Kuyili 4

Kuyili 4

கார் ரேஸ்கோர்சிலிருந்து சரவணம்பட்டியைத் தாண்டி கோவில்பாளையம்

நோக்கிச் சென்று கொண்டிருந்தது.செல்லாவும் மங்கையும் எங்கே

போகின்றோம் என்று விவாதித்துக் கொண்டு வர சுகன்யா வெளியே

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு இது தான் முதல் கார் பயணம்.அதனால் அதை ஆழ்ந்து

அனுபவித்துக் கொண்டிருந்தாள்.மங்கை செல்லாவுடன்

பேசிக்கொண்டிருந்தாலும் கார் பயணத்தை ரசித்துக் கொண்டிருக்கும்

தங்கையிடம் தான் அவள் கவனம் இருந்தது.

 

தன் தங்கைக்கு கார் பயணம்  பிடிக்கும் என்பது மங்கை அறிந்த

ஒன்றே.ஆனால் அவள் காரில் ஏறியதிலிருந்து அவளின் முகத்தில்

ஏற்பட்ட கலவையான உணர்வுகளைப் பார்க்கையில் தான் அவள் கார்

பயணத்திற்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறாள்  என்பது மங்கைக்கு

புரிந்தது.

 

காரில் ஏறச் சொன்னவுடன் அவள் முகத்தில் தோன்றிய

பிரகாசம்…ஜன்னல் அருகில் அமர்ந்ததும் அவள் ஜன்னலை தொட்டுப்

பார்த்த விதம்..கார் கிளம்பியதிலிருந்து எங்கும் தன் பார்வையை

செலுத்தாமல் ஜன்னல் வழியாக சுற்றுப்புறத்தை மட்டுமே பார்த்துக்

கொண்டு வந்த கண்கள் போன்றவை மங்கையின் மனதை ஆழமாகக் கூர்

போட்டன.

 

மங்கையின் நினைவுகள் 2 ஆண்டுகள் பின்னோக்கிச்

சென்றன…அப்பொழுது சுகன்யாவிற்கு பதினான்கு வயது.அவள் வகுப்பில்

படிக்கும் பெண் ஒருத்தி  தன் சொந்தக்காரர் ஒருவர் காரில் சென்று வந்த

பயணத்தைப் பற்றி தன் வகுப்புத் தோழிகளிடம் பகிர்ந்துகொள்ள அதைக்

கேட்ட சுகன்யவிற்கும் கார் பயணம் செய்ய ஆசை வந்தது.

 

அன்று மாலை பள்ளியிலிருந்து வந்தவள் தன்னை காரில் அழைத்துச்

செல்லுமாறு செல்வியிடம் கூற அவர் மறுத்தார்.”ம்மா…நான் என்ன

சொந்தக் கார்லையா போகணும்னு சொல்ற?வாடகை கார் தான

ம்மா?கொஞ்ச தூரம் மட்டும் போலாம்…” என்று கெஞ்சினாள்.

 

செல்வி எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.ஒரு கட்டத்திற்கு

மேல் செல்வி பொறுக்க முடியாமல் அவளை அடித்து விட்டார்.மாலை

வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் மங்கை பார்த்தது அழுது அழுது

வீங்கிக் கிடந்த சுகன்யாவின் முகத்தைத் தான்.

 

அவளை அணைத்துக் கொண்ட மங்கை என்ன நடந்தது என்று கேட்க “உன் தங்கச்சி கார்ல போகணும்னு ஒரே அடம்…நாமளே அடுத்த நாள் சாப்பாட்டுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்..இதுல இவ கார்ல போகணும்னு சொல்லறா…அந்த மனுஷன் நிம்மதியா போய் சேர்ந்துட்டார்…அவரு போனதுக்கு அப்புறம் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்னு இவளுக்கு கொஞ்சமாச்சு புரியுதா?எல்லாத்துக்கும் அடம்..குடும்ப கஷ்டத்த கொஞ்சம் கூட புரிஞ்சுக்கறது இல்ல…” என்று புலம்பினார் செல்வி.

 

“ம்மா..நீ போ ம்மா..சின்ன புள்ளை ஆசைப்பட்டு கேட்கிற…அவள போய் திட்டிட்டு..”என்று செல்வியிடம் கடிந்து கொண்டவள் சுகன்யாவிடம் “நீ அழாத…அக்காக்கு இந்த மாசம் சம்பளம் வந்தவுடனே கார்ல போலாம்” என்று அவளை சமாதானப்படுத்தினாள்.

 

ஆனால் சுகன்யா “இல்ல க்கா..வேண்டாம்..நான் தான் புரிஞ்சுக்காம அடம் பிடிச்சுட்ட…அம்மா மனசையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்ட…” என்றாள்.மங்கையும் அதற்கு மேல் சுகன்யாவிடம் அந்த விஷயத்தைப் பற்றி பேசவில்லை.ஆனால் இன்று தங்கையின் செயல்களைப் பார்த்தவுடன் மங்கைக்கு தங்கையை ஒரு முறையாவது காரில் அழைத்துச் சென்றிருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது.

 

செல்லா “ஏய் மங்கை…இங்க பாரு இந்த வாய்க்கால் எவ்வளவு அழகா இருக்கு?” என்று கேட்க தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் “ம்ம்..ஆமா ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.அவள் சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை..உண்மையிலையே அந்த இடம் பார்க்க மிக அழகாக இருந்தது.

 

அதற்குள் கார் ஒரு பெரிய கேட்டின் முன்பு போய் நின்றது.”கிருஷ்ணா ஆர்கேனிக்ஸ்” என்ற பெயர் பலகை அந்த கேட்டின் மேல் மாட்டப்பட்டு இருந்தது.

 

 காவலாளி முருகவேலைப் பார்த்து புன்னகைத்து “வாங்க வாங்க” என்று வரவேற்று குயிலிக்கு பவ்யமாக ஒரு சல்யுட் வைத்தார்.பின்பு கதவை திறந்து விட கார் அந்தப் பகுதிக்குள் நுழைந்தது.

 

சுற்றிலும் மரங்கள் அந்த இடத்தைக் குளுமைப் படுத்திக் கொண்டிருந்தன.கார் நின்றவுடன் அதிலிருந்து இறங்கியவர்களின் கவனத்தைக் கவர்ந்தது அங்கே தொட்டியில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகள் தான்.

 

குறைந்தது ஒரு 2௦ வாத்துக்கள் ஆவது இருக்கும்.அந்தப் பெரிய தொட்டியில் அவை நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்த குயிலியின் முகம் அப்படியே இருண்டுவிட்டது.கண்ணில் குளம் கட்டி விட்டது.எவ்வளவு முயன்றும் அவளால் தன்னை கட்டுப் படுத்துக்கொள்ள முடியவில்லை.

 

சுகன்யா அந்த வாத்துக்களிடம் சென்று விளையாட செல்வி அங்கிருந்த பூச்செடிகளை எல்லாம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.செல்விக்கு செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம்.வீட்டைச் சுற்றி நிறைய செடிகள் வைத்திருப்பார்.அவர்கள் வீடு சிறியதாக இருந்தாலும் வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் கத்தரி,வெண்டை,பாவை போன்ற செடிகள் வைத்திருந்தார்.

 

கார் வந்த ஓசையை கேட்டு வெளியே வந்த சிவசங்கரன் முருகவேலிடம் “வாங்க..வாங்க..உங்களுக்காகத் தான் காத்துட்டு இருந்த…” என்றவர் குயிலியிடம் “மேடம் நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோசம்..உள்ள வாங்க” என்று வரவேற்றார்.

 

அவர் வந்ததைப் பார்த்தவுடன் கண்களைச் சிமிட்டி தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திய குயிலி அவருடன் உள்ளே நுழைந்தாள்…குயிலியின் பின்னர் மற்றவர்கள் சென்றனர்.

 

தன் அறைக்குள் அவர்களை அமரச் சொன்னவர் யாருக்கோ போன் செய்து “என்னோட ரூமுக்கு 7 டீ கொண்டு வாங்க” என்றார்.பின்பு குயிலிடம் “நான் இங்க மேனேஜரா 5 வருசமா வேலை பாக்குற ம்மா..எம்.டி சார் உங்கள பாக்க தான் இவ்வளவு நேரமா வேயிட் பண்ணிட்டு இருந்தாரு..திடிர்னு அவரு வீட்டுக்கு அவங்க அத்தை வந்திருக்காங்கன்னு போன் வந்ததுனால இப்ப தான் கிளம்பினாரு..” என்றார்.

 

“பரவாயில்லை சார்..இன்னொரு நாள் பாத்துக்கலாம்…நான் கேட்ட உடனே ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொன்னனு அவரு கிட்ட சொல்லிருங்க….” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது டீ வர அனைவரும் அதைக் குடிக்க ஆரம்பித்தனர்.

 

டீயின் சுவை வித்தியாசமாக இருக்க “இது என்ன டீ..டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா இருக்கு” என்று முருகவேல் கேட்க “இது நாமளே தயாரிச்ச செம்பருத்தி டீ..இந்த டீ உடம்புல இருக்க கொழுப்பு,உயர் ரத்த அழுத்தம் எல்லாத்தையும் குறைக்கும்.கேன்சர் வராம தடுக்கும்” என்றார்.

 

“இது மாறி டீ எல்லாம் சேல்ஸ் ஆகுதா?” என்று குயிலி கேட்க “இப்ப இதுக்கு டிமேன்ட் ரொம்ப அதிகம் மேடம்..மக்களுக்கு இப்ப இதை பத்தில்லாம் விழுப்புணர்வு வர ஆரம்பிச்சுருச்சு..அதனால இப்ப நிறைய பேர் இதை கேட்டு வாங்கறாங்க..” என்றார்.

 

“இது மாறி வேற என்னலாம் டீ இருக்கு?” என்று குயிலி கேட்க “இஞ்சி டீ,முருங்கைக்காய் டீ,லெமன் டீ,எல்லா மூலிகைகள் போட்ட ஹெர்பல் டீ எல்லாம் செய்றோம் மேடம்..வாங்க போய் சுத்தி பார்க்கலாம்..இன்னும் என்ன என்ன பண்றாங்கன்னு காட்டிற” என்றார்.

 

சிவராமன் காலை ஊன்றி ஊன்றி முன்னால் நடக்க அவரின் பின்னால் மற்றவர்கள் சென்றனர்.எல்லாரும் அவரவர் வேலையில் மூழ்கி இருக்க அவர்களைப் பார்த்த மங்கைக்கு ஏதோ வித்யாசமாக தோன்றியது.சற்று உன்னிப்பாக கவனித்த பொழுது தான் தெரிந்தது அவர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகள் என்பது.

 

அந்த இடத்தில் வேலை செய்பவர்கள் அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை குடி கொண்டிருந்தது.ஆனால் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தும் புரியாமலும் இருந்தது.

 

ஒரு இடத்தில் வேப்பங் குச்சியை சின்ன சின்னதாக வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு இளம் பெண்.அவர் வெட்டிய குச்சிகளை 1௦ 1௦ குச்சியாக ஒரு மூதாட்டி கட்டிக் கொண்டிருந்தார்.மற்றொரு இடத்தில் கருவேலம் குச்சியை ஒரு மெஷினில் போட்டு பொடி ஆக்கிக் கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி.அங்கிருந்த அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்தனர்.

“என்ன இங்க எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு..அந்த பாட்டி என்னடான வேப்பங் குச்சிய கட்டிட்டு இருக்காங்க..இந்த பாட்டி கருவேலம் குச்சியை எல்லாம் பொடி ஆகிட்டு இருக்காங்க..எதுக்குனு புரிய மாட்டங்குது?” என்று சுகன்யா மண்டையை போட்டு குடைய அவளை மேலும் தவிக்க விடாமல் சிவராமன் பேச ஆரம்பித்துவிட்டார்.

 

“இங்க நாம தயாரிக்கறது எல்லாமே நம்ம நாட்டுல ஒரு 5௦ வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்கள் உபயோகப்படுத்திட்டு இருந்தது தான்.கருவேலம் பல்பொடி,மூலிகை குளியல் பொடி,சீகைக்காய் பொடி,மூலிகை டீ,சத்துமாவு..இது மாறி நிறைய செய்றோம்” என்றார்.

 

“வேப்பங்குச்சியை எதுக்கு கட்டிட்டு இருக்காங்க?” என்று சுகன்யா தன் சந்தேகத்தைக்  கேட்க “இது எல்லாம் வெளிநாட்டுல இருக்கவங்க பல் தேக்குறதுக்கு  ரொம்ப விரும்பி வாங்குறாங்க ம்மா..நம்மகிட்ட இருக்க பொருள்களோட மதிப்பு நமக்கு தான் தெரியறது இல்ல..ஆனா அவங்களுக்கு இதோட மதிப்பு தெரிஞ்சு உபயோகப்படுத்துறாங்க..” என்றார்.

 

பின்பு அவர்களை இன்னொரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்.அங்கே சிறுதானிய முறுக்குகள்,கம்பர்க்கட்,தேன் மிட்டாய்,பயித்தம் பருப்பு லட்டு போன்ற உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

 

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் பேசியபடி மங்கையும் செல்லாவும் வந்தனர்.குயிலி அவர்களிடம் திரும்பி “இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்று கேட்க இருவரும் ஒரு சேர தலை ஆட்டினர்.

 

“நீங்க ரெண்டு பேரும் இனிமேல் இங்க தான் வேலை செய்ய போறீங்க….மங்கைக்கு ஏற்கனவே அக்கௌன்ட்ஸ் பார்க்குறதுல எக்ஸ்பிரியன்ஸ் இருக்கறதுனால அவ அக்கௌன்ட்ஸ் செக்சன்ல இருக்கட்டும்..செல்லா சூப்பர்வைஸ் பண்ணு..உங்க ரெண்டு பேர பத்தியும் முருகவேல் அண்ணா எம்.டி கிட்ட சொல்லிடாரு.” என்றாள்.

 

குயிலி சொன்னதைக் கேட்டவுடன் மங்கைக்கு லேசாக கண்கள் கலங்கின.”தேங்க்ஸ் க்கா..” என்று மனமார்ந்து சொல்ல அதை ஒரு சிறு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டாள் குயிலி.

 

மங்கை வழக்கு முடிந்தவுடன் வழக்கம் போல் வேலைக்குச் சென்றாள். அங்கு இருந்த அனைவரும் அவளை பரிதாபமாக பார்த்தனர்.சிலர் அவளிடம் வந்து பரிதாபமாக பேச அவளுக்கு அங்கு இருப்பதற்கே சங்கடமாக இருந்தது.அதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டாள்.வேறு வேலைக்கு முயன்று கொண்டிருந்தாள்.

 

மங்கை வேலையை விட்டதை அறிந்த குயிலி அவளுக்கு வேறு வேலை கிடைக்க முயன்று கொண்டிருந்தாள்.அப்பொழுதுதான் முருகவேல் கிருஷ்ணா ஆர்கெனிக்ஸ் பற்றியும் அங்கே மாற்றுத்திறனாளிகளுக்குத் மட்டும்தான் வேலை கொடுக்கிறார்கள் என்றும் கூற அவரிடம் மங்கைக்கும் செல்லாவுக்கும் வேலை கிடைக்குமா என்று விசாரிக்கச் சொன்னாள்.முருகவேலுக்கு அந்த எம்.டி தெரிந்தவராக இருந்ததால் இவர் கேட்டவுடன் அவர்களை வேலைக்கு வரச் சொன்னார்.

 

மூவரும் சிவராமனிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.குயிலி காரில் போகும்பொழுது “நீங்க டெய்லி இங்க வர்றதுக்கு கார் ஏற்பாடு பண்ணுற..ரெண்டு பேரும் அதுலையே வந்துருங்க” என்றாள்.

 

ஆனால் மங்கைக்கும் செல்லாக்கும் அதில் சற்றும் விருப்பமில்லை.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.பின்பு செல்லா குயிலியிடம் “அக்கா..நாங்க ரெண்டு பெரும் பஸ்லையே வரோம்” என்று சொல்ல “ஒன்னும் வேண்டாம்..கார்லையே வாங்க…” என்றாள்.

 

“அக்கா பஸ்ல வந்து போனாதான் எங்களுக்கு கொஞ்சம் தைரியம் வரும்..கார்லையே போய்ட்டு கார்லையே வர நாங்க என்ன சின்ன பசங்களா?ப்ளிஸ் க்கா…” என்று கெஞ்சினாள்.மங்கையும் கூட சேர்ந்து “ப்ளிஸ் க்கா..” என்று கெஞ்ச குயிலியும் சம்மதித்தாள்.

 

அடுத்த நாளில் இருந்து செல்லாவும் மங்கையும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர்.செல்லா இப்பொழுது தான் முதல் முறையாக வேலைக்கு வருகிறாள்.அதனால் அவளுக்கு இது புது அனுபவமாக இருந்தது.

 

அவர்கள் வேலைக்குச் சென்ற அன்று சிவராமன் அவர்களுக்கு அங்கிருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.ஜெயந்தி என்ற பெண்ணிடம் செல்லா செய்ய வேண்டிய வேலைகளை அவளுக்குச் சொல்லுமாறு சொல்லியவர் மங்கையை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

அங்கே ஒரு இளைஞன் கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.அவனிடம் மங்கையை அறிமுகப்படுத்தியவர்  மங்கையிடம் “இவரு பேர் விக்ரம்.இவரு தான் இங்க அக்கௌன்ட்ஸ் ஹெட்.நீங்க என்ன பண்ணனும்னு இவரு சொல்லுவாரு..” என்றார்.

 

மங்கை விக்ரமைப் பார்த்து புன்னகைக்க பதிலுக்கு ஒரு புன்னகை கூட விக்ரமிடமிருந்து வரவில்லை.இயந்திரத்தனமாக அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொன்னவன் பின்பு தன் வேலையில் மூழ்கிவிட்டான்.

 

ஜெயந்தி செல்லாவிடம் நன்றாக உரையாடினாள்.எப்பொழுதும் கலகலப்பாக பேசும் ஜெயந்தியை செல்லாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.ஜெயந்தியின் தோழி மாலதி.

 

வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தில் மங்கை,செல்லா,ஜெயந்தி,மாலதி நால்வரும் நல்ல தோழிகளாக மாறினர்.செல்லாவிற்கு ஜெயந்தியுடனும்,மாலதியுடனும் வேலை நன்றாக செல்லும்.

 

ஆனால் மங்கைக்கு  விக்ரமுடன் வேலை செய்வது அவ்வளவு பிடித்தமானதாக இல்லை.அவளாக ஏதாவது பேசினாலும் கூட அவனிடம் “ம்ம்..” என்ற பதிலைத் தவிர வேறொன்றும் வராது.

 

மங்கைக்கு விக்ரமுடன் இருக்கும் நேரம் பிடிக்கவில்லை என்றாலும் தன் தோழியருடன் இருக்கும் நேரம் மிகப்பிடித்தது.இவ்வளவு வருடங்கள் அவள் மற்றவர்களுடன் பழகி இருந்தாலும் அவர்கள் இவளை எப்பொழுதும் பரிதாபமாக பார்ப்பது போல் தோன்றும்.ஆனால் இங்கு அனைவரும் இவளைப் போல் இருப்பதால் அவளுக்கு இந்த இடம் மிகப் பிடித்துவிட்டது.

 

அன்று வேலை முடிய சற்று தாமதம் ஆகிவிட்டது.இவர்கள் இருவரும் பஸ் ஸ்டாப் வந்து நின்றவுடன் வானம் நன்றாக இருட்டி விட்டது.அவர்கள் போகும் பேருந்து இன்னும் வரவில்லை.இருவரும் நன்றாக மழையில் மாட்டி விடுவோம் என்று நினைத்துக்கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது அந்த வழியாகச் சென்ற தாஸ் இவர்களைப் பார்த்தவுடன் காரை இவர்களை நோக்கிச் செலுத்தினான்.”Why you both are standing here?”  என்று கேட்க ‘பஸ் ஸ்டாப்ல எதுக்கு டா நிற்பாங்க?’ என்று மனதில் நினைத்த மங்கை “Waiting for bus” என்றாள்.

 

“Come let me drop you in your home”  என்றவன் அழைக்க “No thanks” என்ற மங்கை அவனுடன் செல்ல மறுத்தாள்.செல்லா அவருடன் செல்லலாம் என்று எவ்வளவு எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை.

 

தாசிற்கு மனசு கேட்காமல் பஸ் வரும் வரை அவர்களுடன் இருந்து அவர்களை பஸ் ஏற்றிவிட்ட பின்னர் சென்றான்.மனதுக்குள் இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு அடம் இருக்க வேண்டாம் என்று நினைத்தான்.

 

அன்று வழக்கம் போல் மங்கை வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்லா வெளியே இருந்த வாத்துக்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்பொழுது ஒரு வாத்து மேய்ந்து கொண்டு அங்கும் இங்கும் போக செல்லாவும் அதைப் பார்த்துக் கொண்டு அதன் பின்னால் சென்று கொண்டிருந்தாள்.

 

திடீரென்று அவள் எதுமீதோ மோதி விட நிமிர்ந்து பார்த்தவள் அங்கே நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்ததும் “சாரி சாரி …வாத்த பார்த்துட்டே வந்தது நால உங்கள கவனிக்கலை..” என்றாள்.

 

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “பரவாயில்லை..உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.செல்லாவிற்கு யாரென்றே தெரியாதவனிடம் எப்படி பேர் சொல்வது என்ற எண்ணம் வந்தாலும் அவன் பார்ப்பதற்கு நல்லவன் போல் இருந்ததால்  அதை ஒதுக்கியவள்  அவனிடம் “ செல்லமா ” என்றாள்.

 

பின்பு “நீங்க யாரை பார்க்கணும் அண்ணா?” என்று கேட்க “ருக்குமணி பாட்டியை பார்க்கணும்” என்றான்.”நீங்க அவங்களுக்கு சொந்தக்காரரா?” என்றவள் அவன் பதில் சொல்லுமுன் “அவங்க உள்ள தான் இருக்காங்க..வாங்க நான் உங்கள கூட்டிட்டு போற” என்று அவனை அழைத்துச் சென்றாள்.

 

அந்த புது நபர் செல்லாவிடம் “இங்க என்ன வேலை செய்யற ம்மா..?” என்று கேட்க “சூபர்வைசர் அண்ணா..” என்றாள்.”வேலையெல்லாம் பிடிச்சிருக்கா ம்மா?” என்று கேட்டதற்கு “ஓ சூப்பரா இருக்கு அண்ணா..இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சுருக்காங்க..”என்றாள்.இருவரும் பேசிபடியே உள்ளே நுழைந்தனர்.

 

உள்ளே நின்று கொண்டிருந்த சிவராமன் இவரைப் பார்த்ததும் “குட் மார்னிங் சார் …நீங்க இன்னைக்கு வரணு சொல்லவே இல்லை” என்று கேட்க செல்லாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

 

சிவராமனிடம் மெதுவாக “அண்ணா இவங்க யாரு?” என்று கேட்க “இவரு தான் நம்ம முதலாளி மயில்வாகனன் சார்” என்றார்.செல்லாவிற்கு ஒரு நிமிடம் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.

 

“சாரி சார்..நான் நீங்க யாருனு தெரியாம…” என்று திக்க புன்னகைத்தவன்  “COOL COOL..டென்ஷன் ஆகாத ..நான் நீ பேசுனத தப்பா எடுத்துக்கல .அப்புறம் இந்த சார் மோர்லாம் வேண்டாம்  ..நீ என்ன அண்ணானே கூப்பிடு..” என்றவன் சிவராமனிடம் அவளைப் பற்றிய மற்ற விவரங்களை கேட்டு அறிந்து கொண்டான்.

 

அனைவரையும் முன்னால் இருக்கும் ஹாலிற்கு வருமாறு சிவராமன் மைக்கில் அழைத்தார்.எல்லாரும் வந்தவுடன் ருக்குமணி பாட்டியை முன்னால் அழைத்த மயில்வாகணன் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி” என்றான்.

 

ருக்குமணி பாட்டிக்கு ஆனந்தத்தில் வார்த்தைகள் வரவில்லை.பின்பு அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாட ருக்குமணி பாட்டி கேக் வெட்டினார்.

 

அவர் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.அனைவரும் அவருக்கு தத்தம் வாழ்த்துக்களைச் சொல்லி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.

 

ஜெயந்தி மயில்வாகணனைப் பற்றி மங்கையிடமும் செல்லாவிடமும் ஆஹா ஓஹோ என்னும் அளவிற்கு புகழ்ந்து தள்ளி விட்டாள்.இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தாலும் விக்ரம் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.

 

செல்லா மங்கையிடம் “ஏன் டி ..அந்த விக்ரம் சார் மனுஷனா இல்ல ஞானியா டி…இங்க இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடந்துட்டு இருக்கு இப்ப கூட வெளிய வராம உள்ள உட்கார்ந்துட்டு இருக்காரு..” என்று சொல்ல இதைக் கேட்ட ஜெயந்தி “அந்த விக்ரம் சார் எப்பவும் இப்படித் தான்..எம்.டி வந்தாலும் வெளிய வர மாட்டாரு..எப்பவும் எம்.டி தான் அவரை போய் பார்த்துட்டு வருவாறு” என்றாள்.

 

செல்லா வெளியில் ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் மனதில் “இவரு பெரிய துரை..இவர பார்க்க எம்.டி அண்ணா இவரோட ரூம்க்கு போகனுமா?”  என்று திட்டித் தீர்த்தாள்.

 

ஜெயந்தி சொல்லியது போல் மயில்வாகணன் விக்ரமின் அறைக்குச் சென்று அவனைப் பார்த்துவிட்டுச் சென்றான்.

 

 

குயிலி வருவாள்…..

 

 

error: Content is protected !!