையை சொன்னால் நம்பாமல் மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்டால் எப்படி தான் பதிலுரைப்பது? என்ற குழப்பம் இப்பொழுது சிவனியாவிற்கு வர, பாண்டியன் தொடர்ந்து கேள்வி கேட்க, இவளுக்கு அடங்கா கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது.

“எதுக்கு வந்தே உண்மைய சொல்லப் போறியா இல்லையா சிவனி?

“நீங்க சொல்லித்தான், உங்களைப் பாக்கத்தான் வந்தேன், இப்ப நீங்களே இப்டி என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டா எப்டி? நீங்க தானே பேசணும் வான்னு கூப்பிட்டீங்க” சற்றும் யோசிக்காமல் அதிரடியாய் ஒரு பொய்யை உண்மையாய் சொல்லி வைத்தாள்.

தன்னை நம்பாமல், கேள்விக் குறியாய் நிற்க வைக்கப் பட்டிருக்கும் தன் நிலையும், இத்தனை பேர் மத்தியில் வேடிக்கைப் பொருளாய் நின்றிருக்கும் தலைகுனிவும் சேர்ந்து அவள் சித்தத்தை சிதறச் செய்ய, அந்த சமயத்தில் அவளும் நிதானம் தவறி, அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய், தனது தப்பிக்கும் மார்க்கமாய், அவனையே குற்றவாளியாய் சொல்லி வைக்க, பாண்டியன் அவளது கழுத்தை நெறிக்கத் தொடங்கி விட்டான்.

மூர்க்கத்தனமாய் அவளது கழுத்தை நெறித்துக்கொண்டே “என்னடி என்ன பேச்சு பேசுறே? எல்லாமே விளையாட்டாப் போச்சா உனக்கு? அவனை தப்பிக்க வைக்க என்னை மாட்டி விடப் பாக்குறியா?” என சொல்லிக்கொண்டே மேலும் அவள் கழுத்தை இறுக்கத் தொடங்க, பக்கத்தில் நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள் தான் அவனை இழுத்து தள்ளி நிறுத்தினர். பேச்சு திசை மாறிச் செல்வதை உணர்ந்த வேலுவும், நிலைமையை சகஜமாக்க,

“பாண்டியா கொஞ்சம் அமைதியா இரு! எதுவா இருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டு போய் பேசு, நான் இந்த பையன என்ன ஏதுன்னு விசாரிச்சு வைக்குறேன். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க மொதல்ல, கூட்டம் சேர்ந்துகிட்டு இருக்கு பாரு, நமக்கு தான் பேர் போயிரும், கிளம்புங்க சீக்கரம்” அவர்களைத் துரிதப்படுத்தியவர், தன் கைபேசியில் தனக்கு பரிச்சயமான ஆட்டோகாரனை வரவைத்து இருவரையும் அனுப்பி வைத்தான்.

“வீட்டுக்குப் போய் சேர்ற வரைக்கும் ரெண்டு பேரும் பேசிக்காதீங்க! அம்மாடி தங்கச்சி நீயும் கோபப்படாம விவரமா எல்லாத்தையும் சொல்லுமா” தணிந்த குரலில் பேசி இருவரையும் அனுப்பினார்.

“என்ன தம்பி? என்னதான் முடிவு பண்ணிருக்கீங்க? நல்லாவா இருக்கு இதெல்லாம், ஒழுங்கா வீட்டை பார்த்து போய்ச் சேருங்க, திரும்பவும் ஏதாவது சொல்லிட்டு பிரச்சனை பண்ணினா, அப்பறம் போலீஸ் வந்து பேசும், பாண்டியன் சும்மா விடமாட்டான். இங்கே இருக்குற காக்கிசட்டை எல்லாம் பாண்டியனுக்கு ரொம்ப நெருக்கம், அவன் ஒரு இடத்துல இருக்கான்னா அந்த பிரச்சனைய முடிச்சுட்டு தான் வருவான்னு நம்புறவங்க. நடந்தது என்னான்னு இவன் போய் சொன்னாத்தான் உண்டு. ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிபோச்சுன்னு பின்னாடி வந்து புலம்பினா ஒண்ணும் பண்ண முடியாது” என நீளமான அறிவுரையை எச்சரிக்கையாய் வேலுவும் விக்ரமிற்கு வழங்கிட

“சார் இப்பவும் சொல்றேன் எனக்கும் அந்த பொண்ணுக்கும் சம்மந்தமில்ல, நான் என்னோட ஃப்ரண்ட கூட்டிட்டு வந்து உங்க கிட்ட பேசிட்டே போறேன், இப்போ என்ன போக விடுங்க சார், அவளைத் தேடணும்”

“சரி உன்னோட போன் நம்பர், அட்ரஸ் ரெண்டையும் சொல்லிட்டு போ”- வேலு

“சார் போன் நம்பர் குடுக்குறேன் அட்ரெஸ் எதுக்கு சார்?”- வார்த்தைகளை பாதி முழுங்கிய படியே விக்ரம் கேட்க

“நாளபின்னே திரும்பவும் அந்த பொண்ணுக்கு உன்னாலே ஏதாவது பிரச்சனைன்னு வந்தா, உன்னை தேடி வந்து உதைக்கத் தான்” பல்லைக் கடித்தபடியே வேலு கூற

“நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல சார்! எங்க பாமிலி ரொம்ப நல்ல மாதிரி” – விக்ரம்

“அப்போ நீ மட்டும் ஏம்பா வீட்டை விட்டு ஓடி வந்த? அந்த சமயம் உன் குடும்பம் நல்ல மாதிரியா இல்லமா இருந்துச்சா?” ஊசியாய் வார்த்தையை வேலுவிடம் இருந்து வெளியே வர

“போதும் சார், இனிமே எதுனாலும் யோசிச்சே முடிவேடுக்குறேன்” என விக்ரம் புலம்பிய நேரத்தில் அவன் கைபேசியில் அபர்ணா அழைக்க

“எங்கேடி போனே நீ? இங்கே எவ்ளோ பிரச்சனை தெரியுமா? நீ இல்லாம உன்னோட ஃப்ரண்ட எப்படியெல்லாம் என்னோட சேர்த்து பேசிட்டாங்க, பாவம்டி அவங்க! எப்படிடி உனக்கு இந்த நிலைமையில விட்டுட்டு போக மனசு வந்துச்சு?” ஆத்திரத்துடன் விக்ரம் கேட்க

“நம்ம நல்லதுக்கு தாண்டா செஞ்சேன், நேர்ல சொன்னாத்தான் உனக்கு புரியும், கோபப்படாதே! நான் இப்போ பக்கத்துல இருக்குற ஆம்னி பஸ் ஸ்டாண்ட்ல தான் நிக்கிறேன், மொதல்ல நீ அங்கே வா” –அபர்ணா

“முடியாது அபர்ணா! நாம கிளம்புறத பத்தி கொஞ்சம் யோசிக்கணும், இப்படி ஒரு பிரச்சனைய உண்டு பண்ணிட்டு உன்கூட வர நான் விரும்பல. இங்கேயே இருந்து நான் திருச்சி கிளம்புறேன், நீயும் அங்கேயே இருந்து கிளம்பு, எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு பேசுவோம். இப்போ எந்த முடிவும் எடுக்க வேணாம்” ஆணித்தரமாய் சொல்லிவிட்டு தன் அழைப்பை துண்டித்தவன்,

“சார் என்னோட போன் நம்பரும், வீட்டு அட்ரசும் நோட் பண்ணிக்கோங்க, எதுவும் அந்த பொண்ணுக்கு பிரச்சனைன்னா சொல்லுங்க சார், நான் வந்து விளக்கம் குடுக்க ரெடியா இருக்கேன்” நொடி நேரத்தில் தன் முடிவினை மாற்றி விட்டு, தன் விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் கடைகாரர் வேலு குடுத்த நோட்டில் எழுதி விட்டு புறப்பட்டான்.

****************************

error: Content is protected !!