KVI-5

KVI-5

ஏந்திழையின் என்பீல்ட் எக்குத்தப்பான வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. அதற்கு இணையான வேகத்தில், வாயில் சுவிங்கம் மெல்லப்பட்டது .

எதற்கிந்த வேகம்?

காரணம், அமைச்சர் வெளியூர் சென்றுவிட்டு, திரும்பி வந்திருந்தார். அமைச்சரிடம், சயனாவைப் பற்றியக் குற்றச் செய்தியை காவல்துறையும், பத்திரிக்கையும் பதிவு செய்திருந்தது.

ஆதலால், அமைச்சர் ஒரு சிறிய கண்டனக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார் .

அந்தக் கோபமே, அவளின் இந்தத் தாறுமாறான வேகத்திற்குக் காரணம்.

யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இரவு நேரத்தின் தொடக்கத்தில், ஒரு பழமையான நட்சத்திர விடுதியில் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

பெரிய பார்க்கிங் வசதி ஏதும் இல்லாததால், விடுதியின் கீழே இருந்த மரங்களின் அடியிலேயே பார்க்கிங் செய்வதற்காக, சயனா வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினாள்.

ஆனால் அங்கே பார்க்கிங் செய்ய இடைஞ்சலாக, ஒரு வண்டிக்காரப் பையனும், டிராபிக் போலீசும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அமைதியாகக் காத்திருந்தாள்.

அந்தக் காத்திருப்பும் ஒரு ஐந்து நிமிடமே. அதற்குமேல் இயலாமல், வண்டியின் ஒலிப்பானை, அவர்கள் காதை எட்டிடும் அளவிற்கு ஒலிக்கச் செய்தாள்.

“அட, கொஞ்சம் பொறும்மா” – டிராபிக் போலீஸ்.

ஆனால் பொறுக்க முடியாம‌ல், சயனா இறங்கி, விறுவிறுவென்று அவர்கள் நிற்கும் இடத்திற்குச் சென்றாள்.

“என்ன பிரச்சனை” – சயனா.

“சிக்னல் ஜம்ப். அதான் பைன் போடப் போறேன்” – டிராபிக் போலீஸ்.

“யாரு? இந்த தள்ளு வண்டிக்காரன்? உங்களுக்கு சிக்னல் ஜம்பா?”

அவர் ஒரு மாதிரி பார்த்தார்.

“நம்புற மாதிரி ஏதாவது சொல்லுங்க சார்” என்று கூறியபடியே, அந்தத் தள்ளு வண்டியிலிருந்து பழங்களை எடுத்து, ஒரு ‘கவரில்’ வைக்க ஆரம்பித்தாள்.

அவள் எடுக்கும் பழங்களின் அளவைக் கண்டு, “யக்கா, அவரே பரவால்ல போல” என்றான் வண்டிக்காரப் பையன்.

அந்தக் கவரை டிராபிக் போலீஸிடம் கொடுத்தாள். அவரும் வாங்கிக் கொண்டார். தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து, தள்ளுவண்டிப் பையனிடம் கொடுத்தாள்.

“நீ வண்டிய எடு தம்பி. நீங்க கிளம்புங்க சார்” என்றாள்.

இருவரும், ஏதோ ஒரு வகையில் திருப்தி அடைந்து, இடத்தைக் காலி செய்தனர். ராயல் பார்க் செய்யப்பட்டது. இம்முறை ‘சைடு ஸ்டேண்ட்’ மட்டுமே.

*******
நட்சத்திர விடுதியின் கடைசி தளத்தில், மூலையில் இருந்த ஒரு அறையில் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

ஏற்கனவே அங்கே ‘கனகா மேம்’ மற்றும் ரேவ் வந்திருந்தனர். சயனா விடுதியின் உள்ளே சென்று, அவர்கள் இருவருடன் சேர்ந்து, கூட்டம் நடைபெறும் அறையை நோக்கிச் சென்றாள்.

அறையின் உள்ளே…

அந்த நான்கு பேரும், மிகுந்த கோபத்தில் அமர்ந்திருந்தனர்.

சயனா, உள்ளே நுழைந்தவுடனே, போலீஸ் மற்றும் பத்திரிக்கை ‘பெரிய முறைப்பு’ கொடுத்து, அவளை வரவேற்றனர்.

உரையாடலை, இன்னாள் அமைச்சரே ஆரம்பித்தார்.

“மூனு பேரும் மொதல்ல உட்காருங்க”

மூவரும் அமர்ந்தார்கள்.

“குட் ஈவினிங்”

“குட் ஈவினிங்” – மூவரும்.

“கேஸ் எந்த அளவுல நிக்குது”

“நல்லா போகுது சார், நிக்கல” – அவர் பேச்சின் உள் அர்த்தம் புரிந்து, பதில் சொன்னாள் சயனா.

“என்ன கண்டுபிடிச்சிருக்க? அத கொஞ்சம் சொல்றியா? ”

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும். உடனே கண்டுபிடிக்கிறது அவ்வளவு ஈஸியில்லை” – முரணாக பதில் வந்தது.

“இப்ப சொன்னது மாதிரியே, அன்னைக்கு இவங்க வந்து கேட்கிறப்ப சொல்லி இருக்கலாம்ல. அன்னைக்கு ஏதோ திமிரா பேசினனு சொன்னாங்க ” என்று அமைச்சர், போலீஸையும் பத்திரிக்கையையும் கை காட்டினார்.

“இன்னிக்கு நீங்க கேட்ட மாதிரியே, அன்னைக்கு அவங்களும் கேட்டிருந்தா, இதேமாதிரி பதில் சொல்லிருப்பேன். அவங்க அப்படி கேட்கல, நானும் இப்படி சொல்ல முடியல”

“பாருங்கய்யா, உங்க முன்னாடியே திமிரா பேசுற” – போலீஸ்.

“இங்க பாரு எலக்சன் வரப்போகுது. எனக்கு இது ரொம்பப் பெரிய தலைவலி. எப்ப கண்டுபிடிப்பேனு சொல்லு”

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண மாட்டீங்க. பேங்க்ல கேட்க முடியாது. பப்ளிக்குத் தெரியக்கூடாது. ஆனால் இன்வெஸ்டிகேஷன் செஞ்சி, ஆள கண்டுபிடினா? அதுக்கு நான்தான் ஹேக் பண்ணி இருக்கணும்” – குரலில், கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே நக்கல் இருந்தது.

இதற்கிடையில், மூன்றாவது நாளாகக் காதல் சொல்லக் கைப்பேசி கூவியது. ஆம்! காதல் கிரகத்தில் இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

கண்களைக் கைப்பேசியில் படரவிட்டாள். ‘கூஃபி’ என்று பார்த்ததும், சட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

இரண்டு நாளில்… ஆப்பிரிக்கா இலக்கங்களுக்கு, ‘கூஃபி’ என்ற செல்லப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

சூழலில், யாரும் அவளுடைய பேச்சைப் பெரிதாக எடுக்கவில்லை என்றே தெரிந்தது. அதுமட்டுமின்றி அவள் தங்களைப் பார்த்துப் பயப்படவில்லை என்றும் உணர்ந்தனர்.

“உன் ஆபிஸூக்கே கொரியர் வந்திருக்கு. அப்பவும், அந்த ஹேக்கர பிடிக்க முடியலையா?” – தொழிலதிபர் எதிர் எள்ளல்.

“இதுக்கு என்ன பதில் சொல்ற?” – அதைப் பிரசுரித்த பத்திரிக்கை.

ஜிவ்வென்று கோபம் ஏறியது சயனாவிற்கு. கனகா மேமைப் பார்த்தாள்.

“அவங்கதான் கேட்டாங்க சயனா. கேஸ்ல என்ன இம்புருவ்மென்ட்னு. அதான் சொன்னேன்” – கனகா மேம்.

“நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லு. அங்க எதுக்கு பார்க்கிற?” – அமைச்சர் அதிகாரமாய்க் கேட்டார்.

“உங்க அக்கவுண்ட ஹேக் பண்ணி, பணம் எடுத்திருக்கான். உங்க நாலு பேரலாயும், ஒன்னுமே பண்ண முடியலன்னுதான, எங்ககிட்ட வந்து நிக்கிறீங்க. நீங்க இப்படி பேசலாமா? ” -எள்ளலைக் குத்தும் அளவுக்கு வந்தது சயனாவின் குரல்.

“உஷ்ஷ்” என்று வாயில் விரல் வைத்து மிரட்டியது தொழில்.

“சயனா, பார்த்துப் பேசு” – கனகா மேமும் கண்டித்தார்.

“ஸாரி மேம் ”

“இங்க பாருங்க ஹேக்கர் ஒரு ஆண். உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லனும்னா ‘மேல் ஆபிஸர்’. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்” – இன்னும் அவளது குத்தல் அடங்கவில்லை என்றே தெரிகிறது.

“யாரா இருந்தா என்ன? கைல கிடைக்கட்டும் அவன…” – இப்படித் தொழிலதிபர் சொல்லி முடிக்கும் முன், அமைச்சர் அவரைத் தடுத்துவிட்டார்.

‘அவன…’ என்று பாதியில் தொங்கிய வார்த்தையில், சயனாவின் உயிர் ஊசலாடியது. உள்ளுக்குள் ‘யாரோ ஒருவனுக்கு என்னவானால், தனக்கு ஏன் இந்தத் துடிப்பு’ என்ற பதட்டம் வந்தது.

அறையில் சற்று நேரம் அமைதி நிலவியது.

கடைசியில் “சரி போ” என்று கையை அசைத்தார் அமைச்சர்.

தான், மட்டமாக நடத்தப்படுவது போல் உணர்ந்தாள், சயனா. சட்டென்று வெளியில் வந்து விட்டாள். அவள் பின்னையே ரேவும் வந்தாள்.

வெளியே வந்த சயனா, விடுதியின் காரிடாரில் நின்று கொண்டு, சுவரில் கைகளால் குத்த ஆரம்பித்தாள்.

ரேவ், சயனாவின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

“ஏன் இப்படிக் கோவப்படுற? இது தேவையே இல்ல? ” – ரேவ்.

“பேசாம இரு. பண்ணது தப்பு. இதுல கேள்வி கேட்டுக்கிட்டு… அதுக்கு நாம பதில் சொல்லிக்கிட்டு. எனக்கு இது பிடிக்கல ரேவ்” – தவறு செய்வது போல் உணர்ந்த சயனா.

இரண்டாவது முறையாக, காதல் வந்து கைப்பேசியின் கதவைத் தட்டியது. சயனா, திறக்கவில்லை.

“யாரு சயனா?”

“மனோ”

“மனோகர், ஏதாவது தப்பா நினைச்சுக்கப் போறாங்க. கால் அட்டென்ட் பண்ணு”

“அவன் தப்பா நினைக்க மாட்டான்”

இந்த இரண்டு நாட்களில், அவளது ‘கூஃபி’ மேல், அவளுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை.

திரும்பவும், காதல் கிரகத்திலிருந்து கைப்பேசி அழைப்பு. இந்த முறை, அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.

“ஏன் இப்படிப் பண்ற? கட் பண்றேன்ல. ஏதாவது இம்பார்ட்டண்ட் வொர்க்ல இருப்பேன்னு தெரியாதா? திருப்பித் திருப்பி கால் பண்ணிட்டே இருக்க. வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

“யார்மேலயோ இருக்கிற கோபத்தை மனோகர்கிட்ட ஏன் காமிக்கிற? ” – ரேவ்.

“ஏன்னா? அவன் என்னயப் புரிஞ்சிப்பான்” – இரண்டு நாட்கள், அவனுடனான பேச்சுக்கள், இப்படி அவளைச் சொல்ல வைத்தது.

“யார இப்படி திட்ற சயனா, ப்யூச்சர் ஹஸ்பண்டா? ” – பின்புறமாக வந்து நின்ற கனகா மேம்.

“ஏற்கனவே கோவமா இருக்கேன். நீங்க வேற இப்படிப் பேசாதீங்க” – ‘கனகா மேம்’ மீதும் பாய்ந்தாள்.

“விடு சயனா. ஒரு கேஸ இன்வெஸ்டிகேஷன் பண்ணும் போது இதெல்லாம் சகஜம். அதுவும் இது அதிகாரம் இருக்கிற இடம். இப்படித்தான் இருக்கும்” – தன் அனுபவத்தையும், நடைமுறையையும் அவளுக்குச் சொல்லிப் பார்த்தார்.

“நீங்க எதுக்காக கொரியர் வந்தத, அவங்ககிட்ட சொன்னீங்க” – சயனா.

“அதவிடு நீ எதுக்காக கேஸோட பிராக்கிரஸ்ஸ, அவங்ககிட்ட சொல்லல” – ரேவ்.

“என்ன பிராக்கிரஸ்?” – சயனா.

“உன்னோட டவுட்டு, இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்லதானு சொன்னேல. அத ஏன் அவங்ககிட்ட சொல்லல? ”

“லிஸன், நார்மல் திருட்டுக் கேஸ்னா, ஆளக் கண்டுபிடிச்சிக் கொடுத்துட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம். ஆனா இங்க அப்படி இல்லை. இது வேற!! இனிமே, ஹேக்கர பாதிக்காத அளவுக்கு நாம மூவ் பண்ணனும்”

“எதுக்காக சயனா நாம அவனைப் பாதுகாக்கனும்? ” – ரேவ்.

“நானும் அதேதான் கேட்கிறேன். நாம ஏன் அவன புரொடெக்ட் பண்ணனும்” – ‘கனகா மேம் ‘

தனது முடிவில், மற்ற இருவருக்கும் உடன்பாடு இல்லை, என்று நன்றாகவே தெரிந்தது, சயனாவிற்கு.

“சரி விடுங்க. முதல நீயூஸ் பேப்பர் செக் பண்ணியா? ” – ரேவின் மேல் கோபம் மொத்தமும் கொட்டப்பட்டது.

“ம்ம்ம்… ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்து ஸ்டார்ட் பண்ணி, எல்லா பேப்பர்லயும் செக் பண்ணேன். நோ யூஸ்” – ரேவும் எரிச்சலுடனே பதிலுரைத்தாள்.

“அப்ப அவனோட காயம் பெருசு. அதான், அது ஆறதுக்கு டைம் எடுத்திருக்கான். அப்புறமா இத செஞ்சிருக்கான். ஸோ ஆறு மாசத்துக்கும் முன்னாடி போய், அந்தப் பேப்பர செக் பண்ணு” – ரேவின் எரிச்சல், சயனாவின் கோபத்தை அதிகமாக்கியது.

“சரி. ஆனா நீ, அவனுக்குச் சப்போர்ட் பண்ணாத. கேஸ நாம கேன்டில் பண்றதால ஹேக்கர்னு, டீசன்ட்டா சொல்றோம். இதுவே போலீஸ் கேன்டில் பண்ணா, அவன் ஒரு அக்யூஸ்ட் ” – அழுத்தம் திருத்தமாக சொன்னாள் ரேவ்.

“பாருங்க மேம், எப்படி சொல்றானு?”

“அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு சயனா? அவன் ஒரு அக்யூஸ்ட்தான்”

இருவரின் ‘அக்யூஸ்ட்’ என்ற வாதம், அவளை அல்லல் படுத்தியது.

“நீங்களுமா இப்படி பேசறீங்க மேம்?” – நியாயத்தின் பக்கம் நிற்க முடியலையே என்ற வேதனை, சயனாவின் குரலில் ஒலித்தது.

“அப்படியெல்லாம் இல்லடா சயனா. டோன்ட் கெட் அக்ரெஸிவ். யாரோ ஒருத்தருக்காக, நாம சண்டை போட வேண்டாம்”

சயனா சமாதானம் ஆகவில்லை.

“கேஸ் ஸ்டார்ட் பண்றப்பவே, ஆள் யாருன்னு காட்டிட்டுப் போய்கிட்டே இருக்கனும்னுதான பேசினோம். இப்ப என்ன புதுசா பேசற?” – மேம்.

“சரியா சொன்னீங்க மேம். வீட்டுக்குப் போய், மனோகர்கிட்ட பேசு. நான் வரேன் மேம்” – சயனாவிடம் எதுவும் சொல்லாமலே விடைபெற்றாள், ரேவ்.

சயனா, ரேவ் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சயனா, எல்லா கேஸ் மாதிரி இதுவும் ஒன்னு. அப்படி நினைச்சி விட்ரு ”

“….”

“இன்னொன்னு சொல்றேன். மூனு நாளா மனோகர்கிட்ட பேசற. அந்தப் பையன் எவ்வளவு நம்பிக்கை, ஆசை வச்சிருப்பான். ஆனா இங்க நீ ஹேக்கர்காக உருகுற. இது தப்புடா. உனக்கு நல்லதில்ல”

தன் மனம் இப்படியா நினைக்கிறது என்று அருவருப்பு அடைந்தாள்.

” நான் சொல்றது புரியுதா?”

“ம்ம்ம்.” – சயனா, தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். ஆனால் மனது கேட்கவில்லை.

“மேம் ஒரு ரெக்யூஸ்ட். இனிமே கேஸ் பத்திக் கண்டுபிடிக்கிற டீடெயில்ஸ, அவங்களுக்குச் சொல்ல வேண்டாம்”

” ஏன் சயனா? ஏதாவது பிரச்சனை? ”

“எனக்கென்னமோ அவங்க எதையோ மறைக்கிறாங்கன்னு தோனுது. ”

” ஓ”

“அத கண்டுபிடிச்சப் பிறகு, என்ன செய்யலாம்னு டிசைட் பண்ணுவோம்”

“முடிஞ்ச வரைக்கும் டிரை பண்றேன் சயனா.”

அதிகாரத்திற்கு முன் அதிகாரிகள் என்ன செய்ய முடியும்.

அவரின் பதிலைக் கேட்ட சயனா, எதுவும் சொல்லத் தோன்றாமல் சென்றுவிட்டாள்.

******
அறையின் உள்ளே கூட்டத்தில்…

நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். சயனா எப்பவும் இப்படித்தான் என்றாலும், இன்று அதிகமாகப் பேசியதாக உணர்ந்தனர்.

“அவளுக்கு நம்ம மேல கொஞ்சமாவது பயமிருக்கா? இல்லை நீ அமைச்சர்னு உன் மேல மரியாதை இருக்கா? ” – தொழிலதிபர் தூபம் போட்டது.

“இவளால எதாவது பிரச்சனை வரும்னு தோனுது அமைச்சரே” – பத்திரிக்கை பயம் காட்டியது.

“கண்டிப்பா வரப்போகுது” – போலீஸ், ஆருடம் சொன்னது.

“எனக்கும் அந்தப் பயம் இருக்கு. ஆனா இப்ப எதுவும் செய்ய வேண்டாம். பேசாம இருங்க. நம்ம விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கா. ஆள் யாருன்னு கண்டுபிடிக்கட்டும், இவள என்ன செய்யனும்னு சொல்றேன். இப்படி ஒருத்தி சிஐடி டிபார்ட்மென்ட்ல இருக்கிறது எனக்கு நல்லதில்ல” – அமைச்சர்.

எல்லோரும் ஆமோதித்தனர்.
அன்றைய நாளில், அங்கிருந்த அனைவருக்கும், சயனா மீதான கோபம், ஒருபடி அதிகமானது.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கடுங்கோபத்தால், கட்டுக்கடங்காத வேகத்தில் வந்து, என்பீல்ட் பார்க் செய்யப்பட்டது.

படியேறி வீட்டிற்குள் நுழைந்த, பத்தாவது நொடியில், காதல் பேசாது, ஏங்கிக் போய் கைப்பேசிக் கூவியது.

காதலை மேலும் ஏங்கவிடாமல், “ஹலோ, சொல்லு” என்றாள் சயனா.

“இப்பவாவது பேசலாமா?” – குரல் பரிதாபமாக ஒலித்தது.

“ஸாரி. அப்போ வொர்க் டென்ஷன் ” – நம்பிக்கை வடிந்து, சோர்ந்து போன குரலில் சயனா பேசினாள்.

“ம்ம்ம், புரிஞ்சது”

“தேங்க்ஸ். ஹவ் வாஸ் யூவர் டே?” – வழக்கமாக ஆரம்பிக்கும் கேள்வியில், அன்றும் ஆரம்பித்தாள்.

“ஃபார் அ சேஞ்ச், இன்னைக்கு நீ சொல்லு? ” – நண்பனாய் இருந்து, அவளைத் தேற்ற நினைத்தவனது மனம்.

கேட்டகப்பட்ட அடுத்த நொடியில் ஆரம்பித்தவள், வழக்கைப் பற்றிய விவரங்கள், அந்த நால்வரின் அதிகாரங்கள் மற்றும் ரேவின் சந்தேகங்கள் என அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“சொல்லவே இல்ல ட்டேபீ, ஹேக்கர் ஒருத்தன் இருக்கிறானு. அதான் கன்சிடர் பண்றேன்னு சொன்னீயா?” – காதலனாய் மாறி பொறாமை கொண்டவனது மனம்.

“உனக்கு உன் பிரச்சனை. ஆனா அது தெரிஞ்சா, நீ என்ன பண்ணிருப்ப? ” – இதை, அவளது ‘கூஃபி’ எப்படி எடுத்துக் கொள்ளும் என்று அறிய ஆவல்.

“டேரெக்டா வந்தே ப்ரொபோஸ் செஞ்சிருப்பேன். ”

“ஓஓ”

“நான் வரட்டுமா, ட்டேபீ? ”

“கேஸ் முடியட்டும். அப்புறம் பார்க்கலாம்” – ‘நமக்குள் இதுதான் உறவு’ என்று முடிவு செய்ய முடியாமல் தவித்தாள் சயனா. ஆதலால் இந்தப் பதில்.

“அன்பேர். வெயிட் பண்ண முடியாது ட்டேபீ? உடனே வரேனே” – கெஞ்சியது குரல்.

“…. ” – வேறு யோசனையில், அவன் கெஞ்சுவதில் கவனம் இல்லாமல் இருந்தாள்.

“ஐ திங்க் யூ ஆர் நாட் இன் குட் மூட். சயனாவ பேக் டூ பார்ம் கொண்டு வரலாமா? ”

“அதுக்கு என்ன பண்ணப் போற? ”

“சரி. உன் ப்ரண்ட் கேட்கிற மாதிரியே, நானும் கேட்கிறேன். எதுக்காக அந்த ஹேக்கர் மேல உனக்கு ஒரு ஸாப்ஃட் கார்னர்?”

இந்த ‘ஸாப்ஃட் கார்னர்’ என்ற வார்த்தையால், அந்த ‘அருவருப்பு’ என்ற வார்த்தைக் கொஞ்சம் அகன்றது.

“எப்படிச் சொல்ல? நான், எந்த ஒரு பிரச்சனைக்கும் ரியாக்ட் பண்ணனும் நினைப்பேன். அது எனக்கு ரொம்பப் புடிக்கும். இங்க நிறைய பேரு ரிப்ளை மட்டும்தான் பண்றாங்க. ஆனா, அவன் சொசைட்டில இருக்கிற ஒரு பிரச்சனைக்கு ரியாக்ட் பண்ணிருக்கான். அதுதான் காரணம் ” – ஹேக்கரின் மேல் வந்த ஈர்ப்பின், உண்மைக் காரணம்.

” ஓ! க்ரேட்” – மனதாரப் பாராட்டினான்.

“நான், உனக்கு பால்ஸ் ஹோப் (false hope) எதுவும் கொடுக்கலைல” – கனகா மேமின் வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டு, தயக்கத்துடன் இப்படிக் கேட்டாள், சயனா.

“புரியல, எதுக்காக இப்படிக் கேட்கிற”

“இல்ல, மேரேஜ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வச்சித்தான் உன்கிட்ட பேச ஆரம்பிச்சது. ஆனா இப்ப அந்த டெசிஸன் எடுக்க என்னால முடியல. அத நினைச்சா, ஏதோ கில்ட்டி பீல்”

“ட்டேபீ… ட்டேபீ… போதும். ஏன் இவ்வளவு குழப்பிக்கற. நம்ம ரிலேஷன்ஷிப் மேரேஜ்லதான் முடியனும்னு அவசியமில்லை. ஓகேவா? ”

” தேங்க்ஸ் ” – நிம்மதியாகப் பாதி மனம், நிம்மதியின்றி மீதி மனம். இரண்டையும் உணர்ந்தாள்.

“பட் யாருனே தெரியாதவன் மேல, ஏன் இவ்வளவு நம்பிக்கை ட்டேபீ ”

“உனக்கு பொறாமையா இருக்கா?”

“சத்தியமா இல்ல. சந்தோஷமாதான் இருக்கு.”

“சந்தோஷமா இருக்கா? ஏன்? ”

“நீ அவன நம்பறயா? நம்பலயா? அப்படிங்கிறது, உன்னோட வொர்க் ரிலேட்டடு. ஆனா என்னய நல்லா புரிஞ்சி வச்சிருக்க. அதனால்தான், எந்த ஒரு கெஸிட்டேஷனும் இல்லாம என்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிருக்க. இது உன்னோட லைஃப் ரிலேட்டடு” – அவளைப் பற்றி, அழகான சிறுகுறிப்பு வரைந்து விட்டான்.

“ஐ லைக் யூ” – இப்படிப்பட்ட ஒருவனை ஏற்றுக் கொள்ள, எந்தவொரு காரணம் தடுக்கிறது என்று புரியாததால், ‘லைக்’ என்ற வார்த்தைப் பிரயோகம்.

” பட், ஐ லவ் யூ ட்டேபீ ” – நான் உன்னை, ஏற்றுக் கொள்ளவில்லை, ஏந்திக் கொண்டிருக்கிறேன் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது.

“ம்ம்ம் தெரியும். சரி, ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் என்னய பார்க்கிறப்ப எப்படி ரியாக்ட் பண்ணுவ? ” – ஆசையாகப் பேசியது அவள் குரலில்.

“போஃன்ல பேசின பொண்ண, நேர்ல பார்க்கிறப்ப, ஒரு பைவ் மினிட்ஸ் சந்தோஷ ஸ்டர்க் (struck) இருக்கும். ”

“ம்ம்ம் ”

“அப்புறம் ஏதாவது பேசுவேன்.”

” ம்ம்ம் ”

“ரெண்டு நிமிஷத்துக்கு மேல அதுவும் முடியாது”

“ஏன்? போஃன்ல இவ்வளவு பேசற. நேர்ல ரெண்டு நிமிஷம்தானா? ”

“யெஸ். பிகாஸ் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ் ஸ்டார்ட் ”

“என்னடா இன்னும் ஆரம்பிக்கலனு நினைச்சேன்?”

“நீ, இதெல்லாம் நினைக்கிறீயா ட்டேபீ?” – வழமைக்குத் திரும்பியது உரையாடல்.

சோர்வு நீங்கி, கொஞ்சமே கொஞ்சம் சிரித்தாள்.

“ரிலாக்ஸ் ஆயிட்டியா ட்டேபீ ? ”

“ம்ம்ம்”

“சரி, ரொம்பக் கோபப்படாத ட்டேபீ. நீ யோகா செய்யேன்”

“ப்ச், நீ மட்டும்தான் சொல்லாம இருந்த. இப்ப நீயும் சொல்லிட்ட”

“யோகாகூட எப்படி பண்ணனும்னு சொல்லித்தரவா? ” – சில்மிஷக் குரலில் கேட்கப்பட்டது. இது அவனது, எல்லையில்லா காதல் பேச்சு.

“யோகாவோ, வொர்க் அவுட்டோ நானே பாத்துக்கிறேன் ” – சிஐடி குரலில் பதில் சொல்லப்பட்டது. இது, அந்தக் காதலின் எல்லைக்கோட்டை சொல்லும் பேச்சு.

எனினும், சயனாவின் சோர்வு அறவே போய்விட்டது.

“சாப்பிட்டு, தூங்கு. சரியா ட்டேபீ? ”

“ம்ம்ம்”

“சயனா, கேர்ஃபுல்லா இருந்துக்கோ” – அக்கறை ஆழிப்பேரலை போல் பொங்கி வந்தது.

“கண்டிப்பா. பட் அவங்ககிட்ட இல்ல, உன்கிட்ட” – புத்துணர்வுடன் குரல் வந்துவிட்டது.

“நல்லாவே ரிலாக்ஸாகிட்டீங்க மேடம்”

“யெஸ். தேங்க்ஸ் ” என்று சந்தோஷமாகச் சிரித்தாள்.

“ம்ம்ம்” – அந்த அழுத்தமான ‘ம்’ சொல்லியது, அவளின் சந்தோஷம், அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று!

“என்ன லவ்ல தேங்க்ஸ், ஸாரி சொல்லக்கூடாதுனு சொல்லுவ. இன்னைக்கு என்னாச்சி? எதுவும் சொல்லல?”

“ஏன்? ‘இது லவ் இல்லனு’ சொல்லி நீ முடிக்கிறதுக்கா? ”

வருத்தத்தை மறந்து, வாய் திறந்து சிரித்தாள்.

“சரி குட்நைட். லவ் யூ ட்டேபீ ” என்று, காதல் தூங்கச் சென்றது.

சாப்பிடும் போதும் சரி, மற்ற வேலைகள் பார்க்கும் போதும் சரி, கண் திறந்திருக்கும் பொழுதினில் எல்லாம், அவளது ‘கூஃபி’ கண் முன்னே வந்து நின்றான்.

தூங்கச் சென்றாள்.

கண்களை இறுக்க மூடினாள். கண்ணுக்குள்ளே, ஹேக்கரின் தெளிவில்லாத நிழலான தோற்றம் வந்து உறுத்தியது.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அடுத்த நாள் காலை எழுந்து வரும் போதே, அழைப்பு மணியின் ஓசை கேட்டது. கதவு திறக்கப்பட்டது. ரேவ் நின்று கொண்டிருந்தாள். நேற்றைய, கத்தல் பேச்சின் பின்னே, கொஞ்சம் கூட கவலை இல்லாமல், இப்படி வந்து நிற்பதெல்லாம், கட்டுக்கடங்கா நட்பு.

“குட் மார்னிங், மிஸ் சயனா” – ரேவ்.

சயனாவிற்கு அதிசயமா இருந்தது. இவள் முகமெல்லாம் புன்னகை பூக்கும் வண்ணம், புதிதாய் என்ன நடந்ததிருக்கும். – யோசனையில் நின்றாள், சயனா.

“குட் மார்னிங் சொன்னா, பதிலுக்கு குட்மார்னிங் சொல்லனும்” – காலை வணக்கத்துடன் தத்துவம்.

“தூங்கி எந்திரிச்சவுடனே, ஏன்டா எந்திரிச்சோம்னு நினைக்க வைக்காத. ”

“இதுக்கு, குட் மார்னிங்கே சொல்லிருக்கலாம்”

கிடைத்த இடைவெளியில், தன் தூக்க கலக்கத்தைப் போக்கிக் கொண்டாள்.

“இன்னிக்கு என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்ட?” – ரேவ்.

“நேத்து சரியான டென்ஷன். தூங்கவே முடியாதுனு நினைச்சேன்.”

“ம்ம்ம்”

“அப்புறம் மனோ கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். அப்புறம்தான் ரிலாக்ஸாகி தூக்கம் வந்தது. ”

இங்கே – தூங்க வைப்பவனை விட, தூக்கத்தைக் கெடுப்பவன்தானே மனதை துளையிட்டு நுழைந்தவன்.

“நீ எதுக்கு வந்த? சொல்லு” – சயனா.

“ம்ம்ம் சயனா, ஹேக்கர் மேல உனக்கு கிரஸ் இருக்குல? ” – ‘இருந்தாலும் எனக்கு கவலை இல்லை’ என்ற தோணியிலே குரல் ஒலித்தது.

“ரேவ் உனக்கு என்ன வேணும்? காலையில வந்து நின்னுகிட்டு உயிர வாங்காத” என்று கூறி, அலட்சியமாகத் திரும்பினாள்.

“ஹேக்கரோட பேர் தெரிய வேண்டாமா?”

அலட்சியமாக திரும்பிய சயனா, ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தாள்.

“சொல்லு, அவன் பேர் என்ன? ” – தன் மொத்த ஆயுளுக்குமான ஆவலை, அன்றே காண்பித்தாள்.

“கண்டிப்பா சொல்லத்தான் போறேன்” – இன்று தனது முறையாக, ரேவ் கண்ணடித்துச் சொன்னாள்.

‘சொல்லு’ என்ற ஆர்வம், சயனாவின் கண்களில் தெரிந்தது. ஆனால் வார்த்தைகளில் அரங்கேறவில்லை.

“இனிமே ஹேக்கர் மேல, உனக்கு கிரஸ் இருந்தாலும், ஐ டோன்ட் கேர்”

சயனாவிற்கு, ரேவின் பேச்சு ‘பெரிய மனது’ போன்ற பேச்சாகத் தெரியவில்லை.

“உன் மைன்டோட கனெக்ட், ஸாரி மனசோடவே கனெக்ட் ஆனாலும் எனக்கு ஒரு கவலையும் கிடையாது”

இதில், தனக்கு எதிராக ஏதோ ஒன்றை உணர்ந்தாள்.

“போதும், பேர் சொல்றியா?” – சயனா.

“அப்கோர்ஸ் சயனா. கனலினி, இன்கம்டேக்ஸ் ஆபிஸர்”

சயனாவிற்குள், என்வென்றே பெயர் வைக்கப்படாத உறவு ஒன்றை, இழந்துவிட்டது போன்ற உணர்வு.

error: Content is protected !!