KVK-17

KVK-17

நாளை அவரை மீண்டும் சந்திக்கப் போவதை எண்ணி ஒரு புது உணர்வுடன் அன்று தூங்க முடியாமல் தவித்தாள்.
அடுத்த நாள் மலரைச் சந்திக்க அதே நேரத்தில் சென்றார். மலர் அவருக்கு முன்பே அங்கு வந்துக் காத்திருந்தாள். இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தானர். முதலில் மனோகர் தான் பேசுவார். பிறகு தயக்கம் நீங்கி, மலரும் நிறைய பேச ஆரம்பித்தாள்.
இந்தப் பழக்கம் தொடர ஆரம்பித்தது. இருவரும் தங்களின் சிறு வயதுக் கதையில் தொடங்கி நேற்று நடந்தது வரை அனைத்தையும் பேசித் தீர்த்தனர். ஒரு நாள் பார்க்காவிட்டாலும் இருவரும் ஒரு கை உடைந்தது போல் உணர்ந்தனர். மலர், மனோகரின் உள்ளத்தாலும் உணர்வாலும் கலந்தவள் ஆகிவிட்டாள்.
மலரோ, மனோகரை நம்பிக்கையின் சின்னமாகவே நினைத்தாள். மனதில் தினமும் அவரையே பூஜித்தாள். மனோகர் மனதில் நினைத்தால் , அவள் செயலில் செய்தாள். அந்த அளவு அவருடன் ஒன்றிவிட்டாள்.
இருவரும் தங்களின் தனி உலகத்தில் வாழ ஆரம்பித்தனர். அதில் வேறு யாருக்கும் இடம் இல்லை. தங்களுக்குள் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளும் இருவருக்கும் காவியமாய் மனதின் ஆழத்தில் பதிந்தது. மனோகருக்காக வித விதமாகச் சமைத்து எடுத்து வருவாள்.
அதை அவளையே ஊட்டிவிடும்படி கேட்பார். அவளும் செய்வாள்.
காதலையும் தாண்டி ஒரு உன்னதமான உறவை இருவரும் உணர்ந்தனர்.
ஒரு நாள் மனோகர், “மலர்! என்கிட்ட உனக்கு எது பிடிக்காது ? நான் அதை மாத்திக்கறேன் ” எனக் கேட்க,
“உங்களை நான் அப்படியே ஏற்றுக் கொண்டேன். நீங்க தான் நான், நான் தான் நீங்க. எனக்குன்னு தனியா விருப்பு வெறுப்பு இல்லை. நாம ரெண்டு பேரும் தனித்தனின்னு நான் நினச்சது இல்லை.” அவள் சொல்லி முடித்ததும், அதைக் கேட்டு
உணர்ச்சிக் கடலில் தத்தளித்தார் மனோகர். மலர் தன் வாழ்வில் கிடைத்த வரம், அவ்வளவு எளிதில் யாருக்கும் இப்படியொரு மனைவி கிடைப்பது சாத்தியம் இல்லை . மலரை நினைத்து மிகவும் பெருமைப்பட்டார்.
அந்தச் சந்தோஷத்தைக் குலைக்கும் வகையில் மனோகரின் வீட்டில் நிச்சய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மனோகர் அதைக் கண்டதும் பார்வதிக்கும் வேறு ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் என்றே நினைத்திருந்தார். நேரே தந்தையிடம் சென்று
“நான் எதாவது வேலை செய்யட்டுமா?” என்று அக்கறையுடன் கேட்க,
“ நீ ஏனப்பா வேலை செய்யனும், மாபிள்ளையா லட்சணமா ராஜா மாதிரி உட்காரு. நமக்குத் தான் நிறைய பேர் வேலைக்கு இருக்காங்களே!” சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதைக் கேட்டுச் சற்றே அதிர்ந்தார் மனோகர்.
“என்னப்பா சொல்றீங்க ? நான் மாப்பிள்ளையா?” புரியாமல் கேட்க,
“ஆமாம்ப்பா நீ தான நம்ம பார்வதியை கல்யாணம் பண்ணிக்கப் போற. அப்போ நீ தான மாப்பிள்ளை. இது எப்பவோ முடிவு செஞ்சது தான. “ சந்தேகமாகப் பார்க்க
“அப்பா! இது கொஞ்சமும் நல்லாஇல்லை. என்னைக் கேட்காம ஏன் இந்த முடிவு எடுத்தீங்க?” கோபமாகப் பேச,
“ என்னாப்பா இப்படி சொல்ற, இதை என் தங்கை கேட்டா நிச்சயம் தாங்க மாட்டா..நீ என் அறைக்கு வா நாம பேசலாம்” சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றார்.
மனோகரும் உள்ளே வந்தபிறகு கதவைத் தாழிட்டார்.

“ அப்பா , இதுல மறைக்கறதுக்கு எதுவும் இல்லை. என்னால பார்வதிய கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அவளும் நானும் சின்ன வயசில இருந்து பார்த்து வளர்ந்தவங்க. அவளைப் போய் எப்படிப்பா? இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க” படபட வெனக் கூறி முடித்தார்.
கதவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தவர், அருகில் வந்து,
“மனோ , இங்க வா. என் பக்கத்தில உட்காரு. “ கட்டிலில் இருவரும் அமர்ந்தனர்.
“ என்ன மனோ , உனக்குப் பார்வதிய பிடிக்கலையா?” மெதுவாகக் கேட்டார்.
“இது பார்வதிய பிடிச்சிருக்கா இல்லையாங்கற விஷயம் இல்லை. எனக்கு வேற ஓரு பெண்ணைப் பிடிச்சிருக்கு. அவளையே கல்யாணம் செஞ்சுக்கறதா வாக்குக் குடுத்திருக்கேன். என்னால வேற ஒரு பெண்ணை மனைவியா நினைச்சுப் பார்க்க முடியாதுப்பா.” அமர்த்தலாகவே சொல்ல,
சற்று இடைவெளி விட்டு ஆரம்பித்தார் பெரியவர்.
“ உன் அத்தையைப் பற்றி உனக்குத் தெரியும். அவ பொண்ணு தான் இந்த வீட்டு மருமகள்ன்னு கனவு கண்டுகிட்டு இருக்கா. அவ சின்ன வயசிலேயே வாழ்க்கைய தொலைச்சிட்டு இங்க வந்தப்போ எனக்கு இதயமே நின்னு போய்டுச்சு. அவளோட ஆசை இது மட்டும் தான். எனக்கும் பார்வதி தான் உனக்கு மனைவியா வரணும்ன்னு ஆசை மனோ. “ தொண்டையைச் செருமிக் கொண்டார்.
மீண்டும் அவரே தொடர்ந்தார்.
“பார்வதிக்கு பருவம் வந்த நாள்ல இருந்து நீ தான் அவளுக்குக் கணவன் அப்படின்னு நான் சொல்லிச் சொல்லியே அவள வளத்துட்டேன். அவளும் உன்னைத் தான் புருஷனா நினச்சுட்டு இருக்கா, எங்க மூணு பேரோட ஆசையைவிட உன் விருப்பம் தான் முக்கியமா ? அது சுயநலம் மனோ.” அவனை இறைஞ்சும் பார்வைப் பார்த்தார்.
“ அப்பா! நான் யாரோட விருப்பத்தையும் பத்தி நினைக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன். நான் அப்படியே பார்வதியைக் கல்யாணம் பண்ணாலும் ரெண்டு பெண்களுக்குத் துரோகம் செஞ்சவானா ஆயிடுவேன். என் மனசாட்சி என்னை மன்னிக்காது. தயவு செஞ்சு நீங்க என்னை மன்னிச்சிடுங்க.” கைகூப்பி நின்றார்.
தன் மகன் இவ்வளவு பிடிவாதம் பிடிப்பான் என்று பெரியவர் நினைக்கவில்லை.

“சரி மனோ. நீ அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லு, நான் பேசிப் பார்க்கறேன். உன்கூட படிச்சப் பொண்ணா? இல்லை நம்ம ஊர் பொண்ணா? “ சற்று நரி போல யோசிக்க ஆரம்பித்தார்.
அதை உணராமல், “ இல்லைப்பா . நீங்க அவ கிட்ட பேச எதுவும் இல்லை. அவ தான் என் மனைவி. இதை நீங்களே அத்தைக் கிட்ட சொல்லிடுங்க” வெளியே செல்ல எழுந்தார்.
“ மனோ! நில். நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம். கூடிய சீக்கிரம் உனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் இது தான் என்னோட முடிவு. நீ போகலாம்” கடுமையாகவே ஆணையிட்டார்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மனோகர் வெளியேறினார். தன் தந்தையைப் பற்றி ஓர்அளவு தெரிந்தே வைத்திருந்தார். ஆகையால் மலரைப் பற்றி அவருக்குத் தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்ள நினைத்தார்.
மறுநாள் கலையில் மலரைச் சந்திக்கக் கிளம்பினார். அவளிடம் சிறிது எச்சரிக்கைச் செய்து வைக்க நினைத்தார். அவர் கிளம்பி வெளியே வர , அவரின் அத்தை வந்தார்.
“ எங்கப்பா கிளம்பிட்ட, இன்னிக்கு நிச்சயதார்த்தம் , வெளிய எங்கயும் போகக் கூடாது.”
“இல்ல அத்தை.. ஒரு நண்பனுக்கு டெலிகிராம் குடுக்கனும். வந்திடுவேன்” என்று சொல்ல,
பின்னால் வந்த அவரது தந்தை,
“ விடும்மா, அவன் போயிடு வரட்டும். கண்டிப்பா வந்துடுவான்” மனோகரை ஒரு அர்த்தப் பார்வைப் பார்த்தார் .
மனோகர் கிளபிச் சென்றதும், தன் ஆட்களில் ஒருவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்லி அனுப்பினார்.
மனோகர் சொன்னபடி முதலில் அவர் சென்றது , தபால் நிலையத்திற்குத் தான். தன் நண்பன் ஒருவன் , ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை இருப்பதாகச் சொல்லியிருந்தான். அப்போது அவர் ஊரில் தங்கி தந்தையின் பொறுப்பை ஏற்கப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது நிலமை வேறு! தந்தை ஒருக்காலும் மலரை ஏற்க மாட்டார். அதனால் வெளியூரில் வேலைத் தேடிக்கொண்டு , மலரைத் திருமணம் செய்துஅவளுடன் அங்கேயே தங்கிவிட தீர்மானித்திருந்தார்.
ஆகவே முதலில் அந்த வேலையைத் தனக்குத் தரும்படி கேட்டுத் தன் நண்பனுக்கு ஒரு தந்தி அனுப்பினார். அதன் பின் மலரைக் காணக் சென்றார். தனக்குப் பின் தன்னை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தார். திரும்பித் திரும்பிப் பார்த்தார். யாரும் இல்லை என்று உறுதி செய்துக் கொண்டு பின் நடந்தார்.
எப்போதும் போல் மலர்மொழி அவருக்கு முன்பே வந்து காத்திருந்தாள். அவளைக் கண்டதும் அவருக்கு மனமே குளிர்ந்து. அவளது சிரித்த முகம் அவரை எப்போதும் போலச் சாந்தப் படுத்தியது.
இருவரும் சேர்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். மலர் கையில் ஒரு பித்தளை தூக்குச்சட்டி வைத்திருந்தார். அதைக் கண்டதும்,
“ என்ன மலர் அது? “ ஆவலாகக் கேட்க,
“ உங்களுக்காக நானே செய்த மீன் குழம்பு, சாப்பிடுங்க “ அவரிடம் தூக்குச் சட்டியை நீட்ட, அவரும் அதை வாங்கி ஆசைத் தீர உண்டார்.

“ ரொம்ப அருமையா இருக்கு மலர். இதுக்கு முன்னாடி இவ்வளவு ருசியா நான் சாபிட்டது இல்லை . ஆனா இனிமே நான் இப்படிச் சாப்பிட மாட்டேன்.” அவர் சொல்ல
புரியாமல் விழித்தார் மலர்.
“ இனிமே நீ எனக்கு ஊட்டி விடனும்.அப்போ தான் நான் சாப்பிடுவேன்.” ஊடுருவும் பார்வையால் கேட்க,
குங்குமமாய்ச் சிவந்தது அந்த மலர்.
எதையும் மலரிடம் மறைத்துப் பழக்கமில்லாததால், தன் வீட்டில் நடந்ததையும் சொல்ல நினைத்தார். மெதுவாக ஆரம்பித்தார்.
“மலர்”
“ம்ம்ம்..”
“உங்கிட்ட ஒன்னு சொல்லணும். கொஞ்சம் பதட்டப் படாம கேளு. “ பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“ எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. நீங்கப் பெரிய இடத்துப் பிள்ளை, உங்களை நான் மனசில நினச்ச நாளிலிருந்தே எல்லாத்தையும் எதிர்கொள்ள என் மனசை தயார்படுத்திக் கொண்டேன். நீங்க என்கூட இருக்கறப்ப எனக்கு என்ன கவலை” புன்னையுடன் அவரைப் பார்க்க
மலரின் நம்பிக்கை அவருக்கு மேலும் பலம் தந்தது. என்ன துன்பம் வந்தாலும் இவளைக் கைவிடக் கூடாது என்று மனதில் நினைத்தார்.
“அது… என் அத்தைப் பெண்ணைத் தான் நான் கல்யாணம் பண்ணனும்ன்னு என் அப்பா நேத்து சண்டைப் போட்டார். எப்போதோ சின்ன வயசில முடிவு செஞ்சாங்களாம். அதை நிறைவேத்தாம விடமாட்டேன்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறாரு.
நான் முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டு வந்துட்டேன். இனிக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இருக்காங்க. ஆனா நான் போகப் போறதில்லை. இனிக்கு முழுசும் உன்கூடத்தான் இருக்கப் போறேன். என்ன நடந்தாலும் சரி.

அதுமட்டும் இல்லை. எங்கப்பா கொஞ்சம் அடாவடியான ஆளு. நமக்கு எதாவது இடைஞ்சல் குடுப்பாரு. அதுனால , என் நண்பன் கிட்ட எனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல நாம கல்யாணம் செஞ்சுகிட்டு அங்க போய்டலாம்.
நடுவில ஒரு நாள் மட்டும் நான் அங்கே போயிட்டு வர மாதிரி இருக்கும். அப்போ மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. வீட்டை விடு வெளியே வராத.
உன்னைப் பற்றி யார்க்கும் தெரியாது. இருந்தாலும் எங்கப்பாவுக்கு ஊர் பூரா ஆளுங்க இருக்காங்க, அதுனால நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம். “ உணர்ச்சிப்பொங்க கூறி முடித்தார்.

“ நம்ம காதல் உண்மை . அது ஒரு நாளும் பொய்யாகாது. நம்மளைப் பிரிக்க யாராலும் முடியாதுங்க. என்னை என்ன கொடுமை செய்தாலும் உங்கள விட்டுப் போகமாட்டேன். என் உயிர் போனாக் கூட அது எப்போதும் உங்களைச் சுற்றித் தான் திரியும்” அவள் சொன்னதைக் கேட்டு அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டார்.
“உனக்கு எந்தத் துன்பமும் நான் வரவிடமாட்டேன் மலர். நீ இல்லாத என்னோட வாழ்க்கை ஒரு உயிரற்ற பிணத்துக்குச் சமம். எல்லாம் நல்லதாவே நினைப்போம். நீ கவலைப் படாம இரு.” அவளின் உச்சியில் முத்தமிட்டார்.

மனோகர் வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. எல்லாரும் நிச்சயம் செய்யக் காத்திருந்தனர். பார்வதி அலங்காரத்துடன் தன் மாமாவைக் காணக் காத்திருந்தாள். மனோகரின் தந்தை வாசலிலேயேக் காத்திருந்தார். அவர் அனுப்பிய ஆள் மட்டும் ஓடி வந்தான். மனோகரின் விஷயத்தைக் கூற, பெரியவர் ஆத்திரம் கொண்டார். அதற்கு மேல் தாமத்திகாமல் உள்ளே சென்றார்.
தன் தங்கையை அழைத்தார். அவரிடம் எதுவும் சொல்லாமல் முகத்தை மாற்றிக்கொண்டு அன்பாகப் பேசினார்.
“ தங்கச்சி , அவன் நண்பனைப் பார்க்கப் வெளியூர் போயிருக்கானாம். அவன் வர வரைக்கும் நல்ல நேரம் காத்திருக்காது. நாம தட்டை மாத்திக்குவோம். என்ன சொல்றம்மா?”
அண்ணனை முழுமையாக நம்பினார் தங்கை. “ சரி அண்ணா, நீங்க சொல்லி நான் என்னிக்கு மறுத்திருக்கேன். வாங்க பத்திரிகை வாசிப்போம்.”
பெண்ணை மட்டும் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் நிச்சயம் செய்துக்கொண்டனர். பார்வதிக்கு சற்று ஏமாற்றமே, ஆனால் மனோகர் தன் மாமா வைத் தாண்டி எதையும் செய்யமாட்டார் என்ற முழு நம்பிக்கை , அவளை வேறு சிந்ததனைக்கு இட்டுச் செல்லவில்லை.
பெரியவர் அனுப்பிய ஆள் , மனோகரின் விவரம் அனைத்தையும் அவருக்குச் சொல்லிவிட்டான். பெண் யார் என்ன குடும்பம் அனைத்தும் இப்போது அவர் அறிவார். புலி வேட்டையாட பதுங்குவதைப் போல வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தார்.
அனைத்தும் முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகு, வீட்டிற்குள் நுழைந்தார் மனோகர்.
“ வாங்க மாப்பிள்ளை” என அத்தை வரவேற்க,
“என்ன சொல்றீங்க! அப்போ நிச்சயம்?!” என அவரைக் கேள்வியாகப் பார்க்க,
“ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது மனோ. நீ வருத்தப் படாத, பார்வதி கிட்ட பேசணும்ன்னா போய்ப் பேசுப்பா” அவர் மகிழ்ச்சியாகச் சொல்ல,
பார்வதியைப் பார்க்கும் எண்ணம் அவருக்குச் சிறிதும் இல்லை.
“பரவாயில்லை அத்தை. “ எனச் சொல்லித் தன் அறைக்குச் சென்றார்.
வெட்கப்படுகிறான் என்று நினைத்து அவரும் அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
அதன் பிறகு மனோகர் அவரின் தந்தையிடம் கூடச் சரியாகப் பேசுவதில்லை. இந்த நிலையில் பெரியவர் ஒரு முடிவு செய்தார்.
அவரின் தங்கைக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாமல் பார்த்துக்கொள்ள நினைத்தார்.

மறுநாள் தன் தங்கையை அழைத்தார்.

“ தங்கச்சி ! நாம நிச்சயத்தை சாதரணமா வீட்டிலேயே முடிச்சுட்டோம். ஆனா நம்ம வீட்டுக் கல்யாணம் ஊரே மெச்ச திருவிழாப் போல நடக்கணும். நம்ம சொந்த பந்தம் எல்லாரையும் கூப்பிடனும். “ சற்று நிறுத்த,
அவரின் தங்கை அந்த வார்த்தைகளில் கனவு கண்டுக் கொண்டிருந்தார்.
“கண்டிப்பா அண்ணா. என்ன செய்யணும் சொல்லுங்க” அவரின் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருந்தார்.
“ நம்ம குல தெய்வம் கோயிலுக்குப் போய்ப் படையல் போடணும். அப்புறம் நாம சொந்த பந்தத்தை நேர்ல போய் ஒவ்வொருத்தருக்கும் துணி வங்கிக் கொடுத்து அழைக்கணும். நம்ம சொந்தம் என்னை விட உனக்குத் தான் நல்லாத் தெரியும், அதுனால நீயே பார்வதிய அழைச்சுகிட்டுப் போய் , ஒரு மாசம் தங்கியிருந்து நல்ல நாள் பார்த்துப் படையல் போட்டுட்டு, எல்லாரையும் கூப்டுட்டு வந்துடு. எனக்கு அருப்பு வேலை இருக்கு, அதுனால என்னால உன்கூட எல்லாத்தையும் விட்டுப்புட்டு வர முடியாது. நீ போயிட்டு வந்துடும்மா. என் மருமகளை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ ” தேனொழுக பேசினார்.
அதை நம்பி அவரும் பார்வதியும் ஊருக்குக் கிளம்பினார்கள்.
பெரியவர் ஒரு பெரிய திட்டம் போட்டார். அதன் படி தன் அடியாள் ஒருவனை அழைத்து மலரின் வீட்டிற்குத் தீ வைக்கச் சொன்னார்.
இதைக் கதவின் அருகிலிருந்து மனோகர் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த ஆள் அங்குச் செல்வதற்கு முன்பு மனோகர் அங்கே சென்றுவிட்டார்.
நடு இரவில் அந்த ஆள் தீப்பந்ததுடன் வந்து நிற்க, மனோகர் அவன் முன்னே வந்து நின்றார்.

ஊரே அடங்கிவிட்ட சமயம். கிராமம் ஆதலால் அனைவரும் சீக்கிரம் உறங்கி விட்டனர். அந்த அடியாள் மட்டும் கையில் தீப்பந்தத்துடன் நடந்து வந்துக்கொண்டிருந்தான். விஷயத்தை முன்னமே அறிந்திருந்ததால் மனோகர் அவனுக்கு முன்பே அங்கே சென்று நின்றார். மலர் வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டிருக்க அவர்கள் வீட்டின் முன் நின்றார் மனோகர்.
அந்த நெடிய உயரமான அடியாள் வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு ஓரமாக இருளில் மறந்திருந்த மனோகர் அவன் முன் திடீரென வெளிப்பட்டார். அவன் பேய்யைக் கண்டவன் போல நடுங்கிவிட்டான். மனோகர் அவனைப் பார்வையாலே எரித்துவிடும் அளவு அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
“ ஐயா என்னை மன்னிச்சிடுங்க…. பெரியய்யா தான் செய்யச் சொன்னாரு. நான் வேலைக்காரன் … என்னை விட்டுடுங்க….” கதறி நின்றான்.
அவனைத் தண்டித்து என்ன பயன்! அனைத்திற்கும் மூலகர்த்தா தன் தந்தை அல்லவா! ஆகையால் அவனை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். அவன் தப்பித்தது உயிர் என்று ஓடியேவிட்டான். அவன் கொண்டு வந்த தீபந்தத்தை எடுத்துக்கொண்டு நேரே தன் தந்தையிடம் சென்றார்.
அவரோ அனுப்பிய ஆள் வராமல் அவரது மாடியின் பலகனியில் நின்றுப் பார்த்துக்கொண்டிருக்க தூரத்தில் ஒருவன் தீப்பந்தத்துடன் வருவது தெரிந்ததும் அவசரமாகக் கீழே இறங்கி வந்தார்.
அங்கே மனோகர் வந்து நிற்கவும் நெருப்பை மித்திதவர் போலச் சற்றுப் பின் வாங்கினார்.
“ ஏம்ப்பா இப்படி செஞ்சீங்க?!” ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க நின்றிருந்தார் மனோகர்.
பெரியவர் இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லை. “மனோ நீ உள்ள வா பேசிக்கலாம். “ எதுவும் நடக்காதது போலப் பேச
“இதுக்குமேலயும் நான் உள்ள வந்தா நான் மனுஷனே இல்லை. எப்படி நீங்க கொலை செய்யற அளவுக்குப் போனீங்கன்னு எனக்குத் தெரியல. உங்கள அப்பான்னு இனிமே நான் கூப்பிட மாட்டேன்.” வாசலில் நின்றே கத்திக்கொண்டிருந்தார்.

“ மனோ! நீ என்ன பேசறன்னு புரியுதா? நாம இந்த ஊருக்கே படியளக்கரவங்க. போயும் போயும் ஒரு மளிகைக் கடை வெச்சிருக்கறவன் தங்கச்சி தான் உனக்குக் கிடைச்சாளா? நம்ம அந்தஸ்த்து என்ன ஆகறது? இது ஊர்ல நாலு பேருக்குத் தெரிஞ்சா என் மானம் போய்டும். அதான் அவளைக் குடும்பத்தோட முடிச்சிட சொன்னேன். இதுல என்ன தப்பு?” குற்ற உணர்வு சிறிதும் இன்றிப் பேசினார்.
அவரின் மன எண்ணம் அவர் வார்த்தைகளில் நன்றாகத் தெரிந்தது. பணம், அந்தஸ்து இவைகளைத் தான் பெரிதாக நினைத்தார்.
“ இதுவே ஒரு பணக்காரப் பெண்ணா இருந்தா பரவாலையா ? அப்போ உங்க தங்கச்சிக்காகன்னு பாச நாடகம் போட்டீங்களே, அது பொய்யா? “ மனோகர் விடாமல் கேட்க
“ இல்லை ரெண்டுமே உண்மை தான். பணக்காரப் பெண்ணா இருந்தா , கொஞ்சம் யோசிக்கலாம். இப்படி ஒருத்திய காதலிக்கறேன்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்ல?” பதிலுக்கு அவரும் பேசினார்.
“இதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நீங்க தான் உங்க கேவலமான புத்திக்காக வெட்கப் படனும், நீங்க செய்ய நினச்சது மிகப் பெரிய பாவம். காசு பணம் எப்பவும் முக்கியம் இல்லை. நல்ல மனசு தான் முக்கியம். அது உங்ககிட்ட கொஞ்சமும் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன். நான் இனிமே உங்க கூட இருக்க மாட்டேன். நான் வரேன். என்னோட மலர உங்ககிட்டேந்து காப்பாத்த எனக்குத் தெரியும். “ கோபமாக அங்கிருந்து கிளம்பினார்.
மனோகர் செல்வதை வெறுப்புடன் பார்த்தார் பெரியவர். அவர் மனதில் தன் மகனை வழிக்குக் கொண்டு வர அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணம் தான் ஓடியது. ஆனால் மனோகர் அதை விட வேகமாக மலரின் வீட்டிற்குச் சென்றார்.
நள்ளிரவானாலும் கதவைத் தட்டினார். அன்பரசு தான் வந்து கதவைத் திறந்தார். “யார் நீங்க ?” கேட்டதும் , வீட்டில் அனைவரும் எழுந்து விட்டனர்.
மலர்மொழி மனோகரி அருகே ஓடிவந்தார்.
“அண்ணா … இவர் ..” இழுக்க
“நான் மனோகர்..” என்று தொடங்கி தாங்கள் இருவரும் காதலிப்பதாகச் சொல்லி , அவரின் தந்தை இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்றும் அவரின் சம்மதம் இல்லாமலேயே மலரைத் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
சற்றுமுன் நடந்தவைகளைப் பற்றிக் கூற மனம் வரவில்லை. அவர்கள் இன்னும் பயந்து விடுவார்கள் என்று நினைத்தார்.
அன்பரசு அனைத்தையும் கேட்டு மிகுந்த கோபம் கொண்டார்.
“ நீ சொன்னவுடனே என் தங்கச்சிய கல்யாணம் பண்ணி வெச்சிடனுமா ? உங்க குடும்பம் பெரிய குடும்பம். நாங்க சாதரனமானவங்க. பணக்காரங்க புத்தி நிலையானது இல்லை. இதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.” சொல்லிவிட்டு மலரைப் பார்க்க
அவளோ அழுது விட்டாள். அதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை.
“மலர்! நீ ஏம்மா அழற ? இவங்கள நம்பக் கூடாது . எப்போ வேணா நம்மள விட்டு வேற இடத்துல கல்யாணம் பண்ணிப்பாங்க…. “ அன்பரசு சொல்லும்முன்
“ அண்ணா, அம்மா .. ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க. இவரைத் தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. நானும் இவரும் மனசால மட்டும் ஒன்னு சேரல,
இவரோட வாரிசு என் வயித்துல … “ சொல்லிமுடிக்கும் முன்பே அன்பரசுவின் கை இடி என அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது.
மலரின் தாயும் வந்து அவளை நன்றாகத் திட்ட ஆரம்பித்தார். இவரும் மாறி மாறி அவளுக்கு வசை மழை பொழிய, அவள் தேம்பி அழ , ஒரு கட்டத்தில் மனோகர் பொங்கி எழுந்தார்.

“ இதோ பாருங்க, நீங்க சொல்ற மாதிரி நாங்க தப்பு பண்ணனும்னு நினைக்கல. அன்னிக்கு எங்களையும் மீறி நடந்த விஷயம் . அது விதி. நாங்க ரெண்டு பேரும் மனசால கணவன் மனைவி ஆயிட்டோம். எனக்கு ஏமாத்தர எண்ணம் இருந்தா எப்பவோ நான் போயிருப்பேன். மலர் கூட வாழனும் , அது தான் என்னோட ஆசை. அவ மட்டும் தான் எனக்கு மனைவி.” மலரைத் தன் பக்கம் நிறுத்திக் கொண்டார்.
இருவரின் மனமும் ஒன்று பட்டபிறகு இனி அவர்களைத் தடுத்து ஆகப் போவது ஒன்றுமில்லை. அந்த வீட்டில் அன்பரசுவின் முடிவு தான் இறுதியானது. அவர்களின் தாய் ஒரு வாயில்லாப் பூச்சி. விவரம் அறியாதவர். ஆகையால் அன்பரசு அவர் தாயைப் பார்க்க, அவரும் சம்மதித்தார்.

error: Content is protected !!