KVI-13
KVI-13
உயிராய் போனவனின் உயிரைக் கேட்டதும், உயிராய் ஏற்றவளின் காதல் மனம், காயப்பட்டது.
“இது சாதாரண ஹேக்கிங். இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய…” – சற்றே பின்னோக்கி அடி எடுத்து வைத்தாள், சயனா.
“சதாரண ஹேக்கிங்தான். போன பணத்த ஒரே நாள்ல சம்பாதிக்க, முடியும். ஆனா இன்னைக்கு இவன இப்படியே விட்டுட்டா, நாளைக்கு என்னெல்லாம் செய்வானோ??
அவர்களின் எதிர்கால பயத்திற்காக, அவளின் ‘எதிர்காலத்தை’ கேட்கிறார்கள்.
“நான் கொஞ்சம் யோசிக்கனும்” – காதலில் சிக்கிக் கொண்டவளின் கெஞ்சல்.
“டீல் பேசறப்ப யோசிக்க முடியாது. ”
சிக்கிக் கொண்டவளின், காதல் மனம் சில்லுச் சில்லாய் உடைந்தது.
“நீ முடிவு எடுக்கலைன்னா? ” என்று சொல்லி, அமைச்சர் எழுவதற்கு யத்தனித்தார்.
“சரி… சரி… ஒத்துக்கிறேன்” – சட்டென்று சயனா.
“என்ன ஒத்துக்கிற? தெளிவா சொல்லு”
அவள் உடைந்ததை உணர்ந்து, அதை அவர்கள் உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்.
“நீங்க சொன்னதுக்கு” – உத்தேசமாகச் சொல்லிப் பார்த்தாள், சயனா.
“நாங்க என்ன சொன்னோம்?? ”
உத்தேசமாக வேண்டாம், உறுதியாகச் சொல் என்பது போல் கேள்வி.
“சக்திவேலோட உயிர எடுக்கனும். அதான?? பண்ணிரலாம். நீ என்ன பிளான்னு சொல்லு??”
என் உறுதியைச் சோதிக்கும், எந்த உணர்வுக்கும், என்னிடம் இடமில்லை.
ஆதலால் வந்த பதில், இது.
கனகா மேம் மற்றும் இருவர் கூட்டணி, அவளை விதிர்த்துப் போய் பார்த்தனர்.
“யோசிக்கனும்மா?? இல்ல இப்பவே சொல்றியா?? ” – இது அவள் முறை.
“பர்ஸ்ட், ஸ்பாட் பிக்ஸ் பண்ணலாம். ” – அமைச்சர்.
“இவன் ஏரியா போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற இடம்தான் ஸ்பாட். எந்த ஸ்டீர்ட்னு நாளைக்குச் சொல்வான்”
“ம்ம்ம்”
“சக்திவேல, அங்க எப்படியாவது வரவைக்கனும். அதுக்கப்புறம், நீ அவன ஷூட் பண்ணற”
” ம்ம்ம் ”
“உடனே, இவனுக்குப் போஃன் போட்டு இன்பார்ம் பண்ணிடு ”
” ம்ம்ம் ”
“அடுத்த அரை மணி நேரத்துல, இவன் போலீஸ் ஸ்டேஷன்லருந்து ஆள் வந்துருவாங்க. அவங்க ஏதாவது ஒரு கேஸ் போட்டு… தப்பிச்சி ஓடப் பார்த்தான்… அதான்லதான் ஷூட் பண்ணனோம்னு சொல்லிடுவாங்க”
” ம்ம்ம் ”
“காலையில எல்லா பேப்பரிலும், இந்த நியூஸ் வந்துரும். உனக்கும் எனக்கும் டீல் ஓகே ஆயிடும்”
“இன்னுமா இத நம்புறாங்க!! இல்ல இன்னுமா இதெல்லாம் நம்புறாங்க”
இங்கே உண்மையாக, இருவரின் மூளை யோசித்த விஷயத்தை வாய் பேசவில்லை!! அவர்களது திட்டங்கள் வேறு!!
“சரி என்னைக்கு? ” – சயனா.
” இன்னைக்கே”
“இன்னைக்கு கண்டிப்பா முடியாது. நாளைக்கு நைட்டு ஓகேவா”
” சரி, நாளைக்கு நைட், 2:00 டு 4:00 ”
“டைம் சரியில்ல. 4:00 மணிக்கு பேப்பர், பால் போடற ஆளுங்க வர ஆரம்பிச்சிருவாங்க. ஸோ, 1:00 டூ 3:00”
“சரி”
“ஆனால் அந்த ரோடுல, ஏதாவது வெகிக்கிள் வந்தா?? நான் மாட்டுவேன்ல”.
யோசித்தார்கள்…
“நான் ஒரு ஐடியா சொல்லவா?? – சயனா.
“ஒரு டிராபிக் போலீஸ் வச்சி,11:00 மணிலருந்து, அந்த ரோட்லல எந்த ஒரு வண்டியும் நுழையாம டைவர்ட் பண்ணச் சொல்லுங்க”
” சரி.. ”
“ரோட்ல கடை ஏதும் இருந்தா? ஐ மென்ட் 24 அவர்ஸ் ஷாப்”
“அன்னைக்கு நைட்டு என்னோட ஸ்டேஷன் கான்ஸ்டபில்ல வச்சி, அந்தமாதிரி கடை எல்லாத்தையுமே குளோஸ் பண்ணச் சொல்லிறேன்”
“ஓகே. பட், ரொம்ப முக்கியமானது. எனக்கு வெப்பன் யூஸ் பண்ற ரைட்ஸ் கிடையாது”
“அதைப்பத்தி நீ கவலைப் பட வேண்டாம். உனக்கு ஹன் எடுத்துத் தர வேண்டியது என் வேலை ” – காவல்.
“தென் ஓகே ”
“சக்திவேல எப்படி வர வைப்ப??”
“அது என்னோட வேலை. நான் பார்த்துப்பேன் ”
“உன்னை எப்படி நம்புறது? ”
“இந்தக் கேள்விய நானும் கேட்கலாம். நீ என்னைய நம்பித்தான் ஆகனும் ”
“நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட” – நரித்தனமான நகைப்புக்கள்.
“போதும். இதோட முடிச்சுக்கலாம். கிளம்புங்க” – நாகரிக வெளியேற்றல்.
டெபாசிட் இழந்த அமைச்சரும், கைதான காவலும் கிளம்பினர்.
*******
இருவர் கூட்டணி சென்றுவிட்டது.
தனியாக இருந்த, சயனாவின் அருகில் கனகா மேம் வந்து அமர்ந்துகொண்டார்.
“என்னடா?? இப்படி ஆயிருச்சி”
சில்லாகிச் சிதறிப்போன மனதை, சீக்கிரமாய் சரி செய்து கொள்ளும் அமைதியில், சயனா.
“பேசாம, ரேவ் சொன்ன மாதிரி கம்ப்ளைன்ட் கொடுப்போமா? ”
“அது முடியாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்ல”
“சரி, சக்திய கொல்.. இப்படிப் பண்றதுக்கு எதுக்கு ஒத்துகிட்ட”
“நான் இல்லன்னா, கண்டிப்பா வேற யாரையாவது வச்சி இந்த வேலையைப் பண்ணுவாங்க. நான் இருந்தாதான், சக்தியக் காப்பாத்த முடியும். அதான் ஒத்துக்கிட்டேன் ”
” கஷ்டமா இருக்கா?? ”
“அவனுங்க சக்தியோட உயிரைக் கேட்டதும், ‘ஓகே, எடுத்துத் தரேன்னு’ சொன்னது, என்னோட கேரியர் லைஃப். ” – சயனா.
“????” – கனகா மேம்
“சக்தியோட உயிரை, அவனுங்ககிட்ட இருந்து காப்பாத்த நினைக்கிறது, என்னோட லவ் லைஃப்” – சயனா.
“????” – கனகா மேம்.
“ரெண்டையும் போட்டுக் குழப்பிக்க மாட்டேன்” – சயனா.
காதலனும், காதலும் இதைக் கேட்டால், காதை மூடிக்கொண்டு, காத தூரம் சென்றிருப்பார்கள்.
இப்படிச் சொன்னாலும், அவள் குழம்பிக் குமுறிக்கொண்டிருந்தாள். காதலனும் காதலும் இதைப் பார்த்தால், அவளைக் கட்டியணைத்து
ஆறுதல் சொல்லும்.
அப்போது அறைக்கதவைத் திறந்து கொண்டு, காலைக் காஃபியுடன் உள்ளே வந்தாள், ரேவ்.
இருவரின் முன்னேயும், காஃபி கோப்பைகளை வைத்தவள், எதுவும் சொல்லாமல் சென்றாள்.
“ரேவ், தேங்க்ஸ்” என்றாள் சயனா.
ஆனால் ரேவ் எதுவும் பேசவில்லை. சென்று விட்டாள்.
உள்ளே எரிந்துகொண்டிருந்த காதல் கனலை, மேலும் எரியச் செய்யும், சூட்டிலிருந்த காஃபியை உறிஞ்சிக் கொண்டாள், சயனா.
“சயனா அழனும்னா, அழுதுறுடா”.
சயனாவின் நிலையைப் பார்த்ததும், நிலைகொள்ளாமல் தவித்த கனகா மேம்.
“அழலாம் வரல”
“உன்னப் பார்த்தா அப்படித் தெரியல”
“விடுங்க மேம். கண்ணீர்தான! இங்கதான இருக்கும். எங்க போயிடப் போகுது. ”
இனி சீராகச் சிந்திக்க முடியாது. சிக்கல்களுக்கு ஊடேயே சிந்திக்க வேண்டும்.
“என்ன பிளான்டா? ” – மேம்.
“இப்போதைக்கு எதுவும் தெரியல.” – சலிப்படைந்த சயனா.
காஃப்பியைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே மூளைக்குள் வேலை நடந்து கொண்டிருந்தது..
யுக்தியின் வரிசையில் இருப்பவர்கள், மூன்று பேர்தான். அமைச்சரின் துரோகி, அந்த பில்டர் சில பத்திரிக்கைகள்.
ஆனால், இவர்களால் எந்த அளவு தனக்கு உதவ முடியும்?? என்று தெரியவில்லை.
முதலில் தேர்வு செய்த யுக்தி பில்டர். அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.
“மேம் ஒரு நிமிஷம்” என்று சொல்லி, வெளியே சென்றாள்.
பில்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நூறு சதவீதம் நம்பிக்கை இல்லை.
இருந்தும், கேட்டுப் பார்த்தாள்.
கெஞ்சியும் பார்த்தாள்.
பலன் பூஜ்யம்.
திரும்பவும் உள்ளே வந்து விட்டாள். முகத்தில் வாட்டம் தெரிந்தது.
“என்னாச்சி சயனா?”
அப்படியே, நாற்காலியில் அமர்ந்து, பின்னோக்கி தலை சாய்த்துக், கண் மூடிக் கொண்டாள்.
“என்னடா?”
“சப்போர்ட்டுக்கு ஆள் வேனுமா! சாட்சியே சப்போர்ட் கேக்குது. நான் என்ன செய்ய?” – அதே நிலையில் சயனா.
சிறிது நேரம் யோசித்தார்கள்…
முடியவில்லை… காலைப் பசி காதை அடைத்தது.
திரும்பவும் உள்ளே வந்தாள், ரேவ்.
“மேம், சாப்பிட வாங்க” என்று ரேவ் அழைத்து விட்டுச் சென்றாள்.
“இவ ஏன் மேம் இப்படிப் பண்றா? ” – தன்னிடம் பேசாமல் சென்ற, ரேவைப் பார்த்து, சயனா.
“நீ திட்னேல்ல. அதான். நீ வாடா, வந்து சாப்பிடு”
இருவரும், ரேவின் அறைக்குச் சென்றனர்.
இட்லி வில்லையை விழுங்கும்போது, வேதனையினால் விக்கி நின்றது. இருந்தும், வியூகம் அமைக்கும் வேளையாதலால் விருவிருவென விழுங்க ஆரம்பித்தாள்.
திடீரென்று கனகா மேம்…
“சயனா, நீ எந்தக் கேஸப் பத்தி யோசிக்கிற?”
“என்ன திடீர்னு?”
“சொல்லேன்”
“இங்க ஒரே கேஸ்தான். கனலினி மேமோடது”
“நான் சக்தியோடதுனு நினைச்சேன் ”
“இங்க தப்ப, எப்ஐஆர் போட்டு ரிஜிஸ்டர் பண்ணாதான் தப்பு. இல்லன்னா வெறும் சம்பவம்தான்.”
மீண்டும் யோசித்தார்கள்…
“சயனா எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நான் சொன்னேன்ல ஹையர் அபிஷியல்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு”
“ஐயோ மேம், எதச் சொல்லி ஹெல்ப் கேட்பீங்க”
“டிஜிபிகிட்ட போஃன் பண்ணி, இந்தக் கேஸ சிஐடி டிபார்ட்மென்ட்க்கு மாத்தச் சொல்றேன். எக்ஸ்பியஸ்லி நமக்கு ”
“பிரபு அண்ணேகிட்ட ஹெல்பா? முதல நம்ம கேட்கலாமா? ஐ மென்ட் நம்ம இன்சியேட் பண்ண முடியுமா? ”
“சும்மாவே இருக்கிறதுக்கு ஏதாவது டிரை பண்ணுவோம்”
“ஆனா, இது சாதாரண கேஸ். இத எதுக்கு சிஐடி டிபார்ட்மென்ட்க்கு மாத்தனும்னு அண்ணே கேட்பாரு”
“நான் பார்த்துக்கிறேன் ” என்றவர், டிஜிபிக்கு அழைப்பைத் தொடுத்தார்.
அழைப்பின் பின்னர்….
“குட் மார்னிங் கனகா. என்ன காலையே கால் பண்ணிருக்கீங்க”
“குட் மார்னிங் பிரபு. ஒரு சின்ன ரெக்வஸ்ட் பிரபு”
“சொல்லுங்க கனகா ”
கனலினி கேஸ் பற்றிய, எல்லா விஷயத்தையும் சொன்னார்.
“இதெல்லாம் ஒரு கேஸ்னு என்கிட்ட கொண்டு வர்ரீங்க. இது அந்த ஸ்டேஷனிலேயே முடிய வேண்டியது”
“இல்ல பிரபு”
“இந்தக் கேஸ்க்கு, எதுக்கு சிஐடி ஆபீசர்ஸ்? ஒரு கவர்மெண்ட் ஆபீஸர் லஞ்சம் வாங்கி இருக்காங்க. இது நார்மல் கேஸ் ”
“பிரபு இதுகுள்ள பெரிய விஷயம் இருக்குது. புரிஞ்சுக்கோங்க”
“கண்டிப்பா முடியாது. இது சாதாரண கேஸ். அதோட நீங்க எப்படி ரெக்வஸ்ட் கொடுக்கமுடியும்?? ”
“பெரிய கையெல்லாம் இதுல இருக்குதுனு சயனா சொல்றா. நீங்க மட்டும் மாத்தினா, கண்டிப்பா எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் ”
“சயனா இருக்குதா? அதுகிட்ட போஃன் கொடுங்க”
கைப்பேசி சயனாவின் கைகளில்…
“சொல்லுங்க அண்ணே”
“நீதான் சொல்லனும். எதுக்கு இந்த தேவையில்லாத வேலை ”
“அண்ணே, யாருமே ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்னா, நான் என்ன பண்றது ” – வெறுமையின் உச்சத்தில் சயனா கத்தினாள்.
“என்ன ஹெல்ப் வேனும் சொல்லு? எதுலயாவது மாட்டிருக்கீங்களா? ” – டிஜிபி அல்லவா? புரிந்து கொண்டார்.
“அதெல்லாம் அப்புறம் சொல்லுறேன். ரெண்டு நாள்ல டிரன்ஸ்ஃபர் பண்ணுங்க. ரெண்டு நாளைக்கு அப்பறமா, நானே எவிடென்ஸோட வந்து உங்கள பார்க்கிறேன் ”
“எவிடென்ஸ் இருந்தா, இப்பவே கொண்டு வந்து கொடு. நான் அபிஸ்யலா என்ன பண்ணனுமோ பண்றேன்”
“அண்ணே ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்து கொடுக்கிறனே? புரிஞ்சுக்கோங்க ”
“சரி, ட்ரான்ஸ்பர் பண்ண மாட்டேன். பட் இந்த மாதிரி ஒரு ரெக்யூஸ்ட் இருக்குன்னு எடுத்துக்கிறேன்”
” ஏண்ணே இப்படி? ”
“ரெண்டு நாள் கழிச்சு எவிடென்ஸ் வரலைன்னா, ஸ்டேஷன்லதான் கேஸ் இருக்கும் ”
“சரிண்ணே, ஆனா ஸ்டேஷன்ல இதப் பத்தி எதுவும் பேசிக்காதீங்க”
“அதெல்லாம் எனக்கும் புரியுது. பட், எங்கயும் மாட்டிக்கிட்டயா?? ”
“இல்லன்னு சொல்ல முடியலண்ணே. ஆனா நானே பார்க்க வேண்டியது. அதனால, நீங்க எதுவும் செய்ய வேண்டாம்”
“கேர்ஃபுல்லா இரு. இதைத் தவிர வேற எதுவும், நான் செய்ய முடியுமா? ”
“இல்லண்ணே. வச்சிறேன்”
கைப்பேசியை கனகா மேம் கைகளில் தந்தாள்.
“ஒத்துக்கிட்டாரா?” – கனகா மேம்.
“எவிடென்ஸ் வேனும்னு சொல்றாரு”
“அதான் நீ சொன்னேல. ”
“என்ன சொன்னேன்?? ”
“டூ டேய்ஸ்ல எவிடென்ஸோட வரேன்னு ”
“எப்போ?”
” இப்போ பிரபுகிட்ட ”
“ப்ச். அது ப்ளோவ்ல வந்துருச்சி. அத சீரியஸா எடுத்துக்காதீங்க ”
“ஹேய், என்ன சொல்ற? டிஜிபிகிட்ட சொல்லிருக்க”
“விடுங்க மேம். எவிடென்ஸ் கிடைக்கும்”
சிறிது நேரம் விட்டுவிட்டு, திரும்பவும் யோசிக்க ஆரம்பித்தனர்…
“சரி அடுத்த பிளான் என்ன?? ”
“அடுத்த பிளான் என்னனா? ” என்று யோசித்தவள்…
“எனக்கு இந்த போலீஸ் மேல செம்ம கோவத்துல இருக்கிற, ஒருத்தர் வேனும் ”
“???? ” – கனகா மேம்.
“அவனப் பார்த்தாலே அடிச்சி, துவைச்சி, பொரட்டி எடுக்கிற மாதிரி கோவத்துல இருக்கிற ஒரு ஆள் வேனும்”
“அது நீதான்”
“விளையாடாதீங்க. நான் என்னயத் தவிர கேட்டேன்”
“அப்ப உன் லவ்வர், சக்திவேல்”
இதைக் கேட்டவுடன், ரேவ் மேசை மீது அடித்தாள்.
“அவளும் இருக்காளாம். அதச் சொல்லனு பீல் பண்றா? ” – சயனா.
“இல்ல, சக்திய உன்னோட லவ்வர்னு சொன்னேன்ல. அதான் ”
சிரித்தனர் சயனா, கனகா மேம்.
சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
“மேம், ஜோக்ஸ் அபார்ட், அவனோட ஸ்டேஷனலயே அப்படி ஒரு ஆள் இருக்கனும்” – சயனா.
“பீட்டர் “- இது ரேவின் குரல்
” என்ன பீட்டர்? ” – மேம்.
“பீட்டர்னு, அந்த ஸ்டேஷன்ல ஒருத்தர் இருப்பாரு. அவருக்கும் இந்தப் போலீசுக்கும் ஆகவே ஆகாது”
“பீட்டர் பத்தி, உனக்கு எப்படி தெரியும்” – சயனா.
ரேவ் பதில் சொல்லவில்லை.
‘நீங்க கேளுங்க, மேம்’ என்று சைகை செய்தாள், சயனா.
“ரேவ், பீட்டர் பத்தி…. ” என்று கனகா மேம் ஆரம்பிக்கும் போதே….
“ஹேக்கர் பத்திப் பேப்பர்ல இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணது நான்தான. ”
“ஆமாம்” – மேம்.
“அப்ப, எல்லா பேப்பர்லயும் கனலினி பத்தித் தப்பா எழுதினப்ப, சில பேப்பர்ல, அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிதான் எழுதிருந்தாங்க.”
” ஓ”
“எல்லாரும் ஒரே மாதிரி எழுதினப்ப, ஒருசிலர் மட்டும் வித்தியாசமாக எழுதுறாங்கனா?? எப்படின்னு யோசிச்சேன்? ”
“ம்ம்ம்”
“அப்போ, அந்த ஸ்டேஷன்ல இருந்து, யாரோ ஒருத்தர்தான், இதப் பத்தி சொல்லியிருக்கனும். விசாரிச்சப்ப தெரிஞ்சதுதான், இந்தப் பீட்டர். அவருதான் பிரஸுக்கு இன்பர்மேஷன் கொடுத்திருக்காருனு தெரிய வந்தது ”
“சூப்பர்” – சயனா.
“அப்போ, பீட்டர் நமக்கு ஹெல்ப் பண்ணுவாருன்னு தோனுது ” – மேம்.
“கண்டிப்பா மாட்டாரு. ” – ரேவ்.
“ஏன்? ”
“ஏன்னா?? அவர் ரொம்ப நியாயவாதி. உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாரு” என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியேறினாள், ரேவ்.
“பாருங்க மேம், என்மேல எவ்வளவு கோபம்னு? ”
“சரி… சரி… விடு ”
“நாம போயி பீட்டர பார்ப்போமா? அவர நம்பலாமா? ”
“நம்பித்தான் ஆகனும். வேற ஆப்ஷன் இல்ல. போலாம், ஆனா இப்ப வேண்டாம். நைட்டு ”
“உன் ப்ளான் என்னடா?? சக்திவேல எப்படி வரவைக்கப்போற? ”
‘தெரியல’ என்பது போல் தலையசைத்து, மேசையின் மேல், தலை சாய்த்துக் கொண்டாள்.
********
காவலர் பீட்டர் வீடு
நன்றாக இரவு நேரமாக இருந்தது. சயனாவும், கனகா மேமும் பீட்டர் முன்னே நின்று கொண்டிருந்தனர்.
வந்த விஷயத்தைச் சொன்னவுடன், பீட்டர் கையெடுத்துக் கும்பிட்டார்.
“என்ன இப்படி பண்றீங்க?” என்று கனகா மேம்தான், அவரது கைகளை இறக்கி விட்டார்.
“சொல்லுங்க மேம், நான் என்ன பண்ணனும்?? ”
“அந்தப் போலீஸ் மேல, உங்களுக்கு எதுக்கு இவ்வளவு வெறுப்பு வந்தது” – சயனா.
“நீங்க சந்தேகப் படுறீங்களா?”
“ச்சே ச்சே அப்படியில்ல. கனலினி மேமோட ஏன் இந்த அட்டாச்மென்ட்? ஜஸ்ட் அந்த போலீஸ் மேல இருக்கிற வெறுப்பா…. ”
“இல்ல.. இல்ல.. நானும் நிறைய கேஸ் பார்த்திருக்கேன். ஆனா இந்தக் கேஸ் மனச ரொம்ப பாதிச்சிருச்சி. பொய்யான கேஸ். நான் உண்மை பக்கம்தான் எப்பவும்… ”
“ம்ம்ம்” – சஞ்சலமில்லா சயனா.
“அந்த அம்மா, நான் சொல்றது உண்மை. நான் எந்த தப்பும் பண்ணல. என்னைய நம்புங்கனு, எத்தனை தடவ சொல்லியும், யாரும் கேட்கவே இல்லை”
” ம்ம்ம் ” . – சஞ்சலமில்லா சயனா
” பாவமா, இருந்திச்சி ”
” ம்ம்ம் ” – சஞ்சலமில்லா சயனா.
“அதான்ம்மா, நான் பிரஸுக்கு நியூஸ் கொடுத்தேன். ஆனா பெருசா யூஸ் ஆகல”
“ம்ம்ம் ” – சஞ்சலமில்லா சயனா.
“அந்த மேடம் எப்படி கதறனாங்களோ? அதேமாதிரி அந்தப் போலீஸ்யும் கதற விடனும்”
“ம்ம்ம் ” – சந்தோஷமாக சயனா.
“இந்தம்மா உள்ளே இருந்து கதறினத, வெளியே நின்னு கேட்ட, அவங்க மகனுக்கு, எப்படி இருந்திருக்கும். சொல்லுங்க”
“ம்ம்ம்” – சட்டென்று சகலமும் சங்கடமான சயனா.
“தவிச்சுப் போயிருச்சி, அந்தப் புள்ள ”
” ம்ம்ம் ”
“என்கிட்ட கூட ஹெல்ப் கேட்டிச்சி. என்னால ஒன்னும் பண்ண முடியல. அந்தக் குற்ற உணர்ச்சி, எனக்கு உண்டு ”
” ம்ம்ம் ”
“அந்தப் புள்ளைக்கு, அதோட அம்மா மேல் ரொம்ப பாசம்னு, கூட நின்ன ப்ரண்ட்ஸ் சொன்னாங்க”
” ம்ம்ம் ”
“அந்தப் பையனோட தவிச்,…. ”
“ஒரு நிமிஷம்” என்று சொல்லிக் கொண்டு, ஓரமாக ஒதுங்கி கொண்டாள்.
அதன் பின், சயனாவிற்குத் தன்னைச் சாதாரணமாக காட்டிக் கொள்ள முடியவில்லை
ஒருவனது காயங்கள், தன்னுள் ஏன் இத்தனை நேயங்களைக் கொடுத்தது என்று புரியவில்லை??
சட்டென சயனாவின் இதயம் இறும ஆரம்பித்தது.
தன்னுள் பிரளயம் ஏற்படுத்தியவன், தன்னைப் பின் தொடர்கிறான் என்று தெரிந்தது.
தான், இங்ஙனம் வெறுமை கொள்வதைக் கண்டு, தன்னவன் எங்கனம் பெருமை கொள்ள முடியும் என்று தோன்றியது!!
ஒரு ஆழ்மூச்செடுத்து, ஆழக் குழி தோண்டி புதைத்தாள், தன் காதல் துடிப்புக்களை!!
அதற்குள், ” சயனா, போதும் வா” என்றார் மேம்.
சயனா வந்துவிட்டாள்.
“கனலினி மேடத்துக்குக் கண்டிப்பா நியாயம் கிடைக்கனும். அதுக்காக நான் ஏதாவது செய்ய முடியும்னா?? நிச்சயமா செய்றேன்” – பீட்டர்.
“நீங்க மட்டும்தான், செய்யறதுக்கு இருக்கீங்க அண்ணே”
“சரி ப்ளான் சொல்லு” – கனகா மேம்.
“சொல்லுங்க மேம்” – பீட்டர்.
“அய்யோ அண்ணே, நீங்க என் பேர் சொல்லிக் கூப்பிடுங்க.”
“சரிம்மா..”
“உங்களுக்கு ஆட்டோ ஓட்டத் தெரியுமா?”
“ரொம்ப நல்லா தெரியாது. ஆனா ஓட்டிருவேன்”
“சரி. நான் சொல்ற இடத்துக்கு நாளைக்கு, ஒரு ஆட்டோ எடுத்துட்டு வரனும். ”
“சரிம்மா ”
“நாளைக்கு உங்களுக்கு போன்ல சொல்றேன், எந்த ஏரியானு?
“சரிம்மா”
“ஆட்டோ புதுசா இருக்க வேண்டாம். வெளியிலிருந்து பார்க்கிறப்ப, ஓடாத கண்டிஷன்ல இருக்கிற மாதிரி தெரியனும். ஆனா, ஒர்க்கிங் கண்டிஷன்ல இருக்கனும்”
“சரிம்மா”
“நீங்க, அந்த ஆட்டோவுக்குள்ளயே ஒளிஞ்சிக்கோங்க. அப்பத்தான் யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க”
“யாரும்மா?”
“தெரியலண்ணே…நிஜமா தெரியல”
“என்னம்மா இப்படி சொல்ற… ”
“நான் எதுவும் மறைக்கலண்ணே. ஆனா எனக்கு நிஜமா தெரியாது” – அவளது இன்றைய நிலை.
” நீ மேல சொல்லு ”
“ஏதாவது ஒரு சத்தம் கேட்டவுடனே, நீங்க வரனும். அந்த மாதிரி ஒரு மைன்டல இருந்துக்கோங்க ”
“சரிம்மா”
“பீல்டுல நாம ரெண்டு பேரும் மட்டும்தான் இருப்போம். இப்ப வரைக்கும் இவ்வளவுதான் பிளான் ”
“சரிம்மா ”
“உங்க ஸ்டேஷன்ல யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்”
“புரியுதும்மா. உண்மை ஜெயிக்கப் போகுதுனு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது. ”
“… ”
“இன்னும் ஒரு மாசத்துல ரிட்டையர்ட் ஆகப் போறேன்மா. இப்படி ஒரு நல்ல விஷயம் பண்ணிட்டு ரிட்டையர்ட் ஆகிறது நினைச்சா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“….. ”
“நியாயமா இருந்தா என்னைக்காவது ஜெயிக்கலாம். இல்லையாம்மா? ”
“சரிண்ணே” என்று கிளம்பிச் சென்றவள், பாதி தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்தாள்.
“ஒன்னு கேட்கனும்” என்று, தலையைச் சொரிந்து கொண்டு வந்து நின்றாள்.
“சொல்லும்மா?”
“நீங்க பொய் சொல்வீங்களா? ” – உண்மையிடம் கேள்வி கேட்கப்பட்டது.
நன்றாகவே யோசித்தார்.
“எத்தனை பொய் சொல்லனும்? ” – உண்மையே கேள்வி கேட்டது.
“ஒன்னு ரெண்டுதான் சொல்லனும்”
கொஞ்சம் யோசித்தார்.
” ட்ரை பண்றேன்ம்மா ”
“இப்படிச் சொல்லாதீங்க அண்ணே. உங்களால முடியலனா, நான் வேற மாதிரி யோசிப்பேன்”
“… ”
” சொல்ல மாட்டீங்களா? ”
“ஒன்னு ரெண்டு ஓகே. அதுக்கு மேல முடியாதும்மா”
“தேங்க்ஸ்ண்ணே ” என்று சொல்லி விடை பெற்றனர்.
கனகா மேம், சயனா.. இருவரும் அவர்களது வாகனங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.
“ஸாரி மேம், ரேவ் இல்லாததால… நீங்க பீல்டுக்கு.. ”
“அதைவிடு, உன்னோட பிளான்தான் என்ன? பீட்டர் எதுக்கு இதுல?? அவர்கிட்ட என்னெல்லாமோ சொல்ற? எனக்குப் புரியல சயனா? ”
“தெரியல மேம்”
“தெரியும். ஆனா சொல்ல மாட்ட. உனக்கு ஏதாவது ஆயிருமோனு பயமா இருக்குடா”
“ச்சே ச்சே… நெவர்”
“இல்லடா. இது இப்போ வந்த தாட் இல்ல. இந்த கேஸ் ஸ்டார்ட் ஆகிறப்ப வந்தது”
“இல்ல மேம். நீங்க கிளம்புங்க. நாளைக்கும் சில விவரம் கலைக்ட் பண்ணனும். நானும் கிளம்புறேன். பை குட் நைட். ”
விடை சொல்லாமல் விடை பெற்றாள்.
******
என்பீல்ட் பொதுவான வேகத்தில்…
நல்ல இருளான இரவாகிப் போன சாலையில், சயனா.
சற்றென்று இதயமும், என்பீல்டின் இன்ஜினும் இறும ஆரம்பித்தன.
வாகனத்தின், பொதுவான வேகம் மிதமான வேகத்திற்கு மாற்றப்பட்டது.
காதலி என்பீல்டின் அருகாமையில், காதலனின் ராயல், வந்து சேர்ந்து கொண்டது.
சக்திவேல் – சயனாவின் காதலன்.
தற்போது இரு வாகனமும் இதமான வேகத்தில்…
அண்டத்தின் உள்ளே…
ஆகாசத்தின் கீழே…
அஞ்சன இரவின் பிடியிலே
தார் சாலையின் தனிமையிலே…
தலைக்கவசத்தின் உள்ளே காதல் முகங்கள்…
தலைக்கவசத்தைத் தாண்டி, அங்கே காதல் தெரிந்தது….
இருவருக்கிடையே காதல் விபத்து நடந்தது. இரு இதயமும் அடிபட்டுக் கொண்டன.
காதலி, காதலின் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும், காதலனைக் கிறுக்குப் பிடிக்க வைத்தாள்.
திடீரென்று காதலி என்பீல்ட் வேகம் எடுத்துக் கொண்டு, முன்னேறிச் சென்றது. அந்தச் சாலையின் முனைக்குச் சென்றதும், அதே வேகத்தில் அரைவட்டமடித்து திரும்பிக் கொண்டு, காதலன் என்பீல்ட் எதிரே வந்து நின்றது.
காதலன் காதலி எதிரெதிரே, காதல் நடுவே…
சிறிது காதல் இளைப்பாறல்கள்…
ஆக்ஸிலேட்டரை உறுமச் செய்தது, காதலி என்பீல்ட். அச்சுப்பிசறாமல், அதே சுருதியில் உறுமிக் காட்டியது காதலன் என்பீல்ட்.
இது காதல் கச்சேரிகள்…
ஒலி வடிவக் காதலுடன், ஒளி வடிவக் காதல் சேர்ந்தது…
காதலன், காதலி என்பீல்டின் முன் விளக்குகள் எரிந்து, அணைந்து. மீண்டும் எரிந்து அணைந்து… வெளிச்சக் காதல் பேசின.
இது காதல் ஒலியும் ஒளியும்…
இப்போது கச்சேரியில் சுருதி கூட்டிட, என்பீல்டின் ஒலிப்பான்கள்…
ஆக மொத்தத்தில், சாலை முழுவதும் காதல் ஆராரோக்கள்…
ரசித்தான் காதலன்…
சிரித்தாள் காதலி…
இவையாவும் காதலர்களின் சிறுபிள்ளைத்தனங்கள்.
“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? தூங்கிற நேரத்துல வந்து, உயிர வாங்கிக்கிட்டு..” இன்னும் இன்னும் சாலையோர சாமானியனின் குத்தல்கள்…
உடனே இரு என்பீல்டும், கிளைச் சாலையை விட்டுவிட்டு… முக்கியச் சாலைக்கு வந்தன….
காதலி என்பீல்ட் முன்னே…
காதலன் என்பீல்ட் பின்னே…
தன்னைக் காதலன் பின் தொடர்கிறானா??? எனப் பார்த்துக் கொண்டே, காதலி…
திரும்பத் திரும்ப திரும்பல்கள்.
எதிரே வந்த வண்டியின் மேல் உரசி நின்றது காதலி என்பீல்ட்.
முதன் முதலாக சயனா என்பீல்ட் தடுமாறியது. கவனம் காதலனிடம் இல்லை.
“சயனா பார்த்து ..” பதறினான் சக்தி.
“ஏய்! இன்னா பார்த்து வரமாட்ட… எம்மா பெரிய ரோடு. இதுலயே உள்ளாற வந்து உட்டுக்குனு நிக்கிற”
“ஸாரி அண்ணே… ஸாரி அண்ணே மன்னிச்சிக்கோ”
சில திட்டல்கள்.
பல மன்னிப்புகள்.
சக்தி, தன்னால் சயனா தடுமாறித் தடம்புரள்கிறாள் என நினைத்து, தன் தடம்மாறிச் சென்றான்.
திரும்பிப் பார்த்தாள், சயனா…
சக்தி சற்றே தூரமாக…
கண்களில் ஒருவித காதல் கோபம் கொண்டு, “சக்தி.. சக்தி” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கத்தியபடி இரு கால்கள் ஊன்றி எழுந்து நின்றாள், சயனா.
உள்ளுக்குள் சாகாத காதல் ஆசைகள் இருக்குதடி, ‘சகியே சயனா’ . அதனை நான் உணர்த்திட, நீ உணர்ந்திட.. இதுவல்ல தருணம்.
எண்ணங்கள் இப்படி இருந்திட, சரெலென சக்தியின் என்பீல்ட் அரைவட்டமடித்து திரும்பி நின்றது.
இந்தமுறையும், அவளைத் தவிக்க விட்டுச் செல்ல, அவனால் முடியவில்லை.
என்பீல்டிலிருந்து இறங்காமலே இரு கால்களையும் ஊன்றி, எழுந்து நின்றான், சக்தி.
சயனா பார்க்கின்றாள்!!
சாலை விளக்கொளியின் அடியில், மிகப் பெரிய இடைவெளியில் காதலர்கள்…
சக்தி பரிதவித்தான்!!
பின்னர், இரு உள்ளங்கையை, தன் இதழ் மேல் ஒற்றி எடுத்து, சயனாவை நோக்கி நீட்டினான்.
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்
உள்ளமுதே!! கண்ணம்மா!
– தூரத்து முத்தமும் சயனாவும் சக்தியும்!
தலைக்கவசம் தாண்டி காதல் தெரிந்தது.
சற்று நேரம் நீடித்தது.
போய் விட்டான், சக்தி.
போதவில்லை சயனாவிற்கு.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி, வீட்டை வந்தடைந்தாள். அத்தனை கோபம்.
யாரிடமாவது பேசவேண்டும் என்று தோன்றியது.
முதல் முதலாக காதல் கிரகத்திற்கு சயனா தூது அனுப்பினாள்.
“ஹலோ”
“ஹேய் ட்டேபீ, என்ன சொல்லிட்டு நீ போஃன் பண்ணிருக்க. என்கூட பேசாம இருக்க முடியலையா??” – காதலின் மொத்தக் கொஞ்சல்கள்.
“ப்ச். அப்படியெல்லாம் இல்ல ”
“முதல்ல இதச் சொல்லிக்கிறேன். டோன்ட் மிஸ்டேக் மீ”
“என்ன??”
“ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ மை டியர் ட்டேபீ ”
” ம்ம்ம்”
“என்ன டல்லா இருக்க?? அந்த ஹேக்கரா?”
“எப்படிக் கண்டுபிடிச்ச?”
“இன்னைய தேதிக்கு, உன்னோட கேஸவிட பெரிய பிராப்ளம் ஒன்னு இருக்குதுனா, அது அவன்தான். ”
அவள் சிரிப்பாள், என நினைத்துக் காதல் சொல்லியது.
“சிரிக்ககூட முடியலயே, கூஃபி? ”
“ஏம்மா? என்னாச்சி சயனா?? ”
“கூஃபி, கிளம்பி வர்றியா?? எனக்கு, நீ என் பக்கத்தில உட்கார்ந்து, என்கிட்ட பேசனும்னு தோனுது…… ”
காதல் கிரகத்தின் அழைப்பு, இன்னும் துண்டிக்கப்படவில்லை…
காதல் தொடரும்…