யுவராஜ் இரண்டு விதமான மனநிலையில் இருந்தான். ‘இவர் சொல்வது எல்லாம் உண்மை தானா? இல்லை ஆதாரத்திற்கும் சாட்சி சொல்லவும் யாரும் இல்லை என்று நல்லவனாகக் காட்டிக்கொள்ள இதைச் சொல்கிறாரா? இருந்தாலும் அவர் பேசும்போது சிறிதும் தடையின்றி அனைத்தையும் சொல்வதால் உண்மையாக் கூட இருக்கலாம். அவரது அறையில் இருக்கும் பழைய புடவையும் அந்தப் போட்டோ வும் அவர் நல்லவர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.’ எதுவாக இருந்தாலும் இப்போது தன்னைப் பற்றிக் காட்டிக் கொள்ளும் மனநிலை அவனுக்கு வரவில்லை.
சித்து கணத்த மனதோடு அமர்ந்திருந்தான். அவனுக்குத் தன் தந்தை மீது சிறிதும் சந்தேகம் இல்லை. அவர் மனதின் ஆழத்திலிருந்து தான் பேசுகிறார் என்று அவன் உணர்ந்தான்.
மனோகரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார். யுவராஜின் அருகே வந்தார். “ உன்னைப் பற்றி எனக்கு அவ்வளவா தெரியாதுப்பா. இருந்தாலும் உன்னை வெளி ஆளா என்னால நினைக்க முடியல. உன்னைப் பார்த்ததிலிருந்தே எனக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம். உன்னையும் சித்துவையும் வேற வேற யா பார்க்க முடியல. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் பிரிண்ட்ஸாவே இருக்கணும். “ அவன் கையைத் தட்டிக்கொடுத்துச் சொல்ல, அவர் கையில் இருந்த ஒரு பழைய மோதிரம் கண்ணில் பட்டது.
இதே போன்ற மோதிரம் தன் தாயிடமும் ஒன்று இருப்பதைப் பார்த்திருக்கிறான். அதை அவன் அவர் கையைப் பிடித்துப் பார்க்க ,
“ இது மலர் எங்க கல்யாணம் ஆன அன்னிக்கு எனக்காகக் குடுத்தப் பரிசு. அவளோட ஞாபகம் எனக்கு அடிக்கடி வரும். அப்போல்லாம் இதையும் அவளோட புடைவையும் தான் எனக்கு ஆறுதல். நான் கடைசியா மலரைப் பிரிஞ்சு வேலைக்குப் போறப்ப அவளோட ஒரு புடைவைய என்கூட எடுத்துக்கிட்டுப் போனேன்.
அங்க வேலைக்குச் சேர்ந்த பிறகு தினமும் அவ என் பக்கத்துல இல்லைன்னு வருத்தப் படக் கூடாதுன்னு அவ புடைவைய படுக்கைல விரிச்சு அது மேல தான் படுத்துப்பேன். அவளே என் பக்கத்துல இருக்கற மாதிரி தோணும்.

கடைசில அந்தப் புடவை மட்டும் தான் எனக்கு மிச்சம். “ கண்களில் நீர் பெருகக் கூறினார்.
“எனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகி மைதிலி பிறக்கற வரைக்கும் என்கூட தான் வெச்சிருந்தேன். பார்வதி அதைப் பத்திக் கேட்க மாட்டா. ஆனா பிள்ளைகள் பெருசாகி அதைப் பத்திக் கேட்க வாய்ப்பிருக்கு , அதுனால தான் இங்க எடுத்துட்டு வந்து வெச்சிகிட்டேன். இப்போ என்னோட கடமை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நான் அவ கூட வாழற மாதிரி தோணுது.“ அவரின் காதலின் ஆழம் யுவாவை எங்கோ தொட்டது. அவர் மேல் இருந்த சிறு சந்தேகமும் விலகியது.
லேசாகக் கண்ணைக் கரிக்க ஒரு முறை அவரை அப்பாவென்று அழைக்கத் தோன்றியது.அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் , “ நான் ஊருக்குக் கிளம்பறேன். “ என்று கிளம்ப
சித்து அவனிடம் வந்து “ என்ன அதுக்குள்ள கிளம்பறீங்க? இனிமே நீங்க என்னை விட்டு எங்கயும் போக நான் விடமாட்டேன். நீங்க தான் என்னோட …” சொல்ல வருவதற்குள்
“ இல்லை சித்து. வேண்டாம்…இதப் பத்தி அப்புறம் பேசுவோம். “ மெதுவாக யுவா சொல்ல
“ இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போப் பா . எப்பையும் வேலைலையே இருந்தா எப்படி. நாளைக்குத் திருவிழா, ரொம்ப வருஷம் கழிச்சு நான் திருவிழாவில் கலந்துகறேன். இந்த வருஷம் என் பையனுக்குத் தான் பூர்ண கும்பம் குடுக்க சொல்லியிருக்கேன். இருந்து பாத்துட்டுப் போகலாம். “
“ இல்ல அப்…..” அப்பா என்று அவனையும் அறியாமல் வந்ததை வாய்க்குளேயே அடக்கினான்.
சிறு வயது முதலே அவனுக்கு அப்பாவைக் காணும் ஆவலும் அவருடன் மனம்விட்டு பேசிப்பழகும் ஆசையும் இருந்தது. இடையில் அவன் தவறாகப் புரிந்துகொண்டு வஞ்சம் வளர்த்துக்கொண்டிருந்தான். அது தீர்ந்தவுடன் இப்போது ஏனோ பழைய ஏக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
சித்து அவனது தவிப்பை உணர்ந்து தான் இருந்தான்.

“ அண்ணா. எதுக்குத் தயங்கறீங்க. நான் சொல்லப் போறேன். “ சித்து வேகமாகச் சொல்ல
அவன் கையைப் பிடித்துத் தடுத்தான் யுவா.
“ என்னப்பா ? என்ன விஷயம் ?” மனோகர் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“ இதுக்கு மேல எதுக்கு மறைக்கணும் அண்ணா ….ஏற்கனவே அம்மாக்கு தெரியும். அதுனால இப்போவே சொல்லறது தான் நல்லது.”
“என்ன அம்மாக்குத் தெரியும் ? எதுவா இருந்தாலும் சொல்லு சித்து.!” மனோகர் விஷயம் தெரியாமல் குழம்பினார் .
“அது .. அது.. “ யுவா சொல்லமுடியாமல் தவித்தான்.
“ இவர் தான் உங்க முதல் மகன். மலர் அம்மாவோட பையன். மலர் அம்மாவும் உயிரோட தான் இருக்காங்க.” போட்டு உடைத்தான் சித்து.
உலகமே ஸ்தம்பித்துவிட்டது மனோகருக்கு. இதயம் வேகமாகத் துடித்து ,வியர்த்துக் கொட்டியது. நிற்க முடியாமல் தலை சுற்றியது. கண்கள் இருண்டு கீழே விழப்போனார். உடனே யுவாவும் சித்துவும் ஓடி வந்து தாங்கினர்.
மனோகர் சரிந்தார். யுவா அவரைத் தன் மடியில் கிடத்திக்கொண்டான். சித்து ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தான். முகத்தில் தெளித்தும் அவரிடம் அசைவில்லை. சித்து பயந்துவிட்டான்.
“அண்ணா, என்ன ஆச்சு. எனக்குப் பயமா இருக்கு. ஏன் அப்பா எந்திரிக்கல? டாக்டர் கிட்ட போகலாமா? “ பதட்டமாகக் கேட்க,
“ ஒன்னும் இல்ல. பயப்படாத. கொஞ்சம் காத்து வேணும். அருகில் இருந்த பேப்பர் சுருளை எடுத்து விசிறினான். சிறிது நேரம் கழித்து கண்கள் அசைந்தது. இருவரும் அவரைப் பார்க்க மெதுவாகக் கண் விழித்தார்.

கண்களில் ஆனந்தம் மிகுதியால் கண்ணீர் பொங்கியது. யுவாவைத் தான் பார்த்தார். “யுவராஜ்” மெல்ல அழைத்தார்.
அவனும் கண்களில் பாசத்தோடு அவரைப் பார்த்தான்.
“ நீ என் மகனா? நிஜமாவா? என் மலர் இன்னும் உயிரோட இருக்காளா? இது கனவா? “ மனோகர் அந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
யுவா ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“ என்னப்பா எதுவும் பேச மாட்டேங்கற? சொல்லுப்பா!” அவன் முகத்தைப் பற்றிக் கேட்க
அந்தத் தொடுதல் அவன் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த பாசத்தை மடை திறந்த வெள்ளம் போலப் பெருகி ஓடச் செய்தது.
“ என்னை மன்னிச்சிடுங்க” தன் முகத்தில் இருந்த அவரின் கையைப் பற்றிக்கொண்டு கண்களை மூடி அவரிடம் வேண்டினான்.
“ நீ ஏம்பா மன்னிப்புக் கேட்கற? மன்னிப்பு கேட்க வேண்டியது நான் தான் . உன்கிட்டயும் மலர் கிட்டயும் நான் தான் மன்னிப்புக் கேட்கணும். இத்தனை நாள் உங்களைப் பத்தி நான் தெரிஞ்சுக்காம போனது நான் செஞ்ச பாவம். குற்ற உணர்ச்சியால தினம் தினம் சேத்துகிட்டு இருந்தேன். ஆனா அந்தத் தண்டனை எனக்கு வேணும். என்னோட செல்வங்கள தொலச்சததுக்கு கடவுள் எனக்குக் குடுத்த தண்டனை.
மலர் ஏன் என்கிட்டே வரல? இத்தனை நாள் ஏன் என்னைப் பிரிஞ்சு இருக்கணும்? நான் உங்கப்பான்னு தெரிஞ்சும் ஏன் யுவா என்னைத் தேடி வரல? “ அவர் அனைத்தையும் தெரிந்துக் கொள்ளத் துடித்தார்.
இருவருக்கும் மனம் விட்டுப் பேச அவகாசம் தந்து , அவர்களைத் தனிமையில் விட்டுச் சித்து அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வர நினைத்தான். பார்வதியின் மனநிலையை அறியவும் விரும்பினான். ஆகையால் அங்கிருந்து கிளம்பினான்.
யுவராஜ் தன் பக்க வாழ்க்கையை அவரக்குச் சொன்னான். மலர் மீண்டும் அன்பரசுவைத் தேடி வந்து. அன்று மனோகரின் திருமணத்தை நிறுத்தாமல் ஒதுங்கியது. பின் இருவரும் ஊரைவிட்டுச் சென்று ஒரு வெறுமையான வாழ்வை இத்தனை நாள் வாழ்ந்தது என்று அனைத்தையும் அவரிடம் சொல்ல, தான் தவறாகப் புரிந்து கொண்டு பழிவாங்க நினைத்ததையும் அவரிடம் கூறினான்.

 

 

அனைத்தையும் கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்தார் மனோகர். “ உன்மேல தப்பில்ல யுவா. இனி ஒரு முறை மன்னிபுன்னு நீ பேசக் கூடாது. உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுது. உன்னால எனக்கு எந்தப் பிரச்சனை வந்திருந்தாலும் அது எனக்குக் கிடைக்கற சிறு தண்டனை தான். உனக்கும் உங்க அம்மாக்கும் நான் பண்ண துரோகம் மிகப் பெரியது.
அவ தெரிஞ்சே என்னை இன்னொரு கல்யாணம் பண்ண வெச்சிருக்கா. எங்க அப்பாவால எனக்கு எந்தத் தொல்லையும் வரக் கூடாதுன்னு. அவ எனக்குக் கிடச்ச வரம். அதை நான் தவற விட்டுட்டேன். இனிமே ஒரு நிமிஷம் கூட அவளைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. உன்னைச் சின்ன வயசில கூட இருந்து வளர்க்க முடியாத பாவியாயிடேன். என்னைத் தயவு செஞ்சு மன்னிச்சு ஏத்துக்கோ யுவா. “ மனமுருகி அவனிடம் கேட்டார்.
“ நீங்க எந்தப் தப்பும் உங்களுக்குத் தெரிஞ்சு பண்ணல. விடுங்க. எல்லாம் விதி. யார் என்ன பண்ண முடியும்?”யுவா சொல்ல,
“ நீ இன்னும் என்னை மன்னிகலையா யுவா?”
“ நான் உங்க மேல இருந்த வன்மத்தை , வெறுப்பை மறந்துட்டேன். “ சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ அப்போ இன்னும் ஏன் என்னை ‘அப்பான்னு’ கூபிடத் தயங்கற? “ அவர் தலை குனிந்துக் கேட்க
அப்போது தான் அவரைப் பொதுவாக அழைத்துப் பேசியது நினைவுக்கு வந்தது. அவனுக்கும் அப்பா என்றழைக்க ஆசை தான். ஆனால் தயக்கமா , குற்றவுணர்வா எதுவோ அவனை அப்படி அழைக்க விடவில்லை. அனால் இனி தான் எந்தத் தடையும் இல்லையே,
“அப்பா………” வார்த்தைகள் வராமல் மெதுவாக அவன் சொல்ல
பூரித்துப் போனார் மனோகர்.
முதல் முறையாக அவரை அப்பா என்று அழைக்கிறான். அவனுக்குள் தந்தை என்ற உறவின் அருகாமை, அவரைப் புரிந்து கொண்ட ஆனந்தம். இனி வாழ்நாள் முழுதும் அவரைப் பிரியும் அவசியம் இல்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது யுவராஜிற்கு .
“கூப்பிடு யுவா… இந்தப் பாவிய நீ அப்பான்னு கூப்பிட நான் தவம் செஞ்சிருக்கணும்.” மனோகரும் கரைந்தார்.
“ அப்பா… அப்பா…..” அவர் கையில் தன் முகத்தைப் புதைத்து அழுதான்.
இருவரும் இத்தனை வருடம் காட்டாத அன்பை இன்றே தீர்த்துக் கொள்ளவது போல உருகினர். தன் முதல் மகனை ஆசைத் தீரக் கொஞ்சி மகிழ்ந்தார் மனோகர். யுவா தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்துத் தன் மன ஏக்கங்களைப் போக்கிக் கொண்டான்.
“ அப்பா இனிமே என்கூடையே இருங்கப்பா? ப்ளீஸ்.. “ சிறு குழந்தையாகவே மாறிவிட்டான்.
“ யுவா நாம இனி ஒரே குடும்பம். சித்துவும் உன்னை அண்ணான்னு ஏத்துக்கிட்டான். பார்வதியும் நிச்சியம் ஏத்துப்பா.” அவன் தலையை வருடிக் கொடுத்தார்.
“ சித்து ரொம்ப ஸ்வீட் பா. என்னையே கன்வின்ஸ் பண்ணிட்டான். இப்போ கூட நமக்கு டைம் குடுத்துட்டு அவன் வெளிய போய்ட்டான். பார்வதி அம்மா கிட்ட முன்னாடியே சொல்லிட்டோம். அவங்க ரொம்ப நல்லவங்க. “ கண்ணை மூடிக்கொண்டே அவர் வருடலை ரசித்த படி பேசினான்.

“ பார்வதிக்குத் தெரியுமா? அவளும் ரொம்ப நல்லவ. என்கிட்டே இருந்து எதையும் எதிர்பார்க்காம இருந்தவ. அவகிட்ட எப்படி சொல்றதுன்னு தவிச்சேன். அந்த வேலைய நீங்க செஞ்சுட்டீங்க. அவ கிட்டயும் நான் மன்னிப்புக் கேட்கணும். எனக்கு உடனே மலர பாக்கணும் போல இருக்கு யுவா.. நாம இப்போவே அவ இருக்கற இடத்துக்குப் போகலாமா?” மிகுந்த ஆசையுடன் கேட்க,
“ போகலாம் ப்பா … முதல்ல இங்க எல்லாத்தையும் பார்வதி அம்மா கிட்ட சொல்லி அதுகப்பறம் போகலாம். “
அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டார். பின்பு அவனின் குழந்தைப் பருவம், படிப்பு அனைத்தையும் கேட்டறிந்தார். அவரின் அந்த ஆர்வம் யுவாவிற்கு மனநிறைவை அளித்தது.
இத்தனை நாள் அவர் தங்களை வேண்டும் என்றே நிராகரித்துச் சென்றதாக நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். மனோகர் அவனிடம் சிறு சிறு விஷயங்களைக் கூடக் கேட்டுக் கொண்டார். அவனது நண்பர்கள், அவன் படித்த பாடம், அமெரிக்காவில் அவன் தங்கிய இடம் ஒன்று விடாமல் தன் மகனை அன்றே முழுதாகத் தெரிந்து கொண்டு விடவேண்டும் என்ற வேகம் இருந்தது.
சிறு வயதில் யுவா தந்தை இல்லாமல் இழந்த அனைத்துத் தருணங்களையும் சொல்லும்போது மிகுந்து வேதனையுற்றார். அவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். அவனைச் சிறு வயதில் ஆசைதீர கையில் ஏந்திக் கொஞ்ச முடியாமல் போனதை நினைத்து அவருக்கு மேலும் கண்ணீர் வர, அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினார். அவன் வளரச்சியைப் பார்த்துப் பெருமைப்பட்டார்.
இனி ஒரு நாளும் அவனை விட்டு விலகக் கூடாது என்று தீர்மானித்தார்.
சித்து வீட்டில் பார்வதியிடம் நடந்த அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான். தன் அம்மா விடம் செய்த சத்தியத்தினால் தான் தன்னிடம் மனோகர் எதுவும் சொல்லவில்லை என்பதை உணர்ந்த பார்வதி அவர் மேல் இருந்த சிறு வருத்தமும் நீங்கப் பெற்றார். அனைத்தையும் சொல்லிவிட்டு பார்வதியின் முகத்தில் ஏதேனும் வருத்தம் தெரிகிறதா என்று அவரையே ஊன்றிப் பார்த்தான்.
மாறாக அவர் முகத்தில் தெளிவே காணப்பட்டது. “ என்னடா அப்படிப் பார்க்கற?” மலர்ந்த முகத்துடனே சித்துவைக் கேட்க,
“இல்ல இந்தச் சிடுவேஷன்ல நீங்க அழனும் இல்லனா கோவப்படனும், அது ரெண்டுமே இல்லாம தெளிவா இருக்கீங்களே அதான் ஒரு சின்ன கன்ஃப்யூஷன்” தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே கேட்டான்.
உடனே அவன் தலையில் தட்டி, “ இல்லை சித்து அவங்க வாழ்க்கைல எனக்கே தெரியாம நான் வந்துட்டேன். ஆனா உங்க அப்பா என்னைக் கடுமையா ஒரு நாளும் நடத்தினது இல்ல. மலரும் என்னகாக அவங்க ஒதுங்கிப் போய்ட்டாங்க. இத்தனை நாள் எப்படி அவங்க கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்க நெனச்சு இருந்தா என் கல்யாணமே நடந்திருக்காது. இவங்க ரெண்டுபேருக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இப்பயாவது அவங்க ஒண்ணா சேரனும். அது தான் என்னால முடிஞ்சுது. “ உடனே அவங்கள வர சொல்லணும்.” முகம் மலர்ந்து சொல்ல, தன் தாயை நினைத்துப் பெருமைப் பட்டான் சித்து.
அதற்குள் யுவாவும் மனோகருமே அங்கே வந்துவிட, அவர்களை அன்போடு வரவேற்றார் பார்வதி. மனோகர் வியந்துப் பார்க்க ,
“என்னை மன்னிச்சிடுங்க. உங்க வாழ்க்கைல நடந்த எல்லா குழப்பத்துக்கும் நான் தான் காரணம். என்னை மன்னிச்சிடுங்க,
மலர் அக்கா கூடத் தான் இனிமே நீங்க இருக்கணும். எனக்கு அதில எந்த வருத்தமும் இல்லை. நான் சித்து கூட இருந்துக்கறேன். கொஞ்சம் வருத்தம் இருக்கத் தான் செய்யுது, இருந்தாலும் அக்கா பட்டக் கஷ்டத்த நினைக்கறப்ப இது ஒன்னும் பெருசில்ல” பார்வதி சொல்ல,
“இல்ல பார்வதி. நீ தான் என்னை மன்னிக்கணும். உன்கிட்ட நான் இதைச் சொல்லியிருக்கணும். ஆனா சொல்லமுடியல. ஆரம்பத்துல மலர் நினைவால உன்கிட்ட சரியா பேசக்கூட மாட்டேன். எல்லாத்தையும் நீ பொறுத்துக்கிட்ட. நான் உன்னைத் தேவையில்லாம தண்டிச்சுட்டேன். மன்னிச்சிடு பார்வதி” அவர் மனதார மன்னிப்பு வேண்டினார். யுவா அருகே வந்தான்.
“ எனக்கும் நீங்க அம்மாதான். எங்க அம்மா மாதிரி நீங்களும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. யாரும் இனிமே பிரிஞ்சு இருக்க வேண்டாம். நாம எல்லாரும் இனிமே ஒண்ணா இருக்கலாம். நீங்க இதுல கொஞ்சம் கூட வருத்தப் படவேண்டாம்.” அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டு சொன்னான் யுவராஜ்.

அவனின் நல்ல மனது அனைவரையும் இளகச் செய்தது. அனைவரும் சென்று உணவருந்தினர். பார்வதி இம்முறை அனைவருக்கும் பரிமாறினார். குழந்தையும் எழுந்து விட அது இப்போது யுவாவின் மடியில் அமர்ந்து உணவு உண்டது.
அவன் குழந்தைக்கு ஊட்டிவிட்டான். அதைக் கண்ட மனோகர் எழுந்து அவன் அருகில் வந்தார். யுவா அவரைப் பார்க்க,
“ எனக்கு ஒரு ஆசை யுவா! உனக்கு நான் ஊட்டிவிடனும்.” தன் தட்டிலிருந்து ஒரு உருண்டை எடுத்து அவனுக்கு ஊட்ட , அவனும் கண்ணீர் மல்க அதை உண்டான்.

பார்வதியும் தன் பங்கிற்கு அவனுக்கு ஊட்டினார். அவருக்கு அடுத்து “ எங்க அண்ணாக்கு நான் ஊட்டனும் தள்ளுங்க” என்று அவனும் ஊட்டினான்.
மகிழ்ச்சியில் தத்தளித்தான் யுவராஜ். இந்த இன்பமான நேரத்தில் தன் தாய் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அனைவரும் உண்டு பின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
திடீரென சித்து “ அண்ணியப் பத்தி சொல்லுங்க “ என்று சாதாரணமாகக் கேட்க, மனோகரும் பார்வதியும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
இதைப் பற்றி அவன் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் இருக்க, இப்போது சங்கடமாக உணர்ந்தான்.
“ இல்லப்பா .. அது வந்து “ என்று இழுக்க ,
“சொல்லுப்பா.. “ சித்து கிண்டல் செய்ய
“ஆராதனா.. அவ பேரு. அம்மா கூட நிச்சயம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க.” தயங்கித் தயங்கிச் சொல்ல,
நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான் சித்து. அதில் சற்றுக் கடுப்பாகி
“ சக்தி பத்தி சொல்லிட்டியா சித்து?” இப்போது யுவா கேட்க,
திரு திரு வென விழித்தான் சித்து. பார்வதியும் மனோகரும் மாறி மாறி அவனைப் பார்க்க,
“ அண்ணா ….” மனதில் கத்தினான்.

“ ஒரு போன் பண்ணனும் இதோ வரேன்..” என்று அங்கிருந்து தப்பிச் சென்றான் சித்து.
“என்னப்பா அண்ணனும் தம்பியும் எங்களுக்கு வேலையே வைக்கல போல” மனோகர் சிரித்துக்கொண்டே கேட்க,
“ஆமாப்பா. உங்களுக்கும் பிடிக்குமப்பா” மெதுவாகச் சொல்ல
“ உங்க விருப்பம் தான் எங்க விருப்பம் அதுக்கு எப்போதுமே தடை இல்லை யுவா” பார்வதி சொன்னார்.

அதற்குள் அவனுக்கும் போன் மணி அடிக்க அவனும் எழுந்து சென்றான்.
சித்து நிஜமாகவே போன் செய்யத் தான் சென்றான். சக்த்திக்குப் பேசவேண்டும் என்று தோன்றியது. அவளுக்கு இப்போது போன் செய்ய , அவளோ தனக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் தன் தந்தை ஆனால் அவள் அவனிடம் ‘நானும் சித்துவும் காதலிகின்றோம்’ என்று சொல்லப்போவதாச் சொன்னாள்.
“ சக்தி என்ன சடனா உங்க வீட்ல இப்படி அர்ரெஞ் பண்ணிட்டாங்க, நீ உங்க அம்மாகிட்ட சொன்னியா?” சித்து என்ன செய்வது என்று மனதில் யோசித்துக் கொண்டே கேட்டான்.
“ சொல்லிட்டேன் சித். அவங்க என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்காங்க. “ அவள் சற்று கலவரமாகவே பேசினாள்.
“ ஹே சகி, நீ டென்ஷன் ஆகாத, எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். அவங்க இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு தான வராங்க. அதுக்குள்ள நான் அங்க வந்துடுவேன். எனக்கு இப்போ பெரிய சப்போர்ட் இருக்கு. நீ கவலைப் படாத.” யுவாவை மனதில் நினைத்து இப்படிச் சொன்னான்.
“ சரி , உன்கிட்ட விஷயத்தைச் சொன்ன பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. நீ ஏன் டா ரெண்டு நாளா போன் எடுக்கல. நான் எவ்ளோ டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” செல்லமாகக் கோவப்பட்டாள்.
“ என்னது டா வா? என்னடி வர வர மரியாதை தேஞ்சுக்கிட்டே போகுது.?” அவனும் அவளுக்கு ஈடு கொடுத்தான்.
“ ஆமா எனக்குக் கோவம் வந்தா அப்படி தான் சொல்லுவேன். என்ன டா பண்ணுவ?”
“ நீ பக்கத்துல இருந்தா என்ன பண்ணுவேன்னு காட்டியிருப்பேன். ஹ்ம்ம்… “ இறங்கிய குரலில் அவன் பேச, அவனது பெருமூச்சு அவள் காது வழியாக உள்ளத்தில் புகுந்து ஏதோ செய்தது.
“உன்மேல பொய்யா கூட கோவப் பட முடியல. சித் நீ எப்போ வருவ என்னைப் பார்க்க, ? உடனே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு.. ரெண்டு நாளா சரியா சாப்பிடக் கூட இல்ல.” சிணுங்கலுடன் சொல்ல
“ சீக்கிரம் வரேன் டியர். எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா? இப்போ தான் வீட்ல எல்லா பிரச்சனையும் சால்வ் ஆச்சு.”
“ என்ன பிரச்சன? அதுனால தான் நீ போன் எடுக்கலையா?”
“ ஆமா! என் அண்ணா வந்துட்டாரு. ….” என்று தொடங்கி சுருக்கமாக அவளுக்குக் கதை சொல்ல,
“ ரொம்ப சந்தோஷம் சித். சரி நான் இப்போ போன வைக்கறேன். நீ சீக்கிரம் வந்து நம்ம பிரச்சனைய பாரு” தன் நிலைமையை நினைத்து வருந்தினாள்.
“ எங்க அண்ணா எல்லாத்தையும் சால்வ் பண்ணுவாரு , டோன்ட் வொர்ரி. நீ நல்லா சாப்பிடு. சரியா?” இணைப்பைத் துண்டித்தான்.

“ என்ன டா அண்ணா சால்வ் பண்ணனும்?” பின்னாலிருந்து யுவா கேட்க, தூக்கிவாரிப் போட்டது சித்துவிற்கு.
“ என்ன அண்ணா! லவ்வர்ஸ் பேசறத கேட்கக் கூடாது.” பயந்த தன் நெஞ்சைத் தேய்த்துக் கொண்டே சொல்ல,
சத்தமாகச் சிரித்தான் யுவா!
“ என்ன சிரிப்பு?” முறைத்துக் கொண்டே சித்து கேட்டான்.
“ நீ அவள முதல் முதலா ரெஸ்டாரெண்ட் ல பாத்ததுலேந்து எனக்கு எல்லாம் தெரியம் டா.. நான் உனக்குக் குடுத்த வொர்க் பிரேஷர முடிச்சுட்டு போய் அவளுக்கு நீ ப்ரோபோஸ் பண்ண … அப்பறம் நீ அவ பிறந்தநாள்க்கு குடுத்த கெஸ்ட்ஹவுஸ் ட்ரீட் வரைக்கும் தெரியும்.” அவனைப் பார்த்துக் கண்ணடித்து அவன் யுவா அடுக்கிக் கொண்டே போனான்.
வாய் பிளந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான் சித்து. சட்டென அவள் மூலையில் ஏதோ உரைக்க,
“ அண்ணா!” யுவா வை ஏதோ போல பார்க்க,
“ என்ன டா அடிக்கப் போறியா? ஏன் இப்படி பாக்கற?” யுவா சற்று விலகி நின்று கேட்க
“இல்ல ணா! அப்படீனா இப்போ சக்திக்கு வீட்ல மாப்பிளை பாத்திருக்காங்களாம். அது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” ஆர்வமாகக் கேட்க
“ என்ன? மாப்பிளை பாத்திருக்காங்களா? இது எனக்குத் தெரியாது…” கூலாக அவன் சொல்ல
“ விளையாடாத ண்ணா… சொல்லு.. நீ தான எனக்கு ஹெல்ப் பண்ணனும்.” கையை மடக்கி அவன் முன் நின்றுக் கேட்க
யுவாவிற்கு அவன் நின்ற கோலம் சிரிப்பை வரவைத்தது.
‘ சரி சரி .. எல்லாம் நான் பாத்துக்கறேன். இப்போ வா என்கூட “ அவன் தோள் மேல் கை போட்டு அழைத்துச் சென்றான்.
இருவரும் ஒன்றாக வெளியே செல்லும் அழகை ரசித்தார் மனோகர். இன்று அவர் மனம் நிறைவாக இருந்தது. மலரை மட்டும் எப்போது சந்திப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.
யுவா சித்து வை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். எதற்காக வெளியே வந்தோம் என்று சித்து நினைக்க,
“ அம்மா வராங்க சித்து.” யுவா மெல்ல சொல்ல
“ என்ன…?! என்ன சொன்னீங்க?” நடந்துக்கொண்டிருந்தவன் சட்டென நின்று கேட்டான்.
“ம்ம்ம் .. ஆமா. அம்மா வும் மாமா வும் வந்துட்டு இருக்காங்க. மாமா நான் இங்க இருக்கறதா அம்மா கிட்ட சொல்லிட்டாரு. அவங்களுக்கு நான் அப்பாவா எதாவது கஷ்டப் படுத்திடப் போறேன்னு பயம். அதான் உடனே கிளம்பி வராங்க. இப்போ தான் மாமா போன் பண்ணி சொன்னாரு. “
“ மலரம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க எவ்வளோவோ கஷ்டப்பட்டும் , அப்பா கஷ்டப் படக் கூடாதுன்னு இப்பயும் நினைக்கராங்களே! ரொம்ப கிரேட். வரட்டும் அண்ணா. நான் போய்க் கூட்டிட்டு வரேன். “ உள்ளம் கனிந்தான் சித்து.
“ நம்ம குடும்பத்துல எல்லாரும் நல்லவங்க சித்து. நான் தான் கொஞ்ச நாள் முரட்டுத் தனமா நடந்துக் கிட்டேன்.” சிறு வருத்தத்துடன் சொல்ல,
“ நீங்க தான் எங்க எல்லாரையும் விட நல்லவர் அண்ணா. அப்பா மேல இருந்த கோவம், அவர் நிலமைய எடுத்துச் சொன்னதும் புரிஞ்சுகிடீங்களே .. அவர் மேல எவ்வளவு பாசம் இருந்தா நீங்க அவருக்காக ஃபீல் பண்ணியிருப்பீங்க .. நீங்க பட்ட கஷ்டத்தையும் மறந்துட்டு எங்கள ஏத்துக்கிடீங்க. தேங்க்ஸ் அண்ணா” அவனைக் கட்டிக்கொண்டான் சித்து.

“ மாறி மாறி ஃபீல் பண்ணது போதும். இப்போ என்ன பண்ணலாம்.” யுவா கேட்க
“முதல்ல நீங்க அம்மாக்கு போன் பண்ணி இங்க நடந்தது எல்லாத்தையும் சொல்லி , கவலைப் படாம வர சொல்லுங்க. பாவம் உங்களை நினச்சு பயந்துட்டே வரப் போறாங்க. நீங்க ஒரு டேரர் பீஸ்” அவனைக் கிண்டல் செய்தான்.
அவனை முறைத்தான் யுவா. “ சக்தி விஷயமா ஏதோ கேட்டியே… என்ன அது?!” தாடையில் கை வைத்து யோசித்தான்.
“ தெய்வமே!! மன்னிச்சிடு! முதல்ல அம்மாவுக்குப் போன் .. அப்புறம் நாம பேசிப்போம்.” பயந்து போய்ச் சொல்ல,
“ கொஞ்சம் கேப் கெடச்சா என் தலைலையே கை வைக்கற… உனக்கு அப்பறம் இருக்கு…” சொல்லிவிட்டு மலருக்குப் போன் செய்தான்.

error: Content is protected !!