குறும்பு பார்வையிலே – 14
பல கோணங்களில் ஆகாஷ், ஸ்ருதி ப்ரீ வெட்டிங் ஷூட் அன்று முடிந்து விட, அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தனர்.
ஸ்ருதியின் முகத்தில் வெட்கம். ஒரு தயக்கம். ‘ஆகாஷ் என் மனதிற்கு நெருக்கமானவன் தான். வருங்கால கணவன் தான். ஆனால்? இவர்கள் முன்னிலையில் நான் என் நெருக்கத்தைப் பறை சாற்ற வேண்டுமா?’ என்ற கேள்வி அவள் முகத்தில்.
‘இது தான் ஸ்டேட்டஸா? இதெல்லாம் ஆகாஷ் வேண்டாமுன்னு சொல்லிருக்க கூடாதா?’ அவள் மனம் சுணங்கிக் கொண்டது.
ஆகாஷ் ஸ்ருதியின் முகத்தை இருமுறை திரும்பிப் பார்த்தான். அவனால் ஓரளவுக்கு ஸ்ருதியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
‘ரொம்ப சங்கடப்படுறாளோ? இதை நான் வேண்டாமுன்னு சொன்னாலும் பாட்டியும், அம்மாவும் ஒத்துப்பாங்களா?ஸ்டேடஸ்ன்னு காரணம் காட்டி ஸ்ருதியை தானே குறை சொல்லுவாங்க.’ என்ற கேள்வி அவன் மனதில்.
அவர்கள் இருவரும் பேசப் பல விஷயங்கள் இருந்தும், எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அந்த மணற்பரப்பில் நிதானமாக நடந்து வந்தனர்.
அந்த மௌனம் ஆகாஷுக்கு பிடிக்கவில்லை. “ஐயோ… ஸ்ருதி நண்டு.” என்று அவன் அலற, வேகமாக சரேலென்று என்று நகர்ந்து அவன் மீது சாய்ந்து நின்றாள் ஸ்ருதி. இருள், புது இடம், அழுத்தமான மனவோட்டம் என்று அவள் இதயம் வேகமாகத் துடித்தது.
“இது தான் ஸ்ருதி நீ.” அவளை இருக்க அணைத்துக் கொண்டு, அவள் தலை முடியை காதோரமாக ஒதுக்கி அவள் காதுகளில் மெல்லமாக கிசுகிசுத்தான் ஆகாஷ்.
“பொய் சொன்னீங்களா?” அவனிடமிருந்து திமிறிக் கொண்டு அவள் குரல் கோபமாக ஒலித்தது.
“பொய் இல்லை டாலி… விளையாட்டு! உன் பாஷையில் சொன்னா, குறும்பு.” அவன் பிடியைத் தளர்த்திக்கொண்டே கூறினான்.
“எனக்கு பிடிக்கலை.” என்று அசௌகரியமாக கூறினாள்.
‘எதை?’ என்று அவன் கேட்கவில்லை. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘எதை, என்று கேட்கட்டும். பதில் சொல்லியே தீர வேண்டும்.’ என்ற வைராக்கியத்தோடு அவள் அவனைப் பார்க்க, அவனோ புன்னகைத்துக் கொண்டான்.
மயக்கும் கண்ணனின் மாய புன்னகை!
“சாரி டாலி. உனக்கு கஷ்டமா இருக்கா? நாம திரும்பிருவோமா?” என்று அவன் கேட்க, அவள் கண்களில் கண்ணீரின் சாயல். ‘எதற்கு அழ வேண்டும்? ஆனால், இது ஆனந்தக் கண்ணீரோ? தன்னை புரிந்து கொண்ட ஒருவன், தனக்காகச் சிந்திப்பவன் கணவனாக அமைந்துவிட்டான் என்ற பெருமிதமோ?’ அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.
மறுப்பாகத் தலை அசைத்தாள். “ம்… ச்… விடுங்க.” அவள் அவனுக்காக அந்த நொடி தழைந்துவிட்டாள்.
அவள் தோள்களை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். இருவரும் விலக மனமில்லாமல், மெதுவாக மிக மெதுவாகப் பேசியபடி நடந்தார்.
அவன் பாதங்களும், அவள் பாதங்களும் இணையாக அதில் தடத்தை ஏற்படுத்திக்கொண்ட முன்னேறிக் கொண்டது.
பாட்டியும், தாத்தாவும் அறையில் படுத்து ஓய்வு எடுப்பதாகக் கூறிக்கொண்டு ரிசார்ட்க்குள் சென்று விட்டனர்.
கார்த்திக் ரிசார்டின் வாசலில் சற்று பதட்டமாகக் காணப்பட்டான்.
“கார்த்திக், என்ன இவ்வுளவு டென்ஷனா இருக்கீங்க?” என்று கீதா பட்டென்று கேட்டாள். அவள் பேசிய விதம், இந்த மாலைப் பொழுதில் ஏற்பட்டிருந்த நட்பைப் தெளிவாக காட்டியது.
“இல்லை ஸ்ருதியை இன்னும் காணுமே?” என்று அவள் கண்கள் அக்கறையை வெளிக்காட்ட, “எங்க அண்ணன் ஸ்ருதியை கடத்த மாட்டான்.” அவள் குரல் கேலியை வெளிப்படுத்தியது.
“ஸ்ருதியை கடத்த எல்லாம் முடியாது.” அவன் தன் தோழியைப் பற்றி பெருமையாகக் கூறினான்.
“சரி… சரி… அவங்க உங்க பிரெண்ட் மட்டுமில்லை. எனக்கும் அண்ணி தான். அண்ணன் உங்க பிரெண்டை நல்லா பார்த்துப்பான்.” என்று உதட்டை சுழித்தாள் கீதா.
அவள் உதட்டின் சுழிப்பில், அவன் முகத்தில் புன்னகை பூத்தது.
“என்ன சிரிக்கறீங்க?” என்று கண்களை சுருக்கினாள் கீதா.
“சொல்லுவேன்… ஆனால், கோபப்படக் கூடாது.” என்று கார்த்திக் பீடிகையோடு ஆரம்பிக்க, “சொல்லுங்க… சொல்லுங்க… அது நீங்க சொல்ற விதத்தில் தான் இருக்கு.” என்று கறாராகக் கூறினாள் கீதா.
“ஸ்ருதி பயங்கர கறார் பேர்வழி. பல இடத்துக்கு தனியாக போய், பல பிசினெஸ் மீட்டிங் பார்த்தவ. வெளிநாட்டில் படிச்ச பொண்ணு.” என்று பாதியில் நிறுத்திவிட்டு, ‘உங்க அண்ணன் கூட போனது தான் சந்தேகமே!’ என்று சொல்லாமல் நிறுத்தினான் கார்த்திக்.
“எவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆக இருந்தாலும், எங்க அண்ணன் அசால்ட்டா ஹாண்டில் பண்ணுவான்.” என்று கீதா கெத்தாகக் கூற, ‘அது தானே பிரச்சனை.’ என்று எண்ணியவாறே அவன் சுற்றும் முற்றும் பார்க்க, இருவரும் மெதுவாக நடந்து வருவது அவன் கண்களில் பட்டது.
‘நேரம் ஆகிருச்சுன்னு ஒரு அக்கறையே இல்லாம எவ்வளவு ஜாலியா மெதுவா வராங்க?’ என்று எண்ணியபடி அவர்களை கார்த்திக் பார்க்க, “என்ன இவ்வளவு மெதுவா வராங்க. நடந்தா நம்மகிட்ட வந்திருவோம்மோன்னு நடக்குற மாதிரி இருக்கு. அதுக்கு அவங்க பேசாம திரும்பவே போயிறலாமே?” என்று கீதா கேட்க, ஆமோதிப்பாகத் தலை அசைத்துக் கொண்டான் கார்த்திக்.
“வாங்க நாம போவோம் அவங்க கிட்ட…” என்று கீதா கூற, கார்த்திக் சற்று தயங்கினான்.
“என்ன இப்படி யோசிக்குறீங்க? பிரவைசின்னா? அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அது வரைக்கும் நாம போகலாம். தப்பில்லை.” என்று கூறிக்கொண்டு கீதா, செல்ல வேறுவழியின்றி அவளைத் தொடர்ந்து நடந்தான் கார்த்திக்.
நால்வரும் சற்று நேரம் பேசிவிட்டு, ஷூட்டிங் குழுவினரோடு நாளைய திட்டத்தைக் கேட்டுக்கொண்டு படுக்கச் சென்றனர்.
காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் தயாராகி ஆகாஷ், ஸ்ருதியின் வருகைக்காகக் காத்திருந்தனர் கீதா மற்றும் கார்த்திக்.
“காலேஜ் லீவு போடணும். மால்தீவ்ஸ் சுத்தி பார்க்கணும் இப்படி பட்ட சின்ன சின்ன ஆசைகளுக்காக, எனக்கு எவ்வளவு கஷ்டம்?” என்று புலம்பினாள் கீதா.
‘அப்படி என்ன இவளுக்கு கஷ்டம்?’ என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.
அவன் பார்வையை புரிந்தவள் போல், “வெயிட் பண்ண வச்சே நம்மளை கொல்லுவாங்க போலையே?” என்று கீதா கடுப்பாகிக் கூற, ‘சின்ன பெண்…’ என்ற சிந்தனையோடு சிரித்துக்கொண்டான் கார்த்திக்.
‘இவ ஒருத்தன் அளந்து தான் பேசுவான்.’ என்று எண்ணிக்கொண்டு அங்கு ஏற்பாடு செய்திருந்த அலங்காரத்தை நோக்கி நடந்தாள்.
‘செமையா இருக்கே? இளஞ்சிவப்பு நிறத்தில் வானம். வெள்ளை நிற துணியில் ஆங்காங்கே பூக்களோடு கல்யாண மேடை. நடந்து வரும் பாதையில் சிவப்பு நிற ரோஜா பூக்களின் இதழ்கள். வாழறடா ஆகாஷ் நீ.’ என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றாள் கீதா.
“மேடம்… இது ப்ரீ வெட்டிங் ஷூட்க்காக போட்டது. வேற யாரும் போக கூடாது.” என்று ஒருவர் தடுக்க, கார்த்திக்கின் முகத்தில் கேலி புன்னகை.
‘ஐயோ… இவன் வேற இருக்கானே? இவன் முன்னாடி நான் பல்ப் வாங்கணுமா? நோ.. நெவெர்…’ என்று கூறிக்கொண்டு, “அவங்க தங்கை தான் நான். எங்க வீட்டில் இப்படி செட் போடணுமுன்னு சொன்னதே நான் தான். அது தான் சரியா இருக்கானு பார்க்க வந்தேன்.” என்று சட்டென்று சூழ்நிலையை தனதாக்கி கொண்டாள் கீதா.
அவளின் பேச்சு சாமர்த்தியத்தை மனதிற்குள் மெச்சினான் கார்த்திக். கீதாவின் பதிலில் பணியாள் நகர்ந்து விட, “கார்த்திக் வாங்க. என்னை போட்டோ எடுங்க.” என்று கூறிக்கொண்டு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாள் கீதா.
“நீ ஏண்டி இங்க போட்டோ எடுக்குற?” என்று கேட்டுக்கொண்டே பாட்டி வர, “வெயிட்டிங் பார் மை பெட்டெர் ஹலஃப்… அப்படினு நாங்களும் ஸ்டேட்டஸ் போடுவோம்ல?” என்று கீதா கூற, அங்குச் சிரிப்பலை பரவியது.
கீதா புகைப்படங்களை எடுத்து முடித்து விட்டு, பாட்டியை முழுதாக பார்த்தவள் அலறினாள்.
“பாட்டி யாருக்கு வெட்டிங் ஷூட்? நீங்க என்ன இப்படி பட்டு புடவை எல்லாம் கட்டி கல்யாண பொண்ணு மாதிரி வந்திருக்கீங்க?” என்று பதட்டமாகக் கேட்டாள்.
பின்னே தாத்தா வேஷ்டி சட்டையோடு வர, “தாத்தா…” என்று தன் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிவது போல் நடித்தாள் கீதா.
“ஏய்… கீதா… சும்மா சத்தம் போடாத. நாங்களும் எங்க சதாபிஷேகத்திற்கு ப்ரீ வெட்டிங் ஷூட் எடுக்கலாமுன்னு தான். எனக்கு ரொம்ப நாள் ஆசை, இப்படி எம்.எஸ். ப்ளூ கலரில் சேலை கட்டி, உங்க தாத்தா கூட போட்டோ எடுக்கணும்னு. நல்லாருக்கா?” என்று வெட்கத்தோடு கேட்டார் பாட்டி.
“எல்லாம் ரொம்ப நல்லாருக்கு.” என்று சலித்துக் கொண்டாள் கீதா.
“உனக்கென இவ்வளவு சலிப்பு?” என்று பாட்டி கேட்க, “சரி.. சரி… நில்லுங்க நான் எடுக்கறேன்.” என்று கீதா கூற, “அதெல்லாம் வேண்டாம். நாங்க போட்டோக்ராபர் கிட்டயே சொல்லிட்டோம். உன்னை எல்லாம் நம்ப முடியாது. நீ கோண வாய் வச்சு செல்பி எடுப்பியே? அந்த மாதிரி எடுத்து வச்சிருவ.” என்று தாத்தா கேலி பேச, கார்த்திக் விழுவிழுந்து சிரித்தான்.
‘இவர்கள் குடும்பத்திற்கே கேலி பேச்சு கைவந்த கலை போல?’ என்று எண்ணிக்கொண்டான் கார்த்திக்.
அவர்கள் பேச்சின் கவனத்தை திசை திருப்புவது போல், வெள்ளை நிற ப்ளேஸேர், பிங்க் நிறத்தில் வெட்டிங் ட்ரெஸ்ஸோடு இருவரும் வந்தனர்.
ஸ்ருதியின் தலை முடி பூ வடிவ கொண்டையாக இடப்பட்டிருந்தது. கொஞ்சம் முடி சுருள் வடிவமாக வளைந்து அவள் உடை நிறத்திற்கு ஒத்து ஊதுவது போல் சிவந்திருந்த அவள் கன்னத்தைத் தொட்டுத் தொட்டு அசைந்தது. அழகோடு செல்வமும் சேர்ந்து அவர்கள் இருவரையும் பன்மடங்கு அழகாகக் காட்டியது.
அவர்கள் அமைக்கப் பட்டிருந்த வெள்ளை நிற கல்யாணம் மேடையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். “பலருக்கு இது தான் திருமண வைபவம்.” என்று கூறிக்கொண்டே போட்டோகிராபர் படமெடுக்க, ஆகாஷ், ஸ்ருதி இருவருக்குள்ளும் வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்வு ஏற்பட்டது.
“எங்க முறைப்படி தாலி காட்டினா தான் கல்யாணம்.” என்ற பாட்டியின் குரல் ஓங்கி ஒலித்தது.
அவர் பேச்சை கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை ஆகாஷ், ஸ்ருதி இருவரும்.
“பொண்டாட்டி…” அவள் காதில் அவன் மென்மையாக கிசுகிசுத்தான். ஸ்ருதி அவனை வெட்கத்தோடு பார்த்தாள். “இன்னும் கல்யாணமாகலை…” அழுத்தமாக சொல்ல நினைத்து, அவள் குரல் கிசுகிசுப்பாக வெளி வந்தது.
படப்பிடிப்பு முடிந்து அடுத்த ஷூட்க்கு எதுவாக உடை மாற்றிக்கொண்டு அனைவரும் போட் ரைட் சென்றனர்.
ஆகாஷின் கேலி, குறும்பு என அனைத்தும் சற்று அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அவன் கடலுக்குள் கைவிட்டு, ஆபத்து போல் நடிக்க அனைவரும் பதறினார்.
“விளையாடியது போதும்.” என்று ஸ்ருதி கண்டிப்போடு கூறி, “என்னை ஏமாற்ற முடியாது.” என்று அவனிடம் உறுதியாகக் கூறினாள்.
“அப்படிலாம் சொல்ல முடியாது டாலி. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. உன்னை ஏமாறவைப்பேன். நீயும் என்னை நம்புவ டாலி.” என்று அவன் உல்லாசமாக அவள் காதில் கிசுகிசுத்தான். “அதையும் பார்ப்போம்.” அவன் காதில் அவன் தொனியிலே அவளும் கிசுகிசுத்தாள்.
அவர்கள் ஸ்கூபா டைவிங், பல இடங்கள் பல படப்பிடிப்புகள் என அவர்கள் பயணம் தொடர் பயணமாகி கொண்டிருந்தது.
படகில் ஸ்ருதி சற்று சோர்வாகக் காணப்பட்டாள்.
“ஸ்ருதி ஆர் யு ஒகே?” என்று ஆகாஷ் கரிசனமாகக் கேட்டான். தலை அசைத்துக்கொண்டாள்.
“ஸ்ருதிக்கு அவ்வளவு சி ட்ராவல் ஒத்துக்காது. சி சிக்கென்ஸ் தான்.” என்று கூறிக்கொண்டு மாத்திரையை நீட்டினான் கார்த்திக்.
“ஓ…” என்று ஆகாஷ் கேட்டுக்கொள்ள, கீதா கார்த்திக்கை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
‘எத்தனை அன்பானவன்? எத்தனை நம்பிக்கைக்குரியவனாக இருந்தால், கார்த்திக்கை நம்பி மகளை அனுப்பாவங்க? இவனும் அத்தனை கண்ணியமாக நடந்துக்கிறானே?’ என்ற பிரமிப்பு கீதாவுக்குள் எழுந்தது.
‘என்னிடம் கூட அவன் பேச்சில் எத்தனை கண்ணியம்?’ என்ற எண்ணத்தோடு கார்த்திக்கை அளவிட்டு கொண்டிருந்தாள் கீதா.
ஸ்ருதியின் உடல் நிலை கருதி, அதன் பின் பல புகைப்படங்களைத் தவிர்த்து விட்டான் ஆகாஷ்.
“ஸ்ருதி… ரெஸ்ட் எடுக்கலாம்.” என்று அவன் கண்டிப்போடு கூற, “ஒண்ணுமில்லை ஆகாஷ்.” அவள் சமாதானம் அவனிடம் எடுபடவில்லை.
“எடுத்த வரைக்கும் இப்ப போதும். சாயங்காலம், நீ தெளிவா இருந்தா எடுக்கலாம்.” என்று முடித்துவிட்டான் ஆகாஷ்.
அவர்கள் பயணம் போட்டில் தொடர்ந்தது.
பாட்டி தாத்தா கீழே அமர்ந்திருக்க, “காற்றோட இருந்தா, கொஞ்சம் பெட்டரா இருக்கும்.” என்று கூறிக்கொண்டு மேலே அழைத்துச் சென்றான்.
இளவட்டம் மேலே அமர்ந்து கொண்டு வானத்தையும், கடலையும் ரசித்துப் பார்த்தது.
“அண்ணி, பெட்டரா இருக்கீங்களா?” என்று கேட்டுக்கொண்டாள் கீதா. தன் தோழியின் வாழ்வை பற்றிய நிறைவான சிந்தனை கார்த்திக்குள் எழுந்தது.
கீதாவிடம் பேசியபடியே, இருவரும் கடலின் ஆழத்தை பார்க்க, “சி சிக்கென்ஸ் இருக்கிறவங்க இப்படி எட்டி எட்டி கீழ பார்க்க கூடாது.” ஆகாஷின் குரல் சற்று கோபமாகவே ஒலித்தது.
ஸ்ருதி பார்க்கும் ஆகாஷின் முதல் கோபம். “உங்க அண்ணனுக்கு கோபம் வருமா?” கீதாவின் காதில் கிசுகிசுத்தாள் ஸ்ருதி.
“இந்த மாதிரி எப்பயாவது அக்கறைக்காக… நல்லதுக்காக… நமக்காக…” பெருமிதமாகக் கூறினாள் கீதா.
அவன் கோபத்தில் லயித்து. அவன் அன்பில் கரைந்து ரசித்து, உணர்ந்து சிரித்துக் கொண்டாள் ஸ்ருதி.
அனைவருக்கும் அந்த பயணம் இனிய நிகழ்வாக அமைந்தது.
அன்றைய ஷூட் பல அணைப்புகள், பல முத்தங்கள் எனத் தடுமாற்றத்தில் ஆரம்பித்து வெட்கத்தில் பயணித்து இனிய அனுபவமாக மாறியது ஆகாஷ், ஸ்ருதி இருவருக்கும்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு பக்கத்தில் இருக்கிற ஐலண்ட் க்கு ஷூட் போகணும்.” என்று கூற, “எல்லாரும் ஓகேனா போகலாம்.” என்று ஸ்ருதியை பார்த்தபடி கூறினான் ஆகாஷ்.
ஸ்ருதி சோர்வாகத் தலை அசைத்துக் கொண்டு, அறைக்குள் சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து, கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஆகாஷ்.
“சூடா டீ… சில்லுனு லெமன் ஜூஸ்…ரெண்டும் சொல்லிருக்கேன். உனக்கு எது குடிச்சா நல்லாருக்குன்னு பார்த்து குடி.” என்று ஆகாஷ் கூற, கண்களில் நன்றியோடு, “தேங்க்ஸ்…” என்று கூறினாள் ஸ்ருதி.
“என் கடமை டாலி…” என்று கண்சிமிட்ட, “குறும்பா…” முணுமுணுத்தாள் ஸ்ருதி.
தலை அசைத்து விடை பெற்றுக்கொண்டான் ஆகாஷ்.
ஸ்ருதி நெக்குருகி அமர்ந்திருந்தாள். போட்டோ ஷூட் என்ற பெயரில் நடந்த அளப்பறையில், அவன் காட்டிய கண்ணியத்தில், அவளுக்காக என்று பார்த்து பார்த்துச் செய்ததில், அவன் அன்பில், அக்கறையில், கரிசனத்தில் என்று கூறிக்கொண்டே போகலாம்.
அன்று ஸ்ருதி எழுத ஆரம்பித்த வரிகள், இன்று ஆகாஷ் காட்டிய அன்பில் முழுமை பெற்றது.
நான்! நான்! நான்! இலக்கணமும் இலக்கியமும் பொய்யாகிப் போனதே…
ஏனோ ? ஏனோ?
தொலைந்தேன் நான்! உன் குறும்புப் பார்வையில்…
வீழ்ந்தேன் நான்! உன் மந்தகாச புன்னகையில்…
விழுந்தேன் நான்! உன் அன்பெனும் மழையில்….
அர்த்தமற்று போனேன் நான்! உன்னாலே… உன்னாலே…
என்னவென்று சொல்ல? இது காதல் செய்யும் மாயமோ? நான் செய்த நலமோ? நீ எந்தன் வரமோ?
சிறு தூக்கம் முடித்துக்கொண்டு எழுந்து வந்தாள் ஸ்ருதி.
ஆகாஷ், கார்த்திக், கீதா மூவரும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
‘ஆகாஷும் தான் போட்டோ ஷூட் அப்படின்னு இருந்தாங்க. இவங்களுக்கு ஓய்வு வேண்டாமா?’ என்று எண்ணத்தோடு அவனை அளவிட்டாள் ஸ்ருதி.
‘வேண்டாம்…’ என்பது போல் வான் உற்சாகமாக இயங்கி கொண்டிருந்தான்.
“அண்ணி… பாட்டி, தாத்தா ரெஸ்ட் வேணுமுன்னு சொல்லிட்டாங்க. ஸோ அவங்க வரலை. அவங்களை தனியா விட்டுட்டு நானும் வரலை. ஸோ நீங்களும், அண்ணனும் தான் கிளம்பனும்.” என்று கீதா.
“ஓ…” என்று ஸ்ருதி கூற, “நான் மட்டும் எதுக்கு ஆட் மேன் அவுட் மாதிரி…ஸோ நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்.” என்று கார்த்திக் கூற, ஸ்ருதி தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள்.
சிறிது நேரத்தில், ஆகாஷ், ஸ்ருதி இருவரும் போட்டோ ஷூட் குழுவினரோடு அந்த மாலை நேரத்தில் மற்றொரு தனித் தீவு ரிசார்டுக்கு கிளம்பினர்.
இரு மணி நேரத்தில் வேலையை முடித்து விட்டுத் திரும்புவதாகத் திட்டம். அவர்கள் அந்த தனித்தீவை அடைவதற்கும் மழை வெளுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.
மழை எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த அளவுக்கு இல்லை.
பெரிதாக அங்கு கூட்டம் இல்லை. பணியாட்கள் மட்டுமே. ஓவர் வாட்டர் வில்லா. இவர்களுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இளஞ்சிவப்பு நிறத்தில் டிசைனர் சேலை அணிந்திருந்தாள் ஸ்ருதி. அதன் விலையைப் பறைசாற்றுவது போல், அந்த மணிகள் அதன் பளபளப்பைக் காட்டிக்கொண்டிருந்தது.
படகில் இருந்து இறங்கி வருவதற்குள், அவள் மொத்தமாக நனைத்திருந்தாள். அவள் அங்க வடிவை அந்த சேலை பெண்மையின் இலக்கணத்தோடு எடுத்துக் காட்டியது.
கடலுக்கு மேல் அமைந்திருந்த ரிசார்ட். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் பளபளப்பான கண்ணாடி தரைக்குக் கீழ் கடல் நீர் அலை அலையாக எழும்பிக் கொண்டிருந்தது. பல வண்ண வண்ண மீன்கள் நீந்திக்கொண்டிருந்தது. அந்த அழகை ரசிக்க முடியாதபடி மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது.
இயற்கையை ரசிக்க முடியாமல், இயற்க்கை அவர்களை சோதித்து கொண்டிருந்தது. ஸ்ருதி மழை நீரின் குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள்.
ஆகாஷ், அவள் அருகே நின்று கொண்டிருந்தான். இடியும், காற்றும் அதன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது. குறைந்தபாடில்லை.
அந்த மழையும் சாதகமாக்கி, அவர்கள் ஷூட் சற்று நேரம் தொடர்ந்தது. ஸ்ருதியின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
வானம் இருட்டிக்கொண்டு வர, “சார்… இப்ப போட்டில் ரிட்டர்ன் ஆகுறது, அவ்வுளவு பாதுகாப்பு இல்லை. இங்க தங்கிட்டு…” அவர்கள் கூற, இயற்கையின் கோர ஆட்டத்தை ஆகாஷாலும், ஸ்ருதியாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
வேறு வழியின்றி தலை அசைத்தனர். அது ஒரு ஹனிமூன் சூட். இரு அறைகள் இருந்தாலும் ஒரே அறைக்குள் தான் இருந்தது.
ஸ்ருதி அவள் அறைக்குள் சென்று தண்ணீரை திறக்க, வீல்லென்று கத்திக்கொண்டு கீழே விழுந்தாள். அவள் சத்தத்தைக் கேட்டு ஆகாஷ் அங்கு வர, நிலைமையை புரிந்து கொண்டான்.
தக்க பாதுகாப்போடு, அவளை கைகளில் ஏந்தினான். ஹோட்டல் சேவை அங்கு வர, மின்சாரமும் தடை பெற்றது. விழுந்த வேகத்தில் ஸ்ருதியின் கைகளில் பயங்கர வலி. அவளை தன் அணைப்பில் வைத்திருந்தான் ஆகாஷ். அழகு நிறைந்த அந்த இடம், இப்பொழுது நீரின் சத்தத்தோடு சற்று அச்சத்தைக் கொடுத்தது ஸ்ருதியின் மனதில்.
‘தனி தீவில் மாட்டிக்கொண்டது போல.’ என்ற எண்ணம் ஓட, ‘அது என்ன போல? இது தனித் தீவு தானே?’ என்ற எண்ணம் வலுப்பெற, அவள் உடல் இன்னும் நடுங்கியது.
அவன் கைகள் அவளுக்கு அரணாக அவளை தன்னோடு சேர்த்து கொண்டது.
“சார்…” என்ற தடுமாற்றமே அங்கு. யாரால் என்ன செய்ய முடியும்? அவர்கள் அனைத்து வசதிகளைத் தாண்டியும், புயல் கற்று அதன் இருப்பை நிலை நாட்டிக் கொண்டது.
பல மன்னிப்புகளோடு, தக்க பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தனர்.
சில நிமிடங்களில், அவர்கள் அறை மெழுகுவர்த்திகளால் ஒளிர்ந்தது.
அவர்களுக்கு இரவு உணவு தயாராகி வந்தது.
“டாலி… பயந்துட்டியா?” என்று அவன் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“இல்லை உடம்பு தான் கொஞ்சம் முடியலை. நாம இங்க வந்திருக்க கூடாது.” என்று அவள் கூற, “நம்மளை அங்க எல்லாரும் தேடுவாங்களே? தகவல் சொல்லிடீங்களா?” என்று அவள் கேட்க, “எல்லாம் சொல்லிட்டேன்.” என்று அவன் சமாதானமாகக் கூறினான்.
அவள் உடல் குளிரில் நடுங்கியது. அவன் மழையில் நனைத்த உடையை மாற்றிவிட்டான். அவள் மாற்றும்பொழுது தான் இத்தனை களேபரமும் நடந்துவிட்டது.
இப்பொழுது ஈரமான சேலையில் இன்னமும் நடுங்கி கொண்டிருந்தாள். “ஸ்ருதி டிரஸ் மாத்திக்கோ. நான் வெளிய வெயிட் பண்றேன்.” கூறிக்கொண்டு அவன் எழுந்து செல்ல, அவள் கைகள் அவனை இறுக பற்றியது.
அவள் தலை கோதி, “பயப்படாத… யாரும் வர மாட்டாங்க.” அவன் நிதானமாக, நம்பிக்கை ஊட்டும் விதமாகக் கூறி சென்றான்.
சில நிமிடங்கள், அவன் வெளிய காத்திருந்து, மீண்டும் அவன் அறைக்குள் நுழைய ஸ்ருதி உடையை மாற்றி இருக்கவில்லை. நடுங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
“என்ன ஆச்சு டாலி?” அவன் அக்கறையாக கேட்க, ” கையை மேல தூக்க முடியலை… வலி. தூக்கும் பொழுது தான் வலி தெரியுது. கை வலிக்குது.” என்று முனங்கினாள் அவள்.
“நான் உதவட்டுமா?” தடுமாற்றம் இருந்தாலும், மறைத்துக்கொண்டு அவன் கேட்க, ‘ஆபத்துக்கு பாவம் இல்லை.’ என்பது போல் தலை அசைத்தாள் ஸ்ருதி.
“ஸ்ருதி கை வீங்கிருக்கு. நான் ஐஸ் பேக் வாங்கிட்டு வரேன்.” கூறிக்கொண்டு நொடிப்பொழுதில் திரும்பி வந்தான்.
நேரம் செல்ல செல்ல அவள் வலி மட்டுப்பட்டிருந்தது. ஆனால், அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவள் தேகம் அதன் இருப்பை காட்டிக்கொண்டு, அவனைத் தன்னிலை இழக்கச் செய்தது.
அவன் கைகள் மெல்ல மெல்ல எல்லை மீறியது.
தடுக்கும் எண்ணம் அவளுக்கில்லை. காலையில், அவன், “பொண்டாட்டி!” என்று அழைத்தது நினைவு வந்து அவளை இம்சித்தது.
அவனின் அணைப்பு அவளுக்கு இதமாகத்தான் இருந்தது. காலையில் ஏற்பட்ட களைப்பு, அதன் பின் மழை, நடுங்கும் குளிர், கீழே விழுந்து ஏற்பட்ட காயம் எனத் தொடர் தாக்குதலுக்குப் பின் அவன் அணைப்பில் அவள் அத்தனை வலிகளையும் மறந்தாள்.
அவன் கைகளின் தீண்டல், அவளுக்கு அவள் பெண்மையை உணர்த்த, அவள் வெட்கம் சூழ்ந்து அவனிடமே பொருந்திக் கொண்டாள்.
அவள் கழுத்தின் வளைவில், ஆரம்பித்த அவன் இதழின் தீண்டல் அவள் முகமெங்கும் தொடர்ந்து அவள் இதழோடு பொருந்தி நீண்ட நெடு பயணத்தைத் ஆரம்பித்தது.
‘திருமணத்திற்கு முன் இத்தகைய தீண்டலை அவர்கள் எளிதாக அனுமதித்திருப்பார்களோ?’ ஆனால், இரண்டு நாட்கள் போட்டோ ஷூட் என்ற பெயரில் நடந்த கூத்தில், அவர்களுக்கு அது அத்தனை வித்தியாசமாகத் தெரியவில்லை.
‘எல்லாரும் இருக்கிறார்களே?’ என்ற பயத்தோடும், சற்று தயக்கத்தோடும் அரங்கேறிய தீண்டல் யாருமில்லா தனிமையும், இளமையும் ஒன்று சேர அதை ரசித்தது.
இளமையின் வேகமோ, உணர்ச்சிகளின் தாக்கமோ அவர்கள் எல்லை மீறல்கள்… எல்லை மீறல்களாகவே அமைந்து விட்டன.
அவர்கள் இருந்த கோலத்தில், ‘கழுத்தில் தாலி இல்லை.காலில் எட்டி இல்லை. அவள் மனைவியும் இல்லை. அவன் கணவனும் இல்லை.’ என்பதை அவர்களுக்கு மறைவிடம் கொடுத்த கதவுகளும், திரைச்சீலைகளும் புரிந்து கொண்டன.
‘நம் கலாச்சாரம் தோற்று விட்டதா?’ அவர்கள் அறிவு அங்கு மந்தமாகி தான் போனது.
‘இவர்கள் தவறானவர்களா? இந்த தவற்றுக்கு வழி வகுத்தது யார்? காலத்தின் கட்டாயம் என்ற பெயரில், கலாச்சாரத்தை அசைத்துப் பார்க்கும் உணர்வுகளின் விளையாட்டை தங்கள் சந்ததியினர் மூலம் விளையாடிப் பார்க்கும் பெற்றோர்களா?’ என்ற கேள்வி, அந்த அறையின் ஒவ்வொரு அணுவுக்கும் தோன்றியது’.
‘விதியின் விளையாட்டா? இல்லை மதியின்மையின் விளையாட்டா? இல்லை நாகரீகம் என்ற பெயரில் மனிதர்கள் விளையாடும் விளையாட்டா? தவறியது யாரோ? தெரியவில்லை… ஆனால், இப்பொழுது பழியைச் சுமக்கப் போவது யார்? இந்த விளையாட்டில் சிக்கப் போவது யாரோ?’ என்று வருத்தத்தோடு மெழுகுவர்த்தி அதன் கண்ணீரை வெளிப்படுத்திக்கொண்டு அதன் உருவத்தின் அளவை குறைத்துக்கொண்டே வந்தது.
பதில் அறியாமல் மெழுகுவர்த்தி அதன் முழு உருவத்தையும் தொலைத்தது அறையில் இருள் சூழ்ந்தது.
இவர்கள் வாழ்க்கையில்?
குறும்புகள் தொடரும்…