KVI-3

KVI-3

கனகா மேம், சயனா மற்றும் ரேவ், இவர்களுக்கான சிறிய அலுவலகம். ஆளுக்கொரு அறை இருந்தாலும், முழு அலுவல் நேரமும் செலவிடுவது சயனாவின் அறையிலேயே. இன்றும் கனகா மேம், அங்குதான் இருந்ததார்.

‘ரேஸ் கார்’ வேகத்தோடு வந்து ராயல் பார்க் செய்யப்பட்டது.

பளபளத்த கண்ணாடிக் கட்டிடத்தில் பத்தாவது தளத்தில், சயனாவின் சாம்ராஜ்யம்.

அடித்தளப் படிக்கட்டின் முன்னே, சயனா மற்றும் ரேவ்.

“ரேவ், ரெடியா” – வாடிவாசல் திறந்ததும் சீறிப்பாயத் துடிக்கும் காளை போல்.

“இன்ட்ரெஸ்ட்டே இல்லை சயனா” – ரேவ்.

“இந்தா, இப்பதேன் படிக்கட்ட தொடச்சேன். வழுக்கி கிழுக்கி விழுந்திராதீக, பார்த்துப் போங்க” – இவர்களை நன்கு அறிந்த துடைப்பாளர்.

“சரிக்கா..சரி… நீ ரெடியா” – விடாமல் சயனா.

“விடமாட்டயே. ம்ம்ம் ரெடி”

அடுத்தக் கணம், இருவரும் படிக்கட்டுகளில் ஓட ஆரம்பித்தனர். இவர்களுக்குள் இது வாடிக்கையாகி போன விளையாட்டு.

அறைவாயில் வந்ததும், எந்த வித மூச்சிரைப்பின்றி கதவைத் திறந்து, சயனா முதலில் உள்ளே நுழைந்தாள். அதன் பின்னர் வியர்வை வழிய, மூச்சிரைத்ததுக் கொண்டு, ரேவ் நுழைந்தாள்.

“மேம், கால் வலிக்குது. இன்னைக்கும் என்னய லிப்ட்ல வர விடல” என்று, மூச்சுத் தவிப்புகளுக்கு இடையே, ரேவின் வார்த்தைகள் தடையுடன் வந்தன.

அவள் கவனிக்கத் தவறியது, அங்கே காவல்துறையும், பத்திரிக்கையும் இருந்ததை. பார்த்தவுடன், தயக்கம் கலந்து மூச்சுத் தவிப்புகள் வந்தன.

அநாவசியப் பார்வைகளுடன், “ம்ம்ம், இப்படித்தான் இருக்கனும். உங்கள நம்பி ஒரு கேஸக் கொடுத்தா ஓடிப் புடிச்சி விளையாடிக்கிட்டு” என்று ரேவின் முன்னே வந்து நின்றது போலீஸ்.

அநாவசியத்தை, அலட்சியப்படுத்தும் கனகா மேம்.

அநாவசியத்தை, அருவருப்பாக நினைக்கும் ரேவ்.

அநாவசியத்தை, அடக்க நினைக்கும் சயனா.

“ரேவ், நீ உன் ரூம் போய், ரெப்ரெஸ் பண்ணிட்டு வா” – சயனா.

“ஏய், நான் பேசிக்கிட்டு இருக்கேன்ல” – காவல்.

“ரேவ், நீ போ” – காவல்துறையைக் கண்டு கொள்ளாத சயனா.

அநாவசியப் பார்வையை, அவசியம் தவிர்க்க வேண்டும் என நினைத்தவள், தனது அறை நோக்கி ஓடிச் சென்று விட்டாள்.

சில நொடிகள் வீணாக்கப்பட்டன.

பிறை நிலா வடிவத்தில் போடப்பட்ட கண்ணாடி மேஜையினைச் சுற்றி வந்து அமர்ந்து கொண்டே, “வாங்க வந்து, உட்காருங்க” என்றாள் சயனா.

“ஏய், உன் மரியாதை, இங்க யாருக்கு வேனும். ”

“ரெண்டு பேரு நிக்கிறப்ப, உட்காருனு சொன்னா, எவென் உட்காரனும்னு தெரியாதலு. அதான்.. ” – வந்திருந்த இருவருக்கும் சுருக்கென தைத்தது.

“நீ ரொம்ப பேசற. இது உனக்கு நல்லதில்ல. இருக்கட்டும், கேஸப் பத்திச் சொல்லு” என்று கேட்டவாரு, வந்து அமர்ந்தனர்.

“அது ஈமெயில் ஐடி, பேங்க் யூஸர் ” என்று தொடங்கியதை, முடிக்கச் சொல்லும் வண்ணம்,

“இங்க பாரு, இதெல்லாம் வேண்டாம். ஆள் யாருன்னு மட்டும் சொல்லு” என்று போலீஸ் இடையே புகுந்தது.

“ரெண்டு நாளா எதுவும் யோசிக்க முடியல. ஸோ, வேல எதுவும் நடக்கல”

“அந்த ரெண்டு நாளு சம்பளம் வாங்காமா இருந்தியா?. வேலைக்கு வந்திட்டா, இதெல்லாம் சொல்லக் கூடாது ” – கடமை பேசும் காவல்.

“நான் ஒன்னு சொல்லட்டா ”

“என்ன?”

“உன் வேலைய மட்டும், நீ ஒழுங்கா பார்த்திருந்தா, இந்த கேஸ் எங்கிட்ட வந்திருக்காது ”

“சயனா ” – கனகா மேம்.

“பின்ன என்ன மேம், நான்தான் சொல்றேன்ல கண்டுபிடிச்சி தருவேனு. அப்புறமும் வந்து, இப்படி நின்னா? இந்த மாதிரிதான் பேச முடியும்”

“ரொம்ப திமிரா பேசுறல. ஐயா ஊருக்கு போயிருக்காரு.. ரெண்டு நாள் கழிச்சு திரும்பி வந்து, மீட்டிங் போடுறோம். அப்ப இருக்கு உனக்கு!!”

இவ்வாறு சொல்லிவிட்டு காவல்துறை கழன்று கொண்டது.

ஒரு எரிச்சல் மூச்சுடன், திரும்பினாள். அவளையே பார்த்தவண்ணம், பத்திரிகையாளர்.

“நீங்க இன்னும் போகலையா” – சயனா.

“இல்ல உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” – பத்திரிக்கையின் கேள்வி.

“சொல்லுங்க” என்றாள்.

“நான் இப்ப புதுசா நியூஸ் சேனலை தொடங்கி இருக்கேன்.”

‘இது வேறயா’ என்று நினைப்பு சயனாவின் எண்ணத்தில்.

“அதுக்கு உங்க ஹெல்ப் வேனும்”

“ரிப்பன் கட் பண்ணனுமா”

“இல்ல… இல்ல.. நீங்க விசாரிக்கிற, இல்லன்னா உங்க டிபார்ட்மென்ட்ல, வேற யாரும் விசாரிக்கிற கேஸ் டிடெயில்ஸ் தர முடியுமா? தந்தீங்கனா, அத சேனல டெவலப் பண்ண யூஸ் பண்ணிக்கிடுவேன். ” – பத்திரிக்கை தர்மம்.

“நீ பிரேக்கிங் நியூஸ் போட, நான் கன்டென்ட் கொடுக்கணுமா?” – ‘ப்ரேக்’ போடப்பட்டது, சேனலின் பிரேக்கிங் நியூஸிற்கு.

“அட, அப்படி இல்லம்மா”

“சரி, நீங்க கேட்கிற மாதிரி ஒரு நியூஸ் இருக்கு. சொல்லவா? ”

“சொல்லுங்க… சொல்லுங்க.. ”

“அமைச்சர் பணத்தை, யாரோ எடுத்து வரி கட்டிருக்காங்களாம். டெலிகாஸ்ட் பண்றீங்களா? டிஆர்பி சும்மாஆஆஆ பிச்சுக்கும்” – இது சேனலின் ‘டிஆர்பி’ காகவா? இல்லை ‘ஆர்ஐபி’ காகவா?

“அவன் சொன்ன மாதிரி, நீ திமிர் பிடிச்சவதான். இரு அமைச்சரோட வந்து உன்னயப் பார்த்துக்கிறேன்” என்று எழுந்து நடக்கத் தொடங்கியது.

“அதேதான், இனிமே இப்படி தனியா வராத. யாரையாவது துணைக்கு கூட்டிட்டு வா” – புயலாய் சயனா.

பத்திரிக்கை, புயல் காற்றில் பறந்தது.

‘கனகா மேம்’, சயனாவின் அருகில் வந்து அமர்ந்தார்.

“ஸாரி மேம், ரொம்ப பேசறான்ங்க. அதான் இப்படி”

“சரி விடு. ஆனா இந்த ரெண்டு நாளா, அந்த அமைச்சர் சைடுலருந்து எத்தனை போஃன் கால் வருது தெரியுமா? ”

” ஓ”

கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கனும். அவங்ககிட்ட அதிகாரம் மொத்தமும் இருக்கு. ஆள் யாருன்னு காட்டிட்டு, நாம போய்கிட்டே இருப்போம்”

“ம்ம்ம், சரி மேம்”

அறைக்கதவு திறக்கப்பட்டது. இருவர் குழு மூவவராக மாறியது.

‘ரேவ்தானா’ என்பது போல் பார்த்துக் கொண்டே, “யார் கொரியர் வாங்கினாங்க மேம்?” என்றாள்.

“நான், அந்த நேரம் இல்ல சயனா. செக்யூரிட்டிதான் வாங்கினாரு”

இன்டர்காமில், பாதுகாவலரை அழைத்தாள். அவரும் சில நொடிகளில் வந்து நின்றார்.

“அண்ணே, இத உங்ககிட்ட யாரு வந்து கொடுத்தாங்க”

“கொரியர் ஆளுதான்”

“ஃபார்ம்ல இருந்தாங்கள”

“புரியல மேடம்”

“இந்த கவர்ல இருக்கிற பேரு, அவங்க டிரஸ்ல இருந்ததா?” என்று, கொரியர் வந்த கவரைக் காட்டினாள்.

“ஆமா மேடம். அந்த ஆளோட டிரஸ்லயும் இருந்திச்சி. பேக்லயும் இருந்திச்சி”

“சரி, நீங்க போங்க அண்ணே” என்று அவரை அனுப்பி வைத்தாள்.

“ரேவ், இந்த கொரியர் ஆபீஸூக்கு போன் பண்ணி, கொரியர் எந்த ஏரியால இருந்து வந்திருக்குனு கேளு”

“அத கிராஸ் பண்ணிரவா? ”

“ம்ம்ம் ”

“சயனா, அப்படியே அம்மாவோட போஃனைக் கொடு”

“இப்போ எதுக்கு? ”

“கொடுன்னா கொடு”

“எதுக்கு?”

“அம்மா மனோகரை பத்தி, எத்தனை நாளைக்கு முன்னாடி இருந்து பேச ஆரம்பிச்சாங்க? ” கேள்விக்குப் பதில் கேள்வியே வந்தது.

“நான் என்ன வேல சொன்னேன்? நீ என்ன செய்ற, ரேவ்?”

“சொல்லு சயனா ”

“ஒரு எட்டு நாளைக்கு முன்னாடி இருந்து. இப்ப சொல்லு எதுக்குனு? ”

“அம்மா போஃன்ல எட்டு நாளைக்கு முன்னாடி இருக்கிற கால் கிஸ்டரியப் பார்த்து, அந்த நம்பருக்கு போஃன் பண்ணி மனோகரப் பத்திக் கேட்கப் போறேன்”

“சூப்பர்! கேஸூக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்”

“நீ முதல போன கொடு” – சிறுமியின் பிடிவாதமாய் ரேவின் சினுங்கல்.

“கொடு சயனா, அவதான் கேட்கிறால” – பெரியவராகி, சிறுமிக்கு ஆதரவாக.

அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல், கைப்பேசியை எடுத்து ரேவிடம் கொடுத்து, “நான் சொன்ன வேலையும் நடக்கனும் ” என்று கேட்டுக் கொண்டாள்.

“ம்உம்” – பிடிவாதம் தந்த பரிசை வாங்கிக் கொண்டு.

சயனாவிடம், கைப்பேசியை வாங்கிக் கொண்டு வெளியே சென்றாள். ஏழுட்டு நாட்களுக்கு முன்னர் இருந்த கால் உள்ள இலக்கங்களை எடுத்துக் கொண்டாள். ஒவ்வொருவருக்கும் அழைப்பை ஏற்படுத்தினாள்.

முதல் நான்கு இலக்கங்கள், இலக்கு மாறிப் போனது. அடுத்த அழைப்பு, அவளின் இலக்கைத் தொட்டது.

“ஹலோ”

“ஹலோ, நான் சயனாவோட ஃபிரண்டு பேசுறேன்.”

“யாரு”

“ரஞ்சிதம் ஆன்ட்டியோட பொண்ணு சயனா. அவளோட ஃபிரண்டு.”

“ஓ அவளா? சரி சொல்லும்மா, என்ன விஷயம்? ”

“ரஞ்சிதம் ஆன்ட்டி, சயனாவுக்கு ஒரு பையன் பார்த்தாங்கள. அதப் பத்தி.. ”

“ரஞ்சிதம் எங்க பார்த்தா? நான்தான பார்த்துக் கொடுத்தேன். அவங்களுக்கு எதுவுமே செய்யலையே, இதையாவது செய்யலாம்னு நினைச்சி செஞ்சேன் ”

“ஆங்… ஆங்… கரெக்ட். நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் ”

” சரி, அதுக்கு இப்ப என்ன? ”

” அந்தப் பையனோட போஃன் நம்பர் கிடைக்குமா? ”

“எதுக்கு? அதான் ரஞ்சிதம், அதோட பொண்ணு பிடி கொடுக்கலனு சொல்லுச்சில. இப்ப எதுக்கு போஃன் நம்பர் கேட்கற?”

“அது மொதல்ல. இப்ப, அவ ஒத்துக்கிட்டா. அதான் கேட்டேன் ”

“ஓ, ஆனா எனக்குத் தெரிஞ்சவங்க மூலம்தான் இது வந்துச்சி. அவங்ககிட்ட கேட்டுட்டு, ரஞ்சிததுக்கு போஃன் பண்ணிச் சொல்றேன்”

“இல்ல.. இல்ல.. ஆன்ட்டி.. ஆன்ட்டி, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இறந்துட்டாங்க. ”

“இறந்தாச்சா? இதக்கூட சொல்ல மாட்டாளா?”

“அந்த நேரத்தில எங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல. அதான் யார்கிட்டயும் சொல்லல”

“அதுக்காக, எங்ககிட்டயுமா? மரியாதை தெரியாத பொண்ணு”

“ப்ளீஸ்,அப்படியெல்லாம் பேசாதீங்க.”

“இப்ப, நான் என்ன செய்யனும். எனக்கு எதுக்கு போஃன் பண்ண? ”

“மனோகர, சயனாவோட நம்பருக்கு போஃன் பண்ணச் சொல்லனும். ப்ளீஸ் ப்ளீஸ், நீங்கதான் இந்த ஹெல்ப் பண்ணனும்”

“இவ்வளவு கேட்கிற, அதனால திரும்ப பேசிப் பார்க்கிறேன். நீ சயனா நம்பர் கொடும்மா” என்று இலக்கங்கள் வாங்கிக் கொண்டு, இணைப்பைத் துண்டித்தார்.

சயனா சொன்ன வேலையையும், சயனாவிற்கான வேலையையும் முடித்துவிட்டு சந்தோஷமாக உள்ளே வந்தாள், ரேவ்.

“இன்னும் ரெண்டு நாள்தான். கண்டிப்பா மனோகர், உனக்கு கால் பண்ணிருவான்” – ஏதோ பெரிய சாதனை புரிந்த, சந்தோஷ அலுப்பில் சயனாவின் முன் வந்து அமர்ந்தாள்.

எதிரே அமர்ந்திருந்த இருவரும், அந்த சந்தோஷ அலுப்பை, ‘அடிக்கும்’ பார்வைப் பார்த்தனர்.

“ஓ, ஸாரி. கொரியர் கொண்டு வந்தது, நம்ம ஏரியால இருக்கிற, கொரியர் ஆபிஸ் பையன்தான். போஸ்ட் பண்ண லோகேசன் சைதாப்பேட்” – வீட்டுப்பாடம் முடித்து விட்டேன் என்று சொல்லும் பிள்ளை போல்.

“சயனா போதும். அவ சொல்லிட்டால. இப்பவாது, அந்தக் கொரியர்ல வந்தத படி.”

“ஓகே மேம். நீங்க படிச்சாச்சா? ”

” ம்ம்ம், அதெல்லாம் எப்பவோ ஆச்சு”

‘கொரியர் காகிதம்’ மென்மையாககக் கையாளப்பட்டது. காகித உரையைத் திறந்தாள். உள்ளே ஒரே ஒரு சிறிய வெண்ணிற அட்டை மட்டும் இருந்தது. அதில்,

வாரிச்சுருட்டிய பணக்காகிதங்கள்

வரிக்கனலால் சாம்பலாக்கப்பட்டது!

என்று எழுதியிருந்தது.

இரண்டு வரிகள் என்று சொல்வது விட, நான்கு வார்த்தைகள் என்று சொல்வதே ‘வரிகளுக்கு’ செய்யும் மரியாதை.

திரும்பத் திரும்ப, அதில் எழுதப்பட்ட வார்த்தைகளை வாசித்தாள்.

“சயனா, நாலு வார்த்தைய எத்தனை தடவ படிப்ப? அத்தனை தடவ படிக்க, அது என்ன லவ் லெட்டரா?” – ‘சிச்சுவேஷன்’ தெரியாமல், சிதறின வார்த்தைகள், மேமிடமிருந்து.

‘லவ் லெட்டர்’ என்று வார்த்தையில் சயனாவின் மனம் லயித்து நின்றது.

“எத எதோட கம்பேர் பண்ணனும், உங்களுக்குத் தெரியாதா?” – சயனாவின் நின்ற மனதைப் பார்த்து, நிம்மதியின்றி ரேவ்.

“ஏன்? இதுல என்ன இருக்கு?” – மேம்

இதற்கிடையில், எதற்கென்றே தெரியாமல் சயனா சிரித்தாள்.

“நீ எதுக்கு சிரிக்கிற?” – ரேவ்.

தோழியிடம் அகப்பட்டுக் கொண்ட தலைவி.

“கேக்கறேன்ல, சொல்லு” – விடாமல் தோழி. ஆயினும், தலைவி திருவாய் திறப்பதாக இல்லை.

“சொல்ல மாட்டேல!! மேம் நீங்க சொல்லுங்க. ஹேக்கரும் கேமராமேனும் ஒன்னா? ”

“ஏன், கேக்கிற உனக்குத் தெரியாதா?”

“தெரியும். ஆனா டீசன்ட்டா வேல செய்ற கேமராமேன் எங்க? இன்டீசன்டா வேலை செய்ற ஹேக்கர் எங்க? ” – ஒப்பீடு செய்தாவது, சயனாவின் லயிப்பை ஒதுக்கிவிட நினைக்கும் ரேவ்.

“ஏசி ரூம்ல வேல செய்றவன்தான் டீசன்ட்டா தெரிவான். ஏப்பிரிக்கா காட்ல வேல செய்றவன் இல்ல” – ‘ஆ’ என்பது ‘ஏ’ ஆனதால், ரேவிற்கு ஏகப்பட்ட எரிச்சல்கள்.

“மனோகர், அம்மா பார்த்தப் பையன். அதனால அவனதான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் சரியா”

“இப்ப நீ பேசறதுக்கும் கேஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” – பொறுப்புடன் தலைமை.

“அவளுக்கு நான் அந்த ஹேக்கர லவ் பண்ணிருவேனோனு பயம். அதான் இப்படி பேசறா” – திருவாய் திறக்கப்பட்டது.

“எனக்குகூட பயமா இருக்கு?” – மேம்.

“மேம் நீங்களுமா?”

“ச்சே, அவள மாதிரி இல்ல. நீ லவ்வெல்லாம் கூட பண்ணுவியானு”

சிரிப்புச் சத்தங்கள்.

‘எதற்காக சிரிப்பு’ என்பதைக் காட்டிலும், இது பரவாயில்லை என்று உணரப்பட்டது.

“அப்படியே பண்ணாலும் மனோகரத்தான் பண்ணனும்”

“அய்யய்ய! ரேவ், மனோகர்கிட்ட இருந்து போஃன் வந்தா பேசறேன். அட் தெ சேம் டைம், மனோகர், ஹேக்கர் ரெண்டு பேர் மேலயும் பெரிய எதிர்பார்ப்பு இல்ல”

“ஹே சயனா, மனோகரப்பத்திச் சொன்னது ஓகே. பட் வொய் ஹேக்கர் கிராஸ்டாக் ஹியர்? ” – மேம்.

‘கிராஸ்டாக்’ என்ற வார்த்தையில் கிறுக்குப் பிடியாய் சிக்கிய சயனா.

“ஏன்னா? மைன்ட் ஹேக்கரோட கனெக்ட் ஆயிருச்சி” – சிக்கியவளைச் சீண்டிப் பார்க்கும் ரேவ்.

“உனக்குமா?” – கனகா மேம்.

“ச்சீ ச்சீ.. அவளுக்கு” – ரேவ்.

“உண்மையாவா சயனா?” – மேம்.

“அய்யோ மேம், அது உண்மை இல்ல.” – ரேவ்.

“அது உனக்கு, நான் அவகிட்ட கேட்டேன்” – மேம்.

“அவளுக்காக நான் சொன்னேன்” – ரேவ்.

“அதெப்படி, அவளுக்காக நீ எப்படி சொல்லலாம்?” – தோழி என்பதின் எல்லையைக், கோடிட்டுக் காட்டிய தருணம்.

“மேம், இந்த மாதிரி பேச வேண்டாம்” – எல்லைக் கோடில்லா உறவு என்று சயனாவால் சுட்டிக் காட்டப்பட்டது.

நொடிகள் விரயமாகின.

“சரி கேஸ் பத்தி பேசலாமா? உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது க்ளு தெரியுதா? ” – சயனா.

“அந்த நாலும் பேட்டி கொடுத்து டுடேஸ்தான் ஆகுது. உடனே நமக்கு கொரியர் வருதுனா, இங்கதான் சென்னையிலதான் இருக்கான். ” – மேம்.

“நானும் ஐபி அட்ரஸ் செக் பண்ணேன். அதுவும் லோகல்தான் காட்டுது. இன்னும் டூ திரி டேய்ஸ் கொடுத்தா எக்ஸாக்ட் லோகேசன் சொல்லிருவேன்” – ரேவ்.

“ஸோ சென்னை, அத பிக்ஸ் பண்ணிக்கலாமா? ” – சயனா.

இரண்டு ‘ஒகே’ கள் வந்தன.

“இந்தக் கொரியரில் கொடுத்திருக்கிறதா பார்த்தா, அவன் இந்த நாலு பேரு மட்டும்தான் டார்கெட் பண்ணியிருக்கான். பிளஸ் இதுமாதிரி இனிமேல் நடக்கப் போறது இல்லை”

“இது உன்னோட கெஸ்ஸா? ”

“இல்ல. ஸ்டிராங்க சொல்றேன் மேம்”

“எப்படி? ” – கனகா மேம்.

“எப்படி ஸ்ட்ராங்கா சொல்ற” – ரேவ்.

“நான் சொல்லல. அவன்தான் தெளிவா சொல்லிருக்கான்ல ”

“எங்க கொடு, நான் பார்க்கிறேன்” என்று காகிதம் பிடிங்கி படிக்கப்பட்டது.

“உனக்குப் புரியாது. அவளுக்குப் புரியும். சரிதான சயனா? ” – மேம்.

“மேம்ம்ம்ம்”

“ஸாரி ஸாரி சயனா, ஜஸ்ட் பார் பன்”

“லிஸன் ரேவ், வாரிச் சுருட்டிய பணமெல்லாம் வரியால் சாம்பலாக்கப்பட்டது’ அப்படின்னு முடிஞ்சிருக்கு.”

இரண்டு ‘ ஆமாம்’கள் வந்தன.

“ரேவ், சாம்பலாக்கப்படும் அப்படினா, அடுத்தும் பண்ணுவானு அர்த்தம். அதாவது பிரஸன்ட் டென்ஸ். அது ஒரு உண்மை. தொடர்ந்து நடக்கும். ”

இரண்டு ‘ ஓ’கள் வந்தன.

“ரேதர் ஹியர், சாம்பலாக்கப்பட்டதுனு எழுதியிருக்கு. இட் மீன்ஸ் பாஸ்ட் டென்ஸ். முடிஞ்சிருச்சி. இனிமே, இதுமாதிரி அவன் பண்ண மாட்டான்”

விளக்கம் ஒத்துக் கொள்ளப்பட்டது.

“அவன்னு எப்படி சொல்ற? அவனாவும் இருக்கலாம், அவளாவும் இருக்கலாம்ல. ” – ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் ரேவ்.

“இல்ல, இனிமே இந்த சாய்ஸே கிடையாது. இது கண்டிப்பா ‘அவன்’ தான் ”

“அதை எப்படி சொல்ற? ” – மேம்.

“நான் சொல்லல, அவன்தான் சொல்லிருக்கான்”

“ஏன் சயனா? அந்த ரெண்டு வரியில அவ்வளோஒஒஒ சொல்றானாஆஆ? ” – நெடில் நக்கலாய், வாக்கியம் முடிந்தது.

“இங்க பாருங்க, வரிக்கனல். அதுதான் அவனோட அடையாளம் ”

” அடையாளமா.? ” – ரேவ்.

” பேப்பர் எரிஞ்சி சாம்பலாகனும்னா, என்ன தேவை ரேவ்? ”

“நெருப்பு ”

“அதுக்கு வேற பேரு ”

” தீ, கனல், தணல்.. இட் கோஸ் ஆன்”

“எனஃப் மேம், அவன் தன்னோட அடையாளத்தைத் தெரிவிக்க வேண்டாம்னு நினைச்சா, நெருப்புனு சொல்லிருப்பான்”

“தீ அப்படின்னு சொன்னா, தீபா தீயரசி… இந்த மாதிரி போகும். கனல் அப்படிங்கறதால, கனல்கண்ணன், கனலரசு, கனல்வேல்… அந்த மாதிரி வரதுக்கு சான்ஸ் இருக்கு. ”

இரண்டு ஆச்சர்ய பார்வைகள்.

“அதை வச்சுத்தான் சொல்றேன். அந்த ஹேக்கர் ஒரு ‘அவன்’. அன்ட் ஹீ இஸ் ஸோ பிரில்லியன்ட்” – சிலாகித்துப் போய் சயனா.

“இது நம்புறமாதிரியா இருக்கு மேம்”

“எது, பிரில்லியன்ட்னு சொல்றதா? ”

“நீங்க இப்படியே பேசுங்க ” – ரேவ்.

“நீ நம்புனாலும் நம்பலனாலும், அந்த ஹேக்கர் ஒரு ஆண். அவன் என் பக்கத்துலதான் இருக்கான்” என்ற சயனா, “ஸ்ஸ்ஸ்ஸ்” என்று சொல்லிக் கண்ணைச் சுருக்கினாள்.

‘சிஐடி ஆபிஸர், ஏகத்துக்கு சிக்கிருக்கு’ போன்ற, இரண்டு பார்வைகள்.

பின் “ஸாரி, ஸாரி ஸாரி ஐ மென்ட் சென்னையில இருக்கான் ” – சயனா.

“நம்புற மாதிரி இல்ல” – ரேவ்.

“நம்புற மாதிரி நீ கண்டுபிடி. ” – மேம்.

“கண்டிப்பா! போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து, ஹேக்கர் லிஸ்ட் கேட்டிருக்கேன் அது வரட்டும் ” – ரேவ்.

“நீ பண்றது தப்பு. டைம்தான் வேஸ்ட் ஆகும். அவன் ஹேக்கர் கிடையாது. அந்த நாலு பேரையும் பழிவாங்கிருக்கான். புரிஞ்சுக்கோ. அது எதுக்குனு கண்டுபிடி ” – சயனா.

“இந்த நாலு பேரால அவனுக்கு என்னமோ நடந்திருக்குனு சொல்றீயா சயனா?”

“யெஸ் மேம்”

“அடுத்த மூவ் என்ன? ” – மேம்.

“யோசிப்போம்” – சயனா.

“நாம ஏன் யோசிக்கணும்? – ரேவ்.

“எதுக்கு இந்த கேள்வி? ” – மேம்.

“மேம்… அந்த நாலு பேர்கிட்டயும் போய்க் கேட்கலாமே”

“ரேவ், நாம போலீஸ் கிடையாது. என்கொயரி பண்றதுக்கு. சிஐடி ஆபிஸர்ஸ், நம்ம பாய்ன்ட் ஆப் வீயூவ்ல இருந்து மட்டும்தான் கேசப் நகர்த்தனும்” – தலைமையின் அனுபவம்.

“ஸாரி மேம் ”

மூவரது வார்த்தைகளும் ஓடிக் களைத்து, ஓய்வு எடுத்தன. ஆனால் அவர்களது எண்ணங்கள் ஓய்வில்லா ஓட்டத்தை ஆரம்பித்தன.

கனகா மேம்…

என்றுமே இல்லாமல், இந்த வழக்கு, இவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுமோ? – என்ற, அவரது எண்ணம் அனுபவத்தைப் பேசியது.

ரேவின்….

‘அம்மாவின் சந்தோஷம்’ என்று பார்க்கப்பட்ட ஒன்றை, மகளிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் – என்ற, ரேவின் எண்ணம் தோழமையைப் பேசியது.

சயனாவின்…

அந்த ‘அவனிற்கு’, இந்த நால்வரால் என்ன ஆகியிருக்கும்? அதை நினைக்கையில், அவனுக்கு ஆறுதல் சொல்ல சயனாவின் உணர்வுகள் அலைக்கழிந்தன.

அத்தகைய அலைக்கழிப்பிலும், அன்னையின் இழப்பை மறந்து, அவள் எண்ணம் ஆறுதல் அடைந்தது. – காலம்தான் சொல்ல வேண்டும் இவள் ‘எண்ணம்’ பேசியதை.

 

 

error: Content is protected !!