KVK-16

KVK-16

அதைக் கேட்டு இடிந்துபோய் சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டார். இப்படியொரு குடும்பம் இருக்கும் என்று அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
“ இவர் தான் யுவராஜ் அப்புறம் இவங்க அம்மா தான் மலர்மொழி “ தன் தாயை தன் தோளில் சாய்த்துக்கொண்டு சொன்னான்.
சிறிது நேரம் கழித்து யுவாவிடம் எழுந்து சென்றார். அவன் கையைப் பிடித்துக் கொண்டார். கண்களில் நீர் பெருகியது. யுவாவோ, ‘தன் வாழ்க்கைப் பறிபோய்விடும் என்று அழுகிறாரோ’ என நினைத்தான்.
“ யுவாராஜ்! உங்க அம்மா கிட்ட நான் மன்னிப்புக் கேட்கணும். அவங்கள பார்க்க முடியுமா?!” அவன் கையை விடாமல் பிடித்துக்கொண்டு கேட்டார்.
இதை அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. ‘என் அம்மாவிடம் எதற்காக இவங்க மன்னிப்புக் கேட்கணும். இவங்க என்ன செஞ்சாங்க?!’ அவன் பார்வதியின் நடவடிக்கையில் சங்கடமாய் நெளிந்தான்.
“ உங்க அம்மாவோட வாழ்க்கை இப்படி ஆக நானும் ஒரு காரணம்ன்னு தோனுதப்பா…”
“ நீங்க எப்படிக் காரணம் ஆகா முடியும்? உங்களுக்கு அவங்களப் பத்தி எப்படித் தெரிஞ்சுது?” யுவராஜ் கேட்க சித்துவும் அருகில் வந்தான்.
“ அவருக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அதுவும் இந்த ஊருக்கு வந்தபிறகு தான். அன்னிக்கு மயக்கம் வந்தபிறகு டாக்டர் அவர் சரியா தூங்கறது இல்லைன்னு சொன்னாரு.
நல்லாத் தூங்க மாத்திரைக் கூடக் குடுத்தாரு. அவருக்கு அதை நான் குடுத்த பிறகு அவரு தூக்கத்தில ‘மலர் மலர்’ ன்னு புலம்பினாரு. அவருடைய படுக்கைக்கு அடியில ஒரு கிழிந்த புடவை வைத்திருந்தார். எனக்கு அப்போ ஒன்னும் புரியலை.

அப்புறம் ஒரு நாள் அவருக்குப் போர்வை எடுக்க பீரோ வை திறந்தேன் . அந்தப் போர்வைக்குள்ள ஒரு பழைய போட்டோ இருந்தது. இவரும் இன்னொரு பெண்ணும் கல்யாணக் கோலத்தில இருந்தாங்க.
எனக்கு மயக்கமே வந்துடுச்சு. அவர் மனசில ரொம்ப நாளா எதையோ யோசிக்கறாருன்னு தெரியும் ஆனா இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட மறச்சியிருப்பாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
நான் இவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா இருந்தேன். ஆனா , நிச்சயமா இந்த விஷயம் எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா , நான் அவங்க வாழ்க்கையில குறுக்க வந்திருக்க மாட்டேன். என்னை என்னாலையே இப்போ மன்னிக்க முடியல. நிச்சயம் அவங்க கிட்ட நான் மன்னிப்புக் கேட்கணும்.
அவங்க இவர் இல்லாம இத்தனை நாள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க அதுவும் ஒரு குழந்தையோட, நினைக்கவே ரொம்ப வேதனையா இருக்கு, எனக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியாதுப்பா ..
நீயும் நிறைய கஷ்டப்பட்டிருப்ப.அப்பா இல்லாம வளருவது ரொம்ப கஷ்டம், அந்தப் பாவத்துல எனக்கும் பங்கிருக்கு , என்னை மன்னிச்சிடு யுவா .” சொல்லிவிட்டு அழுது கொண்டே இருந்தார்.
பாவம்! பார்வதியால் என்ன செய்ய முடியும்? மனோகர் ஏன் அப்படி நடந்துக்கொண்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இதில் சம்மந்தப் பட்ட அவர் தந்தையும் இப்போது உயிருடன் இல்லை. அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.

“ நீங்க எந்த வகையிலும் பொறுப்பில்லை. இதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க. என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிப்போம்.” யுவா அவரைத் தேற்ற ,
சித்து , “ வாங்க அப்பா கிட்ட இதைப் பத்தி கேட்டே ஆகணும். போகலாமா ?” என்று கிளம்ப,
“ நீங்க போயிட்டு வாங்க , நான் வரல “ பார்வதி குழந்தை இருந்த அறைக்குச் சென்றார்.
“சித்து , எங்கம்மாவைப் பற்றியோ இல்ல என்னைப் பற்றியோ இப்போ உங்கப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். நான் உன்னோட பிரிண்டாவே இப்போதிக்கு இருக்கட்டும். அவரோட தப்பை அவர் ஒத்துக்கணும். அதுக்குஅப்புறம் சொல்லிக்கலாம்.. என் அம்மா உயிருடன் இருக்காங்கன்னு தெரிஞ்சா அவர் மாத்திக்கூடப் பேசலாம்.” இறுகிய முகத்துடனே யுவா சொல்ல,
“அஸ் யூ விஷ் அண்ணா “
இருவரும் மனோகர் இருந்தத் தோப்பிற்குச் சென்றனர். மாமரம் நிறைந்த தோப்பு அது. பக்கத்தில் பம்ப் செட்டின் சப்தம் கேட்க , அங்கே சென்று பார்த்தனர். ஒருவர் மட்டும் அங்கே வேலை செய்துகொண்டிருந்தார்.
அவரிடம் கேட்க, “ முதலாளி எப்பவும் தோப்பு வீட்டுக்குப் பின்னாடி தான் இருப்பாரு. போய்ப் பாருங்க “ என்றார்.
மிகவும் அழகான இடம். இருவரும் அந்த வீட்டை நோக்கி நடந்தனர். தழைத்து வளர்ந்த மாமரங்கள் வெய்யிலின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து இருந்தது. காய்ந்த சருகுகளில் இவர்கள் நடக்கும் சப்தங்கள் மட்டுமே கேட்டது. வீட்டின் அருகில் சென்றனர். அங்கே ஆள் அரவம் இல்லை. வீட்டின் பின்னால் இருந்து சப்தம் வந்தது.
இருவரும் வீட்டின் மறுபுறம் சென்றுப் பார்க்க , அங்கே ஒரு சாதாரணக் கயிற்றுக் கட்டிலில் மனோகர் படுத்து மரத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.
“ அப்பா!” மெதுவாகச் சித்து அழைத்தான்.
சட்டென எழுந்து இருவரையும் பார்த்தார்.
“வாங்க. வாப்பா யுவராஜ். ஏதோ பேசனும்ன்னு சொன்ன, நானும் உன்கிட்ட நிறைய பேசணும் . வாங்க வீட்டுக்குள்ள போகலாம்.” இருவரையும் அந்தத் தோப்பு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
அது ஆடம்பரம் இல்லாத ஒரு ஒட்டு வீடு. அந்த வீட்டின் திண்ணையிலேயே அமர்ந்தான் யுவா. பின் அனைவரும் அங்கேயே அமர, சித்து பேச ஆரம்பித்தான்.

“ அப்பா! உங்க கிட்ட நானும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“ சொல்லு சித்து “
“ உங்ககிட்ட நான் இதைப் பத்தி பேசறது சரியா தப்பான்னு தெரியல. ஆனா பேசியே ஆகவேண்டிய நிலைமை. “ சற்று தயங்க
“எதுவா இருந்தாலும் சொல்லு சித்து. உனக்கு இல்லாத உரிமையா?” சாதாரணமாகக் கூற யுவா அதைக் கேட்டுப் பல்லைக் கடித்தான். ‘நல்லவன் வேஷம் நல்லாவே பொருந்துது. ரெண்டு பெண்களை அழ வெச்சிட்டு இவரு இங்க வந்து இயற்கைய ரசிக்கராரு. எல்லாம் வேஷம்.’ மனதில் பொருமினான்.
“நான் சுத்தி வளச்சு பேசல, நேராவே கேட்கறேன். உங்க லைஃப்ல என்ன நடந்தது. உங்களுக்கு அம்மா ரெண்டாவது மனைவியா? அப்போ உங்க முதல் மனைவி எங்க? இதெல்லாம் ஏன் எங்ககிட்ட சொல்லல, முக்கயமா அம்மா கிட்ட ஏன் சொல்லல?!” அவர் முகத்தைப் பார்த்து அனைத்தையும் கேட்டான்.
இதை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை தான். ஆனால் இந்தக் கொஞ்ச நாட்களாக இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு இது பற்றி யாரிடமாவது சொல்லிவிடும் மனநிலையிலேயே இருந்தார். பார்வதியிடம் சொல்ல நினைத்தார், ஆனால் இப்போது மகனிடம் மறைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.
யுவராஜைப் பார்த்தார்.
“அவர் இருப்பது உங்களுக்குப் பிரச்சனையா இருக்காதுன்னு நினைக்கறேன்” சித்து அவசரமாகச் சொல்ல,
“ கண்டிப்பா இல்லை பா . உங்க அம்மா கிட்ட சொல்லிவிட நினைத்தேன். ஆனா எல்லாரும் ஒரு நாள் தெரிஞ்சுக்க வேண்டியது தானே. இதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னு எனக்குச் சொல்லு. “ கேள்வியை அவனிடமே திருப்ப
“ நீங்க இங்க வந்ததிலிருந்து உங்க மனசு சரியில்லை . இது எல்லாருக்குமே தெரியும். உங்க ரூம்ல இருக்கற பழைய புடவை , நீங்க உங்களுக்கே தெரியாம புலம்பறது, அப்புறம் முக்கியமா இது …. “ அவன் கையில் இருந்த அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.
அதைக் கண்டதும் அவர் கண்கள் கலங்கின. அப்படத்தை வாங்கி அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
“ இதைவிட வேற எதுவும் வேண்டாம்ன்னு நினைக்கறேன். இப்போ சொல்லுங்க….” நிதானமாகவே அவரிடம் கேட்டான்.
சிறிது நேரம் பேசமுடியாமல் அமர்ந்திருந்தார். பிறகு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
“ மலரப் பத்தி மட்டும் சொல்ல முடியாது. அதுக்கு முன்னாடி என்னைப் பத்தி அப்புறம் என் குடும்பத்தைப் பத்தியும் உனக்குச் சொல்லணும். உங்களுக்குப் பொறுமை ….. “ மெதுவாக இழுத்தார்.
“ நாங்க பொறுமையா கேட்குறோம். நீங்க சொல்லுங்க…” யுவா குறுக்கே பேச
அவனின் ஆர்வம் ஏன் என்று அவருக்கு விளங்கவில்லை. இப்போது அவனைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் தோன்றவில்லை. தன்னைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தயாரானார்.

 

 

அன்பரசுவிற்கு அங்கே இருப்புக்கொள்ளவில்லை . யுவா என்ன பேசுவானோ ? அங்கே நடப்பதென்ன என்பதை தெரிந்துக் கொள்ளாவிட்டால் மண்டையே உடைந்து விடும் போல உணர்ந்தார். அவரின் சங்கட நிலையைப் பார்த்து மலர் ஏதோ சரியில்லை என்றறிந்தார்.
“என்ன ஆச்சு அண்ணா ? ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லை யா?” அருகில் வந்து பாசமாகக் கேட்க,
தங்கையின் முகத்தில் விழிக்க அவரால் முடியவில்லை. மறுபுறம் திரும்பி அமர்ந்தார்,
“மலர், என்னை மன்னிச்சிடு” அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“எதுக்கு அண்ணா? என்ன விஷயம்?” ஒன்றும் புரியாமல் அப்பாவியாய் கேட்க,
“உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்.” கையைப் பிசைந்தார்.
அவரைத் தன் பக்கம் திருப்பி நேராகக் கேட்டார்.
“ எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நான் உங்க தங்கை.”
“ யுவா …” அதற்கு மேல் எபாடி சொல்வது என்று தெரியவில்லை.
“ என்ன அண்ணா? யுவாவுக்கு என்ன? “ பதறினார்.
“யுவாவிற்கு ஒன்னும் இல்லை மலர். நீ பதட்டபடாத..”
“ அவன் இப்போ ஊருக்குப் போனதே எனக்குப் பிடிக்கல. அவன் பிடிவாதமா இருந்ததுனால நான் எதுவும் சொல்லல. அதுவும் இல்லாம, அவர் அந்த ஊர்ல இல்லை. அந்த ஒரு காரணத்தால தான் நான் சம்மதிச்சேன்.” சற்று நிம்மதியாகச் சொல்ல
“ இல்லை மலர். மனோகர் இப்போ குடும்பத்தோட அங்க தான் இருக்கான்.” மனதில் ஒரு பயத்தோடு சொன்னார்.
“ அண்ணா………..” முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டார் மலர்.
“ ஆமாம் மலர். மனோகர் குடும்பம் இப்போ திருவிழாவுக்காக அங்கே போயிருக்காங்க. யுவாவும் மனோகரைப் பார்க்கத் தான் …”
“என்ன சொல்றீங்க.. அவரைப் பார்க்கப் போனானா? இதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லல? அவருக்கு எந்தத் தொல்லையும் வரக் கூடாதுன்னு தான் நான் இதுவரை பொறுமையா இருக்கேன். இவன் எதுக்கு அவரத் தேடிப் போகணும்.?” பேசிக்கொண்டே போக
“மலர். கொஞ்சம் யுவாவோட நிலைல இருந்து யோசிச்சுப் பாரு. எந்த ஒரு மகனுக்காவது தன்னோட அம்மாவ வருத்தப் பட வைக்கரவங்கள சும்மா விட மனசு வருமா. அதுவும் அவன்
சின்ன வயசில இருந்து அவன் அப்பாவுக்காக எவ்வளவு ஏங்கினான். அந்த அப்பாவே இதுல சம்மந்தப்பட்டவர் , அம்மாவ தண்ணில தள்ளிவிட்டுப் பின் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணார்ன்னு தெரிஞ்சா யாருக்குத் தான் கோவம் வராது.

அப்படி அவன் நல்லவனா இருந்தா, இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது.
இந்தக் கோவம் எனக்கும் இருந்துச்சு.உனக்காகத் தான் நான் எதுவும் செய்யாம இருந்தேன். உனக்குக் கஷ்டம் வரக்கூடாதுன்னு தான் பொறுமையா இருந்தேன். யுவா இப்போ எதையும் சமாளிப்பான். அதுனால தான் நான் அவன் போக சம்மதிச்சேன். மனோகர் நல்லவனா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான். அதை இப்பயாவது நாம தெரிஞ்சுப்போம். “ மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தார்.
“அவரைப் பத்தி உங்க யாருக்கும் தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும். என்னைத் தண்ணில தள்ளிவிட்டதுக்கும் அவருக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது. நிச்சயம் அவர் இன்னொரு கல்யாணத்தை மனசு வந்து ஏத்துகிட்டு இருக்க மாட்டாரு. விதி எங்களைப் பிரிச்சுடுச்சு. நானும் அதை ஏத்துக்கிட்டேன்.
மறுபடியும் நான் அவங்க முன்னாடி போய் நின்னா எல்லாரோட வாழ்க்கையும் கேள்விகுறியாயிடும். அவங்க அப்பா என்னை ஏத்துக்காம அவருக்குத் தான் தொல்லைக் குடுப்பாரு.
ரெண்டுபேரும் கஷ்டப் படறதுக்கு நான் வேதனைய மட்டும் அனுபவிக்க முடிவு செஞ்சேன். அதுனால தான் அவர் கண்ணுல படாம இருந்தேன்.
இனிமே என்னால சும்மா இருக்க முடியாது. யுவா அவரைக் கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன். என்னைப் பத்தித் தெரிஞ்சா அவருக்குக் குற்ற உணர்வு தான் வரும். அதுவும் இல்லாம, அவரோட மாணவி குழந்தைகளும் அவர தப்பா நினைப்பாங்க.
உடனே நான் அங்க போகணும். அவங்களுக்கு என்னால எந்தத் தொல்லையும் வராதுன்னு சொல்லணும். கிளம்புங்க போகலாம்.” அழுகையோடு சொல்ல
“வேண்டாம் மலர். நீ அழாதம்மா. உன்னை மாதிரி ஒருத்திக் கூட வாழ அவனுக்குக் குடுத்து வைக்கல. நீ அங்க போக வேண்டாம் “ மலரைத் தடுத்தார்.
“ இப்போ நீங்க என்கூட வரீங்களா, இல்லை நானே போகட்டுமா?” அவர் கிளம்ப எத்தனிக்க,
“ இரும்மா நானும் வரேன். இனி நடப்பது நடக்கட்டும். நம்ம கையில ஒண்ணுமில்ல “ அவரும் மலருடன் கிளம்பத் தயாரானார்.

மனோகர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். (நாம் அதைக் கதையாகவே வாசிப்போம்.)

மனோகரின் தந்தை அந்த ஊரில் பெரிய பண்ணைக் குடும்பம் என்று அழைக்கப் பட்டனர். ஊரில் உள்ள முக்கால் வாசி மக்கள் அவரிடம் தான் வேலை செய்தனர்.
மனோகர் பிறந்து சில வருடங்களிலேயே அவரின் தாய் இறந்துவிட்டார். தந்தை ஒருவராக இருந்து அவரை வளர்த்தார். அந்த நிலையில் தான் மனோகரின் அத்தை, கணவனை இழந்து பார்வதியுடன் அண்ணன் வீட்டிற்கே தஞ்சம் புகுந்தார்.
சிறு வயதிலிருந்து பார்வதியுடன் தான் அவர் வளர்ந்தார். பார்வதி இவரை விடச் சிறியவள் என்பதால், மிகவும் கேலி செய்து விளையாடுவார். சிறிது நாட்களில் அவரை வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார் மனோகரின் தந்தை.
மனோகர் இல்லாததால், பார்வதியை மிகவும் ஆசையாக வளர்த்தார். அவள் தான் என் மருமகள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
சற்று வளர்ந்த பிறகும் அவர் தீவிரமாகத் தன் தங்கையிடம் அதைப் பற்றிப் பேச , அவருக்குப் பேரானந்தம். அண்ணன் வீட்டிற்கே தன் மகள் மருமகளாவது யாருக்குத் தான் பிடிக்காது. இந்த நினைப்பை பார்வதியிடம் விதைத்து விட்டனர். அவரும் மனோகர் தான் தன் கணவர் என்ற நினைப்புடன் தான் வளர்ந்தார்.
மனோகர் அவ்வப்போது விடுமுறைக்குத் தான் வருவார். அப்பொழுதெல்லாம் பார்வதி வெட்கப்பட்டு மனோகரின் முன்னே வருவதைக் குறைத்துக்கொண்டார்.

மனோகர் கல்லூரியில் படித்துமுடித்து ஊருக்குத் திரும்பினார். ஒரு நாள் ஊர் சுற்றக் கிளம்பினார். ஆனைமலையில் ஒரு காட்டு வழியில் சென்றுகொண்டிருக்க, யாரோ அலறும் சத்தம் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி ஓடிச்சென்றார்.
மனோகர், எங்கிருந்தோ வந்த அலறல் சத்தம் கேட்டு அந்தத் திசையை நோக்கி ஓடினார். அது ஒரு பெண்ணின் குரல். எங்கெங்கோ தேடி அலைந்தார். அந்தக் காட்டிற்குள் இன்னும் எங்கு அலைவது. அந்தப் பெண்ணின் அழுகுரல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க, மீண்டும் அந்த இடத்தைச் சுற்றினார்.
ஒரு இடத்தில் கால் சறுக்கி அங்கிருந்த மணலில் உருண்டு விழ, தன் காலைத் தேக்கி சமாளித்துக் கொண்டு எழுந்தார். அப்போது தான் அவர் ஒரு மணல் சறுக்கலில் விழுந்ததை உணர்ந்தார்.
“என்னைக் காப்பாத்துங்க “ என்று அந்தப் பெண்ணின் குரல் அருகில் கேட்க, திரும்பிப் பார்த்தவர் அதிர்ந்தார். அவருக்குப் பின்னால் ஒரு புதைமணல் இருந்தது, அதில் தான் அந்தப் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள்.
இவர் இன்னும் வேகமாக உருண்டு போயிருந்தால் அவரும் அந்தப் புதைமணலில் மாட்டிக்கொண்டிருக்க நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக அவர் தப்பித்தார். அந்தப் பெண் இன்னும் அழுது கொண்டிருக்க , அவளை எப்படி வெளியில் கொண்டுவருவது என யோசித்தார்.
சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஆள் அரவம் எதுவும் இல்லை. கத்தினால் கூட யாரும் வரமாட்டார்கள். எப்படி இந்த இடத்தில் வந்திருப்பாள் என ஒரு நொடி நினைத்தார். பின் சுதாரித்துக் கொண்டு வேகமாகச் செயல் பட்டார்.
“ பயப்படாத நான் உன்னை வெளில கொண்டுவரேன்.” அவளைப் பார்த்துச் சொல்லி விட்டு அருகில் தேட, மரங்களைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

“ இந்த இடத்துல எதுவும் இல்லை. நான் இங்கேயே சாகப்போறேன் “ பலமாக அழுதாள் அந்தப் பெண்.
“அழாத ஏழாவது யோசிக்கலாம்” அவளின் பதட்டம் அவருக்கும் தொற்றிக்கொள்ள , அவளைக் கண்டார். அவள் தொடை வரை தான் உள்ளே சென்றிருந்தாள்.
அவளின் அழுகை இன்னும் அதிகரித்துக்கொண்டே சென்றது. அது அவரை ஏதோ செய்தது. கண்ணைமூடிக்கொண்டு யோசனை செய்ய, அந்தப் பெண்ணின் சேலை தான் அவருக்கு ஆயுதமாகப் பட்டது. உடனே அவளைப் பார்த்து,
“உன் சேலையைக் கழட்டி வீசு, அதை வைத்துத் தான் உன்னை வெளியே இழுக்க முடியும் என்றார்.
“ஐயோ வேண்டாம் . நான் அதுக்கு இங்கேயே இருக்கிறேன் “ பதட்டத்துடன் சொன்னாள்.
“ இங்கபாரு , இந்த ஊர்ல என்னை எல்லாருக்கும் தெரியும், பண்ணை வீட்டுப் பையன் தான் நான். நீ என்னைத் தாராளமா நம்பலாம். உன்னை எதுவும் செய்யமாட்டேன்” அவசரமாச் சொல்ல,
அவள் இன்னும் தயக்கத்துடனே நின்றாள்.
“ இதோ பாரு! நேரம் ஆக ஆக நீ உள்ள போய்கிட்டே இருக்க, இப்போவே தொடை வரை உள்ள போயிட்ட, இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடுச்சுன்னா அப்புறம் காட்டு விலங்கெல்லாம் வெளியே வர ஆரம்பிச்சுடும்.” மனோகர் சொன்னதும் முன்னை விட இன்னும் பீதி அவளைப் பற்றிக்கொண்டது.
“சீக்கிரம்” அவர் அவசரப்படுத்த,
அவளும் நம்பித் தன் சேலையை கழட்டி அவரிடம் வீச, எந்தக் கேட்ட எண்ணமும் இல்லாமல் அவளைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
ஒரு முனையை அவளைப் பிடிக்கச் சொல்லிவிட்டு மறுமுனைய அவர் பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்தார். மணலின் ஈர்ப்பையும் தாண்டி இழுப்பது சற்றுக் கடினமாகவே இருந்தது. முயன்று வெளியே இழுக்க, அவளும் நன்றாகப் பற்றிக்கொண்டு வெளிவர முயற்ச்சித்தாள்.
சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவள் கைகள் தொடும் தூரம் வந்ததும் அவள் கையைப் பற்றி வெளியே கொண்டு வந்தார். கால்கள் தள்ளாடி நிற்க முடியாமல் அவன் மேல் விழுந்து விட்டாள். சிறிது நேரம் மூச்சு வாங்க அப்படியே படுத்துக் கிடந்தனர்.
சற்று களைப்புத் தெளிந்ததும் சட்டென எழுந்து புடவையைச் சுற்றிக்கொண்டாள்.

“ரொம்ப நன்றிங்க” என்றாள்.
“ பரவாயில்லை. இங்க எப்படி வந்து மாட்டிக்கிட்ட? “ மனோகர் கேட்க,
பயந்த சுபாவம் அவளுக்கு. திக்கித் திக்கி பதில் சொன்னாள்.
“ என் கூடப் படிச்ச பொண்ணுங்களோட இந்தப் பக்கம் வந்தோம். கண்ணாமூச்சி விளையாடிக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் போய்டோம். நான் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். மத்தவங்க வேற பக்கம் என்னைத் தேடிகிட்டு ரொம்ப தூரம் போய்டாங்க. வீட்டுக்குப் போனா தான் தெரியும்.” ஒரு வாறு சொல்லி முடித்தாள்.
மனோகர் அவள் பேசுவதையேப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவளின் ஒவ்வொரு முகபாவனையும் அவரை ஈர்த்தது. கிராமத்துப் பெண்ணின் உடல் வாகு, நீண்ட கூந்தல், அவளின் பயந்த பேச்சு அனைத்தும் பிடித்தது. வயதின் கோளாறு யாரை விட்டது.
அவர் பேசாமல் நின்றதைக் கண்டு, “சார் “ மெல்ல அழைத்தாள்.
சிந்தனை கலைந்து ,” சரி வா பக்கத்துல இருக்கற ஓடைல மண்ணை கழுவிட்டுப் போகலாம், இருட்டுறதுக்குள்ள ஊருக்குள்ள போய்டலாம்.” சொல்லிவிட்டு முன்னே நடக்க
அவரைத் தொடர்ந்து சென்று ஓடையில் கை கால்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். அவள் சேலை நனைந்து அதைப் பிழிந்தாள்.
அவளின் அழகு அந்த மஞ்சள் வெயிலில் தங்கமாக ஒளிர்ந்தது. அவர் பார்வையை விலக்க முடியாமல் கட்டிப் போட்டது.தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல், அவளை நோக்கி அவர் கால்கள் சென்றது.

அவரைப் பார்த்ததும், பயத்தில் உறைந்து போய் நின்றாள். பேசக்கூட முடியாமல் அவரைத் திரு திருவென விழிக்க, அவளைக் கட்டி அணைத்தார். அவள் தன்னிலையை உணரும் முன்பே அவளைத் தன் வசமாக்கிக் கொண்டார்.
இருள் தொடங்க ஆரம்பித்த சமயம் இருவரும் தங்கள் நிலையை உணர, அவள் “ஓ” என அழ ஆரம்பித்தாள். தான் செய்த மடத்தனத்தை உணர்ந்தார் மனோகர். அவளை எப்படி சமாதனப் படுத்துவது என்று குழம்பினார்.
“ என்னை மன்னிச்சுடு. நான் வேணும்ன்னு செய்யல, என்னையும் மீறி நடந்துடுச்சு. தப்பு தான். நான் உன்னையே கல்யாணம் செஞ்சுக்கறேன், தயவு செய்து அழாதே. நிச்சயம் நான் ஏமாத்த மாட்டேன். என்னை நம்பு. இது சத்தியம். “ அவரின் அந்தப் பேச்சில் உறுதி இருந்தது.
எந்தக் காரணத்தினாலோ, அவரை நம்பினாள் அவள். சற்று அவளின் அழுகை குறைந்து .
“ உன் பெயர் என்ன? “ மெல்ல அவர் கேட்க, மீண்டும் அழத் தொடங்கினாள்.
அவளின் முகத்தைக் கைகளால் தாங்கி, அவளின் கண்ணீரைத் துடைத்தார்.
“ பெயர் கூடத் தெரியாதவனிடம் ஏமாந்து விட்டோம்ன்னு நினைச்சு அழறியா? வேண்டாம். நான் மோசமானவன் இல்லை. என்னை நீ நூறு சதவீதம் நம்பலாம்” ஆறுதலாகப் பேசினார்.
சற்றுத் தெளிந்தவுடன், அவளைப் பற்றிக் கேட்டார்.

“என் பெயர் மலர்மொழி. அப்பா இறந்துட்டாரு. அம்மாவும் அண்ணனும் தான். அண்ணன் ஒரு சின்ன மளிகைக்கடை வெச்சிருக்கார். நான் பன்னிரெண்டாவது முடிச்சுட்டு தையல் கத்துகிட்டு இருக்கேன் “ அழுகையின் கேவல்களுக்கிடையே சொல்லி முடித்தாள்.
அவள் கைகளைப் பற்றினார்.தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். “ மலர், இனிமே நீ தன் எனக்கு மனைவி. இதை யாராலும் மாத்த முடியாது. நாளைக்கும் நாம இதே இடத்தில சந்திக்கலாம். இப்போ ரொம்ப இருட்டிடுச்சு, உன்னை ஊர் எல்லைவரை வந்து விடறேன் , வா போகலாம்” அழைத்துச் சென்றார்.
அவளை விட்டுவிட்டு தன் வீடு நோக்கி நடந்தார். அவளும் அவரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள்.
மனோகரின் வீட்டில் அவரின் தந்தையும், அத்தையும் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். அது விரைவில் பார்வதிக்கும், மனோகருக்கும் நிச்சயம் செய்வது. இது தெரியாமல் மனோகர் தன் மனதில் நிறைந்துவிட்டப் பெண்ணை நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
வீடு வேலையாட்கள், “ சின்னையாவுக்கு கல்யாணக்களை வந்துடுச்சு “ என அவர் காதுபடப் பேசினார்கள்.
இவர் எதையும் பொருட்படுத்தாமல், உள்ளே சென்று அமர, உள் அறையிலிருந்து பார்வதி எட்டிப்பார்த்தார். அவளைப் பார்த்து,
“ஹே என்ன பார்வதி என் முன்னாடி வரவே மாட்டேங்கற! என்ன ஆச்சு உனக்கு, இங்க வா” என அழைக்க
அவர் வெட்கப்பட்டு உள்ளே ஓடிவிட்டார்.அவளின் இந்தச் செயல் அவருக்கு வித்தியாசமாக இருக்க, அங்கே வந்த தனது அத்தையிடம்,
“என்ன ஆச்சு அவளுக்கு, ஏன் என்னைப் பார்த்துப் பேசமாட்டேங்கறா? “ புரியாமல் கேட்க
“ எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம்னா வெட்கம் வராதா ?!” சிரித்துக்கொண்டே சொல்ல,
“அட! பார்வதிக்கு கல்யாணமா? யாரு மாப்பிள்ளை? “ ஆர்வமாகக் கேட்டார்.
“ உனக்கு எப்பவும் விளையாட்டுத் தான். போ ப்பா . சரி என்ன சாப்பிடற? பணியாரம் செஞ்சேன். எடுத்துட்டு வரேன். “ சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அதை ருசித்து உண்டு விட்டு , இன்று நடந்த மறக்க முடியாத நினைவுகளை நினைத்துக்கொண்டே சென்று படுத்தார்.
மலரும் அங்கே ஒரு வித பயத்துடனும், ஆனால் பெண்மைக்கே உரிய நாணமும் கலந்த உணர்வில் தத்தளித்தாள்.

error: Content is protected !!