KVI-11
KVI-11
காதலனைப் பார்க்காவிடிலும், அவன் காதலை உணர்ந்த சந்தோஷம். தான் காதல் செய்பவன், தன்னைக் காதல் செய்கிறான் என்ற பூரிப்பு. ஆதலால் ராயலில், ‘ரொமான்டிக் ராட்சசியாய்’ சயனா.
அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தாள். காதலன் தந்திருந்த பூச்செண்டை ஏந்திக்கொண்டு, படியேறத் தொடங்கினாள்.
சயனா, படபடவென்று படியேறினாள். சடசடவென பூச்செண்டின் பூ இதழ்கள் விழுந்தன.
‘அய்யோ’ என்று நின்றுவிட்டாள். இன்று படியேறுதல் கிடையாது. முதல் முறை, மின்தூக்கிப் பயணம்.
வீட்டிற்குள் நுழைந்தாள்.
நேரே தாயார் அறைக்குள் சென்றாள். ஒரு நிமிடம் அங்கு நின்றிருந்தாள். அந்த நிமிடம் முழுவதும், அவள் தன் தாயிடம் பேசியது ‘சக்திய உனக்கும் பிடிக்கும். கண்டிப்பா பிடிக்கும் பாரு’ என்றுதான்.
காதல் கிரகத்திலிருந்து அழைப்பு.
கைப்பேசியை எடுத்துக் கொண்டு, தன் அறைக்குள் வந்து விட்டாள். சக்தியின் காதலை முழுவதுமாக உணர்ந்த பின்பு, காதல் கிரக அழைப்பை ஏற்பதில், சயனாவிற்கு மிகுந்த தடுமாற்றம். இனி இதை தொடர்வது, அத்தனை எளிதல்ல என நினைத்தாள்.
“ஹாய் ட்டேபீ” – அழைப்பை ஏற்றபின்.
“ஹாய்” – தடுமாற்றம் தந்த தயக்கத்துடன்.
“என்ன வாய்ஸ் டல்லா இருக்கு”
“…” – இத்தனை தொலைவில் இருந்தும், எப்படி, என்னைப் புரிந்து கொள்கிறான்?? அத்தனை அருகில் இருந்தும், சக்தி ஏன் என்னைப் புரிந்து கொள்ளவில்லை??
“சொல்லு ட்டேபீ? என்ன பேசவே மாட்டேங்குற”
“….” – சக்தியின் ‘சயனா சக்திவேல்’ விட, இந்த ட்டேபீ என்ற அழைப்பு, உள்ளுக்குள் ஏதோ ஒன்றை கிளர்ந்தெழச் செய்கிறதோ?
“என்னாச்சி சயனா??”
“…..” – இவன் உச்சரிப்பில், என் பெயரின் எழுத்துகள். உள்ளுக்குள் காதல் போர் முழக்கங்கள். சக்தியின் உச்சரிப்பில்தானே, இதை நான் உணர வேண்டும்?
“சயனா”
“ம்ம்ம்”
“சொல்லு என்னாச்சி?”
“நத்திங்”
“ஹேப்பி பர்த்டே மை டியர் ட்டேபீ” – காதல் கிரகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
“…..” – சக்தி சொல்லிக் கேட்க நினைத்தது, விரும்பியது. இவன் சொல்லிக் கேட்கிறோமே!
காதல் கிரகத்தின் கொண்டாட்டத்தில், சயனா கலந்து கொள்ளவில்லை.
“பர்த்டே அன்னைக்கு, இந்த மாதிரி இருக்காத??” – காதல், அவளைப் புரிந்து கொள்கிறது.
“…” – அருகிலிருந்த பார்த்த சக்தியால், அவளைப் புரிந்த கொள்ள முடியவில்லை. ஆனால் இவன், தன்னை இத்தனை எளிதில் புரிந்து கொள்ளகிறானே!!
“சயனா ”
“ம்ம்ம்” – என்னிடத்தில் எதற்காக இத்தனைக் காதல் கொள்கிறாய்?? என்று முதல் முதலாக யோசித்தாள்.
“நீ, இப்படி இருந்தா, எனக்கு கஷ்டமா இருக்கும் ட்டேபீ”
“ம்ம்ம்” – தன் மனம் இரட்டை வேடம் போடுகிறதோ?? இது மிகப் பெரிய தவறல்லவா?
“ஏதாவது பேசு”
“நாம இனிமே பேச வேண்டாம்”
“ஏன்? எதுக்கு?” – காதல் விளையாட்டாய் எடுத்துக் கொண்டது.
“நான் சக்திய லவ் பண்றேன் ”
“ய்யா ஓகே. எனக்குத் தெரியுமே” – இன்னும் விளையாட்டுதான்.
“நான், சக்திய மட்டும்தான் லவ் பண்ணனும்னு நினைக்கிறேன்”
“….. ” – காதல் மௌனமாகிறது.
“ஆனா, நீ பேசறப்ப, என்னையவே அறியாம எனக்கு.. என.. ஏதோ ஒரு.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”
“….. ” – காதலின் மௌனம்.
“ப்ளீஸ், இனிமே எனக்கு போஃன் பண்ணாத”
“…” – காதல் மௌனம் தொடர்கிறது.
“ப்ளீஸ், ஐ மீன் இட் அன்ட் ஐ நீடு இட்”
“…..” – எல்லா இடத்திலும், மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு. ஆனால் காதல் கிரகத்தின், இந்த மௌனம் சங்கடத்தின் வெளிப்பாடு.
” ப்ளீஸ், ஐ.. ” – சயனாவின் கெஞ்சல்.
“கூல் கூல் ட்டேபீ. ஐ அக்சப்ட். உனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். நீ சந்தோஷமா இருந்தா போதும்”
“…..” – அங்கு ஒருவன் நான் கவலைப்படுவேன், என்று தெரிந்தும், விட்டுச்சென்றான். இங்கு, இவனோ ‘விட்டுப்போ என்கிறேன்’ சந்தோஷமா இரு என்கிறானே!!
“நான் இனிமே போஃன் பண்ணல. ஆனா, உனக்கு எப்பவாவது என்கிட்ட பேச நினைச்சா பேசு. ” – பக்குவமான காதல்.
“ம்ம்ம் ”
“எப்ப வரச்சொன்னாலும் வருவேன், ட்டேபீ. உனக்காக. ” – காதல் பரிவு காட்டியது.
“போதும், நான் போஃன் கட் பண்ணப் போறேன் ” – இதற்குமேல் இந்தப் பக்குவம், பரிவு ‘சரியல்ல’ என்று தோன்றியது.
“ஸாரி சயனா” – என்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டது காதல்.
எதற்கிந்த அன்பை எடை போடும் நடவடிக்கை? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எதற்காக இந்த ஒப்பீடு?
அன்பை ஒப்பீடுவது காதல் இல்லை. ஒப்பில்லாத அன்புதானே காதல்!
சக்திவேல் தந்த விட்டுச்சென்ற பூச்செண்டை, அணைத்துக் கொண்டு படுத்துவிட்டாள். சக்தியிடம் பேச விரும்பியதை, பூச்செண்டிடம் பேசுகின்றாளா? இல்லை…. சக்தி பூச்செண்டிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாளோ?
கடைசியில் எல்லாவற்றையும் மறந்து, தன் முழுமுதற் காதலை, சக்திவேல் என்ற ஒற்றைப் புள்ளியில் நிறுத்தி, மனதை சமாதானப் படுத்தி உறங்கினாள்.
******
வெகு அதிகாலை பொழுது. நான்கு மணிக்கு முன்பே, சந்திப்பு நேரம் மாற்றப்பட்டது. அமைச்சரின் வருகை, யாருக்கும் தெரியக்கூடாது என்று, இந்த ஏற்பாடு!!
சயனாவின் வருகைக்கு முன்பே, அனைத்தையும் கச்சிதமாக முடித்து விடவேண்டும், என்று கனகா மேமும், ரேவும் திட்டமிட்டிருந்தனர்.
கனகா மேமின் அறையில் கூட்டம் கூட ஏற்பாடு செய்திருந்தனர்.
விடியலுக்கான வெளிச்சம் மிகவும் கம்மியான காலைப் பொழுதில்…
அந்தக் கட்டடத்தின், சிஐடி அலுவலக தளத்தில் மட்டும், விளக்குகள் எரிந்தன. அதுவே, ரேவைப் பயங் கொள்ளச் செய்தது.
ரேவ் மற்றும் கனகா மேம், சயனாவின் அறையில் இருந்தனர். இருவருமே பதட்டத்தை உணர்ந்தனர்.
சயனா வந்து கேள்வி கேட்டால், ‘என்ன சொல்லி சமாளிக்க’ என்று இருவரின் மூளையும் பதில்களை யோசிக்க ஆரம்பித்தது.
“ரேவ்” என்று பின்னிருந்து தோளைத் தொட்டார், கனகா மேம்.
ஒருகணம், பயந்து கைகளில் வைத்திருந்த காகிதத்தைக் கீழே நழுவ விட்டாள்.
“ஏய்! என்னாச்சிடா??”
“ஒன்னும் இல்ல மேம். கொஞ்சம் நெர்வஸா இருக்கு” என்று தன் நிலையைச் சொன்னாள்.
இதுவரை சயனாவை எதிர்த்துப் பேசி இருக்கிறாள். நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது. ஆனால் இதுதான் முதல் முறை, சயனாவிற்கு எதிராகவே நடக்கப் போகிறாள்.
இதுதான் அவளினது பதட்டத்தின் காரணமா?? இதுதவிர இன்னொன்று உண்டு. அது, ரேவ் எந்த இடத்திலும் முன்னின்று பேச மாட்டாள்! இன்று எப்படி முடியும் என்ற தயக்கம்.
“முதல்ல கீழே கிடக்கிற டீடெயில்ஸ் எடு” என்றார், மேம்.
எல்லாவற்றையும் எடுத்து, அடுக்கிக் கொண்டிருந்தாள்,ரேவ்.
“ரேவ், பீ போல்டு. சரியா”
“யெஸ் மேம்”
“ரேவ், எல்லாம் கரெக்டா இருக்குல?”
“எல்லாம் இருக்குது மேம்”
இதற்கிடையே, அவர்கள் அறையின் கதவு தட்டப்பட்டது. நால்வர் கூட்டணி வந்துவிட்டது போல..
ரேவ்தான் சென்று திறந்தாள். அங்கே காவல்துறை நின்று கொண்டிருந்தது.
திரும்பவும் அனாவசியப் பார்வைகள். இன்னும், சிறிது நேரம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள்.
“அமைச்சர் வந்தாச்சு. சீக்கிரம் வா”
“ம்ம்ம்” என்று, குனிந்து கொண்டு பதில் சொன்னாள்.
“உன் ப்ரண்ட் இல்லையா??” – தேவை இல்லா கேள்வி கேட்ட காவல்.
“நீங்க போங்க, நாங்க வரோம்” என்று சொல்லினார், கனகா மேம்.
அவர்கள் இருவரையும், சந்தேகமாகப் பார்த்துச் சென்றது, காவல்துறை.
“ரேவ், இப்படி இருக்க கூடாது. பேஸ் பார்த்து போல்டா பேசு” என்று, ரேவிற்குத் தைரியம் ஊட்டினார்.
“ம்ம்ம் ” என்றவளின் குரல் மட்டுமல்ல, உடலே நடுங்கியது.
“வாடா” என்று கனகா மேம், அவளை அரவணைத்துக் கூட்டிச்சென்றார்.
ரேவ் மற்றும் கனகா மேம், எல்லா கோப்புகளையும் எடுத்துக்கொண்டு, நால்வர் இருக்கும் அறைக்குச் சென்றனர்.
அடுத்த அறையில் …
நால்வரும் அமர்ந்திருந்தனர்.
என்னவோ இன்று? தொழிலதிபரும் காவல்துறையும், புதிதாய் புகை மண்டலத்தை உருவாக்கி கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்தவுடன், புகை நெடி. சிஐடி அலுவலகத்தில் இத்தகைய செயல், இரு பெண்களையும் மிகவும் கொதிப்படையச் செய்தது.
அதில் ஒரு பெண் எதிர்வினை புரிந்தாள். அது ரேவ்தான்.
“இது சிஐடி ஆபீஸ். நீங்க இங்க ஸ்மோக் பண்ணக்கூடாது” என்றவள் குரல், தட்டிக்கேட்பது போல் இல்லை, தட்டிக் கொடுப்பது போல் இருந்தது.
அவர்களது பார்வையே சொல்லியது ‘நீ என்ன வேண்டுமானாலும் சொல், நாங்கள் நிறுத்தப் போவதில்லை’ என்று.
சயனா இருந்தால், இவர்கள் இப்படி நடந்து கொள்ளவார்களா? என்று கேட்டது ரேவினது மனக்குரல்.
கனகா மேம்தான், ரேவின் காதிற்குள் சென்று, “ரேவ், வந்த வேலையைப் பாருடா. தேவையில்லாம பேசாத” என்றார்.
‘சரி’ என்றபடி தலையை ஆட்டினாள்.
“சொல்லு, எதுக்காக இந்த மீட்டிங்? ” – ஆளுகின்ற அமைச்சர்.
“இந்த கேஸ் ரிலேட்..” என்று கனகா மேம், தலைமைப் பொறுப்புடன் ஆரம்பித்தார்.
“நீங்க பேச வேண்டாம். இன்னைக்கு இந்த மேடம் பேசட்டும்” – காவல் ரேவைக் கை காட்டியது.
ரேவ், கனகா மேமைப் பார்த்தாள்.
“ம்ம்ம், பேசுடா. ” என்றார், மேம்.
“அத . அது… அது வந்து..” என்று குரல் முழுவதும் திக்கியது ரேவிற்கு.
“ஒரு நிமிஷம், நிறுத்து” – இது காவலின் குறுக்கீடு.
“உனக்கு என்னய்யா பிரச்சனை? ” – தூக்க கலக்கத்தில் தொழில்.
“சயனா எங்க? எப்பவும் அவதான பேசுவா? இன்னைக்கு என்ன புதுசா?” – கேள்வி கேட்டது, காவல்.
“அதான, இதுல ஏதோ விஷயம் இருக்கு” – இட்டுக்கட்டிப் பேசியது பத்திரிக்கை.
ரேவ், திரும்பவும் கனகா மேமைப் பார்த்தாள். இம்முறை முகத்தில் பயம் தெரிந்தது.
‘அவங்களுக்கு, எதுவும் தெரியாது. நீ காட்டிக்கொடுக்காதே’ என்று மேம் கண்களால் பேசினார்.
“எப்போ பதில் சொல்லப் போறீங்க? ” – பல் தெரிய பத்திரிக்கை.
“அதான் நான் வந்திருக்கிறேன்ல. நான்தான், இவங்க ரெண்டு பேருக்குமே ஹெட். ஸோ, நான் சொன்னா ஓகேதான்” என்று சமாளிக்கப் பார்த்தார், மேம்.
“தெரியும். ஆனா, என்னைக்கும் அவதான பேசுவா. நீங்க பேசுனத, நாங்க கேட்டதே இல்லை. ” – தொழிலதிபரின் குரலில், சயனா இல்லாததால் கிடைத்த லாபத்தின் நக்கல் தெரிந்தது.
“அது, சயனாவுக்கு உடம்பு சரியில்ல. அதான், இன்னிக்கு வரல” என்று கூறி, அவர்களைச் சமாளிக்க முயற்சித்தாள், ரேவ்.
” சொல்லு” – ஆமோதித்த அமைச்சர்.
“அது… வந்து.. கேஸ் முடிஞ்சுருச்சி. அதான் யாரு ஹேக்கருன்னு சொல்லலாம்னு வந்தோம்” என்று சொல்லி முடிக்கும் போது, வியர்த்துப் போனாள்.
“ஏய்! நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து கேட்டேன்ல. அப்போ கூட எதுவுமே சொல்லல” – எழுந்து, ரேவின் அருகே வந்து நின்று, கத்திக் கொண்டது காவல்.
ரேவால், அந்த அருகாமையையும் சகிக்க இயலவில்லை. அந்த அலறலையும் பொறுக்க முடியவில்லை. உடல் முழுவதும் வியர்வை அரும்பியது.
“மேம் .. ” என்று சொல்லி, கனகாவின் அருகில் சென்றாள், ரேவ்.
“இல்ல, அதுக்கு காரணம் ” என்று, கனகா மேம் ஆரம்பிக்கும் போதே,
“நான் இவகிட்ட கேட்டேன். நீங்க பேசாதீங்க” – கண்டிப்புடன் காவல்.
“நீ சொல்லு ரேவ், கேட்கிறாங்கள” என்று ரேவிற்கு நம்பிக்கைத் தந்து, பேச வைத்தார், கனகா மேம்.
“இப்பதான கேஸ் முடிஞ்சது” என்றவளின் குரல் அவளுக்கே, கேட்கவில்லை.
“சத்தமா பேசச் சொல்லுய்யா” – தொழில்.
“சத்தமா சொல்லு” – தொழில் பக்கம் சாய்ந்தது காவல்.
“கம்பிளீட்டா முடிஞ்சாதான, கரெக்ட் இன்பர்மேஷன் கொடுக்க முடியும். அதான் அன்னைக்கு நீங்க வந்தப்ப சொல்லல.. ” என்று பயத்துடன் ரேவ் சொல்லி முடித்தாள்.
“என்ன இந்தப் பொண்ணு, இவ்வளவு பயப்படுது? இதெல்லாம் சிஐடியா? ” – காவல்துறையின் கணிப்பு.
இந்தக் கணிப்புகள் காவல்துறையின் நகைச்சுவை என்று நினைத்து, மற்ற மூன்றும் சிரித்தது.
கண்கள் கலங்க, கனகா மேமைப் பார்த்தாள் ரேவ்.
‘கனகா மேம்’ அனுபவம், அந்த நால்வரையும் புரிந்து கொண்டது. இத்தனை நாள் சயனா பேசிய பேச்சின் வெளிப்பாடு, இவர்களது எள்ளல். பயந்த பெண் மீது, பாய்கிறார்கள்.
“ரேவ், நீ டிடெயில்ஸ்ஸ கொடுத்திட்டு வா, நாம போகலாம் ” என்றார் மேம்.
தன் கையில் இருந்த கோப்புகளை, அமைச்சரின் மேசையின் முன்னால் வைத்தாள்.
“இதுல, உங்க ஈமெயில் ஹேக் பண்ண டிடெயில்ஸ் இருக்கு. கொரியர் டீடெயில்ஸ் இருக்கு. ” என்று, ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினாள்.
அந்தக் கோப்பைக் காவல்துறை, அவளிடமிருந்து பிடுங்கிப் பார்க்க ஆரம்பித்தது. அதிலிருந்த கொரியரைப் பார்த்ததும்…
“அன்னைக்கு, நான் வந்து கேட்டேன்ல. ஸேம் டேட்லதான இந்தக் கொரியர் வந்திருக்கு. ஏன் என்கிட்ட இதப்பத்தி சொல்லல?” – காவல்துறை தன் விசாரணையை, சிஐடியிடம் ஆரம்பித்தது.
என்ன சொல்லவென்று தெரியாமல், ரேவ் கனகா மேமைப் பார்த்தாள்.
“என்னயப் பார்த்துப் பேசு” – ரேவ் அருகே நின்று கொண்டு காவல்.
“அன்னைக்கு முழுசா எதுவும் கண்டுபிடிக்கல. ஆப்டர் பினிஷிங் ஆல் தே…” என்று சொல்ல ஆரம்பித்தவளை…
“எங்களுக்குப் புரியற மாதிரி பேசு” – இடையிட்டு, இம்சித்து, ரசித்தது காவல்.
“இல்ல, அவ என்ன சொல்ல வர்ற…” என்று கனகா மேம், இடையில் வந்தார்.
“நான் அப்பவே சொன்னேன்ல, நீங்க பேசாதீங்க ” – அமைச்சரின் முழு ஆதரவும் காவல்துறைக்கே!
“நீ சொல்லு… இதைச் சொல்லி இருக்கலாம்ல. ஏன் சொல்லல?? ” – ரேவின், மிக அருகில் நின்று கொண்டு கேட்டது காவல்.
ரேவ் திணறினாள். தின்னாடினாள். வார்த்தைகளை தேடினாள். ‘சயனா, சீக்கிரமா வா’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் மூளைக்குள் வரவில்லை.
“விடுய்யா. நீ யாருன்னு சொல்லு” – பரிதாபப்பட்டு, பத்திரிக்கை பரிந்து கொண்டு வந்தது.
காவல்துறை விலகிக் கொண்டது.
“நீங்.. நீங்க.. கனலினினு, ஒருத்தங்கள பொய்யா கேஸ் போட்டு.. ” என்று ஆரம்பித்தாள், ரேவ்.
“ஆன்ங்… திருப்பி சொல்லு ” – மொத்தமாக நான்கு குரல் வந்தது.
அவளின் ஆரம்பமே, அவர்களுக்கு ஆத்திரம் ஊட்டுவதாக இருந்தது.
“ரேவ், கரெக்டா சொல்லுடா” என்று, ரேவிற்கு அறிவுரை வழங்கினார்.
“திருப்பித் திருப்பிச் சொல்றேன் நீ பேசாத” – அமைச்சரின் மரியாதை விகுதி குறைந்து கொண்டு வந்தது.
“எங்க நீ சொல்லு… ” – தொழில்.
“கனலினி, இன்.. இன்கம்டாக்ஸ் ஆபிஸர் இருக்காங்கள.. ” என்று கேள்வி கேட்டாள், ரேவ்.
“நீ யாரம்மா சொல்ற? கனலினி யாருன்னே எங்களுக்குத் தெரியாதே” – அமைச்சர், தனது நாடகத்தை ஆரம்பித்தார்.
“ஐயோ, உங்களுக்குத் தெரியும்… பொய் சொல்லாதீங்க… ” என்று, உலற ஆரம்பித்தாள்.
“யாரப் பார்த்து? என்ன கேள்வி கேட்கிற? ” – காவல், ரேவை வதைக்க ஆரம்பித்தது.
“அவ கைய விடுங்க… ” என்று ரேவின் பக்கத்தில் வந்து, நின்று கொண்டார் கனகா மேம்.
“அவள முதல்ல சொல்லச் சொல்லு” – வதைத்துக் கொண்டே காவல்.
“ரேவ், நீ சீக்கிரமா சொல்லுடா ” என்றார், கனகா மேம்.
“இல்ல. பேப்பர்ல கூட நீயூஸ் வந்திருக்கு. நீங்க பொய் சொல்றீங்க. எங்கிட்ட பேப்பர் கட்டிங்ஸ் இருக்கு” என்று எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லி முடித்தாள், ரேவ்.
“ஓ நாங்க பொய் சொல்றோமா?” – பத்திரிக்கையின் பரிகாசம்.
“யோவ், அந்தப் பொண்ணு கைய விடுய்யா” – அனுதாபம் கொண்டு அமைச்சர்.
காவலர் கையை விட்டதும், ரேவ் மணிக்கட்டை தேய்த்துக் கொண்டாள்.
“ஆமா. நாங்கதான் பொய்யா கேஸ் போட்டோம். அதுக்கு என்ன? ” – இது அமைச்சரின் அதிகார ‘என்னவோ ஒன்று’.
“அவதான் இதெல்லாம் செஞ்சாளா? ” -தூக்கப் பார்வையுடன் தொழிலதிபர்.
“இல்ல. அவங்களுக்கு மனநிலை கொஞ்சம் பாதிச்சிருச்சி.” என்றார், கனகா மேம்.
“ஐயோ பாவம். அப்புறம் என்னாச்சி”- கதைகேட்டது காவல்.
“அவங்க பையன்தான், உங்க எல்லாரையும் பழிவாங்க இப்படிப் பண்ணியிருக்கான்” என்று ரேவ் சொல்லி விட்டாள்.
“பையனா? அவன் பேரென்னமா??” – அமைதியாக அமைச்சர்.
“சக்திவேல்”
சிறிது நேரம் நிசப்தம்.
“கொஞ்சம் ஓரமா நில்லுங்க ” என்று சொல்லி, அவர்கள் இருவரையும் ஓரங்கட்டியது அமைச்சரின் அதிகாரம்.
அவர்களுக்குள் பேச்சு தொடர்ந்தது…
“அன்னைக்கே நான் சொன்னேன்ல. அவளோட கதையை ஜெயில்லயே முடிச்சிடலாம்னு. நீங்கதான் வேண்டாம்னு சொல்லி, இப்ப பாருங்க” – தூக்கம் தொலைந்து துடிப்புடன் தொழிலதிபர்.
“அவள ரெண்டு மாசம் உள்ளே வச்சி, டார்ச்சர் பண்ணியும், திருந்தலனா? எவ்வளவு திமிர் இருக்கும் ” – கடமை கொண்ட காவல்.
“நம்ம பண்ண டார்ச்சர்தான்யா அவள பைத்தியமா ஆக்கிருக்கு. அதான், அவ பையன் வந்து நிக்கிறான்” – பிரச்சனையின் ஆணிவேரைப் பிடித்துவிட்ட அமைச்சர்.
“அம்மா மேல ரொம்ப பாசம் போல” – பத்திரிக்கை.
“அதான் தெரியுமே! ரெண்டு மாசமா என்கிட்ட எவ்வளவு கெஞ்சிருப்பான்” – சிரித்தது காவல்.
அனைவரும் சிரித்தனர்
“ஸ்டேஷன் வாசல்லயே நின்னான்.” – மேலும் சிரிப்புக்கள்.
“இப்ப என்ன செய்யணும்னு யோசி. பழசையே பேசிக்கிட்டு இருக்காத” – அமைச்சரின் அடுத்த கட்ட நடவடிக்கை.
“அவனுக்கும் ஏதாவது ஒரு பொய்யா கேஸ் போடட்டா? அவன உள்ள வச்சு அடிக்கிற அடியில, நம்மள இனிமே யாரும் எதிர்க்கனும்னா பயப்படனும்” – காவல்.
அவர்கள் பேசப் பேச, மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர், ரேவ் மற்றும் கனகா மேம். இருவருக்கும் சக்திவேலின் செயலில் நியாயம் இருக்கிறதோ? என்று யோசித்தனர். ஆனால் காலம் கடந்த யோசனை!
“சரியா சொன்னய்யா. பொய் கேஸ் போட்டு, அவன உண்டு இல்லைன்னு பண்ணனும்” – சட்டத்தை தன் கையிலோ? பையிலோ? வைத்திருந்த தொழில்.
திடீரென்று…
“அடப்பாவிகளா! நீங்க இவ்வளவு மோசமானவங்களா?? ” என்றாள் ரேவ்.
நால்வரின் பார்வையும், ரேவின் மேல் திரும்பியது.
“ரேவ், சும்மா இரு” என்று தடுத்துப் பார்த்தார் கனகா மேம்.
“மேம், இதனால்தான் சயனா கேஸப்பத்தி, எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிருப்பா? நாமதான் தப்பு பண்ணிட்டோம் ” என்று சொல்லிச் சிக்கலைப் பெரிதாக்கினாள்.
” ரேவ், நீ என்ன பண்ற? ” என்று கண்டித்தார் கனகா மேம்.
“என்ன சொன்ன? ” என்று கேட்டுக் கொண்டே, ரேவின் அருகே விரைந்தது காவல்துறை.
தான் என்ன தவறு செய்தோம் என்று தெரிந்ததும், ரேவ் அறையை விட்டு வெளியேற யத்தனித்தாள்.
“அவள புடிய்யா? ” – அலறிய குரல் அமைச்சரினது.
ரேவ், காவலால் பிடித்து இழுத்துக் கொண்டு வரப்பட்டு, அமைச்சர் முன்பு நிறுத்தப்பட்டாள்.
“நாங்க சிஐடி ஆபிஸர். நீங்க இப்படி பண்றதெல்லாம் ரொம்பத் தப்பு ” என்றாள், அழுதுகொண்டே ரேவ்.
“அவள விடுங்க” என்றார் மேம்.
“ஏன்? இதுக்கு முன்னாடி தெரியாதா, நீங்க சிஐடி ஆபிஸர்னு?” – துளைக்கும் பார்வையுடன் தொழில்.
“சொல்லு….” – ரேவை, காவல் கஷ்டப்படுத்தியது.
“என்ன சொல்ல??” என்று கேட்டாள், விம்மல்களுக்கு ஊடே…
“உன் ப்ரண்ட் வராததுக்கு, அப்ப ஒரு காரணம் சொன்ன, ஆனா இப்ப வேற சொல்ற” – காவல்துறையின் ‘கரெக்ட் பாய்ன்ட் ‘.
ரேவ் அமைதி காத்து, அழுதாள்.
“ஐயா, இவளுங்க ஏதோ ப்ளான் போடறாளுங்க. நம்பாதீங்க” – பத்திரிக்கை.
“நீ சொல்லு. அந்தப் பையன், எங்க இருக்கானு? ” – அழுத்தமாக அமைச்சர்.
“எனக்குத் தெரியாது” என்று, சத்தமாக அழு ஆரம்பித்தாள், ரேவ்.
“மரியாதையா சொல்லு ” – தொழில்.
“சக்திவேல்னு பேர் மட்டும் தெரியும். ஆனா வேற எதுவும் தெரியாது” என்று உண்மையைச் சொன்னாள், ரேவ்.
” ம்ம்ம், மேல சொல்லு” – அமைச்சர்.
“ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். நிஜமா அவ்ளோதான் தெரியும். அதுக்கு மேல எதுவும் தெரியாது” என்று அவளுக்குத் தெரிந்ததைச் சொல்லி முடித்தாள்.
“அதான் இந்தமாதிரி வேலய பண்ணிருக்கான்” – காவல்துறையின் கண்டுபிடிப்பு.
அவர்கள், நால்வருக்குள்ளும் பார்வை பரிமாற்றங்கள் நடந்தன.
“அவனுக்கும் சயனாவுக்கும் என்ன சம்பந்தம், அதச் சொல்லு” – தொழில்.
“ஐயோ ஒரு சம்பந்தமும் இல்லை ” என்று முந்திக் கொண்டு வந்தார், கனகா மேம்.
“அவள மிரட்டி கொரியர் அனுப்பிருக்கான். அப்புறமாவும் அவனுக்கு சப்போர்ட் பண்றானா? இதுல என்னவோ இருக்கு” – காவல் கடமையைச் செவ்வனே செய்தது.
“இல்ல, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை ” என்றார், கனகா மேம்.
“நீ, அவகிட்ட கேளுய்யா” – அமைச்சர்.
“உண்மையைச் சொல்லு ” – ரேவை உலுக்கியது காவல்துறை.
“எனக்குத் தெரியாது.. தெரியாது” என்று கத்திக் கொண்டு அழுதாள், ரேவ்.
“அவள கத்த வேண்டாம்னு சொல்லு. வெளியே கேட்டா, அவ்ளோதான் ” – அமைச்சரின் பயம்.
ஆனாலும், ரேவ் மேலும் மேலும் கத்திக் கொண்டு அழதாள்.
“கத்தாதனு சொல்றோம்ல ” – ரேவின் கண்ணத்தில், காவலின் கைரேகை.
அதற்குமேல், ரேவ் கத்தவில்லை.
“அந்த திமிர் பிடிச்சவளுக்கு போஃன் பண்ணி வரச் சொல்லு. அப்பத்தான் உண்மை என்னன்னு தெரியும்” – தொழிலதிபர்.
“முடியாது?” என்று சொன்னாள், ரேவ்.
திரும்பவும், சீறீ வந்த காவலைப் பார்த்ததும்….
“இதோ, பண்றேன்” என்று கைகள் நடுங்க கைப்பேசி எடுத்துவிட்டாள், ரேவ்.
“சீக்கிரம் வரச் சொல்லு” – காவல்.
“ஆமா, கொஞ்சம் சீக்கிரமா. அப்புறம் விடிஞ்சா, பிரச்சனை. ” – அமைச்சரின் ‘ஆல்டைம்’ பயம்.
வரிப்பணம் கேட்வரின் மேல் இருந்த கோபத்தை விட, வரிப்பணம் எடுத்தவரின் மேல் இருந்த கோபம், இரண்டு மடங்கு அதிகமானது.
அவர்கள் கோபம் மொத்தமும், ‘சயனா சக்திவேல்’ என்ற ஒற்றைப் புள்ளியில் வந்து நின்றது.
******
சக்திவேலின் காதல் பரிசை, அருகில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த சயனாவின், கைப்பேசி அதிர்ந்தது.