Kvi-16

Kvi-16

அதீத வலியாலும், அவர்களது அடுத்த முயற்சியாலும், தன் கட்டுப்பாட்டை இழந்தாள், சயனா.

தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி, துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தாள்.

அவளுக்கு உருவங்கள் இருந்தது, ஓரளவே தெரிந்தது.

முட்டியின் கீழாவது சுட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், என்று நினைத்தாள்.

முதலில் பின்புறம் இருந்த உருவம் மீது ஒரு துப்பாக்கிச்சூடு…

பின் முன்புறம் இருந்த உருவங்கள் மீது இரு துப்பாக்கி சூடுகள்…

துப்பாக்கியால் சுட்ட பின்னும், அவள் வெளியே வரவில்லை. அந்த மரத்தின் மறைவில் ஒளிந்தே இருந்தாள். திரும்பவும் செவியைக் கூர்மையாக வைத்துக்கொண்டு கேட்டாள். எந்தவொரு காலடிச் சத்தமும் கேட்கவில்லை.

அதன்பின்னரே, மறைவில் நின்றவள் வெளியே வந்தாள்.

தான் மூன்று பேரைச் சுட்டு வீழ்த்தி இருக்கின்றோம், என்ற குற்றவுணர்வு மேலோங்கி இருந்தது. அதிகாரத்தின் சூழ்ச்சியால், அதிகாரிகள் சூழலில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.

முதலில் கனலினி, அடுத்து ரேவின் அவமானம். இப்போது, தானும் அந்த வரிசையிலா??.

துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டது.
பீட்டர் வந்தார்.

வரும் வழியில் கிடந்த இரண்டு உருவங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு உருவத்தின், அருகில் கிடந்த துப்பாக்கியைக் காலால், சற்று தூரம் தள்ளி விட்டு வந்தார்.

அவருக்கு, அந்த உருவங்களைப் பற்றி யோசிக்க இயலவில்லை. மனம் முழுவதும் ‘சயனாவிற்கு என்ன ஆகியிருக்குமோ??’ என்று பதட்டம் கொண்டது.

பீட்டர், பணி ஓய்வு பெரும் வயதிலும், பதறிப்போய் ஓடி வந்து சயனாவின் அருகில் நின்றார்.

அவர் கண்டது…
சயனாவின் இடது தோள்பட்டையில் இருந்து குருதி வழிந்ததை!!

நிலை குலைந்து விட்டார் மனிதர். ‘என்ன செய்வது’ என்று தெரியாமல், கற்சிலை காட்டிடும் கவலையாய், அவர் முகம்.

அடுத்த நொடியே சுதாரித்தார்.

“சீக்கிரம் வா, ஹாஸ்பிட்டல் போலாம்” – குரலில் ஒரு உரிமை தெரிந்தது.

“ஏமாத்திட்டானுங்க அண்ணே, நல்லா ஏமாத்திட்டானுங்க” – அவரின் அந்த உரிமை, அவளை உலறச் செய்தது.

“மூனு பேர சுட்டிருக்கேன். வேலை போய்டுமோனு தோணுது”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ பர்ஸ்ட் ஹாஸ்பிடலுக்கு வாம்மா” – குரலில் அத்தனை வற்புறுத்தல்.

“அண்ணே, இந்த வேலைய ‘அது’ எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்திச்சி தெரியுமா?? ”

” ‘அது’ னா, யாரும்மா?? ”

“என் அம்மா ”

” ஓ”

“இப்போ, எல்லாம் போகப் போது”

அவர்களிடம் இருந்து சற்று தொலைவில் கிடந்த, இரண்டு உருவங்களைப் பார்த்தார்.

“அவங்க உன்னய சூட் பண்ண வந்தாங்களா?? ”

‘ஆமாம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

“எனக்கு கேட்கவே இல்லையே”

“சைலன்சர் கன் போல” – மனதின் வலி வார்த்தை வழியே வந்தது.

“திருப்பி, அவங்கள சூட் பண்ணியா? ”
அதற்கும் ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினாள்.

” உன் கைல கன் எப்படி வந்தது??”

“உங்க ஸ்டேஷன்லருந்து போலீஸ் எடுத்துக் கொடுத்தான் ”

“அதான் ஏன்??”

“சொல்ல முடியாதுண்ணே. அத மட்டும் கேட்காதீங்க”

“அவன்கிட்ட மாட்டிக்கிட்டயா?? ”

“ம்ம்ம்…நல்லா”

“அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்பவே சொல்லிருக்கலாமே. நான் கொஞ்சம் அலர்ட்டா இருந்திருப்பேன்ல”

அதுவரை எந்த அசைவும் இன்றி உதடுகள் மட்டும் அசைந்து, பதில் சொல்லியவள், அவரைப் பார்த்தாள்.

‘நான், உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கவே இல்லை’ என்று அவள் மனக்குரல் சொல்லியது.

“சரி வா ஹாஸ்பிடல் போலாம். நான் கூட்டிட்டுப் போறேன்”

‘இல்லை, வர முடியாது’ என்பதுபோல அழுத்தமாக நின்றாள்.

சயனா, சங்கடத்தின் உச்சத்தில் இருந்தாள்.
விடியப் போகும் வானத்தை நோக்கி, இருளாகிப் போன தன் வாழ்வை நினைத்து ‘அம்மா’ ஆங்காரமாய் கத்தினாள்.

அதற்குமேல் அவளின் கவலையைக் காண முடியவில்லை, பீட்டரால்.

நியாயத்திற்காக போராட வேண்டும் என்று நினைத்தாள். அநியாயத்தின் சூழ்ச்சியில் அகப்பட்டுக்கொண்டு, உள்ளே அழுகிறாள்.

ஏற்கனவே ஒரு பெண் அதிகாரி, இதுபோல அதிகாரத்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகினாள். அதுவும் தன் கண்முன்னே நடந்தது.

இன்று இன்னொரு பெண் அதிகாரி. இவளும் சிக்கித் தவிப்பதற்கு, அவர் விரும்பவில்லை.

அவளுக்குத் தன்னால் ஆன மட்டும் உதவியைச் செய்ய வேண்டும், என்று அந்தக் கணம் முடிவெடுத்தார்.

சயனா, கையில் பிடித்திருந்த துப்பாக்கியை வாங்கினார்.

வான்நோக்கி பார்த்த அவளது முகம், துப்பாக்கியை வாங்கிய முகத்தைப் பார்த்தது.

“அன்னைக்கே சொன்னேன்ல, ரெண்டு பொய் சொல்லுவேனு. அதுல, இது ஒன்னு.”

‘பீட்டரால், எனக்கு எந்தப் பயனும் இல்லை’ என்று சொல்லிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது.

அவரின் இந்த முடிவால், அவள் மனம்
கூசியது.

“நீ, யோசிமா… யோசி.. உன்கூட நான் நிக்கிறேன்.”

இழந்த நம்பிக்கை துளிர்விடும் போல தெரிந்தது, அவளுள்.

“அன்னைக்கு, என்னால தனியா நியாயத்துக்காக ஒன்னும் பண்ண முடியல. இன்னைக்கு உன்கூட சேர்ந்தாவது, அதக் காப்பாத்த பார்க்கிறேன்”

உண்மை, நியாயம் என்று இருந்த மனிதரையே, இப்படிப் பேச வைத்திருக்கிறார்கள், என்றால் என்ன சொல்லுவது??.

ஆனால், அவர் வார்த்தை அவளுள் புதிய உற்சாகம் கொண்டு வரச் செய்தது.

‘யோசி சயனா, இது முடிவல்ல’ என்று மதி மன்றாடியது, மனதிடம்.

‘அவர்களை முடிக்க வேண்டும்’ என்று அவள் முடிவெடுத்து விட்டாள்.

“அண்ணே, அந்தப்பக்கம் ஒருத்தனை சுட்டேன். உயிரோட இருக்கானானு பாருங்க” – திரும்பவும் சயனாவாகிய சயனா !!

“நான் இவங்கள பார்க்கிறேன்” என்று முன்புறம் இருந்த அடியாட்கள் பக்கம் முன்னேறிச் சென்றாள்.

‘இவளுக்கு வலி தெரியாதா?’ – இது இரவின் குரல்.

போகும் போதே…
“அண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல. அதனால கவனமா இருங்க”

“சரி, நீயும் கவனமா இரு ”

சயனா, சுற்றிப் பார்வையைச் சூழல விட்டுகொண்டே, அடியாட்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.

வேறு எங்கேயும் மறைந்து ஆட்கள் இருக்கிறார்களா?? என்ற பயம் வேறு. அதே பயம் பீட்டருக்கும் இருந்தது.

இரவின் மடியில் இருளில் பிடியில், யாரும் ஒளிந்திருக்கவில்லை. பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அது இருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஏற்கனவே தன்னால் அவளைக் கை காயத்திலிருந்து காப்பாற்ற முடிய வில்லை. இனிமேல் இது போன்ற நிலைக்கு, அவளைத் தள்ளக்கூடாது என்று நினைத்தார். அவரது முழுக் கவனமும், சயனா மீதே இருந்தது.

முதல் அடியாளின் பக்கம் வந்து பார்த்தாள். அவனது வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியின் தோட்டா துளைத்திருந்தது. உயிரும் பிரிந்திருந்தது.

‘என்ன முட்டாள்தனம் செய்தேன்’ என்று தன் புத்தியின் மீது கோபம் வந்தது, சயனாவிற்கு.

‘சரி, விடு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அடுத்த அடியாளைப் பார்த்தாள். அவனுக்கு முழங்காலின் கிழே தோட்டா துளைத்ததிருந்தது. ரத்தம் சிறிதளவே வெளியேறி இருந்தது.

உயிரோடு இருக்கிறானா?? என்ற சந்தேகத்தில், அவனின் நாசியின் அருகே விரல் வைத்துப் பார்த்தாள். கைகள் நடுங்கின.

அவன், மயக்கத்தில் இருக்கானா?? உயிரோடு இருக்கின்றானா? சயனா நன்றாக சோதிக்க ஆரம்பித்தாள்

அதே நேரத்தில் பீட்டர் சயனாவின் பின்புறம் இருந்த உருவம் நோக்கிச் சென்றார். அதுவும் அசைவில்லாமல் கிடந்தது. அந்த உருவம் இருந்த இடம் சற்று இருள் விழுங்கிய இடமாய் இருந்தது. அருகில் சென்று தோளை தொட்டுப் திருப்பி பார்க்கலாம் என்று, நகர்ந்தார்.

ஆனால் அதற்குள்…

“பீட்டர் அண்ணே” – சயனா குரல்.

“அண்ணே.. அண்ணே இங்க வாங்க” என்று சயனா கத்தினாள்.

அவ்ளோதான்.
பீட்டரால், அங்கு அசைவற்று கிடந்த உருவத்தின் மீதுச் சரியாகக் கவனம் செலுத்த இயலவில்லை. அதன் அசைவின்மை காரணமாக, ‘உயிர் இல்லை’ என்று முடிவுக்கு வந்து விட்டார்.

சாயனவை நோக்கி ஓடிவந்தார்.

“என்னம்மா? ”

“இவனுக்கு உயிர் இருக்கு. உயிர் இருக்கு”

‘அவளுக்கு ஏன் இத்தனை சந்தோஷம்??’ என்று பீட்டருக்குத் புரியவில்லை.

“கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வாங்க அண்ணே”

பீட்டர் சுற்றித் திரும்பிப் பார்த்தார். எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு சிறிய உணவு விடுதியின் வெளியே, உடைந்த, அழுக்கான குடத்தில் தண்ணீர் இருந்தது.

ஓடிச்சென்று அந்தக் குடத்தை எடுத்துக்கொண்டு வந்தார்.

சயனா, இரு கைகளாலும் தண்ணீர் எடுத்து, அந்த அடியாள் முகம் மீது தெளித்தாள்.

சற்று நேரத்தில், அவன் மயக்கத்தில் இருந்து தெளிந்தான்.

பீட்டர், தன்னிடம் இருந்த தூப்பாக்கியை, அவன் தலைக்கு நேரே பிடித்துக்கொண்டார்.

விழித்துப் பார்த்தவனுக்கு புரிந்து விட்டது. தான் இவர்களிடம் மாட்டி கொண்டோம் என உணர்ந்தான். அவன் விழிகளில் மரண பயம் தெரிந்தது.

அந்தப் பயத்தைக் கூட்டும் அளவிற்கு, கடும் கோபத்தில் சயனாவும் பீட்டரும் நின்றிந்தனர்.

அமைச்சர் சொன்னது நியாபகம் வந்தது. ‘எஸ்கேப் ஆகிறது ரொம்ப முக்கியம்’ என்ற அவரது வார்த்தைகள் காதில் ஒளித்துக் கொண்டே இருந்தன.

ஆனால் ‘இனிமேல் எப்படி? ‘ என்ற வாதம் வந்தது .

முதலில் அவன் கைகளைக் கட்ட வேண்டும். சயனா சுற்றும் முற்றும் பார்த்தாள். அதே உணவு விடுதியின் முன்னே கிடந்த துணி தெரிந்தது.

“அண்ணே பார்த்துக்கோங்க. இதோ வரேன்” என்று, அதனை எடுக்கச் சென்றாள்.

எடுத்து வந்தவள்…

அவனை எழுந்து வந்து, அருகில் இருந்த மரத்தில் சாய்ந்த அமருமாறு கட்டளை இட்டாள்.
அவனுக்கு இனி வேறு வழி இல்லை. சொன்னதைச் செய்தான் .

அவன் மரத்தில் சாய்ந்து அமர்ந்ததும், அவனது கைகளைப் பின்புறமாக கொண்டு வந்து, அந்தப் பழைய துணியால் இறுக்கிக் கட்டினாள்.

பீட்டர், இன்னும் தூப்பாக்கியை அடியாள் நோக்கிக் குறி பார்த்தே பிடித்திருந்தார்.

நன்றாக இறுக்கி கட்டி முடித்ததும், கைகளில் இருந்த தூசியைத் தட்டி விட்டுக்கொண்டே, பீட்டரின் அருகே வந்தாள்.

இருவரும், அடியாள் கட்டப்பட்ட, மரத்தின் பக்கமிருந்து, தள்ளி வந்து நின்று கொண்டனர்.
கண் பார்வை முழுவதும், அவன் மேல் இருந்தது.
ஆனால், அவர்கள் பேசுவது அவனுக்கு கேட்க முடியாது.

“அண்ணே அந்தப்பக்கம் பார்த்தாச்சா?”

“ம்ம்ம், பார்த்தாச்சி. அவன் கொஞ்சம் கூட அசையவேயில்லை”

“சரி விடுங்க, போறான்”

அதற்கு மேல், அந்தப் பின்புறம் இருந்த அடியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இந்தக் கணம், அது அவர்களுக்குத் தேவையும் இல்லை. பீட்டருக்கும் திரும்பப் போக விருப்பமில்லை. காரணம், அவளை அந்தக் கணம் கூட தனியாக விட மனம் வரவில்லை.

அவருக்கு மனம் மட்டுமே வேலை செய்தது. சயனாவிற்கு மூளை மட்டுமே வேலை செய்தது.

“ஏதாவது பிளான் இருக்காமா?”

“மூனு பேர்தானா?? வேற யாரும் இருக்காங்களா ??”

“தெரியலையே. போய் தேடவா ??”

“ச்சே, ச்சே வேண்டாம். நான் அதுக்கு கேட்கல. அலர்ட்டா இருக்கனும். அதுக்காக சொன்னேன்”

“சரிம்மா. என்ன பிளான் சொல்லு?”

“அண்ணே, என்னய கொல்றதுக்கு பிளான் போட்ருக்கானுங்க .சரியா”

” ம்ம்ம் ”

“அப்போ பிளான் முடிஞ்சவுடனே, இவனுங்க போய் ரிப்போர்ட் பண்ணனும்”

“ம்ம்ம் ”

“அதுக்கு, ஏதாவது டைம் இருக்கும். ஒன் அவர் இல்லன்னா டூ அவர்னு”

” ம்ம்ம் ”

“இவனுங்க, இங்க இருந்து போலனா, ரிப்போர்ட் பண்ண முடியாது ”

” ஆமா”

“ஸோ போஃன், இங்க வரும் ”

” ஓ”

“அந்தப் போஃன் கான்வெர்ஷேசன் நமக்கு உதவும்னு நினைக்கிறன் ”

“ஓ! ஆனா யார் கால் பண்ணுவா? அமைச்சரா இல்ல போலீசா?? ”

“உங்க போலீஸ் இருக்கான்ல, போலீஸூ. அவன் சரியான டைம்ல, தப்பான முடிவு எடுப்பான் ” – குரலில் அத்தனை நய்யாண்டி தெரிந்தது.

அவரும் புன்னகைத்தார்.

“வாங்க வெயிட் பண்ணலாம்”

இருவரும், மரத்தில் கட்டப்பட்டிருந்த அடியாளின் அருகில் சென்றனர். அந்தத் தார் ரோட்டில், அவன் முன்பு அமர்ந்து கொண்டாள்.

என்ன திட்டம் என்று தெரியமால் குழம்பினான், அடியாள். கொலை செய்யப் போகிறார்களா? என்ற உயிர் பயத்தில், முகம் வேர்த்தது.

‘ஏதோ!! விருந்துக்கு வந்தவள் போல் உட்கார்ந்திருக்காளே!’ – அடியாளின் மனக்குரல்.

‘ஏய்! அவள் விருந்துக்கு வரவில்லை, வேட்டையாட வந்தவள்.’ – இது இரவின் குரல்.

பீட்டருக்கு, வேறு எந்த ஞாபகமும் வரவில்லை. திரும்பிப் போய் பின்புறம் கிடக்கும் அடியாளைச் சோதிக்க வேண்டும் என்று, அவர் யோசிக்கவேயில்லை.

சயனாவின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ?? என்று பயந்தார். ஆதலால் துப்பாக்கியைக் கையில் ஏந்தி நின்று, அவளைச் சுற்றி வந்தபடியே இருந்தார். இன்னும் எத்தனை பேர் வருவார்களோ? என்ற பயம் வேறு.

ஒரு தாய் கோழி, தன் குஞ்சுகளை எப்படிக் காக்குமோ? அப்படி இருந்தது, அவரது பாதுகாப்பு.

அதே நேரத்தில், சயனா அமர்ந்து இருக்கும் தோரணையைக் கண்டு வியந்து போய் நின்றார்.

உடல் முழுக்க வேர்த்துக் கொட்டியது. கைகளில் இருந்து இரத்தம் வடிந்து முடித்து, உறைந்து விட்டிருந்தது. அவளது வெள்ளைச் சட்டை சிவப்பாக மாறியிருந்தது.

‘இவளுக்கு வலிக்காதா! ‘ – இது இரவின் குரல்.

அவளைப் பார்க்கும் பொழுது, அவருக்குள் குற்றவுணர்வு வந்தது. தன்னால், தன் கண் முன்னே நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லை. ஆனால் இவளோ, என்றோ நடந்த அநியாயத்திற்கு, இன்று நியாயம் கேட்டுப் போராடுகிறாளே என்று!

தன்னால், என்ன உதவி செய்ய முடியுமோ, அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

சயனாவும், அவரின் பாதுகாப்பை உணர்ந்தாள். ‘யார் இவர்? எதற்காக என்னை இப்படிக் காக்க வேண்டும்’. சில மனிதர்களைப் ‘போகிற போக்கில், சந்தித்த மனிதர்கள்’ என்று கடந்து போக முடியாது. ஆதுபோல் பீட்டரும், சயனாவின் வாழ்வில்.

சற்று நேரத்தில்….
சயனாவின் கணிப்பு நடந்தது.
அடியாளின் அலைபேசி அலறியது.
சயனா, தன் கைக்களில் இருந்த கைப்பேசியைத் தூக்கிப் பீட்டரிடம் காண்பித்தாள்.

பீட்டருக்கு தெரிந்தது, அது காவலின் கைப்பேசி இலக்கங்கள், என்று.
பீட்டருக்குப் புரிந்தது.
பீட்டர், அடியாளின் அருகில் சென்று, நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தார்.

சயனா, அடியாள் முன்னே சென்று கைப்பேசியை பிடித்தாள்.

“உயிர் மேல ஆசை இருக்கா??” – புருவங்கள் மேலேற, கண்கள் அலட்சியம் காட்ட, குரலில் எள்ளல் துள்ள, சயனா கேட்டாள்.

‘ஆமாம்’ என்பது போல் பயம் கொண்டு தலையாட்டினான்.

“அப்போ, நான் சொல்ற மாதிரி பேசு” – குரலில் அழுத்தம்.

“என்ன பேசனும்னு சொல்லுங்க”

“உங்க போலீஸ் கேள்வி கேட்கட்டும், அதுக்கு நான் என்ன பதில் சொல்லச் சொல்றேனோ, அதச் சொல்லு”

“சரி, சரி ஆனா, என்னய ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனும்” – அடியாள் என்றாலும், அவனும் மனிதன் தானே!

எல்லா மனிதனுக்கும் உயிர் பயம் உண்டு!

“ம்ம்ம் கண்டிப்பா. ஆனா, நீ இப்ப அடியாள் இல்ல அப்ரூவர், ஒகேவா”

” ம்ம்ம் சரி.”

இதற்குள், கைப்பேசி அழைப்பு நின்றுவிட்டு, திரும்பவும் அழைப்பு தொடரப்பட்டிருந்தது, காவலின் தரப்பிலிருந்து.

இம்முறை கைப்பேசி அழைப்பு ஏற்கப்பட்டது.
ஸ்பீக்கரில் கைப்பேசி.
மற்றும் அந்தப் பேச்சுவார்த்தை பதிவும் செய்யப்படுகிறது…

காவலில் பேச்சுக்கள் முதன் முதலில் முக்கியம் என்றானது, சயனாவிற்கு.

சயனாவிற்கு உள்ளுக்குள் உதறல் இருந்தது, ‘என்ன பேசப் போகிறானோ என்று!’

“ஹலோ” – காவல்.

“ஹலோ, சொல்லுங்க சார்” – அடியாள்.

“அந்தப் பொண்ண கொன்னாச்சா?”

‘எந்தப் பொண்ண?’ என்று சயனா சைகையால் கேட்கச் சொன்னதை கேட்டான், அடியாள்.

“அதான் அந்த சிஐடி ஆபிசர் சயனா”

“சுட்டாச்சு”- இதற்கும் சயனா ‘ஆமாம்’ என்று சைகை செய்திருந்தாள்.

“சரி, நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிடுங்க”

“சரி சரி” என்று சொல்லு என்பது போல் கண் அசைத்தாள், சயனா.

“என்னோட கன்ன எப்போ என்கிட்ட தருவீங்க?? ”

‘அடுத்த ஒரு மணி நேரத்தில்’ என்று தன் மணிக்கட்டின் கடிகாரத்தைப் காட்டிச் சைகை செய்தாள், சயனா. அவளது முகத்தில், லேசான அலட்சியப் புன்னகை வந்தது.

“அமைச்சரோட கன்ன எப்போவேனாலும் கொடுங்க. ஆனா என்னோட கன் எனக்கு உடனே வேணும். திருப்பி வைக்கலன்னா பிரச்னை ஆயிடும்.” – காவல் தன் பெயரில், தானே எப்ஐஆர் போட்டது.

“சரி ” – பெரு விரலைத் தூக்கிச் சைகை செய்திருந்தாள், சயனா.

அத்துடன் அழைப்பைத் துண்டித்தாள்.

பீட்டரும், சாயனவும் ‘கைஃப் பைவ்’ வேறு செய்து கொண்டார்கள்.

வான் நோக்கி தலை நிமிர்ந்து, தன் கையை இதழ் மீது வைத்து, எடுத்து ஒரு முத்தத்தை நீட்டினாள். அது அவள் அம்மாவிற்கு!!

திரும்பவும், பீட்டரும் சயனாவும் தனியே சென்றார்கள்.

“இப்போ என்னம்மா செய்ய??”

“அண்ணே, இவன கவர்மென்ட் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போங்க.”

“ம்ம்ம்”

“பத்திரமா சரியா”

“ம்ம்ம்”

“உங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து, யாராவது உங்களுக்கு உண்மையா இருப்பாங்கள அண்ணே, அவங்கள கூப்பிட்டுக்கோங்க.”

“ம்ம்ம்”

“அதேசமயம் உங்க போலீஸ் ஸ்டேஷன்ல, ஏரியால இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்குனு மட்டும் சொல்லுங்க”

” ம்ம்ம் ”

“ஆனா, எப்ஐஆர் போட வேண்டாம் ”

” ஏம்மா?? ”

“முதல்ல டிஜிபிகிட்ட பேசனும். டிஜிபியே எப்ஐஆர் போடச் சொல்லனும். அப்பத்தான் கேஸ் ஸ்டார்ங் ஆகும்”

சிறிது நேரம் பேசினாள்.

“அண்ணே புரிஞ்சதா?? நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லுங்க”

“நீ, இந்த ரோட்ல வர்றப்போ, உன்னயக் கொலை பண்ணப் பார்த்தாங்க. ஏன்னா, நீ இந்த கனலினி கேஸ எடுத்திருக்க. ”

“திரும்ப கைல எடுத்திருக்க, அப்படிச் சொல்லுங்க”

“சரிம்மா சரி. அது இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவங்களுக்குப் பிடிக்கல”

“ம்ம்ம் ”

“அதான், உன்னய சுடப் பார்த்தாங்க. பட், குறி தவறி உன்னோட தோள்ல பட்டுப் போயிருக்கு. அடுத்த குண்டு மரத்தில பட்டிருக்கு”

“ம்ம்ம், கரெக்ட்”

“நான் ரௌண்ட்ஸ்க்கு வர்றப்போ, இதைப் பார்க்கிறேன்.”

“நம்புவாங்களண்ணே, இந்த ரௌன்ட்ஸ் மேட்டர”

“இந்த ஏரியா, எங்க ஸ்டேஷன் கீழ்தான் வருது. ஸோ, பிராப்ளம் இல்ல ”

” ஓ, சூப்பர் ”

“உன்னய காப்பாத்த, அவனுங்க கூட நடந்த போராட்டத்துல, அவனுங்கள நான் சுட வேண்டியதாப் போயிருச்சி ”

“வேண்டாம் அண்ணே, இதுமட்டும் வேண்டாம். நான் சுட்டத்தாவே இருக்கட்டும் ”

“பேசாம இரு.” – உரிமையுடன் கண்டித்தார்.

அவள் கட்டுப்பட்டாள்.

“அதுல ரெண்டு பேர் ஸ்பாட்லயே இறந்தாச்சு. ஒருத்தன் அப்ரூவர். ஹாஸ்பிட்டல்ல இருக்கான். ஒகேவா”

” ஓகே அண்ணே”

“நீங்க, அவனை அட்மிட் பண்ணிட்டு டிஜிபி ஆபீஸ் வாங்க. நான் அங்கதான் இருப்பேன்.”

“ஏய்! முதல நீ ஹாஸ்ப்பிட்டல் போற. அப்புறம்தான் டிஜிபி ஆபீஸ் ”

“சரிண்ணே” என்று, சிரித்து சிரித்து தலையை ஆட்டினாள்.

‘இவளுக்கு வலிக்கவில்லையா’ – இதுவும் இரவின் குரல்.

“பிரபு அண்ணேகிட்ட பேசறப்ப, நீங்க உங்க பார்ட் மட்டும் சொல்லுங்க ”

“சரி… சரி ”

“நான், என்னோட சைடு சொல்லுவேன்”

” சரிம்மா ”

“கண்டிப்பா, போலீஸ் பேசுவான். அத நானே சமாளிச்சிப்பேன்”

” சரிம்மா. போதும் ஹாஸ்பிட்டல் போ”

“இருங்க அண்ணே, அமைச்சர் பேர நாம சொல்ல வேண்டாம் ”

“ஏன்மா? ”

“அமைச்சர் பேர், இந்த ரெக்கார்டிங்ல இல்ல. ஸோ நாம பேர் சொல்ல வேண்டாம். ”

” ஓ”

“பில்டரோ, போலீஸோ சொல்வாங்க. இல்லன்னா சொல்ல வைக்கனும்”

” பில்டர் வருவாரா ”

“வர வைப்பேன். காலைல டிஜிபி முன்னாடி தான், இந்த கேஸ் முடியப்போகுது”

” ம்ம்ம் ”

“நம்ம ரெண்டு பேரும், அதைப் பார்க்கத்தான் போறோம்”

வெற்றி பெற்ற உணர்வு இருவரின் முகத்திலும், தாண்டவம் ஆடியது.

பின், இருவரும் சேர்ந்து, அந்த அடியாளின் கைக்கட்டை அவிழ்த்து, ஆட்டோவில் ஏற்றினர்.

ஏற்றுவதற்கு முன்பு…

“ஆமா இந்த ரெண்டு கன்னும் எப்படி உன்னோட கைக்கு வந்தது”

” அதான் போலீஸ் சொல்லிட்டார்ல” – அடியாள் காவல் மீது நம்பிக்கை வைத்திருப்பான் போல! குரலில் ஏமாற்றம் மற்றும் காவலின் மீது கோபம் தெரிந்தது.

“நீ சொல்லு” – சயனா.

“ஒன்னு அமைச்சர் தந்தாரு, இன்னொன்னு போலீஸ் தந்தாரு”

“போலீஸ் பேரு சொல்லு” – இங்கும் அமைச்சர் பெயரை, சயனா கேட்கவில்லை. அவளின் ‘டார்கெட்’ காவல்தான்.

தெளிவாய் பெயர் சொல்லி விட்டான், அடியாள்.

ஏற்றிய பின்….

” நீயும் வாம்மா ” – பீட்டர்.

“இல்லண்ணே. நம்ம வண்டியே போதும். நான் அதுலயே போயிருவேன்”

அதற்குமேல், பீட்டர் சயனாவை வற்புறுத்தவில்லை.

துப்பாக்கிகளை, பீட்டர் எடுத்துக் கொண்டார். அமைச்சர் கொடுத்த துப்பாக்கியில், கைரேகை படாமல் பார்த்துக் கொண்டார். டிஜிபியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆட்டோ கிளம்பிச் சென்றது.

*********

‘ஏதோ யோசித்து.. ஏதோ நடந்திருக்கு’ என்று நினைத்துக் கொண்டே நடந்து வந்தாள். நடந்ததை டிஜிபியின் முன்னிலையில் எவ்விதமாகச் சொல்லப்படப் போகிறது என்பதிலே, இந்த வழக்கின் வெற்றி இருக்கிறது, என்று நினைத்தாள்.

என்பீல்ட் அருகே வந்தாள், சயனா.
ராயலின் மீது ஏறியவள், அதனைச் உறுமச் செய்ய உதைத்தாள்.
என்பீல்டு உறும மறுத்தது.

டிஜிபியின் முன் நடக்கப் போகும், விசாரணையைத் தனக்குள்ளேயே ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள்.
மீண்டும் உதைத்தாள்.
என்பீல்டு உறும மறுத்தது.

வழக்கு வெற்றியடைந்தால் சக்தி, ‘எப்படி உணர்வான்?’ என்ற நினைப்பு வந்தது.
காலால் ஓங்கி உதைத்தாள்.
என்பீல்டு உறும மறுத்தது.

காவல் சொன்னது நியாபகம் வந்தது.
‘நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிடுங்க’ – இதற்கு என்ன அர்த்தம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

‘அப்போ மூன்றாவது நபர் யார்?’ என்று யோசித்தபடியே உதைத்தாள் .
என்பீல்டு உறும மறுத்தது.
இதயம் இரும ஆரம்பித்தது.

பின்புறமாக நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றி யோசித்தாள்.

அவன்தானே எப்பொழுதும் தன்னை பின்தொடர்கிறான்.
இதயம் இருமுகிறதே ‘சக்தியோ’ என நினைத்தாள்.

அவன்தானே எப்பொழுதும் பின் தொடர்ந்து வருகிறான். இங்கேயும் வந்து விட்டானா என்று நினைத்தாள். அந்த நினைப்பு, அவள் உயிரை எடுத்து விட்டது.

வண்டியிலிருந்து இறங்கினாள்.

“சக்தி… சக்தி..” என்று, தன் சக்தி தீர கத்தியபடி ஓடினாள் .

பின்புறமிருந்த உருவத்தின் திசை நோக்கி ஓடியவள், அதன் அருகில் சென்று, அமர்ந்தாள்.

நடுங்கிய கரங்களைக் கொண்டு, அந்த உருவத்தின் தோள்களைப் பிடித்துத் திருப்பினாள்.

சக்திதான். சயனாவின் சக்திவேல்.

தோட்டா துளைத்ததால், தொடைப் பகுதியில் இருந்து, குருதி கொட்டிக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில், அத்தனை உதவி செய்த பீட்டரின் மீதுகூட கோபம் வந்தது. அதுதானே காதல்!!

மூச்சை சோதித்துப் பார்த்தாள்.
சக்திக்கு உயிர் இருந்தது.
அந்தக்கணத்தில், சயனாவின் உயிர் வந்தது.

சட்டென்று யோசித்தவள், அந்த இடத்திலிருந்து எழுந்து, தண்ணீர் குடம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றாள். தண்ணீர் எடுத்து வந்தவள், இரு கைகளாலும் அதை அள்ளி எடுத்து சக்தியின் முகத்தில் தெளித்தாள்.

சிறிய நொடிப்பொழுதில், சக்திக்கு உணர்வு வந்தது. விழித்தவன், அருகில் இருந்த சயனாவைப் பார்த்தான்.

சக்தியின் கண்களில், காதல் கிரகத்தின் ஒட்டு மொத்த காதலும் காட்டப்பட்டது.

“சக்தி.. சக்தி..” – காதலனைத் தூக்கி பிடித்துக்கொண்டாள், காதலி.

காதலியின் அருகாமையைக் காதல் கிரகமும், காதலும், காதலனும் உணர்ந்தனர்.

“எதாவது பேசு சக்தி??” – காதலியின் ஒட்டு மொத்த காதல் ஏக்கம், குரலில்.

காதல் கிரகத்தின் காதல், மௌனம் காத்தது.

“ப்ளீஸ் சக்தி, இதுக்கு மேல முடியாது” – காதலி யாசித்தாள்.

“கனலை விழுங்கிய என் இரும்பியே” – அந்த ‘ழ’கரத்தில், அவன் தந்த அழுத்தத்தில், அவள் அழுத்தம் கொண்டாள்.

சயனாவின் கண்கள், இரும்பை ஒத்த கடினமாய் மாறின. அது காதலன் மீது கனலை, வாரிக் கொட்டியது.

சக்தியோ, சயனாவின் தோள்பட்டைக் காயத்தைப் பார்த்தான் .

“என்னாலதான ட்டேபீ, உனக்கு இப்படி ஆயிருச்சி??” – காதல் வருந்துகிறது.

“இவளுக்கு வலிக்கிறது’ – இது இரவின் குரல்.

சக்திவேல் உச்சரித்த வார்த்தை ஒவ்வொன்றும், சயனா உணர்ந்து கொண்டிருந்த தோள்பட்டை வலியை விட பல மடங்காக இருந்தது.

“ட்டேபீ, எனக்கு உன்னய ரொம்ப பிடிச்சது” – காதலனால் உணரப்பட்ட காதல், காதலிக்கு உணர்த்தப்பட்டது.

காதலி எதையுமே உணரவில்லை. ஒன்றைத் தவிர. அது, காதலன் உணர்த்திய காதலின் ஏமாற்றம்!!

காதலன் குரலும், காதல் கிரகத்தின் உருவமும் ஒன்றுதான் என்று உணர்ந்த தருணம். ஆனால், அந்த உருவமோ குரலோ உணர்த்திடும் காதலை, காதலி உணர விரும்பாத தருணம்.

“எப்போ இருந்து.. ஏன்னு சொல்..” என்று சக்தி முடிக்கும் முன்பே, சயனா அவனைக் கீழே விட்டு விட்டாள்.

எந்த உயரத்தில் அந்தக் காதலனைப் பிடித்திருந்தாளோ, அதே உயரத்தில் இருந்து, அந்தக் காதல் கிரகத்தின் காதலைக் கிழே போட்டு விட்டு, வண்டியை நோக்கி ஓடினாள்.

“சயனா.. சயனா.. ” என்று காதல் யாசித்து, அழைத்துப் பார்த்தது.

error: Content is protected !!