KVK-13

KVK-13

சித்து மீண்டும் யுவாவின் கம்பனிக்கு போன் செய்தான். இம்முறை கதிர் ஒரு முடிவுடன் சித்துவிடம் பேச நினைத்தான்.
ஏனெனில் யுவா ஊருக்கு வந்தபிறகு அன்றே மனோகரைக் காண ஆணைமலை செல்லவிருப்பதாகச் சொல்லியிருந்தான். ஆகையால் சித்துவிற்கு அது தெரியாமல் அவனைத் திசை திருப்பி விட நினைத்தான். ஆனால் யுவா என்ன திட்டம் வைத்திருப்பானோ!
சித்து போன் செய்திருப்பதாக அங்கே வேலை செய்த ஒருவர் வந்து சொல்ல , கதிர் வந்து அவனிடம் பேசினான்.
“ ஹலோ நான் சித்தார்த் பேசறேன் , ஃபரம் மனோ அட் கம்பனி “
“தெரியும் சொல்லுங்க. நான் கதிர்.”
“ நான் உங்க எம் டீ கிட்ட பேசணும். எம் டீ வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும். என்ன விஷயம் சொல்லுங்க “ எதையும் காட்டிக்கொள்ளாமலே பேசினான்.
“ சரி அப்போ நான் உங்ககிட்ட பேசமுடியுமா , நான் நேர்ல வரேன் “ அவன் பதிலுக்காகக் காத்திருக்காமல் போனை வைத்துவிட்டுக் கிளம்பினான்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் அங்கு இருந்தான். கதிர் என்பவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அவன் அறை எது என்று விசாரித்துக் கொண்டு அங்கே சென்றான்.
கதிர் அவனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மனதில் பல முறை யோசித்து வைத்திருந்தான். அவன் கதவைத் தட்ட “ எஸ் கெட் இன் “ என்று அழைத்தான்.
“வாங்க மிஸ்டர் சித்தார்த். டேக் யுவர் சீட் “ சிறு புன்னகையுடனே சொல்ல
தனக்குள் சிறிது பொறுமை காத்தான் சித்து.
“ எனக்குச் சில விஷயங்கள் தெரியனும் மிஸ்டர் கதிர்.” அவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க
ஒரு நிமிடம் யுவாவின் சாயல் அவன் கண் முன் வந்து சென்றது. தன்னுடைய வேலைகளை முடிப்பதில் இருவருக்கும் இருக்கும் உறுதி அவர்களின் பேச்சிலும் பார்வையிலும் நான்றாகத் தெரிந்தது. யுவாவின் செயல்களைப் போலவே இவனும் செய்வதாலோ என்னாவோ சித்துவிடம் அவனால் எதிர்ப்பாகப் பேச முடியவில்லை. சாந்தமாகவே அவனுக்கு எடுத்துரைக்க நினைத்தான்.
‘சொல்லுங்க சித்தார்த். என்ன தெரிஞ்சுக்கனும்?”

“உங்க எம் டிக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம் ?” முகத்தில் அறைந்ததைப் போல இருந்தது அவன் கேள்வி.
அவன் இதுவரை தெரிந்தது வந்திருப்பான் என்று கதிர் சிறிதும் எதிர்ப் பார்க்கவில்லை. அவனைப் பொறுத்தவரை யுவா அவனது கம்பெனி டீல்களை கிடைக்காமல் செய்தான் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு பேச வந்திருப்பான் என்றே நினைத்தான். இந்தக் கேள்வியை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தான்.
சிறிது நேரம் யோசித்து பிறகு சொன்னான்.
“ உங்க கம்பெனி கான்ட்ராக்ட்ஸ் எங்க எம் டீ வாங்கிடாரு. அது தொழில் விஷயம். மத்தபடி உங்க குடும்பத்துக்கும் அவருக்கும் எந்தச் சம்மந்தமும் எனக்குத் தெரிந்து இல்லை “
“வேற எந்தக் கம்பனிக்கும் நீங்க இந்த அளவு பண்ணதா தெரியலையே, அதுவும் இல்லாம நீங்க விலைக்கு வாங்கின எங்க முன்னாள் மேனேஜர் எல்லாத்தையும் சொல்லிட்டார். சோ பெட்டர் டைம் வேஸ்ட் பண்ணாம விஷயத்தைச் சொல்லுங்க. நீங்களும் யுவராஜும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் அதும் எனக்குத் தெரியும். இப்பயாச்சும் சொல்லுங்க கதிர்” , வார்த்தைகளைத் தெளிவாக உபயோகித்துக் கேட்டான் சித்து.
இந்த வகையில் அவன் யோசிக்கவே இல்லை. யுவா இங்கிருந்தால் சித்துவை இவ்வளவு தூரம் வர விட்டிருக்க மாட்டான். உடனே இதை யுவாவிற்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தான்.

யுவராஜ் அங்கே எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தான். ஆராதனா நேற்று நடந்து கலவரத்தில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நேற்று அவளின் கண்ணீர் தன மார்பை நனைத்ததை நினைத்துப் பார்த்தான். தனக்காக எத்தனை வருடம் காத்திருந்தாள்.

‘ அவளுக்காக நான் ஒன்றும் செய்யாவிட்டாலும் இனி அவளை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அம்மாவிடம் சொல்லி அவள் தந்தையிடம் பேச வேண்டும். இதற்கு மேலும் அவளைக் காக்க வைக்கக் கூடாது.’ கண்ணாடியில் அவளைப் பார்த்துக்கொண்டே தலை வாரிக் கொண்டு நினைத்தான்.
அவள் லேசாக அசைவது தெரிந்ததும் , எழுந்து அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் நெற்றியில் முத்தமிட்டு “ குட் மார்னிங் “ என்றான். அவள் விழித்தெழுந்து அமர்ந்தாள். திரு திரு வென விழித்தாள்.
“என்ன அப்படி பாக்கற “ அவள் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்துக் கேட்க,
“ இதெல்லாம் கனவு இல்லையே, என்னைக் கொஞ்சம் கிள்ளு” என்று அவனைப் பார்த்துக்கொண்டே தன் கன்னத்தைக் காட்ட
அவனோ ஒரு கையை எடுத்து அவள் இடையைக் கிள்ள, அவள் துள்ளி எழுந்தாள். “ இது கனவில்லை, போதுமா?” சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ நான் கன்னத்துல தான கிள்ள சொன்னேன் “ நெளிந்து கொண்டே அவள் சொல்ல
“ நீ என்னோட ப்ராபெர்டி டீ. நான் எங்க வேணா கிள்ளுவேன்” கூலாகச் சொல்லிவிட்டு ரூம் சர்வீசுக்கு போன் செய்து காஃபி ஆர்டர் செய்தான்.
அவன் இப்படியெல்லாம் தன்னிடம் பேசுவது கண்டு உறைந்து போயிருந்தாள்.

“ சரி நான் என் ரூம்க்கு போய் ரெடி ஆகிட்டு வரேன்” அவள் கிளம்ப எத்தனிக்க,
“ உன் திங்க்ஸ் இங்க இருக்கறப்ப நீ எங்க போற” அங்கிருந்த மேகசின் ஒன்றைப் புரட்டிக் கொண்டு அவன் சொல்ல
“ என்னோட திங்க்ஸ் எப்போ எடுத்துட்டு வந்த? !” அவனை அதிசயமாய்ப் பார்த்தாள்.
“ நீ ரொம்ப டையர்டா தூங்கிட்டு இருந்த அதான் காலைலேயே போய் எடுத்துட்டு வந்துட்டேன். இனிமே நீ என் ரூம்ல தான இருக்கனும். “ அலட்டிக்கொள்ளாமல் அவன் சொல்ல
ஆச்சரியப்பட்டாள் அவள். “ யுவா இந்த மாதிரி நீ உடனே மாறிட்டா எனக்கு ஹார்ட் அட்டாக் தான் வரும். “
“ ஏன் டீ ! லவ் பண்ணு லவ் பண்ணுன்னு பின்னாடியே வந்து டார்ச்சர் பன்னணுவ , நான் லவ் பண்ணதும் உனக்கு ஹார்ட் அட்டாக் வருதா “ எழுந்து அவள் அருகில் வந்தான்.
“ கடவுளே காலைலேயே வா , இப்போதிக்கு இந்த ஷாக் போதும் “ எனப் பாத்ரூமிருக்குள் சென்று ஒளிந்தாள்.
“ நீ டிரஸ் எடுக்க வெளில தான் வரணும் டீ “ அவன் சொல்ல ,
சற்று நேரம் சத்தம் இல்லாமல் இருந்தாள். பின்பு அவன் ஏதோ போன் பேசுவது காதில் விழுந்ததும் அவசரமாக வந்து தன் உடையை எடுத்துக் கொண்டு ஓடினாள்.
அதை அவன் கவனித்தாலும் அப்போது கண்டுகொள்ளவில்லை.
அவள் குளித்து உடை மாற்றி வந்தபின்பு, ‘அவன் அங்கே காணவில்லை. எங்குச் சென்றான்’ என்று தேட , அவள் பின்னால் இருந்து அவளை அணைத்தான். அவளின் இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. இத்தனை நாள் இப்படியொரு முறை அவனை அணைப்போமா என்று ஏங்கித் தவித்தாள். இப்போது அது நடக்கும்பொழுது அதை முழுவதுமாக அனுபவித்தாள். அவன் கைக்குள்ளே எப்போதும் அடங்கியிருக்கவே ஆசைப்பட்டாள்.

அவனும் நேற்று அவளைப் பார்த்த அந்தத் தோற்றம் நினைவுக்கு வர, அவளை விட்டு இன்னும் சில நாள் விலகியிருக்க முடியும் என்ற நம்பிக்கை உடைந்தது போனது. அவளைத் தன் புறம் திருப்பி மேலும் அணைத்துக்கொண்டான்.
“யுவா “ அவள் மெதுவாக அழைக்க
“ம்ம்ம்” அவளை விடாமலே அவனும் பேச
“ நான் குடுத்த டார்ச்சரால தான் என்ன லவ் பண்றேன்னு சொன்னியா? “
“ என்னோட லவ்வ நான் அஞ்சு வருஷம் முன்னாடியே சொல்லியிருப்பேன் ஆரு!,  சில காரணங்களால சொல்ல முடியாம போச்சு.ஐ அம் சாரி டா. நீ என்னை இப்போ தேடி வரலன்னா என் பிரச்சனை எல்லாம் முடிஞ்சப்பறம் நானே உன்னைத் தேடி வந்திருப்பேன் “
“ நான் உனக்காகக் காத்துட்டு இருப்பேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். எங்க அப்பா அதுவரை சும்மா இருப்பாருன்னு எப்படி நம்பின? என்னை வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா என்ன பண்ணியிருப்ப? “
“ அதெல்லாம் என் மாமனார் கிட்ட எப்பயோ பேசிட்டேன். அவரும் என்னைத் தவிர வேற ஒரு பையன என் பொண்ணுக்கு பார்க்க மாட்டேன்னு உறுதியா சொன்னபிறகு தான் நான் யூ எஸ் கிளம்பி போனேன்.”

அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனாள் ஆராதனா. அவனை விட்டு விலகி நின்று அவனைப் பார்க்க, அவனோ அவளை மீண்டும் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டே நின்றான்.
“ அதுனால தான் எங்கப்பா எல்லாத்துக்கும் சரின்னு சொன்னாரா? “ நடந்தவைகளை யோசித்துக் கொண்டே கேட்க,
“ ஆமா “
“ சரி அதை விடு. உனக்கு என்ன ப்ரச்சனை யுவா, முதல்ல அதைச் சொல்லு “ மிகவும் ஆர்வமாகக் கேட்க
அந்த நேரம் அவனது செல்போன் அடித்தது. அதை எடுத்துப் பார்த்தவன், 
“கதிர்” , அவளை விடுத்து போன் பேசச் சென்றான்.

“ யுவா , சித்து இங்க தான் இருக்கான். “
“ இப்போ தான் வந்தானா? அவன் நேத்தே வந்திருப்பான்னு எதிர்ப் பார்த்தேன். “ தெரிந்த விஷயத்தைப் போலச் சொல்ல
“ எப்படி டா ? “ வாயைப் பிளந்தான் கதிர்.
“ அதை விடு . நான் ஈவ்னிங் அங்க வந்திருவேன். நைட் ஊருக்குக் கிளம்பனும். அவன் கிட்ட நான் அப்போ பேசிக்கறேன். எல்லாப் பிரச்சனையையும் சீக்கரம் முடிக்கணும் . அவனை நைட் என்கூட கிளம்ப சொல்லு “
“ என்ன சொல்ற யுவா?! உன்கூட கூட்டிட்டு போறியா ?”
“ ஆமா ! அவங்க அப்பாவைப் பற்றி அவனும் தெரிஞ்சுக்கணும்” அவன்கிட்ட சொல்லிடு.
“சரி” போனை வைத்துவிட்டு சித்துவிடம் விஷயத்தைச் சொன்னான்.
“எங்க அப்பாவைப் பற்றிப் பேச அவன் யாரு ?” கொதித்தெழுந்தான் சித்து.
“ உனக்கு முன்னாடியே அவனுக்கு அப்பா ஆயிட்டாரு உங்கப்பா” கதிர் பொறுமையாகச் சொல்ல
தன் தலையில் இடி விழுந்ததைப் போல அங்கேயே நடுங்கிப் போய் அமர்ந்தது விட்டான்.

பல குழப்பங்களைத் தாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சித்தார்த். யாரிடம் கேட்பது , என்ன கேட்பது என்று குழம்பித்தவித்தான். இத்தனை நாள் மனதில் உயரத்தில் வைத்திருந்த தந்தை இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பாரா என்பது அவனுக்கு இன்னமும் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.
எப்படி இருந்தாலும் எதையும் முழுதாகத் தெரிந்துகொள்ளாமல் ஒரு முடிவிற்கு வரக் கூடாது ஏனெனில் இது பல பேர் வாழ்க்கையை பாதிக்கும். தீவிரமாகத் தனக்குள்ளே யோசித்துப் பின் ஒரு முடிவிற்கு வந்தான். இரவு யுவராஜூடன் கிளம்பத் தயாரானான்.
இந்தச் சிந்தனையில் சக்தியைப் பற்றி அவன் சிறிதும் யோசிக்கவில்லை. சக்தியின் இல்லத்தில் அவள் தலையில் இடியை இறக்கிக் கொண்டிருந்தார் அவளுடைய தந்தை ஸ்ரீனிவாசன்.
“ சக்தி நீ சின்னப் பொண்ணு. அப்பா உனக்கு எதைச் செய்தாலும் நல்லதையே செய்வேன் என்று நம்பிக்கை இல்லையா? “ பாசத்தையும் கண்டிப்புடன் காட்டினார்.

“ அப்பா! நான் உங்க முடிவுலத் தப்பிருக்கறதா சொல்லல. நீங்க உங்க கடமையைச் செய்யறீங்க. ஆனா என் மனசுக்குப் பிடிக்கணும் இல்லையா?” தவிப்பில் பேசினாள் சக்தி.
“ நான் பாத்திருக்கறப் பையன உனக்குக் கண்டிப்பா பிடிக்கும். அதைவிட அந்த அம்மா ரொம்ப நல்லவங்க. உன்னை நல்லா பாத்துப்பாங்க. இந்தக் காலத்துல அப்படியொரு நல்ல மனசு இருக்கறவங்கள பாக்கறது ரொம்ப கஷ்டம் “ அவள் அருகில் அமர்ந்து பொறுமையாகச் சொல்ல
“ நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கப்பா …” அவரிடம் புரிய வைக்க முயன்றாள்.
“ இங்க பாரு சக்தி , நாம இப்போ நிச்சயம் மட்டும் தான் பண்ணப் போறோம். கல்யாணம் உனக்குப் பரீட்சை முடிஞ்ச பிறகு தான். இப்போ போய்ப் படி .” சொல்லிவிட்டு அவர் தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
தன் அறைக்குச் சென்று தாழிட்டுக்கொண்டு உடனே சித்துவிற்கு போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. பல முறை முயன்றும் பலனில்லை. அடுத்ததாகச் சுஜாவிற்கு பேசினாள். அவளிடம் அனைத்தையும் சொல்ல,
“ சக்தி நான் நினச்சது நடந்துடுச்சு “ மெதுவாகச் சொல்ல ,
“ என்ன சொல்ற சுஜா? உனக்கு முன்னாடியே தெரியுமா ? இப்போ தான எனக்கே சொல்றாங்க “ குழப்பத்துடன் கேட்டாள்.
சுஜா அன்று அவள் வீட்டிற்கு வந்தபோது ஜானகியிடம் பேசியதைப் பற்றிச் சொல்ல,
‘அப்போது சொல்லியிருந்தால் மட்டும் என்ன செய்திருக்க முடியும் , சித்து மனதில் எப்போதோ வந்துவிட்டானே ‘ என்ன செய்வது என்று குழம்பினாள்.
“இப்போ என்ன செய்யப் போற சக்தி, சித்து அண்ணா கிட்ட சொல்லிட்டியா ?” அவளும் வருந்தினாள்.
“ அவர் போன் எடுக்கல , எங்க அம்மா கிட்ட பேசிப் பாக்கறேன் . அதுவும் முடியலனா வரப்போற அந்தப் பையன்கிட்டயே பேசிக்கறேன். வேற வழியில்ல “ ஒரு முடிவுடனே அவள் சொல்ல,
“ நல்ல ஐடியா தான். லவ் பண்றேன்னு சொன்ன அவங்க புரிஞ்சுக்க சான்ஸ் இருக்கு “ நிம்மதியுடன் சுஜா சொன்னாள்.

“ நீ எதுக்கும் சுந்தர் அண்ணா கிட்ட சொல்லி வீட்டுக்கு போனதும் சித்துவ என் கிட்ட பேச சொல்லு “
“ சொல்றேன் சக்தி. அப்புறம் இன்னொன்னு கேக்கணும் ?!” வழிந்து கொண்டே கேட்க
“ என்ன டீ ? சொல்லு ?”
“ இப்போ உன்னைப் பார்க்க வரப் போறப் பையன் போட்டோ பாத்தியா ? எப்படி இருக்கான் ?” சிரித்துக் கொண்டே கேட்க
“ உன்னைக் கொல்லப் போறேன் . நானே டென்ஷன்ல இருக்கேன் , இதுல நீ சைட் அடிக்க ஆள் தேடுறியா . சுந்தர் அண்ணா கிட்ட சொல்றேன் …”
“ சும்மா கேட்டேன் … கோச்சுக்காத .. பிரச்சனை எல்லாம் முடிஞ்சப்பறம் போட்டோ காட்டு .. பை சக்தி “ அவசரமாகச் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
தலையில் அடித்துக்கொண்டு , தன் தாயிடம் எப்படி சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

யுவராஜ் சிங்கப்பூர் கம்பெனியுடன் செய்த ஒப்பந்தத்தை அன்றே ரத்து செய்தான். தனக்காகத் தான் இதைச் செய்தான் என்று ஆராதனா நினைத்து மனதில் வருந்தினாள். அவனிடம் அதைப் பற்றிக் கேட்க
“ அடுத்தவன் உன்னப் பார்த்தாலே எனக்கு கோபம் வருது ஆரு ! இத்தனை நாள் நான் இப்படி எல்லாம் ஃபீல் பண்ணது இல்லை. இப்போ அப்படி இருக்க முடியல . அவன் உன்னை லிஃப்ட்ல உரசும் போது எனக்கு அவனை அங்கேயே கொல்ற அளவு கோபம் வந்துச்சு. அதுவும் நீ கண்டுக்காம இருந்தப்ப எரிச்சல் இன்னும் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதுனால தான் உன்கிட்ட கத்தினேன் . சாரி டீ ! “ அவள் கன்னத்தில் கைவைத்து சொல்ல ,
இதற்கு மேல் என்ன வேண்டும். தன்னை அவன் இந்த அளவு நேசிக்கிறான் என்பதே அவளுக்கு மனம் முழுதும் தித்தித்தது.
“யுவா! உன்னோட அன்பு எனக்குக் கிடைச்ச வரம். அவன் கைமீது தானும் கைவைத்துச் சொல்ல,
“ எனக்காக இவ்வளவு நாள் நீ காத்திருந்ததுக்கு நான் தான் குடுத்துவெச்சிருக்கேன் ஆரு” இருவரும் அவர்களின் காதலில் உருகினர்.
இருவரும் கிளம்பி விமானத்தில் வந்து இறங்கினர்.
“ஆரு ! நீ வீட்டுக்குப் போ. நான் ஒரு ரெண்டு நாள் வெளியூர் போறேன். வந்து நம்ம விஷயத்தைப் பற்றி அம்மா கிட்டே பேசறேன். “
“சரி யுவா. டேக் கேர். இந்த விஷயத்தை முதல்ல கதிர் கிட்ட சொல்லணும். எனக்காக உன்கிட்ட ரொம்ப பேசினது அவர்தான் “ அவனைப் பார்த்து கேட்க
“ ஆமா! விஷயம் தெரிஞ்சா என்னைக் கிண்டல் பண்ணப் போறான். நான் அப்பறமா அவன் கிட்ட பேசறேன் . நீ பார்த்துப் போ “
அவளை வழியனுப்பி விட்டு தானும் வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டில் அவனை மிகவும் ஆர்வமாக எதிர்ப்பார்த்திருந்தார் மலர்மொழி. அவனை வாசலிலே வரவேற்று அழைக்க, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாய்த தோன்றியது.

“ என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ? என்ன விஷயம் ? “
“ என் பையனுக்குக் கல்யாணக் களை வந்துடுச்சு. இனிமே எனக்கு என்ன கவலை ?!“ சொல்லிக்கொண்டே அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
“ வாடா புது மாப்பிள்ளை ! “ அன்பரசுவும் அவனைச் சீண்ட
‘ அதுக்குள்ள கதிர்க்கு தெரிஞ்சு அவன் இவங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டானா! வீட்டுக்கு வரதுக்குள்ள எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சா ‘ மனதில் நினைத்தவன் ,
“ நானே சொல்லனும்ன்னு இருந்தேன் , அதுக்குள்ள நீங்களே …. “ சொல்லி முடிப்பதற்குள்
“ என் பையனுக்கு எப்போ என்ன வேணும்னு எனக்குத் தெரியாதா ? “ மலர் அவனைத் தொடர்ந்து பேசினார்.
“ எப்போ அவங்க வீட்டுக்குப் போகலாம் யுவா ? பெண்ணோட போட்டோ வேணுமா ” அன்பரசு சிரித்துக்கொண்டே கேட்க
ஆராதனாவைத் தான் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்து ,
“ போட்டோ எதுக்கு ?! … ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க , கொஞ்சம் வெளியூர் போகவேண்டியது இருக்கு , அதுக்கப்பறம் போகலாம் “ தன் அறைக்குச் செல்ல படிகளில் ஏறிக்கொண்டே சொன்னான்.
“ அப்போ அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லிடலாமா “ இவ்வளவு சீக்கிரம் அவன் சம்மதிப்பான் என்று நினைக்கவில்லை. அவன் மனம் மாறுவதற்குள் வேலையைத் துவக்க எண்ணி மலர் கேட்க ,
“ சரிம்மா “ சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
சிறிது நேரத்தில் அன்பரசு அவன் அறைக் கதவைத் தட்ட , அவரை உள்ளே அழைத்தான் யுவா.
“ யுவா ! உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும் . அது நீ கிளம்பும் முன்னாடி சொல்லனும்ன்னு தான் வந்தேன். “ பீடிகையுடன் ஆரம்பிக்க
“ சொல்லுங்க மாமா “ அவரை அமரவைத்துக் கேட்க
“ உங்க அம்மாக்கு மனசில இன்னும் மனோகரோட நினைப்பு இருக்கு யுவா . அவ நம்ம கிட்ட காட்டிகல , ஆனா மனசுக்குள்ளயே வெச்சு வருத்தப் படறா “ நிதானமாக ஆரம்பித்தார்.

 

 

“ இன்னும் அம்மாக்கு அவர் மேல அன்பிருக்குன்னு சொல்றீங்களா “ சற்று கடுமையாவே கேட்க
“ கோபப்படாத யுவா . உங்க அம்மா விட்டுக் கொடுத்ததால தான் அவன் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான், அந்த நேரத்துல உங்க அம்மா அங்க போயிருந்தா நிச்சியம் அந்தக் கல்யாணம் நடந்திருக்காது. உங்க அம்மாவை அவன் உண்மையா நேசிச்சான்…. “ அவர் எடுத்துறைக்க
“ மாமா ! உண்மையான நேசம் இருந்தா , வேற பொண்ண எப்படி கல்யாணம் பண்ண முடியும்? அதுவும் அவ இறந்து ஒரே மாசத்தில !? இது எல்லாமே ஒரு நாடகம்ன்னு உங்களுக்குத் தோணலையா ?! “ அவன் குரல் ஓங்கியது.
“ அவனுக்கு என்ன மாதிரி சூழ்நிலையோ , நாம அதையும் கொஞ்சம் பார்க்கணும் யுவா , அவன் கிட்ட கொஞ்சம் அவசரப் படாம நீ நிதானமா பேசு .. “ அவனிடம் கெஞ்சாத குறையாகக் கேட்க
“ நிதானமா அவர் யோசிச்சு இருந்தா நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது. நான் மட்டும் எதுக்கு நிதானமா யோசிக்கணும். இந்த விஷயத்தை என்கிட்டே விட்டுடுங்க மாமா , நான் பாத்துக்கறேன். “ அத்துடன் பேச்சை முடித்தான்.
இதற்கு மேல் அவனை எதுவும் சொல்ல முடியாது என்றுணர்ந்த அன்பரசு, அவனுக்கு அங்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்ல,
“ நான் ஏன் வேற எங்கயோ தங்கணும். அவங்க வீட்டுல தான் தங்கப் போறேன். “ அவன் சொன்னதும் சிறிது பயந்தார்.
ஆனால் அது ஒரு வகையில் அவர்களைப் புரிந்துக் கொள்ள அவனுக்கு உதவலாம் என்று நினைத்துத் தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டார் .
யுவராஜ் மலரிடம் அவர்களின் சொந்த ஊருக்குச் செல்வதாகச் சொல்ல , முதலில் தடுத்தார் .
“அந்த ஊர்ல நீங்க இருந்த அடையாளமே இல்லாம போய்டக் கூடாதுன்னு தான் இப்போ நான் போறதே. என்னைத் தடுக்காதீங்க ! “ முடிவு செய்து அவன் பேச , அதற்கு மேல் மலரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அவன் செயல்கள் எப்பொழுதும் தப்பாக இருந்ததில்லை என்பதால் , அவன் செயலுக்குத் தடையாக இருக்கவில்லை.

 

சித்தார்த் சுந்தரிடம் தன் நிலையைச் சொல்ல முடியாமல் தவித்தான். தந்தையைப் பற்றி எதுவும் தெரியாமல் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே முடிவு செய்ததைப் போல ஊர்க்கு கிளம்புவதாகச் சொன்னான்.
“ சரி சித்து நானும் அப்போ என் வீட்டுக்குப் போறேன். ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து. “
“ சரி சுந்தர். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். நீ இப்போ கிளம்பு “ அவன் ஆர்வமே இல்லாமல் பேசினான்.
“என்ன சித்து , ஏன் ஒரு மாதிரி இருக்க ? உடம்பு சரியில்லையா ? நாளைக்கு வேணா கிளம்பு “ அக்கறையுடன் அவன் சொல்ல
“ இல்லை சுந்தர். இன்னிக்கு கண்டிப்பா போகணும். உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. கவலைப் பட ஒண்ணுமில்லை. கொஞ்சம் டையர்டா இருக்கு. சரி ஆயிடும். “ அவனுக்குச் சமாதானம் கூறி அனுப்பி வைத்தான்.
அவன் கிளம்பியதும் , பார்வதிக்கு போன் செய்து தந்தையின் உடல் நிலைப் பற்றிக் கேட்டான். அவர் நன்றாக இருப்பதாகச் சொல்ல ,
“ நான் இனிக்கு ஊருக்குக் கிளம்பி வரேன் அம்மா” எப்போதும் இருக்கும் கலகலப்பு அவனிடம் இல்லை.
“ வா சித்து. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு ? “ சற்று சந்தேகமாகக் கேட்க ,
“ ஒன்னும் இல்ல , கொஞ்சம் தொண்டை கட்டியிருக்கு அவளோ தான் , நீங்க அப்பா கிட்ட சொல்லிடுங்க, நான் காலைல அங்க இருப்பேன் “ சொல்லிவிட்டு வைத்தான்.
யுவராஜிற்காகக் காத்திருந்தான் சித்து.
சிறிது நேரத்தில் அவன் வீட்டு வாசலில் கார் வரும் சத்தம் கேட்டு வெளியே வந்தான் சித்து . காரை விட்டு இறங்கி வெளியே வந்தான் யுவராஜ்.

சித்து அவனைப் பத்திரிகையில் பார்த்திருக்கிறான். ஆனால் இப்போது முதல் முதலாக அவனை நேரில் பார்க்கிறான். ‘தனது தந்தையின் சாயல் தன்னிடம் இருந்தாலும் , யுவராஜிடம் இன்னும் அதிகாமாக இருக்கிறதோ! இல்லை மனக் குழப்பத்தின் காரணமாக அப்படித் தோன்றுகிறதா ?! ‘ அவனை நோக்கி யோசித்துக் கொண்டே நடந்தான்.
யுவராஜிடம் மருந்துக்கும் சிரிப்பில்லை. இறுகிய முகமும் , கத்தி போன்ற பார்வையும் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதாகவே இருந்தது. அவனிடம் இருந்த கம்பீரம் மற்றவர்களைச் சற்று மிரட்டத்தான் செய்யும். இவனிடம் எப்படி பேச்சைத் துவக்குவது என்று சித்து சற்று திணறினான்.
“ ட்ரங்குல பேக்கை வெச்சுட்டு முன்னாடி ஏறு “ ஆணை பிறப்பித்து விட்டுக் காரில் அமர்ந்தான்.
அவன் சொல்லைத் தட்டாமல் அவனும் வந்து அமர, இருவரும் அமைதியாகவே பயணப்பட்டார்கள்.
அவனிடம் பேச வார்த்தைகளைத் தேடினான் சித்து. அவனை எப்படி அழைப்பது என்று தடுமாறினான். நகரத்தின் வாகன நெரிசல்கள் குறையும் வரை எதுவும் பேசவில்லை. யுவராஜும் மிகவும் கடுமையாகவே காணப்பட்டான். நகரத்தைத் தாண்டிச் சிறிது தூரம் சென்றபிறகு இருள் கவ்வத் தொடங்கியது.
சிறிது தூரம் சென்றதும் காரின் சக்கரம் வழியில் இருந்த ஒரு முட்செடியின் மீது ஏறியதால் அந்த டையரில் காற்று இறங்கியது. அத்துடன் வண்டியும் நின்றுவிட,
“ ஷிட் “ ஸ்டீயரிங் வீலில் கைகளை ஓங்கி அடித்தான் யுவா.
இருவரும் வண்டியை விட்டு இறங்கினர். அந்த அந்தரவாளிக் காட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. இரு புறமும் வயல்கள் இருக்க சாலையோர மரங்களிலிருந்து எந்த அசைவும் இல்லை. ஆகாங்கே சிறு சிறு பூச்சிகளின் ஒலியும், வயல்களில் எலியோ வேறு எதுவோ ஏற்படுத்தும் சிறு சல சலப்பும் அங்கிருந்த நிசப்த்தத்தை கலைத்தது. நிலவின் ஒளி மட்டுமே அந்த இடத்தை அடையாளம் காட்டியது.
தன் காரின் பேனட்டில் ஏறி அமர்ந்தான் யுவராஜ்.

அவனைப் பார்த்து ஏதோ கேட்க முற்பட்டான் சித்து. அதற்குள் யுவா தன் மௌனம் களைந்து பேச ஆரம்பித்தான்.
“ இந்தக் காட்டுல போக வழி தெரியாம , இதற்கு மேல போகவும் முடியாம இப்போ நாம நிக்கறோம் , இதே மாதிரி தான் எங்க அம்மாவை உங்க அப்பா விட்டுட்டு போனாரு “ சாதரணமாக ஆரம்பித்து , அடிக்குரலில் பேசி முடித்தான்.
“ எங்கப்பா அப்படிப் பட்டவர் இல்லை “ ஒரே வார்த்தையில் பதில் தந்தான்.
கீழே இறங்கி அவனை நோக்கிக் கனல் பார்வையை வீசினான்.
“ என்ன தெரியும் உங்க அப்பாவைப் பற்றி உனக்கு ?! ரொம்ப நல்லவருன்னு நினச்சுட்டு இருக்க . ஆனா உங்க தாத்தா கூடச் சேந்துக்கிட்டு எங்க அம்மாவைச் சாகடிக்க நினச்ச கொலைகாரன். அவன் நல்லவனா ? “ மனதில் இருப்பதைக் கொட்ட ஆரம்பித்தான்.
“ நோ ! இதை நான் நம்ப மாட்டேன் . எங்க அப்பா யாருக்கும் துரோகம் பண்றவரு இல்லை” காதை மூடிக்கொண்டு சித்து கத்த ,
“ லுக். எனக்கும் பொறுமை கம்மி. உனக்கு உங்க அப்பாவைப் பற்றிச் சொல்லணும்ன்னு தான் உன்னை வர சொன்னேன். முழுசா கேட்டுட்டு அப்புறம் சொல்லு “ யுவா மலர் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

யுவராஜ் தான் தனது மாமா அன்பரசுவின் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்களைச் சித்துவிடம் சொல்ல ஆரம்பித்தான்.

அன்று நடந்தவை ( யுவா கேட்டுத் தெரிந்துகொண்ட மலரின் வாழ்க்கை )  ………………

யுவராஜ் சிறு வயதிலிருந்தே தந்தையைப் பற்றி அறிந்ததில்லை. எப்போது அவன் அப்பாவைப் பற்றிக் கேட்டாலும், “ அப்பா வெளிநாட்டுல இருக்காரு, நீ நல்லாப் படிச்சா உன்னை வந்துப் பார்ப்பேன்னு சொல்லியிருக்காரு “ என்று சொல்லியே வளர்த்தனர். அதுவே அவன் மிகவும் நன்றாய்ப் படிக்க ஒரு காரணமாக அமைந்தது.
அனைத்துப் பிள்ளைகளும் அவர்களின் தந்தையுடன் வெளியில் செல்வதைப் பார்க்க அவனுக்கு ஏக்கமாக இருக்கும். தந்தை என்ற உறவை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தான். சில நேரம் மலரை அப்பாவிடம் கூடிச் செல்லும்படி கேட்டு நச்சரிப்பான். சிறிது நேரத்தில் அழது அழுது தூங்கிவிடுவான்.

ஆனால் அவன் வளர வளர் இந்தக் காரணங்கள் அவனுக்குப் போதுமானதாக இல்லை. பத்தாவது படிக்கும்போது பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு அவன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் வந்திருக்க இவன் மட்டும் தனது மாமா அம்மாவுடன் சென்றான்.
சக மாணவன் ஒருவன் “ உங்க அப்பா எப்பவுமே வரமாட்டார் போலிருக்கே! அப்படி ஒருத்தர் இருக்காரா இல்லையா ? “ எனக் கேட்டு அவனைக் கிண்டல் செய்ய அவனுக்கு அது மிகுத்த கோபத்தையும் அவமானத்தையும் தர, வீட்டிற்கு வந்து இருவரையும் மாறி மாறிக் கேள்விகளைக் கேட்டுக் குடைந்த்துவிட்டான்.
மலர்மொழிக்கு என்ன சொல்வதன்று தெரியவில்லை. அன்பரசுவிற்கு மலரின் நிலைமை புரிய , யுவராஜை தனியாக அழைத்துச் சென்றார். அவனுக்குப் புரியும் வகையில் சாந்தமாக எடுத்துரைத்தார்.
“ அப்பாவுக்கு வெளிநாட்டில் வேலை யுவா. அடிக்கடி வந்து போக முடியாது. “ அவன் தலையை வருடி மெதுவாகச் சொல்ல

“ வர வேண்டாம். ஒரு போன் பண்ணிக் கூட இதுவரை பேசினது இல்லை. ஒரு லெட்டர் கூடப் போடல. அது ஏன் ?! “ அவரின் கையைத் தட்டி விட்டுக் கோபமாகக் கேட்டான்.
என்ன சொல்லி இவனைச் சமாதானம் செய்வதென்று அவருக்கும் சங்கடமாக இருக்க,
“ யுவா நீ கொஞ்சம் பெரிய பையனா வளந்துட்ட. சில விஷயங்கள் என்னால சொல்ல முடியலப்பா. நீ வளர்ந்ததும் நானே உனக்குச் சொல்றேன். நம்ம வீட்ல தான் அம்மா அப்பா போட்டோ இருக்கே ! இனிமே யார் கேட்டாலும் அவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துகாட்டு. சரியா ? “
அவர் பதிலில் முழுதாகத் திருப்தியில்லை என்றாலும் அந்த நேரத்தில் அவனுக்கு அந்தப் போட்டோவை வைத்து அனைவரையும் கிண்டல் செய்ய விடாமல் வாயை அடைக்கலாம் என்பதால் அதை ஏற்றுக்கொண்டான். தந்தைக்கான ஏக்கங்களை அவனுக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.

 

அவனிடம் அப்படி சொல்லி இன்னும் எத்தனை நாள் சமாளிக்க முடியும். என்றாவது ஒரு நாள் அவனுக்கும் உண்மை தெரியத்தானே வேண்டும். அவனிடம் அதைக் கூறக் காத்திருந்தார் அன்பரசு.
நாட்கள் வேகமாக ஓடின. அன்பரசு சின்னதாய் வைத்திருந்த மளிகைக் கடை பெரிய ஷாபிங் காம்ப்ளெக்ஸ் ஆனது. மலர் வீட்டிலேயே செய்து கொண்டிருந்த தையல் மற்றும் வேலைகள் இன்னும் சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்.
யுவாவும் கல்லூரியில் அடி எடுத்து வைத்தான். கதிர் நட்புக் கிடைத்தது. அதன் பிறகு தான் ஆராதனா அவனைக் காதலிப்பதாகச் சொல்லித் துரத்திக்கொண்டிருந்தாள். அன்று அவள் கல்லூரியில் எல்லோர் முன்னிலையிலும் நோட்டீஸ் அடித்துச் சொல்லிய பிறகு அவள் துணிச்சல் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளின் ஒவ்வொரு செயலையும் ஆரம்பித்திலிருந்து நினைத்துப் பார்த்தவன் மனதில் மெல்ல மெல்ல அவள் குடியேறினாள்.
அன்று வீட்டிற்கு ஒரு புது மனநிலையுடன் சென்றான். காதல் கொண்ட மனது, அவனை உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஆனால் வீட்டில் மலர்மொழி மனோகருடன் தான் இருக்கும் படத்தை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். இவனைக் கண்டதும் எழுந்து உள்ளே சென்றார்விட்டார். மலர் அழுது அவன் இது வரைப் பார்த்ததில்லை.
வருத்தமாக இருந்தாலும் அவர் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்வார். அவன் பார்க்க அவர் அழுததில்லை. இன்று
இதற்கு ஒரு முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்று அவன் மாமாவைக் கடையிலிருந்து வரவைத்தான்.
அம்மாவைக் கூப்பிட்டான்.
“ யுவா உனக்கு இந்த விஷயத்தை என் வாயல சொல்ல முடியாதுப்பா. அண்ணா உனக்குச் சொல்லுவாரு. எல்லாம்
தெரிஞ்ச பிறகு நீ என்கிட்ட என்ன கேட்கணுமோ கேளு. “ கண்ணீருடன் தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டார்.
யுவாவிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
“ மாமா ! என்ன தான் நடந்துச்சு? அப்பான்னு ஒருத்தர் எனக்கு இருக்காரா இல்லை இறந்துட்டாரா ? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லாம என்னை ஏமாத்தறீங்க ? இப்பயாவது எல்லாத்தையும் சொல்லுங்க. ப்ளீஸ் !” அவரிடம் அன்று எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளும் வேகம் அவனை அவ்வாறு பேச வைத்தது.
“யுவா! இதுக்கு மேலயும் உன்கிட்ட மறச்சு ஒன்னும் ஆகப் போறதில்லை. மலரும் நானும் எங்க அம்மா கூடக் கிராமத்துல ரொம்ப சந்தோஷமா வாழ்ந்த்திட்டு இருந்தோம். அந்த ஊர்ல இருந்த பெரிய பண்ணையார் வீட்டுப் பிள்ளை தான் உங்க அப்பா மனோகர்” அடுத்து சொல்லவதற்கு முன் ஒரு சிறு இடைவெளி விட்டார்.
“உங்க அம்மாவைக் காதலிச்சு பிறகு அவ வயித்துல நீ வந்துட்ட , அது எங்களுக்குத் தெரிஞ்சு மலரை நல்லாத் திட்டினோம் அடித்தோம். அவ அப்பவும் மனோகர் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தா. அவரைக் கூப்பிட்டு பேசச் சொன்னா. அப்போ அவரே வீட்டுக்கு வந்து மலரைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னான். அவங்க அப்பா இதுக்கு சம்மதிக்க மாட்டாருன்னும் , ஆனா மலரைத் தவிர வேற யாரையும் மனைவியா ஏத்துக்க முடியாதுன்னும் சொன்னான் “ பழைய நினைவுகளில் அவர் கண்கள் குளமாயின.

“ அப்பறம் என்ன ஆச்சு மாமா ? சொல்லுங்க ? “ யுவா அவசரமாகக் கேட்க
“ எங்க முன்னாடியே அடுத்த நாளே ஒரு கோயில்ல அவங்க கல்யாணம் நடந்தது. ஒரு மாசம் அவன் வீட்டுக்கே அவன் போகல. எங்க வீடு குடிசையா இருந்தாலும் அங்கேயே இருந்தான். அவங்க அப்பா எவ்வளவோ தடவை கூப்பிட்டுப் பார்த்தும் அவன் அசையல. ஒரு நாள் அவரே எங்க
வீட்டுக்கு வந்து அவரோட பிடிவாதத்தை விட்டுட்டேன்னு சொல்லி மன்னிப்புக் கேட்டாரு “ அதற்குமேல் நிற்க முடியாமல் கீழே அமர்ந்தார் அன்பரசு.
ஓடிச்சென்று அவருக்குத் தண்ணீர் எடுத்து வந்தான். அவரைச் சிறிது ஆசுவாசப் படுத்தி பின் நிதானமாகக் கேட்க
“ மலர் அவனைச் சமாதானப் படுத்த, இருவரையும் ஆசிர்வதித்தார். அவன் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேரத் தபால் வந்திருப்பதாகச் சொன்னார். அதை அவனிடம் கொடுத்து விட்டு, அவன் ஊரிலிருந்து திரும்பி வந்தபிறகு இருவரையும் சேர்த்து வீட்டுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார். அதை நம்பி அவன் செல்ல …. “ தாங்கமாட்டாமல் அழுதார் அன்பரசு.
“ என் தங்கைக்கு நினைக்க முடியாத கொடுமையைச் செய்தார் அந்தப் பெரிய மனிதர். நான் அங்கு நடத்தி வந்த பெட்டிக் கடைக்குச் சாமான்கள் வாங்க வெளியூர் சென்றேன். அப்போ மலரை அந்தப் பெரியவர் வரச் சொன்னதாக இருவர்
வந்து சொல்ல, வயிற்றில் நான்கு மாதமாக உன்னைச் சுமந்துக் கொண்டு அவள் மிகவும் ஆவலாகச் சென்றாள்.”
“ அப்பறம் என்ன ஆச்சு .. சொல்லுங்க .” யுவாவின் மனதில் ஏதோ பாரம் ஏற ஆரம்பித்தது.
“பாதி வழியிலேயே அவளை ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்றனர். தண்ணீர் கறை கடந்து ஓடியது. அவள் திமிறி ஓட அந்த இரண்டு வலியவர்களும் அவளைத் தண்ணீரில் தள்ளித் தலையை முக்கினர் “ அவரின் நெஞ்சமும் உடலும் சொல்லும்போது கூடப் பதறியது.
“ அம்மா………………. “ கத்தியே விட்டான் யுவராஜ்.

error: Content is protected !!