kurumbu Paarvaiyile-19

குறும்பு பார்வையிலே – 19

“நீங்க இல்லைனா அவ செத்துருவா?” ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ போற இடத்தை சொன்னாலோ,  உங்க கூட கல்யாணம் நடந்தாலோ, செத்துருவேன்னு சொன்னாளே.”  என்று கார்த்திக் வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினான்.

“என்னை கல்யாணாம் பண்ணிக்கிட்டா அவ செத்துருவாளா? என் மேல் அப்படி என்ன வெறுப்பு?” என்று கோபமாகக் கேட்டுக்கொண்டே  ஆகாஷின் கைகள் கார்த்திக்கின் சட்டையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தது.

“ஆகாஷ், என் மேல ஏன் கோபப்படுறீங்க?” என்று நிதானமாகக் கேட்டான்.

“என் டாலி… என் டாலி அப்படி சொல்லிருக்க மாட்டா.” அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அப்படி என்ன நடந்திருச்சு?” ஆகாஷ் கார்த்திக்கிடம் பரிதாபமாகக் கேட்டான்.

“அதை தான் நானும் கேட்கறேன். ஸ்ருதி என்கிட்டே எதுமே சொல்லலை. அவ என் கிட்ட சொன்னது இது மட்டும் தான். ஆகாஷ் கிட்ட எனக்காக பேசினாலோ? இல்லை ஆகாஷ் கிட்ட நான் இருக்கும் இடத்தை சொன்னாலோ விபரீதமாக முடியுமுன்னு மட்டும் தான் சொன்னா.” என்று கார்த்திக் கூற, ஆகாஷ் தன் காதுகளை இறுக மூடிக்கொண்டான்.

“நீ சொல்லலைனா, அவ இருக்கிற இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியாதா?” என்று கார்த்திக்கிடம் வெறி கொண்டு கேட்டான் ஆகாஷ்.

ஆகாஷின் வெறி கொண்ட கோபத்தில், கார்த்திக் சற்று மிரண்டு தான் போனான்.

கோபமாக காருக்குள் சென்றவன், மீண்டும் இறங்கி வந்தான். ஆகாஷின் வெறி  மட்டுப்பட்டிருந்தது.

“உண்மையில் நான் வேண்டாமுன்னு ஸ்ருதி போய்ட்டாளா?” அவன் குரல் உடைந்து ஒலித்தது.

‘இந்த ஸ்ருதி ஏன் போனாள்?’ கார்த்திக்கின் கோபம் இப்பொழுது தோழியிடம் திரும்பியது.

“என்னை வேண்டாமுன்னு சொல்லிட்டு போய்ட்டாளா?” அவன் குரல் அவனிடமே கழிவிரக்கம் கொண்டது.

“அப்படி என்ன வெறுப்பு? அப்படி என்ன கோபம்?” அவன் சோகம் சற்று வடிந்து சோகம் மீண்டும்  கோபமாக மாறி இருந்தது.

‘ஸ்ருதி, பேசியதை நான் ஆகாஷிடம் சொல்லி இருக்க கூடாதோ? தப்பு பண்ணிட்டேனோ?’ கார்த்திக்கின் மனம் இப்பொழுது பதற ஆரம்பித்தது.

“ஆகாஷ், ஸ்ருதி எங்க போயிருக்க போறா?” அவனை சாமாதம் படுத்த முற்பட்டான்.

ஆகாஷ் பதில் பேசவில்லை. “ஸ்ருதிக்கு கொஞ்சம் கோபம் அதிகமுன்னு உங்களுக்கு தெரியாதா?” ஆகாஷின் நிலையை கண்டு அவன் மேல் பரிதாபம் கொண்டு, பேச ஆரம்பித்தான்  கார்த்திக்.

“கோபம் தப்பில்லை கார்த்திக். எனக்கு உன் தோழியை பத்தி தெரியாதா?” சற்று விலகல் தன்மையோடு கேட்டான் ஆகாஷ்.

டாலி, ஸ்ருதியாக மாறி ஸ்ருதி இப்பொழுது உன் தோழியாக மாறியது கார்த்திக்கிற்கு நெருடியது.

“கோபம் வந்தா காதல் இல்லைன்னு ஆகிருமா?” ஆகாஷ் வருத்தத்தோடு கேட்டான்.

“ஸ்ருதி…” என்று கார்த்திக் பேச ஆரம்பிக்க, “அவ எங்க போயிருப்பான்னு நீ சொல்ல வேண்டாம். நான் அவளை தேடி போக மாட்டேன்.” அழுத்தமாகக் கூறினான் ஆகாஷ்.

“நான் தப்பு பண்ணிருந்தா ஸ்ருதி என் சட்டையை பிடித்திருக்கணும். நான் அவ கிட்ட மண்டியிட்டு கூட மன்னிப்பு கேட்பேன். ஐ லவ் ஹர். அந்த காதலுக்காக நான் எவ்வளவு தூரம் வேணும்ன்னாலும் இறங்கி வருவேன். ஆனால், அது எங்க காதலுக்காக மட்டும் தான்.” என்று அவன் ஆள் காட்டி விரலை வைத்து முற்று புள்ளி வைத்தான் ஆகாஷ்.

அந்த முற்றுப்புள்ளி எதற்கோ வைக்கும் முற்றுப் புள்ளி போல் அந்த வானில் பறந்தது.

“அந்த காதலே வேண்டாமுன்னு போன ஸ்ருதி யாரோ தான். ஸ்ருதி யாரோ மட்டும் தான்.” ஆகாஷின் வெறுப்பு அங்குக் கனலாக எரிந்தது.

‘அன்புக்கும், வெறுப்புக்கும் இடையில் இத்தனை மெல்லிய இடைவெளியா?’ கார்த்திக் கொலை நடுங்கிப் போனான்.

அவன் கண்முன்னே இருவரின் வாழ்க்கை சிதறுவதை அவனால் பார்க்க முடிந்தது. ஆனால், ‘நான் சொல்வதை யார் கேட்பார்கள்?’ என்ற அவன் சிந்தனை ஓட முடியாமல் தவித்து நின்றது.

ஆகாஷ் அவன் காரின் மேல் சாய்ந்து தன் கைகளை அவன் கண்களுக்கு அண்டை கொடுத்து, அழுத்தம் கொடுத்து அவன் கண்ணீரை நிறுத்திக்கொண்டான்.

“நான் செய்த தப்பு என்னனு எனக்கு தெரியலை கார்த்திக். இப்பவும் ஸ்ருதி என் கண்முன்னால் வந்தா, நான் அவ கிட்ட மன்னிப்பு கேட்பேன்.” அவன் குரல் வேதனையை அப்பிக்கொண்டு ஒலித்தது.

“எனக்கும் அவ மேல் கோபம் தான். ஏன் டாலி போனான்னு அவ கிட்ட சண்டை போடுவேன். ஆனால், விட்டுட்டு போக மாட்டேன் கார்த்திக்.” அவன் பேச்சு கரகரப்பை வெளிப்படுத்தியது.

“ஆனால், இந்த ஆகாஷ்… என்னை வேண்டாமுன்னு, என் காதலை வேண்டாமுன்னு தூக்கி போட்டுட்டு போன ஒருத்தியை தேடி போக மாட்டான். ஒரு நாளும் போகமாட்டான்.” என்று கார்த்திக்கிடம் சவாலாக கூறினான்.

ஆகாஷின் மனம் சொல் அனைத்தும் பிதற்ற ஆரம்பித்தது.

அவன் காதல் மீண்டும் மேலே எழும்பி நின்றது.

“என் டாலி… என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டா. நிச்சயம் வருவா. அவளால்  என்னை விட்டுட்டு இருக்க முடியாது.” அவன் மனம், அவன் காதல் என அனைத்தும் உறுதியாக நம்பியது. காரை கிளப்பினான்.

அவனால் ஸ்ருதியின் வீட்டை விட்டு அத்தனை எளிதாகக் கிளம்ப முடியவில்லை. தடுமாறினான்.

மீண்டும் இறங்கினான். கார்த்திக்கால் அவன் தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“என் டாலி… ஸ்ருதி வருவா! வரலைனா… இந்த ஆகாஷுக்கும், உன் தோழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று ஆகாஷ் உறுதியாக கூற,  “ஸ்ருதி கோபம் உங்களுக்கு…” என்று கார்த்திக் ஆரம்பிக்க அவனை இடைமறித்தான் ஆகாஷ்.

“ஏன் உன் தோழிக்கு என்னை பத்தி தெரியாதா? நான் குறும்பா பேசுவேன்… நான் சீண்டி விளையாடுவேன்… நான் இப்படி தான்னு அவளுக்கு தெரியாதா? தெரிஞ்சி தானே காதலிச்சா?” என்று சட்டம் பேசினான் ஆகாஷ்.

“எனக்கும் ஸ்ருதியின் கோபம் தெரியும். நான் பேசினது தப்புன்னா என் கழுத்தை நெரித்திருந்தாலும் தப்பில்லை. ஆனால், என்னை விட்டுட்டு போவாளா?” என்று அவன் கேட்க, கார்த்திக்கின் தலை விண்வினென்று வலித்தது.

‘என்னத்த லவ் பண்ணாங்களோ தெரியலை. அவ போற இடத்தையும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா. ஆகாஷ், இங்க இப்படி குதிகுதின்னு குதிச்சா, நான் என்ன பண்ண முடியும்? யாரவது ஒருத்தர் நான் சொல்றதை கேட்கணும். அதுவும் கேட்க மாட்டாங்க போல.’ என்று கார்த்திக் ஆகாஷை பரிதாபமாகப் பார்த்தான்.

“ஸ்ருதி வரணும். கல்யாணத்துக்கு முன்னாடி வரணும். நான் அவளுக்காக காத்திருக்கேன். நான் தப்பே பண்ணிருந்தாலும், நான் அவளை விட்டுட்டு போகலை. அவ தான் என்னை விட்டுட்டு போனா. அவ என்னை தேடி வரணும். நான் என்ன தப்பு பண்ணனேன்னு அவ சொல்லட்டும். நான் எப்படி மன்னிப்பு கேட்கணுமா, நான் அப்படி மன்னிப்பு கேட்டுக்குறேன்.” என்று நிதானமாகக் கூறிவிட்டு, அந்த காரில் சீறி பாய்ந்தான்.

‘ ஸ்ருதி… நீ ஆகாஷை காதலனா மட்டும் தான் பாத்திருக்க… என் அன்பை மட்டுந்தான் பாத்திருக்க… என் கோபத்தை இனி பார்ப்ப. அவ இல்லைனா எனக்கு வாழ்க்கை இல்லையா? நான் வாழுவேன்…’ என்று ஆகாஷின் மனம் கோபமாக எண்ணிக் கொண்டிருந்தது.

ஆகாஷ், காரில் இருந்து இறங்கி அந்த பரிசுப்பொருளை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தான். அதை அவன் கோபமாக விட்டெறிய,  ஸ்ருதி வாலெண்டைன்’ஸ் டே  அன்று கொடுத்த பரிசுப்பொருளோடு இந்த பரிசுப்பொருளும் அமர்ந்து கொண்டது.

மறுநாள் காலை வீட்டில் பூகம்பம் கிளம்பும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும், அவன் எண்ணம் ஸ்ருதியை சுற்றியே வந்தது.

‘ஒரு கேலி பேச்சுக்கு என்னை விட்டுட்டு போவாளா? அப்ப கல்யாணமாகிருந்தா டிவோர்ஸ் பண்ணுவாளா?’ என்று அவன் எண்ணங்கள் தறி கெட்டு ஓடியது.

மறுநாள் காலையில், அவன் வீடே அல்லோலப்பட்டு கொண்டிருந்தது.

ஆகாஷ் அவன் அறையிலிருந்து சாவகாசமாக வந்தான்.

“டேய்… என்ன டா இப்படி ஒரு வாரத்திற்கு முன்னாடி கல்யாணத்தை நிறுத்தணுமுன்னு சொல்றாங்க. இதுக்கு தான் தகுதி தராதரம் பார்த்து சம்பந்தம் பேசிருக்கணும்.” என்று சுமதி கூற, ஆகாஷின் கை முஷ்டி இறுகியது.

மற்றவர்கள் யாரும் பேசவில்லை. அங்கு மயான அமைதியே நிலவியது.

“ஆகாஷ்! நீ தான் நாங்க விரும்பறோமுன்னு சொல்லிக்கிட்டு தெரியுற. அவ எப்ப பாரு அந்த கார்த்திக்  பையன் கூட…” என்று சுமதி பேச, “அம்மா…” என்று அலறினாள் கீதா.

ஆனால், கீதாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு முன்பாக ஆகாஷ் அவன் அருகே இருந்த கண்ணாடி குவளையைத் தூக்கி அங்கிருந்த குடும்ப புகைப்படத்தின் மீது எறிந்தான்.

ஸ்ருதியை பற்றிப் பேசினால், மொத்த குடும்பத்தின் நிலையும் இது தான், என்று அவன் சொல்லாமல் சொல்லியது போல் இருந்தது.

மொத்த குடும்பமும் அவனை வித்தியாசமாகப் பார்த்தது.

“கல்யாணத்தை நிறுத்த சொன்னது நான். ஸ்ருதியை பற்றி யாரும் பேசக் கூடாது.” என்று கூறிவிட்டு அவன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

‘அப்படி விட்டுவிடுவேனா?’ என்று தொடர்ந்தார் சுமதி. “நான் அந்த மகாராணியைப் பற்றிப் பேசலை. ஆனால், நான் என் சொந்தத்தில் வேற பொண்ணு பாக்குறேன். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்.” என்று உறுதியாகக் கூற, அவன் தன் தாயை ஆழமாகப் பார்த்தான். அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

ஆகாஷை தொடர்ந்து சென்ற பாட்டி, “உனக்கும் ஸ்ருதிக்கும் என்ன பிரச்சனை? கல்யாணத்தை நிறுத்தறதெல்லாம் தப்பு டா.” என்று கூற, “நான் எங்க…” என்று பேச ஆரம்பித்து நிறுத்திக்கொண்டான் ஆகாஷ்.

“உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை. ப்ரீ வெட்டிங் ஷூட்ல ஏன் பாதில கிளம்பி வந்தீங்க?” என்று பாட்டி பிரச்சனையின் நாடியைப் பிடித்து விட்டார்.

பதட்டத்தோடு பாட்டியைப் பார்த்தவன் சுதாரித்துக்கொண்டான்.

“அதெல்லாம் இல்லை பாட்டி. எல்லாம் சரியாகிரும்.” என்று நம்பிக்கையோடு கூறியவன், சில நொடிகளில் நம்பிக்கை இழந்தவன் போல், “பாட்டி சரியாகலைனாலும், ஸ்ருதி தான் என் மனைவி.” என்று கண்ணீர் மல்கக் கூறினான் ஆகாஷ்.

“சரியாகிரும் ஆகாஷ்.” என்று அவன் தலை கோதினார் பாட்டி.

‘ஏதோ, எங்கோ உடைந்துவிட்டது. எல்லாம் சிதறி விட்டது.’ என்று அவன் அறிவு கூறினாலும், அவன் மனம் மட்டும், ‘டாலியால் நான் இல்லாமல் இருக்க முடியாது. அவள் வந்துவிடுவாள்.’ என்று உறுதியாக நம்பியது.

அவள் வருவாளா?

குறும்புகள் தொடரும்…