KVK-18

ஆகவே மறுநாளே அவர்களின் திருமணம் நடந்தது. ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகர் மற்றும் அன்பரசு மற்றும் அவரின் தாய் , இவர்கள் மூவரின் முன்னிலையில் ஆடம்பரம் இல்லாமல் மாலை மாற்றி , தாலி கட்டி மலரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார் மனோகர்.
அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து வரவேற்று அவர்களை அந்தக் குடிசை வீட்டிலேயே தங்க வைத்தனர். அன்பரசுவும் அவரின் அம்மாவும் கடையில் தங்கிக் கொண்டனர். சாப்பிடும் நேரம் மட்டும் இங்கு வருவார்கள்.
மனோகர் மலர் இருவரும் ஆனந்தத்தின் எல்லையில் இருந்தனர். மலர் தனக்குக் கிடைத்த வாழ்க்கையை ஒரு வரமாக நினைத்து வாழ்ந்தாள்.
தன் வாரிசைச் சுமந்து கொண்டிருந்தவளை பூ போலத் தாங்கினார் மனோகர். அது தான் அவளுக்கு மூன்றாம் மாத தொடக்கம். அவளுக்கு ஒரு சிறு வேலையும் தரமாட்டார். அவளுக்குத் தலை சுற்றல் வாந்தியின் போதும் அருகிலேயே இருந்தார். மலரின் தாய் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டார். ஆகவே முழுக்க முழுக்க மலரின் அருகாமையிலேயே பொழுதைக் கழித்தார்.
கலையில் காபி குடிக்கும் போதும் இருவரும் ஒரே தம்ளரில் தான். மனோகரை பாதி குடிக்கச் சொல்லி மீதியை அவள் குடிப்பாள். இது அவர்களின் வாடிக்கை. மனோகர் ஏற்கனவே கூறியபடி, மலர் தான் உணவை அவருக்கு ஊட்டுவாள். அவளுக்கு முடியாத நேரம் மனோகர் அவளுக்கு ஊட்டுவார்.

இருவரின் இந்த அன்னியோன்யம் அன்பரசுவை நெகிழச் செய்தது. இவருவரையும் கடைசி வரை இப்படியே வை கடவுளே என்று வேண்டினார். அந்த வேண்டுதல் பலிக்காமல் போய்விட்டது.
மனோகரின் தந்தை இவர்களின் திருமணம் பற்றி அறிந்தும் எதுவும் பேசாமல் இருந்தார். அவர் மனதில் வன்மம் அதிகரித்துத் தான் இருந்தது. இம்முறை வேறு மாதிரி சதி செய்ய யோசித்தார். அந்த நேரம் மனோகரின் நண்பனிடமிருந்து வேலையில் வந்து சேர்ந்துக் கொள்ளுமாறு தபால் வர அதைச் சாக்காக எடுத்துக் கொண்டு தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள துடித்தார்.
உடனே அதை எடுத்துக்கொண்டு மனோகரைத் தேடிச் சென்றார். அவர் வீட்டு வாசலில் நின்று மனோகரை அழைத்தார். முதலில் ஓடி வந்தது மலர் தான். அவரைப் பார்த்ததும் பணிவாக வணங்கினாள். அவர் மிகவும் நல்லவர் போல நடிக்க ஆரம்பித்தார்.
“ நீ தான் என் மருமகளாம்மா “ கண்களில் நீர் வரவைத்துக் கேட்டார்.
“மாமா “ உடனே அவர் காலில் விழுந்தாள்.
“மலர் என்ன செய்யற, அவரைப் பத்தி உனக்குத் தெரியாது , வா இங்கே !” மனோகர் அவளைத் தன் பக்கம் இழுக்க
“ இன்னும் என் மேல கோபமா மனோ! நடந்ததெல்லாம் மறந்துடுப்பா. எனக்கு நீ ஒரே பையன். உன்னோட ஆசைய நான் நிறைவேத்தனும். அதை மறந்துட்டு நான் தப்பா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு மனோ” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினார்.
“ உங்கள நம்ப நான் தயாரா இல்லை. நீங்க போகலாம். எங்களோட வாழ்க்கைய கெடுக்காதீங்க.” திரும்பி உள்ளே நடக்க ஆரம்பித்தார்.
“மலர். நீயாவது எடுத்துச் சொல்லும்மா. அப்பா மகனுக்குக் கேட்டது நினைப்பானா!” அவரின் வயதுக்கு அவர் கெஞ்சுவதைப் பார்க்கப் பொறுக்கவில்லை அவளுக்கு.
“ நீங்க முதல்ல வீட்டுக்குள்ள வாங்க மாமா.” அன்புடன் அழைத்தாள்.
முகத்தில் மலர்ச்சியுடன் உள்ளே நுழைந்தார் . மனோகருகுக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. இருந்தாலும் மலரின் வார்த்தைக்கு மதிப்பளித்தார்.
“உட்காருங்க மாமா. உங்களுக்குக் குடிக்க எதாவது கொண்டுவரேன்.” தன் அன்னையிடம் சென்று காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு மனோகரின் அருகே வந்தார். அன்பரசுவும் விஷயம் கேள்விப் பட்டு அங்கே வர,
“ மனோ உங்க ரெண்டு பேரையும் ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன் . ஐயர் கிட்ட சொல்லியிருக்கேன். “ கனிந்த பார்வையுடன் சொல்ல,
மலர் மிகவும் மகிழ்ந்தாள். மனோகர் இனி இந்த வசதியில்லாத இடத்தில் கஷ்டப் படத் தேவையில்லை என்று நினைக்க,
“ அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் இங்கேயே நிம்மதியா சந்தோஷமா இருக்கேன். எங்களை இப்படியே விட்டுடுங்க.” எங்கோப் பார்த்துக் கொண்டு சொன்னார்.
“மலர் ! நீ எடுத்துச் சொல்லும்மா. நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுல இருந்தா தான் எனக்கு நிம்மதி. அது தான் முறை. அவனுக்குப் புரிய வை” மலரிடம் பேசித் தன் வேலையை முடிக்க நினைத்தார்.

மலரும் மனோகரை சமாதனாம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தார். அவர் அரை மனதோடு சம்மதம் சொல்ல,
“ மனோ ! உனக்கு இந்தக் கடிதம் வந்தது. என்னன்னு தெரியல கொஞ்சம் பாரு.” மனோகரிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் படித்துவிட்டு, மிகவும் மகிழ்ந்தார்.
“மலர்! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. வந்து ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க.” மகிழ்வுடன் சொல்ல,
இப்போது தான் நடிப்பைக் கொட்டினார் பெரியவர்.
“ என்னப்பா சொல்ற, வேலைக்கு ஏன் போகணும். நம்ம வீட்லயே இருந்து எனக்குப் பிறகு எல்லாத்தையும் கவனிக்கப் போறன்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன். நீ எதுக்கு வெளிய போய் வேலை செய்யணும். அதெல்லாம் வேண்டாம். “ இவ்வாறு அவர் சொல்ல,
மனோகர் தன் முடிவிலேயே உறுதியாக இருந்தார். மீண்டும் தொல்லை செய்யாமல் பெரியவர் கிளம்ப, போகும்போது,
“ சரிம்மா நான் நல்ல நாள் பார்த்துச் சொல்லியனுப்பறேன், நீங்க ரெண்டு பேரும் வரணும் ; அதுக்கப்பறம் நீ வேலைக்குப் போ மனோ.” இருவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு , அனைவரிடமும் விடைப் பெற்றுச் சென்றார்.
மனோகர் மறுநாளே வேலைக்குக் கிளம்பத் தயாரானார். முதலில் அங்குச் சென்று வேலையில் சேர்ந்துவிட்டு , வீடு பார்த்துச் சாமான்கள் வாங்கி வைத்து, ஒரு வாரத்தில் திரும்பி வந்து மலரை அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அதன் பிறகு அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வரை என்ன நடந்தது என்று அவர் அறியாத ஒன்று. பின்பு மலர் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக அவருக்குத் தந்தி வந்தது.
அடித்துப் பிடித்து நேரே அவரின் தந்தையைப் பார்க்கச் சென்றார். அவர் நல்லவர் போல மீண்டும் நடித்தார். மலர் தண்ணீர் எடுக்கச் சென்ற பொது ஆற்றில் இறந்து விட்டதாகவும் அதைத் தாங்க முடியாமல் அவள் தாயும் அடுத்த நாள் இறந்துவிட்டதாகவும் சொன்னார்.
ஊரிலிருந்து வரும் போதே அழுது சிவந்த அவரது கண்கள் இப்போது அவரின் தந்தையின் பேச்சில் கோபம் அடைந்து ரத்தமே வந்தது போலக் காட்சியளித்தது.
நேராக அன்பரசுவைத் தேடிச் சென்றார். வீட்டில் மலரின் படத்திற்குப் பெரிதாக மாலை போட்டு வைத்திருந்தது.அதைக் கண் கொண்டு காண முடியாமல் அழுதார் . நரக வேதனையாக இருந்தது. வாழ்வே இருண்டு விட்டதாகத் தோன்றியது. இனி தான் வாழ்ந்து என்ன ஆகப் போகிறது என்று வருந்தினார்.
“ஆற்றில் தண்ணீர் எடுக்கப் போனபோது மூழ்கிட்டான்னு சொல்லிட்டாங்க மனோகர். எங்க அம்மாவும் படுத்தப் படுக்கையாகி இறந்துட்டாங்க.” அழுது கொண்டே அன்பரசு சொல்ல,
மனோகரிடம் பதில் இல்லை. துவண்டு கிடந்தார்.
“உங்களுக்கு உங்க அத்தை மகள் கூட நிச்சியம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.” அன்பரசு கேட்க
“ அது எனக்கே தெரியாம நடந்த விஷயம். என்னைப் பொறுத்த வரை மலர் மட்டும் தான் எனக்கு மனைவி. இனிமே எனக்கு எந்த ஆசையும் இல்லை. எனக்கு வேலை கிடச்ச இடத்திலேயே தங்கப் போறேன். எங்க அப்பா கூட ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன். “ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அது தான் மனோகரும் அன்பரசுவும் இறுதியாகச் சந்தித்தது. வழியில் அவர் தந்தை தடுத்தும் அவர் ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதற்குள் அன்பரசு வந்து தொல்லைக் கொடுக்காமல் இருக்க, மனோகருடைய கழுத்தில் இருந்தத் தங்கச் சங்கிலியைக் களவாடி விட்டதாக அவர் மேல் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதுவும் மனோகரே புகார் கொடுத்ததைப் போன்று ஏற்பாடு செய்து விட, அன்பரசு சிறையில் தள்ளப்பட்டார். இதைப் பற்றி ஏதும் அறியாத மனோகர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒரு மாதம் கழித்து ஊரில் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்துக் கொண்டிருந்தது.
மனோகரை வரும்படி அழைத்துப்பார்க்க , அவரோ மறுத்துவிட்டார். பின்பு மறைமுகமாக மிரட்டினார் பெரியவர்.
“மனோ ! இப்போ நீ வரல மலர் கதைய முடிச்ச மாதிரி அன்பரசுவை சிறையிலேயே முடிக்க சொல்லட்டுமா?” லேசாகச் சிரித்தார்.
“ மலரைக் கொன்னுடீன்களா? என்ன சொல்றீங்க? அன்பரசு ஏன் சிறையில் இருக்காரு?” பதறிக் கொண்டு கேட்க,
அவர் செய்த தில்லுமுல்லைச் சொல்ல,
“இப்போ நான் என்ன செய்யணும்?”
“ உனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நடக்கணும். இல்லனா அன்பரசு உயிர் போய்டும்” சொல்லிவிட்டு டெலிபோனை வைத்தார்.
மனோகர் வந்ததும் , அன்பரசுவை விடுதலை செய்யச் சொன்னார்கள். நேரே அவரின் தந்தையின் அறைக்குச் சென்று நடந்தவற்றைக் கேட்க,
அவர் அனைத்தையும் சொன்னார்.
மனோகர் சென்று ஒரு நாள் கழித்து , மலரைக் காண ஆட்களை அனுப்பிவைத்தார். அன்பரசு அப்போது தான் கடைக்குச் சாமான்கள் வாங்கவென்று பக்கத்து டவுனுக்குச் சென்றார். வீட்டில் மலரும் அவரது தாயும் மட்டுமே தனித்து இருந்தனர். ஆட்கள் கதவைத் தட்டி ,
“ ஐயா , உங்கள கையோட கூட்டிட்டு வர சொன்னாரும்மா. இன்னிக்கு ரொம்ப நல்ல நாளாம். அதனால மகன் இல்லாட்டியும் மருமகளை மட்டும் வீட்டுக்கு அழைக்கனும்ன்னு ஐயர் சொன்னதா உங்கள கூட்டிட்டு வரச் சொன்னார். திரும்ப நாங்களே கொண்டு வந்து விடறோம். சின்னையா வந்ததும் அவர் கூட வரலாம்ன்னு சொன்னங்க.” வந்தவர்களில் ஒருவன் சரளமாகப் பேசினான்.
இரு பெண்களும் அதை நம்பி விட்டனர். மலர் தாயைப் பார்த்து,
“ அம்மா , நீங்களும் வாங்க” என்று அழைக்க
“ இல்லம்மா முதல் முதலா புகுந்த வீட்டுக்குப் போற , நான் வரக் கூடாது, நீ போயிட்டு வா, நான் அண்ணன் கூட இன்னொரு நாள் வரேன். பத்தரமா திரும்பிக் கொண்டு வந்து விட்டுடுங்க “ என்று வழியனுப்பி வைத்தார்.

இரண்டு தெருக்களை அமைதியாகக் கடந்தனர். பின்பு அவளைக் கைகளை ஒருவன் பற்றிக்கொள்ள, கால்கள் இரண்டை மற்றொருவன் பற்றிக்கொள்ள, அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றனர். அவள் வாயைத் துணியை அடைத்துக் கத்த விடாமல் செய்தனர். எவ்வளவோ திமிறிப் பார்த்தும் அவளால் அசையக் கூட முடியவில்லை.
அவளைத் தண்ணீரில் வைத்தனர். இடைவரை தண்ணீரில் நிறுத்தி அவள் கைகளைப் பின்னால் பிடித்துக் கொண்டான் ஒருவன் , தலையைப் பிடித்து ஒருவன் முக்கினான். அவளுக்கு விழி பிதுங்கியது. கத்தவும் முடியாமல் போனது. வெளியே வர முடியாத படி அவளைப் பற்றினார்கள்.
சிறிது நேரத்திலேயே அவள் மயங்கி விழ, அப்படியே ஆற்றோடு போகட்டும் என விட்டுவிட்டு சென்றனர்.
அவள் ஆற்றின் வேகத்தோடு அடித்துக் கொண்டு சென்றாள்.
இதைக் கேட்ட மனோகர் மயக்கம் வராத குறையாக அங்கே அமர்ந்துவிட்டார். உலகமே தலைகீழாக ஆனாத உணர்ந்தார். இதற்கெல்லாம் உங்களுக்குத் தகுந்த தண்டனைக் கிடக்கும் என்று மனதில் சபித்தார். மறுநாள் கல்யாணத்திற்கு தயாராகும் படி சொல்லிவிட்டுச் சென்றார் பெரியவர்.
மனதிற்குள் மலரிடம் மன்னிப்புக் கேட்டார். அன்றிரவு உறக்கம் சிறிதும் வரவில்லை. தன்னால் தான் மலருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று மருகினார். தன் வாழ்வில் நிலவாக ஒளிவீசியவள் இன்று அமாவாசையாக மாறிப்போனதை அவரால் ஏற்க முடியவில்லை. ‘உனக்கு நான் பாவம் செஞ்சுட்டேன் மலர். அந்தப் பாவத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால போக்க முடியாது. நீ இல்லாத நான் ஒரு நடைபிணம் தான். அன்பரசுவைக் காபாற்றத் தான் நான் இந்தத் திருமணதிற்கு சம்மதிச்சேன். அவனையும் பலி கொடுக்க நான் விரும்பவில்லை. என்னை மன்னிச்சுடு மலர். உன்கூட நான் வாழ்ந்த நாட்கள் மட்டும் தான் என் வாழ்வின் சுந்தரக் காண்டப் பகுதி. இனி என் வாழ்வில் வசந்தம் என்பது சிறிதும் இல்லை.’ மலர் அருகில் இருப்பதாக நினைத்துத் தனக்குள் பேசினார்.

     வீசுகின்ற தென்றலே
  வேலையில்லை நின்று போ
  பேசுகின்ற வெண்ணிலா
  பெண்மையில்லை ஓய்ந்து போ
  பூ வளர்த்த தோட்டமே
  கூந்தலில்லை தீர்ந்து போ
  பூமி பார்க்கும் வானமே
  புள்ளியாக தேய்ந்து போ

பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

இனி தன் வாழ்வின் இருண்ட பாதையை நினைத்துக் கண்களை மூடிப் படுத்துக் கொண்டார். கண்களுக்குள் மலர்மொழி சிரித்தாள்.
திருமணத்தைத் தடுக்க வேறு வழி இருக்குமா என யோசித்தவர், தன் அத்தையிடம் சென்றார். அவர் மனோகரிடம், தனக்கு அனைத்தும் தன் அண்ணன் மூலம் தெரிந்தது என்று சொல்ல, அதிர்ந்தார் மனோகர்.
“மனோ! மலர் வாழ்க்கை என்னால காப்பாத்த முடியல, நீ இல்லனா பார்வதி நிச்சியம் உயிரோட இருக்கமாட்டா. இன்னொரு பெண்ணோட உயிரைக் காப்பாத்து “ கெஞ்சினார்.
மனோகர் எல்லா வழியும் அடைக்கப் பட்டதாக உணர்ந்தார். எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, “மனோ! இந்த விஷயம் பார்வதிக்குத் தெரிய வேண்டாம். அவளாவது நிம்மதியான வாழ்க்கைய வாழட்டும். நீ எனக்குச் சத்தியம் செய்” என்று விடாப் படியாகக் கேட்க,
பார்வதி ஒருத்தியாவது எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கட்டும். அவளையும் குழப்ப விருப்பம் இல்லை மனோகருக்கு. தன் சோகம் தன்னோடு போகட்டும் என்று அவருக்குச் சத்தியம் செய்தார்.
திருமணம் நடந்து முடிந்தது. மனோகர் யாரிடமும் ஆசி வாங்க மறுத்து விட்டார். பின் அவர் ஊருக்குக் கிளம்பும் முன் தனிமையில் தன் தந்தையைச் சந்தித்தார்.
நீங்க நினச்சது நடந்துடுச்சுன்னு மட்டும் நினைக்காதீங்க. என் மலர கொன்னுட்டு நீங்க நிம்மதியா இருக்க விடமாட்டேன்.
நான் உயிரை விட ரொம்ப நேரம் ஆகாது. ஆனா அது ஒரு நாள் வேதனை தான். உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நான் தண்டனைத் தரப் போறேன். பார்வதிக்கும் எனக்கும் நடுவில ஒன்னும் கிடையாது. உங்க குடும்பம் என்னோட அழிஞ்சது. நான் வரேன்.” ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அவர் சென்றதும் மிகவும் நொந்து விட்டார் பெரியவர். அதிக மன அழுத்தம் அவருக்குப் பக்க வாதம் வந்து படுக்கையில் தள்ளியது. மனோகர் கடைசிவரை அவரை வந்துப் பார்க்கவில்லை.
ஒரு வருடம் மிகவும் கஷ்டப் பட்டார். பேச்சும் இல்லை, வலது பக்கம் முழுதும் செயலிழந்து போனது. பார்வதியின் தாய் எத்தைனையோ முறை அழைத்தும் மனோகர் வர மறுத்தார். கடைசியில் இறந்தே விட்டார்.
அந்த ஒரு வருடம் , பார்வதியுடன் அவர் பேசினாலும் ஒரு ஒதுக்கம் இருந்தது.பார்வதி அவரை எதற்கும் வற்புறுத்தியது இல்லை. ஆகவே சுமுகமாகவே சென்றது வாழ்வு. மனோகர் மலரின் இழப்பிலிருந்து முழுவதுமாக வெளி வர வில்லை. அன்பரசுவைத் தேடித் பார்த்தும் அவரும் கிடைக்க வில்லை.
தந்தையின் காரியத்திற்கு வரவேண்டும் என்று அவரின் அத்தை வற்புறுத்த அதற்கு வந்தார். காரியம் செய்ய மறுத்தார். அவரைப் படாதபாடு பட்டுச் செய்ய வைத்தார்கள்.
அனைத்தும் முடிந்து அமர்ந்திருந்தவரிடம் , பொறுமையாக வாழ்க்கையைப் பற்றி எடுத்துரைத்தார் பார்வதியின் தாய்.
“போவனளைப் பற்றி நினைக்காமல் இருக்கும் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளுங்கள். உங்க மலர் இருந்திருந்தா அவளும் இதைத் தான் சொல்லியிருப்பா. உங்க அப்பா செஞ்ச பாவத்திற்கு அவருக்குத் தக்க தண்டனை கிடைச்சுடுச்சு. இனி போனவங்க எப்பவும் திரும்பி வரமாட்டாங்க.

தவறு செஞ்சவங்க எங்கோ இருக்க, நீ பார்வதிய தண்டிக்கறது நியாயம் ஆகாதுப்பா. அவ பாவம். சின்ன வயசில இருந்து உன்னைப் பற்றி நாங்க தான் அவகிட்ட சொல்லி அவ மனசில உன்னை விதைச்சோம் அவளோட தப்பு எதுவும் இல்லை மனோ. நீ தயவு செஞ்சு என் பொண்ணை தண்டிக்காதே. உன் காலில் விழுந்துக் கேட்கிறேன் ” என்று அவர் காலில் விழப் போக, தடுத்தார் மனோகர்.
“ கொஞ்சம் யோசி மனோ!” சொல்லிவிட்டுச் சென்றார்.
பார்வதியை பற்றி அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் சிந்தித்ததில்லை. முதல் முறையாக அவளைப் பற்றி யோசித்தார். திருமணம் முடிந்த நாளிலிருந்து அவளுக்கு ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை. அவர்களுக்குள் மிகவும் குறைவாகவே பேச்சும் இருந்தது.
அவள் இது வரைத் தனக்கு தேவையானதைக் கவனித்துச் செய்திருக்கிறாள்.அனால் தான் ஏன் அப்படி இருக்கிறேன் என்று ஒருநாளும் கேட்டதில்லை. அவள் அவரைத் தொல்லை செய்ததே கிடையாது. அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் தண்டனை அனுபவிக்கிறாள்.

தன் மனதை கொஞ்சாமாக அவளுக்காக ஒதுக்கினார். அவளுடன் அன்பாக இருக்க முயற்சித்தார். இரண்டு வருடங்கள் கழித்தே அவர் மனதை மாற்றிக்கொண்டு அவளுடன் வாழ ஆரம்பித்தார். அதற்காக மலரை மறக்கவும் அவரால் முடியவில்லை.
பின் மைதிலியும் சித்துவும் பிறந்தனர். அந்தக் குழந்தைகளிடம் நேரம் செலவழித்து மலர் நினைவின் வேதனையைக் குறைத்துக் கொண்டார்.
இதுவே மனோகரின் பக்கம் நடந்தவை.
அனைத்தையும் கேட்ட சித்துவும் யுவாவும் சொல்வதறியாது அமர்ந்த்திருந்தனர்.